கிரைம் நாவல்களும் வாசிப்பும்

கிரைம் நாவல்களை பற்றி எந்த ஒரு விமர்சனமும் கட்டுரைகளும் எங்கேயும் தென்படுவதில்லையே ஏன்?

கிரைம் நாவல்கள் எல்லாம் இலக்கியம் இல்லை என்கிற ஒரு கருத்துதான் காரணமா?

எம்மை பொறுத்தவரை தமிழ் எழுத்துக்கும், இலக்கியத்திற்கும், வாசிப்புக்கும் கிரைம் நாவல்களுக்கு ஒரு பெரும் இடம் உண்டு, ஒரு சாமனியனையும் வாசிக்க வைத்தது கிரைம் நாவல்கள் என்பது எம் கருத்து. தமிழ் வாசிக்கத்தெரிந்த அத்தனை பேரும் கிரைம் நாவல்கள் வாசித்திருப்பார்கள் என நம்புகிறேன்.

எம் பள்ளி நாட்களில் எனக்கு ஜெயகாந்தனையும் தெரியாது, புதுமைபித்தனையும் தெரியாது. தெரிந்திருந்தாலும் அதை புரிந்துகொள்ளும் வயசும், பக்குவமும் இல்லை எம்மிடம் அப்போது,
நான் 3ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ராணிமுத்து படித்திருக்கின்றேன்,
ராணிமுத்து படிக்கிற வயசா இது என ஏச்சுக்களும் வாங்கியிருக்கிறேன்
என்னை மட்டுமல்ல என்னோடிருந்த என் தோழர்களையும் கிரைம் நாவல்கள் ஆக்கிரமித்து இருந்தன, பல கிராமங்களிலே எழுத படிக்க மட்டுமே தெரிந்த பலர் கிரைம் நாவல்கள் படிப்பதை பார்த்துள்ளேன், அப்போது ஒரு பெரிய விடயமாக தெரியவில்லை,
ஆணால் இப்போது சாமனியனையும் வாசிக்க செய்தது கிரைம் நாவல்கள் என என்னும் போது கிரைம் நாவல்கள் வாசிப்புக்கு ஆற்றிய ஆற்றுகின்ற சேவை நிச்சயமாக பிரம்மாண்டமானது என்பதை மறுக்க முடியவில்லை.

எது சாமனியனையும் கிரைம் நாவல்கள் வாசிக்கச்செய்தது?
மிக எளிய நடை (புரியாத வார்த்தைகளை போட்டு, மிக நீளமான வாக்கியங்களை எழுதி பின்நவீனத்துவம்,முன் நவீனத்துவம் என பேசவில்லை),
நாவலை வாசிக்கும் போதே ஒரு திரைப்படமாக மனதில் ஓடுவது.
நானும் எனது தோழர்களும் பள்ளியில் படிக்கும் போது பல கிரைம் நாவல்கள் எழுதியுள்ளோம்,
பலர் கிரைம் நாவல்கள் படிக்க ஆரம்பித்து அப்படியே பிறவற்றையும் படிக்க ஆரம்பித்தனர். இல்லையென்றால் அப்போதே என் போன்றவர்களுக்கு வாசிப்பு பழக்கம் இல்லாது போயிருக்கும்.

ஜெயகாந்தனுக்கும், ஜெயமோகனுக்கும் இன்னும் பல எழுத்தாளர்களுக்கும் தரப்படும் முக்கியதுவம் பட்டுகோட்டை பிரபாகருக்கும், சுபாவுக்கும், ராஜேஷ்குமார்,ராஜேந்திரகுமார்களுக்கும் தரப்படவில்லை, அட ஜேகே,அமி அளவிற்கு பேசப்படவில்லையென்றாலும் ஒரு குறைந்தபட்ச இடம் கூட தரப்படாதது வேதனை அளிக்கிறது. ஆறுதலாக சுஜாதா எழுதிய கிரைம் நாவல்கள் சில இடங்களில் நினைவு கூறப்படுகின்றது, ஆனால் சுஜாதவை விட கிரைம் நாவல்கள் எழுதுவதில் படைப்பதில் வல்லவர்கள் நான் மேலே பட்டியலிட்ட சிலர், இதிலிருந்து சுஜாதா என்ற எழுத்தாளருக்காக தான் அவரது கிரைம் நாவல்கள் பேசப்ப்டுகிறதே ஒழிய அவரது கிரைம் நாவல்களுக்காக சுஜாத பேசப்படவில்லை என்பது நிதர்சனம்.

