க.சு.கா(கருத்து சுதந்திர காவலாளி) மூஞ்சியில் கரி

போன வருசம் இந்த கருத்து சொதந்திர காவலாளிங்க தொல்லை தாங்க முடியலை, ஆளுக்காளு கருத்து சொதந்திர காவலாளிங்க ஆயி ஒரே இம்சை, சரி எழவு இருந்துட்டு போகுதுனா இவிங்க யாருக்குடே கருத்து சொதந்திரத்தை காக்குறாங்கனு பார்த்தா முக்காவாசி சினிமாகாரங்களாவே இருக்கு, சரி எழவு ஏதோ ஒன்னு இருந்துட்டு போகட்டும், போன வருசம் அய்யா சினிமாக்காரவங்களே உங்க படத்து தலைப்பை தமிழ்ல வைங்க, எழவு சொன்னாலும் சொல்லலைனாலும் சினிமா வயசு வித்தியாசமில்லாம எல்லார்கிட்டயும் போய் சேருது, அதனால கொஞ்சம் பொறுப்போட இருங்கனு சொன்னாங்க முதல்ல, இது என்ன எழவு சொல்லி தெரிய வேண்டுமா?

ஆனா அது அவிங்களுக்கு தெரியலை அதனால தமிழ்பாதுகாப்பு இயக்கம் தொல்.திருமா, மருத்துவர் இராமதாசு எல்லாம் சொன்னாங்க, அப்பாலிக்கா கெளம்புனாங்க பாருங்க க.சு.கா ங்க(கருத்து சுதந்திர காவலாளிங்க), நீங்க சொல்றது தப்பு என்ன படத்துக்கு என்ன பெயர் வைக்கனும்னு அவங்களுக்கு தெரியும் (சரி ராசா அப்போ த.பா.இ., திருமா, இராமதாசு கருத்து சுதந்திரப்படி அவங்க சொன்னாங்க, அது அவங்க கருத்து சுதந்திரம் இல்லியா)

அட அது கூட பரவாயில்ல இன்னும் சில க.சு.காங்க கெளம்பினாங்க, இன்னாடா வெசயம்னா படத்துக்கு பொருத்தமா பேர் வக்கிறாங்களாம், அந்த படத்துக்கு அந்த பேர் தான் பொருத்தமாம், இல்லினா படம் ஊத்திக்குமாம், இத்தியாதி இத்தியாதினாங்க....

இப்பாலிக்கா இவிங்க மூஞ்சியில தான் கரி பூசுனாங்க, அப்போ பல இங்கிலிபிசு தலப்பு படத்துக்கு பொருத்தமானது, அத மாத்தக்கூடாது, பேருந்துனு சொன்னா யாருக்கு புரியும், 'பஸ்' னு சொன்னா எல்லாருக்கும் புரியும், வலைப்பதிவுல கூட ஏதோ ஒரு க.சு.காவலாளி "மும்பை எக்ஸ்பிரஸ்" ங்கறதை "மும்பை எக்ஸ்பிரசு" னு மாத்திட்டானு நக்கல் உட்டாரு, "BF" படத்தை "அஆ"னு மாத்துனதுக்கு நக்கல் உட்டாங்க

இவிங்களுக்கு வச்சாங்க ஆப்பு, தமிழ்ல பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து அப்படினு முதல்வர் கருணாநிதி சொன்ன பிறகு "Something Something உனக்கும் எனக்கும்" படத்து பெயர் "ஏதோ ஏதோ உனக்கும் எனக்கும்"அப்படினு மாறிடுச்சி, "எம்டன் - மகன்" படத்து பெயர் "எம்-மகன்" ஆயிடுச்சி, இதெல்லாம் "சம்திங் சம்திங்", "எம்டன் - மகன்" ங்கிற பெயர்களை நன்றாக விளம்பரம் செய்துட்டு, படமும் வெளிவந்து பிறகு மாத்துனாங்க, அப்பாலிக்கா "ஜில்லுனு ஒரு காதல்" என்னடானா "சில்லுனு ஒரு காதல்" ஆயிடுச்சி, "காட்ஃபாதர்"னு ஒரு படம் எடுக்குறாங்களாம் அது பெயர் கூட தமிழ்பெயர்ல மாத்திட்டாங்களாம், இப்போ அப்படியே கொஞ்சம் பின்னால போனா நம்ம க.சு.காவலாளிங்க என்ன சொன்னாங்க இந்த ஆளுங்களுக்கு ஆதரவா, இப்போ இந்த ஆளுங்க என்ன செய்திருக்காங்க, படத்துக்கு பெயர் பொறுத்தம், பேருந்துனு சொன்னா புரியுமா பஸ்னு சொன்னா புரியும் இத்தியாதி, இத்தியாதி எல்லாம் டுபாக்கூர், இவிங்களுக்கு பணம் கிடைக்குமாங்கறது தான் வெசயமே, இப்போ படத்துக்கு பெயரே வைக்க கூடாது, 1,2 னு எண்கள் அதான் நெம்பர் மட்டும் தான் வைக்கனும், வைத்தால் பாதி செலவை அரசாங்கம் ஏத்துக்கும்னு சொல்லுங்க, ஒடனே அதையும் செய்வாங்க.

வரிவிலக்கு கொடுத்தால் தமிழ் பெயர் வைக்கிறாய் என்றால் அது கருத்தளவில் தமிழ் பெயர் வைப்பது சரி என்றும் அதனால் அந்த படத்தின் வியாபாரத்திற்கு பாதிப்பு இல்லை என்று தானே பொருள், இதைத்தானேயா அன்று தமிழ் பாதுகாப்பு இயக்கம், திரு.தொல்.திருமா, மருத்துவர் இராமதாசு எல்லாம் சொன்னாங்க, அன்று படத்தின் பெயர் நன்றாக விளம்பரம் செய்தாகிவிட்டது, பேருந்துனா புரியுமா, "ஸ்" க்கு பதில் "சு" போட்டுக்கலாமா இத்தியாதி இத்தியாதி எல்லாம் கதறியவர்கள், இப்போது படம் வெளிவந்த பின்பு படத்தின் தலைப்பை
மாற்றியிருக்கிறார்கள் "ஜில்" என்பது "சில்" ஆகிவிட்டது, ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்ட "காட்ஃபாதர்" படத்தின் பெயர் மாறிவிட்டது இதெல்லாம் க.சு.காவலாளிகளின் மூஞ்சியில் பூசப்பட்ட கரி தானே....

அன்று தமிழில் தலைப்பு வைக்க சொல்லி வலியுறுத்தியபோது என்னென்ன காரணங்களையெல்லாம் சொல்லி முடியாது என்று சொன்னதோ அதே காரணங்கள் இன்றும் இருந்த போதும் அதையெல்லாம் விலக்கிவிட்டு இன்று வரிவிலக்கிற்காக படம் வெளியான பிறகும் கூட பெயர் மாற்றுகிறார்கள் என்றால் அன்று அவர்கள் தமிழில் பெயர் வைக்காததற்கு என்ன காரணம்? இன்று பணத்திற்காக மாற்றுபவர்கள் தமிழுக்காக ஏன் மாற்றக்கூடாது.

