நட்சத்திரம் - சிய சியா - போய் வருகின்றேன்

நட்சத்திரம் - சிய சியா - போய் வருகின்றேன்

நானூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கடைசி 50 மீட்டர் ஓடும் பொழுது மனம் வெற்றிக் கோட்டை தொடு தொடு என கூவும் ஆனால் நம்மை யாரோ கட்டி பின்னால் இழுப்பது போன்று தோன்றும் கிட்டத்தட்ட அந்த நிலைதான் தற்போது, நீண்ட நாள் பிரியப் போகின்ற காதலியிடம் எல்லாவற்றையும் அப்போதே பேச துடிக்கும் காதலனைப்போல என்னென்னவோ பேச நினைத்தேன் இந்த நட்சத்திர வாரத்தில், இத்தனை நாள் அலுவகத்திலிருந்து சரியான நேரத்தில் வந்து கொண்டிருந்த நான் நட்சத்திர வாரத்தில் நிறைய வேலை வந்துவிட்டது, ஏற்கனவே சில பதிவுகள் எழுதி வைத்து பதிவிட்ட போதும் நான் பேச நினத்ததெல்லாம் பேச முடியவில்லை.

ஒரு முயற்சி ஒரு வேண்டுகோள் என்ற இந்த பதிவில் வட மாவட்ட மக்களின் வாழ்க்கை பற்றிய பதிவுக்காக எழுதிய இது கதையல்ல நிஜத்தை நட்சத்திர வாரத்திற்காக சுட்டுவிட்டேன், அதிகபட்சமாக நான் கண்ட வறுமையென்ன வென்றால் கல்லூரியில் படிக்கும் போது பைக் வாங்க ஆசைப்பட்டு முடியாமல் போனது, ஆனால் என்னை சுற்றியும் சமூகத்திலும் நடக்கும் விடயங்களை என்னால் பார்க்க முடிகின்றது, வற்றிய மார்பும், சதை இல்லாமல் தோல் மட்டுமே போர்த்திய தேகத்தையும் ஒடுக்கு விழுந்த கண்ணங்களோடு கடுமையாக வேலை செய்யும் மக்களை பார்க்கும் போது என் சுகமான வட்டத்தையும் தாண்டியுள்ள வாழ்க்கையையும் அதன் சோகத்தையும் வறுமையையும் சின்ன வயதிலிருந்தே என்னால் உணரமுடிந்தது.

நிறைய படித்தும் நிறைய திறமை உழைப்பு இருந்தும் அவருடைய தொழில் வாழ்க்கையில் உச்சத்திற்கு போக வேண்டிய நம் தெருவிலிருக்கும் அண்ணன் ஒருவர் இன்றும் இளைஞர்கள் முன்னேற்றத்திற்கும் விழிப்புணர்விற்கும் களப்பணியாற்றிக் கொண்டுள்ளார், அவர் எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள் தான் பெரியார், மார்க்ஸ்,லெனின்,ஸ்டாலினும் சானித்தாளில் அச்சடிக்கப்பட்டிருந்த கம்யூனிச சித்தாந்தங்களும் அந்த வயதில்(இந்த வயதிலும்) லேசாக புரிந்தும் புரியாமலும் இருந்தது, சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை தரம், அதற்கெல்லாம் பெரிதாக ஒன்றும் செய்ய இயலாத என் ஆற்றாமை சுய கோபம், இவர்களை இப்படியே வைத்திருக்க நினைக்கும் கூட்டமும் அதன் அபவாதங்களும் இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு வேளை என் எழுத்தில் தாணு குறிப்பிட்டது போன்ற பிண்ணனியாக ஒலிக்கும் கோபமாக தெரிகிறதோ என்னவோ?

