அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா - காதலர் தின சிறுகதை
"அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ, ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு" பிண்ணனியில் ஓடிக்கொண்டிருக்க கையிலே அன்றைய தினத்தந்தியை வைத்துக் கொண்டு பொங்கிக்கொண்டிருந்தான் ஞாநி வாத்தியார் பையன், இந்த சாதி கட்சி தலைவனுக்கு வேற வேலையே இல்லை, காதலர்தினத்தை கொண்டாடக்கூடாதாம், காதலின் சக்தி தெரியுமா அவனுக்கு காதல் மதத்தை உடைக்கிறது, காதல் சாதியை அழிக்கிறது, காதல் வர்க்க வேறுபாட்டை களைகிறது, காதலைக் கண்டு சாதித்தலைவன் பயப்படறது ஒன்னும் ஆச்சரியமில்லை. சாதி அடிப்படையில் ஓட்டு பொறுக்க முடியாத சிக்கலை காதலும் கலப்பு மணமும் ஏற்படுத்திடுங்கறதாலதான் பயப்படுறானுங்க.
"அழாதடா ராசா என் கண்ணு இல்ல அழாத, இரு தாத்தா முட்டாய் வாங்கித்தரேன், ரெண்டு தேன் முட்டாய் குடுங்க"
முட்டாய் வாய்க்குள் போனதில் அழும் சத்தம் மட்டும் கொறைஞ்சாலும் விசும்பலோடு தாத்தாவோடு ஒட்டிக்கொண்டே போனான் ஒரு வாரம் முன்னாடி டெய்லரோட ஓடிப்போன செல்வி பையன்.
"தேவுடியா முண்ட, புள்ளைய உட்டுட்டு ஓடியிருக்கா பாரு அரிப்பெடுத்தவ"
கடைசி பஃப் புகையை இழுத்துவிட்டு பஞ்சை கீழே போட்டு ஆத்திரத்தோடு மிதித்தேன்
"ஏன் ஓடுனா என்ன? அவ புருசன் கையாலாகாதவனா இருந்திருப்பான் ஏன்டா இப்படி கற்பையும் கலாச்சாரத்தையும் தொடையிடுக்குல தேடுறிங்க"
"என்ன இருந்தாலும் சின்ன புள்ளைய உட்டுட்டு ஓடிட்டா பாரு"
"புள்ளை இருந்துட்டா எல்லாத்தையும் பொறுத்துக்கனுமா? ஆசாபாசம் எதுவும் இருக்க கூடாதா?"
"சரி சரி உடு மச்சான் உங்கிட்ட நம்மால பேச முடியாது, நான் கிளம்புறேன், நாலு நாளா முனிசிபாலிட்டி தண்ணி எங்க தெருவுக்கு வரலை, கவுன்சிலரை பாக்கப்போவணும், நீ ரொம்ப சூடா இருக்க, ஜில்லுனு ஒரு பெப்சி குடிச்சிட்டு போ" நண்பனிடம் சொல்லிட்டு சிகரெட்டுக்கும காசு கொடுத்துட்டு ரெண்டு நிஜாம் பாக்கை பிரிச்சி வாயில போட்டுக்கிட்டு சைக்கிளை எடுத்தேன்...
ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு வாய் முனுமுனுத்துக்கொண்டே வந்தது, காதல் மதத்தை ஒழிக்கும், காதல் சாதியை ஒழிக்கும், சைடு எஃபெக்டாடக நண்பன் சொன்னதும் ஒலித்துக்கொண்டே வந்தது.
சைக்கிள் என் தெரு முனையில திரும்பும்போது குறுக்கால ஒரு குட்டிப்பையன் ஓடிவந்தான், ஏய் ஏய் சடக்கென்று பிரேக் அடிச்சி மேலே இடிக்காம வண்டியை நிறுத்தினேன்...
"ஹேய் ராகவ், ராகவ் ஸ்டாப் ஐ சே" சத்தம்போட்டுக்கொண்டே அவனை பிடித்து தூக்கி வைத்துக்கொண்டார்இது கலைச்செல்வி அக்கா கொரல் மாதிரி இருக்கே....
"அக்கா, நீங்க கலைச்செல்வி அக்கா தானே?"
"ஆமான் டா குரு, என்னடா மறந்துட்டியா"
"இல்லக்கா பாத்து ஒரு அஞ்சாறு வருசமிருக்கும், கொஞ்சம் குண்டாயிட்டிங்க, அப்புறம் கலரா வேற ஆயிட்டிங்களா அதான் சட்டுனு அடையாளம் தெரியலை"
சட்டுனு அவங்க முகத்தில ஒரு லேசான பெருமித மின்னலடிச்சது....
