மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 2

இந்த தலைப்பின் முந்தைய பதிவிற்கான சுட்டி இங்கே மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 1
இந்த பதிவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி பார்ப்போம்.

பாமக 1989 ம் ஆண்டு மருத்துவர் இராமதாசு அவர்களால் நிறுவப்பட்டது.

அவருக்கு தோளோடு தோள்நின்று இந்த கட்சியை உருவாக்கியவர்கள் பலர்,
இதில் தலித் சமுதாயத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன், தலித் எழில்மலை ஆகியோர் முக்கியமானவர்கள். பாமகவின் கொள்கைகள் சட்டதிட்டங்கள் எல்லாம் முன்னாள் நீதிபதி,முன்னாள் இ.ஆ.ப (IAS) அதிகாரிகள் மற்றும் பல கற்றறிந்த பெரியவர்களாள் உருவாக்கப்பட்டது.

பாமகவின் கொள்கைகள் என்ன?

கம்யூனிசத்தின் சிறந்த அம்சங்கள், சோஷலிசத்தின் முக்கிய அம்சங்கள், பெரியாரின் திராவிட கொள்கைகளில் சில, டாக்டர் அம்பேத்கார் அவர்களின் கொள்கைகள் என அனைத்து முக்கிய இசங்களிலிருந்தும் சிறந்தவைகள் கலந்த கலவைதான் பாமகவின் கொள்கை.

பாமக ஒரு வன்னியர் கட்சியா?

நிச்சயமாக இல்லை, பாமகவின் சட்டதிட்டங்களிலும் சரி கொள்கைகளிலும் சரி ஒரே ஒரு இடத்தில் கூட வன்னிய சமுதாயத்தின் பெயரோ வன்னியர்களுக்காக என்றோ குறிப்பிடப்படவில்லை, அதன் தொடக்க காலத்தில் பல மேல்மட்ட தலைவர்கள் தலித்,நாடார்,முசுலீம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், இன்றும் கூட பல வன்னியரல்லாதோர் பாமகவில் கட்சி பொறுப்பிலும், சட்டமன்ற,பாராளமன்ற உறுப்பினராகவும்,ஏன் மத்திய அமைச்சராகவும் கூட இருக்கின்றனரே, பிறகெப்படி இது வன்னியர் கட்சி என முத்திரை குத்தப்பட்டது, அங்கேதான் நமது தமிழ் பத்திரிக்கை ஊடகம் விளையாடிவிட்டது, இது பற்றி விரிவாக இன்னொரு பத்தியில் பார்ப்போம்.

பாமக கொடியிலே உள்ள நீல நிறம் தலித் சமுதாயத்தையும், மஞ்சள் நிறம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையும், சிவப்பு கம்யூனிசத்தையும் குறிப்பவை.

பாமக உருவானதால் பாதிக்கப்பட்ட கட்சிகள் திமுகவும், காங்கிரசும் தான். வன்னியர்களின் வாக்கு வங்கி திமுகவிடமும்,காங்கிரசிடமும் இருந்தது, ஆனால் பாமக கிட்டத்தட்ட மொத்தமாக அந்த வாக்குவங்கியை தன் பக்கம் திருப்பிக்கொண்டது திமுகவிற்கு அந்த கோபம் இன்னும் இருக்கின்றது, அதுவும் இல்லாமல் இட ஒதுக்கீட்டில் உயிரை கொடுத்து போராடியது வன்னிய இனம் ஆனால் இன்னும் 108 சாதியையும் பட்டியலில் இனைத்தது திமுக அரசாங்கம் அந்த கோபமும் கருணாநிதி அவர்கள் ராசதந்திரமாக நினைத்துக்கொண்டு 1996 தேர்தலிலே செய்த கூட்டணி துரோகமும் இன்றைக்கும் கூட திமுக பாமக விடையே chemistry work out ஆகாமல் இருக்கிறது. திமுக வை எதிர்க்கும் போது பாமகவினர் காட்டும் ஆவேசம், அதிமுக வை எதிர்க்கும் போது காட்டுவதைவிட பல மடங்கு அதிகம்.

