பெரியாரியத்தை மதமாக்கும் சில பெரியாரிஸ்ட்கள்


இந்த கட்டுரை யாரையும் காயப்படுத்தவோ வருத்தப்படுத்தவோ அல்ல, சில நேரங்களில் சுயவிமர்சனங்கள் தேவைப்படுகின்றன, அப்படியானதொரு சுயவிமர்சனம் தான் இது...

மதங்கள் எப்படி தோன்றியிருக்கும் அது எப்படி மிகவும் இறுக்கமானதாக மூர்க்கமானதாக மாறியிருக்கும் என்பது பற்றி பல நேரங்களில் விளங்கிக்கொள்ள முயற்சித்திருக்கிறேன், அதை எனக்கு தற்போது முழுமையாக செய்முறையாக விளக்கிக்கொண்டிருக்கின்றார்கள் சில பெரியாரிஸ்ட்கள்...

எல்லா காலங்களுக்கும் எல்லா மக்களுக்கும் எல்லா சூழலுக்கும் பொறுந்தக்கூடிய கருத்தோ நியாயமோ இருக்கவே முடியாது, எனவே எந்த கருத்துகளையும் யார் சொல்லியிருந்தாலும் அது எந்த சூழலில் யாருக்கு சொல்லப்பட்டிருக்கின்றது(context) என்பதை கணக்கில் எடுத்து அதன் வழியாக தான் அந்த கருத்துகளை புரிந்து கொள்ளவேண்டுமேயொழிய அந்த வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதை எக்காலத்துக்கும் எல்லா சூழலுக்கும் எல்லா மனிதர்களுக்கும் பொறுத்தி பார்க்க கூடாது, ஆனால் எல்லா மதங்களும் சொல்வது அவர்களின் புனித நூல்கள் சொல்லும் கருத்துகள் எக்காலத்துக்கும் எப்போதுமே பொறுந்தும் என்பதே...

புரியாத சடங்குகள் பற்றிய புரிதலை கொடுத்தது ஒரு ஜென் கதை, எல்லோருக்கும் தெரிந்த கதை தான், ஒரு ஜென் துறவி தம் சீடர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருப்பார், அப்போது அவர் வளர்த்துக்கொண்டிருந்த பூனை இதற்கு இடையூறாக குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தது, எனவே ஜென் துறவி வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு அந்த பூனையை பிடித்து கட்டி போட சொன்னார். ஒரு நாள் ஜென் துறவியும் இறந்து போக கொஞ்ச நாளில் பூனையும் இறந்து போக புதிதாக பொறுப்புக்கு வந்த துறவி வகுப்பு எடுக்கும் முன் சீடர்களை பார்த்து கேட்டாராம் ஏன் இன்று பூனையை கட்டி போடவில்லை என்று, அதற்கு பூனை செத்து போயிவிட்டது என்றார்களாம், அதனாலென்ன இன்னொரு பூனையை வாங்கிக்கொண்டு வந்து கட்டி போடுங்கள் உங்களுக்கு தெரியாதா வகுப்பு எடுக்கும் முன் பூனையை கட்டிப்போடுவது நம் பெரிய துறவி ஏற்படுத்திய வழக்கமென்று...இந்த கதை சடங்குகள் எப்படி ஒரு புரிதலின்றி நடத்தப்படுகின்றது என்பதை புரியவைக்கும்.

ஒரு பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொள்பவர் காலையில் எக்காரணம் கொண்டும் குளிக்க மாட்டார் மாலையில் தான் குளிப்பார், காலையில் குளிப்பது நம் பழக்கமில்லை என்பார், அது பார்ப்பனர்கள் உருவாக்கிய வழக்கம் என்பார், சரி நல்லது ஆனால் அதற்காக எக்காரனம் கொண்டும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை பின்பற்ற தேவையில்லை ஆனால் அவர் எந்த சூழலிலும் எந்த காரணத்துக்காகவும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை கடுமையாக பின்பற்றுகிறார்.

விடுதலை பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வருகிறது, நாம் நம் குடும்பங்களோடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் இப்படி குடும்பங்களாக கலந்துகொள்வதால் திருமண உறவுகள் நம் இயக்க தோழர்களின் குடும்பங்களுக்குள் உருவாகும் என்கிறார்கள், இப்படித்தானே கோவிலிலும் மற்ற விழா நிகழ்ச்சிகளிலும் நடைபெறுகிறது, சரி இது கூட பரவாயில்லை

கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு பெண்ணை ஒரு பெரியாரிஸ்ட் திருமணம் செய்கிறார் அதெப்படி கடவுள் நம்பிக்கை உள்ள பெண்ணை திருமணம் செய்யலாம் நீயெல்லாம் ஒருபெரியாரிஸ்ட்டா என இன்னொரு பெரியாரிஸ்ட் விமர்சிக்கிறார், அப்படியென்றால் ஒரு பெரியாரிஸ்ட் இன்னொரு பெரியாரிஸ்ட்டை மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும் போல அடடே இப்படி தானே ஒரே மதத்திற்குள் மட்டுமே திருமண உறவுகள் என்று மதங்கள் தங்களை இறுக்கிக்கொள்கின்றன.

பெரியார் திருமணத்தை பற்றியும் குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றியும் கருத்துகளையும் விமர்சனங்களையும் வைக்கிறார் அவர் பெண் விடுதலை என்ற நோக்கில் இதை நெறி செய்கிறார், ஆனால் ஒரு சில பெரியாரிஸ்ட்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாத திருமணம் செய்யாமல் சேர்ந்து மட்டுமே வாழனும் என்று எதிர்பார்க்கிறார்கள் (சிலர் இதை பெண்களிடம் நூல்விட பயன்படுத்தியுள்ளார்கள் என்பது வேறு கதை), பெண் விடுதலை என்பதன் அடிப்படையிலேயே பெரியார் அதை சொல்லியிருப்பார் அவரே திருமணமும் செய்திருக்கார், ஆனால் இவர்கள் பெண் விடுதலையை தூக்கிப்போட்டுவிட்டு திருமணமும் குழந்தையும் வேண்டாமென்று பெரியாரின் கருத்துகளை உதிர்த்துவிட்டு வார்த்தைகளாக மட்டுமே பின்பற்றிகிறார்கள் வேதங்களை பின்பற்றுவது போல.

