மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 1

முன்குறிப்பு

தமிழ்மணம் இணையதளத்தின் மீதும் வலைப்பூ எழுதுபவர்கள் மீதும் எமக்கு தனி மரியாத உண்டு, ஏனெனில் இதற்கு முன் பல forum களை பார்த்துள்ளேன் அங்கெல்லாம் ஆரோக்கியமற்ற ஆபாச வார்த்தைகளோடு எழுதுவர், இங்கே தான் மிக ஆரோக்கியமாக பின்னூட்டங்களும் கருத்துக்களும் எழுதப்படுகின்றன. இதுவரை மருத்துவர் இராமதாசு மீதான சொல்லடிகள் பற்றி எழுதாமல் இருந்தேன் ஏன் எனில் எனக்கு சாதிய முத்திரை குத்தப்படும் என்ற அச்சமும் அதற்குமேல் எல்லா பதிவுகளும் சாதிய கண்ணோட்டத்துடனே பார்க்கப்படும் என்ற அச்சமுமே காரணம். ஆனால் டோண்டு அவர்கள் தைரியமாக அவரின் சாதிப்பெயரை சொல்லியும் பதிவுகள் எழுதியும் அவருடைய நல்ல பதிவுகள் பலரால் படிக்கப்பட்டு வருவது எனக்கு தைரியத்தை கொடுத்துள்ளது,அது மட்டுமின்றி இந்த தளங்களிலே எழுதுபவர்களின் மன முதிர்ச்சியையும் காட்டுகிறது. இதுவே என்னை மருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் பற்றிய பதிலுரை எழுதலாம் என தூண்டியது, எனது என்னங்களை வார்த்தைகளாக்கி எனது பதிவை தருகிறேன். எனது பெரும்பாலான கருத்துகளை முன்னமயே வீரவன்னியன் என்ற பெயரிலே ஒருவர் எழுதிவிட்டார், அவருடைய பதிவையும் இந்த சுட்டி வழியாக படியுங்களேன் சாதிக் கட்சிகளை விலக்குங்கள்
இந்த பதிவு யாரையும் புண்படுத்தும் என்னத்தில் எழுதப்பட்டதல்ல, யாரும் Personal ஆக எடுத்துக்கொள்ளவேண்டாம், என் பதிவு யாரையேனும் சுட்டால் என்னை மன்னிக்கவும்.

மருத்துவர் இராமதாசு, இந்தியாவிலே லல்லுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தை தமிழகத்திலே இவருக்கு கொடுத்துள்ளன பத்திரிக்கைகளும் மற்றும் பலரும் ஒரு வித்தியாசத்தோடு, லல்லு எதை செய்தாலும் கோமாளித்தனமாகவும் இராமதாசு எதைச்செய்தாலும் ஆக்ரோசமாகவும் சொல்லால் தாக்குகின்றனர், இதைப்பற்றி இந்த கட்டுரையில் அலசுவோம்.


யார் இந்த இராமதாசு?

இவரின் பின்புலம் என்ன?

எப்படி இவர் தமிழக அரசியலிலே ஒரு முக்கிய புள்ளியாக உள்ளார்?

எப்படி இந்த மனிதனுக்கு இவ்வளவு அரசியல் செல்வாக்கு?

இவரையும் பின்பற்ற, இவர் சொல்வதையும் கேட்க எப்படி பல லட்சம் பேர் உள்ளனர்?

இந்த கேள்விகளுக்கான விடைகளும், அதன் பின்னுள்ள சபால்ட்டர்ன்(அடித்தட்டு) மக்களின் எழுச்சியும் தான் இன்றைக்கு பத்திரிக்கைகளாலும் மற்ற பலராலும் மருத்துவர் இராமதாசு மட்டையடிக்கப் படுவதற்கான காரணம். இதற்கெல்லாம் பதிலுரைக்க சில விடயங்களை சற்று விரிவாக பார்க்கவேண்டும்.

இராமதாசுவின் பின் புலம் வன்னிய சமுதாய மக்கள் தான்.
இது எல்லோரும் அறிந்ததுதான். அது எப்படி ஒரு சமுதாயமே கண்மூடித்தனமாக இவரை பின் பற்றுகிறது. (இதுதான் பலரின் வயிற்றெரிச்சலுக்கு காரணம், இதுவேதானமருத்துவர் இராமதாசு மீது சொல்லடியாக விழுகிறது).

