உடன்பிறப்புகளுக்கு வெட்கமில்லை

ஒரு கருத்து திணிப்பு அதை தொடர்ந்து ஒரு கலவரம், சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் அலுவலகம் மதுரையில் கொளுத்தப்படுகின்றது உள்ளே உயிரை விடுகின்றனர் மூவர்.... கருத்தை திணித்தது மச்சான் பொங்கியெழுந்தது மாமன், ஆனால் செத்ததோ மாச சம்பளம் வாங்கும் அப்பாவிகள்.... அதன் தொடர்ச்சியாக வலைப்பதிவுகளில் விவாதம், இதற்காகவே காத்திருந்தது மாதிரியான இட்லிவடைகளும் சட்னி சாம்பார்களும், முகமூடிகளும் கெட்ட ஆட்டம் போட்டன, இவர்கள் எதற்காக இந்த ஆட்டம் என்பது தெரிந்ததுவே, மூன்றுக்கு பதில் முப்பதாக இருந்திருந்தால் இன்னும் கூட சந்தோசம் பொங்கியிருந்தாலும் பொங்கியிருக்கும், இதையும் எதிர்பார்த்தே இருந்ததால் பெரிதாக பாதிக்கவில்லை, ஆனால் அதன் பிறகு வெளிவந்த சில பதிவுகள் புரட்டி போட்டன.


யோக்கியவான் எடுக்கட்டும் முதல் கல்லை என்றார் வரவனையன், அதிலே அழகிரியின் அணுக்கம் எளிமை இன்ன பிற விசயங்களை புளங்காகிதப்பட்டு கூறியிருக்கிறார், சரி இருக்கட்டுமே, அதற்காக மூன்று பேரை உயிரோடு கொளுத்த யார் கொடுத்தது அதிகாரம்?

"எந்த பதவியும் வேண்டாமென்று இருக்கும் ஒரு நபரை, களத்திலேயே இல்லாத ஒரு நபரை தோற்றுபோனதாய் அறிவிப்பது போக்கிலித்தனமின்றி வேறென்ன." சரி தான் போக்கிரித்தனம் தான், ஒரு கட்சி பதவியில் கூட இல்லாத, ஒரு கார்ப்பரேசன் கவுன்ஜிலராக கூட இல்லாத "அஞ்சா நெஞ்சன்" அழகிரியின் பெயர் கருத்து கணிப்பில் வந்துள்ளது இது நியாயமா? இது நீதியா? எல்லாம் சரிதான் பிறகேன் இந்த அஞ்சா நெஞ்சனின் வீட்டு முற்றத்தில் கிடக்கின்றது தென்மாவட்ட திமுக?

அழகிரியின் அல்லக்கை அட்டாக் பாண்டி சுமோவில் 18 பேரை ஏற்றிக்கொண்டு மதுரை தினகரன் அலுவலகம் போனதற்கு பதிலாக நேராக வண்டியை அறிவாலயத்துக்கு ஓட்டி தயாநிதி மாறனையோ கலாநிதிமாறனையோ ரெண்டு போடு போட்டிருந்தால் "அஞ்சா நெஞ்சன்" அழகிரி தாம்லே ஒத்துக்கறோம், அட அந்த கலாநிதி மாறன் மதுரை கோட்டைக்கே தான் ப்ளைட்டு புடிச்சி வந்தாரே அப்போ என்ன கிழித்தார்கள்? அதைவிட்டுவிட்டு அப்பாவிகள் 3 பேருக்கு மோட்சம் தந்தது எந்தவிதத்தில் நியாயம், ஊடகங்கள் தங்கள் பேனா முனையால் வன்முறை செய்யும்போது அதை உருட்டை கட்டையால் வேணுமானாலும் எதிர்கொள், பெட்ரோல் பாமினால் வேணுமானாலும் எதிர்கொள் ஆனால் கொளுத்தும் முன் அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு கொளுத்து....

பொதுவாக அழகிரி ஆதரவு பதிவுகள், சிலர் இட்ட பின்னூட்டங்கள் சொல்ல விழைந்தது இதன் பின்னால் பார்ப்பனியம் இருக்கிறது, மாறன்களின் பதவி ஆசை இருக்கிறது, குட்டையை குழப்புகிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டதே தவிர (இந்த காரணங்களையெல்லாம் நான் மறுக்கவில்லை என்ற போதும்) அழகிரியின் ரவுடித்தனம் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டது குறித்து மூச்சு விடவில்லை, ஏன் இதை எழுதினால் ஆட்டோ வந்துவிடுமா? அல்லது திமுக மாவட்டசெயலாளர் பதவி பறிபோய்விடுமா? இந்த 3 அப்பாவிகள் கொல்லப்பட்டதில் எந்த விதமான சலனமும் இல்லையா? அப்படி சலனம் இருந்தால் அதை காட்டாமல் எழுதுவது மனசாட்சிக்கு விரோதமானதாகாதா?

ஜெயலலிதாவிற்காக பஸ்ஸை கொளுத்தியதில் அடிமட்ட தொண்டனையோ அல்லது ஜெயலலிதாவிற்காக காதறுத்துக்கொண்டவனையோ கேட்டுப்பாருங்கள் சொல்வான், அந்த நாசமா போன கருணாநிதி அம்மா மேல வேணுமின்னே கேசை போட்டு ஜட்ஜ்ங்களை மெரட்டி தண்டனை வாங்கி கொடுத்துட்டான் என்று சாபம் விடுவார்கள், அந்த மாதிரியான தொண்டனுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லையா?

ஒரு இயக்கத்தின் கோட்பாடுகளில் நம்பிக்கை இருக்கிறது, ஒரு இயக்கத்தின் தலைவனை பிடித்திருக்கிறது என்பதற்காக அந்த இயக்கத்தின் எல்லா இழி செயல்களுக்கும் முட்டு கொடுக்க வேண்டுமென்ற அவசியமெதுவுமில்லையே..... இந்த ஒரு காரணத்திற்காகவே அந்த இயக்கத்தின் மீதான பிடிப்பையோ, அதன் செயல்பாடுகளுக்கு எதிராகவோ செல்ல வேண்டுமென்றில்லைதான்.

