தேசிய ஜல்லிதேசிய ஜல்லி

என் மண்னைவுட்டு
மனையைவுட்டு

என் ஊட்டைவுட்டு
காட்டைவுட்டு

என் ஆட்டைவுட்டு
மாட்டைவுட்டு

எங்கோமணத்தை
மட்டும்வுட்டு

கரியெடுத்து
கரெண்டெடுத்து

நாடெல்லாம்
குடுக்கறாங்க

எங் குடுசைக்கும்
பம்பு செட்டுக்கும்
கரெண்டு கேட்டா

தண்ணிகுடுக்காத
சகோதரங்ககூட
பங்கு போட்டது
போவ ஜீரோவாட்ஸ்
பல்புக்கூட
பத்தலையே

சத்தம் போட்டு
கேட்டுப்புட்டா
தடாவும் பொடாவும்

சத்தம்போடாம
கேட்டுப்பாத்தேன்

சுத்தி சுத்தி
கொட்டுறானுங்க

லோடு லோடா
தேசிய ஜல்லி


இவர்களும் இந்தியர்கள்
களைந்(த்)த ஆடைகள்
சொல்லிக் கொள்(ல்)வோம்
இவர்களும் இந்தியர்கள்
உரக்க சொல்வோம்
ஜெய்ஹிந்த்

படத்திற்கு நன்றி விகடன்.காம்


ஒரே இந்தியாஒரே இந்தியா

ஒரு ரூபாய்

தொலைபேசி அழைப்பில்

மட்டும்

கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு

போதை - குடிகாரர்களும் கவனிக்க


ஆளில்லா மைதானத்திலே
கோல் போட்டு
அலுத்துவிட்டேன்

இன்பம் கூட
வேண்டாம்
துன்பமாவது தா!

இரு கைகளிலும்
வாளேந்தி ஆவேசமாக
சுழற்றிவிட்டேன்

என் வாளில்
வெட்டுபடவும்
என்னை
வெட்டவும் தான்
ஆளில்லை

வெற்றி கூட
வேண்டாம்
தோல்வியாவது தா!

சதுரங்க ஆட்டத்திலே
வெள்ளை காயையும்
கறுப்பு காயையும்
மாற்றி மாற்றி
நகர்த்தி
பிளவாளுமையோ வென
மகிழ்ந்தேன்

மயிராளுமை யென
மட்டுப்படுத்தியது
மனது

என்னை நானே
கீறினேன்

குருதி வழிந்து
வலித்தது
குதூகலித்தேன்

மேலும் மேலும்
கீறினேன்
வலியோ
பழகிவிட்டது

விரல்களை
வெட்டியெறிந்தேன்

விரல்களின்றி
வாழ்ந்தபோது
விரல்களே
வீண்தானோ
என்றேன்

தற்போதொரு
கையில்லா
வாழ்க்கையும்
பழகிவிட்டது

அதனாலென்ன
வெட்டியெறியத்தான்
இன்னமும்
இரு கால்களும்
இரு காதுகளும்
இரு கண்களும்
ஒரு மூக்கும்
மிச்சமுள்ளதே

அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா - காதலர் தின சிறுகதை


"அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ, ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு" பிண்ணனியில் ஓடிக்கொண்டிருக்க கையிலே அன்றைய தினத்தந்தியை வைத்துக் கொண்டு பொங்கிக்கொண்டிருந்தான் ஞாநி வாத்தியார் பையன், இந்த சாதி கட்சி தலைவனுக்கு வேற வேலையே இல்லை, காதலர்தினத்தை கொண்டாடக்கூடாதாம், காதலின் சக்தி தெரியுமா அவனுக்கு காதல் மதத்தை உடைக்கிறது, காதல் சாதியை அழிக்கிறது, காதல் வர்க்க வேறுபாட்டை களைகிறது, காதலைக் கண்டு சாதித்தலைவன் பயப்படறது ஒன்னும் ஆச்சரியமில்லை. சாதி அடிப்படையில் ஓட்டு பொறுக்க முடியாத சிக்கலை காதலும் கலப்பு மணமும் ஏற்படுத்திடுங்கறதாலதான் பயப்படுறானுங்க.

