பீகார்,லல்லு, அரசியல்

ஒரு வழியாக பீகார் தேர்தல் முடிந்து குதிரை பேரத்திற்கு வாய்ப்பில்லாமல் ஒரு முடிவான முடிவை பீகார் மக்கள் அளித்துவிட்டனர், லல்லுவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது, ஒவ்வொரு தேர்தலின் போதும் பலரும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்த தேர்தல் முடிவு இந்த முறை ஏமாற்றமல் வந்துள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஊடகங்களும் இதை பலமாக கொண்டாடுகின்றன, பாஸ்வான், லல்லு மோதல் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு ஆட்டம் கொடுக்குமா, மத்திய அரசாங்கம் கவிழுமா என கேள்விகள் எழுப்புகின்றனர், பீகார் கனவு நிறைவேறியதைப்போல இதுவும் நிறைவேறுமா என்ற எண்ணத்துடன்.

இந்தியாவில் மேற்குவங்கம் தவிர்த்து வேறு எந்த மாநிலத்திலும் தொடர்ந்து 15 ஆண்டுகள் கடந்த 30 ஆண்டுகளில் ஒரே கட்சியின் ஆட்சி இருந்ததாக தெரியவில்லை (தமிழகத்தில் மட்டும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்து அதிமுக ஆட்சி இருந்தது ) கடந்த 15 ஆண்டுகள் லல்லுவின் ஆட்சி தனிப்பெரும்பாண்மையாக பீகாரில் இருந்தது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலிலும் கூட லல்லு கட்சி 74 தொகுதிகளில் வென்று தனிப்பெறும் கட்சியாக இருந்தது, ஆனால் இப்போது ஆட்சியை இழந்து 54 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது, லல்லு தோல்வி அடைந்துள்ளதால் பீகார் மக்களுக்கு புத்திவந்துவிட்டதாகவும், லல்லு வேண்டாம் என்று சொல்லும் அறிவை அடைவதற்கே பீகார் மக்களுக்கு 15 ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் ஆங்காங்கே குரல்கள், எள்ளி நகையாடல்.


தமிழகத்திலே 2001ல் நடந்த தேர்தலில் திமுக தன் முந்தைய ஆட்சிகளின் சாதனையை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்தது, கருணாநிதியின் முந்தைய கால ஆட்சியைவிட 96-2001 ஆட்சி சிறப்பாகவே இருந்தது, இருந்தும் தோல்வி, இராஜஸ்தானில் இரண்டுமுறையும் ஓரளவிற்கு நல்ல ஆட்சி வழங்கிய காங்கிரஸ் மூன்றாம் முறையும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறிய போதும் அதற்கு தோல்வி, எனவே பெரும்பாலும் மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புவர்கள் அதுவும் இரண்டுமுறை தொடர்ந்து ஆட்சி செய்திருந்தால் மூன்றாம் முறை நிச்சயம் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும், ஆனால் பீகாரில் மூன்று முறை ஆட்சி செய்ததுமில்லாமல் இந்த ஆண்டு தொடக்கத்தில் மற்ற கட்சிகளைவிட அதிக இடங்கள் பெற்றார் லல்லு, இந்த முறையும் முழுத் தோல்வி அடையாமல் 54 இடங்களி வென்றுள்ளார், மேலும் வெற்றி இடைவெளி பல இடங்களில் குறைவாகவே இருந்துள்ளது.

2005 தொடக்கத்தில் நடந்த தேர்தல் முடிவுகள்



























கட்சிவெற்றி
ஆர்ஜேடி74
ஜேடி(யு)55
பிஜேபி38
காங்.10
எல்ஜேபி30


தற்போதைய தேர்தல் முடிவுகள்


























கட்சிவெற்றி
ஆர்ஜேடி54
ஜேடி(யு)88
பிஜேபி55
காங்.9
எல்ஜேபி10


பீகார் மக்களுக்கு அறிவில்லை என்று அறிவுசீவி தனமாக பேசுவதற்கு முன் ஒரு நிமிடம் யோசியுங்கள், தொடர்ந்து மூன்று முறை தனிப்பெரும்பான்மை, நான்காவது முறை தனிப்பெரும் கட்சி, தற்போது 54 உறுப்பினர்கள், இது எப்படி என்று யோசிக்கமுடிகிறதா??

நான் சந்தேகிப்பது என்னவென்றால் நாமெல்லாம் பத்திரிக்கை வழியாகவும் ஊடகங்கள் வழியாகவும் பார்க்கும் பீகாரும் பீகார் அரசியலும் வேறு ஆனால் அங்கே உண்மையில் இருக்கும் பீகாரும் பீகார் அரசியலும் வேறு.

அங்கே லல்லுவையும், ஊழலையும், ஆட்கடத்தலையும் தாண்டி வேறு ஏதோ ஒரு அரசியல் இயங்கிக்கொண்டிருக்கின்றது, யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது அங்கே இருந்திருக்கிறது அதுவே லல்லுவை மூன்று முறை ஆட்சி கட்டிலில் அமர்த்தியுள்ளது, அந்த இயங்கு அரசியல் என்ன? அந்த இயங்கு அரசியலுக்கு காரணம் என்ன?

அந்த இயங்கு அரசியல் பற்றிய முழு விவரங்களும் ஊடகங்களில் காண்பிக்கப் படவில்லை, காண்பிக்கவும் படாது, யாரேனும் உண்மை நிலவரத்தை நேர்மையாக எழுதினால் ஒழிய நமக்கும் அது புரியாது, மேலும் தற்போது பீகார் ஆட்சி மாற்றம் ஒரு முழுமையானதல்ல, இது ஒரு இடைவேளை( பிரேக்) அவ்வளவே, அந்த இயங்கு அரசியலுக்கான காரணங்கள் சரி செய்யப்படவில்லையென்றால் மீண்டும் லல்லுவோ, அல்லது வேறு யாரோ வருவார்கள், அப்போது நாம் மீண்டும் பீகார் மக்களுக்கு அறிவில்லை என்றும், மூளை மழுங்கிவிட்டது என்றும் கூறிக்கொண்டே இருப்போம், ஆனால் அது எதுவும் பீகார் மக்களையும் அதன் இயங்கு அரசியலையும் பாதிக்காது.

இயற்கை இனிமையானது



சிங்கப்பூர் புலாவுபினில் நண்பனால் எடுக்கப்பட்ட படம்.


Image hosted by Photobucket.com

இயற்கை இனிமையானது
உன்னைப் போலவே

இயற்கை பசுமையானது
உன்னைப் போலவே

இயற்கை புதுமையானது
உன்னைப் போலவே

இயற்கை புதிரானது
உன்னைப் போலவே

இயற்கை புரியாதது
உன்னைப் போலவே

இயற்கை அழகானது
உன்னைப் போலவே

இயற்கை ஆச்சரியமானது
உன்னைப் போலவே

இயற்கை ரகசியமானது
உன்னைப் போலவே

இயற்கை அன்பானது
உன்னைப் போலவே

இயற்கை வேகமானது
உன்னைப் போலவே

இயற்கை இதமானது
உன்னைப் போலவே

இயற்கை பலமானது
உன்னைப் போலவே

இயற்கை பலவீனமானது
உன்னைப் போலவே

ஒரு முயற்சி! ஒரு வேண்டுகோள்!!

