தீபாவளி தீபாவளியாம்.... சிங்கப்பூரில் தீபாவளியாம்
வணக்கம்ம்ம்ம்ம்ம்ம், நம்ம நிர்மலா பெரியசாமி வணணணணக்கம் சொல்வது மாதிரி ஒலி96.8ல் ஒருவர் இப்படித்தான் வணக்கம்ம்ம்ம் அப்படினு சொல்லுவாங்க, அது ஒலி96.8 னா சிங்கையில் உள்ள 24 மணி நேர வானொலிச்சேவை... சிங்கப்பூரில் தீபாவளி தேசிய விடுமுறை நாள், எங்கள் அலுவலகத்தில் இந்துக்களுக்கு மட்டும் தீபாவளிக்கு முந்தைய நாளில் அரை நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், வழக்கம் போல குட்டி இந்தியா பகுதி இந்த ஆண்டும் வண்ண அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, 2002,2004ம் ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு அலங்காரம் மிக அருமையாக உள்ளது.
என்னதான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் பிடிக்கவில்லையென்றாலும் தீபாவளி என்றால் அது ஒரு தனி மகிழ்ச்சி தான், பள்ளி பருவத்தில் தீபாவளிக்கு இன்னும் 20 நாள் இருக்கு இன்னும் 10 நாள் இருக்கு என்று நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதிலும் சரி நம்ம வீட்டு சந்தில் வெடித்த வெடி குப்பைகளை சந்து முனையில் கொண்டு வந்து கொட்டி நம்ம வீட்டில் நிறைய வெடி வெடித்த தாக பீலா விட்டுக்கொண்டு திரிந்ததும் சரி மறக்கவே முடியாதது, பதின்ம வயதில்...அட வேண்டாங்க, அதை வேறு ஜொல்லிக் கொண்டு... தீபாவளியின் போது பெரிய வில்லனே மழை தான் ஆனால் ஒரு தடவை வில்லனாக வாய்த்தது தமிழக அரசு, ஆமாங்க 30 நாட்கள் என் தந்தையை தூக்கி உள்ளே வைத்து விட்டார்கள், ஆசிரியர் போராட்டத்தில் கலந்து கொண்டு முதல் நாளே சிறை சென்று விட்டார், அந்த தீபாவளி இன்னமும் மறக்க முடியாதது, ஒரு பக்கம் அந்த ஒரு மாதமும் காலையில் 5.00 மணிக்கு எழுந்து படிக்க வேண்டுமென்ற பிரச்சினை இல்லையென்றாலும் மறுபக்கம் அப்பா வீட்டில் இல்லாமல் மிகவும் கடினமாக இருந்தது, ஆனாலும் வழக்கம் போல புதுத்துணி உடுத்தி பட்டாசு வெடித்து நான் சந்தோசமாகத் தான் கொண்டாடினேன் புரியாத வயசு பாருங்க, உலக சந்தோசமே அந்த பட்டாசு வெடிக்கிறதுல மட்டும் தானே இருந்தது.
