தேர்தல் 2006 - அரசியலின் கூட்டல், கழித்தல்கள்

திசைகள் மின்னிதழில் வெளியான எனது கட்டுரை இங்கே...
திசைகளில் வாய்ப்பளித்த அருணா சீனிவாசனுக்கு ஆசிரியர் குழுமத்திற்கும் நன்றி
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள இந்த தருணத்தில் தமிழக அரசியலின் முக்கிய கூட்டணிகளான திமுக-அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறுவதை வழக்கத்திற்கு மாறாக கடுமையாக தடுத்த நிறுத்த திமுக முயற்சித்ததும், அதிமுகவும் கூட்டணிக்காக கதவை திறந்தே வைத்ததும் இந்த தேர்தலில் கூட்டணியின் முக்கியத்தை தெளிவுபடுத்துகின்றதும், ஆனால் தமிழக அரசியல் கூட்டணிபலம் தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதற்கு எத்தனை தூரம் சான்றுகள் தரமுடியுமோ அதே அளவிற்கு கூட்டணி பலத்திற்கும் தேர்தல் வெற்றி தோல்விக்கும் தொடர்பில்லை என்றும் சான்றுகள் தரமுடியும்.

பொதுவாக தேர்தல் முடிவுகளை தீர்மாணிப்பவைகளாக கருதப்படுவது
1. அனுதாப அலை
2. எதிர்ப்பு அலை
3. கூட்டணி பலம்
4. ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி


இது வரை அனுதாப அலை எதுவும் இருப்பதாக தெரியவில்லை, மேலோட்டமாக பார்க்கும் போது எந்த கட்சிக்கும் எதிர்ப்பு அலை இருப்பதாகவும் தெரியவில்லை எனவே மற்றைய காரணிகள் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

கூட்டணி பலம்
முக்கிய கூட்டணிகளாக வழக்கம் போல திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகளே உள்ளன, விஜயகாந்த்தின் தேமுதிக, பாஜக, பார்வர்ட்பிளாக்(கார்த்திக்) போன்றவர்கள் திமுக,அதிமுகவிற்கு பிறகே வருகின்றனர்.
திமுக, அதிமுக கூட்டணி சமபலத்தில் இருப்பதாக ஒரு தோற்றம் இருந்த போதிலும் அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணி பலமாகவே உள்ளது.

வடமாவட்டங்களில் கட்சிகளின் செல்வாக்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள், மதிமுக, பாஜக என்ற வரிசைப்படியே உள்ளது. புற சென்னை,செங்கல்பட்டு,கடலூர்,விழுப்புரம்,திருவள்ளூர், காஞ்சிபுரம்,பெரம்பலூர், அரியலூர்,வேலூர்,சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில் கட்சிகளின் வாக்கு விழுக்காடு சற்றேறக்குறைய கீழ் கண்டவாறே முந்தைய தேர்தல்களில் இருந்துள்ளது.

திமுக - 30-35%
அதிமுக - 25-30%
பாமக - 12-15%
காங்கிரஸ் - 10-12%
விடுதலை சிறுத்தைகள் - 5%
மதிமுக - 2%
இரு கம்யூனிஸ்ட்கள் - 3%

