கடவுள் சிலையும் பெரியார் சிலையும்

ஏற்கனவே திராவிட தமிழர்கள் வலைப்பதிவில் வெளியான பதிவு, இங்கே மீண்டும் மீள்பதிவாக... ம்.. இன்னும் எத்தனை முறை மீள்பதிவு செய்ய வேண்டுமோ தெரியவில்லை, ஏனெனில் பெரியார் அவர்கள் சிலைகள், நினைவு நாள் கொண்டாடுதல் பற்றி என்ன சொன்னார் என்று தெரியாமலேயே உளறித்தள்ளும் சிலர் அவர்களும் உளறி எல்லோரையும் குழப்பும் வரை இவைகள் மீள்பதிவாக வந்து கொண்டேயிருக்கும்....

பிள்ளையார் சிலையை உடைத்த பெரியாருக்கு சிலையா! கடவுள் படங்களை வீசி எறிந்தவருக்கே உருவப்படங்களா? நினைவு நாளா? உருவப்படங்கள் நினைவு நாட்கள் பற்றி பெரியார் பேசியது இங்கே தரப்பட்டுள்ளது

இந்த கட்டுரை கீற்று இணைய தளத்திலிருந்து எடுத்து இங்கே தரப்பட்டுள்ளது, கீற்று இணையதளத்திற்கு நன்றி

நினைவுநாள் - படத்திறப்பு ஏன்?


எத்தனையோ பேர் சாகிறார்கள். ஏதோ இரண்டொருவர்கட்குத்தான் நாம் நினைவு நாள் கொண்டாடுகிறோம். செத்துப் போனவர்களின் பணத்தை உத்தேசித்தோ, படிப்பை உத்தேசித்தோ, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, சாமர்த்தியம் முதவியவைகளைப் பற்றியோ நாம் எவருக்கும் நினைவு நாள் கொண்டாடுவதில்லை. இவைகள் காரணமாக நாம் எவரையும் போற்றுவதுமில்லை; துதிப்பதுமில்லை.

பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத் தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் 'என்சைக்ளோபீடியா' ரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும். இப்படி அனேகவற்றை - உயிரில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல.

மற்றெதற்காக என்றால், மனிதர்களாக - மனிதத்தன்மை உடையவர்களாக இருந்து, மறைந்த மனிதர்களுக்காக இரங்கி, அவர்களது மனிதத் தன்மையை எடுத்துக் கூறி, மற்றவர்களையும் மனிதர்களாக ஆக்குங்கள் என்பதற்காகவேயாகும்.

அப்படியானால், செத்துப் போன மற்றவர்களும், இப்போது இருக்கும் மக்கள் எல்லோரும் மனிதர்கள் அல்லவா என்று கேட்பீர்கள். அவர்களையெல்லாம் மனிதர்கள் என்று சொல்லுகின்றோமே ஒழிய, மற்ற ஜீவபிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் பேதம் காணக்கூடிய தன்மையுடைய மனிதர்கள் என்று சொல்லுவதற்குரியவர்களாக மாட்டார்கள். பேதம் என்றால் உருவ பேதம் அல்ல. நடப்பிலும்! நடப்பால் ஏற்படும் பயனிலும் உள்ள பேதமேயாகும்.

உலகிலுள்ள எல்லா ஜீவ பிராணிகளுக்கும் - மனிதர்கள் என்பவர்கள் உட்பட, உருவத்தில் பேதம் இருந்தாலும், குணத்தில் பேதம் இருந்தாலும் நடப்பும் பயனும் அனேகமாய் ஒன்றுதான்.

அரசர்களை மதிக்கிறோமா? பெரிய மனிதர்களை, ஆழ்வார்களை மதிக்கிறோமா? அல்லது தெய்வங்கள் என்பவர்களையாவது மதிக்கிறோமா? மடாதிபதிகள் அல்லது மகான்கள் அல்லது ஆச்சாரியார்களை மதிக்கிறோமா? இவர்களை எல்லாம் அவரவர்களிடத்தில் சம்பந்தமும், தனிப்பட்ட நலமும் பெறுகிறவர்கள் தான் மதிப்பார்கள்; மற்றவர்கள் ஏன் மதிப்பார்கள்?

ஏன் என்றால், வியாபாரம் செய்து இலாபம் சம்பாதிப்பவனை யார், எதற்காக மதிப்பார்கள்? ஓட்டல்காரன், 'அன்னதான பிரபு' ஆவானா? சம்பள உபாத்தியாயர், 'குருநாதன்' ஆவானா? தாசி, 'காதலி' யாவாளா? என்பது போல்தான் தன் தன் நலத்துக்கு - தன் தன் பொறுப்புக்காகக் காரியம் செய்யும் எவனுடைய காரியமும் - எப்படிப்பட்டதாயினும், அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழிய போற்றக்கூடியதாகாது. அப்படியல்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் -அதாவது தன்னைப் பற்றிய கவலை இல்லாமல் பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துத் தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத் தொண்டால் பாதகமடையும் தனிப்பட்டவர்கள், தனிப்பட்ட வகுப்புக்கள், கும்பல்கள் அவனை மதிக்காமல் இருக்கலாம்; அவமதிக்கலாம்; அது பொதுவாய் மதிக்காததாகாது.

ஆகவே, நாம் நினைவு நாள் கொண்டாடும் மக்களை, உண்மையான மனிதர்களாய்க் கருதி, அவர்களது மனிதத் தன்மையை மதித்து, மற்றவர்களும் அந்தத் தன்மைக்கு வரவேண்டுமென்கிற ஆசைக்காக, எடுத்துக்காட்டுக்காக, பிரச்சாரத்திற்காகக் கொண்டாடுகிறோம்.

