உள்ளாட்சி மன்றங்களில் பெண்களின் நிலை

இன்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிறைவேற்ற முடியாத ஒரு சட்டமாக இருக்கின்றது பெண்களுக்கான பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் 33% இடஒதுக்கீடு, இந்த நிலைக்கு முன் தற்போது உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டு அது நடைமுறையிலும் இருக்கின்றது, ஆனால் இந்த இட ஒதுக்கீடு குறிக்கோள் எத்தனை தூரம் நிறவேறியுள்ளது என்பது ஒரு கேள்விக்குறியே.

நான் கல்லூரியில் செயலாளராக இருந்த அமைப்பின் வழியாக ஒரு கிராமத்தில் முகாமிட்டு அந்த கிராமத்திற்கு தேவையான எங்களால் முடிந்த சில உள்கட்டமைப்புகளை செய்வோம், அந்த முகாம் 10 நாட்கள் நடைபெறும் அப்படி ஒரு கிராமத்தை நாங்கள் தேர்ந்தெடுத்து அனுமதிக்காக அந்த ஊரின் ஊராட்சி மன்றத்தலைவரை அனுகினோம், அவர் ஒரு பெண்மணி, அவரிடம் பேசிய பொழுது எனக்கு எதுவும் தெரியாது என் மகன் வருவார் அவரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்ற போது அதிர்ந்துவிட்டேன், முகாம் இறுதி நாள் விழாவின் போது மேடையில் அவரை அமர சொன்னபோது தன் மகனைத்தான் அனுப்பினார், அவர் மேடைக்கு கீழே எங்கள் கல்லூரி பெண்களோடு அமர்ந்துவிட்டார்.

இரண்டாவதாக உள்ளாட்சி தேர்தலின் போது மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நண்பரின் சகோதரர் போட்டியிடுவதாக இருந்தது, ஆனால் அந்த தொகுதி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டது, ஒன்றும் பிரச்சினையில்லை நண்பரின் அண்ணி போட்டியிட்டு வெற்றி பெற்றார், மாவட்ட கவுன்சிலர் அண்ணியாக இருந்தாலும் எல்லா பொறுப்பும் அண்ணன் தான் பார்த்துக்கொள்கின்றார்.

ஒரு குடும்ப விழாவின் போது கவுன்சிலர் என்னிடம் பேச வேண்டும் என கூறியதாக நண்பர் கூறியபோது அந்த அக்காவிடம் சென்று என்னக்கா பேசனும்னு சொன்னீர்களே என்ற போது நான் சொல்லவில்லை என் வீட்டுக்காரர் தான் பேசவேண்டுமென்றார், அதாவது கவுன்சிலர் என்று எல்லோரும் அழைப்பது கவுன்சிலரின் கணவரை, இது எனக்கு தெரியவில்லையே தவிர அங்கே எல்லோருக்கும் தெரிந்துள்ளது.

இதெல்லாம் சொந்த அனுபவங்கள், அது மட்டுமின்றி பத்திரிக்கைகளில் படிக்கும்போது மிகச்சில பெண் உறுப்பினர்களைத் தவிர மற்ற அனைத்து பெண் உறுப்பினர்களும் அவர்களின் கணவர்களுக்காகவோ அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காகவோத் தான் தேர்தலில் போட்டியிட்டிருப்பர்.

இன்றும் தனித்துவமாக சுதந்திரமாக செயல்படும் பெண் உறுப்பினர்கள் மிகக்குறைவே, 5% கூட இருக்காது என்றே எண்ணுகின்றேன்.

இதற்கு முக்கிய காரணமாக பெண்கள் அதிகளவில் அரசியலில் ஈடுபடாதது, இரண்டாவது வாக்களிக்கும் மக்கள் பெண் வேட்பாளர்களில் யாருக்கு தகுதி உள்ளது என்று பாராமல் அவர்களின் கணவரையோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் தகுதியையும்,வலிமையையும் பார்ப்பது தான் இன்றைக்கு உள்ளாட்சி மன்றங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போலி இட ஒதுக்கீட்டிற்கு காரணம்.

இதே மாதிரி சட்டமன்ற பாராளுமன்றங்களில் பெண்களுக்காக 33% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டாலும் அது உள்ளாட்சி மன்றங்களில் உள்ள போலி இட ஒதுக்கீடு போலத்தான் இருக்கும்,

தற்போது இந்த நிலை இருந்தாலும் காலம் செல்ல செல்ல 33% இட ஒதுக்கீட்டில் சுதந்திரமாக செயல்படும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஒரு நாள் முழுமையடையும் எனவே 33% இட ஒதுக்கீட்டை சட்டமாக்கும் அதே நேரத்தில் அரசியல் கட்சிகளும் உண்மையான எண்ணத்தோடு சட்டமன்றம்,பாரளுமன்றத்தில் பெண்களுக்கு அதிக அளவில் போட்டியிட வழி செய்ய வேண்டும், பெயருக்காகவும் கணக்கிற்காகவும் மாவட்ட செயலாளரின் மனைவிக்கும் மகளுக்கும் போட்டியிட அனுமதியளிப்பதைவிட உண்மையிலேயெ சுதந்திரமாக இயங்கும் பெண்களுக்கு வாய்பளிக்க வேண்டும்.

