கேசவன் சார் - கோட்டா கதை


"சார், ஏ.பி. சார்"

குரல் கேட்டு கதவை திறந்தார் அப்பா, கேசவ் சார் குரல்தான் அது, அப்பாவோட ஸ்கூல்ல ஒன்னா வேலை செய்யிற மேக்ஸ் வாத்தியார், அவர் பையன் கூட எங்க ஸ்கூல்தான், இங்கிலிஷ் மீடியம் அவன்.

"வாங்க வாங்க கேசவ் சார், உட்காருங்க"

அம்மா வந்து வரவேற்றார்

"வாங்க சார், டீ சாப்புடுங்க"

"இல்லமா இப்போதான் சாப்புட்டு வந்தேன்"

பொதுவாக யார் வேண்டாமென்றாலும் வற்புறுத்தி எல்லோரையும் டீ சாப்பிட சொல்லும் அம்மா கேசவ் சாரை அதுக்கு மேல ஒரு தடவை கூட டீ சாப்பிட சொல்லலை.

"என்னப்பா படிச்சிக்கிட்டு இருக்க, லீவ் நாள்ல கூட படிக்கிற"

"என்ட்ரன்ஸ் எக்சாமுக்கு படிக்கிறேன் சார்"

"ம்.... என்ட்ரன்ஸ்லாம் டஃப்பா இருக்கும், நல்லா படி"

"சொல்லுங்க சார், நல்லா சொல்லுங்க, கோச்சிங் க்ளாஸ் போயிட்டு வர்ற நேரம் போக மீதி நேரம் பூரா கிரிக்கெட்டு கிரிக்கெட்டு தான் சார் இவனுக்கு"

அப்பா எப்பவும் இப்படித்தான் ஊட்டுக்கு வர்றவங்ககிட்ட என் மானத்தை வாங்குறதே வேலை இவுருக்கு, எவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு படிச்சாலும் வர்றவங்ககிட்ட கொறை சொல்றதே வேலை.

அடிபட்ட அவமானமாக அம்மாவை பார்த்தேன், இதென்ன புதுசா, எப்பவும் நடக்கறது தானே கண்டுக்காத என்பது போல அம்மா பரிவாக பார்த்தார்.

சென்ட்டர்ல வக்கிற மாடல் டெஸ்ட்ல பர்ஸ்ட் ரெண்டு ரேங்க்ல வந்தா பேரை போர்டுல எழுதிப்போடுவாங்க, இந்த வாட்டியும் மணிமேகலைக்கிட்ட பர்ஸ்ட் ரேங்க்கை உட்டுறகூடாது எப்பிடியாவது பர்ஸ்ட்டு வந்துடனும், வைராக்கியத்தோடு ரூம்ல போய் படிக்கலாம்னாலும் ஹால்ல என்ன பேசிக்கிறாங்கங்கறதுலயே ஆர்வம் இருக்கு

"எந்த கோச்சிங் சென்ட்டர்க்கு போறான் பையன்"

"முனிசிபால்ட்டி ஸ்கூல்ல அசோசியேசன்ல நடத்துறாங்களே அங்க தான் சார் போறான், ஒங்க பையனும் +2 தானே, எங்க சேத்துருக்கிங்க"

"மெட்ராஸ்ல எக்ஸெல் கோச்சிங் சென்ட்டர்ல சேத்துருக்கேன், அய்யாயிரம் ஃபீஸ் புடுங்கிட்டாங்க, அண்ணன் வீட்லருந்து கோச்சிங் போறான்"

"இவனும் சொன்னான், ஆனா அவ்ளோ பணமும் கட்ட முடியாது, மெட்ராஸ்ல தங்கி படிக்கவும் யாருமில்லை, இவன் எப்பிடியாவது படிச்சி இஞ்சினியர் ஆயிட்டான்னா என் கடனே தீர்ந்துடும் சார்"

"ஒங்குளுக்கு என்ன சார் கொறச்சல், எங்கள மாதிரியா, அதான் கெவர்மெண்ட்டே கோட்டா குடுக்குதே அப்புறம் என்ன சார்"

அம்மா மட்டும் சரேலென உள்ளே சமயலறைக்கு சென்றார், அப்பாவோ மேலே என்ன பேசுறதுனு தெரியாம தெகச்சி போயிட்டார்.

"சரி அத உடுங்க சார், என்ன இந்த பக்கம் காத்து அடிக்குது"


"ஒன்னுமில்ல, உண்ணாமலை யுனிவர்சிட்டி செட்டியார் பி.ஏ. கஜேந்திரன் ஒங்க சொந்தக்காரர்தானே"


"நெருங்கிய சொந்தமெல்லாம் இல்லை, எங்க மச்சான் பொண்ணெடுத்த ஊருல ஏதோ சொந்தம்"

"இல்ல, என் பையனுக்கு உண்ணாமலையில ஒரு பி.இ. சீட்டு வாங்கனும், அதான் செட்டியார் பி.ஏ.வை வச்சி சீட்டு வாங்கிடலாம்னு"

"அட அங்க எல்லாமே காசுதான் சார், யாரை புடிச்சாலும் நடக்காது, நம்ம சொந்தகாரன், ஜாதிகாரன் இருந்தா கூட எவனும் ஹெல்ப் பண்ணமாட்டாங்க"

