புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது

ஊரே பரபரப்பாக இருக்கின்றது, எந்த பக்கம் திரும்பினாலும் புரட்சி பற்றிதான் பேச்சே, தினசரி, வார மாத பத்திரிக்கையில் எல்லாம் புரட்சி வருவதை பற்றி தான் பேச்சே புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது...

ஆமா "சுதந்திரம்" வந்து எல்லாத்தையும் புடுங்கிடுச்சி, மீதியை புரட்சி வந்து தாம் புடுங்கப்போவுது சலித்துக்கொண்டார் டீக்கடை பாய்


சுதந்திரம் வந்து என்ன புரட்சி வந்து என்ன? எல்லாம் பணம் இருக்கிறவனுக்கு தாம்பா, நம்மளை மாதிரி ஏழைபாழைங்களுக்கு உழைச்சாதான் அரை வயிறு தின்னலாம், போப்பா போயி வேலையைப்பாருங்கப்பா கும்பலாக புரட்சி வருவதை பற்றி பேசிக்கொண்டிருந்த சிவப்பு சட்டை போட்ட "போர்ட்டர்" தோழர்களை விரட்டிக்கொண்டிருந்தார் ஹெ.எம்.எஸ் கோபால்


அரசியல் தலைவர்களிலும் கூட புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் அறிக்கைகள் விடப்பட்டுக்கொண்டிருந்தது


புரட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது - திமுக தலைவர் உதயநிதி அறிவிப்பு

புரட்சியை ஆதரித்தால் தமிழ்நாடு உருப்படாது, புரட்சியை எதிர்த்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அறிக்கை

புரட்சியை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை, - மாதிமுக(மாறன் திமுக) தலைவர்

நாங்கள் வித்தியாசமானவர்கள், மதுரைக்கு வடக்கே புரட்சிக்கு ஆதரவும் மதுரைக்கே தெற்கே எதிர்ப்பும் தெரிவிப்போம் மதுரையில் ஆதரவோ எதிர்ப்போ செய்யமாட்டோம், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் தலைமையை ஏற்கும் வரை நான் தேமுதிக வின் தலைமை பொறுப்பில் இருப்பேன், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் அவர்கள் தலைமை ஏற்கும் நாளுக்காக காத்திருக்கிறோம், அதன் பின் ஒரு தொண்டனாக தேமுதிகவில் தொடருவேன் - தேமுதிக தலைவர்(பொறுப்பு) சுதீஷ் பரபரப்பு பேட்டி


புரட்சி பற்றி முடிவு செய்ய புரட்சித்தலைவியின் ஆணைக்காக காத்திருக்கின்றோம், புரட்சி தலைவி கனவில் வந்து ஆணையிட தயாராக இன்றிலிருந்து புரட்சி வரும் நாள் வரை தூங்கப்போகிறோம், புரட்சி தலைவர் நாமம் வாழ்க, புரட்சி தலைவி புகழ் ஓங்குக - அதிமுக பொதுச்செயலாளர் ஏகாம்பரம் பேட்டி

புரட்சி உழைக்கும் மக்களை சுரண்டும் பொறுக்கிகளின் கொண்டாட்டம், உழைக்கும் மக்களை உடனடி பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் செயலே புரட்சி இதோ வருது புரட்சி அதோ வருது என்கிற நாடகம், புரட்சி வருது வருது என்று இத்தனை நாட்களாக மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் புரட்சியை ஆதரிக்கும் தரகு முதலாளிகள் - தோழர் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தி அய்யங்கார் - ம க இ க செயலாளர் - புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் வெளியிட்ட அறிக்கை தோழர் "தீவிர அசுரனின்" வலைப்பதிவில்...


கரகம், காவடி மேள தாளங்களோடு பீர் விஸ்கி கைகளோடு புரட்சியை வரவேற்க ஊர் எல்லையிலேயே காத்திருந்தார்கள் இளைஞர்கள்....

"ஏம்பா கி.பி. 2000த்துலயே ஒரு புரட்சி வந்து ஊத்திக்கிச்சாமே தெரியுமா?"

"ஆமாம் நானும் கேள்விப்பட்டேன், நெட்ல கூட அது டீட்டெய்ல்ஸ் தேடினேன், 2000ல புரட்சி வந்ததுன்னு தகவல் இருக்கு ஆனா அதுக்கு மேல வேற ஒண்ணும் தகவல் இல்லை"

"ரொம்ப வருசம் கழிச்சி இந்த புரட்சி வந்திருக்கு, ஏற்கனவே சுதந்திரம் ஊத்திக்கிச்சி, இந்த புரட்சியும் ஊத்திக்கிச்சினா அவ்ளோதான் நம்ம கனவெல்லாம் வீணாயிடும்"

ஏய் புரட்சி வந்துருச்சி புரட்சி வந்துருச்சி, கத்திக்கொண்டே அந்த காரை நோக்கி ஓடினார்கள் இளைஞர்கள்....

தாரை தப்பட்டை முழங்க காரை சுற்றி சுற்றி வந்தார்கள்...

முகத்தை தொங்க போட்டபடி இறங்கினார் ....

எல்லோரிடமும் அப்போது ஒரே கேள்வி தான் புரட்சி வந்துருச்சா?? ஒரு வேளை முதலாளி புரட்சி வராம இருக்க சதி செய்துட்டாரா?, அவருக்கு புரட்சி வருவதில் விருப்பமேயில்லை, அவர் பையன் தான் புரட்சி வரவைக்க ஆர்வமாக இருந்தார்...

"அண்ணே புரட்சி வந்துருச்சா? "

"அட என்னப்பா திடீர்னு கூட 50 லட்சம் கூட குடுத்தாதான் புரட்சியை கொடுப்பேன்னு சொல்றானுங்க, அதான் பணம் பொறட்டிக்கிட்டு போக வந்துருக்கேன், பயப்படாதிங்க நாளைக்கு காலையில எட்டரை மணிக்குள்ள புரட்சி வந்துடும்"

புரட்சி - சென்ற மாதம் தான் அறுபதாம் கல்யாணம் செய்த சூப்பர் ஸ்டார் "விஜய்" - பழம் பெரும் நடிகை ஸ்ரேயாவின் பேத்தி சுரேயா நடிக்க 200 கோடி ரூபாய் செலவில் தயாரான தமிழ் திரைப்படம்

தமிழகத்தை ஆண்ட சாதிகளின் கதை(யல்ல நிஜம்)

தமிழகத்திலே ஆண்ட சாதிகளின் கணக்கையெடுப்பதை விட ஆளாத சாதிகளின் கணக்கை எடுப்பதுவே சுலபம், ஒவ்வொரு சாதிக்காரர்களிடமும் கேளுங்கள் அவர்களின் குலப்பெருமைகளையும் ஆண்ட கதைகளையும் சொல்வார்கள், மீனவர்களை செம்படவர்கள் என்று அழைப்பது உண்டு, அவர்களை போய் செம்படவன் என்று அழைத்து பாருங்கள் செருப்பால் அடிப்பார்கள், தாங்கள் பரதவ குலமென்றும் பரதவ குல ராசாக்கள் ஆண்ட கதைகள் உங்களுக்கு சென்னையிலிருந்து குமரிவரை நீண்டிருக்கும் கிழக்கு கடற்கரை ஊர்கள் முழுவதிலும் கிடைக்கும், மதுரைக்கு சென்றால் அறிவாணந்த "பாண்டிய" நாடார் சுவர்களில் சிரித்துக்கொண்டிருப்பார்.

