முட்டை ரவி இன்னுமொரு என்கவுண்டர்

என்கவுண்டர்கள் நடந்தன, என்கவுண்டர்கள் நடக்கின்றன, என்கவுண்டர்கள் நடக்கும், ஆனால் ரவுடிகள் பிறந்து இறந்து கொண்டேயிருப்பார்கள், இறந்து பிறந்து கொண்டே இருப்பார்கள், எந்த என்கவுண்டர்களும் ரவுடிகளின் பிறப்பை தடுப்பதில்லை.

முட்டை ரவி, திருச்சி வட்டாரத்தை அதிரவைத்த ரவுடி, சமீபத்தில் காவல்துறையின் துப்பாக்கி குண்டுகள் முட்டை ரவி கதையை முடித்தன, வழக்கம்போல கதை, திரைக்கதை வசனங்கள், ஒவ்வொருமுறை ஏதேனும் ஒரு ரவுடி சுட்டுக்கொல்லப்படும் போது 'ஸ்ப்ப்பா' ஒழிந்தான் என்று சொல்லிவிட்டு மிச்சமிருக்கும் 'ஸ்ப்ப்பாவை' அடுத்த ரவுடிக்கு மிச்சம் வைத்துவிட்டு நாமும் நம் வேலையை பார்க்கிறோம்.

சொல்லித்தான் அடிக்கிறார்கள், திருச்சி டி.ஐ.ஜி. பேட்டியை சில வாரங்களுக்கு முன் படித்தபோதே துப்பாக்கியை துடைத்துவிட்டார்கள் என்றே தோன்றியது, முட்டை ரவியின் வீரபிரதாபங்கள் தொடர்ந்து பத்திரிக்கைகளில் வந்தபோதே அடுத்தது முட்டை ரவிதான் என்ற சந்தேகம் தோன்றியது, சென்ற ஆண்டு இதே மாதிரி தொடர்ந்து தாம்பரத்தை சேர்ந்த 'சின்ன' என்று ஆரம்பிக்கும் ஒரு ரவுடியின் பிரதாபங்கள் பற்றி பத்திரிக்கைகளில் சில வாரங்கள் வந்தது, கடைசியாக அந்த ரவுடியின் என்கவுண்டர் சேதியோடு முடிந்து போனது.

அடே திரும்பி பார்த்தால் லண்டன் தெருகளிலும் ரவுடிகளாம். ஜீவியில் சொல்லியிருக்கிறார்கள்.



தமிழ்திரைப்படங்கள் ரவுடிகளையும் தாதாக்களையும் நாயகர்களாக சித்தரிப்பதும், பத்திரிக்கைகள் ரவுடிகளைப்பற்றி உயர்வாக தொடர்கள் எழுதுவதும் (எ.கா. லிங்கம் பற்றிய ஜீ.வி. தொடர்) போன்றவைகள் மேலும் மேலும் பள்ளி, கல்லூரி வயதில் ரவுடிகளாகவும் தாதாக்களாகவும் தூண்டுகோலாகின்றன, சிந்திக்க இயலாத பதின்ம வயதில் எல்லோருக்குமே ஏதோ ஒரு கணம் இப்படியான எண்ணங்கள் வந்திருக்கும், 'தளபதி' படம் பார்த்து கடலூரை கண்ட்ரோல் செய்யவேண்டுமென்று பேசியவர்களில் ஒருவனுக்கு சரியான நண்பர்கள், நல்ல பெற்றோர்கள் வழிகாட்டுதலில் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற இன்னொருவன் இது எதுவும் வாய்க்காமல் கடலூரை கண்ட்ரோல் செய்கிறேன் என்று வாழ்நாளை வீணாக்கிக் கொண்டுள்ளான்.

புதுப்பேட்டை மாதிரியான படங்கள் ரவுடியிசத்தின் கொடூரத்தை காண்பித்து தாதாக்கள் பற்றிய கனவை தகர்க்கின்றது, ஆனால் இது மாதிரியான படங்கள் அரிதினும் அரிதாகவே அமைகின்றன, தளபதி தேவா சூர்யாவும், வேலுநாயக்கனும், ரெட் டும் இன்னும் அரிதார ரவுடிகள் எத்தனை எத்தனை குடியை கெடுத்தனவோ? முட்டைரவிக்கள் சுட்டுத்தள்ளப்படும் போது ஒழிந்தான் என்று மகிழ்ந்து கொண்டும் நம்ம வீட்டு பையன் ரவுடி ஆவதை விரும்பவில்லை என்றாலும் தாதா ரவுடிப்படங்களென்றால் மினிமம் கியாரண்டி வெற்றியை தருகிறோமே, அரிதார ரவுடிகளுக்கு பணம் தான் முக்கியம் ஆதலால் அவர்கள் இதை விட்டு வெளிவரமாட்டார்கள் ஆனால் நமக்கு நம் பிள்ளைகள் முக்கியமில்லையா? இன்னமும் அரிதார ரவுடிகளுக்கு வாழ்வளிக்க வேண்டுமா?

அடுத்ததாக ஜீவியில் இன்னுமொரு செய்தி, 'தமிழ்த்தாய் கேபிள் விஷன்' நிர்வாகியான யுவராஜ் சேனல்போட்டி காரணமாக பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதான குற்றச்சாட்டை மாவட்ட எஸ்.பி.துரைக்குமாரிடம் ஜீவி கேட்டபோது அவர் சொன்ன பதிலை பாருங்கள்.


மேலிடத்தின் பிரஷர் என்றால் வேறு வழக்கில் கூட உள்ளே தள்ளலாம், என்று ஒரு பத்திரிக்கையிலே கூறுகிறார், அதையும் இந்த பத்திரிக்கைகள் எந்த ஒரு சின்ன கண்டனமும் தெரிவிக்காமல் பத்திரிக்கையில் போடுகின்றன. பகத்சிங் காலத்திலிருந்து இன்று வரை காவல்துறை மட்டும் மாறவேயில்லை.

இன்று முட்டை ரவி சுடப்பட்ட என்கவுண்டர்களை ரவுடிகள் என்று நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம், ஒரு அரசாங்கம் ஒரு ரவுடியை அழிக்க முறையற்ற வழியில் துப்பாக்கி எடுப்பதை சந்தோசமாக ஒழிந்தான் என்று சொல்லலாம், அதற்கு ஆயிரம் நியாயங்கள் கற்பிக்கலாம், சரிதான் எனலாம்.

ரவுடிகளை சரியான முறையில் கைது செய்யமுடியததை, சரியான முறையில் வழக்கு நடத்தமுடியாததை, சரியான முறையில் தண்டனை வாங்கித்தரமுடியாததை, சரியான சிறை தண்டனை சூழல் அமைக்க முடியாததை எல்லாம் கண்டிக்க முடியாது அதனால் அரசு துப்பாக்கி தூக்குவதையும் கண்டிக்க முடியாது எனலாம், ஆனால் நியாயமான போராட்டங்களையும் கூட அடக்க போலீஸ் ஸ்டேசன் என்றால் என்ன என்றே தெரியதவர்களுக்கும் கூட நள்ளிரவு கைதுகளை அரசாங்கத்தால் உணர வைக்க முடிந்தது, பத்திரிக்கையாளனை பொடாவில் போட முடிந்தது, போராட்டத்தை அடக்க சாதிக்கலவரத்தை தூண்டமுடிந்தது.

நமக்கு பிடிக்காதவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக அரசாங்க அத்துமீறல்களை நாம் கைதட்டி வரவேற்றால், அரசாங்கத்திற்கு பிடிக்காத அரசாங்கத்தால் சமாளிக்க முடியாத நபர்களின் நியாயமான பிரச்சினைகளுக்காக போராடுபவர்களை நோக்கி(அது நீங்களாக கூட இருக்கலாம்) அதே முறையற்ற அரசாங்க அத்து மீறல்கள் திரும்பும்போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.

விஜயகாந்த், இனி ஊடகங்கள்

மதுரை இடைத்தேர்தலும் உள்ளாட்சி தேர்தலும் சிலருக்கு கடும் அதிர்ச்சியை அளித்திருக்க கூடும், எந்தெந்த கட்சி வாக்கு வங்கிகளுக்கு உலை வைக்கும் என பத்திரிக்கைகள் எழுதிய செய்திகள் பொய்யாகி இன்று அதிமுகவின் வாக்கு வங்கிக்கு உலைவைத்திருக்கிறது விஜயகாந்த் கட்சி, வெறுமனே மதுரை இடைத்தேர்தலை வைத்து விஜயகாந்த் அதிமுக வாக்கு வங்கியை கபளீகரம் செய்துவிட்டார் என்று சொல்ல இயலாது, மதுரை விஜயகாந்தின் சொந்த ஊர் மற்றும் பொதுவாகவே நகரங்களில் புனித பிம்ப வாக்காளர்கள் அதிகம், இருந்த போதிலும் உள்ளாட்சி தேர்தலையும் வைத்து பார்க்கும் போது விஜயகாந்த் கட்சி அதிகம் வேட்டு வைத்தது அதிமுக வாக்கு வங்கிக்கே.

பத்திரிக்கைகள் விஜயகாந்தினால் நடக்க வேண்டும் என்று நினைத்தது.

1. பாமக, விடுதலை சிறுத்தைகளின் வாக்கு வங்கியில் பெரும்பாதிப்பு ஏற்படுத்துவார்

2. அதிமுக, ஜெயா எதிர்ப்பு வாக்குகள் திமுக விற்கு செல்லாமல் விஜயகாந்த்துக்கு செல்லும், எனவே ஜெயா எதிர்ப்பு வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும்

3. திமுக, அதிமுக இரு கட்சிகளின் மீதும் வெறுப்பு கொண்டவர்கள் விஜயகாந்த்துக்கு வாக்களிப்பார்கள்.

4. விஜயகாந்தை புனித பிம்பமாக உருவகப்படுத்துவதன் மூலம், ஜெயா ஊழலுக்கு கலைஞர் பரவாயில்லை என்பவர்களின் வாக்குகளை உள்ளிழுக்க முடியும்.

5. படித்தவர்கள் விஜயகாந்திற்கு வாக்களிப்பார்கள், இப்போதைக்கு பெரும்பாலான படித்தவர்கள் வாக்கு திமுகவிற்கு விழுகின்றது.

ஆக மொத்தத்தில் எப்படியும் திமுகவின் வாக்கு வங்கிக்கு உலை வைக்கும் விஜயகாந்த் கட்சி என்று நம்பியிருந்தனர்.

ஆனால் நடந்தது என்ன?