இதற்கெல்லாம் வரி விலக்கு தந்துகொண்டிருந்தால் பிறகு குப்பைத்தொட்டியில் சரியாக குப்பையை கொட்டினால் ஊக்கத்தொகை, திருடாமல் இருக்க ஊக்கத்தொகை, சரியான வருமான கணக்கை சமர்பித்தால் நூறு விழுக்காடு வருமான வரிவிலக்கு(நூறு விழுக்காடு வருமான வரிவிலக்குனா எதுக்கு வருமான வரி கணக்கு காண்பிக்க வேண்டும்...) என்றெல்லாம் செய்ய வேண்டும், இதற்கு பதில் கர்நாடகத்தில் நேரடி மொழி மாற்று படங்களுக்கு 100% கூடுதல் வரி விதிப்பது போல தமிழில் படத்தின் பெயர் இல்லையென்றால் 100% கூடுதல் வரி என்று செய்திருக்கலாம், ஆனால் இதற்கும் உடனடியாக க.சு.காவலாளிங்க கிளம்பியிருப்பார்கள், கோடி கோடியாக சம்பாதிக்கும் திரைப்படகாரர்களுக்கு மேலும் வருமானம் பெற்று தருவதற்கு.

வீங்கும் இந்தியா

சராசரி என்பது ஒரு வினோதமான சொல், ஒருவன் தன் ஒரு காலை நெருப்பிலும் மற்றொரு காலை உறைபனியின் உள்ளும் வைத்திருந்தாலும் அவன் சராசரியாக சரியான வெப்ப சூழலில் இருக்கிறான் என்பார்கள் சராசரி ஆட்கள்.

13-08-2006 தமிழ்முரசு இதழில் (இது சிங்கை தமிழ்முரசுங்க, நச்சுனு இருக்கு தமிழ்முரசு அல்ல இது) வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்பு "இந்தியாவின் வளர்ச்சிக்கு இரு தடைகள்" அதிலிருந்து சில பத்திகள்

மேலோட்டமாக பார்த்தால் இந்தியாவின் வருங்காலம் ஒளிமயமாகத்தோன்றும்,
......... ............ ........... .......
......... ............ ........... .......
இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி உலகின் வேறெந்த நாடுகளையும் விடத் துரிதமாக இருக்கிறது, புதிய நம்பிக்கை பெற்ற தொழில்கள் சிறகடித்து பறந்து விரிகின்றன.
......... ............ ........... .......
......... ............ ........... .......
......... ............ ........... .......
ஆனால் கூர்ந்து கவனித்தால் இந்தியா எதிர்நோக்கும் பிரச்சினைகளின் ஆழமும் சிக்கலும் உங்களை நிலை குலையச் செய்யும்.

பல சாதனைகளைப் படைத்திருந்தாலும் இந்தியாவில் வறுமை வேரூன்றி நிலைக்கிறது, சுமார் 260 மில்லியன் (26 கோடி) மக்கள் தினமும் ஒரு டாலருக்கு (1$) குறைவான பணத்தில் வாழ்கிறார்கள்.

இப்படியே கல்வி, சுகாதாரம் என அந்த புள்ளிவிவரம் நீள்கிறது...

கடைசியக அந்த கட்டுரை இப்படி முடிந்திருக்கும்

இந்தியாவில் சில பகுதிகளில் மெக்சிகோ நாட்டுக்கு நிகரான வாழ்க்கைத் தரம் நிலவுகிறது, வேறு சில பகுதிகளிலோ ஆப்ரிக்க துணைக் கண்டத்தை போல வறுமையில் உழல்கின்றன.

இதை நான் இந்தியா வீங்குகிறது என சொல்லாமல் இந்தியா வளர்கிறது என்றா சொல்லமுடியும்? இந்த வீக்கத்திற்கு நான் எப்படி மகிழ முடியும்.

சென்ற ஆண்டு கம்யூனிசம் எனது பார்வையில் ஒரு பதிவு எழுதியிருந்தேன், அதன் மீள் பதிவு மற்றும் சில விடயங்களும் இங்கே...


கம்யூனிசத்தை பற்றி எழுதும் அளவிற்கு கம்யூனிச கொள்கைகளை அதிகம் படித்தவன் இல்லை நான். எனவே இது எனது பார்வை மட்டுமே

சமீபத்தில் சிங்கப்பூரில் ஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரையும் கிட்டத்தட்ட அதே சமயத்தில் எமக்கு வந்த ஒரு புள்ளிவிவர மின்மடலும் இந்த பதிவெழுத தூண்டியவை.

ஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த புள்ளிவிவரம் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா,சிங்கப்பூர்,இந்தியா மற்றும் சில நாடுகளின் தனி நபர் சராசரி வருமானம், கடைசி 5% மக்களின் சராசரி வருமானம், முதல் 5% மக்களின் சராசரி வருமானம் பற்றிய ஒரு விவரம்.


அதில் புலப்படும் உண்மையென்னவெனில் ஆண்டு தோறும் எல்லா நாட்டு மக்களின் தனி நபர் சராசரி வருமானம் உயர்ந்து கொண்டே செல்கின்றது, அதே சமயத்தில் கடைசி 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் குறைந்து கொண்டே வருகின்றது. முதல் 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் மிக அதிக அளவில் அதிகரிக்கின்றது.

மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் பொழுது முதல் 5% இருப்பவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் சம்பாதித்தது 27$, தற்போதைய நிலை மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் நேரத்தில் இவர்கள் சம்பாதிப்பது 200$, அமெரிக்காவில் முதல் 0.12%ல் இருப்பவர்கள் மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் சம்பாதித்தது 200$ தற்போது 17,000$

இவைகள் சொல்லும் செய்தி என்னவெனில் உலகளாவிய அளவில் பணக்காரம் மேலும் பணக்காரன் ஆகின்றான், ஏழை மேலும் ஏழையாகின்றான். நாளுக்கு நாள் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

'கம்யூனிசம் சரியானது, கம்யூனிஸ்ட்கள் தவறானவர்கள்' என்பது அடிக்கடி கேள்வி பட்ட ஒரு சொலவடை, அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கின்றது. நம்மால் கம்யூனிசம் என்றால் தொழிற்சங்கங்கள், ரஷ்யா, சீனாவைத் தாண்டி அதற்கு வெளியில் யோசிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். அல்லது யோசிக்க வேண்டாமென இருக்கின்றோம்.

கம்யூனிசம் நான், எனது என்ற தளத்தில் இயங்காமல் நாம்,நமது என்ற தளத்தில் இயங்குகின்றது. முன்னேற்றம் என்பது தனி நபர் முன்னேற்றம் என்று இயங்காமல் கூட்டு முன்னேற்றம் என்று இயங்குகின்றது. இதன் பொருள் தனியாக முன்னேறும் ஒருவனை பின்னோக்கி இழுப்பதல்ல, கூட்டாக அனைவரும் முன்னேறுவது, தனி முன்னேற்றம் என்ற நிலை வரும்போது பொறாமை, தான் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் மற்றவர்களின் முன்னேற்றத்தில் மண் அள்ளிப்போடுவது, அலுவலகங்களில் நடைபெறும் கூஜா தூக்குதல், ஜால்ரா அடித்தல், காக்கா பிடித்தல் என்று இது எல்லாவிதமான அசிங்கமான முகங்களையும், உத்திகளையும் கடைபிடிக்கின்றது.

