முட்டை ரவி இன்னுமொரு என்கவுண்டர்
என்கவுண்டர்கள் நடந்தன, என்கவுண்டர்கள் நடக்கின்றன, என்கவுண்டர்கள் நடக்கும், ஆனால் ரவுடிகள் பிறந்து இறந்து கொண்டேயிருப்பார்கள், இறந்து பிறந்து கொண்டே இருப்பார்கள், எந்த என்கவுண்டர்களும் ரவுடிகளின் பிறப்பை தடுப்பதில்லை.
முட்டை ரவி, திருச்சி வட்டாரத்தை அதிரவைத்த ரவுடி, சமீபத்தில் காவல்துறையின் துப்பாக்கி குண்டுகள் முட்டை ரவி கதையை முடித்தன, வழக்கம்போல கதை, திரைக்கதை வசனங்கள், ஒவ்வொருமுறை ஏதேனும் ஒரு ரவுடி சுட்டுக்கொல்லப்படும் போது 'ஸ்ப்ப்பா' ஒழிந்தான் என்று சொல்லிவிட்டு மிச்சமிருக்கும் 'ஸ்ப்ப்பாவை' அடுத்த ரவுடிக்கு மிச்சம் வைத்துவிட்டு நாமும் நம் வேலையை பார்க்கிறோம்.
சொல்லித்தான் அடிக்கிறார்கள், திருச்சி டி.ஐ.ஜி. பேட்டியை சில வாரங்களுக்கு முன் படித்தபோதே துப்பாக்கியை துடைத்துவிட்டார்கள் என்றே தோன்றியது, முட்டை ரவியின் வீரபிரதாபங்கள் தொடர்ந்து பத்திரிக்கைகளில் வந்தபோதே அடுத்தது முட்டை ரவிதான் என்ற சந்தேகம் தோன்றியது, சென்ற ஆண்டு இதே மாதிரி தொடர்ந்து தாம்பரத்தை சேர்ந்த 'சின்ன' என்று ஆரம்பிக்கும் ஒரு ரவுடியின் பிரதாபங்கள் பற்றி பத்திரிக்கைகளில் சில வாரங்கள் வந்தது, கடைசியாக அந்த ரவுடியின் என்கவுண்டர் சேதியோடு முடிந்து போனது.
அடே திரும்பி பார்த்தால் லண்டன் தெருகளிலும் ரவுடிகளாம். ஜீவியில் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ்திரைப்படங்கள் ரவுடிகளையும் தாதாக்களையும் நாயகர்களாக சித்தரிப்பதும், பத்திரிக்கைகள் ரவுடிகளைப்பற்றி உயர்வாக தொடர்கள் எழுதுவதும் (எ.கா. லிங்கம் பற்றிய ஜீ.வி. தொடர்) போன்றவைகள் மேலும் மேலும் பள்ளி, கல்லூரி வயதில் ரவுடிகளாகவும் தாதாக்களாகவும் தூண்டுகோலாகின்றன, சிந்திக்க இயலாத பதின்ம வயதில் எல்லோருக்குமே ஏதோ ஒரு கணம் இப்படியான எண்ணங்கள் வந்திருக்கும், 'தளபதி' படம் பார்த்து கடலூரை கண்ட்ரோல் செய்யவேண்டுமென்று பேசியவர்களில் ஒருவனுக்கு சரியான நண்பர்கள், நல்ல பெற்றோர்கள் வழிகாட்டுதலில் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற இன்னொருவன் இது எதுவும் வாய்க்காமல் கடலூரை கண்ட்ரோல் செய்கிறேன் என்று வாழ்நாளை வீணாக்கிக் கொண்டுள்ளான்.
புதுப்பேட்டை மாதிரியான படங்கள் ரவுடியிசத்தின் கொடூரத்தை காண்பித்து தாதாக்கள் பற்றிய கனவை தகர்க்கின்றது, ஆனால் இது மாதிரியான படங்கள் அரிதினும் அரிதாகவே அமைகின்றன, தளபதி தேவா சூர்யாவும், வேலுநாயக்கனும், ரெட் டும் இன்னும் அரிதார ரவுடிகள் எத்தனை எத்தனை குடியை கெடுத்தனவோ? முட்டைரவிக்கள் சுட்டுத்தள்ளப்படும் போது ஒழிந்தான் என்று மகிழ்ந்து கொண்டும் நம்ம வீட்டு பையன் ரவுடி ஆவதை விரும்பவில்லை என்றாலும் தாதா ரவுடிப்படங்களென்றால் மினிமம் கியாரண்டி வெற்றியை தருகிறோமே, அரிதார ரவுடிகளுக்கு பணம் தான் முக்கியம் ஆதலால் அவர்கள் இதை விட்டு வெளிவரமாட்டார்கள் ஆனால் நமக்கு நம் பிள்ளைகள் முக்கியமில்லையா? இன்னமும் அரிதார ரவுடிகளுக்கு வாழ்வளிக்க வேண்டுமா?