எழுத்தாளர் சிவசங்கரி ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார், 47 நாட்கள் நாவல் கதைகளம் ஒரு பிராமண குடும்பம், இந்த கதை களத்தை தேர்ந்தெடுத்ததன் காரணமாக அவர் குறிப்பிட்டது அவர் வாழ்ந்த சூழல் அது, எனவே எளிதாகவும் இயல்பாகவும் அந்த கதைகளன் எழுத வந்ததாகவும் இரண்டே மாதங்களில் முழுநாவலும் எழுதினாராம், குடியை மையமாக வைத்து எழுதப்பட்ட வேறு நாவலை முடிக்க அவர் எடுத்துக்கொண்ட காலம் எட்டு ஆண்டுகளாம், நாஞ்சில்நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் நாவலின் கதைகளம் நாஞ்சில் பூமி, அதை தங்கர்பச்சான் சொல்லமறந்தகதையாக எடுத்தபோது அதன் களம் வடமாவட்ட சூழல், இதைப்பற்றி கேள்வி எழுப்பியபோது தங்கர்பச்சான் சொன்னது நான் வாழ்ந்த சூழலைத்தான் இயல்பாக காண்பிக்க முடியும், ஒரு வேளை இதே காரணங்கள் தான் ஒரு இனத்தின் சாயல் என் எழுத்துகளில் தெரிய காரணமாக இருக்கலாம்.

இன்று நாம் இங்கு இணைந்திருப்பது தமிழால், தமிழ் என்பது வெறும் தொடர்பு சாதனமா?, ஒரு நூல் வெளியீட்டு விழாவில் மலேசிய எழுத்தாளர் ஒரு நிகழ்ச்சியை தன் பேச்சில் குறிப்பிட்டார், மொரீஷியசில் சில ஆண்டுகளுக்கு முன் அந்த நாட்டின் ரூபாய் நோட்டில் தமிழில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள் அரசாங்கத்தால் நீக்கப்பட்டது(அல்லது அதன் வரிசையில் கீழே தள்ளப்பட்டதா என தெரியவில்லை), அப்போது அங்கே தமிழர்கள் வீதியில் இறங்கி போராடினர், இரண்டு நாட்கள் மொரீஷியஸ் முழுதும் இயங்க முடியா நிலைக்கு சென்றுவிட்டது, பிறகு அரசாங்கம் மீண்டும் பழைய படியே ரூபாய் நோட்டில் தமிழ் இருக்கும் என்ற பின்பே போராட்டம் கைவிடப்பட்டது, இதில் என்ன ஆச்சரியம் இருக்கு என்கிறீர்களா? அந்த மொரீஷியஸ் தமிழர்களுக்கு தமிழ் எழுத பேச தெரியாது, அந்த ரூபாய் நோட்டில் தமிழால் எழுதப்பட்டது என்ன என்று கூட தெரியாது, அவர்கள் எந்த அமைப்பினாலும் இணைக்கப்பட்டிருக்கவில்லை, ஆனால் அந்த ரூபாய் நோட்டில் இருக்கும் தமிழ்தான் தங்கள் அடையாளமாக அவர்கள் நினைத்ததால், அந்த அடையாளத்தை, அங்கீகாரத்தை இழக்க விரும்பாததால் யாரும் தூண்டாமலே தானாகவே அந்த தமிழர்கள் சாலையில் இறங்கினர்.

இராணி வழக்குரைஞர் மு.திருச்செல்வம் அவர்கள் இலங்கை நீதிமன்றங்களில் தமிழுக்காகவும், தமிழர்களுக்காவும் நடத்திய சட்ட போராட்டங்கள், வாதங்களை 'ஈழத்தமிழர் இறைமை' என்ற பெயரில் தமிழில்மொழி பெயர்த்த மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் நூலில் மிகத்தெளிவாக தமிழினத்தை ஆதிக்கம் செய்ய, அடிமைபடுத்த எவ்வாறு முதலில் தமிழ் மொழியின் மீது சட்டங்களை திருத்தி தாக்குதல் நடத்தியதையும் அதைத் தொடர்ந்த தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியாக மேற்கொண்ட சட்டதிருத்த நடவடிக்கைகள் எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன, தமிழ் ஒரு தொடர்பு மொழி மட்டும் தானே என்று புலம்புபவர்கள் முடிந்தால் அதை படித்து பாருங்கள், நல்ல வேளை அண்ணா, கலைஞரினால் இன்று இப்படி இந்தி மேலாதிக்கத்தை பற்றி எழுத வேண்டிய நம் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