பாமகவின் முதல் தேர்தல் களம்
1989 ம் ஆண்டு கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது. தனித்தும் போட்டியிட்டது, தருமபுரி,திண்டிவனம்,சிதம்பரம் தொகுதிகளிலே இரண்டாம் இடம், அதுவும் தருமபுரியிலே 10,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி, கடலூரிலே 95,000 வாக்குகள், இன்னும் பல தொகுதிகளிலே ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று முதல் தேர்தலிலேயே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் மாநில கட்சி என தேர்தல ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

பிற தேர்தல்கள்

1991 சட்டமன்ற தேர்தல்

வெற்றி -1,
இரண்டாமிடம் 12,
இருபதாயிரம் வாக்குகளுக்கு மேல் - 21
பத்தாயிரம் வாக்குகளுக்கு மேல் - 60
கூட்டணி - இல்லை
அலை - ராஜீவ் காந்தி படுகொலை

1996 சட்டமன்ற தேர்தல்

வெற்றி -4,
இரண்டாமிடம் 7,
இருபதாயிரம் வாக்குகளுக்கு மேல் - 16
பத்தாயிரம் வாக்குகளுக்கு மேல் - 35
கூட்டணி - இல்லை
அலை - ஜெயலலிதா எதிர்ப்பு

1998 பாராளுமன்ற தேர்தல்

வெற்றி -4,
போட்டியிட்டது - 5
இரண்டாமிடம் 1,

கூட்டணி - அதிமுக,பாஜக,மதிமுக

அலை - இல்லை

1999 பாராளுமன்ற தேர்தல்

வெற்றி -5,
போட்டியிட்டது - 8,
இரண்டாமிடம் - 3,
கூட்டணி - திமுக,பாஜக,மதிமுக
அலை - இல்லை

2001 சட்டமன்ற தேர்தல்

வெற்றி -22,
போட்டியிட்டது - 27,
இரண்டாமிடம் - 5,
கூட்டணி - அதிமுக,காங்கிரஸ்
அலை - இல்லை

2004 பாராளுமன்ற தேர்தல்

வெற்றி -6,
போட்டியிட்டது - 6,
இரண்டாமிடம் - 0,
கூட்டணி - திமுக,காங்கிரஸ்,மதிமுக
அலை - இல்லை

தேர்தல் பாதையை பார்க்கும் போது எந்த கூட்டணியில் பாமக இருக்கின்றதோ அந்த கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது.

இனி நேரடியாக விடயத்துக்கு வருவோம்

மருத்துவர் இராமதாசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி அலசுவோம்

தலித் விரோதம்
தலித் இனத்தின் மீது எப்போதும் மருத்துவர் விரோதம் காட்டியதில்லை, சில வன்னிய இனத்தை சேர்ந்தவர்கள் காட்டியிருக்கின்றனரே தவிர மருத்துவர் காட்டியதில்லை. பாமகவின் பொதுச்செயலாலர் பதவி தலித் இனத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என பாமகவிலே சட்டமே உண்டு

பாமக ஆட்சி கட்டில் ஏறினால் ஒரு தலித்தை முதல்வராக்குவதாக சபதம் செய்துள்ளது

முதன் முதலில் மத்திய அமைச்சர் அதுவும் ஒரே ஒரு பதவி பாமகவிற்கு கிடைத்த போது அது கொடுக்கப்பட்டது வன்னியருக்கல்ல தலித்.இரா.எழில்மலைக்கு, அதன் பின் டாக்டர்.பொன்னுசாமி அமைச்சராக இருந்தார்.

