கேசவன் சார் - கோட்டா கதை


"சார், ஏ.பி. சார்"

குரல் கேட்டு கதவை திறந்தார் அப்பா, கேசவ் சார் குரல்தான் அது, அப்பாவோட ஸ்கூல்ல ஒன்னா வேலை செய்யிற மேக்ஸ் வாத்தியார், அவர் பையன் கூட எங்க ஸ்கூல்தான், இங்கிலிஷ் மீடியம் அவன்.

"வாங்க வாங்க கேசவ் சார், உட்காருங்க"

அம்மா வந்து வரவேற்றார்

"வாங்க சார், டீ சாப்புடுங்க"

"இல்லமா இப்போதான் சாப்புட்டு வந்தேன்"

பொதுவாக யார் வேண்டாமென்றாலும் வற்புறுத்தி எல்லோரையும் டீ சாப்பிட சொல்லும் அம்மா கேசவ் சாரை அதுக்கு மேல ஒரு தடவை கூட டீ சாப்பிட சொல்லலை.

"என்னப்பா படிச்சிக்கிட்டு இருக்க, லீவ் நாள்ல கூட படிக்கிற"

"என்ட்ரன்ஸ் எக்சாமுக்கு படிக்கிறேன் சார்"

"ம்.... என்ட்ரன்ஸ்லாம் டஃப்பா இருக்கும், நல்லா படி"

"சொல்லுங்க சார், நல்லா சொல்லுங்க, கோச்சிங் க்ளாஸ் போயிட்டு வர்ற நேரம் போக மீதி நேரம் பூரா கிரிக்கெட்டு கிரிக்கெட்டு தான் சார் இவனுக்கு"

அப்பா எப்பவும் இப்படித்தான் ஊட்டுக்கு வர்றவங்ககிட்ட என் மானத்தை வாங்குறதே வேலை இவுருக்கு, எவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு படிச்சாலும் வர்றவங்ககிட்ட கொறை சொல்றதே வேலை.

அடிபட்ட அவமானமாக அம்மாவை பார்த்தேன், இதென்ன புதுசா, எப்பவும் நடக்கறது தானே கண்டுக்காத என்பது போல அம்மா பரிவாக பார்த்தார்.

சென்ட்டர்ல வக்கிற மாடல் டெஸ்ட்ல பர்ஸ்ட் ரெண்டு ரேங்க்ல வந்தா பேரை போர்டுல எழுதிப்போடுவாங்க, இந்த வாட்டியும் மணிமேகலைக்கிட்ட பர்ஸ்ட் ரேங்க்கை உட்டுறகூடாது எப்பிடியாவது பர்ஸ்ட்டு வந்துடனும், வைராக்கியத்தோடு ரூம்ல போய் படிக்கலாம்னாலும் ஹால்ல என்ன பேசிக்கிறாங்கங்கறதுலயே ஆர்வம் இருக்கு

"எந்த கோச்சிங் சென்ட்டர்க்கு போறான் பையன்"

"முனிசிபால்ட்டி ஸ்கூல்ல அசோசியேசன்ல நடத்துறாங்களே அங்க தான் சார் போறான், ஒங்க பையனும் +2 தானே, எங்க சேத்துருக்கிங்க"

"மெட்ராஸ்ல எக்ஸெல் கோச்சிங் சென்ட்டர்ல சேத்துருக்கேன், அய்யாயிரம் ஃபீஸ் புடுங்கிட்டாங்க, அண்ணன் வீட்லருந்து கோச்சிங் போறான்"

"இவனும் சொன்னான், ஆனா அவ்ளோ பணமும் கட்ட முடியாது, மெட்ராஸ்ல தங்கி படிக்கவும் யாருமில்லை, இவன் எப்பிடியாவது படிச்சி இஞ்சினியர் ஆயிட்டான்னா என் கடனே தீர்ந்துடும் சார்"

"ஒங்குளுக்கு என்ன சார் கொறச்சல், எங்கள மாதிரியா, அதான் கெவர்மெண்ட்டே கோட்டா குடுக்குதே அப்புறம் என்ன சார்"

அம்மா மட்டும் சரேலென உள்ளே சமயலறைக்கு சென்றார், அப்பாவோ மேலே என்ன பேசுறதுனு தெரியாம தெகச்சி போயிட்டார்.

