வீங்கும் இந்தியா

சராசரி என்பது ஒரு வினோதமான சொல், ஒருவன் தன் ஒரு காலை நெருப்பிலும் மற்றொரு காலை உறைபனியின் உள்ளும் வைத்திருந்தாலும் அவன் சராசரியாக சரியான வெப்ப சூழலில் இருக்கிறான் என்பார்கள் சராசரி ஆட்கள்.

13-08-2006 தமிழ்முரசு இதழில் (இது சிங்கை தமிழ்முரசுங்க, நச்சுனு இருக்கு தமிழ்முரசு அல்ல இது) வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்பு "இந்தியாவின் வளர்ச்சிக்கு இரு தடைகள்" அதிலிருந்து சில பத்திகள்

மேலோட்டமாக பார்த்தால் இந்தியாவின் வருங்காலம் ஒளிமயமாகத்தோன்றும்,
......... ............ ........... .......
......... ............ ........... .......
இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி உலகின் வேறெந்த நாடுகளையும் விடத் துரிதமாக இருக்கிறது, புதிய நம்பிக்கை பெற்ற தொழில்கள் சிறகடித்து பறந்து விரிகின்றன.
......... ............ ........... .......
......... ............ ........... .......
......... ............ ........... .......
ஆனால் கூர்ந்து கவனித்தால் இந்தியா எதிர்நோக்கும் பிரச்சினைகளின் ஆழமும் சிக்கலும் உங்களை நிலை குலையச் செய்யும்.

பல சாதனைகளைப் படைத்திருந்தாலும் இந்தியாவில் வறுமை வேரூன்றி நிலைக்கிறது, சுமார் 260 மில்லியன் (26 கோடி) மக்கள் தினமும் ஒரு டாலருக்கு (1$) குறைவான பணத்தில் வாழ்கிறார்கள்.

இப்படியே கல்வி, சுகாதாரம் என அந்த புள்ளிவிவரம் நீள்கிறது...

கடைசியக அந்த கட்டுரை இப்படி முடிந்திருக்கும்

இந்தியாவில் சில பகுதிகளில் மெக்சிகோ நாட்டுக்கு நிகரான வாழ்க்கைத் தரம் நிலவுகிறது, வேறு சில பகுதிகளிலோ ஆப்ரிக்க துணைக் கண்டத்தை போல வறுமையில் உழல்கின்றன.

இதை நான் இந்தியா வீங்குகிறது என சொல்லாமல் இந்தியா வளர்கிறது என்றா சொல்லமுடியும்? இந்த வீக்கத்திற்கு நான் எப்படி மகிழ முடியும்.

சென்ற ஆண்டு கம்யூனிசம் எனது பார்வையில் ஒரு பதிவு எழுதியிருந்தேன், அதன் மீள் பதிவு மற்றும் சில விடயங்களும் இங்கே...


கம்யூனிசத்தை பற்றி எழுதும் அளவிற்கு கம்யூனிச கொள்கைகளை அதிகம் படித்தவன் இல்லை நான். எனவே இது எனது பார்வை மட்டுமே

சமீபத்தில் சிங்கப்பூரில் ஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரையும் கிட்டத்தட்ட அதே சமயத்தில் எமக்கு வந்த ஒரு புள்ளிவிவர மின்மடலும் இந்த பதிவெழுத தூண்டியவை.

ஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த புள்ளிவிவரம் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா,சிங்கப்பூர்,இந்தியா மற்றும் சில நாடுகளின் தனி நபர் சராசரி வருமானம், கடைசி 5% மக்களின் சராசரி வருமானம், முதல் 5% மக்களின் சராசரி வருமானம் பற்றிய ஒரு விவரம்.


அதில் புலப்படும் உண்மையென்னவெனில் ஆண்டு தோறும் எல்லா நாட்டு மக்களின் தனி நபர் சராசரி வருமானம் உயர்ந்து கொண்டே செல்கின்றது, அதே சமயத்தில் கடைசி 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் குறைந்து கொண்டே வருகின்றது. முதல் 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் மிக அதிக அளவில் அதிகரிக்கின்றது.

மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் பொழுது முதல் 5% இருப்பவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் சம்பாதித்தது 27$, தற்போதைய நிலை மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் நேரத்தில் இவர்கள் சம்பாதிப்பது 200$, அமெரிக்காவில் முதல் 0.12%ல் இருப்பவர்கள் மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் சம்பாதித்தது 200$ தற்போது 17,000$

இவைகள் சொல்லும் செய்தி என்னவெனில் உலகளாவிய அளவில் பணக்காரம் மேலும் பணக்காரன் ஆகின்றான், ஏழை மேலும் ஏழையாகின்றான். நாளுக்கு நாள் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

'கம்யூனிசம் சரியானது, கம்யூனிஸ்ட்கள் தவறானவர்கள்' என்பது அடிக்கடி கேள்வி பட்ட ஒரு சொலவடை, அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கின்றது. நம்மால் கம்யூனிசம் என்றால் தொழிற்சங்கங்கள், ரஷ்யா, சீனாவைத் தாண்டி அதற்கு வெளியில் யோசிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். அல்லது யோசிக்க வேண்டாமென இருக்கின்றோம்.