தமிழ்குடிதாங்கி என்ற பெயர் புரட்சிகலைஞர்,சூப்பர்ஸ்டார்,இளையதளபதி போல் தனக்கு தானே வைத்துக்கொண்ட பெயரல்ல,குடிதாங்கி என்ற ஊரிலே தன் சொந்த சாதி மக்களை எதிர்த்து தலித் இனத்திற்காக போராடியதால் திருமாவளவன் என்ற தலித்தலைவரால் சூட்டப்பட்டப்பெயர்தான்.

1987லே வன்னியர்களின் போராட்டத்தை தடுக்க சாதித்தீ கொளுத்திவிடப்பட்டு எச்சங்களும் மிச்சங்களுமாக அமைதியை குலைத்த நாட்களிலே தலித் சமுதாயத்திலும் வன்னிய சமுதாயத்திலும் மாறி மாறி படுகொலைகள் நடந்தேறின. அப்படி ஒரு சில தலித்களால் படுகொலைசெய்யப்பட்டவரின் இறுதிச்சடங்களிலே நான் கலந்து கொண்டபோது மருத்துவர் இராமதாசு துக்கம் விசாரிக்க வருவதாக தகவல் வந்தது, அப்போது அங்கு கூடியிருந்த பலர் ஆமா இவரு வந்து என்ன சொல்லுவாரு பொறுமையாயிருங்க பேசித்தீர்க்கலாம்னு தான் சொல்வாரு, வேற என்ன சொல்வாரு என்பதிலிருந்தே தலித் சமுதாயத்தோடு மோதல் போக்கை அவர் விரும்பவில்லை.

வடதமிழ்நாட்டில் தலித் மற்றும் வன்னியர் சமுதாயங்கள் அரசியலில் ஒன்று சேர்ந்தால் வேறு எந்த கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலாத நிலை, இரண்டு அடித்தட்டு சமுதாயங்களின் ஒற்றுமை மற்று அரசியல் எழுச்சிக்காக கணக்கிட்டு அரசியல் நடத்தி வருகின்றார்

தலித் இனத்தவருக்கு வட தமிழ்நாட்டிலே சரியான தலைவர் இல்லாதபோது மதுரையிலிருந்த திருமாவளவனை வட மாவட்ட மக்களுக்கு அறிமுகப்படுத்தியதே மருத்துவர்தான்.

கொள்கையற்ற கூட்டணித்தாவல்

முதலிலேயே ஒரு கேள்வி திமுக , அதிமுக வோடு மாறி மாறி கூட்டணி வைத்துகொள்கிறார் என்று குற்றம் சாட்டுபவர் எவரும் ஏன் திமுகவும் அதிமுகவும் கூட்டணியில் சேர்த்துக்கொள்கின்றன, ஏன் திமுக,அதிமுகவை கொள்கையற்ற கூட்டணி என தாக்குவதில்லை, அதுவும் மருத்துவர் இராமதாசை தாக்கும் அளவுக்கு தாக்குவதில்லை

ஏன் கொள்கை கொள்கையென பேசியபோது கொள்கை பிடிப்போடு இருந்தபோது இந்த பத்திரிக்கைகளும் இன்று அவர்மீது மட்டையடிப்பவர்களும் பாராட்டினர்களா? இல்லையே எழுத்தாளர்களிலே ஞானியையும் பத்திரிக்கைகளிலே நக்கீரனைத்தவிர மற்ற அனைவரும் இடித்துரைப்பதேயேதான் தொழிலாக வைத்துள்ளனர்.

1996 தேர்தலுக்குமுன் செல்வி.ஜெயலலிதா ஆட்சியின்போது 7 கட்சி கூட்டனியை உருவாக்கி அதன் சார்பாக திண்டிவனத்திலே மாநாடும் போட்டு அப்போது அடுத்த முதல்வர் கருணாநிதி தான் என உரக்க கூறியவர் மருத்துவர், ஆனால் அந்த சமயத்திலே கூட்டணியிலிருந்து துரத்தப்பட்டார்.