6 பின்னூட்டங்கள்:

said...

அன்புள்ள குழலி,

பெண் உள்ளாட்சித் தலைவர்கள் திறம்பட செயலாற்ற உடவும் ஓர் அமைப்பில் தன்னார்வத் தொண்டனாக கடந்த நான்காண்டுகளாக என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.வேர்கள் பல்மாக இருந்தால் விருட்சம் உறுதியாக நிற்கும் என்ற நம்பிக்கையில், இந்திய ஜனநாயகம் அடித்தளத்திலிருந்து வலுவூடப்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் இதில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.

அந்த அனுபவத்தில் சொல்கிறேன். நீங்கள் சொல்லுகிற நிலை சில ஆண்டுகளுக்கு முன் இருந்தது. இப்போதும் சில இடங்களில் இருக்கலாம். ஆனால் நிலைமை வேகமாக மாறி வருகிறது.புதிய தலைமுறைப் பெண்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். உதாரணம்: கவிஞர் சல்மா. எழுத்தாளர் இந்திரா. உள்ளாட்சிகளில் இட ஒதுக்கீடு இல்லை என்றால் இவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

பெண் ஊராட்சித் தலைவர்கள், தங்கள் முன் முயற்சிகள் மூலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பைப் பற்றிப் பேசும் முன்னரே தனது கிராமத்தில் அதை நடைமுறைப் படுத்தி, அதற்காக உலகவங்கியின் பாராட்டைப் பெற்று அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்ட ஒரு பெண் தலைவி முதுகளத்தூர் அருகில் செயல்பட்டு வருகிறார்.

என்ன, பெண்கள் எங்கு சென்றாலும் முதலில் தாயாக, மனைவியாகத்தான் இருக்க விரும்புகிறார்கள். தென்மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களுக்கு சென்று அவ்ர்களுக்கு வேண்டிய வசதிகளைத் திட்டமிடுவது, அதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது, அரசு அதிகாரிகளுக்கும் அவர்களுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றத்திற்கு வகைசெய்வ்து என உதவியிருக்கிறேன். அப்போது சென்னை கோட்டையிலிருந்து வந்திருந்த அரசுச் செயலர் நிலையில் இருந்த அதிகாரிகளோடு ஓர் உரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களைச் சந்திக்க வந்த தலைவி ஒருவர் தன் குழந்தையையும் இடுப்பில் இடுக்கிக் கொண்டுதான் வந்தார்.

பெண்கள் அரசமைப்பில் பங்கு பெறுவதை பெருமளவில் ஊக்குவிக்க நாமெல்லோருமே கடமைப்பட்டிருக்கிறோம். அவர்கள் ஜனத்தொகையில் சரிபாதி இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களும் அரசமைப்பில் ஈடுபடவில்லை என்றால் நாட்டில் சமநிலை ஏற்படாது.
அன்புடன்
மாலன்

said...

To
======================
=வலைப்பதிவுச் செய்திகள்=
======================

ஆனந்த் = சின்னவனா? முகமூடியா?

ஞானபீடம் = பெனாத்தலா? குசும்பனா?

மாயவரத்தான் = முகமூடியா? ஞானபீடமா?

சின்னவன் = முகமூடியா? மாயவரத்தானா?

said...

தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி மாலன், பெண்கள் தனித்துவமாக அரசியலில் ஈடுபடும் நாள் வெகு அருகில் உள்ளது என்பது உங்கள் பின்னூட்டத்தை படிக்கும் போது தெரிகின்றது.

நன்றி

said...

இல்லாத ஊருக்கு வழி...: சி. சத்தியமூர்த்தி --

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்வதை எல்லா அரசியல் கட்சிகளுமே விரும்பவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இப்போதுள்ள 545 தொகுதிகளை 900 ஆக உயர்த்தலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் முன்வைத்துள்ளார். இது ""இல்லாத ஊருக்கு வழி காட்டிய கதை'' போல இருக்கிறது. இங்கு எண்ணிக்கையை யாரும் கேட்கவில்லை. சதவீதம்தான் தேவை என்பதை அரசு உணரவில்லையா?

