பின்னூட்டமே பதிவாக

அய்யா என்னார் அவர்களின் இந்த பதிவிலிட்ட பின்னூட்டம் இங்கே பதிவாக

வணக்கம், நான் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடந்த காலக்கட்டத்தை சேர்ந்தவனில்லை, ஆனாலும் எமக்கு தெரிந்தவரை இந்தி மொழியை யாரும் படிக்க கூடாது என்று அறிவுறுத்தியமாதிரி தெரியவில்லை, அப்படி இந்தி மொழி படிக்க விருப்பமுள்ளவர்கள் எத்தனையோ மாணாக்கர்கள் ஹிந்தி பிரச்சார சபா வழியாகவும் இன்றும் படித்துக்கொண்டுள்ளனர், இதை யாரும் கையைப்பிடித்து தடுத்ததாக தெரியவில்லை எமக்கு.

இந்தியை ஒரு கட்டாய மொழிப்பாடமாக படிப்பது என்பது தான் இங்கு பிரச்சினையே, முதலில் கட்டாய மொழிப்பாடமாக ஆரம்பித்து பின் மொத்தமாக இந்தி என்னும் ஒட்டகம் கூடாரத்தினுள் புகுந்து விடும், இப்படித்தான் இன்று குசராத்தி, மற்றும் இன்ன பல கூடாரங்களில் இந்தி மொழி புகுந்து விட்டது.

//வட, மத்திய, கிழக்கு மாநிலங்களில் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்கள் இந்தி தெரியாமல் அனுபவிக்கும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
//
ஒரே ஒரு மொழிப்பாடமாக ஆங்கிலம் படித்தவர்கள் எல்லாம் ஆங்கிலத்திலே புலமையோடு இருப்பதாகவும் நன்றாக ஆங்கிலம் பேசுபவர்களாகவும் இருக்கின்றனர்களா? மனதை தொட்டு சொல்லுங்கள், இல்லையே, ஒரே ஒரு மொழிப்பாடமென்ன, ஆங்கில வழியிலே படித்த எத்தனையோ மாணாக்கர்கள் 5 நிமிடம் ஆங்கிலத்தில் பேசத்திணறியதை நானே கண் கூடாக கண்டுள்ளேன்,அதே போல இந்தியை ஒரு மொழிப்பாடமாக படித்தால் அவர்கள் இந்தி பேசும் மாநிலங்களுக்கு செல்லும்போது அ,ஆ கற்றுக்கொள்ள தேவையில்லையே தவிர மீண்டும் அங்கு முதலிலிருந்து பேசி பழகும்போது தான் இந்தி பேசுமளவிற்கு வரும், அவ்வளவே. மேலும் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது எமக்கு தெரிந்தவரை வெறும் மொழியுணர்ச்சி மட்டுமல்ல, மேலாதிக்க எதிர்ப்பும் கூட, இந்தி மொழியை கட்டாய மொழிப்பாடமாக படிப்பது loose-win நிலமை, இப்படியே சீன நாட்டிற்கு போகும்போது மேன்டிரின் தெரிந்து கொள்ளவேண்டுமென்பதற்காக இங்கே
சீன மொழி மட்டும் என்ன பாவம் செய்தது,சீன மொழியை ஒரு மொழிப்பாடமாக படிக்க ஆரம்பிக்கலாம், சப்பான் நாட்டு மொழியும் தான், மற்ற எல்லா இடங்களுக்கும் செல்லும் தமிழர்களைவிட பிழைப்புக்காக கர்னாடகா செல்லும் தமிழர்கள் தான் மிக அதிகம், தொழில்நுட்ப வல்லுனர்களும் சரி, படிப்பறிவே இல்லாமல் கூலித்தொழிலாளியாக செல்பவர்களும் சரி, எனவே இந்த வாதத்தின் படி இந்தி படிப்பதை விட கன்னடம் படிப்பதே மிகச்சரியாக இருக்கும். ஆனால் அங்கே இந்தி பேசும் வட இந்தியர்களை விட மிக எளிதல் கன்னடம் பேசி கற்றுக்கொண்டு நெருக்கமாக இருப்பவர்கள் தமிழர்கள் தான், எனவே தேவையெனில் எந்த மொழியையும் கற்றுக்கொள்வது தவறே இல்லை.

ஒரு இனத்தின் அடையாளத்தை அழிக்க, ஒரு இனத்தின் மீது மேலாதிக்கம் செய்ய முதலில் அந்த மொழியை அழி, இது தான் ஈழத்திலே தமிழ்மக்களின் மீது தாக்குதல் தொடுக்கும்முன் மொழியின் மீது தாக்குதல் தொடுத்ததற்கு காரணம், யாழ்பாணத்திலே நூலகம் எரியூட்டப்பட்டதற்கு காரணம்.