சமீபத்தில் விகடனில் விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ரவிக்குமார் நாடார்கள் பற்றி எழுதியதற்கு நாடார் சங்கதலைவர் ஒருவர் நாடார்கள் எப்படி சங்க காலங்களிலும் மற்றைய காலங்களிலும் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தார்கள் என்று மறுப்பு எழுதினார்.

ஊரெல்லாம் கொச சாதி (குயவர்கள்) என்று கூறினாலும் தம்மை "மண் உடையார்கள்" என்றும் சோழ மன்னரின் உயிரை காப்பாற்றியதற்காக சோழர்கள் பல ஊர்களை கொடுத்ததாகவும் அதை ஆண்டு வந்ததாகவும் சொல்லிக்கொள்வார்கள் நாங்கள் வசிக்கும் பகுதியின் மண்ணின் மைந்தர்கள், ஊரை பிரிக்கும் சாலைக்கு தெற்கு பக்கம் ஒரு குடிமக்களும் வடக்கு பக்கம் மற்றொரு குடி மக்களும் வாழ்ந்தார்கள்.

"ஊரின் பவிசு கோவிலில் தெரியும்
குலத்தின் பவிசு குல சாமியிடம் தெரியும்" என்பார்கள்,

ஊர் எத்தனை வளமாக இருக்கிறது என்பதை ஊரில் உள்ள கோவிலின் வளமையிலும் ஒரு குலம் எத்தனை வளமாக உள்ளது என்பதை அவர்களின் குல தெய்வ கோவிலும் அந்த சாமிக்கு எடுக்கும் விழா கொண்டாட்டங்களிலும் தெரியும் என்பார்கள், எனக்கு தெரிந்த இருபது ஆண்டுகளில் இரண்டே முறை குலசாமிக்கு அவர்கள் படையல் எடுத்தனர், அவர்களின் குல தெய்வத்திற்கு கோவில் என்று எதுவுமில்லை, சாமி சிலை கும்பத்தோடு அந்த பரம்பரை வழி ஒருவரின் வீட்டு சாமிமாடத்தில் இருக்கும், பூசையின் போது மட்டும் வெளிக்கொண்டுவந்து வேப்பமரத்தடியில் வைப்பார்கள். இவர்களும் ஆண்ட சாதி தான்.
அதே பகுதியில் ஒதுக்கு புறமாக (ஊர் விரிவடைந்ததில் இப்போது அந்த இடம் மையமாகிவிட்டது) பன்றி மேய்த்து பிழைப்பவர்கள் பல குடும்பங்கள் இருந்தனர், ஊரே அவர்களை பன்னி குறவன் என்றாலும் அவர்கள் "காட்டு நாயக்கர்கள்" என்றே குறிப்பிடுவார்கள், எஸ்.டி. சான்றிதழுக்காக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் இவர்களுக்கு அது இது வரை கிடைக்கவில்லை, அவர்களை எஸ்.சி. என்றே மாவட்ட நிர்வாகம் குறிப்பிடுகிறது, நாங்கள் என்ன "பறையர்களா" எஸ்.சி. என்று சொல்ல என்று எதிர்க்கிறார்கள், "காட்டு நாயக்கர்களான" நாங்கள் காட்டு ராஜாக்கள் என்கின்றனர், இவர்களும் ஆண்ட சாதி தான்.

வன்னியர்கள் படையாட்சிகள் என்று எங்கள் பகுதிகளில் அழைக்கப்படுவார்கள், படைகளை ஆட்சி செய்தவர்கள் என்று பெருமை பேசும் படையாட்சிகளை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவேன் நான்.

"படையாட்சியின் குடிசையில்
பன்றிகளின் ஆட்சி
போங்கடா போங்க"

பல்லவ பரம்பரை நாங்க என்பவர்களிடம்

" பல்லவ குல தோன்றல்கள்
பன்றி குடிசைகளில்"


தேவர் என்பது அரசர்களின் பட்டப்பெயர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லியுள்ளனர், முக்குலத்தோர் , தேவர், கள்ளர், மறவர் என்றும் இன்னும் பல பல பெயர்களில் சேர, சோழ, பாண்டிய பரம்பரை ஆண்ட பரம்பரை என்பார்கள், பல்லவன் எங்கள் சாதி, சோழன் எங்கள் சாதி நாங்கள் ஆண்ட சாதிகள் என்பவர்களிடம் உங்க சாதிக்காரங்க எல்லோரும் நரசிம்ம வர்ம பல்லவன், ராஜ ராஜ சோழனின் மனைவிக்கும் ஆசை நாயகிகளுக்கும் பிறந்தவர்களா? அந்த ராஜாக்களுக்கு அத்தனை மனைவிமார்களும் ஆசை நாயகிகளுமா? இல்லையே பின் ஏனிந்த வெட்டிபெருமை....

தென் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி "பள்ளர்கள்", ஆனால் பள்ளர் சாதியினர் "பெரியோர் பள்ளர்", "சான்றோர் பள்ளர்" என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதையும், பல இடங்களில் பள்ளர் இன தலைவர்களும் தலைவிகளும் பெரும் செல்வந்தர்களாக ஊர் ஆண்டவர்களாக புலவர்களுக்கு வாரி வழங்கியிருப்பதை சங்க இலக்கிய சான்றுகளுடன் சொல்கின்றார்கள் தாங்கள் ஆண்ட கதையை.

தமிழகத்திலே ஆளாத சாதிகளைவிட ஆண்ட சாதிகள் அதிகம், ஆளாத சாதியென்றால் அதில் முதலிடம் பிடிப்பவர்கள் பார்ப்பனர்கள் தான் (பல்லவர்கள் பார்ப்பனர்கள் என்று சொல்லப்படுவதை தவிர்த்து) ஆனால் சமூகநிலையில் ஆளாதா சாதி பார்ப்பனர்களும் ஆண்ட சாதி குயவர்கள், வன்னியர்கள் , தேவர்கள், பள்ளர்களும் ஒன்றா? அந்த சாதிகாரன் ஒருவன் ஆண்டதாலேயே அந்த சாதிகாரர்கள் அனைவரும் ஆண்ட சாதியாகிவிடுவார்களா? அந்த சாதிகாரன் ஒருவன் ஆண்டதாலேயே அந்த சாதிகாரர்கள் அனைவரும் கல்வி, செல்வம், அதிகாரம் என எல்லாம் பெற்றவர்கள் ஆகிவிடுவார்களா?

