கம்யூனிசம் எனது பார்வையில்

கம்யூனிசத்தை பற்றி எழுதும் அளவிற்கு கம்யூனிச கொள்கைகளை அதிகம் படித்தவன் இல்லை நான். எனவே இது எனது பார்வை மட்டுமே

சமீபத்தில் சிங்கப்பூரில் ஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரையும் கிட்டத்தட்ட அதே சமயத்தில் எமக்கு வந்த ஒரு புள்ளிவிவர மின்மடலும் இந்த பதிவெழுத தூண்டியவை.

ஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த புள்ளிவிவரம் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா,சிங்கப்பூர்,இந்தியா மற்றும் சில நாடுகளின் தனி நபர் சராசரி வருமானம், கடைசி 5% மக்களின் சராசரி வருமானம், முதல் 5% மக்களின் சராசரி வருமானம் பற்றிய ஒரு விவரம்.


அதில் புலப்படும் உண்மையென்னவெனில் ஆண்டு தோறும் எல்லா நாட்டு மக்களின் தனி நபர் சராசரி வருமானம் உயர்ந்து கொண்டே செல்கின்றது, அதே சமயத்தில் கடைசி 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் குறைந்து கொண்டே வருகின்றது. முதல் 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் மிக அதிக அளவில் அதிகரிக்கின்றது.

மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் பொழுது முதல் 5% இருப்பவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் சம்பாதித்தது 27$, தற்போதைய நிலை மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் நேரத்தில் இவர்கள் சம்பாதிப்பது 200$, அமெரிக்காவில் முதல் 0.12%ல் இருப்பவர்கள் மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் சம்பாதித்தது 200$ தற்போது 17,000$

இவைகள் சொல்லும் செய்தி என்னவெனில் உலகளாவிய அளவில் பணக்காரம் மேலும் பணக்காரன் ஆகின்றான், ஏழை மேலும் ஏழையாகின்றான். நாளுக்கு நாள் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

'கம்யூனிசம் சரியானது, கம்யூனிஸ்ட்கள் தவறானவர்கள்' என்பது அடிக்கடி கேள்வி பட்ட ஒரு சொலவடை, அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கின்றது. நம்மால் கம்யூனிசம் என்றால் தொழிற்சங்கங்கள், ரஷ்யா, சீனாவைத் தாண்டி அதற்கு வெளியில் யோசிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். அல்லது யோசிக்க வேண்டாமென இருக்கின்றோம்.

கம்யூனிசம் நான், எனது என்ற தளத்தில் இயங்காமல் நாம்,நமது என்ற தளத்தில் இயங்குகின்றது. முன்னேற்றம் என்பது தனி நபர் முன்னேற்றம் என்று இயங்காமல் கூட்டு முன்னேற்றம் என்று இயங்குகின்றது. இதன் பொருள் தனியாக முன்னேறும் ஒருவனை பின்னோக்கி இழுப்பதல்ல, கூட்டாக அனைவரும் முன்னேறுவது, தனி முன்னேற்றம் என்ற நிலை வரும்போது பொறாமை, தான் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் மற்றவர்களின் முன்னேற்றத்தில் மண் அள்ளிப்போடுவது, அலுவலகங்களில் நடைபெறும் கூஜா தூக்குதல், ஜால்ரா அடித்தல், காக்கா பிடித்தல் என்று இது எல்லாவிதமான அசிங்கமான முகங்களையும், உத்திகளையும் கடைபிடிக்கின்றது.

முதலாளித்துவத்தில் பெரும் பொருள் ஈட்ட வேண்டும், இலாபக்குறியீடு வருடா வருடம் ஏற வேண்டுமென்ற நோக்கில் மனிதாபிமானமற்ற, அன்எதிக்கல் முறைகளையெல்லாம் கையாள்கின்றனர், அவுட்சோர்சிங் என்ற முறையிலே இன்று பல வேலைகள் வெளிநாட்டிற்கு குறிப்பாக இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றன, அதனால் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருகுவதும் என்னைப்போன்ற பலர் நல்ல சம்பளம் பெறுவதும் நடைபெறுகின்றது, அவுட்சோர்சிங் செய்பவர்களின் நோக்கம் நல்ல இலாபம் ஈட்டுவது மட்டுமே, இந்தியாவைவிட குறைந்த செலவில் யாரேனும் செய்து தர தயாராக இருந்தால் இந்தியாவை விட்டு அங்கே சென்றுவிடுவர், ஆனால் இந்த அவுட்சோர்சிங் முறையால் வேலையிழந்த அந்த நாட்டுக்காரர்களின் நிலை என்ன?? அந்த நிறுவனத்தின் இலாபக்குறியீடு ஏறிக்கொண்டே செல்லும் அதனால் ஒரு சில பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள், ஆனால் தொழிலாளிகள் நிலை ஒரு பெரிய ? இது தான் முதலாளித்துவத்தின் கோர முகம்.

கம்யூனிசம் இந்த இடத்தில் வெறும் இலாப நோக்கை மட்டும் பார்ப்பதில்லை. சமூக பொறுப்போடும் மனிதாபிமானத்தோடும் செயல்படுகின்றது இரஷ்யாவில் கம்யூனிசம் இருந்த போது ஏழை பணக்காரர்களுக்கிடையேயான இடைவெளி குறைவாக இருந்தது ஆனால் இன்றைய நிலை??, கம்யூனிசமே பரவாயில்லை என்ற நிலை அங்கே, கம்யூனிசம் இருந்த போது கிடைந்த அடிப்படை தேவைகள் வசதிகள் கூட அங்கே தற்போது பெரும்பாலான மக்களுக்கு கிடைப்பதில்லை, விளைவு இன்று வளைகுடா நாடுகளின் கேளிக்கை விடுதிகள் சில இரஷ்ய பெண்களால் நிரம்பி கிடக்கின்றன,பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கின்றன.

இரஷ்யா சிதறுண்டதும், அங்கே கம்யூனிசம் தோல்வி அடைந்ததும் கம்யூனிசத்தின் தோல்வி என்பதல்ல, அது கம்யூனிசத்தின் வெற்றிதான், சில/பல சமயங்களில் எளிதாக கிடைக்கும்போதும் அனுபவிக்கும் போதும் அதன் பெருமை தெரியாது, வேறொன்றிற்கு ஆசைப்பட்டு அதை இழந்து உள்ளதும் போனதடா நொள்ளக் கண்ணா என்றிருக்கும்போது தான் அதன் பெருமை தெரியும், அந்த நிலைதான் இன்று இரஷ்யாவின் நிலை. இது ஒரு வகையில் கம்யூனிசத்தின் வெற்றிதான்.

கம்யூனிசம் பற்றி பேசும் போது வைக்கப்படும் சில வறட்டு வாதங்கள்

1. கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

1. கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

எல்லோரும் சமம் என்ற இடத்திலே பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு உள்ள அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லையே என்று வைக்கப்படும் மொக்கை வாதம் மிக நகைப்புக்குறியது

என் குடும்பத்தில் என் அண்ணன், அக்காள், என் தாய், தந்தைக்கு இருக்கும் அதிகாரங்கள் எனக்கு இருக்காது என்பது உண்மை, அது அவர்களுடைய அனுபவத்தாலும் உரிமையாலும் எனக்காக உழைப்பதாலும் நான் அவர்களுக்கு தர வேண்டியது என் கடமை.

எனக்காக உழைக்கும், நான் தேர்ந்தெடுத்த முதல்வர், என் நேரத்தைவிட அதிக மதிப்புடைய அவர் நேரத்தை சேமிக்கும் நோக்கிலும் பாதுகாப்பு மற்றும் இன்ன பல காரணங்களுக்காகவும் (இதற்கெல்லாம் அவர்களுக்கு தகுதி உண்டா என்பது வேறு விடயம்) தரப்படும் சலுகைகளும் அதிகாரங்களையும் குறை சொல்வது என்பதை எப்படி விவரிப்பது என்றே எனக்கு புரியவில்லை.