"தொகுதிக்கு தொகுதி இந்த புள்ளிவிவரத்தில் சிறிய அளவில் மாறுபாடு இருக்கும்


திமுக கூட்டணியில் பாமக,காங்கிரஸ் இருப்பதால் வடமாவட்டங்களில் திமுக கூட்டணி அதிக இடங்களை வெற்றி கொள்ள இயலும், விடுதலை சிறுத்தைகளின் வாக்கு அதிமுக கூட்டணிக்கு உதவினாலும் அதிமுகவினால் விடுதலை சிறுத்தைகளின் பலத்தால் திமுகவை மட்டுமே சமன் செய்யமுடியும், அதனோடு பாமகவும், காங்கிரஸ் வாக்குகளும் சேரும் போது அதிமுக கூட்டணி வட மாவட்டங்களில் பெருத்த சரிவை சந்திக்கும் நிலை உள்ளது. மதிமுகவினால் வடமாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்கு எந்த பலனும் இல்லை, வட மாவட்டங்களில் சில தொகுதிகளில் மதிமுக பெற்ற கணிசமான வாக்குகள் மதிமுகவிற்காக அல்ல, மதிமுக வின் வேட்பாளர்களின் சொந்த செல்வாக்குக்காக, இந்த வாக்குகள் அந்த வேட்பாளர் போட்டியிலிருந்தால் மட்டுமே விழும் வாக்குகள், இதற்கு உதாரணமாக கடலூர் மாவட்டத்தின் மற்றைய தொகுதிகள் 2000 வாக்குகள் மட்டுமே பெற்ற மதிமுக கடலூர் சட்டமன்ற தொகுதியில் 7000க்கும் கூடுதலான வாக்குகள் பெற்றது மதிமுக வேட்பாளர் திரு.செள. பத்மனாபனால், இவர் 1989ல் சுயேட்சையாக போட்டியிட்டு 5000க்கும் கூடுதலான வாக்குகள் பெற்றார், இதே போன்றே நெல்லிக்குப்பம் தொகுதியில் திரு.கிருஷ்ணமூர்த்தி மதிமுக சார்பாக நின்றபோது கிடைத்த கணிசமான வாக்குகள் 2001 சட்டமன்ற தேர்தலில் வெகுவாக குறைந்து 2000 வாக்குகள் மட்டுமே மதிமுகவிற்கு கிடைத்தது, 2001 தேர்தலில் 10,000 வாக்குகளுக்கு மேல் பெற்ற 36 தொகுதிகளில் 8 தொகுதிகள் மட்டுமே வடமாவட்ட தொகுதிகள் அதிலும் சென்னை புறநகர் தொகுதிகள் 3 (பூந்தமல்லி, தாம்பரம்,ஆலந்தூர்) மற்றவைகளும் வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கினால் கணிசமான வாக்குகள் வாங்கியது (செங்கல்பட்டு – மல்லை சத்யா, செஞ்சி – மாசிலாமணி, மேல்மலையனூர் – ஏ.கே.எம் என அழைக்கப்படும் ஏ.கே.மணி, ரிஷிவந்தியம் – மருதூர் துரை)

விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் முந்தைய முக்கிய தலைவர் திரு.திருவள்ளுவன் தேமுதிகவிற்கு ஆதரவளிப்பது விடுதலை சிறுத்தைகள் வாக்கு வங்கியின் சில இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இது தவிர எல்லா கட்சிகளின் வாக்கு வங்கியிலும் தேமுதிக கைவைக்கின்றது, குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் மத்தியிலும் கிராமங்களிலும் தேமுதிகவிற்கு ஆதரவு இருப்பது போல தெரிகின்றது, இந்த தேர்தலின் முடிவில் தான் தேமுதிகவின் பலம் தெரியும் என்றாலும் திரு.இராமச்சந்திரனின் தனிப்பட்ட செல்வாக்கினால் பண்ருட்டி தொகுதியிலும் விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி தவிர்த்து தேமுதிக திரு.கருணாநிதி அவர்கள் கூற்றுப்படி ஹார்ம்லெஸ் என்ற நிலைதான் இது வரை.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கு கடந்த சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம் குறிப்பாக பொது மக்கள் மத்தியில் இருந்த தவறான இமேஜ் மாறி தற்போது தலித் அல்லாத மக்களும் விடுதலை சிறுத்தைகளின் மீது கரிசனத்தோடு (குறிப்பாக திரு.திருமாவின் மீது) இருக்கின்றனர், இதற்கு சான்றாக 2004 பாராளுமன்ற தேர்தலில் திரு.திருமா சிதம்பரம் தொகுதியில் பெற்ற வாக்குகள், அதற்கு முந்தைய தேர்தலில் பெற்றதை விட 30,000 வாக்குகள் அதிகம், தலித் வாக்குகளையும் தாண்டி பிற சாதி மக்களின் வாக்கு வங்கியில் ஊடுறுவியிருப்பது தெளிவாகின்றது, தலித்கள் மட்டுமல்லாமல் வன்னியர்களும் விடுதலை சிறுத்தை அமைப்புகளில் சேரத்துவங்கியுள்ளனர், பாண்டிச்சேரி நாடாளுமன்ற வேட்பாளராக விடுதலை சிறுத்தை அமைப்பின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஒரு வன்னியர், ஆனாலும் கடலூர்,விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்கள் தவிர்த்து பிற இடங்களில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினால் அதிமுக கூட்டணிக்கு பயன் எதுவும் இல்லை.