1. பாமக, விடுதலை சிறுத்தைகளின் வாக்கு வங்கியில் எந்த பாதிப்பும் இல்லை, ஏனெனில் இன்றைய நிலையில் தமிழகத்தில் இருக்கும் கலக கட்சிகள் என்றால் இவை இரண்டும் தான், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இந்த இரு கட்சிகளோடு பார்க்கும் போது பொது மக்கள் பார்வையில் கலக கட்சிகளாக இல்லை, பொதுவாக கலக கட்சிகளில் வெகு சனங்களின் பங்களிப்பு இருக்காது அல்லது மிகக்குறைவாகவே இருக்கும், அவை முழுக்க முழுக்க கட்சி சார்ந்தவர்களினாலேயே இயங்கும், இருக்கும், அதனாலேயே இந்த இரு கட்சிகளின் வளர்ச்சியும் குறைவாக இருக்கும், தேய்வும் குறைவாகவே இருக்கும், விஜயகாந்த் முழுக்க முழுக்க புனித பிம்பமாக உருவகப்படுத்தப்பட்டவர், ஆனால் பாமக, விடுதலை சிறுத்தை ஆதரவாளர்கள் புனித பிம்பங்களுக்கு மயங்குபவர்கள் என்றால் அவர்கள் முதலில் பாமக, விசி ஆதரவாளர்களாகவே இருந்திருக்க மாட்டார்கள்.

2. ஜெயா எதிர்ப்பு வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கு பதிலாக, திமுக, கலைஞர் எதிர்ப்பு வாக்குகளை இதுவரை மொத்தமாக அறுவடை செய்துவந்த அதிமுகவின் அறுவடையில் பங்கு போட்டுக்கொண்டார் விஜயகாந்த்.

3. திமுக, அதிமுக இரு கட்சிகளின் மீதும் வெறுப்பு கொண்டவர்கள் விஜயகாந்த்துக்கு வாக்களித்தனர்.

4. படித்தவர்கள் வாக்குகளை விஜயகாந்த் குறிப்பிட்ட அளவு திருப்பியிருக்கிறார் என்றாலும் விஜயகாந்த் எப்படி தான் சொல்வதை செய்யப்போகிறார், இடஒதுக்கீடு, மொழி சார்ந்த விடயங்களில் கள்ள மவுனம் சாதிக்கிறார்(இந்த கள்ள மவுனத்தினாலேயே சில படித்தவர்கள் விஜயகாந்தை ஆதரிக்கிறார்கள்), என்ன வித்தியாசம் காண்பிக்கிறார் விஜயகாந்த் என எண்ணி பார்த்தால் அவர்களின் வாக்குகள் விஜயகாந்திற்கு விழுமா என்பது சந்தேகமே?

எப்படியாயினும் இடைத்தேர்தல், மற்றும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஒன்றை மட்டும் தெளிவு படுத்துகின்றன, விஜயகாந்து கிண்டிய அல்வா திமுக, விசி, பாமகவிற்கு அல்ல, அது அதிமுகவிற்கு என்பது.

பத்திரிக்கைகள் விஜயகாந்த் மீது ஏற்படுத்தி வந்த புனித பிம்ப உருவாக்கத்தை தொடருவார்களா? பாமக, திமுக, விசி வாக்கு வங்கிகளுக்கு விஜயகாந்த் உலை வைத்திருந்தால் நிச்சயம் இதை தொடருவார்கள், ஆனால் விஜயகாந்த் அதிமுக வாக்கு வங்கியில் கை வைத்ததினால் இதை தொடருவார்களா? விஜயகாந்த் VS ஜெயலலிதா என்பதான ஒரு நிலையை உருவாக்க நினைத்திருந்தார்கள், ஆனால் இந்த இருவர்கள் மோதலில் தனிப்பெரும் கட்சியாக அறுவடை செய்யபோவது திமுக என தெரியும் போதும் விஜயகாந்த்தை தூக்கிவிடுவார்களா பத்திரிக்கைகள்?


உள்ளாட்சி தேர்தலிலும் 4176 நகராட்சி வார்டுகளில் வெறும் 100 வார்டுகளையும், 7789 பேரூராட்சி வார்டுகளில் வெறும் 107 வார்டுகளையும் 589 மாவட்ட பஞ்சாயத்தில் வெறும் 13ம் 318 மாநகராட்சி வார்டுகளில் வெறும் 16 வார்டுகளை மட்டுமே பெற்றுள்ளார், விஜயகாந்த் கட்சி நகரங்களில் பெற்ற வெற்றி கூட பேரூராட்சிகளிலும் கிராமங்களிலும் பெறவில்லை, எனவே அதிமுக வாக்கு வங்கியில் பெரும் சேதம் விளைவித்துள்ளாரா என்பது போகப்போகத்தான் தெரியும் ஆனால் நகரங்களில் அதிமுக வாக்கு வங்கிக்கு நிச்சய சேதத்தை உருவாக்கியுள்ளார் விஜயகாந்த்.

1989க்கு பிறகு அனைத்து பத்திரிக்கைகளிலும் அட்டைப்படங்களிலும் ஜெயலலிதா தான், அவர் முதல்வராகும் வரை இது தொடர்ந்தது, இன்றும் அதையே விஜயகாந்துக்கு செய்கின்றன விகடனும் குமுதமும், இதனால் பாதிக்கப்படப்போவது ஜெயலலிதா, இதனால் ஆதாயம் அடைவது திமுக என்றானால் இனி செய்வார்களா?

விஜயகாந்தும் ஜெயலலிதாவும் ஒரே அணியில் இருக்க செய்ய சிலர் முனைவார்கள், ஆனால் கூட்டணி என்பது விஜயகாந்த்தை பொறுத்தவரை தற்கொலை முயற்சி என்பது அவருக்கு தெரிந்திருக்கலாம், திமுக, அதிமுக இருவரும் வேண்டாமென்பவர்களே அவரின் பலம், எங்கேயாவது கூட்டணி என்று சாய்ந்தால் விஜயகாந்த்க்கு கணிசமான வாக்கு சரிவு ஏற்படும். ஆதலால் கூட்டணி முயற்சி எத்தனை தூரம் என்பது சந்தேகமே

இனி அச்சு ஊடகங்கள் விஜயகாந்தின் புனித பிம்பத்தை உடைக்கும் முயற்சிகளில் இறங்கும் வாய்ப்பிருக்கிறது, உடனடியாக இல்லையென்றாலும் இவரும் மற்றவர்களைப்போலத்தான், இவர் கட்சியின் கு.ப.கிருஷ்ணன் போன்ற முன்னாள்களின் முகங்களை போட்டு இவர்களை வைத்துக்கொண்டா ஊழலை ஒழிக்கப்போகிறார், ஓட்டுக்கு பணம் கொடுத்த விஜயகாந்த் கட்சியினர், கட்சியில் குடும்பத்தின் தலையீடு, நாயக்கர் சாதி(விஜயகாந்தின் சாதி) ஆட்கள் கட்சியின் 14 மாவட்ட செயலாளர்களாக இருப்பது, இதுவரை தமிழ்முரசு நிருபர்கள் விஜயகாந்திடம் இடஒதுக்கீட்டில் உங்கள் நிலைஎன்ன என்று கேள்வியெழுப்பினார்கள், இனி அந்த வேலையை மற்ற பத்திரிக்கைகளும் எடுத்துக்கொள்ளும், தேர்தல் தோல்வியால் கொலைசெய்த விஜயகாந்த் கட்சியினர், மன்றத்தில் தொடக்கத்தில் இருந்து உழைத்தோம், கட்சியில் இடம் தரவில்லை என பேட்டியளிக்கப்போகும் மன்றத்து ஆட்கள் என அத்தனையையும் நோண்டியெடுத்து அடுத்த தேர்தலுக்கு முன் விஜயகாந்தின் புனித பிம்பத்தை உடைப்பார்கள், ஏனெனில் விஜயகாந்தினால் ஏற்படும் ஜெயலலிதாவின் சரிவை அவர்களால் தாங்க இயலாது BLOOD IS THICKER THAN WATER

ஜெயா தொலைக்காட்சி என்ன செய்யுமென்றால் இனி கலைஞரையோ திமுகவையோ விஜயகாந்த் எத்தனை தான் விமர்சித்தாலும் அதை காண்பிக்கவே காண்பிக்காது, இனி விஜயகாந்த் முகம் ஜெயா தொலைக்காட்சியில் தெரிய வாய்ப்பில்லை

இதுவரை விஜயகாந்த் முகத்தையோ செய்தியையோ காண்பிக்காத சன் டிவி என்ன செய்யுமென்றால் இனி ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் மாறி மாறி விமர்சிப்பதை காண்பிக்கும், இனி அடிக்கடி விஜயகாந்த்தை சன் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.( கலைஞர் திமுக எதிர்ப்பு வாக்குகளைப்போலவே ஜெயலலிதா எதிர்ப்பு வாக்குகளும் உள்ளது அதை இது வரை அறுவடை செய்தது திமுக, ஆனால் வருங்காலத்தில் இதில் விஜயகாந்த் பங்கு போடலாம்)

அனேகமாக அரசியலில் விஜயகாந்தின் தேனிலவு காலம் முடிந்து விட்டது எனலாம், அடுத்த தேர்தலுக்கு இன்னும் மூன்றாண்டுகள் உள்ளன, அதுவரை உள்ளாட்சி தேர்தலிலும் கூட பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், வாக்களிக்க மட்டுமே வரும் படித்த ஆதரவாளர்கள், மற்ற கட்சிகளில் அரசியல் வாழ்விழந்தவர்களுக்கு புகலிடம் அளித்துள்ள விஜயகாந்த் அதிகாரம் கையில் இல்லாமல் இவர்களை சமாளிக்கப்போவது, அதிமுகவின் எதிர்ப்பு, பத்திரிக்கைகள் எடுக்கப்போகும் நிலை, வருமானம் எதுவுமில்லாமல் கட்சி நடத்த தேவைப்படும் பணம், இவை அத்தனையும் சமாளித்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை தாக்கு பிடித்தால் விஜயகாந்த் நிச்சயம் தமிழக அரசியலில் ஒரு இடத்தை பிடிப்பார், இப்போதைக்கு வைகோவை காலி செய்துவிட்டார் என்பது மட்டும் உண்மை.

தீபாவளி தீபாவளியாம்




இந்த ஆண்டும் சிங்கப்பூர் குட்டி இந்தியா பகுதி வழக்கம் போல தீபாவளிக்காக அலங்கரிக்கப்ப்ட்டிருந்தன, சென்ற ஆண்டு அலங்காரம் பற்றிய கட்டுரை இங்கே, சென்ற ஆண்டு அலங்காரம் வெள்ளையானை, இந்த ஆண்டு தோகை விரித்த மயில். சனியிலிருந்து செவ்வாய் வரை நான்கு நாட்கள் விடுமுறை, தீபாவளியன்று காலையிலிருந்தே வந்து கொண்டிருந்து தீபாவளி வாழ்த்து குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்காமல் தொலைபேசியில் வந்த சில தீபாவளி வாழ்த்து செய்திகளுக்கு மறுவாழ்த்து சிலருக்கு சொல்லி, சிலருக்கு சொல்லாமல் என ஒரே தத்துவ சொதப்பல்.