எப்படி மதத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் மதத்தை சிறு வயதிலிருந்தே திணிக்கின்றார்களோ அதே போல பல பெரியாரிஸ்ட்கள் குடும்பங்களில் சிறு வயதிலிருந்தே கடவுள் இல்லையென்றும் பெரியாரியமும் திணிக்கப்படுகின்றது, இப்படியாக சிறு வயதிலிருந்தே மதத்தை போல பழக்கப்படுத்தப்படும்போது(புரிந்து தெளிந்து ஏற்றுகொள்பவர்களை குறிப்பிடவில்லை) எப்படி மதவாதிகளால் அவர்கள் மதத்தை தாண்டி பார்க்க இயலாதோ அதே போல இவர்களும் ஆக்கப்படுகிறார்கள்.

மிஷனரி கல்வி நிறுவங்கள், இந்து மடம் கல்வி நிறுவங்கள் போன்றவற்றில் மதப்பிரச்சாரம் வலிந்து திணிக்கப்படுகிறது என்று விமர்சித்துக்கொண்டே பெரியார் மணியம்மை கல்லூரியில் மாணவிகளின் பெட்டிகள் திறந்து பார்க்கப்படுகின்றன சாமி படம் எதுவும் வைத்திருக்கிறார்களா என்று, மாணவிகள் கடவுள் நம்பிக்கையுடன் உள்ள சின்னங்களை அணிய அனுமதிப்பதில்லை(கல்லூரியில் இல்லையென்றாலும் விடுதியிலாவது அணுமதிக்கலாமே?)படிக்கிறார்களோ இல்லையோ எல்லோருக்கும் திராவிடர் கழக பத்திரிக்கை சந்தா கட்டியாக வேண்டும் அந்த பத்திரிக்கை அவர்கள் வீட்டுக்கு போய்விடும், இங்கே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை நிராகரிக்கின்றார்கள், அதிகாரம் உள்ளதால் தங்கள் நம்பிக்கையை வலிந்து திணிக்கின்றார்கள், பெரியாரியலை புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டியதை வருத்தி திணிக்கிறார்கள், இவைகளைத்தானே மதங்களும் செய்கின்றன பிற மதத்தவர்கள் மீது.

ஒரு பெரியாரிஸ்ட் பெரியாரின் தாடி மயிர் எங்களிடம் உள்ளது, இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம், பாதுகாப்பாக வைத்திருக்கோம் என்கிறார். என்ன புத்தர் பல் பாதுகாக்கப்படுவது நினைவுக்கு வருகிறதா?

இதற்கடுத்ததாக பெரியார் கொள்கைகளை சரியாக எடுத்து செல்லவில்லை என்ற சண்டை அதில் இயக்கம் உடைகிறது, ஒரு குழு தாங்களே உண்மையான பெரியார் தொண்டர்கள் அவரோட எழுத்துகள், புத்தகங்கள் (மற்றும் சொத்துகள்) எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று வழக்கு போடுகிறார்கள், கேட்டால் மற்றவர்கள் பெரியாரின் எழுத்துகளை திரித்துவிடுவார்கள் என்கிறார்கள் ஆகா இப்படித்தானே ஹீனயானமும் மகாயானமும் புத்தமத்தில் உருவானது, இப்படித்தானே கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் உருவானது.

பெரியாரின் எழுத்துகளுக்கு சொந்தம் கொண்டாடும் திராவிடர் கழகமும் அதன் தொண்டர்களும் பெரியாரின் எழுத்துகளையே தங்கள் தலைமை திணித்துள்ள வாரிசை ஏற்றுக்கொள்ள பயன்படுத்துகிறார்கள், மதவாதிகள் எல்லாவற்றையும் அவர்களின் வேத நூலில் இருந்தே எடுத்து நியாயப்படுத்துவதை போல.


தமிழ் ஓவியா அவர்களின் கட்டுரைகளை படித்துவிட்டு ஒருவர் உரையாடியில் கேட்டார்
--------------------
10:11 PM நண்பர்: thala
tamiloveiya post la periyar solli irukiratha potirukare athu nijama?
10:13 PM me: யெஸ்
100% அவர் சொன்னது தான்
நண்பர்: kodumai :)) ithuku karunanithi better
-------------------
மற்றொரு நண்பர் உரையாடியில் பேசியது
1:05 PM நண்பர்: என்ன கொடுமை தலைவா இது
me: edhu?
நண்பர்: இப்படி பட்ட மீனிங்கா பெரியார் சொன்னார்? தமிழ் ஓவியா பதிவு பற்றி
me: எதை சொல்றீங்க
1:06 PM அதுக்கு தான் சொன்னேன் தாலிபான் என்று தல
1:07 PM நண்பர்: பெரியாரும் ஒரு கும்பலை இப்படி ஆக்கி வைத்திருக்கிறாரே என்று

வருத்தம் வருகிறது :(
1:08 PM me: இல்லை
நண்பர்: இயக்கத்துக்குள் பகுத்தறியக்கூடாதா??
me: உலகத்தில் எதுவுமே எக்காலத்துக்கும் எல்லா இடத்திலும் எல்லோருக்கும்
பொறுத்தமான சரியான ஒன்று உலகில் எப்போதுமே இல்லை
1:09 PM பெரியாரின் எழுத்துகள் மட்டுமின்றி எல்லோருடையதும் அபப்டித்தான்
நண்பர்: மந்தையாய் வாழ்வதே இயக்கம் மாதிரி அர்த்தமாயிடுச்சே தமிழ் ஓவியா சொல்வது

:(
me: சூழ்நிலைகளையும் எம்மாதிரியான தருணங்களில் சொல்லப்பட்டது
என்பது முக்கியம்
---------------------
ராமசாமி சொல்றான்னு நான் சொல்ற எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள், நீங்கள் உங்கள் பகுத்தறிவைக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்ன பெரியாரை ஒரு சர்வாதிகாரி போன்றும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவராகவும் போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் தமிழ் ஓவியா பெரியாரின் கருத்துகளை எடுத்து போட்டுள்ளார்.