அப்போதும் தனியாக நின்று 4 தொகுதிகளிலே வென்றனர், ஜெயலலிதா எதிர்ப்பு ஓட்டுகள் சிதறக்கூடாது என உதயசூரியனுக்கு ஓட்டே போடாதா வன்னிய இனப்பெண்கள் முதல் முறையாக உதயசூரியனுக்கு வாக்களித்தனர். இது பாமக வை கடும் பாதிப்புக்குள்ளாக்கியது மாநிலகட்சி என்கின்ற தகுதி இழப்பும் யானைசின்ன இழப்பும் நடந்தது.

1998 நாடாளுமன்ற தேர்தல், திமுக,அதிமுக இரண்டோடும் கூட்டணிக்கு தயாராக உள்ளோம், ஆனாலும் திமுகவோடு கூட்டணி காண விரும்புகிறோம். மாநில கட்சி தகுதி பெற குறைந்தது 2 பாராளுமன்ற தொகுதியிலே வெற்றி பெற வேண்டும், ஆணால் திமுகவோ ஒரே ஒரு தொகுதி மட்டுமே தரமுடியும் என கேவலப்ப்டுத்தியது. இங்கே தான் கருணாநிதியன் ராசதந்திரம் எம்.ஜி.ஆர் க்கு அடுத்தப்டியாக இராமதாசுவிடமும் அடிவாங்கியது.

இதே போல் மீண்டும் 2001 சட்டசபைதேர்தலிலே பாமக வை கழற்றிவிட்டு திமுக தோற்றது, அந்த பாடங்கள் தான் இப்போது கூட்டணியை சிதறவிடாமல் காப்பாற்றிக்கொண்டுள்ளார்.

கூட்டணி மாற்றத்திற்காக கொள்கை அளவில் எதையும் பாமக விட்டுத்தரவில்லை, பிற்படுத்தப்பட்ட சமுதாய முன்னேற்றத்தை விட்டுத்தந்தனரா? தமிழ் மொழி,சமுதாய வளர்ச்சியை விட்டுதந்தனரா?

பாமகவை தாக்குபவர்கள் திமுக,அதிமுக,பாஜக,காங். எல்லாம் எக்காலத்திலும் ஒரே கூட்டணியில் இருப்பதாக எண்ணுகின்றனரோ?

அடுத்தபதிவில் வாரிசு அரசியல், திரைப்படங்கள் மீதான தாக்குதல், ரஜினி விஜயகாந்த் விவகாரம் மற்றும் பதிவின் தலைப்பை பற்றிய கருத்தை பார்ப்போம்

அடுத்த பகுதிக்கான சுட்டி இங்கே

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 3

12 பின்னூட்டங்கள்:

said...

அப்படியே அந்த மரம் வெட்டி கும்பல் வீரப்பனுக்கு போட்டியாக மரம் வெட்டியதையும் எழுதுங்கள்.

said...

குழலி,
உங்களின் புள்ளிவிபரங்களும், கண்ணோட்டமும் சிந்திக்க வைக்கின்றன. தொடருங்கள்.

அனானிமஸ்,
இதற்கு முந்தைய பதிவைப் பாருங்கள்.

said...

//தேர்தல் பாதையை பார்க்கும் போது எந்த கூட்டணியில் பாமக இருக்கின்றதோ அந்த கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது.//

உண்மை(?), எந்தக் கூட்டணி வலுவாகத் தெரிகிறதோ அந்தப் பக்கம் பா.ம.க போய்விடும் - எந்த ஒரு காரணத்தைச் சொல்லியாவது.

JJவுட்ன் சேர்வது என்பது ___________________ க்கு சமம் என்று சொன்னதும் பின்பு தன் முகத்தில் வழிவதைப் பொருட்படுத்தாமல் Jவுக்கு J போட்டதும் வாக்காளர்களுக்கு மறக்காது சார். - நீங்கள் ஞாபகமாக மறந்திருந்தாலும்!.

said...