ஒரு இனத்தை ஆக்கிரமிக்க, அவர்களின் அங்கீகாரத்தை, சுயத்தை அழிக்க முதலில் நடத்தப்படும் தாக்குதல் அவர்களின் மொழியின் மீது தான் என்பது உலகெங்கும் நிரூபிக்கப்பட்ட ஒன்று, தம் மொழியை இழப்பபவன் தன் அடையாளத்தை, தன் சுயத்தை இழக்கின்றான், தமிழ் வெறும் தொடர்பு மொழி மட்டும் தான் என விமர்சிப்பதையும் கூட தமிழ் வலைப்பதிவுகளில் தான் செய்கின்றனர், அறிந்தோ அறியாமலோ அவர்களுக்குள் இருக்கும் தமிழ் ஆர்வம் தான் அவர்களை தமிழ் வலைப்பதிவு ஆரம்பிக்க வைத்துள்ளது, அந்த வலைப்பதிவை தமிழ் ஆர்வலர்கள் உருவாக்கிய தமிழ்மணத்தில் இணைக்க வைத்ததும் அவர்களுக்குள்ளேயே உள்ள தமிழ் ஆர்வம் தான், உங்களுக்கு ஒரு வேண்டுகோள் அரசியலுக்காக உங்களுக்கு யாரையாவது எதிர்க்க வேண்டுமெனில் தயவு செய்து தமிழையும் தமிழ் உணர்வையும் பயன்படுத்தி அங்கதம் செய்யாதீர்கள்.

நட்சத்திர வாரத்தில் பேச முடியத பலதையும் வரும் காலங்களில் பேசலாம்... நான் வால் நட்சத்திரமோ, எரிநட்சத்திரமோ, அல்லது ஒன்றுமேயில்லையென்றாலும் இந்த நட்சத்திர வாரத்தினால் கூடுதல் கவனிப்பு கிடைத்துள்ளது.

சரிங்க போயிட்டு வரேன், பதிவுகளை படித்த, கருத்துகளை பறிமாறி கொண்ட, என்னையும் நட்சத்திரமாக்கிய, எனக்கும் தளம் அமைத்து கொடுத்த தமிழ் மணங்களுக்கும் என் சில பதிவுகளை பதிக்கும் முன்பே படித்து பார்த்து மெருகூட்டிய நண்பருக்கும் நன்றி நன்றி நன்றி

சிய சியா

34 பின்னூட்டங்கள்:

said...

நன்றி குழலி.

சிறப்பான நட்சத்திரவாரம்.
பதிவுகளை வாசித்திருந்தாலும் எதிலும் பின்னூட்டமிடவில்லை. அதற்குக் காரணமும் இருக்கிறது.

விடைபெறும் பதிவில் தமிழ்பற்றி சிறிது சொல்லிச் சென்றிருக்கிறீர்கள். நன்று.
இது பற்றி நிறையக் கதைக்கலாம். ஈழப்போராட்டத்துக்கான காரணிகளில் மொழியின் பங்களிப்புத்தான் முதன்மையானது.

said...

குழலி, சிறப்பாக ஜொலித்தீர்கள். இந்த வாரம் உங்கள் கட்டுரைகள் அனைத்துமே சுவையாகவும் சாரம் மிகுந்ததாகவும் இருந்தன.

நன்றி, மற்றும் பாராட்டுகல்கள்.

said...