ஏறக்குறைய 60 தொகுதிகளில் முடிவை நிர்ணயிக்கும் பாமக வட மாவட்டத்தின் அரசியலை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, 1996 தேர்தலில் செல்வி.ஜெயலலிதா எதிர்ப்பு அலையிலும் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான வாக்குகள், 4 தொகுதிகளில் வெற்றி 9 தொகுதிகளில் இரண்டாமிடம், 1991 தேர்தலில் ராஜீவ் காந்தி மரண அலையிலும் இதே போல் பல தொகுதிகளில் 10,000க்கும் மேற்பட்ட வாக்குகள், 1989 பாராளுமன்ற தேர்தலிலும் 5.5% வாக்குகள் (இதை வட மாவட்டங்களில் மட்டும் என கணக்கிடும்போது ஏறக்குறைய 15%) பெற்றது, ஆனால் பாமகவின் வளர்ச்சி தற்போது தேக்கநிலைக்கு வந்துவிட்டது, இதற்கு மேல் பாமக வளர்வதும் கடினம், அதே போல அதன் சரிவும் குறைவாகவே இருக்கும், solid vote bank என கூறப்படும் நிச்சய வாக்கு வங்கியே அதன் சரிவு மிககுறைவாக இருக்க காரணம், 1996 தேர்தல் தவிர்த்து பாமக கூட்டணியின்றி போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் அதன் வாக்கு வங்கி ஒரே மாதிரியாகவே உள்ளது, தேர்தலுக்கு தேர்தல் பாமக பெற்றுள்ள சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியதால் பாமக வாக்கு வங்கி வளர்ந்துவிட்டதாக கூறமுடியாது, பாமக வாக்கு வங்கி அதன் நிறுவனர் திரு.இராமதாசால் அரசியல் கணக்கோடு பயன்படுத்தப்பட்டதே அதன் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு காரணம், விடுதலை சிறுத்தைகள் அமைப்போடு பாமக கைகோர்த்தது சாதி, கட்சி பாகுபாடின்றி வடமாவட்ட மக்கள் பலரை ஆசுவாசப்படுத்தியது, எதிர் முகாம்களில் தற்போது இருக்கும் போதும் எந்த விதமான அறிக்கை தாக்குதல்களிலும் ஈடுபடாமல் இன்று வரை நட்புமுறையில் இருவரும் இருப்பதும் தேர்தலுக்கு பிறகு இணைந்து செயல்படுவோம் என்ற பேச்சுகளும் எதிர் எதிர் அணியில் தேர்தலை சந்தித்தாலும் கடந்த கால தேர்தல்களில் நடை பெற்றதை போன்ற வன்முறைகள் நடைபெறாது என்ற நம்பிக்கையுடன் உள்ளது வட மாவட்ட தேர்தல்களம்.