பல மொழிகளில் வாழ்த்துகள்









பொதுவாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிங்கப்பூரின் புலாவுபின் தீவிற்கு சென்று இயற்கையை ரசிப்பது வழக்கம், அன்றும் புலாவுபினுக்கு ஊர் நண்பர்களோடு கிளம்பினோம், புலாவுபின் தீவு காங்கிரீட் கோபுரங்கள் இல்லாத, இயற்கையாக காட்டு பகுதி மாதிரியான ஒரு பழைய சிங்கப்பூரை கண் முன் நிறுத்தும், மோட்டார் படகில் அந்த தீவிற்கு செல்லவேண்டும், அந்த தீவில் மிதிவண்டியை வாடகைக்கு எடுத்து சுற்றி வருவார்கள், மற்றவர்கள் மிதிவண்டி வாடகைக்கு எடுத்தபோது நான் மட்டும் நீங்கள் செல்லுங்கள் என்றேன், என் குட்டி பூர்ஷ்வா வாழ்க்கைக்கு கொடுத்த விலை கடந்த சில வருடங்களாக இருக்கும் என் முதுகுவலி, தினம் வாடகைக்காரில் உடன் வேலை செய்பவருடன் அலுவலகம் சென்று வந்தேன், சில மாதங்களுக்கு முன் Peak hour sur charge ஒரு சிங்கப்பூர் வெள்ளியிலிருந்து இரண்டாக உயர்த்தப்பட்டது, தினம் பயண செலவு இரண்டு வெள்ளி கூடுதலானது, சரி இனி மிதி வண்டியில் செல்வோம், வீட்டிலிருந்து ஒன்னரை கிலோமீட்டர் தூரம் தானே என்று அன்றே ஒரு புது மிதிவண்டி வாங்கி ஒரு நாள் மட்டுமே ஓட்டி விட்டு வந்து சேர்ந்தபோது மறு நாள் அலுவலகம் செல்லமுடியாத அளவிற்கு முதுகுவலி, இது மூன்றாம் மாதம் பிசியோதெரபிக்கு சென்று கொண்டிருக்கின்றேன், மருத்துவத்திற்கு இப்போது செலவழித்த பணம் இந்த ஆண்டு முழுமைக்கும் நான் வாடகை காரிலேயே அலுவலகம் சென்றிருக்கலாம், அதனால் மீண்டும் முதுகுவலியை மோசமாக்க விரும்பாமல் நண்பர்களை மட்டும் மிதிவண்டியில் சுற்றிவர நான் தீவினுள் நடக்க ஆரம்பித்தேன்.

சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர், பலர் மிதிவண்டியில் சுற்றி வந்தனர், சிலர் மிதிவண்டியை நிறுத்தி காதல் செய்து கொண்டிருந்தனர், மேலும் நடந்து வர, இருவர் அடித்த மப்பில் பாதையோரமாகவே சாய்ந்து கிடக்க அவர்களை எழுப்பும் முயற்சியில் மேலும் இருவரென, நால்வரும் தமிழ்கூறும் நல்லுலகை சேர்ந்தவர்கள்.

சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு மீண்டும் படகை பிடித்து நகரினுள் நுழைந்தோம். மேலும் படங்கள் இங்கே

இந்தா புடவை கட்டிக்கோ

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவரப்போவதாக முழங்கும் விஜயகாந்த் அவர்களின் வேட்பாளர் தான் இப்படி.



ஹேய் யாருப்பா அது என்னது சத்தமா சொல்லு... என்னது தலைவரே தொப்புள்ல பம்பரமா? யோவ் என்ன வெளயாடுறியா? போ... போ... இட்லிவடைக்கும், எஸ்.கேக்கும் கோபம் வந்துடப்போகுது, போய்யா போ.....

யார் பெத்த மகனடா நீ? (எச்சரிக்கை படங்கள் கோரமானவை)


எச்சரிக்கை படங்கள் கோரமானவை....

நெஞ்சம் பதைக்குதே
உன் ரத்த நெஞ்சு காண

உயிரை உலுக்குதே
உன் ரத்த முகம் காண

செஞ்சோலை சிதைந்தபோது
பதிலுக்கங்கொரு
செஞ்சோலை சிதைய

வங்காலை வன்முறைக்கு
பதிலுக்கங்கொரு
வங்காலை வன்முறை

கேட்டதடா
ஆத்திர மனசு

ஆனால்
உன் ரத்த சகதி
உடல் பார்க்க
உரமில்லை மனசுக்கு

செஞ்சோலையும்
வங்காலையும்
வலுவாக இயக்கியது
அவர்களை

உன்னை எதடா
இயக்கியது?
பேரினவாதமா?
தேசபக்தியா?
கடமையா?
உன்னை எதடா
இயக்கியது?

ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டே
மறந்தாயடா?

செஞ்சோலையும்
வங்காலையும்
நெஞ்சிலே இருந்தாலும்

உன் உதிரமும்
உயிரை உலுக்குதேடா

உன் உதிரமும்
உயிரை உலுக்குதேடா

யார் பெத்த மகனடா
நீ....

உன் உதிரமும்
உயிரை உலுக்குதே..........

திமுக அரசின் கரும்புள்ளி

தன் வினை தன்னை சுடும் என்று தினமலர் எழுதியதைப் போலவோ அல்லது 2001 சென்னை மாநகராட்சி தேர்தலில் நடந்ததே என்றெல்லாம் 'சோ'த்தனமான உத்திகள் எதுவும் இல்லாமல் நேரடியாக நேற்று சென்னை மாநகராட்சி தேர்தலில் நடந்த வெறியாட்டங்களுக்கு என் கண்டனங்களை தெரிவிக்கின்றேன்.

2001 சென்னை மாநகராட்சி தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி வெறியாட்டங்கள் செய்ததென்பதற்காக கருணாநிதி ஆட்சியும் அதையே செய்வதை எப்படியும் நியாயப்படுத்த இயலாது, நான் உட்பட பலரும் கருணாநிதியை கருத்தளவில் ஆதரிப்பது இது மாதிரியான வெறியாட்டங்கள் நடைபெறக் கூடாது என்பதுவும் ஒரு காரணம், கருணாநிதி ஆட்சியிலும் இப்படியே நடந்தால் வேதனை தான் மிஞ்சும்.

அதிமுகவினர் தான் வன்முறையை தூண்டினார்கள் என்று கருணாநிதி சொன்னாலும் அரசும், காவல்துறையும் தான் அந்த வன்முறைகளை தடுத்தி நிறுத்தியிருக்க வேண்டும், எனவே இதற்கு இந்த அரசு பொறுப்பேற்க வேண்டும்.

கூட்டணி அரசென்பது அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல, அரசு தவறிழைக்கும் போது தட்டிக்கேட்கவும் தான், தமிழகத்தில் அரசை தாங்கும் கூட்டணி கட்சிகள் இதையும் தட்டி கேட்கவேண்டும்.

ஒரு அரசு யாரையேனும் நசுக்கும்போது நசுக்கப்படுபவர்கள் நமக்கு பிடிக்காதவர்கள் என்பதற்காக ஆதரித்தால் நாளை வேறு அரசோ அல்லது அதே அரசோ நம்மையும் நசுக்கும் போது அந்த நசுக்கலைப் பற்றி பேச எந்த அருகதையும் நமக்கு இல்லாமல் போய்விடும்.

ஒவ்வொரு முறை அரசு அதிகாரம் கையில் இருப்பதை வைத்து புதிது புதிதாக அடக்குமுறைகள் கொண்டு எதிர்கட்சியினரை அடக்கினால் அதுவே மீண்டும் கூடுதலாக வந்து சேரும், எதிர்காலத்தில் அதிமுக ஆட்சியில் இது போல் நடந்தால் திமுகவினருக்கு அதை எதிர்க்கும் தார்மீக உரிமை இருக்காது.

பாமக - வரைவு நிதி நிலை அறிக்கை

பாட்டாளி மக்கள் கட்சியின் அறிவார்ந்த முயற்சிகள் இது வரை அவ்வளவாக பொது தளத்தில் அறியப்பட்டதில்லை, கடந்த சில ஆண்டுகளாக பாமக தமிழக அரசுக்கு பரிந்துரைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வரைவு நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்கும், இதே போன்று பாமக சார்பில் மாற்று கல்வித்திட்டங்கள் குறித்தான இரு நாள் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன, அது மட்டுமின்றி மாணவர்களுக்கு பாமக சார்பில் பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன, அதில் சில நிமிடங்கள் மட்டுமே கட்சி விடயங்கள் பேசப்படும் அதுவும் கூட கட்சி தோன்றிய வரலாறு மட்டுமே, மற்றவையெல்லாம் மாணவர்களுக்கான அறிவு சார்ந்த விடயங்கள் நடத்தப்படும்.

தமிழக அரசிற்கான 2006-07ம் ஆண்டிற்கான வரைவு நிதிநிலை அறிக்கையை PDF கோப்பாக இங்கே இணைத்துள்ளேன், இந்த சுட்டியில் முயற்சி செய்யவும் அறிக்கையை தரவிறக்கி கொள்ளலாம்.

வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகள், வரி சீர்திருத்தங்கள் மூலம் வருவாய் பெருக்கம், வரியில்லா வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் பற்றி விளக்கமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.



தொழில்நுட்ப பூங்காக்கள்(IT Parks) மட்டுமே கேள்விப்பட்டுள்ளோம் நாம், இந்த அறிக்கையில் நெசவாளர் நலன்களுக்காக 100 நெசவுத்தொழில் பூங்காக்கள் அமைப்பது, அதன் மூலம் சுமார் 10,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியன இந்த அறிக்கையில் உள்ளன.



ஒடுக்கப்பட்ட மக்களான விவசாயிகள், நெசவாளர்கள், தாழ்த்தப்படவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலனுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தலித் மக்களுக்கான சிறப்புக்கூறு திட்ட (Special Component Plan) ஒதுக்கீடும், அமலாக்கமும் முறையாக, முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும், தலித் மக்களுக்கான 21 அம்சம் கொண்ட போபால் பிரகடனம் தமிழகத்திலும் செயல்படுத்தப்படும், ஆதிதிராவிட மக்களுக்கு அளிக்கும் சலுகைகள் அனைத்து மதங்களை பின்பற்றும் ஆதிதிராவிட மக்களுக்கும் அளிக்கப்படும்.



சமூகநீதிக்கான இடஒதுக்கீடு, நீதித்துறையில் இடஒதுக்கீடு பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது, மேலும் தமிழக அரசில் இடஒதுக்கீடு தொடர்பான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து நிரப்பப்படாமல் இருக்கும் இடஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவது தொடர்பான ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன.

பள்ளிகல்வி, உயர்கல்வி, அரசு ஊழியர்கள் நலன், வேலை வாய்ப்பு பற்றியும் அறிக்கை முக்கியமாக பேசுகின்றது.

சுற்று சூழல் மற்றும் வனநலன், புதிய மாவட்டங்கள், பின் தங்கிய மாவட்டங்கள் வளர்ச்சி பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

முழுமையான மதுவிலக்கே பாமகவின் இலக்கு என்றாலும் தமிழகத்தில் மது விற்பனை அனுமதிக்கப்படும் வரை கள்ளுக்கடைகள் அனுமதிக்கப்படும், பனை தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற வழிவகை செய்யப்படும்.