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

நாமெல்லாம் மனித சமுதாயம் தானே? விலங்கினம் இல்லையே? வலுத்தவன் வாழ்வானென்றால் பின் எதற்கு காவல்துறை, பின் எதற்கு சட்டம், நீதி, இராணுவமெல்லாம்.

வலுத்தவன் வாழ்வானென்ற நீதி விலங்கினத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் ஒரு நாகரீகமான, மனித சமுதாயத்திற்கு இது சரியா?

வலுத்தவன் வாழ்வானென்றால் ஒரு பத்து ரூபாய் வைத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் என்னால் இறங்கமுடியுமா? சென்னையில் என்னை விட உடல் பலத்தில், அரசியல் பலத்தில், ஆள் பலத்தில், பண பலத்தில் அதிகம் உள்ளவர்கள் இல்லையா?

வலுத்தவன் எது வேண்டுமானாலும் செய்வானென்றால் வீட்டுப்பெண்கள் சாலையிலே நடமாடமுடியுமா?? அல்லது நாம் தான் சுதந்திரமாக இருக்க முடியுமா?

நாமெல்லாம் மனித சமுதாயத்தில் இருக்கின்றோம், விலங்கினத்திலிருந்து இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக மாறிவிட்டோம், உடல் வலுவை மட்டும் நான் குறிக்கவில்லை, பொருளாதார வலிமையயும் சேர்த்து தான், எனவே அந்த காலத்திலேயே இருக்காதீர்கள்.

உலகாலாவிய அளவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக்கொண்டே போவது நல்லதற்கல்ல, முதலாளித்துவத்தின் சைடு எபெக்ட் தற்போதுதான் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்துள்ளது, இது முழுதாக வெளிப்படும் போது உலகலாவிய அளவில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும், அந்நிலையில் சிற் சில மாற்றங்களோடு கம்யூனிசம் பரந்து பட்டு இருக்கும்.

20 பின்னூட்டங்கள்:

said...

"கம்யூனிசம் இந்த இடத்தில் வெறும் இலாப நோக்கை மட்டும் பார்ப்பதில்லை. சமூக பொறுப்போடும் மனிதாபிமானத்தோடும் செயல்படுகின்றது இரஷ்யாவில் கம்யூனிசம் இருந்த போது ஏழை பணக்காரர்களுக்கிடையேயான இடைவெளி குறைவாக இருந்தது"

எல்லோருமே ஏழைகளாகத்தான் இருந்தார்கள். தனியார் சொத்து தடைபட்டிருந்தது. கம்மிஸ்ஸார்கள் தவிர எல்லோருக்கும் கஷ்ட ஜீவனம்தான். அப்போது கூட விவசாயிகள் சிறு அளவில் சொந்தமாகப் பயிர் செய்து லாபம் ஈட்ட முடிந்தது. அது அனுமதிக்கப்பட்டது கூட கூட்டுப்பண்ணைகளில் ஏற்பட்ட உற்பத்திக் குறைவே ஆகும். பத்திரிகைத் தணிக்கை அமுலில் இருந்த நாட்களில் எல்லாமே சுபிட்சமாக இருப்பது போன்ற செயற்கைச் செய்திகளே வெளியில் வந்தன. அதை உண்மை என்று நம்பிய நம்மூர் கம்யூனிஸ்டுகள் ஆட்டம் போட்டார்கள். அது வேறு கதை. உண்மை என்னவென்றால் சோவியத் யூனியன் திவாலானதாலேயே மறைந்தது.

1992-ல் மக்கள் எல்லோரும் ஏறத்தாழ ஒரே பொருளாதார நிலையில்தான் (திவால்) இருந்தனர். இப்போது? நீங்களேதான் பார்க்கிறீர்களே.

சீனா இக்கொள்கையை விட்டதும்தான் முன்னேறி வருகிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

இன்று மிகவும் லேட்டாகிவிட்டதால், இரண்டு நாளில் எதிர்பாருங்கள் :

© கம்மூனிஸ்டு - 8 வரி கவிதை

said...

//எல்லோருமே ஏழைகளாகத்தான் இருந்தார்கள். தனியார் சொத்து தடைபட்டிருந்தது.//

தனியார் சொத்து தடைபட்டிருந்ததால், தனியாரிடம் ஒரு சேரக் குவியும் சொத்துகள் அனைத்தும் பொதுச் சொத்தாகத்தானே ஆகியிருக்க வேண்டும். பொதுச் சொத்து என்று வரும்போது அந்த நாட்டின் குடிமக்கள் அனைவருமே அந்தச் சொத்திற்குச் சொந்தக்காரர்தாமே... அப்படிப்பார்த்தால் அவர்கள் ஏழைகள் அல்லவே!

இல்லை அந்த நாட்டின் மொத்த பொருளாதாரமும் ஏழ்மையாகத்தான் இருந்தது என்று கூறுகிறாரா? சற்று விளக்கவும்.

(எனக்கும் கம்யூனிஸ கொள்கைகளைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது..... எனக்குத் தெரிந்த கம்யூனிசமெல்லாம் அன்பே சிவம் ''நல்லா'' கேரக்டர்தான்.... ஹி..ஹி)

குழலி சார் இப்படி மற்ற கட்சிகளைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பா.ம.கவின் நிலை!!!)

said...

//சீனா இக்கொள்கையை விட்டதும்தான் முன்னேறி வருகிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?//
ஸ்ட்ரைட் டைம்ஸ்ன் புள்ளிவிவரத்தில் சீனாவும் இருந்தது அங்கேயும் அதே நிலைதான். தனி நபர் சராசரி வருமானம் உயர்ந்த போதிலும் ஏழைகளின் சராசரி வருமானம் குறைந்துள்ளது, இதற்கு காரணம் நீங்கள் கூறிய அதே முன்னேற்றம் தான்.

மொத்த சமுதாயமும் முன்னேறினால் தான் அது முன்னேற்றம், வெகு சிலர் மட்டும் முன்னேற மொத்த சமுதாயத்தையும் பலியிடுதல் தான் தற்போது நடந்து கொண்டுள்ளது, அதற்கு பெயர் முன்னேற்றம் அல்ல வீக்கம்.

நம் சந்தையை உலகத்திற்கு திறந்த போது சிலிக்கான் சிப்புகளை எதிர்பார்தோம் வந்ததென்னவோ உருளைக்கிழங்கு சிப்ஸ் தான்

said...

//கம்மிஸ்ஸார்கள் தவிர எல்லோருக்கும் கஷ்ட ஜீவனம்தான். //
இன்று கம்யூனிசமே இருந்திருக்கலாம் என்ற புலம்பல் இரஷ்ய மக்களிடம் ஒலிப்பதன் காரணம் என்ன? தற்போது இரஷ்யாவில் இருக்கும் நண்பர் இராமனாதன் இதைப்பற்றி கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்.

நன்றி

said...

முக்கியமான புள்ளி விவரங்களை வைத்து எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள், அதனால் சில கருத்துக்களுக்கான வாதம் ரொம்ப எளிமையாக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் நல்ல முயற்சி. இந்தித் திணிப்பு எதிர்ப்பு - ஆதரவு , நாத்திகம் - ஆத்திகம் போன்ற பிரசினைகள் போல சலிப்பைத் தரும் விவாதம் இது. அதனால் வழக்கம் போல இங்கும் மொன்னைத்தனமான குத்துக்கள் விழும். அதில் என் பங்குக்கு சில :-)

கம்யூனிஸத்தின் வெற்றியும் - தோல்வியும் கூட பெரும்பாலும் தனி மனிதனின் சிந்தனைத் தளத்தில் நிகழும் மாற்றங்களில் ஆரம்பிக்கின்றன.

"மற்றவர்கள் என்னுடன் கம்யூனிஸ்டாக இருக்க (பகிர்ந்து கொள்ள) வேண்டியது கட்டாயமாக இல்லாவிடினும் மனிதாபிமான அடிப்படையிலான எதிர்பார்ப்பு. ஆனால் என் உழைப்பில் மட்டுமே சம்ப்பதிக்காத பொருளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனிதாபிமானம் இல்லை, அது என்னுடைய சுதந்திரம் மீறல்"

"நான் வறுமையால் வாடினால் எனக்கு வயிறுதான் முக்கியம், அதனால் நான் கம்யூனிஸத்தை ஆதரிப்பேன் - எனக்கு வசதி வந்த பிறகு, சுதந்திரம், அழகுணர்ச்சி, கலையுணர்ச்சி போன்றவைதான் முக்கியம், மனிதாபிமானம் என்பது போனால் போகட்டும் என நான் காட்டும் பெருந்தன்மை"

இந்தமாதிரியான மனமாற்றங்களோடு கம்யூனிஸ்டுகள் என்ற லேபிளை வைத்துக் கொண்டே கூட வாழ்கின்றனர்.

நீங்கள் சொல்வது போல பொலிட்பூரோக்கள் எல்லாம் யோக்கியம் இல்லை. ஏட்டில் படித்த கருத்துக்களை எந்தவிதமான மறுபரிசீலனையின்றி பிடித்துக் கொண்டும், யதார்த்ததைப் புரிந்து கொள்ளாமல் வறட்டுத் தனமாகப் பேசிக் கொண்டும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் தங்களின் சர்வாதிகாரத்தைக் காட்டியும் மக்களிடமிருந்து விலகியே இருக்கிறார்கள். ஜார்ஜ் ஆர்வெல்லின் "விலங்குப் பண்ணை" எந்த நோக்கில் எழுதப் பட்டாலும் பொலிட்புரோக்களின் மீதான சிந்திக்க வைக்கக் கூடிய பழைய விமர்சனம்.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிகளை மற்ற எல்லாக் கட்சிகளை விடவும் நான் ஒரு படி மேலே மதித்தாலும், கம்யூனிஸ்டு சித்தாந்ததைப் பொறுத்தவரை அவர்கள் படுதோல்விகள் என்று சொல்வேன். சங்க பரிவாரத்தின் கொள்கை அமைப்புக்களுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் உள்ள நல்லுறவைப் பாருங்கள். கம்யூனிஸக் கொள்கையமைப்புகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ள தொடர்பறுந்த நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிகளின் இலட்சணம். வரவர ராவ், கத்தர் போன்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் கூட கைது செய்யப் பட்டிருக்கின்றனர், கம்யூனிஸ்டுக் கட்சிகளிடமிருந்து எந்த பெரிய எதிர்ப்பையும் காணோம்.

கம்யூனிஸத்தின் நன்மை, தீமைகளைப் பற்றிய திறந்த விவாதம் மிக அவசியம். அவற்றைப் பற்றி ஏற்கனவே பல விவாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தற்போதுள்ள பேராசை கொண்ட உலகத்தில், கம்யூனிசத்தின் முக்கிய நன்மையாகக் கருதுவது - அல்லது முதலாளித்துவத்தின் மிகப்பெரிய தீமையாகக் கருதுவது - சுற்றுப் புறச் சூழல் நாசம்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

said...

நன்றி சொ.சங்கரபாண்டி, தங்களின் பின்னூட்டம் சிந்திக்க வைக்கின்றது. பொலிட்பீரோ உறுப்பினர்களும் சரி கம்யூனிஸ்ட் கட்சிகளும் சரி கம்யூனிசத்தை கடைபிடிப்பதில் பல இடங்களில் தோல்வியை தழுவியுள்ளனர் அதனால் தான் கம்யூனிஸ்ட் கட்சியைப்பற்றி அதிகம் பேசவில்லை.

நன்றி

said...

//சுற்றுப் புறச் சூழல் நாசம்.//
என சந்ததிக்கு நான் தரும் உலகம் குப்பைமேடுதான் போல, நீர், காற்று நிலத்தை மாசுபடுத்தியது போக தற்போது வின்வெளியையும் மாசு படுத்த ஆரம்பித்தாகிவிட்டது.

நன்றி

said...

காரல் மார்க்ஸ்:
இன்றைய காலத்திற்கேயுரிய வழிகாட்டி
கையில் நயாபைசா இல்லாமல் புலம் பெயர்ந்து வந்து இலண்டன் மாநகரில் தஞ்சம் புகுந்த ஒரு அகதியை வசைபாடுவதற்கும், அவர் மீது பழிதூற்றுவதற்கும் இரண்டு முழுப் பக்கங்களைச் செலவிட்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் வலதுசாரிப் பத்திரிகையின் சென்ற வார இதழ். 'அகதி' என்ற சொல்லைக் கேட்டாலே வலதுசாரிகளுக்கு உடம்பெல்லாம் எரியும் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான். எனினும் தாக்குதலுக்கு ஆளான இந்த அகதி இருக்கிறாரே, அவர் தற்போது உயிருடன் இல்லாதவர். அதாவது, 1883இலேயே இறந்து விட்டவர்.

ஆம்! 'மார்க்ஸ் எனும் அரக்கன்' என்பதே மேற்படி கட்டுரையின் தலைப்பு. பி.பி.சி. 'ரேடியோ 4' அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்ததுதான் இந்த வெறிகொண்ட எதிர்வினைக்குக் காரணம்.
''ஸ்டாலின், மாவோ, போல்பாட், முகாபே போன்ற கொலைகாரச் சீடர்களை உருவாக்கிய ஒரு மனிதனை உலகின் தலைசிறந்த தத்துவஞானியாக எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?'' இது அந்தப் பத்திரிகை எழுப்பியிருக்கும் கேள்வி.

இந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் புரிந்து கொள்ளத் தக்கதே. 15 ஆண்டுகளுக்குமுன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்த பின், ''மார்க்ஸின் கதை இதோடு முடிந்தது'' என்றொரு கருத்து பொதுவாகப் பரவியிருந்தது. ''அவர் செத்துவிட்டார், லண்டன் கல்லறையில் எஞ்சியிருக்கும் அவரது உடலின் எச்சங்கள் பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்குக் கீழ் நிரந்தரமாகப் புதைக்கப்பட்டு விட்டன. யாரும் அவரைப் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை; அவரது சிந்தனைகளை இனி படிக்கவே தேவையில்லை'' என்பதே அந்தப் பொதுக் கருத்து.

பனிப்போர் முடிவுக்கு வந்த அந்த காலகட்டத்தில் ஃபிரான்சிஸ் ஃபுகுயாமா கூறினார், ''நாம் கடந்து சென்று கொண்டிருப்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டமல்ல நாம் காண்பது வரலாற்றின் முடிவு. மனித குலத்தின் சித்தாந்த வளர்ச்சிக்கே எல்லை இதுதான். இத்துடன் முடிந்தது'' இது அவரது பிரகடனம்.

வரலாறோ திரும்பியது ஒரு வன்மத்துடன் விரைவிலேயே திரும்பியது. 1998 ஆகஸ்டில் ரசியாவின் பொருளாதாரம் கற்பூரமாய்க் கரையத் தொடங்கியது. ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகள் தலைகுப்புறக் கவிழ்ந்தன. உலகச் சந்தை முழுதும் பீதி பரவத் தொடங்கியது.

''உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டி பத்தாண்டுகள் கூட ஆகவில்லையே! அதற்குள்ளாகவா நாம் நெருக்கடியில் சிக்கிவிட்டோம்?'' என்று தனது அதிர்ச்சியை வெளியிட்டது லண்டனின் ''ஃபைனான்சியல் டைம்ஸ்'' பத்திரிகை. அந்தக் கட்டுரையின் தலைப்பென்ன தெரியுமா? ''டாஸ் காபிடலை (மார்க்சின் ''மூலதனம்'' நூலை) இன்னொரு முறை புரட்டிப் பார்ப்போம்!''
முதலாளித்துவ அமைப்பினால் பெரிதும் ஆதாயம் அடைந்தவர்கள் கூட ''நம்முடைய வண்டி தொடர்ந்து ஓடுமா?'' என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினார்கள்.

''தானும் தன்னையொத்த முதலாளிகளும் தங்களது மந்தை மனப்பான்மையை கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால், இந்த மந்தையின் காலடியில் எல்லோரும் மிதிபட்டுச் சாகவேண்டியதுதான்'' என்று எச்சரிக்கை செய்கிறார், மிகப் பெரும் கோடீசுவரனும் ஊகச்சந்தை வணிகனுமான ஜார்ஜ் சோரோஸ்.
''முதலாளித்துவ அமைப்பைப் பற்றி நம்முடைய செவ்வியல் பொருளாதார வல்லுனர்கள் கூறும் சமநிலைக் கோட்பாட்டைக் காட்டிலும் சிறந்த முறையிலான ஆய்வை 150 ஆண்டுகளுக்கு முன்னரே மார்க்சும் எங்கெல்சும் வழங்கியுள்ளனர் என்று நிச்சயமாக என்னால் கூற முடியும்.''

''அச்சுறுத்தும் வகையில் கூர்மையான அவர்களது ஊகங்கள் உண்மையாகாமல் போனதற்குக் காரணம் இருக்கிறது. ஜனநாயக நாடுகளில் (கம்யூனிச அபாயத்தைத் தடுக்க) எதிர்நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீடுகள்தான் அதற்குக் காரணம். வரலாறு நமக்குப் பாடம் கற்பித்திருக்கிறது. அந்தப் பாடங்களிலிருந்து கூடத் தவறான முடிவுகளுக்கு மட்டுமே நாம் வருகிறோம். இன்னொரு முறை இதே தவறை நாம் செய்யும் அபாயம் இருக்கிறது. இந்த முறை அபாயம் கம்யூனிசத்திடமிருந்து வரவில்லை சந்தை கடுங்கோட்பாட்டுவாதம்தான் இன்று நமக்கெதிரான அபாயமாகும்.''

இவையெல்லாம் உலகின் மிகப் பெரும் ஊகச்சந்தை வணிகனான ஜார்ஜ் சோரோஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கள்

'நியூயார்க்கர்' பத்திரிகையின் வணிகத்துறைச் செய்தியாளர் ஜான் காசிடி, ஒரு முதலீட்டு வங்கியின் முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அந்த உரையாடலைப் பற்றி அக்டோபர் 1997இல் எழுதினார். ''வால் தெருவில் (நியூயார்க்கின் பங்குச் சந்தைத் தெரு) நான் எந்த அளவிற்கு நேரத்தைச் செலவிடுகிறேனோ, அந்த அளவிற்கு மார்க்ஸ் கூறியது சரிதான் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். முதலாளித்துவத்தை ஆய்வு செய்வதற்கு மார்க்ஸ் மேற்கொண்ட முறைதான் சரியானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை'' என்று சொன்னாராம் அந்த வங்கி முதலாளி.

மார்க்சின் நூல்களை இதுவரை படித்திராத செய்தியாளர் காசிடி, ஆவலை அடக்கமாட்டாமல் முதன்முறையாக மார்க்சைப் படித்தாராம். ''உலகமயமாக்கம், ஏற்றத்தாழ்வுகள், அரசியல் ஊழல், ஏகபோகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கலாச்சாரத்தின் வீழ்ச்சி, தொடர்ந்து உயிர்த்துடிப்பை இழந்து வரும் நவீன வாழ்க்கையின் தன்மை இவை பற்றியெல்லாம் ஆணி அடித்தாற்போலப் பேசும் மார்க்சின் எழுத்துக்களைக் கண்டேன். இதே விசயங்களைத்தான் இன்றைய பொருளாதார வல்லுனர்கள் ஏதோ புதிய பிரச்சினைகளாகக் கருதி எதிர்கொண்டு வருகிறார்கள். சில நேரங்களில், மார்க்சின் கால்தடம் பதிந்த பாதையில்தான் செல்கிறோம் என்பதை அறியாமலேயே அந்தப் பாதையிலும் நடக்கிறார்கள்'' இவை மார்க்சைப் படித்தபின் நியூயார்க்கர் இதழில் காசிடி எழுதிய கருத்துக்கள்.
முதலாளி வர்க்கம் இன்னும் சாகவில்லை. மார்க்சும்தான் சாகவில்லை. முதலாளித்துவத்தைப் பற்றிய அவரது கணிப்புகளில் சில நிறைவேறாமல் போயிருக்கலாம்; அவர் தவறிழைத்திருக்கலாம். ஆனால், முதலாளித்துவம் என்ற மிருகத்தின் இயல்பை வெளிக் கொணர்ந்து காட்டிய அவரது ஆய்வின் கூர்மை இருக்கிறதே அந்த ஊடுருவிச் செல்லும் கூர்மை அது அவரது கணிப்பில் நேர்ந்த சில பிழைகளையெல்லாம் புறந்தள்ளிக் கடந்து சென்றுவிட்டது.

கம்யூனிஸ்டு அறிக்கையில் அவர் எழுதினார்: ''ஓயாது ஒழியாது உற்பத்தியில் ஏற்படும் புரட்சிகர மாற்றங்களும், சமூக உறவுகள் யாவும் இடையறாது அமைதி குலைதலும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்பும் முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய எலலா சகாப்தங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றது.''

சமீப காலம் வரையிலும் இங்கிலாந்தில் பலர் தம் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையில் தொடர்ந்தார்கள்; அல்லது ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினார்கள். ஆனால் இன்று? அப்படி யாரையாவது நாம் காட்ட முடியுமா? மார்க்ஸ் கூறியதைப் போல, ''திடப்பொருட்கள் எல்லாம் காற்றில் கரைகின்றன'' அல்லவா?

உண்மையில் மனிதனுக்கு மட்டுமே உரியவையாக இருக்கும் அனைத்தும் சரக்காக, உயிரற்ற சடப்பொருளாக உறைந்து போவதையும், அந்தச் சரக்கானது, பேராற்றலையும் உயிர்த்துடிப்பையும் பெற்று, தன்னை உற்பத்தி செய்த மனிதர்களையே கொடுங்கோன்மைக்கு ஆளாக்குவதையும் தனது தலைசிறந்த படைப்பான மூலதனத்தில் மார்க்ஸ் நிரூபித்துக் காட்டுகிறார்.

நம்முடைய வாழ்க்கையை ஆளும் சக்திகளைப் பற்றியும், அவை நம் வாழ்வில் தோற்றுவிக்கும் நிச்சயமின்மை, அந்நியமாதல், சுரண்டல் போன்றவை பற்றியும் மார்க்ஸ் வழங்கியுள்ள சித்தரிப்பு இன்னும் எதிரொலித்த வண்ணம்தான் இருக்கிறது; அது உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்தே தீரும். பி.பி.சி. வானொலியின் கருத்துக் கணிப்பு காட்டும் உண்மை இதுதான்.

பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்கு அடியில் மார்க்ஸ் புதைக்கப்பட்டு விட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை. இப்பொழுதுதான் தனக்குரிய உண்மையான முக்கியத்துவத்துடன் அவர் எழுந்துவரப் போகிறார். இதனைப் புரிந்து கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியாமல் வலதுசாரிப் பத்திரிகைகள் என்னதான் ஊளையிட்டாலும், 21ஆம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க சிந்தனையாளராக உருவெடுக்கப் போகிறார் கார்ல் மார்க்ஸ்.

- ஃபிரான்சிஸ் வீன்
('கார்ல் மார்க்ஸ்' என்ற வாழ்க்கை
வரலாற்று நூலின் ஆசிரியர்.)
லண்டனிலிருந்து வெளிவரும்
கார்டியன் பத்திரிகையில்
வெளியான கட்டுரை.
'இந்து' நாளேட்டிலிருந்து (22.7.05)
மொழியாக்கம்
செய்யப்பட்டுள்ளது.
நன்றி பதியஜனநாயகம்
பி.இரயாகரன்
20.08.2005
www.tamilcircle.net

said...

ஏதோ மேலோட்டமா தேர்தல் அரசியல் பேசினோமா முகமூடிகளோட கிச்சு கிச்சு விளையாடினோமான்னு இல்லாம
"தீப்பிடிக்கத் தீப்பிடிக்க" பதிவு போடறீங்களே, குழலி..

நீங்க போட்ட பதிவுக்கு தொடர்பு இருக்கா இல்லையான்னு தெரியலே.. இதற்கும் மார்க்சீயத்திற்கும் தொடர்பு இருக்கான்னும் எனக்குத் தெரியலீங்க. ஆனா ஒரு சம்பவம்..

1996..பார்லிமெண்டு தேர்தல் முடிஞ்சிருச்சு.. ஜோதிபாசு ஜோதிபாசுன்னு ஒருத்தரை பிரதமராக்கணும்னு எல்லாக் கட்சிக்காரங்களும் சொல்லறாங்க.. இவர் 1977 இலேர்ந்து தொடர்ந்து 2000 வரைக்கும் மேற்கு வங்க முதல்வரா இருந்தவராம்.. ஹர்கிஷன்சிங் சுர்ஜீத்னு ஒருத்தர்..அவர் அந்த சி.பி.எம். கட்சியோட அகில இந்திய பொதுச் செயலராம். அதாவது கட்சில அதிகாரம் நிறைஞ்ச இந்த ரெண்டு பேரும் சேர்ந்து ஜோதிபாசு பிரதமராக சம்மதிச்சிடலாம்னு பொலிட்பீரோவோ அனிமல் பார்மோ ஏதோ ஒண்ணு..அங்கே சொன்னாங்களாம். அவங்க அந்தக் கோரிக்கையை நிராகரிச்சுட்டாங்களாம்.

ஆகா. இந்த பொலீட்பீர் சாப்பிடறவங்கதானே அதிக அதிகாரத்தோட இருக்காங்க..நாம அடுத்தாப்பில செண்ட்ரல் கமிட்டி அல்லது மத்தியக்குழுவில பேசிப்பார்ப்போம்னு பதவி ஆசை கொண்ட அல்லது அதிக அதிகாரத்துக்கு அலையற சுர்ஜித்தும் ஜோதிபாசுவும் மத்தியக் குழுவுக்குப் போனாங்களாம்..அடப்பாவமே..அங்கன இருந்தவுகளும் இந்த ஜார்ஜ் ஆர்வெல் எழுதின அனிமல் பார்ம்ல இருக்கற பன்றிகள மாதிரித்தான் இருந்திருக்காங்க..அவங்களும் இந்தப் பெரியவங்க சொன்னதைக் கேட்கலையாம். மத்திய அமைச்சரவையிலேயே நாம் பங்கேற்கக் கூடாது, அப்படி இருக்கும்போது பிரைம் மினிஸ்டர் பதவி நமக்கெதுக்குன்னு தூக்கி வீசிட்டாங்களாம்.

இதை விலங்குப் பண்ணையில் இருக்கற விலங்குகள்லாம் ஜனநாயகம்னு சொல்லுமா இல்லே கட்சியைக் கூட கட்டுப்பாட்டுல வைச்சுக்கத் தெரியாத பெரிசுங்கன்னு சொல்லுமா எனக்குத் தெரியலீங்க.

நம்ம ஊர்ல என்ன நடக்கும்..நமக்கு பகுத்தறிவு இருக்கு..சுயமரியாதை இருக்கு.. நாம நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் பதவியே வேண்டாம்னு சொல்லுவோம். ஆனா கட்சிக்காரங்க எல்லோரும் சேர்ந்து பதவி அவசியம்னு சொல்லி நம்மைக் கட்டாயப்படுத்திடுவாங்க..ஆனா அதிக அதிகாரம் நம்ம உடன்பிறவா நட்பு கிட்டேயோ, நம்ம மருமகன், மகன், பேரன் கிட்டேயோ இருக்கலாம்..பொலீட் பீர் கிளப் மெம்பர்ஸ் கிட்டே இருக்கவே கூடாது..அவங்க மக்களோட மலத்த வாழையிலையில அள்ளிப் போடணும்..குடிச்சுட்டு ரோட்ல கிடக்கிறவனை வீடு தேடிக் கொண்டு போய் சேர்க்கணும்..
தேர்தல் வந்தா ஊரை அடிச்சு உலையில போடறவனுக்கு டீயைக் குடிச்சுட்டு கைக் காசை செலவு பண்ணி உழைச்சுட்டு அவன் ஜெயிச்சு வந்தவுடனே அவனை எதுத்துப் போராடணும்...சே.சே..எவ்வளவு அதிகாரம்..எவ்வளவு அதிகாரம்...

உள்நாட்டுல ஐந்து இலக்கம் அல்லது ஆறு இலக்க ஊதியம்.. அல்லது வெளிநாட்டுல வேலை.. பிளாக் லேபில் அல்லது ஷீவாஸ் ரீகல்.. தொட்டுக்க MNCசிக்கனோட திட்டறுதுக்கு கம்யூனிசத்தோட தொடர்பில்லாத கம்யூனிஸ்ட் கட்சி..
அரிக்கற இடத்துல சொறிஞ்சுக்க வேண்டாமோ?

மார்க்ஸ் யாரு சார்? ஊர் ஊரா விரட்டி அடிக்கப்பட்டவர்.. எங்கேயாவது எதுத்து நின்னு நான் ஏன்யா போணும்னு கேட்டிருக்காரா? அவர் ஒரு கோழை சார்..அவர் குழந்தை செத்துக் கிடக்குது.. அவ பிறக்கும்போது தொட்டிலுக்கும் காசு இல்ல..இப்பொ அவ இறந்தபோது சவப்பெட்டிக்கும் காசு இல்லன்னு சொல்றாரு.. அவரெல்லாம் ஒரு அப்பனா சார்? அப்பாக்களை அவர் தமிழ்நாட்டுல வந்துல்லா பார்க்கணும்.

"இழப்பதற்கு உன்னிடம் விலங்குகளைத் தவிர எதுவும் இல்லை, வெல்வதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது"ன்னு சொல்லிப் பாருங்க.. உங்க வேகமெல்லாம் குறைஞ்சு போயிடும்.. "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்"னு சொல்லிப் பாருங்க..சமத்துவ சமுதாயத்தையே படைச்ச சந்தோஷமும் பெருமிதமும் வரும்..

சரிதானுங்களா? "டாஸ் காபிடல்" லேர்ந்து முதல் பாதியும் "மார்க்ஸ்" //மாக்// ஐயும் சேர்த்துக் கலக்கிப் பாருங்க..டாஸ்மாக் கிடைக்கும்..அது தானுங்களே சமத்துவம்?
இதுக்கும் மேல ஏதாவது சந்தேகம் இருந்தா, கம்யூனிசம் மேலே ரொம்ப அக்கறையோட உங்க இந்தப் பதிவுல முதல் மறுமொழியிட்டவர் கிட்டே கேட்டு நீங்க தெரிஞ்சுக்கலாம்.

said...

தெருத்தொண்டன்,
நல்லாயிருக்கு.

ரஸ்யாவின் வீழ்சிக்காக மற்றவர்கள் எடுத்த பகீரதப்பிரயத்தனம் கவனத்திலெடுக்கப்பட வேண்டும். ஆனாலும் எதிரி என்னதான் கூத்தாடினாலும் சிதைந்து போனது ரஸ்யாவின் பலவீனமே.

இன்னொரு விசயம். லெனின் புரட்சி தவிர்க்கமுடியாமல் நிகழ்ந்த ஒன்று. ஆனால் பிஞ்சிலே வெம்பியதோ என்ற ஐயமுமுண்டு. சரியான பரிணாமப்படி, முதலாளித்துவத்திலிருந்து விடுதலையாகி பொதுவுடமை தோன்றுவதற்குப்பதிலாக, பிரபுத்துவ அடக்குமுறையிலிருந்து பொதுவுடமைக்குத் தாவியது ரஸ்யா. இதைப் பாய்ச்சல் என்று சொன்னாலும், அதுவே அதன் நிலையாமைக்குக் காரணமாகக்கூட இருக்கலாம். அதாவது முதலாளித்துவமும் அதன் தாக்கங்களும் முற்றாமல் நேரடியாகப் பொதுவுடமைக்குப்போனது ரஸ்யா. இன்று பொதுவுடமையிலிருந்து முதலாளித்துவத்துக்கு வந்துவிட்டது.

கியூபாவின் சோசலிசமும் பிடலோடு முடிந்துவிடுமோ என்ற ஐயம் பலமாகவுண்டு.

மற்றும்படி,
முதலாளித்துவம் இருக்கும்வரை பொதுவுடமையும் இருக்கும்.
கால் மாக்சும் இருப்பார்.

நல்லதொரு முயற்சி குழலி.

said...
This comment has been removed by a blog administrator.
said...

குழலி, போன பின்னூட்டம் தெருத்தொண்டனுக்கு ஒரு கேள்வியாக விடுத்திருந்தேன்.. ஆனால் கேட்டு பிரயோஜனம் இல்லை, கேட்டு நாமே இவர்களை பெரிய ஆள் அக்கக்கூடாது எனபதால் அழித்துவிட்டேன்.

said...

விலங்குப் பண்ணை ஜார்ஜ் ஆர்வெல்

இவர்களைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம். உலகிலும், தமிழிலும் புகழ் பெற்ற மற்றும் நான்காம் அகில ட்ராட்ஸ்கிகளால் போற்றப்பட்ட ஸ்டாலின் எதிர்ப்பு இலக்கிய ஆவணமான ஷஷவிலங்குப் பண்ணை||யை எழுதிய, சுதந்திர இடதுசாரி ஸ்டாலின் எதிர்ப்பு எழுத்தளரான ஜார்ஜ் ஆர்வெல், பிரிட்டிஸ் உளவுப்படையில் இயங்கிய கம்யூனிச எதிர்ப்பு இடதுசாரி போராளியாவர். பாசிசம் தனது உருக்கொண்டு உலகை அடக்கி ஆக்கிரமிப்பை செய்து கொண்டிருந்த 1943 இல் தான், விலங்கு பண்ணையை ஸ்டாலின் எதிர்ப்பாக, கம்யூனிசத்தை இழிவுபடுத்த வெளிக் கொண்டு வந்தவன்;. அடுத்து அமெரிக்காவுக்கும், சோவியத்துக்கும் இடையில் பனிப்போர் தொடங்கி அதுவே தேன்நிலவாக கொப்பச்சேவ்வுடன் கூடியபோது, இவரின் மற்ற நூல் ஷஷ1984|| வெளியாகியது. இந்த நூல் இரண்டடையும் பிரபலப்படுத்தி விற்கும் படி, பிரிட்டிஸ் அரசு தனது துதரகங்களுக்கு உத்தரவு இடமளவுக்கு, கம்யூனிச எதிர்ப்பை அடிப்படையாக கொண்டிருந்தது. இங்கு விலங்கு பண்ணையில் வரும் பன்றி மற்றும் நாய்யை கம்யூனிஸ்டுகள் என்று, முஸ்லிம் நாடுகளில் அடையளப்படுத்தி, அந்த நாட்டு மதப் பண்பாட்டுக்கு ஊடாக, பிரிட்டிஸ் துதரகம் அவதூறு செய்தது. பிரிட்டிஸ் உளவுத்துறையில் முக்கிய பொறுப்பில் பணியற்றிய செலியா என்ற பெண் 1996 இல் கூறிய விபரத்தில் ஷஷ1949 இல் ஆர்வெல்லை கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் மற்றும் உளவு வேலை தொடர்பாக சந்தித்தேன். அவருக்கு இவ்வேலையில் பெரும் ஆர்வம் இருந்த போதிலும் உடல்நிலை சரியில்லாதால் இயலவில்லை என்று கூறிவிட்டு, பத்திரிகைத் துறையில் உள்ள கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்ற பட்டியலைக் கொடுத்தார். தான் ஆள் காட்டிய விசயம் வெளியே தெரிய வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்.|| இந்த இடதுசாரி கனவான் தான் ஷஷ1984|| நாவலில் ஷஷபெரியண்னன் உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்|| என்று பிரபாலமான கம்யூனிச எதிர்ப்பு வாக்கியத்தை உருவாக்கிய மேதை, ஒரு உளவாளி என்பதை சொன்னால் ஸ்டாலின் எதிர்ப்பு கம்யூனிச எதிர்ப்பு உலகம் நம்பிவிடமாட்டாது. ஆனால் அது சந்தி சிரிப்பது என்னவோ வேடிக்கையல்ல. இதுதான் பலரின் சொந்த இரகசிய முகங்கள் ஆகும்.

பி.இரயாகரன்
20.8.2005

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, பின்னூட்டங்கள் பல தளங்களிலிருந்து பார்க்க உதவுகின்றன.

தெருத்தொண்டன், தற்போது இருக்கும் அரசியல் கட்சிகளில் ஓரளவிற்கு நல்ல கட்சியாகவும்,நல்ல தொண்டர்கள், தலைவர்கள் இருப்பதாகவும் உள்ளவை இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தான், ஆனால் அவை சமரசத்திற்காக பல கம்யூனிச கொள்கைகளை விட்டு கொடுத்துள்ளன என்பது உண்மை.

சொ.சங்கரபாண்டி அவர்கள் கூறியது போல
//சங்க பரிவாரத்தின் கொள்கை அமைப்புக்களுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் உள்ள நல்லுறவைப் பாருங்கள். கம்யூனிஸக் கொள்கையமைப்புகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ள தொடர்பறுந்த நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிகளின் இலட்சணம்//
இதுவும் உண்மை.

நன்றி

said...

சி.பி.எம்.இன் 18-வது அகில இந்திய மாநாடு
தாராளமயத்திற்கு ஏற்ப மறுவார்ப்பு
''சி.பி.எம். கட்சியின் 18வது அனைத்திந்திய மாநாடானது, கட்சி வரலாற்றில் தனி முத்திரையைப் பதித்துள்ளது'' என்று பெருமையுடன் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ளார், அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான சீத்தாராம் யெச்சூரி. உண்மைதான்! பித்தலாட்டத்திலும் சந்தர்ப்பவாதத்திலும் புதிய எல்லைகளைத் தொட்டு, சி.பி.எம். கட்சியானது இம்மாநாட்டின் மூலம் தனி முத்திரையைப் பதித்து விட்டது. ''ஒடுக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, உலகமயமாக்க சூழலில், உலகமயமாக்கத்துடன் இசைந்து செயல்படுவதற்கான பொருத்தமான வழிமுறைகளை வகுத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்'' என்று முதலாளித்துவப் பத்திரிகைகளே பாராட்டுமளவுக்கு சி.பி.எம். கட்சி மாநாடு தனி முத்திரையைப் பதித்து விட்டது.

''ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முறியடிப்போம்; அந்நிய ஏகபோக மூலதனத்தை வேரோடு பிடுங்கி மொத்தமாகத் தூக்கியெறிவோம்!'' என்றெல்லாம் சவடால் அடித்து வந்த சி.பி.எம். கட்சி, இப்போது வெளிப்படையாகவே அந்நிய நேரடி மூலதனத்தை வரவேற்கக் கிளம்பிவிட்டது. அந்நிய நேரடி மூதலீடானது தற்போதைய உற்பத்தித் திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்; தொழில்நுட்ப ரீதியாக பொருளாதாரத்தை முன்னேற்ற உதவுவதாக அமைய வேண்டும்; வேலை வாய்ப்பைப் பெருக்குவதாக இருக்க வேண்டும் என்ற மூன்று நிபந்தனைகளுடன் அந்நிய நேரடி முதலீட்டை சி.பி.எம். கட்சி வரவேற்கிறது. ''சில கொள்கை விவகாரங்கள் பற்றி'' என்ற ஆவணத்தில் உள்ள இந்த அம்சங்கள் குறித்து மாநாட்டில் விவாதித்து இறுதியாக்கியுள்ளனர்.

இன்றைய தாராளமய உலகமய சூழலில் ஒரு ஏழைநாட்டில் நுழையும் ஏகாதிபத்திய மூலதனமானது, அந்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி, இயற்கை மூலவளங்களையும் மக்களையும் சூறையாடி, அந்நாட்டை மீண்டும் காலனியாக்கும் ஒரு ஏற்பாடாக இருக்கும்போது, வேலை வாய்ப்பைப் பெருக்கி தொழில்நுட்ப ரீதியாகப் பொருளாதாரத்தை மேம்படுத்தி உற்பத்தித் திறனை வளர்க்கக்கூடிய அந்நிய முதலீடு என்று ஏதாவது இருக்க முடியுமா? இப்படி பசப்பு வார்த்தைகளுக்குப் பின்னே, அந்நிய முதலீட்டை வரவேற்கும் தமது பச்சைத் துரோகத்தை சி.பி.எம். கட்சி மூடி மறைக்க முயற்சி செய்கிறது.

இதற்காக, பருண்மையான நிலைமைக்கேற்ப சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தவாறு செயல்படுவது அவசியமாகும் என்று பீடிகை போடும் இத்துரோகிகள், அந்நிய முதலீடுகளை முற்றாக நிராகரிப்பதற்குப் பதிலாக, தாராளமய உலகமய சூழலில் செயலுத்தி அடிப்படையில் அவற்றைப் பொருத்தமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்கின்றனர்.

''இன்றைய தாராளமய உலகமய சூழலின் யதார்த்த நிலைமையை உணராமல், அதிலிருந்து விலகி தப்பித்து விட முயற்சிப்பது நமது அகநிலை விருப்பமாகவே இருக்கும். உலகமய தாராளமயக் கொள்கைகளையும் அதன் தீய விளைவுகளையும் எதிர்த்துப் போராடும் அதேசமயம், கிடைத்துள்ள சில வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வங்கி, காப்பீடு துறை, சில்லறை வியாபாரம் முதலானவற்றில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்க்கும் அதேநேரத்தில், வேலை வாய்ப்பை உருவாக்கக் கூடிய தொழில்களில் அந்நிய நேரடி முதலீட்டை நாம் அனுமதிக்கலாம். மேலும், மாநில அரசுகளை மத்திய அரசு பிச்சைக்காரத்தனமாக நடத்தி, நிதியில்லை என்று புறக்கணித்து வரும் சூழலில், மக்கள் நலனை முன் வைத்து ஊறு ஏற்படாத வகையில் ஒரு சில தொழில்களில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தவறல்ல'' என்று துரோகத்தனத்திற்கு சித்தாந்த விளக்கமளிக்கிறார், சி.பி.எம். கட்சியின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரகாஷ் காரத்.

இதேபோல, ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வக் குழுக்களுடனும் ஒத்திசைந்து செயல்பட சி.பி.எம். கட்சியினர் தீர்மானித்துள்ளனர். நேரடியாக ஏகாதிபத்திய நிதியுதவியுடன் இயங்கும் குழுக்களை நிராகரித்துவிட்டு, அறிவொளி இயக்கம் போன்ற சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வக் குழுக்கள் சுய உதவிக்குழுக்களுடன் இணைந்து செயல்பட சி.பி.எம். கட்சியினர் தீர்மானித்துள்ளனர். ஏகாதிபத்தியங்கள், அறக்கட்டளைகள், மத நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெறாத தன்னார்வக் குழு எது என்பதை சி.பி.எம். கட்சியினர்தான் விளக்க வேண்டும். ஏற்கெனவே, மும்பையில் நடந்த உலக சமூக மன்ற (ஙிகுஊ) மாநாட்டில் தன்னார்வக் குழுக்களுடன் கூட்டுச் சேர்ந்து 'புரட்சி' செய்த இவர்கள், இப்போது அதையே புரட்சிக்கான கூட்டணியாக மாற்றிவிட்டனர்.

தமிழகத்தில் பாசிச ஜெயா கும்பலும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் தமது ஓட்டு வேட்டைக்கான பகடைக் காய்களாகத் தன்னார்வக் குழுக்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ள நிலையில், சி.பி.எம். கட்சியினர் மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? எனவேதான், ஏகாதிபத்திய கைக்கூலிகளுடன் புதிய கூட்டணி கட்டிக் கொண்டு 'புரட்சி' செய்யப் புறப்பட்டுள்ளனர்.

இதுவொருபுறமிருக்க, நிலப்பிரபுக்களின் சொத்துக்கள் அனைத்தையும் நட்டஈடின்றிப் பறிமுதல் செய்வது என்ற முந்தைய நிலைப்பாடு அடியோடு நீர்த்துப் போகும் வகையில், அவசியமான நிலைமைகளில் பண்ணை நிலங்களுக்கு நட்டஈடு கொடுத்து, விலைக்கு வாங்கி கூலிஏழை விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிப்பது என்று சி.பி.எம். கட்சி மாநாடு தீர்மானித்துள்ளது. நிலப்பிரபுக்களின் பிற சொத்துக்களைப் பறிமுதல் செய்வது பற்றி அக்கட்சி மௌனம் சாதிக்கிறது.
அடிப்படையான இந்த மாற்றம், ஏற்கெனவே 2000மாவது ஆண்டில் நடந்த திருவனந்தபுரம் சிறப்பு மாநாட்டில் நிறைவேறிய புதிய மேம்படுத்தப்பட்ட கட்சி திட்டத்தில் இடம் பெற்றுள்ளது என்றும், இதையொட்டி தற்போதைய மாநாட்டிலும் விவாதிக்கப்பட்டுள்ளது என்றும், புதிய மத்தியக் கமிட்டி இறுதி முடிவு செய்யும் என்றும் பிரகாஷ் காரத் கூறுகிறார்.

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்னும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளை ஆட்சியாளர்கள் தீவிரமாகச் செயல்படுத்திவரும் வேகத்திற்கேற்ப, போலி கம்யூனிஸ்டுகளும் தமது சிவப்பு முகமூடிகளை வேகமாகக் கழற்றி எறிந்துவிட்டு திருத்தல்வாத திருமுகத்தைக் காட்டி வருகின்றனர். இந்த இலட்சணத்தில் வகுப்புவாதம், நவீன தாராளமயம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கெதிராக தொடர்ந்து விடாப்பிடியாகப் போராடப் போவதாக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அது என்ன போராட்டம்? ''மீன்காரனுக்குத் தூண்டில் மிதவை மீதுதான் கண்'' என்பதைப்போல, நாற்காலியைக் குறிவைத்து நாடாளுமன்ற அரசியல் தரகு வேலைகளையே விளக்குகிறது அக்கட்சி. பா.ஜ.க. தலைமையிலான வகுப்புவாத சக்திகளை மீண்டும் அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பது; இதற்காக காங்கிரசு தலைமையிலான கூட்டணி ஆட்சியை ஆதரிப்பது; இடதுசாரி மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணியையும் அதன் தலைமையிலான மாற்று அரசாங்கத்தையும் நிறுவப் பாடுபடுவது; இந்தி பேசும் மாநிலங்களிலும் நாடாளுமன்றத்திலும் இடதுசாரி சக்திகளின் பலத்தை அதிகரிக்கச் செயலாற்றுவது என்பதே அக்கட்சி வகுத்துக் கொண்டுள்ள கடமைகள்.

இந்த மூன்றாவது அணி என்பது நொண்டிக் குதிரையின் மீது பந்தயம் கட்டுவதுதான் என்பது சி.பி.எம். தலைவர்களுக்கு நன்கு தெரியும். ஆனாலும், கல்லறையில் உறங்கும் மூன்றாவது அணிக்கு மீண்டும் ஆவியெழுப்புகிறார்கள். மறுபுறம், சி.பி.எம்.மின் நடைமுறையோ பா.ஜ.க.வுக்கு எதிராகக் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து வால்பிடித்துச் செல்வதாக உள்ளது. மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் காங்கிரசோடு சி.பி.எம். அணிசேரும் அதேசமயத்தில், காங்கிரசோ தாராளமயமாக்கலில் பா.ஜ.க.வுடன் அணி சேருகிறது. இந்நிலையில் வகுப்புவாதம், தாராளமயம் இரண்டையும் எதிர்த்துப் போராட ஓட்டுக் கட்சிகளின் புதிய அணியைச் சேர்க்க முயற்சிப்பது பகற்கனவுதான். இந்த மூன்றாவது அணியின் மூலகர்த்தாக்களான வி.பி.சிங், குஜ்ரால், தேவேகவுடா, சந்திரசேகர் முதலானோர் தாராளமயமாக்கலை ஓரணியில் நின்று ஆதரிக்கும்போது, யாரை வைத்து மூன்றாவது அணி கட்ட முடியும்? ஆக, சி.பி.எம்.இன் தாராளமய வகுப்புவாத எதிர்ப்பு என்பது வெறும் பித்தலாட்டம்தான். அண்மைக் காலங்களில் தாராளமயத் தாக்குதலுக்கு எதிராக உழைக்கும் மக்களைத் திரட்டி எந்தவொரு போராட்டமும் நடத்த முன்வராத சி.பி.எம்., விடாப்பிடியாகப் போராடும் என்பதை அக்கட்சியின் அணிகளே கூட நம்பமாட்டார்கள்.

சி.பி.எம்.இன் பித்தலாட்டங்கள் இதோடு நின்றுவிடவில்லை. அந்நிய மூலதனக் கொள்ளைக்கும் ஆதிக்கத்துக்கும் கதவை அகலத் திறந்துவிட்டுள்ள முதலாளித்துவ சீனாவை, சோசலிசம் பூத்துக் குலுங்கும் நாடு என்றும், மார்க்சிய லெனினியத்தை மண்ணுக்கேற்ப நடைமுறைப்படுத்திவரும் நாடென்றும் கூசாமல் புளுகுகிறது. ஏகாதிபத்திய நாடுகளின் போலி கம்யூனிஸ்டு கட்சிகளைப் போலவே, உலகின் எல்லா வகையான கம்யூனிச துரோகக் கட்சிகளையும் அங்கீகரித்து அதிகாரபூர்வ உறவை சி.பி.எம். கட்சி மேற்கொண்டுள்ளது. இலங்கையின் பாசிச சிங்கள இனவெறி பிடித்த சந்திரிகா அரசையும் தாராளமயக் கொள்கைகளையும் ஆதரித்துக் கூட்டணி சேர்ந்துள்ள ஜனதா விமுக்தி பெரமுணா (ஜே.வி.பி.) கட்சியைக் கூட சகோதரக் கட்சியாக சி.பி.எம். பாவிக்கிறது.

மூத்த தலைவர்கள் வழிவிட்டு, புதிய தலைமுறையினர் தலைமைக்கு வந்துள்ளதையும், முதன்முதலாக தலைமைக் குழுவுக்கு ஒரு பெண் உறுப்பினர் (பிருந்தா காரத்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டு, இம்மாநாடு சி.பி.எம். கட்சியில் ஒரு திருப்புமுனையைக் காட்டுவதாக முதலாளித்துவப் பத்திரிகைகள் பரபரப்பூட்டுகின்றன. செக்குமாட்டுப் பாதையில் எப்போதுமே திருப்பம்தான்!

கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் இந்தியாவின் இரு பெரும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளான வலது கம்யூனிஸ்ட் கட்சியும் (சி.பி.ஐ) 'இடது' கம்யூனிஸ்ட் கட்சியும் (சி.பி.எம்.) தமது மாநாடுகளை நடத்தி, புதிய நிலைமைகளுக்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொண்டு ஓட்டுக்கும் சீட்டுக்குமான தமது வழக்கமான புரட்டல்வாத செக்குமாட்டுப் பாதையில் பீடுநடைபோடக் கிளம்பி விட்டன. மறுகாலனியாதிக்கம், இந்துவெறி பாசிசம் எனும் இருபெரும் சுமைகளோடு இப்போது போலி கம்யூனிஸ்டுகளின் துரோகச் சுமையும் உழைக்கும் மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது என்பதையே இக்கட்சிகளின் மாநாடுகள் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.
•குமார்
நன்றி
புதியஜனநாயகம
21.08.2005;

said...

Indian communist parties are choosing this path for survival only...one thing we can tell that they are not actively propagating the principles of marxism...it is directly related to religions and thought processes so is a handicap...

said...

ஒரு ராஜா ஊர்ல எல்லாரையும் பால் கொண்டு வந்து ஊத்த சொன்னார்.
எல்லாரும் வந்து ஊத்துனாங்க. அப்புறம் பால பாத்தா ஒரே தண்ணி.
கொஞ்சம் பேர் பால் ஊத்தினான். மத்தவன் தண்ணிய ஊத்தினான்.
இதுதான் கம்யூனிசம்.

Selfishness இல்லாத இடத்தில் வேலை செய்யும் ஊக்கம் இருக்காது.

said...

குழலி,
"ஓரளவிற்கு நல்ல கட்சியாகவும்,நல்ல தொண்டர்கள், தலைவர்கள் இருப்பதாகவும் உள்ளவை இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தான்,"
--இது உண்மையேயாயினும் தேர்தலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு தங்கள் நிலைப்பாட்டை ஒருமுகப்படுத்துவதில் தவறிக்கொண்டே இருப்பது கவலைக்குறிய விதயம்.

said...

Excuse me, but did somebody say something good about the Communist Parties of India ?

Okay here is a small list of anti-national activities they have actively indulged in...

1962 Indo-China War
--------------------
Communists supported China, hence a split in the Party.IIRC, a train or two carrying supplies to Indian troops was also derailed by the communists.

Honda Company strike,Gurgaon
-----------------------------

Incident happened after a Communist delegation visited China.Intel reports suggest that China has been encouraging labour uprisings in foreign companies that have setup shop in India.

Kalaikunda AFB Demonstrations
------------------------------
Communists choose to demonstrate again joint exercises between IAF and USAF for strange reasons such as 'territorial integrity of India is under question','American invasion of India' and such.

However, it is common knowledge that such joint exercises help the Indian Air Force(and USAF) finetune their doctrines, tactics and it is very essential that IAF participates in such exercises.

I could go on and on and on.
Did somebody also say that Russian people are yearning for Communist rule again ?

You, Sir/Madam, must definitely be joking.

Do you have statistical data to prove your point or is it just your personal bias towards the Red Comrades ?

The Mitrokin archive is available for public viewing in certain countries.You can always read them to understand how the Communists are nothing but paid agents of Beijing.Earlier they recieved funding from Russia, now its China.

A bunch of traitors!

Why, do you also support their view that India disband its nuclear weapons and subject itself to the nuclear hegemony of the Peoples Republic of China ?

Nevermind their reckless proliferation to Pakistan.

What stupidity is that ?

Excuse me, Kuzahi, but your blog entry is not only devoid of facts but are also VERY far from truth.

Your statement that Russian people wanting Communist rule for instance.

Folks do not forget to google the internet for Chinese ethnic cleansing in TIBET,the massacres of Stalin.

Communism was best described by Churchill. "Distributing Poverty"

Capitalist Americans are far more happy and enjoy a better standard of living than Russians who lived under the Communists.

Regards
Samudra