விஜயகாந்த், இனி ஊடகங்கள்

மதுரை இடைத்தேர்தலும் உள்ளாட்சி தேர்தலும் சிலருக்கு கடும் அதிர்ச்சியை அளித்திருக்க கூடும், எந்தெந்த கட்சி வாக்கு வங்கிகளுக்கு உலை வைக்கும் என பத்திரிக்கைகள் எழுதிய செய்திகள் பொய்யாகி இன்று அதிமுகவின் வாக்கு வங்கிக்கு உலைவைத்திருக்கிறது விஜயகாந்த் கட்சி, வெறுமனே மதுரை இடைத்தேர்தலை வைத்து விஜயகாந்த் அதிமுக வாக்கு வங்கியை கபளீகரம் செய்துவிட்டார் என்று சொல்ல இயலாது, மதுரை விஜயகாந்தின் சொந்த ஊர் மற்றும் பொதுவாகவே நகரங்களில் புனித பிம்ப வாக்காளர்கள் அதிகம், இருந்த போதிலும் உள்ளாட்சி தேர்தலையும் வைத்து பார்க்கும் போது விஜயகாந்த் கட்சி அதிகம் வேட்டு வைத்தது அதிமுக வாக்கு வங்கிக்கே.

பத்திரிக்கைகள் விஜயகாந்தினால் நடக்க வேண்டும் என்று நினைத்தது.

1. பாமக, விடுதலை சிறுத்தைகளின் வாக்கு வங்கியில் பெரும்பாதிப்பு ஏற்படுத்துவார்

2. அதிமுக, ஜெயா எதிர்ப்பு வாக்குகள் திமுக விற்கு செல்லாமல் விஜயகாந்த்துக்கு செல்லும், எனவே ஜெயா எதிர்ப்பு வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும்

3. திமுக, அதிமுக இரு கட்சிகளின் மீதும் வெறுப்பு கொண்டவர்கள் விஜயகாந்த்துக்கு வாக்களிப்பார்கள்.

4. விஜயகாந்தை புனித பிம்பமாக உருவகப்படுத்துவதன் மூலம், ஜெயா ஊழலுக்கு கலைஞர் பரவாயில்லை என்பவர்களின் வாக்குகளை உள்ளிழுக்க முடியும்.

5. படித்தவர்கள் விஜயகாந்திற்கு வாக்களிப்பார்கள், இப்போதைக்கு பெரும்பாலான படித்தவர்கள் வாக்கு திமுகவிற்கு விழுகின்றது.

ஆக மொத்தத்தில் எப்படியும் திமுகவின் வாக்கு வங்கிக்கு உலை வைக்கும் விஜயகாந்த் கட்சி என்று நம்பியிருந்தனர்.

ஆனால் நடந்தது என்ன?

1. பாமக, விடுதலை சிறுத்தைகளின் வாக்கு வங்கியில் எந்த பாதிப்பும் இல்லை, ஏனெனில் இன்றைய நிலையில் தமிழகத்தில் இருக்கும் கலக கட்சிகள் என்றால் இவை இரண்டும் தான், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இந்த இரு கட்சிகளோடு பார்க்கும் போது பொது மக்கள் பார்வையில் கலக கட்சிகளாக இல்லை, பொதுவாக கலக கட்சிகளில் வெகு சனங்களின் பங்களிப்பு இருக்காது அல்லது மிகக்குறைவாகவே இருக்கும், அவை முழுக்க முழுக்க கட்சி சார்ந்தவர்களினாலேயே இயங்கும், இருக்கும், அதனாலேயே இந்த இரு கட்சிகளின் வளர்ச்சியும் குறைவாக இருக்கும், தேய்வும் குறைவாகவே இருக்கும், விஜயகாந்த் முழுக்க முழுக்க புனித பிம்பமாக உருவகப்படுத்தப்பட்டவர், ஆனால் பாமக, விடுதலை சிறுத்தை ஆதரவாளர்கள் புனித பிம்பங்களுக்கு மயங்குபவர்கள் என்றால் அவர்கள் முதலில் பாமக, விசி ஆதரவாளர்களாகவே இருந்திருக்க மாட்டார்கள்.

2. ஜெயா எதிர்ப்பு வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கு பதிலாக, திமுக, கலைஞர் எதிர்ப்பு வாக்குகளை இதுவரை மொத்தமாக அறுவடை செய்துவந்த அதிமுகவின் அறுவடையில் பங்கு போட்டுக்கொண்டார் விஜயகாந்த்.

3. திமுக, அதிமுக இரு கட்சிகளின் மீதும் வெறுப்பு கொண்டவர்கள் விஜயகாந்த்துக்கு வாக்களித்தனர்.

4. படித்தவர்கள் வாக்குகளை விஜயகாந்த் குறிப்பிட்ட அளவு திருப்பியிருக்கிறார் என்றாலும் விஜயகாந்த் எப்படி தான் சொல்வதை செய்யப்போகிறார், இடஒதுக்கீடு, மொழி சார்ந்த விடயங்களில் கள்ள மவுனம் சாதிக்கிறார்(இந்த கள்ள மவுனத்தினாலேயே சில படித்தவர்கள் விஜயகாந்தை ஆதரிக்கிறார்கள்), என்ன வித்தியாசம் காண்பிக்கிறார் விஜயகாந்த் என எண்ணி பார்த்தால் அவர்களின் வாக்குகள் விஜயகாந்திற்கு விழுமா என்பது சந்தேகமே?

எப்படியாயினும் இடைத்தேர்தல், மற்றும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஒன்றை மட்டும் தெளிவு படுத்துகின்றன, விஜயகாந்து கிண்டிய அல்வா திமுக, விசி, பாமகவிற்கு அல்ல, அது அதிமுகவிற்கு என்பது.

பத்திரிக்கைகள் விஜயகாந்த் மீது ஏற்படுத்தி வந்த புனித பிம்ப உருவாக்கத்தை தொடருவார்களா? பாமக, திமுக, விசி வாக்கு வங்கிகளுக்கு விஜயகாந்த் உலை வைத்திருந்தால் நிச்சயம் இதை தொடருவார்கள், ஆனால் விஜயகாந்த் அதிமுக வாக்கு வங்கியில் கை வைத்ததினால் இதை தொடருவார்களா? விஜயகாந்த் VS ஜெயலலிதா என்பதான ஒரு நிலையை உருவாக்க நினைத்திருந்தார்கள், ஆனால் இந்த இருவர்கள் மோதலில் தனிப்பெரும் கட்சியாக அறுவடை செய்யபோவது திமுக என தெரியும் போதும் விஜயகாந்த்தை தூக்கிவிடுவார்களா பத்திரிக்கைகள்?


உள்ளாட்சி தேர்தலிலும் 4176 நகராட்சி வார்டுகளில் வெறும் 100 வார்டுகளையும், 7789 பேரூராட்சி வார்டுகளில் வெறும் 107 வார்டுகளையும் 589 மாவட்ட பஞ்சாயத்தில் வெறும் 13ம் 318 மாநகராட்சி வார்டுகளில் வெறும் 16 வார்டுகளை மட்டுமே பெற்றுள்ளார், விஜயகாந்த் கட்சி நகரங்களில் பெற்ற வெற்றி கூட பேரூராட்சிகளிலும் கிராமங்களிலும் பெறவில்லை, எனவே அதிமுக வாக்கு வங்கியில் பெரும் சேதம் விளைவித்துள்ளாரா என்பது போகப்போகத்தான் தெரியும் ஆனால் நகரங்களில் அதிமுக வாக்கு வங்கிக்கு நிச்சய சேதத்தை உருவாக்கியுள்ளார் விஜயகாந்த்.

1989க்கு பிறகு அனைத்து பத்திரிக்கைகளிலும் அட்டைப்படங்களிலும் ஜெயலலிதா தான், அவர் முதல்வராகும் வரை இது தொடர்ந்தது, இன்றும் அதையே விஜயகாந்துக்கு செய்கின்றன விகடனும் குமுதமும், இதனால் பாதிக்கப்படப்போவது ஜெயலலிதா, இதனால் ஆதாயம் அடைவது திமுக என்றானால் இனி செய்வார்களா?