11 பின்னூட்டங்கள்:

said...

அன்பின் குழலி,
ஒரு காலத்தில் தமிழ் க்ரைம் நாவல்களை நானும் அதிகமதிகம் படித்திருக்கிறேன்.
ஆனாலும் ஒரு காலத்திலும் அவை இலக்கியமாகாது என்பது தான் என் தாழ்மையான கருத்து.

ஒரு முறை கவிஞர் மு.மேத்தாவும் நாவலாசிரியர் ராஜேஷ் குமாரும் (குமுதத்துக்காக) நேரில் சந்தித்தனர்:
அப்போது பேசப்பட்ட சுவையான சில உரையாடல்துளிகள்:
(தூசுப் படிந்த நினைவுகளிலிருந்து தட்டி எடுத்து எழுதுகிறேன்).

மு.மேத்தா: ரத்தத்தைப்பற்றி மட்டுமே எழுதுவதை விட்டு விட்டு கண்ணீரைப் பற்றியும் வியர்வையைப் பற்றியும் நீங்கள் எழுதக்கூடாதா?

ரா.குமார்: 'மாமிக்கந்த மைலாப்பூரு தான்' என்று பாட்டு எழுதுகிற நீங்கள் இப்படிச் சொல்வதா?
கண்ணாடி வீட்டிலிருந்துக் கொண்டு கல்லை எறிகிறீர்களே?'

(வேறு யாரும் எறிந்தால் ஏற்றுக்கொள்வார் போலும்).

மு.மேத்தா: 'சினிமாப் பாடல்கள் இல்லாவிட்டாலும் இந்த மேத்தா பேசப்படுவான். வன்முறை வளர்க்கும் இந்த க்ரைம் நாவல்கள் இல்லாவிட்டால் நீங்கள் பேசப்படுவீர்களா?'

(தனது வர்த்தக நலன் கருதி றா.குமாருக்கு ஆதரவாகவே குமுதம் வாசகர் கடிதங்களை வெளியிட்டிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை அல்லவா)

மற்றப்படி PKP யின் வருணனைகளும், சுபாவின் எழுத்து நடையும் நான் ரசிப்பவையே!
இப்போதும் PKP போன்ற எழுத்தாளர்களை அவர்களுடைய க்ரைம் அல்லாத நாவல்களுக்காகவும் நல்ல பல கட்டுரைகளுக்காகவுமே படிக்கிறேன்.

said...

I agree the comment of Ipnu Hamdhun.. ya.. crime novels can not be considered as a part of literary work. P.T. Samy may not be placed with Jayakanthan.

Any how your selection of topics for your essays are too good.

said...

புஷ்பா தங்கதுரையின் "என் எமரால்டு காதலி", "மிஸ் வயலட்" படிச்சிருக்கிங்களா குழலி அவர்களே?

said...

//ya.. crime novels can not be considered as a part of literary work//

புரிகின்றது, ஆனாலும் இன்றைய இலக்கிய உலகிலே தலித் இலக்கியம், பெண்ணியம்(இதெல்லாம் இலக்கியம் இல்லை என சொல்லவரவில்லை நான், இப்படியான பிரிவுகள் உள்ளபோது) என்று இடம் தந்திருக்கும் போது ஏன் சாருநிவேதிதாவிற்கும் இலக்கிய உலகிலே இடம் தந்திருக்கும் போது கிரைம் நாவல் எழுத்துக்களுக்கும் ஒரு இடம் தந்திருக்கலாமே என்ற ஒரு ஆதங்கத்தில்தான் எழுதினேன், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் க்கு கொடுக்கப்பட்டுள்ள இடம் ஏன் தமிழக இலக்கியத்தில் கிரைம் எழுத்தாளர்களுக்கு தரவில்லையென்ற ஆதங்கம் தான்

//புஷ்பா தங்கதுரையின் "என் எமரால்டு காதலி", "மிஸ் வயலட்" படிச்சிருக்கிங்களா குழலி அவர்களே? //
இல்லை காஞ்சி பிலிம்ஸ், நான் கிரைம் நாவல்கள் படித்து சில ஆண்டுகள் ஆகின்றது, இந்த முறை தாயகம் செல்லும்போது வாங்கி வரவேண்டும், வேறு ஏதேனும் நல்ல கிரைம் நாவல்கள் இருந்தால் சொல்லுங்களேன் படிப்பதற்கு

said...