"அது தெரியுங்க, நம்பகமா காசு தந்து சீட் கன்ஃபார்ம் பண்ணனுமில்லை, வேற யாரு மூலமாவது போயி காசும் போயி சீட்டும் கெடைக்கலைனா"

"நான் வேணா என் மச்சான்கிட்ட சொல்றேன் சார், அந்த லிங்க்ல செட்டியார் பி.ஏ.வை புடிக்க முடியுதானு பாப்போம், ஆனா நான் என் பையன்கிட்ட சொல்லிட்டேன் ஃப்ரீ சீட்டு கெடைச்சாதான் படிக்க வைப்பேன் இல்லனா பாலிடெக்னிக்குல சேத்துடுவன்னு"

"அட ஒங்குளுக்குதான் கோட்டாவே இருக்கு, நீங்க எதுக்கு சார் பேமெண்ட் சீட்டுக்கு போகப்போறிங்க"

அம்மா உள்ளே பாத்திரத்தை உருட்டும் சத்தம் அதிகமாகவே கேட்டது

கேசவ் சார் போன பிறகு அம்மா அப்பாவிடம் சண்டைக்கு போனார்,

"அதான் மொதல்லயே ஒங்களுக்கு கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு குத்தி காமிச்சாரே, அப்புறமும் எதுக்கு ஃப்ரீ சீட்டு கெடைச்சாதான் படிக்க வைப்பேன்னு சொன்னிங்க, திரும்பவும் கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு சொல்லிட்டு போறாரே, நீங்க எப்பவும் இப்புடித்தான் எகனை மொகனையா வாயவுட்டு வாங்கிக்கட்டிக்கறது"

"அட விடு சுந்தரா, இவர் ஸ்கூல்லயே இப்படித்தான் என்னையும் பி.கே. சாரையும் சொல்லுவாரு, ஒங்களுக்கு என்னா சார் கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு சொல்லுவாரு"

ஏதோ மொனவிக்கிட்டே அம்மா உள்ள போனாங்க

------------------

மூச்சிரைக்க சைக்கிள நிறுத்திட்டு உள்ள ஓடிவந்தேன்

அம்மா வாசல்லயே இருந்தாங்க, என்னை பார்த்துட்டு சைக்கிள் நிறுத்துற நேரம் கூட பொறுக்க முடியாம கேட்டாங்க

"என்னடா எவ்ளோ மார்க்கு?"

அம்மா பாஸானு கூட கேக்கலை, எனக்கு பாஸ் பண்றதுலாம் ஒரு மேட்டரேயில்லைனு அம்மாவுக்கு தெரியும்

"தொள்ளாயிரத்து தொண்ணுத்தி ரெண்டுமா"

சட்டென்று அம்மா முகம் இருண்டது

"என்னடா ஆயிரம் மார்க்கு கூட வாங்கலையா? இந்த மார்க்குக்கு சீட்டு கெடைக்குமாடா"

என் சத்தம் கேட்டு அப்பாவும் தங்கச்சியும் வந்தாங்க

"அம்மா நீ டென்ஷனாகாத, தமிழ், இங்கிலிஷ்லதான் மார்க்கு கம்மி, சப்ஜெக்ட்ல எல்லாத்துலயும் நூத்தி எண்பதுக்கும் மேல, மேக்ஸ்ல நூத்தி எண்பத்தஞ்சி"

அம்மா, அப்பா, தங்கச்சி என எல்லார் மொகத்திலயும் அப்போதான் நிம்மதி வந்துச்சி

"சரி சரி செவப்புகோடு வாங்குன கதையா இதுல மார்க்கு வந்துருக்குனு என்ட்ரன்ஸ்ல உட்டுடாத"

அப்பாவுக்கு எப்பவும் திருப்தி இருக்காது, நாலாவதுல ஒரு தடவை ரொம்ப வெளையாட்டுத்தனமா இருந்து ஃபெயிலாயி ரேங்க்கார்டுல மார்க்குக்கு அடியில செவப்பு கோடு போட்டு இருந்ததை இன்னும் சொல்லிகாமிச்சிக்கிட்டே இருப்பார்

"அப்பா"

"என்னடா?"

"கேசவன் சாரை பார்க்கும்போது சொல்லுங்க, கணக்குல பெயிலா போனா கோட்டா இல்லைனாலும் இஞ்சினியர் சீட்டு கெடைக்காதுன்னு"

"என்னடா சொல்லுற"

"கேசவன் சார் பையன் கணக்குல ஃபெயிலு"

அன்றைக்கு தெரியாது கோட்டா ஜல்லியடிக்கிற நிறைய கேசவன் சாருங்களை வாழ்க்கையில பாக்கப்போறேன்னு

இந்த கதையை குமுதம் வெளியிடுமா?

சுஜாதா எழுதிய அய்யோத்திய மண்டபம் கதையின் அடுத்த பகுதியான "ஸ்ரீரங்கம்" என்ற தலைப்பில் நான் எழுதிய இந்த சிறுகதை குமுதத்தில் வெளியிடப்படுமா? இந்த கதையை குமுதத்திற்கு அனுப்ப என்ன செய்யவேண்டும், விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

குமுதத்தில் சுஜாதாவின் அய்யோத்தியா மண்டபம் கதையை படிக்க முடியாதவர்கள் பாலாவின் சேமிப்பில் இங்கே படிக்கலாம்.

