நட்சத்திரம் - சிய சியா - போய் வருகின்றேன்
நட்சத்திரம் - சிய சியா - போய் வருகின்றேன்
நானூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கடைசி 50 மீட்டர் ஓடும் பொழுது மனம் வெற்றிக் கோட்டை தொடு தொடு என கூவும் ஆனால் நம்மை யாரோ கட்டி பின்னால் இழுப்பது போன்று தோன்றும் கிட்டத்தட்ட அந்த நிலைதான் தற்போது, நீண்ட நாள் பிரியப் போகின்ற காதலியிடம் எல்லாவற்றையும் அப்போதே பேச துடிக்கும் காதலனைப்போல என்னென்னவோ பேச நினைத்தேன் இந்த நட்சத்திர வாரத்தில், இத்தனை நாள் அலுவகத்திலிருந்து சரியான நேரத்தில் வந்து கொண்டிருந்த நான் நட்சத்திர வாரத்தில் நிறைய வேலை வந்துவிட்டது, ஏற்கனவே சில பதிவுகள் எழுதி வைத்து பதிவிட்ட போதும் நான் பேச நினத்ததெல்லாம் பேச முடியவில்லை.
ஒரு முயற்சி ஒரு வேண்டுகோள் என்ற இந்த பதிவில் வட மாவட்ட மக்களின் வாழ்க்கை பற்றிய பதிவுக்காக எழுதிய இது கதையல்ல நிஜத்தை நட்சத்திர வாரத்திற்காக சுட்டுவிட்டேன், அதிகபட்சமாக நான் கண்ட வறுமையென்ன வென்றால் கல்லூரியில் படிக்கும் போது பைக் வாங்க ஆசைப்பட்டு முடியாமல் போனது, ஆனால் என்னை சுற்றியும் சமூகத்திலும் நடக்கும் விடயங்களை என்னால் பார்க்க முடிகின்றது, வற்றிய மார்பும், சதை இல்லாமல் தோல் மட்டுமே போர்த்திய தேகத்தையும் ஒடுக்கு விழுந்த கண்ணங்களோடு கடுமையாக வேலை செய்யும் மக்களை பார்க்கும் போது என் சுகமான வட்டத்தையும் தாண்டியுள்ள வாழ்க்கையையும் அதன் சோகத்தையும் வறுமையையும் சின்ன வயதிலிருந்தே என்னால் உணரமுடிந்தது.
நிறைய படித்தும் நிறைய திறமை உழைப்பு இருந்தும் அவருடைய தொழில் வாழ்க்கையில் உச்சத்திற்கு போக வேண்டிய நம் தெருவிலிருக்கும் அண்ணன் ஒருவர் இன்றும் இளைஞர்கள் முன்னேற்றத்திற்கும் விழிப்புணர்விற்கும் களப்பணியாற்றிக் கொண்டுள்ளார், அவர் எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள் தான் பெரியார், மார்க்ஸ்,லெனின்,ஸ்டாலினும் சானித்தாளில் அச்சடிக்கப்பட்டிருந்த கம்யூனிச சித்தாந்தங்களும் அந்த வயதில்(இந்த வயதிலும்) லேசாக புரிந்தும் புரியாமலும் இருந்தது, சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை தரம், அதற்கெல்லாம் பெரிதாக ஒன்றும் செய்ய இயலாத என் ஆற்றாமை சுய கோபம், இவர்களை இப்படியே வைத்திருக்க நினைக்கும் கூட்டமும் அதன் அபவாதங்களும் இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு வேளை என் எழுத்தில் தாணு குறிப்பிட்டது போன்ற பிண்ணனியாக ஒலிக்கும் கோபமாக தெரிகிறதோ என்னவோ?
எழுத்தாளர் சிவசங்கரி ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார், 47 நாட்கள் நாவல் கதைகளம் ஒரு பிராமண குடும்பம், இந்த கதை களத்தை தேர்ந்தெடுத்ததன் காரணமாக அவர் குறிப்பிட்டது அவர் வாழ்ந்த சூழல் அது, எனவே எளிதாகவும் இயல்பாகவும் அந்த கதைகளன் எழுத வந்ததாகவும் இரண்டே மாதங்களில் முழுநாவலும் எழுதினாராம், குடியை மையமாக வைத்து எழுதப்பட்ட வேறு நாவலை முடிக்க அவர் எடுத்துக்கொண்ட காலம் எட்டு ஆண்டுகளாம், நாஞ்சில்நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் நாவலின் கதைகளம் நாஞ்சில் பூமி, அதை தங்கர்பச்சான் சொல்லமறந்தகதையாக எடுத்தபோது அதன் களம் வடமாவட்ட சூழல், இதைப்பற்றி கேள்வி எழுப்பியபோது தங்கர்பச்சான் சொன்னது நான் வாழ்ந்த சூழலைத்தான் இயல்பாக காண்பிக்க முடியும், ஒரு வேளை இதே காரணங்கள் தான் ஒரு இனத்தின் சாயல் என் எழுத்துகளில் தெரிய காரணமாக இருக்கலாம்.
