மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள்-ஒரு அலசல்- 3

இந்த பதிவில் இராமதாசுவின் வாரிசு அரசியல் பற்றி
அலசுவோம். இதே தலைப்பில் இதற்கு முந்தைய
பதிவுகளின் சுட்டி இங்கே.
இதுவரை அதை படிக்காதவர்கள் அதை
படித்துவிட்டு வரவும்.

அலசல் - 1

ஒரு அலசல் - 2


இடைக்குறிப்பு
இந்த பதிவுகள் இராமதாசுக்கு புனிதர் பட்டம் கட்டவோ
அல்லது அவர் செய்வது செய்தது எல்லாம் சரியென
வக்காலத்து வாங்கவோ எழுதப்படுவது இல்லை.
வேறு எந்த அரசியல் தலைவர் மீதும் நடத்தப்படாத
திட்டமிட்ட ஒரு ஊடக வன்முறை பாமகவின் மீதும்
இராமதாசுவின் மீதும் நடத்தப்படுகிறது
அது ஏன் என்பதற்காகத்தான் இந்த அலசல்

வாரிசு அரசியல்
மருத்துவர் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு
மகனை மத்திய அமைச்சராக்கியது.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் கூறும் முன் சற்று கடந்த கால
நிகழ்வுகளையும் நினைவு படுத்த வேண்டும்.

எம்.ஜி.ஆர்,அன்பழகன்,நெடுஞ்செழியன் இன்னும்
பல மக்கள் செல்வாக்கு படைத்த அடுத்தநிலை
தலைவர்கள் இருக்கும் போதே மு.க.முத்து என்ற
தனது மகனை அரசியல் வாரிசாக புகுத்தினார்
திரு.கருணாநிதி, அதனால் திமுக வே பிளவுபட்டது
அதன் பிறகு வைகோ என்ற மக்கள்,தொண்டர்கள்
செல்வாக்கு பெற்ற அடுத்த கட்ட தலைவர் இருக்கும் போது
மு.க.ஸ்டாலின் என்ற அடுத்த மகனை வாரிசாக்கினார்
அதனால் மீண்டும் ஒருமுறை பிளவுபட்டது அந்த இயக்கம்,
எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறிய போது
ஒரு மாவட்ட செயளாளர் கூட அவருடம் செல்லவில்லை,
ஆனால் வைகோ வெளியேறியபோது 8 மாவட்டசெயலாளர்கள்
அவருடன் வேளியேறினர் இதிலிருந்தே வைகோ அடுத்த தலைவர் பதவிக்கு மனதளவில்
தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார் என புரிகிறது.

ஆனால் இப்படிபட்ட அடுத்தகட்ட தலைவர்கள் பாமகவில் இல்லை. அரசியல் வாரிசை அடையாளம் காட்டாமல் போனால் அந்த தலைவனுக்கு பிறகு அந்த இயக்கம் பிளவுபட்டு அழிந்துவிடும் (அதை தான் பாமகவிலும் நடக்க வேண்டும் என பலர் கனவுகான்கின்றனர்)

எப்படிப்பட்ட நிலையில் அன்புமணி அரசியலுக்கு வந்தார்?

மருத்துவர் இராமதாசின் முதுகைப்பார்த்தால் அதில் எதிரிகளால் வாங்கிய குத்துக்களைவிட சொந்த கட்சியின் தலைவர்களால் வாங்கிய குத்துகளே அதிகம்.

1995 என எண்ணுகிறேன் பண்ருட்டி இராமச்சந்திரனையும் தனக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார், மருத்துவர் இருக்கும்போதே பாமகவை கைப்பற்ற என்னி
1995லே பாமாகவை பிளந்தார், அது மருத்துவரின் முதுகிலே சொந்த கட்சிகாரரால் வாங்கிய முதல் குத்து 1998 வரை பாமகவில் இராமதாசுவிற்கு அடுத்த நிலையில் இருந்தவர் பேராசிரியர் தீரன்.(இவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை, இவருக்கென்று அல்ல பாமகவில் எல்லாமே மருத்துவர்தான் அவர்பின்தான் வன்னிய இனம் வேறு யார் பின்னும் இல்லை), அடுத்த அரசியல் வாரிசாக மருத்துவரால் அடையாளம் காட்டப்பட்டவர்.

பேராசிரியர் தீரனுக்காக பல செயல் தளபதிகளை இழந்தார் மருத்துவர், அதிமுக விற்கு ஒரு ஆண்டிப்பட்டி தொகுதி மாதிரி, பாமகவிற்கு ஒரு ஆண்டிமடம் தொகுதி, 1991 தேர்தலிலே ராஜீவ் படுகொலை அலையிலும் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலே தான் தோல்வியடைந்தது பாமக. அந்த தொகுதியை பாமகவின் கோட்டையாக மாற்றியது ஞானமூர்த்தி என்ற பிரமுகர், அவருடைய உழைப்பாலும்,பெரும்பான்மையாக இருந்த வன்னியமக்களாலும் ஆண்டிமடம் பாமகவின் நிச்சய வெற்றி தொகுதி.

எந்த கூட்டணியும் இல்லாமல் 1996 தேர்தலை சந்தித்தபோது பேராசிரியர் தீரன் வெற்றிபெறவேண்டும் என தொண்டர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையில் திரு.ஞானமூர்த்தியை குறிஞ்சிப்பாடி தொகுதிக்குமாற்றிவிட்டு திரு.தீரன் அவர்களை ஆண்டிமடத்திலே போட்டியிடச்செய்து சட்டமன்ற உறுப்பினராக்கினார், இதனால் ஞானமூர்த்தி என்கிற செயல் தளபதியை இழந்தார், இன்றும் தன் சொந்த செல்வாக்கினால் ஆண்டிமடத்திலே ஒரு முக்கிய அரசியல் புள்ளியக உள்ளார் திரு.ஞானமூர்த்தி.

