தேர்தல் 2006 - ஆச்சரிய ஆண்டிமடம்

பாமக போட்டியிடும் தொக்குதிகளின் பட்டியலை பார்த்த போது ஆண்டிமடம் இல்லாதது ஆச்சரியம், அதிமுக ஆண்டிப்பட்டியில் போட்டியிடாமலிருந்தால் எத்தனை ஆச்சரியமோ அத்தனை ஆச்சரியம், ஆண்டிமடம் பாமகவின் நிச்சய வெற்றி தொகுதி 1991 சட்ட மன்ற தேர்தலில் ராஜீவ்காந்தி மரண அலையிலும் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் ஞானமூர்த்தி தோல்வியை தழுவினார், 1996 தேர்தலில் அப்போதைய பாமக தலைவர் தீரன் ஜெயலலிதா எதிர்ப்பு அலையிலும் வெற்றிபெற்றார், அதன் பின் அதிமுக கூட்டணியோடு 2001ல் திரு,குரு வெற்றி பெற்றார், தமிழகத்தின் வேறெந்த தொகுதியையும் விட அதிக செல்வாக்கோடு பாமக இருக்கும் தொகுதி ஆண்டிமடம்,

பாமகவின் தோற்றத்தினால் அதிமுகவும், காங்கிரசும் கடுமையான பாதிப்புக்குள்ளானது ஆண்டிமடத்தில், திமுகவிற்கு சேதாரம் அதிமுக,காங்கிரஸ் அளவிற்கு இல்லையென்றாலும் திமுகவும் கணிசமான வாக்கு வங்கியை இழந்தது.

முழுக்க முழுக்க கிராமங்கள் அடங்கிய தொகுதி, தொகுதி முழுவதும் விவசாயத்தை நம்பிதான், பெரும்பான்மை வன்னிய மக்களும், அடுத்ததாக எண்ணிக்கையில் தலித்களும் அதிகம் இருக்கும் தொகுதி, தமிழர் விடுதலைப்படை ஆதிக்கம் நிறைந்த பகுதி, வன்னிய தலித் இளைஞர்கள் பலர் தமிழரசன், லெனின் காலத்தில் தமிழர் விடுதலைப்படையில் இணைந்தனர், ஒரு வகையில் தமிழர் விடுதலைப்படையின் செல்வாக்கிழப்பிற்கு பாமகவும் காரணம், ஏழை இளைஞர்களை வசப்படுத்திக் கொண்டிருந்த தமிழர்விடுதலைப்படை இளைஞர்கள் பாமகவின் தோற்றத்திற்கு பின் பாமக பக்கம் சாய்ந்தனர், தலித் இளைஞர்கள் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் இணைந்தனர், துப்பாக்கி தூக்குவதை விட அரசியல் பாதையே பாதுகாப்பானது என்ற எண்ணமும் ஓங்கியிருக்கலாம், கடலூர் மாவட்ட செய்தி தாள்களில் தினமும் இடம் பெறும் செய்தியாக வழிப்பறி கொள்ளையடித்த தமிழ் தீவிரவாதி கைது, கார் திருடிய தமிழ் தீவிரவாதி கைது என வழிப்பறிகாரர்களையெல்லாம் தமிழ் தீவிரவாதிகள் எனவும் தமிழர் விடுதலைப்படையை சேர்ந்தவர்களை வழிப்பறிகாரர்களாகவும் காவல்துறையும் அரசாங்கமும் கணக்கு காண்பித்தாலும் தமிழர் விடுதலைப்படையினரின் மீதான ஆதரவு எண்ணம் இன்னமும் அந்த பகுதி மக்களிடையே உள்ளது.

பாமகவினருக்கும் தமிழர் விடுதலைப்படை அமைப்பினருக்கும் அடிக்கடி மோதல்களும் நடைபெறும், பொதுவாக வன்னியர்கள் குறைந்த அளவில் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளாகவும், கூலிகளாகவும், வெகு சில தலித் மக்கள் சிறு விவசாயிகளாகவும் பெரும்பாலோர் கூலிகளாகவும் வாழ்கின்றனர், இங்கிருக்கும் மற்றொரு பிரச்சினை சாராயம், சில கிராமங்கள் முழுக்க முழுக்க கள்ளசாராயம் காய்ச்சுவதை குடிசைத் தொழிலாகவே செய்கின்றனர்.