முக்கியமான ஒரு தகவல், பலராலும் இதுவரை தவறாகவே புரிந்துகொள்ளப்பட்ட விடயம், வட மாவட்டங்களிலே வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்களாகவோ, நிலக்கிழார்களாகவோ இல்லை, பெரும்பாலானோர் ரெட்டியார்,முதலியார் (அ) உடையார், நாயுடு சமுதாயத்தினரின் நிலங்களில் கூலி வேலை செய்தவர்களே. எனவே பெரும்பாலான வன்னிய சமுதாயத்தினர் பண வசதிபடைத்தவர்கள் அல்ல, ஆதிக்க சாதியாகவும் இல்லை, சமுதாயம் நலிவடைந்த நிலையிலேதான் இருந்தது.

சில தசம(பத்து) ஆண்டுகளுக்கு முன் வரை எந்தவித விழிப்புமின்றி பொருளாதாரம், அரசியல், கல்வி என அனைத்திலும் நலிவடைந்தே இருந்தது இச்சமூகம். இந்த சமயங்களிலே தென் தமிழகத்திலே பெரும் எண்ணிக்கையிலிருந்த முக்குலத்தோர் சமூகத்தினர் காங்கிரசிலும் பின் திராவிட கட்சிகளிலும் கோலோச்சினர், ஆனால் வட தமிழகத்தில் வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையிலிருந்தாலும் ரெட்டியார்,உடையார் (முதலியார்) சமுதாயத்தினர் கையில் தான் அரசியல் இருந்தது.

பெரும் எண்ணிக்கையிலிருந்தும் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றமின்றி இருந்த சமூகத்தை உயர்த்தும் நோக்கத்தில் திரு.இராமசாமி படையாட்சி அவர்கள் உழவர் உழைப்பாளர் கட்சி என ஆரம்பித்து தேர்தலிலே போட்டியிட்டனர், தென்னாற்காடு மாவட்டத்திலே 18ல் 17 தொகுதிகளிளை வென்றனர் யாருடைய கூட்டணியுமில்லாமல் அப்போது முதுபெரும் தலைவர் காமராசர் அவர்கள் காங்கிரஸ் தலைவர்.

அப்போதே வன்னிய சமூகம் மாற்றத்துக்கு தயாராக இருந்தது, சரியான வழிகாட்டுதலுக்காகவும், தலைவனுக்காகவும் ஏங்குவது புரிந்தது. அதன் பின் காமராசர் அவர்கள் இராமசாமி படையாட்சி அவர்களிடம் பேசி காங்கிரசில் சேரச்செய்தார், இராமசாமி அவர்களுக்கு மந்திரி பதவியும் அளித்தார், ஆனால் காங்கிரஸ் என்ற சமுத்திரத்திலே கலந்த சிறு ஓடையாகிவிட்டது.அதன் பின் திரு இராமசாமி படையாட்சியார் மீதிருந்த பேரன்பினாலும் பெரு மதிப்பினாலும் காங்கிரசை எதிர்த்து சமுதாய முன்னேற்றம் என யாரும் பேசவில்லை.

அவரது கால கட்டத்துக்கு பிறகு மீண்டும் அதே இழிநிலை. இந்த நிலையில் தான் 80 களின் தொடக்கத்திலே திரு ஏ.கே.நடராசன் என்பவரால் வன்னியர் சங்கம் மீண்டும் உத்வேகம் பிடித்தது. அப்போது திண்டிவனம் பொறுப்பாளராக இருந்தவர்தான் மருத்துவர் இராமதாசு, திரு ஏ.கே.நடராசன் அவர்கள் அரசு பணியிலிருந்ததால் அவரால் முழுமூச்சாக சமுதாயப்பணியிலே ஈடுபடமுடியவில்லை. அப்போது சமுதாயப்பணியாற்றிய போராளிதான் மருத்துவர் இராமதாசு, ஏதோ திடீரென ஒரு நாள் வன்னிய சமூகம் மந்தையாடு மாதிரி அவர் பின்னால் போகவில்லை. ஒரு நல்ல அற்பணிப்புள்ள தலைவனுக்காக ஏங்கிக்கொண்டிருந்தபோது மருத்துவரின் போராட்டகுணம், அற்பணிப்பை கண்டு மனமுவந்து ஏற்றுக்கொண்டது வன்னிய சமூகம். மருத்துவர் இராமதாசு அவர்கள் அரசியல் சமூக வாழ்வில் எத்தனை கூட்டங்கள், எத்தனை கிராமங்களிலே சுற்றுப்பயனம் செய்தார், எத்தனை கல்லடிகள், எத்தனை தலைமறைவு இரவுகள் என்பது வெளி உலகுக்கு தெரியாது, வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, இதுவெல்லாம் தெரியாமல் ஏதோ அவர் திடீரென அதிட்(ஷ்)டத்தினால் தலைவரானது போல் எண்ணிக்கொண்டு பொறாமையால் அவரை தாக்குகின்றனர்.