கம்யூனிசம் நான், எனது என்ற தளத்தில் இயங்காமல் நாம்,நமது என்ற தளத்தில் இயங்குகின்றது. முன்னேற்றம் என்பது தனி நபர் முன்னேற்றம் என்று இயங்காமல் கூட்டு முன்னேற்றம் என்று இயங்குகின்றது. இதன் பொருள் தனியாக முன்னேறும் ஒருவனை பின்னோக்கி இழுப்பதல்ல, கூட்டாக அனைவரும் முன்னேறுவது, தனி முன்னேற்றம் என்ற நிலை வரும்போது பொறாமை, தான் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் மற்றவர்களின் முன்னேற்றத்தில் மண் அள்ளிப்போடுவது, அலுவலகங்களில் நடைபெறும் கூஜா தூக்குதல், ஜால்ரா அடித்தல், காக்கா பிடித்தல் என்று இது எல்லாவிதமான அசிங்கமான முகங்களையும், உத்திகளையும் கடைபிடிக்கின்றது.

முதலாளித்துவத்தில் பெரும் பொருள் ஈட்ட வேண்டும், இலாபக்குறியீடு வருடா வருடம் ஏற வேண்டுமென்ற நோக்கில் மனிதாபிமானமற்ற, அன்எதிக்கல் முறைகளையெல்லாம் கையாள்கின்றனர், அவுட்சோர்சிங் என்ற முறையிலே இன்று பல வேலைகள் வெளிநாட்டிற்கு குறிப்பாக இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றன, அதனால் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருகுவதும் என்னைப்போன்ற பலர் நல்ல சம்பளம் பெறுவதும் நடைபெறுகின்றது, அவுட்சோர்சிங் செய்பவர்களின் நோக்கம் நல்ல இலாபம் ஈட்டுவது மட்டுமே, இந்தியாவைவிட குறைந்த செலவில் யாரேனும் செய்து தர தயாராக இருந்தால் இந்தியாவை விட்டு அங்கே சென்றுவிடுவர், ஆனால் இந்த அவுட்சோர்சிங் முறையால் வேலையிழந்த அந்த நாட்டுக்காரர்களின் நிலை என்ன?? அந்த நிறுவனத்தின் இலாபக்குறியீடு ஏறிக்கொண்டே செல்லும் அதனால் ஒரு சில பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள், ஆனால் தொழிலாளிகள் நிலை ஒரு பெரிய ? இது தான் முதலாளித்துவத்தின் கோர முகம்.

கம்யூனிசம் இந்த இடத்தில் வெறும் இலாப நோக்கை மட்டும் பார்ப்பதில்லை. சமூக பொறுப்போடும் மனிதாபிமானத்தோடும் செயல்படுகின்றது இரஷ்யாவில் கம்யூனிசம் இருந்த போது ஏழை பணக்காரர்களுக்கிடையேயான இடைவெளி குறைவாக இருந்தது ஆனால் இன்றைய நிலை??, கம்யூனிசமே பரவாயில்லை என்ற நிலை அங்கே, கம்யூனிசம் இருந்த போது கிடைந்த அடிப்படை தேவைகள் வசதிகள் கூட அங்கே தற்போது பெரும்பாலான மக்களுக்கு கிடைப்பதில்லை, விளைவு இன்று வளைகுடா நாடுகளின் கேளிக்கை விடுதிகள் சில இரஷ்ய பெண்களால் நிரம்பி கிடக்கின்றன,பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கின்றன.

இரஷ்யா சிதறுண்டதும், அங்கே கம்யூனிசம் தோல்வி அடைந்ததும் கம்யூனிசத்தின் தோல்வி என்பதல்ல, அது கம்யூனிசத்தின் வெற்றிதான், சில/பல சமயங்களில் எளிதாக கிடைக்கும்போதும் அனுபவிக்கும் போதும் அதன் பெருமை தெரியாது, வேறொன்றிற்கு ஆசைப்பட்டு அதை இழந்து உள்ளதும் போனதடா நொள்ளக் கண்ணா என்றிருக்கும்போது தான் அதன் பெருமை தெரியும், அந்த நிலைதான் இன்று இரஷ்யாவின் நிலை. இது ஒரு வகையில் கம்யூனிசத்தின் வெற்றிதான்.

கம்யூனிசம் பற்றி பேசும் போது வைக்கப்படும் சில வறட்டு வாதங்கள்

1. கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

1. கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

எல்லோரும் சமம் என்ற இடத்திலே பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு உள்ள அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லையே என்று வைக்கப்படும் மொக்கை வாதம் மிக நகைப்புக்குறியது

என் குடும்பத்தில் என் அண்ணன், அக்காள், என் தாய், தந்தைக்கு இருக்கும் அதிகாரங்கள் எனக்கு இருக்காது என்பது உண்மை, அது அவர்களுடைய அனுபவத்தாலும் உரிமையாலும் எனக்காக உழைப்பதாலும் நான் அவர்களுக்கு தர வேண்டியது என் கடமை.