ஸ்ரீரங்கம்

"அங்க அம்மாவாசை தர்ப்பணம் பண்ணி வெக்கறவா யாராவது நம்மவா இருக்காளா? விஜாரி, தர்ப்பையைத் தூக்கிண்டு வந்துர்றேன். என்னால இனிமே அடி தாங்கமுடியாது" என்றார். கலைச்செல்வியின் கண்ணீர் அவர் மணிக்கட்டில் உருண்டது.

அடிதாங்க முடியாத பிராமண மாமனாரை என்னி கண்ணீர் விட்ட கலைச்செல்வியின் கைத்தொலைபேசி சிணுங்கியது

"ஹலோ"

"கலை, அப்பா பேசுறம்மா, நல்லா இருக்கியா"

"நல்லா இருக்கேன் பா"

"என்னமா ஏர்போர்ட்லயா இருக்க"

"இல்லப்பா, இங்க மாமாக்கு அடிப்பட்டுடிச்சி, அதான் ஒரு வாரம் தள்ளிப்போட்டுட்டோம், என்னப்பா ஏர்போர்ட்லயா இருக்கிங்க"

"இல்லமா? நாங்க ஏர்போர்ட்டுக்கு வரலை"

"ஓ, இன்னைக்கு நாங்க கிளம்புறதா சொன்னதால ஏர்போர்போர்ட்டுக்கு வந்திங்களோனு நினைச்சேன், அடுத்த வாரம் வந்துடுங்கப்பா"

"நாங்க ஏர்போர்ட்டுக்கு வரலைனு சொல்ல தான்மா போன் பண்ணேன்"

"ஏன்பா, என்ன ஆச்சி, ஒடம்பு எதும் சரியில்லையா? என்ன ஆச்சி"

"அதெல்லாம் ஒண்ணுமில்லைமா, இந்த கட்டை நல்லா தான் இருக்கு, மனசு தான் சரியில்லை"

"தூரமா போறோமேனு வருத்தப்படுறிங்களா? ரெண்டு வருஷம் தான்பா அப்புறம் இங்க வந்துடுவோம், நான், நீங்க, மாமா எல்லாம் ஒண்ணாவே இருக்கலாம் பா, இதுக்கு மேலயும் நீங்க கஷ்டப்படவேண்டாம் பா"

"ரெண்டு வருஷத்திலயே இங்க வந்துடாதிங்கன்னு சொல்ல தான் போன் பண்ணேன்"

"ஏன்பா, அந்த சம்பாத்தியம் இங்க கிடைக்காதுனு பாக்குறிங்களா? இப்போலாம் சாப்ட்வேர்ல அங்க வாங்குற சம்பளத்துக்கு சமமா இங்கயும் கிடைக்கும் பா"

"பணம் வந்து என்னமா செய்யப்போவுது, மரியாதை, உரிமையில்லாத ஊருல அது ஒன்னுக்கும் ஒதவாது, ஆனா ஒனக்கு நல்ல சான்ஸ் கெடச்சிருக்கு கெட்டியா புடிச்சிக்கோ"

"என்னப்பா சொல்றிங்க ஒன்னுமே புரியலையே"

"அய்யிரு பையனை கல்யாணம் செய்திருக்க, இனிமே நம்ம ஜாதி பேரை எங்கயும் சொல்லிக்காத, மடிசார் கட்ட கத்துக்கோ, ஆத்துக்காரர் தோப்பனாருனு அய்யிரு பாஷை பேச கத்துக்கோ"

"அதை ஏன்பா நான் கத்துக்கணம், எப்பவுமே சுயமா இருக்கனும் சொல்ற நீங்களே இப்படி சொல்றிங்க"

"உன் பசங்களுக்கு வாய்ப்பாட்டு, கர்நாடக சங்கீதம், பரதநாட்டியமெல்லாம் உனக்கு பொறக்கபோற கொழந்தைகளுக்கு சொல்லி குடு"

"ஏன்ப்பா பேசுறிங்க, நான் அய்யிரை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல ஒங்களுக்கு எதும் சங்கடமா"

"அய்யய்யோ அதெல்லாம் இல்லமா, நீ அய்யிர கல்யாணம் பண்ணிக்கிட்டதை சாமி குடுத்த வரமா பாக்குறேன் அதனால தான் சொல்றேன் உனக்கு பொறக்க போற பையனுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து சொல்லிதரயோ இல்லியோ, திருக்குறள் சொல்லிதரயோ இல்லியோ ஆனா காயத்திரி மந்திரமும், சந்தியா வந்தனமும் கத்துக்க வை, மறக்காம பூணுல் போட்டுவுட்டுடு"

"என்னப்பா இப்படி பேசுறிங்க, மனசனுக்குள்ள வேறுபாடு பாக்ககூடாதுனு சொன்ன நீங்களே பூணுல் போட சொல்லுறிங்க"