விஜயகாந்தும் ஜெயலலிதாவும் ஒரே அணியில் இருக்க செய்ய சிலர் முனைவார்கள், ஆனால் கூட்டணி என்பது விஜயகாந்த்தை பொறுத்தவரை தற்கொலை முயற்சி என்பது அவருக்கு தெரிந்திருக்கலாம், திமுக, அதிமுக இருவரும் வேண்டாமென்பவர்களே அவரின் பலம், எங்கேயாவது கூட்டணி என்று சாய்ந்தால் விஜயகாந்த்க்கு கணிசமான வாக்கு சரிவு ஏற்படும். ஆதலால் கூட்டணி முயற்சி எத்தனை தூரம் என்பது சந்தேகமே

இனி அச்சு ஊடகங்கள் விஜயகாந்தின் புனித பிம்பத்தை உடைக்கும் முயற்சிகளில் இறங்கும் வாய்ப்பிருக்கிறது, உடனடியாக இல்லையென்றாலும் இவரும் மற்றவர்களைப்போலத்தான், இவர் கட்சியின் கு.ப.கிருஷ்ணன் போன்ற முன்னாள்களின் முகங்களை போட்டு இவர்களை வைத்துக்கொண்டா ஊழலை ஒழிக்கப்போகிறார், ஓட்டுக்கு பணம் கொடுத்த விஜயகாந்த் கட்சியினர், கட்சியில் குடும்பத்தின் தலையீடு, நாயக்கர் சாதி(விஜயகாந்தின் சாதி) ஆட்கள் கட்சியின் 14 மாவட்ட செயலாளர்களாக இருப்பது, இதுவரை தமிழ்முரசு நிருபர்கள் விஜயகாந்திடம் இடஒதுக்கீட்டில் உங்கள் நிலைஎன்ன என்று கேள்வியெழுப்பினார்கள், இனி அந்த வேலையை மற்ற பத்திரிக்கைகளும் எடுத்துக்கொள்ளும், தேர்தல் தோல்வியால் கொலைசெய்த விஜயகாந்த் கட்சியினர், மன்றத்தில் தொடக்கத்தில் இருந்து உழைத்தோம், கட்சியில் இடம் தரவில்லை என பேட்டியளிக்கப்போகும் மன்றத்து ஆட்கள் என அத்தனையையும் நோண்டியெடுத்து அடுத்த தேர்தலுக்கு முன் விஜயகாந்தின் புனித பிம்பத்தை உடைப்பார்கள், ஏனெனில் விஜயகாந்தினால் ஏற்படும் ஜெயலலிதாவின் சரிவை அவர்களால் தாங்க இயலாது BLOOD IS THICKER THAN WATER

ஜெயா தொலைக்காட்சி என்ன செய்யுமென்றால் இனி கலைஞரையோ திமுகவையோ விஜயகாந்த் எத்தனை தான் விமர்சித்தாலும் அதை காண்பிக்கவே காண்பிக்காது, இனி விஜயகாந்த் முகம் ஜெயா தொலைக்காட்சியில் தெரிய வாய்ப்பில்லை

இதுவரை விஜயகாந்த் முகத்தையோ செய்தியையோ காண்பிக்காத சன் டிவி என்ன செய்யுமென்றால் இனி ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் மாறி மாறி விமர்சிப்பதை காண்பிக்கும், இனி அடிக்கடி விஜயகாந்த்தை சன் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.( கலைஞர் திமுக எதிர்ப்பு வாக்குகளைப்போலவே ஜெயலலிதா எதிர்ப்பு வாக்குகளும் உள்ளது அதை இது வரை அறுவடை செய்தது திமுக, ஆனால் வருங்காலத்தில் இதில் விஜயகாந்த் பங்கு போடலாம்)

அனேகமாக அரசியலில் விஜயகாந்தின் தேனிலவு காலம் முடிந்து விட்டது எனலாம், அடுத்த தேர்தலுக்கு இன்னும் மூன்றாண்டுகள் உள்ளன, அதுவரை உள்ளாட்சி தேர்தலிலும் கூட பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், வாக்களிக்க மட்டுமே வரும் படித்த ஆதரவாளர்கள், மற்ற கட்சிகளில் அரசியல் வாழ்விழந்தவர்களுக்கு புகலிடம் அளித்துள்ள விஜயகாந்த் அதிகாரம் கையில் இல்லாமல் இவர்களை சமாளிக்கப்போவது, அதிமுகவின் எதிர்ப்பு, பத்திரிக்கைகள் எடுக்கப்போகும் நிலை, வருமானம் எதுவுமில்லாமல் கட்சி நடத்த தேவைப்படும் பணம், இவை அத்தனையும் சமாளித்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை தாக்கு பிடித்தால் விஜயகாந்த் நிச்சயம் தமிழக அரசியலில் ஒரு இடத்தை பிடிப்பார், இப்போதைக்கு வைகோவை காலி செய்துவிட்டார் என்பது மட்டும் உண்மை.

53 பின்னூட்டங்கள்:

லக்கிலுக் said...

பிள்ளையார் பிடிக்க நெனைச்சி குரங்காயிடுச்சின்னு சொல்ல வர்றீங்க. நான் நினைப்பதும் அதே... அதே...

தினமலரின் தேமுதிக ஆதரவுப் பாணியில் இனி பெரும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

குழலி / Kuzhali said...

//வி.காந்த் கொஞ்ச காலம் ஆடட்டுமே...
//
அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை அவர் தொய்வில்லாமல் ஆட வேண்டும், அதுவரை கட்சியை காக்க அந்த கட்சியின் தொண்டர்கள் கொள்கை, தலைவன், யாருக்காக இந்த கட்சி என ஏதோ ஒன்றினால் பினைக்கப்பட்டிருக்க வேண்டும், தலைவனால் பிணைக்கப்படும் அளவிற்கு விஜயகாந்த் உள்ளாரா? இனி தேர்தலுக்கு மூண்றாண்டுகளுக்கு மேல் உள்ளன, அதும் கூட பாராளுமன்ற தேர்தல், சட்டமன்றத்திற்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் உள்ளன, அதுவரை விஜயகாந்த் தொய்வில்லாமல் ஆடவேண்டும் ஆடுவாரா என பார்ப்போம்...

Anonymous said...

விஜயகாந்த் உங்களுக்கு கனவிலும் கூட தொந்தரவு தருகிறார் போலும்.அவரின் அரசியல்
வளர்ச்சி பத்திரிகைகளினால் என்று நினைத்தால் அது தவறு.சன் டி.வி தன் வசம் இருந்தும்
2001ல் திமுக அணி தோற்றது.மேலும் உள்ளாட்சித் தேர்தல்களை வைத்துக் கொண்டு ஒரு
கட்சியின் பலத்தினை எடை போடுவது கடினம்.தனியாக நின்று அமைப்பு ரீதியாக பலமற்ற அவரது
கட்சி இத்தனை இடங்களைப் பிடித்திருப்பது குறிப்பிடதக்கது. இன்று இல்லாவிட்டாலும்
எதிர்காலத்தில் அவர் கட்சி பா.ம.க விற்கு பெரிய சவலாக இருக்கப்போவது உண்மை.
அது உங்களுக்கு கலக்கத்தினைத் தரலாம். அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் கட்சி,
காங்கிரஸ்,கம்யுனிஸ்ட்கள் சேர்ந்தால் திமுக+பா.ம.க+வி.சி அணிக்கு சட்டசபையில்
பெரும்பான்மை கிடைப்பது கடினம்தான்.எது எப்படியாயினும் இனி தொடர்ந்து விஜயகாந்த்,அவர் கட்சி பற்றி
குழலி வாரத்திற்கு ஒரு முறையாவது எழுதுவார் :).

குழலி / Kuzhali said...

//தினமலரின் தேமுதிக ஆதரவுப் பாணியில் இனி பெரும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
//
லக்கி முதல்ல இந்த இரண்டு கட்சியும் ஒன்றாக சேர்ந்து திமுகவை எதிர்க்க வேண்டும், இவை இரண்டும் சண்டையிட்டால் திமுகவிற்கு தான் இலாபம் என வாசகர்கடிதங்கள் வரும், அதன் பிற்கு விஜயகாந்த் டார் டார் தான் தினமலரில்.