('குடிஅரசு' 14-4-1945)

நாம் உருவப்படத் திறப்பு விழா நடத்துவது என்பது பூசை செய்யவோ, தேங்காய், பழம் ஆராதனை செய்து, விழுந்து கும்பிட்டுப் பக்தி செய்து, நமக்கு வேண்டியதைக் கோரிப் பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த - செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாகக் கருதிக்கூட நாம் எந்தப் படத்திறப்பு விழாவும் செய்வதில்லை. மற்றும், எப்படிப்பட்ட படத்திற்கும் பூசை செய்யும்படியோ, கோவில்களிலோ தேர், இரதம், விமானம், சப்பரம் ஆகியவைகளிலோ வைத்து ஊர்வலம் ஆராதனை செய்யும்படி காலித்தனம் செய்வதற்கோ அல்ல.

ஆனால் மற்றெதற்கு என்றால், மனித சமூக நலனுக்கு - சுயநலமில்லாமலும், மற்றவர்களிடமும் எவ்விதக் கூலியோ, புகழோ, பிரயோஜனமோ பெறாமலும், தன் முயற்சியால், தன் பொருளால், தன் பொறுப்பென்று கருதித் தொண்டாற்றி வந்த பெரியார்களின் குணாதிசயங்களையும் தொண்டையும் எடுத்துச் சொல்வதன் மூலம், மற்றும் பலரும் அக்காரியத்தைப் பின்பற்ற வேண்டும் - பின்பற்ற மாட்டார்களா என்பதற்காகவேதான். மனித சமூக நலனுக்குப் பிரதிப் பிரயோஜனம், கூலி இல்லாமல் மக்கள் பாடுபட வேண்டும் என்கின்ற மேலான குணத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சாதனமாகவேதான் இக்காரியத்தைச் செய்கிறோம்.

உதாரணமாக, கிரீஸ் தேசத்துச் சாக்ரடீஸ் என்பவர் - எந்தக் காரியத்தையும் அறிவால் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று சொன்னதற்காக விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். கவுதம் புத்தர் என்பவர் - ஆரியப் புரட்டுகளை எதிர்த்ததற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டார். இயேசு கிறித்து விக்கிரக ஆராதனை, கோவில் பூசை முதலியவைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததற்காகச் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார் முகமது நபி அனேக மூடப்பழக்க வழக்கங்களையும் பல தெய்வ உணர்ச்சியையும் பெண் கொடுமையையும் எதிர்த்துப் பல நல்ல கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ததற்காகப் பல முறை சங்கடப்படுத்தப்பட்டார். அப்படிப்பட்டவர்களும் மற்றும் அது போன்ற பல புதிய அபிப்பிராயம் சொன்னவர்களும் அவர்களது ஆயுள் காலத்தில் இதுபோல் எவ்வளவு துன்பப்படுத்தப்பட்டு, எவ்வளவு கஷ்டப்படுத்தப்பட்டு, எவ்வளவு தொல்லைப்படுத்தப் பட்டு இருந்தாலும் இன்று அவர்கள் கோடானுகோடி மக்களால் அவர்களது அபிப்பிராயங்களோடு மதிக்கப்படுகிறார்கள்; கோடிக்கணக்கான பேர்களால் பின்பற்றப்படுகிறார்கள்.

அது போலவே தான், நாங்களும் இன்று எங்கள் அபிப்பிராயங்கள் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும், பாமர மக்களாலும், சுயநலச் சூழ்ச்சிக்காரர்களாலும் எவ்வளவுதான் வெறுக்கப்பட்டுத் தொல்லைகள் விளைவிக்கப்பட்டு அல்லல்பட்டாலும், பிற்காலத்தில் எங்கள் தொண்டு மக்களுக்கு மிக்க பயன் தரக்கூடியதாயும் பாராட்டக்கூடியதாயும், மக்களை ஞானவழியில் நடத்தக் கூடியதாயும் இருக்கும் என்கின்ற நம்பிக்கை யுடையவர்களாகவே இருக்கிறோம். இல்லாவிட்டால் இவ்வளவு தொல்லைகளுடன் எங்களுக்கு எவ்விதத்திலும் சுயநலமற்ற இந்தத் தொண்டைப் பெரும்பான்மையான மக்களுடைய இவ்வளவு வெறுப்பிற்கிடையில் துணிந்து ஆற்ற முனைந்திருக்க மாட்டோம்.

நாங்கள் பாமர மக்களால் வெறுக்கப்படுவதினாலேயே எங்கள் தொண்டின் மேன்மையை உணருகிறோம். பாமர மக்கள் மதித்துப் பக்தி செலுத்திப் புகழும்படியாக நடந்து கொண்டவர்களுடைய எப்படிப்பட்ட தொண்டும், அபிப்பிராயமும் அவர்களது வாழ்நாளுக்குப்பின் பயன்பட்டதாக எங்களுக்கு ஆதாரமே கிடைக்கவில்லை. அப்படிப்பட்டவர்களால் மனித சமூகம் திருத்தப்பாடு அடைந்ததாக எவ்வித ருசுவும் இதுவரை கிடைத்ததில்லை.

