சிங்கப்பூரில் பொங்குதமிழ்ப் பண்ணிசை விழா

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் இசையை நடுவில் வைத்து அழகு பார்த்தது தமிழ், ஆனால் இன்று தமிழர்களிடத்திலே இசையில் தமிழில்லாமல் வேற்று மொழிகள் ஆக்கிரமித்து விட்டன, இந்த நிலையை மாற்றி 'ஆதி' இசையான தமிழிசை மீண்டும் புத்துயிர் பெற்று வருவதற்கு முக்கிய காரணம் மருத்துவர் இராமதாசு அவர்கள் நிறுவனராக இருக்கும் "பொங்குதமிழ்ப் பண்ணிசை மன்றம்" சார்பில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழிசை விழாக்கள். இவ்விழாக்கள் தமிழகமெங்கும் மற்றும் இந்தியாவின் பெரு நகரங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, கடல் கடந்து வெளிநாடுகளில் முதன் முதலாக சிங்கப்பூரில் இயேசு பிறந்த நன்னாளாம் கிறிஸ்த்துமஸ் தினமான டிசம்பர் 25 அன்று மாலை காலாங் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் தமிழ் நாளேடான "தமிழ் முரசு"விலும் சிங்கப்பூர் வானொலியிலும் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, மாலை ஆறு மணி சில நிமிடங்களில் மருத்துவர் இராமதாசு இந் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அரங்கினுள் நுழைந்தார், ஆதி இசையாம் தமிழிசை மழையில் நனைய வான் மழையும் வந்து சேர்ந்ததால் தமிழிசை நிகழ்ச்சி ஆரம்பிக்க சிறிது நேரமானது, கவிஞரும் எழுத்தாளருமான பிச்சினிக்காடு இளங்கோ அவர்களும் அவரோடு இணைந்து சிங்கப்பூர் வானொலி சேவை ஒலி 96.8ன் அறிவிப்பாளர் திருமதி மீனாட்சி சபாபதி அவர்களும் இந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

கவிஞர் இனியதாசனின் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலோடு விழா இனிதாக ஆரம்பித்தது, திருமதி.மீனாட்சி சபாபதி அவர்கள் தமிழிசை பற்றிய பல தகவல்களோடும் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ இன்றைக்கு கர்நாடக சங்கீதத்தில் உள்ள கீர்த்தனைகளுக்கு முன்னோடியாக தேவாரப்பாடல்கள் அமைந்தன என்றும், ராகங்கள் என்று அழைக்கப்படுபனவையெல்லாம் தமிழிசையிலே முன்பே இருந்தவை என்றும் அவைகள் யாழ்,பண்,பாலை என்றழைக்கப்பட்டன, இரண்டாம் நூற்றாண்டில் அரும்பாலை என்று கோவலன் வாசித்ததுன் இன்று சங்கராபரணம் என்று வழங்கப்படுகிறது என்றும் மேலும் பல தமிழிசை பற்றிய தகவல்களோடு நிகழ்ச்சியை சுவையோடும் பொருளோடும் தொகுத்து வழங்கினார்கள்.

பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் தலைவர் திரு.ஜே.வி.கண்ணன் அவர்களின் தொடக்க உரையை தொடர்ந்து தேவார இசைமணி பழனி சண்முகசுந்தர தேசிகர் மற்றும் தேவார இசைமணி கரூர் சுவாமிநாதன் அவர்களின் மூவர் தேவாரம், திருவாசகப்பாடல்கள் அரங்கிலுள்ளோர் உள்ளம் உருகப் பாடினார்கள்.





திருமதி டி.கே.கலா திருவருட்பா பாடல்களையும் பாரதியார் பாடல்களையும் அரங்கம் ரசிக்க பலத்த கைதட்டல்களோடு பாடினார்.









சித்தர் பாடல்களில் உள்ள அறிவியல், திருமூலத்தில் சொல்லப்பட்டிருக்கும் யோகாசனக்கலை பற்றிய பல அரிய தகவல்களோடு பண்ணிசைப்பாணர் மா.கோடிலிங்கம் அவர்கள் திவ்யபிரபந்தம், சித்தர் பாடல்கள், குனங்குடி மஸ்தான் பாடல்களை பாடினார், "ஆடு பாம்பே" பாடல் பலத்த ஆரவாரத்தை ஏற்படுத்தியது.



