கமலின் சாதீயமும் சமூக பொறுப்பும்
முன்குறிப்பு
சில காலங்களுக்குமுன் கமலைப்பற்றிய ஒரு கட்டுரையை இணையத்திலே படித்தேன்
யார் எழுதியது, சுட்டி என்ன என்று நினைவில்லை, ஆனால் அந்த கட்டுரையாளரின்
கருத்துகளோடு ஒத்து போகின்றேன். அந்த கட்டுரையை தழுவி இந்த பதிவெழுதியுள்ளேன்
அந்த கட்டுரையாளரின் வார்த்தைகளை கூட உபயோகித்துள்ளேன்
கமலின் சாதீயமும் சமூக பொறுப்பும்
கமல் ஒரு சிறந்த நடிகர், போலித்தனமில்லாதவர், விசிறிகளுக்காகத்தான் வாழ்கின்றேன் என நிசத்திலும் நடிக்காதவர், ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றமாக்கி ரசிகர்கள் வெறுமனே விசிலடிச்சான் குஞ்சுகளாக்காமல் (இந்த வார்த்தையை பயன்படுத்தியமைக்கு திரு.மாலன் அவர்கள் மன்னிக்கவும், எனக்கு வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை) சமூகப்பணி செய்ய சொன்னவர், இத்தனையிலும் மற்ற நடிகர்களைவிட உயர்ந்து நிற்கும் அவரிடம் ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய சமூகப்பொறுப்புணர்விருக்கின்றதா??
ஒவ்வொரு மனிதனுக்கும் சமூக பொறுப்புணர்வு வேண்டும் அதிலும் கலைஞர்களுக்கு அதிலும் வெகுசன ஊடகமான திரைப்பட நடிகர்களுக்கு மற்றவர்களைவிட அதிகம் வேண்டும், ஏனெனில் எது திரைப்படம், எது வாழ்க்கை? எது நிழல் எது நிசம்? என பிரித்தறியாத ஒரு சமூகத்திலே திரைப்பட கலைஞர்கள் மிகுந்த சமூக பொறுப்புணர்வோடு இருக்கவேண்டும், பணத்திற்காக ஒரு சமூகத்தை படுகுழியில் தள்ளக்கூடாது
கமல் தன் சாதி உணர்வோடு இல்லை என்கின்றார், சரி ஆனால் அவர் தேவர்மகன் என்ற ஒரு திரைப்படம் எடுத்தார் அதில் அவர் கல்லாவும் நன்றாகவே நிறைந்தது, ஆனால் அந்த திரைப்படம் உருவாக்கிய எதிர்வினைகள் எத்தனை? அதைப்பற்றி எந்த பத்திரிக்கையாவது எழுதியதா? யாரேனும் அதைப்பற்றி பேசினோமா?
தேவர்மகன் திரைப்படத்திலே தேவரினத்தை அவர்களுடைய வாழ்க்கைமுறை பண்புகள் பற்றி காண்பித்துள்ளார் எல்லாம் சரிதான் ஆனால் அந்த படம் தான் தென் மாவட்டங்களிலே ஒரு 6 ஆண்டுகாலம் சாதித்தீயை கொழுந்துவிட்டெரியச்செய்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
தென்மாவட்டங்களிலே சில ஆண்டுகளுக்குமுன் வரை (ஏன் இன்றும் கூட) எல்லா கோவில் திருவிழாக்களிலும், சுப துக்க நிகழ்ச்சிகளிலும் "போற்றிப்பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே" என்ற பாடல் போடப்படாமல் இருந்ததில்லை, இது எத்தனை எத்தனை சாதிக்கலவரங்களுக்கு ஆரம்பமாக இருந்த்திருக்கின்றது. இதற்கு கமல் என்ன செய்வார் அது அவர்கள் தவறு என ஜல்லியடிக்க வேண்டாம், ஒரு மன முதிர்ச்சியடையா சமூகத்திலே (மொத்த தமிழ் சமூகத்தையும் சேர்த்துதான் சொல்கின்றேன்) இப்படி தேவர்மகன் என்ற படைப்பு என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கியுள்ளது. இதிலே கமலின் பங்களிப்பு ஒன்றுமேயில்லையா??
இதே தேவர்மகன் என்கின்ற படைப்பை ஒரு பண்ணையார் மகன் என்றோ அல்லது சாதிபெயர் வைக்காமல் வேறு பெயர் வைத்து எடுத்து வெற்றிபெற்றிருக்க முடியாதா?
தேவர்மகன் என்றெல்ல வன்னியர்மகன், படையாட்சிமகன் என படம் எடுத்தாலும் எதிர்ப்பேன்
தேவர்மகன் திரைப்படம் விசிறிவிட்ட சாதி கலவரம் அடங்கியபின் அடுத்த சாதி வெடிகுண்டை தூக்கிப்போட்டார் கமல் சண்டியர் என்ற பெயரிலே, சண்டியர் என தென் மாவட்டங்களிலே யாரை குறிப்பிடுவது என பரமக்குடி கமல் அவர்களுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பேயில்லை.
அந்த படத்தின் தலைப்பை மாற்ற டாக்டர்.கிருஷ்ணசாமி சொன்னதற்கு எல்லோரும் அவர்மீது பாய்ந்தனர், ஆனால் யாருமே அவரின் பக்கத்திலுள்ள நியாயத்தை புரிந்து கொள்ளவில்லை, இப்பொழுது விருமாண்டி என்ற பெயரிலே அந்தப்படம் வெற்றி பெறாமல் போய்விட்டதா என்ன?? ஆனால் சண்டியர் என்ற பெயரிலேயே அது வெளியாகியிருந்தால் தேவர்மகன் போன்ற பின் விளைவை ஏற்படுத்தாமலிருந்திருக்குமென யாரும் உத்திரவாதம் தரமுடியுமா?