இன்று நாம் இங்கு இணைந்திருப்பது தமிழால், தமிழ் என்பது வெறும் தொடர்பு சாதனமா?, ஒரு நூல் வெளியீட்டு விழாவில் மலேசிய எழுத்தாளர் ஒரு நிகழ்ச்சியை தன் பேச்சில் குறிப்பிட்டார், மொரீஷியசில் சில ஆண்டுகளுக்கு முன் அந்த நாட்டின் ரூபாய் நோட்டில் தமிழில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள் அரசாங்கத்தால் நீக்கப்பட்டது(அல்லது அதன் வரிசையில் கீழே தள்ளப்பட்டதா என தெரியவில்லை), அப்போது அங்கே தமிழர்கள் வீதியில் இறங்கி போராடினர், இரண்டு நாட்கள் மொரீஷியஸ் முழுதும் இயங்க முடியா நிலைக்கு சென்றுவிட்டது, பிறகு அரசாங்கம் மீண்டும் பழைய படியே ரூபாய் நோட்டில் தமிழ் இருக்கும் என்ற பின்பே போராட்டம் கைவிடப்பட்டது, இதில் என்ன ஆச்சரியம் இருக்கு என்கிறீர்களா? அந்த மொரீஷியஸ் தமிழர்களுக்கு தமிழ் எழுத பேச தெரியாது, அந்த ரூபாய் நோட்டில் தமிழால் எழுதப்பட்டது என்ன என்று கூட தெரியாது, அவர்கள் எந்த அமைப்பினாலும் இணைக்கப்பட்டிருக்கவில்லை, ஆனால் அந்த ரூபாய் நோட்டில் இருக்கும் தமிழ்தான் தங்கள் அடையாளமாக அவர்கள் நினைத்ததால், அந்த அடையாளத்தை, அங்கீகாரத்தை இழக்க விரும்பாததால் யாரும் தூண்டாமலே தானாகவே அந்த தமிழர்கள் சாலையில் இறங்கினர்.
இராணி வழக்குரைஞர் மு.திருச்செல்வம் அவர்கள் இலங்கை நீதிமன்றங்களில் தமிழுக்காகவும், தமிழர்களுக்காவும் நடத்திய சட்ட போராட்டங்கள், வாதங்களை 'ஈழத்தமிழர் இறைமை' என்ற பெயரில் தமிழில்மொழி பெயர்த்த மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் நூலில் மிகத்தெளிவாக தமிழினத்தை ஆதிக்கம் செய்ய, அடிமைபடுத்த எவ்வாறு முதலில் தமிழ் மொழியின் மீது சட்டங்களை திருத்தி தாக்குதல் நடத்தியதையும் அதைத் தொடர்ந்த தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியாக மேற்கொண்ட சட்டதிருத்த நடவடிக்கைகள் எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன, தமிழ் ஒரு தொடர்பு மொழி மட்டும் தானே என்று புலம்புபவர்கள் முடிந்தால் அதை படித்து பாருங்கள், நல்ல வேளை அண்ணா, கலைஞரினால் இன்று இப்படி இந்தி மேலாதிக்கத்தை பற்றி எழுத வேண்டிய நம் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.
ஒரு இனத்தை ஆக்கிரமிக்க, அவர்களின் அங்கீகாரத்தை, சுயத்தை அழிக்க முதலில் நடத்தப்படும் தாக்குதல் அவர்களின் மொழியின் மீது தான் என்பது உலகெங்கும் நிரூபிக்கப்பட்ட ஒன்று, தம் மொழியை இழப்பபவன் தன் அடையாளத்தை, தன் சுயத்தை இழக்கின்றான், தமிழ் வெறும் தொடர்பு மொழி மட்டும் தான் என விமர்சிப்பதையும் கூட தமிழ் வலைப்பதிவுகளில் தான் செய்கின்றனர், அறிந்தோ அறியாமலோ அவர்களுக்குள் இருக்கும் தமிழ் ஆர்வம் தான் அவர்களை தமிழ் வலைப்பதிவு ஆரம்பிக்க வைத்துள்ளது, அந்த வலைப்பதிவை தமிழ் ஆர்வலர்கள் உருவாக்கிய தமிழ்மணத்தில் இணைக்க வைத்ததும் அவர்களுக்குள்ளேயே உள்ள தமிழ் ஆர்வம் தான், உங்களுக்கு ஒரு வேண்டுகோள் அரசியலுக்காக உங்களுக்கு யாரையாவது எதிர்க்க வேண்டுமெனில் தயவு செய்து தமிழையும் தமிழ் உணர்வையும் பயன்படுத்தி அங்கதம் செய்யாதீர்கள்.
நட்சத்திர வாரத்தில் பேச முடியத பலதையும் வரும் காலங்களில் பேசலாம்... நான் வால் நட்சத்திரமோ, எரிநட்சத்திரமோ, அல்லது ஒன்றுமேயில்லையென்றாலும் இந்த நட்சத்திர வாரத்தினால் கூடுதல் கவனிப்பு கிடைத்துள்ளது.
சரிங்க போயிட்டு வரேன், பதிவுகளை படித்த, கருத்துகளை பறிமாறி கொண்ட, என்னையும் நட்சத்திரமாக்கிய, எனக்கும் தளம் அமைத்து கொடுத்த தமிழ் மணங்களுக்கும் என் சில பதிவுகளை பதிக்கும் முன்பே படித்து பார்த்து மெருகூட்டிய நண்பருக்கும் நன்றி நன்றி நன்றி
சிய சியா