வடமாவட்டங்களில் கம்யூனிஸ்ட் தோழர்கள் பணம் காசு எதிர்பார்க்காமல் தேர்தல் வேலை செய்வார்கள் என்பதைத் தவிர்த்து திமுக கூட்டணிக்கு நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, தர்மபுரி மாவட்டத்தின் சில தொகுதிகள் தவிர வேறெந்த தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட்களால் பெரிய அளவில் இலாபமில்லை

திமுகவின் கோட்டையாக வட மாவட்டங்கள் கருதப்பட்டாலும் இந்த தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தேர்வு மிக முக்கியமானதாக கருதப்படும், 2001 தேர்தலில் மிகப்பெறும் வெற்றி பெற்றதற்கான காரணங்களில் ஒன்று வேட்பாளர் தேர்வு, மிகப் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள், ஏற்கனவே கெட்ட பெயர் எடுத்தவர்கள் முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டனர், ஆனால் இது மாதிரி திமுகவில் செய்வது கடினம் ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுகவின் அதே குட்டி மன்னர்களையே வேட்பாளர்களாக பார்க்கின்றனர், புதுமுகங்கள் நிறுத்தப்பட்டால் குட்டி மன்னர்களே அவர்களுக்கு எதிராக வேலை செய்து கவிழ்த்துவிடுகின்றனர், பழைய வேட்பாளர்களையே பார்த்தால் மக்களுக்கு எரிச்சல், புது முகங்கள் போட்டியிட்டால் குட்டி மன்னர்களின் உள்ளடி வேலைகள் என திமுகவிற்கு வேட்பாளர் தேர்வு இந்த முறையும் தலைவலி தான்,

பொதுவாகவே அதிமுக சற்று பலம் குறைந்த வடமாவட்டங்களில் வெள்ள நிவாரணத்திற்கு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து கிடைத்த நல்லபெயரும் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் அதில் புழங்கும் பணம், திமுக வெற்றிபெற்றால் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்ற பிரச்சாரம், வழக்கமான வாக்கு வங்கி இவை தவிர்த்து அதிமுக விற்கு சொல்லிக்கொள்ளும் படியான பலம் எதுவும் இல்லை, இதை கணித்தே அதிமுகவும் முடிந்த அளவிற்கு வடமாவட்டங்களில் போட்டியிடுவதை தவிர்த்து மதிமுக, விசிகளுக்கு தொகுதிகளை இங்கு அளித்துள்ளது, ராசிபுரம், கிருஷ்ணகிரி,பெரம்பலூர்,அரியலூர் போன்ற இடங்களில் சில தொகுதிகளை சொந்த மாகவும், விழுப்புரம்,கடலூர் மாவட்டத்தின் சில தொகுதிகளை விடுதலை சிறுத்தைகளின் பலத்தினாலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

திமுகவின் கோட்டையாக கருதப்படும் வடமாவட்டங்களில் பலமிகுந்த பாமகவும் கணிசமான வாக்கு வங்கியுள்ள காங்கிரசும் கூட்டணியில் இருப்பது வடமாவட்ட தொகுதிகளை திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெறும் நிலையிலிருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் அதிமுக கூட்டணியில் இருப்பதால் சில தொகுதிகள் கைவிட்டும், சில தொகுதிகள் இழுபறி நிலைக்கும் சென்றுவிட்டது, சிறிய அளவிலான சேதாரத்துடன் திமுக கூட்டணி வட மாவட்ட தொகுதிகளை தக்கவைத்து கொள்ளும்.

தஞ்சாவூர் மாவட்டம் பொதுவாகவே திமுகவிற்கு எந்த சூழலிலும் கை கொடுக்கும் மாவட்டம், தமிழகமெங்கும் திமுக-தாமக கூட்டணி 1998 பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற போதும் தஞ்சையில் சுனாபானா என செல்லமாக அழைக்கப்படும் சு.பழனிமானிக்கம் வெற்றிபெற்றார், தஞ்சையின் திமுக-அதிமுக கூட்டணி சொந்த பலத்தில் தான் மோதிக்கொள்ள வேண்டும், கூட்டணி கட்சிகளுக்கு செல்வாக்கில்லாத தொகுதிகளாதலால் இங்கும் திமுகவுக்கு சாதகமான நிலை

நாகை மாவட்டம் கம்யூனிஸ்ட்களின் கோட்டை என்று கூறப்பட்டாலும் திமுக அல்லது அதிமுக என ஏதேனும் ஒரு கூட்டணியில் இருந்தால் மட்டுமே எளிதாக வெற்றி பெறுவார்கள், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள் என்ற வரிசையில் கட்சிகளின் பலம் இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் சமீப காலமாக கம்யூனிஸ்ட்களின் வாக்கு வங்கியில் ஓட்டை ஏற்படுத்தியுள்ளனர் கம்யூனிஸ்ட்களின் பலத்தால் திமுக கூட்டணியின் கை ஓங்கினாலும் சீர்காழி, மயிலாடுதுறை போன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றிமுகம் காணலாம்.