அடுத்ததாக ஜீவியில் இன்னுமொரு செய்தி, 'தமிழ்த்தாய் கேபிள் விஷன்' நிர்வாகியான யுவராஜ் சேனல்போட்டி காரணமாக பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதான குற்றச்சாட்டை மாவட்ட எஸ்.பி.துரைக்குமாரிடம் ஜீவி கேட்டபோது அவர் சொன்ன பதிலை பாருங்கள்.
மேலிடத்தின் பிரஷர் என்றால் வேறு வழக்கில் கூட உள்ளே தள்ளலாம், என்று ஒரு பத்திரிக்கையிலே கூறுகிறார், அதையும் இந்த பத்திரிக்கைகள் எந்த ஒரு சின்ன கண்டனமும் தெரிவிக்காமல் பத்திரிக்கையில் போடுகின்றன. பகத்சிங் காலத்திலிருந்து இன்று வரை காவல்துறை மட்டும் மாறவேயில்லை.
இன்று முட்டை ரவி சுடப்பட்ட என்கவுண்டர்களை ரவுடிகள் என்று நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம், ஒரு அரசாங்கம் ஒரு ரவுடியை அழிக்க முறையற்ற வழியில் துப்பாக்கி எடுப்பதை சந்தோசமாக ஒழிந்தான் என்று சொல்லலாம், அதற்கு ஆயிரம் நியாயங்கள் கற்பிக்கலாம், சரிதான் எனலாம்.
ரவுடிகளை சரியான முறையில் கைது செய்யமுடியததை, சரியான முறையில் வழக்கு நடத்தமுடியாததை, சரியான முறையில் தண்டனை வாங்கித்தரமுடியாததை, சரியான சிறை தண்டனை சூழல் அமைக்க முடியாததை எல்லாம் கண்டிக்க முடியாது அதனால் அரசு துப்பாக்கி தூக்குவதையும் கண்டிக்க முடியாது எனலாம், ஆனால் நியாயமான போராட்டங்களையும் கூட அடக்க போலீஸ் ஸ்டேசன் என்றால் என்ன என்றே தெரியதவர்களுக்கும் கூட நள்ளிரவு கைதுகளை அரசாங்கத்தால் உணர வைக்க முடிந்தது, பத்திரிக்கையாளனை பொடாவில் போட முடிந்தது, போராட்டத்தை அடக்க சாதிக்கலவரத்தை தூண்டமுடிந்தது.
நமக்கு பிடிக்காதவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக அரசாங்க அத்துமீறல்களை நாம் கைதட்டி வரவேற்றால், அரசாங்கத்திற்கு பிடிக்காத அரசாங்கத்தால் சமாளிக்க முடியாத நபர்களின் நியாயமான பிரச்சினைகளுக்காக போராடுபவர்களை நோக்கி(அது நீங்களாக கூட இருக்கலாம்) அதே முறையற்ற அரசாங்க அத்து மீறல்கள் திரும்பும்போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.
19 பின்னூட்டங்கள்:
//அடே திரும்பி பார்த்தால் லண்டன் தெருகளிலும் ரவுடிகளாம். ஜீவியில் சொல்லியிருக்கிறார்கள்//
இதன் நதிமூலம் மிகவும் நீண்டது. அதாவது ஜூவி இல் இந்தக் கட்டுரை வர வேண்டிய அவசியம் என்ன?
