Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது

ஊரே பரபரப்பாக இருக்கின்றது, எந்த பக்கம் திரும்பினாலும் புரட்சி பற்றிதான் பேச்சே, தினசரி, வார மாத பத்திரிக்கையில் எல்லாம் புரட்சி வருவதை பற்றி தான் பேச்சே புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது...

ஆமா "சுதந்திரம்" வந்து எல்லாத்தையும் புடுங்கிடுச்சி, மீதியை புரட்சி வந்து தாம் புடுங்கப்போவுது சலித்துக்கொண்டார் டீக்கடை பாய்

சுதந்திரம் வந்து என்ன புரட்சி வந்து என்ன? எல்லாம் பணம் இருக்கிறவனுக்கு தாம்பா, நம்மளை மாதிரி ஏழைபாழைங்களுக்கு உழைச்சாதான் அரை வயிறு தின்னலாம், போப்பா போயி வேலையைப்பாருங்கப்பா கும்பலாக புரட்சி வருவதை பற்றி பேசிக்கொண்டிருந்த சிவப்பு சட்டை போட்ட "போர்ட்டர்" தோழர்களை விரட்டிக்கொண்டிருந்தார் ஹெ.எம்.எஸ் கோபால்

அரசியல் தலைவர்களிலும் கூட புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் அறிக்கைகள் விடப்பட்டுக்கொண்டிருந்தது

புரட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது - திமுக தலைவர் உதயநிதி அறிவிப்பு

புரட்சியை ஆதரித்தால் தமிழ்நாடு உருப்படாது, புரட்சியை எதிர்த்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அறிக்கை

புரட்சியை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை, - மாதிமுக(மாறன் திமுக) தலைவர்

நாங்கள் வித்தியாசமானவர்கள், மதுரைக்கு வடக்கே புரட்சிக்கு ஆதரவும் மதுரைக்கே தெற்கே எதிர்ப்பும் தெரிவிப்போம் மதுரையில் ஆதரவோ எதிர்ப்போ செய்யமாட்டோம், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் தலைமையை ஏற்கும் வரை நான் தேமுதிக வின் தலைமை பொறுப்பில் இருப்பேன், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் அவர்கள் தலைமை ஏற்கும் நாளுக்காக காத்திருக்கிறோம், அதன் பின் ஒரு தொண்டனாக தேமுதிகவில் தொடருவேன் - தேமுதிக தலைவர்(பொறுப்பு) சுதீஷ் பரபரப்பு பேட்டி

புரட்சி பற்றி முடிவு செய்ய புரட்சித்தலைவியின் ஆணைக்காக காத்திருக்கின்றோம், புரட்சி தலைவி கனவில் வந்து ஆணையிட தயாராக இன்றிலிருந்து புரட்சி வரும் நாள் வரை தூங்கப்போகிறோம், புரட்சி தலைவர் நாமம் வாழ்க, புரட்சி தலைவி புகழ் ஓங்குக - அதிமுக பொதுச்செயலாளர் ஏகாம்பரம் பேட்டி

புரட்சி உழைக்கும் மக்களை சுரண்டும் பொறுக்கிகளின் கொண்டாட்டம், உழைக்கும் மக்களை உடனடி பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் செயலே புரட்சி இதோ வருது புரட்சி அதோ வருது என்கிற நாடகம், புரட்சி வருது வருது என்று இத்தனை நாட்களாக மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் புரட்சியை ஆதரிக்கும் தரகு முதலாளிகள் - தோழர் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தி அய்யங்கார் - ம க இ க செயலாளர் - புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் வெளியிட்ட அறிக்கை தோழர் "தீவிர அசுரனின்" வலைப்பதிவில்...

கரகம், காவடி மேள தாளங்களோடு பீர் விஸ்கி கைகளோடு புரட்சியை வரவேற்க ஊர் எல்லையிலேயே காத்திருந்தார்கள் இளைஞர்கள்....

"ஏம்பா கி.பி. 2000த்துலயே ஒரு புரட்சி வந்து ஊத்திக்கிச்சாமே தெரியுமா?"

"ஆமாம் நானும் கேள்விப்பட்டேன், நெட்ல கூட அது டீட்டெய்ல்ஸ் தேடினேன், 2000ல புரட்சி வந்ததுன்னு தகவல் இருக்கு ஆனா அதுக்கு மேல வேற ஒண்ணும் தகவல் இல்லை"

"ரொம்ப வருசம் கழிச்சி இந்த புரட்சி வந்திருக்கு, ஏற்கனவே சுதந்திரம் ஊத்திக்கிச்சி, இந்த புரட்சியும் ஊத்திக்கிச்சினா அவ்ளோதான் நம்ம கனவெல்லாம் வீணாயிடும்"

ஏய் புரட்சி வந்துருச்சி புரட்சி வந்துருச்சி, கத்திக்கொண்டே அந்த காரை நோக்கி ஓடினார்கள் இளைஞர்கள்....

தாரை தப்பட்டை முழங்க காரை சுற்றி சுற்றி வந்தார்கள்...

முகத்தை தொங்க போட்டபடி இறங்கினார் ....

எல்லோரிடமும் அப்போது ஒரே கேள்வி தான் புரட்சி வந்துருச்சா?? ஒரு வேளை முதலாளி புரட்சி வராம இருக்க சதி செய்துட்டாரா?, அவருக்கு புரட்சி வருவதில் விருப்பமேயில்லை, அவர் பையன் தான் புரட்சி வரவைக்க ஆர்வமாக இருந்தார்...

"அண்ணே புரட்சி வந்துருச்சா? "

"அட என்னப்பா திடீர்னு கூட 50 லட்சம் கூட குடுத்தாதான் புரட்சியை கொடுப்பேன்னு சொல்றானுங்க, அதான் பணம் பொறட்டிக்கிட்டு போக வந்துருக்கேன், பயப்படாதிங்க நாளைக்கு காலையில எட்டரை மணிக்குள்ள புரட்சி வந்துடும்"

புரட்சி - சென்ற மாதம் தான் அறுபதாம் கல்யாணம் செய்த சூப்பர் ஸ்டார் "விஜய்" - பழம் பெரும் நடிகை ஸ்ரேயாவின் பேத்தி சுரேயா நடிக்க 200 கோடி ரூபாய் செலவில் தயாரான தமிழ் திரைப்படம்

பின்குறிப்பு:
இது ஒரு மீள்பதிவு

அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா - காதலர் தின சிறுகதை

"அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ, ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு" பிண்ணனியில் ஓடிக்கொண்டிருக்க கையிலே அன்றைய தினத்தந்தியை வைத்துக் கொண்டு பொங்கிக்கொண்டிருந்தான் ஞாநி வாத்தியார் பையன், இந்த சாதி கட்சி தலைவனுக்கு வேற வேலையே இல்லை, காதலர்தினத்தை கொண்டாடக்கூடாதாம், காதலின் சக்தி தெரியுமா அவனுக்கு காதல் மதத்தை உடைக்கிறது, காதல் சாதியை அழிக்கிறது, காதல் வர்க்க வேறுபாட்டை களைகிறது, காதலைக் கண்டு சாதித்தலைவன் பயப்படறது ஒன்னும் ஆச்சரியமில்லை. சாதி அடிப்படையில் ஓட்டு பொறுக்க முடியாத சிக்கலை காதலும் கலப்பு மணமும் ஏற்படுத்திடுங்கறதாலதான் பயப்படுறானுங்க.

"அழாதடா ராசா என் கண்ணு இல்ல அழாத, இரு தாத்தா முட்டாய் வாங்கித்தரேன், ரெண்டு தேன் முட்டாய் குடுங்க"

முட்டாய் வாய்க்குள் போனதில் அழும் சத்தம் மட்டும் கொறைஞ்சாலும் விசும்பலோடு தாத்தாவோடு ஒட்டிக்கொண்டே போனான் ஒரு வாரம் முன்னாடி டெய்லரோட ஓடிப்போன செல்வி பையன்.