//பலர் கிரைம் நாவல்கள் படிக்க ஆரம்பித்து அப்படியே பிறவற்றையும் படிக்க ஆரம்பித்தனர். இல்லையென்றால் அப்போதே என் போன்றவர்களுக்கு வாசிப்பு பழக்கம் இல்லாது போயிருக்கும்//

மிகச் சரி. நான் முதலில் படிக்க ஆரம்பித்தது கிரைம் நாவல்கள் தான்.

பிறகு தான் மற்றவை படிக்க ஆரம்பித்தேன்
விஜயன்

said...

"ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் க்கு கொடுக்கப்பட்டுள்ள இடம் ஏன் தமிழக இலக்கியத்தில் கிரைம் எழுத்தாளர்களுக்கு தரவில்லையென்ற ஆதங்கம் தான்"

சேஸ் ஒரிஜினலாக எழுதினார். குமார்கள் எங்கே சுட்டு எழுதினார்களோ.

சேஸின் மொழி அபத்தமாக இருக்காது. விறுவிறுப்பாக இருக்கும். வார்த்தைகளை வீணாக்க மாட்டார். ஆனால் "அவன்/அவள் சத்தியமாக செத்துப் போயிருந்தான்" என்ற வாக்கியத்தையும் இது போன்ற பிற அபத்தங்களையும் ராஜேஷ்குமாரின் ஒவ்வொரு புத்தகத்திலும் பார்க்கலாம்.

said...

ராஜேஷ்குமாரே தான் ஏன் க்ரைம் நாவல்கள் எழுத ஆரம்பித்தேன் என்பதைப்பற்றிச் சொல்லியிருப்பார்: அவர் எழுத ஆரம்பித்த காலத்தில் அகிலன் போன்ற காந்தீயச் சிந்தனைகளால் பாதிக்கப்பட்ட ஐடியலிஸ எழுத்துக்கள்தான் வெகுஜனத் தளத்தில் மரியாதை பெற்றிருந்தன, வித்தியாசமாக எழுதவேண்டுமென்றால் க்ரைம் நாவல்கள் எழுதுவதுதான் சரி என்று தான் முடிவெடுத்ததாகக் கூறியிருப்பார். இது ஒரு சிக்கலான விஷயம் - இதைப்பற்றி நானும் ஏதாவது எழுதவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்ததுண்டு. கோவை ஞானியும் ராஜேஷ்குமாரும் இதுகுறித்து உரையாடியதைப் படித்துள்ளேன். இதற்காகவே கோவை ஞானி முப்பது நாற்பது க்ரைம் நாவல்களைப் படித்துத் தயார்செய்துகொண்டு போனதாக நினைவு. Peter Ackroyd, GK Chesterton போன்ற சில எழுத்தாளர்கள் எழுதிய துப்பறியும்/மர்ம நாவல்கள் "இலக்கியம்" என்ற அந்தஸ்து பெறவில்லை எனினும், அவற்றை "கச்சாப்பொருட்களாக", வெறும் "கலாச்சாரக் குறியீடுகளாக"க் கதைகளுக்குள்/புதினங்களுக்குள் உபயோகித்து அக்கதைகளை வேறொரு தளத்துக்கு இட்டுச்சென்ற எத்தனையோ உதாரணங்களை உலக இலக்கியத்திலிருந்து கூறமுடியும். ஷெர்லக் ஹோம்ஸ், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், மைக்கேல் க்ரிக்டன், இர்விங் வாலஸ் போன்ற சென்ற தலைமுறை எழுத்தாளர்களும், வெகு சமீபத்தில் டா வின்சி கோட் எழுதிய டான் பிரவுன் போன்றவர்களும் "இலக்கியம்" என்ற வரையறைக்குள் எப்போதும் வரமுடியாது என்பதே நிதர்சனம். இவர்களது படைப்புக்கள், மேற்சொன்னமாதிரி "கச்சாப் பொருட்களாக" உபயோகித்துக்கொள்ளப்பட மட்டுமே தகுதியுள்ளவை/வாய்ப்புள்ளவை என்பது என் அபிப்ராயம். தமிழில் சுஜாதாவுக்கும் இது பொருந்தும் - எனக்கும் தனிப்பட்ட முறையில் அவரது எத்தனையோ கதைகள் பிடித்திருந்தாலும், அவர் ஒரு cultural artifact என்பதைத் தாண்டி இலக்கியவாதியாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு அறவே இல்லை.