நாகரிக வாழ்வு தோன்றிய நாள் முதல் சட்டம் செய்யும் பொறுப்பு ஆண்களிடமே இருந்து வந்திருக்கிறது. அரசியல் மற்றும் சமுதாயத்தில் நிலவும் குறைபாடுகளுக்கு இதுவும் ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். சட்டங்கள் செய்யும் இடத்தில் பெண்களின் பார்வை, அணுகுமுறை பிரதிபலிக்கப்படுவது அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட முக்கியமான தேவையாகும். ஆனால் அதை நாம் இன்னும் உணரவில்லை. மேலும் ஒரு ஜனநாயகத்தில் சமுதாயத்தின் எல்லாவித பிரதிநிதித்துவமும் இருந்தால் ஒழிய அது முழுமையாகச் செயல்பட முடியாது.

1995-ல் நான்காவது அகில உலகப் பெண்கள் மாநாடு பெய்ஜிங்கில் நடந்தபோது ""பெண்களின் முழுப் பங்கேற்பு இல்லாமல் இந்தச் சமுதாயத்தின் மாபெரும் அரசியல், பொருளாதார, சமுதாயப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது'' எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை இந்த நேரத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உலக அளவில் மகளிர் முன்னேற்றத்திற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஒரு சில வளர்ந்த நாடுகள் தவிர பிற நாடுகள் எல்லாம் மகளிரின் அரசியல் பங்கேற்பு விஷயத்தில் தயக்கம் காட்டியே வருகின்றன. ஐ.நா.வின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி மாநிலச் சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றங்களிலும் மகளிரின் பங்கு அமெரிக்காவைத் தவிர பிற நாடுகளில் குறைவாகத்தானிருக்கின்றன. அமெரிக்காவில் 33.1 சதவீதமும் பின்லாந்தில் 20.4 சதவீதமும் கனடாவில் 17.7 சதவீதமும் பிரான்சில் 10.8 சதவீதமும் சிங்கப்பூரில் 7.2 சதவீதமும் பிரிட்டனில் 6.9 சதவீதமும் ஜெர்மனியில் 6.1 சதவீதமும் நமது இந்தியாவில் 5.8 சதவீதமும் உள்ளது.

பொதுவாக ஆண்களைவிட பெண்கள் மென்மையானவர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்றைக்கு வலிமை என்பது தசை வலிமையைக் குறிப்பதல்ல. மனத்தின் வலிமை, மதிவன்மைதான் முக்கியம். அந்தவகையில் மதிவன்மையிலும் சாதுர்யத்திலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல. பல்கலைக்கழக மானியக் குழுவின் தற்போதைய ஆய்வின்படி உயர்கல்வியில் பெண்கள் 35 சதவீதம் பயில்கின்றனர். கல்லூரிக் கல்வியில் கேரளம், தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகப் பெண்கள் உள்ளனர் என்ற கருத்தினையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை 1992-ல் செய்த மாற்றத்தின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்கு சிறப்பிடம் வகிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படி இருக்கும்போது நாடாளுமன்றத்திலும் மூன்றில் ஒரு பங்கு மகளிர்க்கு இட ஒதுக்கீடு செய்வதில் என்ன பிரச்சினை ஏற்பட்டு விடப் போகிறது?

அதிகாரப் பரவல் மகளிர் சமுதாயத்தை முழுமையாக எட்ட வேண்டுமானால் சட்டத்தை உருவாக்கும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை முழு மனத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

ஒட்டுமொத்த சமுதாயத்தின் உயர்வுக்காக, மகளிர் உரிய இடத்தைப் பெற வேண்டும். இது ஒரு பொதுத்தேவை என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர வேண்டும்.

""பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்''

~என்ற பாரதியின் பிரகடனத்துக்குச் செயல்வடிவம் தர முன்வர வேண்டும்.

said...

நன்றி பாஸ்டன் பாலா, நல்லதொரு கட்டுரை அது. எல்லோரும் அதிகாரத்தில் பங்கு கொள்ளும் போது தான் சமரசமில்லா சம தர்ம சமுதாயம் வளரும்.

நன்றி

said...

குழலி சொல்வது 100க்கு 100 உண்மை. பெர்ம்பலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி, கோக்குடி கிராமம் இன்னும் இதே நிலையில்தான் உள்ளது. இங்கு ஒரு பெண்தான் ஊராட்சி மன்ற தலைவி. பல முறை அவரை அனுகியபோது அவருடைய கணவரையே சந்திக்க சொன்னார். பென்கள் தனித்து செயல்பட இயல்வில்லயா? அல்லது செயல்பட விடுவதில்லயா? பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொடுத்து என்ன பயன்?