அத்துமீறு - தடம் மாறுகிறதா விடுதலை சிறுத்தைகள் அமைப்பு?


பொத்தாம்பொதுவானதாக கம்யூனிஸ்ட் கட்சி இருக்க முடியாது. அது பறையன், பள்ளன் கட்சி என்று அதன் எதிரிகளால் மிகச்சரியாகவே இதற்கு முன் விளிக்கப் பட்டது. சரியாகச் சொல்வதெனில் அதை அருந்ததியர் கட்சியெனச் சாதிவெறியர்களும், பெண்களின் கட்சியென ஆணாதிக்கரும் இழித்துரைக்கும் நிலையை நோக்கி அக்கட்சி இன்னும் வேகமாக தலைகுப்புற வர வேண்டும் என்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் பெரு விருப்பம்.இப்படியான கருத்துகள் ஆதவன் தீட்சன்யா அவர்களின் "புதுவிசை" இதழின் தலையங்கம் சொல்கிறது

"அடங்கமறு, அத்துமீறு, திருப்பி அடி" என்ற முழக்கத்தோடு தலித் விடுதலைக்காகவும் தலித் சமூக மாற்றத்திற்காகவும் உருவான விடுதலை சிறுத்தைகள் அமைப்பு இன்று தலித்கள் கட்சி என்ற வட்டத்தை விட்டு வெளிவந்து எல்லோருக்குமான கட்சி என்ற பெயர் வாங்க கட்சியின் மொத்த அமைப்பையும் கலைத்துவிட்டார்கள்.

எல்லா சாதியினருக்கும் பொதுவான கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாற வேண்டிய சூழல் வந்துவிட்டதா? அதாவது தலித் விடுதலை பெற்றாகிவிட்டது இனி தலித்தாக பிறந்துவிட்டதனால் மற்ற சாதிவெறி நாய்களால் செய்யப்பட்ட கொடுமைகள் நீங்கி எங்கும் ஒரே சமத்துவம் நிலவுகின்றது ஆதலால் இனி தலித் அடையாளத்துடனான தலித் கட்சி தேவையில்லை என்ற சூழல் நமது சமூகத்தில் உருவாகிவிட்டதா?

அல்லது மற்ற எல்லா அரசியல் கட்சிகளிலும் தலித் சமூகத்தினர் பெரும் பங்கை பிடித்துவிட்டார்கள் பாவம் மற்ற சாதியினர் அவர்களுக்கு அரசியல் கட்சிகளில் பங்களிப்பே இல்லை அதனால் தலித் கட்சியை பொதுக்கட்சியாக்கி அதனால் பிற சாதியினருக்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் சேர்த்து அவர்களுக்கான பங்களிப்பை தர முயலும் நிலைமை உருவாகிவிட்டதா?

இரண்டுமே இல்லையே, இங்கே தலித் அல்லாதவர்களுக்கான கட்சிகளுக்கா பஞ்சம்? பிறகு ஏன் கட்சியின் அமைப்பை கால் மணி நேரத்தில் காலி செய்துவிட்டு எல்லோருக்கும் கதவை திறந்துவிட்டிருக்கின்றீர்கள்? விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் இப்போதும் கூட எத்தனையோ தலித் அல்லாதவர்களும் பொறுப்பில் உள்ளார்களே, சோழன் நம்பியாரில் ஆரம்பித்து எத்தனையோ பேர் மாநில மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கின்றார்களே, இவர்களெல்லாம் கொள்கை பிடிப்போடும் தலித் இயக்கம் என்று தெரிந்தே தானே சேர்ந்தார்கள், அழைப்பில்லாமலேயே அவர்கள் எல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கும் போது இப்போது எல்லோருக்கும் பொதுவான கட்சியென்று யாருக்கு அழைப்பு விடுக்கின்றீர்கள்?