ஆனால், சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைப்பற்றி எழுதியுள்ளீர்கள் - அதற்கு நன்றி. நேரம் வாய்க்கையில் விரிவான ஒரு பின்னூட்டத்தை எழுதமுயல்கிறேன்.

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

கிரைம் நாவல்கள் இலக்கியமாகாது என்பது தட்டையான விமர்சனமாகப் படுகிறது. இதுதான் இலக்கியம் என்று தீர்மானிப்போர் யார்? வானத்திலிருந்து குதித்த தேவதூதன் இதுதான் இலக்கியம் என்று வட்டம் போட்டு வைத்திருப்பதாகவும் அதை மீறுவது அ-இலக்கியம் என்று படைப்புகளை வகைப்படுத்த முடியுமா? செவ்வியல் தன்மையுடனும் யதார்த்தமான கதைப் போக்கு மற்றும் பாத்திரங்களுடனும் சுவாரஸ்யமான உத்திகளுடனும் படைக்கப்படும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நாவல்களை இலக்கியம் என்கிற வரையறைக்குள் வகைப்படுத்தலாம் என்று நான் நம்புகிறேன். மலிவான உத்திகளையும் உள்ளடக்கத்தையும் அடக்கிய படைப்புகள் இதில் இடம் பெறாது.

சஸ்பென்ஸ் என்றவுடனே அது கிரைம் நாவல்களுக்கு மட்டுமே உரித்தானது என்று நினைப்பது தேவையற்றது. கதை சொல்லலில் சஸ்பென்ஸ் என்பது முக்கியமான அம்சம். அடுத்து என்ன நிகழப் போகிறது என்பதை வாசிப்பாளன் யூகிக்க முடியாதவாறு அசட்டுத்தனமின்றி சொல்லிக் கொண்டு போவதற்கு மிகுந்த திறமை வேண்டும். ஒரு கதை சொல்லியிடம் இருக்க வேண்டிய முக்கியமான அம்சமே சுவாரஸ்யமும் சஸ்பென்ஸ்-ம் தான்.

என்னுடைய வாசிப்பனுபவம் தொடங்கியது கிரைம் நாவல்களிலிருந்துதான். பொதுவாகவே ஒரு தீவிர வாசகனுக்கு ஆரம்பப் புள்ளியாக இருப்பது இம்மாதிரியான சுவாரஸ்யமான படைப்புகளே. ஆனால் அவன் இதிலேயே நின்று விடாமல் தன் தேடலை தொடர்ந்து கொண்டே இருந்தால்தான் அவனது ரசனை அடுத்த தளத்திற்கு மாறிக் கொண்டேயிருக்கிறது. நான் படித்த கிரைம் நாவல்களில் சிறந்ததாக சுஜாதாவின் 'நில்லுங்கள் ராஜாவே' மற்றும் 'கரையெல்லாம் செண்கப்பூ' (இதில் ஆங்காங்கே இறைந்திருக்கிற நாட்டுப்புறப் பாடல்களுக்காகவும்) ஆகிய நாவல்களைச் சொல்வேன்.

said...

Yes. Nillungal Rajave was definitely one of the best books in crime category.

Yes , In Tamil there is a small infact very small, self-proclaimed intellectual group that critisizes every thing else as useless stuff.
In my opinion, Sujatha, Subha, prabhakar are better and more imaginative than the rest of the crowd.