விஜய் டிவியின் நீயா? நானா? என்றொரு நிகழ்ச்சியின் விளம்பரத்தில் சொல்லப்படுவது "உங்களின் கருத்துகள் உங்களுக்கு சரியானதாகவே இருக்கலாம், அது குடும்பத்திற்கெதிராக இருக்கலாம், சமுதாயத்திற்கு எதிராக கூட இருக்கலாம், ஏன் நாட்டிற்கே கூட எதிராக இருக்கலாம் ஆனால் மனித நேயத்திற்கு எதிராக இருக்கக்கூடாது" இதையே தான் நான் வலியுறுத்த விரும்புவதும்

தமிழகத்தின் சேகுவேராவுக்கு கண்ணீர் அஞ்சலி


தமிழகத்தின் சேகுவேரா, தமிழ் தேசிய இயக்கங்களின் குரு என கருதப்படும் புலவர் கலியபெருமாள் மறைந்துவிட்டார், இது தொடர்பான மகேந்திரனின் பதிவு இங்கே, புலவர் கலியபெருமாள் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்....

சந்திக்க நினைத்து, இனி சந்திக்கவே முடியாமல் போய்விட்டதே....

கண்ணீருடன்
குழலி

புலவர் கலியபெருமாள் அவர்கள் எழுதிய மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்... என்ற நூலைபடித்த உடனே எழுதிய பதிவு, ஒரு பகுதி மட்டும் எழுதினேன் இன்னொரு பகுதியை எழுதுவதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன், அவரின் மரண செய்திக்கு பின் தான் அதை பதிவிடும் நிலை வரும் என நினைக்ககூடவில்லை.... கண்ணீருடன் இந்த பதிவை புலவருக்கு சமர்ப்பிக்கின்றேன்....

தமிழகத்தின் சேகுவேரா புலவர் கலியபெருமாள்

புலவர் கலியபெருமாள், தமிழகத்திலே வர்க்கப்போராட்டங்களை ஆரம்பித்து பின் தனித்தமிழ்நாட்டு போராட்டமாக உருவெடுத்ததன் ஆரம்பப்புள்ளியாக இருந்தவர், இந்த புத்தகத்தை பரவசத்துடனே படிக்க ஆரம்பித்தேன், பரவசத்திற்கு பலகாரணமென்றாலும் முதல் காரணம் 1984ல் ஒரு நாள் நாங்கலெல்லாம் என் தாத்தா வீட்டில் இருந்தபோது வீட்டிலிருந்தவர்கள் எல்லாம் ஒரு ஜீனியர் விகடன் புத்தகத்தை வைத்து ஆர்வமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர், அதில் கல்யாணம், புலவர் கலியபெருமாள் என்ற பெயர்களெல்லாம் அடிபட்டுக்கொண்டிருந்தது, என்ன பேசிக்கொண்டார்கள் என்பதெல்லாம் நினைவில்லை, ஆனால் புலவர் கலியபெருமாள், கல்யாணம் என்பது மட்டுமே நினைவிலிருந்த, பிறகு எங்கள் வீட்டிற்கு வந்தபோது அந்த ஜீவியை படித்தேன், அதில் என்ன படித்தேன் என்றும் நினைவிலில்லை ஆனால் நான் முதன்முதலில் ஜீனியர் விகடன் படித்த நினைவு அது தான்.

+2 படித்துக்கொண்டிருக்கும் போது குமுதத்தில் காய்கறி விற்கும் தீவிரவாதி என்ற அட்டைபடத்தோடு புலவர் கலியபெருமாள் பற்றிய ஒரு கட்டுரை வந்திருந்து, அதை நண்பன் வீட்டில் வைத்து படித்து பேசிக்கொண்டிருந்தபோது நண்பன் சொன்னான், இவர் எனக்கு தாத்தா முறை வேண்டுமென்று, அதன் பின் அவன் அவரோடு பேசிக்கொண்டிருந்ததையும் அவர் தன் அனுபவங்களை கதைபோல சொன்ன தையும் என்னிடம் கூறினான். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் நண்பனின் பெயரை சொல்லி புலவர் கலியபெருமாள் அவனோட தாத்தாவாம்மா என்றேன், எங்கள் தூரத்து உறவினர் ஒருவரின் பெயர் சொல்லி அவங்களுக்கு நெருங்கிய சொந்தம், அவருக்கு புலவர் மாமா முறை வேண்டுமென்றார், அதன் பிறகு ஜெயிலர் மாமா ஒரு முறை புலவரைப்பற்றி சொன்னார், நண்பன் புலவர் சொன்னதாக கதை போல விவரித்த சில விடயங்கள் தற்போது நினைவில் இல்லையென்றாலும் அவன் சொன்னமுறை இதோ இந்த புத்தகத்தை படிக்கும் போது புலவர் நம் அருகிலிருந்து தம்மை பற்றி சொல்லுவது போன்ற ஒரு காட்சிப்படமாக மனதில் விரிகின்றது, நிச்சயமாக இவைகளெல்லாம் சேர்ந்துதான் புலவரின் புத்தகத்தை படிக்கும் போது ஏற்பட்ட பரவசத்திற்கு காரணம் என நினைக்கிறேன்.

இந்த புத்தகம் எழுதப்பட்டதின் நோக்கம் பதிப்புரையில் கொடுக்கப்பட்டுள்ளது. "புலவர் கலியபெருமாள் அவர்கள் தம் வாழ்க்கைச் சுவடுகளைப் பதிவு செய்யவேண்டும் என்பது பலரின் விருப்பம் மட்டும் அல்லாமல் தேவையும் ஆகும். படிப்பினை என்ற வகையில் அது தமிழ்க் குமுகத்திற்கு பெரும் தேவைக்குறியது", புத்தகத்தை படித்து முடித்தவுடன் "படிப்பினை என்ற வகையில் அது தமிழ்க் குமுகத்திற்கு பெரும் தேவைக்குறியது" என்பது எத்தனை சத்தியமான வார்த்தைகள் என்பது புரியும்.