"பகுத்தறிவு பகலவன்" தந்தைப் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 சமூக நீதி நாளாக அறிவிக்கப்படும்.

அதிமுக அரசின் நிதி செயல்பாட்டு முறைகேடுகள், வேகமாக வளர்ந்த அரசின் கடன்கள், திட்டங்களை நிறைவேற்றாத மற்றும் மந்தமாக செயல்படுத்தியதாலும் 119 திட்டங்களில் ரூ.5337.67 கோடியளவிலான நிதி ஒப்புவிப்பு 46 திட்டங்களில் 100 சதவீத நிதிஒப்புவிப்பு என அதிமுக அரசில் நடந்த நிர்வாக கோளாறுகளையும் சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை

நன்றி: பசுமை தாயகம் செயலாளர் அருள்

நக்கீரன் புலனாய்வு இதழ் - மீள்பதிவு









நக்கீரன் புலனாய்வு இதழ்,பதினெட்டாம்(தற்போது பத்தொன்பதாம்) ஆண்டில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த இதழிற்கும் இதன் ஆசிரியர் திரு நக்கீரன் கோபாலுக்கும் வாழ்த்துக்கள்.

நக்கீரன் இதழ் எப்பொழுதுமே எதிர் கட்சியாகத்தான் செயல்படும், அது தி.மு.க ஆட்சியிலிருந்தாலும் சரி அ.தி.மு.க ஆட்சியிலிருந்தாலும், நக்கீரனின் புலனாய்வு செய்திகள் எமக்கு எப்போதும் ஆச்சரியத்தை அளிக்கக்கூடியது.







இவர் இப்படித்தானிருப்பார்
என்பது தெரிந்ததே நக்கீரனால்தான்

யாராலும் கண்டுபிடிக்க முடியாத, தொடர்பு கொள்ள முடியாமல்
இருந்த வீரப்பனிடமிருந்து பேட்டியெடுத்து வெளியிட்டது அதன் முதல் மாபெரும் வெற்றி.

முந்திரிக்காட்டில் பதுங்கியிருந்த தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழர் விடுதலைப்படையின் தலைவர் இளவரசனிடம் பேட்டி எடுத்து வெளியிட்டது









அடித்த ஸ்கூப்களிலே
முக்கியமான ஸ்கூப் இவருடையது தான்


திரு.சங்கரராமன் அவர்கள் காஞ்சிபுரத்திலே வரதராஜ பெருமாள் சன்னிதியிலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டபோது எந்த ஒரு பத்திரிக்கையும் ஒரு கிசு கிசு வாகக்கூட மடத்தை கை காட்டாத போது, நக்கீரன் தான் இந்தக்கொலையில் மடத்தின் தொடர்பை கேள்விக்குள்ளாக்கியது, அது மட்டுமின்றி சங்கராச்சாரியார் அவர்களிடம் நேரடியாக இந்த கொலை பற்றி பேட்டி கண்டபோது, எனக்கு தெரியாது, ஆனால் சங்கரராமன் எனக்கு தந்த தொல்லைகளை பார்த்து என் மேல் பாசம் வைத்திருக்கும் யாரேனும் செய்தால் நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என அவர் பேட்டியில் கூறியபோது ஒரு கோடு,இரண்டு கோடு, மூன்று கோடு என பல கோடுகளை வரைந்தனர், பிறகு இந்த வழக்கில் ஜெயேந்திரர்,விஜயேந்திரர் என பலர் கைது செய்யப்பட்டனர்













திரு.ஆலடி அருணா வெட்டிக்கொலை செய்யப்பட்ட போது, பல பத்திரிக்கைகளும் திரு.கட்டதுரையின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது என்று தகவல் தந்து கொண்டிருந்தபோது பொறியியல் கல்லூரித்தொழில்போட்டியினால் தான் இந்த கொலை நடந்தது என எஸ்.ஏ.ராஜா வின் மீது முதன் முதலில் கைக்காட்டியது நக்கீரன் தான், இவரும் பிறகு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
எஸ்.ஏ.ராஜா, திருநெல்வேலி மாவட்டத்திலே பல கல்விக்கூடங்கள் நடத்தி வரும் பிரபலம்.







தமிழகத்தை கலக்கிய இரு பெண்கள்



கஞ்சா வழக்கில் செரீனா கைது செய்யப்பட்ட போதும், சீட்டிங் வழக்கில் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டபோதும் ஏதோ இது தினம் நடக்கும் சம்பவங்களில் ஒன்று என்று எண்ணியிருந்த்தபோது கைதின் பின் புலங்களை முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன் தான்.


இது போல எண்ணிலடங்கா உதாரணங்கள், கொலை வழக்குகள் மட்டுமல்ல
அரசாங்க அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,கான்டிராக்ட் ஊழல்கள் என கிட்டத்தட்ட எல்லா ஊழல்களையும் பெரும்பாலும் முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன் தான்

பத்திரிக்கைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே மிக அதிகமாக பாதிக்கப்பட்டது நக்கீரன் தான், ஒரு பத்திரிக்கை ஒரு சிரிப்பு வெளியிட்டதற்காக ஒரே ஒரு நாள் அதன் ஆசிரியர் கைது செய்யப்படதை இன்று வரை பத்திரிக்கை சுதந்திரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டுள்ளது, பொடாவினில் பல மாதங்கள் சிறையிலே, பல முறை நக்கீரன் அச்சகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்,பாதிப்படைந்த பதிப்பாளர் திரு.கணேசனின் இறப்பு, ஊழல்களை அம்பலப்படுத்திய பெரம்பலூர் நிருபர் கொலை, இன்னும் பற்பல ஊர்களில் நக்கீரன் நிருபர்கள் மீது தாக்குதல் என ஒரு அடக்குமுறையை எதிர்த்து போராட்டத்தையே நடத்திக்கொண்டுள்ளது நக்கீரனும் அதன் ஆசிரியர் கோபாலும். பொடாவிலே நக்கீரன் கோபால் சிறையிலிருந்த போதும் எந்த பத்திரிக்கையும் கடுமையாக போராடவில்லை, பெயருக்கு ஒரு கண்டன ஆர்பாட்டம், ஒரு கையெழுத்து வேட்டை நடத்திவிட்டு அமைதியாகிவிட்டன.

ஆனால் அத்தனை போராட்டங்களையும் மனவலிமையோடு சந்தித்து இன்றும் ஒரு வெற்றிகரமான பத்திரிக்கையாக வந்து கொண்டுள்ளது,

ஒரு சில அரசியல் இதழ்களைப்போல் அட்டையை உரித்துவிட்டால் எல்லா வாரமும் அதே செய்திகளை தாங்கிக்கொண்டுள்ள (தி.மு.க, கலைஞர் மீது தாக்குதல், பா.ம.க.,ம.தி.மு.க வை மாவட்ட கட்சி என கிண்டல் செய்தல், பாஜக மற்றும் மடங்களுக்கு ஜால்ரா போடுதல், ஒவ்வொரு வாரமும் அதே கேள்வி அதே பதில்கள், கிறுக்குத்தனமாக எதையாவது எழுதுவிட்டு, தான் ஒரு கிறுக்கன் என சொல்லிக்கொள்தல் - புரிகின்றதா யார் என?) பத்திரிக்கை போலன்றி நக்கீரனின் ஒவ்வொரு இதழ் வெளியீடும் ஒரு களப்போராட்டம் தான்.

ஆனாலும் நக்கீரனுக்கு பத்திரிக்கை உலகில் ஒரு பெரிய இடம் மற்றும் பெயர் இல்லை? ஏன் ?

எது இதற்கு காரணம் சாதியா? பணமா? அல்லது சற்று தரம் குறைந்த காகிதத்தில் வண்ணமயமாக பதிப்பிக்காததா?

படங்கள் உதவி - நக்கீரன்

நன்றி - நக்கீரன்

பிற்சேர்க்கை

(நக்கீரன் கோபாலின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டப்பட்டதாலோ என்னவோ இந்த முறை தேர்தலின் போது திமுக ஜால்ரா சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது)

பின்னூட்டத்திற்கு இங்கு சுட்டவும்

அப்சல், தீவிரவாதம், மாறி வரும் போர் முறை




இவைகள் மாற்றுப்பார்வையே, இந்த மாற்றுப்பார்வையே முற்றிலும் சரியானது என்று தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக இருப்பதைவிட இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியமிருப்பதாக கருதியதாலேயே இந்த பதிவு.

இந்திய நாடாளுமன்றத்தை தாக்கியதற்கு உதவிய அப்சலை தூக்கில் போடுமாறும் அது நியாயமனதுமே என்று இங்கே பலரும் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் மேலே உள்ளபடங்களில் இருப்பவர்கள் அப்சலின் தூக்கை எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர், அவர்களும் இந்தியர்கள் என்று தானே சொல்லப்படுகிறார்கள், தாக்கப்பட்ட பாராளுமன்றம் அவர்களுக்கும் உரிமையானது தானே பிறகேன் அவர்கள் அப்சலின் தூக்கை எதிர்க்கின்றார்கள், தெருவில் இறங்குகின்றனர், இங்கே பலருக்கும் உள்ள அந்த உணர்ச்சி அவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? எது அவர்களை தெருவில் இறங்க வைத்துள்ளது?


மேலே படத்தில் இருப்பவர் யார் தெரிகின்றதா? இவர் பெயர் சப்ரஜித் சிங், இவர் 1989ல் பாக்கிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு தொடர்புடையவர் என்று பாக்கிஸ்தானில் வழக்கு நடந்து தூக்கு தண்டனையை எதிர் நோக்கியிருப்பவர், இவருக்காக இந்தியாவும், இந்திய தூதரும் அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய பாக்கிஸ்தானிடம் கோரிக்கை விடுத்தது, பாக்கிஸ்தான் அதிபர் முஷாரப் அவர் "ரா"வை சேர்ந்தவர் என்றும் அவருக்கு குண்டுவெடிப்புகளோடு தொடர்புள்ளது என பாக்கிஸ்தான் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறிவிட்டார். இவர் ஆடுமேய்க்கும்போது தவறுதலாக சென்றவர் என்றது இந்திய தரப்பு, ஆனாலும் இந்திய மக்களும், அரசாங்கமும் அவரது தூக்கை தடைசெய்ய எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொண்டது.

இன்று வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை எதிர்க்கும் இந்தியாவில் புத்தர் சிரித்த அணுஆயுத சோதனையும் நடந்தது.

இவையெல்லாம் சொல்ல காரணம் சரிகளும் தவறுகளும், ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றது, செய்பவர்களை பொறுத்து மாறுகின்றது, செய்தது யார், பார்ப்பவர் யார் என்பதை பொறுத்து மாறுகின்றது.