ஒரு முறை திரு.வீரமணி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது கீழ் வெண்மணி கொடுமை நடந்த பின் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்ய சொல்லி அறிக்கை விட்டாரே சரியா என்று கேட்ட போது திரு வீரமணி அவர்கள் கூறியது என்னவெனில் அதை அப்படியே இன்றைக்கு சொன்னது போல எடுத்துக்கொள்ள கூடாது, எந்த சூழலில் அதை சொன்னார் என்று கவனிக்க வேண்டும், அப்போது தான் அண்ணாதுரை ஆட்சிக்கு வந்துள்ளார், அந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டுமென திட்டத்தில் பலர் இதை காரணமாக வைத்து பிரச்சினைகள் செய்தனர் என்றார். அப்போது புரிந்து கொண்டேன் பெரியாரை பிழையாமை வேண்டும் என்று ஆனால்

தமிழ் ஓவியா அவர்கள் பெரியார் கூறிய இயக்க கட்டுப்பாடு பற்றி கூறிய கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை சொல்லாமல் மொட்டையாக பெரியார் வார்த்தைகளை போட்டதால் பெரியார் மிக மோசமான கருத்தை சொன்னதான தோற்றம் நண்பர்களுக்கு ஏற்பட்டுள்ளது, பெரியார் ஒரு சர்வாதிகாரி போன்றும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவராகவும் போன்ற தோற்றம். பெரியார் எந்நிலையில் அதை கூறினார், திராவிடர் கழகம் என்ற சமூக விடுதலை இயக்கத்தை அதன் அடிப்படையிலிருந்து அதை விலக்கி அதிகாரத்தை கைப்பற்றும் ஒரு கருவியாக அண்ணாதுரை அவர்கள் பயன்படுத்த விரும்பியதும் அதற்கு திராவிடர் கழகத்தினுள்ளேயே பெரும் ஆதரவு உருவாகியதுமான (பின்னே அதிகாரம் பெறுவதென்றால் ஆதரவுக்கா பஞ்சம்) நிலையில் கருத்தாடல்கள், அறிவுஜீவித்தனம், விவாதம் என்ற பெயரில் கழகத்தின் அடிப்படையான சமூக விடுதலை இயக்கம் என்பதிலிருந்து விலகி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்ற அண்ணாதுரைக்கு ஆதரவு திரட்டப்படுவதுமான சூழலில் பெரியார் இப்படியான கருத்துகளை தெரிவித்தார், அப்படியான ஒரு சூழலா இன்று இயக்கத்தில் உள்ளது? இவர்கள் தங்கள் தலைமையின் மீதான விசுவாசத்தையும் அடிமைத்தனத்தையும் நியாயப்படுத்த பெரியாரின் எழுத்துகளை பயனபடுத்துகிறார்கள்...

இந்த மாதிரியாக நடந்துகொள்ளும் பெரியாரிஸ்ட்கள் புரிந்து ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டிய பெரியாரியத்தை மதங்களை போல பழக்கத்திலும் புரிந்து கொள்ளாமலும் பின்பற்றுவது பெரியாரியத்தையும் இன்னொரு மதமாக்காமல் இவர்கள் ஓயமாட்டார்கள் என்றே தோன்றுகிறது, கருப்பு சட்டை போடுவதும் 'மானமிகு' என்று அழைத்துக்கொள்வதையும் சடங்காக்கிவிடாதீர்கள்...

திராவிடர் கழகத்தின் வர்ணாசிரம தலைமையும் மானங்கெட்ட மானமிகுகளும்

திராவிடர் கழகம் கண்ட பெரியாரின் மிக முக்கிய கொள்கை வர்ணாசிரம எதிர்ப்பு மற்றும் சுயமரியாதையை வலியுறுத்தல், வர்ணாசிரமம் என்றால் என்ன? பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உயர்வு தாழ்வு பார்ப்பது, பிறப்பின் அடிப்படையில் தகுதியை நிர்ணயிப்பது, பிறப்பின் அடிப்படையில் பலரை தாழ்த்தி சிலரை உயர்த்துவது... பாவம் திராவிடர் கழக கூடாரத்தில் இருப்பவர்கள் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதை வெறும் சாதி அளவில் மட்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும், அது தலைவரின் மகன் என்ற பிறப்பின் அடிப்படையில் பதவி வழங்குவதும் வர்ணாசிரமம் தான் என்பதை மறந்துவிட்டார்கள்

சுயமரியாதை என்பதை பெரியார் வலியறுத்திய மிக முக்கியமான ஒன்று, சுயமரியாதை என்பது தம்முடைய மரியாதைக்கும் சுயத்துக்கும் இழுக்கு ஏற்படுத்தும் எதையும் வற்புறுத்தலாலோ அல்லது மதத்தின் பெயராலோ அறியாமையாலோ ஏற்று கொள்ளாமல் எதிர்த்து போராடுவது, அதனாலேயே திராவிடர் கழகத்தின் தலையிலிருந்து வால்வரை அத்தனை பேரும் "மானமிகு" என்று அழைத்துக்கொள்வதும் போட்டுக்கொள்வதும்.

திராவிடர் கழகத்திற்கு நாம் பெரியாரின் கருத்துகளை விளக்க வேண்டிய கொடுமையை பாருங்கள்...

திராவிடர் கழகத்தின் எத்தனையோ செயல்வீரர்கள், அனுபவமும் திறமையும் மிக்க அடுத்த கட்ட தலைவர்கள், கழகத்திற்காக முழு நேரமும் பாடுபட்டவர்கள், தம் வாழ்க்கையையே அற்பணித்தவர்கள் என பலரும் இருக்கும் போது ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களின் புதல்வர் திரு.அன்புராஜ் அவர்கள் கழகத்தின் அதிகாரம்மிக்க பதவிக்கு வந்துள்ளர், அதாவது வர்ணாசிரமத்தின்படி பிறப்பின் அடிப்படையில் பதவிக்கு வந்துள்ளார், பிறப்பின் அடிப்படை என்பது பார்ப்பான், சத்திரியன், வெள்ளாளன், தலித் மட்டுமா? தலைவரின் மகன் என்ற அடிப்படையில் வழங்கப்படும் பதவி பிறப்பின் அடிப்படையில் இல்லையா? இந்த கூட்டத்தில் தலைவர் சொன்னதாக பத்திரிக்கையில் வெளியான செய்தி என்னவென்றால் இந்த நியமணத்திற்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் என்றாராம், அதாவது தலைவர் எதற்கும் துணிந்து தான் இந்த வேலையை செய்துள்ளார்.