இனி அடுத்த கட்டத்திற்கு வருவோம்,
1987 அது வன்னிய சமூகத்திற்கு ஒரு மறக்க முடியாத ஆண்டு,
வன்னிய சமுதாயத்தின் கடைசி மனிதன் இருக்கும் வரை இந்த ஆண்டு மறக்க முடியாதது. இதுவரை தமிழகம் சந்திக்காத போராட்டத்தை வன்னிய சமுதாயத்தினால் சந்(சா)தித்தது. ஒருவார மறியல் போராட்டம், தமிழக தலைநகர் தென்மாவட்டங்களிலிருந்து துண்டிக்கப்பட்டது, வட மாவட்டம் முழுவதும் வாகனப்போக்குவரத்து இல்லை. இதில் நானும்தான் பாதிக்கப்பட்டேன் ஏழாவது படிக்கின்றபோது 4 கிலோமீட்டர்கள் நடந்து பள்ளிக்கு சென்றேன். அப்போது கூட எனக்கு கோபம் வரவில்லை என் சமூகத்துக்காக ஏதோ நடக்கிறது எனவே இந்த வலியை பொறுத்துக்கொள்ளவேண்டும் என தான் எண்ணினேன்.

நமது அதிகார அமைப்பு எப்போதுமே ஒரு பிரச்சினை பெரிதானப்பின் தான் நடவடிக்கை எடுக்கும் அதுவரை வீம்புக்காக சூழ்நிலை கட்டுக்குள் இருப்பதைப்போல் காட்டிக்கொள்ளும். ஒரு வார மறியல் போராட்டம் ஏதோ திடீரென நடத்தப்படவில்லை, பல மாதங்களுக்குமுன் கோரிக்கை வைத்து அறிவிப்பு கொடுத்து, பல இடங்களில் பல முறை குடும்பத்தோடு ஆர்பாட்டம், உண்ணாவிரதம் என எல்லா போராட்டங்களும் அமைதியான முறையில் செய்து பின்தான் நடை பெற்றது இந்த சாலை மறியல் போராட்டம். முக்கிய முதல் நிலை தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், இதனால் போராட்டம் பிசு பிசுக்கும் என அரசாங்கமும் காவல்துறையும் நினைத்தது. ஆனால் அன்றைய கட்டத்திலே முதல் நிலை தலைவர்களின் வழிகாட்டிதல் படி இரண்டாம் நிலைத்தலைவர்களால் நடத்தப்பட்டது. இரண்டாம் நிலைத்தலைவர்களை கைது செய்ய முனைந்தபோது பலர் தலைமறைவு. சாலை மறியலுக்காக மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன, அதனால் இன்று வரை மரங்கள் வெட்டி வீசப்பட்டதை மரம்வெட்டி கும்பல் என நக்கல் அடிக்கப்பட்டு வரப்படுகின்றது, ஆனால் இந்த மரங்கள் யாருடைய மரங்கள்? அந்த மரங்கள் எல்லாம் அவர்கள் மற்றும் அவர்களின் தாய்,தந்தை, முன்னோர்கள் நட்டு வளர்த்த மரங்களே, மற்ற எல்லோரையும் விட அந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதற்கு அந்த மரங்களை வளர்த்த அந்த மக்கள் தான் வருத்தப்படுவர், ஆனால் அதையும் மீறி அவர்களுக்கு தேவை இருந்தது. (பசுமைதாயகம் அமைப்பு பல ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு அதை மரங்களாகவும் ஆக்கி பிராயச்சித்தம் தேடிக்கொண்டது, ஆனால் மதத்தின் பெயரால் வட மாநிலங்களிலே வெட்டி வீழ்த்தப்பட்ட மனித உயிர்களை மதம் சார்ந்த அமைப்புகளும், கட்சியும் எப்படி பிராயச்சித்தம் தேடப்போகின்றன?)

