இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் இசையை நடுவில் வைத்து அழகு பார்த்தது தமிழ், ஆனால் இன்று தமிழர்களிடத்திலே இசையில் தமிழில்லாமல் வேற்று மொழிகள் ஆக்கிரமித்து விட்டன, இந்த நிலையை மாற்றி 'ஆதி' இசையான தமிழிசை மீண்டும் புத்துயிர் பெற்று வருவதற்கு முக்கிய காரணம் மருத்துவர் இராமதாசு அவர்கள் நிறுவனராக இருக்கும் "பொங்குதமிழ்ப் பண்ணிசை மன்றம்" சார்பில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழிசை விழாக்கள். இவ்விழாக்கள் தமிழகமெங்கும் மற்றும் இந்தியாவின் பெரு நகரங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, கடல் கடந்து வெளிநாடுகளில் முதன் முதலாக சிங்கப்பூரில் இயேசு பிறந்த நன்னாளாம் கிறிஸ்த்துமஸ் தினமான டிசம்பர் 25 அன்று மாலை காலாங் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் தமிழ் நாளேடான "தமிழ் முரசு"விலும் சிங்கப்பூர் வானொலியிலும் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, மாலை ஆறு மணி சில நிமிடங்களில் மருத்துவர் இராமதாசு இந் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அரங்கினுள் நுழைந்தார், ஆதி இசையாம் தமிழிசை மழையில் நனைய வான் மழையும் வந்து சேர்ந்ததால் தமிழிசை நிகழ்ச்சி ஆரம்பிக்க சிறிது நேரமானது, கவிஞரும் எழுத்தாளருமான பிச்சினிக்காடு இளங்கோ அவர்களும் அவரோடு இணைந்து சிங்கப்பூர் வானொலி சேவை ஒலி 96.8ன் அறிவிப்பாளர் திருமதி மீனாட்சி சபாபதி அவர்களும் இந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.
கவிஞர் இனியதாசனின் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலோடு விழா இனிதாக ஆரம்பித்தது, திருமதி.மீனாட்சி சபாபதி அவர்கள் தமிழிசை பற்றிய பல தகவல்களோடும் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ இன்றைக்கு கர்நாடக சங்கீதத்தில் உள்ள கீர்த்தனைகளுக்கு முன்னோடியாக தேவாரப்பாடல்கள் அமைந்தன என்றும், ராகங்கள் என்று அழைக்கப்படுபனவையெல்லாம் தமிழிசையிலே முன்பே இருந்தவை என்றும் அவைகள் யாழ்,பண்,பாலை என்றழைக்கப்பட்டன, இரண்டாம் நூற்றாண்டில் அரும்பாலை என்று கோவலன் வாசித்ததுன் இன்று சங்கராபரணம் என்று வழங்கப்படுகிறது என்றும் மேலும் பல தமிழிசை பற்றிய தகவல்களோடு நிகழ்ச்சியை சுவையோடும் பொருளோடும் தொகுத்து வழங்கினார்கள்.
பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் தலைவர் திரு.ஜே.வி.கண்ணன் அவர்களின் தொடக்க உரையை தொடர்ந்து தேவார இசைமணி பழனி சண்முகசுந்தர தேசிகர் மற்றும் தேவார இசைமணி கரூர் சுவாமிநாதன் அவர்களின் மூவர் தேவாரம், திருவாசகப்பாடல்கள் அரங்கிலுள்ளோர் உள்ளம் உருகப் பாடினார்கள்.
திருமதி டி.கே.கலா திருவருட்பா பாடல்களையும் பாரதியார் பாடல்களையும் அரங்கம் ரசிக்க பலத்த கைதட்டல்களோடு பாடினார்.