எனக்காக உழைக்கும், நான் தேர்ந்தெடுத்த முதல்வர், என் நேரத்தைவிட அதிக மதிப்புடைய அவர் நேரத்தை சேமிக்கும் நோக்கிலும் பாதுகாப்பு மற்றும் இன்ன பல காரணங்களுக்காகவும் (இதற்கெல்லாம் அவர்களுக்கு தகுதி உண்டா என்பது வேறு விடயம்) தரப்படும் சலுகைகளும் அதிகாரங்களையும் குறை சொல்வது என்பதை எப்படி விவரிப்பது என்றே எனக்கு புரியவில்லை.

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

நாமெல்லாம் மனித சமுதாயம் தானே? விலங்கினம் இல்லையே? வலுத்தவன் வாழ்வானென்றால் பின் எதற்கு காவல்துறை, பின் எதற்கு சட்டம், நீதி, இராணுவமெல்லாம்.

வலுத்தவன் வாழ்வானென்ற நீதி விலங்கினத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் ஒரு நாகரீகமான, மனித சமுதாயத்திற்கு இது சரியா?

வலுத்தவன் வாழ்வானென்றால் ஒரு பத்து ரூபாய் வைத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் என்னால் இறங்கமுடியுமா? சென்னையில் என்னை விட உடல் பலத்தில், அரசியல் பலத்தில், ஆள் பலத்தில், பண பலத்தில் அதிகம் உள்ளவர்கள் இல்லையா?

வலுத்தவன் எது வேண்டுமானாலும் செய்வானென்றால் வீட்டுப்பெண்கள் சாலையிலே நடமாடமுடியுமா?? அல்லது நாம் தான் சுதந்திரமாக இருக்க முடியுமா?

நாமெல்லாம் மனித சமுதாயத்தில் இருக்கின்றோம், விலங்கினத்திலிருந்து இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக மாறிவிட்டோம், உடல் வலுவை மட்டும் நான் குறிக்கவில்லை, பொருளாதார வலிமையயும் சேர்த்து தான், எனவே அந்த காலத்திலேயே இருக்காதீர்கள்.

உலகாலாவிய அளவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக்கொண்டே போவது நல்லதற்கல்ல, முதலாளித்துவத்தின் சைடு எபெக்ட் தற்போதுதான் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்துள்ளது, இது முழுதாக வெளிப்படும் போது உலகலாவிய அளவில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும், அந்நிலையில் சிற் சில மாற்றங்களோடு கம்யூனிசம் பரந்து பட்டு இருக்கும்.

14 பின்னூட்டங்கள்:

said...

நல்ல பதிவு

நன்றி

said...

Communisam த்தின் மூலம் இந்த ஏற்றதாழ்வுகளை நீக்க முடியும் என நினைக்கிறீர்களா?

said...

//இந்தியாவில் சில பகுதிகளில் மெக்சிகோ நாட்டுக்கு நிகரான வாழ்க்கைத் தரம் நிலவுகிறது//

குழலி,
மெக்சிகோ நாட்டு வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது என்று கட்டுரை ஆசிரியருக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். :-))

மெக்சிகோ மட்டும் அல்ல அமெரிக்காவிலும் நீங்கள் சொல்லும் சாரசரி மனிதன் இருக்கிறான். உலகெங்கிலும்...இவர்களைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை.

நிற்க...
கட்டுரை ஆசிரியரின் மெக்சிகோ ஒப்பீட்டுதான் தவறே தவிர அவர் சொல்ல வந்தது உண்மை.

இந்தியாவில் ஒரு பகுதி மக்கள் மட்டும் அனைவருக்குமான சொத்தையும்,வளத்தையும் வைத்துள்ளனர்.$1-ல்தான் வாழ்க்கையை கனவு காண்கிறான் சராசரி மனிதன்.
முன்பு அது நில பிரபுத்துவமாக இருந்தது...இன்று வேறு வகையில் இருக்கிறது.

வயிறு மட்டும் தான் வீங்கியுள்ளது...கால்களும் கையும் சூம்பிப்போய் உள்ளன.

இந்தியாவில் நடக்கும் பட்டினிச்சாவுகள் பற்றி கார்ப்போரேட் பிரேம்ஜிகளுக்கும் அவர்களுக்கு புதிய பொருளாதாரக் கொள்கைமூலம் $உடன் பெப்சி வரவழைத்துக் கொடுக்கும் "பசி"க்களுக்கும் அந்த பெப்சிக்கு சான்று கொடுக்கும் "மணி"க் களுக்கும் கவலை இல்லை.