இணைந்த கைகள் என்ற என் பதிவில் மருத்துவர் இராமதாசு மற்றும் தொல்.திருமாவின் தற்போதைய இணைப்பு பற்றி எழுதியிருந்தேன், அதில் உஷா அவர்கள்
//குழலி, அரசியலில் கைக்குலுக்கலும், கட்டியணைத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதும், பின் பிரிந்துவிட்டு கன்னாபின்னாவென்று திட்டிக் கொள்வதும் , சமயம் வாய்த்தல் மீண்டும் இணைவதும், கேட்டாலும் அரசியலில் நிரந்தர நண்பர்களும்
இல்லை, எதிரிகளும் இல்லை என்று ராஜதந்திரமாய் பேசுவதும் காலக்காலமாய் நடப்பதுதானே? இன்று இதில் என்ன புதுமை
என்று நீங்கள் மெய்சிலிர்த்துப் போகிறீர்கள்?
//

என்று பின்னூட்டமிட்டிருந்தார், மேலும் இளவஞ்சி முகமூடியின் ஒரு பதிவில் சீட்டு பேரத்திற்கான கூட்டணி என்று குறிப்பிட்டிருந்தார், மருத்துவர் இராமதாசு மற்றும் திருமாவின் இணைப்பு இவர்களுக்கு (பின்னூட்டமிடாத இன்னும் பலருக்கும் கூட) சாதாரண ஒரு அரசியல் நிகழ்வு, ஓட்டுக்காக வைத்துக்கொண்ட கூட்டணி என்ற அளவிலேயே இது தோன்றியது, நான் (மற்றும் சிலர்) இந்த இருவரின் இணைப்பிற்கும் மகிழ்ந்த அளவு பிறர் மகிழவில்லை, அவர்களைப் பொறுத்தவரை ஒரு சாதாரண ஒரு அரசியல் நிகழ்வு அவ்வளவே.... ஏன் என்று யோசித்தேன்... இது வெறும் அரசியல் கூட்டணியையும் தாண்டி இந்த இணைப்பு காலம் காலமாக விரோதிகளாக அடித்துக்கொண்டிருந்த இரு சமூகங்களுக்கிடையேயான புரிதலுக்கான முயற்சி என்பது எனக்கும் மற்ற சிலருக்கும் புரிந்த அளவிற்கு பிறருக்கு புரியவில்லை, காரணம் அவர்களுக்கு அந்த சூழல், வடமாவட்டங்களில் குறிப்பாக வன்னிய தலித் மக்களின் சமுதாய,அரசியல் நிகழ்வுகள் பற்றிய சரியான புரிதல் இல்லாதது காரணமாக இருக்கலாம், இதற்கு நிச்சயம் அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள், ஊடகங்களும் சரியானபடி இதை எடுத்து சொல்லவில்லை என்பதையும் விட இரு சமூகங்களின் மீதும் தலைவர்களின் மீதும் வன்முறையை பிரயோகித்தது, பிரயோகித்துக்கொண்டிருக்கின்றது.

மேலும் மாயவரத்தான் என்னமோ இந்த தலைவர்கள் வந்த பிறகுதான் இரு சமூகங்களும் அடித்துக்கொண்டிருக்கின்றன என்று அர்த்தம் தொனிக்கும் பதிவொன்றை எழுதியுள்ளார், மருத்துவர் இராமதாசு பொது வாழ்வுக்கு வந்தது 1984, தொல்.திருமா அரசியலுக்கு வந்தது தொன்னூறுகளின் மத்தியில், ஆனால் இரு சமூகங்களுக்கிடையேயான புரிதல் இல்லா பகை நீண்ட கால வரலாறு கொண்டது, வெள்ளையர் காலத்திலும் அதற்கு முந்தைய அரசர்கள் காலத்திலும் கூட பகை இருந்து வந்தது, இத்தனை நீண்ட கால பகை வெறுமனே இந்த சமூக மக்களால் மட்டுமல்ல, வெளியிலிருந்து பலராலும் தூண்டிவிடப்பட்டு இந்த கனல் குறையாமல் பார்த்துக்கொண்டனர்.

இந்த இரு சமூகங்களும் இணைந்து பணியாற்றுவது நிச்சயம் சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகம் தூண்டிவிட்டுக்கொண்டிருப்பவர்களின் தலையில் விழுந்த அணுகுண்டு, இது வேண்டுமானால் பிற இடங்களில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், வடமாவட்டத்தை சேர்ந்த மாயவரத்தானுக்கு எப்படி தெரியவில்லை என்பது புரியவில்லை, ஒரு வேளை ரஜினி மாயை உண்மைகளை மறைத்து எழுத சொல்கிறதா அவருக்கு?

இதே பின்னூட்டங்களை இளவஞ்சி,உஷா அல்லாமல் எப்போதும் காழ்ப்புணர்ச்சியோடு அலைந்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட சிலர் எழுதியிருந்தால் புறந்தள்ளிவிட்டு சென்றிருப்பேன், ஆனால் இந்த இருவரின் முந்தைய பதிவுகள் பின்னூட்டங்களை வைத்து பார்க்கும் போது இவர்களுக்கு இராமதாசும், திருமாவும் என்ன செய்தாலும் அதை காழ்ப்புணர்ச்சியோடு அணுகவேண்டுமென்ற நிலைப்பாடு கொண்டவர்கள் அல்ல என்பதே இது தொடர்பாக சிந்திக்கத் தோன்றியது.