"இந்த ரெண்டு வருசம் கழிச்சி ஊருக்கு வர்றதுலாம் வேண்டாம் மா, இங்க நெலமை அப்படியாயிடுச்சி, நாயும், பூனையும் நடந்த தெருவுல நம்மள மாதிரி ஜனங்க நடக்க உரிமையில்லாம இருந்துச்சி, கோயில்லுக்குள்ள போக வக்கில்லாம இருந்துச்சி, இதுக்கெல்லாம் போராடி உரிமை வாங்கித்தந்த பெரியார் தலையையே ஸ்ரீரங்கத்துல எடுத்துட்டாங்க, அத எதுத்து போராடனவங்களுக்கும் போலிஸ் அடி, ஜெயில் இப்பவே இந்த நெலமை இங்க, போக போக என்ன ஆகுமோ"

"ம்... நானும் பேப்பர்ல படிச்சேன்பா"

"ஏற்கனவே சாமியை தொடமுடியாது, சாமிகிட்ட போவ முடியாது, இனிமே கோயிலுக்கும்கூட போக முடியாத நெலமை வந்துடும், ஒழவு மாட்டவித்து ஒன்ன ஐ.ஐ.டி.ல எம்.டெக் படிக்க வச்சேன், ஆனா பி.இ. கோட்டால தான் படிச்ச, நம்மள மாதிரி படிப்புவாசனையே அறியாத ஜனங்களுக்கு இனி கோட்டாவும் இருக்காது, இங்க படிப்பில்லாம, மரியாதையில்லாம, உரிமையில்லாம ஈனபிறவியா அடிமையா தன்மானத்து உட்டுட்டு வாழுறதுக்கு சாகலாம் கலை, செத்துடலாம், ஆனா நீ அய்யிரு பையனை கல்யாணம் செய்துக்கிட்டதை நான் சாமி குடுத்த வரமாத்தான் பாக்குறேன்"

அதிர்ந்து போன கலைச்செல்வி தன் தந்தை பேசுவதை கண்ணீரோடு கேட்டுக்கொண்டிருந்தால்

"கலை அதனால தான் சொல்றேன், இங்க வராத, உயர்வுனு இந்த சமுதாயம் எதெல்லாம் மதிக்குதோ அதெல்லாம் கத்துக்கோ, உன் பசங்களுக்கும் கத்துகுடு, தமிழ் பாட்டு வேண்டாம் தெலுங்கு கீர்த்தனை கத்துகுடு, பரதநாட்டியம் கத்துகுடு, அத்திம்பேர்னு பேச கத்துகுடு, மடிசார் கட்ட கத்துக்கோ, ஆனா எப்புடி இருந்தாலும் ஒன் கலர் ஒன்னை காட்டி குடுத்துடும் அதுக்காக யார் என்ன பேசனாலும் கவலைப்படாத, உன் மானம், சுயமரியாதை முக்கியமில்லை உன் புள்ளைங்க மரியாதை தான் முக்கியம், ஒன்னை அய்யிரு ஜாதியில ஏத்துக்கலைனாலும் ஒன் புள்ளைங்களை ஏத்துப்பாங்க, முக்கியமா ஒன் புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வச்சிடாத, ஏதாவது சமஸ்கிரத சாமி பேரா பார்த்துவை, கலை இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோ"

"சொல்லுங்கப்பா"

"முடிஞ்சா ஒன் பேரை கூட சரஸ்வதி, லஷ்மினு மாத்தி வச்சிக்கோயேன், விசாரிச்சேன் அது ஈசி தானாம், கெஜட்ல மாத்திடலாமாம், இனி எங்களுக்கு போன் பேசாத, ஒன் ஊரை மறந்துடு, ஒன் சாதியை மறந்துடு, மீன், கறி சாப்பாடுற பழக்கத்தை மறந்துடு, ஒன் பேச்சு வழக்கை மறந்துடு, எல்லாத்தையும் மறந்துடு இப்போ நீ ஒரு அய்யிருக்கு பொண்டாட்டி, அதை மட்டும் ஞாபகத்துல வச்சிக்கோ, எங்களை விட, ஒன்னை விட ஒனக்கு பொறக்க போற கொழந்தைங்க மரியாதை முக்கியம், அவங்க உரிமை முக்கியம், நாயைவிட பூனையைவிட பொறப்பால கேவலமா என் பேரப்பசங்க இருக்க கூடாது, எங்களை பத்தி கவலைப்படாத கலை, எம் பேரப்புள்ளைங்க அய்யிரு சாதியாயிடுங்கற சந்தோசத்துல நாங்க இப்படியே இருந்துட்டு செத்துடுவோம், நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்கோ, நல்லா இரு கலை, நல்லா இரும்மா கலை"

போன் கட்டாகிவிட கதறி கதறி அழ ஆரம்பித்தாள் தற்போதைய கலைச்செல்வியான வருங்கால சரஸ்வதி