மும்பை பங்குக்குறீயீடு சரிந்தால் ஒடோடி விளக்கம் கொடுக்க ந்தி அமைச்சர்..
பெப்சி அழுதால் சர்டிவிகேட் கொடுக்க சுகாதார அமைச்சர்...
பட்டினிச் சாவு நடந்தால்...அது நிதி சம்பந்தமானதும் இல்லை...சுகாதாரம் சம்பந்தமானதும் இல்லை..எங்களுக்கு வேறு வேலை இருக்கிறது....

சரி புள்ளியியல்துறை "வாசு"வாவது செத்தவன் எண்ணிக்கையை உலகிற்குச் சொல்கிறாரா?....

கண்மாய்தூர்வாரினால் எவன் ஒட்டுப்போடுவான் கலர் டி.வி கொடுப்போம் வாருங்கள்.

எல்லா இடத்திலும் ஓட்டை...

:-((((

said...

//Communisam த்தின் மூலம் இந்த ஏற்றதாழ்வுகளை நீக்க முடியும் என நினைக்கிறீர்களா?
//
சாதிய இந்திய சூழலில் அப்படியே கம்யூனிசம் சாத்தியமில்லை, கம்யூனிசம் எப்படி சொல்லப்பட்டதோ அப்படியேத்தான் அதை மாற்றமில்லாமல் தொடரவேண்டுமென்றால் அது மதமாகிவிடும், சாதிய இந்திய சூழலுக்கேற்ற மாதிரியான மாற்றங்கள் இந்திய கம்யூனிசம் இருக்க வேண்டும், தமிழகத்தில் "திராவிட தமிழ்" சிந்தனைகள் தமிழ் மண் வாசனையுடனுள்ள கம்யூனிச தத்துவங்களே, அதனால் தான் கட்டுரையின் இறுதியில் "கம்யூனிசம் சிற் சில மாற்றங்களோடு பரந்து பட்டு இருக்கும்" என்று கூறியுள்ளேன். கம்யூனிசம் சில குறைகள் உள்ளது, ஆனால் மொத்தமும் குறைபாடானது அல்ல.

said...

என்னய்யா நீர்? எங்கோ அரம்பித்து, எதிலோ கோத்து, எங்கேயே வந்து முடித்து விட்டீரே! கொஞ்சம் அதிகமாகவே ஏமாந்து விட்டேன்.

இந்தியாவுக்கு கம்யூனிஸம் தேவை இல்லாத ஒன்று. தற்போது உள்ள பொருளாதார கொள்கைகள் உகந்தது அல்ல என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக மாற்று கம்யூனிஸம்தான் சரி என்பது நன்றல்ல. நாம் உருவாக்க வேண்டியது, மிகுந்த தொலை நோக்குடன் கூடிய புதிய பொருளாதார கொள்கைகள். தன்னிறைவுக்கு வழி செய்ய வேண்டும். மற்றும் அனைத்து வகைகளிலும் அதயாவசியங்களுக்கு அந்நியனை எதிர்பாரா கொள்கைகளை வகுக்கவேண்டும்.

நீங்கள் சுட்டிக்காட்டி இருப்பது போன்று, இப்போது இந்தியா மேற்கொண்டிருக்கும் அந்நிய முதலீட்டு முறை அதிகம் வரவேற்கத்தாக்கதாக இலைதான். அனால் இதையே ஒரு நெம்பு கோலாக உபயோகித்து மாற்று வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். தீர ஆராய்ந்தால் எல்லவற்றிற்கும் வழி கிடைக்கும்.

மற்றபடி ஏழைகள் இல்லாமல் செய்வதற்கு மாற்று வழிகளும் உண்டு. சகல விதமான வரிப்பணங்களையும் மிக கண்டிப்பான முறையில் வாங்கி, அதனை திட்டமிட்டு துல்லியமான முறையில் செலவிட்டு, மக்களுக்கு பிரித்தும் பங்கிட்டும் கொடுக்க வேண்டும். இன்றைய நிலையில் கோடான கோடி காசுகள் பல வடிவங்களில் வங்களிலும் ஏனைய கிடங்குகளிலும் தூங்கி வழிந்து கொண்டிருக்கின்றன.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிக பெரிய குறையே இந்தமாதிரியான "வரவுகளை அனைவருக்கும் பங்கிட்டுகொடுக்கும் முறையில்தான்." நிறைய பணம் கஜானாவிற்கு வருகிறது. ஆனால் அதனால் ஒரு சில
வர்கங்களே பயண் அடைகின்றனர்! உண்மையில் இந்த பணம் மிகவும் தேவைப் பட்டவர்களுக்கு போய் சேருதில் நிறைய சிக்கல்.

ஜாதி முறை அழிக்கப்பட்டு, அடிமை முறை அழிக்கப்பட்டு புதிதாக வேலைக்கான சட்டதிட்டங்கள் வகுக்க வேண்டும். அந்நிய முதலாலிகள் இந்தியாவில் தொழில் ஆரம்பிப்பதற்து முதல் காரணம் : இங்கு வேலை மற்றும் தொழிலுக்கு என்று எந்தவித கோட்பாடோ சட்டதிட்டமோ கிடையாது என்பதுதான். அடிப்படை சம்பளம் என்று எந்த அளவுகோலும் கிடையாது. முதலாலிகள் வைப்பதுதான் சட்டம்.
உள்ளூரிலும் அடித்தல சனங்களுக்கும் இதே கதிதான். மேலும் வேலைக்கான எந்த பாதுகாப்பும், உத்ரவாதமும் கிடையாது. நினைத்தால் அழைக்கலாம். தேவை இல்லை என்றால் திருப்பி அனுப்பி விடலாம். இது தொழிலாலர் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானது என நாம் அறிவோம்.