திமுகவில் வாரிசு அரசியல் இல்லையா, பாமகவில் இல்லையா என்று வாதத்திற்கு வரும் முன் அவைகள் எல்லாம் ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சிகள், திராவிடர் கழகம் தான் ஓட்டுப்பொறுக்காத சமூக விடுதலை இயக்கமாச்சே,வர்ணாசிரமத்தை எதிர்க்கும் பேரியக்கமாச்சே இங்கே ஏன் இப்படி?

பெரியாரின் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதை எதிர்க்கும் கொள்கைக்கு தான் திக தலைமை குழி தோண்டி புதைத்துவிட்டதென்றால் அதன் "மானமிகு" தொண்டர்களும் நிர்வாகிகளும் பெரியாரின் சுயமரியாதைக்கு பாடை கட்டியுள்ளனர்.

திரு.அன்புராஜ்க்கு பதவிபிரமாணம் செய்ய தலைமை முடிவெடுத்திருந்தாலும் திராவிடர் கழக "மானமிகு" தொண்டர்களும் நிர்வாகிகளும் என்ன செய்திருக்க வேண்டும், கழக தொண்டு, கழக பணிகள், அனுபவம், தியாகம், திறமை இவைகளையெல்லாம் தாண்டி திரு.அன்புராஜ் அதிகாரம்மிக்க பதவிக்கு அறிவிக்கப்பட்டிருப்பது இந்த திறமையான மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் இவர்களை எல்லாம் தகுதி குறைத்த செயல்தானே, இவர்களுடைய தகுதி குறைக்கப்பட்டது என்பது இவர்களின் சுயமரியாதைக்கு இழுக்குதானே, இந்த மானமிகுகளின் சுயமரியாதைக்கு இழுக்கு என்றவுடன் என்ன செய்திருக்க வேண்டும், தலைமையை எதிர்த்து குரல் எழுப்பியிருக்க வேண்டாமா?

இந்த நியமணத்தை எதிர்த்து போராடியிருக்க வேண்டாமா சுயமரியாதையை தன் மூச்சாக கருதிய பெரியாரின் இந்த தொண்டர்கள்... மத நம்பிக்கைகளையும், மூட நம்பிக்கைகளையும் அடிமைத்தனத்தையும் (அடிமைத்தனம் எந்த உருவத்தில் என்றாலும் பாசம், எஜமான விசுவாசம், மத நம்பிக்கை, காதல் என எந்த உருவத்திலும்) எதிர்த்த பெரியாரின் இந்த மானமிகு தொண்டர்கள் எந்த விசுவாசத்தின் அடிப்படையில் இதை சகித்துக்கொண்டுள்ளார்கள்?

இதையெல்லாம் பார்க்கும்போது இவர்கள் போடும் கருப்பு சட்டைக்கும் "மானமிகு" அடைமொழிக்கும் பொருள் புரிந்து தான் போடுகிறார்களா? அல்லது இவர்களும் காவி உடுத்தி பெயரின் முன் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜல்சானந்தா சுவாமிகள் என்று போடுவது போல கருப்பு சட்டையையும் "மானமிகு" அடைமொழியையும் பயன்படுத்துகிறார்களா என்று புரியவில்லை

தலைப்பு கடுமையாக இருக்கிறது என்று நினைத்தால் பார்பனீயத்தையும் வர்ணாசிரமத்தையும் எதிர்த்து திக வினர் வெளியிட்ட கட்டுரைகளின் தலைப்புகளின் கடுமையை பார்க்கும்போது இந்த தலைப்பெல்லாம் ஒன்றுமேயில்லை.

இணைப்புகள்

அப்பாடா! சுமை இறங்கியது!

இந்தச் சூழலில் அன்புராஜ் தான் உருவாக முடியும்!

சாமி,ரூசோ,தாகி மற்றும் பலர் திமுகவினரின் சகோதர படுகொலைகள்

சாமி,ரூசோ,தாகி,சீனி.பன்னீர்செல்வம் மற்றும் பல உட்கட்சி தகராறுகளில் கொல்லப்பட்ட திமுகவினர், யார் இவர்களெல்லாம்,இவர்களை கொன்றவர்கள் யார்? கொன்றது எந்த கட்சிகாரர்கள், எடுத்து பார்த்தால் திமுகவின் முக்கிய புள்ளிகளான அவர்களை வெட்டி யும், குத்தியும், சுட்டும் கொன்றதும் திமுக காரர்கள்தான்.

ஒரே நோக்கத்திற்காக போராடும் இரண்டு இயக்கங்கள் கருத்து வேறுபாட்டால் அடித்துக்கொண்டால் அது சகோதர மோதல்கள் சகோதர படுகொலைகள், அப்போது ஒரே இயக்கத்துக்குள் அவைகள் நடந்தால் அதன் பெயர் என்ன? திமுகவினரின் சகோதர படுகொலைகள் என்று சொல்வதா? திமுகவினரின் தற்கொலைகள் என்று சொல்வதா?

யாம் எந்த படுகொலைகளையும் நியாயப்படுத்தவோ, ஆதரிக்கவோ இல்லை, எல்லா படுகொலைகளும் கண்டிக்கத்தக்கவையே, எல்லா படுகொலைகளும் மனிதத்தன்மையற்றவையே...

மூச்சுக்கு முன்னூறு முறை தன்னுடைய இன துரோகத்தை மறைக்க கருணாநிதி பரப்புரை செய்யும் சகோதரபடுகொலைகள் என்றும் திசை மாற்றும் கருணாநிதி இந்த படுகொலைகளுக்கு என்ன பெயர் சொல்வார்?