எனவே காழ்ப்புணர்ச்சியோடு எழுதும் ப்ராக்சிகளுக்கும், அனானிகளுக்கும், சில பதிவர்களுக்கும் அவர்களின் வறட்டு வாதத்திற்கும் பதிலளிக்கின்றேன் பேர்வழி யென சண்டை போட்டுக்கொண்டிருப்பதை விட வட மாவட்டத்தின், முக்கியமாக இந்த இரு சமூகங்களின் சமூக,வாழ்க்கை,அரசியல், வரலாற்று நிகழ்வுகள் பற்றி ஒரு எழுத்து பதியப்பட வேண்டுமென ஆசைப்படுகின்றேன், அது கடந்த 30 ஆண்டுகால வட மாவட்ட நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்தும், அதற்கு முந்தைய 30 ஆண்டுகளைப் பற்றிய நிகழ்வுகளை பதிந்தும் அதற்கும் முந்தைய காலகட்டதை லேசாக தொட்டும் இருக்கலாம், சரி தவறு என தீர்ப்பளிக்காமல் , வடுக்களை கீறாமல் தடவி கொடுத்தும், நேரடி அனுபவங்கள், பிறரின் அனுபவங்கள், சில வடமாவட்ட அரசியல் பிரமுகர்களின் பேட்டிகளையும் இணைக்கலாம், ஆனால் இது அத்தனையும் ஒரு தனிமனிதனால் செய்வது மிகக் கடினமான ஒன்று மேலும் தனி மனிதனால் செய்யப்படும் போது நிச்சயம் முழுமை பெறாது மேலும் தனி மனிதன் பார்வையிலேயே இருக்கும், இது நிறைய உழைப்பை சாப்பிடும் வேலை, மேலும் தனி மனிதனால் இத்தனையும் சிறப்பாக செய்ய முடியாது, எனவே இதற்கு நண்பர்களின் கூட்டு முயற்சியையும் பங்களிப்பையும் வேண்டுகின்றேன், நிச்சயம் இது சில நாட்களிலோ சில மாதங்களிளோ முடிவுறுவதாக இருக்காது, சில வருடங்கள் கூட ஆகலாம் (நாமெல்லாம் முழு நேரமாக இதை செய்வதில்லை, ஓய்வு நேரங்களில் மட்டுமே செய்கின்றோம்) தகவல் திரட்டுவது இதில் மிகப்பெரிய வேலையாக அமையும், உங்களுடைய ஆலோசனைகள், கருத்துகள்,அறிவுரைகள், விமர்சனங்கள், கேள்விகள் முக்கியமாக வடமாவட்ட சூழலை அதிகம் அறியாதவர்கள் கேட்கும் கேள்விகள் இந்த பதிவுகள் எதை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்கு உதவியாக இருக்கும் இதற்காக தனியாக வலைப்பதிவு கூட தொடங்கலாம், இவை அனைத்தும் இன்னமும் எண்ண வடிவிலேயே இருக்கின்றது, பங்களிப்பு செய்ய விரும்பும் உள்ளங்களுடன் ஆலோசித்து பின் எப்படி செல்ல வேண்டும் எப்படி செய்ய வேண்டுமென முடிவெடுக்கலாம்.

ஊடகங்களின் தொடர் வன்முறையினால் மருத்துவர் இராமதாசு மீது காட்டப்பட்டிருந்த கோணத்தை எனது இந்த பதிவுமருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் வேறொரு கோணத்தை காண்பித்ததாக பின்னூட்டத்திலும், தனி மடலிலும் நேரிலும் சிலர் தெரிவித்தனர், இவர்கள் கொடுத்த ஊக்கமும், வீரவன்னியனின் சில பதிவுகள் மக்களின் வாழ்க்கையை பற்றி பேசியதும் இது மாதிரி ஒரு முயற்சியை சிந்திக்க தூண்டியது.

இது தொடர்பான உங்கள் ஆலோசனைகள், கருத்துகளை பின்னூட்டங்களாகவும், kuzhali140277(at)yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மடலாகவும் அனுப்பலாம், தற்போது வீட்டில் இணையத்தொடர்பு இல்லாததால் உடனடியாக பதில்கள் அளிப்பதில் கால தாமதம் ஏற்படும், அதற்கு மன்னிக்கவும்.

கோப்ராக்களும் அடிக்கப்படுமா?

சில தினங்களுக்கு முன் நடந்த பீகார் சிறை உடைப்பு சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் நம்பவே முடியவில்லை, நடந்தது இந்தியாவிலா அல்லது நேபாளம்,லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகளில் ஏதாவதொன்றா என்று எண்ணுமளவிற்கு நடந்தேறியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நக்சல்கள் நகரில் ஆயுதங்களுடன் ஊடுறுவி நகர் முழுவதையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து அதன் பின் பொதுமக்களுக்கு வீட்டை விட்டு வெளிவரவேண்டாமென்றும் பொதுமக்கள் எங்கள் குறியல்ல என எச்சரிக்கை கொடுத்து பின் சிறையை தாக்கி சில நக்சல்களை விடுவித்து சில ரன்வீர் சேனா படையை சேர்ந்தவர்களை கடத்தி கொன்றுள்ளனர்

ரன்வீர் சேனா பீகாரில் நக்சல்களை எதிர்கொள்ள நிலப்பிரபுக்களினால் உருவாக்கப்பட்ட கூலிப்படை, அதன் நடுமண்டையில் அடித்துள்ளனர் நக்சல்கள், இனி நக்சல்கள் தேடுதல் வேட்டை என்ற பெயரில் சில நக்சல்கள் உண்மையிலேயே கொல்லப்படலாம், சிலர் கொல்லப்பட்ட பிறகு நக்சல்களாக மாற்றப்படலாம்.

மக்கள் யுத்தக் குழு என்ற நக்சல் இயக்கம் ஆந்திராவில் மிக பிரபலமானது, பீகாருக்கு சற்றும் குறைந்ததல்ல ஆந்திர மாநிலம்... இன்றும் ஒரு ஊரில் உள்ள நிலங்கள் முழுதும் ஒரே ஆளுக்கு சொந்தமாக பல இடங்களில் உள்ளது, நக்சல்களை எதிர்கொள்ள ரன்வீர் சேனாவைப் போலவே ஆந்திர நிலபிரபுக்களும், காவல்துறையும் சேர்ந்து உருவாக்கிய இயக்கங்கள் தான் கோப்ரா இயக்கங்கள் என சில வாரங்களுக்கு முன் வெளியான ஜீனியர் விகடனில் வெளிவந்த கட்டுரையில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ப்ளாக் கோப்ரா, கிங் கோப்ரா என்ற பெயர்களில் இந்த இயக்கங்கள் நக்சல் ஆதரவு பிரமுகர்களுக்கு (இவர்களில் பலர் ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது ஜீவி) பத்திரிக்கை வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் எச்சரிக்கை கொடுத்து ஒரே வாரத்தில் சிலர் கொல்லப்பட்டனர், இதற்கும் காவல்துறைக்கும் தொடர்பில்லை என்று கூறினாலும் பலர் கோப்ரா இயக்க செயல்பாடுகளில் காவல்துறையின் பங்கை சந்தேகிக்கின்றனர், பீகாரில் உயர் சாதி நிலப்பிரபுக்களின் கூலிப்படையான ரன்வீர் சேனாவின் நடு மண்டையில் நக்சல்கள் அடித்தது போல ஆந்திராவிலும் கோப்ராக்களின் பற்கள் பிடுங்கப்படுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ரன்வீர் சேனா, கோப்ரா போன்ற இயக்கங்களை உருவாக்காமல், நில உச்ச வரம்பு சட்டத்தை முறையாக அமல் படுத்துதலும், இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பை உருவாக்குதலும் உயர் சாதி ஆதிக்க வெறி பிடித்த நில பிரபுக்களை அரசாங்கம் கட்டுப்படுத்தினாலும் மட்டுமே இனி வரும் காலங்களில் நக்சல்கள் உருவாகாமல் தடுக்க முடியும் இல்லையென்றால் நக்சல்களும், ரன்வீர் சேனாக்களும், கோப்ராக்களும் சிறை உடைப்புகளும் தவிர்க்க முடியாதவையாகிவிடும்.