"சிக்காடிலோ" என்ற தொடர்கொலைகாரன் செய்த கொலைகளுக்கு க்ராவ்சென்கோ என்பவரின் மீது குற்றம் சாட்டி தூக்கிலிட்டு பின் அதை செய்தது சிக்காடிலோ என்று அறியவந்த போது செய்த தவறை திருத்திகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது, கிலானியில் ஆரம்பித்து விஞ்ஞானி நம்பிநாராயணன் ஜோடிக்கப்பட்ட வழக்கு வரை பலவற்றிலும் ஒரு வேளை தூக்களிக்கப்பட்டிருந்தால் தவறுகள் திருத்திக்கொள்ளப்பட வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.

"ஒரு நாள் காலை சி.ஐ.டி. போலீஸ் சூபரிடென்ட் மிஸ்டர் நியூமேன் என்னிடம் வந்தார், நாங்கள் சொல்கின்ற மாதிரி வாக்கு மூலம் தராவிட்டால் காகோரி வழக்கில் என்னை சேர்த்து தசராவில் குண்டு வழக்கில் சிக்கவைக்கப் போவதாக மிரட்டினார். போதுமான சாட்சியத்துடன் தூக்கில் போடுவேன் என்றார், அப்போது எனக்கு விபரம் அதிகம் தெரியாதென்றாலும் கூட போலீஸ் நினைத்தால் எதையும் செய்ய முடியுமென கருதினேன்" - இதை சொன்னவர் பகத்சிங்( நூல் - நான் ஏன் நாத்திகன் ஆனேன்?)

பொதுவாக யாரையுமே தூக்கில் போடக்கூடாது என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்துபவர்கள், தவறுதலாக தூக்கிலிடப்படுதல், சோடிக்கப்பட்ட வழக்கு, அப்சல் நாடாளுமன்ற தாக்குதலில் அவருடைய தொடர்பென்ன இப்படியெல்லாம் பலரும் பேசுவதால் இதை தொடாமல் நேரடியாக அடுத்த நிலைக்கு சென்றேன், சரியும் தவறும் செய்பவர்களை பொறுத்தும் பார்ப்பவர்களை பொறுத்தும் அமையும் என்பதை வலியுறுத்தவே அப்படியான ஒரு பதிவு.

வெகுசன ஊடகங்களைப்போலவே வலைப்பதிவுகளிலும் பல இடங்களில் இந்திய தேச பக்தி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் எத்தனை தூரம் இந்திய தேசியம் நசுக்கும் தேசிய இனங்கள் பற்றி பேச இயலும் என தெரியவில்லை, வடகிழக்கு மாநிலங்களில் நேற்றுதான் இராணுவ சட்டம் திரும்பபெறப்பட்டுள்ளது, சப்பையான மூக்கும், இடுங்கிய கண்களும் உள்ள மங்கோலிய இனமான அந்த வடகிழக்கு மாநில மக்கள் எந்த விதத்தில் இந்தியாவுடன் எந்த இயல்பான கலாச்சார, மொழி, மத பண்பாட்டு முறையில் இணைக்கப்பட்டனர் என்ற கேள்விக்கு நம்மால் விடைசொல்வதென்பது கடினமானதே, வெகுசன ஊடகங்களால் மறைக்கப்பட்டிருந்தாலும் அங்கே தனி அரசாங்கமே நடந்து கொண்டிருப்பதும், அங்கே வரிவசூலில் ஆரம்பித்து ஒரு அங்கீகரிக்கப்படாத அரசாங்கமே நடந்து வந்திருக்கின்றது, அந்த பிரதமருடன்(அப்படி அவர்கள் அழைத்துகொள்கின்றனர்) ஜப்பானில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பேச்சுவார்த்தைகளை நடத்தினர். ( தமிழ்நாட்டில் இருந்து லாரிகளில் அங்கு போகும் ஆட்களை கேட்டால் வரிவசூல் பற்றி சொல்வார்கள். அவர்களை பாராட்ட அல்ல இந்த தகவல் .யதார்த்தத்தை சொல்லவே)

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா நிச்சயமாக வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என்பது தெளிவானதே, காஷ்மீர் பிரச்சினை பற்றிய அலசல் தமிழ்சசி அவர்களால் கிட்டத்தட்ட முழுவதுமாக அலசப்பட்டுள்ளது அதன் சுட்டிகள் இங்கே.

சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை

காஷ்மீரின் விடுதலை

காஷ்மீர் பிரச்சினை என்றாலே அதை உடனடியாக இசுலாமிய அடிப்படை பயங்கரவாத செயல்களோடு இணைத்து காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசுபவர்கள் இசுலாமிய அடிப்படை வாதிகளுக்கு ஆதரவு தருவது போன்ற அய்யோக்கியத்தனமான பொய் பிரச்சாரத்தை செய்து வரும் இந்திய வெகுசன ஊடகங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் இங்கே வலைப்பதிவிலும் காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசும்போது இசுலாமிய அடிப்படைவாத அல்கொய்தா அமைப்புகள் செய்த படுகொலைகளின் படத்தை போட்டு பேசுவது காஷ்மீர் பற்றி பேசுபவர்களின் மீது இசுலாமிய அடிப்படைவாத ஆதரவாளர்கள் என்பது போன்ற மாயத்தை ஏற்படுத்த முயல்வது அவர்களின் நேர்மையின்மையையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது என கருத வாய்ப்புள்ளது, இந்து மத கவசத்தை அணிந்திருக்கும் என்னை போன்றவர்களுக்கே இப்படியான நிலை என்னும் போது இந்த பிரச்சினையில் இசுலாமிய வலைப்பதிவாளர்கள் எந்த அளவிற்கு பேச இயலும் என்பது சந்தேகமே.

முன்பிருந்த போர்முறைகளில் பெரும்பாலும் கூட்டம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கமே வெற்றி என்ற நிலை இருந்தது, மாறி வரும் போர் உத்திகள், வெடிகுண்டுகள் எல்லாம் இன்று எத்தனை பெரிய நாட்டையும் சிறு குழுக்கள் அந்த நாட்டின் நிம்மதியை இழக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, இலங்கை இராணுவத்தின் அளவில் பாதி கூட இல்லாத விடுதலைபுலிகளை இலங்கை அரசு வெற்றி கொள்ள இயலாத நிலை, கார் குண்டுவெடிப்புகள், தற்கொலை குண்டு வெடிப்புகள் என இன்று ஏதேனும் ஒரு முறையில் நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன, பாதிக்கப்படும் இனக்குழுக்கள் அது பயங்கரவாதத்தாலோ, அரச பயங்கரவாதத்தாலோ எதுவானாலும் இன்றைய நிலையில் அந்த இனக்குழுக்கள் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களுக்கு பெருமளவில் சேதத்தை உருவாக்க இயலும் என்பதே தற்போது நாம் உலகில் பார்த்துக்கொண்டிருப்பது, அறிவிக்கப்பட்டது தான் போர் என்றில்லை, எல்லாமே போர்தான் இது குழுக்களுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் பொறுந்தும், இப்போது போர் முறை மாறிவிட்டதால் சிறிய சிறிய நாடுகள் கூட பெரும் சேதத்தை எதிரிக்கு விளைவிக்கலாம், சில ஆண்டுகளுக்கு முன் பாக்கிஸ்த்தானுடம் போர் அபாயம் ஏற்பட்டு நீங்கியதே, ஏன் இந்தியாவில் போரை ஆரம்பிக்க இயலவில்லை, ஏன் தயங்கினார்கள், அணு ஆயுதப்போரின் அபாயம் வரை சென்றது ஆனால் போர் நடக்கவில்லை, போர் ஆரம்பித்தால் இந்தியாவினால் பாக்கிஸ்தானுக்கு ஏற்படும் அழிவிற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் இங்கேயும் ஏற்படும் அது தான் காரணம், பாக்கிஸ்தானின் அணு ஆயுத பலம் அது மேலும் ஒரு முறை இந்தியாவிடம் போரில் அடிபடுவதிலிருந்து தப்பித்தது...


இயல்பாக எழும் சில கேள்விகளும் விவகாரத்திற்காகவே எழுப்பப்பட்ட சில கேள்விகளையும் பார்க்கலாம்.

உம்ம வீட்டில் யாரேனும் இம்மாதிரி நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டால் இப்படியான மாற்றுபார்வை பற்றி பேச இயலுமா என்ற கேள்வி எழும் போது நேர்மையான பதில் "இப்படியாக பேச முடியாது" என்பதுவே, உம்ம வீட்டில் அரச பயங்கரவாதம் நடந்திருந்தால் அப்போதும் தேசபக்தி பெருக்கெடுத்து ஓடுமா என்ற கேள்வியும் எழுவது நியாயமானதாகவே இருக்கலாம், பயங்கரவாதமோ, அரச பயங்கரவாதமோ நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தான் அதன் எதிர்வினைகள் ஆற்ற வேண்டும் மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள் என்பதற்கு எந்த காலத்திலும் ஆதாரமில்லை, 12வயதில் நேரடியாக பாதிக்கப்படாத ஆனால் ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை பார்த்த பகத்சிங்கின் பங்கு சுதந்திரப்போராட்டத்தில் எத்தனை தூரம் இருந்தது என்பது நாம் அறிந்ததே, வலைப்பதிவாளர் ராஜ்வனஜ் கோயமுத்தூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரடியாக பெரும் பாதிப்பில்லையென்றாலும் வெகுண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்தது என நிறைய இருக்கின்றது.

கற்பழிக்காத இராணுவமென்று உலகில் எதுவுமேயில்லை, தீவிரவாதிகளை பிடிக்க போகும்போது அத்துமீறல்கள் நடக்கத்தான் செய்யும், பாருங்கள் காஷ்மீரில் கூட இராணுவம் இப்படி பாதிக்கப்பட்டவர்களை தத்தெடுத்துள்ளது இப்படியான ஒரு பின்னூட்டம் வீசப்பட்டது, எப்படி இப்படி ஒரு சாக்கு நம்மால் சொல்ல முடிகின்றது? அரசாங்க, இராணுவ அத்து மீறல்களுக்கு அந்த அரசை உருவாக்கியவர்களுக்கும், இராணுவத்திற்கு சம்பளம் கொடுக்கும் அந்த நாட்டின் குடிமக்களுக்கும் எந்த பொறுப்பும் இல்லையா? எந்த மக்களை எந்த தேசத்தை எந்த அரசை காப்பதற்காக பயங்கரவாதத்தை எதிர்கொள்பவர்கள் அந்த மக்களின் மீது தம் கோபத்தை காண்பிக்க மாட்டார்களா?

அன்னிய தலையீடு பற்றி பேசும்போது சமீபத்தில் கொல்லப்பட்ட பாக்கிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானை தனி நாடாக்க கோரிய பழங்குடி தலைவர் புட்கா அவர்களிடம் இந்தியா உங்களுக்கு உதவுவதாக சொல்கிறார்களே என்று எழும்பிய கேள்விக்கு பதிலாக பாக்கிஸ்தானிலிருந்து விடுதலை பெற நாங்கள் எந்த சைத்தானிடமிருந்து வேண்டுமானாலும் உதவி பெறுவோம் என்றார், இந்திய சுதந்திரத்திற்காக ஹிட்லரின் உதவியை நாடிய சென்பகராமன், ஜப்பான் துணையை கொண்டு அமைக்கப்பட்ட நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் எல்லாம் நினைவுக்கு வருகின்றது.