எல்லாம் பழிவாங்கல்தான்,
வி' பிரசுரம் என்று அண்மையில் மீண்டும் பதிவெழுத ஆரம்பித்த ஒரு இணைய திருட்டுப் பேர்வழி வி இல் உள்ளடக்கங்களுக்கு பொறுப்பாக உள்ளார். அவர் அண்மையில் நல்லபிள்ளை போல் ஈழத்து நூல்களை தே.கூட்டில், தமிழ் மணத்திற்கு முந்திய, அதைவிட சிறந்த திரட்டியாக காண்பிப்பதற்காக தே.கூட்டின் உள்ளடக்கம் போல் காட்டுவதற்கு செய்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது, தவிர அண்மைய கிழக்கின் பதிப்புலகத் திருட்டு விடயத்தில் மீண்டும் இவரது திருட்டு முயற்சி ஈழத்தவர்களால் ஞாபகப்படுத்தப்பட்டது.
இதனால் இவரது திருவிளையாடல்கள் வி இன் மேல் மட்டத்தில் உள்ளவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, எங்கே வி பிரசுரம் தொடர்ந்தால் எதிர்காலத்தில் இவர் தான் வி ஐ ஆரம்பித்தவர் என்று உரிமை கோரிவிடுவாரோ என்று வி பிரசுரம் நிறுத்தப் பட்டுவிட்டது.
எல்லாவற்றிற்கும் காரணமான ஈழத்தவர்கள் பற்றிய வெறுப்பே அந்தச் செய்தியின் மூல காரணம்.
இதுவரையில் தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் எந்தப் பத்திரிகையாவது கிழக்கின் திருட்டைப் பற்றி எழுதியிருக்கிறதா?
இணையத்தில் உலாவி ஜீவி இல் கட்டுரைகள் எழுதிவர்கள் இதனை ஏன் எழுதவில்லை? தெரிந்தால் சொல்லுங்களேன் குழலி.
அனானி நீங்கள் சொன்ன காரணம் எதுவென்றாலும் அது உண்மையோ பொய்யோ எதுவென்றாலும் அங்கே லண்டனில் ரவுடியிசம் இருப்பது தெரிகின்றது, கிழக்கு பற்றிய கேள்விகள் கிழக்கு பதிப்பகத்தாரிடமே கேட்கலாம், அவர்கள் பதிவுகள் கூட வைத்திருக்கிறார்கள்.
//இதுவரையில் தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் எந்தப் பத்திரிகையாவது கிழக்கின் திருட்டைப் பற்றி எழுதியிருக்கிறதா?
இணையத்தில் உலாவி ஜீவி இல் கட்டுரைகள் எழுதிவர்கள் இதனை ஏன் எழுதவில்லை? தெரிந்தால் சொல்லுங்களேன் குழலி.
//
எனக்கு தெரியாது... தெரிந்தால் தானே சொல்வேன், திருட்டு என்று சொல்வதைவிட கவனக்குறைவாக கூட இருக்கலாம், ஆனால் கிழக்கிற்கு நடந்தது மணிமேகலை பிரசுரத்திற்கு நடந்திருந்தால் கதையே வேறு என்பது மட்டும் தெரியும்.
//ஆனால் கிழக்கிற்கு நடந்தது மணிமேகலை பிரசுரத்திற்கு நடந்திருந்தால் கதையே வேறு என்பது மட்டும் தெரியும்.//
:-))
//முட்டை ரவியின் வீரபிரதாபங்கள் தொடர்ந்து பத்திரிக்கைகளில் வந்தபோதே அடுத்தது முட்டை ரவிதான் என்ற சந்தேகம் தோன்றியது//
எப்படிங்க இப்படி அசத்தறீங்க... நீங்க நினைக்கிறதெல்லாம் நடக்குதே... என்னமோ போங்க. நீங்க அடுத்த "ஐயர் த கிரேட்" மாதிரி ஆயிடுவிங்க போல இருக்கு.
ரவுடிகளை நியாயப்படுத்துபவது போலவே என்கவுன்ட்டர்களையும்
சினிமா நியாயப்படுத்துகிறது. சத்யராஜ் போலீஸாக நடித்த
படங்களில் பார்த்த நியாபகம். இதன் விபரீதம் ஒருத்தருக்கும்
புரிந்த மாதிரி தெரியவில்லை. பத்திரிகையில் சில அதிகாரிகளை,
இவர் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று கூசாமல் எழுதுகிறார்கள்.
//எப்படிங்க இப்படி அசத்தறீங்க... நீங்க நினைக்கிறதெல்லாம் நடக்குதே... என்னமோ போங்க. நீங்க அடுத்த "ஐயர் த கிரேட்" மாதிரி ஆயிடுவிங்க போல இருக்கு.