திருச்சி புதுக்கோட்டை,சிவகங்கை போன்ற மாவட்டங்களில் திமுக அதிமுக கட்சிகள் தம் சுயபலத்தில் மட்டுமே மோதிக்கொள்ள வேண்டும், வேறு எந்த கட்சிகளுக்கும் எந்த பலமுமில்லாததால் திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் வெற்றி தோல்வி முழுக்க முழுக்க திமுக அதிமுகவை பொறுத்ததே, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களில் கணிசமாக திமுகவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கணிசமாக அதிமுகவும் வெற்றிபெறும்.

மதுரையும் அதை தாண்டிய தென்மாவட்டங்களில் அதிமுகவின் வலுவான வாக்கு வங்கியும், சிவகாசி,கோவில்பட்டி,குளச்சல்,பொள்ளாச்சி,சாத்தூர் போன்ற முப்பதிற்கும் மேற்பட்ட தென்மாவட்ட தொகுதிகளில் மதிமுக பலமாக உள்ளது, (2001 தேர்தலில் 10,000 வாக்குகளுக்கு மேல் வாங்கிய 36 தொகுதிகளில் 28 தென்மாவட்டங்களை சேர்ந்தது, 5000 வாக்குகளுக்கு மேல் வாங்கிய 33 தொகுதிகளில் பலவும் தென்மாவட்டங்களை சேர்ந்ததே) வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 5,000 க்கும் குறைவாக இருக்குமாயின் மதிமுகவின் கூட்டணி அதிமுகவிற்கு மிகப்பெரும் வெற்றியை தரும், ஆனால் பழைய புள்ளிவிவரங்கள் எத்தனை நெருக்கமான போட்டியிலும் 5000க்கும் குறைவான வெற்றி வாக்கு வித்தியாசம் மிக சில தொகுதிகளில் மட்டுமே, மதுரை மற்றும் தென்மாவட்ட திமுகவின் உட்கட்சி பூசல்கள் அதிமுகவின் வெற்றிக்கு உதவும். காங்கிரசிற்கு தமிழகம் முழுவதுமாக இருக்கும் 10-12% வாக்கு வங்கி திமுகவிற்கு தென் மாவட்டங்களில் ஆறுதல் தரும், பல தொகுதிகளில் கடும்போட்டியையும் ஒரு சில தொகுதிகளில் வெற்றியை தந்தாலும் ராமநாதபுரம், தூத்துக்குடி தவிர்த்து தென் மாவட்டங்களின் பெரும்பாலான தொகுதிகளை அதிமுக கூட்டணியே கைப்பற்றும்.

கோயம்புத்தூர்,கரூர்,ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் திமுக, அதிமுக வோடு மதிமுகவும் அதிக வலுவுடன் இருப்பதால் இங்கும் அதிமுக கூட்டணி முண்ணனி பெற்றாலும் தொழில்நகரங்களின் கம்யூனிஸ்ட்களின் பலத்தால் சில தொகுதிகளில் திமுக, கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெறுவர்,

கன்னியாக்குமரி, தூத்துக்குடி, நாகர்க்கோயில் மாவட்டங்களில் திமுக,அதிமுக,மதிமுக,பாஜக, கம்யூனிஸ்ட்கள் என அத்தனை கட்சிகளும் வாக்கு வங்கி வைத்துள்ளதால் முடிவுகள் கணிக்க முடியாத நிலையென்றாலும் பெரும்பான்மை கிறித்துவர்களின் திமுக ஆதரவினால் அதிமுகவைவிட சற்று அதிக இடங்களை திமுக பெறக்கூடும்.