சித்தர் பாடல்களில் உள்ள அறிவியல், திருமூலத்தில் சொல்லப்பட்டிருக்கும் யோகாசனக்கலை பற்றிய பல அரிய தகவல்களோடு பண்ணிசைப்பாணர் மா.கோடிலிங்கம் அவர்கள் திவ்யபிரபந்தம், சித்தர் பாடல்கள், குனங்குடி மஸ்தான் பாடல்களை பாடினார், "ஆடு பாம்பே" பாடல் பலத்த ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
தமிழிசையில் ஆய்வு செய்திருக்கும், லால்குடி ஜெயராமன் அவர்களின் மாணவியுமான திருமதி.சங்கரி கிருஷ்ணன் அவர்கள் மும்மூர்த்திகளின் முன் மூர்த்திகளான முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர் மற்றும் கோபாலகிருஷ்ண பாரதியார் கீர்த்தனைகள் பாடினார்
பெரும்பாண நங்கை பட்டம் பெற்றவரும், திருச்சி காவேரி நுண்கலை கல்லூரியின் முதல்வருமான அருட்சகோதரி மார்கரெட் பாஸ்டின் குழுவினர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் வீரமாமுனிவர் பாடல்களை பாடினார்
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மக்கள் இசையான நாட்டுப்புற இசையை பாடினார் இசையில் முனைவர் பட்டம் பெற்ற திரு.மதுரை சந்திரன், இவரின் பாடல்கள் அரங்கத்தில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது, கிராமிய காதல் பாடல்கள், காசு பணம் பற்றிய பாடல்களோடு "கத்திரிக்காய்க்கு குடை பிடிக்க கத்துக்கொடுத்தது யாரு" என்று தொடங்கும் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்களும், நம் நெஞ்சில் நீங்க துயராக இருக்கும் கும்பகோணம் பள்ளி எரிந்தது மற்றும் இயற்கை பேரிடரான சுனாமி சோகத்தையும் பற்றிய பாடல்கள் நெஞ்சைப்பிழிய வைத்தன.
நிகழ்ச்சியின் இறுதி கட்டமாக தலைவர்களின் உரை அமைந்தது, பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் பொதுச்செயலாளர் வரவேற்புரை வழங்கினார், அவரைத்தொடர்ந்து திரு.ஜே.வி.கண்ணன், திரு.எஸ்.எம்.ஃபாருக், திரு.எஸ்.குலாம், பேராசிரியர் திருமிகு.திண்ணப்பன், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்தியத்தொடர்வண்டித்துறை முன்னாள் அமைச்சர் திருமிகு.ஆ.கி.மூர்த்தி மற்றும் திருமிகு.கணேஷ் கண்ணன் ஆகியோர் உரையாற்றினார்.
இறுதியாக பொங்குதமிழ்ப் பண்ணிசை மன்றத்தின் நிறுவனரும் விழாவின் சிறப்பு விருந்தினருமான மருத்துவர் இராமதாசு அவர்கள் சிறப்புரையாற்றினார், இயேசு பிரான் அவதரித்த நன்னாள் வாழ்த்து கூறி தன் உரையை ஆரம்பித்தார்,தமிழிசையின் தற்போதைய நிலை அதன் பெருமைகளை மீட்டெடுக்கும் செயல்பாடுகள் பற்றி விரிவாக தம் பேச்சில்
பல்வேறு இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் அனைவருக்கும் அவரவர்கள் உரிமையை கொடுத்து அவரவர்கள் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நல் அரசாக இருக்கும் சிங்கப்பூர் அரசை மக்கள் அரசு என்று பாராட்டினார்.
இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொக்கிஷங்களை உள்ளடக்கிய தேவாரம் திருவாசகம் பாடல்கள் இன்றைய இளைஞர்களை சென்று சேராததற்கு காரணம் நம்முடைய பெரியவர்கள் அதை நம் இளைஞர்களுக்கு படிப்பிக்காததுவேயாகும் அதனால் வரும் தலைமுறைக்கு உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு இவைகளை கற்றுக்கொடுங்கள், அவர்களுக்கு இந்த பண்ணிசையை சேர்ப்பியுங்கள் என்றார்.