உங்கள் நேற்றைய பதிவையும், இது தொடர்பான சுந்தர மூர்த்தியின் பதிவையும் படித்தேன். இத்தகைய பதிவுகள் மொன்னைத் தனமாகப் பாட்டாளி வர்க்கத்தின் மீது ஏவப்படும் ஊடகக் கேலியாட்டத்தினைப் புரிந்து கொள்ள உதவும். நல்ல பதிவு, நன்றி.
உயர்சாதியினரின்/ஆதிக்க வர்க்கத்தின் கைத்தடிப் பத்திரிக்கைகள்/ஊடகங்கள் இப்படித்தான் அடிமட்டத்தவரை விடாமல் துரத்தித் துரத்தியடிக்கும். நேரம் வாய்க்கும் போதெல்லாம் மக்கள் மத்தியில் அவர்களைப் பற்றிய அவதூறுகளைக் கிளப்பும். படிக்கும் நடுத்தட்டு வாசகர்களை அதிகார வர்க்கத்தினரோடு தம்மைப் பிணைத்துக் கொள்ள வைக்கின்ற உத்தியின் மூலம் இவ்வூடகங்கள் பாமக மீது ஒரு எகத்தாளச் சிரிப்பை உதிர்க்க வைக்கும். இதெல்லாம் நாளடைவில் நீர்த்துப் போகும் உத்தி.
அனாமதேயத்தின் கருத்தைப் பார்த்தபோது என் நண்பனொருவனின் கூற்று ஞாபகத்துக்கு வந்தது: "நா வச்ச மரத்த நா வெட்டுறேன்". இந்தச் சாதாரண வாசகம் முக்கிய செய்திகளைக் கொண்டதாக எனக்குப் படுகிறது.

said...

சுமார் 40 தொகுதிகளில் 10,000 வாக்குகளுக்குமேல்,27 தொகுதிகளிலே இரண்டாமிடம், சிலதொகுதிகளிலே வெற்றி இது பாமக தனித்துபோட்டியிட்டபோது. பாமகவுடன் கூட்டணிவைத்தால் திமுகவென்றாலும், அதிமுகவென்றாலும் சுமார் 70 தொகுதிகளிலே நிச்சய வெற்றி கிட்டும் இது நிதர்சனமான உண்மையும் கூட, இது மற்றவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ திரு.கருணானிதிக்கும் செல்வி. ஜெயலலிதாவிற்கும் நன்றாக தெரியும், அதனால் தான் திமுக கூட்டணியிலிருந்து பாமகவை பிரித்து தன் பக்கம் சேர்க்க துடிக்கிறார் ஜெஜே, முந்தைய தேர்தல்களில் கிடைத்த பாடத்தினால் கூட்டணியை விட்டு பாமக வெளியேறிவிடமால் தாங்கிப்பிடிக்கிறார் கலைஞர். இதிலிருந்து தெரியவில்லையா பாமக சேர்வதால் கூட்டணிக்கு வெற்றியா? அல்லது வெற்றி பெறும் கூட்டணிக்கு பாமக செல்கிறதா என்று?

said...

நல்ல பதிவு, தொடருங்கள்.

said...

கட்சியில் பல அனுபவமிக்க அரசியல் தலைவர்கள் கடந்த தேர்தலில் ஜெயித்தும் தன் மகனை குறுக்கு வழியில் மந்திரி ஆக்கி விட்டார் டாக்டர் ஐயா என்று பா.மா.க காரர்களே வருத்தப்பட்டதை பற்றி உங்களுடைய விளக்கத்தை சொல்லுங்களேன்.

(வீரவன்னியனான நான், இராமதாஸ் மரம் வெட்டியதை ஒருநாளும் மறக்கவும் மாட்டேன், மன்னிக்க மாட்டேன்)

said...

