தீபாவளி தீபாவளியாம்.... சிங்கப்பூரில் தீபாவளியாம்

Image hosted by Photobucket.com

வணக்கம்ம்ம்ம்ம்ம்ம், நம்ம நிர்மலா பெரியசாமி வணணணணக்கம் சொல்வது மாதிரி ஒலி96.8ல் ஒருவர் இப்படித்தான் வணக்கம்ம்ம்ம் அப்படினு சொல்லுவாங்க, அது ஒலி96.8 னா சிங்கையில் உள்ள 24 மணி நேர வானொலிச்சேவை... சிங்கப்பூரில் தீபாவளி தேசிய விடுமுறை நாள், எங்கள் அலுவலகத்தில் இந்துக்களுக்கு மட்டும் தீபாவளிக்கு முந்தைய நாளில் அரை நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், வழக்கம் போல குட்டி இந்தியா பகுதி இந்த ஆண்டும் வண்ண அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, 2002,2004ம் ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு அலங்காரம் மிக அருமையாக உள்ளது.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

என்னதான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் பிடிக்கவில்லையென்றாலும் தீபாவளி என்றால் அது ஒரு தனி மகிழ்ச்சி தான், பள்ளி பருவத்தில் தீபாவளிக்கு இன்னும் 20 நாள் இருக்கு இன்னும் 10 நாள் இருக்கு என்று நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதிலும் சரி நம்ம வீட்டு சந்தில் வெடித்த வெடி குப்பைகளை சந்து முனையில் கொண்டு வந்து கொட்டி நம்ம வீட்டில் நிறைய வெடி வெடித்த தாக பீலா விட்டுக்கொண்டு திரிந்ததும் சரி மறக்கவே முடியாதது, பதின்ம வயதில்...அட வேண்டாங்க, அதை வேறு ஜொல்லிக் கொண்டு... தீபாவளியின் போது பெரிய வில்லனே மழை தான் ஆனால் ஒரு தடவை வில்லனாக வாய்த்தது தமிழக அரசு, ஆமாங்க 30 நாட்கள் என் தந்தையை தூக்கி உள்ளே வைத்து விட்டார்கள், ஆசிரியர் போராட்டத்தில் கலந்து கொண்டு முதல் நாளே சிறை சென்று விட்டார், அந்த தீபாவளி இன்னமும் மறக்க முடியாதது, ஒரு பக்கம் அந்த ஒரு மாதமும் காலையில் 5.00 மணிக்கு எழுந்து படிக்க வேண்டுமென்ற பிரச்சினை இல்லையென்றாலும் மறுபக்கம் அப்பா வீட்டில் இல்லாமல் மிகவும் கடினமாக இருந்தது, ஆனாலும் வழக்கம் போல புதுத்துணி உடுத்தி பட்டாசு வெடித்து நான் சந்தோசமாகத் தான் கொண்டாடினேன் புரியாத வயசு பாருங்க, உலக சந்தோசமே அந்த பட்டாசு வெடிக்கிறதுல மட்டும் தானே இருந்தது.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com
இந்த குட்டி பசங்களை பாருங்களேன் எவ்வளவு ஆர்வமாக பட்டாசு கடையை வேடிக்கை பார்க்கிறாங்க

Image hosted by Photobucket.com
தீபாவளி சிறப்பு கடைகள்

சரி இந்த முறை தீபாவளியும் ஹரிரயாவும்(ரம்ஜான்) ஒரே வாரத்தில் வருகின்றது, அதனால் குட்டி இந்தியா பகுதியில் வேலை நாட்களிலும் கூட கூட்டம் களை கட்டி இருக்கின்றது. தீபாவளி சிறப்பு கடைகள் எல்லாம் தூள் பறக்கின்றன, 'தீபாரயா' என்ற சொல் இங்கே தற்போது மிகப் பிரபலம், அட சென்ற ஆண்டு எங்கள் அலுவலக தீபாவளி கொண்டாத்தில் எல்லோரும் பாரம்பரிய உடையில் வரவேண்டுமென்றனர், நான் ஒரு வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து கொண்டு போய் நின்றேன், சி(ப)லர் என்ன ஸ்கர்ட் அணிந்து கொண்டு வந்துள்ளாய் என்று ஒரே கரைச்சல் தான் போங்க, அதன் பிறகு ஏய்... எப்படி உனக்கு இந்த ஸ்கர்ட் இடுப்பில் நிற்கின்றது, பெல்ட் போட்டு கட்டியிருக்கிறாயா என்றெல்லாம் கலாய்த்தனர், கட்ட கடைசியாக மேடையிலும் ஏற்றி விட்டு விட்டனர், ஐஸ்வர்யாராய் உலக அழகி போட்டியில் இறுதி சுற்றில் மேடையில் நின்றது போல நான் உணர்ந்தேன், ஒரே உதறல், என் முறை வந்த போது நம் பராம்பரிய உடை இது என்று கூறினேன், குர்தா அணிந்து வந்திருந்த ஒரு வட நாட்டு நண்பர் எனக்கு முன் குர்தாவை பாரம்பரிய உடை என்று வேறு கூறிவிட்டார், உடனே கூட்டத்திலிருந்து ஏய் என்ன டகால்ட்டி வித்தையா நீயும் பாரம்பரிய உடை அப்படிங்கற, அவரும் பாரம்பரிய உடைங்கறார் என்ன இது சின்ன புள்ளத்தனமா என சத்தம், அதன் பிறகு வேட்டியின் பிரதாபங்களை விளக்கிவிட்டு கட்ட கடைசியாக இது எங்கள் அரசியல்வாதிகளின் சீருடை(யூனிபார்ம்)யும் கூட என்றேன், அன்னைக்கே வச்சாங்கய்யா நமக்கு ஆப்பு, என்னனா என் பேரிலேயே இன்னும் ஒருவரும் எங்கள் அலுவலகத்தில் இருக்கின்றார், அதனால் வேறு படுத்தி காட்ட 'பொலிட்டீஷியன்' என்ற அடை மொழி என் முன் ஒட்டிக்கொண்டுவிட்டது. இதில் என்ன பெரிய ஆச்சரியம் என்றால் கங்குலி ஆஸ்திரேலியாவோட சதம் அடித்த மாதிரி எனக்கு முதல் பரிசு தந்து விட்டார்கள் அந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளவில்லை அதுக்குள்ள அடுத்த தீபாவளி வந்துவிட்டது.

அனைவருக்கும் என் தீபாவளி நல் வாழ்த்துக்கள், தலை தீபாவளி கொண்டாடப் போகும் கோபி, மூர்த்தி, கங்கா மற்றும் தலை தீபாவளி கொண்டாடப்போகும் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்....

சரி கடைசியா ஒரு கேள்வி... என்ன கடைசியா இது தானடா முதல் கேள்வியே என்று யாரப்பா என் தலையில் கொட்டுவது?

இராமரும், சீதையும் தலை தீபாவளியை எங்கு கொண்டாடினர்? மிதிலையா? அயோத்தியா?

சரி சரி பழசு தான் பழசு தான் என்ன செய்யறது புதுசா சரக்கு எதுவும் இல்லையே!!!

சிங்கப்பூர் குட்டி இந்தியா பகுதியிலிருந்து உங்களிடமிருந்து விடை பெறுவது குழலி குழலி குழலி.... நன்றிஇஇஇ

நூறு! நூறு!! நூறு!!!

Image hosted by Photobucket.com

அது என்னமோ தெரியலைங்க நூறுக்கும் நமக்கும் ராசியே இல்லை, 90 அடிச்ச டெண்டுலகர் அடுத்த 10 அடிக்கறதுக்குள்ள கட்டையை போட்டு படுத்துவாரே அது மாதிரி வேகமாக வந்த பதிவுகள் கடந்த சில வாரங்களாக கட்டை போட்டுக் கொண்டிருக்கின்றது, 90க்கு அப்புறம் அப்படி இப்படி தட்டி போங்கு ஓட்டங்கள் எடுப்பது மாதிரி நானும் அமைச்சர் அன்புமணி படம், குரங்கு படம், .ஜினி படம் அப்படினு போங்கு பதிவுகளா போட்டாலும் நூறு வருவதற்குள் ஸ்ஸ்ஸ்ஸ் மூச்சு வாங்குது.

நூறுனாலே ஒரு கவர்ச்சி தானுங்க, கவர்ச்சின்ன உடனே கற்பனை குதிரையை வாய்வேகம், மனோவேகத்துல(பாடகர் மனோ இல்லீங்க) தட்டிவிட்டுடாதிங்க. ஆனா பாருங்க நான் முன்பே சொன்னது மாதிரி நூறுக்கும் நமக்கும் ராசியே இல்லிங்க, இது வரை ஒரு தடவை கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்ததேயில்ல அட முதல் ரேங்க் கூட எடுத்துருக்கேன் (நெசமாதாங்க!!!) ஆனால் 12+4=16 வருசத்துல ஒரு முறை கூட நூற்றுக்கு நூறு எடுத்ததேயில்லை, நூறுனா உடனே எனக்கு மூன்று நூறு ஞாபகத்துக்கு வரும், என்னோட சித்தி வீட்டுக்கு போயிருந்தப்ப பக்கத்து வீட்டுல ஒரு பாட்டி நூறு நூறுனு நூறு தடவை நூறை கூப்பிட்டு இம்சை செஞ்சாங்க, அப்புறமா தான் தெரிந்தது நூறு நூறுனு கூப்பிட்டது நூறு இல்லை நூரு ன்னு, நூரு அந்த வீட்டு குட்டி பாப்பா...

11வது படிக்கும்போது நானும் நம்ம நண்பரும் கணக்கு பாடத்துக்கு டியூஷன் போயி சேரலாம்னு பிரபலமா இருந்த ஒரு ஆசிரியர் கிட்ட சேர போனோம், அப்போ கேட்டாரு தம்பி நீ எத்தனை மதிப்பெண் கணக்குலனு உடனே நம்ம நண்பர் நூறு அப்படின்னாரு, அந்த ஆசிரியர் ரொம்ப சந்ததோசமா கணக்குல சென்டமா கிரேட் கிரேட்னு புகழ்ந்தாரு, என்னை கேட்டாரு எத்தனைனு நான் நாம எடுத்த மதிப்பெண்ணை சொன்னோம், அப்புறமா நம்ம நண்பர் மச்சான் நான் அவர் +1 காலாண்டுல எடுத்த மார்க்க கேட்கிறார்னு(+1,+2 லாம் 200க்கு தான் மதிப்பெண்கள்) சொன்னேன்டா அவர் 10வது பரீட்சை மார்க்குனு நினைச்சி என்னை ரொம்ப புகழ்ந்துட்டாரு வெட்கமா இருக்கு அப்படின்னான்.

பெங்களூர் கொரமங்களாவில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்த போது எங்க அலுவலகத்தின் செக்யூரிட்டியை அழைக்க இன்டர்காமில் 100 அழுத்த வேண்டும், அன்னைக்கு பாருங்க ஏதோ நினைப்பில் 100 அழுத்திவிட்டேன், பேசியது ஹலோ கோரமங்களா போலீஸ் ஸ்டேஷன் அப்படின்னாங்க, சாரி சார் தவறுதலா அழைத்துவிட்டேன் என்று பேசி வைத்துவிட்டேன் பிறகுதான் எத்தேச்சையாக '0' அழுத்தி பிறகு 100 அழுத்தியது புரிந்தது, 0 அழுத்தி பிறகு எண் அழுத்தினால் உள்ளூர் தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளலாம்.

இந்த கிரிக்கெட் விளையாட்டுல பைத்தியமா பள்ளியில் படிக்கும் போது அலைந்து கொண்டிருப்பேன், நமக்கு உடம்பில் வலுவே இருக்காது, ஆனா மட்டையடிக்க முதல்லயே அனுப்புவாங்க அதாங்க ஓப்பனிங் பேட்ஸ்மேன், கட்டை போடுறதுல மன்னனாச்சே, சோயிப் அக்தர் மாதிரி மாங்கு மாங்குனு ஓடி வந்து போடுவான் நம்ம சின்னி, அத ஒரு கட்டை வைத்தா பந்து எந்திரிக்கவே எந்திரிக்காது, ஒரு கட்டத்துல நம்ம ஆளுங்களே டென்சனாயி டேய் ஒன்னு அடி இல்ல அவுட் ஆகு அப்படின்னுவாங்க, நாமளும் எப்படித்தான் நூறு அடிக்கறது அதனால் பொடிப்பசங்களை கூப்பிட்டு வச்சி கிரிக்கெட் விளையாடுறது, எப்படியும் நூறு அடிச்சிடறதுனு ஆடினேன் 95 வந்துட்டேன், கேட்ச் எடுக்கவே தெரியாத பக்கத்து வீட்டு பையன் கீப்பிங் கேட்ச் எடுத்துட்டாங்க, அன்னையோட இந்த நூறு ரன் அடிக்கிற கனவை மறந்துட்டேன்.

சரி சென்டமும் செஞ்சுரியும் தான் நம்ம பள்ளி வாழ்க்கையில கனவாவே ஆயிடுச்சி, கல்லூரியிலாவது செய்முறை தேர்விலாவது நூறு எடுக்கன்னும்னு பார்த்தா எழுத்து தேர்வுலயாவது சொல்லிக்கிற மாதிரி மதிப்பெண் வந்தது, செய்முறை தேர்வில் அரை செஞ்சுரி தான் எப்பவும் நல்ல புள்ளயா செஞ்ச பிராஜெக்ட் ஒர்க்குக்கே 67% தான் டேய் உன்னையெல்லாம் பொழச்சி போனு பாஸ் போட்டது பெரிய விடயம்னு மனசாட்சி சொன்னது.

சரி கல்லூரியிலும் நூறு எட்டாத கனியாகவே ஆயிடுச்சா, இந்த நூறை எப்படியாவது புடிச்சிடனும்னு பார்த்தேன், அப்போதான் அப்பா ஆசையா ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளென்டர் வாங்கி தந்தாரு, அத எடுத்துக்கொண்டு பாண்டிச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைய தாண்டினா ஒரு நேரான நெடுஞ்சாலை வரும் அதுல அது கழுத்தை திருகினேன்... 70கி.மீ. வேகம் வந்தப்ப ஸ்பெளென்டர் கொஞ்சமா அதிர ஆரம்பிச்சது அப்படியே 80, 90னு போனேன்.. 95 க்கு திருகினேன் எதிர மினிலாரி ஒன்னு வந்து அப்படியே லேசா ஆட்டம் காமிச்சாபுள நம்ம முன்னாடி பப்பரக்கானு ஒரு குட்டிகரணம் அடிச்சி அப்படியே நெடுஞ்சாலையில் தேய்த்துக்கொண்டே போனது பிறகு பார்த்தா வண்டி பள்ளத்துல கிடக்குது, கை, தோள்பட்டை, லேசா முகத்துல, கால் என எல்லாம் இடத்திலும் அடி, இன்னைக்கு வரை தெரியாது மினி லாரி நம்ம வண்டி கண்ணாடியை தட்டினாரா என்னனு, அப்புறமா பாண்டி ஜிப்மர் மருத்துவமனைக்கு போனா அந்த செவிலியம்மா அடிச்ச நக்கலும் கிண்டலும், தெரியும் உன்னை மாதிரி பசங்கலாம் இங்க கண்டிப்பா வருவிங்க, என்னமோ வண்டியில உக்காந்தா ப்ளைட் ஓட்டுறதா நினைப்பு உங்களுக்குனு டோஸ் விட்டாங்க, அதுல இருந்து என் வண்டி 60வதையே தொட்டது இல்லை, என்னடா நீ இவ்ளே மெதுவா வண்டி ஓட்டுறனு கொட்டு வேற விழுந்திருக்கு, இப்படியே நூறு கி.மீ. வேகம் போலாம்னா அந்த நூறும் ஊத்திக்கிச்சி.

அப்புறமா நூறுக்கு வேலையே இல்லாம போயிடுச்சி, நண்பர் செந்தில் மூலமா தமிழ்மணம் வந்து வந்து கொஞ்ச நாள் மேய்ந்து கொண்டிருந்துவலைப்பதிவு வந்து பதிவு போட ஆரம்பிச்சா ம்... நம்மள ஒரு ஆள் திரும்பி பார்க்கனுமே... எப்பவும் படிக்கிற என் இருபது நண்பர்கள் கிட்ட சுட்டி கொடுத்து படிக்க சொல்லி அப்படியே போய்கொண்டிருந்தது நானும் கதை,கவிதை (அப்படிதான் நாஞ் சொல்லிக்கிறேன்) எழுதறதுனு போய்கொண்டிருந்தேன், நம்ம வலைப்பதிவு நண்பர்கள் மருத்துவர் இராமதாசுவை போட்டு பொறட்டி பொறட்டி எடுத்துக்கொண்டிருந்தாங்களா, சரி நமக்கு தெரிஞ்ச விடயத்தை சொல்லலாமே மத்த இடத்த பார்க்க சொல்ல இங்கே எல்லாம் ரீஜன்டா இருக்காங்க அப்படினு மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் அப்படினு ஆரம்பிச்சேன், கொஞ்சம் பேரு வந்து எட்டி பார்த்தாங்க இது யாருடா இங்க கூவுறதுனு, அப்புறமா அப்படியே போயி 99 பதிவு போட்டாச்சி, ஒரு தடவை கொஞ்சம் நிதானமிழந்துட்டேன் தினமலர் வாசகர் கடிதத்துல ஒரு அறிவுசீவி எழுதிய கடிதத்தை பார்த்து ஒரு பதிவு போட்டேன், அப்புறமா நம்ம நண்பர்கள் புத்தி சொன்னாங்க உடனே அந்த பதிவை அழித்துவிட்டு கொஞ்சம் நிதானமாக எழுதினேன். பிறகு தங்கர் விடயத்தில் சண்டை அப்புறம் அடுத்த விடயத்தில் இன்னும் கொஞ்சம் நிதானம், இன்னும் சிறிது நாளில் சின்ன புள்ள மாதிரி சண்டை புடிக்கிறதை நிறுத்தி முழு நிதானம் அடைவேன் என நம்புகின்றேன்.

அப்புறம் நம்ம தமிழ்மணத்தால நிறைய நிறைய நண்பர்கள் கிடைத்தாங்க, இப்போ அதுக்கு முன்னாடி நான் எழுதியதை என் நண்பர் வட்டத்துக்கு அனுப்புவேன் ஒரு 20 பேர் அதை படிப்பாங்க (அப்படினு நம்புகின்றேன்) அந்த வட்டம் இங்கே வந்த பிறகு பெருசானது, எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சி, சிங்கையில் பல நண்பர்கள் கிடைச்சாங்க, அமெரிக்கா,துபாய்,ஜெர்மனி,மலேசியா, இந்தியா, வளைகுடா நாடுகள், ஆஸ்த்திரேலியா,பிரான்சு மற்றும் பல நாடுகளிலிருந்து எல்லா வயதிலும் வலைப்பதிவு நண்பர்கள் கிடைச்சாங்க, இதுக்கெல்லாம் காரணம் என் எழுத்து திறமை அப்படினு நான் நினைத்தால் அது என்னுடைய தவறு அதற்கு காரணம் நிச்சயம் தமிழ்மணமும் நான் எழுதறதையும் படிக்கிறாங்களே நண்பர்கள் அவர்களும் தான்.