//
இது என்னங்க, சென்ற ஆண்டு தாம்பரம் ரவுடி 'சின்ன'(ராசு என்று நினைக்கிறேன்) பற்றி இப்படித்தான் தொடர்ந்து வீரபிரதாபங்களை எழுதினர், பிறகு என்கவுண்டர் தான், அது போலவே சிறப்பு படை, டி.ஐ.ஜி. பேட்டி, முட்டைரவியின் பிரதாபங்கள் முடிச்சி போட்டு பாருங்க சரியாவரும்...
//இதன் விபரீதம் ஒருத்தருக்கும்
புரிந்த மாதிரி தெரியவில்லை. //
உண்மைதான்
சட்டத்து மேல நம்ம மாதிரி பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லாததவிட, அத பாதுகாக்கிற காவல்துறைக்கே அது மேல நம்பிக்கை போய் ரொம்ப நாள் ஆயிட்ட மாறி இருக்கு.
இதுக்கு காரணம் சட்டத்த வளைக்க தெரிஞ்ச அரசியல்வாதிகள் தான். காவல்துறைய தன் இஷ்டம் போல ஏவி, பணத்தால, பதவியால என்னெல்லாம் வாங்க முடியுமோ அதை எல்லாம் வாங்கிடறாங்க.
மக்கள் இது எல்லாம் தெரிஞ்சும், என்னத்த பண்றது, அது அப்படி தான்னு இருக்காங்க. படத்துல நாயகன் எதிர்த்தார்னா ஜோரா கைத்தட்டிட்டு வெளிய வந்து இருக்கிற கேடுகெட்ட அரசியல்வாதிகள்ள அன்னிக்கு யாரு கொஞசம் சுமாரா இருக்கான்னு தோணுதோ அவனுக்கு ஓட்டு போட்டுட்டு நிம்மதியா மெகா சீரியல் பாத்துட்டு தூங்கிடுறாங்க.
நாலாவது தூண் பத்திரிக்கைகளும் இந்த கேடுகெட்டதனத்துக்கு உடந்தை இப்ப. நம்ம மாதிரி படிச்ச அக்கறையுள்ள ஆட்கள் அடுத்த முறை ஓட்டு போடும்போது ஒரு கட்சிய ஒடுக்க நினைச்சி, இல்ல ஒரு கட்சி மேல நமக்கு உள்ள ஏதோ ஒரு அபிமானத்துல ஓட்டு போடாம, நியாயமான, உண்மையான ஆளுக்கு ஓட்டு போட ஆரம்பிச்சா ஒரு ஐம்பது-நூறு வருஷத்தில நாடு உருப்பட வாய்ப்பிருக்கு. இல்லைனா இந்த ஜனநாயக நாட்டு கேலிகூத்துகளை பாத்து பொலம்பிக்கிட்டு, பதிவ போட்டுகிட்டு வாழ்க்கை வண்டிய ஓட்ட வேண்டியது தான்.
My blogs on Mumbai Dada's
http://marchoflaw.blogspot.com/2006/06/blog-post_24.html
http://marchoflaw.blogspot.com/2006/07/blog-post_07.html
"நான் ஏற்கனவே சொன்னபடி, ஒவ்வொரு அபு சலேம் பிடிபடும் போதும் நமது சமுக, அரசியல், பொருளாதார மற்றும் சட்ட அமைப்புகள் மற்றொருவரை அந்த வெற்றிடத்திற்கு தள்ளி விடுகிறது"
குழலி,
உங்களுடைய கருத்துக்களோடு நான் ஆமோதிப்பது குறைவு. ஆனால் பின்வரும் வரிகள் மிகவும் உண்மை.
//நமக்கு பிடிக்காதவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக அரசாங்க அத்துமீறல்களை நாம் கைதட்டி வரவேற்றால், அரசாங்கத்திற்கு பிடிக்காத அரசாங்கத்தால் சமாளிக்க முடியாத நபர்களின் நியாயமான பிரச்சினைகளுக்காக போராடுபவர்களை நோக்கி(அது நீங்களாக கூட இருக்கலாம்) அதே முறையற்ற அரசாங்க அத்து மீறல்கள் திரும்பும்போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.//
இது அராஜகங்களான நடவடிக்கையில் ஈடுபடும் போலீசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் கூட பொருந்தும்.
திரைப்படங்களில் எவ்வளவோ நல்ல விடயங்களும் வருகின்றது. அதை பார்த்து யாரேனும் திருந்துகிறார்களா?
