Showing posts with label அஜீத். Show all posts
Showing posts with label அஜீத். Show all posts

அட நன்றி கெட்ட நடிகர் சங்கமே !

ரஜினியை வெறுத்தது போன்று வேறு எவரையும் நான் வெறுத்திருப்பேனா என்பது சந்தேகமே, முத்து திரைப்படத்தை முதல்நாளில் அரங்கம் சென்று ஆரவாரமாக பார்த்ததுவே நான் கடைசியாக திரையில் பார்த்த ரஜினியின் படம், அதன் பின் தொலைக்காட்சிகளில் வந்தால் கூட உடனே சேனலை மாற்றும் அளவிற்க்கு அவரின் மீது வெறுப்பு, அந்த வெறுப்பு கடந்த சில ஆண்டுகளாக சிறிது குறைந்திருந்தாலும்(ரஜினி ஒரு ஹார்ம்லெஸ் என்ற காரணமாகவும் இருக்கலாம்) ரஜினியின் மீதான வெறுப்பு ஏற்படுத்திய அத்தனை காரணிகளும் அப்படியே உள்ளன, ஆனால் பதிவு அதைப்பற்றியதல்ல...



நடிகர் அஜீத், ராஜாதிராஜ ராஜகுலோத்துங்க ராஜகம்பீர ராஜா கருணாநிதியின் புகழுரை கூட்டத்தில் பேசிய பேச்சிற்க்காக, கற்பழிப்பு கேசில் உள்ளே போன ஜாக்குவார் தங்கம் என்கிற சண்டை பயிற்சியாளர் அறிக்கை அதை தொடர்ந்த சர்ச்சைகளில் ரஜினியை போட்டு தாக்குகிறார்கள், அதுமட்டுமின்றி நடிகர் சங்கத்துக்கு அதன் விழாக்களுக்கு எல்லாம் ரஜினி வேண்டும் ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினையென்றால் அதுவும் அரசியல் ரீதியாக தனிநபர் சார்ந்த பிரச்சினையாக இருந்தால் கூட வரவேண்டியதில்லை, பிரச்சினையே தொழில்தொடர்பானது என்பதால் நடிகர் சங்கம் வந்திருக்கவேண்டும் ஆனால் ரஜினியை யூஸ் செய்து த்ரோ செய்துவிட்டது நடிகர் சங்கம்

அட நன்றி கெட்ட நடிகர் சங்கமே ! என்ற தலைப்பில் ரஜினி ரசிகர்களால்நடத்தப்படும் இணையம் என்வழியில் வந்த பதிவு... அதிலிருந்து ஒரு பகுதி மட்டும் இங்கே, முழுக்க இதை ஏற்கின்றேன்...
http://www.envazhi.com/?p=16321

நடிகர் சங்க பவள விழாவுக்கு யாரை அழைத்தாலும் கூட்டம் வராது, வசூலும் தேறாது. நீங்கள்தான் வரவேண்டும். நீங்க ஒருவர் வந்தால் போதும்… வேறு யாரும் தேவையில்லை என்று கெஞ்சி கூத்தாடி ரஜினியை அழைத்தார்கள். நான்கு நாட்கள் நடந்த அந்த சாதாரண நாடக விழா, கடைசி நாளில் மட்டும் நட்சத்திர விழாவாக ஜொலித்தது. காரணம் ரஜினி!
நடிகைகளை விபச்சாரிகள் என்று ஒரு பத்திரிகை பட்டியல் போட்டுவிட்டது என்றதும் அலறித் துடித்து, ரஜினி வந்து பத்திரிகைகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றதுதான் இந்த நடிகர் சங்கம். அன்று பல பத்திரிகைகள் ரஜினி அங்கே போகக் கூடாது என்று கோரிக்கை விடுத்தும் நடிகர் சங்கத்துக்காக போய் நின்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் ரஜினி. அவர் போனதால்தான் அன்றைய கண்டனக் கூட்டம் அடுத்த பல மாதங்கள் பேசும் அளவு பெரும் நிகழ்வானது.

அதேபோல தனது ஜக்குபாய்க்கு ஒரு பிரச்சினை என்றதும் ரஜினியும் கமலும் வந்தே தீர வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதம் பிடித்து வரவழைத்தவர் நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார். ராதிகா அழுது புலம்பினார் ரஜினியிடம். அந்த பாடாவதி படத்தின் பிரிவியூ காட்சிக்கும் ரஜினி வந்தாக வேண்டும் என்றார்கள். அவரும் வந்தார்.
அதன் பிறகு எத்தனை விழாக்கள், அர்த்தமற்ற மேடைகள்… ஆனால் அத்தனைக்கும், இந்த வெண்ணைவெட்டிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய் நின்று சிறப்பித்துக் கொடுத்தார் ரஜினி. காரணம், சினிமா உலக நன்மைக்காக, சக கலைஞர்களின் சந்தோஷத்துக்காக மட்டுமே.

ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் இந்த நாட்டாமைகளுக்கு நாக்கு இழுத்துக் கொள்கிறது, தொண்டை விக்கிக் கொள்கிறது. பேச்சே வர மறுக்கிறது. அவருக்கு ஆதரவாகப் பேச வேண்டிய கூட்டத்துக்கு மட்டும் போக முடியாமல் கால்கள் முடங்கிப் போகின்றன சரத்குமார்களுக்கு.