எனக்கு எப்போதுமே கட்டுபாடுகளற்ற, அளவற்ற சுதந்திரத்தில் நம்பிக்கை இருந்ததில்லை, அதற்கு காரணம் ஒரு வேளை நான் வளர்ந்த, வாழும் விதமாக கூட இருக்கலாம், கட்டுப்பாடுகளும் அதே சமயம் தேவையான சுதந்திரமும் அளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவன் நான், அதன் நல்ல பலனை முழுமையாக தற்போது அனுபவிக்கின்றேன், அட இதை சிலர் அடிமை மனோபாவம்னு கூட சொல்லலாம் எனக்கு இதனால் நட்டமில்லை என்பதைவிட இலாபம் தான் அதிகம், அதனால் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை.

வலைப்பதிவுகள் இன்றைய நிலையில் ஒரு மாற்று ஊடகமாக வளர ஆரம்பித்துள்ளது இன்னும் இது மாற்று ஊடகமாக முழுவதும் வளரவில்லை, தொடக்க நிலையில் தான் உள்ளது. ஆனால் இதன் வளர்ச்சிக்கு நிச்சயம் தமிழ்மணம் உதவியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை, இருந்தாலும் எப்போதுமே எனக்கு கட்டுபாடுகளற்ற, அளவற்ற சுதந்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் வலைப்பதிவுகளின் தனித்துவமே அதன் சுதந்திரம் மட்டுமே...

கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் காசியின் அறிவிப்பை தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன, காசி பந்தாடப்படும் விதம் சத்தியமாக என்னளவில் ஏற்புடையதில்லை, என் பதிவு நீக்கப்பட்டிருந்தால் காசிக்கு ஒரு தனி மடல் என் பதிவு நீக்கப்பட்டிருக்கின்றதே, தவறுதலாக நீக்கிவிட்டீர்களா? சொல்ல முடிந்த காரணம் இருந்தால் சொல்லலாம் என்ற ஒரு தனி மடல் மட்டுமே அனுப்புவேன், அதைத் தாண்டி எதையும் கேட்க எனக்கு தார்மீக உரிமையும் இல்லை, சட்டப்பூர்வ உரிமையும் இல்லை, சத்தியமாக நக்கல் அடிக்கவோ, கிண்டல் அடிக்கவோ என் மனசாட்சி இடம் தராது காசி என்ற தனிமனிதனின் உழைப்பையும் தமிழ்மண நிர்வாகிகளின் உழைப்பையும் பயன் படுத்தி இத்தனை இணைய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு பின் கிண்டலடிப்பதும் நக்கலடிப்பதும், காசியை குற்றவாளி கூண்டில் ஏற்றுவதும் காசி மீது ஏவப்படும் ஒரு வன்முறையாகத் தான் இதை பார்க்கின்றேன், காசியின் முடிவில் முரண்பட்டால் கருத்தும்,ஆலோசனையும் சொல்வது நிச்சயம் தவறில்லை, அது தேவையான ஒன்றும் கூட, ஆனால் கேலியும் கிண்டலும் மனோகரா வசனம் பேசுவதும்... ஆண்டவா காசி நிலையில் நான் இருந்திருந்தால் ?? எனக்கு எக்காலத்திலும் வேண்டாம்பா இந்த நிலமை.

எந்த வித தார்மீக உரிமையும், சட்ட உரிமையும் இல்லாத போதும், சமூகத்தில் படித்த, ஓரளவு நல்ல பொருளாதார நிலையில் இருக்கும் இங்கேயே இப்படியான தாக்குதல் என்றால் நிச்சயமாக தங்கர் நடிகர் சங்கத்திலிருந்து உயிரோடு வெளிவந்ததும், குஷ்பு இன்னமும் தமிழகத்தில் இருப்பதும் மிக ஆச்சரியமான விடயம் தான்.

.ஜினி படம் பாக்கலையோ

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

இயக்குனர் இராமநாராயணன்:
.த்தி அண்ணே, அடுத்த படம் ஒரு குதிரைய வச்சி எடுக்க போறேன் .ஜினி சார் கால்ஷீட் கிடைக்குமா?

ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் "டேக் இட் ஈசி பாலிசி"

இன்னும் ஒன்னு சொல்லிகிறேன் "ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு"

இன்னும் ஒன்னே ஒன்னு சொல்லிகிறேன் அடுத்த பதிவு குழலி பக்கங்களின் நூறாவது பதிவு

சிதம்பரத்தில் ஒரு குரங்கு சாமி

சென்ற முறை ஊருக்கு போயிருந்த போது சிதம்பரம் நடராசர் கோவிலில் அமர்ந்திருந்த போது என் கைத்தொலைபேசியில் எடுத்த படம்.

Image hosted by Photobucket.com
வெறும் காத்து தாங்க வருது!



Image hosted by Photobucket.com
இது ஆகறதில்லை, வேறெடம் பார்க்க வேண்டியது தான்


Image hosted by Photobucket.com
கல்லு போட்டா காக்காவிற்கு மட்டும் தான் தண்ணி வரும் போல, தமிழ்நாட்டுக்கும், குரங்குக்கும் தண்ணி வரவே வராது போல

கோயிலும் கும்பாபிஷேகமும்

இ.இசாக் அவர்களின் பதிவில் வெளியான கட்டுரை, அவர் பதிவில் பின்னூட்ட முடியாததாலும் இந்த கட்டுரையை சேமிக்க வேண்டுமென்பதாலும் என் பதிவில் இடுகின்றேன்.

நன்றி இ.இசாக்
--------------------------------------------------------------------------------------------
'இந்தியாடுடே'யில்
தமிழச்சி மார்புகள்
கண்ணீரால் போர்த்தினேன்.
- அறிவுமதி, கடைசி மழைத்துளி நூலில்.

நவநாகரீக போதையில் இயல்பு வாழ்விலிருந்து விலகி தள்ளாடிக் கொண்டிருக்கும் 'மேட்டுகுடி' பெண்களில் சிலரைத் தேர்வு செய்து, அவர்களை தனிமையில் அழைத்து சென்று 'கருத்துகணிப்பு' என்ற பெயரில் இதழியல் அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி, இவர்கள் எதிர்பார்க்கிற நோக்கமுடைய நடவடிக்கைகளை உடைய பெண்களின் கருத்துகளையும் சேர்த்து அதை, அனைத்து தமிழ்ப் பெண்களுக்கான பொது கருத்தாக்கி முகப்புக்கதை விட்டிருக்கிறது. பேரா.அ.மார்க்ஸ் அவர்களால் மலம் துடைக்கப்பட்ட 'இந்தியாடுடே' என்னும் இதழ்.

இன்றைய சமூகத்தில் பெரும்பகுதி மக்களுக்கு நேரத்திற்கு வயிற்றுப்பசியைத் தீர்த்துக் கொள்ளவே வசதி வாய்ப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இக்கொடுமைகளைப்பற்றிய எந்த ய்வையோ, தீர்வையோ முன்வைக்க முடியாத இந்த வழு வழு மஞ்சள் பத்திரிக்கையை பார்க்கிற போது தந்தை பெரியார், ''இந்நாட்டில் பத்திரிக்கை உலகம் ஒரு கேடுகெட்ட உலகமாக இருக்கிறது, அவனவன் சாதிக்காக, பணம் சம்பாதிப்பதற்காக பத்திரிக்கை நடத்தும் நிலையாக இருக்கிறது.'' என்று 'விடுதலை' தொடங்கும் போது சொன்னதும், ''மற்ற நாட்டிலே பத்திரிக்கைகள் என்றால் மக்களை உயர்த்துவதற்குரிய ஒரு சாதனமாக இருக்கிறது; னால் நம் நாட்டிலோ- மக்களை முன்னுக்கு வரவிடாமல் தடுக்கும் சாதனமாகப் பார்ப்பனர்கள் பத்திரிக்கைகளைப் பயன்படுத்துகிறார்கள்,'' என்று பெரும்பான்மை பத்திரிக்கைகள் பற்றி சொன்னதும் நம் நினைவுக்கு வருகின்றன. தினசரி வாழ்வில் பெண் சமூகம் எதிர்கொள்ளும் அடக்குமுறை, ஒடுக்குமுறை, அரசதிகார வர்க்கம் நிகழ்த்தும் வன்முறை இவை அவற்றைப்பற்றியும் தீர்க்கமான கருத்துகளைச் சொல்லும் துணிவோ, நேர்மையோ இந்தியாடுடேவுக்கு இல்லாமல் போனதில் வியப்பேதும் இல்லை. காரணம் நோக்கம் விழிப்புணர்வல்ல; வியாபாரம். பார்க்க - இந்தியாடுடே ஆசிரியரிடமிருந்து பகுதியில் (அக்டோபர் 6-12,2005) 'அந்த இதழ் முழுமையாக விற்றுத் தீர்ந்தது' எனும் வரி.

வயிற்றுப் பசியில் வாடிக்கொண்டிருக்கும் சமூகத்தில் 'உடல்பசி' பற்றியான ய்வும், அதுவும் இளம்பெண்களின் செக்ஸ் சிந்தனை பற்றிய கண்டுபிடிப்பும் எந்த அளவிற்கு இன்றைய தேவையாக இருக்கிறதென்பது என்னைப் போன்ற சிற்றறிவாளனக்கு பிடிபடாத பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு சமூக புரட்சிக்காக களம் இறங்கியுள்ள சிந்தனையாளர்களே விளக்கமளிக்க வேண்டும். செக்ஸ¤ம், இளம்பெண்களும் என்பது பற்றி இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் நடத்தப்பட்ட 'இந்தியாடுடே'யின் 'நியாயமான' ஆய்வு முறையைப் பற்றிய கருத்துகளைப் பேசுகிற களமோ, நேரமோ இதுவல்ல என்பதால் நேரடியாக பிரச்சனையையும், பிரச்சினையாளர்களைப் பற்றியும் பார்ப்போம்.

பிரபலமான ஊடகம் நடத்திய நாடகத்தில் பெண்ணிய விடுதலைக்கான வாழ்நாள் சேவையாற்றிவரும் குஷ்பு எப்படி வந்தார், அவரின் புரட்சி பொங்கும் கருத்துக்கு செக்ஸ் அறிவற்ற தமிழ்ப்பெண்கள் ஏன் எதிராக இருக்கிறார்கள்?

பல திரைப்படங்களில் இயக்குநர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தயாரிப்பாளர்களின் காசுக்காக தாராளமாக கலைப்பணியாற்றிய குஷ்பு செய்த சேவையை மெச்சி தமிழகத்தின் மாத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள் 1993 ண்டில் கோயில் கட்டினார்கள். தமிழக ரசிக மனசுக்குள் நீங்காத இடத்தைப் பிடித்துவிட குஷ்பு செய்த 'கொள்கைப்பூர்வமான' செயல்கள் நாடே அறியும். தொடர்ந்து படவாய்ப்புகளைப் பெறவும், வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும் திரையுலகில் குஷ்பு கொடுத்த 'உணர்ச்சிகுரல்கள்' ஊரறிந்த ரகசியம். இப்படி இப்படியாக தன்னை தமிழகத்தின் தவிர்க்கமுடியாத 'சக்தி'யாக கட்டமைத்துக் கொண்டதாக கருதிக் கொண்டு மிதப்பில் மிதந்து வந்தார்.

நான்கு நிருபர்கள் தன்னை தேடிவந்து கருத்து கேட்டுவிட்டாலும், மூன்று இதழ்களின் அட்டையில் வண்ணப்படத்துடன் செய்தி வெளியாகிவிட்டாலும், இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முகம் காட்டி விட்டாலும், தாந்தான் இன்றைய தமிழகத்தின் முதல்நிலை நபர் என கருதிக்கொண்டு திரையுலக பிரபலங்கள் செய்கிற 'லூட்டி' அறிவாளி உலகத்தால் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்து வந்த நிலையில், அதே அடிப்படையில் ஊடகங்கள் அடிக்கடி பிரபலப்படுத்தி விட்ட குஷ்புவும் சமீபகாலமாக செயல்பட்டு வந்தார்.

கலைச்சேவை என்கிற பெயரில் துபாய், லண்டன், சிங்கப்பூர் என அழைத்துச் சென்று 'காட்சி சேவை'' செய்த நடிகர் சங்க நிர்வாகிகளை நோக்கி சுண்டு விரல் நீட்டவும் தெம்பற்ற குஷ்பு, தனது திரைப்பட தயாரிப்புப்பணியில் இடையூறாக செயல்பட்ட நடிகையைப் பற்றி தங்கர்பச்சான் சொன்னதாக வெளியான கருத்தைக் கண்டு, 'தெளிவு'ற்று கொதித்தெழுந்தார். இந்த மாபெரும் குற்றத்திற்கு' நேரில் வந்து மன்னிப்பு கேட்கும்வரை படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பளிப்பதில்லை என தினசரி கூலி பெறும் திரை ஊழியர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் கவலையில்லாமல் புரட்சிகரமான முடிவை நடிகர் சங்கம் எடுக்கக் காரணமாக இருந்தவர், நடிகர் சங்கம் வந்து மன்னிப்பு கேட்ட பின்னும்( மன்னிப்பு கேட்க வந்த சூழலில் இவரும் இவரின் சகாக்களும், இன்னபிற அள்ளக்கைகளும் நடந்து கொண்ட நாகரீக.. செயல்கள் வேறு ) 'நாங்கள் மன்னிக்க மாட்டோம்' என நீதி நியாயம் மிக்க தனது கருத்தை ஊடகங்களில் பதிவு செய்தார்.

பெண் விடுதலைக்கான குஷ்புவின் இந்த போராட்ட வாழ்வே 'இந்தியா டுடே' இதழின் பார்வையில் இளம்பெண்களின் நாகரீக வாழ்வு பற்றிய, எதிர்கால போக்குபற்றிய 'தெளிவான', தொலைநோக்கு பார்வையுடனான' கருத்தைச் சொல்லுகிற தகுதிமிக்கவராக தெரியவைத்திருக்கிறது. துணிவும் சமூகப்பார்வையும் மிக்க சமூக விஞ்ஞானியான குஷ்புவின் கருத்தைத் தாங்கி வருவதே 'இந்தியா டுடே'யின் கொள்கைக்கும், சமூகசேவைக்கும் சிறப்பு சேர்ப்பதாக இருக்கும் எனக்கருதி குஷ்புவின் கருத்தோடு 'செக்ஸ் & இளம் பெண்கள் ஒரு பிரத்யோக சர்வே'(செப்.28,2005) என்னும் முகப்புக்கதையை வெளியிட்டது.

இந்தியா டுடே இதழின் 'முகப்புக்கதை'க்குப் பின் 'தமிழ்முரசு' மாலை நாளிதழின் கருத்தும், அதை தொடர்ந்து 'தினத்தந்தி' செய்தியாளரின் வினாவுக்கு குஷ்பு அளித்த விடையும் தமிழக சமூகநல பார்வையாளர்களிடையே மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இக்கருத்துக்கு முதன்மையாக அரசியல் கட்சிகளான பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் தங்களது எதிர்ப்பினை தமிழ்ச் சமூகத்தின் முன் பதிவு செய்தன. தொடர்ந்து பல பகுதிகளில் இயங்கும் சமூக அமைப்புகள் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தன. 'நமது சொந்த விருப்பத்தைப் பொறுத்தவரை, நாம் ஒருநாள் கூட போரிட விரும்பவில்லை, னால் சூழ்நிலைகள் நம்மை போரிடும் படி கட்டாயப்படுத்தினால், நம்மால் இறுதிவரை போரிட முடியும்' என்று மாவோ சொன்னதைப் போல இந்த எதிர்ப்பு போராட்டம் மக்கள் மயப்பட்டு தொடரத் தொடங்கிவிட்டது.

செக்ஸ் பற்றி சொன்னதாக வெளியான கருத்துக்கு எதிராக தமிழ்ப் பெண்கள் அணித்திரண்டு இருப்பதன் மூலம் 'பிரபல போதை'யில் மிதப்பவர்கள் எதையும் சொல்லிவிடலாம், தமிழக மக்கள் கண்டுக் கொள்ள மாட்டார்கள் என்கிற மாயை உடைந்து விட்டது. இனி 'புகழ் போதையில் நெப்போலிய வீரத்தோடு' உளறுகிற அவலம் அரங்கேறாது திரையுலக மோகம் தமிழரிடையே குறைந்து மாய பிம்பம் உடைந்து வருகிறது என்கிற நம் நம்பிக்கைக்கு உறுதி சேர்க்கும் வகையில், குஷ்புவுக்கு கோயில் கட்டியவர்களே, 'குஷ்பு தமிழ்நாட்டு கலாச்சாரத்தைப் பற்றி தெரியாதிருந்திருக்கிறார்... தமிழ்மக்களின் சார்பாக முதல் கண்டணத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என குஷ்புவுக்கு எதிராக தங்களது கருத்தை பதிவு செய்துவரும் சூழலில், சிந்தனையாளர்கள் என்கிற போர்வையில் சிலர் குஷ்புவின் கருத்தின் முழுபரினாமத்தையும் முன்வைத்து விவாதித்து விடையளிக்கிற துணிவற்று அவரின் இந்தியாடுடே கருத்தை மட்டும் 'செதுக்கி சீர் செய்து' பெண் விடுதலைக்கான கலகக்குரலாகப் புனிதப்படுத்தி கும்பாபிஷேகம் நடத்தி வருகிறார்கள்.

இதையும் 'இந்தியா டுடே' இதழே முகப்புக்கதையாக்கி, 'திருமணத்திற்கு முன்பு செக்ஸ் கொள்ளாத எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று காட்டுங்கள் பார்க்கலாம்?' என்ற குஷ்புவின் 'தினத்தந்தி' கேள்வியை கூர்தீட்டி மீண்டும் தமிழ்ச்சமூகத்தின் மீது வீசியிருக்கிறது. தான் கட்டமைக்க முனைந்த கருத்தியலுக்கு எதிராக நிற்கிறார்கள் என்பதால் 'கலாச்சார காவலர்களாக மருத்துவர் ச.ராமதாசு, தொல்.திருமாவலவன் உள்ளிட்டவர்கள் அடாவடி செய்கிறார்கள் என கண்டித்திருக்கிறது இந்தியா டுடே. ''கருத்தியல் காவலர் குழு''வின் ஆதரவோடு.

தான் ஊடகங்களில் பதிவு செய்த கருத்துகளைப் பற்றிய தெளிவை முழுமையாக குஷ்புவே பெறாத நிலையில், குஷ்புவை நவீன பெண்ணுரிமைக் கருத்தாளராக கட்டியெழுப்ப முனைகிற சில 'அறிவுஜீவி'களை பார்க்கிற போது சிரிக்கக்கூட முடியவில்லை, இவர்களின் புத்தி சராசரி ரசிக மனோபாவத்திற்கும் கீழாக போய்விட்டதென்று.இப்படியான ரசிகமனோபாவம் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தையும் இழிவு செய்வதாகவும், மக்களை வழிகெடுப்பதாகவும் இருப்பதால் அவற்றைக் கண்டிக்கவேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

'கற்பு' என்கிற சொல்லாடலின் மீதும், அதை சார்ந்து தமிழ்ச்சமூகம் முன்வைக்கிற கட்டுபாடுகள், பண்பாட்டுக்கூறுகள் பெண்களுக்கானதாக மட்டுமாக இருப்பதைப் பற்றியும் நமக்கு கடுமையான கண்டனமும், கற்பு என்று ஒன்றிருந்தால் அதை ண், பெண் இருபாலருக்கும் பொது என வைக்கவேண்டும் என்ற கருத்தும் உண்டு.