ஒரு விசயம கவனிச்சிங்களா? விஜயகாந்தை வரவேற்று பக்கம் பக்கமாக கவிதை எழுதி தள்ளிய எஸ்.கே. அய்யா இங்கே என்ன சொல்லியிருக்காரு பார்த்திங்களா? //சரி விடுங்க!
இதுவும் மட்டைதான் போல!
:))
// அதாவது இத்தனை நாள் விஜயகாந்த் ஒரே குட்டையில் ஊறிய மட்டைனு தெரியலையாம், இப்போதான் தெரியுதாம் இதுவும் மட்டை தான் போலனு, மேட்டர் புரியுதா என்னனு? லக்கி என்ன எஸ்.கே. மேட்டர் புரியுதா? அதே அதே....

வெங்கட்ராமன் said...

ஓசாமா பின்லேடன் அடுத்து என்ன செய்வான் என்று கூட சொல்ல முடியும்,

ஆனால் ஊடகங்கள் விசயத்தில். . . . ???????

குழலி / Kuzhali said...

//இன்று இல்லாவிட்டாலும்
எதிர்காலத்தில் அவர் கட்சி பா.ம.க விற்கு பெரிய சவலாக இருக்கப்போவது உண்மை.
//
அனானி ஒரு விசயத்தை புரிஞ்சிக்குங்க, பாமக, விசி கட்சிகளுக்கு விஜயகாந்த் என்றில்லை எந்த கட்சியாலும் இப்போதிருக்கும் வாக்கு பலத்தை உடைக்க முடியாது, எப்போது பாமக, விசி கட்சிகள் பலமிழக்குமென்றால் இன்னொரு பாமக இன்னொரு விசி வந்தால் மட்டுமே, அதாவது வேறொரு கட்சி வன்னியர் லேபிளோடும் தலித் லேபிளோடும் வந்தால் மட்டுமே பாமக, விசி அதன் பலத்தை இழக்கும், அல்லது தெற்கே அதிமுக என்றால் முக்குலத்தோர் கட்சி என்ற லேபிள் உள்ளதே அது போல வந்தால் மட்டுமே இந்த கட்சிகள் பலமிழக்கும், அப்படி விஜயகாந்த் வடமாவட்டங்களில் வன்னியர் கட்சியென்றோ, தலித் கட்சியென்றோ பெயரெடுக்க விரும்புவாரா? அப்படி பெயரெடுத்தால் புனித பிம்பங்களின் ஆதரவு கிடைக்குமா?

//அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் கட்சி,
காங்கிரஸ்,கம்யுனிஸ்ட்கள் சேர்ந்தால் திமுக+பா.ம.க+வி.சி அணிக்கு சட்டசபையில்
பெரும்பான்மை கிடைப்பது கடினம்தான்.
//
உங்கள் ஆசை புரிகின்றது :-)

லக்கிலுக்கு நான் சொன்னேனே ஒரு மேட்டரு புரியுதா? மேலே அனானி போட்டிருக்குற பின்னூட்டத்தை பாரும் ஓய்...

குழலி / Kuzhali said...

//ஆனால் ஊடகங்கள் விசயத்தில். . . . ???????
//
சும்மா ஒரு ஊகம் தானே!!!

லக்கிலுக் said...

//உங்கள் ஆசை புரிகின்றது :-)//

தினமலர் மற்றும் துக்ளக் வகையறாக்களின் ஆசையும் அதுவே :-)

Anonymous said...

Enna Selvan pathivukku, pathila? Payam vanthiruchinnu theriyuthu.

குழலி / Kuzhali said...

//Enna Selvan pathivukku, pathila? Payam vanthiruchinnu theriyuthu.//
செல்வன் பதிவு வந்த சில நிமிடங்களில் நான் இந்த பதிவெழுதி பிரசுரிக்க முடியுமா? ஏன்யா இதை தட்டச்சவே எத்தனை நேரம் ஆகும்? விஜயகாந்த் மாற்றத்தை தருவார்னு எப்படிடா நம்புறாங்க சிலர்னு நினைத்தேன் உங்களை மாதிரிபுத்திசாலிகளை பார்க்கும்போது எதையும் நம்பத்தோன்றுகின்றது.

G.Ragavan said...

விஜயகாந்த் இவ்வளவு ஓட்டுகள் வாங்குவார்னு நெனைச்சே பாக்கலை. அவர் அரசியலுக்கு வர்ரதும் வராததும் அவருடைய விருப்பம். ஆனால் அரசியல்ல நிலைக்கிறது மக்களோட விருப்பம். அந்த விருப்பம் பொதுவா எல்லாருக்கும் இல்லைன்னாலும் கொஞ்ச பேருக்கு இருக்குறது தேர்தல் முடிவுகள்ள தெரியுது. போகப் போக என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்! நடக்க நடக்க பாப்போம். பெரிய கட்சியா இவரால வளர முடியுங்குறத இன்னமும் என்னால நினைக்க முடியலை. அதிமுக கூட்டணிக்கு நல்ல தண்டனை கொடுத்தாச்சு. அடுத்து திமுக கூட்டணிக்கும் குடுக்கனும். I couldnt support DMK just because I dont support ADMK.

இரத்தம் தண்ணீரை விட அடர்த்தியானது. நீங்க சொன்னதுதான். அது குழலிக்கும் ஜிராவுக்கும் கூடப் பொருந்தும். ஆகையால வெறும் பத்திரிகை ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது ரொம்ப நாளைக்கு ஓடாது. திமுக, அதிமுக...இந்த ரெண்டுமே ஆதரவு எதிர்ப்பு ரெண்டையும் பாத்து தோத்து ஜெயிச்சி வந்திருக்கு.

விஜயகாந்த்தின் அரசியல் தப்புன்னு சொல்லலாம். ஆனால் அரசியல் பிரவேசமே தப்புன்னு சொல்லக் கூடாது. ஆனா உங்களுடைய கடந்த சில விஜயகாந்த் பதிவுகள் படிக்கிறப்போ அவர் மேல உங்களுக்கு ஒரு வெறுப்பு இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. அப்படியிருந்தால் அது உங்கள் விருப்பம். தொப்புள்ள பம்பரம் விட்டவங்க அரசியலுக்கு வரலாமான்னு கேக்குறது சரியென்று தோன்றவில்லை. அரசியலமைப்புன்னு பாத்தா அது எல்லா இந்தியக் குடிமகன்களுக்கும் எழுத்தளவிலாவது அந்த உரிமையைக் குடுத்திருக்கிறது. அதை நாம் மறுக்கக் கூடாது.

தொப்புளில் பம்பரம் விட்டால் என்ன? ரெண்டு திருமணம் செய்தவர், கற்பழித்தவர், திரைப்படத்தில் கதாநாயகிகளின் கைகளைப் பிசைந்தவர், நடிகையாக வந்து ஆடியவர், திருடியவர், ஜாதிப் பெயர் சொல்லிக் கட்சி வைத்திருபப்வர் இவர்களெல்லாம் வருகையில் இவரும் வரலாம். ஆனால் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது அவரவர் நடவடிக்கையைப் பொருத்தே இருக்க வேண்டும்.

என்னுடைய ஆதரவு இன்றைய திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜயகாந்த் இவர்கள் மூவருக்கும் இல்லை. என்னோட ஆதரவு எங்கிட்டெயே இருக்கு. யாராவது வேணும்னா சொல்லுங்க. :-)

என்னோட சாதி, மதம், ஊரு, ஒறவு, தொழில், ரசனை உள்ளவங்களா இருந்தாச் சரி. குறிப்பா நெறைய கத புத்தகம் படிக்கிறவங்களா இருந்தாச் சரி. என்னுடைய இரத்தமும் அடர்த்தியானதுதான். :-)))))))

கோவி.கண்ணன் [GK] said...

//இவை அத்தனையும் சமாளித்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை தாக்கு பிடித்தால் விஜயகாந்த் நிச்சயம் தமிழக அரசியலில் ஒரு இடத்தை பிடிப்பார்,//

குழலி !
மறுபடியும் கேப்டன் 1 இடத்தைதான் பிடிப்பார் என்கிறீர்களே இது ஞாயமா ?
:)

குழலி / Kuzhali said...