தமிழிசையில் ஆய்வு செய்திருக்கும், லால்குடி ஜெயராமன் அவர்களின் மாணவியுமான திருமதி.சங்கரி கிருஷ்ணன் அவர்கள் மும்மூர்த்திகளின் முன் மூர்த்திகளான முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர் மற்றும் கோபாலகிருஷ்ண பாரதியார் கீர்த்தனைகள் பாடினார்

பெரும்பாண நங்கை பட்டம் பெற்றவரும், திருச்சி காவேரி நுண்கலை கல்லூரியின் முதல்வருமான அருட்சகோதரி மார்கரெட் பாஸ்டின் குழுவினர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் வீரமாமுனிவர் பாடல்களை பாடினார்

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மக்கள் இசையான நாட்டுப்புற இசையை பாடினார் இசையில் முனைவர் பட்டம் பெற்ற திரு.மதுரை சந்திரன், இவரின் பாடல்கள் அரங்கத்தில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது, கிராமிய காதல் பாடல்கள், காசு பணம் பற்றிய பாடல்களோடு "கத்திரிக்காய்க்கு குடை பிடிக்க கத்துக்கொடுத்தது யாரு" என்று தொடங்கும் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்களும், நம் நெஞ்சில் நீங்க துயராக இருக்கும் கும்பகோணம் பள்ளி எரிந்தது மற்றும் இயற்கை பேரிடரான சுனாமி சோகத்தையும் பற்றிய பாடல்கள் நெஞ்சைப்பிழிய வைத்தன.

நிகழ்ச்சியின் இறுதி கட்டமாக தலைவர்களின் உரை அமைந்தது, பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் பொதுச்செயலாளர் வரவேற்புரை வழங்கினார், அவரைத்தொடர்ந்து திரு.ஜே.வி.கண்ணன், திரு.எஸ்.எம்.ஃபாருக், திரு.எஸ்.குலாம், பேராசிரியர் திருமிகு.திண்ணப்பன், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்தியத்தொடர்வண்டித்துறை முன்னாள் அமைச்சர் திருமிகு.ஆ.கி.மூர்த்தி மற்றும் திருமிகு.கணேஷ் கண்ணன் ஆகியோர் உரையாற்றினார்.

இறுதியாக பொங்குதமிழ்ப் பண்ணிசை மன்றத்தின் நிறுவனரும் விழாவின் சிறப்பு விருந்தினருமான மருத்துவர் இராமதாசு அவர்கள் சிறப்புரையாற்றினார், இயேசு பிரான் அவதரித்த நன்னாள் வாழ்த்து கூறி தன் உரையை ஆரம்பித்தார்,தமிழிசையின் தற்போதைய நிலை அதன் பெருமைகளை மீட்டெடுக்கும் செயல்பாடுகள் பற்றி விரிவாக தம் பேச்சில்

பல்வேறு இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் அனைவருக்கும் அவரவர்கள் உரிமையை கொடுத்து அவரவர்கள் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நல் அரசாக இருக்கும் சிங்கப்பூர் அரசை மக்கள் அரசு என்று பாராட்டினார்.

இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொக்கிஷங்களை உள்ளடக்கிய தேவாரம் திருவாசகம் பாடல்கள் இன்றைய இளைஞர்களை சென்று சேராததற்கு காரணம் நம்முடைய பெரியவர்கள் அதை நம் இளைஞர்களுக்கு படிப்பிக்காததுவேயாகும் அதனால் வரும் தலைமுறைக்கு உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு இவைகளை கற்றுக்கொடுங்கள், அவர்களுக்கு இந்த பண்ணிசையை சேர்ப்பியுங்கள் என்றார்.

6 வயதிலிருந்து ஏன் 4 வயதிலிருந்து பண்ணிசையை தமிழிசையை குழந்தைகளுக்கு படிப்பியுங்கள், 6 வயதிலிருந்து +2 வரை தமிழிசை ஒரு கட்டாயப்பாடமாக வைக்கப்பட வேண்டும் அதற்கு நூறு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டுமென்று கூறினார். ஐரோப்பா மற்றும் கனடாவில்உள்ள ஈழத்தமிழர்கள் சனி, ஞாயிறுகளிலே தமிழ்ப்பண்ணிசையை அவர்களே பள்ளிக்கூடங்கள் வைத்து பயிற்றுவிக்கின்றனர், அதனாலேயே ஈழத்தமிழர்களுக்கு இதில் மிக்க ஆர்வம் இருக்கின்றது, இதே போல் இங்கிருக்கும் தமிழர்களும் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்ப்பண்ணிசையை இங்கே அறிமுகப்படுத்தியதற்கு காரணம் இங்கே யார் யாரோ வந்து இசை என்ற பெயரிலே ஆடியிருப்பார்கள், பாடியிருப்பார்கள் அதனால் இப்படியான இசையை அறிமுகப்படுத்த விரும்பினோம்.