ஆனால் குஷ்பு சொன்னதாக வெளியான செய்திகளிலும், அதற்கு தரவாக அறிவுஜீவிகள் வெளியிடும் கருத்திலும் ஆணாதிக்கச் சிந்தனையை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் தவறு செய்கிற ண்களை கண்டித்து அவனை ஒழுங்கு செய்வது அல்லது அவனின் போக்குகளை சமூகத்திற்கு அடையாளம் காட்டி தண்டனை பெறச் செய்வது என்ற நிலையிலிருந்து வெளியேறி, ஆண் தவறு செய்தால் அதைப்போல இரு மடங்கு தவறை பெண் செய்வது இப்படியான செயல்தான் பெண்ணடிமை தனத்தை ஒழிப்பதற்கான மிகப்பெரிய யுதம் என்கிற நிலையை முன்னிருத்தவதாகவே உள்ளது. இந்த நிலைப்பாட்டுக்கு பெரியார்- 'ண்கள் இரண்டு ஆசைநாயகிகளை வைத்தால் நீங்களும் நான்கு ஆசை நாயகன்களை வைத்துக்கொள்ளுங்கள்' என்று ஆண்வர்க்கத்தை ஒழுங்கமைப்பதற்கான போராட்ட உத்தியாக சொன்ன கருத்தை பெண்களுக்கான பொது விதியாக நிறுவ முற்படுகிற சிந்தனையாள கணவான்களின் பாசிச எதிர்ப்பு நிலை எந்த 'புள்ளி'யில் போய் நிற்கிறது என்பதை யோசிக்க வேண்டி இருக்கிறது.

சாதாரண தமிழ்ப் பெண்கள் எதிர் கொள்ளக்கூடிய அன்றாட சிக்கல்களைப் பற்றிய தெளிவான பார்வையோ, தீர்வுக்கான கருத்தோ இல்லாத குஷ்புவின் பாலியல் பற்றியான சிந்தனையை ஒரு சமூகவியலாளரின் கருத்தாகக் கருதச் செய்த அற்புத சக்தி எது என்பதை பெண்ணியவாதிகள் விளக்கினாலே வெளிச்சம்.

சிந்தனை சிங்கங்களின் பார்வையில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களின் எழுச்சி என்பதும், சமூக ஒழுக்கத்திற்கான கருத்தென்பதும் பாசிச வடிவமாகத் தெரிகிறது. தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் திட்டம் மற்றும் கோரிக்கை குறித்து விரிவாக அறிந்திருந்தாலும், அவ்வியக்கம் முன்னெடுக்கும் சில போராட்டங்களை மட்டும் குறிவைத்துக் கேலி செய்து தனது சாதித்திமிரை பறை சாற்றிக்கொண்ட பார்ப்பன ஏடுகளைப் போல, குஷ்புவுக்கு எதிரான கருத்துகளை திரித்து வரித்து பெண்ணியக்கித்திற்கு எதிரானவர்களாக முத்திரை குத்துகிற பெண்ணியவாதி!??களின் நோக்கமும், திட்டமும் என்னவென்பது புரியவில்லை.

குஷ்பு கருத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்கிறோம் என்ற பெயரில் ஒழுங்கற்ற சமூகத்தை கட்டமைக்க முற்படுகிறதோடு மட்டுமல்லாமல், போலியான பெண்ணுரிமை செயலான ஆபாச வாழ்வை பெண்களுக்கு போதிக்கிற நவீன சிந்தனையாளர்களின் போக்கு கண்டிக்கத்தக்கதாகவும், வியப்பளிப்பதாகவும் உள்ளது.

'உடைக் கட்டுப்பாட்டுக்கு தரவு தரும் பெரும்பான்மை மனோபாவமே கண்டிக்கத்தக்கது' என கருத்து சொல்கிற ரவிக்குமார் தன்னைச் சார்ந்த பெண்களுக்கு எந்த அளவு கருத்தியல் அறிவை, பாலியல் சுதந்தரத்தை கற்றுத்தந்திருக்கிறார் என்பதை சமூகத்திற்கு அறியத்தரவேண்டும். தனக்கெதிரான கருத்துடையவர்களுக்கு மிகுந்த சகிப்புத்தன்மையோடு 'மொட்டைக்கடுதாசி' எழுதும் உரிமையை தந்தவர் என்பதையும் மறந்துவிட முடியாது.

''கற்பு என்பதையே எதிர்த்தவர்கள், இன்று நேர் எதிர் நிலை எடுக்கிறார்கள்'' என கொதித்தெழும் கனிமொழிக்கு இப்பிரச்சனையில் எதிராளிகளின் முழுமையான கருத்துகளைக் கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பை பெற்றிருக்க முடியாது தான். டைக் கட்டுபாடுகளுக்கு எதிரான கருத்துகளை ஆணித்தரமாக பதிவு செய்யும் போது (ஆனந்த விகடன்) அடக்கமாக சுடிதார் அணிந்து இன்னும் துப்பட்டாவை இழுத்துப்போர்த்தி காட்சியளிக்கிற கணிமொழியின் ஆலோசனைகள் அந்நியருக்குதான் என்பது புரிகிறது. ''புரட்சிக்கவிஞரின் கவிதைகள் எதுவும் என்னை கவர்ந்ததில்லை என்றதோடு யார் ஆரியர்? இல்லாத விசயத்திற்கு ஏன் போராட வேண்டும்?! (நந்தன் - 2002) என முழுபூசணிக்காயை சேற்றில் மறைத்தவர்தானே கவிஞர் கனிமொழி.

குஷ்புவின் - 'இந்தியா டுடே' கருத்துக்கான எதிர்ப்பாக மட்டுமே இப்போராட்டத்தை திசை திருப்ப முயலும் சிந்தனையாள, நுண்ணறிவு பேர்வழிகள் நாளிதழில் குஷ்பு வெளியிட்ட தமிழ்ப் பெண்களின் ஒழுக்கம் குறித்தான வினாவை முழுமையாக புறக்கணிப்பது என்ன வகை சனநாயகம், இப்படி ஒரு கருத்தை இருட்டடிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல் 'தமிழ் பெண்களைக் குறித்து குறிப்பிட்டு எந்த கருத்தையும் சொல்லாத குஷ்பு' என குஷ்புவைப் புனிதப்படுத்துகிற அயோக்கியத்தனத்தை கருத்துலகில் அரங்கேற்றுவது சிந்தனையாளர்களின் நியாமற்ற நிலைப்பாட்டினையே நமக்கு புலப்படுத்துகிறது.

'இந்த போராட்டம் தேவையற்றது. மேலும் குஷ்புவை மும்பைக்கு ஓடச் சொல்வது சனநாயக விரோதக் கொள்கை' என புதுக்கருத்தியல் பாதுகாவலராகியிருக்கும் சனநாயக மாதர் சங்கத் தலைவி உ.வாசுகி, திரைப்படங்களில் மெட்டுக்களுக்கு வார்த்தைகளில் வக்கிரம் கலந்து எழுதிய கவிஞர்கள் மீது பாய்ந்து குதறியது ஏன்? ஆபாச சுவரொட்டிகளுக்கு எதிராக ஆர்பரித்தவர் நடிகை முன்மொழியும் ஆபாச வாழ்வை மட்டும் வழி மொழியலாமா?.இவருடைய சனநாயக பார்வை எந்த எல்லைக்குள் சுருங்குகிறதென்பதை ஆராயவேண்டியிருக்கிறது.

அன்பு, பாசம், நம்பிக்கை இவற்றின் அடிப்படையில் நியாயம் ஒழுக்கம் இவற்றால் கட்டமைக்கபடுவதே குடும்பம், அப்படியான கட்டமைப்பை இருபாலருக்கும் போதித்து வாழ்விப்பதால் மட்டுமே சமூகம் சீர்பெறும் என்பதை அறிவாளிகள் அறியாமலே போய்விட்டது ஏன்?

சமீபகாலமாக சனநாயக போராளியாக உயிர்பெற்றிருக்கும், கவிஞர் மனுஷ்ய புத்திரன் ''மக்களின் கடுமையான பிரச்சனைகள் எதற்கும் முகம் கொடுக்கத் திராணியற்ற நிலையில் ஊடகங்களுக்குத் தீனி போட்டு தம்மை நிலை நிறுத்திக்கொள்ள பாலியியல் சார்ந்த பிரச்சனைகளை இந்தக் கட்சிகள் முன்னெடுக்கின்றன'' என திருவாய் திறந்திருக்கிறார். சமூகப் பிரச்சனைகள் எதையும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் விவாதிக்கிற தெம்பற்ற சூட்சமம் கற்ற கவிஞரான இவர், பாலியல் குறித்த பிரச்சனையை தமிழ்ச்சூழலில் தொடங்கி வைத்த 'இந்தியா டுடே' , குஷ்பு பற்றி எந்த கருத்தையையும் சொல்லாமல் இருப்பதிலிருந்தே, இவருக்குள் ஒளிந்திருந்த கருத்தியல் பாசிசம் வெளிப்பட்டு விட்டது என்பதை உணரலாம்.

''சாதரண மனிதருடைய நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதெல்லாம் நூற்றுக்குத் தொன்னூறு அவனவனுடைய லட்சியத்தையும் தேவையையும் பொறுத்ததாகும்'' என்றார் பெரியார். குழு மனப்பான்மையோடு தனக்கு பிடிக்காதவர்கள் எதிர்க்கிறார்கள் அல்லது எதிரான கருத்தை முன் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்கள் எதிர்க்கிற கருத்தின் ஆழ அகலங்களை செறிவு படுத்தி திரித்து களப்பணியாற்றக்கூடிய அறிவாளி சமூகம் பெரியாரின் இந்தக் கூற்றை கவனித்த தாக தெரியவில்லை.

மனித உரிமை ஆர்வலராக அறியப்பட்ட வழக்கறிஞர் ரஜினி 'ஆண்களை தலைவராக கொண்ட கட்சிகள் தங்களது சொந்த தாயத்திற்காக குஷ்பு என்ற பெண்ணிற்கு எதிராக பெண்களையே தூண்டி விடுகிறார்கள்' என்று போராட்டக் களத்தில் இறங்கியுள்ள தமிழ்ப்பெண்களை அரசியல் ஆண்களின் கைப்பாவையாக, தலையாட்டி பொம்மைகளாக பொருள்படுத்தி இழிவு செய்கிறார். அதோடு 'குஷ்புவின் கருத்தைத் திரித்துச்சொன்ன அரசியல் தலைவர்கள் மீது வழக்கு போடுவதற்காக ஒத்த கருத்துடைய பெண் வழக்கறிஞர்களை அணி திரட்டுகிறேன்' என்று தனது மனித உரிமை உணர்வு எந்த எஜமான விசுவாசத்திற்குள் பதுங்குகிறது என்பதையும் தெளிவு படுத்துகிறார். 'சமதர்மம் என்றால் மனிதனின் நடத்தைக்கும், எண்ணத்திற்கும், நற்றொண்டிற்கும்தான் மதிப்பு இருக்க வேண்டுமேயொழிய, அந்தஸ்திற்கும், பதவிக்கும் மதிப்பு இருக்கக்கூடாது' என்ற பெரியாரின் சிந்தனை வாதத்திற்குக்கூட வழக்கறிஞருக்கு தெரியவில்லை.

சிந்தனையாளர்களாகவும், பெண்ணுரிமைவாதிகளாகவும், மனித உரிமை ஆர்வலர்களாகவும் தன்னை சமூகத்தில் காட்டிக் கொண்டவர்கள் இந்த பட்டங்களையெல்லாம் தக்க வைத்துக்கொள்வதற்கான உச்சக்கட்டப் பணியாக இப்போதைக்கு குஷ்புவை ஆதரிப்பதை கையில் எடுத்திருக்கிறார்கள், அதுவும் வழு வழு மஞ்சள் பத்திரிக்கையான 'இந்தியா டுடே'வை களமாக பயன்படுத்திக் கொள்வது நகைச்சுவையான சமூக விழிப்புணர்வு பணி.

தமிழ்த் தேசியத்தையும், தமிழ்த் தேசியம் பேசுவோரையும் சிறுமைப்படுத்தி - தமிழ்ச் சூழலில் வளர்ந்து வரும் தமிழ்த் தேசியச் சிந்தனையை சிதைக்கிற முயற்சியாக தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சாதியவாதிகள் என அவதூறுக் கருத்துகளை தமிழ்த் தேசியர்கள் மீது வீசிய இந்த சிந்தனையாளர்கள், அவர்களை பெண்ணுரிமைக்கு எதிரானவர்கள், ஆணாதிக்க சிந்தனையாளர்கள் என்கிற அதிரடி முத்திரையோடு பாசிச சிந்தனையாளர்களாக அடையாளப்படுத்த முற்படுகிறார்கள். அவற்றிற்கு பார்ப்பனீய மற்றும் பார்ப்பனீயத்தின் கூறுகளை உள்வாங்கிக் கொண்ட இதழ்களும்ஆசியும்,ஆதரவும் வழங்கி வருகின்றன. குறிப்பாக குஷ்புவின் பெண்ணிய புரட்சிகர சிந்தனைகளை உயர்த்திப் பிடிக்க முற்படுபவர்கள் ''பெரியாரை'' துணைக்கழைத்துக்கொண்டு திரிகிறார்கள். தமிழ்ச்சூழலில் எந்த பிரச்சனையையும் பெரியாரை வைத்தே விவாதிக்கிற நிலை வளர்ந்திருப்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. இருப்பினும் அவரவர் சிந்தனைக்கேற்ப - பெரியாரின் கருத்தை நீட்டி, சுருக்கி, வெட்டி ஒட்டி பயன்படுத்துகிற போக்கு மிகவும் பத்தானதாகவும், உள் நோக்கம் கொண்டதாகவும் உள்ளதென்பதை உணரவேண்டும்.

இதே அடிப்படையில் விருந்தினர் பக்கத்தில் நிமிட சிந்தனையில் சமூகத்தை புரட்டிப்போடும் நெம்புகோல் கருத்துகளைப் பதிவு செய்யும் வாஸந்திக்கு பெரியார் சொன்ன மத அடிப்படைவாதம், சாதிய சிக்கல்கள் குறித்தான கருத்துகள் குறித்த எந்த சிந்தனையும் இல்லை. ஆனால் பெண்ணியம் குறித்து சில கருத்துகளை மட்டும் தனக்கு சாதகமானதாக பயன்படுத்திக் கொள்கிறார். பெரியாரைக் கொண்டே அவரின் சிந்தனைகளை அடியொட்டி இயங்குபவர்களை இடிக்கிற வேலை இது.

பெண்ணுரிமைப் போராளியாக குஷ்புவை கட்டியெழுப்புவதற்காக வாஸந்தி அவருக்கேயுரிய பாணியில் கருத்து திரிபுகளையும், நேர்மையற்ற விமர்சனத்தையும் இந்தியா டுடேயில் பதிவு செய்கிறார். 'தேசியம் என்பதே ஒரு கற்பிதம் என்று விவாதிக்கப்படுகிற இந்தக் காலத்தில், தமிழ்த் தேசியம் என்பது மற்றொரு கற்பிதம். பயங்கர விளைவுகளைக்கொண்ட கற்பிதம்.' என கருதளிக்கிற இவர், மொழி, இனம், பண்பாடு எந்த நியாயமான எல்லைகள்ளாலும் கட்டப்படாத இந்திய தேசியத்திற்கு எதிராக எந்த கருத்தையும் அரச அதிகார மையத்தை நோக்கி ஏன் சொல்லவில்லை. 'இந் நாட்டிற்குத் திராவிட தேசியம் தான் தேவையே ஒழிய, டெல்லித் தேசியமோ, அய்க்கிய மாகாணத் தேசியமோ, மற்ற வடநாட்டுத் தேசியமோ தேவையில்லை.' என்று பெரியார் சொன்ன கருத்து வாஸந்திக்கு வசதியாக மறந்து போனது.

பெண்ணுரிமை என்பது ஆண்களின் மீது காழ்ப்புணர்வோடு கருத்துகளை வீசுவது என்பதையே தனது அளவுகோலாக கொண்டிருக்கும் வாஸந்தி, '' தமிழ்ச் சமூகத்தின் மானம், மரியாதை, கௌரவம் எல்லாமே பெண்ணின் யோனியில் பதுங்கியிருப்பதான அசைக்க முடியாத நமபிக்கை கொண்ட படை அது.' என குஷ்புவின் ஒழுங்கீன கருத்தை கண்டிக்கிறவர்களை சாடுகிறார். 'பெண் முன்னேற்றத்தில் இட ஒதுக்கீடு பெரிதாக எதுவும் மாற்றத்தை தந்துவிடாது.' என கல்கியில் நம்புகிற இவர், எல்லோருக்குமானதாக வீரியம் பெற்றிருக்கும் யோனியில் பெண் விடுதலைக்கான அத்தனை அறிகுறிகளும் ஒளிந்திருப்பதாக நம்புகிறாரோ?. பெண் சமூக முன்னேற்றத்திற்கு எதிரான எத்தனையோ நடைமுறை சிக்கல்களையெல்லாம் விட்டுவிட்டு பாலுணர்வு சார்ந்த உரிமைக்காக போராடுவதையே பெண்ணுரிமைக்கான புனிதப்போராக முன்னெடுக்கிறார். இது போன்ற அடைப்படையும், சமூகநோக்குமற்ற முச்சந்தி சிந்தனைகளை தமிழச்சிகள் தொடப்பக்கட்டை அளவுக்கு கூட மதிக்க மாட்டார்கள் என்பது வாஸந்தியே அறிந்த அம்பலம்.

இவரின் அரைவேக்காட்டு அறிவுரைகளை தமிழச்சிகள் தலையில் கட்டுவதற்கும், குஷ்புவின் கருத்தை புனிதப்படுத்தி மகாகும்பாபிஷேகம் நடத்திடவும் சங்க இலக்கிய பாடல்களையும், பெரியாரின் சிந்தனைகளையும் துணைக்கழைக்கிறார். 'திருமணம் என்பது சட்டபூர்வமான ஒரு விபச்சாரமே' என்னும் பெரியாரின் கருத்தைச் சொல்லி பெரியாரின் ஆச்சர்யமான நவீனச் சிந்தனைக் கருத்துகள் பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர்கள் அல்லது வழித்தோன்றல்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த தலைவர்களை இன்னமும் நெளியவைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.

திருமணம் செய்துக்கொள்வது பற்றி பெரியார் சொல்லியுள்ள இன்னொரு கருத்தான 'வீடு கட்டிக்கொள்வதும், திருமணம் செய்து கொள்வதும் மனித சமுதாயத்தின் உரிமையானதும், அவசியமானதும், தேவையானதுமான காரியமாகும். எந்த மனிதனுக்கும் தங்குவதற்கு ஒரு குடிசை- அதாவது வீடு தேவை. அது போல் தன் வாழ்க்கைக்கு ஒரு துணைதேவை. இவையிரண்டு மில்லாவிட்டால் நல் வாழ்வு ஆகாது' என்பது வாஸந்தி வகையறாக்கள் திருமணம் குறித்து முன்வைக்கும் கருத்துகளுக்கு சரியான சாட்டையடியாக உள்ளதை அறிவாளிகள் அறிவார்கள், இதனை தமிழர்களும் தெளிவாக உணர்வார்கள்.