புலவர் கலியபெருமாள், தமிழ்தீவிரவாதிகளின்(?) காட்ஃபாதர் என ஜீனியர் விகடனால் குறிக்கப்பட்டவர், தமிழ் தேசிய சிந்தனை உள்ளவர்களின் மானசீக ஆசானாக கருதப்படுபவர், பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கம்யூனிச கொள்கைகளினால் ஆட்கொள்ளப்பட்டு ஆயுதப்போராட்டமே விளிம்புநிலை மக்களின் விடுதலைக்கு வழிவகுக்கும் என நம்பியவர். தூக்குதண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கி பணிரெண்டு ஆண்டுகள் கொடுஞ்சிறைவாசம் கண்டு பின் மக்கள் போராட்டங்களினாலும் சட்டப்போராட்டங்களினாலும் விடுதலையடைந்தவர்.


புலவர் பட்டம் பெற்று ஆசிரியர் பணி, வீடு, நிலபுலன்கள் என்று ஓரளவிற்கு வளமையான வாழ்க்கையும் அவரின் குடும்பத்திற்கு ஒரு வளமான எதிர்காலமும் இருந்த நிலையில் ஏழைகளின் மீதான சுரண்டலையும், அடக்குமுறையையும் அதிகார பகிர்தல் மறுக்கப்பட்டதையும் எதிர்த்து வர்க்கப்போராட்டத்திலும் தனித்தமிழ்நாட்டு விடுதலை போராட்டத்திலும் ஈடுபட்டு தான் மட்டுமன்றி தன் மனைவி, மகன், மகள், சொந்தக்காரர்கள் என அத்தனை பேரும் அரசாங்கத்தின் அடக்குமுறையையும் கொடுங்கோலையும் எதிர்கொண்டவர்கள் தொழில் ,திரைப்படம், அரசியல் என அத்தனையும் வாரிசுகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றன, வாரிசுகள் மந்திரிகளாகவும், வாரிசுகள் கதாநாயகர்களாகவும் ஆக்கப்படுகின்றனர், ஆனால் பண்ணிரண்டு ஆண்டு கால சிறைவாசத்தையும் அரசாங்கத்தின் அடி உதைகளையும் கொடும் அடக்குமுறையையும் மட்டுமே தன் வாரிசுகளுக்கு வழங்கிவிட்டார் புலவர் கலியபெருமாள், இத்தனைக்கும் இவர்கள் வறுமையில் வாடியவர்கள் இல்லை. வளமையான எதிர்காலம் இக்குடும்பத்திற்கு இருந்தது.

இந்த பதிவு புலவர் கலியபெருமாள் அவர்களைப்பற்றி விரிவாக எழுதுவது பற்றியதல்லாததால் இனி அவர் எழுதிய புத்தகத்தைப் பற்றி பேசலாம்.

சரளமான எழுத்து, இலக்கிய(?) தரம் வாய்ந்த நடை என்று எந்த சுவாரசியமுமில்லாமல் இருக்கலாம், ஆனால் புத்தகத்தை படிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலேயே புலவர் கலியபெருமாள் அவர்கள் அருகிலிருந்து பேசுவது போன்ற ஒரு உணர்வு படிப்பவர்களுக்கு எழுந்துவிடும், இவைகள் எல்லாவற்றையும் விட புத்தகத்தில் இருக்கும் நேர்மை, அதாவது தன் செயல்களை நியாயப்படுத்தியோ தன் செயல்களுக்கான நீள நீளமான விளக்கங்கள் எதையும் சொல்லவோ இல்லாமல் வெறும் தன் வாழ்க்கை சம்பவங்களை எடுத்து கூறுகிறார், பெரும்பாலான இடங்களில் மிக வெளிப்படையாக பேசினாலும் வெகு சில இடங்களில் சில விடயங்களை தொட்டும் தொடாமலும் சென்றுவிடுகிறார். பதிப்புரையிலேயே "காலம், அகவை வழி முதுமையைக் கொடுத்ததால் தொடர்ச்சியாக செய்திகள் பதிவுறாமல் போனதோடு சில விடுபாடுகளுடனுமே இவ் வரலாறு பதிவானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தது ஈராயிரம் பக்கங்களிலாவது பதிவு செய்ய வேண்டியவைகள் வெறும் 168 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் முழு நிறைவு ஏற்படாதது என்னமோ உண்மைதான்.

இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு அணிந்துரையும் மிக நன்றாக அதே சமயம் நேர்மையாக எழுதப்பட்டுள்ளன. அணிந்துரை, புத்தகம் பற்றி அடுத்த பதிவில்.

நானும் பெரிய ஆள் ஆயிட்டேன் - பதிவர்கள் கவனிக்க

நானும் பெரிய ஆள் ஆயிட்டேன், ஆமாங்க வலைப்பதிவர்களே என் பெயரிலும் போலிப்பதிவு வெளியாகிவிட்டது, நான் பதிவுகள் எதற்கும் பின்னூட்டம் போடப்போவதில்லை சில நாட்களுக்கு, அப்படியே போட்டாலும் http://kuzhalifeedbacks.blogspot.com என்ற என் பின்னூட்ட சேகரிப்பில் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளவும். இதையும் தாண்டி வெளியிடப்படும் போலி பின்னூட்டங்களுக்கு எந்த பதிலும் விளக்கமும் மாய்ந்து மாய்ந்து சொல்லிக்கொண்டிருக்க என்னால் இயலாது.

பெரியார் ஒரு உணர்ச்சி காவியப் பதிவு....


சிங்கையில் யீஷூன் திரையரங்கில் பெரியார் திரைப்படம் வெளியாகியுள்ளது, நண்பர்கள், நான் முன்னாள் சென்றுவிட கோவி.கண்ணன் திரையரங்கில் வந்து இணைந்து கொண்டார், பெரியார் திரைப்படம் பார்க்கப்போகும் முன் இந்த படத்தில் சத்யராஜ் நடிக்காமல் வேறு புது முகம் யாரேனும் நடித்திருக்கலாம், பெரியார் தெரிவதற்கு பதில் சத்யராஜ் தான் நம் முன் வந்து நிற்பார் என்றேன், அதற்கு என் நண்பன் கூறினான், படத்தில் சத்யராஜ் தெரியமாட்டார், ஏனெனில் பெரியார் சத்யராஜை விட பவர்ஃபுல், சத்யராஜை விஞ்சி பெரியார் தான் படத்தில் தெரிவார் பார் என்றான், படம் பார்க்கும் போதே என் நண்பன் சொன்ன உண்மை புரிந்தது.