1998ம் ஆண்டு தேர்தலிலே அதிமுக வோடு கூட்டணி வைப்பதை எதிர்த்து கட்சியை உடைத்தார் பேராசிரியர் தீரன். அது வெளியே சொல்லப்பட்ட காரணம், உண்மையான காரணகர்த்தா அப்போது முதல்வராயிருந்தவர், கைமாறிய பணம்(பணம் பற்றி சொல்வழிக்கேள்வி,பத்திரிக்கை செய்திகள் மட்டுமே, ஆதாரம் இல்லை எம்மிடம்) . பேராசிரியர் தீரனால் மருத்துவரின் முதுகில் இரண்டாவது குத்து.

அதன்பின் தலித்.இரா.எழில்மலை. முதல்முறையாக மத்திய அமைச்சர் பதவி கிடைத்தபோது இவருக்குத்தான் வழங்கப்பட்டது, தீரனுக்குப்பின் இவர்தான் மருத்துவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்,இவர் பாமகவின் சர்பாக அமைச்சரானவர், ஆனால் வேறுவிதமாக செயல்பட்டார் (இதைப்பற்றி இன்னும் விரிவாக சொல்லவிரும்பவில்லை) இவருக்கு 1999 தேர்தலிலே போட்டியிட அனுமதிக்கப்படவில்லை, தலைமைக்கும் இவருக்கும் கருத்துவேறுபாடு, அதனால் என்ன அமைச்சராக்கிய கட்சியை விட்டு ஓடவேண்டுமா என்ன? ஆனால் அதிமுகவிற்கு ஓட்டமெடுத்தார். இது மூன்றாவதாக முதுகில் விழுந்த குத்து.

திரு.முருகவேல் தென் மாவட்டத்திலே செயல்திறன் மிக்க ஒரு தலித் தலைவர்,2001 தேர்தலிலே அவரை சட்டமன்ற உறுப்பினர் ஆக்க வேண்டுமென பலமில்லாத தென் மாவட்டத்திலிருந்து அவரை வடமாவட்டத்திலுள்ள வந்தவாசி தொகுதியிலே நிறுத்தி சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார். சிவகாமி என்ற மற்றொரு ச.ம.உ. இவரும் வன்னிய சமுதாயத்தவர் அல்ல ஆனால் இவரும் கட்சியை விட்டு விலகி அதிமுகவிலே சேர்ந்துவிட்டார்,இப்போதும் பாமகவினால் கிடைத்த ச.ம.உ. பதவியை உதறாமல்.

எத்தனை எத்தனை குத்துகள் முதுகிலே... அடுத்த தலைவராக அடையாளம் காட்டியபோதும் மருத்துவர் இராமதாசு இருக்கும் போதே கட்சியை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென அத்தனை பேரும் நினைத்தது வேதனை. திரு.பண்ருட்டியார், திரு.தீரன், திரு.தலித்.இரா.எழில்மலைக்கு பிறகு கட்சியில் அனைவருக்கும் அறிமுகமானவர் யாரும் இல்லை. மிகப்பெரிய வெற்றிடம், யாரை வாரிசாக்குவது?

இப்பொழுது திரு.வீரபாண்டி ஆறுமுகத்தையோ, திரு.ஆற்காடு வீராசாமியையோ, திரு.கோ.சி.மணியையோ அல்லது திரு.பொன்முடியை யோ திமுகவின் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டினால் எத்தனை திமுகவினர் ஏற்றுக்கொள்வர், இதுவே வைகோ அடையாளம் காட்டப்பட்டிருந்தால் நிச்சயம் பிரச்சினை இல்லை, வைகோபோல் செல்வாக்குபெற்ற அடுத்த நிலை தலைவர் இல்லை, யாரையேனும் அரசியல்வாரிசாக காட்டினால் கட்சியில் வீண்குழப்பம். தாமாக விலே மூப்பனாருக்குப்பின் பீட்டர் அல்போன்சோ, சோபா வோ, ஜெயந்தி நடராசனோ தலைவராயிருந்தால் அடுத்தவர்கள் விட்டிருப்பார்களா? கட்சியே இல்லாமல் போயிருக்கும் அதே சமயம் அரசியல் வாரிசை அடையாளம் காட்டவில்லையென்றால் அந்த தலைவனுக்கு பிறகு அந்த கட்சி சிதறிவிடும், பலரின் துரோகத்திற்குப்பின் இராமதாசு எடுத்த முடிவுதான் அன்புமணியின் அரசியல் அடையாளம் இதற்கு பாமகவின் 2ம் நிலைத்தலைவர்கள் ஆதரவும் உண்டு, அது சரி இதை எப்படி வன்னிய இனம் ஏற்றுக்கொண்டது, அன்புமணியின் அரசியல் பிரவேசத்தை வைத்து ஒரு பிரச்சினை உருவாகி அதனால் பாமக என்ற அரசியல் கட்சி சிதறி அதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அரசியல் வலிமையை, அரசியல் அங்கீகாரத்தை இழக்கத்தயாராக இல்லை வன்னிய இனம்.

இது நன்றாகவே புரிந்தும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு பாமக அழியாத என ஏங்கிக்கொண்டுள்ளனர் பத்திரிக்கைகளும் இன்னும் பலரும், முகவை,ஜெஜெவை, மூப்பனாரை,காங்கிரசை, பாஜக வை எல்லாம் அரசியல் வாரிசுப்பிரச்சினையை விமர்சிக்கும் போது மென்மையாகவும், பாமகவின் அரசியல் வாரிசுப்பிரச்சினையை விமர்சிக்கும்போது கடுமையும் காட்டுவது பாமக இதனாலாவது பலம் இழக்காதா என்றுதான்

பாமகவின் மீது பூசப்பட்ட வன்முறை பெயரை அழிக்கத்தான் பாராளுமன்றத்துக்கு படித்தவாராக, செயல், நிர்வாகத்திறன் மிக்கவர்களாக நிறுத்துகின்றனர், கட்சிக்காக உழைத்தவர்களை சட்டமன்றத்தேர்தலில் நிறுத்துகின்றனர் இது மருத்துவரின் முடிவு.
பாண்டி உறுப்பினர் பேராசிரியர் ராமதாசு, திண்டிவனம் உறுப்பினர் தன்ராஜ் ஒரு பேராசிரியர், சிதம்பரத்திலிருந்து டாக்டர்.பொன்னுசாமி, வேலு முன்னாள் இ.ஆ.ப. இது அத்தனை யும் பாமகவின் இமேஜை உயர்த்துவதற்குத்தான்.