மருத்துவர் இராமதாசு ஆங்கிலம் படிக்க கூடாது என்று கூறியமாதிரி எமக்கு தெரியவில்லை.

அய்யா , ஒரு மென்பொறியியல் நிறுவனம் பெங்களூரிலே கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் அதன் பெயர் பலகை உள்ளது, அதே மென்பொறியியல் நிறுவனம் சென்னையில் ஆங்கிலத்தில் மட்டும் பெயர்பலகை எழுதியிருந்தது, இதற்கு என்ன காரணம்?

//இங்குதான் அவர் குடும்பத்தினர் இருக்கிறார்களே, இங்கேயே தமிழ்வழிக் கல்வி படிக்க அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டியதுதானே!
//
ஏற்கனே இதே கேள்விக்கு டோண்டு அய்யாவிற்கு சொன்ன பதில்தான், ஒரு தந்தையும், தாத்தாவும் தமிழ் மொழிப்பற்றி பேசுகிறார்கள் என்பதற்காக சிறு குழந்தைகள் பெற்றோர்களை விட்டு பிரிந்திருக்க வேண்டுமென்பது சத்தியமாக எந்த விதத்தில் நியாயம்.

// அன்று இந்தி என்ற மாயத்தோற்றத்தைக் காட்டி ஓட்டுகளை விலைக்கு வாங்கியது போல் ராமதாசும் முயல்கின்றார் வேறு ஒன்றம் இல்லை//
அய்யா தமிழ் மொழி உணர்வை காட்டி இன்று ஒரு ஓட்டுகூட கூடுதலாக வாங்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை, இது மருத்துவருக்கும் திருமாவுக்கு நிச்சயமாகத் தெரியும்.

இத்தனை நாட்கள் அன்புமணியின் குழந்தைகள் தமிழ் மொழிப்பள்ளியில் படிக்க வில்லை என ஜல்லியடித்தனர், தற்போது அதற்கான பதில் கிடைத்தவுடன் அடுத்து அன்புமணி குழந்தைகளில் பெயரை ஆரம்பித்துவிட்டனர், அந்த குழந்தைகளின் வயது 12,14 பெரியார் நாத்திகம் பேசுவதற்கு முன் சில கோவில்களில் தர்மகர்த்தாவாக இருந்தார், கருநாநிதி அவர்களின் பெயர் பிரபலமாகிவிட்டதால் பேராசிரியர் அன்பழகன் பெயர் மாற்றிக்கொண்டபோது அவர் பெயர் மாற்றிக்கொள்ளவில்லை.

இராமதாசு மீதும், கருநாநிதி மீதும் காழ்ப்புணர்ச்சி,வெறுப்பு இருந்தால் வேறு வழியில் அதை காண்பிக்கலாம், அதற்காக அவர்கள் கூறும் சில நல்ல கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல.

ஒரு வாதத்திற்காக கேட்கின்றேன், அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் என்பதற்காக அந்த கருத்தே தவறு என்பது எந்த விதத்தில் நியாயம்

//அவசர சிகிச்சைப் பிரிவில் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கவில்லை தமிழ் மொழி//
இப்படியே போய்கொண்டிருக்கும்போது அந்த நிலை வரும் நாள் வெகுதொலைவில் இல்லையெனத் தோன்றுகின்றது. அய்யா தமிழை படியுங்கள், ஆங்கிலத்தில் மட்டும் பெயர்பலகையா? தமிழிலும் பெயர்பலகை எழுதுங்கள், மிக எளிதாக அனைவரிடமும் ஊடுறுவும் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர்வையுங்கள் என்பதற்கு இத்தனை ஏச்சும்,பேச்சுமென்றால் மூச்சு திணறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை

15 பின்னூட்டங்கள்:

said...

என்னார் அவர்களுக்கு இட்ட பின்னூட்டமே உங்களுக்கும்...

குழலி மிக நீண்ட அருமையான விளக்கம் கொடுத்துவிட்டார்.

கருணாநிதி, மருத்துவர் இராமதாசு போன்றோர் குரல் கொடுத்த பின்னர்தான் தமிழ் மொழிக்கு ஆக்சிஜன் தேவைப்படவில்லை என்பது வரலாற்று உண்மை. இந்தி திணிப்பு என்பது தமிழை அழிக்க வேண்டும் என்பதன் மறைமுகத்திட்டம்தான். இது குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுத எண்ணம் இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மலையாளம் என்ற ஒரு மொழியே உலகில் இல்லை. தமிழொடு சமஸ்கிருதம் கள்ளத்தொடர்பு கொண்டு பிறந்த குழந்தையே மலையாளம். இப்படித்தான் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளும் உருவானது.

said...