முதல் இரண்டு நாட்களிலேயே போராட்டத்தின் போக்கு புரிந்துவிட்டது. பேச்சுவார்த்தை நடத்தவும் விருப்பமில்லை, வன்னிய இனத்தோர் மீதும், வன்னிய கிராமங்களின் மீது மாபெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டது, அது இதுவரை யாராலும், ஏன் வன்னிய இனத்தோரால் கூட இந்த உலகிற்கு சொல்லப்படவில்லை துப்பாக்கி சூட்டில் பல வன்னியர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டு தியாகியாயினர் அப்போதும் கூட போராட்டம் கட்டுக்கு வரவில்லை.போராட்டத்தை கட்டுக்கு கொண்டுவர ஒரே வழி கலவரம் தான், அதுவரை தலித் மக்கள் போராட்டத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்,அவ்வப்போது சிறு சிறு உரசல்கள் இருந்தன.
அப்போதுதான் காவல்துறையால் தலித் மக்கள் தூண்டப்பட்டு நேரடிமோதல்கள் நடந்தன. எப்படி வன்னியர்களின் மறியல் போராட்டத்தை தலித் மக்களை தூண்டுவதன் மூலம் முறியடிக்க முயற்சி செய்தனர் என்பதைப்பற்றி விரிவாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி அவருடைய பணிக்கால சாதனைகள் பற்றி குமுதத்தில் தொடராக எழுதியதில் விவரித்துள்ளார். இதனால் வட மாவட்டங்களில் ஒரு பத்து ஆண்டுகள் சாதித்தீ எரிந்து இப்போது ஒரு எட்டு ஆண்டுகளாகத்தான் அமைதியாக உள்ளது.

ஆனால் எதுவுமே மறியல் போராட்டத்தை தோல்வியுறச்செய்யவில்லை. பின் அரசாங்கம் மிகப்பிற்பட்ட மற்றும் அட்டவணை பட்டியல் என ஒரு பிரிவை உருவாக்கி இட ஒதுக்கீடும் அளித்தது.

ஒரு சிறு இடைச்செருகல், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இன்று பலர் விமர்சிக்கின்றனர் தி.மு.க. ஆட்சி பீடம் ஏறவேண்டுமென இப்போராட்டம் நடத்தப்பட்டது என பலர் இன்று விமர்சிக்கின்றனர், ஆனால் 1987ல் நடந்த இப்போராட்டம் இராமதாசு அவர்களின் சுய நலத்துக்காக நடைபெற்றது என யாரும் விமர்சிக்கவில்லை, ஏன் அவரை கடுமையாக எதிர்க்கும் சில வன்னிய இனத்தலைவர்கள் கூட இந்த போராட்டத்தை விமர்சித்ததில்லை, ஏனெனில் இது வன்னிய சமுதாயத்துக்காக நடத்தப்பட்டது, தனி மனிதனுக்காகவோ (அ) அல்லது குறிப்பிட்ட மனிதர்களுக்காகவோ நடத்தப்பட்டது அல்ல.

பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் அடுத்தப்பதிவில் தொடரும்...
இதே தலைப்பின் அடுத்தப்குதிக்கான சுட்டி மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 2

கிரைம் நாவல்களும் வாசிப்பும்

கிரைம் நாவல்களை பற்றி எந்த ஒரு விமர்சனமும் கட்டுரைகளும் எங்கேயும் தென்படுவதில்லையே ஏன்?

கிரைம் நாவல்கள் எல்லாம் இலக்கியம் இல்லை என்கிற ஒரு கருத்துதான் காரணமா?

எம்மை பொறுத்தவரை தமிழ் எழுத்துக்கும், இலக்கியத்திற்கும், வாசிப்புக்கும் கிரைம் நாவல்களுக்கு ஒரு பெரும் இடம் உண்டு, ஒரு சாமனியனையும் வாசிக்க வைத்தது கிரைம் நாவல்கள் என்பது எம் கருத்து. தமிழ் வாசிக்கத்தெரிந்த அத்தனை பேரும் கிரைம் நாவல்கள் வாசித்திருப்பார்கள் என நம்புகிறேன்.