கலைஞர் கருணாநிதி தான் இன்று தமிழகத்தை ஆள்கிறார், கலைஞர் கருணாநிதி பிறந்த சாதி இசை வேளாளர்(முடிதிருத்தும் அல்லது நாதஸ்வரம் வாசிக்கும் சாதி என்று சொல்லப்படுவது) அவரை மேடைக்கு மேடை வாழ்த்து வாலியோ பார்ப்பனர், அதனால் இசை வேளாளர் சாதியை வாழ்த்தி பிழைக்குது பார்ப்பனர் சாதி என்று சொல்லமுடியுமா? கலைஞர் கருணாநிதி தான் இன்று தமிழகத்தை ஆள்கிறார் கலைஞர் கருணாநிதி பிறந்த இசை வேளாளர் சாதி உயர்ந்த நிலையில் இருக்கிறது என்றா சொல்ல முடியும்?

ஒரு சாதியில் பிறந்த ஒருவன் ஆண்டதாலேயே அந்த சாதி சமூகத்தில் உயர்நிலையில் இருந்ததா? ஆண்ட சாதிகள் சமூகத்தில் எந்த நிலையில் இருக்கின்றன? ஆண்டவர்கள் எல்லோரும் பார்ப்பன சமூகத்தின் பிடியிலேயே ஆண்டிருக்கிறார்கள், ராஜ குருக்களாகவும், ஆச்சாரிகளாகவும், மந்திரிகளாகவும், அதிகாரிகளாகவும் இந்த நாட்டை ஆண்டுகொண்டிருந்தது பார்ப்பன சாதி ஆட்களா? அல்லது ஆண்ட சாதி என்று சொல்லிக்கொள்ளும் இந்த சாதிகளா?

பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு ஆண்ட சாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் ம க இ க தோழர்கள், சற்று யோசித்து பார்க்க வேண்டும், இடஒதுக்கீடு புள்ளிவிபரங்கள் சொல்வது இந்த ஆண்ட சாதிகள் எத்தனை சதவீத இடங்களை பிடித்துள்ளனர், பார்ப்பனர்களோடு சேர்ந்து இவர்களும் சுரண்டுபவர்கள் என்றால் பார்ப்பனர்களும் இவர்களும் இணையாகவோ அல்லது ஓரளவிற்காவது நிரம்பியிருக்க வேண்டுமே, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு முன் இவர்கள் நிரம்ப வில்லையே ஏன்?

ஏனென்றால் இவர்கள் வர்ணாசிரமத்தை காக்கும் காவல் நாய்கள் மட்டுமே, அதற்காக கிடைக்கும் எலும்புத்துண்டு ஆண்ட சாதி என்கிற பெயர் எதற்கும் உதவாத சாதிப்பெருமை, காவல் நாய்களுக்கு அரியாசனம் மட்டுமல்ல சரியாசனம் கூட கிடைப்பதில்லை, ஆனால் இந்த ஆண்ட சாதிகள், தலித்கள் என அத்தனை ஆட்களின் பங்கையும் சேர்த்து உயர்த்தப்பட்ட சாதிக்காரர்கள் தின்று கொண்டிருக்கின்றார்கள். உண்மை என்னவென்றால் தலித்களுக்கும் இந்த ஆண்ட சாதிகளும் சமூக பொருளாதார வாழ்க்கை முறைகளில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை, அதனாலேயே இடஒதுக்கீடு பல ஆய்வுகளின் முடிவில் வழங்கப்படுகிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்றாலும் பல ஆய்வு மற்றும் புள்ளிவிபரங்களுக்கு பிறகே இவைகள் வழங்கப்படுகின்றன.

எழுத்தாளர் சமூக நீதி ஆர்வலர் ஆதவன் தீட்சண்யா பூனைக்கு மணி கட்டும் காலம் என்ற கட்டுரையில் சொல்லியுள்ள சில பகுதிகள் இங்கே இவர் தலித்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் கடைபிடிக்கும் மனவியாதியிலிருந்து பிற்பட்ட சாதியினர் விடுபடவேண்டும். என்றும் மிக கடுமையாகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஒடுக்குமுறைகளை சாடியிருந்தாலும் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அவர் நிராகரிக்கவில்லை, எதிர்க்கவில்லை. ஆனால் ம க இ க நிராகரிக்கின்றது.

-----------
இந்திய சமூகத்தில் நடைபெற்ற ஒரேயொரு இடஒதுக்கீடு வர்ணாசிரமக் கோட்பாடு தான். தொழில் அடிப்படையில் பிரிந்திருந்தாலும் உயர்வு தாழ்வு, தீட்டு புனிதம் என்ற பாகுபாடு அற்றிருந்த இந்திய சமூகத்தை இந்த வர்ணாசிரமக் கோட்பாடுதான் இணக்கம் காண முடியாத வர்ணங்களாக பிரித்தது. வர்ணங்களை கிடைமட்டமாக சமதளத்தில் வைக்காமல் ஒன்றின் கீழ் ஒன்றான படிவரிசையில் தாழ்த்தியது. ஆகச்சிறந்த அனைத்தையும் பார்ப்பனர்களுக்கே - அதாவது பார்ப்பன ஆண்களுக்கே - என்று ஒதுக்கீடு செய்தது. எடுத்தயெடுப்பில் அது இங்கேயே எல்லா வர்ணத்துப் பெண்களையும் புனிதமற்றவர்கள் என்று கீழ்மைப்படுத்தி எல்லாவற்றிலிருந்தும் ஒதுக்கி வைத்ததன் மூலம் போட்டியாளர்களில் ஒரு பெரும்பகுதியை ஒழித்துக் கட்டியது. பிறகு அது ஆண் போட்டியாளர் பக்கம் திரும்பியது. பார்ப்பனர்களைத் தவிர்த்த அனைவரையும் பார்ப்பனர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யுமாறு பணித்தது. இந்த நியதி மீறப்படாமல் இருப்பதற்கான சட்டங்களை இயற்றியது. எதிர்ப்புகளையும் மீறல்களையும் ஒடுக்கும் கடும் தண்டனைகள் நடைமுறைக்கு வந்தன.

தமக்கான பிரதிநிதித்துவம் அரசியல் சட்டத்திலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற மிதப்பில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து அக்கறை கொள்ளாத சில தலித் அறிவுஜீவிகளையும் அமைப்புகளையும்கூட இப்போது தெருவுக்கு இழுத்துவிட்டுள்ளது உச்சநீதி மன்றம். சமூகநீதியை தக்கவைக்கவும் பரந்த தளத்திற்கு முன்னெடுக்கவும் தலித்களும் பழங்குடியினரும் பிற்பட்டோரும் ஒன்றிணைந்து போராடும் நெருக்கடியை ஆதிக்கசாதியினர் உருவாக்கிவிட்டனர். நாம் எப்படி யாருடன் இணைந்து போராடவேண்டும் என்பதை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.