இந்த குட்டி பசங்களை பாருங்களேன் எவ்வளவு ஆர்வமாக பட்டாசு கடையை வேடிக்கை பார்க்கிறாங்க
தீபாவளி சிறப்பு கடைகள்
சரி இந்த முறை தீபாவளியும் ஹரிரயாவும்(ரம்ஜான்) ஒரே வாரத்தில் வருகின்றது, அதனால் குட்டி இந்தியா பகுதியில் வேலை நாட்களிலும் கூட கூட்டம் களை கட்டி இருக்கின்றது. தீபாவளி சிறப்பு கடைகள் எல்லாம் தூள் பறக்கின்றன, 'தீபாரயா' என்ற சொல் இங்கே தற்போது மிகப் பிரபலம், அட சென்ற ஆண்டு எங்கள் அலுவலக தீபாவளி கொண்டாத்தில் எல்லோரும் பாரம்பரிய உடையில் வரவேண்டுமென்றனர், நான் ஒரு வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து கொண்டு போய் நின்றேன், சி(ப)லர் என்ன ஸ்கர்ட் அணிந்து கொண்டு வந்துள்ளாய் என்று ஒரே கரைச்சல் தான் போங்க, அதன் பிறகு ஏய்... எப்படி உனக்கு இந்த ஸ்கர்ட் இடுப்பில் நிற்கின்றது, பெல்ட் போட்டு கட்டியிருக்கிறாயா என்றெல்லாம் கலாய்த்தனர், கட்ட கடைசியாக மேடையிலும் ஏற்றி விட்டு விட்டனர், ஐஸ்வர்யாராய் உலக அழகி போட்டியில் இறுதி சுற்றில் மேடையில் நின்றது போல நான் உணர்ந்தேன், ஒரே உதறல், என் முறை வந்த போது நம் பராம்பரிய உடை இது என்று கூறினேன், குர்தா அணிந்து வந்திருந்த ஒரு வட நாட்டு நண்பர் எனக்கு முன் குர்தாவை பாரம்பரிய உடை என்று வேறு கூறிவிட்டார், உடனே கூட்டத்திலிருந்து ஏய் என்ன டகால்ட்டி வித்தையா நீயும் பாரம்பரிய உடை அப்படிங்கற, அவரும் பாரம்பரிய உடைங்கறார் என்ன இது சின்ன புள்ளத்தனமா என சத்தம், அதன் பிறகு வேட்டியின் பிரதாபங்களை விளக்கிவிட்டு கட்ட கடைசியாக இது எங்கள் அரசியல்வாதிகளின் சீருடை(யூனிபார்ம்)யும் கூட என்றேன், அன்னைக்கே வச்சாங்கய்யா நமக்கு ஆப்பு, என்னனா என் பேரிலேயே இன்னும் ஒருவரும் எங்கள் அலுவலகத்தில் இருக்கின்றார், அதனால் வேறு படுத்தி காட்ட 'பொலிட்டீஷியன்' என்ற அடை மொழி என் முன் ஒட்டிக்கொண்டுவிட்டது. இதில் என்ன பெரிய ஆச்சரியம் என்றால் கங்குலி ஆஸ்திரேலியாவோட சதம் அடித்த மாதிரி எனக்கு முதல் பரிசு தந்து விட்டார்கள் அந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளவில்லை அதுக்குள்ள அடுத்த தீபாவளி வந்துவிட்டது.
அனைவருக்கும் என் தீபாவளி நல் வாழ்த்துக்கள், தலை தீபாவளி கொண்டாடப் போகும் கோபி, மூர்த்தி, கங்கா மற்றும் தலை தீபாவளி கொண்டாடப்போகும் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்....
சரி கடைசியா ஒரு கேள்வி... என்ன கடைசியா இது தானடா முதல் கேள்வியே என்று யாரப்பா என் தலையில் கொட்டுவது?
இராமரும், சீதையும் தலை தீபாவளியை எங்கு கொண்டாடினர்? மிதிலையா? அயோத்தியா?
சரி சரி பழசு தான் பழசு தான் என்ன செய்யறது புதுசா சரக்கு எதுவும் இல்லையே!!!
சிங்கப்பூர் குட்டி இந்தியா பகுதியிலிருந்து உங்களிடமிருந்து விடை பெறுவது குழலி குழலி குழலி.... நன்றிஇஇஇ
20 பின்னூட்டங்கள்:
வேட்டிக்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
அப்படியே வேட்டி கட்டுன படத்தை போட்ட குறைஞ்சா போயிடுவீங்க.
'பட்டாசு கடையை வேடிக்கை பார்க்கிறாங்க'
- எல்லாம் made in china or sivakasi?