உங்க பதிவுகளுக்கு மறுமொழி ஏதும் தரலையின்னாலும், ஆர்வமாப் படிச்சுட்டுத்தான் வந்தேன். பிரதேசம், மொழி அடையாளங்களை எளிதிலே தொலைத்து விடமுடியாது. அந்த மாதிரி அடையாளங்கள் எழுத்திலே தென்படுகிறது என்பதற்காக குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அடையாளங்களை மட்டுமே முன்னிறுத்தி வைக்கப்படுகிற விமர்சனங்களை ( நேர்மறை/எதிர்மறை ) கண்டுகொள்ளாமல் விடுகிற பக்குவம் உங்களுக்குத் தேவைப்படுகிற நேரம் இது. எது எப்படியாக இருந்தாலும், உங்க வயசுக்கு, இந்த மாதிரி சிந்திப்பதும், எழுதுவதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

said...

பிரகாஷ் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். வாழ்த்துக்கள் குழலி.

said...

குழலி
நல்ல பதிவுகள். உங்களின் தொடரையும் எதிர்பார்க்கிறேன். சில கிராமப்புற செய்கைகள் நான் பத்திரிக்கைகளில் படித்ததோடு சரி, நேரடி அனுபவம் இல்லை. உங்கள் பதிவுகள் அவற்றை தெரிய வைக்கின்றன.

said...

பெண்ணென்று நினைத்தேன்
பொன்.புருஷொத்தமா!
என்ன பெயரென்று
எனக்கும்தெரியாது
மணக்கும் தமிழ்மணம்
நமக்கும் சொல்லியதே!
சொற்போர் புரிய -கையில்
கற்களோடும் ,கத்தி கடப்பாரறையோடு
நான் இங்கே
சிங்கப்பூர் போரேன்
செங்கம்பட்டி பொறேன்னு
சொதப்பிட்டியே
தலிவா!
தகராறு மட்டுமல்ல
வரலாறும் தெரியும்
மற்றவரின் வாழ்க்கை முறையோடு
சுற்றமும் சூழலும்
கற்றலின் அழகே!
கணிவான கரிசனத்தோடு
இனிய பயணங்கள்
இந்த வார நட்சத்திரமே
வாழ்த்துக்கள் நண்பரே!

said...

நன்றி குழலி.

I salute your social awarness.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

said...

குழலி, எல்லாரும் சொன்னதை நானும் வழி மொழிகிறேன். உங்கள் முயற்சிகள் ஈடேர வாழ்த்துகிறேன். நீங்கள் செய்வதாய்
சொன்ன வேலையை சீக்கிரம் ஆரம்பியுங்கள்.

said...

சரியாகச் சொன்னீர்கள்,தமிழ் ஒரு தொடர்பு மொழி மட்டுமல்ல ,அதையும் தாண்டியது,உணர்வுகளின் வெளிப்பாட்டினை தான் பழகி வந்த சூழத்தின் வாயிலாய் தெரிவிப்பது என்பது இயற்கையின் நியதியே, இதில் சங்கோஜம் கொள்ளத் தேவையில்லை. நட்சத்திர வார முடிவில் முத்தாய்ப்பாய் தமிழ் முத்தென முடிவுரை கூறினாலும், தொடர்க உம் வழி எழுத்துக்கள், வாழ்க தமிழ், வளர்க தமிழ்!

said...

அனைவருக்கும் மிக்க நன்றி

நம் எழுத்தை தொடர்ந்து படிப்பவர்களின் ஒரு good will பின்னூட்டத்திற்கு பொதுவான ஒரு சிறு விளக்கம் அளிக்க விரும்பினேன்.... அவ்வளவே.

நன்றி

said...

நன்றி குழலி அருமையான நட்சத்திர வாரத்துக்கு.

ஆமா ஏன் இத்தனை தடவை போய்வருகிறேன்.தமிழ்மணத்துல இருப்பீங்க.எழுதுவீங்க தானே.

ஆனா பாருங்க குழலி நட்சத்திரமா எழுதுறப்ப பதிவுகளும் சேர்ந்து ஜொலிக்குதுங்க.

தமிழ் வாழ்க!

said...

வாழ்த்துக்கள் குழலி.

நல்ல சிறப்பான வாரமாக இருந்தது.

said...

நன்றி குழலி.

said...