6 வயதிலிருந்து ஏன் 4 வயதிலிருந்து பண்ணிசையை தமிழிசையை குழந்தைகளுக்கு படிப்பியுங்கள், 6 வயதிலிருந்து +2 வரை தமிழிசை ஒரு கட்டாயப்பாடமாக வைக்கப்பட வேண்டும் அதற்கு நூறு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டுமென்று கூறினார். ஐரோப்பா மற்றும் கனடாவில்உள்ள ஈழத்தமிழர்கள் சனி, ஞாயிறுகளிலே தமிழ்ப்பண்ணிசையை அவர்களே பள்ளிக்கூடங்கள் வைத்து பயிற்றுவிக்கின்றனர், அதனாலேயே ஈழத்தமிழர்களுக்கு இதில் மிக்க ஆர்வம் இருக்கின்றது, இதே போல் இங்கிருக்கும் தமிழர்களும் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்ப்பண்ணிசையை இங்கே அறிமுகப்படுத்தியதற்கு காரணம் இங்கே யார் யாரோ வந்து இசை என்ற பெயரிலே ஆடியிருப்பார்கள், பாடியிருப்பார்கள் அதனால் இப்படியான இசையை அறிமுகப்படுத்த விரும்பினோம்.
தமிழகத்திலிருக்கும் இளைஞர்களிடம் இன்று இயல் என்றால் திரைப்பட வசனங்கள், இசை என்றால் திரைப்பட இசை, நாடகமென்றால் திரைப்படங்கள், ஓவியமென்றால் திரைப்பட விளம்பர சுவரொட்டிகள், கலாச்சாரம், வாழ்க்கை நெறி எல்லாமே திரைப்படங்கள் தான் என்ற நிலை இருக்கின்றது, எதிர்கால தமிழகத்தை உயர்த்தி பிடிக்க வேண்டிய இளைஞர்கள், பொக்கிசமாக இருக்க வேண்டிய இளைஞர்கள் திரைப்பட மோகத்தில் எங்கோ தறிகெட்டுப்போய் கொண்டிருக்கின்றார்கள், இந்த நிலை மாற வேண்டும், இளைஞர்கள் நல்வழிப்பட வேண்டுமென்று தொடர்ந்து கூறிவருகின்றோம், பொங்குதமிழ் அறக்கட்டளையின் ஒரு அங்கமாக பொங்குதமிழ் பண்ணிசை மணி மன்றம் அமைத்து மற்றவர்களிடமிருந்து தமிழிசையை மீட்டுக்கொண்டிருக்கின்றோம், தமிழகத்திலே சென்னையிலே 150 சபாக்கள் உள்ளன, ஆனால் அங்கேயெல்லாம் தெலுங்கு பாடல்களும் வடமொழிப்பாடல்களும் பாடப்படுகின்றன, தமிழ் பாடல்கள் வெறும் துக்கடாவாக பாடப்படுகின்றன, அந்த நிலை மாற வேண்டுமென்றார், பண்ணிசை ஆய்வுகள் பற்றிய கருத்துகள் ஒரு நாள் அல்லது அரை நாள் வரும் காலங்களில் பட்டறையாக நடத்தப்படுமென்றார். பிறப்பிலிருந்து இறப்புவரை நம்மோடு இருக்கும் தமிழிசை அழிந்து வருவதற்கு இன்றைய திரைப்படங்களே முக்கிய காரணமாக இருக்கின்றன, இதிலிருந்து தமிழிசையை மீட்டெடுக்கின்றோம் என்றார், மக்களின் மனங்களை பண்படுத்த வேண்டும், திரைப்படத்தின் தாக்கம் இல்லாமல் மக்களுக்காக மக்கள் தொலைக்காட்சியை நடத்தி வருகின்றோம், மேலும் நல்ல தமிழிற்கு தமிழோசை பத்திரிக்கையை நடத்தி வருகின்றோம் என்று பேசினார், தமிழிசை விழாவை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி கூறி தம் உரையை முடித்தார்.
மேலும் படங்கள் இந்த சுட்டியில்
இது தொடர்பான பிற சுட்டிகள்
கோவிக்கண்ணன் சிங்கப்பூரில் பொங்குதமிழ் பண்ணிசை பெருவிழா
தமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதாசு
ஹரிகரனின் (ட)தமிழி(ளி)(லி)சை வாங்கலியோ சாமி