இது தவிர்த்து புதிய தமிழகம், பார்வர்டு பிளாக் (கார்த்திக்) போன்ற கட்சிகள் ஓரிரு தொகுதிகள் கணிசமான வாக்குகள் பெற்றாலும் மற்ற தொகுதிகளின் முடிவை மாற்றமுடியாத நிலையிலேயே உள்ளன.கூட்டணி பலத்திற்கு அடுத்த படியாக தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது ஆளுங்கட்சியின் மீதான எதிர்ப்புணர்வு, இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான எந்த உணர்வும் இல்லையென்று கூறப்பட்டாலும் கடந்த நான்கு ஆண்டுகளாக சாலைப்பணியாளர்கள் நீக்கம், மதமாற்ற தடைசட்டம், ஆடு கோழி பலியிட தடை, ஹெச் குடும்ப அட்டை, அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், போக்குவரத்து தொழிலாளர்களின் மீதான நடவடிக்கைகள் , விவசாயிகள் என பொது மக்களில் பெரும்பாலோனோர் ஏதேனும் ஒரு வகையில் அதிமுக ஆட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர், பொடா அத்துமீறல்கள், பத்திரிக்கைகள் மீதான தாக்குதல்கள், திமுக பேரணியில் ரௌடிகளை வைத்து விரட்டி விரட்டி வெட்டிய நிகழ்ச்சிகள், பொடா, கஞ்சா வழக்கு அத்துமீறல்கள், வெள்ளத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்காத நிவாரணம் போன்றவைகள் வெள்ள நிவாரண நிதியில் பாதிக்கப்படாதவர்களுக்கும் வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய்களும் திரும்பப் பெறப்பட்ட எல்லா நடவடிக்கைகளும், லாட்டரி சீட்டு ஒழிப்பு, முற்றுபெறாத கந்துவட்டிக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவைகளை சமன்படுத்துமா என்பதையும் எந்த அளவிற்கு வாக்களிக்கும் போது மக்களுக்கு மறதி ஏற்பட்டுள்ளது என்பதையும் தேர்தல் முடிவுகள் தான் சொல்லும், மேலும் தற்போது பெரும்பாலான பத்திரிக்கைகள் அதிமுக ஆட்சியில் எதிர்ப்பலை இல்லை என்று தொடர்ந்து மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே வந்தாலும் “இந்தியா ஒளிர்கிறது” என்ற கோஷத்திற்கு ஏற்பட்ட நிலையும், 1996 முதல் 2001வரையிலான திமுக ஆட்சியின் மீது எந்த அதிருப்தியும் இல்லையென்று(feel good factor) கூறப்பட்ட போதும் திமுக அடைந்த தோல்வியும் அதிமுக அரசின் மீது அதிருப்தி இல்லையென்று பத்திரிக்கைகள் கூறுவதை சந்தேகப்பட வைக்கின்றன.

கூட்டணி கூட்டல் கழித்தல்கள் என்று பார்க்கும் போது திமுக கூட்டணி வடமாவட்டங்களிலும் அதிமுக கூட்டணி தென் மாவட்டங்களிலும் பெருவாரியான வெற்றி பெறுமென்று தோன்றினாலும் இது வரை தமிழக தேர்தல்களில் வட மாவட்டங்களில் தனி முடிவுகள் தென் மாவட்டங்களில் வேறு முடிவுகள் என்று ஏற்பட்டதில்லை தமிழகம் முழுவதுமாக ஒரே மாதிரியான முடிவுகள் என்று கூறுவதற்கு முந்தைய தேர்தல் முடிவுகள் ஆதரவாக இருந்தாலும் 1999 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற 11 தொகுதிகள் தென் மாவட்டங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற மற்ற பாராளுமன்ற தொகுதிகள் பிற தமிழகம் என்பதனால் வட, தென் மாவட்டங்களுக்கு வெவ்வேறு முடிவுகள் ஏற்படும் வாய்ப்பையும் நிராகரிக்க இயலாது, திமுக வெறும் 129 தொகுதிகளில் போட்டியிடுவதும் கிட்டத்தட்ட 45% தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அளித்திருப்பதும் வெற்றி பெற்றால் முழு வெற்றி கிட்டும் இல்லையென்றால் படு தோல்வி என்ற நம்பிக்கையால் தான்.