இது தொடர்பான பாலபாரதியின் பதிவு

இன்னொரு வேணுகோபால்




இந்த பதிவில் அனானி பினூட்டங்கள் அனுமதிக்கப்படாது, அவரவர்கள் பின்னூட்டங்களுக்கு அவரவர்களே பொறுப்பு

e.b.c.r.a - லஞ்சஊழல் ஒழிப்புப் புரட்சிப்படை

ஊழலை ஒழிக்கப்போறோம், ஊழலை ஒழிக்கப்போறோம், திமுக அசிங்கம், அதிமுக அசிங்கம், பாமக அசிங்கம், எல்லா கட்சியும் ஊழல், எல்லாம் அசிங்கம் எல்லாம் அசிங்கம் எல்லாத்துலயும் ஊழல்னு குணா கமல் ரேஞ்சுக்கு பாட்டு படிச்சிக்கிட்டு இருந்தார் நம்ம ACF 'ரமணா' புகழ் விஜயகாந்த், அதுக்காக தேமுதிகனு ஒரு கட்சி கூட ஆரம்பிச்சார், ஆகா ஊழல் ஒழிப்பு ரட்சகனே, மாற்றம் தரும் பிதாமகனே என்று பத்திரிக்கைகளும் எலவச வெளம்பரம் தந்தாங்க, அப்படிப்பட்ட சரியாக இன்கம்டாக்ஸ் கட்டும், மக்களுக்காக மண்டபத்தையே தரும் இருக்கும் கொடை வள்ளல் , சரியாக சொத்து மதிப்பை காட்டும், தம் சாதி என்பதால் தெலுங்கு நாயக்கர் சாதிக்கு வெறும் 14 பதினான்கு மாவட்ட செயலாளர்களை மட்டுமே தந்திருக்கும் சாதி பார்க்கா சிங்கம் விஜயகாந்த் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக கட்சியிலிருப்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த e.b.c.r.a - லஞ்சஊழல் ஒழிப்புப் புரட்சிப்படை.

அடடே நல்ல விசயம் தானே, ACFனு படத்துல மட்டும் படம்காமிக்காம EBCRAனு நெசத்துலயும் செய்யறாங்களே, இந்த EBCRA கெவுருமெண்ட்டு, தனியார்னு எங்கெல்லாம் ஊழல் இருக்கோ அங்கெல்லாம் அதை ஒழிக்க போறாங்க டோய்னு சந்தோசமா பார்த்தா... படா தமாசாகீதுப்பா மேட்டரு... யின்னா தமாசா இந்த EBCRA எதுக்குனா "இது தே.மு.தி.க.வுக்குள் நடக்கும் ஊழலை ஒழிப்பதற்கான இயக்கமாம்" அட்றா அட்றா அட்றா... ஊளலை ஒளிக்க பிறந்த இயக்கத்தில் உள்ள ஊளலை ஒளிக்க இயக்கமா... புச்சா கீதேப்பா....சரி யாருடா விஜயகாந்த்தா ஆரம்பிச்சாரு அது கூட பரவாலேது, சொந்த கட்சியை சீர்படுத்தறாருன்னா விஜயகந்த் பாவா இல்லியாம் இதை ஆரம்பிச்சது, பாவா கட்சியில பாதிக்கப்பட்ட ராஜேந்திரன்னு ஒருத்தராம், இன்னா ராசானு கேட்டதுக்கு அவுரு சொன்னாராம் மாநாட்டுக்கு மூனு இலட்சம் செலவு செய்ததிலிருந்து கட்சி பதவி, தேர்தல்னு ஏகப்பட்ட வசூலாம், சரி பாவாகிட்ட சொல்லலாமேனா "கேப்டனிடம் இதுபற்றி முறையிடலாம் என்றால், அவரைச் சுற்றியிருப்பவர்கள் எங்களை அண்ட விடவில்லை. கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் பலமுறை ஃபேக்ஸ் அனுப்பினோம். அது நேராக குப்பைக் கூடைக்குத்தான் போகும் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டோம்." அப்புடிங்கறார், இவுரை பத்தி தேமுதிக மாநில நிர்வாகிகிட்ட கேட்டா அவரு திமுக கைகூலியாம் அப்புடிங்கறாரு.... என்னமோ போங்கப்பா ஒன்னியும் பிரியலை...


அது சரி ரட்சகன், பிதாமகன்னு தூக்கிவுட்ட ஊடக பூடகங்கள் யின்னாத்துக்கு பாவா இப்போ ஒன்னிய கவுக்கறாங்க, சப்பை பய எனக்கு தெரியுது நான் சொன்னேன் விஜயகாந்த், இனி ஊடகங்கள் பாவா நீங்க கலைஞருக்கும் திமுகவுக்கும் மங்களம் பாடுவிங்கனு நெனச்சா நீங்க ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும் மங்களம் பாடுறிங்க, சொந்த ரத்தம் உட்டுடுமா? அதான் தூக்கி புடிச்ச ஒங்களையே இப்போ கவுக்குறாங்க, நீ என்னானா இவுனுங்களை நம்பி எங்க மேட்டருங்களை கைவுட்டுட்ட, வச்சாங்களா ஆப்பு... பாவா உன் இமேஜை டேமேஜாக்க உடமாட்டானுங்க, நாங்க ஒன்னும் செய்யமுடியாது பாவா.... வேடிக்கை தான் பாக்கனும்....

இவ்ளோதான் நம்ம மேட்டரு, அப்பாலிக்கா இதுக்குமேல குமுதம் ரிப்போர்ட்டர்ல வந்தது, அட நம்ம வலைப்பதிவு பத்திரிக்கை வெட்டி ஒட்டு புகழ் இட்லிவடை போடுவாரா இல்லையானு தெர்ல, அதான் நாமளே போட்டுட்டோம்........