திருமணம் செய்துக் கொள்ளும் போதும், 'நாம் கட்டிக்கொள்ள போகும் ஆண், பெண் ஒழுக்கமானவர்களா என்று பார்த்தால் போதும்.' என்றே அறிவுருத்துகிற பெரியார் அதன்படி திருமண வாழ்வை ஏற்று தன் வாழ்வில் பின்பற்றியும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தி என்பது தனி சொத்து, ஒழுக்கம் என்பது பொது சொத்து. ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் என்பது மிக முக்கியமான ஒன்றாகவே அறிவுருத்துகிற பெரியாரின் பெயரால், குஷ்பு போன்ற அரைகுறை பெண்ணியவாதிகள் முன்வைக்கும் ஒழுங்கீனங்களை உயர்த்தி பிடிப்பதும், ஆதரிப்பதும் கேளிக்குரிய செயலாக உள்ளது.

'உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும். திராவிடர் கழகத்தின் கொள்கை மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே.' என பெரியார் தெளிவாக கூறியிருக்கிறார். பெண்ணடிமை தனத்தை ஒழிக்கிறேனென்று ஒழுங்கீனங்களைப் போதித்து மனிதத் தன்மையிலிருந்து சமூகத்தை விலகிச்செல்ல வைப்பதும், காட்டுமிராண்டி தனத்தை உயர்த்தி பிடிப்பதும் புரட்சி என்கிறவர்களின் நோக்கம் என்ன.?

அறிஞர்கள், சிந்தனையாளர்கள், சமூகநல விரும்பிகள் மனித உரிமை காவலர்கள் என ஒரு அறிவுஜீவிப் பட்டாளத்தையே கூட்டி குஷ்புவின் ஆபாசக் கருத்துகளுக்கு கும்பாபிஷேகம் நடத்திய 'இந்தியா டுடே'வின் ஈனச்செயல்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் ஞாநி, மாலன் போன்றவர்கள் அவரவர்களின் இதழில் தனித்தனியே பூசையே நடத்தி குஷ்புவின் சிந்தனையை புனிதப் படுத்தி இருப்பது தமிழ்ச் சமூகதிருத்தத்தில் இவர்களுக்கு இருக்கின்ற அக்கறையும் எல்லையும் எது என்பதை நமக்குப் புலப்படுத்துகிறது.

''சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கி, தேவையுள்ளதை மட்டும் வைத்துக் கொள்ளுதலேயாகும்'' என்ற பெரியாரின் சிந்தனைக்கு சிறிதும் பொருந்தாத பாலுணர்வு சுதந்திரம் என்பதை பெண்விடுதலைக்கான சமூக மாற்றமாக முன் வைக்கின்ற மாற்றுச் சிந்தனையாளார்கள் ஆணாதிக்க பெரும்பான்மைவாதம், மதவாத அடிப்படையிலான கட்டமைப்பு, சமூக நடப்புமுறைகள் இவற்றால் பெண் சமூகத்திற்கு நிகழுகிற, நிகழவுள்ள அநீதிகளுக்கு எந்த வகையில் அது தீர்வாகுமென்பதை இன்று வரை தெளிவுபடுத்தவில்லை. அவர்களின் குடும்பத்தாருக்கு இதை அறிவுருத்தி நடைமுறை படுத்தியுள்ளார்களா என்பதையும் பதிவு செய்யவில்லை.

திருமணத்திற்கு முன்பு உடலுறவு என்பது தமிழ் தொன்மம் சார்ந்த விஷயம் என்றும் பாலியல் கருத்துகள் தனிமனித உரிமை இவற்றில் யாரும் தலையிடக்கூடாதென்றும் திசைகளில் கருத்தெழுதுகிற மாலன் பாலியல் கருத்துகளை ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் மீது எந்த அடிப்படை உரிமையில் குஷ்புவும் இந்தியா டுடேவும் திணிக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தாமல் இவற்றை எதிர்ப்பவர்களை கலாச்சார நாட்டாமைகள் என சாடுகிறார். இப்போராட்ட உணர்வை ஊதி பெரிதுபடுத்தி காட்டிவரும் தமிழ் முரசு, சன் தொலைக்காட்சி குறித்து வாயைத்திறக்காத நேர்மையை என்னவென்று சொல்ல. காதல் காமம் பற்றிய பெரியாரின் சிந்தனைகளை விரிவாக மேற்கோள் காட்டிவாதிடுகிற மாலன் தன் வீட்டுப் பெண்களுக்கு எந்தவகை சிந்தனையை ஊட்டிவளர்ந்திருக்கிறார், பிள்ளையார் பற்றிய பெரியாரின் கருத்துகளையெல்லாம குப்பையில் போட்டுவிட்டு ஒரு குதூகலமான உணர்வோடு பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்து வருகிற விருந்தினர்களுக்கு பரிமாறுகிற பக்குவத்தைத் தானே தன் வீட்டில் வளர்த்தெடுத்திருக்கிறார். .இப்படி தன் வீட்டுப் பெண்களெல்லாம் பூட்டி வைக்கப் பட்ட பொக்கிஷங்களாக பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்ற இவர், திருமணத்திற்கு முன்பான உறவு பாலுறவுகளில் முழுசுதந்திரம் போன்ற கருத்தியலுக்கு வக்காலத்து வாங்குவது வேடிக்கையாக இருக்கின்றது.

''பாய்ஸ்'' திரைப்படத்தில் ஆபாசம் மேலோங்கி இருப்பதாக சுஜாதாவிடமும் சங்கரிடமும் மல்லுக்கட்டிய ஞாநி, நாகரீகத்தின் உச்சகட்டத்தில் நின்று தனது 'தீம்தரிகிட' வில் குப்பைத் தொட்டி படத்தை வரைந்து அதில் சுஜாதா சங்கரின் படங்களைப் பொறித்து இங்கே அனைவரும் எச்சில் துப்பலாம் என்று தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததோடு விருத்தாச்சலம் போன்ற ஊர்களுக்குப் பறந்து சென்று 'பாய்ஸ்'க்கு எதிரான கருத்துகளைப் பரப்பிய பத்திரிக்கையாளரான இவர் குஷ்பூவின் கருத்துகளை ரசிக மனோபாவத்தோடு அங்கீகரித்து ஒரு பக்த உணர்வோடு ஆதரித்து கருத்துகளை வெளியிடுவது தமிழ் சமூகத்தை முட்டாளாக்குகிற முயற்சியே அல்லாமல் வேறெதுவாக இருக்க முடியும்?. எந்த ஒரு கருத்தியலுக்கும் எதிர்ப்போ, ஆதரவோ எதுவாக இருந்தாலும் பிறவி அறிவுசீவிகளான நாங்களே எழுதிக் கிழிக்கவேண்டும், என்கிற அதிகப்பிரசங்கித்தனமே, மருத்துவர் இராமதாசு, தொல்.திருமாவளவன் ஆகியோரை கிண்டலடிக்க வைக்கிறது.

பறை, மாத்தம்மா குறும்படங்களின் மூலம் தமிழ்ச்சூழலில் அறிமுகமாகி தனது நேர்மையற்ற சமூகப் பார்வையை 'யாரோ'வின் தரவோடு நிலை நிறுத்திக்கொள்ள போராடிக்கொண்டிருக்கும் போராளி தொகுப்பு வெளியிடவும், உதவி இயக்குநராக பணியாற்றவும் மேற்கொள்ள வேண்டிய லாபிகள் எவ்வளவோ காத்திருக்க பரபரப்பாக இயங்குகிற லீனாமணிமேகலை, 'தமிழ்நாட்டில் வேலை இல்லாத சிலர் கலாச்சார காவலர்களாக மாறிக்கிட்டிருக்கிறாங்க... பரபரப்புக்காக எதிர்ப்பவர்களை எல்லோரும் சேர்ந்து எதிர்க்கவேண்டும். குஷ்பு சொன்னதில் என்ன தப்பு இருக்கு?' என புரட்சிகர கருத்துகளை பதிவுசெய்கிறார்.

இப்படி பெண்ணுரிமை பற்றி முழுமையான புரிதலற்றவர்கள் கருத்தியல் காவலர்களாக களம் இறங்கி குஷ்பாம்பிகைக்கு பாத பூசை நடத்திக்கொண்டிருக்கும் சூழலில்.. சுயவிளக்கமளிப்பதாக வணிக இதழ்களில் அழகழகான வண்ணப்படங்களுடன் காட்சியளிக்கும் அம்பாள் அப்படி சொல்லவில்லை இப்படி சொல்லவில்லை..என பதுங்கியதோடு.. என் பிறந்த நாளை கொண்டாட முடியவில்லை, என் மகள் பிறந்த நாளைக் கொண்டாட முடியவில்லை என புலம்பியிருப்பதின் மூலம் தனது பகட்டுவாழ்வை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்து கருத்தியல் காவலர்கள் முகத்தில் கரியை பூசி சி வழங்கியிருக்கிறார்.

பாலியல் உணர்வு, அன்பு, பாசம் இவற்றை சம அளவில் ஒழுங்கமைத்து அவற்றின் அடியொற்றி வாழ்வதன் மூலமே மனித வாழ்க்கை இறுதிவரை சிறப்பானதாகவும் சோர்வற்றதாகவும் இருக்க முடியும் என்பதை உணர்ந்து தான் தோன்றித்தனமாக வாழ்ந்த மேலைநாட்டவர்கள் தனது வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், பார்ப்பனர்கள் மதத்தின் பெயரால் தமிழச்சிகளின் மீது திணித்த தேவதாசி முறையை இன்று படிப்பாளிகள் மாற்றம் என்கிற பெயரில் தமிழச்சிகளுக்குப் போதிக்கின்றார்கள்.

அதையும் சூத்திர பட்டம் ஒழியும் வரை போராடுவேன் என்று வாழ்நாள் முழுவதும் கருத்துரைத்த பெரியாரின் பெயராலயே சூத்திர வாழ்க்கைக்கு அழைப்பு விடுக்கும் 'அறிவுஜீவி' அயோக்கியர்களை தமிழ்ச் சமூகம் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். அதற்காக அறிவாளர்கள் பணியாற்ற முன் வரவேண்டும்.

'நாம் ஒழுங்கமைப்பதற்காகப் பாடுபடுவோம். இன்னும் ஒழுங்கமைப்பதற்காகப் பாடுபடுவோம். மீண்டும் ஒழுங்கமைப்பதற்காகப் பாடுபடுவோம். எல்லாவிதமான சோதனைகள் இருந்த போதிலும் எதிர்காலம் நமதே.' என்று சொன்ன இலெனின் கருத்தை மனதில் கொண்டு 'பகுத்தறிவிற்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்' என்ற பெரியாரின் நோக்கத்தோடு கருத்தியல் காவலர்களின் போலியான முற்போக்குச் சிந்தனைகளை அடையாளம் காட்டும் நம்மை ஊடகங்களின் மூலம் அவமானப்படுத்துவார்கள் என்றாலும் கூட 'மானத்தைப் பற்றிக் கவலைப்படாத மக்களிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற கவலை எனக்கு சிறிதுமில்லை.' என்கிற பெரியாரின் சிந்தனையையே நம்முடைய சிந்தனையாகக் கொள்ள வேண்டும்.

பின் குறிப்பு
கீற்று வில் வந்த கோவி.லெனினின் கட்டுரையின் சுட்டிகள் இங்கே அவசியமாகின்றது

வெள்ளத்தனைய மலர் நீட்டம்!

பெரியாரைப் பிழையாமை

நன்றி
http://karuppupaiyan.blogspot.com
http://iishaq.blogspot.com


வடிவேல் பேசுவது மாதிரி படிக்கவும்.
வேணாம் வேணாம் இந்தியாடுடே பாவம், குஷ்பு பாவம், வேணாம் அறிவுஜீவிங்க பாவம், வேணாம் பாசிச எதிர்ப்பு கணவான்கள் பாவம், வேணாம் கனிமொழி பாவம், வேணாம் உ.வாசுகி பாவம், வேணாம் ரஜினி பாவம், வேணாம் வேணாம் வாஸந்தி பாவம், வேணாம் ஞாநி பாவம் வேணாம் லீனாமணிமேகலை பாவம், வேணாம் வேணாம் புது பெரியாரிஸ்ட்ங்க பாவமோ பாவம், மொத்தத்துல டோட்டல் டேமேஜ்

தே.மு.தி.க. வில் பண்ருட்டியார்

பண்ருட்டியார் என அழைக்கப்படும் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் எம்.ஜி.இராமச்சந்திரனின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர், எம்.ஜி.ஆரின் நெருக்கமான வட்டத்தில் இருந்தவர், எம்.ஜி.ஆரின் அரசியல் மற்றும் ஆட்சி முடிவுகளில் ஓரளவிற்கு முக்கிய காரணியாக இருந்தவர்,பொருளாதாரநிலையில் கீழிருந்த ஒரு குடும்பத்திலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் B.E.(Hons.) பட்டப்படிப்பு படித்தவர், நாகரீகமான அரசியல்வாதியெனப் பெயரெடுத்தவர்.

Image hosted by Photobucket.com

இன்றைக்கும் பண்ருட்டித் தொகுதியில் ஓரளவிற்கு செல்வாக்கோடு வலம்வரும் அரசியல்வாதி,
பண்ருட்டித் தொகுதி முழுக்க முழுக்க கிராமங்கள் அடங்கிய தொகுதி, சாதாரணமாக ஊரும் வயலும், தோப்பும் தனித்தனியாக இருக்கும், ஆனால் பண்ருட்டித் தொகுதி கிராமங்கள் முந்திரித் தோப்பினுள் இருக்கும். முந்திரித் தோப்பின் நடுவில் செம்மண் மற்றும் தார் சாலையில் இன்றைக்கும் நகர பேருந்துகள் சென்று வந்து கொண்டிருப்பதுதான் பண்ருட்டியார் இன்றும் தொகுதியில் ஓரளவிற்கு செல்வாக்காக இருப்பதற்கான காரணம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குபின் 1989ல் சுயேச்சையாக போட்டியிட்டு (இரண்டாமிடம்)தோல்வியடைந்து பின் 1991ல் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு பா.ம.க.வின் சட்டமன்ற கணக்கை யானை மீதேறிச்சென்று துவக்கியவர் பண்ருட்டியார், 2001ல் மீண்டும் சுயேச்சையாக போட்டியிட்டார், கடும் போராட்டத்தில் பா.ம.க.வின் தி.வேல்முருகனிடம் தொகுதியை பறிகொடுத்த அவரால் மூன்றாமிடத்தையே பிடிக்கமுடிந்தது, பா.ம.க.வில் மருத்துவர் இராமதாசுக்கு அடுத்து இரண்டாமிடத்திலிருந்தவர் பா.ம.க.விலேயே தொடர்ந்திருந்தால் மத்திய அமைச்சராகியிருப்பார்.

Image hosted by Photobucket.com

சில நாட்களுக்கு முன் வரை கிட்டத்தட்ட அரசியல் துறவறம் சென்ற நிலையிலிருந்தார் பண்ருட்டியார், இதோ மீண்டும் தே.மு.தி.க. வில் சேர்ந்து பண்ருட்டி வட்டார அரசியலை சூடாக்கியுள்ளார்.தே.மு.தி.க.வினர் தற்போது பண்ருட்டி தொகுதியை நிச்சய வெற்றி தொகுதியாக கணக்கெடுப்பர், பண்ருட்டியாரின் வருகை தே.மு.தி.க விற்கு எந்த அளவிற்கு வெற்றி தரும் என்று கூற முடியாவிட்டாலும் தே.மு.தி.க. விற்கு பிணைத்தொகை பறிபோகாமல் இருக்கும் இரண்டாவது தொகுதி (விசயகாந்த் போட்டியிடுவது முதல் தொகுதி) யாக பண்ருட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பண்ருட்டி தொகுதியின் தற்போதைய கட்சிகளின் பலத்தில் முதலிடத்தை தி.மு.க.வும் சிறிய அளவு வித்தியாசத்தில் பா.ம.க. இரண்டாமிடத்திலும் அதற்கடுத்ததாக அ.தி.மு.க.வும் விடுதலைசிறுத்தைகளும் சமபலத்தில் இருக்கின்றனர், இதற்கடுத்த நிலையில் பண்ருட்டியார் சொந்த பலத்திலுள்ளார்.

தற்போதைய பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகனும் (பா.ம.க.) பண்ருட்டியாரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள், ஒரு வகையில் உறவினர்களும் கூட, தி.வேல்முருகன் அதிரடி அரசியல்வாதி மற்றும் இளைஞர் எதற்கும் நேரடியாக களத்தில் இறங்கி போராடுபவர், பா.ம.க.வின் ரஜினியுடனான மோதலின் போது பண்ருட்டி பகுதியில் பல ரஜினி மன்றங்கள் கலைக்கப்பட காரணமாக இருந்தவர், தற்போதைய நிலையில் இளைஞர்கள் பலர் இவரின் பலமாக உள்ளனர், நிறைய நல்லது செய்து நல்ல ச.ம.உ. என்று பெயரெடுக்கவில்லையென்றாலும் கெட்ட பெயர் எடுக்காததும் ஒரு வகையில் இவருக்கு பலம்தான், மேலும் தொகுதியில் அனைவரோடும் தொடர்பிலிருப்பவர்.

பண்ருட்டியாரின் பலமாக இருப்பவர்கள் அவர்காலத்து நண்பர்கள், எல்லோரும் நடுத்தரவயதினர், பண்ருட்டியார் இளைஞர்கள் பலத்தில் குறைவாக இருந்தார், விசயகாந்த் மன்றத்தினர் எல்லோரும் இளைஞர்கள் இதில் முக்கியமான விடயம் பெரும்பாலானோர் முதல்முறையாக வாக்களிக்க இருப்பவர்கள் ஆனால் இவர்களின் எண்ணிக்கை மற்ற கட்சிகளுடன் பொருத்தி பார்க்கும் போது மிகக் குறைவானதே.

வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் பண்ருட்டி தொகுதி பா.ம.க.விற்கு என்பதானது ஏறக்குறைய முடிவான விடயம், இந்த முறையும் தி.வேல்முருகனே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முந்தைய தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது பண்ருட்டியார் சுயேச்சையாக போட்டியிட்ட போது வெற்றிபெற்றதில்லை, ஏதேனும் ஒரு கட்சி பலத்துடன் போட்டியிட்டபோது தான் வெற்றி பெற்றுள்ளார், இதையெல்லாம் பார்க்கும்போது பண்ருட்டியாரை வைத்து தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் கணக்கைத் துவக்கும் என்பது நடக்காத விடயம் போலத் தோன்றுகின்றது.

ஒருவேளை அதிமுக வோடு தேமுதிக கூட்டணி வைத்தால் அதிமுக பண்ருட்டி தொகுதியை விட்டுத்தருமா என்பது சந்தேகமே, பாஜக கூட்டணியில் புதுக்கோட்டை தொகுதியை திருநாவுக்கரசருக்காக தராமல் இருந்தவர் தான் செல்வி.ஜெயலலிதா, இதே நிலை பண்ருட்டியாருக்கும் ஏற்படலாம், எப்படி பார்த்தாலும் பண்ருட்டியாரின் அரசியல் கணக்கு எந்த அளவிற்கு எடுபடும் என்பதில் பலத்த சந்தேகமே மிஞ்சுகின்றது.