//தொப்புள்ள பம்பரம் விட்டவங்க அரசியலுக்கு வரலாமான்னு கேக்குறது சரியென்று தோன்றவில்லை.//
ராகவன் அந்த context பார்த்தீர்களா? புடவை கட்டிக்க சொல்லி அவரது வேட்பாளர் புடவையை அவிழ்ப்பது போன்ற போஸ்க்கு தான் அப்படியான ஒரு கமெண்ட்.... மேலும் விஜயகாந்த் பற்றிய பதிவுகளில் நான் புள்ளிவிபரங்கள் மற்றும் காரணிகளை வைத்து தான் பேசுகிறேன்.... சில நக்கல்கள் சேர்த்திருக்கிறேன், பத்திரிக்கைகளும் சில பதிவர்களும் விஜயகாந்த் ஊழலுக்கு எதிரி(ஆனால் ஓட்டு போட மட்டும் அவங்க கட்சிக்காரங்க காசு தருவாங்க), சாதிக்கு எதிரி(ஆனால் 14பேர் விஜயகாந்தின் நாயக்கர் சாதிக் காரங்க மாவட்ட செயலாளரா இருப்பாங்க) என்று அள்ளிவிட்டுக்கொண்டிருப்பதை போல நானும் செய்யாமல் அவரின் செயல்களை விமர்சிக்கிறேன், அது தனிப்பட்ட வெறுப்பு என்றால் எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை, ஆனாலும் ரஜினிகாந்த்தா விஜயகாந்தா என்றால் நான் விஜயகாந்தின் பக்கமே இருப்பேன் ரஜினியைவிட விஜயகாந்த் ஆபாத்தானவர் அல்ல என்று நான் கருதுகிறேன்., நான் அளித்த தகவல்களில் என் விமர்சனத்தில் எங்கே தவறு என்று சொல்லுங்கள் நான் ஒத்துக்கொள்கிறேன்.

G.Ragavan said...

// பத்திரிக்கைகளும் சில பதிவர்களும் விஜயகாந்த் ஊழலுக்கு எதிரி(ஆனால் ஓட்டு போட மட்டும் அவங்க கட்சிக்காரங்க காசு தருவாங்க), சாதிக்கு எதிரி(ஆனால் 14பேர் விஜயகாந்தின் நாயக்கர் சாதிக் காரங்க மாவட்ட செயலாளரா இருப்பாங்க) என்று அள்ளிவிட்டுக்கொண்டிருப்பதை போல நானும் செய்யாமல் அவரின் செயல்களை விமர்சிக்கிறேன், அது தனிப்பட்ட வெறுப்பு என்றால் எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை, //

எனக்கு அப்படித் தோன்றுகிறது. அதனால்தான் அப்படிச் சொன்னேன். நீங்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் சரி. இந்தக் காரணங்களின் படிப் பார்த்தால் எந்த அரசியல் கட்சியும் தப்பாதே! எல்லாக் கட்சியையும் இழுத்து மூட வேண்டியதுதான். பாமக, அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ் உட்பட. ஆனாலும் நீங்கள் ரெட்டை மாட்டு வண்டியில் பொதுவாக ஒரு மாட்டையே அடிப்பது போன்ற தோற்றம் இருப்பதால் எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். திமுக வன்முறைப் பதிவில் கூட இந்த அளவிற்கு காரம் இருக்கவில்லை. அங்கேயும் சொன்னேன். எல்லாக் கட்சியும் அப்படித்தாங்க. திமுக மட்டும் விலக்கா என்று. இங்கேயும் அப்படித்தான் சொல்கிறேன்.

// ஆனாலும் ரஜினிகாந்த்தா விஜயகாந்தா என்றால் நான் விஜயகாந்தின் பக்கமே இருப்பேன் ரஜினியைவிட விஜயகாந்த் ஆபாத்தானவர் அல்ல என்று நான் கருதுகிறேன்., நான் அளித்த தகவல்களில் என் விமர்சனத்தில் எங்கே தவறு என்று சொல்லுங்கள் நான் ஒத்துக்கொள்கிறேன். //

சரி எது தப்பு எதுன்னு நான் சொல்றது சரியா இருக்குமா தப்பா இருக்குமான்னு தெரியலையே. எல்லாம் தெரியும்னு நெனச்சா இதுதான் சரி...அதுதான் சரின்னு சொல்லலாம். தப்பு கண்டுபிடிக்கிறதுக்காக உங்க பதிவைப் படிக்கலைங்க. என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரிஞ்சிக்கிட்டு அதுக்குத் தொடர்பான என்னுடைய கருத்தைச் சொல்லத்தான் நான் வந்தேன். நமக்கெதுக்குங்க...நான் சரி நீ தப்பு விவகாரமெல்லாம்.

குழலி / Kuzhali said...

//இந்தக் காரணங்களின் படிப் பார்த்தால் எந்த அரசியல் கட்சியும் தப்பாதே! எல்லாக் கட்சியையும் இழுத்து மூட வேண்டியதுதான். பாமக, அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ் உட்பட. ஆனாலும் நீங்கள் ரெட்டை மாட்டு வண்டியில் பொதுவாக ஒரு மாட்டையே அடிப்பது போன்ற தோற்றம் இருப்பதால் எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். திமுக வன்முறைப் பதிவில் கூட இந்த அளவிற்கு காரம் இருக்கவில்லை.
//
உண்மைதான், மற்ற கட்சிகளை விமர்சிக்கும் போது இருக்கும் காரத்தை விட விஜயகாந்தை விமர்சிக்கும் போது காரம் அதிகமாக இருக்க காரணம், விஜயகாந்தின் மீது ஏற்றிவைக்கப்படும் புனித பிம்பம் தான். எதையெல்லாம் அவர் குற்றமாக மற்றவர்கள் மீது சுமத்துகிறாரோ அதையெல்லாம் அவரே செய்வதால் தான் அது தெரிந்தும் பலரும் விஜயகாந்தை உத்தமபுத்திரனாக உருவகப்படுத்துவதும் தான் காரம் அதிகமாவதற்கு காரணம், முந்தைய பதிவில் ஒருவர் இதே மாதிரி கேள்விக்கேட்டார், அதற்கான பதில் இங்கே அங்கே சொன்னது கீழே...

//அதை கண்டிக்கும் உங்கள் பதிவில் இவ்வளவு ஏளனம் இல்லையே என்பதுதான் வருத்தமாயிருக்கிறது :(
//

ஏங்க ஒருத்தன் சும்மா பொம்பளை பொறுக்கியா இருக்கான் அவனைத்திட்டுவோம், அதே இன்னொருத்தன் ஏதோ ஒரு மடத்து பீடாதிபதியா இருக்கான் அவன் நான் உத்தமன் என்று கூறிக்கொண்டே பொம்பளை பொறுக்கியா இருக்கான், இவனை கடுமையா திட்டுவோம், இவனையும் மேலே சொன்னவனை திட்டியது மாதிரி திட்டலையேனு இவனை மட்டும் ஏன் கடுமையா திட்டுறனு கேட்குறிங்க?

மாற்றம் தரும் உத்தமர் விஜயகாந்த் அல்லவா? அதனால் தான் அவருக்கு கொஞ்சம் வசவு அதிகம் :-)

Anonymous said...

நமது பாரதத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ள திம்மி வாய்க்கு வந்ததை பிதற்றிக் கொண்டு திரிகிறது. அதற்கு ஜால்ரா அடிக்கும் வேலையை பல பத்திரிக்கைகள் செய்து கொண்டு வருகின்றன. அவர்களுக்கு சிங்கத்திற்கும், சிறு நரிக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை. சமீபத்தில் (2006ல்) நடந்த உள்ளாட்சி தேர்தல் அனைவருக்கும் நினைவில் இருக்கும். தேர்தலில் நடந்த வரலாறு காணாத கலவரத்தினையும் மீறி அம்மாவின் தலைமையில் அ.இ.அ.தி.மு.க வெற்றிகளை குவித்தது. அதை கண்டு பொறாமைபட்ட ஊடகங்கள் அம்மா தோல்வி அடைந்ததாகவும், குடிகாரன் ஏதோ பெரிய வெற்றி அடைந்ததாகவும் செய்திகள் வெளியிடுகின்றன. சில கள உறுப்பினர்கள் கூட குடிகாரனுக்கு வால் பிடிக்கின்றனர்.

நடந்து முடிந்த தேர்தலின் முக்கிய அங்கமான சென்னை மாநகராட்சி தேர்தலை சற்று அலசுவோம்.