எம் பள்ளி நாட்களில் எனக்கு ஜெயகாந்தனையும் தெரியாது, புதுமைபித்தனையும் தெரியாது. தெரிந்திருந்தாலும் அதை புரிந்துகொள்ளும் வயசும், பக்குவமும் இல்லை எம்மிடம் அப்போது,
நான் 3ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ராணிமுத்து படித்திருக்கின்றேன்,
ராணிமுத்து படிக்கிற வயசா இது என ஏச்சுக்களும் வாங்கியிருக்கிறேன்
என்னை மட்டுமல்ல என்னோடிருந்த என் தோழர்களையும் கிரைம் நாவல்கள் ஆக்கிரமித்து இருந்தன, பல கிராமங்களிலே எழுத படிக்க மட்டுமே தெரிந்த பலர் கிரைம் நாவல்கள் படிப்பதை பார்த்துள்ளேன், அப்போது ஒரு பெரிய விடயமாக தெரியவில்லை,
ஆணால் இப்போது சாமனியனையும் வாசிக்க செய்தது கிரைம் நாவல்கள் என என்னும் போது கிரைம் நாவல்கள் வாசிப்புக்கு ஆற்றிய ஆற்றுகின்ற சேவை நிச்சயமாக பிரம்மாண்டமானது என்பதை மறுக்க முடியவில்லை.

எது சாமனியனையும் கிரைம் நாவல்கள் வாசிக்கச்செய்தது?
மிக எளிய நடை (புரியாத வார்த்தைகளை போட்டு, மிக நீளமான வாக்கியங்களை எழுதி பின்நவீனத்துவம்,முன் நவீனத்துவம் என பேசவில்லை),
நாவலை வாசிக்கும் போதே ஒரு திரைப்படமாக மனதில் ஓடுவது.
நானும் எனது தோழர்களும் பள்ளியில் படிக்கும் போது பல கிரைம் நாவல்கள் எழுதியுள்ளோம்,
பலர் கிரைம் நாவல்கள் படிக்க ஆரம்பித்து அப்படியே பிறவற்றையும் படிக்க ஆரம்பித்தனர். இல்லையென்றால் அப்போதே என் போன்றவர்களுக்கு வாசிப்பு பழக்கம் இல்லாது போயிருக்கும்.

ஜெயகாந்தனுக்கும், ஜெயமோகனுக்கும் இன்னும் பல எழுத்தாளர்களுக்கும் தரப்படும் முக்கியதுவம் பட்டுகோட்டை பிரபாகருக்கும், சுபாவுக்கும், ராஜேஷ்குமார்,ராஜேந்திரகுமார்களுக்கும் தரப்படவில்லை, அட ஜேகே,அமி அளவிற்கு பேசப்படவில்லையென்றாலும் ஒரு குறைந்தபட்ச இடம் கூட தரப்படாதது வேதனை அளிக்கிறது. ஆறுதலாக சுஜாதா எழுதிய கிரைம் நாவல்கள் சில இடங்களில் நினைவு கூறப்படுகின்றது, ஆனால் சுஜாதவை விட கிரைம் நாவல்கள் எழுதுவதில் படைப்பதில் வல்லவர்கள் நான் மேலே பட்டியலிட்ட சிலர், இதிலிருந்து சுஜாதா என்ற எழுத்தாளருக்காக தான் அவரது கிரைம் நாவல்கள் பேசப்ப்டுகிறதே ஒழிய அவரது கிரைம் நாவல்களுக்காக சுஜாத பேசப்படவில்லை என்பது நிதர்சனம்.

இரண்டு சூரியன்களும் ரஷ்யர்களும் நானும்

என் பள்ளி பருவத்திலே நான் கொஞ்சம் லூசு (இப்ப மட்டும் என்னவாம் னு பலர் சொல்வது கேட்கிறது)

அறிவியல், கிரிக்கெட், ரஷ்யா இதன் மீதெல்லாம் அளவுக்கு அதிகமாக ஆர்வம் உண்டு

1986-87 இந்தியா-பாக் கிரிக்கெட் விளையாட்டை பார்த்து பார்த்து (மன்னிக்கவும் கேட்டு கேட்டு, அப்போதெல்லாம் வானொலியில் வர்ணனை கேட்பதோடு சரி)
தூக்கத்தில் கூட துறைமுக முனையிலிருந்து கபில்தேவ் பந்து வீச வருகிறார் என உளறி இருக்கின்றேன்,

இதேபோல் இன்சாட்2A வின்னில் செலுத்தப்பட்ட போது எப்போதும் அதைப்பற்றி படித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்ததால் இரவிலே
இன்சாட்டு, போக்குவரத்து என உளறியிருக்கிறேன், இன்றும் கூட என் தங்கை என்னை இன்சாட்டு போக்குவரத்து என நக்கல் அடிப்பாள்...