நாமறிய ஒரு காலத்தில் திலகர் புகழப்பட்டார்; பெசண்ட் அம்மையார் புகழப்பட்டார்; காந்தியும் புகழ்ப்படுகிறார். சரித்திரத்தில் எத்தனையோ ஆச்சாரியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சுவாமிமார்கள் எனப்பட்ட எத்தனையோ பேர் புகழப்பட்டதாகவும் பார்க்கிறோம். இவர்களில் பலர் 'தெய்வீகம்' கற்பிக்கப்பட்டார்கள்; பலர் தெய்வங்களாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களெல்லாம் ஒரு காதொடிந்த ஊசியளவு பயன் மக்களுக்கு ஏற்படுகிறதா? ஏற்பட்டதா? ஏற்படும் என்கின்ற குறியாவது காணப்படுகின்றதா? இவர்கள் எல்லாம் புராணங்களுக்குப் புதிய உரை எழுதுகிற உரையாசிரியர்கள் போல் தோன்றி, பாமரர்களுடைய பக்திக்கும் பூசைக்கும் ஆளாகி, முட்டாள் தனத்துடனும் அல்லது பாமர மக்களை ஏமாற்றிப் பொய்ப் புகழ் பெற்று வருகிறோம் என்கின்ற உணர்ச்சியுடனும் தானே செத்தார்கள் - சாகின்றார்கள் - சாகப்போகின்றார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறதே தவிர, கண்கண்ட பயன் என்ன என்று பாருங்கள்!

இன்று உண்மையில் மனித சமூகத்திற்கு ஏதாவது புதிய மாறுதல் உணர்ச்சி அல்லது புரட்சிகரமான சுதந்திரம், விடுதலை, சமத்துவம், சுயமரியாதை என்பதான உணர்ச்சி தோன்றி இருக்குமானால் - அவை அனைத்தும் ஒரு காலத்திலோ நேற்றோ இன்றோ -கல்லடிபட்டு, கொல்லப்பட்டு, கையடிபட்டு, தொல்லைப்பட்டு உயிர் துறந்த, உயிர் வாழ்கின்ற - வெறுக்கப்பட்ட மக்களாலே தான் என்பது ஆராய்ந்து பார்க்கின்ற எவருக்கும் சுலபத்தில் புலப்படும்.

அப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் மக்களின் தன்மை உயர வேண்டுமென்று கருதித் தொண்டாற்றியவர்களே ஒழிய, மக்கள் தங்களைப் போற்றிப் புகழ்ந்து பூசிக்க வேண்டுமென்று கருதியவர்கள் அல்லர். ஆதலால் அப்பெரியவர்களை ஞாபகப்படுத்தி - அவர்களின் தன்மையை மற்ற மக்கள் உணர்ந்து, அம்மாதிரியான உள்ளம் பெற்று சமூகத்துக்குத் தொண்டாற்ற முற்படவேண்டும் என்பதற்காகவே அவர்களது உருவப் படத் திறப்பு விழாக்கள் என்ற பெயர் வைத்து இவற்றை எடுத்துக் கொள்கிறோம்.

('குடிஅரசு' 10-1-1948)

பாப்பாபட்டி, கீரிப்பட்டி - முதல்வர் கலைஞருக்கு நன்றி

சன் தொலைக்காட்சியின் செய்திகளில் சாதிவெறியின் முக்கிய இருப்பிடமாகவும் தமிழகத்தின் அவமான சின்னமாகவும் உள்ள பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றுமொரு ஊராட்சியும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது போலவே தலித்களுக்கே மீண்டும் ஒதுக்கப்படுகின்றது, சில நாட்களுக்கு முன் இந்த தொகுதிகள் சுழற்சி முறையில் பொதுத்தொகுதியாக மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்ததாக நினைவு, ஆனால் அப்படி அந்த தொகுதிகளை பொதுத்தொகுதியாக சுழற்சி முறையில் மாற்ற இடமிருந்தாலும் அப்படி மாற்றினால் ஏற்கனவே இழைக்கப்பட்டிருக்கும் அநீதியோடு சேந்து அது மாபெரும் சமூக அநீதியாகவிடும் மேலும் இது ஆதிக்க சாதிவெறிக்கு அடிபணிவது போலாகும், ஆதலால் மீண்டும் அந்த பஞ்சாயத்து தொகுதிகளுக்கு தலித்கள் மட்டுமே போட்டியிடும்படியான ஒதுக்கீடு செய்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி...

இதே போன்று இந்த தொகுதிகளில் அமைதியான முறையில் தேர்ந்தல் நடந்து ஒரு தலித் பஞ்சாயத்து தலைவராக எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல் நல்ல முறையில் பணியாற்ற தமிழக அரசு முனைந்து செயல்படவேண்டும், ஆதிக்க சாதிவெறியர்களின் கொட்டம் அழிய வேண்டும்.

இதை காங்கிரஸ், பாமக மற்றும் அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன, அதிமுகவின் நிலை இதில் எப்படி என்று சன் செய்திகளில் சொல்லப்படவில்லை...

O.C - Open Competition OR Other Castes

சிவபாலன் அவர்கள் வெளியிட்டிருந்த ஐ.ஏ,ஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் மாபெரும் அநீதி... என்ற பதிவில் அய்யா டோண்டு ஒரு பின்னூட்டமிட்டிருந்தார், அவர்களுக்கு தெரியாதது அல்ல, அதனால் நிச்சயம் இந்த விளக்கம் அவருக்கானது அல்ல, ஆனால் அவர் ஒரு குழப்பி குழப்பி விட்டு சென்றிருக்கும் போது அதை பார்த்து மற்றவர்களும் குழம்பக்கூடாது அல்லவா அதனால் தான்....

தமிழக அரசில் இட ஒதுக்கீடு மொத்தம் 69% அதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%, மிகப்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20%, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30% பழங்குடியினருக்கு 1% மற்றவர்களுக்கு 31%, இதில் அனைவரும் அடங்குவர்.

அதாவது பிற்படுத்தவப்படவர்கள் 69 இடங்களில் நிச்சயம் 30 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும், டோண்டு அய்யா சொல்வது போல 100 இடங்களில் 30 இடங்கள் அல்ல...