அகில உலகமே தலைகுனியும் அளவிற்கு நடந்த கலவரத்தின் இடையே அம்மா வெற்றி முரசு கொட்டியது 4 வார்டுகளில். தேசிய முன்னேற்ற திருடர்கள் கழகம் பெற்றது பெரிய முட்டை மட்டுமே.

நேரடி போட்டி நடந்த 123 வார்டுகளை இப்போது பார்ப்போம்.
தேசிய முன்னேற்ற திருடர்கள் கழகம் முன்னிலை அடைந்தது 3 வார்டுகளில் மட்டுமே. மீதம் உள்ள 120 வார்டுகளிலும் குடிகாரன் கூட்டத்தினரை மண் கவ்வ வைத்தனர் அம்மாவின் பிள்ளைகள்.

அம்மாவிற்கு கிடைத்தது 373338 வாக்குகள். அவதாரத்திற்கு கிடைத்தது 151404 வாக்குகள். அதாவது பாதிக்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன.

மேலே குறிப்பிட்டுள்ள விபரங்களில் இருந்தே அம்மாவின் வெற்றியை அறிந்து கொள்ளலாம். ஒரு வார்டில் கூட 6000 வாக்குகளுக்கு மேல் பெற முடியாத திம்மி அம்மாவிற்கு போட்டியாம். அரிதாரம் பூசிக்கொண்டால் எது வேண்டுமானாலும் பேசலாமா. இது என்ன மக்களை பார்த்து கை நீட்டி முழங்கும் திரைப்படம் என்று நினைத்து விட்டார்களா.

குடிகாரன் ஏதோ உளறிக் கோண்டு போகின்றான் என நாம் சும்மா இருந்து விட கூடாது. நாட்டை பிளக்க நயவஞ்சகமிடும் தேசவிரோதி அவன் (அதை பற்றி ஒரு பதிவினை விரைவில் எழுதுகின்றேன்). அரிதாரம் பூசி அலையும் குடிகாரனையும் அவனின் அல்லக்கைகளையும் அழிக்க 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

Sivabalan said...

நல்ல அலசல்.

Anonymous said...

//இவை இரண்டும் சண்டையிட்டால் திமுகவிற்கு தான்
இலாபம் என வாசகர்கடிதங்கள் வரும், அதன் பிற்கு விஜயகாந்த்
டார் டார் தான் தினமலரில்.//
ஏற்கெனெவே சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் அம்மாவுடன் கூட்டணி
வைக்க வேண்டும் என்று எழுதியவர்கள்தான்.

//BLOOD IS THICKER THAN WATER //
:)

Anonymous said...

கருணாநிதியின் கமெந்துக்கெல்லாம் அடுத்த நாளே
பதில் கொடுக்கும் விஜயகாந்த் அம்மாவின் விளாசலுக்கு
இன்னும் பதில் எதுவும் சொல்லாமல் அமைதி
காக்கிறார். ?

குழலி / Kuzhali said...

//அம்மாவின் விளாசலுக்கு
இன்னும் பதில் எதுவும் சொல்லாமல் அமைதி
காக்கிறார். ?
//
ஊற்றி கொடுத்தாரா என்று கேட்டிருக்குறாரே மாற்றம் தரும் தலைவர்

அருண்மொழி said...

விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 2ல் மட்டுமே தே.மு.தி.க வென்றுள்ளது.

Anonymous said...

//ஊற்றி கொடுத்தாரா என்று கேட்டிருக்குறாரே மாற்றம் தரும் தலைவர் //

லேட்டாக படித்தேன்.

இன்றைய தினமலரில் மூன்று கடிதங்கள். ஒருவர்
விஜயகாந்த் வெற்றிக்கு பாராட்டு. இரண்டாவது கடிதம்
தேசிய கட்சிகளுடன் சேர்ந்து திராவிடகட்சிகள்
இல்லாத மூன்றாவது அணியை உருவாக்கணும்.
மூன்றாவது ஜெயலலிதாவிற்கு திருந்தச் சொல்லி அட்வைஸ்.

குழலி / Kuzhali said...

//விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 2ல் மட்டுமே தே.மு.தி.க வென்றுள்ளது.
//
இது மட்டுமா? விஜயகாந்தை கைவிட்ட புகுந்த வீடு என்று விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட இடங்களில் விஜயகாந்த் கட்சி பெற்ற தோல்வியை இன்று எழுதியுள்ளார்கள், இனியும் கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பிப்பார்கள், சொந்த செலவில் சூனியமல்லவா வைத்துக்கொண்டார்கள், அந்த சூனியத்தையும் அவர்கள் தானே எடுக்க வேண்டும் :-)

குழலி / Kuzhali said...

//இன்றைய தினமலரில் மூன்று கடிதங்கள். ஒருவர்
விஜயகாந்த் வெற்றிக்கு பாராட்டு. இரண்டாவது கடிதம்
தேசிய கட்சிகளுடன் சேர்ந்து திராவிடகட்சிகள்
இல்லாத மூன்றாவது அணியை உருவாக்கணும்.
மூன்றாவது ஜெயலலிதாவிற்கு திருந்தச் சொல்லி அட்வைஸ். //

இன்னும் இருக்கு பாருங்க கூத்து
:-)

PRABHU RAJADURAI said...

நீங்கள் ஒரு அரசியல் கட்சி சார்ந்த நிலைப்பாட்டினை எடுத்திருப்பதினால், பலரும் உங்கள் கட்டுரைகளை அதே கண்ணாடியுடன் அணுகினாலும்...பத்திரிக்கைகளில் படிக்கத் தகுந்த தரத்துடன் எழுதப்பட்டிருக்கும் சிறந்த அரசியல் அலசல் கட்டுரை. வாழ்த்துகள்!

குழலி / Kuzhali said...

நன்றி பிரபு

Anonymous said...

குத்துச் சண்டையின் இரண்டாவது சுற்றில் அம்மாவுக்கு
பதிலாக இன்று ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

விவன்னியன் said...

ennavo ponga, vetri petradhu Kalaignarin arasiyal. Thatstamil.coma gavaniteengana "Vijayakant maberum sakthiyakirar" enra thalaipukku adutha naal jalyalalithavin kudikaara comment. Yedho idikkara madiri irukku. Vazgha namadhu media. Adhutha kuthirayai ready panniayachu.

Doctor Bruno said...

//இதுவரை விஜயகாந்த் முகத்தையோ செய்தியையோ காண்பிக்காத சன் டிவி என்ன செய்யுமென்றால் இனி ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் மாறி மாறி விமர்சிப்பதை காண்பிக்கும்,//
நீங்க தீர்க்கதரிசி...அந்த கருமத்தை தான் இப்ப பார்க்கிறோம்.....

ஆனால் நீங்க கூட இதை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்

1. குடிகாரன்
2. எனக்கு பக்கத்தில் இருந்து ஊற்றி கொடுத்தாரா

மூனாம் வகுப்பு பிள்ளைகள் கூட இதை விட Decentடாக சண்டை போடுவார்கள்

Doctor Bruno said...

I was expecting exactly this only. The reason is simple

People vote for DMK because of the following reasons
1. They like Kalaignar personally
2. They are government Servants (with exceptions)
3. They like one of the alliance
4. They don’t like Jayalalitha

People vote for ADMK because of the following reasons
1. They like MGR
2. They belong to / like one of the alliance
3. They belong to Sasikala’s community (with exceptions)
4. They belong to Jayalalitha’s community (with exceptions)
5. They don’t like Kalignar’s “Dravidian” Policies (but they will tell family politics or sarkaria commission as reason) (This is similar to Category 4)
6. They don’t like DMK’s other policies

Now When Vijayakanth has started the party, he is likely to get
1. Category 4 from the DMK Voters
2. Category 6 from the ADMK Voters (not 4 or 5 !!!)

But what happened is Vijayakanth was openly against DMK and very rarely did he question ADMK

So what happened was that All those who don’t like DMK voted for him . He got only Category 6 from ADMK Voters. He got very little support from the Category 4 of DMK Voters because he was more anti-DMK than anti-ADMK

This he eroded the ADMK vote bank more than the DMK Vote Bank in the Assembly elections. In the present Local body polls the erosion of DMK vote bank was very minimal but ADMK lost considerably.