ஏ.கே.மூர்த்தி மருத்துவரின் பாதுகாப்பு படையிலிருந்த பாமகவின் அடிமட்டத்தொண்டர், அவர் அமைச்சராகவில்லையா? எந்தவித அரசியல் பின்புலனோ, மருத்துவரின் சொந்தக்காரரோ இல்லத தி.வேல்முருகன் பன்ருட்டி சட்டமன்ற உறுப்பினராகவோ இல்லையா? இப்படி இன்னும் பலர் உள்ளனர், எனவே மருத்துவரின் சொந்தங்களுக்கு தான் பாமக என்று புலம்புவதை எங்களை மாற்றாது ஏனைன்றால் பாமகவை நாங்கள் பத்திரிகை வாயிலாக அறிவதில்லை, உள்ளிருந்து அறிகின்றோம்.

எதற்கெடுத்தாலும் அன்புமணி தேர்தலில் நிற்காமல் மந்திரியாகிவிட்டார் என புலம்புபவர்கள் சற்று சிந்தியுங்கள் முகம் தெரியாத வேலு, தங்கராஜ் ஆகியோரெல்லாம் பாமகவின் சார்பிலே நிறுத்தப்பட்டு வெற்றி பெரும்போது அடுத்த வாரிசாக அடையாளம் காட்டப்பட்டு, இராமதாசுக்கு அடுத்தபடியாக கட்சியிலே செல்வாக்காக இருக்கும் அன்புமணிக்கா தேர்தலிலே வெற்றிபெறுவது சிரமம். அன்புமணிக்கு என்றால் மேல்சபை சீட்டு தருகிறோம் மற்றவர்க்கெல்லாம் தரமுடியாது என திமுக சொன்னது, அது மட்டுமில்லாமல் அன்புமணி தேர்தலிலே நின்றால் மற்ற தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்வது யார்? மருத்துவருக்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்த முகம் அன்புமணிதான்.

அன்புமணியின் அரசியல் பிரவேசத்தை வைத்து ஒரு பிரச்சினை உருவாகி அதனால் பாமக என்ற அரசியல் கட்சி சிதறி அதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அரசியல் வலிமையை, அரசியல் அங்கீகாரத்தை இழக்கத்தயாராக இல்லை வன்னிய இனம்.

உங்களது விமர்சனங்கள் கேள்விகள் வரவேற்க்கப்படுகின்றன, இன்னும் ஒன்று (அ) இரண்டு பதிவுகள் மட்டுமே இதைப்பற்றி எழுதலாம் என உள்ளேன்.


ஒரு அலசல் - 4

27 பின்னூட்டங்கள்:

dondu(#11168674346665545885) said...

தானோ அல்லது தன் மகனோ எந்தப் பதவியும் பெறமாட்டோம் என்று கொடுத்த சத்தியம் என்ன ஆயிற்று? அந்தப் பேச்சு விடிஞ்சாலே போச்சா?
"அடுத்த வாரிசாக அடையாளம் காட்டப்பட்டு, இராமதாசுக்கு அடுத்தபடியாக கட்சியிலே செல்வாக்காக இருக்கும் அன்புமணிக்கா தேர்தலிலே வெற்றிபெறுவது சிரமம். அன்புமணிக்கு என்றால் மேல்சபை சீட்டு தருகிறோம் மற்றவர்க்கெல்லாம் தரமுடியாது என திமுக சொன்னது, அது மட்டுமில்லாமல் அன்புமணி தேர்தலிலே நின்றால் மற்ற தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்வது யார்?"
கட்சியில் செல்வாக்கு இருந்திருக்கலாம், ஆனால் வாக்காளர்கள் மத்தியில்? நின்றிருந்தால் ஜயிக்க முடியும் என்றிருந்தால் நிச்சயம் நின்றிருப்பார். அதில் தகராறு வரவே நிற்கவில்லை என்று எனக்குப் படுகிறது. கட்சி என்ன ராமதாஸு அவர்கள் வீட்டுச் சொத்தா? ஜனநாயகத்தில் யாரும் அப்படி இன்றியமையாதவர்கள் இல்லை. ஏன் தேர்தலில் நின்றால் மற்றத் தொகுதிகளில் தங்கள் கட்சியினருக்காகப் பிரசாரம் செய்ய முடியாதா? கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் அதைக் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா?
2001 தேர்தலில் ஜயலலிதாவுடன் கூட்டு. பாண்டிச்சேரியில் தங்கள் கட்சிதான் ஆட்சி செய்யப்போவதாக அலட்டல். என்ன ஆயிற்று? அங்கு நடை பெற்றக் கலவரங்களில் பா.ம.காவின் பங்கிருக்காது என்றுக் கூறுவீர்களா?
என்னுடன் சாரணர் படையில் (ஸ்கௌட்) அச்சுதன் எங்கள் தலைவருக்குச் செல்லம். ஆகவே ஒரு போட்டியில் பரிசளிக்கும்போது திடீரென்று அவன் பெயர் இரண்டாம் பரிசுக்கு அறிவிக்கப் பட்டது. திகைப்புடன் பரிசை வாங்கிய அச்சுதன் என்னிடம் தான் இப்போட்டியில் பங்கெடுக்கவே இல்லை என்று முணுமுணுத்தான். அந்த அச்சுதனாவது முணுமுணுத்தான். ஆனால் இந்த நவீன அச்சுதனோ பெயரைக் கூப்பிட்டதும் சந்தோஷமாக சூட் கோட்டுடன் டக் டக் என்று நடந்து பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். அடாடா என்னக் கண்கொள்ளா காட்சி? மூர்த்தி மந்திரிப் பதவியில் நன்றாகத்தானே பணிபுரிந்தார்? அல்லது வேறு பா.ம.க பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தகுதியில்லையா? அல்லது ராமதாசுவே மந்திரியாகியிருந்தாலும் ஏர்றிருக்கலாம். அவர் கட்சிக்காக உழைத்தவர். தலைவர் மகன் என்பதைத் தவிர வேறு என்னத் தகுதி அன்புமணிக்கு? சுகாதார மந்திரியாகப் போன உடனேயே தொழு நோய் என்பது தொற்றுநோய் என்று திருவாய் மலர்ந்தருளினார். இவரும் டாக்டர் பட்டம் பெற்றவர்!