என் தந்தைக்கு மிகவும் கடினமான வேலை எதுவென்றால் என்னை காலை ஆறு மணிக்கு எழுப்பி விடுவதுதான்...

ஒரு நாள் என்னை எழுப்பி எழுப்பி பார்த்து விட்டு திடீரென டேய் வானத்துல இரண்டு சூரியன் தெரியுதுடா,
ரஷ்யாகாரன் ஒரு சூரியன் விட்டிருக்கான்னு சொன்னார்,
நான் அலறி அடித்துக்கொண்டு எழுந்து ஓடி பார்த்தபோது ஒரு சூரியன் மட்டும் என்னை பார்த்து சிரித்தது.

அன்று முழுவதும் பள்ளியில் என் நண்பர்களிடம் சொல்லி சொல்லி நான் இதுவரை இப்படி ஏமாந்ததே இல்லைனு புலம்பித்தள்ளிவிட்டேன்

இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு பள்ளித்தோழனை பெங்களூரில் பார்த்தபோது இந்த விடயத்தை நினைவு படுத்தி சிரித்துக்கொண்டோம்...

இப்படி சில அனுபவங்கள் உங்களுக்கும் இருக்குமே எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்!

இலங்கையின் அமைதி
ஆயுதத்தினாலே

பாலஸ்தீனத்தின் அவதி
ஆயுதக்குறைவினாலே!

ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல
அமைதிக்கும் தான்!

இந்திய பாகிஸ்தானின் அமைதி
அணுகுண்டினாலே

திபெத் சீன அவதி
அணுகுண்டின்மையினாலே

ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல
அமைதிக்கும் தான்!

2020ல் நாம் வல்லரசு

எங்கே போகிறது என் சமூகம்

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவனுக்கோர் குணமுண்டு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது....

தமிழ்புத்தாண்டு முடிந்து இன்று தினசரியை படிக்கும் போதும் தமிழ்மனம் இணையதளத்தை பார்க்கும் போதும் புத்தாண்டிலே வெளியான திரைப்படங்களுக்கு தரப்பட்ட முக்கியதுவம் வேதனை கொள்ளச்செய்தது....

சந்திரமுகியும்,மும்பை எக்ச்பிரசையும் தவிர வேறு செய்தியே தினசரிகளில் இல்லை.....

தமிழ்மனம் இணையதளத்திலும் எத்தனை எத்தனை பதிவுகள்....

இதற்கு இந்தியா, வெளிநாடு என்கிற பேதமேயில்லை....

ஒரு ஒரு பதிவிலும் அவர்கள் இந்த திரைப்படங்கள் பார்க்க எவ்வளவு கடினப்பட்டு அனுமதி சீட்டு வாங்கினர்,
எவ்வளவு கடினப்பட்டு இந்த படங்களை பார்த்தனர் என்று எவ்வளவு புளங்காகிதத்துடன் பதிவுகளில் விவரித்துள்ளனர்....

என்னே ஒரு சாதனை! என்னே ஒரு சாதனை!


திரைப்படம் ஒரு பொழுது போக்கு சாதனம்.... அவ்வளவே....

தமிழன் இந்த திரைப்படத்துக்கு தரும் முக்கியதுவத்தை பார்க்கும் போது நிச்சயமாக திருமா வும், இராமதாசு வும் இந்த திரைப்படக்கூத்தை தட்டிகேட்பதில் தவறில்லை எனவே தோன்றுகிறது....

இன்று மதுரையிலே ரசிகர்கள் கூடி சந்திரமுகி திரைப்படம் பார்க்கும்போது திரைப்பட கொட்டகை அடித்து நொறுக்கப்பட்டதாம்....
இது எப்போதுமே பெரும்பாலான ஊர்களில் நடக்கும் விடயம்தான்... சில நூறு ரசிகர்கள் சேரும்போதே வன்முறை நடக்கிறதே....

வன்முறைகட்சிகள் என்று பெயரெடுத்த பாமக வும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் எத்தனையோ கூட்டங்கள், மாநாடுகள் நடத்தியுள்ளன...
சில பல ஆயிரம் தொண்டர்கள் கூடுகின்றனர், எமக்கு தெரிந்து எல்லா கூட்டங்களிலும் வன்முறை நடந்ததில்லை....

போதும் இந்த திரைப்பட மோகம்.....