முதலாளித்துவத்தில் பெரும் பொருள் ஈட்ட வேண்டும், இலாபக்குறியீடு வருடா வருடம் ஏற வேண்டுமென்ற நோக்கில் மனிதாபிமானமற்ற, அன்எதிக்கல் முறைகளையெல்லாம் கையாள்கின்றனர், அவுட்சோர்சிங் என்ற முறையிலே இன்று பல வேலைகள் வெளிநாட்டிற்கு குறிப்பாக இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றன, அதனால் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருகுவதும் என்னைப்போன்ற பலர் நல்ல சம்பளம் பெறுவதும் நடைபெறுகின்றது, அவுட்சோர்சிங் செய்பவர்களின் நோக்கம் நல்ல இலாபம் ஈட்டுவது மட்டுமே, இந்தியாவைவிட குறைந்த செலவில் யாரேனும் செய்து தர தயாராக இருந்தால் இந்தியாவை விட்டு அங்கே சென்றுவிடுவர், ஆனால் இந்த அவுட்சோர்சிங் முறையால் வேலையிழந்த அந்த நாட்டுக்காரர்களின் நிலை என்ன?? அந்த நிறுவனத்தின் இலாபக்குறியீடு ஏறிக்கொண்டே செல்லும் அதனால் ஒரு சில பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள், ஆனால் தொழிலாளிகள் நிலை ஒரு பெரிய ? இது தான் முதலாளித்துவத்தின் கோர முகம்.

கம்யூனிசம் இந்த இடத்தில் வெறும் இலாப நோக்கை மட்டும் பார்ப்பதில்லை. சமூக பொறுப்போடும் மனிதாபிமானத்தோடும் செயல்படுகின்றது இரஷ்யாவில் கம்யூனிசம் இருந்த போது ஏழை பணக்காரர்களுக்கிடையேயான இடைவெளி குறைவாக இருந்தது ஆனால் இன்றைய நிலை??, கம்யூனிசமே பரவாயில்லை என்ற நிலை அங்கே, கம்யூனிசம் இருந்த போது கிடைந்த அடிப்படை தேவைகள் வசதிகள் கூட அங்கே தற்போது பெரும்பாலான மக்களுக்கு கிடைப்பதில்லை, விளைவு இன்று வளைகுடா நாடுகளின் கேளிக்கை விடுதிகள் சில இரஷ்ய பெண்களால் நிரம்பி கிடக்கின்றன,பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கின்றன.

இரஷ்யா சிதறுண்டதும், அங்கே கம்யூனிசம் தோல்வி அடைந்ததும் கம்யூனிசத்தின் தோல்வி என்பதல்ல, அது கம்யூனிசத்தின் வெற்றிதான், சில/பல சமயங்களில் எளிதாக கிடைக்கும்போதும் அனுபவிக்கும் போதும் அதன் பெருமை தெரியாது, வேறொன்றிற்கு ஆசைப்பட்டு அதை இழந்து உள்ளதும் போனதடா நொள்ளக் கண்ணா என்றிருக்கும்போது தான் அதன் பெருமை தெரியும், அந்த நிலைதான் இன்று இரஷ்யாவின் நிலை. இது ஒரு வகையில் கம்யூனிசத்தின் வெற்றிதான்.

கம்யூனிசம் பற்றி பேசும் போது வைக்கப்படும் சில வறட்டு வாதங்கள்

1. கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

1. கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

எல்லோரும் சமம் என்ற இடத்திலே பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு உள்ள அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லையே என்று வைக்கப்படும் மொக்கை வாதம் மிக நகைப்புக்குறியது

என் குடும்பத்தில் என் அண்ணன், அக்காள், என் தாய், தந்தைக்கு இருக்கும் அதிகாரங்கள் எனக்கு இருக்காது என்பது உண்மை, அது அவர்களுடைய அனுபவத்தாலும் உரிமையாலும் எனக்காக உழைப்பதாலும் நான் அவர்களுக்கு தர வேண்டியது என் கடமை.

எனக்காக உழைக்கும், நான் தேர்ந்தெடுத்த முதல்வர், என் நேரத்தைவிட அதிக மதிப்புடைய அவர் நேரத்தை சேமிக்கும் நோக்கிலும் பாதுகாப்பு மற்றும் இன்ன பல காரணங்களுக்காகவும் (இதற்கெல்லாம் அவர்களுக்கு தகுதி உண்டா என்பது வேறு விடயம்) தரப்படும் சலுகைகளும் அதிகாரங்களையும் குறை சொல்வது என்பதை எப்படி விவரிப்பது என்றே எனக்கு புரியவில்லை.

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

நாமெல்லாம் மனித சமுதாயம் தானே? விலங்கினம் இல்லையே? வலுத்தவன் வாழ்வானென்றால் பின் எதற்கு காவல்துறை, பின் எதற்கு சட்டம், நீதி, இராணுவமெல்லாம்.

வலுத்தவன் வாழ்வானென்ற நீதி விலங்கினத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் ஒரு நாகரீகமான, மனித சமுதாயத்திற்கு இது சரியா?

வலுத்தவன் வாழ்வானென்றால் ஒரு பத்து ரூபாய் வைத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் என்னால் இறங்கமுடியுமா? சென்னையில் என்னை விட உடல் பலத்தில், அரசியல் பலத்தில், ஆள் பலத்தில், பண பலத்தில் அதிகம் உள்ளவர்கள் இல்லையா?

வலுத்தவன் எது வேண்டுமானாலும் செய்வானென்றால் வீட்டுப்பெண்கள் சாலையிலே நடமாடமுடியுமா?? அல்லது நாம் தான் சுதந்திரமாக இருக்க முடியுமா?

நாமெல்லாம் மனித சமுதாயத்தில் இருக்கின்றோம், விலங்கினத்திலிருந்து இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக மாறிவிட்டோம், உடல் வலுவை மட்டும் நான் குறிக்கவில்லை, பொருளாதார வலிமையயும் சேர்த்து தான், எனவே அந்த காலத்திலேயே இருக்காதீர்கள்.

உலகாலாவிய அளவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக்கொண்டே போவது நல்லதற்கல்ல, முதலாளித்துவத்தின் சைடு எபெக்ட் தற்போதுதான் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்துள்ளது, இது முழுதாக வெளிப்படும் போது உலகலாவிய அளவில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும், அந்நிலையில் சிற் சில மாற்றங்களோடு கம்யூனிசம் பரந்து பட்டு இருக்கும்.

உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?

உயர் சாதியிலிருந்து க்ரீமி லேயரை ஆரம்பிப்போம்

1994 அரசு பொறியியல் கல்லூரியில் ஓராண்டிற்கான கல்விக்கட்டணம் ரூ.2500, இன்றும் கூட ரூ.17,000 கட்டணம், ஆனால் 1994லேயே ஒரு பொறியாளரை உருவாக்க அரசாங்கம் செய்யும் செலவாக எங்களுக்கு ஒரு கூட்டத்தில் சொல்லப்பட்டது இரண்டு இலட்சம், அன்று ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் செலவு செய்வதாக சொல்லப்பட்ட தொகை ரூபாய் ஐந்து இலட்சம், ஆனால் கல்விக்கட்டணம் க்ரீமிலேயர், க்ரீமி இல்லாத லேயர் என எல்லோருக்குமே ரூ.2500 அப்போது, இப்போது ரூ.17,000 இரண்டு இலட்சம் படிப்புக்கு மொத்தம் மாணவர் செலுத்தியது ரூ.10,000. மட்டுமே.

இடஒதுக்கீடு இன்னும் இரண்டாம் தலைமுறையை எட்டாத நிலையில் (இது தொடர்பான என்னுடைய முந்தைய பதிவு இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா?)இப்போதே க்ரீமிலேயருக்காக அழும் ஆட்கள் முதலில் க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், ஒரு 5 அல்லது 10 ஆண்டுகள் பரிசோதனை அளவில் செயல்படுத்தலாம், பிறகு மற்றவர்களுக்கும் அதை செயல்படுத்தலாம், இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயருக்காக அழும் ஆட்களின் முரண்பாடு என்னவென்றால் இவர்கள் இடஒதுக்கீடே வேண்டாமென்பவர்கள்.