தொடரும்......

நன்றி. வணக்கம்!

said...

Arumaiyaana karuththOttam! you gave a fitting reply to my friend Mr Dondo in some way!

moreover if a persons head in the freezer and his legs in the cooking owen the average temperature says he is alive! his is the capitalistic way of improvement and figures!

said...

Arumaiyaana karuththOttam! you gave a fitting reply to my friend Mr Dondo in some way!

moreover if a persons head in the freezer and his legs in the cooking owen the average temperature says he is alive! his is the capitalistic way of improvement and figures!

said...

திரு. குழலி கூறியது : //"சாதிய இந்திய சூழலில் அப்படியே கம்யூனிசம் சாத்தியமில்லை, கம்யூனிசம் எப்படி சொல்லப்பட்டதோ அப்படியேத்தான் அதை மாற்றமில்லாமல் தொடரவேண்டுமென்றால் அது மதமாகிவிடும்."// மிக சரியான கூற்று.

கம்யூனிஸம் என வந்தால் கூடவே அடக்கமுறையும் ஜோடிபோட்டு வரும் என்பதை ஒத்துக்கொள்வீரா? கம்யூனிஸம் என்றால் ஒரே தலைவன் என்று பொருள். தலைவன் என்ன கூறுகிறானோ அதுதான் சட்டம். அது நல்லதோ கெட்டதோ! இன்னொரு கோணத்தில் பார்த்தால் இதுவே சர்வாதிகார முறை எனலாம். ஸ்டாலின் அடக்குமுறைக்கும் அட்டூழியங்களுக்கு அலவே இல்லை. சொல்லப்போனால் இட்லரைவிடவும் கொடியவன் என்றே கூறலாம். இதற்கு வழி வகுத்தது நீங்கள் கூறும் கம்யூனிஸம்தான் ஐயா!

ரஷ்யாவில் கம்யூனிஸம் அழிந்தது ஒரு வகையில் நல்லது என்று நீங்கள் கூறுவடுது நன்றன்று. ஒரு தவறான உள்நோக்கத்துடன் கூறியிருப்பது கொஞ்சம் வருந்தத்தக்கது!

முதலில் அங்கு உள்ள கொள்ளைக் காரர்கள் ஒழியவேண்டும். இலஞ்சம் எங்கு பார்த்தாலும் தலைவிரித்தாடுகிறது. அராஜகம் இன்னும் நடக்கிறது.

""மேலும் அரபு நாடுகளில் நிறை ரஷ்ய பெண்கள் தவறான வழியில் பணம் சம்பாதிக்கிறார்கள் எனவும், ரஷ்ய உள் நாட்டில் நிறைய புது பணக்காரர்கள் இருப்பதாகவும், இவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் நிறைய இடைவெளி இருப்பதாகவும், பொது மக்கள் ""பழைய கம்யூனிஸ முறையே இருந்திருக்கலாம்"" என ஏங்குவதாகவும் கூறியிருகிறீர்.

வெகு நீண்ட காலமாக கம்யூனிஸத்தில் ஊறிப்போய்விட்ட ரஷ்யா போன்ற நாடுகளுக்கு ஜன நாயக முறைக்கு மாறுவதற்கு சில காலங்கள் தேவைப்படும். கம்யூனிஸத்தால் லஞ்சம் வாங்கி பழகிப்போன பழைய பெரும்புள்ளிகள் இன்றும் நாட்டை சுரண்டிக்கொண்டு வருகிறார்கள். அடாவடி அராஜகத்திலேயே பழகிப்போன அவர்களுக்கு புது பழக்கத்தை கடைபிடிப்பது மிகவும் கடினமான விடயம்.

நீங்கள் கூறும் கம்யூனிஸம் பேரில் எத்தனைபேர் "சைபீரியா குலாக் அரசியல் கைதிகளாக" கடத்தப்பட்டு இறந்துபோனார்கள் என்பதையும் நினைவு கூட்டுகிறேன்.