1991ல் பாமக சார்பாக போட்டியிட்டு சில ஆயிரம் வாக்குகளில் வெற்றியை நழுவவிட்ட ஞானமூர்த்தி ஆண்டிமடத்தில் பாமகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார், 1996ல் தீரனுக்காக கட்சி தலைமை ஞானமூர்த்தியை ஆண்டிமடத்துக்கு பதில் குறிஞ்சிப்பாடியில் போட்டியிட வற்புறுத்தியது, தலைமைக்கு மீண்டும் ஞானமூர்த்தியே ஆண்டிமட வேட்பாளராக நிற்க வேண்டுமென வலியுறுத்தி ஆயிரக்கணக்கில் தந்திகள் அனுப்பப்பட்டன, அந்த தேர்தலில் தீரன் கடுமையான ஜெயலலிதா எதிர்ப்பு அலையிலும் எளிதாக வெற்றி பெற்றார், அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்கட்சி பிரச்சினையால் ஞானமூர்த்தி திமுகவில் இணைந்து மாவட்ட கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார், 2001ல் தீரன் கட்சியை விட்டு விலகிய பின் பாமக வேட்பாளராக ஆண்டிமடத்தில் திரு.குரு போட்டியிட்டார், திமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.சிவசுப்பரமணியம் குடும்பத்தினர் கேட்ட போதும் குருவிற்கு எல்லாவிதத்திலும் ஈடு கொடுக்க கூடியவராக ஞானமூர்த்தி திமுக வேட்பாளராக போட்டியிட்ட போதும் குரு வெற்றி பெற்றார், தற்போது ஞானமூர்த்தி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க கேட்ட போதும் திரு.சிவசுப்ரமணியத்தின் குடும்பத்தினருக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தொகுதியின் முதலிடத்தில் இருக்கும் பாமகவும் இரண்டாமிடத்தில் இருக்கும் திமுகவும் கூட்டணியில் இருப்பதால் மூன்று மற்றும் நான்காமிடத்திலிருக்கும் அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கூட்டணியால் திமுகவின் வெற்றிக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது, தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என குருவின் மீது தொகுதியில் இருக்கும் அதிருப்தி தேர்தலில் பிரதிபலிக்காது, பிரதிபலித்திருந்தால் தொகுதிக்கு எதுவுமே செய்யாத தீரன் மீதான அதிருப்தி சென்ற தேர்தலில் வெளிப்பட்டிருக்கும்.

2001 சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்
திரு.குரு (பாமக - அதிமுக கூட்டணியில்)66,576
திரு.ஞானமூர்த்தி (திமுக)39,574
திரு.வீரபாண்டியன் (மதிமுக)2,869
வாக்கு வித்தியாசம்27,002


1996 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (ஜெயலலிதா எதிர்ப்பு அலை)
திரு.தீரன் (பாமக) 49,853
திரு.சிவசுப்ரமணியம் (திமுக)
36,451
திரு. ஆர்த்தர் ஹெல்லர்(காங் - அதிமுக கூட்டணியில்) 13,779
திரு.இராமலிங்கம்(மதிமுக) 3,526
13,779
வாக்கு வித்தியாசம்13,402

1991 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (ராஜீவ் காந்தி மரண அலை)
திரு.தங்கராசு (காங் - அதிமுக கூட்டணியில்) 40,816
திரு.ஞானமூர்த்தி (பாமக)
33,238
திரு.சிவசுப்ரமணியம் (திமுக)
21,996
வாக்கு வித்தியாசம்7,578


ஆண்டிமடம் தொகுதி அலசலில் தினமலர் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வென்ற தொகுதி என்று குறிப்பிட்டுவிட்டு பாமகவின் பெயரை கூட குறிப்பிடாமல் இருந்தாலும் முந்தைய தேர்தல் முடிவுகளும் தற்போதைய தொகுதி நிலவரமும் ஆண்டிமடத்தில் பாமகவின் முக்கியத்தை உணர்த்துகின்றன.

தொகுதி பங்கீட்டில் ஆச்சரியமளித்த ஆண்டிமடத்தின் தேர்தல் முடிவில் அலையடித்தாலும் ஆச்சரியமில்லை

0 பின்னூட்டங்கள்: