சிறுகதை - கல்லூரி மாமா

உங்களுக்கு தெரிந்திருக்கும், ஒரு கல்லூரியில் பசங்கலாம் 18-22 வயசுக்குள்ள இருந்தா ஒரு ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டும் 26-27 வயசுல இருப்பாங்க,சிலருக்கு திருமணம் கூட ஆகியிருக்கும், இவங்களையெல்லாம் செல்லமா பசங்க மாமானு கூப்பிடுவாங்க, அதில சில மாமா பழமா இருக்கும், நம்மையெல்லாம் பார்த்தா சின்ன பசங்க அப்படினு மதிக்கவே மாட்டாங்க, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாங்க, ஆனா இன்னும் சில மாமா இருக்காங்களே படு சேட்டை புடிச்ச ஆளுங்க, அப்படி நம்ம படிக்கும் போது ஒரு மாமா இருந்தார் நமக்கு சீனியர், அவர் போடுற சட்டையில அயரினிங் கிரீஸ் மடிப்பு அப்படியே இருக்கும். அந்த அளவுக்கு மனுசன் சுத்தமா அயர்ன் செய்வார், அதே மாதிரி மனுசன் தினம் தினம் ஒரு ஷீ போட்டுக்கொண்டு சோக்காதான் வருவார், எப்போது பார்த்தாலும் அப்போதான் மேக்கப் போட்ட மாதிரி இருப்பார்.

அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தை கூட இருப்பதாக சொல்லிக்கொண்டார்கள், அதில் ஒரு பெண் குழந்தை கைக்குழந்தையாம்.

நான் இருக்கனே! என்னத்த சொல்ல, யாருக்கிட்டயுமே பேசாத உம்மனாம் மூஞ்சி பசங்க, இந்த திமிரு புடிச்ச பசங்கனு சொல்லுவாங்களே அவனுங்க எல்லாம் நம்ம கிட்ட தான் அப்படி பேசுவானுங்க, அதுவும் மணிக்கணக்கா பேசுவானுங்க, சொந்த கதை சோகக்கதையெல்லாம் பேசுவானுங்க, இந்த பசங்களுக்கு நம்ம அருமை தெரிந்த அளவுக்கு எங்க காலேஜ் ஃபிகருங்களுக்கு நம்ம அருமை தெரியலை, அதானால் காதால புகை விடறதே நம்ம வேலை.

அப்படியும் பார்த்தா பரிதாபமா இருக்கானே என்று ஒன்று இரண்டு ஃபிகருங்க நம்ம கிட்டயும் கடலை போடுங்க (பிறகு நான் கடலை போடுவேன்னு சொன்னா நம்ம இமேஜ் என்ன ஆகும்).


புத்தருக்கும் போதிமரம் மாதிரி நம்ம பசங்க கடலை போடுற இடம் தான் S கேட், வெயில் மழைக்கெல்லாம் அஞ்சுவதே கிடையாது, எப்பவும் அங்கே கடலை வறுத்துக்கொண்டே இருப்பார்கள், எங்க எலெக்ட்ரிக்கல் புரொபசர் அந்த கேட் வழியாதான் போவார், அப்படியே போகும்போது யாரு யாரோட கடலை போடுறாங்கனு பார்த்துப்பார், எலக்ட்ரிக் சர்க்யூட் லேப் எக்ஸாமில தான் எல்லாருக்கும் வேட்டு வைப்பார், நம்ம மாதிரி மெக்கானிக்கல் பசங்கலாம் மூணாவது செமஸ்டர் வரை S கேட் பக்கம் தலை வைக்க மாட்டோம், ஏன்னா அந்த செமஸ்டர்ல தான் எங்களுக்கு எலக்ட்ரிக் சர்க்கியூட் லேப், அதற்கு பிறகு இல்லை, ஆனா எலெக்ட்ரிக்கல் டிபார்ட்மெண்ட் பசங்கதான் ரொம்ப பாவம்.