குமுதம் கவர்ஸ்டோரி

ஊழலை ஒழிப்பதற்காக தனி இயக்கமொன்று தே.மு.தி.க.வில் தலை தூக்கியிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற மற்ற கட்சிகளில் புரையோடிப் போயிருக்கும் ஊழல் புண்ணை அகற்றுவதற்காகத்தான் இந்த இயக்கம் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். இது தே.மு.தி.க.வுக்குள் நடக்கும் ஊழலை ஒழிப்பதற்கான இயக்கமாம். இதனால் திகிலடித்துப் போய் நிற்கிறது தே.மு.தி.க.

‘ஊழலை ஒழிக்கப் போகிறேன்’ என்று ஒவ்வொரு சினிமாவிலும் டயலாக் பேசி நடிப்பவர் நடிகர் விஜயகாந்த். அதற்காகவே தே.மு.தி.க. என்ற கட்சியை அவதரிக்க வைத்தார் அவர். அந்த, ‘தே.மு.தி.க.வுக்குள்ளே ஊழலை ஒழிக்கப் போகிறோம்’ என்று, ஓர் அமைப்பினர் ஓங்கிக் குரல் கொடுத்திருப்பதால், தொண்டைக்குள் மீன்முள் சிக்கியதைப் போல துவண்டு நிற்கிறார்கள் தே.மு.தி.க. கட்சியினர்.

ஈரோடு, கோவை மாவட்ட எல்லையில் உள்ள தாசர்பட்டியில்தான் இப்படியரு புதிய இயக்கம் பூத்திருக்கிறது. தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட இந்தத் தாசர்பட்டியில் கடந்த ஏழாம் தேதியன்று (ஞாயிறு) மாலையில், அந்த ஏரியாவைச் சேர்ந்த தே.மு.தி.க.வினர், 'e.b.c.r.a' என்ற புதிய இயக்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர். "லஞ்சஊழல் ஒழிப்புப் புரட்சிப்படை" என்பது இதன் விரிவாக்கமாம்.

தாசர்பட்டிக்கு வெளியே ஒரு சோளக்காட்டை வெட்டிச் சமமாக்கி, அதில் மேடை போட்டு, ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி அதில் இப்படியரு இயக்கத்தை அறிவித்துள்ளனர் தே.மு.தி.க.வினர். இந்தத் திடீர் இயக்கத்தின் தலைவர் ராஜேந்திரன் என்பவர்.

‘‘பொதுக்கூட்ட மேடைக்கு தாரை தப்பட்டையுடன் மேளதாளம் முழங்க வந்த ராஜேந்திரனிடம், அவரது புதிய இயக்கம் பற்றி ‘என்ன இது திடீர் கலாட்டா’ என்று கேட்டோம்.

ராஜேந்திரன் சீரியஸாகப் பேச ஆரம்பித்தார். ‘‘சும்மா காமெடிக்காக இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை. எங்களின் செயல்பாடுகள் சிலபேருக்கு காமெடி போலத்தான் தெரிகிறது. ஆனால், அதைப்பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை.

எங்க தலைவர் விஜயகாந்த், கட்சி ஆரம்பித்தபோதே சிலபேர் அதை காமெடியாத்தான் நினைச்சு சிரிச்சாங்க. ஆனால், இப்போ தலைவரைப் பார்த்து அலறிக்கிட்டிருக்காங்க.

கட்சிக்குள்ளே இப்படியரு ஊழல் ஒழிப்பு இயக்கத்தை நாங்க ஆரம்பிக்கக் காரணமே, எங்க கட்சிக்காரங்கதான். கேப்டனுக்கு லஞ்சம் என்கிற வார்த்தையே பிடிக்காது. ஆனால், கட்சிக்குள்ளே பல இடங்களில் லஞ்சம் புகுந்து விளையாடுது. அதுக்கு ஒரு சரியான உதாரணம் தாராபுரம் தொகுதிதான்.

தலைவர் கட்சி ஆரம்பிச்சப்போ, இந்தத் தாசர்பட்டியிலிருந்து கிட்டத்தட்ட மூன்று லட்ச ரூபாயை மதுரை மாநாட்டுக்காகச் செலவு செய்தோம். தலைவர் எனக்கு தாராபுரம் ஒன்றியச் செயலாளர் பதவியைத் தந்தார். நானும் வெறியோடு உழைக்க ஆரம்பித்தேன். ஆனால், கொஞ்ச நாளில் எனக்கு அதிருப்தி ஏற்படத் தொடங்கியது.

இங்கே தாராபுரம் நகர தே.மு.தி.க. நிர்வாகிகள், தொட்டதற்கெல்லாம் பணம் பறிக்கிறார்கள். குறிப்பாக, நகரத் தலைவராயிருக்கிற விஜயகுமார் மேலே ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் குவிய ஆரம்பித்தது.

இவர்கள் எல்லைமீறி என்னுடைய ஒன்றியத்துக்குள்ளும் நுழைந்து, கைவேலையைக் காட்ட ஆரம்பித்தார்கள். கட்சி உறுப்பினர் படிவத்தைக் கூட இரண்டாயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய்னு விற்றுக் காசு பார்க்க ஆரம்பித்தார்கள். கட்சியின் பேர் பயங்கரமாக கெட்டுப் போக ஆரம்பித்தது.