எதற்காக கமல் மீண்டும் மீண்டும் தேவர் சாதியை திரைப்படத்திலே கொண்டுவரப்பார்க்கின்றார், தன் கல்லா நிரம்பினால் போதும் என்ற எண்ணம் தானே?
அடுத்ததாக அவரது படங்களில் பாலியல் பற்றி பலர் பேசிவிட்டனர் எனவே அதைப்பற்றி தொடாமல் அவரது விருமாண்டி படத்தைப்பற்றி பார்ப்போம், அந்த படம் வன்முறைக்கு எதிராகவும் தூக்கு தண்டனை ஒழிப்பு பற்றியும் என ஜல்லியடித்தார், ஆனால் அந்த படத்தை பார்க்கும்போது இப்படி வன்முறை செய்பவர்களை தூக்கில் போடுவது சரிதான் எனத்தோன்றுகின்றது. விருமாண்டியில் வன்முறையை தவிர வேறெதுவுமில்லை, வன்முறை ஒழிப்பைப்பற்றி வன்முறையை காட்டி படம் எடுத்துள்ளார் (அதுவும் உழவு ஏரால் குத்தப்பட்டு கிடக்கும் காட்சியும் சிறை வன்முறை காட்சிகளையும் பார்க்கவே முடியவில்லை) இது எப்படியென்றால் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள சில திரையரங்குகளில் காலை 11.00 மணிகாட்சிய்லே போடுவார்களே சில படங்கள் படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை படுக்கையறை மற்றும் பாலுறவு காட்சிகளாக காண்பித்துவிட்டு படத்தின் இறுதியில் கதாநாயகனுக்கு(?!) எய்ட்ஸ் வந்து இறப்பது போலவோ அல்லது யாராலோ குத்திக்கொல்லப்படுவது போலவா காண்பித்து இப்படியெல்லாம் செய்தால் இறுதியில் இறக்க வேண்டி வரும் என அறிவுருத்துவதற்கு சமமான செயல்தான் விருமாண்டியும்.
எம்ஜியாரின் திரைப்படங்களில் சண்டை காட்சிகள் இருந்தாலும் கத்தியால் குத்தி அப்படியே இரத்தம் பீரிடுவது போலவோ அல்லது சிதைந்து கிடக்கும் மனித உடல்களொ காண்பிக்கப்பட்டதில்லை எதார்த்தம் என மனதி பாதிக்கும் காட்சிகளை காண்பித்ததில்லை, அதுவும் விருமாண்டியில் கதாநாயகி அபிராமி கை கால்களை உதைத்துக்கொண்டு கண்பிதுங்கி நாக்கு தள்ளிபோய் தூக்கு மாட்டிக்கொள்ளும் காட்சி என்னையே படு பயங்கரமாக பாதித்துவிட்டதென்றால் அதை பார்க்கும் குழந்தைகள் மற்றவர்களேல்லாம் எப்படி பாதிக்கப்படிருப்பர்.
"அப்படி போடு போடு போடு" என்ற பாடலை தாளம் தப்பாமல் வரி தவறாமல் பல குழந்தைகள் பாடுகின்றனவே, சித்தப்பா விஜய் அங்கிள் சவால் சொல்றாரு(சமீபத்தில் வந்த ஏதோ ஒரு வசனம்) என 3 வயது குழந்தை சொல்லும் போதும் திரைப்படம் இந்த குழந்தைகளை எந்த அளவு பாதித்துள்ளது என விளங்கும், ஏன் ஒரு நல்ல தமிழ் பெயர் வைத்து அதை வெகுசனத்திற்கு எடுத்து செல்வதில் என்ன தவறிருக்கின்றது?
கமலுக்கு தமிழில் பெயர்வைத்தால் என்ன குறைந்துவிட்டதாம்?
இதையெல்லாம் பார்க்கும்போது நிச்சயமாக கமலுக்கு சமூக பொறுப்புயில்லை என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது, இனியாவது தன் கல்லா நிரம்புவதை மட்டும் எண்ணாமல் சமூகப்பொறுப்பணர்வோடு நடந்துகொள்வாரா கமல்??
20 பின்னூட்டங்கள்:
கமல் மீது சேறுவாரிப் பூசும் இன்னும் ஒரு பதிவு என்பதைவிட இதில் வேறு ஏதாவது சிறப்பு இருப்பதாகத் தெரியவில்லை. சமூகத்தில புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்கு எந்த ஒரு கலைஞனுக்கும் உரிமையுண்டு. கமல் தேவர்மகன் என்று படம் எடுத்ததாற்தான் தமிழ் நாட்டில சாதிக் கலவரம் நடக்குது என்றமாதிரியெல்லவோ உங்கள் பதிவுள்ளது. மற்றும் கிருஸ்ணசாமி போன்றவர்களின் கதைகளையெல்லாம் கணக்கிலெடுக்க வேண்டிய அவசியமில்லை ஏனெனில் அவர்கள் எல்லாம் சாதியை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள்.
இளையவன்
இந்தப் பதிவுக்கு பதில் சொல்லலாம்னு நெனச்சேன். ஆனா மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடிங்கிற மாதிரி ஒரு பக்கம் என்னோட சட்டையை ஊடுருவிப் பார்த்து திட்டுக்களும், மற்றொருபுறம் எனது வலைப்பதிவை ஊடுருவிப் பார்த்து திட்டுக்களும் வரும் என்பதால் நான் 'அப்பீட்' ஆகிக்கிறேன்!
//கமல் தேவர்மகன் என்று படம் எடுத்ததாற்தான் தமிழ் நாட்டில சாதிக் கலவரம் நடக்குது என்றமாதிரியெல்லவோ உங்கள் பதிவுள்ளது//
இது பதிப்பின் நோக்கத்தையும் பதிப்பில் எழுதப்பட்ட கருத்தையும் சரியாக புரிந்துகொள்ளாமல் கூறப்பட்ட கருத்தாகவே எண்ணுகின்றேன்.
