இளிச்சவாயர்கள் ரசிகர்களா? தொண்டர்களா? பகுதி - 1

சிறந்த இளிச்சவாயர்கள் ரசிகர்களா? தொண்டர்களா? பட்டிமன்றம் பகுதி - 1

முன்குறிப்பு
இந்த படைப்பு முழுக்க முழுக்க ஒரு கற்பனையே யாரையும் குறிப்பன அல்ல.

இடம் : ஏதோ ஒரு மண்டபம்
நடுவர் : சாலமன் பாப்பையா
ரசிகர்களே : ராஜா மற்றும் குழுவினர்
தொண்டர்களே: காஜா மற்றும் குழுவினர்

சாலமன் பாப்பையா :
தமிழை வணங்கி இந்த மன்றத்தை தொடங்குகிறேன்,முன்னெயெல்லாம் பார்த்தீங்கனா இந்த பட்டிமன்ற தலைப்பு ரொம்ப சுலபமா இருக்கும் கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? வீரத்தில் சிறந்தவன் அர்ச்சுனனா? பீமனா? அப்படினு இப்போ எல்லாம் முன்னேறுறாங்க, நிறைய சிந்திக்கிறாங்க

நான் மதுரையில பழங்காநத்தம் பேருந்து நிலையத்தில நின்னுக்கிட்டிருந்தப்ப ஒரு சின்ன பையன் வந்தார்,நீங்க தான் பட்டிமன்றத்தில தீர்ப்பு சொல்ற பாப்பையாவோ? அப்படின்னாரு, நான் உடனே ஆமாம்ப்பா என்ன விஷயம்னு கேட்டேன், அப்போ கேட்டாரே அவரு ஒரு கேள்வி, உங்க நிறம் ரொம்ப கருப்பா? இல்ல தி.க. கொடியில இருக்கிற கருப்பு நிறம் ரொம்ப கருப்பானு ஒரு நிமிசம் திகைச்சி போயிட்டேன், அது மாதிரி ஒரு தலைப்பு தான் சிறந்த இளிச்சவாயர்கள் ரசிகர்களா? தொண்டர்களா?

ஒரே கொழப்பமா இருக்கு, ரசிகன் புது படம் ரிலீஸ் ஆனா கட்-அவுட் வைக்கறான், கொடி கட்டறான்,தொண்டன் அவன் தலைவர் வராருனு கட்-அவுட் வைக்கறான் , கொடி கட்டறான்.
ரசிகன் என்னடானா திரையில அவனுக்கு பிடிச்ச நடிகர் வரும்போது சூடம் காட்டுறான்
தொண்டன் என்னடானா அவன் தலைவர் வரும்போது ஆரத்தி காட்டுறான்
அவனும் அவன் நடிகனுக்கு மாலை போடுறான், இவனும் இவன் தலைவனுக்கு மாலை போடுறான்,

ஒரே கொழப்பமா இருக்கு இதுல யாரு சிறந்த இளிச்சவாயன்னு தேர்ந்தெடுப்பது,
அதுக்குதானே வந்திருக்குறோம், இரண்டு அணியும் பேசட்டும், அப்புறம் நம்ம முடிவை சொல்லுவோம்.

ரசிகர்களே என்ற அணிக்கு ராஜா தலைமையேற்று பேசப்போகிறார்,
தொண்டர்களே என்ற அணிக்கு காஜா தலைமையேற்று பேசப்போகிறார்.
ஹி ஹி வாங்க புள்ளிராஜா வந்து விளாசுங்க.

ராஜா:
நீதி வழுவா பாண்டிய மன்னனின் வாரிசாக சபையிலே வீற்றிருக்கும் நடுவர் அவர்களே

சா.பா. :
எங்கப்பா மன்னன், நம்ம சிம்மாசனத்துக்கு ரெண்டுபக்கமும் ரெண்டு இளம் பெண்கள் விசிறியால் விசிறி விடுறாங்களா என்ன? சும்மா இந்த கதையெல்லாம் விடக்கூடாது

ராஜா:
சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் நடுவர் அவர்களே, இப்போ நான் கூட என் மனைவியை பார்த்து, உன்னைய பார்த்தா மகாலட்சுமி மாதிரி இருக்கிறனு சொல்றேன், அது மாதிரி சும்மா ஒரு பேச்சுக்குதானே,
நீங்க புள்ளிராஜானு கூப்பிட்டிங்க, உண்மைய சொன்னா நான் புள்ளிராஜா தான்,
என் பெயருக்கும் இனிஷியலுக்கும் நடுவில புள்ளியிருக்கே, அப்போ நான் புள்ளிராஜாதானே!