பண்ருட்டியார் தே.மு.தி.க.வில் இணைந்ததால் பிணைத்தொகை பறிபோகாத தொகுதிகளில் ஒன்றை அதிகப்படுத்தியுள்ளது அந்த கட்சி, ஆனால் இத்தனை நாள் சட்டமன்ற உறுப்பினர் கனவில் மிதந்த மன்ற நிர்வாகிகளுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, இது மாதிரி தே.மு.தி.க.வில் ஆங்காங்கே அரசியலில் காணாமல் போனவர்களை சேர்த்தால் தே.மு.தி.க.விற்கு பெரிய எதிர்காலமோ, வெற்றியோ கிடைத்துவிடும் என்று சொல்லமுடியாது ஆனால் கனவிலிருக்கும் மன்றநிர்வாகிகளுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சும், மன்ற பலமும் ஆட்டம் காணும் என்பது நிதர்சனமான உண்மை.

தே.மு.தி.கவினால் பண்ருட்டியாருக்கு இலாபம் என்பதை விட பண்ருட்டியாரால் தேமுதிகவிற்கு இலாபம் என்பதுதான் தற்போதைய நிலை...

பின் குறிப்பு:
பண்ருட்டியார் தே.மு.தி.க.வில் சேர்ந்த போதே இந்த பதிவை எழுதினேன், இப்போது தான் பதிவிட முடிந்தது.

பழைய கலாச்சார காவலர்களும் மாற்றங்களும்

எவையெல்லாம் பொதுவாக உயர் கலாச்சாரம் என உருவகப்படுத்தப்பட்டு வந்ததோ அதெல்லாம் பிறரால் கை கொள்ளப்படும் போது அதே உயர் கலாச்சாரம் என உருவகிக்கப்பட்டு வந்த விடயம் தாழ்த்தப்படுகின்றது,

புத்தமதம் உயிர் கொல்லாமையை வலியுறுத்திய அதே சமயம் புத்தமதம் உணவு பழக்கத்தில் அசைவ உணவை கட்டுப்படுத்தாத காலகட்டம் அது, புத்தமதத்தின் உயிர் கொல்லாமை மிக உயரியதாக கருதப்பட்டு வந்த நேரத்தில் அசைவம் புசிப்பதைவிட்டு சைவ உணவு உட்கொள்ளும் பழக்கம் உயரியதாக உருவகப்படுத்தப்பட்டது என்று அக்னிகோத்ரம் தாத்தாச்சாரி அவர்கள் எங்கே செல்கிறது இந்து மதம் என்ற தொடரில் கூறிப்பிட்டுள்ளார்.

குடிப்பழக்கம் ஒரு சமூக நோய் எனவும், அதிலிருந்து மக்கள், முக்கியமாக அடித்தட்டு மக்கள் வெளிவர வேண்டும் என வலியுறுத்தி போராடினால் அதும் கூட கேலியாக்கப்படுகின்றது/மறைக்கப்படுகின்றது, அது மட்டுமின்றி தற்போது அது தனி மனித சுதந்திரம் அதில் என்ன தவறு என தாங்கிப்பிடிக்கின்றனர், இத்தனை காலமும் கீழ் கலாச்சாரமாகவும் ஒழுக்ககேடாகவும் கருதப்பட்டு வந்த குடி பிரச்சினையை இந்த தலைவர்கள் கையில் எடுத்தவுடன் திடீரென தனி மனித சுதந்திரம் என பிதற்ற ஆரம்பிக்கின்றனர் சிலர், ஆனால் இதே குடியை விட்டு வெளிவரவேண்டுமென காந்தியிலிருந்து,ராஜாஜி மற்றும் பலர் போராடியபோது வராத தனிமனித சுதந்திரம் இப்போது இந்த தலைவர்கள் கையில் எடுத்தவுடன் வருகின்றது.


சில பல ஆண்டுகளுக்கு முன் கைம்பெண் திருமணமும் மறு மணங்களும் மிக சாதாரணமாக இருந்த இந்த சமூகத்தில் திருமணம் ஒரு முறை தான் என பரப்பி அது உயர் கலாச்சாரமாகவும் மறு மணங்கள் வழக்கமாக இருந்த சமூகத்தை "அறுத்து கட்டிய சாதி" என்றும் "கட்டுகழுத்தி" என்றும் ஏளனம் பேசி உயர் கலாச்சாரம் என்றால் எத்தனை சிறிய வயதில் கணவன் இறந்திருந்தாலும் மறு மணம் செய்துகொள்ளாமல் இருப்பதுவேயாகும் அதுவே தியாகம் என்று உருவகப்படுத்தியது இதற்கு ஊடகங்களும் கதைகள்,கட்டுரைகள், புராணக்கதைகள் என்ற பெயரில் இதை தாங்கிபிடித்தன(இதை முதலில் இலக்கிய உலகில் உடைத்தெறிந்தவர் ஜெயகாந்தன் தான்) முறையான திருமண பாலியல் உறவுகளுக்கு தரப்பட்ட ஏளன பெயர்கள் தான் அறுத்துகட்டுற சாதி,கட்டுக்கழுத்தி. இன்று முறையற்ற பாலியல் உறவுகளை கூட தனி மனித சுதந்திரம் என்று கூறி வக்காலத்து வாங்குகின்றன இதே ஊடகங்களும் மற்ற சிலரும்.

இந்த இடித்தலுக்கும் உரைத்தலுக்கும் பெரியாரை வேறு துணைக்கிழுக்கின்றனர், 50 ஆண்டுகாலமாக அழைக்கப்படாத பெரியாரை, பெரியார் கூறிய பெண்ணிய கருத்துகளை இத்தனை ஆண்டுகளாக ஆதரிக்காமல், இத்தனை ஆண்டுகளாக கேலி கிண்டல் பேசிவிட்டு தற்போது இந்த தலைவர்களை தாக்க மட்டும் துணைக்கழைக்கின்றனர் இத்தனை காலம் கலாச்சார காவலர்களாக இருந்தவர்கள்.

இவர்களுக்கு பிரச்சினை பெண்ணியம் பற்றியும் அல்ல, கருத்து சுதந்திரம் பற்றியும் அல்ல, அந்த தலைவர்களின் மீது சாணியெறிய வேண்டுமென்பது மட்டுமே.

இதை பாதி எழுதி முடித்திருந்த சமயத்தில் திண்ணையில் மாதவி ஸ்ரீபிரியாவின் சீரழிக்கும் சினிமா, மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என்ற கட்டுரையை படிக்க நேர்ந்தது, கிட்டத்தட்ட என் கருத்தை ஒத்திருந்ததால் இங்கே அதன் சுட்டி http://www.thinnai.com/pl1006052.html

இத்தனை காலம் கோலோச்சியிருந்த கலாச்சார காவலர்களின் குரல் பலவீனமாவதும், அவர்களின் வேடதார சட்டை கழற்றப்படுவதும், புதிய கலாச்சார காவலர்கள் தோன்றியிருப்பதும் எனக்கு மகிழ்ச்சியே...

தம் ஆயுதத்தை எதிரியை தேர்ந்தெடுக்கவிடுபவன் புத்திசாலியல்ல, பழைய கலாச்சார காவலர்களின் ஆயுதத்தை புதிய கலாச்சார காவலர்கள் முடிவு செய்கிறார்கள் என்பது பழைய கலாச்சார காவலர்களின் முதல் தோல்வி...

பழைய கலாச்சார காவலர்களின் இந்த தோல்வி எனக்கு மகிழ்ச்சியே, தொடரட்டும் இந்த தோல்வி, அவர்கள் முழுத் தோல்வி அடையும் வரை புதிய கலாச்சார காவலர்களின் வெற்றி அவசியமாக இருக்கின்றது.

வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!

//ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுகிறது. இது வன்முறையற்றதாக இருக்கிறது என்ற ஒரு காரணத்துக்காகவே இதனை ஆதரிக்கவும் நான் (தனிப்பட்ட முறையில்) செய்கிறேன்.//

http://www.thinnai.com/pl0930053.html திண்ணை இணைய இதழில் சின்னக்கருப்பன் அவர்கள் கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இடம் பெற்ற சில வரிகள், அந்த கட்டுரையின் மற்ற வரிகளுக்குள் போக விரும்பவில்லை, மேற்குறிப்பிட்ட வரிகளில் கட்டுரையாளர் உடல் சார்ந்ததாக குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொண்டுள்ளேன். மேற்கண்ட வரிகளில் என் புரிதல் தவறெனில் திருத்திக்கொள்கின்றேன்.

வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமே என்பது போன்ற கருத்துகள் பலரிடமும் பரவியுள்ளன.

வன்முறை என்பதன் அளவுகோல் உடலளவில் துன்பப்படுத்துவது மட்டுமே என்ற கருத்தை என்னளவில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை, வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல, வன்முறைகளின் வடிவம் பல, அதில் உடல் சார்ந்த வன்முறையும் ஒன்று, ஆனால் பலர் உடல் சார்ந்ததை தவிர மற்றவைகள் வன்முறை என்ற வரையரையில் கொண்டுவரவில்லை.

தீண்டாமை, இரட்டை குவளை முறைகள் வன்முறையில்லையா?, இங்கே இரத்தமில்லை, யாரும் உடலளவில் யாரையும் காயப்படுத்துவதில்லை(சாதிக் கலவரம் வேறு) அதற்காக இந்த தீண்டாமை வன்முறையல்ல என்று கொள்ள முடியுமா?

ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சிலர் மீது குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள், பொது மக்களிடம் குறிப்பிட்ட சிலரை பற்றி தவறான உருவகத்தை பதியவைக்க வேண்டும் என்று பத்திரிக்கை தர்மத்தை மீறி வெளியிடும் தவறான தகவல்கள் அதனால் ஏற்படும் சேதம் ஊடகங்களின் வன்முறையல்லவா? நேர்மையற்ற முறையில் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுவது ஊடகங்கள் சமுதாயத்தின் மீது நடத்தும் வன்முறையல்லவா, இங்கேயும் கூட கத்தியில்லை, இரத்தமில்லை உடலளவில் துன்பமில்லை, அதற்காக இது ஊடக வன்முறையல்ல என்று உருவகித்துக் கொள்ள இயலுமா?

சனாதானம்,மனு நீதி என்ற பெயரில் கடவுள் குடி கொண்டிருக்கும் கோவில்களிலும் கூட உரிமைகளை மறுப்பது என்பது வன்முறையல்லவா? இங்கும் கூட கத்தி, இரத்தமில்லை தான், அதற்காக இது வன்முறையல்லவா?

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் விமர்சிப்பதும், தீய கருத்துகளை சொல்லி பலரை மனதளவில்,உணர்ச்சிகளை காயப்படுத்துவதும் வன்முறை என்ற அளவீட்டில் அடங்காதவையா?

மொழி திணிப்பு, மொழிகளை நீச மொழி என்பது, தாய்மொழியில் கோவில் குடமுழக்கு நடத்தினால் பாவம் என்பதெல்லாம் மொழிகளின் மீது நடத்தப்படும் மொழி வன்முறையில்லையா? இங்கும் கூடத்தான் உடல் சார்ந்த துன்பப்படுத்துதல் இல்லை.

இராசதந்திரம் என்ற பெயரில் இழைக்கப்படும் துரோகங்கள் எல்லாம் வன்முறையல்லவா? இரத்தம் தெறிக்காமல் இருப்பினும்.

வியாபார தந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் சந்தையை கைப்பற்றுதலில் கூட உடல் காயப்படுவதில்லை தான், ஆதலால் இது வன்முறையல்ல என்றாகிவிடுமா?

வன்முறை என்பது வெறுமனே உடல் சார்ந்தது என்று மட்டும் சுருக்கிவிடாதீர்கள், வன்முறையின் ஒரு வடிவம் தான் உடல் சார்ந்த துன்பம், மேற்குறிப்பிட்டது போன்ற வேறு பல வடிவங்களும் வன்முறைக்கு உள்ளன.

ஆணாதிக்கமும் பெண்ணியமும் சொந்த வாழ்க்கையும்

குஷ்புவின் பேட்டியும், அதைத் தொடர்ந்து வலைப்பதிவுகளில் நடந்த விவாதங்களும் பிரச்சினைகளின்/கருத்துகளின் பல பரிமாணங்களை காண்பித்தன, பெரும்பாலும் நாகரீகமாகவும், சில இடங்களில் அநாகரீகமாகவும் நடந்தேறின, அநாகரீகங்கள் கண்டிக்க வேண்டியவை, முழுமையாக நீக்கப்படவேண்டியவை.

தங்கரை முழுமையாக எதிர்ப்பதும் குஷ்புவை முழுமையாக ஆதரிப்பதுமே ஆணாதிக்கத்தையும் பெண்ணியத்தையும் அளக்கும் அளவுகோலாக வைத்து இங்கே பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் எனக்கு தோன்றிய/ நான் இதற்கு முன் கேட்ட, மற்ற சிலரின் கருத்துகளையும் விடயத்தையும் பகிர்ந்துகொள்கின்றேன், முழுவதும் படிக்காமல் இரண்டு வரிகளை படித்துவிட்டு பின்னூட்டமிடுவதும் திரித்து பின்னூட்டமிடுவதையும்,பதிவிடுவதற்கும் விளக்கம் சொல்லி துடித்த காலங்கள் கடந்து அலட்சியப்படுத்தும் மனநிலைக்கு வந்து பல நாட்களாகிவிட்டன.... எல்லா கேள்விளோடும் என்னை பொறுத்தி பார்க்க வேண்டாம், கேள்வி கேட்பதாலேயே இதை நான் ஆதரிக்கிறேன் என்றோ எதிர்க்கிறேன் என்றோ இல்லை.


1. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் தாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நாட்டிற்கு திருமணமானவுடன் அந்த மங்கையும் இடம்பெயர வேண்டுமென்ற கோரிக்கையை தங்கள் திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது வலியுறுத்தவில்லையா?

2. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் திருமணமானவுடன் அவரின் மனைவி வேலைசெய்து கொண்டிருக்கும்/ வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் சூழலை விட்டு முழுமனதோடு வரவில்லையென்றால் பரவாயில்லை நான் அங்கே வருகின்றேன் என புலம்பெயர்ந்துள்ளனரா?
(என் மனைவி அப்படியெல்லாம் சொல்லவில்லையே என்றால் இன்று கேட்டுபாருங்கள் எத்தனை முழுமனதுடன் அவர் வந்தார் என, ஒரு வேளை நீங்கள் மனைவி வாழும் ஊருக்கு புலம் பெயர தயாராக இருந்தால் அவர் நீங்கள் இருக்கும் நாட்டிற்கு வந்திருப்பாரா என கேட்டு பாருங்கள்)

3. பண்பாடு,வழக்கம், கலாச்சாரம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று கூறி அப்பா,அம்மா விருப்பம், நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதை புறந்தள்ளி உங்கள் மனைவிக்கு தாலி கட்டாமல் இருந்தீர்களா?

4.வழக்கம்,விருப்பம் என கூறி தாலி கட்டியிருந்தாலும் கூட அதற்கு இணையாக ஆண்கள் தாலி அணிந்துள்ளீர்களா? அட கூறைந்தபட்சம் ஒரு மனைவி படம் போட்ட லாக்கெட் வைத்த சங்கிலியாவது அணிந்துள்ளீர்களா?

5. தாலி என்பது பெண்ணடிமைத்தனம், ஊரில் நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதற்காகத்தான் கட்டினேன், வெளிநாட்டில் யாரைப் பற்றியும் கவலை இல்லை, அதனால் தாலியை கழற்றிவிடு என்று மனைவியிடம் சொல்லியிருக்கின்றீரா? அல்லது உங்கள் மனைவி அப்படி செய்துள்ளாரா?

6.எத்தனை ஆண்கள் வீட்டில் சமைக்கின்றீர், வார இறுதியில் சமைப்பதை கேட்கவில்லை, குறைந்த பட்சம் முறை வைத்து இன்று நான் சமைக்கின்றேன் நாளை நீ சமையல் செய் என்று கூறுகின்றீரா?

7.நீங்கள் வீட்டு வேலையை உண்மையாகவே மனைவியுடன் பகிர்ந்து கொள்கின்றீர்களா?

8.கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் வேலையை விட்டுவிட வேண்டும் என்ற சூழலில் தன் வேலையை உதற தயாராக இருக்கின்றீரா?

9.குழந்தை வளர்ப்பில் உதவி செய்கிறேன் என்று கூறாமல்(உதவி என்று கூறும் போதே அது பெண்களின் பொறுப்பு என்ற பொருள் தொணிக்கின்றது) உண்மையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்களா?

10. தங்கள் காதல் பிரதாபங்களை முகம் மலர அகம் மலர் மனைவியிடம் பீற்றிக்கொள்ளும் போது உங்கள் மனைவியும் அவருடைய காதல் அனுபவத்தை அல்லது இன்பாக்சுவேஷனையாவது பகிர்ந்து கொண்டுள்ளாரா? (பகிர்ந்து கொள்ளவில்லையென்றால் உங்கள் மீது நம்பிக்கையில்லை என்று பொருள்)

11. உங்கள் மனைவி அவரின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு இருக்கின்றீரா?

12.அப்படி மனைவியின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு பிறகு அதை எதிலாவது எங்கேயாவது இணை(கம்பேர்)வைத்து பார்க்காமல் இருந்ததுண்டா?

13.சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் பெண்ணை காண்பித்து அழகாக இருக்கிறாள் என்று உங்கள் மனைவியிடும் கூறும் உங்களிடம் உங்கள் மனைவி சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் எந்த ஆண்மகனையாவது உங்களிடம் சிலாகித்து பேசியதுண்டா?

14.அப்படி சிலாகித்து பேசும்போது எள் முனையளவு வேற்றுணர்ச்சி தோன்றவில்லையா?

15.வெளிநாட்டில் இருக்கும் போது மிடியும் ஜீன்சும் பனியனுமாக இருக்கும் உங்கள் மனைவி உங்கள் பெற்றோர் முன்னும் அதே போல அணிந்துள்ளாரா? அல்லது நீங்கள் அணிய சொல்லியிருக்கின்றீரா?

16.வெளிநாட்டில் உங்களை பெயர் சொல்லி அழைக்கும் மனைவி ஊரில் உங்கள் பெற்றோர் உறவினர் முன் பெயர் சொல்லி அழைத்துள்ளாரா?

17.வெளிநாட்டில் வீட்டு வேலைகளில் உதவி செய்யும் நீங்கள் ஊரிலும் உங்கள் பெற்றோருடன் இருக்கும் போதும் உங்கள் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்துள்ளீர்களா?

18.உங்கள் மனைவி உங்களிடம் அனுமதி பெறாமல் அவரின் பெற்றோருக்கு அல்லது யாருக்காவது பணம் அனுப்பியதுண்டா?

19.வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்துள்ளீரா?

20.வரதட்சனை நாங்களாக கேட்கவில்லை, பெண் வீட்டில் அவர்களாக தந்தார்கள் என்பதை வேண்டாம் என்று சொன்னீர்களா?

21. திருமணத்தின் போது நாம மாப்பிள்ளை வீட்டுகாரங்க என்று பேசிய உங்கள் பெற்றோர்களை அடக்கியது உண்டா?