கமலின் தேவர்மகன் படம் மட்டும் தான் சாதிக்கலவரத்திற்கு காரணம் என கூறவில்லை, திரைப்படத்தையும் எதார்த்த வாழ்க்கையையும் பிரித்துப்பார்க்க முடியாத ஒரு மன முதிர்ச்சியடையா சமூகத்திலே கமலின் தேவர்மகன் திரைப்படம் சாதிப்பிரச்சினையை விசிறிவிட்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலே தேவர்மகன், சண்டியர் என தன் கல்லாவை நிரப்புவதை மட்டும் எண்ணாமல் சமூக பொறுப்புணர்வோடும் படம் எடுக்கசொன்னேனே தவிர அவர்மீது சேறுவாரிப்பூசும் எண்ணம் சிறிதளவு கூட இல்லை.
//சமூகத்தில புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்கு எந்த ஒரு கலைஞனுக்கும் உரிமையுண்டு//
கலைஞனின் உரிமையை யாரும் இங்கு மறுக்கவில்லை, அதே தேவர்மகன் படத்தை "போற்றிபாடடி பெண்ணே தேவர்காலடி மண்ணே" பாடல் இல்லாமலும் தேவர்மகன் என்ற பெயரில்லாமலும் எடுத்தால் யாரும் இங்கே குறை சொல்லப்போவதில்லை
என்ன மாயவரத்தான் இப்படி அப்பீட் ஆயிட்டிங்க...நீங்க நினைத்ததை சொல்லுங்கள் கருத்து சுதந்திரத்தின் மற்றொரு பெயர் வலைப்பூக்கள்
//திரைப்படத்தையும் எதார்த்த வாழ்க்கையையும் பிரித்துப்பார்க்க முடியாத ஒரு மன முதிர்ச்சியடையா சமூகத்திலே//
இந்த மன முதிர்ச்சியடையா சமூகத்தை திருத்த இந்த தலைவர்கள் என்ன செய்கிறார்கள் ?..விசிறி விட்டு தன்னை வளர்ப்பது தவிர ..
குழலி அவர்களே, ஒரு படம் எடுக்க எத்தனை செலவு ஆகும் என்பது தெரியுமா? போட்டப் பணத்தை எடுக்க வேண்டாமா? நீங்கள் சொல்வீர்கள் "போற்றிப் பாடடி பெண்ணே" பாட்டைப் போட்டிருக்கக் கூடாது என்று. இன்னொருவர் சண்டைக் காட்சிகளுக்கு பதில் ஜாதி ஒழிப்பு பிரசாரம் இருக்க வேண்டும் என்று கூறுவார். அவர் திவாலானல் நீங்களா பணம் கொடுப்பீர்கள்? அன்பே சிவத்துக்கு என்ன ஆதரவு வந்தது? ராஜ பார்வைக்கு என்ன ஆதரவு கிடைத்தது? தேவர் மகனில் ஹீரோவும் தேவன் வில்லனும் தேவன், காமெடியனும் தேவன், கௌதமியும் ஆந்திராவில் உள்ள தேவர் குலத்துக்கு சமமான குலத்தைச் சேர்ந்தவர். இதில் ஜாதிப் பிரச்சினை எங்கிருந்து வந்தது?
வியட்னாம் வீடு முழுக்க முழுக்க பார்ப்பனர் படம். அது போலத்தானே இது? காலணா முதலீடு இல்லாமல் கட்சி வளர்க்கும் அரசியல்வாதி (நன்கொடை வசூல்தான்) சமுதாயப் பொறுப்புடன் இல்லை என்பதுதானே என்னுடைய பதிவு? அங்கு மட்டும் அவர்களுக்கு சாதகமானப் பின்னூட்டம், இங்கு சினிமா நடிகனுக்கு உபதேசமா? படம் எடுக்கும் கஷ்டம் தெரிந்து பேசுங்கள் குழலி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தேவர் மகனில் ஹீரோவும் தேவன் வில்லனும் தேவன், காமெடியனும் தேவன், கௌதமியும் ஆந்திராவில் உள்ள தேவர் குலத்துக்கு சமமான குலத்தைச் சேர்ந்தவர். இதில் ஜாதிப் பிரச்சினை எங்கிருந்து வந்தது?
//
எந்த இடத்திலும் நான் தேவர்மகன் படத்தினுள் சாதிப்பிரச்சினை உள்ளது அல்லது தேவர்மகன் படத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை தாழ்த்திபேசி அதனால் சாதிப்பிரச்சினை என்று கூறினேனா? நான் விமர்சித்தது தேவர்மகனில் வைக்கப்பட்ட பாடலையும் தேவர்மகனை மையமாக வைத்து நடத்தப்பட்ட சாதிப்பிரச்சினையும் தான்,
//ஜாதி ஒழிப்பு பிரசாரம் இருக்க வேண்டும் என்று கூறுவார்//
சாதி ஒழிப்பு பிரச்சாரம் நடத்த சொல்லவில்லை, குறைந்த பட்சம் இருக்கின்ற சாதிப்பிரச்சினையை விசிறி விடாதபடி சமூகபொறுப்புணர்வோடு படம் எடுங்கள் என்றுதான் கூறுகின்றேன்.
//அவர் திவாலானல் நீங்களா பணம் கொடுப்பீர்கள்//
//படம் எடுக்கும் கஷ்டம் தெரிந்து பேசுங்கள் குழலி //
பணம் சம்பாதிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக 11.00 மணிக்காட்சி படம் எடுப்பவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை.
குழலி, நான் உங்களிடம் கருத்து வேறுபடுகிறேன்.