தமிழகத்திலிருக்கும் இளைஞர்களிடம் இன்று இயல் என்றால் திரைப்பட வசனங்கள், இசை என்றால் திரைப்பட இசை, நாடகமென்றால் திரைப்படங்கள், ஓவியமென்றால் திரைப்பட விளம்பர சுவரொட்டிகள், கலாச்சாரம், வாழ்க்கை நெறி எல்லாமே திரைப்படங்கள் தான் என்ற நிலை இருக்கின்றது, எதிர்கால தமிழகத்தை உயர்த்தி பிடிக்க வேண்டிய இளைஞர்கள், பொக்கிசமாக இருக்க வேண்டிய இளைஞர்கள் திரைப்பட மோகத்தில் எங்கோ தறிகெட்டுப்போய் கொண்டிருக்கின்றார்கள், இந்த நிலை மாற வேண்டும், இளைஞர்கள் நல்வழிப்பட வேண்டுமென்று தொடர்ந்து கூறிவருகின்றோம், பொங்குதமிழ் அறக்கட்டளையின் ஒரு அங்கமாக பொங்குதமிழ் பண்ணிசை மணி மன்றம் அமைத்து மற்றவர்களிடமிருந்து தமிழிசையை மீட்டுக்கொண்டிருக்கின்றோம், தமிழகத்திலே சென்னையிலே 150 சபாக்கள் உள்ளன, ஆனால் அங்கேயெல்லாம் தெலுங்கு பாடல்களும் வடமொழிப்பாடல்களும் பாடப்படுகின்றன, தமிழ் பாடல்கள் வெறும் துக்கடாவாக பாடப்படுகின்றன, அந்த நிலை மாற வேண்டுமென்றார், பண்ணிசை ஆய்வுகள் பற்றிய கருத்துகள் ஒரு நாள் அல்லது அரை நாள் வரும் காலங்களில் பட்டறையாக நடத்தப்படுமென்றார். பிறப்பிலிருந்து இறப்புவரை நம்மோடு இருக்கும் தமிழிசை அழிந்து வருவதற்கு இன்றைய திரைப்படங்களே முக்கிய காரணமாக இருக்கின்றன, இதிலிருந்து தமிழிசையை மீட்டெடுக்கின்றோம் என்றார், மக்களின் மனங்களை பண்படுத்த வேண்டும், திரைப்படத்தின் தாக்கம் இல்லாமல் மக்களுக்காக மக்கள் தொலைக்காட்சியை நடத்தி வருகின்றோம், மேலும் நல்ல தமிழிற்கு தமிழோசை பத்திரிக்கையை நடத்தி வருகின்றோம் என்று பேசினார், தமிழிசை விழாவை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி கூறி தம் உரையை முடித்தார்.

மேலும் படங்கள் இந்த சுட்டியில்

இது தொடர்பான பிற சுட்டிகள்

கோவிக்கண்ணன் சிங்கப்பூரில் பொங்குதமிழ் பண்ணிசை பெருவிழா

தமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதாசு

ஹரிகரனின் (ட)தமிழி(ளி)(லி)சை வாங்கலியோ சாமி

22 பின்னூட்டங்கள்:

said...

குழலி, சென்ற வாரயிறுதியில் சென்னை சென்றிருந்த பொழுது இந்த நிகழ்ச்சிக்கான சுவரொட்டியைக் கண்டேன். மிகவும் மகிழ்ந்தேன். இது ஒரு நல்ல முடிவு. அதனால் தொடங்கிய நல்ல தொடக்கம். இந்த விஷயத்தில் ராமதாஸ் செயல்படுத்தும் முறை சிறப்பு. வேறுபல சமயங்களில் அவரது செயல்பாட்டு முறையில் அதிருப்தி இருந்தாலும் அதற்காக இந்த முறையை நான் பாராட்டாமல் போனால் அது தவறாகிவிடும். ராமதாசின் இந்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள். இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவும் கேட்கவும் கொடுத்து வைக்கவில்லை. ஒலி/ஒளிப்பேழை வெளியிடுவார்களேயானால் சிறப்பாக இருக்கும். பாடிய அனைவருமே இசை வல்லுனர்கள்தான். இவர்களின் பண் தேர்வும் மிகச் சிறப்பு.

said...

நிகழ்ச்சியைப்பற்றிய விரிவான இடுகைக்கு நன்றி குழலி.

சில நாட்களுக்கு முன்பு நண்பர்களைச் சந்தித்தபோது, சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் சங்கீதம் ஒரு பாடமாக இருந்ததைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
இருவருக்கும் பள்ளியில் படித்த முத்துத்தாண்டவரின் 'ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண' என்ற சிதம்பரத்துச் சிவனைக்குறித்த பாடல் நினைவிருந்தது. கொஞ்சம் பாடி மற்றவர்களைப் பயமுறித்தி வைத்தோம். இதுபோக வெள்ளிக்கிழமைகளில் தேவார வகுப்பும் இருந்தது. அதே ஆசிரியை செவ்வாய் மாலைகளில், விடுதி மாணவிகளுக்கெனத் தனிவகுப்புகளும் நடாத்தினார். சங்கீதத்தில் பிடிப்பு வருவதற்குக் காரணமாக இருந்த இக்காரணிகளை மிகவும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன்.