க்ரீமிலேயர் தொடர்பான ஆலோசனைகள்

1. க்ரீமிலேயருக்கு அரசு நிதியில் நடைபெறும் அல்லது அரசாங்க நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடம் இல்லை, அவர்கள் வேண்டுமெனில் தனியார், சுயநிதிக்கல்லூரிகளில் படித்துக்கொள்ளட்டும்.

2. அப்படியே அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்தாலும் க்ரீமிலேயர் கட்டணங்களுக்கு அரசு மானியம் எதுவும் தரப்படக்கூடாது, அவர்களுக்கான முழுக்கல்வி செலவையும் அவர்களே ஏற்கவேண்டும், அதாவது ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் பத்து இலட்சம் செலவு செய்கிறதென்றால் பத்து இலட்சமும் க்ரீமிலேயர் மாணவர்களிடமிருந்தே வசூலிக்கப்படவேண்டும். க்ரீமிலேயருக்கு ஏன் மானியங்கள் ?

க்ரீமிலேயருக்கு எப்படி அரசு ரேசன் கடை அரிசி தேவையில்லையோ அதே போல அரசாங்க கல்வி கூடங்களிலும் அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் மட்டும் எதற்கு இவர்களுக்கு படிக்க இடம் தரவேண்டும்?

இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை விலக்கும்போது எப்படி அதன் கீழுள்ளவர்கள் பயன்பெறுவார்கள் என்று சொல்லப்படுகின்றதோ அதே போல உயர்சாதியில் க்ரீமிலேயரை அரசு கல்வி நிறுவனங்களில் இடமளிக்காமல் இருந்தால் பணமில்லாத ஏழை உயர்சாதி மாணவர்கள் எளிதாக இந்த கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவார்களே....

இதை பரிசோதனை முறையில் உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், பிறகு அதை மற்ற சாதிகளுக்கும் விரிவுபடுத்தலாம்.

உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?, உயர் சாதி க்ரீமிலேயரே நீங்கள் தயாரா சொல்லுங்கள்.

பிற்சேர்க்கை:

ஏன் இந்த க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்பதற்கான என் பதில்


தினமலர் செய்தியில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள 16,440 இடங்களில் பெரும்பாலும் MBC, SC, ST யாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

http://www.annauniv.edu/tnea06/rama21.doc

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434

இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது,

31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)

20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)

18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)

இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.

வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.

அதாவது குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரிகள் இடமில்லையென்றாலும் OCயில் பணம் கொடுத்து சுயநிதிக்கல்லூரிகளில் படிக்கும் சக்தி மற்ற அனைத்து பிரிவினரையும் விட அதிகம், அதனால் தான் இதை முதலில் OCயில் ஆரம்பித்தால் உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு பயன்படும் அல்லவா.

உயர்சாதி க்ரீமிலேயர் பற்றி ஞானியின் கருத்து...

http://www.keetru.com/dheemtharikida/sep06/gnani_5.html
2. இட ஒதுக்கீடு பெற்றுள்ள சாதிகளில் வசதி படைத்த மேட்டுக்குடியினரே (கிரீமி லேயர்) அதிக இடங்களைச் சுருட்டிக்கொள்வதைப் பற்றி எல்லாரும் மழுப்புவது ஏன்?

அரசியல், கல்வி, தொழில் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், துளியும் பண பலம் இல்லாதவர்களைவிட, ஓரளவேனும் பண பலம் உள்ளவர்கள் தான் முதலில் நுழையவும், நுழைந்த பின் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பதும், வசதி யற்றவர்கள் முண்டியடித்து, முட்டி மோதித்தான் தங்கள் இடத்தைப் பிடிக்க முடியும் என்பதும்தான் நீண்ட காலமாக சமூகத்தின் நிலை. ராஜாஜி, பெரியார், நேரு என்று அரசியலில் பெரும் தாக் கத்தை 20&ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய பலர், வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடைய சமூக அக்கறைகள் தெளிவாக இருந்ததனால் தான், அவர்களைப் பின்பற்றி வந்த வசதியற்றவர்களான சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா போன்றவர்கள் தங்களுக்குரிய இடத்தைப் பெற முடிந்தது. சமூகப் பார்வையில் தெளிவும், தனக்குச் சமமான கூர்மையும் உடைய ஏங்கல்ஸ் போன்ற பணக்கார நண்பர் இருந்திரா விட்டால், வசதி குறைந்தவரான கார்ல் மார்க்ஸ் இன்னும் அதிக சிரமப்பட்டு இருப்பார்.

எனவே, இட ஒதுக்கீட்டிலும், அந்தந்த சாதியில் ஓரளவு வசதியுள்ளவர்களே முதல்கட்டத்தில் உயர் கல்வி வரை வர முடியும். அப்படி வருபவர்களில் அக்கறை உள்ளவர்கள்தான் மற்றவர்களை அரசி யல் படுத்தித் திரட்ட முடியும். அந்த நிலைக்கு வருவதற்கு அந்தந்த சாதி ஏழைகள் முதலில் அடிப்படைக் கல்விக் கான வசதியைப் பெற்றாக வேண்டும்.

தவிர, இட ஒதுக்கீடு என்பது பொருளா தார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்த திட்டம் அல்ல. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வைச் சரி செய்யவும், எல்லாச் சாதிகளுக்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட திட்டம். வறுமை ஒழிப்புக்கும் வர்க்க சமத்துவத்துக்கும் வேறு திட்டங் களைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டில் அந்தந்த சாதிக்கான இடங்களில் முதல் தலைமுறையாகப் படிப்போர், ஏழைகளுக்கு முன்னுரிமை தருவது சரிதான். ஆனால், அதை ரிசர்வேஷன் இடங்களில் மட்டும் செய்வது சரியாகாது. ஓப்பன் கோட்டாவிலும் அதே போல ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.சமையல்கார பிராமணர், சவுண்டி பிராமணர், டிரைவர் முதலியார் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னு ரிமை தர, மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்.

குவார்ட்டர் கோவிந்தனுக்கு கவிஞன் காந்துவாயன் பதில்

குவார்ட்டர் கோவிந்தன், குழலி மீது வழக்கு போடப்போவதாக சொல்லியிருந்தார், அது தொடர்பாக ஆயா செஞ்ச பாயா புகழ் கவிஞன் கோந்துவாயனின் அறிக்கை.

குவார்ட்டர் கோவிந்தன், குழலி அவர்கள் மீது வழக்கு போடப்போவதாக சொல்லியிருந்தார், அதற்கு குவார்ட்டர் கோவிந்தனென்ன அவன் அப்பன் ஆறு ஆஃப் ஆறுமுகம் வந்தாலும் சரி தாத்தன் புல் புண்ணியகோடி வந்தாலும் சரி தயாராகவே இருக்கிறார், "குவார்ட்டர்" என்ற அடை மொழி எப்படி வந்தது தெரியுமா? நீங்களெல்லாம் கோவிந்தன் குவார்ட்டர் குடிப்பார் அதனால் குவார்ட்டர் கோவிந்தன் என்று பட்டம் வந்தது என நினைக்கிறீர்களா அது தவறு.