காஷ்மீர் மக்கள் தேர்தலில் பங்கெடுக்கின்றார்களே என்பவர்களுக்கு இந்தியா சுதந்திரம் பெறும் முன் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ், முஸ்லீம் லீக், நீதிக்கட்சி என பல தரப்பட்ட கட்சிகளும் தேர்தலில் பங்கெடுத்ததை நினைவு படுத்த விரும்புகின்றேன்.

சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்திய ஊடகங்கள் சொல்வது மட்டுமே நமக்கு செய்தியாக இருந்தன, இன்றைய இணைய உலகில் செய்திகளை தெரிந்து கொள்வதற்கு எந்த கட்டுப்பாடுமில்லை, பாக்கிஸ்தான் செய்தி தாளை கூட இணையத்தில் படிக்கலாம், எல்லா நாட்டு செய்திகளையும் படிக்கலாம், அதை முழுவதுமாக நம்பவேண்டுமென்பதில்லை, குறைந்த பட்சம் என்ன நடக்கிறதென்றாவது தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய நிலையில் எல்லா இனக் குழுக்களுக்கும் அவரவர்களுக்கான நியாயமான உரிமைகளையும் பங்கையும் கொடுத்தால் மட்டுமே நிம்மதியாக நாட்டு மக்கள் உறங்கும் நிலை, அடக்குமுறைக்கு ஆளாகும்,ஒடுக்கப்படும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இனக்குழுக்கள் இன்றைய சூழலில் எளிதாக மற்ற மக்களின் நிம்மதியை கெடுக்கும் நிலைப்பாடு உள்ளது.

References:
http://www.hindu.com/2005/09/15/stories/2005091506231200.htm
http://www.paktribune.com/news/index.shtml?116707

வலையுலக அரசியலில் கணக்கு தீர்க்கும் முகமாக ராமதாஸ் சட்டகத்தில் அடைக்க முயன்றவர்களில் ஆரம்பித்து மூடிக்கொண்டிரு என்று கூறியவர்கள் வரை என் மீது தனிமனித தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்த பதிவு எழுத ஆரம்பிக்கும் முன் பதில் சொல்ல வேண்டுமென்ற மனநிலை இருந்தது, ஆனால் அது தற்போது இல்லை என்பதால் அந்த தனிமனித தாக்குதல்கலை புறந்தள்ளி செல்கிறேன்.

நாடாளுமன்ற தாக்குதலும் தூக்கு தண்டனையும்

நாடாளுமன்றத்தை தாக்கி அதில் வெடிகுண்டு வீசியவர்கள் நாட்டின் இறையாண்மைக்கு ஊறுவிளவிக்க முயற்சித்தார்கள் என்பது உண்மை, இந்த நாட்டில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் ஒரு பதட்டத்தை உருவாக்கினார்கள் என்பது உண்மையே, ஆனால் இதையும் சுதந்திர போராட்டம் என்பார்கள், இப்படி பட்ட தீவிரவாதிகளை தூக்கிலிடுவதே சரியானதாக இருக்கும், இதை சுதந்திர போராட்டமாக உருவகித்து பேசுபவர்கள் அவர்கள் கொலை செய்யும்போதும், குண்டு வைக்கும்போதும் அது தேசிய இனங்களின் எழுச்சி, உரிமைக்குரல் என்பார்கள். ( இவர்கள் வீட்டில் எல்லாம் அவர்கள் குண்டு வைக்கப் போவதில்லை . ஏனெனில் இவர்கள் திருட்டுத்தனமாக வீடு கட்டியிருப்பது அரசால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதியில் அல்லவா?)

மரண தண்டனை ஒரு சமூகத்தில் ஏன் தேவைப்படுகிறது? அரசுக்கு ஒரு மனிதனை கொல்லும் உரிமை உண்டா?

மரண தண்டனை ஒட்டுமொத்தமாக தேவை அல்லது தேவை இல்லை என்ற நிலைப்பாடு தான் உண்மையான பொதுப்புத்தி. ஒரு சமூகத்தில் மரண தண்டனை தேவையா, தேவை இல்லையா என்பது அந்தந்த சமூகம் ,சூழ்நிலை, அது எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றை பொறுத்தே அமைய முடியும்.


இப்படி அரசுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தும் தீவிரவாதிகளுக்கு மரணதண்டனை தருவது சரியானதாகவே இருக்கும், இப்படி பட்ட தீவிரவாதிகளை தூக்கில் போடாமால் விட்டால் பிறகு எப்படியாவது அவர்கள் விடுதலையாகிவிட்டால் அப்புறம் அந்த தீவிரவாதி மறுபடி குண்டு வைப்பது, படை திரட்டுவது என காரியங்களில் ஈடுபடுவான் . இவர்கள் "தேசிய இனங்களின் எழுச்சி" என அதை வர்ணித்து பூரித்து, புளகாங்கிதமடைந்து கைதட்டுவார்கள்.

(சிவப்பு வரிகள் உதவிக்கு நன்றி செல்வன்)

முகமது அப்சலுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை பற்றிய கருத்துஇல்லைங்க, நாடாளுமன்றத்திற்குள் குண்டுவீசியதற்காக 1930ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் நாள் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையின் போது பலரும் இப்படி எழுதியிருக்கலாம், பேசியிருக்கலாம், நினைத்திருக்கலாம்

பிற்சேர்க்கை

வழக்கமாக பொதுவாக எல்லா பிரச்சினைகளிலும் தலையை சுற்றி மூக்கை தொடும் என் பதிவுகள் இந்த முறை சட்டென்று bulls eyeல் அடித்துவிட்டது என நினைக்கின்றேன்.

தருமி அய்யா இந்த பதிவை நீக்க கூறினார், அவருக்கு பதிலாக "எதிர்வினை பதிவுகள் எல்லாம் வந்துவிட்டதால் எந்த அளவிற்கு இது சாத்தியம் என தெரியவில்லை, இந்தியதேசிய சட்டப்படி (கருத்து சுதந்திரத்திற்கு) இந்த பதிவி தவறென்றால் உடனடியாக இந்த பதிவை நீக்குகிறேன். "

அப்சலை இந்தியனாக அணுகுவதற்கும் காஷ்மீரியாக அணுகுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன.

பகத்சிங்கை இந்தியனாக அணுகுவதற்கும் ஆங்கிலேய அரசின் குடிமகனாக அணுகுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

அதை சுட்டி காட்டுதலே இந்த பதிவு, அடுத்த சில நாட்களுக்கு அனேகமாக திரித்தல், கொளுத்தல் எல்லாம் சேர்த்து பொதுமாத்து எனக்காக இருக்கும், யாராவது கருத்து சுதந்திர காவலர்கள் என்னை காப்பாற்றினால் தான் உண்டு என நினைக்கின்றேன், கடைசியாக விளக்கம் தர தயாராக உள்ளேன், ஆனால் நடுவில் திரிக்கப்பட்டு, துப்பப்படும் எச்சில்களுக்கு அல்ல.

RSS - பிரச்சினை உள்ளவர்களுக்கு

இது சரியான தீர்வா என்று தெரியவில்லை, என்னளவில் இது வேலை செய்கின்றது.
--------------------------------------
பிரச்சினை என்னவென்றால் XML க்கு ஒவ்வாத & # 3 ; இதன் ஒவ்வொரு எழுத்திற்கும் இடவெளி விட்டுள்ளேன், இது உங்கள் பதிவில் இடைவெளியில்லாமல் இருக்கும் இதை கண்டுபிடித்து உங்கள் பதிவிலிருந்து நீக்கினால் வேலை செய்யும், இதை நீக்க Edit Html ஐ சுட்டி அதிலிருந்து செல்லுங்கள் ,பிரச்சினைக்குறிய அந்த எழுத்துகளை கீழுள்ள படத்தில் வட்டமிட்டுள்ளேன்.

---------------------------------------
உதாரணமாக இது ரோசாவந்த்தின் பதிவில் "வசையும்" "தேசத்துரோகி" என்ற இரு வார்த்தைகளின் நடுவில் வருகின்றது, இதை நீக்கினால் RSS பிரச்சினை இல்லாமல் வேலைசெய்யும் என கருதுகின்றேன்
-------------------
பொதுபுத்தியுடன் எதையும் உரையாட முடியாது. இந்தவிஷயத்தில் விநோதம் என்னவென்றால், அஃப்சலின் தூக்குதண்டனைக்கு எதிராக வலைப்பதிவுகளில் கருத்து சொல்ல வந்த சில இஸ்லாமியர்கள் கூட, இந்த பொது புத்தியிலிருந்து விலகிஎதையும் சொல்லமுடியவில்லை என்பதுதான். நரேந்திர மோடியையும் தூக்கில் போடவேண்டியதுதானே என்பதற்கு மேல் அவர்களிடமும் வேறு வாதங்கள் இல்லை. வேறு யாரிடமிருந்தும்எந்த வகை குரலும் ஒலித்ததாக எனக்கு கேட்கவில்லை. <br /> <br /> <br /> <br />வழக்கம் போல மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அஃப்சலின் தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் அதை செய்வதாக சொல்வது; இன்று இருக்கும் தேசியம் சார்ந்த ஜுரத்தின் இடையில், இந்திய பாராளுமன்றத்தை தாக்கியதாக தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும்

பழைய ஞாபகம் மற்றும் முன்னெச்சரிக்கை

"முறைப்படி தேர்தல் நடந்தால் அதிமுக அமோக வெற்றிபெறும்" என்று அதிமுக பொதுச்செயலாளர் பேட்டியளித்துள்ளார், சென்ற உள்ளாட்சி தேர்தலில் ரவுடிகளை வைத்து அதிமுக நடத்திய கூத்துகள் ஞாபகம் வந்து விட்டது போல, ஒரு வேளை தோற்றுவிட்டால் அதான் இப்போதே முன்னெச்சரிக்கையாக முறைப்படி தேர்தல் நடக்கவில்லை என்று சொல்லிவிடலாமே... ஹா ஹா...

தினமலர் சுட்டி

விஜயகாந்த்தும் 28 இலட்சமும்

தேர்தல் முடிந்தவுடன் எழுத நினைத்த பதிவு நாளாகிவிட்டது, தமிழகத்தில் எத்தனை சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகள் இருக்கிறது என்று மக்களுக்கு தெரியுமோ இல்லையோ பத்திரிக்கைகள் புண்ணியத்தில் விஜயகாந்த் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது என்றால் சட்டென்று சொல்வார்கள் 28 இலட்சமென்று, அவர் கட்சி வாங்கிய வாக்குகள் 8.32%, அதாவது நூற்றுக்கு எட்டு வாக்காளர்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள், பொதுவாக சதவீதத்தில் பேசும் நம் பத்திரிக்கைகளுக்கு என்ன ஆனது வாக்கு எண்ணிக்கை கணக்கில் பேசுகின்றனர், ஏன் வேறு யாருமே இதற்கு முன் முதல் தேர்தலில் 8% வாக்குகள் பெறவில்லையா? என்றெல்லாம் கேட்டால் பத்திரிக்கைகள் விஜயகாந்த்தை வைத்து செய்யும் அரசியல் தெரியும்.