இப்போது தரவரிசை கீழ்கண்டவாறு இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

1 - இதர வகுப்பினர்
2 - இதர வகுப்பினர்
3 - தாழ்த்தப்பட்டவர்
4 - பிற்படுத்தப்பட்டவர்
5 - மிகப்பிற்படுதப்பட்டவர்
6 - இதர வகுப்பினர்
7 - பிற்படுத்தப்பட்டவர்
8 - இதர வகுப்பினர்
9 - பிற்படுத்தப்பட்டவர்
10 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்

11 - பிற்படுத்தப்பட்டவர்
12 - இதர வகுப்பினர்
13 - இதர வகுப்பினர்
14 - பிற்படுத்தப்பட்டவர்
15 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
16 - தாழ்த்தப்பட்டவர்
17 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
18 - பிற்படுத்தப்பட்டவர்
19 - பிற்படுத்தப்பட்டவர்
20 - இதர வகுப்பினர்

21 - தாழ்த்தப்பட்டவர்
22 - பிற்படுத்தப்பட்டவர்
23 - இதர வகுப்பினர்
24 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
25 - தாழ்த்தப்பட்டவர்
26 - இதர வகுப்பினர்
27 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
28 - பிற்படுத்தப்பட்டவர்
29 - தாழ்த்தப்பட்டவர்
30 - பிற்படுத்தப்பட்டவர்

பட்டியல் எண்ணிக்கை - 30

(O.C) இ.வ. - 9
(B.C) பி.வ. - 10
(M,B.C) மி.பி.வ. - 6
(S.C) தா.வ - 6

இடங்களின் எண்ணிக்கை - 20
O.C 31% 6 இடங்கள்
B.C 30% 6 இடங்கள்
M.B.C 20% 4 இடங்கள்
S.C/S.T 18+1% 4 இடங்கள்

கிண்டி பொறியியல் கல்லூரியில் மொத்தமே 10 இடங்கள் தான் மீதமுள்ள 10 இடங்கள் மற்ற பொறியியல் கல்லூரிக்கு எனக்கொள்வோம்

இட ஒதுக்கீட்டில் எல்லா பொறியியல் கல்லூரிக்கும் (20 இடங்களில் )சேர்த்து இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும் இடங்கள் 14, பொது ஒதுக்கீடு 6

இதன் படி முதல் 6இடங்கள் (OC-3,B.C-1,M.B.C-1,S.C.-1) மற்ற இடங்கள் இடஒதுக்கீட்டில் வரும் மொத்தமாக பார்த்தால்

இடங்களின் எண்ணிக்கை - 20

O.C 31% 6 இடங்கள் (OC-3,B.C-1,M.B.C-1,S.C.-1) F.C - 3

B.C 30% 6 இடங்கள் 6+1(O.C) = 7

M.B.C 20% 4 இடங்கள் 4+1(O.C) = 5

S.C/S.T 18+1% 4 இடங்கள் 4+1(O.C) = 5

இது வரை எல்லாம் சரிதான் ஆனால் இனிமேல் சொல்லப்போகும் கணக்கு தான் O.C (Open Competition) என்பதை Other Castes என்று மாற்றப்போவது.

பொறியியல் கல்லூரிகள் கிண்டி பொறியியல் கல்லூரி தரத்தில் முதலிடம், எனவே அதற்கு விருப்பப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகம்

இதே கிண்டி பொறியியல் கல்லூரியில் பொது இடங்கள் 3, இடஒதுக்கீட்டில் 7 இடங்கள்

கீழ்கண்ட பட்டியியலில் முதல் மூன்று பேருக்கு (O.C.-2, S.C-1) பொதுப்பட்டியியலில் கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும்

1 - இதர வகுப்பினர்
2 - இதர வகுப்பினர்
3 - தாழ்த்தப்பட்டவர்
4 - பிற்படுத்தப்பட்டவர்
5 - மிகப்பிற்படுதப்பட்டவர்
6 - இதர வகுப்பினர்
7 - பிற்படுத்தப்பட்டவர்
8 - இதர வகுப்பினர்
9 - பிற்படுத்தப்பட்டவர்
10 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்

நான்காவதாக வந்தவர் பிற்படுத்தப்பட்டவர்
எல்லா கல்லூரிகளுக்கும் சேர்த்து உள்ள 20 பொறியியல் இடங்களில் பொதுப்பிரிவில் வருவார், ஆனால் அவர் கிண்டி பொறியியல் கல்லூரிக்கு விருப்பப்படுகிறார் என்றால் அவர் பொதுப்பிரிவிலிருந்து விலகி பிற்படுத்தப்பட்ட பட்டியியலில் சேர்வார், அவர் பொதுப்பிரிவில் நான்காவது ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியியலில் முதல் இடம், 5வதாக வந்த மிகப்பிற்படுத்தப்பட்டவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர முனைவார் அப்போது அவரும் பொதுப்பட்டியியலில் இருந்து விலகி மிகப்பிற்படுத்தப்பட்டியியலில் சேர்வார், இப்போது 6ஆக இருக்கும் இதரவகுப்பினர் பொதுப்பட்டியலில் 4ம் இடத்த்ற்கு செல்வார்... 7வதாக இருக்கும் பிற்படுத்தப்பட்டவர் கிண்டிபொறியியல் கல்லூரிக்காக பிற்படுத்தப்பட்டியலில் சேர்வார்...