"சரி அத உடுங்க சார், என்ன இந்த பக்கம் காத்து அடிக்குது"


"ஒன்னுமில்ல, உண்ணாமலை யுனிவர்சிட்டி செட்டியார் பி.ஏ. கஜேந்திரன் ஒங்க சொந்தக்காரர்தானே"


"நெருங்கிய சொந்தமெல்லாம் இல்லை, எங்க மச்சான் பொண்ணெடுத்த ஊருல ஏதோ சொந்தம்"

"இல்ல, என் பையனுக்கு உண்ணாமலையில ஒரு பி.இ. சீட்டு வாங்கனும், அதான் செட்டியார் பி.ஏ.வை வச்சி சீட்டு வாங்கிடலாம்னு"

"அட அங்க எல்லாமே காசுதான் சார், யாரை புடிச்சாலும் நடக்காது, நம்ம சொந்தகாரன், ஜாதிகாரன் இருந்தா கூட எவனும் ஹெல்ப் பண்ணமாட்டாங்க"

"அது தெரியுங்க, நம்பகமா காசு தந்து சீட் கன்ஃபார்ம் பண்ணனுமில்லை, வேற யாரு மூலமாவது போயி காசும் போயி சீட்டும் கெடைக்கலைனா"

"நான் வேணா என் மச்சான்கிட்ட சொல்றேன் சார், அந்த லிங்க்ல செட்டியார் பி.ஏ.வை புடிக்க முடியுதானு பாப்போம், ஆனா நான் என் பையன்கிட்ட சொல்லிட்டேன் ஃப்ரீ சீட்டு கெடைச்சாதான் படிக்க வைப்பேன் இல்லனா பாலிடெக்னிக்குல சேத்துடுவன்னு"

"அட ஒங்குளுக்குதான் கோட்டாவே இருக்கு, நீங்க எதுக்கு சார் பேமெண்ட் சீட்டுக்கு போகப்போறிங்க"

அம்மா உள்ளே பாத்திரத்தை உருட்டும் சத்தம் அதிகமாகவே கேட்டது

கேசவ் சார் போன பிறகு அம்மா அப்பாவிடம் சண்டைக்கு போனார்,

"அதான் மொதல்லயே ஒங்களுக்கு கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு குத்தி காமிச்சாரே, அப்புறமும் எதுக்கு ஃப்ரீ சீட்டு கெடைச்சாதான் படிக்க வைப்பேன்னு சொன்னிங்க, திரும்பவும் கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு சொல்லிட்டு போறாரே, நீங்க எப்பவும் இப்புடித்தான் எகனை மொகனையா வாயவுட்டு வாங்கிக்கட்டிக்கறது"

"அட விடு சுந்தரா, இவர் ஸ்கூல்லயே இப்படித்தான் என்னையும் பி.கே. சாரையும் சொல்லுவாரு, ஒங்களுக்கு என்னா சார் கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு சொல்லுவாரு"

ஏதோ மொனவிக்கிட்டே அம்மா உள்ள போனாங்க

------------------

மூச்சிரைக்க சைக்கிள நிறுத்திட்டு உள்ள ஓடிவந்தேன்

அம்மா வாசல்லயே இருந்தாங்க, என்னை பார்த்துட்டு சைக்கிள் நிறுத்துற நேரம் கூட பொறுக்க முடியாம கேட்டாங்க

"என்னடா எவ்ளோ மார்க்கு?"