தொண்ணூற்று ஐந்து ஆண்டுகால வாழ்க்கை, ஐம்பதாண்டுகளுக்கும் மேலான சமூகப்பணி கொண்டவரின் வாழ்க்கையை இரண்டரை மணி நேரத்தில் அடக்குவது இயலாத காரியம், அதனால் பெரும்பாலுமான காட்சிகள் நீளமாகவும் ஆழமாகவும் இல்லாமல் மேலோட்டமாகவே இருந்தன, இடைவேளை வரை படம் வேகமாகவே நகர்ந்தது, இடைவேளைக்கு முன் அதிகமாக நமக்கு அறிமுகப்படாத காட்சிகள் இருந்ததால் படம் சுவாரசியமாகவும் இருந்தது, இடைவேளைக்கு பின் வந்த காட்சிகள் பலவும் நாம் அறிந்த விடயங்கள்.

தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள் பற்றிய பெரியாரின் விமர்சனங்கள், மணியம்மையை திருமணம் செய்து கொண்ட விடயம், ஆகஸ்ட்டு 15ஐ கருப்பு தினம் என கூறியது என பெரியார் மீது வைக்கப்படும் பல

விமர்சனங்களுக்கு இந்த படத்தில் பதில் கிடைத்துள்ளது, அறிஞர் அண்ணா, கலைஞர், தி.க. தலைவர் வீரமணி, எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் போன்றோர் இடம் பெறும் காட்சிகள் வெகு சிலவே.

தொடக்க காட்சிகளில் சத்யராஜே தெரிந்தார், வசன உச்சரிப்பும் அப்படியே, கோட்டை கழற்றி போட்டுவிட்டு கதராடை உடுத்தி வரும் அந்த காட்சி நிச்சயம் என்னை பரவசப்படுத்தியது, அதிலிருந்து சத்யராஜ் ஆளையே காணவில்லை, படம் முழுக்க பெரியார் தான்... ஓரிரு இடங்களில் வசன உச்சரிப்பு சத்யாராஜை நினைவுக்கு கொண்டுவந்தாலும் பெரியாரே ஆதிக்கம் செய்தார்.

இடஒதுக்கீடு
இடஒதுக்கீட்டின் தந்தையாக இருந்திருக்கிறார் பெரியார், அன்று அவர் ஆரம்பித்த போராட்டம் இதோ இன்று வரை நடந்து கொண்டிருக்கின்றது, ராஜாஜி அவர்களிடம் சிறையில் பெரியார் உரையாடும் காட்சியில் இடஒதுக்கீட்டிற்கு காந்திஜி ஒத்துக்கொள்வது இருக்கட்டும், நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா என்று முகத்தை ஆழமாக பார்த்து கேட்கும்போது அதற்கு ராஜாஜியின் தாழ்ந்த பார்வையே இராஜாஜியின் எண்ண ஓட்டத்தை வசனங்கள் ஏதுமின்றி தெரிவித்து விடுகின்றது, இடஒதுக்கீடு ஏதோ சும்மா வந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இன்றைய தலைமுறைகளுக்கு அதன் நெடிய போராட்ட வரலாறு இதனால் தெரியவரும்.

பெரியாரின் சமரசம்
சமூக, அரசியலில் சமரசமற்று இருப்பது அதனால் எந்த இழப்பையும் ஏற்பது என்பது என்னால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விடயம், ஆனால் எதை சமரசம் செய்வது என்பதில் ஒரு தெளிவு வேண்டும், பெரியார் சமரசமே செய்து கொள்ளாதவர் என்ற எண்ணம் எனக்கு ஏற்கனவே இருந்தது, ஆனால் திரைப்படத்தில் கம்யூனிசம் பற்றிய எழுத்துகளால் பெரியார் கட்சியும் பத்திரிக்கையும் பிரிட்டிஷ் காரர்களால் முடக்கப்படும் என்ற நிலை வந்தபோது கம்யூனிச பொருளாதார கொள்கை முக்கியம், ஆனால் அதை விட முக்கியம் சாதி ஒழிப்பு, அதனால் கொஞ்ச காலம் கம்யூனிசத்தை தள்ளி வைப்போம் என்று தன் முதற் குறிக்கோளை எதற்காகவும் இழக்காமல் இருக்க சமரசம் செய்து கொண்டார் என்ற காட்சியமைப்பு பெரியார் பற்றிய சமரசம் தொடர்பான என் எண்ணத்தை மாற்றியது.

பெரியாரின் கணிப்புகள்
காந்திஜியிடம் மேல்சாதி மக்களின் வாழ்வாதார மனுதர்ம கொள்கைகளை மாற்ற முயன்றால் உங்களையே உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள் என்று எச்சரிப்பதும், அனைவரும் அர்ச்சகர் சட்டம் 25 ஆண்டுகளுக்கு முன் முதல்வர் கருணாநிதியினால் கொண்டு வரப்பட்டபோது கோர்ட் குறுக்கே வரும் பார்த்துக்கொள் என்று எச்சரிப்பதும் பெரியார் எந்த அளவிற்கு இந்த சமூகத்தின் அவலத்தை புரிந்து கொண்டுள்ளார் என்று நன்றாக தெரிகின்றது.

படத்தில் சாதியம் மற்றும் கடவுள் மீதான விமர்சனங்கள் நகைச்சுவையாக நக்கலாக சொல்லப்பட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதால் படம் ஒரு ஆர்ட் பிலிம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் கொண்டு செல்கிறது.