Another factor is that Vijayakanth’s Fan Clubs are always seen in the villages where you see MDMK Flag. (It is very easy to guess which fan club will be there based on the flag or statue in our villages – If it is MDMK Flag , it is Vijayakanth – If it is the statue of Kamarajar, it will be Sarath kumar or Ramarajan along with Athithanar NaRpani manRam– if it is the statue of Pasumpon Thevar it will be Karthik Fan Club)

Thus Vijayakanth eroded both ADMK votes as well as MDMK’s (Telugu) votes

Doctor Bruno said...

//அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் கட்சி, காங்கிரஸ்,கம்யுனிஸ்ட்கள் சேர்ந்தால்//
(May be communists but) DO you think that Congress will prefer a Party with NO SEATS is Loksabha to DMK..... But if vijayakanths teams up with ADMK, it is going to be home run for DMK

//விஜயகாந்த் இவ்வளவு ஓட்டுகள் வாங்குவார்னு நெனைச்சே பாக்கலை.//
//I couldnt support DMK just because I dont support ADMK.//
I think I have answered this exactly in my comment above and cross posted at http://doctorbruno.blogspot.com/2006/10/whose-votes-did-vijayakanth-get.html

Anonymous said...

//மூனாம் வகுப்பு பிள்ளைகள் கூட இதை விட Decentடாக சண்டை போடுவார்கள்//

உங்க அப்பன் குடிகாரன்.
உங்க அம்மாவா கூட இருந்து ஊத்தி கொடுத்தாங்க.

இப்படியா.

Anonymous said...

//என்னோட சாதி, மதம், ஊரு, ஒறவு, தொழில், ரசனை உள்ளவங்களா இருந்தாச் சரி. குறிப்பா நெறைய கத புத்தகம் படிக்கிறவங்களா இருந்தாச் சரி. என்னுடைய இரத்தமும் அடர்த்தியானதுதான். :-)))))))//

அப்ப நீங்களே தனி கட்சி ஆரம்பித்து எலக்சன்ல நில்லுங்க. ஓட்டு மட்டும் எனக்கு போட்ருங்க..ஹிஹிஹி

Anonymous said...

மாற்றம் தரும் உத்தமர் விஜயகாந்த் அல்லவா? அதனால் தான் அவருக்கு கொஞ்சம் வசவு அதிகம் :-)


Wont this apply to Ramadoss also.

டிபிஆர்.ஜோசப் said...

ஒருவருக்கு எதிரான ஓட்டுகளை மட்டுமே நம்பி ஒருவர் அரசியலில் இறங்கி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை விஜயகாந்த் உணர வேண்டும்.

விஜயகாந்த் வாயை மூடிக்கொண்டு கருமமே கண்ணாக அடுத்த பொதுத்தேர்தல் வரை பொது வாழ்வில் நீடித்திருக்க வேண்டும்.

பன்னீர்செல்வம் இரு தினங்களுக்கு முன்னர் அரசியலில் முதியவர்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசலாகாது என்றதை வி.காந்த் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஜெயின் மறைமுக தாக்கை இவர் நேரடியாக எதிர்க்கப்போக சன் டிவி அதை ஊதி பெரிதாக்கி இவருக்கு வாக்களித்த 'படித்த' (இதில் எனக்கு உடன்பாடில்லை.. எந்த ஒரு 'படித்தவரும்' இவருக்கு வாக்களிக்க வாய்ப்பில்லை.. சினிமா மோகத்தில் மயங்கியிருப்பவர் மட்டுமே இவருக்கு வாக்களித்திருக்க முடியும் என்பது என் கருத்து) வாக்காளர்கள் மத்தியிலும் ஒரு கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

அரசியலில் பிரவேசிக்க பிரத்தியேக தகுதியில்லை என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அதில் நிலைத்திருக்க சில தகுதிகள் நிச்சயம் தேவை. அது வி.காந்திடம் இருக்கிறதா என்பதை காலம்தான் நிரூபிக்கும்.

புரட்சி தலைவர் அரசியலில் முழு வீச்சுடன் இறங்குவதற்கு முன்னர் இருபதாண்டுகால பொதுவாழ்வில் தன்னை யாரென்று மக்களுக்கு இனங்காட்டியிருந்தார். மு.கவும் அப்படித்தான்.

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்று வந்து ஆட்சியைப் பிடித்தவர் ஜெ மட்டுமே. அவர் முதலில் பெற்றது பு.த.வின் அனுதாப ஓட்டுகளை. பிறகு ராஜீவ் காந்தியின் அனுதாப ஓட்டுகளை.. முந்தைய தேர்தலில் முகவுக்கு எதிராக விழுந்த ஓட்டுகளை..

அவர் அவருக்காகவே பெற்ற வெற்றி இனிதான் வரவேண்டும்..

அதுபோல் வி.காந்தும் ஆட்சியைப் பிடிக்க நினைத்தால் அவர் காண்பது வெறும் பகல் கனவே..

bala said...

//மாற்றம் தரும் உத்தமர் விஜயகாந்த் அல்லவா? அதனால் தான் அவருக்கு கொஞ்சம் வசவு அதிகம் :-)


Wont this apply to Ramadoss also.//

இல்லை..இது மருத்துவர் ராமதாசுவுக்கு பொருந்தாது.
அய்யா கொண்டுவருவது நல்ல மாற்றம்.
கேப்டன் கொண்டுவருவது ஏமாற்றம்.
இது குழலி அய்யாவுக்கு பிடித்த கருத்து.

பாலா

குழலி / Kuzhali said...

//இல்லை..இது மருத்துவர் ராமதாசுவுக்கு பொருந்தாது.
அய்யா கொண்டுவருவது நல்ல மாற்றம்.
கேப்டன் கொண்டுவருவது ஏமாற்றம்.
இது குழலி அய்யாவுக்கு பிடித்த கருத்து.

பாலா

//
இனி பாலா தான்பா எனக்கு ஸ்போக்ஸ்பெர்சன், எனக்கு பதிலா அவரே அங்கங்க நான் என்ன நினைக்கிறேன்னு வாய்ஸ் கொடுக்குறாரு என்ன பாலா சரிதானா? :-)

விவன்னியன் said...

//இல்லை..இது மருத்துவர் ராமதாசுவுக்கு பொருந்தாது.
அய்யா கொண்டுவருவது நல்ல மாற்றம்.
கேப்டன் கொண்டுவருவது ஏமாற்றம்.
இது குழலி அய்யாவுக்கு பிடித்த கருத்து.

பாலா

//
Unmaiyana ramadass thondar bala thaan. neengalam waste. Karunanidhi patri ezudhinalum appo "Ramadass" ? enbar, vijaykant patri ezudhinalum appo "Ramadass" ? . Ivar allo unmaiyana ramadass bhaktar. Kanavulayam rama jayam sorry Ramadass jayam solndu irupparo?:))
Balaji

Anonymous said...

இதோ சோவும் சொல்லிட்டார்.
உலகளாவிய மேனேஜ்மென்ட் கைடு சொல்வது
போல விஜயகாந்த் முதலமைச்சர் கனவு காணக்கூடாது.
(ரஜினி மட்டுமே இந்த கனவு காணலாம்.)
வேண்டுமென்றால் அம்மாவுக்கு 'தூக்கு தூக்கி'யாகலாம்.
விஜயகாந்த் இந்த போஸ்ட்டுக்காகவா இவ்வளவு செலவழிக்கிறார்?

குழலி / Kuzhali said...

விகடனிலிருந்து 'சோ' பேட்டியின் சில வரிகள்...

அ.தி.மு.க-வும் விஜயகாந்த் கட்சியும் கூட்டணி வைத்துக் கொண்டால் நல்லது என்று நானே சொல்லியிருக்கிறேன். அதற்குக் காரணம் தமிழகத்தில் ஒரு பலமான எதிர்க்கட்சியாக இந்தக் கட்சிகள் செயல்பட்டால் தமிழகத்துக்கு நல்லது என்பதற்காகத்தான்.''