அதிகார வெறி, பலகீனர்களை அடக்குவதில் வரும் திருப்தி போன்ற வேட்கை உடைய மனிதர்கள் தங்களை நியாயப்படுத்த ஊடகங்களின் பக்கம் கை காட்டுகின்றனர்.
திரைப்படங்கள் வரும் முன்னரும் வன்முறை நிகழ்வுகள் இல்லையா? ரவுடியிசம் இல்லையா?
காவல் துறை கடைக்கோடி மனிதனும் அணுகவியலும் வகையில் முறைப்படுத்தப் படுதல் அவசியம். அதை பற்றி பதிந்துள்ளீர்கள். மிக நல்ல விடயம்.
குழலி,
நல்ல, தேவையான ஒரு பதிவு. பாராட்டுக்கள்.
//நமக்கு பிடிக்காதவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக அரசாங்க அத்துமீறல்களை நாம் கைதட்டி வரவேற்றால், அரசாங்கத்திற்கு பிடிக்காத அரசாங்கத்தால் சமாளிக்க முடியாத நபர்களின் நியாயமான பிரச்சினைகளுக்காக போராடுபவர்களை நோக்கி(அது நீங்களாக கூட இருக்கலாம்) அதே முறையற்ற அரசாங்க அத்து மீறல்கள் திரும்பும்போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.
//
யதார்த்தமான கூற்று.
நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க.
ஜூவி பேட்டி கொடுத்த காவல் அதிகாரி "வேறு கேஸ் லயும் உள்ள போடலாம்னு" அப்பட்டமா சொல்றதெல்லாம் வெக்கக்கேடு.
அவனவனுக்கு வந்தால் தான் வலி தெரியுமோ? ஆனால், அது வரை மயக்கத்தில் இருக்க வேண்டியதுதானா?
எவ்வளவு அவலங்கள் நம் நாட்டில். ஓநாய்கள் கூட்டம் ஒழியும் வரை காத்துதான் ஆக வேண்டும்.
அடுத்த தலைமுறை 'சுத்த' தலைமுறையாக உருவாக்க வேண்டும்.
முட்டைரவி போன்ற தாதாக்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் பெரிய வித்தியாசமெல்லாம் ஒன்றுமில்லை. போலீஸ் என்பவர்கள் யூனிபார்ம் அணிந்த ரவுடிகள். அவ்வளவுதான். தாதாக்களை வளர்ப்பதிலும் பராமரிப்பதிலும் போலீஸும் ஆளும்வர்க்கமும்தான் அக்கறை காட்டுகிறது. தனக்கு எதிராகப் போகும்போது (அ) தனக்குத் தேவையில்லாமல் போகும்போது அதே ரவுடிகளைச் சுட்டுக்கொன்று விட்டு சாகசக்கதைகளை ஊடகங்களின் மத்தியில் அவிழ்த்துவிடுவது. இது போலீஸுக்கு ஒன்றும் புதிதில்லையே? கருணாநிதி கைதைக் கண்டித்து சென்னையில் தி.மு.க சார்பாக நடத்தப்பட்ட ஊர்வலத்தில் அயோத்திக்குப்பம் வீரமணிக் கும்பலை வைத்து கலவரம் நடத்தியது ஜெ. அரசு. பிறகு அதே வீரமணியை எண்கவுண்டரில் போட்டுத் தள்ளியது. இதே கதைதான் எல்லா எண்கவுண்டரிலும். மரணதண்டனைக்கு எதிராக இயக்கம் நடத்துவதைப்போல எண்கவுண்டருக்கு எதிராகவும் இயக்கம் நடத்தவேண்டும்.
அனானிமஸ் எழுதியிருப்ப்பதற்கும் உங்கள் கட்டுரைக்கும் தொடர்பு இல்லையென்றே எனக்கு தோன்றுகிறது.
எழுத்தாளர் ராகவனை பற்றி தான் அவர் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.
கிழக்கு பதிப்பகத்தாரும் உரிமை பெறாமல் கனடா நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் ஓவியர் ஒருவரின் இரு ஓவியங்களை அட்டைப்படமாக போட்டதைப்பற்றி சமீபத்தில் படித்த ஞாபகம்.