இடஒதுக்கீட்டிலுள்ள சமூகநீதியை ஒப்புக்கொள்ளும் நெருக்கடியை- புத்தித் தெளிவை அவர்களுக்கு உருவாக்காமலே நடைபெறும் எந்த விரிவாக்கமும் பயனற்றவையே என்பதை உணர்த்தும் இயக்கமாக, உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது.
-------------

பிற்படுத்தப்பட்டவர்களில் குறிப்பிட்ட சாதியினரே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கின்றனர் என்பவர்களுக்கு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தொடர்பாக சட்டநாதன் கமிஷன் வைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 1987 வன்னியர் சங்க போராட்டத்திற்கு பின் அமல் செய்யப்பட்டு மிகபிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு பிற்படுத்தப்பட்டோரிலேயே மற்றோரு பிரிவு உருவாக்கப்பட்டு அதில் இடஒதுக்கீட்டால் பலன் கிட்டாத சாதிகள் இணைக்கப்பட்டன, தற்போது தலித் ஒதுக்கீட்டிலேயே அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது, இது போல அவ்வப்போது இடஒதுக்கீடு அதன் பாதையில் சரியாக சென்று பலன் தருகின்றதா என கவனிக்கப்பட்டு வருகின்றன, ஆனால் திமுகவில் உடன்பிறப்புகளே என்றும், அதிமுகவில் ரத்தத்தின் ரத்தங்களே என்று அழைப்பதை போல "அன்பார்ந்த உழைக்கும் மக்களே" என்று ஆரம்பிக்கும் ம க இ க விற்கு ஆண்ட சாதிகளின் உழைக்கும் மக்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?

நேர்மையாக சொல்ல சொல்லுங்கள் ம க இ க வினரை BC/MBC/DNC பட்டியல் இதில் உள்ளது, ஆண்ட சாதி, மோண்ட சாதி என்று சொல்லாமல் இந்த 285 சாதிகளில் எந்தெந்த சாதிகளை இடஒதுக்கீடு பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென குறிப்பிட்டு சொல்லுங்கள் முதலில் அடுத்ததாக நீங்கள் சொல்லும் அந்த சாதிகள் இடஒதுக்கீடு பட்டியலிலிருந்து நீக்கப்படும் வரை இப்போதிருக்கும் இடஒதுக்கீட்டை தொடரலாமா? கூடாதா? இவவ இரண்டுக்கும் பத்தி பத்தியாக பக்கம் பக்கமாக எழுதாமல் ஈழப்பிரச்சினைக்கு சொன்னீர்கள் பாருங்கள் அது மாதிரி 'நச்' சென்று பதில் சொல்லுங்கள் தோழர்களே....

பிற்படுத்தப்பட்டோரும் தலித்களும் தண்டவாளம் போன்றவர்கள் இவர்களின் மீது தான் பார்ப்பன உயர்சாதி ரயில் ஓடிக்கொண்டிருக்கும், இந்த தண்டவாளங்கள் இணையும் போது பார்பன உயர்சாதி ரயில் கவிழ்ந்துவிடும், இந்த தண்டவாளங்கள் இணையாமல் இருக்க வேண்டியதை பார்ப்பன உயர்சாதியினர் செய்துகொண்டே உள்ளார்கள், உண்மையில் சமுதாய விடுதலைக்காக பாடுபடவேண்டியவர்கள் செய்ய வேண்டிய

முதல் விசயம், எல்லா தளங்களிலும் தலித்-பிற்படுத்தப்பட்டோர் ஒருங்கிணைப்பை உருவாக்குவதே, பெரும்பாண்மயான இவ்விரு மக்களும் அடித்துக்கொள்ள ரத்தம் குடிக்கும் சிறுபான்மை பார்ப்பன உயர்சாதியினர் அதற்கு விடமாட்டார்கள், அதற்காக பகையாளி குடியை உறவாடி கெடு என்று கூட வருகிறார்கள், மீண்டும் ஆதவன் தீட்சண்யாவின் வரிகளை மேற்கோள் காட்டுகிறேன் "உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது."

பார்ப்பன தலைமையின் கீழ் இயங்கும் ம க இ க பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்கிடையே ஒற்றுமையை உருவாக்குகிறதா? அடித்துக்கொள்ள தூண்டுகிறதா?, இவர்கள் அடித்துக்கொள்வதால் ம க இ க வின் தலைமை பொறுப்பிலுள்ள பார்ப்பனர் சார்ந்திருக்கும் சாதி அமோகமாக வாழும்....

"நாமக்கட்டி வருது பாரு உஷாரு" ன்னு ம க இ க மேடைகளில் பாடும் நேரத்தில்

"காவிக்கொடி வருது பாரு உஷாரு
அது சிவப்பு வர்ணம் பூசி வருது உஷாரு
"
ன்னு பாட வேண்டிய நிலையும் உள்ளது என்பது வேதனைக்குறிய விடயம்...

பிணங்கள் புரட்சி செய்யாது - தமிழீழம் - மகஇக நிலைப்பாடு

எச்சரிக்கை இந்த படம் மிக கோரமானது, படத்தை பெரிதாக பார்க்க அதன் மேல் சுட்டவும்


பிணங்கள் புரட்சி செய்யாது
பாட்டாளி முதலாளி கள்
முதலில் உயிருடன்
வேண்டும்
புரட்சி புண்ணாக்குகள்
நடைபெற

சிங்கள் பேரினவாதத்தால்
தமிழினமே கருவறுக்கப்பட்ட பின்
பாட்டாளி புரட்சி
புண்ணாக்கை எதன் மேல்
நடத்துவாய்?
தமிழ் பாட்டாளி
தமிழ் முதலாளி பிணங்களின் மீதா?

தனி தமிழீழம் உருவாவதை ஆதரிக்கின்றீர்களா? எதிர்க்கின்றீர்களா? தனி தமிழீழம் உருவாவதை ஆதரிக்காவிட்டால் ஈழப்பிரச்சினைக்கு உங்கள் தீர்வு தான் என்ன? ஈழப்பிரச்சினையில் ம க இ க வின் நிலைப்பாடு என்ன? இவ்ளோதானேப்பா கேட்டோம் இதையும் கேட்டுவிட்டு தமிழ்பாட்டாளிகளும் சிங்கள பாட்டாளிகளும் சேர்ந்து தமிழ் சிங்கள முதலாளிகளுக்கு எதிராக வர்க்க புரட்சி நடத்த வேண்டும் என்று சொல்லி காமெடி கீமெடி செய்து விடாதீர்கள் என்று வேறு சொன்னோம்.....