"அழாதடா ராசா என் கண்ணு இல்ல அழாத, இரு தாத்தா முட்டாய் வாங்கித்தரேன், ரெண்டு தேன் முட்டாய் குடுங்க"

முட்டாய் வாய்க்குள் போனதில் அழும் சத்தம் மட்டும் கொறைஞ்சாலும் விசும்பலோடு தாத்தாவோடு ஒட்டிக்கொண்டே போனான் ஒரு வாரம் முன்னாடி டெய்லரோட ஓடிப்போன செல்வி பையன்.

"தேவுடியா முண்ட, புள்ளைய உட்டுட்டு ஓடியிருக்கா பாரு அரிப்பெடுத்தவ"

கடைசி பஃப் புகையை இழுத்துவிட்டு பஞ்சை கீழே போட்டு ஆத்திரத்தோடு மிதித்தேன்

"ஏன் ஓடுனா என்ன? அவ புருசன் கையாலாகாதவனா இருந்திருப்பான் ஏன்டா இப்படி கற்பையும் கலாச்சாரத்தையும் தொடையிடுக்குல தேடுறிங்க"

"என்ன இருந்தாலும் சின்ன புள்ளைய உட்டுட்டு ஓடிட்டா பாரு"

"புள்ளை இருந்துட்டா எல்லாத்தையும் பொறுத்துக்கனுமா? ஆசாபாசம் எதுவும் இருக்க கூடாதா?"

"சரி சரி உடு மச்சான் உங்கிட்ட நம்மால பேச முடியாது, நான் கிளம்புறேன், நாலு நாளா முனிசிபாலிட்டி தண்ணி எங்க தெருவுக்கு வரலை, கவுன்சிலரை பாக்கப்போவணும், நீ ரொம்ப சூடா இருக்க, ஜில்லுனு ஒரு பெப்சி குடிச்சிட்டு போ" நண்பனிடம் சொல்லிட்டு சிகரெட்டுக்கும காசு கொடுத்துட்டு ரெண்டு நிஜாம் பாக்கை பிரிச்சி வாயில போட்டுக்கிட்டு சைக்கிளை எடுத்தேன்...

ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு வாய் முனுமுனுத்துக்கொண்டே வந்தது, காதல் மதத்தை ஒழிக்கும், காதல் சாதியை ஒழிக்கும், சைடு எஃபெக்டாடக நண்பன் சொன்னதும் ஒலித்துக்கொண்டே வந்தது.

சைக்கிள் என் தெரு முனையில திரும்பும்போது குறுக்கால ஒரு குட்டிப்பையன் ஓடிவந்தான், ஏய் ஏய் சடக்கென்று பிரேக் அடிச்சி மேலே இடிக்காம வண்டியை நிறுத்தினேன்...

"ஹேய் ராகவ், ராகவ் ஸ்டாப் ஐ சே" சத்தம்போட்டுக்கொண்டே அவனை பிடித்து தூக்கி வைத்துக்கொண்டார்இது கலைச்செல்வி அக்கா கொரல் மாதிரி இருக்கே....

"அக்கா, நீங்க கலைச்செல்வி அக்கா தானே?"

"ஆமான் டா குரு, என்னடா மறந்துட்டியா"

"இல்லக்கா பாத்து ஒரு அஞ்சாறு வருசமிருக்கும், கொஞ்சம் குண்டாயிட்டிங்க, அப்புறம் கலரா வேற ஆயிட்டிங்களா அதான் சட்டுனு அடையாளம் தெரியலை"

சட்டுனு அவங்க முகத்தில ஒரு லேசான பெருமித மின்னலடிச்சது....

"ம்...குரு வீட்ல எல்லாம் சவுக்கியமா? ஆமாம் என்ன பண்ணறே?"

"வி.எஸ்.டில வொர்க்ஷாப்ல தான்க்கா மெக்கானிக்கா இருக்கேன், அக்கா ஸ்டேட்ஸ்லருந்து எப்போ வந்திங்க?"

"ரெண்டுவாரம் ஆகுது, அவர் வீட்டுக்கு போயிட்டு நேத்துதான் இங்க வந்தேன்"

"மாமா வந்துருக்காரா? எப்பிடியிருக்காருக்கா?"

சொந்தக்காரங்க இல்லாம வேற யாரையும் சட்டுனு மாமான்னு கூப்புடமாட்டோம் ஆனா கலைச்செல்வி அக்கா வூட்டுக்காரரை மட்டும் மாமானு சொல்லுவேன், அக்கா லவ் மேரேஜி, அவங்க வீட்டுக்காரர் அய்யிரு, பள்ளிக்கூடத்துலருந்தே அய்யிருபசங்களை மாமானு ஜாலியா கூப்புட்டே பழகிடுச்சா, அதான் சட்டுனு கலைச்செல்வி அக்கா வூட்டுக்காரரையும் மாமானு சொல்லிட்டேன்.