குழலி,
உங்கள் பொறுமையும் சகிப்புத் தன்மையும் எனக்கு ஆச்சரியமூட்டுகிறது.

விட்டுத் தொலையுங்கள், இவர்கள் எப்படியும் மாறப்போவதில்லை. அப்போராட்டத்தில் நேரடியாப் பங்குகொண்டவர்கள்கூட எழுதியாயிற்று. தான் நினைப்பதை தன் தாய்மொழியில் வெளிப்படுத்த முடியாத சந்ததியைப் பார்த்து இவர்களுக்கு வெட்கம் வரவில்லை. இந்திபேசத் தெரியாததுக்கு வெட்கம் வருகிறது. இன்னும் 'மன்னிப்பா' 'மண்ணிப்பா' சரியெனத் தெரியாமல் வலைப்பதிபவர்கள் (கவனிக்க தட்டச்சுப் பிழைகளைச் சொல்லவில்லை) ராமதாசின் போராட்டத்தையும் பழைய இந்தியெதிர்ப்புப் போராட்டத்தையும் கேலி செய்வதுதான் வேடிக்கை.

இருந்து பாருங்கள் இவர்கள் ஒருநேரத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம்கூட முட்டாள் தனமானது என்று சொல்லப்போகிறார்கள்.

said...

"அந்த குழந்தைகளின் வயது 12,14."

அப்படியா. நான் சிறு குழந்தைகள் என்றல்லவா நினைத்தேன்? இது வரை தமிழ்நாட்டில்தானே இருந்தார்கள்? என்னப் பள்ளியில் படித்தார்களாம்? தமிழ் மீடியமா?

தில்லி தமிழ் கழகத்தில்தான் தமிழ் மீடியம் உள்ளது. ராமதாசு அவர்கள் தமிழ் வழிக்கல்வியையே வலியுறுத்துகிறார், வெறுமனே தமிழ் ஒரு பாடமாக அல்ல.

மேலும் அன்புமணி செய்தது தவறே இல்லை என்றும்தானே கூறினேன். அதையே தொண்டர்களையும் பின்பற்றும்படி அறிவுரை கூறினால் ஏன் எல்லோருக்கும் கோபம் வர வேண்டும் ப்ராக்டிகலாகத் தலைவர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பது எண்ணமா?

தன்னால் செய்யப்படாததை அல்லது செய்ய முடியாததை மற்றவர்கள் மேல் திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். கேலி செய்கிறோம்.

அன்புமணி அவர்கள் ஏன் ஆங்கிலப் பள்ளியில் படித்தர் என்ற கேள்விக்கு பதில் இது வரை இல்லை.

இன்னொன்று. நாம்தான் இங்கு தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கிறோம். தலைவர்கள் அவர்கள் பாட்டுக்கு தங்கள் நலன்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மறுபடியும் கூறுவேன், தொண்டர்களே உங்கள் குழந்தையின் நலனுக்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

மிக அருமையாக நிதானமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி!

said...

//"அந்த குழந்தைகளின் வயது 12,14."//

அய்யா சரியாகத்தெரியவில்லை, முதல் குழந்தை 6(அ)7வது படிக்கின்றார், அடுத்த குழந்தை அனேகமாக 5(அ)4ம் வகுப்பு படிப்பார் என நினைக்கின்றேன்.

//இது வரை தமிழ்நாட்டில்தானே இருந்தார்கள்? என்னப் பள்ளியில் படித்தார்களாம்? தமிழ் மீடியமா?
//
அதற்கு தான் துக்ளக்கும் அந்துமணியும் இருக்கின்றனரே.

ஏற்கனவே அந்துமணி அவர்கள் DTEA பள்ளிகளின் கொ.ப.செ. யாகிவிட்டார்.

//அன்புமணி அவர்கள் ஏன் ஆங்கிலப் பள்ளியில் படித்தர் என்ற கேள்விக்கு பதில் இது வரை இல்லை.
//
ஒரு வேளை இது உண்மையென்றால்,

பெரியார் கூட ஆத்திகராக இருந்து பின் நாத்திகரானவராம்,

அருணகிரிநாதர் கூட பித்தராக இருந்து சித்தராக மாறியவராம்,

பதில் கிடைத்திருக்கும் என நினைக்கின்றேன்.