வாழ்த்துகள் குழலி. தொடர்ந்து இதே ஆர்வத்துடன் இயங்குங்கள்

said...

குழலி,

உங்கள் பதிவுகளை முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் படிக்காவிட்டாலும், சில பதிவுகளுடன் கருத்தொற்றுமை இல்லாவிட்டாலும் எனக்கு மிகவும் பிடித்தது நீங்கள் சொல்லும் விதம். உங்களை இகழ்ச்சியாகத் தூற்றுபவர்களைக் கூட பதிலுக்குத் தூற்றாமல், பக்குவமாக உங்கள் கருத்தை எடுத்துச் சொல்வதில் கவனமாக இருக்கிறீர்கள்.

உங்களின் இப்படிப்பட்ட பதிவுகளைப் பற்றியும், உங்களையும் ஒருவித இகழ்ச்சிப் பார்வையுடன் எள்ளி நகையாடும் செயலை முகவரியில்லாத அனாமத்து முகமூடிகள் செய்த போதெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் நான் பெரிதும் மதிக்கிற நண்பர் கூட உங்கள் பதிவுகளையும், அவற்றை வரவேற்றவர்களையும் இகழ்ச்சியாகப் பேசியது எனக்கு நெருடலாக இருந்தது. அதனால் உங்களுடைய பதிவுகளுக்கு என்னுடைய வரவேற்பையும், நன்றியையும் ஒரு அடையாளமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

சில காரணங்களால் கடந்த இரண்டு மாதங்களாக எந்தப் பதிவிலும் பின்னூட்டம் இடக்கூடாது என்று எண்ணி இருந்து வருகிறேன். விதிவிலக்காக அந்தக் கட்டுப்பாட்டை மீறி இங்கு மட்டும் பின்னூட்டம் செய்கிறேன்.

உங்கள் பதிவுகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்!

நன்றி - சொ. சங்கரபாண்டி

said...

வாழ்த்துக்கள் குழலி.

நல்ல வாரமாக இருந்தது

said...

valthukkal. keep writing

said...

ஒவ்வாக் கருத்துக்கள் சிலபல இருந்தாலும், உங்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வந்தேன்.
அடையாளங்களை மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது.
அது பற்றிய விமரிசனங்களும் தவிர்க்க முடியாத ஒன்றுதான்!
நம்மை எல்லாம் இணைப்பது தமிழ் மட்டுமே.
வைதாலும் தமிழ்! வாழ்த்தினாலும் தமிழ்!
அந்த உணர்வினைப் புரிந்து செயல் படுவீர்கள், இனி, என நபுகிறேன்.
பொறுமை காத்து, புது வழி புகுந்து, திறந்த மனத்துடன் மேன்மேலும் கருத்துச் சிறக்க என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துகள் குழலி. பதிவுகளுக்குப் பின்னூட்டமுடியாவிட்டாலும்,உங்கள் பதிவுகளனைத்தையும் படித்தேன். சிறப்பானதொரு வாரத்தைக் கொடுத்தமைக்கு நன்றிகள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்
சுந்தர்.

said...

மறுபடியும் பிழை! மன்னிக்க!

"அந்த உணர்வினைப் புரிந்து செயல் படுவீர்கள், இனி, என நம்புகிறேன்."

said...

உங்களிடம் உள்ள தனித்தன்மையே எதிர்க் கேள்வி கேட்பவர்களுக்கும் விளக்கமாக பொறுமையாக பதில் அளிக்கிறீர்களே.. அந்த தனிக் குனம்தான். இந்த ஒருவாரமும் சிறப்பாகச் சென்றது என்று சொன்னால் அது மிகையல்ல.

said...