வியாபார மண்டிக்கு பெரியாரின் தந்தை வரும் போது அனைவரும் "நமஸ்காரம்" சொல்லி மிகுந்த மரியாதை கொடுப்பதும், அதன் பின் மண்டிக்கு வந்து முனிசிபல் கவுன்சிலராகவும் மரியாதைக்குறியவராகவும் இருக்கும்

பெரியாரின் தந்தையை பெயர் சொல்லி அழைத்து அடா புடா என்று மரியாதையில்லாமல் பேசும் ஒரு உயர்சாதி முனிசிபல் கிளார்க்கை பற்றி பெரியார் கணக்கரிடம் அய்யா முனிசிபல் கவுன்சிலர் ஆனாலும் ஏனிந்த கிளார்க் இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறார் என்று கேட்க அதற்கு கணக்கர் அவர்கள் சாதியில் உசந்தவர்கள் நம்மிடம் எத்தனை பணம் பதவி இருந்தாலும் நம்மால் அவர்களைப்போல ஆக முடியாது என்று சொல்வதும் படக்காட்சிக்காக அமைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது, இவைகளை சிறு வயதிலிருந்தே பெரியார் பார்த்திருப்பார் , அதன் காரணங்களையும் அப்போதிருந்தே அறிந்திருப்பார் அப்படியிருந்தும் திடீரென பெரியார் இந்த கேள்வியை கேட்பதும் அதற்கு பதில் சொல்வதும் திரைப்படங்களை பார்ப்பவர்களுக்கு அப்போதிருந்த சூழ்நிலை புரிய வேண்டுமென்ற காரணமே இருந்திருக்கலாம்.

சட சடவென்று காலங்கள் மாறுவது பெரியாரின் தாடி வளர்வதை வைத்து புரிந்து கொள்ள முயன்றாலும் மின்னல் வேகத்தில் காலங்கள் மாறுவது படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் இழை லேசாக தடைபடுகின்றது. ஆனாலும் தொண்ணூற்றுஐந்தாண்டு கால வாழ்க்கையை சில சில சம்பவங்கள் மூலமாக காட்டும் போது இது ஏற்படக்கூடும், படம் கோர்வையாக காட்சி அமைப்புகள் பெரிதும் அறுபடாமல் காண்பித்திருக்க எடிட்டர் லெனினின் கத்திரி நன்றாகவே வேலை செய்திருக்கின்றது.

படத்தில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு விடயம் ஒளிப்பதிவு, காலத்தை பிரித்து காட்டும் ஒளியமைப்பு ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சானை ஒளிஓவியர் என்று சொல்லுவதற்கு பொருள் சேர்க்கின்றது.

என்ன தான் படத்தின் முடிவு நாம் அறிந்ததாகவே இருந்தாலும் படத்தில் பெரியாரின் இறப்பு சற்று கலங்க வைக்கிறது.

படத்தில் அத்தனை நடிகர்களும் நன்றாகவே நடித்துள்ளனர்... கடவுளே நீ கல்லா பாடல் நன்றாக மனதில் பதிந்து முணுமுணுக்க வைக்கிறது, 'ஓ ரசிக சீமானே' பாடலை நினைவு படுத்தும் ரகசியா பாடல் கேட்கும் படியாக
இருக்கின்றது, மற்ற பாடல்கள் சட்டென்று மனதில் பதியவில்லை.

பெரியார், அண்ணா முரண்பாடுகள், பெரியாருக்கு வாக்கு அரசியல் மீதிருந்த கோபம், அரசியல்வாதிகள் மீதிருந்த விமர்சனம் அத்தனையும் நேர்மையாக காண்பிக்கப்பட்டிருக்கின்றது

தமிழகத்தின் அத்தனை கட்சிகளுக்கும் பெரியாரே ஆதாரமாக இருந்திருக்கிறார்... தமிழகத்தில் பெரியாரின் தாக்கம் இன்னும் சில நூற்றாண்டுகளுக்காவது நிச்சயம் இருக்கும்.

கடவுள் எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு என்ற புட்டியில் அடைத்து இன்றைய தலைமுறைக்கு ஊடகங்கள் காண்பித்திருக்கும் பெரியார் பற்றிய உண்மையான புரிதலை இந்த படம் ஏற்படுத்தும், பெரியாரை இந்த இரு கோணங்கள் தவிர்த்து மேலும் அறிந்து கொள்ள எத்தனித்தாலே போதும் மிச்சத்தை அதாவது அவர்களை உள்ளிழுப்பதை பெரியாரே பார்த்துக்கொள்வார், இந்த பெரியார் படம் இன்றைய தலைமுறையில் இன்னும் எத்தனையோ பேரை உள்ளிழுக்கப்போகிறது


தி.க. தலைவர் அய்யா வீரமணி அவர்களிடம் சில மாதங்களுக்கு முன் உரையாடிக்கொண்டிருந்த போது பெரியார் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படும்போது சிதைக்கப்பட்டுவிடுமோ என்று என் கவலையை கூறினேன், அதற்கு இல்லை, நிச்சயம் அப்படியிருக்காது, நம்மிடம் பல விசயங்களை ஆலோசிக்கின்றனர், தகவல்கள் பெறுகின்றனர், படம் கண்டிப்பாக நன்றாக இருக்கும் வெளிவந்த பின் பாருங்கள் என்றார், படம் முடிந்த பின் வீரமணி அய்யா அவர்கள் கூறியதை நினைத்துக்கொண்டேன்.... அத்தனை அற்புதமாக வந்திருக்கின்றது படம்.

இயக்குனர் ஞானசேகரனுக்கும் மற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்

பெரியார் ஒரு உணர்ச்சி காவியப் பதிவு....

11 மாத பைத்தியகுழந்தை, தற்கொலை முயற்சி....நான் வியர்டா?

சாப்பிட்டிக்கொண்டே புத்தகம் படிப்பது, சோடா ஆர்வம் மற்றும் இன்ன பிற விசயங்கள் பல வலைப்பதிவர்களும் செய்வதாக சொல்வதால் அதெல்லாம் வியர்டே இல்லை என்றாகிவிட்டது.

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான் ரொம்ப பொறுமைசாலி - ஷார்ட்டெம்பர்டு சரியான முன்கோபி

அல்ட்டவே மாட்டான் - சரியான அல்ட்டாப்பு, தலைக்கணம் பிடித்தவன்

கூட இருந்தா டைம் போறதே தெரியாது சிரிச்சிக்கிட்டே இருக்கலாம் - பேசறதுக்கு காசா கேக்குறாங்க, உம்மனாம் மூஞ்சி

முதல்முறை பாக்கும்போதே நல்லா பேசுறான் - சனியன் புடிச்சவன் ஒரு வருசமா இதே ஆபிஸ்ல இருக்கோம், லிப்ட்ல தனியா ரெண்டு பேர்தானே வரோம் ஒரு ஸ்மைல் கூட இல்லையே

பணத்தை பணமாவா செலவு செய்யறான் தண்ணியா செலவு செய்யறானே - சரியான கருமி, சோறாவது திண்றானா? இல்லையா?