"தேவுடியா முண்ட, புள்ளைய உட்டுட்டு ஓடியிருக்கா பாரு அரிப்பெடுத்தவ"

கடைசி பஃப் புகையை இழுத்துவிட்டு பஞ்சை கீழே போட்டு ஆத்திரத்தோடு மிதித்தேன்

"ஏன் ஓடுனா என்ன? அவ புருசன் கையாலாகாதவனா இருந்திருப்பான் ஏன்டா இப்படி கற்பையும் கலாச்சாரத்தையும் தொடையிடுக்குல தேடுறிங்க"

"என்ன இருந்தாலும் சின்ன புள்ளைய உட்டுட்டு ஓடிட்டா பாரு"

"புள்ளை இருந்துட்டா எல்லாத்தையும் பொறுத்துக்கனுமா? ஆசாபாசம் எதுவும் இருக்க கூடாதா?"

"சரி சரி உடு மச்சான் உங்கிட்ட நம்மால பேச முடியாது, நான் கிளம்புறேன், நாலு நாளா முனிசிபாலிட்டி தண்ணி எங்க தெருவுக்கு வரலை, கவுன்சிலரை பாக்கப்போவணும், நீ ரொம்ப சூடா இருக்க, ஜில்லுனு ஒரு பெப்சி குடிச்சிட்டு போ" நண்பனிடம் சொல்லிட்டு சிகரெட்டுக்கும காசு கொடுத்துட்டு ரெண்டு நிஜாம் பாக்கை பிரிச்சி வாயில போட்டுக்கிட்டு சைக்கிளை எடுத்தேன்...

ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு வாய் முனுமுனுத்துக்கொண்டே வந்தது, காதல் மதத்தை ஒழிக்கும், காதல் சாதியை ஒழிக்கும், சைடு எஃபெக்டாடக நண்பன் சொன்னதும் ஒலித்துக்கொண்டே வந்தது.

சைக்கிள் என் தெரு முனையில திரும்பும்போது குறுக்கால ஒரு குட்டிப்பையன் ஓடிவந்தான், ஏய் ஏய் சடக்கென்று பிரேக் அடிச்சி மேலே இடிக்காம வண்டியை நிறுத்தினேன்...

"ஹேய் ராகவ், ராகவ் ஸ்டாப் ஐ சே" சத்தம்போட்டுக்கொண்டே அவனை பிடித்து தூக்கி வைத்துக்கொண்டார்இது கலைச்செல்வி அக்கா கொரல் மாதிரி இருக்கே....

"அக்கா, நீங்க கலைச்செல்வி அக்கா தானே?"

"ஆமான் டா குரு, என்னடா மறந்துட்டியா"

"இல்லக்கா பாத்து ஒரு அஞ்சாறு வருசமிருக்கும், கொஞ்சம் குண்டாயிட்டிங்க, அப்புறம் கலரா வேற ஆயிட்டிங்களா அதான் சட்டுனு அடையாளம் தெரியலை"

சட்டுனு அவங்க முகத்தில ஒரு லேசான பெருமித மின்னலடிச்சது....

"ம்...குரு வீட்ல எல்லாம் சவுக்கியமா? ஆமாம் என்ன பண்ணறே?"

"வி.எஸ்.டில வொர்க்ஷாப்ல தான்க்கா மெக்கானிக்கா இருக்கேன், அக்கா ஸ்டேட்ஸ்லருந்து எப்போ வந்திங்க?"

"ரெண்டுவாரம் ஆகுது, அவர் வீட்டுக்கு போயிட்டு நேத்துதான் இங்க வந்தேன்"

"மாமா வந்துருக்காரா? எப்பிடியிருக்காருக்கா?"

சொந்தக்காரங்க இல்லாம வேற யாரையும் சட்டுனு மாமான்னு கூப்புடமாட்டோம் ஆனா கலைச்செல்வி அக்கா வூட்டுக்காரரை மட்டும் மாமானு சொல்லுவேன், அக்கா லவ் மேரேஜி, அவங்க வீட்டுக்காரர் அய்யிரு, பள்ளிக்கூடத்துலருந்தே அய்யிருபசங்களை மாமானு ஜாலியா கூப்புட்டே பழகிடுச்சா, அதான் சட்டுனு கலைச்செல்வி அக்கா வூட்டுக்காரரையும் மாமானு சொல்லிட்டேன்.

"வந்திருக்காரு டா, நல்லா இருக்காரு, உள்ள வாயன் டா, டீ குடிச்சிட்டு போலாம்"

"இல்லக்கா, அர்ஜென்டா கவுன்சிலரை பாக்க போறேன், நாலு நாளா நம்ம தெருவுல தண்ணிவரலை "

"சரி பாத்துப்போ"

சட்டை போடாம துண்டு மட்டும் கட்டியிருந்த இருந்த ராகவை அக்கா தூக்கிக்கிட்டு உள்ளே போகும்போது தான் கவனித்தேன் ராகவ் முதுகுல குறுக்கால புதுசா போடப்பட்டிருந்த பூணுலை.

"காதல் சாதியை ஒழிக்கும், காதல் மதத்தை ஒழிக்கும்" நண்பன் சொன்னது ஸ்டீரியோ எஃபெக்டில் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.... வாய் மட்டும் அண்ணிச்சையாக முனுமுனுத்தது "அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு"

அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கலாம், சரி அய்யிரு பையன் மீன் வாங்கப்போயிருப்பானா? ராகவ் முதுகுல போட்டுருந்த பூணுலை பார்த்த பிறகு அந்த நம்பிக்கையில்லை... பாட்டெழுதனவங்கிட்ட கேட்கனும் அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்திருந்தப்ப அது பேரு என்ன? ஷகீராவானு?

லவ் சிம்பல் போட்டு காதலர் தின வாழ்த்து சொல்லி போஸ்ட்டர் ஒட்டியிருந்துருக்கானுங்க விஜய் ரசிகர் மன்ற பசங்க, இவ்ளோ நாள் நியூ இயர்க்கு போஸ்ட்டர் ஒட்டுனானுங்க இப்போ காதலர் தினத்துக்குமா... ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்.... போஸ்டரை பாத்தவுடன் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம்....

அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு.......

கவுன்சிலர் வீட்டை நெருங்கிய போது மெலிதான விசும்பல் சத்தம் வந்தது கூலிக்கு கை காலெடுக்கும் "லெஃப்ட்" கிருஷ்ணாவோடு ஓடிப்போன வசந்தா வீட்லருந்து......

கவுன்சிலரிடம் காத்திருந்து பேசிவிட்டு வீட்டுக்கு போய் சேரும் வரை அந்த மெலிதான விசும்பல் சத்தம் மட்டும் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது..... வசந்தா பேசாம 40 இலட்சத்துக்கு வீடு, நல்ல வேலை, ஊருல நல்லபேருனு இருக்குற ஞாநி வாத்தியார் பைய் மாதிரி பசங்களோட ஓடியிருக்கனும்.......இல்லனா வசந்தா மட்டுமாவது அந்த சாதிக்கட்சி தலைவர் சொல்றதை கேட்டிருக்கலாம், நினைத்துக்கொண்டே அப்போது தான் கவனித்தேன்
"அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு....... " என்று முனுமுனுப்பதை என் வாய் நிறுத்தியிருந்ததை.

பின்குறிப்பு:
கதாசிரியர் காதலுக்கோ, கலப்பு திருமணத்திற்கோ எதிரானவர் இல்லையாம்.... கதாசிரியரே 11 முறை காதலித்தவர் தானாம்... (ஆனால் அவரைத்தான் யாரும் காதலிக்கவில்லை என்பது கதாசிரியர் எப்போதுமே வெளியே சொல்லாத ஒன்று.)

படம் உதவிக்கு நன்றி wwp.saint-valentines.co.uk

கேசவன் சார் - கோட்டா கதை

"சார், ஏ.பி. சார்"

குரல் கேட்டு கதவை திறந்தார் அப்பா, கேசவ் சார் குரல்தான் அது, அப்பாவோட ஸ்கூல்ல ஒன்னா வேலை செய்யிற மேக்ஸ் வாத்தியார், அவர் பையன் கூட எங்க ஸ்கூல்தான், இங்கிலிஷ் மீடியம் அவன்.