திமுக ஒரு ஆயுதம் ஏந்தாத இயக்கம், அரசியல் கட்சி, இராணுவத்திடமிருந்தோ அரசிடமிருந்தோ எந்த உயிர் அச்சுறுத்தல்களும் இல்லாத இயக்கம், திமுகவினர் எந்த இராணுவத்தாலும், காவல்துறையாலும் பார்த்த இடத்திலே சுட்டுத்தள்ளப்படுவார்கள் என்ற நிலையில் இல்லாத ஒரு இயக்கம், அதன் தலைமையை பல நாடுகளின் உளவுத்துறையாலோ இராணுவத்தாலோ கொல்லப்படும் அபாயமில்லாத நிலை, தினம் தினம் சுற்றியிருப்பவர்களால் உயிராபத்து ஏற்படுமோ என்ற நிலை இல்லாத போதும் ஏன் இத்தனை படுகொலைகள் அதுவும் சொந்த கட்சிகாரர்களையே கொல்லும் படுகொலைகள், இதில் நாம் திமுகவினர் கொன்ற அதிமுக, மதிமுக மற்றும் பல மாற்று கட்சிகாரர்களை நாம் கணக்கில் எடுக்கவேயில்லை...

திருப்பத்தூர் அரசியலில் வளர்ந்து வந்த இளம்தலைமுறை ரூசோவை உட்கட்சி அரசியலுக்காக கொன்றவர்களை கட்சி தலைவர் கருணாநிதி என்ன செய்தார்?

தாகி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள், அப்போ தாகியை கொன்றது யார்? தாகி ஒரு வேளை தற்கொலை செய்து கொண்டாரா?

வைகோ, எம்ஜிஆர் மற்றும் பலர் தலைமையுடன் முரண்பட்ட போது கழுத்தை பிடித்து இயக்கத்தை விட்டு வெளியேற்றினாரே கருணாநிதி, ஒரு வேளை திமுக ஆயுதம் தாங்கி போராடும் இயக்கமாக இருந்திருந்தால்? இவர்கள் கதி? இவர்கள் வாய்வீச்சு அரசியல் செய்து கொண்டிருந்ததற்கு பதில் ஆயுத போராட்டம் செய்து கொண்டிருந்தவர்கள் என்றிருந்தால் என்ன ஆகி இருக்கும், இவர்கள் கையில் ஆயுதம் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்யலாம்...

ஆட்சியும் அதிகாரமும் ஊடகமும் கையில் இருக்கிறது என்பதற்காக தம் இனத்துரோகத்தை மறைக்க தம் பொய் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டுக் கொண்டும் தம் துரோகத்தை மறைக்க தமிழ்செம்மொழி மாநாடு நடத்தவும் தலைப்பட்டிருக்கும் இவர்களை இன்னமுமா இனமான தமிழர்களும் மூளையுள்ள தொண்டர்களும் நம்புகிறார்கள்?

இந்த பதிவின் பின்னூட்டங்கள் கடும் மட்டுறுத்தலுக்குள்ளாகும், பதிவிற்கு தொடர்பில்லாத எந்த பின்னூட்டங்களும் அனுமதிக்கப்படாது

ஜெகத்கஸ்பர் அருட்தந்தையா? புளுகுமூட்டையா?

ஃபாதர் ஜெகத்கஸ்பர் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் பெயர், நான்காம் ஈழத்தில் நான்காம் கட்டப்போர் உச்சத்தை எட்டியிருந்த போது தமிழகத்தில் தேர்தல் உச்சத்தில் இருந்தது, அந்த நேரத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது மிக கடுமையாக விமர்சனம் எழுந்தது, திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தமிழின துரோகம் அக்கூட்டணிக்கு தேர்தல் தோல்வி ஏற்படுத்துமென்றே நம்பப்பட்டது.

அந்த நேரத்தில் ஃபாதர் ஜெகத்கஸ்பர்(கனிமொழி கருணாநிதி யின் நண்பர் மற்றும் திமுக ஆதரவாளர், ஜெயலலிதாவினால் புலி ஆதரவாளர் என விமர்சிக்கப்பட்டவர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டுவிடுவார் என்றே நம்பப்பட்ட ஒருவர்) ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளை எழுத ஆரம்பித்தார்...

அவரோட பதிவுகள் எல்லாம் இயக்குனர் சங்கர் படங்களை போன்றே இருந்தன, பல உண்மைகளுக்கு இடையில் தம் பொய் பரப்புரைகளை புகுத்துவது, முதலில் இலை மறைவாக தமிழகத்தின் ஈழத்தமிழ் ஆதரவு தலைவர்களை(இவர்களை எல்லாம் யோக்கியம் என்று சொல்லவில்லை) விமர்சித்தார் அவரோட விமர்சனம் எல்லாமே கருணாநிதியையும் காங்கிரசையும் காப்பது போன்றே இருந்தது.

நக்கீரனில் ஒரு பதிவில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு இவர் போர் நிறுத்தத்திற்கு மிகவும் முயன்றதாகவும் கனிமொழி கண் உறங்காமல் பாடுபட்டதாகவும் எழுதினார், பாவம் நக்கீரன் லேஅவுட் மற்றும் ஃப்ரூப் ரீடர்கள் கண்ணில் அது படவில்லையோ என்னமோ, நக்கீரனின் வேறு கட்டுரைகளின் பக்கங்களில் வேட்டி கட்டிய உயர்ந்த பதவியில் இருக்கும் முக்கிய தமிழர் இன்னுமா முடிக்கலை, இன்னும் என்னவெல்லாம்தான் உதவி செய்வது என்று சிங்களனை திட்டிக்கொண்டே அந்த உயர்மட்ட கூட்டத்திற்கு கலந்து கொள்ள சென்றார் என்று எழுதியிருந்தார்கள், இதில் எது உண்மை?