நம்ம வகுப்பு முடிஞ்சிதா "S" கேட்டு பக்கமா போய் கடலையை போட்டுவிட்டு அப்படியே மரணவிலாஸ்ல டீ குடிக்கலாம் என்று வந்து கொண்டிருந்தேன், கோவில் கிட்ட நின்று கொண்டிருந்த மாமா, என் தோள் மேல கைபோட்டபடி

"என்னடா பிரபு S கேட் பக்கம், உண்ணைய நான் பார்த்ததேயில்ல அங்கெல்லாம்"

"இல்ல மாமா சும்மா தான்"

"டேய் என்ன கடலையா?"

"சும்மா ரெக்கார்டு நோட்டு குடுத்தேன்"

"ரெக்கார்டு நோட்டு மட்டும் தானே?"

"ஆமாம் மாமா, என்ன இன்னைக்கு பலமா விசாரிக்கிறிங்க "

"ஆமாம், கடலை போட்டியா யாரு அது உன் ஆளா?"

"அட நீங்க வேற மாமா, என் கிளாஸ் மேட், சும்மா ரெக்கார்டு நோட்டு, அவள்த பார்த்து எழுதனும்னு

வாங்கிட்டு வந்தேன்"

"அது சரி மாமா, என்ன வந்ததுல இருந்து அந்த ஃபிகரைப் பற்றியே கேட்குறிங்க"

"அது என் ஆளுடா!"

"காலேஜ் ல ஒரு ஃபிகரு சுமாரா இருந்துடக்கூடாதே, உடனே என் ஆளுன்னு சொல்லுவீங்களே"

"நெசமாடா!"


மனுசன் இருக்குற ஸ்மார்ட்டுக்கும், பேசுற பேச்சுக்கும், போடுற சட்டை பேண்டுக்கும் உண்மையா

இருந்தாலும் இருக்கும்னு ஒரு கன்பியூஷன் மனசுக்குள்ள

"ஏன் மாமா உங்களுக்கு தான் கல்யாணம் ஆயிடிச்சே, அப்புறம் ஏன் எங்கள மாதிரி சின்ன

பசங்ககிட்டலாம் போட்டி போடுறிங்க"

"அடங்கொக்காமக்க அத நீ நம்புறியா?"

என்ன இந்த ஆளு இப்படி குழப்புறான்

"ஏன் மாமா போன வருசம், என்னை ராக்கிங் செஞ்சப்ப நீங்களே ஒரு தடவை என்கிட்ட

சொல்லியிருக்கிங்க"

"அது சும்மா டா, எங்க இயர்லயே எனக்கு தான் வயசு ஜாஸ்தி, ஆனா எல்லாம் பேர் சொல்லி

கூப்பிடுவானுங்க, வாடா போடானு சொல்வாங்க, எனக்கு காம்ப்ளெக்ஸ்"

"ம்..."

"நம்ம இங்கிலீஷ் புரொபசரும் நான் கிளாஸ் அட்டென்ட் செய்யலைனு கலாய்ப்பார்"

"ம்..."

"அதான் ஒரு நாள் ஸ்வீட் வாங்கி போய் அவர்கிட்ட என் வெட்டிங் டேனு கொடுத்தேன், அதிலிருந்து

மனுசன் என்னை கலாய்க்கறது இல்லை"

"மாமா டீ சொல்லுங்களேன், அப்படியே ஒரு கிங்ஸ்"

"டேய் நீ எப்பவும் பில்டர் கோல்ட் தானே அடிப்ப"

"மாமா வாங்கித்தரும் போது பில்ட்டர் கோல்டா? கிங்ஸ் சொல்லுங்க"

"ராஜா ரெண்டு டீ, ரெண்டு கிங்ஸ் கொடுப்பா"

"அப்புறம் என்ன ஆச்சி மாமா"

"அப்புறமா பசங்க கிட்டயும் அப்படியே மேரேஸ் ஆன மாதிரியே மெயின்டன் பண்ணேன், பசங்களும்

மரியாதையா பேசினாங்கோ"

"ம்..."