இதனால், தே.மு.தி.க. கட்சிக்குள் காலை வைக்கவே பயப்படும் நிலை உருவானது. சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் சீட் கேட்டவர்களிடம் எல்லாம் சரியான சில்லறை வசூல் நடந்தது.

எங்கள் கட்சி ஊழல் நிர்வாகிகள், தேர்தல் வேளையில் தி.மு.க., அ.தி.மு.க.காரர்களிடம் கைநீட்டிக் காசு வாங்கி கட்சியைக் காட்டிக் கொடுக்கும் வேலையையும் செய்தார்கள். மாற்றுக் கட்சிக்காரர்களிடம், ‘நம்ம கட்சிக்கு வந்திடுங்க, கேப்டனிடம் சொல்லி பெரிய பதவி வாங்கித் தருகிறோம்’னு பீலா விட்டு வசூல்வேட்டை நடத்தினார்கள். பணம் வாங்கிய பின் கட்சியில் சேர்த்து, பதவி வாங்கித் தராதது தனிக்கதை.

ஈரோடு மாவட்ட நிர்வாகிகளிடம் இதுபற்றிப் புகார் செய்தோம். அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அங்கே தாராபுரம் நிர்வாகிகள் காசை வீசி காரியத்தைச் சமாளித்து விட்டார்கள் என்று பிறகுதான் தெரிந்தது.

சரி, கேப்டனிடம் இதுபற்றி முறையிடலாம் என்றால், அவரைச் சுற்றியிருப்பவர்கள் எங்களை அண்ட விடவில்லை. கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் பலமுறை ஃபேக்ஸ் அனுப்பினோம். அது நேராக குப்பைக் கூடைக்குத்தான் போகும் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டோம்.

உள்கட்சியில் நடக்கும் இந்த ஊழல் பிரச்னையை எப்படிக் கழுவிக் களைவது என்று உட்கார்ந்து யோசித்தோம். அப்போது உதயமானதுதான் இந்த ஊழல் ஒழிப்பு இயக்கம் என்ற ஐடியா.

தே.மு.தி.க.வில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை ஒழிப்பதுதான், இந்த இயக்கத்தின் முதல் வேலை. கட்சியை முதலில் சரி செய்த பிறகு, ஊரைத் திருத்தும் நோக்கத்தோடு இந்த இயக்கம் நகர ஆரம்பிக்கும்.

இந்த இயக்கம் கண்டிப்பாக கேப்டனின் கவனத்திற்குப் போகும். அவர் எங்களிடம் விசாரிக்கும்போது, ஊழல் செய்தவர்களின் ஒட்டுமொத்த பட்டியலையும் அவரிடம் ஆதாரங்களோடு காட்டுவோம். எங்கள் ஒன்றியத்திற்குள் மட்டுமல்ல, இந்த ஈரோடு மாவட்டத்திற்குள், எங்கள் கட்சிக்குள், எங்கே ஊழல் நடந்தாலும் அதைப் பட்டியலிடுவோம். அதற்கான ஆதாரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.

இது கேப்டனுக்கு எதிரான இயக்கமில்லை. அவருக்குத் துணை புரியப் போகும் ஓர் இயக்கம். நாங்களும் தே.மு.தி.க.வினர்தான். கேப்டன் எங்களைப் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

அப்படியே தப்பித் தவறி எங்கள் மீது நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு வெளியே தள்ளினாலும் கூட, ஊழல் பெருச்சாளிகளின் பட்டியலை அவரிடம் காட்டுவோம். ‘இந்த மாதிரி ஊழல் பேர்வழிகள் இருந்தால் கட்சி எப்படி உருப்படும் தலைவா?’ என்று கேட்டுவிட்டு, கட்சியை விட்டு காலை வெளியே எடுத்து வைப்போம்’’ என்றார் நெத்தியடியாக.

ஈரோடு மாவட்ட தே.மு.தி.க.வுக்குள் இப்படியரு எரிமலை வெடிக்க, இதற்கு மற்ற மாவட்ட தே.மு.தி.க.வினரும் மறைமுக ஆதரவு தெரிவித்து வருகிறார்களாம்.

‘‘பூனைக்கு யார் மணி கட்டுவது என்று நினைத்தோம். நீங்கள் துணிந்து மணி கட்டி விட்டீர்கள். உங்கள் வழியில் நாங்களும் எங்கள் மாவட்ட ஊழல் நிர்வாகிகளை எதிர்க்கப் போகிறோம்’’ என்கிறார்களாம் உற்சாகமாக.

இந்தத் திடீர் இயக்கம் பற்றி தே.மு.தி.க. மாநில நிர்வாகிகளிடம் கேட்டோம்.

"ராஜேந்திரனை, தாராபுரம் ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி நாளாகி விட்டது. அவர் இப்போது தே.மு.தி.க.வில் இல்லை. தி.மு.க.வின் கைக்கூலியாகி விட்டார். அவரைப் பற்றிப் பேசி அவரைப் பெரிய ஆளாக்க நாங்கள் விரும்பவில்லை!" என்றனர் படுகாட்டமாக.