இணைந்த கைகள்

Image hosted by Photobucket.com

இந்த கைகள் இணையாதா
சிங்கமும் சிறுத்தையும் சேராதா
பாடுபடும் பாட்டாளிகள்
பாராளுதல் கூடாதா

காலம் காலமாய்
ஏய்க்கும் கூட்டம்
இந்த கைகள் இணைந்தால்
தம் கும்பி காயுமென

மூட்டிய கலவர தீயிலே
குடிசையும் குச்சியும்
எரிந்தபோதும்

அறிவு கெட்ட
சிங்கமும் சிறுத்தையும்
அடித்துக்கொண்டு
செத்தபோதும்

கண்கள் கலங்கி
கதறினேன்
இந்த கைகள் இணையாதா


உழைப்பாளிகள் உலகாள
கனவு இன்று நிசமாச்சி
இந்த கைகள் இணைந்தாச்சி
சிங்கமும் சிறுத்தையும் சேர்ந்தாச்சி
சிறு நரி கூட்டம் கலங்கிடுச்சி

பயந்து அலறிய
சிறு நரி இப்போ
ஊரெல்லாம் ஊளையிட்டது
கருத்து சுதந்திரம்
என்றே சொல்லி
சேறு எறிந்து
சிரிக்கின்றது.

சிறு நரிகளின்
சேட்டை தெரிந்ததால்
ஊளை சத்தம்
வீணாச்சி

ஊளை உளறல்
இப்போது அதன்
மரணஓலம் மட்டுமே

பின் குறிப்பு

விகடனில் இந்த படத்தை பார்த்து நேற்றே எழுதியது இப்போது பதிவில்

நன்றி

படங்கள் உதவி விகடன்.காம்

அட நாசமாபோனவனே!

இந்த பதிவிற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தேன் ஒன்றுமே சிக்கவில்லை, சரி நம்ம முகமூடி அண்ணாத்தே சொன்ன மாதிரி அவருக்கு பகடி பதிவு போடுவது எளிதாக இருப்பது மாதிரி நமக்கு நாசமாபோன என்பது எளிதாக வாயில் வந்து விழுகிறதே என தான் இந்த தலைப்பு

Image hosted by Photobucket.com

தீபாவளிக்கு முந்தைய நாள், கடலூர் கிருஷ்னாலயா திரையரங்கில் இளைய தளபதி விஜய் நடித்த சிவகாசி திரைப்பட வெளியீட்டிற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன, சுவரொட்டி என்ன டிஜிடல் பேனர் என்ன, ஒரே கலக்கல் தான் போங்க, எங்க காலத்திலெல்லாம்(?!) துணிக்கு போடும் நீலத்தூளில் தான் பேனரும், கட்-அவுட்டும் எழுதுவார்கள் இப்போ எங்கெங்கு நோக்கினும் டிஜிட்டல் பேனர் தான், அதில் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களின் படங்களோடு சிவகாசி படத்திற்காக பெரிய பெரிய விஜய் படங்களோடு நிறைந்திருந்தது, ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் படங்களைப் பார்த்தால் எல்லோரும் பதின்ம வயதினர் போல, சரியாக மீசைக்கூட வளர்ந்தில்லை, அது சரி இந்த டிஜிட்டல் பேனர் அடிக்க சொந்த காசா போட்டிருப்பார்கள்.... சரி விடுங்க அந்த எளவு இப்போ முக்கியமில்லை....

இந்த கூத்து நடந்து கொண்டிருந்த அதே வளாகத்தில் உள்ள தேநீர் கடைதான் நமக்கு போக்கிடம், தோழர்களுடன் உலகநடப்பிலிருந்து உள்ளூர் நடப்புவரையிலும் மேலும் பல வெட்டி விடயங்களை அலசுவோம் மணிக்கணக்கில் அங்குள்ள நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு, இந்த முறை அங்கு சென்றபோது மேசை நாற்காலிகள் ஏதுமில்லை, பக்கத்திலேயே ஒரு அறிவுப்பு பலகை, 'காவல் துறை அறிவிப்பு, டீ சாப்பிட்டவுடன் எழுந்து செல்லவும்' அப்படியும் கடைமுன் நமது தோழர்களுடன் அரட்டை அரங்கம் நடத்திக்கொண்டே இருக்கும் போது ஒரு காதை மட்டும் பிய்த்து அருகில் பேசிக்கொண்டிருந்த இன்னொரு கும்பலிடம் அனுப்பி வைத்தேன்.


அவர்கள் விஜய் ரசிகர்கள் போலும், விஜயின் அருமை பெருமைகளையும் நடிப்புத்(?!) திறனையும் புளங்காகித்தோடு பேசிக்கொண்டிருந்தனர், ரஜினிடாட்காம் யாஹீ குழும மடல்களை ரஜினி ரசிகன் அல்லாத ஒருவர் படித்தால் எத்தனை நகைச்சுவையாக இருக்குமோ அத்தனை நகைச்சுவையாக இருந்தது அவர்களின் புளங்காகித பேச்சு, இப்படியே சென்று கொண்டிருந்த பேச்சின் இடையில் திடீரென ஒரு குரல் "எனக்கு போர் அடித்தால் கில்லி படம் போட்டு பார்ப்பேன்" , "சோகமாக இருந்தால் ப்ரியமுடன் படம் பார்ப்பேன்" "ஃபீலிங்காக(?!) இருந்தால் காதலுக்கு மரியாதை பார்ப்பேன்" என அடுக்கிக்கொண்டே சென்றார்கள், என் காது ஓடி வந்து என்னிடம் சொன்னது அட நாசமாப்போனவனே வாழ்க்கையின் மொத்த உணர்ச்சிகளையும் விஜய் திரைப்படங்கள் என்ற பெரிய்ய்ய்ய்ய வட்டத்தினுள் வைத்திருக்கிறார்கள் எளவு நீயும் தான் இருக்கியே உணர்ச்சியில்லா ஜடம் ஜடம் என்று ஒரு பாட்டம் அழுது தீர்த்தது, எப்படி என் காதை சமாதானப் படுத்துவது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்....


'கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததடா' என்று ஒரு கும்மாங்குத்து பாடல் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது, நம்ம பக்கத்து வீட்டு தம்பி யும் அதை பார்த்துக்கொண்டிருந்தார், அந்த பாடலை காலையிலிருந்து பல தடவை பார்த்துவிட்டதால் சீனாதானா பாடல் எதிலாவது ஓடுகின்றதா என நான் மாற்றிய போது அந்த தம்பி அண்ணே விஜய் பாட்டே வைங்க என்றார், அம்மா சொன்னாங்க அந்த தம்பி விஜய் ரசிகர்னு, அடேடே தம்பி உனக்கு விஜய் புடிக்குமா என்றேன், ம்... ரொம்ப என்றார் அவர், அடுத்த கேள்வி ரஜினி புடிக்குமா என்றேன் (விஜய் புடிச்சா ரஜினியும் புடிக்கும் என்ற ஒரு நம்பிக்கை தான்... ஆனால் ரஜினி புடிச்சா விஜய் புடிக்குமா என்பது சந்தேகமே) ... ம்... புடிக்கும் என்றார் அந்த தம்பி, அடுத்த கேள்வியை போட்டேன் உனக்கு விஜய் ரொம்ப புடிக்குமா ரஜினி ரொம்ப புடிக்குமானு... அதற்கு அந்த தம்பி சொன்னார் விஜய் தான் ரொம்ப புடிக்கும் என்று ... ஏன் என்று கேட்டபோது நான் சின்ன வயசிலிருந்து விஜய் படம் பார்க்கின்றேன் ரஜினி படம் ஒன்னுதான் பார்த்தேன் என்றார் சின்ன வயசிலிருந்து விஜய் படம் பார்த்த அந்த தம்பி படிப்பது UKG.... ஆனாலும் சிறு பிள்ளைகளையும் ஒரே படத்தில் கவர்வது ரஜினியின் திறமை.... ஆனால் தொடர்ந்து படம் தந்தால் மட்டுமே விஜயுடன் போட்டி போட முடியும் இல்லையென்றால் வயசான ரசிகர்கள் மட்டுமே எஞ்சுவார்கள்... இது ரசிகர்களுக்கு புரிகிறதோ இல்லையோ ரஜினிக்கு நன்றாக புரிந்துள்ளது அதனால் தான் அரசியலை மூட்டை கட்டிவிட்டு சந்திரமுகிக்கு அடுத்து உடனே சிவாஜி படம் தர அறிவிப்பு செய்துள்ளார்.... இதை சொல்வதால் மரம்வெட்டி காடுவெட்டி என்றெல்லாம் பின்னூட்டங்களில் கூறினாலும் உண்மை இது தானே என்ன செய்வது.... என்னங்க நாஞ் சொல்றது சரிதானே....

படங்களுக்கு நன்றி
http://www.behindwoods.com/

மடியில் இரசாயன குண்டு

தமிழோவியம் தீபாவளி மலரில் வெளிவந்த எனது கட்டுரை இது, இக் கட்டுரையை வெளியிட்ட பாலஜிக்கும் தமிழோவியம் குழுவிற்கும் நன்றி

போபாலில் நடந்த கொடுமை இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை, மெத்தில் ஐசோ சயனைடு என்கிற விட வாயு கசிந்து உருக்குலைந்த மக்களும் இன்னமும் பிறந்து கொண்டிருக்கும் பாதிப்படைந்த குழந்தைகளும் அந்த கொடூரத்தின் சாட்சிகளாய் நம் முன்னே.



கடலூர் கெடிலம்,தென் பெண்ணை, உப்பனாறு என்ற மூன்று ஆறுகள் கடலில் சங்கமிக்கும் ஊர், தமிழகத்தின் தலைநகர் சென்னையை எளிதில் இணைக்கும் சாலைகளையும் மூன்றரை மணி நேர பயண தூரத்தையும் கொண்டது, இரயில் சந்திப்பு நிலையமும், துறைமுகமும் ஆக அத்தனை தரை வழி, கடல் வழிகளாலும் இணைக்கப்பட்ட போக்குவரத்திற்கு எளிதான ஒரு நகரம், தடையில்லா மின்சாரம் கிடைக்க அருகிலேயே நெய்வேலி அனல் மின் நிலையம், இத்தனையும் வரமென்றால் இந்த வரமே சாபமாகிவிட்டது கடலூருக்கு.


கடலூர் சிதம்பரம் சாலையில் கடலூர் பழைய நகரத்தின் எல்லையில் ஆரம்பிக்கும் சிப்காட் தொழிற்பேட்டை, இரசாயன தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதியில் பல கிராமங்கள் உள்ளன, எண்பதுகளின் இறுதியில் இந்த தொழிற்பேட்டை ஆரம்பிக்கப் பட்ட போது வேலைவாய்ப்புகள் பற்றிய உறுதிகளும் அதனால் நல்ல வாழ்க்கையை எதிர்பார்த்தும் இந்த இரசாயன தொழிற்சாலைகள் பற்றிய எதிர்ப்பு முனகல்கள் கூட எழவில்லை,இன்றைய நிலையில் கடலூருக்கு ஓரளவு வேலை வாய்ப்பும் தந்து கொண்டிருக்கின்றது இந்த சிப்காட், கடந்த சில ஆண்டுகளாக சாதி மோதல்கள் அதிகமில்லாமல் இங்கே நிலவி வரும் அமைதிக்கு இதுவும் ஒரு காரணம்.

அந்த பகுதியை பேருந்தில் கடக்கும் பத்து நிமிட நேரத்திலேயே அழுகிய முட்டை நாற்றத்தை போன்ற நாற்றம் மூச்சு திணற வைக்கும், சில சமயங்களில் அந்த இரசாயன தொழிற்சாலைகளிலிருந்து சில மணி நேரங்களுக்கு ஒரு முறை திறந்து விடப்படும் கழிவு வாயு மிகக் கடுமையான நாற்றத்தோடு மூச்சு திணற வைக்கும்.

அவ்வப்போது கிராமவாசிகள் இந்த கழிவு வாயுக்களினால் மயக்கமடைவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது, அந்த நேரத்தில் மக்களிடையே சில முனகல்கள் ஏற்பட்டு பின் அடங்கிவிடும்.

SIPCOT Area Community Environmental Monitors (SACEM) இந்த பகுதியில் 12 விட வாயுக்கள் காற்றில் கலந்துள்ளதாக தெரிவிக்கின்றது, மேலும் இங்குள்ள காற்று மனிதர்கள் சுவாசிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றும் சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்க தரக் கட்டுப்பாட்டின் படி இங்கிருக்கும் காற்றில் உள்ள 12 வாயுக்களில் 7 வாயுக்கள் மிக ஆபத்தானவையாக குறிப்பிடப்படுகின்றன.


இந்த காற்றில் உள்ள Trichloroethylene என்கின்ற வேதிப்பொருள் புற்று நோய் ஏற்படுத்த கூடியது, இது US Environmental Protection Agency (USEPA) தரக்கட்டுப்பாட்டில் அனுமதிக்கப்பட்டதை விட 400 மற்றும் 900 மடங்கு அதிகமுள்ளதாக இரண்டு சோதனைகளில் தெரியவந்துள்ளது மேலும் Carbon disulphide, bromomethane, trichloroethene, 4-methyl 2-pentanone, acrolein, methylene chloride and hydrogen sulphide என்ற வேதிப்பொருட்களும் அமெரிக்க தரக்கட்டுபாட்டின் அளவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது.

இந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து கொண்டு வந்துள்ளது, சில ஆண்டுகளுக்கு முன் 30 அடி ஆழத்தில் கிடைத்துக்கொண்டிருந்த நீர் இன்று சில நூறு அடி ஆழத்தில் கூட கிடைக்கவில்லை, ஒரு நாளைக்கு இங்குள்ள தொழிற்சாலைகள் பயன்படுத்தும் நீரின் அளவு இருபது மில்லியன் லிட்டர், கிடைக்கும் நிலத்தடி நீரும் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ளது, தொழிற்சாலை கழிவு நீர் நிலத்தடி நீரை அழிப்பதுடன் மீன் வளத்தையும் அழித்துள்ளது. இந்த நீரில் குளிப்பதால் தோல் அரிப்பு பிரச்சினைகள் வருகின்றன.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB ) காற்றில் உள்ள மாசு அளவை கட்டுப்படுத்த எல்லா முயற்சிகளும் எடுப்பதாக கூறினாலும் சோதனைகள் அதை உறுதி செய்யவில்லை.