பத்திரிகைகளில் விஜயகாந்த் பற்றிய செய்திகள், பேட்டிகள் பிரதானமாக வந்து கொண்டிருந்தாலும் அவருக்கு தமிழக அரசியலில் மூன்றாவது இடம்தான். அதைத்தாண்டி அவர் இப்போதே முன்னேறுவார் என்று சொல்ல முடியாது. "அரசியலில் விஜயகாந்துக்கு அபார வெற்றி. அவரைத் தமிழக மக்கள் பெருவாரியாக ஏற்றுக் கொண்டார்கள்" என்று நிலவும் கருத்துக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். கற்பனைக்காக இப்படி யோசியுங்கள்... விஜயகாந்த் இடத்தில் ரஜினிகாந்தை வைத்துப் பாருங்கள். அவர் ஒரே ஒரு இடத்தில் எம்.எல்.ஏ-வாக ஜெயித்து, பல இடங்களில் டெபாஸிட் இழந்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை வாங்கியிருந்தால் அவருக்கு அது மிகப்பெரிய வெற்றி என்று தமிழக மக்கள் சொல்லியிருப்பார்களா? சொல்லியிருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்தான் அடுத்த முதல்வர் என்கிற அளவுக்கு இங்கே எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி விஜயகாந்துக்கு இல்லை. இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக அவரை மக்கள் நினைத்திருந்தால் அவர் இன்னும் பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

சோ முகம் காட்டிவிட்டார், தினமலர் வாசகர்கடிதங்கள் (இன்றைக்கு கூட மூன்று கடிதங்கள்) தினம் தினம் ஜெயலலிதாவிற்கும் விஜயகாந்திற்கும் அறிவுரை சொல்லி வருகின்றன, தினமலருக்கு விஜயகாந்த், ஜெயலலிதா விடயத்தை தவிர தமிழகத்தில் வேறு பிரச்சினைகளை வாசகர்கடிதத்தில் எழுத வாசகர்கள் இல்லையா? அல்லது துணையாசிரியர்களுக்கு இது தான் தற்போதைய அசைன்மென்ட்டா?

சோத்துக்கட்சி said...

ஓ...இங்க பேசிகிட்டு இருக்கிற பெரும்பாலான மக்கள பாத்தா, திமுக-பாமக அனுதாபிகள் மாதிரி தெரியுதே?

அவரு வந்து சாதிக்கிறாரா? இல்லையாங்கறது எல்லாம் அடுத்த விசயம். விஜயகாந்த் பத்தி நீங்க இவ்வளவு பேசுவதே அவரது வளர்ச்சிதான் போங்க..

VSK said...

பொறுத்து பொறுத்து பார்த்து போதுமென விட்டுவிட மனமின்றி
இதோ இங்கே என் கருத்தினை நான் வைக்கின்றேன்!

அடுத்தவர் காலை அடி வருடியே
தடுத்தவர் எல்லாரையும் தெருத்தே பேசிய
மருத்துவர் அடிப்பொடி மருகி நிற்கின்றார்
மறுபடியும் மனத்தை திறக்கின்றார்!!

திராவிட மொழி பேசி திருத்தியம் பேசி இந்த
தமிழகத்தைச் சிதைத்த திருடர்கள் கால் பணிந்து
அடிவருடியே ஆட்சியில் பங்கு பெற்று
திருடரின் அடிப்பொடி திண்ணியம் பேசுகிறார்!

தனித்திங்கே நின்றிடவே தைரியம் இல்லாமலே
இனத்தைக் காக்கவென் ஏமாத்து பண்ணியே
தன் சொத்து சேர்க்கவே எவரோடும் கூட்டு சேர்ந்து
வன்புணர்ச்சி செய்தவர்க்கு வக்காலத்து வாங்குகிறார்

இவர் பேச்சு கேட்க வேண்டாம்
ஏமாந்து போக வேண்டாம்
கூட்டு சேரும் கட்சியை ஒதுக்கிடுவோம்
தனித்து நிற்கும் கேப்டனை ஆதரித்திடுவோம்!

Anonymous said...

//இப்போதைக்கு வைகோவை காலி செய்துவிட்டார் என்பது மட்டும் உண்மை.//

இந்த உண்மை இப்போதைக்கு தான். போகப்போக பாருங்கள். மேலும் சில உண்மைகள் வெளிவரும்.

Anonymous said...

//இப்போது என் முன் இருக்கும் கேள்விகள்

1) வெறும் 8.45% பலமுள்ள விஜயகாந்த்தை எப்படி அவரைப்போல மூன்று பங்கு பலமுள்ள ஜெயலலிதா, கருணாநிதியோடு போட்டியாளராக காண்பிக்கின்றார்கள்?//

உங்களின் இந்த கேள்விகளை நினைவிருக்கிறதா?

உங்களின் இந்த பதிவிலேயே இந்த முதல் கேள்விக்கு பதில் இருப்பதை அறிகிறீர்களா?

கொஞ்சம் பொருத்திருங்கள். உங்கள் மற்ற கேள்விகளுக்கும் ஒவ்வொன்றாய் உங்கள் பதிவிலிருந்தே பதில் கிடைக்கலாம்.

Doctor Bruno said...

////மூனாம் வகுப்பு பிள்ளைகள் கூட இதை விட Decentடாக சண்டை போடுவார்கள்//
உங்க அப்பன் குடிகாரன்.
உங்க அம்மாவா கூட இருந்து ஊத்தி கொடுத்தாங்க.
இப்படியா.//
இப்படியில்லை.... இதை விட கண்ணியமாக.....
I have already told "More Decent" than this

குழலி / Kuzhali said...

//தனித்து நிற்கும் கேப்டனை ஆதரித்திடுவோம்!
//
எஸ்.கே. தலீவா ரெண்டு நாளைக்கு முன்னால நீங்களே தான் இதுவும் மட்டைதான் போலன்னு சொன்னிங்க, என்ன அதுக்குள்ள ஜெயலலிதாவிற்கு விஜயகாந்தினால் பாதிப்பில்லைனு எங்கேயாவது படிச்சிங்களா? :-)

Anonymous said...

பிரபு அவர்கள் சொல்வது சரி தான்.

நன்கு அலசி ஆராய்ந்து பிழியப்பட்ட கட்டுரை. 'குழலி' தான் எழுதியிருக்கிறார் என்ற முன்முடிவுடன் படிப்பதால் ஒரு சார்பு 'மயக்கம்' சிலருக்குத் தெரிகிறது போலும்.

-தமிழ்வலையின் அரசியலறிஞர்-ன்னு உங்களச் சொன்னதில தப்பில்லே தல.
I.H

குழலி / Kuzhali said...

தினமலர் வாசகர் கடிதத்தில் இன்றைய கடிதங்கள்

http://www.dinamalar.com/2006nov05/ithu.asp

முதல் கடிதத்தில் சில வரிகள்

இன்று தமிழகம் என்ற வீட்டில் வன்முறை நெருப்பு பற்றி எரிகின்றது, அதற்கு விஜயகாந்த் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து செயல்படுவது தான் சாலச்சிறந்தது.

மும்முனைப்போட்டி என்றால் அவர்கள் தான் வெற்றி பெற்றுக்கொண்டே வருவார்கள் இதில் விஜயகாந்தின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராக வீணாகிடும், எனவே இப்போதைக்கு தேவை இருமுனைப்போட்டி தான்.

இன்னொரு கடிதம்
குடிகாரர்களுக்கு எம்ஜியார் பெயரை சொல்ல கூட அருகதையில்லையெனறால் அதிமுகவில் எந்த உறுப்பினரும் குடிக்கவில்லையா? மதுவை வெறுப்பதே மகத்தான கொள்கையென்றாள் அதிமுக ஆட்சிகாலத்தில் மதுக்கடை மர்மங்கள் என்ன?

கொள்கைகளை விமர்சிக்காமல் குணநலன்களையும் தனி நபர்களையும் விமர்சிப்பது தலைவர்களுக்கு அழகல்ல....
---------------
ஒரு சிறிய ஃப்ளாஷ் பேக், சில மாதங்களுக்கு முன் மருத்துவர் இராமதாசு திரைப்படங்களில் குடிப்பது புகைப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தியபோதும் கிராமத்து டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்திய போதும், கட்சி காரர்கள் குடிக்க கூடாது என்று வலியுறுத்திய போதும் இதே தினமலரில் வாசகர் கடிதத்திலும் பல இடங்களில் குடிக்கும் பாமகவினரை கட்சியை விட்டு நீக்குவாரா இராமதாஸ் என்று கிண்டலடித்தார்கள், குடிக்காத, புகைக்காத ஒரு தலைவர் தன் கட்சி ஆட்கள் குடிக்க கூடாது என்று சொன்னதற்கு குடிப்பவர்களை கட்சியை விட்டு நீக்குவார்களா? என்று நக்கலடித்தார்கள், இன்றோ முன்மாதிரியாக இருக்க வேண்டிய தலைவன் குடிக்கிறாரென்றால் அதை ஏன் விமர்சிக்கிறாய் (விமர்சித்தது ஜெயலலிதா என்பதால் அர்ச்சனை மிகக்குறைவு) தனிகுனநலன்களை பார்க்காதே கொள்கையைப்பார் என்கிறது இதே பத்திரிக்கைகள் இப்போது, வாழ்க பத்திரிக்கை நடுநிலைமை.....