கடைசியாக நான் கூற விரும்பவது : இப்போது இருக்கும் ரஷ்யாவின் மோசமான நிலமை எப்போதுமே அங்கு இருந்துகொண்டுதான் வந்தது. ஆனால், மாற்றம் இப்போது என்னவென்றால், ஜன நாயக முறைக்கு நாடு மாறியதும், விடயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகத்திற்கு தெரிய ஆரம்பித்துவிட்டது. உள் நாட்டு மக்களுக்கு தங்களைப்பற்றிய சில வருந்தத்தக்க செய்திகளை சமீக காலமாகத்தான் அவர்கள் அறிய ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால்தான் ஒன்றும் தெரியாதிருந்த நிறையை அப்பாவிகள் புதிதாக வந்த ஜன நாயகத்தின் மீது பழியை போட்டு விட்டார்கள். பொதுமக்களின் அபிப்பிராயத்தை பெருவதற்கு, மறுபடியும் ஆட்சி அமைப்பதற்கு பழைய கம்யூனிஸவாதிகள் மக்களை கிண்டிவிட்டு செய்யும் ஏவல்.

நான் கம்யூனிஸத்திற்கு எதிரியும் அல்ல, நணபனும் அல்ல. ஆனால், இம்முறை ஆட்சி என இருந்தால், அராஜகம் என்பது தவிர்க்க முடியத ஒன்று!

நன்றி. வணக்கம். தொடரும் உம் பதில் கண்டு!

said...

"moreover if a persons head in the freezer and his legs in the cooking owen the average temperature says he is alive! his is the capitalistic way of improvement and figures!"
ஒரு சிறு திருத்தம். இந்த புள்ளி விவர விளையாட்டுகள் அரசுகளின் இயல்பு. அது எப்படிப்பட்ட அரசாயினும் சரி. என்ன, கம்யூனிச நாடுகளில் அப்படிப்பட்ட புள்ளிவிவரங்கள் வேதவாக்காக இருக்கும், அவற்றை எதிர்த்து வலைப்பதிவு கூட செய்ய முடியாது. ஜனநாயக நாடுகளில் அது நன்றாகவே முடியும்.

"கம்யூனிசம் நான், எனது என்ற தளத்தில் இயங்காமல் நாம்,நமது என்ற தளத்தில் இயங்குகின்றது. முன்னேற்றம் என்பது தனி நபர் முன்னேற்றம் என்று இயங்காமல் கூட்டு முன்னேற்றம் என்று இயங்குகின்றது. இதன் பொருள் தனியாக முன்னேறும் ஒருவனை பின்னோக்கி இழுப்பதல்ல, கூட்டாக அனைவரும் முன்னேறுவது, தனி முன்னேற்றம் என்ற நிலை வரும்போது பொறாமை, தான் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் மற்றவர்களின் முன்னேற்றத்தில் மண் அள்ளிப்போடுவது, அலுவலகங்களில் நடைபெறும் கூஜா தூக்குதல், ஜால்ரா அடித்தல், காக்கா பிடித்தல் என்று இது எல்லாவிதமான அசிங்கமான முகங்களையும், உத்திகளையும் கடைபிடிக்கின்றது."
என்னமோ காக்கா பிடித்தல் தனியுடைமை நாடுகளில் மட்டும் நடக்கின்றது என்பது போல எழுதுகிறீர்களே. கம்யூனிஸ்ட் நாடுகளில் அது ரொம்பவே அதிகம். கூறப்போனால் அது இல்லாது அங்கு முன்னேறவே முடியாது. அடுத்த வீட்டுக்காரன், உறவினர் எல்லோரையும் உளவு பார்த்து போட்டுக் கொடுப்பது அந்த நாடுகளில்தான் நடக்கும். தனித்திறமையால் ஒருவர் முன்னேற நினைக்கும்போது அவனை பின்னுக்கு இழுப்பதுதான் கம்யூனிச முறையில் நடக்கும். உங்கள் உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். உங்களுடன் படித்த மாணவர்கள் எல்லோருமே உங்கள் அளவுக்கு முன்னேறி விட்டார்கள் என்று உங்களால் கூற முடியுமா? உங்கள் திறமையில் நீங்கள் வந்தீர்கள். மற்றவர்கள் வர முடியவில்லை, தீர்ந்தது விஷயம். இல்லை, பரீட்சை சமயத்தில் எல்லோருக்கும் உதவிக் கொண்டிருந்தீர்களா?

இப்போதைய ரஷ்யாவையே எடுத்துக் கொள்வோம். 1991-ல் சோவியத் யூனியன் வீழ்ந்தபோது கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஒரே பொருளாதார நிலை. இப்போது? தன் முனைப்பு உள்ளவன் முன்னேறி கோடீஸ்வரன் ஆகிறான். இல்லாதவன் அப்படியே இருக்கிறான்.

நீங்கள் கூறுவது போல சோவியத் யூனியனில் ஒரு போதும் செழிப்பு இருந்ததில்லை. ஆனால் அரசு பிரசாரம் அது இருப்பதாக நம்ப வைத்தது. இப்போது உண்மை வெளியாகி விட்டது. அவ்வளவே.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகலை கம்யூனிசம் எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post_115807685840498511.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ஹலோ குழலி!

நானும் சிங்கைதான்!

சில இடங்களில் உங்களுடைய கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை!

கொஞ்ச நாள் communism ஈடுபாடு கொண்டிருந்தவந்தான்! மேலும் மேற்கு வங்கத்தில் சில வருடங்கள் வாழ்ந்தவன் தான்.