தோழர்கள் இங்கே இது தொடர்பாக எந்த பதிலையும் தராமல் புலிகள், சிங்கள அரசு இரண்டும் மக்களை பிரித்து ஏகாதிபத்திய சேவை செய்வதில் மட்டும் ஒன்றிணைந்துள்ளனர் என்றும் பன்னாட்டு, தரகு முதலாளிகள் இலங்கையின் வளங்களை சுரண்டுவதற்க்கும் புலிகளும் சரி, இலங்கை தேசிய வெறி கும்பலும் சரி எந்தவொரு இடைஞ்சலும் செய்வதில்லை. என்றும் சொல்லியுள்ளார் ஆனால் கடைசி வரை இலங்கை பிரச்சினையில் தனி தமிழீழம் உருவாக வேண்டுமா? இல்லையா? என்பதற்கு பதிலில்லை என்பது மட்டுமல்ல புலிகளுக்கு சி.ஐ.ஏ. உதவுகிறது என்று வேறு காமெடியில் இறங்கிவிட்டார்கள் தோழர்கள்.....

ஆமாம் புலிகள் பகுதியில் மின்சாரம் முதல் எதுவுமே இல்லாமல் வளங்கள் எதுவுமில்லாமல் மீன் பிடிப்பு மற்றும் சிறு விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள், அங்கிருந்து இப்போதைக்கு என்ன வளத்தை சுரண்ட பண்ணாட்டு நிறுவனங்கள் அங்கே இருக்கிறதாம்? திரிகோணமலை இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொன்னால் கூட பரவாயில்லை புலிகளின் ஆட்சி பரப்பிலிருந்து என்ன வளத்தை சுரண்ட முடியும் இப்போது என்பது புரியவே இல்லை. இந்த சி.ஐ.ஏ, புலிகளின் ஆட்சி பகுதியில் ஏகாதிபத்திய சுரண்டல் இதற்கெல்லாம் என்ன ஆதாரமென்றால் அய்யோ ஆதாரம் என்பது தோழர்களை பொறுத்தவரை கெட்டவார்த்தை, தோழர்களுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "ஆதாரம்"

இலங்கையில் தமிழர்களின் உயிர் போகும் முதல் பிரச்சினை இனப்பிரச்சினையா? வர்க்க பிரச்சினையா? முதலில் தமிழ் பாட்டாளிகளும் தமிழ் முதலாளிகளும் சிங்கள பேரினவாத தமிழினவொழிப்பிலிருந்து உயிருடன் பிழைக்கட்டும் அதன் பின் தமிழ் பாட்டாளிகள் புரட்சி நடக்கட்டும் ஏனென்றால் பாட்டாளி புரட்சி நடக்க தமிழ் பாட்டாளிகளும் முதலாளிகளும் உயிருடன் வேண்டும், தமிழ் பாட்டாளி - முதலாளி பிணங்கள் புரட்சியை நடத்தாது.

இராசீவ்காந்தி கொலையின் போது ம க இ க தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்டார்களாம். ம க இ க மட்டுமல்ல திமுக, திக என பல்வேறு கட்சியிலிருந்தும் கைது செய்யப்பட்டிருந்தார்கள், தற்போது கூட பெரியகுளம் பகுதியில் பிடிபட்ட நக்சல் தீவிரவாதிகள் என கூறி சிலர் கைது செய்யப்பட்டனர் அதில் ம க இ க மாவட்ட அளவில் உள்ள ஒரு பொறுப்பாளரும் உள்ளார் அப்படியென்றால் அந்த நக்சல் இயக்கத்தின் கொள்கைகளை ஏற்கிறார்கள் என்றோ அதற்கு ம க இ க முழுவதும் அதற்கு பொறுப்பு என்றோ கூறலாமா? அட வைகோவை தூக்கி உள்ளே வைத்தார்களே அது மாதிரி ஏதோ தோழர் மருதையன் (எ) ருக்மாங்கத் அய்யர் (ஏம்பா பெயர் சரியா சொல்லியிருக்கேனா?) விடுதலை புலிகளுக்கு ஆதரவு தருகிறார் என கைது செய்யப்பட்டிருந்தால் ஏதாவது இவர்கள் சொல்வதில் கொஞ்சமாவது பொருள் இருக்கும்

தோழர்களே மிக எளிமைப்படுத்தி கேள்வி கேட்கிறேன், சுற்றி வளைத்து முதலாளி - பாட்டாளி ஏகாதிபத்தியம், இலங்கை - புலிகள் பாசிசம் லொட்டு லொசுக்கு என்றெல்லாம் பதில் வேண்டாம்.... அது எங்களை போன்ற அறிவிலிகளுக்கு புரியாது எளிமையாக சும்மா 'நச்' சுன்னு ஒத்தை வரியில் சொல்லுங்க கேள்வி இது தான்

1. தனி தமிழீழம் உருவாதை ஆதரிக்கின்றீர்களா? - ஆம் / இல்லை என்று ஏதாவது ஒரு பதில், ஆம் என்றால் அடுத்த கேள்விக்கு போகவே வேண்டாம், இல்லை என்றால் அடுத்த கேள்விக்கு போங்கள்

2.இலங்கையின் தமிழர்கள் இனப்பிரச்சினைக்கு உங்கள் தீர்வென்ன? தமிழர்கள் கொல்லப்படுவதை எப்படி தடுப்பது? தமிழ் பாட்டாளிகளும் தமிழ் முதலாளிகளும் எப்படி சிங்கள பேரினவாத அடக்கு முறையிலிருந்து உயிர் பிழைப்பது?

தோழர்களில் வாதங்களில் வலுவானவர்கள் என்று தெரியும், மொத்தமாக எல்லாவற்றையும் பேசினால் டிங்கிரி டிய்யாலோ டிங்காரே டிங்கிரி டிய்யாலோ தான், அதனால் தான் நேற்று மொத்தமாக கேட்டதை இப்போது ஒவ்வொன்றாக கேட்கிறோம் முதலில் இதற்கு சொல்லுங்கள் பிறகு ஒவ்வொன்றாக வாதிப்போம், அட 'நச்'சுன்னு புரியற மாதிரி பதில் சொன்னிங்கன்னா சரியான முறையில் நாங்கள் 'கன்வின்ஸ்' செய்யப்பட்டால் நாங்களே கூட உம்மை ஆதரிப்போம், அப்படி இல்லையென்றால் ராஜ்வனஜ் ஆர்.எஸ்.எஸ்.லிருந்து வெளியேறியது போல நீங்கள் கூட உங்கள் ம க இ க ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாலும் கொள்ளலாம்....

ஆதலால் மொத்தமா போட்டு கூட்டு பொறியல் செய்யாம ஒவ்வொரு பதார்த்தமா எதார்த்தமா பேசுவோம் சரியா தோழர்களே......

மகஇக சில கேள்விகள்?

பார்ப்பனீயத்திற்கு எதிராகவும், மக்களுக்கான அரசியல் என்றும் செயல்பட்டு வரும் மகஇக (மக்கள் கலை இலக்கிய கழகம்) அமைப்பின் தலைமையின் மேலும் அந்த அமைப்பின் சில செயல்பாடுகளின் மீதும் சில கேள்விகள் உள்ளன.