"வந்திருக்காரு டா, நல்லா இருக்காரு, உள்ள வாயன் டா, டீ குடிச்சிட்டு போலாம்"

"இல்லக்கா, அர்ஜென்டா கவுன்சிலரை பாக்க போறேன், நாலு நாளா நம்ம தெருவுல தண்ணிவரலை "

"சரி பாத்துப்போ"

சட்டை போடாம துண்டு மட்டும் கட்டியிருந்த இருந்த ராகவை அக்கா தூக்கிக்கிட்டு உள்ளே போகும்போது தான் கவனித்தேன் ராகவ் முதுகுல குறுக்கால புதுசா போடப்பட்டிருந்த பூணுலை.

"காதல் சாதியை ஒழிக்கும், காதல் மதத்தை ஒழிக்கும்" நண்பன் சொன்னது ஸ்டீரியோ எஃபெக்டில் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.... வாய் மட்டும் அண்ணிச்சையாக முனுமுனுத்தது "அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு"

அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கலாம், சரி அய்யிரு பையன் மீன் வாங்கப்போயிருப்பானா? ராகவ் முதுகுல போட்டுருந்த பூணுலை பார்த்த பிறகு அந்த நம்பிக்கையில்லை... பாட்டெழுதனவங்கிட்ட கேட்கனும் அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்திருந்தப்ப அது பேரு என்ன? ஷகீராவானு?

லவ் சிம்பல் போட்டு காதலர் தின வாழ்த்து சொல்லி போஸ்ட்டர் ஒட்டியிருந்துருக்கானுங்க விஜய் ரசிகர் மன்ற பசங்க, இவ்ளோ நாள் நியூ இயர்க்கு போஸ்ட்டர் ஒட்டுனானுங்க இப்போ காதலர் தினத்துக்குமா... ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்.... போஸ்டரை பாத்தவுடன் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம்....

அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு.......

கவுன்சிலர் வீட்டை நெருங்கிய போது மெலிதான விசும்பல் சத்தம் வந்தது கூலிக்கு கை காலெடுக்கும் "லெஃப்ட்" கிருஷ்ணாவோடு ஓடிப்போன வசந்தா வீட்லருந்து......

கவுன்சிலரிடம் காத்திருந்து பேசிவிட்டு வீட்டுக்கு போய் சேரும் வரை அந்த மெலிதான விசும்பல் சத்தம் மட்டும் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது..... வசந்தா பேசாம 40 இலட்சத்துக்கு வீடு, நல்ல வேலை, ஊருல நல்லபேருனு இருக்குற ஞாநி வாத்தியார் பைய் மாதிரி பசங்களோட ஓடியிருக்கனும்.......இல்லனா வசந்தா மட்டுமாவது அந்த சாதிக்கட்சி தலைவர் சொல்றதை கேட்டிருக்கலாம், நினைத்துக்கொண்டே அப்போது தான் கவனித்தேன்
"அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு....... " என்று முனுமுனுப்பதை என் வாய் நிறுத்தியிருந்ததை.

பின்குறிப்பு:
கதாசிரியர் காதலுக்கோ, கலப்பு திருமணத்திற்கோ எதிரானவர் இல்லையாம்.... கதாசிரியரே 11 முறை காதலித்தவர் தானாம்... (ஆனால் அவரைத்தான் யாரும் காதலிக்கவில்லை என்பது கதாசிரியர் எப்போதுமே வெளியே சொல்லாத ஒன்று.)

படம் உதவிக்கு நன்றி wwp.saint-valentines.co.uk

சாகரனுக்கு அஞ்சலி

தேன்கூடு திரட்டியை உருவாக்கியவரும் நமது சக வலைப்பதிவாளருமான சாகரன் கல்யாண் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள், அவரது குடும்பம் இந்த இழப்பை தாங்குவது மிக கடினம் என்ற போதிலும் அவரின் குடும்பத்திற்கு என் அனுதாபங்கள்.