"வாங்க வாங்க கேசவ் சார், உட்காருங்க"

அம்மா வந்து வரவேற்றார்

"வாங்க சார், டீ சாப்புடுங்க"

"இல்லமா இப்போதான் சாப்புட்டு வந்தேன்"

பொதுவாக யார் வேண்டாமென்றாலும் வற்புறுத்தி எல்லோரையும் டீ சாப்பிட சொல்லும் அம்மா கேசவ் சாரை அதுக்கு மேல ஒரு தடவை கூட டீ சாப்பிட சொல்லலை.

"என்னப்பா படிச்சிக்கிட்டு இருக்க, லீவ் நாள்ல கூட படிக்கிற"

"என்ட்ரன்ஸ் எக்சாமுக்கு படிக்கிறேன் சார்"

"ம்.... என்ட்ரன்ஸ்லாம் டஃப்பா இருக்கும், நல்லா படி"

"சொல்லுங்க சார், நல்லா சொல்லுங்க, கோச்சிங் க்ளாஸ் போயிட்டு வர்ற நேரம் போக மீதி நேரம் பூரா கிரிக்கெட்டு கிரிக்கெட்டு தான் சார் இவனுக்கு"

அப்பா எப்பவும் இப்படித்தான் ஊட்டுக்கு வர்றவங்ககிட்ட என் மானத்தை வாங்குறதே வேலை இவுருக்கு, எவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு படிச்சாலும் வர்றவங்ககிட்ட கொறை சொல்றதே வேலை.

அடிபட்ட அவமானமாக அம்மாவை பார்த்தேன், இதென்ன புதுசா, எப்பவும் நடக்கறது தானே கண்டுக்காத என்பது போல அம்மா பரிவாக பார்த்தார்.

சென்ட்டர்ல வக்கிற மாடல் டெஸ்ட்ல பர்ஸ்ட் ரெண்டு ரேங்க்ல வந்தா பேரை போர்டுல எழுதிப்போடுவாங்க, இந்த வாட்டியும் மணிமேகலைக்கிட்ட பர்ஸ்ட் ரேங்க்கை உட்டுறகூடாது எப்பிடியாவது பர்ஸ்ட்டு வந்துடனும், வைராக்கியத்தோடு ரூம்ல போய் படிக்கலாம்னாலும் ஹால்ல என்ன பேசிக்கிறாங்கங்கறதுலயே ஆர்வம் இருக்கு

"எந்த கோச்சிங் சென்ட்டர்க்கு போறான் பையன்"

"முனிசிபால்ட்டி ஸ்கூல்ல அசோசியேசன்ல நடத்துறாங்களே அங்க தான் சார் போறான், ஒங்க பையனும் +2 தானே, எங்க சேத்துருக்கிங்க"

"மெட்ராஸ்ல எக்ஸெல் கோச்சிங் சென்ட்டர்ல சேத்துருக்கேன், அய்யாயிரம் ஃபீஸ் புடுங்கிட்டாங்க, அண்ணன் வீட்லருந்து கோச்சிங் போறான்"

"இவனும் சொன்னான், ஆனா அவ்ளோ பணமும் கட்ட முடியாது, மெட்ராஸ்ல தங்கி படிக்கவும் யாருமில்லை, இவன் எப்பிடியாவது படிச்சி இஞ்சினியர் ஆயிட்டான்னா என் கடனே தீர்ந்துடும் சார்"

"ஒங்குளுக்கு என்ன சார் கொறச்சல், எங்கள மாதிரியா, அதான் கெவர்மெண்ட்டே கோட்டா குடுக்குதே அப்புறம் என்ன சார்"

அம்மா மட்டும் சரேலென உள்ளே சமயலறைக்கு சென்றார், அப்பாவோ மேலே என்ன பேசுறதுனு தெரியாம தெகச்சி போயிட்டார்.

"சரி அத உடுங்க சார், என்ன இந்த பக்கம் காத்து அடிக்குது"

"ஒன்னுமில்ல, உண்ணாமலை யுனிவர்சிட்டி செட்டியார் பி.ஏ. கஜேந்திரன் ஒங்க சொந்தக்காரர்தானே"

"நெருங்கிய சொந்தமெல்லாம் இல்லை, எங்க மச்சான் பொண்ணெடுத்த ஊருல ஏதோ சொந்தம்"

"இல்ல, என் பையனுக்கு உண்ணாமலையில ஒரு பி.இ. சீட்டு வாங்கனும், அதான் செட்டியார் பி.ஏ.வை வச்சி சீட்டு வாங்கிடலாம்னு"

"அட அங்க எல்லாமே காசுதான் சார், யாரை புடிச்சாலும் நடக்காது, நம்ம சொந்தகாரன், ஜாதிகாரன் இருந்தா கூட எவனும் ஹெல்ப் பண்ணமாட்டாங்க"

"அது தெரியுங்க, நம்பகமா காசு தந்து சீட் கன்ஃபார்ம் பண்ணனுமில்லை, வேற யாரு மூலமாவது போயி காசும் போயி சீட்டும் கெடைக்கலைனா"

"நான் வேணா என் மச்சான்கிட்ட சொல்றேன் சார், அந்த லிங்க்ல செட்டியார் பி.ஏ.வை புடிக்க முடியுதானு பாப்போம், ஆனா நான் என் பையன்கிட்ட சொல்லிட்டேன் ஃப்ரீ சீட்டு கெடைச்சாதான் படிக்க வைப்பேன் இல்லனா பாலிடெக்னிக்குல சேத்துடுவன்னு"

"அட ஒங்குளுக்குதான் கோட்டாவே இருக்கு, நீங்க எதுக்கு சார் பேமெண்ட் சீட்டுக்கு போகப்போறிங்க"

அம்மா உள்ளே பாத்திரத்தை உருட்டும் சத்தம் அதிகமாகவே கேட்டது

கேசவ் சார் போன பிறகு அம்மா அப்பாவிடம் சண்டைக்கு போனார்,

"அதான் மொதல்லயே ஒங்களுக்கு கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு குத்தி காமிச்சாரே, அப்புறமும் எதுக்கு ஃப்ரீ சீட்டு கெடைச்சாதான் படிக்க வைப்பேன்னு சொன்னிங்க, திரும்பவும் கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு சொல்லிட்டு போறாரே, நீங்க எப்பவும் இப்புடித்தான் எகனை மொகனையா வாயவுட்டு வாங்கிக்கட்டிக்கறது"

"அட விடு சுந்தரா, இவர் ஸ்கூல்லயே இப்படித்தான் என்னையும் பி.கே. சாரையும் சொல்லுவாரு, ஒங்களுக்கு என்னா சார் கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு சொல்லுவாரு"

ஏதோ மொனவிக்கிட்டே அம்மா உள்ள போனாங்க

------------------

மூச்சிரைக்க சைக்கிள நிறுத்திட்டு உள்ள ஓடிவந்தேன்

அம்மா வாசல்லயே இருந்தாங்க, என்னை பார்த்துட்டு சைக்கிள் நிறுத்துற நேரம் கூட பொறுக்க முடியாம கேட்டாங்க

"என்னடா எவ்ளோ மார்க்கு?"

அம்மா பாஸானு கூட கேக்கலை, எனக்கு பாஸ் பண்றதுலாம் ஒரு மேட்டரேயில்லைனு அம்மாவுக்கு தெரியும்

"தொள்ளாயிரத்து தொண்ணுத்தி ரெண்டுமா"

சட்டென்று அம்மா முகம் இருண்டது

"என்னடா ஆயிரம் மார்க்கு கூட வாங்கலையா? இந்த மார்க்குக்கு சீட்டு கெடைக்குமாடா"

என் சத்தம் கேட்டு அப்பாவும் தங்கச்சியும் வந்தாங்க

"அம்மா நீ டென்ஷனாகாத, தமிழ், இங்கிலிஷ்லதான் மார்க்கு கம்மி, சப்ஜெக்ட்ல எல்லாத்துலயும் நூத்தி எண்பதுக்கும் மேல, மேக்ஸ்ல நூத்தி எண்பத்தஞ்சி"

அம்மா, அப்பா, தங்கச்சி என எல்லார் மொகத்திலயும் அப்போதான் நிம்மதி வந்துச்சி

"சரி சரி செவப்புகோடு வாங்குன கதையா இதுல மார்க்கு வந்துருக்குனு என்ட்ரன்ஸ்ல உட்டுடாத"

அப்பாவுக்கு எப்பவும் திருப்தி இருக்காது, நாலாவதுல ஒரு தடவை ரொம்ப வெளையாட்டுத்தனமா இருந்து ஃபெயிலாயி ரேங்க்கார்டுல மார்க்குக்கு அடியில செவப்பு கோடு போட்டு இருந்ததை இன்னும் சொல்லிகாமிச்சிக்கிட்டே இருப்பார்

"அப்பா"

"என்னடா?"