இந்தியா ஒளிர்கிறது, feel good factor களுக்கு ஏற்பட்ட கதியும் கூட்டணி பலமும் மீண்டும் திமுகவை அறுதிபெறுபான்மை பெற வைக்கும், அல்லது மிகச்சிறிய அளவில் கூட்டணி கட்சிகளின் உதவி தேவைப்படும் (அப்படி ஒரு நிலைமை வந்தால் எளிதாக சிறு கட்சிகள் உடைக்கப்படும்), கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திப்பது திமுக, அதிமுக கட்சிகளுக்கு சோதனை என்றாலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இன்னும் ஒரு தேர்தல் தேவைப்படுகின்றது.

9 பின்னூட்டங்கள்:

said...

Excellent analysis. Agree with you on most of the points!

said...

Excellent analysis! Agree with you on most of the points. Thanks!

said...

Kuzhali,
Nice analysis..But,There is no district called Nagercoil ..Nagercoil is HQ of Kanyakumari Dist.Unlike all other southern dist ,ADMK is always weak in Kanyakumari dist.

said...

நல்ல அலசல்

என்ன தான் ஜெயலலிதா சலுகைகளை அள்ளிக் கொடுத்திருந்தாலும், 2004 பாரளுமன்ற தேர்தலில் இருந்த நிலையில் இருந்து பெருத்த மாறுதல் இருக்கும் என்று சொல்ல முடியவில்லை. திமுக கூட்டணிக்கு 2004ல் சாதகமாக இருந்த Vote Swing இம் முறை கொஞ்சம் குறையும். ஆனால் எந்தளவுக்கு கடந்த முறை Vote Swing இருந்தது என்பதை பார்க்கும் பொழுது இம் முறை ஜெயலலிதா கொடுத்த சலுகைகள் பலனை கொடுக்குமா என்று தெரியவில்லை.

கடந்த முறை திமுகவிற்கு சாதகமாக சுமார் 22.56 vote swing இருந்தது. இம் முறை இந்தளவிற்கு இருக்காது என்றாலும் திமுகவிற்கு சாதகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் தங்களுடைய கருத்து கணிப்பில் அனைத்து தொகுதிகளையும் அதிமுகவிற்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும் பத்திரிக்கைகளின் கருத்து கணிப்பு தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு வேளை இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்துவது தான் இந்தக் கருத்து கணிப்புகளின் நோக்கமாக இருக்குமோ ?

said...

//..But,There is no district called Nagercoil ..Nagercoil is HQ of Kanyakumari Dist
//
குறிப்பிட்டதற்குக் நன்றி ஜோ, நாகர்கோயில் என்று குறிப்பிட நினைத்தது நாகர்கோயில் பாராளுமன்ற தொகுதியை உள்ளடக்கிய சட்டமன்ற தொகுதிகள்.

said...

//அனைத்து தொகுதிகளையும் அதிமுகவிற்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும் பத்திரிக்கைகளின் கருத்து கணிப்பு தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு வேளை இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்துவது தான் இந்தக் கருத்து கணிப்புகளின் நோக்கமாக இருக்குமோ ?
//