சில புள்ளிவிபரங்களோடு இந்த கட்டுரை உள்ளது, முழுதும் படிக்க முடியாதவர்கள் பதிவின் கடைசியில் சில கேள்விகள் உள்ளன, அதை மட்டுமாவது படிக்க வேண்டுகிறேன்.

இந்த தேர்தலின் போது இருந்த சூழல் முதலில் கணக்கிலெடுத்தால் பொதுமக்கள் மத்தியில் அதிமுக அரசின் மீது 1996ல் இருந்தது போன்ற மிகப்பெரும் எதிர்ப்பெதுவும் இல்லை, அதே சமயம் 1991 போல திமுக மீதான எதிர்ப்பு (ராஜீவ் காந்தி கொலை அனுதாப அலை) எதுவும் இல்லை, பொதுவாக தமிழக தேர்தல்கள் யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பதை விட யார் தேர்ந்தெடுக்கப்பட கூடாது என்பதுவே வெற்றி தோல்வியை முடிவு செய்யும், 1996 தேர்தலில் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படக் கூடாது அதனால் ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் வாக்குகள் சிதறக்கூடாது என்றே திமுகவிற்கு முன்னெப்போதும் வாக்களிக்காதவர்கள் கூட திமுகவிற்கு வாக்களித்தனர், இது பாமக, மதிமுக போன்ற கட்சிகளையும் பாதித்தது, ஆனால் தேர்தல் அலையின் போது தோல்வியின் பக்கத்தில் இருக்கும் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகளே அவர்களின் உண்மையான வாக்கு வங்கி பலம், இந்த தேர்தலில் அது மாதிரியான அலை ஏதும் இல்லாததால் மக்களிடம் யார் வரக்கூடாது என்ற எந்த கட்டாயமும் இல்லாததால் அவர்களின் விருப்பம் போல வாக்குகள் விழுந்தன, அப்படி திமுக, அதிமுக இருவரும் வேண்டாமென விஜயகாந்த் பக்கம் சென்றவர்கள் அதிகம், அதிமுக மீது 1996ல் இருந்த வெறுப்போ, திமுக மீது 1991ல் இருந்த வெறுப்போ இந்த தேர்தலில் இருந்திருந்தால் விஜயகாந்த்க்கு விழுந்த வாக்குகள் குறைந்திருக்கும்.

2006 சட்டமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 70.82% வாக்குபதிவு இருந்தது, 2001 சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவு 59.07%, முந்தைய தேர்தலைவிட 11.75% கூடுதல் வாக்கு பதிவு. மூன்று கோடியே முப்பது இலட்சத்து அய்யாயிரத்து நானூற்று தொன்னூற்றிரண்டு (3,30,05,492) பதிவான வாக்குகளில் விஜயகாந்த் பெற்றது வெறும் 28 இலட்சம் வாக்குகள்.

முந்தைய தேர்தலைவிட கிட்டத்தட்ட அரை கோடி(49,57,415) வாக்காளார்கள் அதிகம் வாக்களித்திருந்த போதிலும் விஜயகாந்த் பெற்றது வெறும் 28 இலட்சம் வாக்குகள், அவரால் புதிதாக வாக்களித்தவர்களின் வாக்கை முழுமையாக பெற்றிருந்தாலும் கூட 50 இலட்சம் வாக்குகள் பெற்றிருப்பார், ஆனால் அதைக்கூட ஒரு முதல்வர் வேட்பாளரால் சாதிக்க முடியவில்லை.


பாமகவிற்கு கிட்டத்தட்ட இதே போன்றதொரு சூழல் நிலவியது 1989 பாராளுமன்ற தேர்தலில்(1991,96 தேர்தல்களில் அலை வீசியது, 2001,2006 தேர்தல்களில் கூட்டணி இருந்ததால் அவைகளை இந்த ஆய்வில் கணக்கில் எடுக்க வில்லை) , மதிமுகவிற்கு 2001 தேர்தலில் இந்த சூழ்நிலை நிலவியது.

1989 பாராளுமன்ற தேர்தல் புள்ளி விபரம்

பதிவான வாக்குகள் 2,67,63,788
செல்லத்தக்க வாக்குகள் 2,63,99,730
செல்லாத வாக்குகள் 3,64,058

இதில் பாமக பெற்ற வாக்குகள் 7.06% (15,61,371) 33 இடங்களில் போட்டியிட்டது (32 தமிழகம், 1 பாண்டிச்சேரி)

போட்டியிட்ட இடங்களில் மொத்த வாக்கு 7.06%
1991 ராஜீவ்காந்தி கொலை அனுதாப அலையிலும் போட்டியிட்ட இடங்களில் மொத்த வாக்கு 7.00% (1 இடம் வெற்றி, 29 இடங்களில் பிணைத்தொகை திரும்ப கிடைத்தது)
1996 ஜெயலலிதா எதிர்ப்பு அலையிலும் போட்டியிட்ட இடங்களில் மொத்த வா 7.61% வாக்குகளும் பெற்றது. (4 இடங்களில் வெற்றி, 17 இடங்களில் பிணைத்தொகை திரும்ப கிடைத்தது)

மாநிலம் முழுவதற்கும் மொத்தமாக போட்டியிடாத இடங்களுக்கும் சேர்த்து (தமிழகம் 5.82% + பாண்டிச்சேரி 6.63%)

2006 தேர்தல் புள்ளி விபரம்

பதிவான வாக்குகள் 3,30,05,492
செல்லத்தக்க வாக்குகள் 3,29,91,555
செல்லாத வாக்குகள் 5,828

போட்டியிட்ட இடங்களில் விஜயகாந்த் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 8.45%
1989ல் பாமக பெற்றதை விட வெறும் 1.39% கூடுதலாக பெற்றுள்ளது.
1989ல் பாமக பெற்றதை விட வெறும் 0.84% கூடுதலாக பெற்றுள்ளது.
1இடத்தில் அதுவும் விஜயகாந்த் மட்டும் வெற்றி, 9 இடங்களில் மட்டுமே விஜயகாந்த் கட்சி பிணைத்தொகை திரும்ப பெற்றுள்ளது
223 இடங்களில் விஜயகாந்த் கட்சி பிணைத்தொகையை இழந்துள்ளது.

வடமாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள ஒரு கட்சி (33 பாராளுமன்ற தொகுதிகள் என்றால் மாநிலத்தில் 85% இடங்களில் போட்டியிட்டுள்ளது) பெற்ற வாக்குகளைவிட மாநிலம் முழுவதும் செல்வாக்குள்ளதாக நம்பவைக்கப்படும் ஒரு கட்சி பெற்ற அதிக வாக்குகள் வெறும் 1.39%, பத்திரிக்கைகள் போடும் கணக்கில் பார்த்தால் கூட இன்றைக்கு கூடுதலாக வாக்கு பதிவையும் சேர்த்தால் கிட்டத்தட்ட இருபது இலட்சம் வாக்குகள் வந்து சேரும், ஆனாலும் இன்று பத்திரிக்கைகள் விஜயகாந்த் பெற்ற வாக்கு சதவீதத்தை சொல்லாமல் 28 இலட்சம் 28 இலட்சம் என ஏதோ ஒரு இமாலய சாதனை போல் பிம்பம் ஏற்படுத்த முயல்வது தெளிவாகத் தெரிகின்றது. மேலும் 232 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி 223 தொகுதிகளில் பிணைத்தொகையை பறி கொடுத்துள்ளது, வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே பிணைத்தொகை மீள கிடைத்துள்ளது. ஆனால் பாமக 1991,96 தேர்தல்களில் முறையே 29, 17 இடங்களில் பிணைத்தொகையை மீளப்பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட இதே நிலைதான் மதிமுக வுடன் விஜயகாந்த் கட்சியை ஒப்பிட்டு நோக்கும் போதும், தமிழகத்தில் நான்காம், ஐந்தாம் இடத்திலிருக்கும் பாமக, மதிமுக கட்சிகளைவிட பெரிய அளவில் தேர்தலில் எந்த சாதனையும் செய்யாத விஜயகாந்திற்கு கொடுக்கப்படும் அதீத விளம்பர பிம்பமும் விஜயகாந்த்தை பத்திரிக்கைகள் தூக்கிவிட முயற்சிப்பதன் உள்நோக்கத்தையும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

இப்போது என் முன் இருக்கும் கேள்விகள்

1) வெறும் 8.45% பலமுள்ள விஜயகாந்த்தை எப்படி அவரைப்போல மூன்று பங்கு பலமுள்ள ஜெயலலிதா, கருணாநிதியோடு போட்டியாளராக காண்பிக்கின்றார்கள்?


2) காங்கிரசின் வாக்கு பலம் எந்த நிலையிலும் 10% குறைந்ததில்லை என்னும் போது எந்த கணக்கை வைத்து விஜயகாந்த்தை மூன்றாவது பெரிய கட்சி என்கிறார்கள்?


3) திரைப்பட பிரபல செல்வாக்கினால் ஆந்திராவில் கட்சி ஆரம்பித்த என்.டி.ராமராவ் சில மாதங்களிலேயே ஆட்சியை பிடித்தார், இங்கே தமிழகத்தில் எம்.ஜி.ஆரும் ஆட்சியை பிடித்தார், இப்படி எதுவுமே இல்லாமல் வெறும் 8% வாக்குகள் பெற்றவரை பத்திரிக்கைகள் சாதனையாளராக காண்பிப்பதின் உள் நோக்கமென்ன?


4) கூட்டணி இல்லாமல் பிறகட்சிகளை போட்டியிட அறைகூவல் விடும் விஜயகாந்த்துக்கு எல்லோரும் தனித்தனியாக போட்டியிட்டால் வட மாவட்டங்களில் 1,2,3 இடங்களை திமுக, அதிமுக, பாமகவும் தென்மாவட்டங்களில் அதிமுக, திமுக, காங்கிரசும், மேற்கு மாவட்டங்களில் திமுக,அதிமுக, மதிமுக வும் பங்கிட்டுக்கொள்ளும் என தெரியாதா? டெல்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்ட்களும், சில தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள், புதியதமிழகமும் பங்கிட்டுக்கொண்டால் ஒற்றை இலக்க தொகுதிகளில் கூட மூன்றாம் இடம் கூட கிடைக்காது என்பது விஜயகாந்த்துக்கும் பத்திரிக்கைகளுக்கும் தெரியாதா?


5)முந்தைய தேர்தலைவிட கிட்டத்தட்ட அரை கோடி(49,57,415) வாக்காளார்கள் அதிகம் வாக்களித்திருந்த போதிலும் விஜயகாந்த் பெற்றது வெறும் 28 இலட்சம் வாக்குகள், அவரால் புதிதாக வாக்களித்தவர்களின் வாக்கை முழுமையாக பெற்றிருந்தாலும் கூட 50 இலட்சம் வாக்குகள் பெற்றிருப்பார், ஆனால் அதைக்கூட ஒரு முதல்வர் வேட்பாளரால் சாதிக்க முடியவில்லை என்னும் போது பத்திரிக்கைகள் எப்படி அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகின்றன?