விஜயகாந்த்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம், இப்போதைக்கு விஜயகாந்த் ஜெயலலிதா கூட்டணி அமைய வேண்டுமென்ற ஆசை, அந்த ஆசை நிராசையாகும் போது தமிழகத்தில் இருமுனைப்போட்டியைத்தான் இவர்கள் விரும்புவார்கள் ஒன்று கருணாநிதி இன்னொன்று ஜெயலலிதா, அப்போது இதே விஜயகாந்த் இவர்களாலேயே போட்டுத்தள்ளப்படுவார்கள்.

அவ்வப்போது பின்னூட்டங்களில் இந்த பதிவு தொடர்பான சம்பவங்கள் அப்டேட் செய்யப்படும்

அருண்மொழி said...

தமிழ்முரசுவில் வந்த செய்தி.

தே.மு.தி.க ஊழல் கட்சிகளான தி.மு.க, அ.இ.அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது. மேலும் ஜாதி, மதக் கட்சிகளான பா.ம.க, பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது. சொன்னவர் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, பா.ம.க வில் இருந்து விட்டு இப்போது தே.மு.தி.கவில் அடைக்கலமானவர்.

Follow MGR's policy of joining with congress + communists. 2/3 MP seats for congress & 2/3 MLA seats for DMDK.

குழலி / Kuzhali said...

//மேலும் ஜாதி, மதக் கட்சிகளான பா.ம.க, பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது. //
அய்யய்யோ இந்த வரிசையில பா.ஜ.க.வுமா? போச்சே போச்சே, விஜயகாந்த்தோட ஜாயின்ட் போட்டுட கனவு கண்டாங்களே கோயிந்தா கோயிந்தா வா? பாவம் அவிங்க, விஜயகாந்த் அவிங்களோட ஒரு ஒரு கணக்கையும் தகர்த்துக்கொண்டிருக்கிறார் :-)

குழலி / Kuzhali said...

பதிவில் குறிப்பிட்டது...

//இனி அச்சு ஊடகங்கள் விஜயகாந்தின் புனித பிம்பத்தை உடைக்கும் முயற்சிகளில் இறங்கும் வாய்ப்பிருக்கிறது, உடனடியாக இல்லையென்றாலும் இவரும் மற்றவர்களைப்போலத்தான்,//

விஜயகாந்த்துக்கு ஆப்பு வைக்கும் தினமலர்.... இத்தனை நாட்கள் ஜெயலலிதாவிற்கு அறிவுரை கொடுத்த தினமலர் வாசகர் கடிதங்கள்(நம்பனும் அது வாசகர்கள் எழுதிய கடிதங்கள் தானென்று:-) ) இன்று விஜயகாந்த்துக்கு ஆப்படித்து ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.

அந்த கடிதம் கீழே...

சோதனை தான் இடைவேளை!

ம.செ.கவிதைக் கண்ணன், கல்லுõரணி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுது

கிறார்: அண்ணாந்து படுத்து எச்சில் துப்பி, அற்ப சந்தோஷம் அடையும் அரைவேக்காடுகள் சிலர், "ஜெயலலிதாவுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை' எனக் கூறுவர்.

விஜயகாந்தை பற்றி ஜெயலலிதா விடுத்த அறிக்கை சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஏனெனில்,

"கருப்பு எம்.ஜி.ஆர்.,' என்று தன்னை அழைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆர்., தொண்டர்களின் ஓட்டுகளை வசீகரித்துக் கொண்டிருந்தார். சரியான நேரத்தில் ஜெயலலிதா விடுத்த அறிக்கை, எம்.ஜி.ஆர்., தொண்டர் பல பேரை, குழப்பத்தில் இருந்து மீட்டு, தெளிவுபடுத்தி உள்ளது.

எம்.ஜி.ஆரது தொண் டர்கள், கருணாநிதியுடன் கள்ள நட்பு வைத்துள்ள அரசியல்வாதிகளை எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

சிறிது காலத்துக்கு முன், மத்திய அரசு கட்டும் பாலத் துக்கு இடையூறாக விஜயகாந்தின் கல்யாண மண்டபம் உள்ளதாகவும், அதை இடிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இது விஷயமாக கருணாநிதியை சென்று பார்த்தார் விஜயகாந்த். அந்தக் கல்யாண மண்டபம் இடிக்கப் படாமல் இருக்க, கருணாநிதியுடன், என்ன உடன்படிக்கை மேற்கொண்டார் விஜயகாந்த் என்பதை நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

தனக்கு ஒரு சிறு இழப்பு ஏற்படுவதை பொறுத்துக் கொள்ளாத விஜயகாந்த், பெரிய பதவிகளுக்கு வந்து மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்?


விஜயகாந்த் சட்டசபை உறுப்பினராக பதவியேற்க வந்த போது, கருணாநிதியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்; இதெல்லாம் எம்.ஜி.ஆர்., தொண்டர்கள் அநேகம் பேருக்கு தெரியாது!

"அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி செய்து, தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டன' என்று பேசியதன் மூலம் விஜயகாந்த் எம்.ஜி.ஆரையே களங்கப்படுத்தியுள்ளார். இதன் மூலம் விஜயகாந்தின் உண்மை சொரூபம் எம்.ஜி.ஆர்., தொண்டர்களுக்கு தெரிந்து விட்டது.

கருணாநிதியின் கிரக நிலை தான் அவரை இந்த அளவுக்கு உச்சத்தில் வைத்துள்ளது. இருந்தாலும், புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மீது வந்து படுத்துக் கொள்ளுங்கள் என்ற நிலையில் தான் அவர் உள்ளார்.

கூட்டணிக் கட்சிகளின் குடைச்சல், கருணாநிதியை வெகுவாகப் பாதித்துள்ளது. "எந்த நேரத்தில் தனது நாற்காலிக்கு ஆபத்து வருமோ!' என்று அச்சம் கொண்டுள் ளார். ஆடிக் கொண்டிருக்கும் நாற்காலியை காப்பாற்றத் தான் 15 ஆண்டுகாலமாக எட்டிக் கூடப் பார்க்காத ராஜிவ்காந்தி சமாதிக்கு போயுள்ளார்; "பச்சைத் துரோகம்' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய ராமதாசை, மறுநாள் விழாவில் அழைத்து, பக்கத்தில் வைத்து, சிரித்துப் பேசி கொண்டுள்ள கருணாநிதியின் பரிதாப நிலையைக் கண்டு, அரசியல் நோக்கர்கள் எள்ளி நகையாடுகின்றனர்.

எந்த நேரத்திலும் அச்சமின்றி, சொல்ல நினைத்ததைச் சொல்லும், ஜெயலலிதாவின் துணிச்சல் யாருக்கும் வராது. அதை, "அவரது பலவீனம்' என்று அரசியல் நோயாளிகள் கூறுவர். என்போன்ற எண்ணற்ற எம்.ஜி.ஆர்., தொண்டர்கள் மனதில் அவரது அஞ்சாமைக்குத் தான் ராயல் சல்யூட்.

"ஒரு சம்பவம் என்பது நேற்று அது சரித்திரமாவது இன்று... அது சாதனையாவது நாளை... வரும் சோதனை தான் இடைவேளை' என்ற எம்.ஜி.ஆரின் வைர வரிகளை மெய்ப்படுத்தும் வகையில், மீண்டும் ஜெயலலிதாவின் வெற்றிக் கொடி பறக்கும் என்பதில் ஐயமில்லை!
--------------
விஜயகாந்த்தின் புனித பிம்பத்தை அச்சு ஊடகங்களே உடைக்கும் என்பது கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாகின்றது.

நன்றி

ENNAR said...

சரியா யோசித்துள்ளீர்கள் கணித்துள்ளீர்கள்

குழலி / Kuzhali said...

http://kuzhali.blogspot.com/2007/01/ebcra.html