சென்னையில் லக்கிலுக்கை சந்தித்தபோது அவர் சாகரனுடன் பேசியதையும் சாகரனைப்பற்றியும் கூறியுள்ளார், மேலும் ஒருமுறை லக்கிலுக்குடன் ஜிசாட்டில் பேசிக்கொண்டோம், அப்போது லக்கியிடம் சாகரனுடம் பேசவேண்டுமென்று கூறியிருந்தேன், இது தவிர சாகரனுடன் நேரடி தொடர்போ மின்மடல் தொடர்போ இருந்ததில்லை, இனியும் இருக்காது என்று நினைக்கும் போது மிக வருத்தமாக உள்ளது.

முகமூடிக்கு ஜூரி(நடுவர்?!)யாக இருக்க தகுதி உண்டா?

யார் எப்படி போனா எனக்கென்ன என்று இருந்தேன், ஆனால் என்னையும் இருவர் இன்டிப்ளாக்கீஸ் அவார்டுக்கு முன்மொழிய (முன்மொழிந்தவர்களுக்கு நன்றி) வேறுவழியின்றி இதை பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, ஏனெனில் இன்டிப்ளாக்கீஸ் ஜூரி குழுவில் அனாமதேய வலைப்பதிவர் முகமூடி அவர்கள் ஜூரியாக(நடுவர்?!) இருக்கின்றார்.

இதில் கூட அவர் லாஸ் ஏஞ்செல்சில் இருக்கிறார் என்பதைத்தவிர அவர் யாரென்பதற்கான எந்த விபரங்களும் இல்லை, சரி அவரது பதிவிலாவது பார்க்கலாமென்று அவரின் வலைப்பதிவில் தேடியபோது அதிலும் இதே நிலைமை, ஆக இணையத்தில் யாரென்று அடையாளம் காட்டிக்கொள்ளாத ஒருவர் ஆயிரத்து எண்ணூறுக்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளில் போட்டியில் கலந்துகொள்ள முன்மொழியப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்போவது தம்மை யாரென்று தெரிவித்துக்கொள்ளாத ஒரு அனாமதேய பதிவர், தங்களை யாரென்று இன்டிப்ளாக்கிஸ் குழுவிற்கு தெரிந்தால் மட்டும் போதும் கலந்து கொள்பவர்களுக்கு தெரிய தேவையில்லை என்று ஜூரியும் இன்டிப்ளாக்கிஸ் குழுவும் கருதுவார்களெனில்(நான் கருதுகிறார்கள் என சொல்லவில்லை, கருதுவார்கள் எனில் என்று தான் கூறியுள்ளேன்) போட்டியில் கலந்து கொண்ட பல வலைப்பதிவாளர்கள் தங்களை எடை போடப்போவது யாரென்றே அறியாமல் ஒரு அனாமதேயத்தால் அவர்களின் வலைப்பதிவுகளின் தகுதிகள் அலசப்படும் ஒரு நிலை, அந்த நிலை சிலருக்கு இழிவாகக்கூடத் தோன்றலாம், எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

அடுத்தபடியாக இன்டிப்ளாக்கிஸ் விருதுக்காக தமிழ் வலைப்பதிவை தேர்ந்தெடுக்கப் போகும் இந்த 'முகமூடி' என்பவர் என்னையும் என் கருத்துகளையும், என் வலைப்பதிவையும் அவரின் வலைப்பதிவு மற்றும் பல இடங்களில் பல நேரங்களில் அப்யூஸ் செய்துள்ளார், நேரடியாக பெயர் குறிப்பிட்டும் என் வலைப்பதிவின் சுட்டி கொடுத்தும் அப்யூஸ் செய்த அவரின் பதிவுகளின் ஒன்று தமிழ் வலைப்பூ சர்க்கஸ் லிமிடெட், இது மட்டுமின்றி பல பதிவுகளிலும் இடங்களிலும் என் பெயரிலும் என் அடையாளங்களிலும் சில சிறிய மாற்றங்களை செய்து படிப்பவர்களுக்கு நான் தான் என்று எளிதாக புரியுமளவில் குறிப்பிட்டு அப்யூஸ் செய்துள்ளார், அந்த பதிவுகளையெல்லாம் எடுத்து போடலாம் என்றாலும் சொல்ல வந்த செய்தி சென்று சேர்ந்தால் போதும் என்பதால் அதை தற்போதைக்கு செய்யவில்லை என்றாலும் தேவைப்பட்டால் செய்யத்தயாராக உள்ளேன்.