I love communism! But I never suppor communist in india.

மானுடவியலை பற்றி இன்றைக்கு சிந்திக்க அரசியலில் உள்ள ஒரு வாய்ப்பு communismமே

ஆனால் இந்தியாவில் அது நிறைய பேர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு நிறைய சோம்பேறிகளை உருவாக்கிவிடுகிறது.
( it was wrongly interpreted against productivity )

ஆனால் சமுக விஷயங்களில் நாம் எவ்வளவோ அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக ஒற்றுமை. பொது விஷயங்களுக்காக போராடுவது etc...,

My honest opinion is communism is good theory for all. Only it need to change time by time and all as per the situation , social and economical conditions.

But our comrets stick on to the 18 century theory and following the in india is not possible.

I hope recently they made some bold decision and make get some support from public.

said...

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இசங்களை மட்டும் பேசி பயனில்லை.அடிப்படை தனி மனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம் உண்டாக வேண்டும். பொய் சொல்லுதல், லஞ்சம் வாங்குதல், விதிகளை மதியாமை, வரி செலுத்தாமை, வலுத்தவன் இளைத்தவனிடம் அடித்து பிடிங்குதல் போன்றவை நடைமுறையாக ஆகி போன நிலையில் இம்முறைகளில் பலன் பெற்றவர்கள் இக்கேடுகளையே நிலைத்திருக்க செய்ய விரும்பார்கள். குற்ற உணர்வே இல்லாமல் இதை செய்யும் நிறைய மனிதர்களையும், அவர்களுக்கு சப்பை கட்டு கட்டி கொடிப்பிடிக்கும் கூட்டத்தையும் காணலாம். இது போலிருக்கையில் எப்படிப் பட்ட இசங்களும் பயனில்லாமல்தான் போகும்.

1) அரசு என்றால் என்ன என்பது மக்களுக்கு தெளிவாக வேண்டும்.

2)அதிகப்படியான உரிமைகள் பஞ்சாயத்துக்களுக்கு வர வேண்டும். என்றோ ஒரு நாள் வெள்ளை வேட்டி களையாமல் ரத கஜ துரக பதாதிகள் சகிதம் தொகுதிக்கு வரும் எம்எல்ஏக்கோ, எம்பிக்கோ தொகுதியை பற்றிய அறிவு எவ்வளவு இருக்குமென்பது சந்தேகமே. ஒரு ஊருக்கு என்ன தேவை , என்ன மாதிரி தொழில் அமைப்புகளை அங்கு கொண்டு வரலாம், அடிப்படை கட்டுமானங்களை அமைப்பது எப்படி, என்ன மாதிரியான வரி வசூலிக்கலாம், எக்தகைய மருத்துவ அமைப்புகள் தேவை போன்ற விஷயங்களில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிமைகள் வேண்டும். மாநில அரசமைப்பும், மைய அரசமைப்பும் இவற்றுக்கு ஊன்று கோலாக, அரசியலமைப்பு சட்டத்தின் படி இவ்வமைப்புகள் இயங்குகிறதா என்பதை கண்காணிக்கும் அமைப்பாக இருந்தால் போதும்.

3) குழந்தைகள் பள்ளி கல்வி அமைப்பில் உலக விஷயங்களை பற்றி படிப்பதற்கு முன் உள்ளுர் அறிவும் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஊருக்குள் தண்ணீர் எங்கிருந்து வருகிறது, சாக்கடை நீர் எங்கு போகிறது, எத்தனை சாலைகளுண்டு,மின்சார தேவையென்ன, போன பஞ்சாயத்து என்ன சாதித்தது, எதை சாதிக்க முடியவில்லை ,ஏன் முடியவில்லை போன்றவை பள்ளிக் குழந்தைகளுக்கு பாடமாக இருக்க வேண்டும். அசோகரையும், ஹர்சவர்த்தனரையும் மட்டும் தெரிந்து ஆவது ஒன்றுமில்லை. அவை பழங்கதைகள். நாடு என்பது வெற்றுக் கோஷங்களிலும், வருடத்திற்கு இரண்டு நாள் விடுமுறையிலும் இல்லாமல் அரசியலமைப்பு சட்ட அறிவும், பொது ஒழுக்கம் பற்றிய அறிவும் ஆரம்ப நிலை கல்விக் கூடங்களிக்கு வர வேண்டும். அடிப்படை கட்டுமானங்களின் அவசியம் , அவற்றை பெருக்கி கொள்வதெப்படி போன்றவற்றை பற்றி அதிகம் போதிக்கப்படுகையில் அவர்களுக்கு அதை பற்றிய அக்கறை அதிகம் வர வாய்ப்பு உண்டு.