திடீரென பத்திரிக்கைகள் (தற்போதைக்கு தினமலரும்,குமுதமும் மட்டுமே) கருத்து கணிப்பு என குறைந்த பட்சம் நாம்(வலைப்பதிவர்கள்) குறிப்பிடும் அளவிற்கு கூட காரணிகளை குறிப்பிடாமல் , சான்றுகளைத் தராமல் ஒப்பீனியன் போல் என்ற பெயரில் அதிமுகவிற்கு வாரி வழங்குவதற்கு சன் குழுமம் அச்சு ஊடகத்தில் இறங்கியதுவே என கருதுகின்றேன், திமுக ஆட்சிக்கு வந்தால் இது வரை ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் ஆதிக்கம் குறையும் என்பதும், திமுக ஆட்சி அதிகாரத்தோடு இருக்கும் போது அச்சு ஊடகம் முழுதும் அவர்கள் கட்டுப்பாட்டில் சென்று விடும் என்ற பயமும், இலவசங்கள் அளித்து குங்குமத்தின் வியாபரத்தை ஏற்றினாலும் பிறகு இலவசங்களை நிறுத்திய பிறகும் குங்குமத்தின் வியாபாரம் முந்தைய நிலையைவிட உயர்ந்திருப்பதும் குமுதம்,விகடனுக்கு பிறகு குங்குமம் என்று இருப்பது அவர்களின் வியாபார உத்திக்கு உதாரணம்.

தினமலருக்கு இது தவிர ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் குமுதத்திற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கும் என கருதுகின்றேன்.

ஊடகவன்முறை செய்யும் பத்திரிக்கைகள் நடந்துகொள்ளும் முறைக்கும் மூன்றாம் தர ரவுடிகளுக்கும் வித்தியாசம் இல்லை, ரவுடிகள் அடியாள் பலத்தை வைத்து தாம் நினைத்ததை சாதிக்க முயலுவது போல, அரசியல்வாதிகள் தம் அதிகாரத்தை வைத்து பிறரின் இருப்பை கேள்விக்குள்ளாக்குவது போல, இந்த பத்திரிக்கைகள் தம் பத்திரிக்கை செல்வாக்கை வைத்து அவர்களுக்கு வேண்டாதவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகின்றன.

குமுதம் ஆயிரம் தான் நாடாளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பு இனித்தது, இப்போது இனிக்கவில்லையோ என்று கூறினாலும் நாடாளுமன்ற கருத்து கணிப்பின் போது ஒப்பீனியன் போலுடன் மற்றைய காரணிகளை குறிப்பிட்டனர், இப்போது அப்படி எதுவுமே செய்ததாக தெரியவில்லை, படிக்கும்போதே அதிமுக வரவேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதாக தெரிகின்றது என்னமோ போங்க....

said...

//என்னமோ போங்க....//

Your frustration is understandable!
"நனாக் காலம்"!!

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்!
அவை தொடர்ந்திடத் தொடர்ந்திட என்னென்ன நம்பிக்கைகள்!
அது ஒரு அழகிய "நனாக்காலம்"!
கழகங்கள் விரைவினில் வெளியேறும்!
'உதிரிகள்' சேர்ந்திங்கு சரித்திர்ம் படைத்திடும்!
அது ஒரு பொற்காலம்!

பொய்களைத் திருப்பித் திருப்பி சொல்வதானாலேயே,
உண்மைகளை மறைத்திடலாம் என்ற
கோயபல்ஸின் தத்துவத்திற்கேற்ப,
இரு கழகங்களை விட்டால் வேறு கதியில்லை என

"ஓலமிடும் மானிடரே!
உண்மைகள் தெரிந்து விடும்-உம்
மயக்கமும் கலைந்து விடும்!

எனவே,
"துணிந்த பின் மனமே!
துயரம் கொள்ளாதே!
சோகம் பொல்லாதே!
அலையும் காற்றில்
அகல் விளக்கேற்றி--கழகங்களை
காத்திட முடியாது!

வீழ்வது நிஜமே
நீ ஏன் வீணாய்
சஞ்சலப் பேய் வசமானாய்!- எனவே

துணிந்த பின் மனமே!
துயரம் கொள்ளாதே!
சோகம் பொல்லாதே!

said...

Kuzhali,
read this also
??????????? ?????? ?????

said...

Kuzhali,

For the last 10 year PMK never contested any election all alone.so,how come you are pretty sure that they (PMK) still hold their vote base which they had in 1996?I mean On what basis.