போர் நிறுத்தத்திற்கு தமிழக காங்கிரஸ் பெரியமனிதர்(ப.சிதம்பரம்?) மற்றும் திமுக பெரிய இடத்து ஆட்கள் எல்லாம் உறங்காமல் முயன்று கொண்டிருந்த போது தமிழகத்தின் முக்கிய ஈழ ஆதரவு தலைவர்கள் இன்னமும் நிலமை மோசமாகட்டும் அப்போது தான் நாம் இங்கே தேர்தலில் வெற்றி பெறலாமென ஜெகத் கஸ்பர் காது பட பேசினார்களாம், கனிமொழியின் நண்பர், திமுகவின் ஜால்ரா ஜெகத் கஸ்பர் காதில் விழுமாறு பேசும் அளவிற்கு அந்த தலைவர்கள் கேணையர்களா? அவ்வளவு தூரம் சொல்பவர் ஏன் கிசு கிசு பாணியில் எழுத வேண்டும் பெயரை சொல்ல வேண்டியது தானே?

போர் முடிந்தும் இப்போதும் திமுகவிற்கும் காங்கிரசுக்கும் விழுந்த துரோக கறையை துடைக்க முடிந்த அளவிற்கு தம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டே இருக்கின்றார் அருட்தந்தை.

தற்போது ஒரு போராளி போன் செய்து சொன்னார் என்றும் பொய்யான நம்பிக்கையை தந்தார்கள் தமிழக தலைவர்கள் அதனால் தான் எல்லாம் போயிருச்சி என்றும் மீண்டும் ஒரு முறை இவர்கள் மீது விழுந்து பிடுங்கியுள்ளார் அருட்தந்தை? போயும் போயும் இந்த தலைவர்கள் தந்த கணிப்புகளை நம்பி செயல்படும் அளவிற்கு கேணத்தனமாகவா இருந்தார்கள் போராளிகள்? அருட்தந்தையின் புளுகுமூட்டைகளுக்கு அளவேயில்லையா?

ஈழத்தமிழர் விசயத்தில் இப்படித்தான் தமிழகத்தின் ஒவ்வொரு இயக்க ஆட்களும் தங்கள் தலைமைகளுக்கு சப்பைகட்டு கட்டிக்கொண்டுள்ளார்கள் தங்கள் தலைமைகளின் துரோகம் தெரிந்தும்.

ஈழத்தமிழர்கள் விசயத்தில் தமிழகத்தின் அத்தனை பேரும் துரோகம் செய்துள்ளார்கள், கட்சி தலைமைகளுக்கு அடிமைகளாய் அவர்களின் துரோகங்கள் தெரிந்திருந்தும் அதை சப்பைகட்டு கட்டும் காவல்நாய்களாய் இருக்கும் தொண்டர்கள், பணத்திற்காக தங்கள் வாக்குகளை விற்ற பொதுமக்கள் என அத்தனைபேருக்கும் பொறுப்பு உண்டு.

அருட்தந்தை ஜெகத்கஸ்பர் கனிமொழிக்கு கூஜா தூக்கட்டும், திமுகவுக்கு ஜால்ரா போடட்டும் ஏன் உடன்பிறப்பாக மாறி தலைவர் வாழ்க, தளபதி வாழ்க கோசமும் கூட போடட்டும் ஆனால் ஈழத்தமிழ் போராட்டத்தில் தம் ஈனத்தனத்தை காட்ட வேண்டாம்.

நக்கீரன் பத்திரிக்கைக்கு ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், நக்கீரனுக்கு முன்பு தராசு என்றொரு பத்திரிக்கை இருந்தது, ஷ்யாம் அதன் ஆசிரியர், தராசு பெரிய அளவில் விற்பனையில் இருந்தது, மிகப்பிரபலமான அரசியல் பத்திரிக்கை, அந்த பத்திரிக்கைக்கும் திமுக(மற்றும் அப்போதைய உள்துறை செயலாளர் நாகராஜன்)வுக்கும் பிரச்சினை எழுந்தது, பாக்சர் வடிவேலு தலைமையில் ரவுடி கும்பல் அந்த பத்திரிக்கையின் உள் புகுந்து அடித்து இருவரை கொலை செய்தனர்.

இதை சமாளிக்க ஜெயலலிதா ஆதரவுக்கு மாற துவங்கியது இந்த தராசு பத்திரிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக அதன் நடுநிலை குறைய ஆரம்பித்த போது நக்கீரன் களம் இறங்கி மொத்த தராசு வின் வியாபரத்தையும் எடுத்துக்கொண்டு மிகப்பிரபலமானது.

நக்கீரன் பத்திரிக்கைக்கும் ஜெயலலிதாவிற்கும் மிகப்பெரிய பிரச்சினைகள் நடந்துள்ளது, இன்னமும் இருக்கலாம், அதற்காக திமுக மற்றும் கருணாநிதியின் முழு ஜால்ராவாக மாற ஆரம்பிப்பது நக்கீரன் பத்திரிக்கையின் வியாபாரத்திற்கும் அதன் நடுநிலைக்கும் சரியானதாக இருக்காது. திமுக சார்புநிலை என்பதை தாண்டி திமுக ஜால்ரா என்ற நிலைக்கு நக்கீரன் சென்று கொண்டுள்ளது.

தற்போது அரசியல் பத்திரிக்கைகளே இல்லையென நினைக்க வேண்டாம் "தமிழக அரசியல்" என்றொரு பத்திரிக்கை தற்போது சர்க்குலேசனில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது, மேலும் உங்கள் மார்க்கெட் பலவீனப்படும் போது மற்றவர்கள் அந்த இடத்தை பிடிக்க கடும் முயற்சி செய்வார்கள்

ஜ்யோராம் = ரோசா = வன்முறையாளன் = ? = ? = ?

ரோசாவைப் பார் என்பார்
அவர் அடித்தார் என்பார்
அவர் குத்தினார் என்பார்
தெரியுதுபார் அவர் குத்தியது
மூக்கில் ஒழுகும் ரத்தத்திலென்பார்
அடித்தவர் நின்று அடித்தது
தானே என்றதால் ஆச்சி
இல்லையெனில்
அய்யகோ எப்படி நிரூபிப்பது?