"கேசவன் சாரை பார்க்கும்போது சொல்லுங்க, கணக்குல பெயிலா போனா கோட்டா இல்லைனாலும் இஞ்சினியர் சீட்டு கெடைக்காதுன்னு"

"என்னடா சொல்லுற"

"கேசவன் சார் பையன் கணக்குல ஃபெயிலு"

அன்றைக்கு தெரியாது கோட்டா ஜல்லியடிக்கிற நிறைய கேசவன் சாருங்களை வாழ்க்கையில பாக்கப்போறேன்னு

இந்த கதையை குமுதம் வெளியிடுமா?

சுஜாதா எழுதிய அய்யோத்திய மண்டபம் கதையின் அடுத்த பகுதியான "ஸ்ரீரங்கம்" என்ற தலைப்பில் நான் எழுதிய இந்த சிறுகதை குமுதத்தில் வெளியிடப்படுமா? இந்த கதையை குமுதத்திற்கு அனுப்ப என்ன செய்யவேண்டும், விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

குமுதத்தில் சுஜாதாவின் அய்யோத்தியா மண்டபம் கதையை படிக்க முடியாதவர்கள் பாலாவின் சேமிப்பில் இங்கே படிக்கலாம்.

ஸ்ரீரங்கம்

"அங்க அம்மாவாசை தர்ப்பணம் பண்ணி வெக்கறவா யாராவது நம்மவா இருக்காளா? விஜாரி, தர்ப்பையைத் தூக்கிண்டு வந்துர்றேன். என்னால இனிமே அடி தாங்கமுடியாது" என்றார். கலைச்செல்வியின் கண்ணீர் அவர் மணிக்கட்டில் உருண்டது.

அடிதாங்க முடியாத பிராமண மாமனாரை என்னி கண்ணீர் விட்ட கலைச்செல்வியின் கைத்தொலைபேசி சிணுங்கியது

"ஹலோ"

"கலை, அப்பா பேசுறம்மா, நல்லா இருக்கியா"

"நல்லா இருக்கேன் பா"

"என்னமா ஏர்போர்ட்லயா இருக்க"

"இல்லப்பா, இங்க மாமாக்கு அடிப்பட்டுடிச்சி, அதான் ஒரு வாரம் தள்ளிப்போட்டுட்டோம், என்னப்பா ஏர்போர்ட்லயா இருக்கிங்க"

"இல்லமா? நாங்க ஏர்போர்ட்டுக்கு வரலை"

"ஓ, இன்னைக்கு நாங்க கிளம்புறதா சொன்னதால ஏர்போர்போர்ட்டுக்கு வந்திங்களோனு நினைச்சேன், அடுத்த வாரம் வந்துடுங்கப்பா"

"நாங்க ஏர்போர்ட்டுக்கு வரலைனு சொல்ல தான்மா போன் பண்ணேன்"

"ஏன்பா, என்ன ஆச்சி, ஒடம்பு எதும் சரியில்லையா? என்ன ஆச்சி"

"அதெல்லாம் ஒண்ணுமில்லைமா, இந்த கட்டை நல்லா தான் இருக்கு, மனசு தான் சரியில்லை"

"தூரமா போறோமேனு வருத்தப்படுறிங்களா? ரெண்டு வருஷம் தான்பா அப்புறம் இங்க வந்துடுவோம், நான், நீங்க, மாமா எல்லாம் ஒண்ணாவே இருக்கலாம் பா, இதுக்கு மேலயும் நீங்க கஷ்டப்படவேண்டாம் பா"

"ரெண்டு வருஷத்திலயே இங்க வந்துடாதிங்கன்னு சொல்ல தான் போன் பண்ணேன்"

"ஏன்பா, அந்த சம்பாத்தியம் இங்க கிடைக்காதுனு பாக்குறிங்களா? இப்போலாம் சாப்ட்வேர்ல அங்க வாங்குற சம்பளத்துக்கு சமமா இங்கயும் கிடைக்கும் பா"

"பணம் வந்து என்னமா செய்யப்போவுது, மரியாதை, உரிமையில்லாத ஊருல அது ஒன்னுக்கும் ஒதவாது, ஆனா ஒனக்கு நல்ல சான்ஸ் கெடச்சிருக்கு கெட்டியா புடிச்சிக்கோ"

"என்னப்பா சொல்றிங்க ஒன்னுமே புரியலையே"

"அய்யிரு பையனை கல்யாணம் செய்திருக்க, இனிமே நம்ம ஜாதி பேரை எங்கயும் சொல்லிக்காத, மடிசார் கட்ட கத்துக்கோ, ஆத்துக்காரர் தோப்பனாருனு அய்யிரு பாஷை பேச கத்துக்கோ"

"அதை ஏன்பா நான் கத்துக்கணம், எப்பவுமே சுயமா இருக்கனும் சொல்ற நீங்களே இப்படி சொல்றிங்க"

"உன் பசங்களுக்கு வாய்ப்பாட்டு, கர்நாடக சங்கீதம், பரதநாட்டியமெல்லாம் உனக்கு பொறக்கபோற கொழந்தைகளுக்கு சொல்லி குடு"

"ஏன்ப்பா பேசுறிங்க, நான் அய்யிரை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல ஒங்களுக்கு எதும் சங்கடமா"

"அய்யய்யோ அதெல்லாம் இல்லமா, நீ அய்யிர கல்யாணம் பண்ணிக்கிட்டதை சாமி குடுத்த வரமா பாக்குறேன் அதனால தான் சொல்றேன் உனக்கு பொறக்க போற பையனுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து சொல்லிதரயோ இல்லியோ, திருக்குறள் சொல்லிதரயோ இல்லியோ ஆனா காயத்திரி மந்திரமும், சந்தியா வந்தனமும் கத்துக்க வை, மறக்காம பூணுல் போட்டுவுட்டுடு"

"என்னப்பா இப்படி பேசுறிங்க, மனசனுக்குள்ள வேறுபாடு பாக்ககூடாதுனு சொன்ன நீங்களே பூணுல் போட சொல்லுறிங்க"

"இந்த ரெண்டு வருசம் கழிச்சி ஊருக்கு வர்றதுலாம் வேண்டாம் மா, இங்க நெலமை அப்படியாயிடுச்சி, நாயும், பூனையும் நடந்த தெருவுல நம்மள மாதிரி ஜனங்க நடக்க உரிமையில்லாம இருந்துச்சி, கோயில்லுக்குள்ள போக வக்கில்லாம இருந்துச்சி, இதுக்கெல்லாம் போராடி உரிமை வாங்கித்தந்த பெரியார் தலையையே ஸ்ரீரங்கத்துல எடுத்துட்டாங்க, அத எதுத்து போராடனவங்களுக்கும் போலிஸ் அடி, ஜெயில் இப்பவே இந்த நெலமை இங்க, போக போக என்ன ஆகுமோ"

"ம்... நானும் பேப்பர்ல படிச்சேன்பா"