இடஒதுக்கீட்டிற்கு எதிரான மகஇகவின் நிலைப்பாடு
இடஒதுக்கீட்டிற்கு வேட்டு வைக்கும் மகஇகவின் நிலைப்பாடு இடஒதுக்கீடு விடயத்தில் மகஇகவும் அதன் இணை துணை அமைப்புகளும் சி.பி.எம். (கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் மனுதர்மா)மின் குரலிலேயே பேசினால் கூட பரவாயில்லை அதையும் விட மோசமான பார்ப்பனீய ஆதரவு குரலில் பேசுகின்றன(பார்ப்பனீயத்திற்கு எதிராக பேசுவது போன்ற தோற்றமளிக்கும் ஆனால் செயல்முறையில் பார்ப்பனீயத்துக்கு ஆதரவான குரல் தான் அது) இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தை படிக்கும் வரை இடஒதுக்கீடு பற்றிய இவர்களின் கருத்துகளை இந்திய சமூக சூழலில் மண்டியுள்ள சாதிய சமூக தாக்கங்களை பார்க்காமல் வெறுமனே எதையும் வர்க்க வேறுபாட்டோடு மட்டுமே பார்க்கும் கம்யூனிஸ்ட்களின் பார்வையே என்று நினைத்திருந்தேன், ஆனால் இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தை படித்த போது தான் இவர்கள் கம்யூனிஸ் பார்ட்டி ஆஃப் மனுதர்மாவை விட ஆபத்தான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது, அதையும் விட ஆபத்தானது இவர்களின் நிலைப்பாட்டை எதிர்க்க போகும் போது அதை எதிர்ப்பவர்களை மிக எளிதாக தீண்டாமையை ஆதரிப்பவர்களாக காண்பிக்க இயலும் என்பதே இதில் மிகவும் ஆபத்தானது.


இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தின் ஒவ்வொரு வரிக்கும் என்னால் மறுப்பு எழுத இயலும் (இடஒதுக்கீடு பற்றி சில புத்தகங்கள், சில நேரடி அனுபவங்கள், சில கட்டுரைகள் எழுதிய என்னாலேயே முடியும் போது) இடஒதுக்கீட்டு ஆதரவு அறிவு ஜீவிகள் அவர்களின் வாதங்களை நொடிப்பொழுதில் தூளாக்க முடியும்.இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டின் நியாயங்களை Reverse Descrimination, Revenge என்பதுவே என்பது போன்ற கருத்தியலை முன் வைத்துக்கொண்டிருக்கும் பார்ப்பன அறிவு ஜீவிகள், ஊடகங்கள் வாதத்தை வலுப்படுத்தும் விதமாகவே இவர்களின் தர்க்கம் அமைகின்றது.

முதலாளி தொழிலாளி என்று இரட்டை வர்க்கங்களை மட்டுமே உலகில் உள்ளன என்பவர்கள் போலும் இவர்கள், இந்திய சமூகத்தில் முதலாளி, தொழிலாளி வர்க்கப்பிரிவு முதல்நிலை வர்க்கப்பிரிவு அல்ல, சாதிய வர்ணப்பிரிவு தான் முதல் நிலை பிரிவு, அதுவும் கூட முதலாளி தொழிலாளி என்ற சரியான கோடு இழுத்து பிரிக்கப்பட்டதல்ல இந்த சாதிய வர்ணப்பிரிவுகள், சாதிய வர்ணப்பிரிவு என்பது படிநிலை , அடுக்குமுறை சமூகநிலை, எனக்கு கீழே நீ, உனக்கு கீழே இவன், இவனுக்கு கீழே அவன் இப்படியாக பிரிக்கப்பட்டுள்ள இந்த படிநிலை சமூகத்தில் நமக்கு கீழ் இருப்பவனை மேலே வராமல் பார்த்துக்கொண்டிருப்பதிலே மோதிக்கொண்டிருப்பதிலே எல்லாவற்றிற்கும் மேலே இருப்பவர்கள் பார்த்து ரசித்துக்கொண்டே மற்றவர்களின் பங்கையும் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். இந்த படிநிலை அடுக்குமுறை சமூகத்தில் மூன்றாம் இடத்தில் இருப்பவனும் முதலிடத்தில் இருப்பவனும் ஒன்றா? ஒன்று தான் என்கிறது மார்க்சிய லெனினிய பார்வை, மிக மிக மோசமான ஒன்றையும், மோசமான ஒன்றையும் சமம் என்று கூறுவது மிக மிக மோசமானதற்கு சாதகமாகவே அமையும், படிநிலை அடுக்கின் மேலே இருப்பவனும் மூன்றாம் நிலையில் இருப்பவனும் ஒன்றா? மேலே இருப்பவன் செய்யும் செயலின் பிண்ணனியும் மூன்றாம் இருப்பவனின் செயலில் பிண்ணனியும் ஒன்றா? எதற்காக இத்தனை தூரம் தலையை சுற்றி மூக்கை தொடுகிறேன் என்றால் நேரடியாக அவர்கள் கூறும் விடயத்தை எதிர்த்தால் மிக எளிதாக என்னை தீண்டாமையின் சாதிக்கொடுமையின் ஆதரவாளனாகவும் முத்திரை குத்த இயலும், நேரடியாக இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களை மிக எளிதாக சமாளிக்க இயலும், ஆனால் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் என்ற போர்வையில் அதே இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை சமாளிப்பது

மிக கடினமான ஒன்று அவர்களின் வேடத்தை களைப்பதற்கு கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும், அப்படி என்ன சொல்கிறார்கள் என்றால் தீண்டாமையை சாதி மேலாதிக்கம் செய்யும் சாதிக்கு இடஒதுக்கீடு கொடுக்க கூடாது, அட நியாயமாத்தானே சொல்லியிருக்காங்க என்று உடனே தோன்றினாலும் இந்திய அடுக்கு முறை படிநிலை சமூகத்தில் இப்படியான ஒரு காரணியின் மூலம் இடஒதுக்கீடு நிறுத்தப்பட வேண்டுமெனில் தலித்களுக்கு கூட இடஒதுக்கீடு அளிக்கப்படாது, பள்ளர்கள், பறையர்கள் வேறு பாடு உயர்வு தாழ்வு, அருந்ததியர்களின் மீதான உயர்சாதி தலித்களின் தீண்டாமை அதே அருந்ததிய சாதியினர் அவர்களுக்கு துணி துவைத்து போடும் மற்றொரு சாதியினர் மீது நடத்தும் வன்கொடுமை என தலித்களுக்கே கூட இடஒதுக்கீடு கிடைக்காது. யாருக்குமே இடஒதுக்கீடு தர தகுதியில்லாத நிலைவந்தால் யாருக்கு இலாபம், யோசித்து பாருங்கள் யாருக்கு இலாபம்? உயர்த்தப்பட்ட சாதியினருக்குதானே? பார்ப்பனர்களுக்கு தானே? மகஇக சொல்வது போல செய்தால் யாருக்குமே இடஒதுக்கீடு கிடைக்காது.