மருமகன் டிவி வைத்திருந்தால்
அய்யோ கொல்றாங்க கொல்றாங்க
என்று படம் புடிச்சாவது நிரூபிக்கலாம்
போலி பிரச்சினையென்றால் கூட
அட்லீஸ்ட் ஸ்க்ரீன் ஷாட் சாட்சியாகும்
மூஞ்சியில் குத்தியவர் ஓடிப்போயிருந்தால்
மூஞ்சியில் குத்து வாங்கியதற்கு
உடைந்த மூக்கும்
மூக்கினில் ஒழுகும் ரத்தமுமே சாட்சியாம்

எத்தேச்சையானதா என்றால்
இது திட்டமிட்டதே என்பார்
அன்பாக பேசி அழைத்தார்
உணவில் விஷம் வைத்து கொல்லவே என்பார்
குடியில் அடித்துக்கொண்டதா என்றால்
நான் தான் நிறைய அவர் குடித்தது குறைவே என்பார்


ரோசாவின் பக்கமும் நியாயமிருக்குமே
குத்த தூண்டியதின் நியாமென்னவோ
என்றால்
அடுத்தவர் செயல்களை ஆராய
தன்னை மேல் நிலையில் நிறுத்தி
குத்தியதற்கு காரணம் வேண்டுமானால் இருக்கலாம்
ஆனால் நியாயங்கள் இருக்க முடியாது என
அவர்கள் என்னமோ கொலைக்கு
உடந்தை போல் என்று சிலர் அடையாளம்
சுட்டப் படுவர்

பின் நவீனச் சிந்தனையாளர்களாய் அறியப்படும்
சிலர் அடுத்தவன் பேங்க் கணக்கையும் பெட்ரூம் கணக்கையும்
சொல்வது வன்முறையில்லையா?

எழுத்தில் பெண்ணியம் பேசும் பலர்
தம் மனைவிகளையைக் கொலை செய்கின்றார்
மெதுவாக
எழுத்தில் அறம் குறித்துப் பேசுபவர் செயல்பாடுகளில்
அறமற்ற தன்மையே துறுத்தி நிற்கிறது பெரும்பாலும்

இதைப்பற்றி பேசினாலோ
எழுதினாலோ
சண்டைக்கு நிற்கிறான் பாரு
வேலையத்தவனுங்க என்கிறார்கள்

எல்லார்க்குள்ளும் கொஞ்சம் கொஞ்சம்
வன்முறையாளன் இருக்கிறான்

டைப்பர் போடாத என் பையன்
என் முதுகில் சூடாக மூச்சா போனதால்
போய் கழுவலாமா என நினைப்பதால்
பாதியில் நிற்கப் போகிறது
இந்த (இந்த வன்முறை) கவிதை

நண்பா ஜ்யோராம்,
காயங்கள் ஆறியிருக்குமென நம்புகிறேன், நலமடைந்திருப்பாய் சம்பவத்திற்கு பின் இரண்டு பதிவுகள் பார்த்தேன் உம் வலைப்பதிவில், இது ஒரு மொழிவிளையாட்டு, இது ஒரு கவிதை, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வன்முறையாளன் இருக்கிறான் அவன் வாய்ப்பை பொறுத்து கொஞ்சமாகவோ அதிகமாகவோ வன்முறை செய்கிறான், அதை மொழிவிளையாட்டாக இதில் கூறியுள்ளேன், மற்றபடி யாரையும் நக்கல் செய்தோ கிண்டல் அடித்தோ அல்லது எந்த வன்முறையையும் ஆதரித்தோ இல்லை.... என் வாக்குமூலத்தை நம்பி இதை வெறும் கவிதையாகவோ அல்லது வெறும் மொழிவிளையாட்டாக மட்டும் எடுத்துக்கொண்டு இதை ரசிக்க உங்களால் முடிந்தால் சூப்பர் ஜ்யோராம்.... மிக்க நன்றி, உங்களை கை எடுத்து கும்பிடுகிறேன்.... இதற்கு மேல் இந்த பதிவை நீங்கள் படிக்க தேவையில்லை....

ஆனால் இதை படிக்கும்போதோ அல்லது அதற்கு நான் மொழிவிளையாட்டு எல்லோருக்குள்ளும் வன்முறையாளன் இருக்கிறான் என ஒரு வியாக்கியானம் செய்யும் போதோ என் மூஞ்சி மேல ஒரு அறைவிடனுமென்று தோன்றியிருந்தாலோ, சில பல கெட்ட வார்த்தைகளை உதிர்த்திருந்தாலோ, மயிரான் என் வலி தெரியுமாடா உனக்கு என்று நினைத்திருந்தாலோ, ஏன்டா பாடு என் மூஞ்சியில் குத்தியதில் உனக்கு மொழிவிளைட்டாடா என்றோ, உன் மூஞ்சியில் எவனாவது குத்தியிருந்தா தெரியும்டா நாயே உனக்கு அதனோட வலி என்றோ அல்லது ஒரு எரிச்சலாவது ஏற்பட்டிருந்தால்... மன்னிக்கவும் நண்பா உன்னை எரிச்சல் படுத்துவதற்கோ அல்லது வேறு எதற்குமோ நான் இதை எழுதவில்லை...

மற்றவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி நடைபெறும்போது நமக்கு அவர்கள் வலி புரிவதில்லை, அட புரியவில்லை என்றால் மூடிக்கொண்டாவது இருக்கலாம், ஆனால் நாமோ மூடிக்கொண்டும் இருப்பதில்லை, நாம் நம் முற்போக்குத்தனத்தையும் மேன்மையையோ, நம் நவீனத்துவத்தையோ அல்லது ஹா இதெல்லாம் ஒரு மேட்டரா என்றோ பல தத்துவ இசங்களை பேசிக்கொண்டே போகிறோம் அவர்களின் உணர்வுகளை மதிக்காமல், ஆனால் ஒரு நிகழ்ச்சி நமக்கே நடக்கும்போது நாம் பிறருக்கு சொல்லும் முற்போக்கு தன்மையையும், நவீனத்துவத்தையும் மற்ற பல எழவுகளையும் கடைபிடிப்பதில்லை....