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் இரண்டாம் முறையாக போட்டியிட்டபோது தொகுதியின் மொத்த தலித் வாக்காளார்களின் எண்ணிக்கையையும் விட பதினைந்தாயிரம் வாக்குகள் அதிகம் பெற்றாரே (குறைந்தது ஐம்பதாயிரம் வாக்குகள் தலித் அல்லாத சமூகத்தினரின் வாக்குகள் என கணிக்கப்பட்டது), அப்போதெல்லாம் தலித் விடுதலை, தலித் எழுச்சிக்கான உங்கள் குரலில் எந்த சமரசமும் இல்லாமலேயே நீங்கள் தலித் அல்லாதவர்களின் மனங்களில் ஊடுறுவித்தானே இருந்தீர்கள்.

அதிகாரத்தை நோக்கிய பயணத்தையோ, சமரசமற்ற அரசியலையோ யாம் எப்போதுமே மறுப்பதில்லை, அரசியலில் சமரசம் தேவை, இன்றைய நிலைப்பு தன்மை மிக முக்கியம், இந்த நிலைப்பு தன்மை மட்டுமே வருங்காலத்தில் தம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குகான நன்மைகள் செய்ய இயலும், ஆனால் எதை சமரசம் செய்ய முனைகிறோம் என்பது முக்கியமல்லவா?

கொள்கைப்பிடிப்பு இல்லாமல், அல்லது விடுதலை சிறுத்தைகளின் நோக்கங்களை ஏற்றுக்கொள்ளாத ஆதிக்க சாதியினர் கட்சியில் புகுந்துவிட்ட பின் தலித்களின் மீதான வன்கொடுமை தாக்குதல்கள் நடத்தபடும் இடங்களில் விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

இன்றைக்கு மாதிரியே "அத்துமீறு" "அடங்கமறு" "திருப்பி அடி" என்ற வீரியத்தோடே இருக்குமா? அல்லது நம்ம கட்சி காரர்தான் பேசிக்கலாம் வாங்க என்றோ நம்ம மா.செ.வோட அண்ணன் பையன் தான்பா உக்காந்து பேசலாம் வாங்க என்று கட்சி கணக்கு ஓட்டு கணக்கு என சமரச கணக்கு போட வேண்டியதாக இருக்குமா?

இப்படி சொல்வதாலேயே யாம் எல்லா நேரமும் எதிர் கலவரம் செய்யவேண்டுமென்று பொருள் படுத்தவில்லை, பாமக - விடுதலை சிறுத்தைகள் அமைப்புகளின் ஊடான முட்டல் மோதல்கள் மறைந்து ஒரு இணக்கமான சூழல் அமைந்த போது அது தலித்-வன்னியர் இணைப்பாக அந்த நிலை வரவேண்டுமென விரும்பிய எத்தனையோ உள்ளங்களின் யாமும் ஒன்று, என்ற போதிலும் எம்முடைய சந்தேகம் ஏன் கவலையும் கூட என்னவென்றால் தலித் கட்சியாக இல்லாமல் பொதுக்கட்சியாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பு மாறும் போது தலித்களுக்கு எதிரான சமூக இழி செயல்களை எப்படியான சமரசத்துடன் எதிர்கொள்ளும்?

திரு.தொல்.திருமாவின் இந்த முடிவுக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம், மாயாவதி அவர்களின் உ.பி. அரசியலை கணக்கில் கொண்டும் இருக்கலாம், அல்லது விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கு தலித்களில் வெறும் 20% மட்டுமே வாக்களிப்பதால் (இதே நிலைதான் பாமகவிற்கும், வன்னியர்களின் 20% மட்டுமே பாமகவிற்கு வாக்களிக்கின்றனர்) அரசியலில் சில உயரங்களை எட்ட முடியாத நிலையில் அமைப்பின் பலத்தை கூட்ட முயற்சிக்க கூட இப்படி முடிவெடுத்திருக்கலாம்.

எது எப்படியானாலும் திரு.திருமாவின் இந்த முடிவு அரசியலில் திருமா மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சில உயரங்களை எட்டவும் ஒரு முக்கிய சக்தியாக அரசியலில் விளங்கவும் உதவி புரியலாம்! ஆனால் தலித் மக்களின் எழுச்சி? அவர்களின் பிரதிநிதித்துவம்? அவர்களின் அரசியல்? அவர்களின் சமூக நிலைக்கு இந்த சமரச அரசியல் உதவி புரியுமா என்பது சந்தேகமே