அவ்வப்போது அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையை கையில் எடுத்து போராடினாலும் எதுவும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

மீன் பிடி தொழிலின் பாதிப்பினாலும் நம்மால் முடிந்தது ஊரை விட்டு கிளம்புவது மட்டுமே என்ற எண்ணத்தினாலும் பலர் சென்னைக்கு இடம் பெயர்கின்றனர்.

சிலருக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பிற்காகவும், எதிர்த்து போராட முடியாமலும் எம் மக்கள் சோர்ந்து கிடக்கின்றனர் மடியில் இராசாயன குண்டை கட்டிக்கொண்டு என்று வெடிக்குமோ என்ற பயத்தில்.

தகவல்களுக்கு நன்றி

flonnet.com
thesouthasian.org
sipcot.com
bhopal.net

எம் ஊரை காக்க உங்கள் புகாரை இந்த சுட்டியிலிருந்து அனுப்புங்களேன்.
petitiononline.com

சிறுகதை - தேவர்களும் கால்களும்

தமிழோவியம் தீபாவளி மலரில் வெளிவந்த எனது சிறுகதை, சிறுகதையை வெளியிட்ட பாலஜிக்கும் தமிழோவியம் குழுவிற்கும் நன்றி

வில்லின் ஒரு முனையையும் மற்றொரு முனையையும் இணைக்கும் நாணைப்போல அந்த கிராமமுமில்லா நகரமுமில்லா நகரின் ஒரு முனையையும் மற்றொரு முனையையும் இணைக்கும் அந்த இரட்டை சாலை தரையில் கால்படாமல் மிதந்து கொண்டிருக்கும் தேவர்கள் வாழும் கல்லூரி சாலை, பல்கலைகழகம், கலைக்கல்லூரி, பொறியியல்கல்லூரி, பாலிடெக்னிக், மேலாண்மை கல்லூரி, உடற்பயிற்சி கல்லூரி என அந்த சாலையின் வலப்புறம் முழுதும் கல்லூரிகள், இடப்புறமோ விடுதிகளோடு, மரணவிலாஸ், மெரைன், ப்ளைட் என்று ஆங்காங்கே சில பெட்டிகடைகள் டீ கடைகளோடு, அந்த இரட்டை சாலையின் மையத்தில் உள்ள குழல் விளக்கு கம்பங்கள் மாணவர்களின் குறி பார்த்து எறியும் திறமையின் மௌன சாட்சிகளாய் , மாலை முழுதும் தேவர்களும் தேவதைகளும் மரங்களின் அடியில் பல பிரச்சினைகளை அலசியபடி 'அப்புறம்' 'அப்புறம்' என்ற அர்த்தம் பொதிந்த பேச்சுகளோடும் சிரிப்புகளோடும் கடலை போடும் அழகே அந்த சாலையின் அழகின் ரகசியம்.

நேற்று வரை ஃபைவ் லேம்ப்ஸ், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, ராம்நகர் என பேசிக்கொண்டிருந்தவர்கள் GRE நுழைவுத்தேர்வுக்கான புத்தகம் வாங்கிய உடனே கலிபோர்னியாவும்,நியூயார்க்கும் அவர்களின் வாயில் புகுந்து வந்தன, இது தான் கடைசி வருடம் என ஒவ்வொரு வெள்ளிகிழமையும் சவேரா சென்று பீர் அடித்துவிட்டு சிக்கன்-65 வர தாமதமானதற்கு பார் பணியாளரிடம் சண்டை போட்டு இராத்திரி முழுவதும் 'முஸ்தபா முஸ்தபா டோண்ட் ஒர்ரி முஸ்தபா' என பாடி கத்தி அழுது களைத்து அதே சவரா உணவகத்திற்கு மறு நாள் மதிய உணவிற்கு தோழியோடு செல்லும் போது சீக்கிரம் சிக்கன்-65 கொண்டு வந்த பணியாளனை எரிச்சலாக பார்த்து மூன்று மணி நேரம் மதிய உணவு உண்ணும் போதாவது காதலை சொல்ல வேண்டுமென்ற கனவோடு தூங்கிக்கொண்டு சிலர், 'செமி கிராக் ஹாஸ்டல்' என மாணவிகள் செல்லமாக அழைக்கும் 'செமி சர்க்கிள் ஹாஸ்டலின்' ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொருவரும் கனவுலகிலிருக்க விடுதியின் உணவுக்கூடம் காலையில் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தது திடீரென அதிர்ந்தது கணேஷின் குரலால்.

"டேய் சின்ன பையா காலையிலே அங்கே என்னடா கரைச்சல் " ஆறுமுகம் என்கிற சமையலரின் சத்தத்திற்கு ஓடி வருகிறான் சின்னபையன் என்கிற உதவியாளன்

"கணேஷ் சார், இட்லி நல்லா இல்லைனு சத்தம் போடுறாரு அண்ணே"

"அவருக்கு இதே வேலையாயிடுச்சி, நெதம் நெதம் மெஸ்ல கரைச்சல் குடுத்துகிட்டு, நீ போயி 115ல மெஸ் ரெப் இருப்பாரு கூட்டிகினு வா"

"மெஸ் ரெப்பு சார், ரெப்பு சார்"

இன்னும் 10 மாதம் கழித்து பிரிய போகிற சோகத்தை நேற்றே பிழிந்து மானிட்டர் மப்பில் அழுது படுத்திய காட்ஸ் (இங்க பலருக்கும் சொந்த பெயர் மறந்து பட்ட பெயர் தான் கூப்பிட) காலைபரப்பி தூங்கிக்கிடக்க, தலை பாரத்தோடு கதவை திறந்தான் மெஸ் ரெப்,

"என்னடா காலையிலே..."

"சார் கணேஷ் மெஸ்ல சத்தம் போடுறாரு"

"யாரு கட்டை கணேஷா?"

"ஆமாம் சார்"

"என்னவாம்"

"இட்லி நல்லாயில்லையாம், ஆறுமுகம் அண்ணன் உங்களை கூப்பிட்டு வர சொன்னாரு"

"சரி நீ போ, நான் வரேன்"

சத்தம் போட்டு கொண்டிருந்த கட்டை கணேஷை சமாதானப்படுத்திய படி

"கட்டை என்னடா பிரச்சனை?"

"இட்லியை பாருடா, கல்லு மாதிரி இருக்கு, மனுஷன் சாப்பிடுவானா இதை?"

"சரி கொஞ்சம் இரு நான் குக் கிட்ட பேசறன்"

"என்னத்த பேசற இதைத்தான் ஒரு மாசமா பேசுற, மெஸ் ரெப் எலக்ஷன்ல நின்னப்ப என்ன சொல்லி ஜெயிச்ச நீ, மெனு மாத்துறன்னு சொன்னியே, மெனு மாத்தினயா?"