போலி = மூர்த்தி = ? = ? = ? பதிவை உம் மொழிவிளையாட்டை படித்து பார்க்கவும், ஞாபகம் இருக்கா நண்பா அன்றே நாம் தொலைபேசியில் பேசிக்கொண்டோம் இது யாரையும் ஆதரித்து அல்ல, ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு போலியிருக்கிறான் என்று சொன்னீர்கள், அதே போன்றே இன்று இதற்கு நானும் ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு வன்முறையாளன் இருக்கிறான் என்ற விளக்கம் சொல்லும்போது நீங்கள் என்ன நினைத்துக்கொண்டீர்கள் என்று என்னிடம் சொல்லவெல்லாம் வேண்டாம்... அன்றைக்கு போலி பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுகளை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் அதை ஒரு கவிதையாக அணுக சொல்லியிருப்பீர்கள், நீங்கள் அடிபட்டதை எழுதிய பதிவில் ஒரு அனானி நகைச்சுவையாக எழுதியிருந்ததை உங்களால் நகைச்சுவையாக எடுக்க முடியவில்லையே... இன்று உங்களால் இதை ஒரு கவிதையாக மட்டுமே அணுக முடிந்ததா என்று உங்கள் மனசாட்சியிடம் மட்டும் கேட்டுக்கொள்ளவும், முன்பும் இதே போன்றே ஒரு பதிவு சுகுணாவுக்கு எழுதியது அந்த பதிவில் சில வரிகள் மீண்டும் இங்கே

அறிவுரை முற்போக்கு புரட்சி புண்ணாக்கு எல்லாம் மற்றவர்களுக்கு பேசும்போது நல்லா தான் இருக்கும், தமக்கும் அதே சூழல் வரும் போது எப்படியாக இருக்கும் என்பதற்கான ஒரு நிகழ்வு தான்...காத்திருந்து மாட்டுனியாடா மகனே என்று நேரம் கிடைக்கும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போது குத்தி காட்டுகிறாயா என்று கேட்பீர்களானால் ஆமாம் காத்திருந்து சரியான வாய்ப்பு கிடைக்கும் போது சொன்னால் தான் உணர்வு பூர்வமாக புரியும் இல்லையென்றால் அப்போதும் முற்போக்கு மூளைக்கு சரியாக புரியாது...

இந்த பதிவு விடயத்தை சுகுணா திவாகருக்கு ஜ்யோராமுக்கு மட்டும் தெரிவிக்க வேண்டுமெனில் சுகுணாவுக்கு ஜ்யோராமுக்கு ஒரு மின் மடலோ அவரின் கைபேசியில் அழைத்தோ சொல்லியிருப்பேன், ஆனா இது சுகுணாவுக்கு ஜ்யோராமுக்கு மட்டுமல்ல, இதே போன்று எண்ணமிருக்கும் சில முற்போக்குவாதிகளுக்கும் இந்த செய்தி போக வேண்டுமென்பதால் இது பதிவாகவே ஆனது.

நண்பா ஜ்யோராம் மேலேயிருக்கும் கவிதை(?) மொழிவிளையாட்டு என் நிலைப்பாட்டினை சொல்வதற்கில்லை, உம்மை வெறுப்பேற்ற வேண்டுமென்ற ஒற்றை காரணத்திற்காக தேடி தேடி எழுதியது, நடந்த துன்ப நிகழ்வின் தொடர்பான என் நிலைப்பாட்டிற்கும் அதில் உள்ள வரிகளுக்கும் துளிகூட தொடர்பில்லை.... நான் அந்த துன்ப நிகழ்வில் ரோசாவை நிச்சயமாக அவருக்கு எத்தனை காரணங்கள் இருந்தாலும் எத்தனை நியாயங்கள் இருந்தாலும் அடித்தது மிகத்தவறு அதை நான் ஆதரிக்கவில்லை...

முன்பே இது தயாராகிவிட்டாலும் கொஞ்சம் நாளாவது ஆகட்டுமென காத்திருந்து இப்போது தான் பதிவிடுகிறேன்...

அழகிய தமிழ் பெயர் பெண் குழந்தைக்கு சூட்ட பரிந்துரையுங்கள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தூய தமிழ் பெயரை குழந்தைகளுக்கு வைப்பது என் வட்டாரங்களில் எனக்கு அறிமுகமான இடங்களில் மிக குறைவாக (கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம்) முதலில் என் கல்லூரி நண்பர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு தூய தமிழ்பெயர்கள் வைக்க ஆரம்பித்தனர், அதன் பின் நானும் என்னை தொடர்ந்து என் சகோதரியும் என இப்படியாக தூய தமிழ்பெயர் வைப்பது என் வட்டத்தில் தற்போது அதிகரித்துள்ளது, தொடர்ச்சியாக பலரிடமும் தூய தமிழ்பெயர் வைப்பதின் அவசியத்தை எடுத்து கூறிக்கொண்டுள்ளோம்...

ஆனால் சிறந்த தூய புதுமையான தமிழ்பெயர்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது, தமிழ்பெயர் புத்தகங்கள் எல்லாம் பெரும்பாலும் வடமொழி பெயர்களையே கொண்டுள்ளன...

என் மகனிற்கு தூய தமிழ்பெயர் சூட்ட பெயர்களை தேடினோம், இலக்கிய பாடல்களிலிருந்தெல்லாம் தேடினோம், என் நண்பனின் மகனுக்கும் இப்படியே தேடி பதிவில் இட்டோம், பல நல்ல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

என் நண்பரின் பெண் குழந்தைக்கு சூட்ட ஒரு தூய தமிழ்பெயர் தேவைப்படுகிறது, தூய தமிழ்பெயர்களை தெரிவித்து உதவுங்கள்...

Mustafa Warehouse sale Singapore

சிங்கப்பூர் முஸ்தபா நிறுவனத்தின் Warehouse sale அக்டோபர் 8 முதல் 11
வரை

பயணப்பெட்டிகள், மற்றும் LCD TV போன்றவைகள் விலை சற்று குறைவாக உள்ளன, அல்ஜூனைட் MRT யில் இருந்து பேருந்து எண் 100 எடுக்கவும்...

மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்