அடுத்தப்பதிவில் மகனை மந்திரியாக்கிய விடயத்தை அலசுவோம். இந்த பதிவுகள் இராமதாசுக்கு புனிதர் பட்டம் கட்டவோ அல்லது அவர் செய்வது செய்தது எல்லாம் சரியென வக்காலத்து வாங்கவோ இல்லை. வேறு எந்த அரசியல் தலைவர் மீதும் நடத்தப்படாத திட்டமிட்ட ஒரு ஊடக வன்முறை பாமகவின் மீதும் இராமதாசுவின் மீதும் நடத்தப்படுகிறது அது ஏன் என்பதற்காகத்தான் இந்த அலசல். 18 ஆண்டுகளுக்குமுன் மரம் வெட்டிய ஒரு விடயத்தை இன்று வரை பாமக என்றாலே அதோடு இணைத்து பேசிக்கொண்டுருக்கும் பத்திரிக்கைகளும் சாமானியர்களும் பாஜக என்றாலே குசராத்தில் நடத்திய மனித வெட்டியும், மத வன்முறைகளையும் பற்றி எப்போதாவது மட்டுமே பேசுகின்றன. கடைசிபத்தியில் இதைப்பற்றியில் இதை அலசுவோம். எல்லாவற்றையும் பின்னூட்டத்திலே எழுதுவது சிரமம்.

said...

//வீரவன்னியனான நான், இராமதாஸ் மரம் வெட்டியதை ஒருநாளும் மறக்கவும் மாட்டேன், மன்னிக்க மாட்டேன்//

மரம் வெட்டியதை நாங்கள் எப்போதும் உங்களை மன்னிக்கவும் சொல்லவில்லை மறக்கவும் சொல்லவில்லை அதை மட்டும் ஞாபகம் வைத்துள்ள எல்லோரும் ஜெஜெவின் தர்மபுரிவாலாபாக் படுகொலை,தென்மாவட்டங்களிலே பற்றவைத்த சாதி வெறிக்கலவரங்கள்,திமுகவின் கடற்கரை பேரணி மீதான வன்முறை,சுப்பிரமணிய சாமி,மணிசங்கர் அய்யர், ப.சிதம்பரம் மீதானா தாக்குதல்கள் மற்றும் ஆபாச நடனங்கள், திமுகவின் எண்ணிலடங்கா வன்முறை வெறியாட்டங்கள்,பாஜகவின் மனித வேட்டை பற்றியும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்களேன்

said...

//ஜெஜெவின் தர்மபுரிவாலாபாக் படுகொலை//
அந்த கொலை நடக்கும் பொழுது ஒரு சில கிலோமீட்டர்களே தள்ளி இருந்தேன். அதை கண்டிப்பாக சாதரண மனம் படைத்த எவராலும் அயுசுக்கும் மறக்க இயலாது.

// பாஜக என்றாலே குசராத்தில் நடத்திய மனித வெட்டியும், மத வன்முறைகளையும் பற்றி எப்போதாவது மட்டுமே பேசுகின்றன//
அவைகள் எப்போதவாது பேசுவதால், மக்களளும் மறந்துவிட்டார்கள் என்று அர்த்தமில்லை.ஹிந்துத்துவாவின் கோர முகமத்திற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு அந்த சம்பவம்.

இதே வரிசையில் தான் இந்த மரம் வெட்டப்பட்ட சம்பவமும். ஆக அரசியல் என்று வந்துவிட்டால் அனைவரும் சுயநல அயோக்கியர்களே. தியாக அரசியல் எல்லாம் வெரும் கலைந்துவிட்ட கனவுகளே. அதிகாரம் கைக்கு வரும்வரை எல்லோரும் புத்தர்களே. அதிகாரம் வந்த பின் ராமதாஸ் காட்டிய முகம் தான் தன் மகனை மந்திரி ஆக்கியது. வீரப்பன் மனைவியை வைத்தும் அரசியல் இலாபம் தேடத்துடிக்கும் இவருக்காக நேரத்தை வீணடிக்காதீர்கள்.

said...