டோண்டு அய்யா நீங்கள் கேள்விகேட்டு நான் பதில் சொல்லி உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளப்போகின்றீரா? எனவே தயவு செய்து கேள்வியை பொதுவில் கேளுங்கள்
எனக்கு விருப்பமிருந்தால் பதில் சொல்கின்றேன், இல்லையென்றால் சொல்லாமல் சென்று கொண்டே இருப்பேன், என் பெயரை சொல்லி கேட்கும்போது எனக்கு தேவையின்றி நிர்பந்தம் ஏற்படுத்தப்படுகின்றது, என் முழு நேர வேலையுமே உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வதாகவே போகின்றது அதனால் உங்களிடத்தில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது என்ற போதும். எனவே தாழ்மையாக கேட்கின்றேன் கேள்வியை பொதுவில் வையுங்கள் என் பெயரை குறிப்பிடாமல், விருப்பமிருந்தால் பதிலளிப்பேன், இல்லையென்றால் அளிக்க தேவையில்லை.

நன்றி

said...

டோண்டு அய்யா தமிழ் என்ன பனியனா தமிழ் மீடியம் தமிழ் லார்ஜ் தமிழ் ஸ்மால் எல்லாம் பார்ப்பதற்கு முதலில் தமிழை தமிழாகப் பேசக் கற்றுக்கொண்டால் தமிழ் அழிகிறதா இல்லையா என்ற உணர்வு தானாக வரும்

said...

நம் பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், அதை த.பா.இ என்று ஒன்றை ஆரம்பித்து சிலர் வம்படியாக வலியுறுத்தும்போது, அது கேலிக்கும் எதிர்ப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகிறது. சொல்பவர் அதை கடைபிடிக்கிறாரா, அவர் தமிழுக்காக என்ன செய்திருக்கிறார் என்ற கேள்விகள் நிச்சயம் எழும். அப்படி கேட்பதற்கு ஜனநாயகத்தில் உரிமையும் உள்ளது.

என்னளவில் கூறுகிறேன். கலைஞர் போன்றவர்கள் தமிழ் படிப்பதை வலியுறுத்தினால், அவர் தமிழுக்கு ஆற்றிய சேவையை மனதில் கொண்டு விமர்சிக்க மாட்டேன். அவர் அரசியலைப் பற்றி அக்கறை இல்லை. மேலும், என் மகள் தமிழ் மொழியைத் தான் இரண்டாம் பாடமாக எடுத்துக் கற்கிறாள். பல நல்ல தமிழ் புத்தகங்கள் அவள் படிக்க வாங்கித் தந்து தமிழார்வத்தை ஏற்படுத்தி வருகிறேன். தொடக்கத்திலிருந்தே, "மம்மி, டாடி, அங்கிள்" போன்றவைகளை பிரயோகிக்காமல் பார்த்து வருகிறேன்.

என் நிலைப்பாடு குறித்து விளக்கவே இது! நன்றி!

--- எ.அ.பாலா

said...

"எனக்கு விருப்பமிருந்தால் பதில் சொல்கின்றேன்,"

விருப்பம் மட்டும் இருந்தால் போதாது. சொல்வதற்கு பதிலும் இருக்க வேண்டும். மேலும் ஒருவர் பதிவுக்கு வந்து பின்னூட்டமிடும்போது அவரிடமும் கேள்விகள் வைக்கப்படும் என்பதும் தவிர்க்க முடியாததே.

மேலும், தமிழ்நாட்டில் இருந்திருந்தால் அன்புமணி தன் குழந்தைகளை நல்லத் தமிழ்ப்பள்ளியில்தான் படிக்க வைத்திருப்பார் என்று ஒரு முறை கூறப்பட்டது. ஆகவேதான் அக்குழந்தைகள் இங்கு இருந்தவரை தமிழ் வழிக் கல்வி படித்தார்களா என்று கேட்டேன்.

"பெரியார் கூட ஆத்திகராக இருந்து பின் நாத்திகரானவராம்,

அருணகிரிநாதர் கூட பித்தராக இருந்து சித்தராக மாறியவராம்,

பதில் கிடைத்திருக்கும் என நினைக்கின்றேன்."

ஆக சமீபத்தில்தான் இவர்களின் தமிழ் உணர்வு பீறீட்டு கொண்டு வருகிறது! ஏன்?

பாவம், இதற்கு மேல் உங்களை சங்கடமான கேள்விகள் கேட்டு தொந்திரவு செய்யவில்லை. பதிலைத்தான் மறைமுகமாகவே கூறிவிட்டீர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

குழலி,
தூங்குகிறவர்களை எழுப்பி விடலாம்.
தூங்குகிறவர் மாதிரி நடிப்பவர்களை எழுப்பவே முடியாது .