கமலின் ஆரம்ப காலப் படங்களில் வேண்டுமானால் அவருக்கு எந்தவித சமூக அக்கறையும் இல்லையென்று சொல்லலாம். ஆனால் அவர் தன்னுடைய ஆளுமையின் கீழ் இயக்கிய/நடித்த படங்களில் சிறிதளவு சமூக அக்கறையுடன் செயல் படுவதாகத்தான் எனக்குத் தெரிகிறது.
உதாரணமாக அவரே ஒரு பேட்டியில் கூறியது என நினைக்கிறேன் - குருதிப் புனல் என்ற படத்தில் அர்ஜூனின் பாத்திரம் ஒரு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவராகக் காண்பித்திருப்பார். அதாவது முஸ்லீம்கள் எல்லோரும் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் போல ஒரு மாயையை இந்துத்துவ சக்திகள் உண்டு பண்ணிக் கொண்டிருக்கையில், ஒரு முஸ்லீம் இராணுவ அதிகாரி இந்திய நலனுக்காக உயிரையே விடுவதாகவும், மாறாக ஒரு இந்து அதிகாரி தீவிரவாதிகளிடம் சோரம் போகி விடுவதாகவும் காண்பித்திருக்கிறார். நான் கூறுவது ஒருவகையில் வழக்கமான ஜல்லியடிப்பது போலத் தோன்றினாலும், சமூகத்தில் நிலவி வரும் பொதுமை படுத்தலுக்கு (ச்டெரெஒட்ய்பெ) மாறாக முயன்றிருக்கிறார் என்பதே.
அன்பே சிவம் படத்தில் தாராளமயமாக்கப் பட்ட பொருளாதாரச் சூழலில் எதற்கெடுத்தாலும் வெளி நோக்கி மோகங்கொள்ளும் மொன்னைத்தனமான புதிய இளைஞர் சமுயாதத்தை உள்நோக்கிப் பார்க்கச் செய்கிறார். இப்படி எத்தனையோ முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவை அனைத்தும் வெற்றியடைந்ததாகச் சொல்ல முடியாது. சில நேரங்களில் ரொம்பவும் சொதப்பியும் இருக்கிறார். தேவர் மகன் படத்தை முதலில் பார்த்த பொழுது நான் அதை பரதன் இயக்கிய படமாகத்தான் பார்த்தேன். மிக யதார்த்தமாகவும், சமூகக் கண்ணோட்டத்துடனும் எடுத்ததாகவும்தான் தோன்றியது. பின்னால் இந்தியாவுக்குச் சென்ற பொழுதுதான் அறிந்து கொண்டேன், அப்படத்தையே தேவர் வெறிக்குத் தீனி போடுவதற்குப் பயன்படுத்திக்கொண்டுள்ளதை. கமல் அதைப் புரிந்து கொண்டு சண்டியர் பிரச்சினையை அவரே தவிர்த்திருக்கலாம். அது கொஞ்சம் பிடிவாதமாகத்தான் தோன்றியது.
தமிழ்ப் பெயர் வைப்பதில் கூட அவர் எந்தத் தவறும் செய்ததாகத் தோன்றவில்ல. அவர் பொதுவாக கதைக் கேற்ற தமிழ்ப் பெயர்களையே வைத்திருக்கிறார். மும்பை எக்ஸ்பிரஸ் என்பது வழக்கத்தில் உள்ள பெயர்ச்சொல். திரு. திருமாவளவனே கூட மும்பை எக்ச்பிரஸூக்கு டிக்கட் வாங்க வேண்டும் என்று தான் சொல்லுவார் என நினைக்கிறேன். பிரச்னை எல்லாரோலும் திசை திருப்பப் பட்டு விட்டது. கடந்த ஒரு வருடத்தில் வந்த தமிழ்ப் படங்களின் பெயர்களி யாராவது பட்டியலிட்டால் நல்லது. ரன், ரெட், கிங், நியூ, சிட்டிசன், கேம்பஸ், லொட்டு லொசுக்கு என அடுக்கிக் கொண்டேயிருந்தார்கள். அந்தப் போக்கை கமலே எதிர்த்தார் என நினைக்கிறேன். அதற்குத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் எதிர்ப்புத் தெரிவித்ததில் தப்பேயில்லை.
மற்றபடி தமிழ்ப் படங்களில் உள்ள அதிகப்படியான தனிநபர் வன்முறை, ஆபாசமான பால் விரசங்கள், பெண்களை வெறும் நுகர்வுப் பொருளாகச் சித்தரிப்பது போன்ற அத்தனை வணிகமயமான சிறுமைத்தனங்களும், அவருடைய படங்களிலும் உண்டு, சில நேரங்களில் தூக்கலாகவே உண்டு என்பதில் உடன்படுகிறேன்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
அது சரி எல்லா நடிகர்களையும் விட்டு விட்டீர்கள், கமலைப் பற்றி மட்டும் என்ன பிரச்சினை உங்களுக்கு? கண்டிப்பாக மற்ற நடிகர்களை விட அவர் அதிக பொறுப்பானவரே. நல்ல படங்கள் நமக்கு கொடுக்க மெனக்கெடுகிறார்.
எம்.ஜி.ஆர் படங்களை எடுத்துக் கொள்வோம். அவை எவ்வளவு போலியானவை தெரியுமா? உலகம் சுற்றும் வாலிபனில் நான்கு அல்லது ஐந்து கதாநாயகிகள் வருவார்கள். எல்லோருடனும் தலைவருக்கு நெருக்கமான காதல் காட்சிகள். அதுவும் கனவு காட்சிகள். யார் கனவு காண்கிறார்கள்? சம்பந்தப்பட்டப் பெண்களே. அதில் ஒரு நாயகி அவரை அண்ணா என்று கூப்பிட்டு சகோதர பாசம் காட்டப் போகிறவர். அவரும் இவரைப் பற்றி கனவு காணுவாராம். பெரிய பூப்பந்தையே காதில் சுற்றுவார். அது உங்களுக்கு சமுதாய பொறுப்பு வாய்ந்த செயலா? கேட்டால் கதைதானே, அவர்கள் கனவு கண்டால் இவர் என்ன செய்வார் என்று ஜல்லியடிப்பீர்கள். எல்லா தேசத்து பெண்களையும் இம்மாதிரி விரகதாபத்தில் காட்டுவது என்னச் செயல் ஐயா? காட்சிகளும் எவ்வளவு போலியானவை தெரியுமா?