தனிக்குடும்பம் (Nuclear Family) ஒரு மாறுபட்ட அலசல்

அமிர்தமே விடமாவது போல தனிக்குடும்பத்திலே குடும்ப உறுப்பினர்களுக்குள் வைக்கப்படும் அதீத பாசம் அதீத அன்பே இன்று பல பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளது...

தனிக்குடும்பத்தின் பிரச்சினைகள் பலரால், பல காலங்களில் பல மாறுபட்ட கோணங்களில் அலசப்பட்டுவிட்டது,

தனிக்குடும்பம் என்கிற கருத்தாய்வு(Concept) 1970 களில் பிரபலமாகத்தொடங்கி இன்றைய நாளில் கூட்டு குடும்பம் என்பதே அரிதாகிவிட்டது....

ஆணால் தனிக்குடும்பத்தின் முக்கியமான சில பிரச்சினைகள் இப்போதுதான் பூதாகரமாக வெளிப்பட தொடங்கியுள்ளது.....

சில ஆண்டுகளுக்கு முன் வரை விடுமுறை காலங்களில் உறவினர் வீட்டிலே குழந்தைகள் தங்கவிடப்பட்டன....

இப்போது அதற்கும் ஆப்பு கோடை பயிலரங்கங்கள் மூலம்.... உறவினர்கள் வெறும் சுப,துக்க நிகழ்சிக்கு வந்து போகும் அளவிலேயே உள்ளது....

அமிர்தமே விடமாவது போல தனிக்குடும்பத்திலே குடும்ப உறுப்பினர்களுக்குள் வைக்கப்படும் அதீத பாசம் அதீத அன்பே இன்று பல பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளது...

நல்லதானாலும் கெட்டதானாலும் எல்லாமே பெற்றோர்களும் அவர்கள் மகன்(கள்), மகள்(கள்) குள்ளேயே என்றாகிவிட்டது....

சாதகத்தில் கணவனுக்கும் மகனுக்கும் கண்டம் உள்ளது என ஒரு சோசியக்காரன் சொல்லக்கேட்டு...

அவர்களுக்கு முன் நான் போகிறேன் என தற்கொலை செய்து கொண்ட ஒரு தாயை என்னவென்று சொல்வது....

தன் கண் தெரியாத மகன்களுக்கு கண் பார்வை கிடைக்க தன் கண்ணை எடுத்து அவர்களுக்கு

வைக்கவேண்டுமென தற்கொலை செய்து கொண்ட தாயின் கதை சமீபத்திலே பத்திரிக்கைகளில் வந்தது....

சமீபத்திலே ஒரு திரைப்படத்திலே ஒரு வசனம் இடம்பெற்றது....

காதலுக்காக உயிர்விட்ட காதலர்களை தான் பார்த்திருப்பீர்,

மகள் ஓடிப்போய்விட்டாள் என்று எந்த பெற்றவர்களாவது செத்து பார்த்திருக்கிறியா? என்று பெற்றோர்களை போட்டு தாக்கினர்(எந்த படம் என யாரேனும் சொல்லுங்களேன்...எமக்கு மறந்துவிட்டது..
இது போலெல்லாம் நம் தமிழ்த்திரைப்பட வசனகர்த்தாவினால் மட்டுமே யோசிக்கமுடியும்)

இதற்கும் பதில் சொல்வது போல மகள் ஓடி(ஓடி என்கிற பதத்தை பயன்ப்டுத்தியமைக்கு மன்னிக்கவும்) போய்விட்டாள் என்று தாய்,தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டதை என்ன சொல்ல...

இதற்கெல்லாம் ஒரே காரணம் தான் பெற்றோர்கள் பிள்ளைகள் மேல் வைக்கும் அதீத பாசம் தான்...

தன் மகனுக்கோ மகளுக்கு ஒரு அவதார புருசனோ அல்லது அவதார புருசியோதான் வாழ்க்கைத்துணையாக வரவேண்டுமென இவர்கள் வரன் தேட அடிக்கும் கூத்தை காண கண் கோடிவேண்டும்... அதுவும் காதல் பிரச்சினைகளில் சிக்காத பிள்ளைகளாகவோ, வீட்டிற்கு எந்த பிரச்சினையும் தராத பிள்ளைகளாகவோ இருந்து விட்டால் இது இன்னும் அதிகம்.

இதனால் திருமணங்கள் தள்ளிபோவதும் அதனால் தாய் (மிகவும் பாதிக்கப்படுவது தாய்தான்) மன உளைச்சல் அடைவதும் இன்றைய தனிகுடும்பங்களிலே காணும் சாதாரண விடயம்.