// இராமரும், சீதையும் தலை தீபாவளியை எங்கு கொண்டாடினர்? மிதிலையா? அயோத்தியா?//
அப்போது தீபாவளி பண்டிகையே கிடையாது. நரகாசுர வதம் இராமாவதாரத்திற்குப் பிறகுதானே? -((
இந்த வருடம் குட்டி இந்தியா அலங்கார வளைவுகளில் 'ஹிந்தி' எழுத்துக்கள் தென்படுகிறதே!! அதை கவனித்தீர்களா?
அன்பின் குழலி,
வணக்கம். தங்களின் வாழ்த்துக்கு என் சிறப்பு நன்றி. உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
சென்ற ஆண்டு வெகு விமர்சையாக அங்கிருந்து கொண்டாடினேன். இந்த ஆண்டு தலைதீபாவளி ஆகையால் மச்சினிச்சி வீட்டில்(மாமனார் வீட்டு மோதிரத்தோடு) கோலாலம்பூரில் கொண்டாடப் போகிறேன்.
சின்ன சின்னதா சங்கு சக்கரம் வாங்கி வீட்டுக்கூள்ள வெச்சி வெடிங்க. பெருசா வெடிச்சா புடிச்சு உள்ளாற போட்ருவாங்க. பத்திரமா வெடிங்க.
நான் ஊருக்குப் போயிட்டு வந்ததும் வந்து சந்திக்கிறேன்.
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
இந்து நண்பர்கள் அனைவருக்கும் உளம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!
LLdasu,
குட்டைய குழப்புறதுக்கு மட்டும் முதல் ஆளா வந்துருவீங்களே .இந்த வருடம் மட்டுமல்ல .கடந்த 5 வருடங்களாக இந்தியில் எழுதியிருப்பதை பார்த்திருக்கிறேன் .உம்முடைய கண்ணில் பட்டும் புதிதாக தெரிகிறது .அதிலும் தமிழார்வலர்களை நக்கல் பண்ணுவது உம்ம ரத்தத்தில் ஊறி போயிருக்கிறது போல .இந்தியர்கள் அனைவருக்குமான பண்டிகைக்கு இந்தியிலும் எழுதுவது ஒன்றும் தவறில்லை .
படங்கள் போட்டதுக்கு நன்றி குழலி.
நானும் இந்தவருஷ அலங்காரம் எப்படி இருக்கும்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
இந்த வருட அலங்காரங்கள் முதலில் பார்த்தபோது அவ்வளவு ஈர்க்கவில்லை, ஒளியேற்றியபிறகு மிக அழகாக இருக்கிறது.
புவான்காங் MRTநிலைய வெள்ளையானைச் சர்ச்சை ஞாபகத்துக்கு வந்தது, முதலில் இங்கு வெள்ளை யானை பார்த்தவுடன். விளக்கில் பார்த்தபின்புதான் புரிந்தது - கருப்பில் இருந்திருந்தால் இவ்ளோ துணிப்பாக தெரியாதே என்று!
பதிவுக்கும், படங்களுக்கும் நன்றி. சிராங்கூன் பக்கம் விலக இடமில்லை - இதுல்ல இன்னொருமுறை செல்லவேண்டியிருக்கிறது, பார்க்கலாம்.
At 2:38 AM, Dharumi said…
'பட்டாசு கடையை வேடிக்கை பார்க்கிறாங்க'
- எல்லாம் made in china or sivakasi?
பெரும்பாலும் சீனா.வாழ்த்து அட்டைகள் இந்தியாவிலிருந்து வருகிறது - சிவகாசியாகவும் இருக்கலாம்:)
ஜோ- உங்கள் கருத்துக்கள் மூலம் பல இடங்களில் வியக்கவைக்கின்றீர்கள், பாராட்டுக்கள்.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
குழலி, ஷாப்பிங்கெல்லாம் முடிச்சுட்டீங்களா? இந்த வாரக் கடைசிலே தான் பட்டாசு வாங்கப் போகணும்.
வாழ்த்துக்கு நன்றி, ஜோ.