22. உங்கள் மனைவி உண்மையிலேயே பொருளாதார சுதந்திரநிலையில் உள்ளாரா? வேலைக்கு போய் சம்பாதிப்பதற்கும் உண்மையான பொருளாதார சுதந்திரத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

மேற்கண்ட கேள்விகள் அனைத்தும் ஆண்களுக்கு, தற்போது பெண்களுக்கு சில கேள்விகள்

23. ஒரு வேளை உங்கள் கணவர் மேற்கண்ட கேள்விகளில் இல்லையென்று பதிலளிக்கும் நிலையில் உள்ளபோது என்றாவது உங்கள் எதிர்ப்பை காண்பித்துள்ளீரா? இதில் குழந்தை வளர்ப்பிற்காக வேலையை விடுவதிலிருந்து கணவன் வேலை நிமித்தமாக புலம்பெயரும் எல்லா இடங்களுக்கும் விருப்பமில்லையென்றாலும் புலம்பெயர்ந்தவையும் அடங்கும்.

இனி திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு

'அ' என்றொரு பெண்
'ஆ' என்றொரு பெண்

'அ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 100% பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவர் என்றும் தற்போது அந்த தொடர்பு இல்லையென்றும் உங்களுக்கு தெரியவந்துள்ளது

'ஆ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 90% தான் பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவரா இல்லையா என்று உங்களுக்கு தெரியாது.

24.இந்த தொடர்பு விடயம் உங்களுக்கு மட்டுமே தெரிந்தது என்ற சூழ்நிலையில் 'அ' பெண்ணை திருமணத்திற்கு தேர்ந்தெடுப்பீரா?

25.'அ' என்ற பெண்ணை நீங்கள் திருமணத்திற்கு தேர்ந்தெடுத்த பின் அவருடைய பாலியல் தொடர்பு உங்கள் பெற்றோருக்கு தெரிந்து வேண்டாம் என கூறும் போது உங்கள் பெற்றோரை எதிர்த்து/ சமாதானப்படுத்தி அந்த பெண்ணையே திருமணம் செய்வீர்களா?

26. லேடி பாஸ்கிட்ட வேலை செய்வதே கடினமானது சரியான நச்சரிப்பு என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?

27. லேடி கொலீக்ஸ் உடன் வேலை செய்வதே கடினமானது எல்லாவற்றிலும் இந்த பெண்கள் Slow என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?

28. லேடிஸ்னா சீக்கிரம் வீட்டுக்கு போய்விடுவார்கள், எல்லா வேலையும் என் தலையில் விழுது என்று புலம்பாமல் இருக்கின்றீரா?

29. மகளின்,சகோதரியின் திருமணத்தில் அவர்களின் விருப்பம் எந்த அளவு இருந்தது, நீங்கள் தேர்வு செய்த சில வரன்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் தந்திருப்பீர்கள் ஆனால் சொந்தமாக அவரே தேர்வு செய்தாரா?

30. தந்தையிடம் பகிர்ந்துகொண்டு ஆலோசனை கேட்கும் எல்லா விடயங்களையும் தாயிடமும் பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்டுள்ளீர்களா?

31. பொம்பளைனா புடவை கட்டனும் ஆம்பளைனா வேட்டி கட்டனும் என்று தனக்கு மிகப்பிடித்த திரைப்பட நடிகன் வசனம் பேசும் போது அதனை அருவெறுப்பாக பார்த்துள்ளோமா?

32.இப்படி பேசும் நடிகனை/ அரசியல் தலைவனை ஒரு முறையாவது கண்டித்திருப்போமா?

கடுமையான முகத்தில் அறைய கூடிய சில கேள்விகள் இன்னும் உள்ளன ஆனால் தற்போது அதை பகிர்ந்துகொள்ளும் நிலை இல்லையென்பதால் பிறிதொரு சமயத்தில் அதை பார்ப்போம்.

மேலே உள்ள கேள்விகளில் எத்தனை 'ஆம்' சொல்லியிருக்கின்றோம், மேற்சொன்ன விடயங்களில் ஆணாதிக்கத்தை அழிக்க அரசியல் தலைவனோ, திரைப்பட நடிகனோ அவ்வளவு ஏன் உங்களை சுற்றியிருப்பவர்கள் கூட தேவையில்லை, நீங்கள் ஒருவரே போதும். வாழ்வில் ஒவ்வொரு இடத்திலும் கூடவே இருக்கும் சக மனுஷிகளின் பிரச்சினைகளை கவனிப்போம், அதற்காக விளிம்பு நிலை மனிதர்களையும், மற்ற கருத்துகளையும் பேசவே கூடாது என்பதில்லை ஆணாதிக்கத்தையும், பெண்ணியத்தையும் பற்றி ஒவ்வொருமுறை பேசும் போதும் பின்னூட்டமிடும்போதும் பதிவிடும்போதும் மேலே கேட்ட கேள்விகளில் ஒவ்வொரு முறையும் குறைந்தது ஒரு இல்லை என்ற பதிலையாவது ஆம் என மாற்றிவிட்டு பேசலாம்.

மற்ற சித்தாந்தங்களில் கொள்கைவிடயத்தில் ஆதரிப்பதற்கும் நடைமுறைக்கும் வித்தியாசம் உள்ளது, உதாரணமாக கம்யூனிச கொள்கையை இந்தியாவில் முழுமையாக கடைபிடிக்க முயற்சி செய்யும் போது அங்கே அரசியல்,சமூகம், தன் வாழ்வு, தன் குடும்பத்தின் வாழ்வு என எத்தனையோ புறக்காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் மேலே உள்ள கேள்விகளுக்கு ஆம் சொல்லி கடைபிடிக்க நம் ஒரு ஆள் ஒரே ஆள் போதும், இதனால் பாதிக்கப்படப்போவதும் யாரும் இல்லை, அதனால் இந்த ஆணாதிக்க விடயத்தில் வெறுமனே கொள்கை ஆதரவு என்று பேச்சில் மட்டுமில்லாமல் நடைமுறையிலும் கடைபிடிக்கலாம் யாரையும் பாதிக்காமலே...



குஷ்புவின் பேட்டியை ஆதரிக்கும்(இதை தவறு சொல்லவில்லை நான்) அதே நேரத்தில் அரசுவின் http://arrasu.blogspot.com/2005/09/blog-post_26.html இந்த பதிவில் வீக் என்ட் பார்ட்டியைப் பற்றி கவலைப்பட்டு 'வருங்காலப் பெண்மை பற்றிய நியாயமான கவலைகளுடன், ஒரு தாய்' எழுதியுள்ளாரே இது தான் நிதர்சனமான உண்மை நிலை இதற்கு மேலும் விளக்கமாக சொல்லத் தேவையில்லை என கருதுகின்றேன்.

இந்த பதிவை பிரதியெடுத்து உண்மையான/ மனசுக்கு நேர்மையான பதிலை எழுதுங்கள் பாஸா/பெயிலா என உங்கள் மனசுக்கு தெரியும், பின்னூட்டத்தில் எழுத வேண்டியதில்லை.

இதோ முதல் ஆளாக நான் இந்த பதிவை அச்செடுத்து பதிலளிக்கப் போகின்றேன், பார்ப்போம் பாசாகின்றேனா/பெயிலாகின்றேனா என்று

கற்பு அது உடல் சார்ந்ததா? மனம் சார்ந்தததா? இருக்கா இல்லையா என்று பேசும் நிலையில் தற்போது நான் இல்லை, இந்த சச்சரவுகள் அடங்கி பிறிதொரு நாளில் ஒரு நல்ல சூழ்நிலையில் திறந்த மனதோடு பேசலாம் நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது.

இவர்கள் என்ன செய்துவிட்டார்கள்?

இவர்கள் என்ன செய்துவிட்டார்கள் என தினமலர் இந்த குதி குதிக்கின்றது?!

காவல்துறை வேறு இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறது!!!

இங்கே படமெடுக்க யார் அனுமதித்தது?

Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com

இது தான் தினமலரின் இன்வேஸ்டிகேட் ஜர்னலிசம் போல...


எதுக்கும் ஒரு சிரிப்பு குறியீடு போட்டுக்கொள்கின்றேன் தர்ம அடியிலிருந்து தப்பித்துக்கொள்ள
:-)

நன்றி
தினமலர்
http://www.dinamalar.com/2005sep26/imp7.asp

புரட்சிப்பெண் குஷ்பு

குஷ்பு சமீபத்தில் "பெண்கள் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவு கொள்வது சகஜம்" என ஒரு புரட்சிகரமான கருத்தை வெளியிட்டுள்ளார், பொதுவாக புரட்சி பெண்கள் என்றும் பெண்ணியம் பேசுபவர்களும் கூறுபவர்கள் கற்பை பற்றி பேசும் போது அது என்ன கற்பு பெண்ணுக்கு மட்டும், ஆணுக்கில்லையா என்பார்கள்(என்பேன்), கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்பார்கள்(என்பேன்), தற்போது ஒரு படி மேலே போய் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவு கொள்வது சகஜம் என்கிறார் அது அவருடைய நிலை, அவருடைய கருத்து, அதில் தவறொன்றுமில்லை தான் அவர் விதிவிலக்காக(exceptional) இருப்பவர், அதை சகஜம் என்று கூறி பொதுமைபடுத்தியதால் தான் இத்தனை எதிர்ப்போ என்னவோ!!!

எனக்கென்ன ஒரு வருத்தம் குஷ்புவிடம் என்றால் அதென்ன கல்யாணம் ஆவதற்கு முன்பு (மட்டும்) என ஒரு கால வரையறை கல்யாணம் ஆன பின்பும் வேறு ஆண்களுடன் உறவு கொள்வது என்ன பாவமா?!

இத்தனை நாட்கள் குஷ்புவிற்கு கோவில் கட்டிய தமிழ்ரசிகர்களின் மீது எனக்கு ஒரு விதமான ஏளனமான பார்வை இருந்தது, ஆனால் இப்படிப்பட்ட ஒரு புரட்சிப்பெண்ணிற்கு தான் கோவில் கட்டினார்கள் என்பதற்கு என் தமிழ் ரசிகர்களை பார்த்து பெருமிதம் கொள்கின்றேன்.

போட்டி - வாத்து

நான் வாத்து படப்பதிவு போடாததினால் தமிழ்வலைப்பதிவர் என்று என்னை ஒத்துக்கொள்ளாமல் ஆங்காங்கே பேசிக்கொள்வதாக உளவுப்படை தெரிவித்துள்ளது, ஆதலால் உடனடியாக வாத்து படப் பதிவு போட்டு சின்னவனின் போட்டியிலும் கலந்துகொள்ள முடிவெடுத்துவிட்டேன்...

சரி இப்போ வாத்துக்கு எங்கே போவது.

நான் பார்க்கும் வாத்தெல்லாம் கீழே படத்தில் உள்ள நிலையில் இருக்கின்றது.
Image hosted by Photobucket.com

அதனால் இன்று அனிமல்பிளானெட்ஸ் தொலைக்காட்சியில் பார்த்த சில வாத்துகளை கைத்தொலைபேசியில் படம் பிடித்து இங்கே பதிவிடுகின்றேன்...

Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com

வாத்து படம் போட்டாச்சி, இப்போ ஒரு கவிதை எழுதவேண்டுமல்லவா

வாத்து சாதம் (எ) டக் ரைஸ்

மசாலா போட்டு
சமைத்து இந்திய
உணவாய் வந்தாலும்

மசாலா போடாமல்
அவித்து சீன
உணவாய் வந்தாலும்

பாதி அவித்துமீதி
பச்சையாய் சப்பான்
உணவாய் வந்தாலும்

உன் மேலடிக்கும்
காலங்காலமான கவுச்சி
சொல்கிறதே நீ

வாத்தென்று.

கருடபுராணமும் அன்னியனும்...


அந்தகூபம்:

கொலை செய்வோன், துரோகிகள் அடையும் நரகம். இதில் பல விஷப் பிராணிகளால் துன்புற்றுக் கண் தெரியாது ஆன்மா வருந்துவன்.

--
சாலையில் ஒன்னுக்கு போனவனையும், காரை நிறுத்தாமல் போனவனையும் கருடபுராணத்தை சொல்லி கொன்ற அம்பி அன்னியனுக்கும் இதே அந்தகூபம் தானா?

கிருமி போஜனம்:

தெய்வத்திற்கு படையல் செய்யாமல் உண்பவர்கள் பசியால் வருந்தித் தாமும் புழுக்களாய்த் தம்மை ஒத்த பெரும் புழுக்களால் புசிக்கப்படும் இடம்.
--
தெய்வம் என்ன அந்த அளவிற்கு பசியாகவா இருக்கின்றது? அல்லது கருடபுராணத்தில் சொல்லப்படும் தெய்வம் அந்த குறிப்பிட்ட, மனிதர்களாக வாழும் தெய்வங்களா? ஆனால் எனக்கு கிருமிபோஜனம் தான் கண்டிப்பாக...

பன்றிமுகம்:

அதர்மமாகத் தண்டிப்பவனும் மற்ற தீமை செய்வோரும் அடையும் பன்றி போன்ற முகத்தை உடைய நரகம்.
--
சிவனேன்னு தூங்கிக் கொண்டிருந்தவனையும், காரை நிறுத்தியவனையும் அதர்மமாக கொன்ற அன்னியனுக்கும் பன்றிமுகம் தானா?

கும்பிபாகம்:

பிற உயிரைக் கொன்று தின்றோரைக் கும்பியிற் பாகப்பட்ட பொருளைப் போல் வருத்தும் இடம்.
--
அது சரி ஆடு,கோழி இன்ன பிற உயிர்களை கொன்று தின்றால் கும்பிபாக தண்டனை... நெல் போன்ற உயிருள்ள பயிர்களை கொன்று தின்றாலும் இதே கும்பிபாகம் தானா? அப்படியெனில் உலகில் உள்ள எவனுமே கும்பிபாகத்திற்கு தப்பமுடியாது அன்னியன் உட்பட.

இது போல 28 தண்டனைகள் கருடபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

முனுக்கென்றதற்கெல்லாம் கருடபுராணம் சொல்லி பலர கொன்ற அன்னியன் காதலியின் தப்புக்கு காதலியை கொல்லாமல் விட்டதற்கு அன்னியனுக்கு என்ன தண்டனை என தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.

சாதிக்கொரு நியாயம் என போதித்த இயக்குனருக்கும் வசனம் எழுதியவருக்கும் என்ன தண்டனை என கருடபுராணத்தில் தேடிப்பார்த்தேன் அதுவும் கிடைக்கவில்லை.

சதா பயத்திலும் புத்திசாலித்தனமாக மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளிக்குச் சென்று அடைக்கலம் பெறுகிறாள். அந்த சண்டை நடக்கும் நேரத்தில் அம்பியின் பெர்சனாலிடியும் வந்து விடுகிறது.
(நன்றாக கவனியுங்கள் மற்றவர்களுக்கு இல்லாத புத்திசாலித்தனம் சதாவிற்கு மட்டும் வந்துவிடுகின்றது, அங்கதான் நிற்கின்றார் அம்பி...)

இப்படியெல்லாம் பேசுபவர்களுக்கு கருடபுராணத்தில் ஏதாவது தண்டனை உண்டா என பார்த்தேன், அதுவும் இல்லை.


சமீபத்தில் கருடபுராணம்(ஆங்கிலத்தில்) PDF கோப்பாக என்னிடம் உள்ளது, பிரதி வேண்டுபவர்கள் kuzhali140277(at)yahoo(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பவும், இலவசமாக கருடபுராண pdf கோப்பு அனுப்பிவைக்கப்படும்.

இப்படியெல்லாம் கருடபுராணத்தின் புகழை பரப்புவதால் கிருமிபோஜனம், கும்பிபாகம் போன்ற தண்டனைகள் எனக்கு கிடைக்காமல் இருக்குமா?

.யிர் கொடுத்து தமிழ் என்று கூவியவர்களுக்கு ஒரு கேள்வி

உங்களக்கு பிடிக்காதவர் எது செய்தாலும் அதை கேலி,கிண்டல் செய்பவர்களே, உங்களுக்கு பிடிக்காதவர் சொன்னார் என்பதற்காக தமிழ் உணர்வை கேலி செய்கின்றீரே! நாளை உங்களுக்கு பிடிக்காத அவர் எல்லோரும் அவரவர்கள் தாயை நேசிக்க வேண்டும் என்று கூறினால் உங்கள் நிலை என்ன? அப்போதும் இதே மாதிரியான எதிர்நிலையை எடுப்பீர்களா? உங்களுக்கு தமிழ் உணர்வு உள்ளதா? இல்லையா?!

காதில் புகை

நானும் பதிவுபோட்டு நிறைய நாட்களாகின்றதே, அட நம்ம வீ.எம். நம்மை காணாமல் போனவர்கள் பட்டியிலில் சேர்த்துவிட்டார், அதுவும் இல்லாமல் ஒரு முறை நினைவூட்டல் வேறு செய்துவிட்டார், தற்போதைக்கு எழுதும் அளவிற்கு நேரம் (டேய்... அடங்கு அடங்கு என சொல்வது எனக்கு கேட்கின்றது...)இல்லையே, சரி ஒரு படப்பதிவாவது போடலாம் என நினைத்தேன்...

சரி நம்ம இருப்பையும் சொல்லிய மாதிரி ஆனது, சிலர் புகையற மாதிரியும் ஆனது என்று தான் நம்ம மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி அவர்கள் இன்று பி.பி.சி. தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பேசியதை கைத்தொலைபேசியை பயன்படுத்தி படம் பிடித்து இங்கே பதிக்கின்றேன்.

Image hosted by Photobucket.com

விஜயகாந்தின் முதிர்ச்சி

வணக்கம் விஜி,
எல்லோருக்கும் கேப்டன்னாலும் எனக்கு என்னமோ உங்களை விஜினு கூப்பிடறதுதான் மிகவும் பிடித்திருக்கு, எங்க சொந்தகார பயபுள்ள சின்ன வயசிலருந்தே உம்ம ரசிகர், நீங்க கேப்டனாகறதுக்கு முன்னாடி என் கிட்ட விஜி அண்ணன், விஜி அண்ணன்னு தான் பேசுவான், உங்களுக்கு யாரு கேப்டன்னு பெயர் வைத்தார்களோ எனக்கு தெரியாது, ஆனால் அவனோடு கேப்டன் பிரபாகரன் படம் பார்த்துட்டு வந்து நான் மன்சூரலிகான் நடிப்பை தலையை சொறிந்து கொண்டே பெரபாகரானு வசனம் பேசி நடித்து காட்டிக்கொண்டிருந்தபோது முதல் முதலில் கேப்டன்னு சொன்னது அவன்தான் இப்போ கூட உங்க மாநாட்டுல ஒரு ஓரமா கண்டிப்பாக இருப்பான் (பயபுள்ள அன்னைக்கி அவன் பொழப்பு போச்சி), இப்போ கூட மன்றத்து ஆளுங்க பேரில் கொஞ்சம் கோபமா இருக்கான், இரண்டாயிரம் செலவு செஞ்சும் அவன் பெயரை சுவரொட்டியில் போடலையாம், அவன் விஜி அண்ணனை கேப்டன்னு கூப்பிட்டாலும் இன்னும் எனக்கு நீங்க விஜிதான்.

சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்னு கலக்கலா உங்க அரசியல் பிரவேசத்திற்கு தேதி குறிச்சிங்க செப்டம்பர் 14, வருவேன்,வந்தாலும் வருவேன்,எல்லாம் அவன் கையில், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்னு வாய்ஸ் குடுக்காம, சொன்ன மாதிரியே வந்துட்டீங்க அப்பு, அந்த விதத்தில் சொன்ன சொல்லை காப்பாத்திட்டிங்க, அட நீங்க மற்ற அரசியல் கட்சிகளைவிட வித்தியாசமானவர், மக்கள் மாற்றத்தை விரும்புறாங்க அப்படினு சொன்னீங்க, அது எனக்கு என்னமோ சரியா படலை, அதனால் ஏதோ என்னால முடிந்தது விஜயகாந்த்தின் விஜயம் ஜெயமாகுமா? அப்படினு ஒரு பதிவு போட்டேன், அட இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பானு நினைத்தாலும் இப்போ இருக்குற அரசியல்வாதிகளை தாண்டி இவர் ஒன்னும் செய்யலை அதனால இன்னொரு அரசியல்வாதியா இருந்துட்டு போங்க அப்படினு நினைத்தேன், ஆனா இன்னும் அரசியலுக்கு வருவதற்கு முன்பே உங்க ஆண்டாள் அழகர் மண்டபத்துக்காக சுத்தி சுத்தி அடிச்சிங்களே கள்ளக்குறிச்சியில், அவங்ககிட்டயே போய் நின்னிங்களே(இரண்டு காந்துகளும் இரண்டு மண்டபங்களும்) அடடா இவர் சாதரண அரசியல்வாதியில்லையா இப்ப இருக்குறவங்களை முழுங்கி ஏப்பம் விடுவாரு டோய் அப்படினு நினைத்தேன்,

எனக்கு உங்க நிர்வாகத்திறமையில் முழு நம்பிக்கை உண்டு, சும்மாவா நடிகர் சங்க கடனை அடைச்சிங்க கைக்காசை போடாமல்,தங்கர் பச்சானை மன்னிப்பு கேட்கவைத்து ஏழு மாங்காய் அடிச்சிங்க மீண்டும் நடிகர் சங்கத் தலைவரானிங்க(ஆமா இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம்னே பெயர் இருக்கே,தமிழ்நாடு நடிகர் சங்கம்னு எப்போ மாற்றப்போறிங்க), இப்போ பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகளுக்கு இணையா ஒரு மாநாடு நடத்துறிங்க அதுவும் சொந்த காசை போட்டு பாராட்ட வேண்டியது ஆனால் திடீரென யாரும் மாநாட்டு மேடையில் நன்கொடை கொடுத்தா வாங்கிப்போம் அப்படிங்கறிங்க, ஒன்னும் புரியலை விஜி, மாநாட்டு மேடையில் நன்கொடை கொடுங்கனு சொல்றீங்களா? நம்ம பயபுள்ளைகளுக்கு ஒன்னும் புரியாது பாருங்க அதனால கொஞ்சம் தெளிவா சொல்லிடுங்க விஜி.

உங்க பேட்டி விஜய் தொலைக்காட்சியில் வரப்போகுது அப்படின்ன உடனே எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி, என்னடா நம்ம விஜி தொலைக்காட்சிக்கெல்லாம் பேட்டி தரமாட்டாரே அவரோட கொள்கையாச்சே அது, அவரே மற்ற நடிகர்களை தொலைக்காட்சிக்கெல்லாம் பேட்டி தரக்கூடாதுனு தடா போட்டவராச்சேனு நினைச்சேன், அப்புறம் தான் ஞாபகம் வந்துச்சி நீங்க கட்சி கொள்கையிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கையில்லைனு ஏற்கனவே பேட்டியில சொல்லியிருந்தீங்க, அப்புறம் நீங்க அரசியல்வாதியா மாறி ரொம்ப நாளேச்சே அப்படினு.

சரி ஏதோ பேச வந்து ஏதேதோ பேசிக்கிட்டிருக்கேன், உங்க பேட்டியை குமுதத்தில் படித்தேன், அட நீங்க முதிர்ச்சியா பேட்டி தந்ததா பெரியவங்கலாம் சொன்னாங்க, சரி நம்ம விஜி மத்த அரசியல்வாதிங்க மாதிரி இல்லப்பா அரசியல் முதிர்ச்சியாத்தான் இருக்காருனு சந்தோசமா விகடன் படிக்க போனங்க, விஜயகாந்த் அரசியல் பிரகடனம் அப்படின்ற தலைப்புல மதன் எடுத்த பேட்டியைப்பற்றி மதனே பேசியிருக்காருங்க, உங்களுக்கு தமிழ் உச்சரிப்பே வரலைனு தொடக்க காலத்தில் படங்களில் மூன்று நாளில் நீக்கிய கதை அப்புறமா நீங்க ரமணால கண்ணீர் வர பேசியது, நீங்க கடினப்பட்டு தமிழ்திரைப்படத்துல வளர்ந்த கதையெல்லாம் சொன்னாருங்க, நெகிழ்ச்சியா இருந்தது.

"மனைவி என்பதே இன்றைய அரசியலில் எக்ஸ்ட்ரா கான்ஸ்ட்டிடியூஷனல் அத்தாரிட்டி" என்கிற மாதிரி ஆகிப்போச்சே, அப்புறம் இன்னும் என்னென்னமோ சொன்னாரு மதன், அதுக்கு நீங்க ரெண்டு பத்தியில் ஒரு நீளமான பதில் சொன்னீங்க,நீங்க எவ்வளவு உயர்வா பெண்களை நினைக்கின்றீர்னு அப்போதான் புரிந்தது எனக்கு, மேலும் "எல்லாத்துலயும் என்னோடு பங்கெடுத்துக்கற என் மனைவிக்கு பொதுத்தொண்டிலும் உரிய பங்கு கொடுத்தா அதை எப்படி தப்புனு சொல்லமுடியும் வாழ்க்கையில எல்லா வகையிலும் துணையா நிக்கற மனைவிக்கு உரிமை கொடுக்காம வேற ஒருத்தரை எப்படி கூட்டிக்கிட்டு போக முடியும்?" அப்படிங்கற வரிகளை படித்த உடனே தூக்கி வாரி போட்டுடுச்சிங்க, அப்போ அண்ணி தான் வாரிசுங்கறிங்க, சரி விடுங்க எந்த கட்சியல தான் வாரிசு இல்ல அப்படினு மனச தேற்றிக்கொண்டு அடுத்த வரிக்கு போனேன்.

"வாழ்க்கையில எல்லா வகையிலும் துணையா நிக்கற மனைவிக்கு உரிமை கொடுக்காம வேற ஒருத்தரை எப்படி கூட்டிக்கிட்டு போக முடியும்? இதுக்காக ஒரு வைப்பாட்டியை ஏற்பாடு பண்ணி கூட்டிக்கிட்டு போக முடியுமா இல்ல வேற பொண்ணுங்களை அழைச்சிக்கிட்டு போகமுடியுமா?..." நீங்க சொன்னதா மதன் சொன்ன இந்த வரியை படித்த உடனே பகீர்னு ஆனது எனக்கு இன்னமும் இதனோட அர்த்தம் முழுசா புரியலை, ஆனால் உங்கள் முதிர்ச்சி மட்டும் நன்றாக புரிகின்றதுங்க விஜி.

இப்போ இருக்கின்ற அரசியல்வாதிகளை விட நீங்கள் இந்த விடயத்தில் நிச்சயம் வித்தியாசமானவர்தாங்க விஜி.

நீங்க என்னதான் பழைய சோறும் பச்சமிளகாயும் சாப்பிட தயாராயிருந்தாலும் என் சொந்தகார பயப்புள்ள மனசு தாங்காது விஜி. அதனால 2006 தேர்தல்ல சரியான ஆதரவு கிடைக்கலைனா அண்ணி சொல்ற மாதிரி கேட்டு உங்க சொத்து பத்த காப்பாத்திக்குங்க விஜி.

வாரிசு அரசியலுக்கு ஜே!

கொஞ்சம் வழக்கமான முத்திரைகளை ஒதுக்கிவிட்டு இதை பார்ப்போம், செப்டம்பர் 7, 2005 அன்று வெளியான இந்தியாடுடே பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை வாரிசுகளுக்கு ஜே! அதில் சில புள்ளிவிவரங்கள், கருத்துக்கள் எழுதப்பட்டிருந்தன.

வாரிசு அரசியல் என்பது மன்னராட்சி மனோபாவத்தின் எச்சம், ஆனால் இது உலகளவில் நடைபெறுகின்றது, தமிழகத்தில் இது தலைதூக்கியது 1990க்கு பிறகு, இதில் ஸ்டாலின் அரசியல் பிரவேசம், வாரிசு அரசியல் என இந்தியா டுடே கணக்கிலெடுக்கவில்லை,அது ஸ்டாலினின் வளர்ச்சியை 30 ஆண்டுகால அரசியல் களப்பணிக்கான வளர்ச்சியாகத் தான் அடையாளம் காண்கின்றது.

Image hosted by Photobucket.com

மு.க.ஸ்டாலின் மீது வாரிசு அரசியல் என்ற ஆயுதம் பிரயோகிக்கப்படுவது திமுகவை தாக்குவதற்காண பலவீனமானப்புள்ளி என்கிறது இந்தியாடுடே.

சில சமயங்களுக்கு முன் வாரிசு அரசியல் பற்றி நான் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் வாரிசுகளின் அரசியல் பிரவேசத்தின் முக்கிய காரணம் கட்சி உடையாமல் காப்பாற்ற வேண்டுமென்பது. இதே கருத்தை இந்தியா டுடேவும் கட்சி என்ற தேனீக் கூட்டத்தை பணபலத்தாலும் கலைக்கும் முயற்சிகள் அரசியல் ராஜதந்திரமாக உருவானது 90களில்தான், காங்கிரசின் எம்.எல்.ஏ. ஒருவர் கூட்டணியில் இல்லாத அதிமுக வை பாராட்டி பேசுவார், அல்லது கட்சியின் உத்தரவை மீறி எதிரிக் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார், அதுவரை ஒரு கட்சிக்கு சொந்தமாக இருந்த எம்.எல்.ஏ. திடீரென வெளிப்படையாக இன்னொரு கட்சி ஆள்போல் செயல்படுவார். இதெல்லாம் கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவாகிய காலகட்டம் இது. இப்படிபட்ட நிலையில் "கட்சி கையைவிட்டு நழுவாமல் இருப்பதற்கான சூட்சமமாக வாரிசு அரசியல் உருவெடுத்தது" என்று குறிப்பிடுகின்றது.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

இன்னும் பல காரணங்களை இந்தியாடுடே வாரிசு அரசியல்களுக்கு காரணமாக இயம்புகின்றது, வாரிசு அரசியல் பற்றிய மக்களின் கணிப்பு என்ன என்பதையும் இந்தியாடுடே புள்ளிவிவரமாக வெளியிட்டுள்ளது.

தமிழக அளவில் வாரிசு அரசியலை ஏற்றுக்கொள்பவர்கள் 48%, இது ஒரு மிகப்பெரிய சதவீதம், பொதுவாக வாரிசு அரசியல் தவறானது என்ற கண்ணோட்டமிருப்பதாக கூறப்படும் நேரத்தில் 48% மக்கள் வாரிசு அரசியலை ஏற்பதாக கூறுவது சில கண்ணோட்டங்களை உடைத்தெறிகின்றது.

ஆனால் இந்திய அளவில் வாரிசு அரசியலை எதிர்ப்பவர்கள் 63%, தமிழக அளவில் 48% வாரிசு அரசியலை ஏற்பவர்கள் தேசிய அளவில் 37% தான் ஆதரிக்கின்றனர்.

Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.com
இது புலப்படுத்துவது ஒன்றுதான் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியில் அல்லது அவர்கள் ஆதரிக்கும் கட்சிகளில் வாரிசுகளின் அரசியல் அவர்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல, அவர்கள் கட்சியை வெறுக்கவேண்டும் என்பதற்கு வாரிசு அரசியல் என்பது ஒரு பலவீனமான காரணமாக மட்டுமே இருக்கும், அதாவது வாரிசு அரசியல் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவரவர்கள் நம்பும் கட்சியை வெறுக்க யாரும் தயாராக இல்லை. வாரிசு அரசியல் என்ற காரணத்திற்காக அவர்கள் அனுதாபியாக இருக்கும் கட்சி சிதறுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.

தமிழக அளவில் 48% வாரிசு அரசியலை ஆதரிப்பவர்கள் இந்திய அளவில் 37% தான் ஆதரிக்கின்றனர், அதாவது அவர்களுக்கு அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் வாரிசு அரசியல் பிரச்சினை அல்ல, ஆனால் மற்ற கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்க கூடாது என்று கருதுகின்றனர், இதன் வெளிப்பாடுதான் தேசிய அளவில் வாரிசு அரசியலை ஆதரிப்பது குறைவாக உள்ளது.அதாவது ஸ்டாலினோ,அன்புமணியோ, வாசனோ அரசியல் வாரிசாக இருப்பது பிரச்சினையில்லை ஆனால் ராகுலோ,பிரியங்காவோ அல்லது தேசிய அளவில் மற்ற வாரிசுகளோ அரசியலுக்கு வருவதை பிரச்சினையாக கூறுகின்றனர்(?!).

இன்றும் வாரிசு அரசியலை ஊக்குவிக்காத கட்சிகளாக மதிமுகவும் கம்யூனிஸ்ட்களும் இயங்குகின்றனர் (பாஜகவையும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை இதில் சேர்த்துக்கொள்ளலாம்)

இன்று வாரிசு அரசியலை எதிர்ப்பவர்கள் ஒன்று எந்த கட்சி வட்டத்திலும் சிக்காதவர்களாக இருப்பார்கள் அல்லது அவர்கள் அனுதாபியாக இருக்கும் கட்சியில் தற்போதைய நிலையில் வாரிசு அரசியல் இல்லாத நிலையிருக்கும் ஆனால் நாளை இதே கட்சியில் வாரிசு அரசியல் இருக்குமானால் அதை எதிர்ப்பவர்கள் மிகச்சிலராகவே இருப்பர், இன்று வாரிசு அரசியலை எதிர்ப்பவர்கள் நாளை அந்த நிலையில் அந்த வாரிசு அரசியலை ஆதரிப்பார்கள்.

தனி மனித வழிபாடு இருக்கும் வரை இந்த நிலை மாறுவது மிகக்கடினம்.

மன்னராட்சி மனோபாவத்திற்கும் வாரிசு அரசியலுக்கும் முக்கிய காரணம் கொள்கையின் மீதான பிடிப்பைவிட தலைவனின் மீதான பிடிப்பு தான் காரணம், இதற்கு படித்தவர்கள்,படிக்காதவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லை, இதற்கு பெரும்பாலானோர் விதிவிலக்குமல்ல.

சிங்கை எழுத்தாளர் 'தேடி' கோவிந்தசாமி அவர்களின் சிறுகதையில் குறிப்பிட்டதைப்போல தலைவனுக்காக கொள்கை என்பதை கைவிட்டு கொள்கைக்காக தலைவன் என்ற நிலை வரும்போது தான்(நானும் விதிவிலக்கல்ல) இந்த மன்னராட்சி மனோபாவமும் வாரிசு அரசியலும் முடிவுக்கு வரும் ஆனால் இன்றைய நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சியிலும் இந்த நிலை இல்லை, அதற்கு நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் போலுள்ளது. அது வரை தான் அனுதாபியாக இருக்கும் கட்சியில் வாரிசு அரசியல் வரும்வரை வாரிசு அரசியலை எதிர்த்துக் கொண்டிருப்பது தான் தொடரும்.

புரட்சி புரோகிராமர்

நம்ம புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி கலைஞர் எல்லாரையும் பார்த்து நமக்கும் ஏன் எதுனா பட்டம் போடக்கூடாது அப்படினு நினைச்சேன், அட நம்ம படிச்சி வாங்கியது ஒரு பட்டம்னா ப்ளாக்ல நமக்கு குடுக்குற பட்டம் எக்கச்சக்கம், என்ன இருந்தாலும் நாமலே நமக்கு ஒரு பட்டம் கொடுத்துக்கிறதுல இருக்கிற சொகம் வேறெதுக்குமில்லை

சரி ஆனா பட்டத்துல மொத வார்த்தை புரட்சினு இருக்கனும், ஆமா நீ என்ன பெரிய புடுங்கி புரட்சி செஞ்சனு நம்ம தேசிகனோட வேதாளம் கேட்குது,
அதனால என்ன மத்த புரட்சிகள்ளாம் என்ன செஞ்சிட்டாங்க அப்படினு கேட்டேன், அது தெரியாம வேதாளத்தின் தலை இஞ்சி நூறாக சுக்கு நூறாக உடைந்துவிட்டது (இனி தேசிகனுக்கு வேதாளம் தொல்லை இருக்காது.).

தலைவர், தலைவி(அட நமக்கு இது வராது இருந்தாலும் இதை சொல்லலைனா ஆணாதிக்கவெறியன்னு போட்டு தள்ளிடுவாங்க), கலைஞர் எல்லாம் ஏற்கனவே சிலருக்கு இருக்கு, அதனால சரி புரட்சி மனிதன் அப்படினு போட்டுக்கலாம் பார்த்தேன் அட நம்ம வலைப்பதிவுல உள்ள புரட்சி மனிதர்களை பார்த்தவுடனே நமக்கு இந்த புரட்சி மனிதன் பட்டம் சரியாவராதுனு தோணிச்சி.

புரட்சி நடிகன்னு பட்டம் போடலாம்னா நான் நடிகன் இல்ல, சரி புரட்சி பிள்ளைனு போடலாம்னா பிள்ளை சாதிக்காரங்கலாம் பிரச்சினைக்கு வந்திடுவாங்க, ஆனா என்னனாலும் புரட்சினு பட்டபெயர் போட்டே ஆகனும்னு பிடிவாதமா இருந்தேன், சரி நம்ம பொட்டி தட்டுற தொழிலை சேர்த்து புரட்சி புரோகிராமர்னு போட்டுக்கலாம்னு தோணிச்சி.

நாளைக்கு தேசிகன் வேதாளம் மாதிரி யாரும் வந்து என்ன பெரிய புரட்சி செஞ்சிட்ட புரட்சி புரோகிராமர்னு பட்டம் போட்டுகிட்டனு கேட்க கூடாதில்லையா அதான் என்ன தகுதியிருக்கு அப்படினு யோசித்தேன்

ஜாவா(நம்ம தருமியோட ஜாவா இல்லை) கிளாஸ், கம்பைளர்,டீ-கம்பைளர் லாம் தெரிந்தவர்கள் இப்பவே அப்பீட் ஆயிடுங்க

ஜாவால புரோகிராம் எழுதிய பிறகு கம்பைள்(compile) செய்யனும் அதை கம்பைள் செஞ்சா கிளாஸ் (அப்படியே நமக்கு ஒன்னரை கிளாஸ் போடுங்கனு யாரும் கேட்டுடாதிங்க இது class) அப்படினு ஒன்னு கிடைக்கும், இது இருந்தா போதும் அந்த ஜாவா பைல் தேவையேயில்ல.

இதுல என்ன மேட்டர்னா நாங்கெல்லாம் எங்க ப்ராடெக்டை வாடிக்கையாளர் கிட்ட கொடுக்கும் போது கிளாஸ் கொடுத்தா போதும், ஜாவா பைல் தரத்தேவையில்லை.