கோவிந்தனின் நண்பர்கள் சரக்கு அடித்து கொண்டிருக்கும் போது கோவிந்தனிடம் குவார்ட்டர் வாங்கிவர சொல்லி அனுப்பினார்கள், இந்த கோவிந்தன டாஸ்மாக் கடையில் போய் பெரிய புத்திசாலியாக 250மி.லி. பிராந்தி கொடுங்கனு கேட்டார் டாஸ்மார்க்கில் அம்மையாரின் புண்ணியத்தில் சரக்கு ஊத்திகொடுத்துக்கொண்டிருந்த புள்ளியியலில் முதுகலை படித்த பட்டதாரி

மண்டை காய்ந்து போய் 250மி.லி. சரக்கெல்லாம் இங்கே கிடையாது என திருப்பி அனுப்பிவிட்டார், நண்பர்களிடம் திரும்பிய கோவிந்தன் குவார்ட்டர் இல்லையாம் என்று சொல்ல, டாஸ்மாக்கில் குவார்ட்டர் இல்லையா? மிடாஸ்மிடாஸ்(MIDAS - M ஃபார் மன்னார்குடி, I ஃபார் இளவரசி, D ஃபார் தினகரன், A ஃபார் ஆல் அதான் எல்லோருக்கும் பின்னால யாரு S - S
ஃபார் சசிகலா) போலி சரக்காவது இருக்குமே எப்பவும்னு கொதித்து போய் கேட்க அங்கே உம்ம 250 மிலி கதையை சொல்ல அன்றிலிருந்து 'குவார்ட்டர்' கோவிந்தன் ஆனவன் தானே நீ

சரி அம்மையார் ஆட்சியில் தான் கேட்டால் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே போடுவாங்கனு பயந்த, இப்பவும் புள்ளியியல் முதுகலை பட்டதாரிகள் ஊத்திகொடுக்கிறார்களே இப்போது எந்த வழக்கிற்கு பயந்து கொண்டு வாயைத்திறக்காமல் இருக்கிறாய்?

உன் அப்பன் ஆஃப் ஆறுமுகம் கதை தெரியாத எங்களுக்கு, ஆஃப் பாயில் சாப்பிட ஆறுகிலோமீட்டர் நடந்து வந்ததால் தானே ஆஃப் ஆறுமுகம்னு பேரு, உன் தாத்தன் புல் புண்ணியகோடி கதை தெரியாதா, முதல்ல அது full புண்ணியகோடி யில்ல, pull புண்ணியகோடி, ஒரு நாள் கதவில் எழுதியிருந்த PULL என்பதை பார்த்து அண்ணே புல்லுனு இங்கே போட்டிருக்கு ஆனா புல்லே இல்லையே மாடு தின்னுருக்குமோனு கேட்டதாலேயே உன் தாத்தன் பெயர் புல் புண்ணியகோடி, இதெல்லாம் எமக்கு தெரியாததா? புரியாததா?

குவார்ட்டர் அடிக்கும் குடிமகன்களுக்காக என்ன செய்தாய் நீ, முன்னாடி எல்லாம் ஒயின்ஷாப் ஓனருங்க போலிசரக்கு விப்பாங்க, நடு நடுவுல நாலு கேசு நல்ல சரக்கும் கிடைக்கும், மிடாஸ் வந்ததிலிருந்து முழுக்க முழுக்க போலிசரக்கு தானாம், அதற்காக நீ என்ன செய்தாய்? போலிசரக்கை குடித்துவிட்டு சீன் செய்து கொண்டிருந்தாய், சரி அதைவிட என்ன சமூக அக்கறை உண்ணிடம் இருந்தது, ஏதோ தமிழ்நாட்டில் இருந்த பல ரவுடிகள் தம் ரவுடிப்பட்டாளத்தோடு ஒயின்ஷாப் நடத்தி தமக்கென ஒரு தொழில் செய்து நல்ல படியாக வாழ்ந்து கொண்டிருந்தனர், ஆனால் கவர்மெண்ட்டே சரக்கு விக்க ஆரம்பித்தவுடன் இந்த ரவுடிகள் நேர்மையாக தொழில் செய்ய வழியில்லாமல் ஆள்கடத்தல், வழிப்பறி கொள்ளையடிக்கின்றார்களாமே அதைப்பற்றி ஏதேனும் யோசித்தாயா?

ஆ... ஊ... என்றால் கலகக்காரனாம் கலகக்காரன், கலகக்காரனுக்கு அர்த்தம் தெரியுமா? உன் கலகத்தால் குடிகாரர்களுக்கு என்ன நன்மை, ஊரெல்லாம் குடிக்காதே குடிக்காதேனு சொல்லிக்கொண்டிருக்கும் டாக்டர் ராமதாஸ் தோட்டத்தில் வைத்து தண்ணியடிக்கிறார் என பொய் சொல்லி அவர் பெயரை கெடுக்க முயற்சி செய்தாயா? நீ... சரி விஜய்மல்லையா சரக்கு கிடைக்காமல் சீ... சீ.... இந்த சரக்கு புளிக்கும் என நீயே பேட்டரி செல் போட்டு ஊறவைத்து இந்த வார சரக்கார், இந்த வார சல்பேட்டா என்று என்றாவது சொல்லியிருக்கியா? உன்னோட இந்த வார சரக்காரையும் இந்த வார சல்பேட்டாவையும் யாரு கவனிக்கிறாங்கன்றது முக்கியமில்லை, கேட்டா ஏய்.... ஏய்... அந்த ஆஸ்கார் விருதை எப்படி செலக்ட் செய்றாங்கனு அறிவுப்பூர்வமா(அப்படினு நீயே நெனச்சிக்கிறது) கேள்வி கேட்டு கலகம் செய்தாயா? இப்படி ஒரு எழவுமில்லை பிறகென்ன நீ கலகக்காரன்? சரி அதுவும் இல்லை பேசாப்பொருளை பேசத்துணிந்தவர்கள் பார்ப்பனீயத்திற்கும் பாப்பாத்திக்கும் வித்தியாசம் தெரியாமலே "கல்லூரியில் பாப்பாத்தியை டாவடித்தான். இன்டர்நெட்டில் பார்ப்பனியத்தை எதிர்க்கிறான்.", என்று எழுதியதைப்போல என்றாவது ஏதாவது எழுதினியா?

பாவம் பேசாப்பொருளை பேசத்துணிந்தவருக்கு கோவில்களில் நூறு சதவீத இடஒதுக்கீட்டை உறுதிபடுத்த உச்ச நீதிமன்றம் போனதை போல, இரண்டாயிரமாண்டு இடஒதுக்கீட்டை போலவே "தேன்கூடு போட்டியிலும் இடஒதுக்கீடு தேவை என்றார் பேராசிரியர்." என்று தேன்கூடு போட்டியிலெல்லாம் இடஒதுக்கீட்டை எதிர்பார்க்கிறார் அது போல ஏதாவது எழுதியிருக்கிறாயா? பிறகெப்படி நீ கலகக்கரன்?


குவாட்டர் அடித்தா
குப்புற விழுந்தாய்
குவாட்டர் கோவிந்தா
நீ
குவாட்டர் அடித்தா
குப்புற விழுந்தாய்
குவாட்டர் கோவிந்தா

குவாட்டர் சரக்கு
எத்தனை மில்லி
தெரியுமா கோவிந்தா
உனக்கு
குவாட்டர் சரக்கு
எத்தனை மில்லி
தெரியுமா கோவிந்தா

கட்டிங் அடிச்சா
கதறுவியே கோவிந்தா
டாஸ்மாக் கட்டிங்குக்கே
நீ
கோவிந்தாஆஆஆ
கோவிந்தாஆஆஆஆ...

டாஸ்மாக் கட்டிங்குக்கே
நீ
கோவிந்தாஆஆஆ
கோவிந்தாஆஆஆஆ...