அம்மா பாஸானு கூட கேக்கலை, எனக்கு பாஸ் பண்றதுலாம் ஒரு மேட்டரேயில்லைனு அம்மாவுக்கு தெரியும்

"தொள்ளாயிரத்து தொண்ணுத்தி ரெண்டுமா"

சட்டென்று அம்மா முகம் இருண்டது

"என்னடா ஆயிரம் மார்க்கு கூட வாங்கலையா? இந்த மார்க்குக்கு சீட்டு கெடைக்குமாடா"

என் சத்தம் கேட்டு அப்பாவும் தங்கச்சியும் வந்தாங்க

"அம்மா நீ டென்ஷனாகாத, தமிழ், இங்கிலிஷ்லதான் மார்க்கு கம்மி, சப்ஜெக்ட்ல எல்லாத்துலயும் நூத்தி எண்பதுக்கும் மேல, மேக்ஸ்ல நூத்தி எண்பத்தஞ்சி"

அம்மா, அப்பா, தங்கச்சி என எல்லார் மொகத்திலயும் அப்போதான் நிம்மதி வந்துச்சி

"சரி சரி செவப்புகோடு வாங்குன கதையா இதுல மார்க்கு வந்துருக்குனு என்ட்ரன்ஸ்ல உட்டுடாத"

அப்பாவுக்கு எப்பவும் திருப்தி இருக்காது, நாலாவதுல ஒரு தடவை ரொம்ப வெளையாட்டுத்தனமா இருந்து ஃபெயிலாயி ரேங்க்கார்டுல மார்க்குக்கு அடியில செவப்பு கோடு போட்டு இருந்ததை இன்னும் சொல்லிகாமிச்சிக்கிட்டே இருப்பார்

"அப்பா"

"என்னடா?"

"கேசவன் சாரை பார்க்கும்போது சொல்லுங்க, கணக்குல பெயிலா போனா கோட்டா இல்லைனாலும் இஞ்சினியர் சீட்டு கெடைக்காதுன்னு"

"என்னடா சொல்லுற"

"கேசவன் சார் பையன் கணக்குல ஃபெயிலு"

அன்றைக்கு தெரியாது கோட்டா ஜல்லியடிக்கிற நிறைய கேசவன் சாருங்களை வாழ்க்கையில பாக்கப்போறேன்னு

19 பின்னூட்டங்கள்:

said...

குழலி,
அடுத்த தொடர்... கதைகளுக்கு முன்னூட்டமா ?

இதோட ஒரிஜினல் கதை குமுதத்தில் இருக்கா ?
:)))

said...

//இதோட ஒரிஜினல் கதை குமுதத்தில் இருக்கா ?
:)))
//
குமுதத்தில் இல்லைங்க, தமிழ்மணம் விவாதகளத்தில் இருக்கு, புரியலையா இங்க போய் பாருங்க

said...

குழலி,

இது எல்லாம் ஒரு gas trouble. எதற்காக உங்கள் நேரத்தை வீணடிக்கவேண்டும். நினைத்த கல்லூரி/பாடம் கிடைக்காததால் எழுத்தாளர் ஒருவர் தமிழகத்தில் பாப்பான்கள் யூதர்களை போல அவதிப்படுகிறார்கள் என பேட்டி கொடுத்தது நினைவில் இருக்கிறதா?

said...

:)))))))))

said...

கதை நல்லா இருக்குது.

//கேசவன் சாரை பார்க்கும்போது சொல்லுங்க, கணக்குல பெயிலா போனா கோட்டா இல்லைனாலும் இஞ்சினியர் சீட்டு கெடைக்காதுன்னு"
//

என்ன குழலி,

பையனுக்கு அனுபவம் பத்தாதா? கேஸவ் ஸாருக்கு DPI-ல ஆள் இருப்பாங்க. retotaling என்று சொல்லி 200-க்கு 180 மார்க் எடுப்பான் கேஸவ் ஸார் பையன்.

--வேல்--

said...

இது ஒரு நிகழ்வே . எனது வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ன் பதிவக பார்க்கிறேன் . நன்றி

said...

குழலி..கருத்தை அழகா கதையில இணைச்சு சொல்லி இருக்கீங்க..

