பீகார்,லல்லு, அரசியல்

ஒரு வழியாக பீகார் தேர்தல் முடிந்து குதிரை பேரத்திற்கு வாய்ப்பில்லாமல் ஒரு முடிவான முடிவை பீகார் மக்கள் அளித்துவிட்டனர், லல்லுவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது, ஒவ்வொரு தேர்தலின் போதும் பலரும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்த தேர்தல் முடிவு இந்த முறை ஏமாற்றமல் வந்துள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஊடகங்களும் இதை பலமாக கொண்டாடுகின்றன, பாஸ்வான், லல்லு மோதல் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு ஆட்டம் கொடுக்குமா, மத்திய அரசாங்கம் கவிழுமா என கேள்விகள் எழுப்புகின்றனர், பீகார் கனவு நிறைவேறியதைப்போல இதுவும் நிறைவேறுமா என்ற எண்ணத்துடன்.

இந்தியாவில் மேற்குவங்கம் தவிர்த்து வேறு எந்த மாநிலத்திலும் தொடர்ந்து 15 ஆண்டுகள் கடந்த 30 ஆண்டுகளில் ஒரே கட்சியின் ஆட்சி இருந்ததாக தெரியவில்லை (தமிழகத்தில் மட்டும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்து அதிமுக ஆட்சி இருந்தது ) கடந்த 15 ஆண்டுகள் லல்லுவின் ஆட்சி தனிப்பெரும்பாண்மையாக பீகாரில் இருந்தது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலிலும் கூட லல்லு கட்சி 74 தொகுதிகளில் வென்று தனிப்பெறும் கட்சியாக இருந்தது, ஆனால் இப்போது ஆட்சியை இழந்து 54 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது, லல்லு தோல்வி அடைந்துள்ளதால் பீகார் மக்களுக்கு புத்திவந்துவிட்டதாகவும், லல்லு வேண்டாம் என்று சொல்லும் அறிவை அடைவதற்கே பீகார் மக்களுக்கு 15 ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் ஆங்காங்கே குரல்கள், எள்ளி நகையாடல்.


தமிழகத்திலே 2001ல் நடந்த தேர்தலில் திமுக தன் முந்தைய ஆட்சிகளின் சாதனையை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்தது, கருணாநிதியின் முந்தைய கால ஆட்சியைவிட 96-2001 ஆட்சி சிறப்பாகவே இருந்தது, இருந்தும் தோல்வி, இராஜஸ்தானில் இரண்டுமுறையும் ஓரளவிற்கு நல்ல ஆட்சி வழங்கிய காங்கிரஸ் மூன்றாம் முறையும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறிய போதும் அதற்கு தோல்வி, எனவே பெரும்பாலும் மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புவர்கள் அதுவும் இரண்டுமுறை தொடர்ந்து ஆட்சி செய்திருந்தால் மூன்றாம் முறை நிச்சயம் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும், ஆனால் பீகாரில் மூன்று முறை ஆட்சி செய்ததுமில்லாமல் இந்த ஆண்டு தொடக்கத்தில் மற்ற கட்சிகளைவிட அதிக இடங்கள் பெற்றார் லல்லு, இந்த முறையும் முழுத் தோல்வி அடையாமல் 54 இடங்களி வென்றுள்ளார், மேலும் வெற்றி இடைவெளி பல இடங்களில் குறைவாகவே இருந்துள்ளது.

2005 தொடக்கத்தில் நடந்த தேர்தல் முடிவுகள்



























கட்சிவெற்றி
ஆர்ஜேடி74
ஜேடி(யு)55
பிஜேபி38
காங்.10
எல்ஜேபி30


தற்போதைய தேர்தல் முடிவுகள்


























கட்சிவெற்றி
ஆர்ஜேடி54
ஜேடி(யு)88
பிஜேபி55
காங்.9
எல்ஜேபி10


பீகார் மக்களுக்கு அறிவில்லை என்று அறிவுசீவி தனமாக பேசுவதற்கு முன் ஒரு நிமிடம் யோசியுங்கள், தொடர்ந்து மூன்று முறை தனிப்பெரும்பான்மை, நான்காவது முறை தனிப்பெரும் கட்சி, தற்போது 54 உறுப்பினர்கள், இது எப்படி என்று யோசிக்கமுடிகிறதா??

நான் சந்தேகிப்பது என்னவென்றால் நாமெல்லாம் பத்திரிக்கை வழியாகவும் ஊடகங்கள் வழியாகவும் பார்க்கும் பீகாரும் பீகார் அரசியலும் வேறு ஆனால் அங்கே உண்மையில் இருக்கும் பீகாரும் பீகார் அரசியலும் வேறு.

அங்கே லல்லுவையும், ஊழலையும், ஆட்கடத்தலையும் தாண்டி வேறு ஏதோ ஒரு அரசியல் இயங்கிக்கொண்டிருக்கின்றது, யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது அங்கே இருந்திருக்கிறது அதுவே லல்லுவை மூன்று முறை ஆட்சி கட்டிலில் அமர்த்தியுள்ளது, அந்த இயங்கு அரசியல் என்ன? அந்த இயங்கு அரசியலுக்கு காரணம் என்ன?