அதே உலகம் சுற்றும் வாலிபனில் ஜப்பானில் நடக்கும் உலகப் பொது கண்காட்சியில் ஒரு சீன். எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு எஸ்கலேட்டரில் போய் கொண்டிருப்பார், தூரத்திலிருந்து நாகேஷ் அவர் கவனத்தைத் திருப்ப என்னென்னவோ சைகைகள் எல்லாம் செய்வார். கதைப்படி எம்.ஜி.ஆர். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காட்சி. ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் நேரடிப் பார்வை பார்த்த வண்ணம் இருப்பார். நாகேஷின் முயற்சிகள் பலனளிக்காது. இந்தக் காட்சியில் என்ன தமாஷ் என்றால் எம்.ஜி.ஆர். பக்கத்தில் நிற்கும் ஜப்பானியர் ஒருவர் நாகேஷைப் பார்த்து விட்டு எம்.ஜி.ஆரின் கவனத்தை நாகேஷ் பக்கம் திருப்ப முயற்சி செய்வார். எம்.ஜி.ஆரா. கொக்கா? கடைசி வரை திரும்ப மாட்டாரே.
வேறு வழியில்லை எம்.ஜி.ஆருக்கு என்று ஒப்பு கொள்கிறேன். ரீடேக் எடுக்க நிரம்ப செலவழியும். அதே போலத்தானே கமலுக்கும். "போற்றிப் பாடடி பெண்ணே" பாடல் எவ்வளவு இனிமையானது, எவ்வளவு கவித்துவத்துடன் படமாக்கப்பட்டது? அதை எல்லாம் கருத்தில் கொள்ளாது பிற்காலத்தில் அப்பாடல் துர் உபயோகம் செய்யப்பட்டது என்று லென்ஸ் போட்டு பேசுகிறீர்களே. இதுதான் பொறுப்பற்றச் செயல். நான் கேட்கிறேன், திரைப்பட நுட்பம், அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் கருத்தில் கொள்ளாது இம்மாதிரி பேசுவதற்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது?
அப்புறம் 11 மணிக் காட்சி எடுப்பவருடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள். அக்காட்சிகளை எடுப்பவர்களும் டிமாண்ட் இருப்பதால்தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு எழுதுவதுதானே.
இன்னொன்று தமிழ்ப் பெயர் விவகாரம். கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுப்பவனுக்கு இல்லாத உரிமை ராமதாசுக்கும் திருமாவுக்கும் எங்கு வந்தது? சொந்தப் பேரப்பசங்களை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கும் தலைவர்களுக்கு நிச்சயம் அந்த அருகதை கிடையாது. அதிலும் பயமுறுத்தல்கள் வேறு. திருட்டு வி.சி.டி. போட்டு திவாலாக்குவோம் என்றெல்லம். மும்பை எக்ஸ்பிரஸ் விஷயத்தில் கமல் இவர்களுக்கு நல்லப் பாடம் கற்பித்தார் என்பதில் மகிழ்ச்சி. இதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்த ஜெ. அவர்களைப் பாராட்ட வேண்டும்.
சூர்யா பி.எஃப். என்றத் தலைப்பை அ.ஆ. என்று மாற்றியிருக்கிறார். இத்தலைப்பு கலவி மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் பெண் வெளியிடும் சப்தச்ங்கள் என்று வேறு திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். தமிழ் பெயரை வைக்கச் சொன்னத் தலைவர்கள் இப்போது என்ன கூறப் போகிறார்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எம்.ஜி.ஆர் படங்களை எடுத்துக் கொள்வோம். அவை எவ்வளவு போலியானவை தெரியுமா?//
டோண்டு சார் அவர்களே எனது பதிவில் எம்ஜியார் படங்கள் எல்லாவிததிலும் சிறந்தவை என கூறவில்லை, அவரது படங்களில் இடம் பெற்ற சண்டைகாட்சிகளைப்பற்றிதான் சொல்லியிருந்தேன், கீழ் கண்ட வரிகளைப்படித்தாலே அது புரியும்,
//எம்ஜியாரின் திரைப்படங்களில் சண்டை காட்சிகள் இருந்தாலும் கத்தியால் குத்தி அப்படியே இரத்தம் பீரிடுவது போலவோ அல்லது சிதைந்து கிடக்கும் மனித உடல்களொ காண்பிக்கப்பட்டதில்லை எதார்த்தம் என மனதி பாதிக்கும் காட்சிகளை காண்பித்ததில்லை//
// "போற்றிப் பாடடி பெண்ணே" பாடல் எவ்வளவு இனிமையானது, எவ்வளவு கவித்துவத்துடன் படமாக்கப்பட்டது?//
அந்த பாடலை இனிமை,இசை என்று பார்க்கும் உங்கள் பார்வை வேறு, அதே பார்வை எல்லோருக்கும் இருக்கின்றதா? அதே மன முதிர்ச்சி எல்லோருக்கும் இருக்கின்றதா? பலர் அந்த பாடலிலுள்ள இசையையா பார்த்தனர்? எதைப்பார்த்தனர் என தென்மாவட்டத்திலே கேட்டுப்பாருங்கள் தெரியும்.நான் தென்மாவட்டத்திலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியிலே 4 ஆண்டுகள் படித்தேன் எனக்கு நேரடி அனுபவம் உண்டு.