"ஏற்கனவே சாமியை தொடமுடியாது, சாமிகிட்ட போவ முடியாது, இனிமே கோயிலுக்கும்கூட போக முடியாத நெலமை வந்துடும், ஒழவு மாட்டவித்து ஒன்ன ஐ.ஐ.டி.ல எம்.டெக் படிக்க வச்சேன், ஆனா பி.இ. கோட்டால தான் படிச்ச, நம்மள மாதிரி படிப்புவாசனையே அறியாத ஜனங்களுக்கு இனி கோட்டாவும் இருக்காது, இங்க படிப்பில்லாம, மரியாதையில்லாம, உரிமையில்லாம ஈனபிறவியா அடிமையா தன்மானத்து உட்டுட்டு வாழுறதுக்கு சாகலாம் கலை, செத்துடலாம், ஆனா நீ அய்யிரு பையனை கல்யாணம் செய்துக்கிட்டதை நான் சாமி குடுத்த வரமாத்தான் பாக்குறேன்"

அதிர்ந்து போன கலைச்செல்வி தன் தந்தை பேசுவதை கண்ணீரோடு கேட்டுக்கொண்டிருந்தால்

"கலை அதனால தான் சொல்றேன், இங்க வராத, உயர்வுனு இந்த சமுதாயம் எதெல்லாம் மதிக்குதோ அதெல்லாம் கத்துக்கோ, உன் பசங்களுக்கும் கத்துகுடு, தமிழ் பாட்டு வேண்டாம் தெலுங்கு கீர்த்தனை கத்துகுடு, பரதநாட்டியம் கத்துகுடு, அத்திம்பேர்னு பேச கத்துகுடு, மடிசார் கட்ட கத்துக்கோ, ஆனா எப்புடி இருந்தாலும் ஒன் கலர் ஒன்னை காட்டி குடுத்துடும் அதுக்காக யார் என்ன பேசனாலும் கவலைப்படாத, உன் மானம், சுயமரியாதை முக்கியமில்லை உன் புள்ளைங்க மரியாதை தான் முக்கியம், ஒன்னை அய்யிரு ஜாதியில ஏத்துக்கலைனாலும் ஒன் புள்ளைங்களை ஏத்துப்பாங்க, முக்கியமா ஒன் புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வச்சிடாத, ஏதாவது சமஸ்கிரத சாமி பேரா பார்த்துவை, கலை இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோ"

"சொல்லுங்கப்பா"

"முடிஞ்சா ஒன் பேரை கூட சரஸ்வதி, லஷ்மினு மாத்தி வச்சிக்கோயேன், விசாரிச்சேன் அது ஈசி தானாம், கெஜட்ல மாத்திடலாமாம், இனி எங்களுக்கு போன் பேசாத, ஒன் ஊரை மறந்துடு, ஒன் சாதியை மறந்துடு, மீன், கறி சாப்பாடுற பழக்கத்தை மறந்துடு, ஒன் பேச்சு வழக்கை மறந்துடு, எல்லாத்தையும் மறந்துடு இப்போ நீ ஒரு அய்யிருக்கு பொண்டாட்டி, அதை மட்டும் ஞாபகத்துல வச்சிக்கோ, எங்களை விட, ஒன்னை விட ஒனக்கு பொறக்க போற கொழந்தைங்க மரியாதை முக்கியம், அவங்க உரிமை முக்கியம், நாயைவிட பூனையைவிட பொறப்பால கேவலமா என் பேரப்பசங்க இருக்க கூடாது, எங்களை பத்தி கவலைப்படாத கலை, எம் பேரப்புள்ளைங்க அய்யிரு சாதியாயிடுங்கற சந்தோசத்துல நாங்க இப்படியே இருந்துட்டு செத்துடுவோம், நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்கோ, நல்லா இரு கலை, நல்லா இரும்மா கலை"

போன் கட்டாகிவிட கதறி கதறி அழ ஆரம்பித்தாள் தற்போதைய கலைச்செல்வியான வருங்கால சரஸ்வதி

இது தொடர்பான பாலபாரதியின் பதிவு

சிறுகதை - வளர்சிதை மாற்றம் (மீள்கதை)

தமிழோவியம் தீபாவளி மலரில் வெளிவந்த எனது சிறுகதை, இந்த சிறுகதைக்கு முதலில் நான் வைத்திருந்த பெயர் தேவர்களும் கால்களும், அதையும் விட வளர்சிதை மாற்றம் என்ற பெயர் இன்னும் பொருத்தமாக இருக்கலாம்...

வில்லின் ஒரு முனையையும் மற்றொரு முனையையும் இணைக்கும் நாணைப்போல அந்த கிராமமுமில்லா நகரமுமில்லா நகரின் ஒரு முனையையும் மற்றொரு முனையையும் இணைக்கும் அந்த இரட்டை சாலை தரையில் கால்படாமல் மிதந்து கொண்டிருக்கும் தேவர்கள் வாழும் கல்லூரி சாலை, பல்கலைகழகம், கலைக்கல்லூரி, பொறியியல்கல்லூரி, பாலிடெக்னிக், மேலாண்மை கல்லூரி, உடற்பயிற்சி கல்லூரி என அந்த சாலையின் வலப்புறம் முழுதும் கல்லூரிகள், இடப்புறமோ விடுதிகளோடு, மரணவிலாஸ், மெரைன், ப்ளைட் என்று ஆங்காங்கே சில பெட்டிகடைகள் டீ கடைகளோடு, அந்த இரட்டை சாலையின் மையத்தில் உள்ள குழல் விளக்கு கம்பங்கள் மாணவர்களின் குறி பார்த்து எறியும் திறமையின் மௌன சாட்சிகளாய் , மாலை முழுதும் தேவர்களும் தேவதைகளும் மரங்களின் அடியில் பல பிரச்சினைகளை அலசியபடி 'அப்புறம்' 'அப்புறம்' என்ற அர்த்தம் பொதிந்த பேச்சுகளோடும் சிரிப்புகளோடும் கடலை போடும் அழகே அந்த சாலையின் அழகின் ரகசியம்.

நேற்று வரை ஃபைவ் லேம்ப்ஸ், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, ராம்நகர் என பேசிக்கொண்டிருந்தவர்கள் GRE நுழைவுத்தேர்வுக்கான புத்தகம் வாங்கிய உடனே கலிபோர்னியாவும்,நியூயார்க்கும் அவர்களின் வாயில் புகுந்து வந்தன, இது தான் கடைசி வருடம் என ஒவ்வொரு வெள்ளிகிழமையும் சவேரா சென்று பீர் அடித்துவிட்டு சிக்கன்-65 வர தாமதமானதற்கு பார் பணியாளரிடம் சண்டை போட்டு இராத்திரி முழுவதும் 'முஸ்தபா முஸ்தபா டோண்ட் ஒர்ரி முஸ்தபா' என பாடி கத்தி அழுது களைத்து அதே சவரா உணவகத்திற்கு மறு நாள் மதிய உணவிற்கு தோழியோடு செல்லும் போது சீக்கிரம் சிக்கன்-65 கொண்டு வந்த பணியாளனை எரிச்சலாக பார்த்து மூன்று மணி நேரம் மதிய உணவு உண்ணும் போதாவது காதலை சொல்ல வேண்டுமென்ற கனவோடு தூங்கிக்கொண்டு சிலர், 'செமி கிராக் ஹாஸ்டல்' என மாணவிகள் செல்லமாக அழைக்கும் 'செமி சர்க்கிள் ஹாஸ்டலின்' ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொருவரும் கனவுலகிலிருக்க விடுதியின் உணவுக்கூடம் காலையில் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தது திடீரென அதிர்ந்தது கணேஷின் குரலால்.

"டேய் சின்ன பையா காலையிலே அங்கே என்னடா கரைச்சல் " ஆறுமுகம் என்கிற சமையலரின் சத்தத்திற்கு ஓடி வருகிறான் சின்னபையன் என்கிற உதவியாளன்

"கணேஷ் சார், இட்லி நல்லா இல்லைனு சத்தம் போடுறாரு அண்ணே"

"அவருக்கு இதே வேலையாயிடுச்சி, நெதம் நெதம் மெஸ்ல கரைச்சல் குடுத்துகிட்டு, நீ போயி 115ல மெஸ் ரெப் இருப்பாரு கூட்டிகினு வா"

"மெஸ் ரெப்பு சார், ரெப்பு சார்"

இன்னும் 10 மாதம் கழித்து பிரிய போகிற சோகத்தை நேற்றே பிழிந்து மானிட்டர் மப்பில் அழுது படுத்திய காட்ஸ் (இங்க பலருக்கும் சொந்த பெயர் மறந்து பட்ட பெயர் தான் கூப்பிட) காலைபரப்பி தூங்கிக்கிடக்க, தலை பாரத்தோடு கதவை திறந்தான் மெஸ் ரெப்,

"என்னடா காலையிலே..."