(உங்கள் தகவலுக்கு: நிறையப் பேர் நினைப்பது போல தொழுநோய் என்பது பார்ப்பதற்கு அறுவறுப்பாக இருந்தாலும் காலரா டைபாயிட் போல தொற்று நோய் அல்ல. அந்த நோய் உள்ளவருடன் விடாது உடல் உறவு கொண்டால் மட்டும் இது பரவும். அதுவும் எயிட்ஸ் அளவுக்கு தீவிரமாக அல்ல. மிடில் ஏஜஸ் என்று அழைக்கப்படும் இருண்ட காலங்களில் இம்மாதிரி நம்பிக்கையால் பல தொழுநோய் நோயாளிகள் கொல்லப்பட்டனர். இப்போது அக்கொடுமைகள் சற்று அடங்கியுள்ள நிலையில் அன்புமணி அவர்கள் கூறியது பற்றி என்ன கூறுவது?)

அதுவும் இரண்டாம் மட்டத் தலைவர்கள் வற்புறுத்தல் காரணமாகவே அன்புமணி பதவி ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது அன்று இன்னொரு கதை. அப்போது கூறியதற்கும் இப்போது நீங்கள் கூறும் சம்பவ வரிசைகளுக்கும் பல முரண்பாடுகள் தெரிகின்றனவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மு. சுந்தரமூர்த்தி said...

குழலி,
இத்தலைப்பில் உங்கள் பொறுமையான தொடர் பதிவுகளுக்கு நன்றி. பா.ம.க.வின் நோக்கம், வளர்ச்சி பற்றி அதிகமாக அறிந்திராதவர்களுக்கு உங்கள் பதிவுகள் உதவும். ஏனோ இதே போன்று எழுதிக்கொண்டிருந்த வீரவன்னியன் பிறகு நிறுத்திவிட்டார். உங்களுக்கு ஒரே வேண்டுகோள். நீங்கள் எழுதுவது அதிகம் விவரங்கள் அறிந்திராதவர்கள் மற்றும் பொய்பிரச்சாரங்களை நம்பி பா.ம.க.வை தவறான கருத்து கொண்டவர்களை நோக்கி இருக்கவேண்டுமேயன்றி, ராகவன் போன்ற விவரமான ஆசாமிகளுக்காக அல்ல. ஒவ்வொரு முறையும் எழுதிவிட்டு அவரைப் போய் வெற்றிலை வைத்து அழைத்து உங்கள் பதிவைப் படிக்கச் சொல்வது தேவையற்ற வேலை.

'மரம் வெட்டி'களை விரும்பாத 'மரம் விரும்பி'களுக்கு:
எனக்குத் தெரிந்து மரம் வெட்டியது தமிழ்நாட்டில் செய்தியானதும், சச்சரவானதும் மூன்று தருணங்களில். ஒன்று எல்லோரும் சளைக்காமல் பேசிக்கொண்டிருக்கும் பா.ம.க.வின் சாலை மறியல் போராட்டத்தின்போது நடந்தது. இன்னொன்று, கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில் சென்னை கிறித்தவ கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொள்ள வந்த ராஜீவ் காந்தியின் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக வளாகத்தில் இருந்த பல பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்ட போது மாணவர்கள் அதை எதிர்த்து போராட்டம் நடத்தியது. (இந்த விழாவை ஏற்பாடு செய்ததில் பிரபல வேளாண்மை அறிவியல் அறிஞர் M.S. சுவாமிநாதனுக்கும் முக்கிய பங்கு இருந்தது). இதேபோன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் இறங்கவும் திருச்சி பக்கத்தில் எங்கோ மரம் வெட்டிய செய்தி வந்ததாக நினைவு.

இப்போது, சில வருடங்களாக தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துவதற்காக நூறாண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த சாலையோர மரங்கள் ஒட்டுமொத்தமாய் வெட்டப்பட்டு வருகின்றன. குறைந்தபட்சம் எனக்குத் தெரிந்து சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் நடந்தது/நடக்கிறது.

ஆக மரம் விரும்பிகளுக்கு ராஜீவ், ஜெயலலிதா போன்றவர்களின் ஹெலிகாப்டர்களுக்காக பொது இடங்களில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதிலோ, நெடுஞ்சாலைத் துறையினர் மரங்கள் வெட்டுவதிலோ எந்த பிரச்சினையுமில்லை. ஒரு மறியல் போராட்டத்தின்போது வாகனங்களைத் தடுப்பதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக மரம் வெட்டியதே பெரிய பிரச்சினை.

தொழுநோய்ப் பற்றி:
மருத்துவர் அன்புமணி தொழுநோய் தொற்றுவியாதி என்று சொன்னதில் பொறியாளர் ராகவனுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. தொழு நோய்/குஷ்டம் எனப்படும் நோய் Mycobacterium leprae எனப்படும் நுண்ணியிரியால் (bacterium) உருவாகும் தொற்றுவியாதியே (infectious/contagious disease). இது எவ்வாறு பரவுகிறது என்பது முழுமையாக அறியப்படாவிட்டாலும், சுவாசத்தின் மூலமாகவே பரவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் மற்ற தொற்றுவியாதிகளைப் போல அவ்வளவு எளிதில் பரவாததற்குக் காரணம் இந்த பாக்டீரியா மனித (அல்லது குரங்குகளின்) உடலில் மட்டுமே வளரக்கூடியது. மற்ற பல பாக்டீரியாக்களைப் போல சோதனைக் குழாய்களிலும், குரங்குகளைத் தவிர வேறு ஆய்வக விலங்குளிலும் M. lepraeவை வளர்க்க முடியாது. மேலும், இந்த பாக்டீரியாவின் வளர்ச்சியும் மெதுவாக நடக்கும். அதே நேரத்தில் வாழ்நாளும் அதிகம். அதன் incubation காலம் என்பது 3-30 வருடம் வரை இருக்கலாம். இது குழந்தைகள் முதல் முதியவர் வரை எல்லாரையுமே தாக்கக்கூடியது. உடலுறவு கொள்ளவேண்டியதில்லை. அதேபோல் நுண்ணியிர் கொல்லிகளைக் (antibiotics) கொண்டு மற்ற தொற்றுவியாதிகளை குணப்படுத்துவது போல அவ்வளவு விரைவாக குணப்படுத்த முடியாது. இந்த காரணங்களிலாலேயே இந்த நோய்க் குறித்த ஆராய்ச்சியில் முன்னேற்றமும் மிக மிக மெதுவாகவே நடக்கிறது. அன்புமணி இந்த வியாதியைப் பற்றி எந்த சந்தர்ப்பத்தில் சொன்னார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தனக்கு ஒன்றும் தெரியாத விஷயத்தையும் கூட தனக்குப் பிடிக்காதவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவது ராகவன் போன்ற ஆசாமிகளால் மட்டுமே முடியும்.