-மதி

said...

விழாவின் நிறை குறைகள் மற்றும் மருத்துவருடனான சந்திப்பு (சில நிமிடங்கள் மட்டுமே சந்திக்க முடிந்தது) பற்றிய விவரங்கள் வரும் பதிவுகளில்.

நன்றி

said...

//குழலி, சென்ற வாரயிறுதியில் சென்னை சென்றிருந்த பொழுது இந்த நிகழ்ச்சிக்கான சுவரொட்டியைக் கண்டேன். மிகவும் மகிழ்ந்தேன். இது ஒரு நல்ல முடிவு. அதனால் தொடங்கிய நல்ல தொடக்கம். இந்த விஷயத்தில் ராமதாஸ் செயல்படுத்தும் முறை சிறப்பு//

ராகவன் அய்யா,

ஏற்றுக் கொள்ளவேண்டிய கருத்து.ஆனால் மருத்துவர் அய்யா கட்சியில் பங்க் குமார் போன்றவர்கள் இருப்பதும்,அவர் கட்சி அடி தடியில் இறங்குவதும் அவரின் நோக்கத்திற்கும்,அணுகுமுறைக்கும் மாசு கற்பிக்கிறது.
ஒன்று மட்டும் சொல்லலாம்.தி மு க வை பார்க்கும் போது மருத்துவரின் அரசியல் பண்பாடு/நாகரீகம்/ streets ahead.

பாலா

said...

பாலாவுக்கு எப்பவும் பங்க் குமார் ஞாபகம் தான் போல, பங்க் குமார் பாலாகிட்ட எதுவும் கடன் கிடன் வாங்கியிருந்தாரா?

said...

//பாலாவுக்கு எப்பவும் பங்க் குமார் ஞாபகம் தான் போல, பங்க் குமார் பாலாகிட்ட எதுவும் கடன் கிடன் வாங்கியிருந்தாரா?//

குழலி அய்யா,

இந்த கிண்டல் தானே வேணாம்கறது?

bank குக்கே நான் கடன் குடுக்கிறதா?
நீங்க ஒண்ணு; நம்ம லெவெல் ஏதோ நீங்க வந்தீங்கன்னா சேர்ந்து ஒரு கப் டீ சாப்பிடலாம்ன்ற லெவல்;அவ்வளவு தான்.

பாலா

said...

நம்மோடு இருக்கும் தமிழிசை அழிந்து வருவதற்கு இன்றைய திரைப்படங்களே முக்கிய காரணமாக இருக்கின்றன, இதிலிருந்து தமிழிசையை மீட்டெடுக்கின்றோம் என்றார்.

திரையிசை பல இசை மரபுகளை பயன்படுத்துகிறது. அதில் இந்துஸ்தானி இசைக்கும்,
லத்தின் அமெரிக்க வாத்திய கருவிகளுக்கும், தமிழ்நாட்டின் தொன்மையான இசைக்
கருவிகளுக்கும் இடம் உண்டு. திரை இசையால் தமிழ் இசை அழிகிறது என்பதை
ஏற்க இயலாது. கர்நாடக இசைக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறதா. வேறொருவர்
தமிழிசையால் நாட்டுப்புற இசை அழிகிறது என்று கூறக்கூடும். தமிழிசை என்பதை
எப்படி வரையரை செய்கிறீர்கள். தமிழிசையும்,கர்நாடக இசையும் எதிரிகள் என்று
கருதுகிறீர்களா? திரைப்படங்களில் பாரதிதாசன், பாரதியின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
அது மட்டும் தமிழிசை என்கிறீர்களா.
திரையிசை அதிக மக்களை எட்டுவதற்கு என்ன காரணம். திரையிசையில்
சிறப்பான முயற்சிகள் இல்லையா. திரையிசைக்கு எதிராக செயல்படுவதாக
நினைத்துக் கொண்டு தமிழிசையை வளர்க்க நினைப்பது நல்ல போக்கல்ல.
திரையிசையினை விமர்சிப்பது என்பது வேறு, அதனால் இது வளரவில்லை என்பது
ஏற்புடையதாகத் தோன்றவில்லை.மேலும் இசை என்பதற்கு மொழி, குறிப்பிட்ட
பண்பாடு கடந்த பரிமாணங்கள் உண்டு. இதைப் புரிந்து கொள்ளாமல்
தமிழிசை தமிழிசை என்று புலம்புவது அர்த்தமற்றது.

said...