"சார் கணேஷ் மெஸ்ல சத்தம் போடுறாரு"

"யாரு கட்டை கணேஷா?"

"ஆமாம் சார்"

"என்னவாம்"

"இட்லி நல்லாயில்லையாம், ஆறுமுகம் அண்ணன் உங்களை கூப்பிட்டு வர சொன்னாரு"

"சரி நீ போ, நான் வரேன்"

சத்தம் போட்டு கொண்டிருந்த கட்டை கணேஷை சமாதானப்படுத்திய படி

"கட்டை என்னடா பிரச்சனை?"

"இட்லியை பாருடா, கல்லு மாதிரி இருக்கு, மனுஷன் சாப்பிடுவானா இதை?"

"சரி கொஞ்சம் இரு நான் குக் கிட்ட பேசறன்"

"என்னத்த பேசற இதைத்தான் ஒரு மாசமா பேசுற, மெஸ் ரெப் எலக்ஷன்ல நின்னப்ப என்ன சொல்லி ஜெயிச்ச நீ, மெனு மாத்துறன்னு சொன்னியே, மெனு மாத்தினயா?"

"ஏற்கனவே வார்டன் கிட்ட பேசிட்டேன், சீக்கிரம் மாத்திடலாம்"

"என்ன சீக்கிரமா மாத்திடலாம், இவ்ளோ நாள் என்ன பண்ண, வார்டனுக்கு பயந்துகிட்டயா, ஜால்ரா?"

"கட்டை வேண்டாம், சும்மா பிரச்சினை பண்ணனும்னு பேசறியா, மெஸ் எலக்ஷன்ல நீ தோத்ததை மனசுல வச்சிகிட்டு தெனம் மெஸ்ல பிரச்சினை பண்றியா?"

"யாரு பிரச்சினை பண்றது, மெனு மாத்துறேன் மாத்துறேன்னு சொன்னியே மொதல்ல அதை செய், மெனு என்னனு பசங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணியா? உன் இஸ்டத்துக்கு மெனு மாத்தலாம்னு நெனக்கிறியா? காமன் ஹால் மீட்டிங் போடு நான் அங்க பேசிக்கிறேன்?"

"டேய் யாரு சொன்னா என் இஸ்டத்துக்கு மெனு மாத்துறேன்னு, சரி விடு, இன்னிக்கு நைட் மீட்டிங் போட்டுடலாம்"

"நைட் பசங்க இருக்க மாட்டாங்க இப்பவே போடு"

"பசங்க நிறைய பேரு தூங்கறாங்க, இப்போ கூப்பிட்டா எவனும் வரமாட்டான்"

"அப்போ மதியம் போடு"

"சரி மதியம் காமன் ஹால் மீட்டிங்ல பேசலாம், இப்போ சத்தம் போடாம சாப்பிட்டு போ வேற இட்லி வாங்கிக்க"

"வேற இட்லி வாங்க எங்களுக்கு தெரியும் நீ போ"

மதியம் உணவு முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக காமன் ஹால் என்கிற தொலைகாட்சி அறையில் விடுதி மாணவர்கள் கூட்டம் சேர்ந்தது.

"பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, இங்கே நாம் கூடியிருப்பது நம் மெஸ் மெனுவைப் பற்றி டிஸ்கஸ் செய்ய" காட்ஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே தலையில் இலேசாக தட்டி

"டேய் காட்ஸ், போ போய் உட்காரு" மெஸ்ரெப்

"பப்ஸ் கொஞ்சம் செக் பண்ணு பசங்க இன்னும் வராங்களானு, மீட்டிங் ஆரம்பிக்கலாம்" மெஸ்ரெப்

"ஓகே மச்சி நீ ஸ்டார் பண்ணு" பப்ஸ்

"ப்ரெண்ட்ஸ், இந்த இயர் நாம மெஸ் மெனு மாத்தனும்னு வார்டன் கிட்ட பேசினேன்"

"மெஸ் சாப்பாடு கேவலமா இருக்கு, குவாலிட்டி சுத்தமா நல்லா இல்லை" கட்டை கணேஷ்

"அதுவும் பேசிட்டேன் வார்டன்கிட்ட"

"ஆனா ஒன்னும் புண்ணியமில்லையே, நீ எப்பவுமே வார்டனுக்கு ஜால்ரா அடி" கணேஷ்

"கணேஷ், நீ எதுக்கு இப்போ தேவையில்லாம பிரச்சினை பண்ற, என்ன ஜால்ரா அடிக்கிறாங்க, இங்க பேசிக்கிட்டு இருக்கோமில்ல"

"இங்க பாரு நீ மெஸ்ரெப்பு ஆயி ஒரு மாசமாச்சி, என்ன கிழிச்ச" கணேஷ்

"டேய் கட்டை நீ போன வருசம் மெஸ் ரெப்பா இருந்து என்ன புடுங்கின?" பப்ஸ்

"பப்ஸ், கொஞ்சம் பேசாம இரு, கணேஷ் அடாவடியா பேசாத மொதல்ல மெனுவை டிஸ்கஸ் செய்வோம், அப்புறம் ஃபுட் குவாலிட்டி பத்தி வார்டன் கிட்ட பேசினேன், குவாலிட்டி இன்கிரீஸ் செஞ்சாலும், மெனு மாத்தினாலும் கண்டிப்பா மெஸ் பில் கூடும்னு சொன்னாரு"

"கூடட்டுமே, காமன் ஷேரிங் தானே, நாம கட்டுவோம்"

"எவ்ளோ கூடும்? " பாயிண்ட் பிரபு

"எப்படியும் இரு நூறு ரூபாய் மாசத்துக்கு கூடும் " மெஸ்ரெப்

"இருக்கட்டுமே, இரு நூறு தானே கூடும், நல்ல சாப்பாடு வேணும், அவ்ளோதான்" கணேஷ்

"என்ன சொல்றீங்க" மற்றவர்களையும் பார்த்து கேட்டான் மெஸ் ரெப்

"பரவாயில்லை நூறு,இரு நூறு ஜாஸ்தி வந்தாலும் நாங்க கட்டுறோம்" என பல குரல்கள் எழுந்தன

"மச்சி, அப்படியே மாசம் ரெண்டு தடவை சிக்கன் போட சொல்லுடா"

"சரி சொல்றேன்"

மெஸ் மெனுவை இறுதி செய்துவிட்டு கூட்டம் கலைந்தது.

அறை எண் 115ல் மெஸ்ரெப்பின் மந்திராலோசனை கூட்டத்தில்

"மச்சி, கட்டை கணேஷ் ஓவரா போறான்" காட்ஸ்

"அவன் தோத்த கடுப்புல ரொம்ப பிரச்சினை பண்றான், அவனை தட்டி வைக்கனும்" பப்ஸ்

"நீங்க ரெண்டு பேரும் சும்மா இருக்க மாட்டிங்களா? இங்க பாரு டிபார்ட்மெண்ட் செகரட்ரி நம்ம கேங், ஜென்ரல் ரெப்பும் நாம தான், NSS செக்ரட்டரியும் நாம தான், கல்சுரல் பங்ஷன் நடத்தனும், ஸ்போர்ட்ஸ் மீட் நடத்தனும், கேம்ப் நடத்தனும், இதுல கட்டை கேங் கிட்ட சண்டை போட்டா இதையே சாக்கா வச்சி எதையும் நடத்த விடாம மேனேஜ்மன்ட் செய்துடுவாங்க, ஏற்கனவே எப்படிடா இந்த கல்ச்சுரல்சை நிறுத்தறதுனு காலேஜ்ல எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க, அதனால கொஞ்சம் பொறுமையா போங்க"

"ஆமா நீ இப்படியே பருப்பு மாதிரி பேசு, அப்புறம் ஒருத்தவனும் நம்மள மதிக்க மாட்டான்" காட்ஸ்

கதவை தட்டி உள்ளே வந்தான் பாயிண்ட் பிரபு.