இப்படி கிண்டி கல்லூரிக்காக போடப்பட்டியலில்



தற்போது 6ம் இடத்திலிருக்கும் ஒரு O.C. 4ம் இடத்திற்கு வருகிறார், அடுத்து 8ம் இடத்திலிருக்கும் ஒரு O.C. 5ம் இடத்திற்கு வருகிறார், சட்டப்படி பொதுப்பிரிவில் முதல் 6 ரேங்க் உள்ளவர்களுக்கு மட்டுமே இடம், 8ம் இடத்திலிருக்கும் பொதுப்பிரிவை சேர்ந்த அவருக்கு பொறியியலில் இடம் இல்லை, ஆனால் அவருக்கு முந்தைய தரமான மாணவர்கள் கிண்டி கல்லூரிக்காக இடஒதுக்கீட்டிற்கு போனதால் 8ம் இடத்திலிருக்கும் O.C. க்கு இடம் கிடைக்கின்றது அதற்கு கீழுள்ள கல்லூரியில் இடம் கிடைக்கின்றது.

இப்போது கிண்டி கல்லூரியிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் O.C.க்கு ஒரு இடம் மட்டுமே என்றாள் 3ம் இடத்திலிருக்கும் S.C.மாணவர் கம்ப்யூட்டர் சயின்ஸ்க்காக S.C. இடஒதுக்கீட்டில் நுழைவார் அப்போது அந்த மூன்றாமிடமும் பொதுப்பிரிவில் காலியாகும், அப்போது 6ம் இடத்திலிருந்து 4க்கு வந்த O.C. மாணவர் இப்போது 3ம் இடத்துக்கு வருவார், அவர் மூன்றாமிடமென்றால் கிண்டி கல்லூரியில் பொதுப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவராகிவிடுவார்...



ஆக இப்போது கிண்டி பொறியியல் கல்லூரியில் பொதுப்பிரிவில் வந்த மூவருமே O.C (OTHER CASTES) ஆனால் அந்த மூன்றாவது ஆளின் ரேங்க் 6....

இப்படியாக முன்னேறி முன்னேறி கடைசியில் பொதுப்பிரிவில் 3 F.Cகள் இருக்க வேண்டியதற்கு பதில் 6 F.C. கள் இருப்பார்கள்

இடங்களின் எண்ணிக்கை - 20,

பட்டியல் கீழ் கண்டவாறு இருக்க வேண்டும்


ஆனால் இருப்பதோ இப்படி கீழ்கண்டவாறு


பொதுப்பிரிவில் 3 FC மாணவர்களுக்கு பதில் 6 FC மாணவர்கள் நுழைகின்றனர், FC மாணவர்களுக்கு கிடைக்கும் மற்றைய 3 இடங்களும் அவர்களை விட தரமான மற்ற பிரிவு மாணவர்கள் இடஒதுக்கீடு பிரிவிற்கு தள்ளியதால் கிடைத்த இடங்கள்

இப்படி பார்த்தால் இடஒதுக்கீடே சுத்தமாக இல்லையென்றாலும் முதல் 20 இடங்களில் உள்ள 7 எஃப்.சி. மாணவர்களுக்கு இடம் கிடைக்கும், இட ஒதுக்கீடு 69% இருந்தாலும் கூட 6 எஃப்.சி. மாணவர்களுக்கு இடம் கிடைத்துவிடுகின்றது, இது தான் நிலவரம்.

மொத்தமாக பொறியியல் கல்லூரி தரப்பட்டியல் தயாரித்து பொறியியல் (அல்லது எந்த படிப்பாயினும் ) இடங்கள் முதல் 31% இடங்கள் எந்த ஒதுக்கீடும் பார்க்காமல் எடுத்து அவர்கள் அனைவரும் பொதுப்பிரிவு என கணக்கெடுத்து, அதன் பிறகு S.C., B.C, M.B.C, தரப்பட்டியல் படி கல்லூரி / துறை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாக சென்றடையும், இல்லையென்றால் O.C. என்பது Open Competion ஆக இல்லாமல் Other Castes ஆகத்தான் இருக்கும், இப்போது இப்படித் தான் இருக்கின்றது.

இதையே தான் UPSC IAS,IPS,IFS வரிசைக்காக செய்கிறது என கருதுகிறேன், அதனால் தான் எவ்வளவு தானென்றாலும் இடஒதுக்கீட்டு சதவீதத்தை தாண்டி வெற்றிபெருபவர்களின் எண்ணிக்கை அமைவதில்லை.

இந்திய சுதந்திரம் - பெரியார்

கீற்று.காம் இணையதளத்திலிருந்து பெரியார் பேசுகிறார் பகுதியிலிருந்து எடுத்தளிக்கப்பட்டுள்ளது. (நன்றி கீற்று.காம்)

இந்திய நாட்டில், பெரும்பாலும் உலகத்தின் வேறு எங்கும் இல்லாததும், மனிதத்தன்மைக்கும் நியாயத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் - அவற்றுள் அவசரமாய்த் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லரென்பதையும், மனிதத் தன்மையும் நாகரிகமுடையவுமான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டியதற்குச் செய்ய வேண்டியதும் - மற்றும் உலகத்திலுள்ள பெரும்பான்மையான நாட்டார்களைப்போலவே அன்னிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானாலும் - முதலாவதாய்ச் செய்யப்பட வேண்டிய காரியம் இரண்டு உண்டு என்று உறுதியாய்க் கூறுவோம்.

அவைகளில் முதலாவது எதுவென்றால், இந்திய மக்களிலேயே பலகோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும், உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும்.

இரண்டாவதானது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு, பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாக இருக்கக் கடவுளாலேயே சிருஷ்டிக்கப் பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும். ஆகவே, மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் - எந்தக் காரணத்தை முன்னிட்டும் - இந்தியாவில் இனி அரை நிமிடம்கூட இருக்கவிடக் கூடாதவைகளாகும்.