மேற்கண்ட அனானியின் பின்னூட்டம் "இன்றைய திரைப்படங்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறதா? இல்லையா?" என்ற பட்டிமன்றத்தலைப்பில் இன்றைய திரைப்படங்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறது என்ற அணியில் பேசுபவர் எப்படி வாதிப்பாரோ அது போல இருக்கின்றது.

நன்றி

said...

எப்படியோ, எங்கிருந்தோ இந்தத் தமிழிசை அரங்கேற்றம் நடந்தாக வேண்டும்.

அதை திரு. ராமதாஸ் செய்வதில் தப்பில்லை எனப் படுகிறது....அது ஒரு வியாபாரமக இருப்பினும்!

ஒருவர் சில, பல தவறுகள் செய்தார், செய்கிறார் என்பதற்காக, ஒட்டுமொத்தமாக அனைத்தையும் பழிப்பது முறையாகப் படவில்லை.

வரவேற்போம் தமிழிசையை....அது எந்த வடிவில் வரினும்..

இதில் சில குறைகள் இருக்கலாம்....நிச்சயம் இருக்கும்....கன்னிமுயற்சி என்பதால்!

இதை ஒரு முன்னோடியாகக் கொண்டு மற்றவர்கள் இதனை மேம்படுத்த முயற்சிக்கலாமே அல்லது, ஆக்கபூர்வ ஆலோசனைகள் தரலாமே!

புத்தாண்டு வாழ்த்துகள்!

said...

//தமிழகத்திலிருக்கும் இளைஞர்களிடம் இன்று இயல் என்றால் திரைப்பட வசனங்கள், இசை என்றால் திரைப்பட இசை, நாடகமென்றால் திரைப்படங்கள், ஓவியமென்றால் திரைப்பட விளம்பர சுவரொட்டிகள், கலாச்சாரம், வாழ்க்கை நெறி எல்லாமே திரைப்படங்கள் தான் என்ற நிலை இருக்கின்றது, எதிர்கால தமிழகத்தை உயர்த்தி பிடிக்க வேண்டிய இளைஞர்கள், பொக்கிசமாக இருக்க வேண்டிய இளைஞர்கள் திரைப்பட மோகத்தில் எங்கோ தறிகெட்டுப்போய் கொண்டிருக்கின்றார்கள்,//

தமிழ்நாட்டு அரசியலும் சினிமாவும் இரண்டறக் கலந்ததால் வந்த வினை இது! எம்ஜிஆர், கருணாநிதி, சிவாஜி,ரஜினி(தேர்தல் கால வாய்ஸ்), சமீபத்திய விஜய்காந்த், சரத்குமார், விஜய டி.ராஜேந்தர் இன்னபிற... என அரசுக் கொள்கைகள், திட்டங்கள், செயல்படுத்தல், சமூக வழிநடத்துதல் என்பனவற்றில் எல்லாம் சினிமா ஜிகினா இல்லாது எதுவுமே இல்லாத நிலை 40 ஆண்டுகளாக... வெகுஜன இசையில் இறைவனுக்கும் தெய்வீகத்திற்கும் பதிலாக இறைமறுப்புக் கொள்கையில் ஊறிய மனதுடன் ஜிகினா சினிமா தமிழனை முன்னெடுத்துச் செல்கின்றது!

குழலி நீங்க முந்தைய பதிவில் பேரிகைமுழக்கக் கொம்பும், பறை என்கிற முழுக்க முழுக்க தமிழிசை(?)க் கருவிகள் மட்டுமே இசைத்து இசைமீட்பு என்று குறிப்பிட்டு இருந்ததற்கும், இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப் பட்ட இசைக்கருவிகள் பாரம்பர்ய சங்கீத இசைக்கருவிகளாகவே இருக்கிறது!
இனிமையான இசைக்கு , தமிழ் மொழிப் பயன்பாட்டுக்கு, இன்னின்ன இசைக்கருவிகள்தான் என்கிற வரையறை அதன் வீச்சை சுருக்கிட்டுவிடும் சாத்தியம் உள்ளது!

மற்றபடி சபாக்களைச் சாடுவது பயன் தராது. இம்மாதிரி பொங்குதமிழ் இசைக்கு வெகுஜன ரசிப்பு இருப்பது வியாபார ரீதியான இசைத்தட்டுகள் விற்பனை வெற்றியானால் இம்மாதிரி நிகழ்வுகள் டிஸம்பரில் மட்டுமே நடக்கவேண்டும் என்கிற வரையறையைத் தாண்டி தமிழகத்தில் அடிக்கடி எல்லா மாதங்களிலும் நடக்கும் விருப்ப நிகழ்வாகும்!

said...