குழலி,
உங்கள் சில கருத்துக்களோடு எனக்கு முழு உடன்பாடு இல்லாதிருக்கலாம் .ஆனால் உங்களின் அடிநாதமாக இருக்கும் சமூக கடைநிலை மக்கள் குறித்த அக்கரைக்கு என் வணக்கங்கள் .நீங்கள் அறிவு ஜீவிகளுக்குரிய மேல்த்தட்டு பார்வை இல்லாது இருக்கலாம் .ஆனால் இந்த கருத்து தளத்தில் பல பேர் இது வரை அறிந்திராத அடி மக்களின் வாழ்க்கையின் எதார்த்தங்களையும் அவர்கள் எழுச்சியின் வேகம் அறிவுஜீவிகள் எதிர்பார்க்கும் சங்கர் பட கனவு வேகத்தில் இல்லாமல் இருப்பதற்கு உரிய சில காரணங்களையாவது பலருக்கு புரிய அல்லது புரிய ஆரம்பிக்க வைத்துள்ளீர்கள் .அதற்கு ஒரு கிராமத்தான் என் சார்பில் நன்றியும் பாராட்டுக்களும்.

said...

வாரம் முழுதும் படித்தாலும் பின்னூட்டமிட(முடிய)வில்லை...
எல்லாவற்றுக்கும் சேர்த்து இப்பொழுது வாழ்த்துகிறேன்.........

said...

வாழ்த்துகள் குழலி. தமிழ் என்ற ஒன்றுதான் நம்மைக் கட்டிப் போட்டிருக்கின்றது. மொழி வெறும் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமல்ல. அப்படியிருந்தால் சைகையே போதுமே!

மொழி உணர்வோடு உயிரோடு ஒன்றிவிடக்கூடியது. அதே நேரத்தில் பற்று வெறியாகி விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

தமிழர் அற்றவர்களிடம் மட்டும் வேறு மொழியைப் பயன்படுத்தி நமது வேலைகளுக்கெல்லாம் தமிழைப் பயன்படுத்தலாம். அது பலன் தரும்.

குழலி, ஒரு தமிழராக பேசுவதற்கு மட்டுமன்றி தமிழை வேறெதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று நினைத்துப் பார்த்தீர்களா?

said...

தமிழ் உணர்வு என்பது., தூண்டிவிட்டு வரவேண்டும் என்பதே வெட்கக்கேடானது. நட்சத்திரத்தில் என்னைக் கவர்ந்த ஒன்று., அனைவரையும் நிறைவு படுத்தும் நோக்குடன் உங்கள் அடையாளம் தொலைத்து எழுதாமல்., 'கதையல்ல நிஜ'த்தை எழுதியிருக்கிறீர்கள். 'வரலாற்றில் மறைக்கப் பட்ட பேரரசனும்' அப்படித்தான் நீங்கள் சமாளித்தாலும் கூட. நம் மண்., நாம் எங்கு சென்றாலும் அதன் மணம் கூட வரும்., அதன் அழகு மட்டுமல்ல அவலமும், அழுகையும், அழுக்கும் கூட நமக்கூரித்தானது. இதை வெளிச் சொல்ல யாருக்கு பயப்பட வேண்டும்?., ஏன் தயங்க வேண்டும்?. மனித தலைகளின் மீது நடந்து தனது இருப்பைச் சொல்லுகின்ற வர்க்கங்கள் தயங்குவதில்லை எதற்கும்!. தயக்கமும்., இதைச் சொன்னால் அது அப்படியாகிவிடுமோ என்ற மயக்கமும்., மடங்கி வாழும் நம்மவனை தூக்கிவிடும் நிலையுலுள்ள நமக்கு தேவையில்லாதவை. இங்கு பலபேர் நம்புவது அரசியல்வாதியின் பின்னால் செல்லாமல்., உங்களைப் போன்றவர்களே மாறுதலுக்கு முன் நிற்கலாமே என்பது., உங்கள் நம்பிக்கை அங்கிருந்து வளர்ந்த ஒருவர் அதிகாரத்தில் இருந்தால் எல்லாம் மாறிவிடும் என்பது. எந்த சமுதாய நோக்கமுமில்லாது., ஊர் ஊருக்கு ஒவ்வொரு பத்தடிக்கு ஒருமுறை., இரவோடு இரவாக டிஜிட்டல் போர்டு வைத்து மாநாடு நடத்தும்., மாவட்ட செயலாளரக வேண்டுமென்றால் 10 லட்சம் கட்டணம் வாங்கிக்கொண்டு பத்திரிக்கைகளில் சொந்தப் பணத்தில் கட்சி நடத்துகிறேன் எனப் பொய்யுரைக்கும் நடிகனை ஆதரிக்க ஆயிரம் பேர் இங்குண்டு. சொல்லுவதை கடுமையாக 'பன்ச்' வைத்து படத்தில் சொன்னால் கை தட்டி ரசிக்கும் சமூகம்., உண்மையில் சொன்னால் வன்முறை என்கிறது. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. ஆகவே, நம் நம்பிக்கைகளை தெளிவாக எழுதுவோம்., எது வரினும். நன்றி.