இந்தக் காரணத்தாலேதான், நாம் மேற்கண்ட இரண்டு கொடுமைகளும் அழிக்கப்படாமல் - இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் கேட்பதோ, இந்தியாவின் பாதுகாப்பையும் ஆட்சி நிர்வாகத்தையும் இந்திய மக்கள் “நாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம்” என்று சொல்லுவதோ, மற்றும் இந்தியாவுக்கு அன்னியருடைய சம்பந்தமே சிறிதும் வேண்டாம் என்று சொல்லுவதோ - ஆகிய காரியங்கள் முடியாதென்றும், அவை சுத்த அறியாமைத்தனமான தென்றும், இல்லாவிட்டால் - சுயநல சூழ்ச்சியே கொண்ட நாணயத் தவறான காரியமாகுமென்றும் சொல்லி வருகிறோம் என்பதோடு - இப்படிச் சொல்லும் விஷயத்தில் நமக்குப் பயமோ, சந்தேகமோ கிடையாது என்றும் சொல்லுவோம். ஆதலால்தான், இவ்வித முட்டாள்தனமானதும், சூழ்ச்சியானதுமான முயற்சிகளை நாம் எதிர்க்க வேண்டியவர்களா யிருக்கின்றோம்.

தீண்டாமை என்னும் விஷயத்திலிருக்கும் கொடுமையும் மூடத்தனமும் மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ, அலட்சியமாய்க் கருதவோ, ‘நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்’ என்று காலந் தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை. ஒருவன், அதாவது பிறரைத் தீண்டாதார் எனக் கருதிக் கொடுமைப்படுத்துகின்றவர்களை அத்தீண்டாதார்களுக்கு இருக்கும் உண்மையான கஷ்டத்தை உணரச் செய்ய வேண்டுமானால், இப்போதைய வெள்ளைக்கார அரசாங்கத்தின் கீழ் அனுபவிக்கும் கொடுமைகள் போதாது என்றும், சிறிதும் சுதந்திரமும் சமத்துவமும் அற்றதும், சதா இராணுவச் சட்டம் அமலில் இருப்பதுமான ஏதாவது ஒரு கொடுங்கோல் ஆட்சி இருந்தால் தான், இம்மாதிரி கொடுமைப்படுத்துகின்ற மக்களுக்கு உணர்ச்சி வந்து, புத்தி வருமென்றும் நமக்குச் சிற்சில சமயங்களில் தோன்றுவதுமுண்டு.

ஆனால், இந்தியாவை இம்மாதிரி மூர்க்கத்தனமும் நாணயக் குறைவும் மாத்திரம் சூழ்ந்து கொண்டிருக்காமல், மூடத்தனமும் சேர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதால், இன்னமும் எவ்வளவு இழிவும், கொடுமையும் ஏற்பட்டாலும் இம்மாதிரியான மக்களுக்கு உண்மையான துன்பத்தை உணரத்தக்க நிலைமை வருவது கஷ்டமாக இருக்கும். என்றாலும், இந்நிலை மாறுதலடையக் கூடும் என்ற உறுதியை உண்டாக்கத்தக்க நம்பிக்கை கொள்வதற்கு இடமில்லாமல் போகவில்லை.

இனி, பெண்கள் விஷயத்தில் அவர்களுடைய சுதந்திரத்தையும் உணர்ச்சியையும் கட்டிப் போட்டிருக்கும் கொடுமையானது - இது போலவே, இந்தியர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியே இல்லை என்பதைக் காட்டவும், அவர்கள் அடிமைகளின் குழந்தைகள் என்பதை ஒப்புக்கொள்ளவும் ஆதாரமானதென்றுதான் சொல்லவேண்டும்.

எப்படியெனில், இவ்விரண்டைப் பற்றி இந்திய விடுதலைவாதிகள், சுதந்திரவாதிகள், சுயேச்சைவாதிகள், தேசியவாதிகள், மக்கள் நல உரிமைவாதிகள் என்கின்ற கூட்டத்தார்களுக்குச் சிறிதும் உண்மையான கவலை இல்லாவிட்டாலும், மேற்கண்ட கூட்டத்தார்களில் 100-க்கு 90 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் சுயநலங் கொண்ட நாணயமற்றவர்களாகவே காணப்படினும் - இவர்களது முயற்சி இல்லாமலும் சிலசமயங்களில் மேற்கண்ட சுயநல சூழ்ச்சிவாதிகளின் எதிர்ப்பிற்கும், இடைஞ்சலுக்கும் இடையிலும் வேறு ஒரு வழியில் கொடுமைகள் அனுபவிக்கும் மேற்கண்ட இரு வகையாருக்கும் விமோசனம் ஏற்படுவதற்கு அறிகுறிகள் ஆங்காங்கு காணப்படுகின்றதைப் பார்க்கச் சிறிது மகிழ்ச்சி அடைகின்றோம்.

('பகுத்தறிவு’ - 1938)

-----------------------------
நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மேலும் மேலும் நம்பிக்கையிழக்க வைக்கின்றன, நீதிமன்றங்கள் மனுநீதிமன்றங்களாக செயல்படுகின்றன, இன்றோ சட்டத்தின் முன்னும் எல்லோரும் சமமல்ல, தெய்வத்தின் முன்னும் எல்லோரும் சமமல்ல ஆனால் வெள்ளையனின் முன் எல்லோருமே அடிமைகள் தான் என்ற சம உரிமையாவது ஆகஸ்ட்-15,1947க்கு முன் கிடைத்தது, இப்போது அதற்கும் வழியில்லை, சட்டத்தின் முன்னும் தெய்வத்தின் முன்னும் கூட எல்லோரும் சமமில்லாத போது இந்த சுதந்திரம் எதற்காக? யாருக்காக? யாருக்கோ கிடைத்த சுதந்திரத்தை எப்படி கொண்டாட முடிகிறது?