எவ்வளவோ விளக்கங்கள் சொன்ன பிறகும் தொடங்கிய இடத்திலிருந்து நகர மறுப்பவர்களை என்ன செய்ய முடியும்?

said...

//வட, மத்திய, கிழக்கு மாநிலங்களில் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்கள் இந்தி தெரியாமல் அனுபவிக்கும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
//

என்னாரின் இந்தக் கருத்து ஒத்துக்கொள்ள முடியாதது. வட மாநிலங்களுக்கு மட்டுமல்ல, எங்கே பிழைப்புத் தேடிச் சென்றாலும் அங்கே உள்ள மொழியை எளிதில் கற்றுத் தேர்ந்தவர்களாகவே நமது தமிழர்கள் உள்ளனர். தமிழகத்தில் இருக்கும்போது படிப்பறிவே இல்லாமல் இருந்து வளைகுடா நாடுகளுக்கு சென்ற பின் உருதுவும் அரபியும் மிகச் சரளமாகப் பேசும் பல தமிழர்களை நான் இங்கு கண்டிருக்கிறேன்.

இந்தி திணிப்பை எதிர்த்ததனால் தமிழகம் எந்த ஒரு வளர்ச்சியிலும் பின் தங்கிவிடவில்லை (மத்திய அரசு ஒரு காலகட்டத்தில் எல்லாம் நம்மை கண்டுகொள்ளாமல் இருந்தபோதும்).

பிழைப்பு தேடி வெளியில் செல்பவருக்கு அந்த ஊர்மொழி என்றுமே ஒரு பிரச்சனையாக இருந்தது இல்லை. They know how to survive.

said...

//விருப்பம் மட்டும் இருந்தால் போதாது. சொல்வதற்கு பதிலும் இருக்க வேண்டும்//

இதுவரை நான் சொன்ன பதில்களே போதுமென்று நினைக்கின்றேன், நேரடியாக சொல்வதென்றால் இதற்கு மேலும் சொல்வது என்னை பொறுத்தவரை வீண் வேலை, ஒநாய் ஆடு கதைதான் நினைவுக்கு வருகின்றது.

//பாவம், இதற்கு மேல் உங்களை சங்கடமான கேள்விகள் கேட்டு தொந்திரவு செய்யவில்லை. பதிலைத்தான் மறைமுகமாகவே கூறிவிட்டீர்களே.
//
உங்களுடைய கருணைக்கு மிக்க நன்றி அய்யா

said...

//எவ்வளவோ விளக்கங்கள் சொன்ன பிறகும் தொடங்கிய இடத்திலிருந்து நகர மறுப்பவர்களை என்ன செய்ய முடியும்?//
ஒன்றும் செய்ய முடியாது தான் ஜோ...

//பிழைப்பு தேடி வெளியில் செல்பவருக்கு அந்த ஊர்மொழி என்றுமே ஒரு பிரச்சனையாக இருந்தது இல்லை. They know how to survive.
//
சரியாக சொன்னீர்கள் கேவிஆர், ஆங்கிலத்திலே ஏ,பி,சி,டி கூட தெரியாதவர்கள் சிங்கையிலே வந்து ஆங்கிலம் பேசுவதும், மலேசியாவிலே மலாய் பேசுவதும் தேவை வரும்போது எந்த மொழியையும் கற்றுக்கொள்வார்கள் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

நன்றி

said...

சாலமன் பாப்பையாவின் ஆதங்கம்
http://www.dinamalar.com/2005Aug20/tn6.asp

said...

ஆஹா!!! அப்ப நீங்களும் நம்மளப்போல தினமலர்தான் படிக்கிறீர்களா?

அப்படியே இதையும் கொஞ்சம் படிச்சிடுங்க..... இந்த நூற்றாண்டில் சுமார் 50 முதல் 90 சதவீதமொழிகள் மரித்துவிடுமாம்.

said...

நன்றி வெங்காயம், இன்னுமொரு ஆய்வுக்கட்டுரை படித்தேன் அதில் இந்திய மொழிகளில் எதெல்லாம் அடுத்த நூற்றாண்டில் பேச்சுவழக்கிலிருந்து ஒழிந்திருக்கும் என்று சில புள்ளி விவரங்களோடு தந்திருந்தனர், அதைத்தான் தேடிக்கொண்டுள்ளேன் அச்சு பதிவில் படித்தேனா? அல்லது இணையத்தில் படித்தேனா எனத்தெரியவில்லை. உங்களுக்கு கிடைத்தால் தெரிவியுங்கள்

நன்றி