மயிலாடுதுறை சிவா said...

குழலி
நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.
அண்ணன் சுந்தரமூர்த்தி கருத்துகளை வழி மொழிகிறேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

dondu(#11168674346665545885) said...

"மருத்துவர் அன்புமணி தொழுநோய் தொற்றுவியாதி என்று சொன்னதில் பொறியாளர் ராகவனுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை."
என்ன பிரச்சினை என்பதைத்தான் கூறியிருக்கிறேனே. இன்னும் புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? மறுபடியும் கூறுகிறேன். ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்த தவறானக் கருத்து காரணமாக தொழு நோயாளிகள் அனுபவித்தக் கொடுமைகளை எழுத்துக்களில் வர்ணிக்க முடியாது. அதே கருத்தை மந்திரி அவர்களே, அதுவும் மருத்துவர், முன் வைப்பது மிகக் கொடுமையே. போதுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Leprosy is a chronic infectious disease which attacks the skin, peripheral nerves and mucous membranes (eyes, respiratory tract).

for more info
http://www.who.int/lep/disease/disease.htm

Anonymous said...

ஆக எல்லோரும் முதுவுல குத்திட்டு போய்ட்டாங்க. இப்ப ராமதாசும், அன்புமணியும் தான் கட்சி. இன்னும் ஒரு மந்திரி பதவி மத்திய அரசு கொடுதுச்சின்னா ராமதாசு என்ன செய்வார்? மருமகளையும் மந்திரி ஆக்கிடுவாரா? ஏன்னா கட்சியில தான் ஆளு இல்லயே!
"தனக்கும் மகனுக்கும் ஒரு கட்சி" ரொம்ப நல்லா இருக்கு.

சுந்தரவடிவேல் said...

ராமதாசு ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து அதுக்கு 100 கோடி (இன்றைய விலைவாசியேற்றப்படி கூட்டிக் கொள்ளவும்)செலவில் கல்யாணம் பண்ணி வக்கிறாரான்னு நீங்க சொல்லணும்!

குழலி / Kuzhali said...

//கட்சி உடையக்கூடாது என்பதற்காக தன் வாரிசையே கட்சியின் வாரிசாக்கினார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது அவருக்கு தன் கட்சி அல்லது தம்மக்கள் மீது நம்பிக்கையில்லை என்பது போலாகிறது. சரி அவ்வாறு மருத்துவரின் முதுகில் குத்தியவர்கள் வளர்ந்துவிட்டார்களா என்ன?
//
மருத்துவர் இருக்கும் வரை யார் நினைத்தாலும் பாமகவை பிளந்து செல்வாக்கிழக்கவைக்க முடியாது, அவருக்குப்பிறகும் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த வாரிசு அடையாளம்,மு.க.முத்து, மு.க.ஸ்டாலின் போல கட்சியிலே பல முன்னனி தலைவர்கள் இருக்கும் போதே வாரிசுப்பட்டம் கட்டப்படவில்லை அன்புமணிக்கு, அவருக்கு எந்த சூழ்னிலையில் வாரிசுப்பட்டம் கட்டப்பட்டது என தெளிவாக பதிவில் கூறியுள்ளேன், இராமதாசும் அன்புமணியும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என கூறவில்லை, ஆனால் பாமக மீதும், இராமதாசுமீதும் காட்டப்படும் அர்த்தமற்ற,அளவுக்கதிகமான காழ்ப்புணர்ச்சிதான் பிரச்சினையே! இதற்கு மேலும் இதைப்பற்றி நான் பேசுவது கால விரயம்,

கூட்டணி தாவல் பற்றியும் முந்தைய பதிவில் தெளிவாக சொல்லிவிட்டேன், மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்பதற்கும் மீண்டும் அதே பதிலை சொல்வதற்கும் எனக்கே அலுப்பாக உள்ளது.

//கட்சியில் செல்வாக்கு இருந்திருக்கலாம், ஆனால் வாக்காளர்கள் மத்தியில்? நின்றிருந்தால் ஜயிக்க முடியும் என்றிருந்தால் நிச்சயம் நின்றிருப்பார். அதில் தகராறு வரவே நிற்கவில்லை என்று எனக்குப் படுகிறது//

முகம் தெரியாத வேலு,தன்ராஜ் எல்லாம் பாமக சார்பாக ஜெயிக்கும் போது அன்புமணி ஜெயிப்பது ஒரு விடயமே இல்லை. வேலுவுக்கும்,தன்ராஜிக்கும் என்ன மக்கள் செல்வாக்கு இருந்ததா அல்லது அவர்கள் சொந்த செல்வாக்கினால் வென்றனரா? உங்களுக்கு ஒரு செய்தி கூட்டணி தொகுதிப்பங்கீட்டிற்கு முன்பே திண்டிவனம் தொகுதியில் அன்புமணி போட்டியிடுவது முடிவு செய்யப்பட்டு செஞ்சி ராமச்சந்திரனிடம் பேசி அவரை வந்தவாசி தொகுதியில் போட்டியிட சொல்லியாகிவிட்டது, திண்டிவனத்தில் சில இடங்களில் அன்புமணி பெயர் எழுதி விளம்பரமும் செய்தாகிவிட்டது, கடைசிநேரத்தில் திமுக கூறியதால் தான் மாற்றப்பட்டது.
//அன்புமணிக்கு என்றால் மேல்சபை சீட்டு தருகிறோம் மற்றவர்க்கெல்லாம் தரமுடியாது என திமுக சொன்னது//

//அப்போது கூறியதற்கும் இப்போது நீங்கள் கூறும் சம்பவ வரிசைகளுக்கும் பல முரண்பாடுகள் தெரிகின்றனவே.
//
எதில் முரண்பாடு என குறிப்பிட்டு கூறினால் தவறிருந்தால் திருத்திக்கொள்கிறேன், இல்லையென்றால் விளக்கம் தருகிறேன்.