"வாடா பாயிண்ட்டு என்ன இந்த பக்கம்" மெஸ்ரெப்பு

"சும்மா தான் பாக்கலாம்னு வந்தேன்"

"என்ன பாயிண்ட்டு காலேஜ் முடிஞ்சி டெய்லி கடலை தானாமே" காட்ஸ்

"ஹா ஹா..."

"இல்ல எதுனா டவுட் கேட்பாங்க சொல்லி தருவேன்"

"டேய் பாயிண்ட்டு கிட்ட மெஷின் டிசைன் டவுட் கேளுங்கடா, பாயிண்ட் பாயிண்டா அடிப்பான் பாரு"

"பாயிண்ட்டு அது நம்ம பெரிசு ஆளு, அதனால பார்த்து கடலை போடு"

"எப்ப இங்க வந்தாலும் இப்படியே ஓட்டுறிங்க, சரி நான் அப்புறம் வரேன்" பாயிண்ட்

மந்திராலோசனை அப்படியே கடலை போடுவதையும், கலிபோர்னியாவில் இந்தியர்கள் அதிகம் வாழ்கின்றனர் எனவே அங்கே போவதன் சாதக பாதகங்களையும் இடையிடையே கட்டை கணேஷ் கேங்கை தட்டுவதையும் பற்றி பேசி சில மணி நேரம் கழித்து மரணவிலாசில் டீ குடித்து மாலை உலாவை ஆரம்பித்தனர்.

"பப்ஸ், வண்டியெடுத்துக்கிட்டு வா, சும்மா ஒரு ரைட் போகலாம்"

இரு சக்கர வாகனத்தில் ஏறியபடி

"பிள்ளையார் பட்டியா?" பப்ஸ்

"இல்ல மச்சி கண்டனூர் பக்கம் போ, எப்பவும் பிள்ளையார் பட்டியே போனா போர் அடிக்கும்"

கண்டனூரையும் தாண்டி வண்டி சென்று கொண்டிருக்க இருள் கவிழ்ந்த நேரத்தில்.

"பப்ஸ் வண்டியை நிறுத்து, சைட்ல இருக்கே அந்த பாருக்கு போ"

"உனக்கு என்ன வேணும்?"

"எனக்கு பீர் மட்டும் போதும், உனக்கு"

"ஒரு எம்சி கட்டிங், மிக்சர் வாங்கிக்க, நல்ல வேளை காட்ஸ் கடலை போட போயிட்டான், அவன் வந்திருந்தா அவ்ளோதான் இன்னைக்கும் அழுது இம்சையை பண்ணிடுவான்"

"ஹா ஹா... "

கடையினுள் நுழைந்து கடைபணியாளனிடம்

"ஒரு கல்யாணி பீர், ஒரு எம்சி கட்டிங் குடுங்க" பப்ஸ்

கடைபணியாளன் திரும்பிய அந்த நொடியில் இருவரும் அதிர்ந்தனர், பணியாளனாக பாயிண்ட் பிரபு

"டேய் பாயிண்ட், இங்க என்னடா பண்ற"

"அது அது..."

"டேய் நீ என்ன என்ன பண்ற இங்க"

" தப்பா நெனச்சிக்காதிங்க, ஒரு நிமிஷம் இருங்க, சரக்கு தரேன்"

"டேய் அது இருக்கட்டும் என்ன செய்ற இங்க இப்போ நீ"

"மணி தம்பி, கடைய கொஞ்சம் பாத்துக்கோ ஒரு அஞ்சு நிமிஷத்துல வரேன்" பாயிண்ட் பிரபு சரக்கை எடுத்துக்கொண்டு பப்ஸையும் மெஸ் ரெப்பையும் அழைத்தான்

" வாங்க இந்த பக்கமா, உள்ள பார் கிடையாது, பின்னாடி அந்த கட்டடத்துல உக்காருவோம்" ... பாயிண்ட் பிரபு

"என்னடா பாயிண்ட், இங்க என்ன பண்ற அத சொல்லு" பப்ஸ்

"பார்ட்டைமா வேலை செய்றண்டா"

"ஏன்?"

"தினம் 10ரூவா தருவாங்க, அப்புறம் இந்த பணம் என் படிப்புக்கும் உதவியா இருக்கு, வீட்டுலருந்து வாங்குற பண பாரத்தை கொஞ்சம் கொறைக்கலாம்னு தான்"

"அதான் ஏன் டா"

"நான் உங்கள மாதிரி பணக்கார பசங்க இல்ல"

"டேய் நாங்க எங்கடா பணக்கார பசங்க, நாங்க மாச சம்பளம் வாங்குற மிடில் கிளாஸ் பேமிலி தான்டா"

"இல்லடா, நான் இங்க படிக்கறதே ஸ்காலர்ஷிப்ல தான், நம்ம காலேஸ் கவர்மென்ட் காலேஜ், அதனால் ஃபீஸ் கம்மி, இல்லைனா எனக்கெல்லாம் எஞ்சினியரிங்லாம் கனவு தான் டா. ஊருல கூட ஸ்கூல் நேரம் போக மீதி நேரம் லாட்டரி டிக்கெட் விப்பேன், நாங்க ரொம்ப ஏழை ஃபேமிலிடா இப்ப கூட அஞ்சு வட்டிக்கு கடன் வாங்கித்தான் படிக்கிறேன் டா"

"அதுக்காக..."

"நீங்க தெனம் சாப்பாடு நல்லா இல்லை சாப்பாடு நல்லா இல்லைனு மெஸ் தொட்டியில கொட்டுறிங்களே, அந்த சாப்பாடுதான் நான் இத்தனை வருஷத்தில சாப்புடுற நல்ல சாப்பாடு, மதியம் மெஸ் மெனு மாத்துற மீட்டிங்ல கூட நெறய பசங்க சொன்னாங்க, நூறு இரு நூறு பெரிய காசில்லை, சாப்பாடு நல்லா இருக்கனும்னு, எனக்கு நூறு இரு நூறு பெரிய காசுடா, நான் ஒரு ஒரு நூறு ரூபாய்க்கும் மாசம் அஞ்சு ரூபா வட்டி கட்டனும்"

"அடப்பாவி மீட்டிங்ல சொல்ல வேண்டியது தானே" மெஸ்ரெப்

"இல்ல, அங்கேயே ஆளுக்காளு இது பெரிய காசா அப்படினு பேசினாங்க, நான் அப்படியே அப்போஸ் செஞ்சாலும் என்னை விரோதியா பாப்பானுங்க, இல்லனா எல்லா காரணத்தையும் நான் சொல்லனும், அதான் நான் மீட்டிங்ல சொல்லை, அப்புறம் உன் ரூமுக்கு வந்தேன் சொல்லலாம்னு, உங்க கேங்கே அங்க இருந்து கலாட்டா செஞ்சிங்க, அதான் சொல்லலை, வந்துட்டேன், நீங்களும் என்னை பத்தி யாருக்கிட்டயும் சொல்லிடாதிங்கடா"

"சரி நாங்க யார்கிட்டயும் சொல்லலை, மெஸ் பில்லும் ஏறாது, கவலைப்படாதே" மெஸ்ரெப்

கனவு உலகின் மற்றொரு பரிமாணம் தெரிய வர அது வரை தரை காலில் படாமல் மிதந்த இரண்டு தேவர்களின் கால்களும் தரைக்கு இறங்கியது.