அந்த இயங்கு அரசியல் பற்றிய முழு விவரங்களும் ஊடகங்களில் காண்பிக்கப் படவில்லை, காண்பிக்கவும் படாது, யாரேனும் உண்மை நிலவரத்தை நேர்மையாக எழுதினால் ஒழிய நமக்கும் அது புரியாது, மேலும் தற்போது பீகார் ஆட்சி மாற்றம் ஒரு முழுமையானதல்ல, இது ஒரு இடைவேளை( பிரேக்) அவ்வளவே, அந்த இயங்கு அரசியலுக்கான காரணங்கள் சரி செய்யப்படவில்லையென்றால் மீண்டும் லல்லுவோ, அல்லது வேறு யாரோ வருவார்கள், அப்போது நாம் மீண்டும் பீகார் மக்களுக்கு அறிவில்லை என்றும், மூளை மழுங்கிவிட்டது என்றும் கூறிக்கொண்டே இருப்போம், ஆனால் அது எதுவும் பீகார் மக்களையும் அதன் இயங்கு அரசியலையும் பாதிக்காது.

8 பின்னூட்டங்கள்:

ROSAVASANTH said...

குழலியின் பல பதிவுகளை எதிர்த்தாலும் இந்த பதிவை முக்கியமானதாய் பார்கிறேன். குறைந்த பட்சம் தமிழ்வலைப்பதிவுகளில், பீகார் ஏதோ கற்காலத்தில் இருப்பது போலவும், அதற்கு ஒரே காரணம் லாலு மட்டுமே எனபது போலவும், இந்த தேர்தல் முடிவு மூலம் அவை அனைத்திற்கும் முடிவு வந்துவிட்டது போலவும் ஒரு ஸிக் ஜோக்கை மட்டும் அடித்து கொண்டிருக்கிறார்கள்.

உன்மையிலேயே பீகார்தான் இந்தியாவிலேயே மோசமான மானிலமா? யோசித்து பார்த்தால் மருந்துக்கு கூட எந்த இடதுசாரிவகை (அதாவது திராவிட இயக்கம் கூட உள்ளிட்ட) அரசியலும், அது சார்ந்த விழிப்புணர்வும் இல்லாத ஒரு மாநிலமாக குஜராத் மட்டுமே தெரிகிறது. நிலகிழாரிய நடைமுறை, மற்றும் மதிப்பீடுகள் ஆகட்டும், சாதிவெறி இந்துத்வ அரசியல் எல்லாவற்றிலும் குஜராத்தே முன் நிற்கிறது. இவற்றுக்கான எதிர்வினை என்று எதுவுமே அந்த சமூகத்தில் பதிவாகவில்லை. பிகாரில் இவற்றுக்கெல்லாம் பலவகைகளில் எதிர்வினை நிகழ்ந்திருக்கிறது. தலித்களிடமிருந்து எதிர் தாக்குதல் வர தொடங்கியதும், முன்பு போல ஆட்டாம் போடவும் முடியவில்லை. ஏதோ பிகாரில் எல்லாம் நன்றாய் இருக்கிறது என்று சொல்வது அல்ல என் நோக்கம். பிகார் குறித்த பிரசாரத்தின் அடைப்படை வேறு என்பதுதான்.

லல்லுவை கூட, பிரசாரம் என்னவாக இருந்தாலும், ரன்பீர் சேனாவின் எதிரியாகவோ தலித்/நக்சல் ஆதரவாளராகவோ பார்க்க முடியாது. லல்லுவின் ஆட்சியிலேயே நக்ஸல் மீது எத்தனையோ என்கவுண்டர்கள் நடந்தாலும், ரனபீர் சேனா மீது எதுவும் நடந்து கேள்விப் படவில்லை. ஆனால் லல்லு வேறு வழையில்லாமல் அப்படி நடந்துகொண்டாலும், அடிப்படையில் அவர் கட்சி சேனா அதரவு கொண்டது அல்ல. மாறாக பாஜகவில் பலர் சேனாவுடன் நெருக்கம் கொண்டவர்கள். இந்த வெற்றி ரனபீர் சேனாவிற்கு உற்சாகம் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அது தவிர மேலோட்டப் பார்வையிலேயே, ராஷ்ட்ரிய ஜனதாதள்ளை விட, நிதிஷ் கூட்டணியில் கிரிமினல் பிண்ணணி கொண்ட பலர் போட்டியிட்டு வென்று சட்டசபையினுள்ளும் நுழைந்தாகி விட்டது. இதில் என்ன மாற்றம் வரபோக்கிறது என்று புரியவில்லை. கொஞ்ச நாள் அப்படி ஒரு மாயை மட்டும் தெரியக்கூடும்.

ஆனால் இவை எப்படியிருந்தாலும், இந்த முறையும் லல்லுவே ஜெயிப்பது நல்லதுக்கு அல்ல என்ற காரணத்தால் மட்டும் இந்த முடிவுகள் வரவேற்க கூடியதாய் தெரிகிறது.

குழலி / Kuzhali said...