புரட்சியாளர் செ குவேராவின் கனவிலிருந்து போராட்டத்திற்கு என்ற புத்தகத்தில் தொழுநோயாளிக்கு பணிவிடை மற்றும் மருத்துவம் செய்தவர்களுக்கும் தொழுநோய் பீடித்தது பற்றி எழுதியுள்ளார், உங்கள் தகவலுக்கு, புரட்சியாளர் செ குவேரா ஒரு மருத்துவ கல்லூரி மாணவராக இருந்தவர், அவர் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொண்டது இந்த தொழுநோய் பற்றி தான்.

நியாயமான கேள்விகளுக்கும், விமர்சனத்திற்கும் பதிலிறுக்க தயாராக உள்ளேன் மற்றபடியான கேள்விகளை பொருட்படுத்த மாட்டேன்.

Thangamani said...

குழலி,

முதலில் நீங்கள் யாருக்கு எழுதுகிறீர்கள் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.சுந்தரமூர்த்தியோடதுதான் என்னுடைய கருத்தும்.

அப்புறம் மரம் வெட்டினதப்பற்றி குற்ற உணர்ச்சி வேண்டியதில்லை. இங்க மனிசன வெட்ற கட்சிகளே (பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ், காஞ்சி மடம்) வெட்கப்படறதில்ல.
மரவெட்டின்னு நூறுதரம் எழுதற ஆவி எல்லாம் தலைவெட்டின்னும் எழுதறதா என்ன?

அவனுங்க வச்ச மரம், அவன் அப்பன் பாட்டன் பூட்டன் வச்சது. அந்த மரங்கள நம்பி வாழற மக்களே வச்சது. அத வெட்றதால அவங்களுக்குத்தான் அதிக பாதிப்பு. இங்க சென்னையில சொகுசா உக்காந்துகிட்டு மரவெட்டின்னு சொல்றவங்களுக்கு இல்ல. அதைவாஇத்து வன்னிய்யர்களுக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்கி அவங்க போராட்ட உணர்வு குறித்து வெட்கப்பட வைக்கனும்னு நினைக்கிறவங்களுக்கு பலியாகிப்போகாது இருங்கள். குற்ற உணர்ச்சியை வைத்தே மக்களை பிளந்து அழிப்பது அவர்கள் கைவந்த கலை.ராஜீவ் கொலை, இந்தி எதிர்ப்பு, தமிழ் வழிக்கல்வி எதையுமே குற்ற உணர்ச்சி வர்ர மாதிரி பேசுவது, கருத்து உண்டாக்குவதும் அவர்களின் தனித்திறமை.

அவங்க அதையெல்லாம் வெட்டினது அரசு செவுடா பாராமுகமா இருந்ததுனாலதான். இதற்கான் பழியும் பாவமும் இந்த அரசை ஆட்டிவைக்கும் அவர்களுக்குத்தான் சேரும்.

குழலி / Kuzhali said...

எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி இருப்பவர்களுக்கு நான் இந்த பதிவுகள் எழுதவில்லை, அவர்களுக்கு எத்தனை எழுதினாலும் மாற்றமுடியாது. பத்திரிகை ஊடகத்தின் திட்டமிட்ட பொய் பிரச்சாரத்தினால் பாமக மீதும்,இராமதாசுமீதும் உண்மை அறியாமல் துவேஷம் கொண்டுள்ளவர்களுக்காகத்தான் எழுதுகிறேன் அதில் சிறிது வெற்றியும் கண்டுள்ளேன் தனிப்பட்ட முறையில் எனக்கு சில மின்னஞ்சல்கள் வந்துள்ளன, இது வரை இராமதாசுவை பற்றி கொண்டிருந்த கருத்துகளை, இந்த பதிவுகளை படித்தபின் மாற்றிக்கொண்டுள்ளேன் என கூறியுள்ளார் பின்னூட்டம் இடாத எத்தனையோ பேர் இந்த பதிவுகளுக்குப்பின் அவர்களின் கண்ணோட்டம் நிச்சயமாக மாறியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை, இதைத்தான் நான் எதிர்பார்ப்பதும் கூட.

Anonymous said...

http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post.html

மாயவரத்தான் said...

//வாகனங்களைத் தடுப்பதற்காக **அங்கொன்றும் இங்கொன்றுமாக** மரம் வெட்டியதே பெரிய பிரச்சினை.//

Adaengappaa..! Kekkuravan Kenaiyaa irundhaal...!?!?

aathirai said...

வன்முறை கட்சி என்ற பேரை துடைக்க வேண்டுமென்று முயற்சிப்பதாக சொன்னீர்கள்.
படத்தை ஓட விட மாட்டோ ம் என்று மிரட்டுவதும், பத்திரிகை அலுவலகங்களை
தாக்குவதையும் எப்படி விளக்கப் போகிறீர்கள்? மற்ற வன்முறை கட்சிகளை விட இது கொஞ்சம்
தேவலை என்று வேணுமானால் சொல்லலாம்.