எந்த சரக்கு அடிச்சா
கோவிந்தா உனக்கு
பாப்பாத்திக்கும்
பார்ப்பனீயத்துக்கும்
வித்தியாசம் தெரியும்
கோவிந்தா

எந்த சரக்கு அடிச்சா
கோவிந்தா உனக்கு
பாப்பாத்திக்கும்
பார்ப்பனீயத்துக்கும்
வித்தியாசம் தெரியும்
கோவிந்தா

யாரும்
பாத்துட்டு போனாலும்
பாக்காம போனாலும்
இந்த வார சரக்கர்
நீதான்

யாரும்
குடிச்சிட்டு போனாலும்
குடிக்காம போனாலும்
இந்த வார சல்பேட்டா
நீதான் கோவிந்தா

ஏன்னா நீ தான்
என் சப்போட்டு
கோவிந்தா

ஏன்னா நீ தான்
என் சப்போட்டு
கோவிந்தா

சல்பேட்டா உனக்கு
சப்போட்டா கோவிந்தா

சொல்றேன் கேட்டுக்கோ அன்றும் சரி இன்றும் சரி நீ குவார்ட்டர் அடித்ததே இல்லை, குவார்ட்டர் அடிக்காமலே சீன் செய்து கொண்டிருக்கிறாய், அதை சொன்ன குழலியின் மீது வழக்கா போடப்போகிறாய், போடு போடு, எத்தனை வழக்கு வந்தாலும் சந்திக்க தயார் என குழலியின் சார்பில் கவிஞன் கோந்துவாயன் தெரிவிக்கின்றான்.

தமிழா நீ புழுவா? மனிதனா?

"தமிழா நீ புழுவா? மனிதனா?" என்ற கட்டுரை "செய்தி மடல்" இதழில் வெளிவந்துள்ளது, இந்த கட்டுரை எழுதியவரை தேர்தல் நேரத்தில் வலைப்பதிவர்களுக்கு வேறு மாதிரி அறிமுகப்படுத்தியிருந்தார் ரஜினியின் தீவிர ரசிகரான திரு.ரஜினி'ராம்கி', ஆம் அவர்தான் பாமகவின் சட்டமன்ற உறுப்பினர் திரு. வேல்முருகன், சட்டமன்ற நடப்பு பற்றி சில வாரங்கள் குமுதத்தில்(என்று நினைக்கின்றேன்)சுவையாக எழுதியவர், எழுத்தில் ஈடுபாடுடையவரென்றாலும் நிறைய எழுதாமைக்கு அவருடைய மற்ற பணிகளுக்கிடையில் எழுத்தில் நிறைய நேரம் செலவழிக்க இயலாத நிலை என நான் கருதுகிறேன், கீற்று இணையதளத்தில் கட்டுரையின் சுட்டி இனி அவரின் கட்டுரை கீழே

ஆறு ஆண்டுகளுக்கு முன் - 4-6-2000 நாளிட்ட கல்கி இதழொன்று என் கைக்குக் கிடைத்தது. சிவபக்தர் ஆறுமுகசாமியை நேரில் சந்தித்து, அவருக்குத் தொடர்புடைய சுற்றுப்புறக் கிராமங்களிலும் விசாரித்து, ஒரு செய்திக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. சிவபக்தர் ஆறுமுகசாமியைப் பற்றி கல்கி எழுதுமளவிற்கு என்ன நடந்தது?
சிதம்பரம் சிவாலயத்தில், இறைவன் முன் சிவபக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம் பாடல்களைப் பாடிச் சாந்திபெற விரும்பினார் சிவபக்தர் ஆறுமுகசாமி.

ஆலயத்துள் நுழைந்து பாடத் தொடங்கியதுமே எதிர்பாராத தாக்குதல், சில குண்டர்கள் சூழ்ந்து இழுத்துப் போட்டு மிதித்து அடித்து நொறுக்குகிறார்கள். தாக்கியவர்கள் அனைவரும் நீறுபூத்த நெற்றியுடன் காணப்படுகிறார்கள். தீட்சிதர்களாம். தீட்சிதர்கள் என்றால் தீட்சை தருகிறவர் என்று பொருள் இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.

தீட்சை என்றால் என்ன? தோழர் சின்னக்குத்தூசியிடம் கேட்டேன். ஒரு மாணவன் அல்லது சீடன் முழுத் தகுதி பெற்றிருக்கிறான் என்று சான்று - அங்கீகாரம் - ஏற்று அளிப்பதுதான் 'தீட்சை' என்றார் சின்னக்குத்தூசி.

"அப்படியானால் தீட்சிதர்?"

"அறிவை அங்கீகரிப்பவர் என்று பொருள் இல்லை. தீட்சைக்கும் தீட்சிதருக்கும் சம்பந்தமே இல்லை. தீட்சிதர் என்போர் ஒரு சாதிப் பிரிவினர் அவ்வளவுதான். அரைகுறையாய் என் தொலைபேசி உரையாடலைக் கேட்ட ஒருவர் போகிற போக்கில் சொன்னார்: "போக்கிரிகள், ரௌடிகள் என்று புரிந்து கொள்ளலாம் ஐயா!" சிவபக்தர் ஆறுமுகசாமியைச் சிதம்பரத்தில் தாக்கியவர்கள் மீது கொண்ட சினமேறிய விளக்கம் அது என்று புரிந்தது.
ஆறுமுகசாமியின் கதையை கல்கியில் மறுபடியும் படித்தேன். அதில் ஆறுமுகசாமியின் ஒவ்வொரு சொல்லும் இதயத்தை உலுக்கியது.

ஆறுமுகசாமி சொல்கிறார்: சிதம்பரம் கோயில் 'அம்பலத்தில்' தமிழில் பாடுவது என்பது தீட்சிதராலும் முடியாது என்பதால் - "நாமே ஒரு சிவாலயம் கட்டி தேவாரம் இசைப்பது என்ற முடிவோடு எனது கிராமத்திலேயே (குமுடி மூலை) பசுபதீஸ்வரர் ஆலயம் கட்டி ஒரு கால பூஜை செய்து வந்தேன். ஆனாலும் மனசுக்குள் புழுக்கம்... 'எனது அம்பலத்தில் வந்து பாடாமல் ஏன் முடங்கி விட்டாய்? என் ஆலயத்திற்கு வா... எத்தனை சோதனை வந்தாலும் தயங்காதே' என்று பரம்பொருள் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பது போல இருந்தது. எனவே எனது நண்பர்களோடு, கடலூர் மாவட்ட நீதிபதி சிங்காரவேலுவைச் சந்தித்து, அம்பலத்தில் நின்று தேவாரம் இசைத்தபடி இறைவனை தரிசிக்க அனுமதி கேட்டேன். அவர் இரண்டு அதிகாரிகளையே உடன் அனுப்பி எங்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்தார்.

"அந்த அதிகாரிகள் முன்னிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி அம்பலத்தில் பாடினேன். மறுநாள் அதிகாரிகள் இன்றி பாடச் சென்றபோது என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள்! அதன்பிறகு அதே மாதம் 18 ஆம் தேதி சிதம்பரம் நகர காவல்துறையின் பாதுகாப்புடன் சபையில் பாடினேன். மறுநாள் 19 ஆம் தேதி பாடியபோது பத்துக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கீழ்த்தரமான வார்த்தைகளைக் கூறி, ஜாதியின் பெயரையும் சொல்லி என்னைக் கீழே பிடித்துத் தள்ளி விட்டனர். இறையன்பர்கள் சிலர் அருகில் இருந்ததால், என்னைக் காப்பாற்றி அழைத்து வந்தார்கள். அதன் பிறகு நான் மானசரோவர் யாத்திரை சென்று விட் டேன்.