சா.பா. :
அப்படி போடுங்க ராஜா, புள்ளிராஜா

ராஜா:
அய்யா நீங்க சொன்னீங்க ரசிகன் அவனுக்கு பிடித்த நடிகர் திரையில தோன்றும் போது சூடம் காட்றான், தொண்டன் அவன் தலைவர் வரும் போது ஆரத்தி எடுக்கிறான்,
மேலோட்டமா பார்த்தா ரெண்டும் ஒண்ணுதேன் ஆனா ரசிகன் திரையில வர நடிகனுக்கு சூடம் காட்டும் போது எதுனா பணம் காசு கிடைக்குதா, இல்லியே
சா.பா.:
எங்க தியேட்டர் காரன் வந்து சூடம் காமிச்சி திரையை கொளுத்திடாதனு உதைதான் கொடுப்பான்
ராஜா:
அதே தலைவர் வரும் போது ஆரத்தி எடுக்கிற தொண்டனுடைய தட்டுல ஒரு நூறு ரூபாய தலைவர் போடுவாரே, ஆக ஒரு ரூபா சூடத்தை காட்டி நூறு ரூபா வசூல் பண்ண தொண்டன் இளிச்சவாயனா? இல்ல சூடத்தை திரைக்கு காமிச்சு உதைவாங்குற ரசிகன் இளிச்சவாயனா?

சா.பா.
ஆகா ஆகா இதில இப்படி ஒரு விசயமிருக்கா, ம் கலக்குங்க ராஜா

ராஜா:
அது மட்டுமா ஏற்கனவே பேரு வச்ச குழந்தைய தூக்கிட்டு வந்து தலைவன் கையில குடுத்து இன்னொருவாட்டி பேரு வைக்க சொல்லுவான் தொண்டன், தலைவரும் பேரு வச்சிட்டு ஒரு ஆயிரம், ஐநூறுனு மொய் வைப்பார், இந்த மாதிரி ரசிகன் நடிகர் கிட்டயிருந்து வசூல் பண்ணமுடியுமா?

எங்க இவங்கதான் 30ரூ டிக்கட்ட 300 ரூவா குடுத்து ப்ளாக்ல வாங்கி படம் பார்ப்பாங்க,இதில தெரியலையா ரசிகர்கள் தான் இளிச்சவாயர்கள் என்று.

சா.பா.:
இங்க தொண்டர்கள் வசூல்ராஜானா அங்க நடிகருங்க வசூல்ராஜா, ம்...

ராஜா:
கட்-அவுட்,கொடி தோரணம் கட்டுறதை சொன்னீங்க, இதுல தொண்டருங்க இருக்காங்களே அவங்களாம் சொந்த பணத்தை போட்டு கட்-அவுட் கொடி தோரணம் கட்டுறதுயில்ல, அத சப்ளை பண்றது, வட்டம் மாவட்டங்க, ஆனா ரசிகருங்கலாம் அவங்க அப்பா அம்மா கஷ்டப்பட்டு உழைச்ச பணத்தை கொண்டுவந்து கட்-அவுட்,கொடிதோரணமா வீணாக்குறாங்க, இப்போ சொல்லுங்க யாரு சிறந்த இளிச்சவாயர்கள், ரசிகர்களா? தொண்டர்களா?

இப்போதைக்கு விடைபெற்றுக்கொண்டு மீண்டும் வருவேன் என சொல்லி என் இடமர்கின்றேன்.

சா.பா.:
ஆகா ஆகா என்னமா கலக்கினாரு பாருங்க, புள்ளிராஜா புயல்ராஜாவா மாறி சூறாவளியா சுழன்றுட்டாருங்க,ம்... தொண்டர்களே சிறந்த இளிச்சவாயர்கள் என பேச காஜா அவர்களை அழைக்கின்றேன்,ம்... வாங்க காஜா என்னத்த பேசப்போறிங்க, அதுதான் புள்ளிராஜாவே பேசிட்டாரே, அவர் பக்கம் இப்ப கை ஓங்கியிருக்கு,பாயின்ட் பாயின்டா அடிச்சாரு அவரு, என்ன பதில் சொல்லப்போறிங்க

சிறந்த இளிச்சவாயர்கள் தொண்டர்களே என்ற காஜாவின் விவாதம் அடுத்த பதிவில் தொடரும்.....

பகுதி -2

பின் குறிப்பு:
ஐயா சாலமன் பாப்பையா அவர்கள் நிறத்தைப்பற்றி அவரே கிண்டலடித்துக்கொள்வதை பட்டிமன்றங்களிலே கேட்டுள்ளேன் அதனால் தான் அப்படி எழுதினேன், யாரும் தவறாக எண்ண வேண்டாம்

12 பின்னூட்டங்கள்:

said...

//அது மட்டுமா ஏற்கனவே பேரு வச்ச குழந்தைய தூக்கிட்டு வந்து தலைவன் கையில குடுத்து இன்னொருவாட்டி பேரு வைக்க சொல்லுவான் தொண்டன், தலைவரும் பேரு வச்சிட்டு ஒரு ஆயிரம், ஐநூறுனு மொய் வைப்பார்//

சரியா சொன்னிங்க போங்க

said...

//ஆரத்தி எடுக்கிற தொண்டனுடைய தட்டுல ஒரு நூறு ரூபாய தலைவர் போடுவாரே, //

அப்படியா?? .......... நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் ..அனுபவத்துலதானே பேசுவீங்க ..;)

said...