//நான் கேட்கிறேன், திரைப்பட நுட்பம், அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் கருத்தில் கொள்ளாது இம்மாதிரி பேசுவதற்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது?
//
திரைப்படத்திலுள் கட்ட நட்டங்களை நேரடியாக பார்த்தவன் இல்லை நான், ஆனால் என்னுடைய நன்பர்கள் சிலர் இன்று திரைத்துறையிலே உதவி இயக்குனராகவும், கதைவசன உதவியாளர்களாகவும்,உதவி ஆர்ட்டைரக்டராகவும்,உதவி ஒளிப்பதிவாளராகவும் உள்ளனர், சிலர் தொலைக்காட்சி தொடர்களில் வேலை செய்கின்றனர், அவர்கள் கூறக்கேட்டுள்ளேன் எவ்வளவு கடினப்படுகின்றனர் என்று.
//இம்மாதிரி பேசுவதற்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது?
//
நானும் இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையிலும் மற்றவர்கள் பாமகவையும், இராமதாசையும்,அன்புமணியையும் எந்த உரிமையில் பேசுகின்றீரோ அந்த உரிமையில் தான்.
கடினப்பட்டு உழைப்பதால் மட்டுமே அவர்கள் செய்வதெல்லாம் நியாயம் என ஜல்லியடிக்க வேண்டாம்.
//அப்புறம் 11 மணிக் காட்சி எடுப்பவருடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள். அக்காட்சிகளை எடுப்பவர்களும் டிமாண்ட் இருப்பதால்தான் செய்கிறார்கள்.//
அது தேவையில்லாத விடயம், அவர்கள் கழிசடை என எல்லோருக்கும் தெரியும், அந்த மாதிரி படங்களை எத்தனை பேர் பார்க்கின்றனர், எத்தனை பேர் அதை ஃபாலோ செய்கின்றனர் இல்லையே, ஆனால் கமல் படங்கள் அப்படியா?, உங்களது வாதங்கள் எப்படியுள்ளதென்றால் ஏன்டா கண்ட கண்ட கழிசடை படங்களை பலான புத்தகத்தில் போடுகிற மாதிரி விகடனிலும், குமுதத்திலும் போடுகின்றீர் என கேட்டால் இதை கேட்குமுன் சரோஜாதேவி,மைடியர் மஞ்சு போன்ற ஆபாசபுத்தகங்களை எதிர்த்து கேட்டுவிட்டு வா என்பது போலுள்ளது.
அன்புமணியின் குழந்தைகள் மேட்டர்டே பள்ளியில் படிப்பது பற்றி இன்றிரவு எழுதுகிறேன் அது ஒரு நீண்ட பதில்,இப்பொழுது கொஞ்சம் வெளியில் செல்கின்றேன்
//சூர்யா பி.எஃப். என்றத் தலைப்பை அ.ஆ. என்று மாற்றியிருக்கிறார். இத்தலைப்பு கலவி மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் பெண் வெளியிடும் சப்தச்ங்கள் என்று வேறு திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.//
எஸ்.ஜே.சூர்யாவிற்கும் 11 மணிகாட்சி எடுப்பவர்களுக்கும் வேறுபாடில்லை, இனி அந்த கழிசடைகளை பற்றி விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை.
குறைந்த பட்சம் திரு சொ.சங்கரபாண்டியாவது எனது பதிவின் ஓரளவாவது நியாயத்தை புரிந்துகொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.
இந்த பதிவுக்கு சம்பந்தமில்லா விடயம் தான், இருந்தாலும் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமென எழுதியுள்ளேன்.
இன்று தில்லியிலிருக்கும் எனது நன்பரோடு பேசிய பொழுது இந்த மேட்டர்டே பள்ளியில் அன்புமணி குழந்தைகள் பற்றிய விடயத்தையும் பேசினேன்,
டோண்டு சார் நீங்கள் தில்லியிலுள்ள தமிழ்ப்பள்ளிகள், அதனுடைய கல்விக்கட்டணம் பற்றி எழுதியிருந்தீர், ஆனால் மிக வசதியாக (அல்லது தெரிந்தோ தெரியாமலோ) அந்த பள்ளிகளின் தரத்தையும், ரிசல்ட்டைப்பற்றியும் எழுதவில்லை, நன்பரிடம் பேசிய பொழுது மேட்டர்டே பள்ளியின் தரம்,உள்கட்டமைப்பு பற்றியும் கூறினார், தமிழ்பள்ளிகளின் உள்கட்டமைப்பு தரத்தைபற்றியும் கூறினார். தமிழகத்தில் தமிழ்பாடவழி அல்லது தமிழை ஒரு பாடமாக சொல்லித்தரும் பள்ளிகளில் பல பள்ளிகள் நல்ல உள்கட்டமைப்போடும் தரமாகவும் உள்ளன, அந்த அளவு தில்லியில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை,அன்புமணி அவர்கள் தமிழகத்திலே இருக்கும்போது இந்த மாதிரியான பள்ளிகளில் சேர்க்காமல் இருந்தால் நிச்சயம் விமர்சனத்துக்குறியதே, ஆனால் தில்லியிலே தமிழ்வழிப்பள்ளிகள் சரியான உள்கட்டமைப்பில்லாமல், மேட்டர்டே பள்ளி அளவுக்கு தரமில்லாமல் இருக்கும்போது அன்புமணியின் செய்கையை விமர்சிப்பது சரியானதாக தெரியவில்லை.
இது தொடர்பாக எனது பக்கங்களில் ஒரு பதிவு எழுதலாம் என உள்ளேன்.
நேரம் கிடைக்கும்போது நிச்சயம் எனது கருத்தை எனது பக்கங்களில் பதிவேன்.