"மறுபடியும் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மே மாதம் எட்டாம் தேதி, காலை பத்து மணிக்கு அம்பலத்தில் தொண்டர்களுடன் தேவாரம் இசைக்கப் போனேன். அம்பலம் ஏறி ஆறு வரிகள்தான் பாடினேன்... சுப்ரமண்ய தீட்சிதர் என்பவர் அங்கிருந்த பிற தீட்சிதர்களையும் அழைத்துக் கொண்டு, என்னை மிகக் கேவலமாகத் திட்டியபடி 'இவனை அடிச்சு தள்ளுங்க' என்று சத்தம் போட்டதும், என்னை அம்பலத்தில் இருந்து கீழே தள்ளி எல்லோரும் இடுப்பு, கழுத்து, வயிறு பகுதிகளில் மிதித்தார்கள். நிலைமை மோசமானதை அடுத்து உடன் இருந்தவர்கள் என்னை மருத்துவமனையில் சேர்த்தார்கள். காவல் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனாலும், இதுவரை யாரையும் ஒரு வார்த்தைகூட விசாரிக்கவில்லை.

ஆனால் என் உடம்பில் உயிர் இருக்கும் வரை அம்பலத்தில் திருவாசகம் இசைத்து தில்லை திருத்தலத்தில் இருக்கும் தீண்டாமைப் பேயை விரட்டப் பாடுபடப் போகிறேன் என்கிறார் ஆறுமுகசாமி. இந்த ஆறுமுகசாமி யார், எப்படிப்பட்டவர் என்பதை அறிய அவரது குமுடிமூலை கிராமத்திற்குச் சென்றோம்.

"காடா இருந்த ஊருக்கு பஸ் வசதி, பள்ளிக்கூடம், மருத்துவமனை கொண்டு வந்தது உட்பட, அதிகாரிகளைப் போய்க் கேட்டுப் பல வசதிகள் செஞ்சு கொடுத்திருக்கார். மூணு கிராமங்கள்ல கோயில் கட்டிக் கொடுத்திருக்கார். கொஞ்சம்கூட சுயநலம் இல்லாதவர். அவரும் பல வருஷமா போராடித்தான் பார்க்கறாரு. ஆனா, தொடர்ந்து அவருக்கு அடியும் உதையும் அவமானமும்தான் சிதம்பரம் கோயிலில் கிடைக்குது" என்கிறார் குமுடி மூலை கிராமவாசியான சௌந்தர்ராஜன்.

சிதம்பரம் நகர காவல் நிலையத்தை அணுகினோம். தீட்சிதர்கள், ஆறுமுகசாமி என்ற இரண்டு பெயர்களைக் கேட்டதும், எஸ்.ஐ. எல்லா விவரமும் தருவார் என்று கூறிவிட்டு இன்ஸ்பெக்டர் குப்புசாமி அவசரகதியில் ஜீப் ஏறி மறைந்தே போனார். கடந்த எட்டாம் தேதி ஆறுமுகசாமி தாக்கப்படக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் சுப்ரமண்ய தீட்சிதர் என்ன சொல்கிறார்?

"அம்பலத்துல நின்னு பாடறதுக்குன்னுதான் நாங்க இருக்கோமே... இங்கே எதுக்கு ஆறுமுகசாமி...? அம்பலத்துக்குக் கீழே நின்று பாடினா பகவான் ஏத்துக்க மாட்டாரா? ஆறுகால பூஜை நேரம் போக பக்தர்கள் யாரு வேணும்னாலும் சன்னதியில் - அம்பலம் தவிர எங்க வேணுமானாலும் நின்னு பாடிக்கலாம். இதுக்கு நாங்க தடை சொல்றதில்லே! எங்க உரிமையைப் பறிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். இவ்விஷயத்தில் ஜாதி ஒரு பொருட்டே அல்ல!" என்று அடித்துச் சொல்கிறார்.

அதற்குமேல் நாம் கேட்ட எதையும் அவரோ, தற்போது தலைமை தீட்சிதராக இருக்கும் கனகசபை தீட்சிதரோ காதில் போட்டுக் கொள்ளத் தயாராக இல்லை. இவையெல்லாம் கல்கி எழுதியவைதாம். (இந்தச் செய்தியை வெளியிட்டதற்காகக் கல்கியைப் பாராட்டுகிறோம். எப்படி வெளியிட்டது என்று வியக்கிறோம்.)

இது நடந்து ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன. இந்த ஆண்டிலும் - 2006 ஜூலை மாதத்திலும், அதே ஆறுமுகசாமி அதே ஆலயத்தில் அதே ஆசையில் அதே தமிழில் இறைவனைப் பாட வருகிறார். இம்முறையும்,
அதே ஆறுமுகசாமி அதே ஆலயத்தில் அதே ரௌடிகளால் அதே மாதிரித் தாக்கப்படுகிறார். காலம் மாறியிருக்கிறது. ஆனால், ஆறுமுகசாமியின் தேவாரத் தமிழ்க் கனவும் அரங்கேறவில்லை. தீட்சிதர்களின் தமிழ் விரோதப் போக்கும் குறையவில்லை!

நந்தனை எரித்த நெருப்பு இன்னும் சிதம்பரம் தீட்சிதர்களின் நெஞ்சில் அணையவில்லை. உயிரே எரிந்தாலும் எம் உணர்வு அடங்காது என்பது போல் புதிய புதிய நந்தன்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். சாத்திரம், சம்பிரதாயம், ஆகமவிதி என்று அறிவுக்குப் புறம்பான காரணங்களைக் கூறி தமிழ்நாட்டில், தமிழர்கள் எழுப்பிய கோயிலில், 'தென்னாடு (தமிழ்நாடு) உடைய சிவனே' என்று போற்றப்படும் கடவுளை, தமிழில் பாடி வணங்கக் கூடாது என்று ஒரு கூட்டம் தடுக்கிறது. அதைக் காவல் துறையும் ஏற்றுக் கொள்கிறது. நீதித்துறையும் ஒப்புக் கொள்கிறது. எவனை வணங்கத் தமிழெடுத்துச் சென்றாரோ, அந்தச் சிவனும் இந்த அக்கிரகாரத்து அக்கிரமங்களைக் கண்டு கொள்வதில்லை.

சம்பிரதாயம், ஆகமம் என்கிற சங்கதிகளெல்லாம் வசதிபடைத்த மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட பாதுகாப்பான ஏற்பாடுகள்தாம். நிரந்தரமான, மாற்றக் கூடாத விதி என்று எதுவும் கிடையாது. அடிமைகள் எஜமானருக்குமுன் பணிவாக நடக்க வேண்டும் என்பதும் சம்பிரதாயம்தான். ஆண்டான் அடிமை என்கிற சமூக அமைப்பே கூடாது என்று புதிய சிந்தனை எழும்போது சம்பிரதாயங்கள் சமாதிகளாகி விடுகின்றன. மன்னர்களின் மணிமுடிகள் நொறுங்குகின்றன. முதலாளித்துவம் முடிசூடிக் கொள்கிறது. சகல சம்பிரதாயங்களுடனும் குடைநிழலில் குஞ்சரம் ஊர்ந்த நேபாள மன்னன் மக்கள் எழுச்சிக்கு முன் காணாமல் போனான். நடைமுறையிலுள்ள சமூக ஏற்பாட்டால் நன்மையடைகிறவர்களே சம்பிரதாயங்களில், சட்டங்களில் மாறுதலே கூடாது என்கிறார்கள்.
கூடாது என்று எத்தனை கூச்சல்கள் எழுந்தாலும் அரசியல் சாசனங்கள்கூட காலங்கள் தோறும் தேவைக்கு ஏற்ப மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.