இவருடைய கல்வி கொள்கையையும் விளக்குங்கள்.அரசு பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு வரை எல்லோருக்கும்
பாஸ் போட வேண்டுமாம். அப்புறம் பத்தாவதில் அவனே பெயிலாகிப் போவார்கள். படிக்காத அல்லது படிக்க
சரியான் சூழ்னிலை இல்லாதவர்களை படிப்பதற்கு உதவாமல், ஏற்கெனவே உருப்படியா படிப்பவனையும்
இனி நீ படிக்க தேவையில்லை என்று சொல்வது போல உள்ளது. இவர்கள் வீட்டு பிள்ளைகள் அரசு
பள்ளிகளில் படித்தால் இப்படி பள்ளிகளின் தரத்தை குறைக்க சொல்வார்களா? (அனைத்து கட்சிகளும்
இதற்கு பொறுப்பு. )

குழலி / Kuzhali said...

//தொழுனோய் தொற்று நோய் இல்லை என அரசாங்கம் சொல்ல காரணமே நோயாளிகளை தனிமை படுத்த கூடாது என்பதற்காக. ஒரு குடும்பத்தை புகழ நோயாளிகளை பிரச்சினைக்கு உள்ளாக்காதீர்.
//

தொழு நோயாளிகளை பிரச்சினைக்குள்ளாக்க வேண்டுமென்று அல்ல, தொழுநோய் தொற்றுநோயல்ல என அரசாங்கமே பொய் பிரச்சாரத்திலிறங்க வேண்டுமா?

அது தொற்றுநோயல்ல என்ற எண்ணத்தில் பலர் அலட்சியமாக இருந்து அதை வாங்கிக்கொண்டால் சரியா?

பலர் சொல்வது போல் தொழுநோய் தொற்று நோய் என்பதற்காக தொழுநோயாளிகளை யாரும் கொன்றதில்லை,வெறுத்ததில்லை.
தொழுநோயாளிகள் பாவம் செய்தவர்கள், ஒழுக்க கேடானதால்தான் அவர்களுக்கு தொழுநோய் வந்தது என தவறாக நம் சமூகத்தில் புரிந்துகொள்ளப்பட்டதால் தான் பிரச்சினை. அதற்கு நம் சமுதாயத்தில் பரப்பப்பட்ட தவறான கருத்து தான் காரணம் இதில் கூட அரசியல் செய்வதென்பது,விமர்சிப்பது என்பது பாமக என்ற ஒரே காரணத்தினால் என்பது மறுக்கமுடியாத உண்மை.

மீண்டும் தொழுநோய் தொற்றூநோயல்ல என பின்னூட்டமிடவேண்டாம், இதற்கு முந்தைய பின்னூட்டங்களில் இதை நிரூபிப்பதற்கான சுட்டிகள் உள்ளன.

Unknown said...

நாடோடி,

இராமதாஸை மரத்திற்கு மரம் தாவும் குரங்கு என்று சொல்வதிலேயே உங்களுக்கு அரசியல் அவ்வளவாக தெரியவில்லை, அல்லது தெரியாதது போல கண்ணை மூடிக்கொள்கிறீர்கள் என்பது தெளிவாகிறது.

எந்த அரசியல் கட்சியாவது அப்படி தாவாமல் இருந்திருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா? இந்திராவை மிசா சட்டத்தின்போது எதிர்த்த கருணாநிதியே தான் அடுத்து வந்த தேர்தலில் "நேருவின் மகளே வருக" என்று வரவேற்றார். காங்கிரஸ் கூட தான் மத்தியில் ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட்டை துணைக்கு அழைக்கிறது.

இராமதாஸை கூட்டணி தாவுபவர் என்று சொல்லுபவர்கள் யாராவது இராமதாஸின் கூட்டணி வேண்டாமென்று மற்ற அரசியல் கட்சிகளைச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

டோண்டு சார், தானோ தன் வாரிசுகளோ பதவி பெற மாட்டோம் என்று அவர் சத்தியம் செய்து அதை மீறிவிட்டார் என்று சொல்கிறீர். அப்பொழுது மற்ற கட்சியினர் எல்லோரும் தன் வாரிசுகளையே பட்டபிரமானம் செய்து வைப்போம் என்று சத்தியம் செய்துகொண்டா உள்ளே வருகிறார்கள். வாரிசு என்பது உருவாக்கப்படுமானால் அந்த வாரிசு சில காலங்களிலேயே அடையாளம் தெரியாமல் போய்விடும். அதற்கு கண்ணெதிர் உதாரணம் மு.க.முத்து. நேரு - இந்திரா - ராஜிவ் - சோனியா - ராகுல், கருணாநிதி - ஸ்டாலின், மூப்பனார் - வாசன் இப்படி எத்தனையோ வாரிசுகள் உண்டு. ஆனால் அவரவர்க்கு தனித்திறமை இல்லையென்றால் அடித்தளம் ஆட்டம் கண்டுவிடும். அது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரிய வரும். அது வரையில் பண்ருட்டியார், தீரன் போன்று முதுகில் குத்தாத வாரிசாக அன்புமணி இருப்பதில் பாமகவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. பாமகவுக்கென இருக்கும் ஓட்டுவங்கிக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

மாயவரத்தான் said...

தமிழ் நாட்டுக்குள்ளே பத்திரிகையாளர்கள் ஒருத்தனையும் நுழைய விடக் கூடாது. டேய்.,நான் சொல்றதை அப்படியே எழுதிக்குங்கடா என்று நிருபர்களைப் பார்த்து தொண்டர்கள் மத்தியில் பொதுக்கூட்டத்தில் வீராவேசமாக பேசியும், வாரப்பத்திரிகையின் நிருபர் ஒருவரைப் பார்த்து காறித் துப்புவதையும் எந்த விதத்தில் நியாயப் படுத்துவீர்கள் குழலி?! படித்த, பண்பான (?!) தலைமைக்கு இது அழகு தான் என்று கருதுகிறீர்களா?!

G.Ragavan said...

இராமதாசின் அரசியல் செயல்பாடுகள் பற்றி எல்லாரும் சொல்கிறார்கள் நானும் சொல்கிறேன்.

அவரது மகனை முன்னிறுத்துவது கட்சியைக் காப்பாற்றுவது என்பது வாதம். இது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.இது கட்சி நடத்துவதிலுள்ள திறமையின்மையக் காட்டுகிறது. நம்பிக்கையில்லாத தொண்டர்களும் தலைவர்களும் உள்ள கட்சி என்றால் யாரைக் குறை சொல்வது?