"ஏற்கனவே வார்டன் கிட்ட பேசிட்டேன், சீக்கிரம் மாத்திடலாம்"

"என்ன சீக்கிரமா மாத்திடலாம், இவ்ளோ நாள் என்ன பண்ண, வார்டனுக்கு பயந்துகிட்டயா, ஜால்ரா?"

"கட்டை வேண்டாம், சும்மா பிரச்சினை பண்ணனும்னு பேசறியா, மெஸ் எலக்ஷன்ல நீ தோத்ததை மனசுல வச்சிகிட்டு தெனம் மெஸ்ல பிரச்சினை பண்றியா?"

"யாரு பிரச்சினை பண்றது, மெனு மாத்துறேன் மாத்துறேன்னு சொன்னியே மொதல்ல அதை செய், மெனு என்னனு பசங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணியா? உன் இஸ்டத்துக்கு மெனு மாத்தலாம்னு நெனக்கிறியா? காமன் ஹால் மீட்டிங் போடு நான் அங்க பேசிக்கிறேன்?"

"டேய் யாரு சொன்னா என் இஸ்டத்துக்கு மெனு மாத்துறேன்னு, சரி விடு, இன்னிக்கு நைட் மீட்டிங் போட்டுடலாம்"

"நைட் பசங்க இருக்க மாட்டாங்க இப்பவே போடு"

"பசங்க நிறைய பேரு தூங்கறாங்க, இப்போ கூப்பிட்டா எவனும் வரமாட்டான்"

"அப்போ மதியம் போடு"

"சரி மதியம் காமன் ஹால் மீட்டிங்ல பேசலாம், இப்போ சத்தம் போடாம சாப்பிட்டு போ வேற இட்லி வாங்கிக்க"

"வேற இட்லி வாங்க எங்களுக்கு தெரியும் நீ போ"

மதியம் உணவு முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக காமன் ஹால் என்கிற தொலைகாட்சி அறையில் விடுதி மாணவர்கள் கூட்டம் சேர்ந்தது.

"பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, இங்கே நாம் கூடியிருப்பது நம் மெஸ் மெனுவைப் பற்றி டிஸ்கஸ் செய்ய" காட்ஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே தலையில் இலேசாக தட்டி

"டேய் காட்ஸ், போ போய் உட்காரு" மெஸ்ரெப்

"பப்ஸ் கொஞ்சம் செக் பண்ணு பசங்க இன்னும் வராங்களானு, மீட்டிங் ஆரம்பிக்கலாம்" மெஸ்ரெப்

"ஓகே மச்சி நீ ஸ்டார் பண்ணு" பப்ஸ்

"ப்ரெண்ட்ஸ், இந்த இயர் நாம மெஸ் மெனு மாத்தனும்னு வார்டன் கிட்ட பேசினேன்"

"மெஸ் சாப்பாடு கேவலமா இருக்கு, குவாலிட்டி சுத்தமா நல்லா இல்லை" கட்டை கணேஷ்

"அதுவும் பேசிட்டேன் வார்டன்கிட்ட"

"ஆனா ஒன்னும் புண்ணியமில்லையே, நீ எப்பவுமே வார்டனுக்கு ஜால்ரா அடி" கணேஷ்

"கணேஷ், நீ எதுக்கு இப்போ தேவையில்லாம பிரச்சினை பண்ற, என்ன ஜால்ரா அடிக்கிறாங்க, இங்க பேசிக்கிட்டு இருக்கோமில்ல"

"இங்க பாரு நீ மெஸ்ரெப்பு ஆயி ஒரு மாசமாச்சி, என்ன கிழிச்ச" கணேஷ்

"டேய் கட்டை நீ போன வருசம் மெஸ் ரெப்பா இருந்து என்ன புடுங்கின?" பப்ஸ்

"பப்ஸ், கொஞ்சம் பேசாம இரு, கணேஷ் அடாவடியா பேசாத மொதல்ல மெனுவை டிஸ்கஸ் செய்வோம், அப்புறம் ஃபுட் குவாலிட்டி பத்தி வார்டன் கிட்ட பேசினேன், குவாலிட்டி இன்கிரீஸ் செஞ்சாலும், மெனு மாத்தினாலும் கண்டிப்பா மெஸ் பில் கூடும்னு சொன்னாரு"

"கூடட்டுமே, காமன் ஷேரிங் தானே, நாம கட்டுவோம்"

"எவ்ளோ கூடும்? " பாயிண்ட் பிரபு

"எப்படியும் இரு நூறு ரூபாய் மாசத்துக்கு கூடும் " மெஸ்ரெப்

"இருக்கட்டுமே, இரு நூறு தானே கூடும், நல்ல சாப்பாடு வேணும், அவ்ளோதான்" கணேஷ்

"என்ன சொல்றீங்க" மற்றவர்களையும் பார்த்து கேட்டான் மெஸ் ரெப்

"பரவாயில்லை நூறு,இரு நூறு ஜாஸ்தி வந்தாலும் நாங்க கட்டுறோம்" என பல குரல்கள் எழுந்தன

"மச்சி, அப்படியே மாசம் ரெண்டு தடவை சிக்கன் போட சொல்லுடா"

"சரி சொல்றேன்"

மெஸ் மெனுவை இறுதி செய்துவிட்டு கூட்டம் கலைந்தது.

அறை எண் 115ல் மெஸ்ரெப்பின் மந்திராலோசனை கூட்டத்தில்

"மச்சி, கட்டை கணேஷ் ஓவரா போறான்" காட்ஸ்

"அவன் தோத்த கடுப்புல ரொம்ப பிரச்சினை பண்றான், அவனை தட்டி வைக்கனும்" பப்ஸ்

"நீங்க ரெண்டு பேரும் சும்மா இருக்க மாட்டிங்களா? இங்க பாரு டிபார்ட்மெண்ட் செகரட்ரி நம்ம கேங், ஜென்ரல் ரெப்பும் நாம தான், NSS செக்ரட்டரியும் நாம தான், கல்சுரல் பங்ஷன் நடத்தனும், ஸ்போர்ட்ஸ் மீட் நடத்தனும், கேம்ப் நடத்தனும், இதுல கட்டை கேங் கிட்ட சண்டை போட்டா இதையே சாக்கா வச்சி எதையும் நடத்த விடாம மேனேஜ்மன்ட் செய்துடுவாங்க, ஏற்கனவே எப்படிடா இந்த கல்ச்சுரல்சை நிறுத்தறதுனு காலேஜ்ல எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க, அதனால கொஞ்சம் பொறுமையா போங்க"

"ஆமா நீ இப்படியே பருப்பு மாதிரி பேசு, அப்புறம் ஒருத்தவனும் நம்மள மதிக்க மாட்டான்" காட்ஸ்

கதவை தட்டி உள்ளே வந்தான் பாயிண்ட் பிரபு.

"வாடா பாயிண்ட்டு என்ன இந்த பக்கம்" மெஸ்ரெப்பு

"சும்மா தான் பாக்கலாம்னு வந்தேன்"

"என்ன பாயிண்ட்டு காலேஜ் முடிஞ்சி டெய்லி கடலை தானாமே" காட்ஸ்

"ஹா ஹா..."