சிறுகதை - தேவர்களும் கால்களும்

தமிழோவியம் தீபாவளி மலரில் வெளிவந்த எனது சிறுகதை, சிறுகதையை வெளியிட்ட பாலஜிக்கும் தமிழோவியம் குழுவிற்கும் நன்றி

மனைவியின் காதலன்

"என்னங்க ஹனிமூன் வந்தா ரூம்லயே இருக்கனுமா?, வாங்க ஈவ்னிங் போட்டிங் போகலாம்"

"எனக்கு இந்த ஊட்டியில போட்டிங் னாலே பழைய ஞாபகம் வருது"

"அப்டியா? என்ன ஞாபகம்"

"நான் காலேஜ் படிக்கும் போது டூர் வந்தப்ப ஒரு பொண்ணுக்கு போட்டிங் போற இடத்துலதான் புரப்போஸ் பண்ணேன்"

"ஓ... இன்ட்ரஸ்டிங், அப்புறம் என்ன ஆச்சி?"

"நான் ஊட்டியில புரப்போஸ்பண்ணதுக்குக்கு பெங்களூர்ல தான் ஓ.கே சொன்னா, அன்னைக்குதாண் டூர் லாஸ்ட் டே"

"ம்... அப்புறம்"

"அப்புறம் என்ன பைனல் இயர் ஃபுல்லா லவ் பண்ணோம், அப்புறம் காலேஜ் முடிஞ்ச உடனே அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடிச்சி"

"அப்புறம் நீங்க தாடி வச்சி தேவதாசா சுத்தினிங்க ரைட்"

"சீ அதெல்லாம் இல்ல, அப்புறம் தான் இந்த தேவதை எனக்கு கிடைச்சது"

"தேவதை அது இதுன்னு ஐஸ் வைக்காதிங்க, சரி அந்த பொண்ணு பேர் என்ன?"

"சுஜாதா, சுஜான்னு கூப்பிடுவேன்"

"இப்போ எங்க இருக்காங்க?"

"பெங்களூரல தான், அவ ஹஸ்பண்ட்டோட இருக்கா"

"ம்... விட்டா சேரனோட ஆட்டோகிராப் மாதிரி உங்களுக்கு ஒரு ஆட்டோகிராப் எடுக்கலாம் போல"

"ஹலோ... சேரன் படம் 3 மணிநேரத்துல முடிஞ்சிடும், என் படம்லாம் 10 மணி நேரம் ஆகும்"

"அடப்பாவி... உண்ணைய...."

"சரி டா உனக்கு ஏதும் இந்த மாதிரி ஆட்டோகிராப் இருந்ததா?"

"சீ... இல்ல, பட் ஒரு 4,5 பசங்க புரப்போஸ் பண்ணியிருக்காங்க"

"சரி அதுக்கு நீ என்ன பண்ண?"

"ஒன்னும் ரெஸ்பான்ஸ் பண்ணல, அப்படியே விட்டுட்டேன் "

"பிடிக்கலையா யாரையும், சும்மா சொல்லு"

"ம்ஹீம்"

"சும்மா சொல்லுடா கண்ணு, ஒரு இன்பாக்சுவேஷன் கூடவா இல்ல"

"ம்... அப்படினா என்னோட +2 படிச்சப்ப பிரகாஷ்னு ஒருத்தவன் புரப்போஸ் பண்ணான், அவனைப்பிடிக்கும், பட் லவ்லாம் இல்ல, சும்மா பிடிக்கும் அவ்ளோதான்"

"அப்புறம் பிரகாஷை மீட் பண்ணவே இல்லயா?"

"ம்.. 4 வருஷத்துக்கு முன்னால நான் TCS வாக்கின் இன்டர்வியூ போனப்ப பார்த்தேன், பட் அப்புறம் சுத்தமா பார்க்கலை"

"சரி வா போட்டிங் கிளம்புவோம்..."

------------------------------------------------------
(ட்ரொய்ங்..... டொன்டடன்.... அல்லது ஒரு ஆண்டுக்குப்பிறகு இப்படி எது வேணா போட்டுக்குங்க மேட்டர் என்னன சீன், லொக்கேஷன் லாம் மாறுது)

"கிளம்பிட்டியா டா"

"இல்லங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இதே வந்துட்டேன்"

"ஃபர்ஸ்ட் வெட்டிங் ஆனிவர்ஸரி, கொஞ்சம் சீக்கிரமா வெளிய போயி, இந்த ஈவ்னிங்க ரொமான்டிக் ஆக்கலாம்னா இப்படி லேட் பண்ற"

"கொஞ்சம் வெயிட் பண்ணுப்பா, இதோ வந்துட்டேன்"

"சீக்கிரம் வா"

"இதோ வந்துட்டேன், அப்பா ஏன் இப்படி கத்துறிங்க"

"ம்... அந்த பிரகாஷ் ரொம்ப லக்கி"

"ஏன் ஏன் ஏன்???"

"இல்ல அவர் எஸ்கேப் ஆயிட்டாரு, நான் மாட்டிகிட்டேனே உன்கிட்ட"

"உங்கள... தலையிலயே ஒன்னு போட்டன்னா!"
"அப்படி பாத்தா அந்த சுஜா ரொம்ப ரொம்ப லக்கி, அவங்க எஸ்கேப் ஆயிட்டாங்க, நான் இப்போ அவஸ்தை படுறேன்"

"உன்னைய இப்ப பாரு"

"அய்யோ கிள்ளாதிங்க வலிக்குது, இப்போ கையவிடலை கடிச்சிடுவேன்"

"ஆ...., வெறி நாய் எப்படி கடிக்கிறா பாரு...."

"சரி வண்டிய வெளியில எடுங்க, நான் கதவை லாக் பண்ணிட்டு வரேன்"

------------------------------------------------------------------------------------------------(ட்ரொய்ங்..... டொன்டடன்.... அல்லது சில ஆண்டுகளுக்குப்பிறகு இப்படி எது வேணா போட்டுக்குங்க மேட்டர் என்னன முன்ன சொன்னதுதான் சீன், லொக்கேஷன் லாம் மாறுது)

"என்னங்க நம்ம பையன் பர்த்டே பார்ட்டிக்கு ஹோட்டல் புக் பண்னிட்டிங்களா?"

"இந்திரா நகர் சாலிமர் ஹோட்டல்ல தான் பார்ட்டி ஹால் புக் பண்ணியிருக்கேன்,
ஆனா இன்னும் புட் ஆர்டர் தரல, எத்தனை பேர் வருவாங்கனு எண்ணிக்கிட்டு அப்புறம் தரலாம்னு வந்துட்டேன்"

"ம்... சரி, எத்தனை பேரு இன்வைட் பண்ண போறிங்க"

"ம்.. அப்பா,அம்மா, தங்கச்சி,மாப்பிள்ளை, என் ஆபிஸ் கொலீக் ஏழு பேரு அவங்க ஒய்ப், அப்புறம் சுஜா, சுஜா ஹஸ்பண்ட்"

"உன் சைட்ல இருந்து எத்தனை பேரு இன்வைட் பண்ண போற"

"அம்மா,அப்பா,அண்ணா,அண்ணி, அப்புறம் அபி, அபி ஹஸ்பண்ட்"

"ம்..."

"ஏங்க ஒரு விஷயம் சொல்லனும்னு நினைச்சேன்"

"என்ன சொல்லு"

"காலையிலதான் அபி சொன்னா, பிரகாஷ் இப்போ பெங்களூர்லதான் இருக்காராம், ஆரக்கிள்ல ஜாயின் பண்ணியிருக்காராம்"

"அப்படியா சரி..."

"பிரகாஷையும், பிரகாஷ் ஒயிப்பையும் பர்த்டே பார்ட்டிக்கு கூப்பிடலாம்"

"ஏன் உன் பழைய காதலை புதுப்பிச்சிக்க பார்க்குறியா?"

"என்ன சொன்னிங்க? என்ன என்ன சொன்னீங்க"

"என் பையன் பர்த்டே பார்ட்டியை வச்சி உன் பழைய காதலை புதுப்பிச்சிக்க பார்க்குறியா?"

ஆயிரம் கத்தியை நெஞ்சில் ஒரே நேரத்தில் செருகியது மாதிரி இருந்தது...

பின்குறிப்பு
சில ஆண்டுகளுக்கு முன் வாரமலரில் இது உங்கள் இடம் பகுதியில் பிரசுரமாயிருந்த ஒரு வாசகரின் கடிதத்தை தழுவி எழுதப்பட்ட கதை