ஆளுக்கொரு நீதி இங்கே, சாதிக்கொரு நீதி இங்கே, தொடர்புடைய சுட்டிகளும் இங்கே

நீதி வேண்டுமா? பேருந்தை கொளுத்து, கலவரம் செய்....
இந்தியாவின் புனித பசு

நீதி வேண்டுமா? பேருந்தை கொளுத்து, கலவரம் செய்....

இவர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதித்தால் மீண்டும் மூன்று மாணவிகளை உயிருடன் கொளுத்தும் அபாயமிருப்பதாலும் கலவரம் வெடிக்கும் என்பதாலும் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்கிறோம், மேலும் இவர்கள் மீது எந்த தண்டனை வழங்கினாலும் கலவரம் வெடிக்கும் என்பதால் இவர்கள் எவ்வளவு சொத்து சேர்த்தாலும் கண்டு கொள்ள வேண்டாம்.

பாலியல் உணர்ச்சி என்பது இயற்கையானது. உங்கள் உடையால் தூண்டப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் ஓரிருமுறை கையை பிடித்து இழுத்தபோது நீங்கள் கத்தி கூச்சல் போட்டிருக்கிறீர்கள். கூச்சல் போடுவது என்பது குற்றம் சாட்டப்பட்டவரின் கோபத்தை மேலும் கிளறக்கூடும் என்பதை அறிந்தும் நீங்கள் மௌனமாகவில்லை. ஆக உங்கள் மீதான பாலியல் பலாத்காரத்துக்கு உங்கள் கூச்சலே முக்கிய காரணம் என்பது கனம் நீதிபதிகளின் முடிவு. when rape is inevitable, lie back and enjoy என்ற பொன்மொழியை உங்களுக்கு இந்த கோர்ட் இலவசமாக வழங்குகிறது. முடியாது எனும்பட்சத்தில் தற்கொலை செய்து கொள்வது தப்பில்லை என்ற கோட்பாட்டை கோடு காண்பிக்க இந்த கோர்ட் விரும்புகிறது.(நன்றி முகமூடி புனுகு பூசாத நீதிபத்திகள் )


இப்படியான தீர்ப்புகள் நீதிமன்றங்களால் வழங்கப்பட்டால் தயவு செய்து யாரும் அதிர்ச்சியடையாதீர்கள், நிச்சயம் யாரும் அதிர்ச்சியும் அடையமாட்டீர்கள், ஆகஸ்ட் 7-ம் தேதி இது மாதிரியான ஒரு வரலாற்று தீர்ப்பு சிதம்பரம் முன்சீப் கோர்ட்டில் வழங்கப்பட்டது. (மொத்தம் மூன்று தீர்ப்புகள் இந்த பதிவில், மூன்றையும் படியுங்கள்)

தீர்ப்பு -1

சிதம்பரம் நடராசர் கோவிலில் சிற்றம்பலத்தில் தேவாரம் பாட கிளம்பிய ஆறுமுகச்சாமியை எதிர்த்து நீதிமன்றம் சென்றது தீட்சிதர் தரப்பு, அப்போது நீதிபதி ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்தில் பாட இடைக்காலத் தடை விதித்தார், கடந்த 7ம் தேதி அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது, அந்த தீர்ப்பில் கூறப்பட்டதாவது

1.ஆறுமுகச்சாமி சிற்சபையில் ஏறிப்பாடுவதால் நிச்சயம் கலவரம் ஏற்படும்,

2.அதன் மூலம் தீட்சிதர்களுக்கு அளவிட முடியாத இழப்பும் நஷ்டமும் ஏற்படும்,

3. கோவிலின் புனிதத்தன்மை கெட்டுவிடும்.

எனவே ஆறுமுகச்சாமியும் மற்றவர்களும் சிற்றம்பலத்தில் பாட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை முற்றிருதி ஆக்குவதாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. (தகவல் உதவி: ஜீனியர் விகடன்)

சட்டத்தின் முன்பே அனைவரும் சமம் என்றால் தெய்வத்தின் முன் ஏன் எல்லோரும் சமம்மல்ல?, இந்த தீர்ப்பு அரசியலமைப்புக்கு எதிரானது. ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்தில் பாடுவதால் கலவரம் ஏற்படும் என நீதிமன்றம் கருதுகிறது, ஆறுமுகச்சாமி பாடினால் யார் கலவரம் ஏற்படுத்துவார்கள்? திமுக, பாமக, கம்யூனிஸ்ட், மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் போன்றவர்கள் ஆறுமுகச்சாமிக்கு ஆதரவானவர்கள் தானே, அவர்கள் ஆறுமுகச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு இருந்தால் எப்படி கலவரம் ஏற்படுத்துவார்கள், எனவே எதிர்தரப்பு தானே கலவரம் செய்ய முனையும், சரி எதிர் தரப்பென்றால் தீட்சிதர் ஆதரவாளர்கள் தானே, அவர்களால் எப்படி தீட்சிதர்களுக்கு அளவிடமுடியாத இழப்பும் நஷ்டமும் ஏற்படும்?