//தமிழகத்திலிருக்கும் இளைஞர்களிடம் இன்று இயல் என்றால் திரைப்பட வசனங்கள், இசை என்றால் திரைப்பட இசை, நாடகமென்றால் திரைப்படங்கள், ஓவியமென்றால் திரைப்பட விளம்பர சுவரொட்டிகள், கலாச்சாரம், வாழ்க்கை நெறி எல்லாமே திரைப்படங்கள் தான் என்ற நிலை இருக்கின்றது,//

மிகவும் உண்மையான கருத்து. மருத்துவரின் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.

நல்லதொரு கட்டுரைக்கு மிகவும் நன்றி!

said...

//அதை திரு. ராமதாஸ் செய்வதில் தப்பில்லை எனப் படுகிறது....அது ஒரு வியாபாரமக இருப்பினும்.!//
எஸ்.கே. அய்யா வியாபாரம் என்று குறிப்பிட்டீர்களே அதற்காக சொல்கிறேன், நேற்று மருத்துவர் இராமதாசு அவர்கள் பேசியபோது குறிப்பிட்டார், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி சொல்லி இந்த நிகழ்ச்சியால் எங்களுக்கு செலவு எதுவுமில்லை, அன்டர் லைன் செய்துக்குங்க எங்களுக்கு செலவு இல்லை அதற்கு இந்நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கு நன்றி சொல்கிறேன் என்றார், தமிழிசை நிகழ்ச்சிகளை தற்போது கைக்காசு போட்டு நடத்தும் அளவில் தான் இருக்கின்றது...

அவருடைய பேச்சை பதிவு செய்துள்ளேன், பின்பு ஒலியேற்றுகிறேன்.

நன்றி

said...

//....நல்ல தொடக்கம். இந்த விஷயத்தில் ராமதாஸ் செயல்படுத்தும் முறை சிறப்பு. வேறுபல சமயங்களில் அவரது செயல்பாட்டு முறையில் அதிருப்தி இருந்தாலும் அதற்காக இந்த முறையை நான் பாராட்டாமல் போனால் அது தவறாகிவிடும். ராமதாசின் இந்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள்.//

ஜிரா அவர்களுடன் நான் உடன்படுகிறேன். மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போக்கும் வரவேற்கத் தக்கது. தமிழும் இசையும் வாழ்க!

said...

சிங்கையில் நடந்தது ஒரு வியாபாரம் என நான் குறிப்பிடவில்லை, திரு/குழலி.

இந்த முயற்சியை ஒரு "வியாபாரம்" எனச் சொல்லும் சிலருக்கு பதிலாகவே அதனைப் பதிந்தேன்.

இன்னொன்று,முந்தைய பின்னூட்டத்தில் சொல்லாமல் தவிர்த்தது--

நீங்கள் பதித்திருக்கும்நிகழ்ச்சி நிரலைப் பார்த்ததும் சட்டென்று மனதில் பட்டது --

நம் ஈழத்தமிழரின் முந்தைய சிறப்பினையும், இன்றைய நிலையினையும் பற்றி இயற்றப்பட்ட பல உணர்ச்சிகரமான பாடல்களைக் கேட்டிருக்கிறேன்.

அவற்றை இதில் இடம் பெறச் செய்யாதது ஒரு பெரும் குறையாகவே எனக்குப் படுகிறது.

அடுத்த முறை சரி செய்வார்கள் என நம்புவோம்!

said...

// ராகவன் அய்யா,

ஏற்றுக் கொள்ளவேண்டிய கருத்து.ஆனால் மருத்துவர் அய்யா கட்சியில் பங்க் குமார் போன்றவர்கள் இருப்பதும்,அவர் கட்சி அடி தடியில் இறங்குவதும் அவரின் நோக்கத்திற்கும்,அணுகுமுறைக்கும் மாசு கற்பிக்கிறது.
ஒன்று மட்டும் சொல்லலாம்.தி மு க வை பார்க்கும் போது மருத்துவரின் அரசியல் பண்பாடு/நாகரீகம்/ streets ahead. //