//என்னதான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் பிடிக்கவில்லையென்றாலும்//
நரகாசுரனை பிடிக்குமா உங்களுக்கு? :-)
அன்பு,
நன்றி .நான் வலைபதிக்க அறிமுகம் கிடைத்ததே உங்களால் தான் .உங்களோடு எனக்கு தொடர்பில்லையெனினும் ,நம் இருவருக்கும் பொதுவான நண்பர் ராம் குமார் மூலம் முதன் முதலில் பார்த்த தமிழ் வலைப்பதிவு உங்களுடையது தான்..எப்படியோ நான் வலைப்பதிக்க நீங்களும் ஒரு மறைமுக காரணம்.
குழலிக்கு காமெடியாகக் கூட எழுத வருமா? ஆனாலும் கடைசியில் ரஜினி பன்ச் டயலாக் மாதிரி ஒரு நொரண்டு கேள்வி கூடவா?
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
இது அநியாயம் ... நான் இங்கு கேலியாகவா சொன்னேன் ? அதிருக்கட்டும்.... நீங்கள் 5 வருடங்களாக ஹிந்தியை எப்படி பார்த்தீர்கள் என எனக்கு தெரியவில்லை .. ஆனால் இந்த வருடம் ஹிந்தி நுழைந்தது என சில தமிழ் குழுக்கள் கொதித்திருப்பது தெரியும் .. என்னுடைய எண்ணமும் அதுதான.. இங்கு ஹிந்திக்கு அவசியம் இல்லை (இந்தியா என்றால் என் நிலை என்ன என்று திரும்ப நான் சொல்லத்தேவையில்லை என நினைக்கிறேன் ..) உங்களின் வழக்கமான லாஜிக் படி - தெலுங்கோ , கன்னடமோ , குஜராத்தியோ .. .எழுதாமல் ஹிந்தியில் மட்டும் வைப்பது ஏன் என கேட்காமல் இந்தியர்கள் அனைவருக்குமான பண்டிகைக்கு இந்தியிலும் எழுதுவது ஒன்றும் தவறில்லை . அப்ப இந்தியர்கள் அனைவருக்குமான மொழி ஹிந்தி என்றா கூறுகிறீர்கள்?
உங்களின் வழக்கமான லாஜிக் படி - தெலுங்கோ , கன்னடமோ , குஜராத்தியோ எழுதாமல் ஹிந்தியில் மட்டும் எழுதுவது ஏன் என கேட்காமல் 'இந்தியர்கள் அனைவருக்குமான பண்டிகைக்கு இந்தியிலும் எழுதுவது ஒன்றும் தவறில்லை' எனக்கூறுகிறீர்களே..அப்ப இந்தியர்கள் அனைவருக்குமான மொழி ஹிந்தி என்றா கூறுகிறீர்கள்?
LLDasu,
//நீங்கள் 5 வருடங்களாக ஹிந்தியை எப்படி பார்த்தீர்கள் என எனக்கு தெரியவில்லை //
இந்தியில் எழுதப்படுவது இது முதல் முறையல்ல .ஆனால் இதற்கு முன்னால் இந்த வருடல் போல அதிக இடங்களில் எழுதப்படவில்லை .அதனால் பலர் கண்களில் பளிச்சென்று தெரியாமல் இருந்திருக்கலாம்.