4) தனிமனிதர்களை கடவுளாக்கி வழிப்படுவது நிறுத்தப் பட வேண்டும். இது போன்ற மனநிலையில் சர்வ வல்லமை படைத்த தனிமனிதர் எதை செய்தாலும் அது நியாயமாக்கப் படுகிறது. இது மூளை சலவை செய்யப்பட்ட மனிதர்களை உருவாக்குகிறது. எல்லா நிகழ்வுகளையும் ஏன் என்ற கேள்வி எழுப்பி ஆராயும் மனதோடு சகமனிதனுக்கு மரியாதை கொடுப்பதோடு தன் சுய மரியாதையையும் காக்கும் இடத்தை நோக்கி சமூகம் நகர வேண்டும். அதையே கல்வி அமைப்பும் போதிக்க வேண்டும். நல்ல தலைவர்களை மற்றும் மனிதர்களை பாராட்டுவோம். வணங்க வேண்டாம். கூழை கும்பிடும், குருட்டு பக்தியும் சமூதாயத்தின் புற்று நோய்கள். இவை இல்லாமல் போக வாய்ப்பில்லை. குறைந்து போக செய்யலாம்

5) சாதீய, மத கூறுகள் எல்லா இடங்களிலும் உள்ள நிலையில் அவை இல்லாமல் போவது நடைமுறைக்கு ஆகாத ஒன்று. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி கூடங்களில் மதம் பற்றிய பாடங்கள் நிறுத்தப் படவேண்டும். குழந்தைகள் ஆண்டவனை பற்றி தெரிந்து கொள்ள அம்மாவும், அப்பாவும் போதும். மதம் தனி மனிதனையோ , குழுவையோ சார்ந்தது. அதற்கு அரசின் வரிப்பணம் வேண்டாம். அரசுக்கும் வழிப்பாட்டு தலங்களும் உள்ள தொடர்பு தொல் பொருள் துறையோடு நின்றால் போதுமானது. எல்லா மதங்களையும் மதிக்க தெரிந்த தலைவர்கள் வர வேண்டும். அவரவர் வழிப்பாடு அவரவர்க்கு. அரசு மதம், கடவுளுக்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களது விவரங்கள் அரசு பதிய வேண்டும். பதியும் போது அவர் முற்படுத்த பட்டவரா, பிற்படுத்த பட்டவரா, மிக பிற்படுத்தபட்டவரா, அதற்கும் அடுத்த நிலையில் உள்ளவரா என்ற விவரங்கள் மட்டும் பதிந்தால் போதுமானது. அவரது குலம், கோத்திரம் போன்றவற்றை பதிய தேவையில்லை. ஒவ்வொரு பிரிவினருக்கும் குறிப்பிட்ட டார்கெட் வைத்து அவர்கள் முன்னேறத்தை கண்டறியலாம். கல்வி, அரசு பதவிகளில் வேலை வாய்ப்பு போன்றவை தொடர்ந்து கவனிக்கப்பட்டு அவர்களது தேவையறிந்து அவர்கள் மேல் நோக்கி நகர உதவலாம். குறிப்பிட்ட பிரிவினர் அவர்களது இலக்கை அடைகையில் அந்த பிரிவில் உள்ளோர் அதற்கு மேல் பிரிவில் இணைக்க வைக்கலாம்.
இது சாதீயத்தின் தாக்கம் குறைக்க உதவும்.

இவை வீக்கத்தை குறைக்க சில படிகள் என்பது என் கருத்து

said...

//'கம்யூனிசம் சரியானது, கம்யூனிஸ்ட்கள் தவறானவர்கள்' என்பது அடிக்கடி கேள்வி பட்ட ஒரு சொலவடை, அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கின்றது.//

என்கிற கருத்து ஏற்புடையது அல்ல. இன்றுள்ள சி.பி.ஐ., சி.பி.அய்.எம், என்ற இரண்டு கட்சிகளின் செயல்களை வைத்து மட்டுமே பல நண்பர்கள் "கம்யூனிஸ்ட்கள் தவறானவர்கள்" என்று பேசி வருகிறார்கள்.

சில இயக்கங்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை என்பதாலேயே அவை அறியப்படாமல் உள்ளன.

எனவே, பொதுவுடைமையாளர்கள் பற்றி தங்களைப் போன்றோர்களால் பொதுப்படையாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் சரியானதல்ல என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

said...

நல்ல கருத்து தான். ஆனால் Karl Marx socialismதை தவறாக interpret செய்தவர்களே அதிகம். பூமியில் ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாதது. ஆனால் அதிக அளவு வித்தியாசங்கள் இருப்பது நல்லது இல்லை.

said...

//இப்போதைய ரஷ்யாவையே எடுத்துக் கொள்வோம். 1991-ல் சோவியத் யூனியன் வீழ்ந்தபோது கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஒரே பொருளாதார நிலை. இப்போது? தன் முனைப்பு உள்ளவன் முன்னேறி கோடீஸ்வரன் ஆகிறான். இல்லாதவன் அப்படியே இருக்கிறான்.//

கோடீஸ் வரர்கள் உடல் உழைப்பால் உருவானார்களா அடுத்தவர்கள் உழைப்பை திருடிதான் உருவாகியிருக்கமுடியும் மற்றவர்களின் பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இருப்பார்கள்