பாலா, இங்கே ராமதாசின் அரசியல் பண்பாடு நாகரீகம் ஆகியவைகளைப் பற்றி யார் பேசினார்கள்? தமிழிசை தொடர்பாக அவர் எடுத்துள்ள சில நடவடிக்களைப் பாராட்டுவதற்குத் தடையில்லை என்று நினைக்கிறேன். ஒருவரிடம் நல்லதும் இருக்கும். கெட்டதும் இருக்கும். அல்லதை விலக்கி நல்லதைக் கொண்டால்..கொள்வதைப் பொறுத்து நல்லது பெருகும். அதை விடுத்து..அவர் அரசியல் சரியில்லை என்பதால் அவர் எதைச் செய்தாலும் எதிர்ப்பது தவறு. குஷ்பூ விஷயத்திலும் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ்ப் பெயர் வைக்கின்ற விஷயத்திலும் ராமதாசின் நடவடிக்கையை நான் எதிர்த்தேன். அவர் மேற்கொள்ளும் வழிமுறை தவறு என்று பட்டது. ஆனால் இன்று தமிழிசையைப் பொருத்தவரை சரியான நடவடிக்கை என்றே தோன்றுகிறது. ஒருவேளை இன்றைய நமது ஊக்குவிப்பு நல்லதாகவே முடியலாம்.

(எல்லாஞ் சரி...அதென்ன ஐயா? நான் ஃபோட்டோ போட்டுதான எழுதுறேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) :-)

said...

// குழலி நீங்க முந்தைய பதிவில் பேரிகைமுழக்கக் கொம்பும், பறை என்கிற முழுக்க முழுக்க தமிழிசை(?)க் கருவிகள் மட்டுமே இசைத்து இசைமீட்பு என்று குறிப்பிட்டு இருந்ததற்கும், இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப் பட்ட இசைக்கருவிகள் பாரம்பர்ய சங்கீத இசைக்கருவிகளாகவே இருக்கிறது!
இனிமையான இசைக்கு , தமிழ் மொழிப் பயன்பாட்டுக்கு, இன்னின்ன இசைக்கருவிகள்தான் என்கிற வரையறை அதன் வீச்சை சுருக்கிட்டுவிடும் சாத்தியம் உள்ளது! //

தவறில்லை. அழிந்த இசைக்கருவிகளை மீட்க வேண்டியுள்ளது என்பது உண்மையே. இது ஒரு தொடக்கமே. இன்னும் சிறப்பாகச் செய்தால் ஒவ்வொன்றாக வென்றெடுக்கலாம்.

// மற்றபடி சபாக்களைச் சாடுவது பயன் தராது. இம்மாதிரி பொங்குதமிழ் இசைக்கு வெகுஜன ரசிப்பு இருப்பது வியாபார ரீதியான இசைத்தட்டுகள் விற்பனை வெற்றியானால் இம்மாதிரி நிகழ்வுகள் டிஸம்பரில் மட்டுமே நடக்கவேண்டும் என்கிற வரையறையைத் தாண்டி தமிழகத்தில் அடிக்கடி எல்லா மாதங்களிலும் நடக்கும் விருப்ப நிகழ்வாகும்! //

முதலில்...தமிழிசையும் உண்டு என்று நிரூபிக்க வேண்டிய நிலை. பாரதியையும் பாரதிதானையும் தாண்டியும் தமிழிசை இருக்கிறது என்பதையும் நிரூபிக்க வேண்டிய நிலை. பொதுமக்களிடம் இதைக் கொண்டு செல்ல வேண்டிய கடமை. இன்னும் நிறைய நிறைய இருக்கிறது. ஆன்மீகத்தை விலக்கித் தமிழிசை இருக்க முடியாது. திருக்கோயில்களில் தமிழிசைக் கச்சேரிகளை நடத்த வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகத்திலிருந்து மற்ற தளங்களுக்கும் செல்லலாம்.

said...

//நம் ஈழத்தமிழரின் முந்தைய சிறப்பினையும், இன்றைய நிலையினையும் பற்றி இயற்றப்பட்ட பல உணர்ச்சிகரமான பாடல்களைக் கேட்டிருக்கிறேன்.

அவற்றை இதில் இடம் பெறச் செய்யாதது ஒரு பெரும் குறையாகவே எனக்குப் படுகிறது.

அடுத்த முறை சரி செய்வார்கள் என நம்புவோம்!
//
நிச்சயமாக, மேலும் இந்த தமிழிசை நிகழ்ச்சியை எப்படி மேம்படுத்தலாமென்று ஆலோசனை கூறுங்கள், அவைகளையெல்லாம் ஒரு கட்டுரையாக்கி மருத்துவர் இராமதாசு அவர்களிடம் சேர்ப்பிக்க செய்யலாம்.

said...