//உங்களின் வழக்கமான லாஜிக் படி - தெலுங்கோ , கன்னடமோ , குஜராத்தியோ .. .எழுதாமல் ஹிந்தியில் மட்டும் வைப்பது ஏன் என கேட்காமல் இந்தியர்கள் அனைவருக்குமான பண்டிகைக்கு இந்தியிலும் எழுதுவது ஒன்றும் தவறில்லை . அப்ப இந்தியர்கள் அனைவருக்குமான மொழி ஹிந்தி என்றா கூறுகிறீர்கள்? //
என்னோட லாஜிக்? 'இந்தியிலும்' என்பதற்கும் 'இந்தியில் மட்டும்' என்பதற்கும் வித்தியாசம் உங்களுக்கு தெரியுமென்று நினைக்கிறேன் .மற்ற மொழிகளிலும் எழுதட்டுமே .இந்தியாவில் மொழிகளுக்கு தனி நிலப்பரப்புகள் இருக்கும் போதே எல்லோரும் இந்தி படித்தால் என்ன என்று நியாயம் பேசும் நீங்கள் ,இங்கு சிங்கையில் எல்லோரும் ஓரிடத்தில் கலந்து வாழும் போது மட்டும் அதை எதிர்க்கிறீர்கள் .என்ன தலை கீழ் லாஜிக்கோ?..தமிழுக்கு முன்னுரிமை இருக்கவேண்டியது அவசியம் எனினும் ,தமிழுக்கு அடுத்து அதிக சிங்கை இந்தியர்கள் பேசும் இந்தி மொழிக்கு சிறிது இடம் கொடுப்பதில் ஒன்றும் தவறில்லை ( அது நாளடைவில் தலைகீழாக மாறாதிருக்கும் வரை).
//இந்தியா என்றால் என் நிலை என்ன என்று திரும்ப நான் சொல்லத்தேவையில்லை என நினைக்கிறேன் //
தெரியுமே? தமிழ் என்றாலே எகத்தாளம் ,கிண்டல் ,நக்கல்
//இந்தியர்கள் அனைவருக்குமான மொழி ஹிந்தி என்றா கூறுகிறீர்கள்? //
தாஸ் ,என்ன ஆச்சு ? நான் உங்களிடம் கேட்கவேண்டிய கேள்வி .உங்கள் பழைய நிலைப்படுகளை மாற்றி விட்டீர்களா?..இந்தியாவில் தேசிய மொழி என்ற சப்பை கட்டெல்லாம் வேண்டாம்.
//இந்த வருடம் குட்டி இந்தியா அலங்கார வளைவுகளில் 'ஹிந்தி' எழுத்துக்கள் தென்படுகிறதே!! அதை கவனித்தீர்களா?
//
மேலேயுள்ள வரியில் எந்த இடத்தில் நக்கல் இருக்கிறது .. திரிக்கவேண்டாம் ..
.//அதிலும் தமிழார்வலர்களை நக்கல் பண்ணுவது உம்ம ரத்தத்தில் ஊறி போயிருக்கிறது போல//
//தெரியுமே? தமிழ் என்றாலே எகத்தாளம் ,கிண்டல் ,நக்கல்//
கொஞ்சம் யோசித்து.. குற்றம்சாட்டுங்கள் ..இன்னும் உங்களுடம் விவாத விளையாட்டை ஆட நேரமில்லை .
//மேலேயுள்ள வரியில் எந்த இடத்தில் நக்கல் இருக்கிறது .. திரிக்கவேண்டாம் ..//
தாஸ் ,நான் திரிக்கவில்லை .பழசை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் .பல முறை மொழி விஷயத்தில் தாய்மொழியுணர்வை எந்த அளவுக்கு நக்கல் நையாண்டி செய்து பலரை புண்படச்செய்தீர்கள் என்று யோசித்து பாருங்கள் .அந்த கோணத்தில் தான் உங்கள் நோக்கத்தை அவ்வாறு நினைத்தேன் .மனச்சாட்சி படி உங்கள் நோக்கம் அது இல்லையெனில் ,நான் மன்னிப்பு கேட்டுக்கொள்ளுகிறேன்.
kuzhali,
could u pls drop me a line at
mathygrps at gmail.com
nandri.
-Mathy
எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..
குழலிக்கு 'நட்சத்திர' வாழ்த்துக்கள் ..
தல,
உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
குழலி அருமையான பதிவு. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்.
தீபாவளி நல்வாழ்த்துகள்.
ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் தற்செயலா மேல்நாட்டு மருமகள் அப்படீங்கற படத்தப் பாத்தேன். அதுலயும் இதே கேள்வி. நம்ம பாலராஜன் கீதா சொன்ன அதே விடை. இங்க வந்தா அதே கேள்வி. அதே விடை.
Post a Comment