தமிழ்தேசியம், இந்திய தேசியம் நிலைப்பாடுகள்
மகஇகவும் அதன் இணை துணை அமைப்புகளும் தேசியத்தை ஆதரிக்கின்றன, அதாவது இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன, தமிழ் தேசியம் என்பதோ, மொழி வாரியான தேசியங்களோ, இனவாரியான தேசியங்களோ அவர்களை பொறுத்தவரை கெட்ட வார்த்தைகள் ரொம்ப கெட்ட வார்த்தைகள். புலவர் கலியபெருமாள் போன்றவர்கள் கம்யூனிச பாதையிலிருந்து பிரிந்து தமிழ் தேசியத்திற்காக போராட ஆரம்பித்ததே அவர்கள் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி மொழி இன வாரியான தேசியத்தை ஆதரிக்காதது, தேசியம் என்பது அந்தந்த இனக்குழுக்கள் உரிமைகள் கிடைக்கவில்லை என்றோ அல்லது எதற்காகவோ பிரிந்து செல்ல விரும்பினால் பிரிந்து செல்வது அவர்களின் உரிமை, பிரிந்து செல்லக்கூடாது என்பது சர்வாதிகார அடக்குமுறை என்றார் அவர், அடக்குமுறைக்கு எதிரானதாகவும் அடக்குமுறைக்கு எதிராக போராடுபவர்கள் என்பவர்களும் தேசியம் என்ற அடக்குமுறைக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மேலும் இந்திய தேசியம் யாருக்கு ஆதரவான தேசியம்? பெரியார்தாசன் மகஇக கூட்டத்திலே பேசியதை அவர்களே கவனித்திருக்கின்றார்களா? வெவ்வேறு இனம் மொழி கலாச்சாரத்தில் இருக்கும் இந்திய தேசியத்தை ஒன்றாக இணைப்பது பார்ப்பனர்களின் பூணுல் என்றார். மேலும் தமிழ் தேசியத்தை கருத்தளவில் ஆதரிக்காதவர்களை தமிழ் தேசியத்தை கருத்தளவில் கூட எதிர்ப்பவர்களை நாங்கள் ஆதரிக்க தயாராக இல்லை.

தமிழீழ நிலைப்பாடு
இது பற்றிய மிகப்பெரிய கள்ள மௌனமே சாதிக்கின்றது மகஇக, இவர்கள் தமிழீழத்தை ஆதரிக்கிறார்களா? தமிழீழம் இலங்கையிலிருந்து பிரிந்து செல்வதை ஆதரிக்கிறார்களா?(அவர்களுடைய தேசிய அரசியல்படி பார்த்தால் தமிழீழம் பிரிவதை எதிர்ப்பார்கள் என்றே கணிக்க தோன்றுகின்றது) அப்படி எதிர்க்கிறார்கள் என்றால் தமிழர்கள் மீதான இன அழிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாதம் பற்றிய நிலைப்பாடு என்ன? அப்படி சிங்கள இனவாதத்தை எதிர்க்கிறார்கள் என்றால் தமிழீழம் தனியாக பிரிவதை தவிர வேறு என்ன தீர்வை தமிழர்களுக்காக வைத்திருக்கிறார்கள்? (சிங்கள பாட்டாளிகளும் தமிழ் பாட்டாளிகளும் இணைந்து தமிழ்-சிங்கள் முதலாளிகளுக்கு எதிராக போராட வேண்டுமென்று கோரிக்கை எதுவும் வைத்து காமெடி கீமெடி செய்துவிடப்போகிறார்கள் - இதை சொன்ன வலைப்பதிவாளருக்கு நன்றி) தமிழீழ விடயத்தில் கள்ள மௌனம் சாதிப்பவர்களை எப்படி நம்புவது?

தமிழ் மொழி, தமிழ் இனம்
மகஇக தமிழ்மொழி, தமிழினம், மொழியரசியல், மொழி உணர்வு, மொழி உரிமை, வேற்று மொழியாதிக்கம் பற்றியெல்லாம் பேசியதாக தெரியவில்லை, அல்லது ஈனக்குரலில் பேசியிருக்கும், ஆனால் தமிழிசை விழா மட்டும் ஆண்டு தோறும் எடுக்கப்படும், தமிழ்மொழி , தமிழினம் இல்லாமல் எங்கிருந்து தமிழிசை மட்டும் வந்தது? மொழி வேண்டாம், இனம் வேண்டாம் அந்த மொழியின் இசை மட்டும் வேண்டும், இதன் பிண்னனி மிக ஆபத்தானது மொழியரசியல், மொழி உணர்வு, மொழி உரிமைகள், தமிழின உணர்வு (தமிழ் மொழியையும் தமிழினத்தையும் பிரித்து பார்க்க முடியாது)கள் தமிழிசையை விட பார்ப்பனியத்துக்கு மிக ஆபத்தானது. தமிழ்மொழி இன உணர்வோடு தமிழிசையையும் செயல்படுத்துவதே சரியானதாக இருக்கும், அதை விடுத்து தமிழ்மொழி இனத்தை புறக்கணித்து விட்டு தமிழிசையை மட்டும் முன்னெடுப்பது பெரும் சந்தேகத்துக்குறியதே.

கனிமொழி இசை விழா நடத்தியதை இவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். இவர்கள் நடத்தினால் அது பெருமை.அடுத்தவர் நடத்த கூடாதா?(அந்த விமர்சனத்தை பற்றி அவர்கள் கூறியது என்னவென்றால் அந்த இசைவிழா பழமையை போற்றி நிகழ்காலத்தை மறக்க வைக்கிறது என்பதாக இருந்தது)திராவிட ஆரிய கருத்தாக்கம்
திராவிடம் ஆரியம் என்ற பேச்சையே ஆரம்பிக்க கூடாது தோழர்களிடம், உடனே சொல்வார்கள் அதெல்லாம் இப்போ எங்கே? அப்படியாகவே இருந்திருந்தா கூட பல ஆயிரம் ஆண்டுகால இனக்கலப்பில் அதெல்லாம் இல்லையே போயிந்தே, இட்ஸ் கான் என்பார்கள், அப்புறம் ஏனய்யா உயர்த்தப்பட்ட சாதிக்கும் இடையில் உள்ள சாதிகளுக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும் இடையே தோல் நிறத்திலேயே வேறு பாடு இருக்கிறதே, ஒரே மாதிரியான காற்று, நீர், வெப்பநிலை ஆனால் வர்ணம் மட்டும் மாறுபட்டு இருக்கிறதே என்றால் மொத்தமாக வாயை பூட்டு போட்டு மூடிக்கொள்வார்கள் இவர்கள் திராவிடம் என்ற வார்த்தையை கேட்டாலே அலறுவதற்கு கண்டிப்பாக திராவிட கட்சிகளே காரணம், திராவிடம் என்ற வார்த்தையை புறக்கணிப்பதன் மூலம் திராவிட கட்சிகளை திராவிட அரசியலை ஏற்காதது, திராவிட கட்சிகளை அட கட்சிகள் கூட வேண்டாம் திராவிட அரசியலை மக்கள் ஏற்காமல் இருக்க செய்வதன் மூலம் மறைமுகமாக பார்ப்பனீயத்திற்கு ஆதரவாக இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது. ஏனெனில் மற்றெதையும் விட திராவிடம் என்ற வார்த்தையே பார்ப்பனீயத்துக்கு எதிரான பெரும் கலகச்சொல், திராவிடம் பார்ப்பனியத்திற்கு ஏற்படுத்தும் கிலியை வேறெதுவும் ஏற்படுத்தாது, ஏற்படுத்தியதில்லை.