// குழலி நீங்க முந்தைய பதிவில் பேரிகைமுழக்கக் கொம்பும், பறை என்கிற முழுக்க முழுக்க தமிழிசை(?)க் கருவிகள் மட்டுமே இசைத்து இசைமீட்பு என்று குறிப்பிட்டு இருந்ததற்கும், இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப் பட்ட இசைக்கருவிகள் பாரம்பர்ய சங்கீத இசைக்கருவிகளாகவே இருக்கிறது!
இனிமையான இசைக்கு , தமிழ் மொழிப் பயன்பாட்டுக்கு, இன்னின்ன இசைக்கருவிகள்தான் என்கிற வரையறை அதன் வீச்சை சுருக்கிட்டுவிடும் சாத்தியம் உள்ளது! //

தமிழ்முரசுவில் வந்த செய்தியையே நான் வெளியேட்டேன், பறை, கொம்பு என்பது நான் உதாரணத்திற்கு சொன்னது... அருட்சகோதரி மார்கரெட் பாஸ்டின் குழுவினர் பாடியபோது உள்ளூர் இசைக்கலைஞர்கள் இதில் கீ-போர்டும் வாசித்தனர்...நிகழ்ச்சி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியதால் நேரக்குறைவு ஏற்பட்டு மக்கள் இசையான நாட்டுப்புறப்பாடல்கள் அரைமணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டது, அடுத்த முறை இன்னும் நிறைய நேரம் நாட்டுப்புறப்பாடல்களை வழங்குவதாக உறுதியளித்தனர்.

நன்றி

said...

//ஆன்மீகத்தை விலக்கித் தமிழிசை இருக்க முடியாது. திருக்கோயில்களில் தமிழிசைக் கச்சேரிகளை நடத்த வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகத்திலிருந்து மற்ற தளங்களுக்கும் செல்லலாம்//

மிகச்சரியான புள்ளி இது. தமிழில் இசை பாடுவது குன்றிப்போய், சுருங்கியதற்கு 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் அரசின் தலைமைக் கொள்கையான கடவுள் இல்லை, இல்லை இல்லவே இல்லை ... கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்கிற இந்துமத, தெய்வ வெறுப்புக் கொள்கைகளில் ஊறிப்போன, உந்தப்பட்ட பெரும்பான்மை மக்களின்
கவனச் சிதறல் மிக முக்கியமான அம்சம்.

இறையே இல்லை என்று சாதரணனத் தமிழனை அளவுக்கு மீறி குழப்பி அவனை அவனது சீர்மிகு பரந்துபட்ட தெய்வீகத்துடன் இணைந்த பாரம்பர்யத்தை, வெற்று வாய்ச்சவடால் அரசியல் கொள்கைகள் மட்டுமே சுயமரியாதை, பகுத்தறிவு என்று சுருங்கிப் போகச் செய்த சூழல் மீண்டும் தமிழ் மொழி இறை இசையை பொதுவில் உளவியல் ஒப்புதலுடன் அனுமதிப்பது, தேவாரம், திருவாசகம்,திருப்பாவை, திருவெம்பாவை என்று தமிழிசை மீண்டுவந்தால் தெய்வீகத் தமிழ்ப் பாரம்பரியம் எத்துணை ஆக்கமானது என்று எல்லோரும் அறிவர்!

மீட்டெடுத்தல் என்பதினை விட மீண்டும் அனுமதிப்பது என்பது சரி! நாம் தானே இறைவன் இல்லை என்று காட்டுமிராண்டித்தனமாக கண்மூடித்தனமாக நமது தமிழ்ப் பாரம்பரியத்தினைச் சுயமாய்ச் சுருக்கிக் கொண்டது!

இசைத்தமிழை தெய்வத்தால் மட்டுமே மீண்டும் தழைக்க வைக்க முடியும்!

said...

//மீட்டெடுத்தல் என்பதினை விட மீண்டும் அனுமதிப்பது என்பது சரி! நாம் தானே இறைவன் இல்லை என்று காட்டுமிராண்டித்தனமாக கண்மூடித்தனமாக நமது தமிழ்ப் பாரம்பரியத்தினைச் சுயமாய்ச் சுருக்கிக் கொண்டது!

இசைத்தமிழை தெய்வத்தால் மட்டுமே மீண்டும் தழைக்க வைக்க முடியும்!
//
பதிவு வேறு திசை நோக்கி பயணித்துவிடும் என்பதால் இதற்கான பதிலை பிறிதொரு சமயத்தில் பார்ப்போம், ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னது போலவே தமிழ் இலக்கியங்கள் மீதும் தமிழிசை மீதும் பெரியாரைப்போலவே எனக்கும் சில விமர்சனங்கள் இருக்கின்றன, அதைப்பற்றி வேறெரு சமயத்தில் பேசலாம்.

said...

//Today’s (27 Dec) ThamizhOsai Daily, Tamil Nadu, published Kuzhali’s this post as a full page article.
//
மிக்க நன்றி அருள். சிங்கப்பூர் தமிழிசை விழா பற்றிய பதிவு தமிழோசையில் வெளியிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி....

said...

விழா குறித்த விரிவான பதிவுக்கு நன்றி குழலி