ஒரு பக்கம் கொஞ்சம் காமெடியாகத் தெரிந்தாலும், இந்தத் திடீர் இயக்கம் தே.மு.தி.க. க்குள் ஒரு திகிலையும், கலக்கத்தையும் கிளப்பியிருக்கிறது என்பதே நிஜம்!

கடைசிச் செய்தி : ஈரோட்டில் பூனைக்கு மணி கட்டியதை மகிழ்ச்சியோடு ஆமோதித்திருக்கும் மற்ற மாவட்ட நிர்வாகிகள், நடந்தவை யாவும் நிஜம் என்பதை நிரூபிக்கும் வகையில், கட்சிப் பதவிகளைப் பெறுவதற்காக தலைமை கழக நிர்வாகிகள் இருவருக்கு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மூலமாகத் தாங்கள் இதுவரை செலுத்திய பல லட்ச ரூபாய்களுக்கான ஆதாரங்களை தலைமைக்கு சரம் சரமாக அனுப்பி வருகிறார்கள்.

என் புத்தாண்டு ஆசைகள்

இந்த புத்தாண்டில் நிறைவேற வேண்டுமென்ற என் ஆசைகள்

1. தலித் - பிற்படுத்தப்பட்டோர் இணைப்பு சமூக, அரசியல் நிலைகளில் ஏற்படவேண்டும், இவர்களுக்கிடையேயான புரிந்துணர்வு மேலும் மேலும் மேம்பட வேண்டும்.

2. சாதிவாரியான முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற வேண்டும், இது பல விடயங்களை தெளிவு படுத்தும், சமூக, அரசியல், பொருளாதார மத உரிமைகளிலும் பங்களிப்பிலும் யார் யாருக்கு எவ்வளவு உள்ளது என்று தெளிவாக தெரிந்து கொள்ளலம், முக்கியமாக சமீபகாலமாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆய்வின் அடிப்படையில் கிடைத்த புள்ளிவிபரங்களை ஆதாரமாகக் கொண்டு அடிக்கப்படும் ஜல்லிகளுக்கு முடிவுகட்டலாம். 1931 கணக்கெடுப்பின்படி 52% இருந்த பிற்படுத்தப்பட்டவர்கள் 1999ல் தே.மா.க.க ன் புள்ளிவிபரப்படி 38.5%மாக குறைந்து உடனே 5 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் 41%மாக உயரும் அதிசய காட்சிகளை தவிர்க்கலாம்.(ஏனிந்த சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டுமென்று பின்பு விளக்கமாக எழுதுகிறேன்)

3.ம.தி.மு.க வும் வைகோவும் அ.தி.மு.க. வில் இணைய வேண்டும் (ஏன் இதற்கு ஆசைப்படுகின்றேன் என்று விளக்கமாக பிறகு எழுதுகிறேன்)

4. எனக்கு நல்ல ஊதிய உயர்வு கிடைக்க வேண்டும்.

5. சென்ற ஆண்டின் இறுதியில் மருத்துவர் இராமதாசுவை சந்தித்தது போல இந்த ஆண்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் தொல்.திருமாவை சந்தித்து உரையாட வேண்டும்.

6. தமிழகத்தில் சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல் எதுவும் இந்த ஆண்டு நடைபெற வேண்டாம்.

7. சபால்ட்டர்ன் கதைகள் என்ற என் மற்றொரு பதிவில் குறைந்தது இருபது கதைகளாவது எழுத வேண்டும்.

8. தமிழ்மணம் மேலும் மேலும் வளர்ந்து புதிய தளங்களை பதிவர்களுக்கு அமைத்து தரவேண்டும்.

9. இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு இந்த ஆண்டே முழுவதும் அமல் செய்யப்படவேண்டும்.

இதல்லாமல் மேலும் பல ஆசைகள் உள்ளன, நேரம் கிடைக்கும் போது உங்களிடம் சொல்கிறேன்

ஐஐடி இடஒதுக்கீடு: புதிய சதி திட்டம்

நம் நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த ஐஐஎம், ஐஐடிகளின் இயக்குனர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மனித வளத்துறை அமைச்சகத்தை நெருக்கி வருகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டிவனத்தில் தனது தோட்டத்தில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

ஐஐடி, ஐஐஎம் ஆகிய உயர் கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த அந்த கல்வி நிலையங்களின் இயக்குனர்கள் இப்போது வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இது பிற்பட்டவர்களுக்கு எதிரான அவர்களது மன நிலையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

நம் நாட்டைச் சேர்ந்த பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்காக கொடி பிடிப்பது ஏன்?

இந்தக் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால், அந்த ஒப்புதல் கிடைக்கும் முன்பே அவசர அவசரமாக நுழைவுத் தேர்வை நடத்தி முடிக்க ஐஐஎம், ஐஐடி நிறுவன இயக்குனர்கள் முயன்று வருகின்றனர்.

சட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டியிருக்கும் என்பதால் இந்த அவசரத்தைக் காட்டுகிறார்கள். இதனால் ஜனாதிபதியில் ஒப்புதல் கிடைத்து சட்டம் அதிகாரப்பூர்வமான பின்னர் தான் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும்.

நன்றி
தட்ஸ்தமிழ்