"இல்ல எதுனா டவுட் கேட்பாங்க சொல்லி தருவேன்"

"டேய் பாயிண்ட்டு கிட்ட மெஷின் டிசைன் டவுட் கேளுங்கடா, பாயிண்ட் பாயிண்டா அடிப்பான் பாரு"

"பாயிண்ட்டு அது நம்ம பெரிசு ஆளு, அதனால பார்த்து கடலை போடு"

"எப்ப இங்க வந்தாலும் இப்படியே ஓட்டுறிங்க, சரி நான் அப்புறம் வரேன்" பாயிண்ட்

மந்திராலோசனை அப்படியே கடலை போடுவதையும், கலிபோர்னியாவில் இந்தியர்கள் அதிகம் வாழ்கின்றனர் எனவே அங்கே போவதன் சாதக பாதகங்களையும் இடையிடையே கட்டை கணேஷ் கேங்கை தட்டுவதையும் பற்றி பேசி சில மணி நேரம் கழித்து மரணவிலாசில் டீ குடித்து மாலை உலாவை ஆரம்பித்தனர்.

"பப்ஸ், வண்டியெடுத்துக்கிட்டு வா, சும்மா ஒரு ரைட் போகலாம்"

இரு சக்கர வாகனத்தில் ஏறியபடி

"பிள்ளையார் பட்டியா?" பப்ஸ்

"இல்ல மச்சி கண்டனூர் பக்கம் போ, எப்பவும் பிள்ளையார் பட்டியே போனா போர் அடிக்கும்"

கண்டனூரையும் தாண்டி வண்டி சென்று கொண்டிருக்க இருள் கவிழ்ந்த நேரத்தில்.

"பப்ஸ் வண்டியை நிறுத்து, சைட்ல இருக்கே அந்த பாருக்கு போ"

"உனக்கு என்ன வேணும்?"

"எனக்கு பீர் மட்டும் போதும், உனக்கு"

"ஒரு எம்சி கட்டிங், மிக்சர் வாங்கிக்க, நல்ல வேளை காட்ஸ் கடலை போட போயிட்டான், அவன் வந்திருந்தா அவ்ளோதான் இன்னைக்கும் அழுது இம்சையை பண்ணிடுவான்"

"ஹா ஹா... "

கடையினுள் நுழைந்து கடைபணியாளனிடம்

"ஒரு கல்யாணி பீர், ஒரு எம்சி கட்டிங் குடுங்க" பப்ஸ்

கடைபணியாளன் திரும்பிய அந்த நொடியில் இருவரும் அதிர்ந்தனர், பணியாளனாக பாயிண்ட் பிரபு

"டேய் பாயிண்ட், இங்க என்னடா பண்ற"

"அது அது..."

"டேய் நீ என்ன என்ன பண்ற இங்க"

" தப்பா நெனச்சிக்காதிங்க, ஒரு நிமிஷம் இருங்க, சரக்கு தரேன்"

"டேய் அது இருக்கட்டும் என்ன செய்ற இங்க இப்போ நீ"

"மணி தம்பி, கடைய கொஞ்சம் பாத்துக்கோ ஒரு அஞ்சு நிமிஷத்துல வரேன்" பாயிண்ட் பிரபு சரக்கை எடுத்துக்கொண்டு பப்ஸையும் மெஸ் ரெப்பையும் அழைத்தான்

" வாங்க இந்த பக்கமா, உள்ள பார் கிடையாது, பின்னாடி அந்த கட்டடத்துல உக்காருவோம்" ... பாயிண்ட் பிரபு

"என்னடா பாயிண்ட், இங்க என்ன பண்ற அத சொல்லு" பப்ஸ்

"பார்ட்டைமா வேலை செய்றண்டா"

"ஏன்?"

"தினம் 10ரூவா தருவாங்க, அப்புறம் இந்த பணம் என் படிப்புக்கும் உதவியா இருக்கு, வீட்டுலருந்து வாங்குற பண பாரத்தை கொஞ்சம் கொறைக்கலாம்னு தான்"

"அதான் ஏன் டா"

"நான் உங்கள மாதிரி பணக்கார பசங்க இல்ல"

"டேய் நாங்க எங்கடா பணக்கார பசங்க, நாங்க மாச சம்பளம் வாங்குற மிடில் கிளாஸ் பேமிலி தான்டா"

"இல்லடா, நான் இங்க படிக்கறதே ஸ்காலர்ஷிப்ல தான், நம்ம காலேஸ் கவர்மென்ட் காலேஜ், அதனால் ஃபீஸ் கம்மி, இல்லைனா எனக்கெல்லாம் எஞ்சினியரிங்லாம் கனவு தான் டா. ஊருல கூட ஸ்கூல் நேரம் போக மீதி நேரம் லாட்டரி டிக்கெட் விப்பேன், நாங்க ரொம்ப ஏழை ஃபேமிலிடா இப்ப கூட அஞ்சு வட்டிக்கு கடன் வாங்கித்தான் படிக்கிறேன் டா"

"அதுக்காக..."

"நீங்க தெனம் சாப்பாடு நல்லா இல்லை சாப்பாடு நல்லா இல்லைனு மெஸ் தொட்டியில கொட்டுறிங்களே, அந்த சாப்பாடுதான் நான் இத்தனை வருஷத்தில சாப்புடுற நல்ல சாப்பாடு, மதியம் மெஸ் மெனு மாத்துற மீட்டிங்ல கூட நெறய பசங்க சொன்னாங்க, நூறு இரு நூறு பெரிய காசில்லை, சாப்பாடு நல்லா இருக்கனும்னு, எனக்கு நூறு இரு நூறு பெரிய காசுடா, நான் ஒரு ஒரு நூறு ரூபாய்க்கும் மாசம் அஞ்சு ரூபா வட்டி கட்டனும்"

"அடப்பாவி மீட்டிங்ல சொல்ல வேண்டியது தானே" மெஸ்ரெப்

"இல்ல, அங்கேயே ஆளுக்காளு இது பெரிய காசா அப்படினு பேசினாங்க, நான் அப்படியே அப்போஸ் செஞ்சாலும் என்னை விரோதியா பாப்பானுங்க, இல்லனா எல்லா காரணத்தையும் நான் சொல்லனும், அதான் நான் மீட்டிங்ல சொல்லை, அப்புறம் உன் ரூமுக்கு வந்தேன் சொல்லலாம்னு, உங்க கேங்கே அங்க இருந்து கலாட்டா செஞ்சிங்க, அதான் சொல்லலை, வந்துட்டேன், நீங்களும் என்னை பத்தி யாருக்கிட்டயும் சொல்லிடாதிங்கடா"

"சரி நாங்க யார்கிட்டயும் சொல்லலை, மெஸ் பில்லும் ஏறாது, கவலைப்படாதே" மெஸ்ரெப்

கனவு உலகின் மற்றொரு பரிமாணம் தெரிய வர அது வரை தரை காலில் படாமல் மிதந்த இரண்டு தேவர்களின் கால்களும் தரைக்கு இறங்கியது.