said...

உங்கள் நட்சத்திர வாரம் அருமையாக இருந்தது. பல விடயங்கள் தெரிந்துகொண்டேன். தமிழன் என்ற அடையாளைத்தை (அப்படி ஒன்று வேண்டுமா என்று கேட்பவர்கள் பெருக:( பல வழிகளிலும் தொலைத்துவருகிறோம்... மொழியாவது இருக்கட்டும் என்ற என்னுடைய எண்ணம் உங்களின் இந்தப்பதிவிலும் இருப்பதால், பாராட்டுக்கள்.

நன்றி. ஷிஷெ நி... டெரிமா கசிய்.

said...

Kuzhali,

This week was good. Waiting for your initiatives. Though i have my reservations about Ramdoss/Thiruma, hope it will clear a lot of doubts

Satheesh

said...

வாழ்த்துக்கள் குழலி.

said...

வாழ்த்துகள் குழலி! நன்றாக எழுதியிருந்தீர்கள். இத்தனை நாட்களாக உங்கள் பதிவைப் படிக்காமல் இருந்தேனே என்று வருத்தப்படுகிறேன்.

நட்சத்திரமாக உங்களைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு என்னுடைய நன்றி!

கடந்த வாரமும் ஜோ அவர்களின் பதிவை முதன்முறையாகக் கண்டேன்.

அருமையாக எழுதுபவர்கள் பலரின் பதிவுகள் கவனத்தை ஈர்க்காமற்செல்வது வருந்தத் தக்க விஷயம்.

said...

//அடையாளங்களை மட்டுமே முன்னிறுத்தி வைக்கப்படும்விமர்சனங்கலைக் கண்டுகொள்ளாமல் விடும் பக்குவம் உங்களுக்கு தேவைப்படுகிற நேரம் இது// ப்ரகாஷின் விளக்கம்தான் என் கருத்தின் மூலமும் கூட.. சிறுமை கண்டு பொங்கும் கோபம் கண்டிப்பாக வேண்டும், ஆனால் சின்னச் சின்ன வெளிப்பாடுகளால் அவை வீணாக்கப்படக் கூடாது என்பதுதான் என் கருத்து.
இந்த வாரம் முழுவதுமே உங்கள் பதிவுகள் மனதை ஓரளவு கனமாக்கிவிட்டது. ஒரு சினிமா பார்த்தால் அதன் தாக்கம் சில நாட்களாவது மனதில் இருக்கவேண்டும் என்பது என் ஆசை. அத்தைகைய தாக்கம் உங்கள் எழுத்துக்கள் கொடுத்தது என்பதும் உண்மை. வாழ்த்துக்கள்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

போய் 'சுருக்க' வாருங்கள்; எதிர்பார்ப்போடு காத்திருக்கி(றோம்)றேன்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

//அந்த மொரீஷியஸ் தமிழர்களுக்கு தமிழ் எழுத பேச தெரியாது, அந்த ரூபாய் நோட்டில் தமிழால் எழுதப்பட்டது என்ன என்று கூட தெரியாது, //

என்னதான் சொன்னாலும், தன் தாய்மொழியை, அது எந்த மொழியானாலும், எழுதப் படிக்கத் தெரியாததை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
-சீனு.