//அப்பா எப்பவும் இப்படித்தான் ஊட்டுக்கு வர்றவங்ககிட்ட என் மானத்தை வாங்குறதே வேலை இவுருக்கு, எவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு படிச்சாலும் வர்றவங்ககிட்ட கொறை சொல்றதே வேலை.

அடிபட்ட அவமானமாக அம்மாவை பார்த்தேன், இதென்ன புதுசா, எப்பவும் நடக்கறது தானே கண்டுக்காத என்பது போல அம்மா பரிவாக பார்த்தார்.//

//"சரி சரி செவப்புகோடு வாங்குன கதையா இதுல மார்க்கு வந்துருக்குனு என்ட்ரன்ஸ்ல உட்டுடாத"

அப்பாவுக்கு எப்பவும் திருப்தி இருக்காது, //


:-)
என் வீட்டிலும் நடந்தவைதான் இது..

வைரமுத்து வரிகளில் : பறக்க சொல்லி கொடுக்கிறேன் என சிறகுகளை ஒடித்து விடுகிறார்கள்..

said...

yow kuzhali, kathai eluthuren pervazhinu, torture pannama....aakapoorvama ethavathu eluthunga.. kathi'ngira peruley engalai kollatheenga...

Saathi veri pudichee alaiyatheenga...thirunthunga...

said...

//நினைத்த கல்லூரி/பாடம் கிடைக்காததால் எழுத்தாளர் ஒருவர் தமிழகத்தில் பாப்பான்கள் யூதர்களை போல அவதிப்படுகிறார்கள் என பேட்டி கொடுத்தது நினைவில் இருக்கிறதா?
//
அவர் மட்டுமல்ல, எத்தனையோ பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் கோட்டாவினால் அவர்கள் பிள்ளைகளின் வாய்ப்புகள் பறிபோனதாக பேசுவார்கள், விசாரித்து பார்த்தால் தெரியும் அவர்கள் பையன் 50%ம் 60%மாகத்தான் மார்க் வாங்கியிருப்பார்கள், இந்த மார்க்கு வாங்கின இலட்சணத்திற்கு கோட்டா இல்லைனாலும் சீட்டு கிடைக்காது என்பது தெரிந்தும் வேண்டுமென்றே மற்றவர்களை புண்படுத்த வேண்டுமென்று இப்படி பேசுவார்கள்.

//இது ஒரு நிகழ்வே . எனது வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ன் பதிவக பார்க்கிறேன் . நன்றி
//
ரவீந்தரன், பெரும்பாலும் எல்லோருக்கும் ஏதோ ஒருவரால் இப்படியான அனுபவங்கள் இருப்பதுண்டு.

//வைரமுத்து வரிகளில் : பறக்க சொல்லி கொடுக்கிறேன் என சிறகுகளை ஒடித்து விடுகிறார்கள்..
//
பெற்றோர்களின் அதீத ஆர்வம் என்ன செய்வது :-(

//பையனுக்கு அனுபவம் பத்தாதா? கேஸவ் ஸாருக்கு DPI-ல ஆள் இருப்பாங்க. retotaling என்று சொல்லி 200-க்கு 180 மார்க் எடுப்பான் கேஸவ் ஸார் பையன்.

--வேல்--
//
நோ கமெண்ட்ஸ்....

said...

//Kuzhali, You are lost and cannot find your way back. Better luck next time.//
Simharan என்ன சொல்றிங்க புரியலையே
//Even if you have quotas, if you fail in Maths you cannot get seat in BE.
//
அதைத்தானங்க சொல்றோம், கோட்டாவால 30 மார்க்கு எடுத்தவனுக்கெல்லாம் சீட்டுங்கற மாதிரி பேசுறாங்களே அந்த அறியாமை(?)க்கு என்ன செய்ய

//yow kuzhali, kathai eluthuren pervazhinu, torture pannama....
//
ஹி ஹி தேங்க்ஸ்

//aakapoorvama ethavathu eluthunga.. //
உங்களை மாதிரி சிலருக்கு மட்டும் வேறுமாதிரி தெரிகிறது.