பார்ப்பனியத்தை எதிர்க்கும் கட்சிகளின் மீதான கடும் விமர்சனங்கள்

மிக மிக மோசமான ஒன்றையும் மோசமான ஒன்றையும் சமமென்று ஒப்புமைபடுத்துவது மிக மிக மோசமானதற்கு ஆதரவாகவே அமையும், பார்ப்பனியத்தை எதிர்க்கும் மற்ற கட்சிகள் இயக்கங்களின் சில முரண்பாடுகளை வைத்து அக்கட்சிகளின் மீதும் தலைவர்களின் சில தவறுகளை வைத்து அவர்களின் எல்லா நோக்கங்களையும் முயற்சிகளையும் வரைமுறையற்று ஆதாரமற்று தாக்குவதும் விமர்சிப்பதும் அவர்கள் எதிர்க்கும் பார்ப்பனியத்துக்கு ஆதரவாகவே அமையும் என்பது தெரியாதா மகஇக வின் தலைமைக்கு? ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக கொள்கையில் நீர்த்துக்கொண்டிருக்கும் கட்சிகளுக்கு கொள்கை பிடிப்பானவர்கள் மேலும் அதில் உள்ளே செல்லாமல் தடுப்பதன் மூலம் அந்த கட்சிகளை முழுமையாக நீர்க்க செய்தால் அது பார்ப்பனியத்துக்கு ஆதரவாகவே அமையும் அதனால் கொள்கைபிடிப்பானவர்கள், தீவிரமாக இயங்கக்கூடியவர்களை அந்த கட்சிகளினுள் செல்வதை தடுத்து நிறுத்தும் முயற்சியாகவே இதை சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது, ஏனென் இப்படியான சந்தேகமெனில் வீரியம் மிக்கவர்கள் கொள்கை பிடிப்புள்ளவர்கள் இருந்தும் 1990லிருந்து இப்போதுவரை 17 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இயக்கம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையே ஏன்? தீவிரமான செயல்திறன் மிக்கவர்களை வெகுசன இயக்கங்களில் இணைந்து பங்களிப்பு செய்யாமல் இருப்பதை தடுத்து இந்த இயக்கத்தில் அமுக்கி இந்த இயக்கமும் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்காகவே
பார்ப்பனியத்தை எதிர்க்கும் மாற்று கட்சிகளின் மீதான இந்த வரைமுறையற்ற கடும் தாக்குதல் என்று சந்தேகபடலாமே? கொள்கை விமர்சனங்கள் என்பதை தாண்டி மேலே சேறடிக்கும் சவுக்கடிகளை விமர்சனங்கள் என்ற வரையறையிலா எடுக்க முடியும்?

மிடில் கிளாஸ் அறிவுஜீவி தலைமை
இந்த மிடில் கிளாஸ் அறிவுஜீவி தலைமைகளை கண்டாலே எமக்கு ஒவ்வாது, புலவர் கலியபெருமாள் மற்றும் பல போராளிகள் களத்திலே இறங்கி போராடிக்கொண்டிருந்தபோது கம்யூனிஸ்ட்(மா.லெ.) மற்றும் இணை துணை கம்யூனிச குழுக்களில் கோலோச்சிய இந்த மாதிரியான மிடில் கிளாஸ் அறிவு ஜீவி குழுக்கள் தான் இவர்களை தாறுமாறாக விமர்சித்துக்கொண்டும், யார் இயக்கத்தில் இருக்க வேண்டும் இருக்கக்கூடாது என்று கட்டளையிட்டு அதிகாரம் செய்து கொண்டுமிருந்தார்கள், இவர்களை பற்றி எஸ்.வி.இராஜதுரை தெளிவாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார், அப்படியான ஒரு மிடில் கிளாஸ் அறிவு ஜீவி தலைமை தான் இன்று மகஇக வில் அமர்ந்து கொண்டுள்ளார்கள்.மக்கள் போர் படை (PWG) கணபதி போன்றவர்கள் மகஇக தலைமையை இந்திய ஏஜென்சிகளின் கையாட்கள் என்றே விமர்சித்துள்ளதாகவும் அதற்கான காரணங்களையும் சொல்லியிருப்பதாகவும் படித்திருக்கிறேன், அது தொடர்பான கட்டுரைகள் எங்கேயாவது கிடைக்கிறதா என்று நண்பர்களிடம் கேட்டுள்ளேன்.

பார்ப்பனீயத்தை எதிர்க்கும் இயக்கத்தின் தலைமை பார்ப்பனரல்லாதோராக இருந்தால் அவர்கள் 100 % சந்தேகத்திற்கிடமின்றி இருந்தாலே போதுமானது, ஆனால் பார்ப்பனீயத்தை எதிர்க்கும் இயக்கத்தின் தலைமையே பிறப்பால் பார்ப்பனராக இருந்தால் அந்த தலைமை 200 % சந்தேகத்திற்கிடமின்றி இருக்க வேண்டும், ஆனால் மேற் குறிப்பிட்ட சந்தேகங்களினால் மகஇக தலைமை 50% கூட சந்தேகத்திற்கு இடமின்றி இருக்கவில்லை என்பது சர்வ நிச்சயம். மேலும் ம க இ கவின் செயல்பாடுகள், செயல்திட்டங்கள், எதை நோக்கி செல்கிறார்கள் என்பதெல்லாம் வெளிப்படையாக இல்லை. இதுவே இன்னமும் அதிகமாக சந்தேகப்பட வைக்கின்றது.

மகஇக தோழர்களுக்கு
தோழர்கள் கோபப்பட்டு எனக்கு ஐ.எஸ்.டி போனெல்லாம் போட்டு காசு செலவு செய்ய வேண்டாம், அப்படியும் போன் செய்யவேண்டுமென்று ஆசைப்பட்டால் வரவனை செந்திலிடம் என் கை பேசி எண் இருக்கின்றது வாங்கிக்கொள்ளுங்கள்.