"ம்...குரு வீட்ல எல்லாம் சவுக்கியமா? ஆமாம் என்ன பண்ணறே?"
"வி.எஸ்.டில வொர்க்ஷாப்ல தான்க்கா மெக்கானிக்கா இருக்கேன், அக்கா ஸ்டேட்ஸ்லருந்து எப்போ வந்திங்க?"
"ரெண்டுவாரம் ஆகுது, அவர் வீட்டுக்கு போயிட்டு நேத்துதான் இங்க வந்தேன்"
"மாமா வந்துருக்காரா? எப்பிடியிருக்காருக்கா?"
சொந்தக்காரங்க இல்லாம வேற யாரையும் சட்டுனு மாமான்னு கூப்புடமாட்டோம் ஆனா கலைச்செல்வி அக்கா வூட்டுக்காரரை மட்டும் மாமானு சொல்லுவேன், அக்கா லவ் மேரேஜி, அவங்க வீட்டுக்காரர் அய்யிரு, பள்ளிக்கூடத்துலருந்தே அய்யிருபசங்களை மாமானு ஜாலியா கூப்புட்டே பழகிடுச்சா, அதான் சட்டுனு கலைச்செல்வி அக்கா வூட்டுக்காரரையும் மாமானு சொல்லிட்டேன்.
"வந்திருக்காரு டா, நல்லா இருக்காரு, உள்ள வாயன் டா, டீ குடிச்சிட்டு போலாம்"
"இல்லக்கா, அர்ஜென்டா கவுன்சிலரை பாக்க போறேன், நாலு நாளா நம்ம தெருவுல தண்ணிவரலை "
"சரி பாத்துப்போ"
சட்டை போடாம துண்டு மட்டும் கட்டியிருந்த இருந்த ராகவை அக்கா தூக்கிக்கிட்டு உள்ளே போகும்போது தான் கவனித்தேன் ராகவ் முதுகுல குறுக்கால புதுசா போடப்பட்டிருந்த பூணுலை.
"காதல் சாதியை ஒழிக்கும், காதல் மதத்தை ஒழிக்கும்" நண்பன் சொன்னது ஸ்டீரியோ எஃபெக்டில் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.... வாய் மட்டும் அண்ணிச்சையாக முனுமுனுத்தது "அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு"
அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கலாம், சரி அய்யிரு பையன் மீன் வாங்கப்போயிருப்பானா? ராகவ் முதுகுல போட்டுருந்த பூணுலை பார்த்த பிறகு அந்த நம்பிக்கையில்லை... பாட்டெழுதனவங்கிட்ட கேட்கனும் அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்திருந்தப்ப அது பேரு என்ன? ஷகீராவானு?
லவ் சிம்பல் போட்டு காதலர் தின வாழ்த்து சொல்லி போஸ்ட்டர் ஒட்டியிருந்துருக்கானுங்க விஜய் ரசிகர் மன்ற பசங்க, இவ்ளோ நாள் நியூ இயர்க்கு போஸ்ட்டர் ஒட்டுனானுங்க இப்போ காதலர் தினத்துக்குமா... ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்.... போஸ்டரை பாத்தவுடன் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம்....
அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு.......
கவுன்சிலர் வீட்டை நெருங்கிய போது மெலிதான விசும்பல் சத்தம் வந்தது கூலிக்கு கை காலெடுக்கும் "லெஃப்ட்" கிருஷ்ணாவோடு ஓடிப்போன வசந்தா வீட்லருந்து......
கவுன்சிலரிடம் காத்திருந்து பேசிவிட்டு வீட்டுக்கு போய் சேரும் வரை அந்த மெலிதான விசும்பல் சத்தம் மட்டும் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது..... வசந்தா பேசாம 40 இலட்சத்துக்கு வீடு, நல்ல வேலை, ஊருல நல்லபேருனு இருக்குற ஞாநி வாத்தியார் பைய் மாதிரி பசங்களோட ஓடியிருக்கனும்.......இல்லனா வசந்தா மட்டுமாவது அந்த சாதிக்கட்சி தலைவர் சொல்றதை கேட்டிருக்கலாம், நினைத்துக்கொண்டே அப்போது தான் கவனித்தேன்
"அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு....... " என்று முனுமுனுப்பதை என் வாய் நிறுத்தியிருந்ததை.