இப்படியான அனாமதேய வலைப்பதிவர் முகமூடியால் நான் மட்டுமின்றி மேலும் பலரும் அப்யூஸ் செய்யப்பட்டுள்ளார்கள், அவரவர்களே அதன் சுட்டியை அளிப்பது, வெளிசொல்வது, சொல்லாமலிருப்பது இன்ன பிற விசயங்களே அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும் என நான் கருதுவதால் அதைப்பற்றி தற்போது நான் எழுதவில்லை.

மேலும் முகமூடி சில வலைப்பதிவர்களை ஸ்டாராக அறிவித்துள்ளார், அதே சமயம் அதில் "நிரந்தர பரமார்த்த குரு" என்ற பெயரில் முத்து (தமிழினி) பெயரும் உள்ளது இது பாராட்டா? நக்கலா?

இப்படியான ஒரு ஜூரி(நடுவர்?!) முன்பு என் வலைப்பதிவு வரும்போது எப்படியாக என்(மற்றும் பல) வலைப்பதிவு எடைபோடப்படும்? விருப்பு வெறுப்பின்றி தேர்வு முடிவுகள் இருக்குமா என்ற சந்தேகம் வந்துள்ளது? இந்த சந்தேகத்தை இன்டி ப்ளாக்கீஸ்க்கும் எழுதியுள்ளேன்.

தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் 2006ன் சிறந்த பதிவர் வாக்கெடுப்பு நடத்திய சர்வேசன் பதிவிலும் அதை எதிர்த்து என் பதிவை விலக்கிக்கொண்டேன், அந்த பதிவில் நான் எழுதிய பின்னூட்டம்

நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், அப்போ நீங்க?

பின்குறிப்பு
முகமூடி எல்.ஏ.ராம் ஆக இருக்க முடியாது என்பது எல்.ஏ.ராம் அவர்களின் கருத்து, பார்க்க

மற்றுமொரு பின்குறிப்பு
இந்த பதிவையும் கிண்டலடித்து வரப்போகும் பதிவுகளை என் முடிக்கு சமானமாக கூட கருதப்போவதில்லை என்று கூற மாட்டேன், ஏனெனில் என் முடியை தினமும் வாருகிறேன், அதிகமாக வளர்ந்தால் வெட்டிக்கொள்கிறேன், அதற்கு எண்ணெய், க்ரீம் எல்லாம் போட்டு என் முடியை பராமரிக்கிறேன்.

ஒரே இந்தியா


ஒரே இந்தியா

ஒரு ரூபாய்

தொலைபேசி அழைப்பில்

மட்டும்

கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு

தலைமுறை வலிகள்

தமிழ்மணம் விவாதகளத்தில் நான் இட்ட பின்னூட்டம் இன்னும் வெளியாகவில்லை, நான் இட்டு வெகுசில மணி நேரங்களே ஆகியிருந்தாலும் அது வெளி வரும் வரை பொறுமையில்லாததால் இங்கே அவைகள்.

விவாதகளத்தில் இருந்த பின்னூட்டங்களை படித்துவிட்டு வந்தால் எளிதாக புரியும்.

இடஒதுக்கீடு பற்றி ஒரு தவறான புரிதலை தந்துவிட்டு அதை நான் குறிப்பிட்டு எழுதியபோது

//திரு.டோண்டு சொல்லிய மாதிரி,”அவரவர் கவலை அவருக்கு. பாதிக்கப்பட்டவர்தான் அதன் வேதனை உணர்வர்”.நான் பட்ட வலி அவ்வாறு எழதத்தூண்டியது.அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி//

என்று குறிப்பிட்டார்.

அவருக்கு அவர் வலி எழுத தூண்டியதென்றால், எங்களுக்கோ தலைமுறை தலைமுறையான வலி..... என்ன செய்ய தூண்டும்????