//kathi'ngira peruley engalai kollatheenga...
//
கதையெல்லாம் நானாக எழுதுவதில்லை, எழுத தூண்டுறாங்கப்பா, மூல காரணம் வேறு ஆளுங்கப்பா...

//Saathi veri pudichee alaiyatheenga...thirunthunga... //
நன்றி, உங்க மனசாட்சிக்கே தெரியும் யார் எப்படி அலையிறாங்கன்னு

said...

good story, keep it up kuzali

said...

Dear friend,
I could see these points from your story.
1. Kesavan is worried about his son's future since he is FC(told explicitly) and also his son is not so good in studies(implied since he is approaching somebody for getting engineering through back door)
2. The narrator is in a bright student(again implied by his mother's words) and protected by reservation also.
3. Both the students parents are economically in same status since they are all working as teachers in same school.
4. In the society they live there is no great difference in their status at the point of time story happens.(since Kesavan is coming to narrator house and having coffee)
Given these facts your story says that reservation is favoring persons who are not really poor, who are not really financially backward AND VERY IMPORTANTLY NOT AT ALL BACKWARD SOCIALLY. So I feel your story is example why reservation should not be continued(atleast for BC).
And finally, I see the words expressed by Kesavan to narrator father is to console him not to worry since there are better chances for his son to get through. I personally see nothing wrong in that.
I suggest you can comeup with a better story for supporting reservation.
Murali.

said...

முரளி மீண்டும் அந்த கதையை ஒரு முறை படியுங்கள், உங்கள் சந்தேகங்கள் அனைத்தும் அந்த கதையிலேயே சுட்சிவேஷன்களில் சுட்டப்பட்டுள்ளது, அப்படியும் புரியவில்லையென்றால் மீண்டும் நான் விளக்க தயாராக உள்ளேன்.

நன்றி

said...
This comment has been removed by a blog administrator.
said...

முரளி முதலில் இது ஒரு சிறுகதை ஒரு சிறிய களத்தில், குறைந்த அளவு கதை மாந்தர்களை வைத்து சொல்லப்படுவது, எனவே இடஒதுக்கீட்டின் அத்தனை நியாயங்களையும் இந்த கதையில் சொல்லிவிட முடியாது அதே மாதிரி இடஒதுக்கீட்டிற்கெதிரான அத்தனை விவாதங்களுக்கும் பொய்மைகளுக்கும் இதில் பதில் சொல்ல இயலாது. இங்கே கதையில் சொல்ல வந்த செய்தி சிலர் இடஒதுக்கீட்டால் போயிடுச்சி போயிடுச்சி என்று புலம்பும் சிலரின் புலம்பலுக்கு பின்னாலுள்ள பொய்மையை சொல்ல வந்ததே.

என் கதைக்கு நானே அருஞ்சொற்பொருள் தரவேண்டிய நிலை :-))

//1. Kesavan is worried about his son's future since he is FC(told explicitly) and also his son is not so good in studies(implied since he is approaching somebody for getting engineering through back door)
//
கேசவன் எப்.சி. என்பதால் கவலைப்படுவதாக வெளியே சொல்லிக்கொண்டாலும் உண்மை நிலை என்னவென்றால் அவர் பையனின் படிப்புத்திறமை அவருக்கு நன்றாக தெரிந்ததாலேயே அவர் கோட்டா மீது பழியைப்போட்டுவிட்டு காசு கொடுத்து சீட் வாங்க முயற்சிக்கிறார், இது இது தான் கதையின் கருவே, தன்னுடைய மகனின் கையாலாகதத் தன்மைக்கு கோட்டா மீது பழி போடுகிறார்.