பின்குறிப்பு:
கதாசிரியர் காதலுக்கோ, கலப்பு திருமணத்திற்கோ எதிரானவர் இல்லையாம்.... கதாசிரியரே 11 முறை காதலித்தவர் தானாம்... (ஆனால் அவரைத்தான் யாரும் காதலிக்கவில்லை என்பது கதாசிரியர் எப்போதுமே வெளியே சொல்லாத ஒன்று.)
படம் உதவிக்கு நன்றி wwp.saint-valentines.co.uk
7 பின்னூட்டங்கள்:
காதல் மதத்தை உடைக்கிறது, காதல் சாதியை அழிக்கிறது, காதல் வர்க்க வேறுபாட்டை களைகிறது.... ஆனால் திருமணம்?
திருமணம் மதத்தை உடைக்கிறதா?, திருமணம் சாதியை அழிக்கிறதா?, திருமணம் வர்க்க வேறுபாட்டை களைகிறதா? இந்த கேள்விகளினால் எழுந்ததே இந்த சிறுகதை
ஆரம்பிச்சிட்டுங்கிளா :)
நடத்துங்க
குழலி எழுதினா தான் தமிழ்மணம் களை கட்டுது. இனி மேல் வரிசையா ஆஜர் ஆவாங்க பாருங்க, நம்ம "பிரியமான" எதிரிங்க :)
//குழலி எழுதினா தான் தமிழ்மணம் களை கட்டுது. இனி மேல் வரிசையா ஆஜர் ஆவாங்க பாருங்க, நம்ம "பிரியமான" எதிரிங்க :) //
தூரத்து நண்பர்கள்னும் சொல்லலாம் இல்லையா
ஆனா எவ்வளவு தூரம்னா வால்கா வரைக்கும்னு சொல்லக்கூடாது
:)))))))))))
//ாதல் மதத்தை உடைக்கிறது, காதல் சாதியை அழிக்கிறது, காதல் வர்க்க வேறுபாட்டை களைகிறது.... ஆனால் திருமணம்?
திருமணம் மதத்தை உடைக்கிறதா?, திருமணம் சாதியை அழிக்கிறதா?, திருமணம் வர்க்க வேறுபாட்டை களைகிறதா? இந்த கேள்விகளினால் எழுந்ததே இந்த சிறுகதை//
அப்ப காதலர் தினத்தை கொண்டாடுவதை நிறுத்திட்டா,
சாதி வர்க்கம் எல்லாம் மறைஞ்சிடுமா?
//அப்ப காதலர் தினத்தை கொண்டாடுவதை நிறுத்திட்டா,
சாதி வர்க்கம் எல்லாம் மறைஞ்சிடுமா?
//
அது காதலர்தினத்தை கொண்டாடக்கூடாதுனு சொல்றவங்ககிட்ட தான் கேட்கவேண்டும்.
இப்போதுள்ள சூழலில் காதல் சாதியை உரசிப்பார்க்கிறது ஆனால் திருமணம் கலப்புமணமாகவே இருந்தாலும் கூட பெரும்பாலும் ஆணின் சாதியில் அல்லது ஆண், பெண் இருவரின் சாதியடுக்கில் எது உயர்வானதாக கருதப்படுகின்றதோ அதில் அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். காதல்களும் கலப்புமணங்களும் சாதியை ஒழிப்பதில்லை, மனங்களின் மாற்றம் மட்டுமே அதை செய்யும், ஆனால் புனிதப்பசு மாதிரியாக இங்கே காதல், கலப்பு மணங்கள் சாதியை ஒழிக்கும் என்று கூக்குரலிடுவது நிதர்சனங்களை பார்க்காமல் பேசுவதே...
ஜாதி ஒழிய 'எல்லோரும்' கலப்பு திருமணம் செய்ய வேண்டும். அத்திருமணம் காதல் திருமணமாகவும் இருக்கலாம்.
மேலே சொல்லபட்ட கலைச்செல்வியின் மகன் ராகவ் அவனுடைய பிறப்பின் காரணமாக (பூனூல் போட்டிருந்தாலும்) தன்னை ஒரு 'அசல்' பிராமணனாக விளம்பரபடுத்திக் கொள்ள முடியாது. அவன் வளர்ந்த பிறகு அவனே அதை பற்றி அறிவான்.
kathal sathiyai odaikkum ennru periyar anru sonnaru. aana porakura pullai appan jathikkilla maruthu. ithula enka poi jathi oliya.
Post a Comment