இந்த இடத்தில் ஒரு நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பையும், விமர்சனத்தையும் சுட்டிகாட்ட விரும்புகின்றேன், வீரப்பன் கர்னாடக திரைப்பட நடிகர் ராஜ்குமாரை பணயக்கைதியாக வைத்துக்கொண்டிருந்த நேரத்தில் பெங்களூர், மைசூர் மற்றும் சில மாவட்டங்களில் கடும் பதட்டம் ஏற்பட்டிருந்தது, ராஜ்குமாருக்கு ஏதேனுமென்றால் தமிழர்களுக்கெதிரான பெரும் கலவரம் வெடிக்க கூடிய சூழல், ராஜ்குமார் கொல்லப்பட்டார் என்று கிளம்பும் ஒரு வதந்தி பொறி கூட மாபெரும் வன்முறைய ஆரம்பிக்கும் நிலமை அது, அந்த நேரத்தில் நான் பெங்களூரில் வேலை செய்து கொண்டிருந்தேன், பதட்டத்தின் நிலவரத்தை நேரிலேயே அனுபவித்திருக்கின்றேன், வீரப்பனின் பல கோரிக்கைகளில் ஒன்றாக தமிழ் தீவிரவாதிகள் என்று அறியப்பட்ட 5 பேரை அரசாங்கம் விடுதலை செய்ய கோரிக்கை வைத்தார், அப்போது இவர்கள் விடுதலை செய்யப்படவில்லையென்றால் ராஜ்குமாரை கொலைசெய்துவிடுவதாக வீரப்பன் மிரட்டினார், அது தொடர்பான ஒரு வழக்கில் நீதிபதிகளிடம் தமிழக, கர்னாடக அரசுகள் கலவர சூழல் உள்ளது சிறு பொறியும் பெரும் கலவரத்தை உருவாக்கிவிடும், எனவே இந்த ஐவரின் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்போம் என்ற போது நீதிமன்றம் கடும் கண்டனத்தை இரண்டு மாநில அரசுகளிடம் தெரிவித்தது,

உங்களால் கலவரத்தை கட்டுபடுத்த இயலவில்லையென்றால் ராஜினாமா செய்யுங்கள், அரசை கலைக்கலாம், கலவரம் நடக்கும் என்பதற்காகவெல்லாம் எந்த வழக்கையும் திரும்ப பெறக்கூடாது என்றனர் நீதிபதிகள்.

ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்தில் பாடுவதால் கலவரம் ஏற்படும் சூழல் என்றால் அந்த கலவரத்திற்கு யார் காரணமாக இருப்பார்கள் என்று அறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும், அது முடியாதென்றால் அந்த அரசை கலைக்க பரிந்துரை செய்யலாமல்லவா நீதிமன்றம், ஒவ்வொரு நொடியும் கலவரத்திற்கும், உயிருக்கு பயந்து வெளியே செல்லாமல் கிடைத்ததை தின்று நாட்கள் தள்ளும் சூழல் பெங்களூரில் ஏற்பட்ட போது இருந்ததைவிட கலவர சூழலா நிலவுகிறது? ஆனால் கலவரம் ஏற்படும் என்ற காரணம் கூறி ஒரு அநீதியை சிதம்பரத்தில் அரங்கேற்றியுள்ளது நீதிமன்றம்.

கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என்றால் என்ன அர்த்தம், அவர்களுக்கு புனிதம் என்றால் நமக்கு அது தீண்டாமை என்பதாகத்தானே அர்த்தம்? என்று நான் இந்த பதிவில் கேட்டதை போல பொங்கியுள்ளார் மனித உரிமை பாதுகாப்பு மன்றத்தின் கடலூர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜீ.

ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்தில் பாடுவதால் கலவரம் ஏற்படுமென்று காரணம் கூறி அவரை பாட அனுமதிக்காத நீதிமன்றம், ஆறுமுகச்சாமியை சிற்றம்பலத்தில் பாடவிடவில்லை என்பதால் நாற்பது பேருந்துகளை கொளுத்தி, கலவரம் செய்தால் நீதிமன்றம் ஆறுமுகச்சாமியை பாட அனுமதிக்குமா?(தலைப்பை கொண்டுவந்தாயிற்று இந்த பத்தியில்) இதைத்தான் இந்த தீர்ப்பின் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறதா நீதிமன்றம்.

இந்த பிரச்சினைக்காக சட்டமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் திரு.வேல்முருகன் குரல் எழுப்பியுள்ளார்.






தீர்ப்பு -2


இந்தியாவின் புனித பசு நீதிமன்றங்கள் தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது நடந்து கொண்டதற்கும், ஆதிக்க உயர் சாதி வெறி பிடித்து இடஒதுக்கீட்டை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்த எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் வழங்க சொல்லி நடந்து கொண்ட முறைகள் (முழு விபரம் இங்கே) இருக்கும் போது மீண்டும் ஒரு தீர்ப்பு, தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு சம்பளம் வழங்க வேண்டாமாம் என தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, வேலை நிறுத்த காலத்திற்கு வேலை இல்லை, சம்பளம் இல்லை (No Work, No Pay) என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கத்தேவையில்லை என்று தீர்பள்ளித்துள்ளது, தீர்ப்பு விபரம் இன்றைய தினமலரில், இந்த எழவு No Work, No Pay என்ற அடிப்படை வேலை நிறுத்தம் செய்து நோயாளிகளை கொன்ற உயர் ஆதிக்க சாதி வெறி கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் வழங்க சொன்னபோது .யிர் பிடுங்க சென்றிருந்ததா?

தீர்ப்பு -3

யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்ததாக செய்தி.நெட் வலைப்பதிவில் கண்டு பின் டைம்ஸ் ஆஃப் இன்டியாவிலும் படித்த போது சட்டத்தின் முன்னும் தெய்வத்தின் முன்னும் அனைவரும் சமம் என்பது எத்தனை பெரிய பொய்யாக உள்ளது.


நியாயங்களும், நீதிகளும், உரிமைகளும், சம உரிமையும் நேர் வழியிலும், அறவழியிலும் கிடைக்காத போதே வன்முறையால் அவைகளை அடைய முனைகிறார்கள் என்பது வரலாறு

சமூகம் அதன் தவறுகளை அவ்வப்போது சரி செய்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் அதன் ஒவ்வொரு தவறுக்கும் என்றேனும் மிகப் பெரிய விலையை தர நேரிடும்.

நன்றி: ஜீனியர் விகடன் படங்கள் உதவி