//2. The narrator is in a bright student(again implied by his mother's words) and protected by reservation also.
//
கேசவனின் மகனைவிட திறமைசாலி, கேசவனின் மகனுக்கு கிடைக்கும் பெஸ்ட்பேக்கிரவுண்டு(கதையில் எல்லாவற்றையும் சொல்ல இயலவில்லையென்றாலும் சென்னைக்கு சென்று என்ட்ரன்ஸ் கோச்சிங்கிளாஸ் படிக்குமளவிற்கு பணமும் ஆதரிக்க சொந்தங்களும் இருப்பதை கதையில் குறிப்பிட்டுள்ளேன்) இவனுக்கு கிடைக்காத போதும் கேசவனின் மகனைவிட திறமைசாலி, இருந்தாலும் கேசவன் இவனின் திறமையை உதாசீனப்படுத்தி கோட்டா புலம்பலை முன்னெடுக்கிறார்.

//3. Both the students parents are economically in same status since they are all working as teachers in same school.
//
ஒரே பள்ளியில் வேலை செய்வதாலேயே இருவரும் ஒரே அளவிலான பொருளாதார சூழல் கொண்டவர்கள் என்று பொருளல்ல என்பது கீழ் கண்ட என் கதை வரிகளில் இருந்து புரியவரலாம்

"மெட்ராஸ்ல எக்ஸெல் கோச்சிங் சென்ட்டர்ல சேத்துருக்கேன், அய்யாயிரம் ஃபீஸ் புடுங்கிட்டாங்க, அண்ணன் வீட்லருந்து கோச்சிங் போறான்"

"இவனும் சொன்னான், ஆனா அவ்ளோ பணமும் கட்ட முடியாது, மெட்ராஸ்ல தங்கி படிக்கவும் யாருமில்லை, இவன் எப்பிடியாவது படிச்சி இஞ்சினியர் ஆயிட்டான்னா என் கடனே தீர்ந்துடும் சார்"

"அட அங்க எல்லாமே காசுதான் சார், யாரை புடிச்சாலும் நடக்காது, நம்ம சொந்தகாரன், ஜாதிகாரன் இருந்தா கூட எவனும் ஹெல்ப் பண்ணமாட்டாங்க"

"அது தெரியுங்க, நம்பகமா காசு தந்து சீட் கன்ஃபார்ம் பண்ணனுமில்லை, வேற யாரு மூலமாவது போயி காசும் போயி சீட்டும் கெடைக்கலைனா"

"ஆனா நான் என் பையன்கிட்ட சொல்லிட்டேன் ஃப்ரீ சீட்டு கெடைச்சாதான் படிக்க வைப்பேன் இல்லனா பாலிடெக்னிக்குல சேத்துடுவன்னு"

ஃப்ரீ சீட்டு கெடைச்சாதான் படிக்க வைப்பேன் இல்லனா பாலிடெக்னிக்குல சேத்துடுவன்னு ஏ.பி.சார் சொல்வதே கேசவன் வீட்டுக்கும் ஏ.பி.வீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்கிறது, உடனே பொருளாதார நிலை வைத்து இடஒதுக்கீடு என்ற வாதத்தில் நுழைந்துவிடாதீர்கள், +2 படிப்பில் மதிப்பெண் வாங்குவது வரை பொருளாதாரம் ஒரு பெரிய தடைகல் அல்ல, +2வில் மதிப்பெண் வாங்குவதற்கு பொருளாதாரம் ஒரு சிறிய காரணியே, +2வில் மதிப்பெண் வாங்குவதற்கு பொருளாதாரம் பெரிய தடையல்ல என்பதாலேயே கூலி வேலைக்கு செல்பவர்களின் பையன்களும், ரிக்ஷா தொழிலாளிகளின் பெண்களில் ஒரு சிலராவது +2விலும் 10ம் வகுப்பிலும் மாநில அளவில் ரேங்க் வாங்குவதை ஒவ்வொரு ஆண்டும் நாம் பார்க்கிறோம், ஆனால் அதே சமயம் மிக வறுமையான குடும்பத்தில் சாப்பாட்டிற்கும் வேலைக்கு செய்துகொண்டு படிக்கும் மாணவர்களின் நிலை வேறு(இது சிறுகதை ஒரே நேரத்தில் எல்லா விசயங்களையும் அலசையலாது) ஆனால் அதற்கு மேல் மேல்படிப்புக்கு செல்ல முனையும் போது தான் பொருளாதாரம் பெரும் தடையாக நிற்கின்றது.