மற்றொன்று சாதிப்பற்று. இன்னமும் பாமக அப்படித்தான்ந் நடந்து கொள்கிறது. பார்பணீயத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கும் இராமதாசுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது என்பது என் கருத்து.

வன்முறையைகச் செய்வது. பாபா விஷயத்திலும் மும்பை எக்ஸ்பிரஸ் விஷயத்திலும் பார்த்தாகி விட்டது. நல்ல தமிழ்ப் பெயர்களுக்கு ஆதரவு என்பது வேறு. படப்பிடிப்புத் தளங்களுக்கு ஆளனுப்பி மிரட்டுவது என்பது வேறு. (இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று வேறு கேட்பார்கள்). நல்ல பெயர்க்ளுக்கு ஆதரவு கொடுங்கள். நாங்களும் கூட வருகிறோம். திரையைக் கிளிக்க நாங்கள் தயாராக இல்லை. இதைத்தானே வைகோ சொல்கிறார். அவருக்குத் தமிழுணர்ச்சியில்லையா?

அன்புடன்,
கோ.இராகவன்

யாத்ரீகன் said...

What do you say for this ?

http://mugamoodi.blogspot.com/2005/05/vs.html

யாத்ரீகன் said...

வணக்கம் குழலி..
உங்கள் மூன்று பதிவுகளையும் படித்தேன்.. நான் அறியாத பல தகவல்கள அறிந்து கொண்டது மட்டுமின்றி, பிரச்சனைகளின் பல பரிணாமங்களையும் பார்க்க முடிகின்றது..

இராமதாஸ் மீதான எனது பார்வை...உங்கள் கட்டுரை மூலம் முழுவதாக மாறிவிட்டதாக கூற முடியாவிடினும், சிறிதே வேறு பார்வை ஒன்றையும் உருவாக்கி உள்ளது...

ஆனாலும் அவர் செய்வதை,செய்ததை அனைத்தையும் என்னால் சரி என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை.. தவறு யார் செய்திடினும் கண்டித்திட வேண்டும் என்பதில் மட்டும் நான் 100% வீதம் ஒத்துப்போவேன்...

தகவல்களுக்கு நன்றி குழலி...

குழலி / Kuzhali said...

வணக்கம் செந்தில், இந்த தொடரின் கடைசி பகுதிக்கான சுட்டி இதோ http://kuzhali.blogspot.com/2005/06/4.html

//நான் அறியாத பல தகவல்கள அறிந்து கொண்டது மட்டுமின்றி, பிரச்சனைகளின் பல பரிணாமங்களையும் பார்க்க முடிகின்றது..
//
இதைத்தான் நான் எதிர்பார்த்ததும் கூட, ஊடகங்கள் குறைந்த பட்ச நடுநிலைமையாக கூட செயல் படவில்லை என்பது என் கருத்து, இது மருத்துவர் இராமதாசு விடயத்தில் மட்டுமல்ல இதேதான் திருமாவிற்கும் நடக்கின்றது, காஷ்மீரிலிருந்து, வடகிழக்கு இந்தியாவில் நடப்பதிலிருந்து, ஈழப்பிரச்சினை வரை ஊடகங்கள் தான் நினைப்பதை தன் சார்பு கருத்துக்களை மக்களுக்கு புகட்டிக் கொண்டிருக்கின்றன, எனக்கு தெரிந்த விடயங்களை என் நண்பர்களிடம் இத்தனை நாள் பகிர்ந்து கொண்டிருந்தேன் அதை இப்போது வலைப்பதிவில் பகிர்ந்து கொண்டேன்.

//இராமதாஸ் மீதான எனது பார்வை...உங்கள் கட்டுரை மூலம் முழுவதாக மாறிவிட்டதாக கூற முடியாவிடினும், சிறிதே வேறு பார்வை ஒன்றையும் உருவாக்கி உள்ளது...
//
இதுவே போதுமானது, இப்படி ஒரு பரிமாணம் இருக்கின்றது என்பது புரிந்தாலே எனக்கு பெரிய வெற்றி தான் இது.

Anonymous said...

How did Dr.(?) Romdoss earn this much money with in a short period?

IT IS PURELY PUBLIC MONEY. WAIT FOR A GOOD RULE.

Anonymous said...

NOT ONLY TAMIL BUT ALSO INDIAN POLITICIANS PROPERTY MUST BE SEIZED IMMEDIATELY TO MAKE INDIA OUR COUNTRY WEALTHY

Anonymous said...

ராம தாஸ் அன்புமணியை அமைச்சராக்கியது குடும்ப அரசியல் என்றால் கருணாநிதி செய்தது என்ன?

Anonymous said...

I could understand the genuineness and quality of Leader Dr.Ramadoss. But i was worrying how to control misleading the people by giving false information by the media about Doctor. After I read your articles, yes It is possible to contain the misformation campaign by media and other political parties. Thanks lot

Anonymous said...

ராமதாஸ் ... தமிழ் நாட்டின் தனிப்பெரும் தலைவராக வர எண்ணாமல் ஒரு குறுகிய வட்டம் போட்டுக்கொண்டு அதில் தன்னையும் தன் மகனையும் மட்டுமே முன்னிலை படுத்தும் ஒரு சாதரண அரசியல் வாதி ... ஒரே ஒரு தேர்தலில் பாமக தனித்து விடப்பட்டால் பாமக வின் எதிர்காலம் கனவுதான்

Anonymous said...

நண்பா...வன்னிய சமுதாயத்தையும் மருத்துவர் அய்யா அவர்களை பற்றியும் யாருக்கும் விளக்க அவசியம் இல்லை.....தமிழ் நாட்டின் ஒரே சத்திரிய குலம் நாம்... கண்ட வேற்று சாதி காரர்களுக்கு விளக்கம் சொல்ல அவசியம் இல்லை...


வாழ்க வன்னிய குல சத்திரியர்கள்....

இவன்

கார்த்திக்கேய நாயகன்

Anonymous said...

என்னா சாரு, வரலாறு வந்து -----கழுவி விடாது சாரு. நாம தான் கழுவணும் சாரு...