தேன்கூடு தளமும் நூலகத்தை தன்னுடைய ஒரு பகுதி என்பது போல தோற்றமளிக்க செய்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஈழத்தமிழர்கள் சிலரின் பதிவுகளையும் அவர்கள் வெளியிடுவதில்லை என்பதும் குற்றசாட்டாக வெளிவந்திருக்கிறது.
இதற்கான உள் காரணங்கள் நமக்கு தெரியாதென்றாலும், என்கவுண்டருக்கும்(சரியான தமிழ் வார்த்தை துரத்திஅடித்தல் என வைக்கலாமோ) இந்த விசயத்திற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை.
ஆனால் ஒரு சில பத்திரிகைகளும் திரைப்படங்களும் ரவுடிகளை மகான்களாக காட்டுவதை நிறுத்தினால் நலம் என்று தோன்றுகிறது.
'பங்க்' குமாருக்கு அடைக்கலம் கொடுத்த கட்சி இவருக்கும் அடைக்கலம் தரவில்லையா.இல்லை அந்தக் கட்சிக்கு இவர் தேவையில்லாமல் போய்விட்டாரா.அரசியல் கட்சிகள் ரவுடிகளை
பயன்படுத்துகிறார்கள், அவர்களும் இவர்களை பயன்படுத்துகிறார்கள்.
நமக்கு பிடிக்காதவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக அரசாங்க அத்துமீறல்களை நாம் கைதட்டி வரவேற்றால், அரசாங்கத்திற்கு பிடிக்காத அரசாங்கத்தால் சமாளிக்க முடியாத நபர்களின் நியாயமான பிரச்சினைகளுக்காக போராடுபவர்களை நோக்கி(அது நீங்களாக கூட இருக்கலாம்) அதே முறையற்ற அரசாங்க அத்து மீறல்கள் திரும்பும்போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.
குழலி இதன் அர்த்தம் தெரிந்துதான் எழுதினீர்களா.நம்பமுடியவில்லை.
இன்றைய என்கவுன்டர் 'பங்க்' குமார்... தினமலர் செய்தி இங்கே
http://www.dinamalar.com/2007oct05/events_Tn2.asp
02."தற்காப்புக்காக போலீசார் சுட்டார்களா' என்பதை கோர்ட் தான் விசாரித்து முடிவு கூற வேண்டும்* சென்னை ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு
சென்னை: "தற்காப்புக்காக போலீசார் சுட்டார்களா என்பதை மாஜிஸ்திரேட் கோர்ட் தான் விசாரித்து முடிவு கூற வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த டென்னி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 92ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி என்னை, போலீசார் பிடித்துச் சென்றனர். சப்இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டார். இதில், பலத்த காயமடைந்தேன். சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். கைது செய்தான ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலையானேன். ஆர்.டி.ஓ., விசாரணையில் தற்காப்புக்காக போலீசார் என்னை சுட்டதாக கூறியுள்ளனர். சப்இன்ஸ்பெக்டரை நான் கத்தியால் குத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். டி.எஸ்.பி., தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை அரக்கோணம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முடித்து விட்டார். எனது புகாரை மாவட்ட கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயபால் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: தற்காப்புக்காக சுட்டார்களா இல்லையா என்பதை முடிவு செய்ய அரசு அதிகாரிக்கு அதிகாரமில்லை. அப்படி ஒரு முடிவை அளித்திருந்தாலும் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆர்.டி.ஓ., அறிக்கை பற்றி கோர்ட்டில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு முறையை கையாண்டால் எந்த குடிமகனுக்கும் பாதுகாப்பில்லை. எனவே, தற்காப்புக்காக சுடப்பட்டதா, இல்லையா என்பதை முடிவு செய்ய சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்கு தான் அதிகாரம் உள்ளது. இப்பிரச்னையைப் பொறுத்தவரை டி.எஸ்.பி.,யின் அறிக்கையைப் பெற்று வழக்கை மாஜிஸ்திரேட் முடித்துள்ளார். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை எதிர்ப்பதற்கு புகார்தாரருக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகாரத்தை மாஜிஸ்திரேட் செயல்படுத்தவில்லை. டி.எஸ்.பி.,யின் விசாரணையும் சட்டப்படி இல்லை. சட்டப்படி இந்தப் புகாரை முடிக்கவில்லை. எனவே, மனுதாரரின் புகாரை சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு அரக்கோணம் மாஜிஸ்திரேட் அனுப்ப வேண்டும். இதை விசாரித்து குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி ஜெயபால் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Post a Comment