இனி என் பின்னூட்டம்

சற்று உணர்ச்சி வசப்படாமல் சொந்த அனுபவங்களை தூரவைத்துவிட்டு சில விடயங்களை பார்ப்போம், ஒரு மாணவன் இன்று இருக்கும் கல்வி முறையில் மதிப்பெண்கள் வாங்குவது என்பது அவனுடைய சொந்த திறமையை மட்டும் பொறுத்ததல்ல, அதற்கு பல காரணிகள் உண்டு

குடும்ப சூழல்
சுற்றுப்புற சூழல்
பெற்றோர்களின் விழிப்புணர்ச்சி மற்றும் அக்கரை
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்ச்சி
கல்வி கற்கும் இடம் (நகரம், கிராமம் மற்றும் தரமான பள்ளிகள்)
இதோடு மாணவனின் தனிப்பட்ட திறமை மற்றும் குடும்ப பொருளாதாரம்(+2 மதிப்பெண்களுக்கு குடும்ப பொருளாதாரம் ஒரு சிறிய காரணி மட்டுமே, +2 மதிப்பெண்களுக்கு இது பெரும் முக்கிய காரணியாக இருப்பதில்லை)

இப்படி பல காரணிகள் இருக்குமிடத்தில் மாணவனின் தனிப்பட்ட திறமை தவிர்த்து மற்ற எல்லா
காரணிகளுக்கும் பெரும்பாலும் சாதியே காரணமாக இருக்கின்றது.உங்கள் சுற்றுப்புற சூழலிலிருந்தே உதாரணம் தருகிறேன், தனிப்பட்ட திறமை என்பதை தவிர ஒரே சமூகம், ஒரே பள்ளி, ஒரே மாதிரியான குடும்ப சூழலில் இருந்து உங்கள் தெரு தம்பி(எனக்கு அண்ணா) பத்ரி ஐ.ஐ.டி சென்று படித்துள்ளார், இன்னொருவர் இரு முறை ஐ.ஐ.டிக்கு முயற்சி செய்து இடம் கிடைக்காமல் ஜி.இ.சி. திருநெல்வேலியில் பொறியியல் படித்தார், இன்னும் ஒருவர் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தார் (இந்த இருவரும் வலைப்பதிவிற்கு தொடர்பில்லை என்பதால் அவர்கள் பெயரை சொல்வதை தவிர்க்கிறேன்), ஒரே மாதிரியான குடும்ப சூழல், சுற்று சூழல், சமூக சூழல் இருந்தும் பத்ரி தொட்ட இடத்தை மற்ற இருவர் தொடவில்லை, மற்ற இருவர் தொட்ட இடத்தை இன்னொருவர் தொடவில்லை என்றால் அது அவரவர்களின் தனிப்பட்ட திறமையில் உள்ள வித்தியாசம்.

உதாரணத்திற்கு நீங்கள் எடுத்த மதிப்பெண்களே எடுத்திருந்த ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது மிக பிற்படுத்தப்பட்ட மாணவன் எடுத்து அவருக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த தனக்கு கிடைக்கவில்லை என்றால் அந்த தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியும் அதே மதிப்பெண்கள் எடுத்த உயர்சாதி மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியும் ஒன்றா?(ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து) இல்லையே, அப்போது மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியில் தாழ்வு இருக்கும்போது ஒரு உயர்சாதி மாணவன் வாங்கும் அதே மதிப்பெண்களை ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட மாணவன் வாங்குகிறான் என்றால் இவ்விரு மாணவர்களின் திறமையும் சமமா? இல்லையே திறமைய் தவிர்த்து மற்ற சூழல்களில் குறைபாடு உள்ளவர்களை சமப்படுத்த தான் இடஒதுக்கீடு.

45கிலோ எடை உள்ளவன் 100கிலோ பளுதூக்கி 45கிலோ பிரிவில் தங்கம் வாங்கியவனை பார்த்து, 100கிலோ எடையுள்ளவன் ஹெவிவெயிட் பிரிவில் 100கிலோ பளு தூக்கி 10வது இடம் பிடித்து மெடல் வாங்காதவன் நானும் 100கிலோ தூக்கினேன், அவனும் 100கிலோ தூக்கினான் அவனுக்கு மட்டும் தங்கப்பதக்கம், எனக்கும் ஒன்றுமில்லையே என் வலி எனக்கு தான் தெரியும் என்று புலம்புவது சரியான செயலாகுமா?

இந்த பின்னூட்டத்தை எடிட் செய்து விடாதீர்கள் அல்லது நிறுத்திவிடாதீர்கள், "நான் பட்ட வலி அவ்வாறு எழதத்தூண்டியது.அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை." என்று சொன்னதாலேயே அவரின் ஊர் நண்பர்களை உதாரணம் காட்டி பேசவேண்டியதாகிவிட்டது.