இவைகள் அத்தனையும் என்னுடன் பழகியவர்கள், என் சுற்றுப்புறத்தில் இருந்தவர்கள் சொன்னது.


11மாத பைத்தியக்குழந்தை

பிறந்து பதினோரு மாதமே ஆகியிருந்தேன், கிராமத்தில் என் ஆயா(பாட்டி) என்னை வயலுக்கு தூக்கி சென்றிருந்தார், அங்கே வயல்வேலை செய்ய என்னை மரத்தடி நிழலில் போட்டுவிட்டு நான் விளையாடுவதற்கு அவர் கழுத்தில் இருந்த கயிற்றை கழற்றி கையில் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார், அந்த கயிற்றை சுற்றிக்கொண்டே இருந்திருக்கிறேன், வேலை முடிந்து என்னை தூக்கிய ஆயா கையிலிருந்த கயிற்றை எடுத்தவுடன் கத்த ஆரம்பித்திருக்கிறேன், மீண்டும் கயிற்றை கொடுக்க அதை சுற்றிக்கொண்டிருந்தேன், வீட்டிற்கு சென்ற பின் அம்மா, அப்பா, அண்ணன் என எல்லோருமே கயிற்றை பிடுங்க முயற்சிக்க நான் கத்த அவர்கள் திருமப தர அங்கே ஒரு தொடர் ஓட்டமே நடதிருக்கு, சரி என்று கையில் கயிற்றை கொடுத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு சற்று நேரம் கழித்து மீண்டு சட்டென்று விளக்கை போட அப்போதும் கையில் கயிற்றை வைத்து சுற்றிக்கொண்டிருந்தேனாம், வேறு வழியேயின்றி சில மைல்கள் தள்ளி இருந்த தியாக துருகம் என்ற ஒரு கிராம நகரத்திற்கு வந்து மருத்துவரை அந்த இரவில் பார்க்க அவர் தூக்க மாத்திரை தந்திருக்கிறார் விழிக்க விழிக்க அதை போடுங்கள் என்று சொல்ல, இரண்டு நாட்கள் தொடர் தூக்கத்திற்கு பின் எழுந்து சிரித்தேனாம், என் தந்தையின் மற்றொரு பெயர் "வெறியன்", வெறியன் சாமி என்கிற நாட்டார் தெய்வத்தின் நினைவாக அந்த பெயர் அவருக்கு, எனக்கும் இந்த சம்பவத்திற்கு பின் "வெறியன்" என்று சில சமயம் அழைப்பார்களாம், ஆனால் இந்த வெறியன் சாமி நினைவாக அல்ல, என்னுடைய வெறித்தனத்திற்காக,அதிலிருந்து எனக்கு விளையாட்டு பொருட்கள் என்பதே கிடைக்காமல் போக புத்தகங்களின் பக்கம் ஒதுங்கிவிட்டேன், நான்காவது படிக்கும்போதிலிருந்து ஆரம்பித்தது ஜூனியர் விகடன், ஐந்தாவதிலிருந்து ராணி முத்து, இந்த வயசிலேயே இந்த புத்தகங்கள் படிக்கிறாயா என்று சுற்றத்தார் அறிவுரைசொல்லிக் கொண்டேயிருக்க இது தொடர்ந்து கொண்டே இருந்தது.

நடு இரவு அழுகை....
ஒரு மூன்று வயதிருக்கும், அம்மாவழி தாத்தா வீட்டில் இருந்தோம், வழக்கம்போல இரவில் கத்த ஆரம்பித்தேன் மிகக்கடுமையாக கத்த வீட்டில் எல்லோரும பயந்து போய் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மாமாவீட்டிற்கு தூக்கி சென்றனர், வழியெல்லாம் கத்திக்கொண்டே வந்தேனாம், மாமா ஆசிரியர் என்றெல்லாம் ஆர்.எம்.பி என்ற மருத்துவம் படித்து அந்த கிராம மக்களுக்கு டாக்டராகவும் இருந்தார், பூச்சிக்கடி, தேள்கடி, காயங்கள் போன்றவற்றிற்கெல்லாம் முதலுதவி செய்து பின் கடலூர் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பிவைப்பார், ஏதேனும் பூச்சி கடித்துவிட்டதோ என்று பயந்த என் அப்பா அம்மா பதட்டத்தோடு நடு இரவில் என் மாமாவீட்டு கதவை தட்ட சிறிது நேரம் திறக்கப்படவில்லை, அப்போது அழுகையை நிறுத்திவிட்டு "அப்பா மாமா தூங்கறாரு போல வா போலாம் நாம என்றேனாம்...." அதே நேரம் மாமா வீட்டுக்கதவை திறக்க அந்த இரவில் பதட்டத்தை மறந்து எல்லோரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தற்கொலை முயற்சி
நம்பினால் நம்புங்கள் அப்போது வயது வெறும் ஐந்தரை தான், பகல் பதினோரு மணி அளவில் தாத்தாவோடு சைக்கிளில் கொல்லைக்கு(வயலுக்கு) சென்று விட்டு அங்கிருந்த என் மாமா பையனோடு விளையாடிக்கொண்டே மலைக்கு சென்று சுற்றிவிட்டு நான் திரிந்து கொண்டிருக்க என்னையும் அவனையும் காணவில்லை என்று இங்கே அல்லோகலப்பட்டுக்கொண்டிருக்க சாயங்காலம் ஏழு மணி வாக்கில் மீண்டும் மோட்டார் கொட்டாய்க்கு நாங்கள் திரும்ப என் தந்தை எங்களை மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தார், வரும் வழியில் அவர் எதுவுமே பேசவில்லை, கோபமாக இருக்கிறார் என்று புரிந்து கொண்டேன், வீட்டிற்கு சென்ற பின் என் மாமி அவனை அடிக்காதிங்க என்று என் அம்மாவிடம் சொல்ல யாருமே ஒன்றுமே சொல்லாமல் நிற்க சட்டென்று ஒரு வேகம், இனி உயிரோடு இருக்கக்கூடாது என்று கட கடவென தோட்டத்தில் இருந்த கிணற்றிற்கு வேகமாக நடந்தேன், மிகக்குறைந்த உயரமே இருக்கும் அந்த தடுப்புக்கட்டையை தாண்டி எட்டி பார்க்க பயங்கர இருட்டாக இருந்தது, ஒரு நொடி தாமதித்து சரி குதித்துவிடலாமென்று நினைத்த போது அம்மா பின்னால் இருந்து சட்டென்று தூக்கிவிட்டார், என்னடா கெணத்துல உழ போனியா? என்றார். சாவு என்றால் என்ன? தற்கொலை என்றால் என்ன? அந்த வயதில் இது பற்றியெல்லாம் என்ன தெரிந்தது என்பதெல்லாம் சுத்தமாக எனக்கு நினைவில்லை அந்த சம்பவம் மட்டுமே நினைவில் இருக்கிறது. எழுத்தாளர்னா தற்கொலை முயற்சி செய்திருக்கனுமாமே! அப்போ நானும் எழுத்தாளனா?