//ஜெஜெவின் தர்மபுரிவாலாபாக் படுகொலை,தென்மாவட்டங்களிலே பற்றவைத்த சாதி வெறிக்கலவரங்கள்,திமுகவின் கடற்கரை பேரணி மீதான வன்முறை,சுப்பிரமணிய சாமி,மணிசங்கர் அய்யர், ப.சிதம்பரம் மீதானா தாக்குதல்கள் மற்றும் ஆபாச நடனங்கள், திமுகவின் எண்ணிலடங்கா வன்முறை வெறியாட்டங்கள்,பாஜகவின் மனித வேட்டை பற்றியும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்களேன் //

இங்க எல்லா அரசியல் கட்சிகளும் திருடர்கள் தான், வன்முறை வெறி பிடித்தவர்கள் தான் எண்டு உங்கள் சாதி கட்சி மருத்துவர் ஐயா, பாமக வை பற்றி சொல்லடிகள், கள்ளடிகள்னு வக்காலத்து வாங்குவது நடுநிலமையலர்களால் ஒத்துகொள்ள முடியாது .

அரசியல் ஒரு சாக்கடை என்றல் பாமக ஒரு சாதிய சாக்கடை .

said...

ராமதாசிடம் உள்ள பிரச்சனையே இதுதான். அம்பேத்கருக்கு நிறைய சிலை வைக்க சொல்லி இவரிடம் யார் கேட்டுகொண்டது. மதுரையில் இருந்த திருமாவை வடமாவட்ட ஆதிதிராவிடர்களுக்கு அருமுகப்படுத்த இவர் யார். ஆக, இன்றைய ஆதிதிராவிடர்களின் தீவிர வன்னியர் எதிர்ப்புக்கு காரணமே இவர்தான் என்று ஏன் சொல்ல கூடாது. வன்னியர்களின் பெருன்பான்மை ஆதரவு இவருக்கு கிடைத்தவுடன் தன்னை ஈ.வெ.ரா, அண்ணா, கருணாநிதி இன்னும் உள்ள எல்லா தலைவர்களும் கலந்த ஒரு தலைவராக நினைத்துக்கொண்டதின் விளைவே இது. எப்போதும் யாரையாவது துதி பாடியே பழக்கப்பட்ட வன்னியர்கள் இவரையும் கடவுள் போல எண்ணி பேசுவதும், எழுதுவதும் இதற்கு ஒரு காரணம். இப்படி பேசுபவர்கள் பெரும்பாலும் அவரால் ஆதாயம் அடைந்தவர்களே. தனி ஒரு மனிதனால் எப்படி எப்போதும் சரியாகவே சிந்திக்க முடியும். அவர் இந்த ஜாதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று நான் சொல்ல வரல. தனி ஒரு மனிதன் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு ஒரு சமுதாயமே விலை தர வேண்டியுள்ளது ஏன்.
2000 வன்னிய பெண்களை வன்காதல் செய்து ஆதிதிராவிடர்கள் கைவிட்டதாக கணக்கு சொல்லும் மாவீரன் இவர்கள் எல்லாம் பாதிக்கப்படும் வரை என்ன செய்துகொண்டிருந்தார். பாதிக்கப்பட்ட பெண்களில் பா.மா.க பொறுப்பாளர் குடும்பத்து பெண் யாராவது இருந்திருந்தால் ஒருவேளை எதாவது செய்திருப்பார். இவர் விசுவாசம் வன்னியர்களிடம் இல்லாமல் தனி ஒரு குடும்பத்திடம் இருப்பதே காரணம். வன்னியர்கள் பா.மா.க வின் வாக்களிக்கும் இயந்திரம் மட்டும் தானா?