"ஆனா அது தான் பிரச்சினை ஆயிடுச்சி"

"இந்த பசங்களுக்கு கடலை போடனும், அதனால அப்படியே ஆரம்பிப்பானுங்க, பிகர்ங்ககிட்ட விசயம் தெரியுமா மாமாக்கு குழந்தை பிறந்திருக்குனு"

"மாமா டூப் உடாதிங்க, நீங்களே ஒரு தடவை சொன்னதா எனக்கு ஞாபகம்"

"டேய், அதெல்லாம் மெயின்டெய்ன் பண்றதுக்குடா"

"ஓ... சரி சரி"

"இப்படியே மாமாக்கு குழந்தை பிறந்திருக்குனு ஆரம்பிப்பானுங்க, அப்படியே வேற விசயம் கடலை போட

ஆரம்பிச்சிடுவானுங்க"

"ஓ..."

"இப்படியே இவனுங்க கடலைபோட நம்ம பெயரை யூஸ் பண்ணிக்குவானுங்க, அதனால ஃபிகருங்களுக்கும்

என் மேல டவுட்"

"ம்..."

"இவனுங்க ஃபிகர் பிக்கப்பண்ண நம்மளை கவுத்திட்டானுங்க"

"என்ன மாமா உங்ககிட்ட இப்படி ஒரு கதையா?"

"நீ கடலை போட்டுட்டு வந்தியே, அந்த ஃபிகர் எங்க ஊருதான்"

"தெரியுமே"

"எப்படிடா"

"ஹி ஹி நான் கடலை போட ஆரம்பிச்சதும் உங்களை வச்சிதானே"

"டேய் நீயுமா டா?"

"நாங்க ஊருல இருந்து வரும் போது பஸ்ல பேசிக்கிட்டு வருவோம்"

"அப்படியா?" எனக்கு காது வழியா புகை வந்தது.

"நான் அவகிட்ட சொல்லிட்டேன் எனக்கு மேரேஜ் ஆகலைனு"

"நெசமா? சரி அவங்க என்ன சொன்னாங்க"

"நான் அவளை லவ் பண்ணுறேண்டா"

இவர் இந்த கதைய ஆரம்பிக்கும்போதே இப்படித்தான் வருவாருனு எனக்கு தெரியும் அதனால ஒன்னும்

பெரிய அதிர்ச்சிலாம் இல்லை....

"சரி மாமா சொல்லிட்டிங்களா?"

"இல்லடா பட் அந்த பொண்ணுக்கும் என் மேலே ஒரு அஃபெக்ஷன் இருக்குடா"

இருந்தாலும் இருக்கும் இவன் பேசறதுல கில்லாடி, ஆள் வேற ஸ்மார்ட்டா இருக்கான்...

"அப்படியா மாமா சரி" நம்பிக்கையில்லாமல் சொன்னேன்

"மாமா பஜ்ஜி போடுறாங்க சூடா ரெண்டு சொல்லுங்க"

"ராஜா நாலு பஜ்ஜி கொடுப்பா"

"மாமா இத்தன நாள் எனக்கும் தெரியாது நீங்க கல்யாணம் ஆகாதவர்னு"

"சரி என் ஆளுகிட்ட கடலை போடும்போது நீயும் சொல்லு"

"சரி மாமா"

சே... இந்த மனுசனுக்குள்ள இப்படி ஒரு கதையா? காம்ப்ளெக்ஸ் எப்படிலாம் பொய் சொல்ல வைக்குது,

நல்ல மனுசன்.

மாமா வீட்டில ஒரு துக்கம், அவரு அப்பா இறந்துட்டாரு, நாங்க பசங்கெல்லாம் வேன் பிடிச்சி போனோம்,

மறக்காம இந்த துக்க செய்தியை LHக்கு போன் போட்டு
அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டு கிளம்புனோம்

இவங்கதான் என் மனைவி, இவ பெரிய பொண்ணு 3 வயசு ஆகுது, இவ சின்ன பொண்ணு 9 மாசம்னு அவர்

அறிமுக படுத்தியபோது தான் தெரிந்தது நான் கோயிஞ்சாமி நெம்பர் ஒன்னு அப்படினு.