6) சில நாட்களுக்கு முன் நடைபெற்ற புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் காரைக்கால் நகராட்சி தலைவராக தேமுதிக கட்சியின் பிரபாவதி வெற்றி பெற்றார், இதை பத்திரிக்கைகள் மிகப்பெரிதாக பேசின இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியிடம் பத்திரிக்கைகள் கேள்வி கேட்ட போது முதல்வர் கூறினார் பிரபாவதி காங்கிரசில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் தான் தேமுதிகவில் போட்டியிட்டார் என்றார், இதற்கு தேமுதிகவின் வெற்றியை சிறுமை படுத்திவிட்டார் என்று கடும் கண்டனம் தெரிவித்தார், அதே பிராபாவதி விகடனுக்கு அளித்த பேட்டி கீழே, அதில் தான் செய்த சமுதாயப்பணிதான் இந்த பதவியில் அமர்த்தியிருக்கின்றது என கூறியுள்ளார், இப்போது விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த், பிரபாவதியை கட்சியை விட்டு நீக்குவாரா?




7)சென்ற ஆண்டு புதிதாக கட்சி ஆரம்பித்தவுடன் அந்த கட்சியை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய முயன்றபோது ஏகப்பட்ட குழப்பம், சரியாக விதிகளை கடைபிடிக்கவில்லை என்று, இப்போது 8.32% வாக்குகள் பெற்று மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்து "முரசு" சின்னத்தை தக்க வைக்க வாய்ப்பிருந்தும் சரியாக தேர்தல் ஆணையத்திடம் கொண்டு சென்று தேவையான நடைமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக, தன் கட்சியின் வெற்றியை, அங்கீகாரத்தை கூட பதிவு செய்யாமல் இருந்துவிட்டு இப்போது திமுகவின் சதியால் முரசு சின்னம் கிடைக்கவில்லை என்று பொய் பிரச்சாரம் வேறு, தன் சொந்த கட்சியின் எதிர்காலத்தின் முக்கியமான விடயத்திலேயே அலட்சியமாக இருந்தவர் முதல்வரானால் என்ன நிர்வாகத்திறமையோடு இருப்பார்?


8) பத்திரிக்கைகள் இழந்து போன தங்கள் சமூகத்தின் 'ராஜரிஷி' பட்டத்தை ரஜினியிடம் முயற்சித்து பின் வீணாகி இப்போது விஜயகாந்த்தை கொண்டு மீட்கலாம் என நினைப்பது தான் இத்தனை தூரம் தூக்கிபிடிக்க காரணமோ?



இந்த உள்ளாட்சி தேர்தலில் ஒரு கோடியே தொன்னூறு இலட்சம் நகர்புறவாக்களர்களும், இரண்டு கோடியே அறுபத்தியெட்டு இலட்சம் கிராமப்புற வாக்காளர்களும் உள்ளனர், நகர் புற வாக்காளர்களுக்கு ஆளுக்கு ஒரு ஓட்டும் , கிராமப்புறத்தில் ஆளுக்கு நான்கு ஓட்டு (பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்) களும் ஆக மொத்தம் (2.68X4 = 10.72 கோடி) மொத்தத்தில் கிட்டத்தட்ட 12.68 கோடி வாக்குகள், இதில் விஜயகாந்த் ஒரு இலட்சம் வேட்பாளர்கள் நிறுத்தியுள்ளார், ஆளுக்கு 50வாக்குகள் என மொத்தம் 50 இலட்சம் வாக்குகள் பெற்றால் கூட "இரட்டிப்பானது விஜயகாந்த் பலம்" என பத்திரிக்கைகள் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை வசதியாக மொத்தம் 12.68 கோடி வாக்குகள் என்பதை மறைத்துவிட்டு.

References:

http://www.eci.gov.in/StatisticalReports/LS_1989/Vol_I_LS_89.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_1991/StatisticalReport_Tamil_Nadu91.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_1996/StatisticalReport_TN96.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_2001/Stat_Rep_TN_2001.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_2006/StatReport_TN_2006.pdf
http://www.vikatan.com/jv/2006/oct/04102006/jv0304.asp
சன் தொலைக்காட்சி (அக்டோபர் 04, 2008 இரவு 8.00 மணி செய்திகள்)

டாடா, மாறன்,ஜீவஜோதி க.சு. காவாலித்தனம்

மறந்து போகவில்லை தேர்தல் 2006ம் அதில் அரசியல்வாதிகள் எடுத்த நிலையும், பத்திரிக்கைகள் எடுத்த நிலையும், தேர்தலின் நெருக்கத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி
பத்திரிக்கைகள் டாடாவை மிரட்டினார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்று எழுதினார்கள், வைகோவும் இதை ஊர் ஊராக எடுத்துக்கொண்டு போய் பேசினார், அதை தயாநிதி
மாறன் மறுத்தார், நட்டஈடு கேட்டு வழக்கும் தொடர்ந்தார், தேர்தலும் முடிந்துவிட்டது, வாக்குப்பதிவுக்கு முன்பு வரை பத்திரிக்கைகளில் வழக்கம் போல(?!) வாசகர் கடிதமென்ன, அலசல் என்ன என்று கருத்து சுதந்திரத்தையும், பத்திரிக்கை சுதந்திரத்தையும் காத்தார்கள், சரி டாடாவை மிரட்டியது உண்மையா? பொய்யா? என ஒன்றும் புரியாமல் சனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கைகளை நம்பி ஏற்கனவே திமுகவுக்கு வாக்களிக்க நினைத்தவர்கள் சிலர் திமுகவிற்கு ஓட்டுப்போடாமல் போயிருப்பார்கள்.

டாடாவை(யே?!)மிரட்டியதாக கூறிய பத்திரிக்கைகள் அதன் பிறகு இதை கண்டுகொள்ளவேயில்லை சரி இன்னும் அவர்களுக்கு அவகாசம் தேவைப்படலாம் என காத்திருந்தேன், தேர்தல் முடிந்து நூறு நாட்களும் ஆன பின்பும் இன்னமும் பத்திரிக்கைகள் தயாநிதி மாறன் டாடாவை(யே!) மிரட்டியதை நிரூபிக்கவில்லை, சரி நிரூபிக்கவில்லையே அதற்கான மன்னிப்பையாவது கேட்டார்களா என்றால் அதுவும் இல்லை, பத்திரிக்கைகளின் சுதந்திரம், கருத்து சுதந்திரம் எல்லா எழவும் சரிதான், ஆனால் தேர்தலுக்கு வெகுசில நாட்களே இருக்கும்போது டாடாவை(யே?!) மிரட்டியதாக பத்திரிக்கைகள் எழுதியதும் தேர்தல் முடிந்த பின் இன்னமும் அது தொடர்பான எந்த அறிவிப்பும் செய்யாமல் இருப்பதால் இந்த பத்திரிக்கைகளின் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டியுள்ளது, திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற ஆசையில் character assassination செய்தார்கள் என சந்தேகிக்காமல் இருக்க முயவில்லை.

சிங்கப்பூரில் சில மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில் ஒரு உறுப்பினர் மீது கணக்கு வழக்கு பிரச்சினையை எதிர் கட்சியினர் எழுப்பினார்கள், அதற்கு மூத்த அமைச்சர் "ஹோ சோ டாங்" அவர்கள் வாக்குப்பதிவிற்கு முன் இந்த சர்ச்சையை தொடர்புடையவர்கள் தீர்த்துக்கொள்ளுங்கள் தேர்தல் சமயத்தில் இப்படி எழுப்பப்படும் பிரச்சினைகள் வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் என்றார், இங்கோ தேர்தல் முடிந்து நூறு நாட்களுக்கு மேல் ஆகியும் பத்திரிக்கைகள் எதையும் நிருபிக்கவில்லை, அது மட்டுமல்ல அந்த குற்றசாட்டு பற்றி எந்த விவாதமும், அலசலும், வாசகர்கடிதங்களும் இல்லை, இதிலிருந்து தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அதன் செய்திகளை வைத்து பரப்பிய மற்ற பத்திரிக்கைகள் செய்தவைகள் கருத்து சுதந்திரம் எனலாமா?, பத்திரிக்கைகள் நினைத்தால் யார் மீதும் தேர்தலுக்கு முன் சேறு இறைத்துவிட்டு அதன் பின் ஒன்றும் நடவாதது போல் இருக்கலாம், இது கருத்து சுதந்திர காவாலித்தனமில்லையா? இதனால் தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணிக்கும். தயாநிதி மாறனுக்கும் ஏற்பட்ட இழப்பிற்கு யார் பொறுப்பு?

ஜீவஜோதி திருமணம் சமீபத்தில் நடைபெற்றது, அது தொடர்பான கட்டுரைகளில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் பேட்டி தவறாமல் இருந்தது, எல்லாவற்றிலும் என்னோட தொலைபேசினார் ஜீவஜோதி, என்னிடம் திருமணத்திற்கு அனுமதி பெற்றார், ஜீவஜோதிக்கு செட்டில்மென்ட் கொடுத்தார்கள், ஜீவஜோதிக்கு அண்ணாச்'சீ' சீர் செய்தார் என ஏகப்பட்ட கருத்து சுதந்திரங்கள், ஜீவஜோதி பற்றி எப்போதுமே ஒரு சந்தேகத்தை அண்ணாச்'சீ' பத்திரிக்கைகளில் கிளப்பிவிட்டுக்கொண்டிருந்தார், ஆனால் திருமணத்திற்கு பலத்த பாதுகாப்பு, ஜீவஜோதி ராஜகோபாலுக்கு தண்டனை வாங்கித்தர தொடக்கத்திலிருந்தே தீவிரமாக இருந்ததெல்லாம் பார்க்கும்போது அண்ணாச்'சீ' திட்டமிட்டு ஜீவஜோதி மீது சந்தேகம் வரவைத்துள்ளார் என கருத இடமுள்ளது, இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தின் கவர் ஸ்டோரி கட்டுரையில் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்களின் கருத்தை கேட்டு போடாத பத்திரிக்கை சுதந்திரம் அண்ணாச்'சீ' யிடம் ஜீவஜோதி திருமணத்திற்கு 'பெட்டி' செய்தி வாங்கி போடுகின்ற அளவில் இருக்குது கருத்து சுதந்திரம், இதெல்லாம் கருத்து சுதந்திரமா? இல்லை கருத்து சுதந்திர காவாலித்தனமா?



என்ன எழவு அது ஆங்... டிஸ்கி

நான் பத்திரிக்கை, கருத்து சுதந்திரத்துக்கு எதிரியல்ல ஆனால் தேர்தலுக்கு வெகு சில நாட்களுக்கு முன் கிளப்பப்படுகின்ற பிறகு அது தொடர்பாக பேசாததைத் தான் காவாலித்தனம் என்கிறேன்