அரசியல் சாசனங்கள் மாற்றப்படலாம்; ஆலய சம்பிரதாயங்கள் மாற்றக் கூடாதவை. ஏனென்றால், அவை ஆண்டவனால் அளிக்கப்பட்டவை என்று, ஆச்சாரியார்களும், மதகுருமார்களும் விரிவுரை செய்யக் கூடும்.
ஆண்டவனே மனிதனின் படைப்புத்தான் என்கிற சிந்தனைகள் மலர்கிற காலத்தில் ஆண்டவனைச் சொல்லி யாரும் ஏமாற்ற முடியாது.


ஆண்டவனைத் துணைக்கழைப்போருக்கு ஒரு கேள்வி:

"ஆண்டவன்தான் எனது அம்பலத்தில் வந்து பாடாமல் ஏன் முடங்கி விட்டாய்? வா, வந்து பாடு என்று எனக்கு ஆணையிட்டான்" என்று சிவபக்தர் ஆறுமுகசாமி சொல்லும்போது தீட்சிதர்கள் அதை ஏற்க மறுப்பது ஏன்? இங்கே - சிதம்பரத்தில் - ஆண்டவன் கட்டளையை விட ஆரிய விருப்பமே மேலானது என்று ஒவ்வொரு தீட்சிதனும் நம்புகிறான்.

பிரபஞ்சம் இயற்கைக்குக் கட்டுப்பட்டது. இயற்கை கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர். மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட்டது. ஆதலினால் பிராமணன் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றவன் என்று உரிமை பாராட்டுகிறான். ஆறுமுகசாமி போன்ற சிவனடியார்களோ, 'நீ மந்திரம், கடவுள், இயற்கை, பிரபஞ்சம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் உரிமை பெற்றிருக்கலாம்; ஆனால், எம் தமிழைக் கட்டுப்படுத்த யாரடா நீ?' என்று பொங்கி எழுகிறார்கள். இறைவழிபாட்டில் இடைத்தரகர்களான அர்ச்சகர், தீட்சிதர்களின் சனாதன தர்மங்கள் முக்கியமா, பக்தனின் உணர்வு முக்கியமா? - கேட்கிறார்கள் ஆறுமுகசாமிகள்.

வேடன் கண்ணப்பனின் கதை என்ன? சிவபெருமானின் விக்கிரகத்தில் கண்ணிலிருந்து இரத்தம் வழிவதைக் கண்டு துடிக்கிறான் கண்ணப்பன். தன் கண்களைப் பறித்து சிவனுக்குப் பொருத்துகிறான். எப்படி? தன் கண்களைப் பறித்துக் கொண்ட பின் சிவனின் கண்ணிருக்கும் இடத்தைப் பார்க்க முடியாது என்பதால், அந்த இடத்தில் தனது கால்விரலால் மிதித்து அடையாளம் ஏற்படுத்திக் கொண்டுதான் சிவனுக்கு 'கண் ஆபரேஷன்' செய்கிறான்.

ஆசாரம் காக்க நினைக்கும் யாருக்கும் கண்ணப்பனின் உணர்வு ஆசாரக் கேடானது. இறைவனின் கண்ணருகே காலால் மிதிக்கலாமா? மிதித்தவனை மிதிக்காமல் விடலாமா என்று தோன்றும். பக்தனின் பக்தியை மெச்சும் யாரும் இறைவனின் துயரத்தைப் போக்குவதற்காகத் தன்னையே குருடாக்கிக் கொண்ட கண்ணப்பனின் உணர்வு கண்டு மெய்சிலிர்த்துக் கசிந்துருகுவார். இறைவனுக்காகத் தன் கண்களையே பறித்துக் கொடுத்த பக்தனின் உணர்வு போற்றத் தகுந்ததா? இறைவனைக் காலால் மிதித்துவிட்டான் பாவி என்று கத்தும் தீட்சிதரின் ஆசார சீலம் போற்றத் தகுந்ததா?

அறிவியல் நோக்கில் கண்ணப்பன் ஓர் அசடன்; தீட்சிதர் ஒரு கயவன். பக்தி என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உளவியல் சிக்கல் என்பதால், இங்கே 'ஆன்மீக அளவுகோலின்படி' உணர்வு வெற்றி பெறுகிறது; ஆசாரம் அர்த்தமற்றதாகி விடுகிறது. தீண்டாமையும் உடன்கட்டை ஏறுதலும்கூட மதவாதிக்குப் புனிதமான ஆசாரங்களே!
புதைகுழியில் சிக்கித் தவிக்கும் தீட்சிதரைப் புலையன் கைபிடித்துத் தூக்குகிறான்; ஆசாரம் கெட்டு விட்டதே என்று புலையனைத் தண்டிப்பதா? தீட்சிதரைத் தண்டிப்பதா?


ஆசாரம் காப்பதற்காக சிதம்பரத்திலே ஒரு தீட்சிதர் செத்தால் அவருடைய மனைவியையும் அதே சிதையில் போட்டுக் கொளுத்தலாமா? வேதம் ஓதுதலையும் யாகம் வளர்த்தலையும் விட்டுவிட்டு, மருத்துவராய், நீதிபதியாய், பொறிஞராய், முதல்வராய், பிரதமராய்த் தொழில் செய்து பிழைப்பது பிராமண தர்மத்துக்கு விரோதமானதல்லவா? புனித ஆசாரங்களுக்கு எதிரான பாவமல்லவா? இவ்வாறு தர்மத்தைத் தொலைத்து ஆசாரம் கெட்ட 'பிராமணக் கழிசடைகளை' சிதம்பரம் தீட்சிதர்கள் செருப்பால் அடிப்பார்களா?

அப்படிச் செய்வார்களானால், ஆசார சீலர்களான தீட்சிதர்கள் ஆறுமுகசாமியை 'அம்பலத்தில்' நுழையாதே என்று தடுப்பதுகூட, 'தர்மப்படி' சரி யென்று ஒப்புக் கொள்ளலாம். இந்த அடிப்படை 'நாணயம்'கூட இல்லாத தீட்சிதர்கள் எந்த முகாந்தரத்தைச் சொல்லி, ஆறுமுகசாமிகளைத் தடுக்கிறார்கள்? நீதிமன்றத்தின்மூலம் தடையுத்தரவு பெறுகிறார்கள்? அதற்கு எந்த நீதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது? சிதம்பரம் அம்பலத்தில் ஏறாதே; தமிழில் பாடாதே என்பதை இறைவனே ஏற்க மாட்டான். நீதிபதி ஏற்றது எப்படி?

சிதம்பரத்தில் ஆசாரமும் காப்பாற்றப்படவில்லை; அறிவியல் பார்வையும் காப்பாற்றப்படவில்லை; அரசியல் சாசன விதிமுறைகளும் காப்பாற்றப்படவில்லை. ஆசாரம் கெட்ட தீட்சிதர்கள் தாங்களும் கெட்டு, சட்டத்தையும் வளைக்கிறார்கள். ஆறுமுகசாமிக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தின் அடிமுடியை அலசி ஆய்ந்தால் தெரியும் உண்மை இது தான்: தமிழன் தீண்டத்தகாதவன்; தமிழ்மொழி 'நீசபாஷை' என்கிற அக்கிரகாரத்து வக்கிரத்துக்கும், தமிழைப் பழித்தோர்க்குச் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கெனும் மான உணர்ச்சிக்குமான 'பரம்பரை யுத்தமே' சிதம்பரத்தில் நடக்கிறது!

தமிழா நீ புழுவா, பூச்சியா? 'ஆம்' என்றால், நாசமாய்ப்போ! மனிதன் என்றால் எழு; உன்மீது பூசப்பட்ட களங்கத்தைக் கழுவு!