//4. In the society they live there is no great difference in their status at the point of time story happens.(since Kesavan is coming to narrator house and having coffee)
//
இது ஒரு +2மாணவன் சொல்லும் கதை, மேலும்
அப்பட்டமாக எல்லாவற்றையும் சொல்லும்போது பிரச்சார நெடி அடிக்கிறது என்று என் முந்தைய கதையில் சொன்னது போன்ற விமர்சனங்கள் வரும் என்பதாலேயே அப்பட்டமாக சொல்லாமல் லேசாக காண்பித்துள்ளேன் என்பதற்கு கீழ் கண்டவரி எடுத்துக்காட்டு


"வாங்க சார், டீ சாப்புடுங்க"

"இல்லமா இப்போதான் சாப்புட்டு வந்தேன்"

பொதுவாக யார் வேண்டாமென்றாலும் வற்புறுத்தி எல்லோரையும் டீ சாப்பிட சொல்லும் அம்மா கேசவ் சாரை அதுக்கு மேல ஒரு தடவை கூட டீ சாப்பிட சொல்லலை.


பொதுவாக யார் வேண்டாமென்றாலும் வற்புறுத்தி எல்லோரையும் டீ சாப்பிட சொல்லும் அம்மா கேசவ் சாரை அதுக்கு மேல ஒரு தடவை கூட டீ சாப்பிட சொல்லலை. என்பதன் காரணம் உயர்சாதிக்காரர்கள் பொதுவாக நாகரீகமாக மறுக்கும்போது அவர்களை மேலும் மேலும் சங்கடப்படுத்துவது போன்ற நிலையை வற்புறுத்துவதன் மூலமாக ஏற்படுத்துவதை தவிர்கவே ஏ.பி.சாரின் மனைவி அதற்கு மேல் வற்புறுத்தவில்லை என்பதே அந்த வரிகளில் சொல்ல வந்த செய்தி.

"சரி அத உடுங்க சார், என்ன இந்த பக்கம் காத்து அடிக்குது"

மேற்கண்ட வரிகள் கேசவன் சார், ஏ.பி.சார் வீட்டுக்கு வந்து செல்பவர் அல்ல என்பதை குறிக்க, இப்போது தேவையிருக்கிறது அதனால் வந்துள்ளார் என்பதை சுட்டவும் தான்.

//AND VERY IMPORTANTLY NOT AT ALL BACKWARD SOCIALLY.//
ஃபிரீ சீட் கிடைக்காவிட்டால் பாலிடெக்னிக் செல்ல வேண்டிய நிலையில் உள்ளான், உதவி செய்ய சொந்தகாரர்களும் சாதிக்காரர்களும் இல்லை, சென்னை எக்செல் கோச்சிங் கிளாஸ் பற்றி பையன் தான் தந்தையிடம் சொன்னதாக குறிப்பிடுகிறார் ஏ.பி.சார் ஆனால் மகன் பாசா, பெயிலா என்று தெரியும் முன்பே காசு கொடுத்து சீட் கன்பார்ம் செய்யும் ஆர்வமும் பணமும் அதே சமயம் உதவி செய்ய சொந்தகாரர்களும் உள்ளார்கள் கேசவன் சாருக்கு, பொதுவாக வேண்டாமென்று சொன்னாலும் வற்புறுத்தும் ஏ.பி.சார் மனைவி ஒரு முறை கேசவன் சார் வேண்டாமென்று சொன்னதும் அதற்கு மேல் வற்புறுத்தாததற்கு காரணம் குறைந்த சாதிகாரங்க வீட்டில் சாப்பிடுவாங்களோ என்னமோ அவர்களுக்கு தர்மசங்கடம் தரவேண்டாமென்று இது போல நிறைய உள்ளது மேலும் இது ஒரு சிறுகதை, சிறிய களம், இதில் எல்லாவற்றையும் விலாவரியாக விளக்க இயலாது.