முந்தைய தலைமுறை கூட்டு குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக்குடும்பம் ஆனது... இப்போதோ தனிக்குடும்பத்திலிருந்து இன்னொரு தனிக்குடும்பம் உருவாகிறது....

கூட்டுகுடும்பத்திலிருந்து தனிக்குடும்பமானபோது இந்த பிரச்சினை கட்டுக்குள் இருந்தது.... இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.


வெளிநாட்டிலோ,பெருநகரங்களிலே வேலை செய்யும் மகன், திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்ட மகள், இந்த நிலையில் மிகவும் அன்பு செலுத்தியவர்கள் அருகே இல்லாமல் இந்த பெற்றோர்கள் படும் துன்பம் மிக அதிகம்.... ஆண்டுக்கு 10-15 நாள் மட்டுமே வரும் மகனுக்காகவும் மகளுக்காகவும் வீட்டிலே தனி அறைகள் கட்டி இந்த பிள்ளைகள் வெப்பம் தாங்கமாட்டாரகளென அதிலே குளுகுளு எந்திரத்தையும் மாட்டிவிட்ட இவர்கள், மீதி நாட்களில் பூட்டிய அந்த அறைகளை பார்த்து ஏங்கிகொண்டே நடையில் (Hall) படுத்துறங்குகின்றனர்.

இனி பிள்ளைகளின் பிரச்சினைகளை அலசுவோம்....

வெளிநாட்டிலே வாழும் நம் மக்கள் அழைப்பு அட்டைகளுக்குதான்(calling card) மிக அதிகம் செலவழிக்கன்றனர்... பெற்றோர்களை பிரிந்து வேலைசெய்யும் நாட்டிலும், ஊரிலும் நிம்மதியாக இருக்காமல் சொந்த ஊருக்கும் வரமுடியாமல் தவிக்கின்றனர்....

பெரும்பாலான திருமணங்களிளே மணமகனின் தாயாரால் பிரச்சினைகள் வரும் அல்லது மணமகனின் தாயார் அதிருப்தியில் இருப்பார்,
இதுவும் கூட மகன் மீது வைக்கும் அதீத அன்பு தான் காரணம்.... இது சில சமயம் மகனின் விவாகரத்துக்கே வழிவகுக்கும்....

இன்றைய தனிக்குடும்ப இளம் தலைமுறையின் முக்கிய பிரச்சினை கருக்கலைதல் (miscarrying).....

கணவன் மனைவி மட்டுமே தனியாக வாழ்கிறார்கள் என்றால் இந்த பாதிப்பு இன்னும் அதிகம்

பெற்றோரை பிரிந்து இருப்பதனால் ஏற்படும் மன உளைச்சல், வேலையினால் ஏற்படக்கூடிய மன அழுத்தம் சரியான கண்கானிப்பு & பராமரிப்பு இன்மை முக்கிய காரணங்கள்.

வேலைக்கு செல்லாமல் இருக்கும் மனைவியர்களிடம் வேறொரு பிரச்சினை..... காலையில் வேலைக்கு செல்லும் கணவன் இரவு சாப்பாட்டிற்கு தானே வருகிறான்.... தன் ஒருத்திக்காக மதியம் எதற்கு சமைப்பது என்று ஏதோ சாப்பிட்டு உடல் பலவீனமடைந்து கருகலைதற்கும் வழிவகுக்கின்றனர்....

அடுத்த தலைமுறை தனிகுடும்ப ஆவர்தனத்திற்கு தயாராக உள்ளது, டாலர்களையும், பெரு நகரங்களிலே ரூபாய்களையும் துரத்திக்கொண்டிருக்கும் இளம் தலைமுறைக்கும்
இதே பிரச்சினைகள் இதைவிட இன்னும் பூதாகரமாக சில ஆண்டுகள் கழித்து வெடிக்கும்.....

இப்படியான பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது.....

பெற்றோர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களை எதார்த்த வாழ்விற்கு மனதளவில் தயார் செய்வது....

எந்த காரணம் கொண்டும் பெற்றோர்களிடம் பேசுவதை குறைக்காமல் இருப்பது....

எப்போதும் எதார்த்த வாழ்க்கைக்கு தயாராக இருப்பது...

இன்னும் எப்படியெல்லாம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என பின்னூட்டத்திலே எழுதுங்களேன்......