//அப்படியா?? .......... நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் ..அனுபவத்துலதானே பேசுவீங்க ..;)
//

அடப்பாவி தாஸீ எப்படி எழுதினாலும் கலாய்க்கறிங்களே இது நியாயமா? ஹி ஹி

said...

குழலி,
மேலோட்டமாய்ப் பார்க்க நகைச்சுவையாய் இருந்தாலும் சிந்திக்க வேண்டிய விதயம் நிறைய உள்ளது இப்பதிவில்.

said...

அருமையான முயற்சி.. வாழ்த்துக்கள்.

ரசிகர்கள் தான் இளிச்ச வாயர்கள் என்று தீர்ப்பு வரும்.. என்ன சொல்லறீங்க?

விச்சு

said...

ஒருத்தன் பயங்கர இளிச்சவாயன்; அடுத்தவன் மஹா பயங்கர இளிச்சவாயன். இது எப்படி இருக்கு?

said...

அண்ணே வண்டார் குழலி,

(பா)லமன் (சா)ப்பையா என்ன பாவங்க நெஞ்சாரு. அவரு தேமேன்னு குடும்பமா? குட்டியா?ன்னு பட்டிமன்றம் நடத்தி பெஞ்சை தேச்சிக்கிட்டு இருந்தாரு. அவரைப் போய் இப்படி உருப்படியான டாப்பிக்ல நடுவரா இருக்க சொன்ன என்ன தீர்ப்புங்க சொல்லுவாரு.

பேசாம திண்டுக்கல் லியோனியை விட்டுருக்கலாம்ல. அவரு தான் இதுல எக்ஸ்பர்ட்டு. இடை இடையில அவரோட கழுதை குரல்ல பாட்டு வேற கேட்கலாம்.

அப்புறம் (பா)லமன் (சா)ப்பையாவோட மதுரை தொனி 'வந்தான்ய' 'போனய்யா' மிஸ்ஸிங்.

இளிச்சவயர்கள் ரசிகர்களா? மக்களா? என்பதற்கு என்னோட தீர்வு

'ரசிகர்களையும் தொண்டர்களையும் உருவாக்கும் பொதுஜனங்கள் தான் இளிச்சவாயர்கள்'

said...

//அப்புறம் (பா)லமன் (சா)ப்பையாவோட மதுரை தொனி 'வந்தான்ய' 'போனய்யா' மிஸ்ஸிங்.//

சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி விஜய், பதிவிட்டபிறகு ஒரு முறை படித்து பார்த்தேன் ஏதோ குறைகிறதே என்று தோன்றியது அது இதுதான் என எண்ணுகின்றேன்

மதுரைக்கு சென்று 7 வருடம் ஆகின்றது அதான் மிஸ்ஸிங்.

//பேசாம திண்டுக்கல் லியோனியை விட்டுருக்கலாம்ல. //
விடுங்க... அடுத்த பட்டிமன்றத்துல அவர்தான் நடுவர்,

said...

குழலியாரே, கலக்குங்க !!

ஆனா ஒன்னு சொல்ல மறந்துட்டீங்களே ! இந்த பட்டிமன்ற நேரடி ஒளிபரப்பு உரிமம் யாருக்கு பா???


தொண்டர்களின் மனசாட்சியான் "சூரிய" அல்லது "அம்மா" தொலைக்காட்சி ??? இல்லை ரசிகர்கள் ஆதரவு 'தமிழ்த்திரை' தொலைக்காட்சி க்கா??....

இல்லை அதுக்கு ஒரு தனி பட்டிமன்றமா?? :)

வீ. எம்

said...

//தொண்டர்களின் மனசாட்சியான் "சூரிய" அல்லது "அம்மா" தொலைக்காட்சி ??? இல்லை ரசிகர்கள் ஆதரவு 'தமிழ்த்திரை' தொலைக்காட்சி க்கா??....
//

ஹி ஹி என்கிட்ட வந்து சூரிய தொ.கா. வா அம்மா தொ.கா. வானு கேட்கிறீர்களே நியாயமா? எனக்கெல்லாம் தமிழன் தொ.கா. தான்

said...

//இத பாத்தா எனக்கென்னம்மோ நீங்க ரசிகர்களதான் இளிச்சவாயனாக்குவீர்-னு தோணுது?????

யோவ் குழலி தீர்ப்பபப ஒழுங்காச்சொல்லு..... ;-)//

ஹி ஹி விவாதங்களை வைத்து நடுவர்தான் தீர்ப்பை சொல்லுவார், ஹி ஹி ஏற்கனவே 3 பேர் தீர்ப்பு சொல்லிட்டாங்க, பார்ப்போம் அய்யா என்ன தீர்ப்பு சொல்றாருனு

said...

//பார்ப்போம் அய்யா என்ன தீர்ப்பு சொல்றாருனு
//
Doctor Ayya-vaa?