மேலும் முரளி நீங்கள் there is no difference in their status
என்று கூறிப்பிடவில்லை, நீங்கள் கூறிப்பிட்டது there is no great difference இல்லையா there is no great difference, but there is a difference right? தலித்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மிக பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உயர்த்தப்பட்ட சாதியினருக்கும் சமூக வித்தியாசங்கள் வெவ்வேறு அளவில் உள்ளது, அந்த அளவிற்கு ஏற்ற மாதிரி தான் இடஒதுக்கீடும், தலித்களின் அளவிற்கு எங்களுக்கும் ஒதுக்கீடு தா என்று எந்த பிற்படுத்தப்பட்டவனாவது கேட்டால் அதில் எந்த அளவிற்குக் நியாயமில்லையோ அதே போலத்தான் உயர்த்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பார்த்து கேட்பதும், இங்கேயும் எல்லா வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு ஒரே அளவில் இல்லை, தலித்கள் அனுபவித்த கொடுமைக்கும் அவர்கள் முன்னேற்றத்திற்கும் ஒதுக்கப்படும் அளவிற்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடையாது அதற்காக பிற்படுத்தப்பட்டவர்களும் உயர்த்தப்பட்டவர்களும் ஒரே நிலை என்று சொல்வது நிதர்சனத்தை ஒத்து கொள்ள முடியாத மனநிலையே தவிர வேறொன்றுமில்லை

said...

Kuzhali,
Thanks for giving a big explanation. But still there are some more things I would like to add.
- First thing I could infer here is Kesavan is jealous of narrator's situation. If I had been in Kesavan's situation I would too feel same. It is common among humans to be jealous.
- Secondly, given they are all of same income families, their spending patterns and priorities differ. I don't know why a community justification is given for priority.
- Having relatives in different cities means that the community is spread geographically. The reason behind such migration may reveal some other fact for you too.
- And finally, if anybody is offered anything in guest house they refuse first in Tamil culture. there is nothing related to caste I cud see here.
Given all these, I for sure, agree that there are differences among each caste in society. That's why I used the word no great and you are sharp enough to get that.
And here, it is not my intention to argue reservation is good or bad. It is just to say that your example is wrong or inappropriate.
Murali.

said...

//- First thing I could infer here is Kesavan is jealous of narrator's situation. If I had been in Kesavan's situation I would too feel same. It is common among humans to be jealous.
//
கதையே இதைப்பற்றியது தான்....

said...

//if anybody is offered anything in guest house they refuse first in Tamil culture. there is nothing related to caste I cud see here.
//

முரளி என்னோட இன்னொரு கதை கல்யாண சாப்பாடு, இதை படியுங்கள், சாப்பிட சொல்வதும், அதை மறுப்பதும் அதற்கு மேல் மீண்டும் வற்புறுத்தாதற்கும் பிண்ணனியில் சாதி எப்படி செயல்படுகின்றது என்பது சொல்லியிருக்கிறேன், பெரும்பாலான எனது சிறுகதைகள் நான் பார்த்த அனுபவங்களோடு சில கூட்டல் குறைத்தல்களோடு இருப்பவைகள் மட்டுமே.... அதனாலேயோ சிறுகதைக்கான அதிர்வு திருப்பங்கள் என் கதைகளில் இருப்பதில்லை...

said...

குழலி,
முரளிக்கு பெரிய நன்றி ஒன்னு சொல்லிடுங்க.. நீங்க சொன்ன விளக்கங்கள்ல பாதியை நான் முதலில் கதையை படிக்கும்பொழுது கவனிக்கவில்லை. அதனை கவனிக்கவைத்த முரளிக்கு கூடவே என் தனிப்பட்ட நன்றியும்.

சப்பைகட்டுக்கள் போலில்லாமல் மிகச்சிறப்பான உண்மையான விளக்கங்கள்.

உங்கள் கதையை இப்பொழுது இன்னும் அதிகமாக பிடிக்கிறது.

இது போலவே பலருக்கும் இருக்கும் என்பது என் எண்ணம்.