//ஆனால் இவை எப்படியிருந்தாலும், இந்த முறையும் லல்லுவே ஜெயிப்பது நல்லதுக்கு அல்ல என்ற காரணத்தால் மட்டும் இந்த முடிவுகள் வரவேற்க கூடியதாய் தெரிகிறது.
//
நன்றி ரோசா, நானும் இந்த ஒரே காரணத்திற்காகத் தான் பீகாரின் தேர்தல் முடிவுகளை வரவேற்கிறேன், அதைத் தவிர்த்து பார்க்கும் போது ஊடகங்களின் நகையாடல் ஸிக் ஜோக் மட்டுமே, மேலும் ரன்வீர்சேனா எப்படி கட்டுப்படுத்தப்படும் என்பதில் எனக்கு பலத்த சந்தேகமே? ஏனெனில் ரன்வீர்சேனா விரும்பிய அல்லது அதற்கு ஆதரவான ஆட்சியே அமைந்துள்ளதாக நான் கருதுகின்றேன்.

Muthu said...

எங்கள் வங்கியில் என்னுடன் வேலை பார்க்கும் சில பீகார் நண்பர்கள் இந்த கருத்தை வழிமொழிகிறார்கள் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.ஆனால் இது லாலுவுக்கு ஆதரவாகாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Anonymous said...

One more interesting fact - RJD vote is more or less same in this election also compare to last.(less than 1 % fall from previous election. i forgot excat,)

Life standard, Law and order, Caste discrimination, Education and Health issues UP,Utranjal, MP,Chattishar, Jarhand, Rajastan, HP, Bihar are same.

But unfortunately our media's targeting only Bihar.

Anonymous said...

Do you believe (or getting "arpa sandhosham"?) that justifying bihar's ramadoss by saying 'media is wrong' will give you a support to justify your maaladimai's actions?

குழலி / Kuzhali said...

அனானிமசுக்கு, இன்றைய நிகழ்வுகள், இன்றைய செய்திகள் நாளைய வரலாறு, தவறான ஒரு தலைபட்சமான செய்திகள் தவறான வரலாற்றை எழுத வைத்துவிடும், தற்போதைய பெரும்பாலான ஊடகங்கள் செய்திகளில் (விமர்சனங்களைப் பற்றி பேசவில்லை) கூட நேர்மையை காண்பிப்பதில்லை, புரிந்து கொள்ள முயற்சிசெய்யுங்கள், மேலும் நீங்கள் இந்த பதிவில் இராமதாசைப் பற்றி பேசியதில் எனக்கு கவலையில்லை, ஏனெனில் இது எனக்கு பழகிவிட்டது, நான் தமிழ்மனம் வந்த தொடக்ககாலத்தில் எழுதிய பதிவுகளிலெல்லாம் வேலைமெனக்கெட்டு சென்று "-" குத்தி வந்துள்ளதை சமீபத்தில் பார்த்தேன், "-" குத்துவதற்காகவாவது பழைய பதிவுகளை பார்த்தார்களே... இதெல்லாம் நிறைய பாடங்கள் சொல்கின்றன, மனிதர்களை பற்றிய நிறைய புரிதல்களை தருகின்றன,

நன்றி

G.Ragavan said...

குழலி, உங்கள் பதிவில் சொல்லியிருப்பதில் பாதி உண்மை என்றே நினைக்கிறேன்.

எங்கள் அலுவலகத்தில் பீகார் நண்பர்கள் உண்டு. இந்துவும் உண்டு. இஸ்லாமியரும் உண்டு.

இருவருமே இந்த ஆட்சி மாற்றத்தை விரும்பியிருக்கின்றார்கள். அதே சமயத்தில் இந்த முறைதான் தேர்தல் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்ததாகச் சொன்னார்கள். முன்பு நடந்த தேர்தல்களில் வன்முறை அதீதமாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கின்றார்கள்.

எனக்கும் பீகார் ஊடகங்களின் வழியாகத்தான் பழக்கம்.

சரி. இனிமேல் நிலை எப்படியிருக்கும்? ஒரே ஆண்டில் பீகாரில் பொன் விளைந்து விடாது. நிதீஷ் குமாருக்குக் கிடைத்திருப்பது சவாலான வேலையாம். ஆனால் கொஞ்சமாவது மாற்றத்தை எதிர் பார்க்கலாம் என்றே சொல்கிறார்கள்.

பீகார் மக்களுக்கு புத்தி வந்தது என்று சொல்வதெல்லாம்.....கலைஞர் தேர்தலில் தோற்கும் பொழுது நமக்கு பட்டம் சூட்டுவது போலத்தான்.

Sivabalan said...

//நான் சந்தேகிப்பது என்னவென்றால் நாமெல்லாம் பத்திரிக்கை வழியாகவும் ஊடகங்கள் வழியாகவும் பார்க்கும் பீகாரும் பீகார் அரசியலும் வேறு ஆனால் அங்கே உண்மையில் இருக்கும் பீகாரும் பீகார் அரசியலும் வேறு. //

இதில் உண்மை இருப்பதாகவே நான் உணர்கிறேன்...