இதே ஜக்குபாய் கூட்டத்தில் ரஜினி பேசியதற்கு தியேட்டர்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர் (‘திருட்டு விசிடி வர காரணமான தியேட்டர்களுக்கு படம் தரக்கூடாது!’). கேவலமாக அறிக்கை விட்டனர். அதற்கு ஒரு மறுமொழி கூட சொல்லாமல் மவுனம் சாதித்தது நடிகர் சங்கமும் அதன் தலைவரும்.இப்போது யார்யாரோ கண்டபடி பேசுகிறார்கள், பேட்டி தருகிறார்கள்… ரஜினி ஒரு காமெடியர் என்று எகத்தாளம் பேசும் அளவுக்கு துணிகிறார்கள். ஆனால் இப்போதும் வாயைப் பொத்திக் கொண்டு சும்மாதான் இருக்கிறது இந்த சங்கம்.
இந்த பிரச்சினையில் மட்டுமல்ல அதாவது ரஜினி ஆதரவு கண்டிப்பாக வேண்டும். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை அவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் நியாயம்...

முதுகெலும்புள்ள அஜீத் - என்னய்யா தப்பு செய்தார்?

மண்புழு மண்ணில் கிடப்பதற்க்கு காரணம் அதற்க்கு மூளையில்லாததால் அல்ல, முதுகெலும்பில்லாததால்... சில நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் இப்படி பேசிகேட்டேன், முதுகெலும்பில் 12 அறுவை சிகிச்சைகள் செய்திருந்தும் முதுகை வளைத்து குழைந்து பயந்து நடுங்கிபோகாமல் தன் மனதில் பட்டதை பேசியிருக்கிறார் அஜீத்.



ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர மன்னர் கருணாநிதி அவர்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாரா வாரம் நடைபெறும் பல மணிநேர புகழுரைகள், நடிகைகளின் அரைகுறை ஆடை நடனங்கள் அதை படம் பிடித்து தங்கள் தொலைக்காட்சியில் போட்டு காசு பார்ப்பது என மன்னர் ரசிக்கும் ஒரு பாராட்டுவிழாவில் தான் இப்படி பேசியிருக்கார், எல்லாத்துக்கும் நாங்க வரணுமென்று மிரட்டுகிறார்கள் என்று... இதில் என்ன தவறு??

சினிமாவிலும் பேட்டிகளிலும் அரசியல் பொறிபறக்க ரசிகர்களை தூண்டிவிட்டு அதனால் சொந்த லாபம் சம்பாதித்து அதே நேரத்தில் தமிழகத்திற்க்கும் தமிழனத்துக்குமான கூட்டமென்றால் காணாமல் போய்விடும் திருட்டு நடிகன் அல்ல அஜீத். எதற்க்கும் வரமாட்டார், பொதுவாகவே எந்த விழாக்களிலும் எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர் அனல் பறக்க அரசியல் பேசிவிட்டு இனம் மொழி என்று பேட்டிகளில் பரபரப்பு காட்டுபவர் அல்ல, அவர் தன் வேலைகளுண்டு என்று போய்க்கொண்டே இருப்பவர், எல்லோருக்கும் அரசியல் ஆர்வமும் சமூக ஆர்வமும் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை அவர்களை வற்புறுத்துவது எதற்காகவும் தவறு. ஆனால் எந்த அரசியல் சமூக காரணமுமின்றி இவர்களின் முகங்களை படம்பிடித்து தம் தொலைக்காட்சியில் அரைகுறை நடனங்களுக்கு நடுவே காட்டி இதன் மூலம் காசு சம்பாதிக்கும் பொறுக்கிதனத்திற்க்கு எதிராக ஆவேசமாக கூட இல்லை லேசாக முனகி எதிர்ப்பு தெரிவித்ததற்க்கே அஜீத்தை இந்த பாடு படுத்துகிறார்கள்...

முதலில் ஜாக்குவார் தங்கம் என்ற ஸ்டண்ட் மாஸ்டர் அஜீத் மீது வழக்கு போட கூறுதல் அதன் தொடர்ச்சியாக உடனடியாக அஜீத் ரசிகர்கள் ஜாக்குவார் வீட்டை உடைத்ததாக வழக்கு என அஜீத் மீது தொடர்ச்சியான அழுத்தங்கள், இந்த இடத்தில் நான் கடவுள் படம் தொடர்பான பண விவகாரம் தொடர்பாக பாலாவும் அவருக்கு ஆதரவாக சீமான் மற்றும் சில அரசியல் தொடர்புள்ளவர்கள் அஜீத்தை மிரட்டியதாக செய்தி வந்திருந்த நேரம் அது அப்போதும் கூட அஜீத் தன் ரசிகர்களை தூண்டிவிடாமல் என் பிரச்சினையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று அமைதியாக்கியவரை தான் ஜாக்குவார் தங்கம் வீட்டை அடிக்க தூண்டியதாக கேஸ் போடுகிறார்கள், ஜாக்குவார் தங்கம் நாடாராம் அதனால் நாடார் சங்கம் கொதிக்குதாம்...

அஜீத் போன்ற முதுகெலும்புள்ள சுயமரியாதை உடையவர்களை நிச்சயம் நாம் ஆதரிக்க வேண்டும்... ஆம் அஜீத் மீதான அதிகாரத்துவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக என் கண்டனத்தை பதிப்பிக்கின்றேன்(இந்த ஒரு எழவைத்தவிர வேறென்ன செய்ய முடியும் என்னால்)