பின் குறிப்பு:
இந்த கதை மற்றும் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல.

12 பின்னூட்டங்கள்:

said...

இன்னா பிரபு... நம்ம கைலயே கலாய்க்கறீயே... ஒரு காலத்துல கோயிஞ்சாமியா இருந்ததுக்கு இப்போ என்ன வெக்கம்... சொம்மா சொல்லு ராசா... அப்பால என்ன ஆச்சி...

said...

அருமையான கதை!

கல்லூரி இளைஞர்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ள கதை!!

நெஞ்சைத்தொடும் உருக்கமான சென்டிமெண்ட் முடிவு கொண்ட கதை!!!

பரிசுக்கான அனைத்து அம்சங்களும் பொருந்திய கதை!!!!

வாழ்த்துக்கள் குழலி!!!!!

said...

//அருமையான கதை!

கல்லூரி இளைஞர்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ள கதை!!

நெஞ்சைத்தொடும் உருக்கமான சென்டிமெண்ட் முடிவு கொண்ட கதை!!!

பரிசுக்கான அனைத்து அம்சங்களும் பொருந்திய கதை!!!!

வாழ்த்துக்கள் குழலி!!!!!//

அய்யா ஞானபீடம் இந்த கதையை பார்த்து யாரும் சிரிப்பாங்களோ இல்லையோ இந்த பின்னூட்டத்தை பார்த்து நிச்சயம் சிரிப்பாங்க, இந்த பதிவோட ஹைலைட்டே இந்த பின்னூட்டம் தான். ஹி ஹி

said...

//... ஒரு காலத்துல கோயிஞ்சாமியா இருந்ததுக்கு இப்போ என்ன வெக்கம்... //
ஒரு காலத்துல மட்டுமா? இப்பவும் பிரபு கோயிஞ்சாமிதான் ராசா

//சொம்மா சொல்லு ராசா... அப்பால என்ன ஆச்சி...
//
அது மட்டும் ரகசியம்

said...

அருமையான கதை. அப்படியே நெஞ்சைத்தொட்டுவிட்டது.

பரிசுபெற வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
துளசி.

said...

அப்புறம் என்னாச்சி குழலி மாமா.. பொண்டாட்டிக்கிட்டே அடியா?

சொந்தக்கதை சோகககதை எல்லாம் சொல்லி பரிசு தட்ட திட்டமா? முகமூடி உஷார் ...

said...

அய்யாராசா,

அப்டியே என் வாழ்க்கைல நடந்த மாதிரியே நடந்துருக்கேய்யா!

said...

//அருமையான கதை. அப்படியே நெஞ்சைத்தொட்டுவிட்டது.

பரிசுபெற வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
துளசி. //
முகமூடி துளசியக்காவும் சிபாரிசு செஞ்சிட்டாங்க அதனால் எனக்குதான் முதல் பரிசு தரவேண்டாம். துளசியக்கா உங்களுக்கே இது நியாயமா?

//அய்யாராசா,

அப்டியே என் வாழ்க்கைல நடந்த மாதிரியே நடந்துருக்கேய்யா! //
மூர்த்தி நீங்க கோயிஞ்சாமியா? கல்லூரி மாமாவா? எந்த கதாபாத்திரத்தில இருந்திங்க?

பின்னூட்டம் தந்த அனைவருக்கும் நன்றி

நன்றி

said...

உரையாடல் பகுதிகளை இயல்பாக எழுதியிருக்கிறீர்கள். டக்கென்று 'சுபம்' போடுவது - கதை என்பதை விட கட்டுரை போன்ற தோற்றத்தைத் தந்தது. வெற்றியடைய வாழ்த்துக்கள் :-)

said...

"இவ்ளோ நாளா பழகறோம்..உங்க வாழ்க்கைல நடந்த சம்பவத்தை என் கிட்ட கூட சொல்லலயே குழலி... நியாயமா??"

வீ எம்

said...

கோயிஞ்சாமி பாத்திரம் குழலி.

said...

I like the side-track where you order for tea and stuff..

:)