இந்த பாடாவதி பசங்க டீ-கம்பைளர்னு (de-compiler) ஒன்னு கண்டுபிடிச்சிட்டானுங்க, இந்த கிளாஸ் பைல அந்த டீகம்பைளர்ல குடுத்தா அது ஏற்கனவே இருந்த ஜாவா பைலை கொடுத்துவிடும். அதனாலா நாங்க ஜாவா புரோகிராம்ல எழுதின லாஜிக்(பெரிய்ய பொல்லாத லாஜிக்) எல்லாம் தெரிந்துவிடும்.

உலக ரகசியம் தெரிந்துவிடும் அதனால இன்னொரு கும்பல் கிளம்புச்சி, அப்வியூசிகேஷன் (obfuscation) அப்படினு சொல்லி ஒரு அப்ளிகேஷன் எழுதி துட்டு பார்க்க ஆரம்பிச்சாங்க, இது என்னனு கேட்கிறிங்களா

இந்த கிளாஸ் பைல அப்வியூசிகேஷன் செஞ்சோம்னா உள்ள எல்லாத்தையும் கலைச்சி போட்டு விடும், டீகம்பைளர் வைத்து டீ-கம்பைள் செய்து பார்த்தா ஒன்னும் புரியாது, அதனால எல்லாத்தையும் அப்வியூசிகேட் செய்துடுவோம்

இதுல பார்த்திங்கனா புளோ அப்வியூசிகேஷன் (flow obfuscation), நேம் அப்வியூசிகேஷன் (name obfuscation) அப்படினு இரண்டு இருக்கு, நேம் அப்வியூசிகேஷன்னா இப்போ height , weight,length அப்படினு எழுதினா jingilika, jikka, pumbilika னு பெயரை மாத்திடும், டீ-கம்பைள் செய்து பார்த்தா ஒரு மண்ணும் புரியாது

புளோஅப்வியூசிகேஷன் (flowobusication) அப்படினா இப்போ சைதாப்பேட்டையில இருந்து சிங்கப்பூர் வரனும்னா சைதாப்பேட்டையிலிருந்து மீனம்பாக்கம் வந்து அங்கேயிருந்து சிங்கப்பூருக்கு ஏரோபிளேன் புடிச்சி சாங்கி ஏர்போர்ட்டுக்கு வரணும் இது தான் நான் ஜாவால எழுதியிருக்கிறதுனா புளோஅப்வியூசிகேஷன் என்ன செய்யும்னா சைதாப்பேட்டையிலருந்து மதுரைக்கு போயி அங்கேயிருந்து டெல்லி போய் பிறகு அங்கிருந்து கொரியா போயி அங்கேயிருந்து ஜப்பான் அய்யய்யோ வேண்டாம் வேண்டாம் அங்கேயிருந்து சிங்கப்பூர் வரும், டீ-கம்பைள் செய்து பார்த்தா ஒரு மண்ணும் புரியாது.

ஆனா நான் எழுதுற புரோகிராம் லாம் அப்வியூசிகேஷன் செய்யவே தேவையில்லை, நான் எழுதறதே அப்படித்தான் எழுதுவேன் நானே இரண்டு நாளைக்கு பிறகு எடுத்து பார்த்தா புரியாது, அப்படி இருக்க சொல்ல டீகம்பைள் செய்து பார்த்தா என்ன வெளக்கெண்ண விளங்கும், இப்போ சொல்லுங்க நான் புரட்சி புரோகிராமர் தானே.

சரினு சொல்லி என் கொசுமெயில் சாரி சாரி ஈமெயில் signatureல் புரட்சி புரோகிராமர்னு போட்டேன், இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புகள் "கங்கிராட்ஸ், யூ காட் புரமோஷன்?" அப்படினு, என்ன சொல்லுங்க அப்படின்னேன், இல்ல உன் டெசிக்னேஷன் மாறியிருக்குதே அப்படின்னு கேட்டேன், "வாட் ஈஸ் தட் பொர்ரட்ட்ட்சி" அப்படி ஒரு டெசிக்னேஷன் நம்ம ஆபிஸ்லயே இல்லையேனு பிறகு நான் நம்ம புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி கலைஞர் எல்லாரை பற்றியும் சொன்னேன் அவங்க புரட்சி பற்றியெல்லாம் சொன்னேன், மரமண்டைங்களுக்கு நம்ம புரட்சிதலைவர்,புரட்சிதலைவி,புரட்சிகலைஞர் இவங்களோட புரட்சி பற்றியெல்லாம் ஒன்னுமே தெரியவேயில்லை, என்ன மக்கள் இவங்க, இவங்களையெல்லாம் தெரியாம.

அப்பாலிக்கா இந்த அப்வியூசிகேஷன் மேட்டரை சொன்னேன், ஆனால் இந்த அப்வியூசிகேஷன்லாம் புரட்சியில்லை ஏன்னா பல புரோகிராமர்ங்க இப்படிதான் எழுதறாங்க அப்படினு ஒருத்தர் வயித்தெரிச்சல்ல சொன்னாரு, சே எங்க போனாலும் இந்த வயித்தெரிச்சல் பார்ட்டிங்க தொல்லை தாங்கலை யாராவது மந்திரியானாலும் வயிறெரியறாங்க, யாராவது புரட்சி செய்தாலும் வயிறெரியறாங்க, சரி அதைவிடுங்க ஒரு புராஜெக்ட் வேலைக்கு ஆறுமாசம் ஆகுதுனு வச்சிக்குங்க, மொதல் அஞ்சு மாசத்துல 5% வேலைதான் நடந்து இருக்கு அப்போ மீதி வேலையை முடிக்க எத்தனை மாசம் ஆகும் அடடே உடனே கால்குலேட்டர் எடுக்காதிங்க,95 மாசம் ஆகுமா?! ஆனால் மீதி 95% வேலை ஒரே மாசம் தான் இது புரட்சிதானே, அட எல்லா IT புராஜெக்ட்டும் இப்படித்தானே இதில் என்ன பெரிய்ய புரட்சி அப்படினு சொல்றாங்க....

மக்கா இருடா உன் மேலாளர் கிட்ட போட்டு தரேன் உனக்கு இனி ஆறு மாசமெல்லாம் கிடையாது அரை மாசம் தான்னு யாரும் கெளம்பிடாதிங்கோ அப்பாலிக்கா நான் ப்ளாக் பக்கமே வரமுடியாம போய்விடும் (பெனாத்தல் சுரேஷ் குஜாலாயிடுவார்)

தேசிகன் வேதாளத்திற்கு மற்ற புரட்சியாளர்களைத் தெரியும் அதனால் அவங்க என்ன புரட்சி செய்தாங்கனு கேட்டு வேதாளத்தையே போட்டு தள்ளியாச்சி, ஆனா நம்ம பொரட்சியாளர்களை தெரியாதவங்ககிட்ட என்ன சொல்றது, அதனால் ஏதாவது பெரிய மனசு செஞ்சி இந்த பட்டத்தை நான் தக்கவைத்துக்கொள்ள எதுனா யோசனை இருந்தா சொல்லுங்க. நம்ம வலைப்பதிவர்களுக்கும் பட்டமளிப்புக்கும் அவ்வளவு நெருக்கமாச்சே அதான் இங்கே வந்து கேட்கிறேன்.

புரட்சி புரோகிராமர் என்பதை நான் காப்பிரைட் செய்துவைத்துள்ளதால் யாரும் இதை பயன்படுத்தக்கூடாது, மீறுபவர்கள் மீது கி.மு.32000 இ.பி.கே நூத்திமுப்பத்திரெண்டரையாவது சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

சாருவை மிரட்டிய ரசிகர்கள்

சாருநிவேதிதாவின் இணையதளம் வேலை செய்யவில்லை, எனவே சுட்டிகள் கொடுக்க முடியவில்லை

சாருநிவேதிதா சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த்தை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார், ஆகா கெளம்பிட்டாங்கய்யா அவரு ரசிகர்கள், அவங்க எல்லாம் யாரோட ரசிகர்கள் ஆன்மீகவாதி யின் ரசிகர்கள் அல்லவா?! வன்முறையின் ராஜா என மற்றவர்களை பேசுபவரின் ரசிகர்கள் அல்லவா?! அன்பின் இமயமலை அல்லவா?! அதான் ஏகப்பட்ட ஈ-மெயில் கொசு மெயில் மிரட்டல்கள் அனுப்பினர் சாருவிற்கு

அதைப்பற்றி அவர் சொன்னதை நினைவில் இருந்து எழுதுகின்றேன், "நடிகர் ரஜினிகாந்த்தை விமர்சித்து எழுதிய கட்டுரைக்கு ஏகப்பட்ட மிரட்டல் மெயில்கள் 'டேய் நாயே' என்று ஆரம்பித்து 'அடிவாங்கி சாகதடா' என்று முடிந்த மெயில்கள், அதை ஒரு முறை கூட படித்து பார்க்காமல் முதல் வரியையும் கடைசி வரியையும் தவிர வேறு எதையும் படிக்காமலே அழித்துவிடுவது அராஜகம் தான்" என்று எழுதியிருந்தார்.

ஆகா படித்த ஈமெயில், கொசு மெயில் அனுப்பத் தெரிந்த ரசிகர்களே இப்படி மிரட்டினால் படிப்பறியாத கொடி தோரணம் கட்-அவுட் கட்டும் ரசிகர்கள் எப்படியிருப்பார்கள்(?!) நல்ல வேளை தமிழ்நாட்டை யார் யாரிடமிருந்தோ காப்பாற்ற ஆண்டவனை கூப்பிட்டார்கள் ஆனால் இவர்களிடமிருந்து அந்த ஆண்டவன் தான் இந்த தமிழ்நாட்டை காப்பாற்றினாருங்கோ!!!

151 ஆவது பதிவாக ரஜினியை விமர்சித்து எழுதியவுடனே 152வது பதிவாக சில மாதங்களுக்கு முன் திரைப்படங்களில் புகைப்பிடிப்பதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட சட்டத்தை அப்போதே விமர்சித்து எழுதாமல் இப்போது மருத்துவர் இராமதாசுவை விமர்சித்து எழுதினார், பாவம் சாரு அவருக்கு என்ன கட்டாயமோ நடிகர் ரஜினிகாந்த்தை விமர்சித்து எழுதியவுடன் மருத்துவர் இராமதாசுவைப் பற்றியும் எழுத வேண்டுமென என்ன செக்கியூலரிச பிரச்சினையோ.

அது சரி நடிகர் ரஜினியைப்பற்றி எழுதியவுடன் ஈமெயில் கொசுமெயில் மிரட்டல் விட்டார்களே விசிறிகள், அதே சாரு இராமதாசுவைப் பற்றி எழுதியவுடன் எந்த ஈமெயில் மிரட்டலோ கொசுமெயில் மிரட்டலோ வந்ததாக சொல்லவில்லையே ஒரு வேளை ஈமெயில் கொசுமெயில் அனுப்ப தெரிந்த ஒரு பாமக தொண்டன் கூட இல்லையோ என்னமோ ஹா ஹா....

வாழ்க அன்பின் இமயமலை ரசிகர்கள்

ஏதோ ஒரு அப்பாவி என்னமோ சொல்றாரே என்னங்க கொஞ்சம் சத்தமாதான் சொல்லுங்க என்னது

'அவங்கள்ளாம் எத்தனை ஈமெயில் கொசுமெயில் அனுப்புனாங்களா...' அட அவங்ககிட்டயே கேட்டுக்குங்களேன்...

வாங்க கண்ணுங்களா வாங்க பின்னூட்ட பெட்டி திறந்து தான் இருக்கு... அப்புறமா போய் கூலா ஒரு லைம் ஜீஸ், ஐஸ் தண்ணி எதுனா குடிங்க.

முதல் பின்னூட்டம் இடப்போறவர் யார் என்று சொல்லுங்க

அவரா? அவரே தான்...

தங்கர்பச்சானும் உள்குத்து அரசியலும்

முன்குறிப்பு
இங்கே தங்கர்பச்சான் பேசியது சரியா? தவறா? என்ற கோணத்தில் இந்த பதிவு எழுதப்படவில்லை, ஆனால் தங்கர் பச்சானின் பேச்சுக்கு புரியப்பட்ட அதிக பட்ச எதிர்வினையில் உள்ள உள்குத்து அரசியல் தொடர்பானது

தங்கர்பச்சானின் பேச்சிற்கு அளவுக்கு மீறிய எதிர்ப்பு நடிகர்களாலும் நடிகைகளாலும் காட்டப்படதற்கு உள்ளே சில அரசியல் காரணங்கள்.

1. தங்கர் பச்சான் திருமாவின் மேடைகளில் அடிக்கடி தோன்றுபவர், திருமாவின், இராமதாசுவின் நடிகர்களின் மீதான விமர்சனங்களை தாங்கமுடியாமல் இந்த அரசியல் பாறைகளின் மீது மோதி ரஜினி போன்ற தலைகளுக்கே மண்டை உடைந்தது தான் மிச்சமானது , நடிகர்கள் அங்கே பட்ட காயம், ஈகோவிற்கு வசமாக மாட்டினார் தங்கர், யாரிடமோ பட்ட காயத்திற்கான ஈகோவை இவரை போட்டு தாக்குவதினால் தீர்த்துக்கொள்கின்றனர்.

2.இயக்குனர் சீமானும் கவிஞர் அறிவுமதியும், இயக்குனர் சேரனும் திருமாவின் மேடைகளில் அடிக்கடி தோன்றுபவர்கள், இவர்கள் அத்தனை பேருமே நடிகர்களுக்கு முதுகு சொறிந்து விட்டுக்கொண்டு திரையுலகில் பிழைப்பை ஓட்டுபவர்கள் அல்ல, திறமைசாலிகள் அதே சமயம் முதுகெலும்பு உள்ளவர்கள் எந்த நடிகனுக்கும் முதுகு சொறிந்து கொண்டும் கூஜா தூக்கியும் கலைவாழ்க்கையை நடத்துபவர்கள் அதே சமயம் அதிரடியாக பேசுபவர்கள், அடிக்கடி நடிகர்களின் உண்மையான முகத்தை கிழித்து காட்டியவர்கள், எனவே தங்கரை தட்டுவதன் மூலம் இவர்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

3. சமீபத்தில் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மாத்திரை தின்றதற்கு கமல்,விஜயகாந்த் மேலெல்லாம் கைகாட்டப்பட்டு பின் உடல் நலம் தேறி வந்தவுடன் என்ன நடந்தது என சொல்கிறேன் என புறப்பட்ட காஜா மொய்தீன் மடக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் வைத்து படம் எடுத்த அஜீத்தை பலிகடாவாக்கினார், ஆனாலும் இதில் பெருந்தலைகள் கெட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டனர், அதிலும் கட்சி ஆரம்பித்து தமிழர்களை காப்பாற்றப்போகும் கேப்டன் நிறையவே கெட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டார்

4.திரைத்துறை என்றாலே நடிகர்கள் என்றிருந்த நடிகர்களின் ஆதிக்கத்தை உடைத்தெரிந்து தயாரிப்பாளர்களின் கை ஓங்க ஆரம்பித்தது சமீப காலங்களில், தாணு விடயத்தில் சிம்பு மன்னிப்பு கேட்டதும், மாதவன் மன்னிப்பு கேட்டதும், ஜோதிகாவிலிருந்து பலருக்கும் ரெட் கார்டு போடப்பட்டதுமென தயாரிப்பாளர்களின் கை ஓங்கியது, அதிலும் கடைசியாக விஜயகாந்த்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு 3 நாள் கெடுவும் வைக்கப்பட்டது, தயாரிப்பாளர்கள் விஜயகாந்த்தை எதிர்த்து பத்திரிக்கையில் பேச இருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து பேட்டி கொடுக்கப்பட்ட நேரத்தில் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையிலும் தங்கர் மாட்டினார், தயாரிப்பாளர்களுக்கு திரைத்துறை என்றாலே நடிகர்களின் ஆதிக்கம் மட்டுமே என்று காண்பிக்கவும் நடிகர்களின் வண்டவாளங்களை வெளியில் சொன்னால் என்ன ஆகும் என தயாரிப்பாளர்களை மிரட்டவும் தங்கர் பயன்பட்டார்.

5.திறமை இருக்கும் அதே சமயத்தில் வாயும் இருக்கும் மனிதர்கள் யாருக்கும் பயப்படாமல் முதுகு சொறிந்துவிடாமல் வெற்றிகளை கண்டிருக்கும் மனிதர்களின் மீது பொறாமை ஏற்படுவது இயல்பு, அதுவும் திரைத்துறையில் நடிகர்களுக்கு முதுகு சொறியாமல் எந்த பின்புலங்களும் இல்லாமல் ஒரு திறமைசாலி வெற்றி பெற்றால் அது கடும் பொறாமை தீயை ஏற்றிவிடும், அப்படி பட்ட இயக்குனர் தான் தங்கர், அவர் வாய்கொழுப்பு அவர் மீதிருந்த வன்மத்தை காட்ட சரியான தருணமாக அமைந்துவிட்டது.

6."நடிகர்-நடிகைகளைப் பற்றி இனிமேல் அவதூறாக பேசி னால், ஸ்டிரைக்தான். ஸ்டிரைக்கைத் தவிர வேறு எதுவும் கிடையாது'' என்று விஜயகாந்த், கூட்ட முடிவில் அறிவித்தார்"

இது தங்கருக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள் என அனைவருக்கும் விடப்பட்ட எச்சரிக்கை, படத்திற்கு படம் மேடைக்கும் மேடை அரசியல்வாதிகளையும், காவல்துறையினரையும் இன்ன பிறரையும் கேவலமாக காண்பித்து விமர்சிக்கும் நடிகர்கள் அவர்களை யாரும் விமர்சித்தால் வேலை நிறுத்தம் தானாம்! நடிகர்/நடிகைகளுக்கு வேலை நிறுத்தத்தால் ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனால் திரைத்துறையை நம்பியிருக்கும் குடும்பங்கள்?!

7.தயாரிப்பாளர்களின் பிரச்சினகளைப் பற்றி மேலும் பேச தயாராக உள்ளேன் என்று அதே பேட்டியில் கூறியுள்ளார், ஒரு வேளை தங்கர் பேச ஆரம்பித்தால் பலரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பதால் தங்கரின் வாயை மூட கிளம்பிவிட்டனர்.
ஆக மொத்தத்தில் ஒரே கல்லில் ஏழு மாங்காய்கள் அடிக்கப்பட்டுள்ளது, இன்னும் எத்தனை மாங்காய்கள் என்பது போகப்போகத் தெரியும்

எச்சரிக்கை அல்லது வேண்டுகோள்

இங்கே பதிவில் வந்து எவனாவது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினால் நானும் தமிழன் தான் எனக்கும் தமிழில் உள்ள அத்தனை தரக்குறைவான வார்த்தைகளும் தெரியும் நாய் மனிதனை கடிப்பது அதன் இயல்பு என்று சொல்லி அந்த தரக்குறைவு பேர்வழிகளை நாய்களோடு ஒப்பிட்டு நாயை கேவலப்படுத்த விரும்பவில்லை, தரக்குறைவு பின்னூட்டங்கள் அழிக்கப்படும், அதுவும் ஒரு அளவு வரை தான்.