பிடிவாதம்
பொதுவாக அமைதியானவன், விட்டுக்கொடுப்பவன் ஆச்சி பூச்சி என்று பெயர் சுற்றத்தில் இருந்தாலும் எதிலாவது பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தால் அது முடியும் வரை அதை விட மாட்டேன், பைத்தியம் மாதிரி அதை செய்து கொண்டேயிருப்பேன், கல்லூரியில் படிக்கும் போது பூஞ்சை மாதிரி இருப்பேன், ஆனால் தடகளப்போட்டி பயிற்சி எடுக்க வேண்டுமென வெறித்தனமாக பயிற்சி செய்து சில பதக்கங்களையும் வென்றேன்.

பிரான்சிலிருந்து நண்பன் எடுத்துவந்த ஒரு வீணாப்போன செல்போனின் பேட்டரி வாங்க ஒரு நாள் முழுக்க பெங்களூரை சுற்றி பைக்கில் வெறி பிடித்த மாதிரி சுற்றி சுற்றி வந்து, கடைசியாக இரவு 10.00 மணிக்கு பர்மாபஜாரில் ஆயிரம் ரூபாய் கொடுத்து பழைய பேட்டரியை வாங்கிவந்தேன், அந்த பேட்டரியும் வேலை செய்யாம போயி வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டது வேறு கதை.

ஒரு ஜெராக்ஸ் எடுக்க இரவு 1 மணி வரை செகந்தராபாத்தை சுற்றி வந்தேன், இப்படியாக இப்ப இப்பவே முடிக்கனும்னு இப்ப ராமசாமியா திரிவது இன்னமும் முழுசா நிற்கலை.

என் தந்தை அடிக்கடி சொல்வார், என்னை எவனும் 'பள்ளி'சாதியென்றே சொல்லா மாட்டான், எல்லோரும் என்னை என்ன சார் நீங்க ரெட்டியாரா, முதலியாரா என்று தான் கேட்பார்கள் என்று. அப்போது அவரது முகத்தில் ஒரு பெருமிதம் தோன்றும், 'பள்ளி' சாதியில் பிறந்துவிட்டோமே என்று தாழ்வுமனப்பாண்மையாலோ அல்லது ரெட்டியார், முதலியார் உயர்சாதி என்று தம்மை நினைக்கிறார்கள் என்றோ அல்ல, 'பள்ளி' சாதியை சேர்ந்தவர்கள் என்றாலே குடிப்பார்கள், சீட்டாடுவார்கள், குடும்பத்தை கவனிக்க மாட்டார்கள், ஊர் சுற்றுவார்கள் இந்த சாதி ஆட்கள் இப்படித்தான் என்ற பிம்பத்தை உடைத்துவிட்டேன் என்ற பெருமிதம் தான் அவர் முகத்தில், வர்ணாசிரமத்தின் முகத்தில் அவரால் இயன்ற அளவிற்கு அறைந்துள்ளார். பத்தாம் வகுப்பில் ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தேன் எங்கள் பள்ளியில் அந்த மதிப்பெண்ணிற்கு பயாலஜி குரூப் எளிதாக கிடைக்கும், அப்பா எவ்வளவோ சொல்லியும் அதற்கு அடுத்தபடியாக இருந்த கப்யூட்டர் சயின்ஸ் தான் எடுப்பேன் என்றேன், அவரும் பலரிடம் போய் ஆலோசனை கேட்டுவிட்டு சொன்னார், அதெல்லாம் மாமி வீட்டு பசங்களுக்கு தான் சரியாக வருமாம் பாம்பே, டில்லின்னு தான் வேலைக்கு போகனும் அதனால வேண்டாம்னு *** சார் சொன்னார் என்றார், அப்போது எரிய ஆரம்பித்தது தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ன மாமி வீட்டு பசங்களுக்கு மட்டும் தான் சொந்தமா, நான் போறேன் பார் என்று, எங்கள் கல்லூரியில் மெக்கானிக்கல் படித்தாலும் என் வேலை கம்ப்யூட்டர் தான் என்றிருந்தேன் உறுதியாக. நடுவில் அதில் சிறிய தொய்வு வந்த போதும் என் சீனியர் ஒருவர் மீண்டும் அதை தூண்டிவிட்டார், இன்று என் சொந்தமும் சுற்றமும் அவர்கள் குழந்தைகளிடம் மாமி வீட்டு பசங்களுக்கு தான் அது சரி வரும் என்று அவர்கள் குழந்தைகளை பயமுறுத்துவதில்லை, மாறாக என் பெயரை சொல்லி சொல்கிறார்கள்...