குழலி அவர்களே, நீங்கள் என் பதிவில் இட்ட இப்பின்னூட்டத்துக்கு நான் என் அந்தப் பதிவில் கூறிய பதில், அதை இங்கும் இடுகிறேன். உங்களுக்குத்தான் என் பதிவைத் திறப்பது கஷ்டமாயிருக்கிறதே:
"அபார கற்பனை குழலி அவர்களே. அன்புமணி அவர்கள் தில்லி தமிழ் கல்விக் கழகப் பள்ளியை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை நானே இப்பதிவில் கொடுத்தேனே. அது இங்கு மறுபடியும். "ஆனாலும் ஐந்தாம் வகுப்பு வரை மேட்டுக்குடியினர் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் படிக்கவைத்து ஆறாம் வகுப்பு வரும் போதுதான் இங்கு வருகின்றனர். அப்போதும் தமிழை எடுக்காமல் குழந்தைகள் ஹிந்தி எடுத்துக் கொள்கின்றனர். ஏன் இந்த நிலை? முதல் ஐந்து வகுப்புகளில் தில்லியில் வீட்டுவேலை செய்யும் சேலத்துக்காரர்களின் குழந்தைகள் படிக்கின்றனர். சொல்லிவைத்தால் போல் அவர்களில் பெரும்பான்மையினர் கல்வி கற்பதை ஆறாம் வகுப்பு வரும்போது கைவிட்டு விடுகின்றனர்." ஆக இதற்கு காரணம் மேட்டுக்குடி மனப்பான்மையே. வேறு ஏதும் இல்லை.
டி.டி.இ.ஏ. பள்ளிகளில் தரம் குறைவு என்று யார் ஐயா கூறியது? நான் 20 வருடம் தில்லியில் இருந்தவன். ஒவ்வொரு வருடமும் இப்பள்ளிகளிலிருந்து ரேங்கில் மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள். உங்கள் வாதத்துக்கே வருவோம். அன்புமணி அவர்கள் என்ன நிரந்தர தில்லி வாசியா? தமிழகத்துக்குத்தானே வந்தாக வேண்டும்? இங்குதான் நல்ல தரமான தமிழ்ப் பள்ளிகள் உள்ளனவே. தாத்தா வீட்டில் ஆள்படையில்லையா? இங்கு தமிழ்ப் பள்ளியில் சேர்ப்பதுதானே?
மறுபடி கூறுவேன், அன்புமணி ப்ராக்டிகலாக நடந்து கொண்டிருக்கிறார். அவரைப் போய் அவ்வாறு நடக்கக் கூடியவர் அல்ல என்றெல்லாம் கூறி அவர் ஒரு நல்ல தந்தை இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிடாதீர்கள்.
அது சரி, உங்கள் குழந்தைகளையாவது தமிழகத்தில் உங்கள் மாவட்டத்திலேயே படிக்க வைப்பதுதானே. தயவு செய்து எல்லாவற்றுக்கும் சப்பைக்கட்டு கட்டாதீர்கள்.
நான் கூறிய செய்தி: அன்புமணியைப் போல ப்ராக்டிகலாக இருங்கள். அவர் தந்தை செய்யும் போராட்டங்களில் உங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைத்தால் கலந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அவரவர் குடும்பங்களைப் பார்த்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தொண்டன் அடிப்பட்டு சாவான். அன்புமணிகள் மந்திரிகள் ஆவார்கள்."
அன்புடன்,
டோண்டு ராகவன்
குழலி, உண்மையாகவே எனக்குத் தெரியாமல்தான் கேட்கிறேன், "போற்றிப் பாடடி பெண்ணே" பாடலில் சாதிக்கலவரம் தூண்டும் அளவுக்கு சர்ச்சையான வரிகள் / சொற்கள் என்று எதாவது குறிப்பிட முடியுமா? இல்லை வேறு காரணங்களால் அது சாதிப் பிரிவினைகளைத் தூண்டும் வண்ணம் அமைந்து விட்டதா? பதிவு, பின்னூட்டங்கள் அனைத்தையும் படித்த பின்னும் எனக்கு விளங்காமலேயே இருப்பதால் கேட்கிறேன், தவறாக எண்ண வேண்டாம். அந்தப் படத்தில் எனக்கு பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று, குறிப்பாக இளையராஜாவின் rustic voice :)
அந்த பாடலில் எந்த சாதியையும் தாழ்த்திச்சொல்லவில்லை, தேவரின் சாதியைப்பற்றி உயர்வாக சொல்லப்ப்ட்டிருந்தது அவ்வளவே, ஆனால் இந்த பாடல் ஏற்படுத்திய விளைவுதான் மிகப்பெரியது, சாதரணமாக இரு சாதிக்காரர்கள் மிதிவண்டியில் தெரியாமல் மோதிக்கொண்டாலே மிகப்பெரிய சாதிக்கலவரமாக உருமாற்றிக்கொண்டிருந்த காலகட்டத்திலே ஒவ்வொரு ஊரில் நடைபெறும் திருவிழாவிலும் இந்தப்பாடல் மிக சத்தமாக வைக்கப்படும்,தலித் இனத்தவர் போகும்போதும் வரும்போதும் இந்தப்பாடல் சத்தமாக பாடப்படும் மேலும் தேவர்மகன் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிய ஒவ்வொரு நாளும் ஒரு திருவிழாகோலம் தான், எப்போதும் ஒருவித பதட்டத்திலேயே இருக்கும்.
இங்கே திரைப்படத்தையும் நிஜத்தையும் பிரித்து பார்க்க முடியாத நிழலையும்,நிஜத்தையும் பிரித்துபார்க்கமுடியாத ஒரு நோயுற்ற தமிழ் சமுதாயத்திலே இந்த மாதிரிப்படங்களும் பாடல்களும் சாதிப்பிரச்சினையை கொழுந்துவிட்டு எரியச்செய்தன.
நீங்கள் கூறியதிலிருந்து கமல் மீது குற்றம் சுமத்தும்படியாக எந்தவொரு காரணமும் எனக்குத் தென்படவில்லை. ஒரு படைப்பு விஷமத்தனமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்றளவிலேயே இதனை நான் புரிந்து கொள்கிறேன். 'பாரதி கண்ணம்மா' என்றொரு (சாதிக் கொடுமைகளை முன்வைத்த) படமும் வெளியாகி நடிகர் பார்த்திபனுக்கு கொலை மிரட்டல்களெல்லாம் வந்ததென்று அறிகிறேன். நான் புரிந்து கொள்ளாத ஒரு விஷயம் - ஒரு படைப்பாளிக்கு கருத்து சுதந்திரம் என்பது தேவையா, அல்லது சமூகக் காவலர்கள் என்று கூறிக்கொள்பவர்களின் கருத்தைப் பிரதிபலிப்பு செய்தாலேயே அவர் சர்ச்சைக்கப்பாற் பட்டவராக, பொறுப்புள்ள ஒரு குடிமகனாக கருதப் படுவாரா என்பதே.
கமல் தேவர் மகனோடு நிறுத்தியிருந்தால் இந்த எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டியதில்லை, ஆனால் சண்டியர் என்ற பெயருக்காக செய்த சண்டித்தனமும் தன் கல்லா நிறைந்தால் போதும் என்ற மனப்பாங்கோடு சமூக பொறுப்பின்றி எடுத்த படங்களாலும் தான் விமர்சிக்க வேண்டிய சூழலாகின்றது. சாதியில்லை சாதியில்லை என்று மூச்சுக்கு முப்பது முறை கூறிக்கொள்ளும் கமல் ஏன் தேவர் சாதியை தனது படங்களில் தாங்கிப்பிடிக்கின்றார், தன் சாதி மட்டும் இல்லை ஆனால் நான் இன்னொரு சாதியை தாங்கிப்பிடிப்பேன் என்பதும் சாதீயம் தான்.
// 'பாரதி கண்ணம்மா' என்றொரு (சாதிக் கொடுமைகளை முன்வைத்த) படமும் வெளியாகி நடிகர் பார்த்திபனுக்கு கொலை மிரட்டல்களெல்லாம் வந்ததென்று அறிகிறேன்//
இதுவரை வந்த சாதீயப்படங்களிலே மிகவும் மோசமானது பாரதி கண்ணம்மா என்ற அந்த படம் தான், நேரடியாக கூறுகின்றேன் தலித் களை இதைவிட கேவலமாக எந்தப்படத்திலும் விமர்சிக்க முடியாது. அந்த படதிலே விஜயகுமார் என்ற நடிகர் ஒரு சாதியின் மேலாதிக்கத்தை கண்டிப்பது போலவும் தலித் சமுதாயத்திற்கு ஆதரவாக பேசுவது போலவும் (ஆனால் இந்த சமுதாயத்தை வஞ்சப்புகழ்ச்சியாக மட்டம் தட்டுவது)வைக்கப்பட்ட வசனம் சாதீயத்தின் மிக மோசமான வெளிப்பாடு. கடைசிகாட்சியில் விஜயகுமார் எல்லோருக்கும் அவர்கள் வேலை செய்யவில்லையென்றாலும் கூலித்தருவதும் (பிச்சை), 'நமக்கு வேலை செய்ய நம்மயே நம்பி வந்த சனங்க நாம குடுத்த இடத்துல குடிசை போட்டுக்கிட்டு இருக்கிறவங்க பாயில நாம படுக்க கூடாதுடா' இது என்ன ஆதிக்க சாதியை கண்டிப்பதான வசனமா? அல்லது சீ சீ நாம பார்த்து வாழ்க்கை பிச்சை போட்டோம், அங்கேயெல்லாம் நீ கை வைக்கலாம் என்பது மாதிரியான் ஆதிக்க சாதி மேலாண்மையா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், மேலதிக வசங்களுக்கு பாரதி கண்ணமா படத்தின் கதை வசனம் புத்தக வடிவில் கிடைக்கின்றது அதில் காணலாம் இந்த மாதிரியான வஞ்சப்புகழ்ச்சி வசனங்களை
//இங்கே திரைப்படத்தையும் நிஜத்தையும் பிரித்து பார்க்க முடியாத நிழலையும்,நிஜத்தையும் பிரித்துபார்க்கமுடியாத ஒரு நோயுற்ற தமிழ் சமுதாயத்திலே //
இந்த தமிழ் சமுதாயத்தை திருத்த இந்த 'தலைவர்'கள் என்ன செய்கிறார்கள் குழலி??
Hi
Those 17 comments shows the success of your writtings. But i want to say that till the earth's last rotation the caste feeling will be there. That will not decrease. So, pls dont blame kamal as if he is the reason for caste fights.
Finally, your way of writting has an excellent flow.
//குலலி..
கமலை பற்றிய தங்களது சாடல் வீணானது. தேவர்மகன் தமிழ் மக்கள் அனைவரும் ஏற்று கொண்ட அழகான தமிழ் மண்வாசனை உள்ள படம்.இதில் கமல் அறிவுரை தான் கூறினார்.சண்டை போடதீங்க...பிள்ளைகளை படிக்க வைங்க என்று !!! நான் நினைக்கிறேன்..இதை உங்களால் ஏற்று கொள்ள முடிய வில்லை என்று ...
//
பதிவின் கருத்து படத்தை சாடுவதல்ல... சமூகத்திலே பிரச்சினை உண்டு செய்யக்கூடிய இது மாதிரியான ஒரு படம் தேவையா?
இதைப்பின்னூட்டங்களிலும் தெளிவு படுத்தியுள்ளேன்...
- குழலி
Kamal Showed a part of reality. But do you belive because of these movie only our people got trouble...
Absolutely not...
You cannot blame the mirror...
If you dont likr it change your face not your mirror.
However very good writing style...
Keep it up
Post a Comment