மயக்கம் அடித்து விழும் வரை வேலை செய்வது

விளையாட்டுத்தனம், கால் தரையில் படாமல் மிதந்த காலகட்டம் அது, ஏகப்பட்ட அரியர்கள், நான் எஞ்சினியரிங் முடிக்கவே மாட்டேன் என்று முடிவு செய்தவர்களில் எங்கள் கல்லூரி விரிவுரையாளரும் அடங்குவார், கடைசி ஆண்டு ஏழாவது செமஸ்ட்டர் இதிலே தூக்குறேன் எல்லாவற்றையும் என்று முடிவு செய்து தேர்வுக்கு 10 நாட்கள் முன்பு ஆரம்பித்து பகல், இரவு தூக்கமில்லாமல் படித்து எழுதினேன், 5 நாட்களில் காலை மாலை என 9 தேர்வுகள், பலரும் ஒன்டே மேட்ச் ஆட நான் மட்டும் 5 டே மேட்ச் ஆடிக்கொண்டிருந்தேன், முழு பலத்தையும் பயன்படுத்தி தேர்வு எழுதினேன், தேர்வு மையத்திற்கு நடக்க கூட வலுவில்லை, தூக்கமின்மை அழுத்தங்களால் ஒரு தேர்வில் தேர்வாரம்பித்த அரை மணி நேரத்தில் மயக்கமடைந்து விழுந்துவிட்டேன், அந்த ஒரு தேர்வை தவிர மற்ற அனைத்து அரியர்களையும் ஏழாவது செமஸ்ட்டரிலேயே முடித்து கல்லூரியை ஆச்சரியப்படவைத்தேன், எட்டாவது செமஸ்ட்டரில் மிச்சமிருந்த அந்த ஒரு தாளையும் முடித்துவிட்டு வந்தேன்

வேலைக்கு சேர்ந்து ப்ராஜெக்ட் செய்யும் போது என்னை நம்பி பணி இருந்த கட்டத்தில் மயக்கம் அடித்து விழும் வரை இரவு பகலாக வேலை செய்வேன். பல முறை அலுவலகத்தில் இரவுகளில் யாருமில்லா நேரத்தில் மயங்கி டேபிளில் தலை சாய்த்து படுத்து நானே எழுந்து ஒரு காபி குடித்துவிட்டு மீண்டும் வேலை செய்வேன். இப்போதெல்லாம் அந்தளவிற்கு செய்ய முடியவில்லை.

பயமின்மை
ராஜினாமா கடிதத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அலைபவன்(ஒரு உவமானத்திற்கு தான் சொன்னேன், ஆனால் எந்த நேரமும் வேலையைவிட்டு வெளியேற தயாராகவே இருப்பேன்), சாப்ட்வேரில் முதலில் நுழைந்த போது இருந்த வேலையின்மை பற்றிய பயமெல்லாம் சில காலங்களிலேயே போய்விட்டது, தவறு என்று நான் கருதினால் என் சுயமரியாதைக்கு இழுக்கு வந்தால் அதை நேரடியாக கூட்டங்களிலேயே சொல்வேன், எனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதினால் நேரடியாக பேசுவேன், அதையும் மீறினால் உடனே ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வந்துவிடுவேன், சில ஆண்டுகளுக்கு முன் அதிக சம்பளம், பணி நிரந்தர வாய்ப்பு, இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு என்று என் எதிரில் இருந்த அனைத்தையும் விட்டுவிட்டு சிலவாரங்களிலேயே வெளிவந்தேன் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றிலிருந்து.

மெக்கானிக்கல் துறையிலிருந்து சாப்ட்வேர் மாறும்போது என் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் தவிர மற்ற பலரும் கூறினார்கள் இருப்பதைவிட்டு விட்டு பறக்க ஆசைப்படாதே என்று, AS400 லிருந்து வெப்க்கு மாறியபோதும் இதே தான், Perl, PHP,ஜாவா என மாறிய போது நல்லா தெரிந்ததை விட்டுவிட்டு ஏன் போகிறாய் என்றார்கள்.

ஒவ்வொரு மாறுதலும் ஒவ்வொரு புதுவிசயமும் எனக்கு நல்லதாகவே அமைந்தது. இன்று ஜாவாவிலிருந்து ஒரு காவாவுக்கு மாறவும் சாப்ட்வேர் துறையே இல்லையென்றால் வேறு துறைக்கு மாறவும் தயாராகவே உள்ளேன், மெக்கானிக்கல் துறையிலிருந்து சாப்ட்வேர் துறைக்கு மாறாமல் நமக்கு தெரிந்ததையே செய்வோம் என்றிருந்திருந்தால் கடலூர் சிப்காட்டில் ஏதாவது ஒரு கம்பெனியில் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. சிபாரிசில் வேலை செய்துகொண்டிருந்திருப்பேன்.

சேரனின் மாயக்கண்ணாடிகள் நம்மை சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கும் வாழ்க்கை முழுக்க, அந்த மாயக்கண்ணாடிகளை உடைத்து தான் வரவேண்டும் மாயக்கண்ணாடிகளை பார்த்து நாம் பயந்தால் இருக்கும் நிலையிலேயே இருக்க வேண்டியது தான்.

கோபம்

அத்தனை எளிதில் யாரிடமும் கோப்படமாட்டேன், பொதுவாக எல்லோரும் பொறுமையானவன் என்பார்கள் ஆனால் குடும்பத்தினர், மிக நெருங்கிய நண்பர்கஆள் இவர்களிடம் மட்டும் கோபம் சட் சட்டென்று வரும், யாரிடம் எனக்கு அதிக உரிமையிருக்கின்றதோ அவர்களிடம் மட்டுமே எனக்கு கோபம் வரும், என் கோபத்தால் உறவு பாதிக்கப்படாது, என்னை புரிந்து கொள்வார்கள் என்று நினைப்பவர்களிடம் மட்டுமே கோபப்படுவேன், நான் இப்படியாக நினைத்துக்கொண்டு யாரிடமாவது உரிமையெடுத்து அவர்கள் என்னை தவறாக நினைத்துவிட்டால் அத்துடன் அந்த உறவின் நெருக்கம் முடிவுக்கு வரும், அதன் பின் அவர்களிடம் நெருக்கம் பாராட்ட மாட்டேன், மற்றவர்களிடம் அத்தனை சுலபமாக கோபப்படமாட்டேன், ஆனால் என்னை கோபப்படுத்தும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக அதிகரிக்க அதிகரிக்க அதை வெளியே காட்டாமலே இருப்பேன் ஒரு நாள் வெடிக்கும் எரிமலையாக... அன்று பார்ப்பவர்கள் நிச்சயம் என்னை அப்படி கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்....

நாலு, ஆறு என அழைத்த நண்பர்கள் மன்னிக்கவும் என்னால் பதிவிட இயலவில்லை, வியர்டுக்கு அழைத்த நண்பர்களுக்கு நன்றி, தாமதமானாலும் இப்போது போட்டுவிட்டேன்