ஜல்லிக்கட்டு ஆட்டத்தில் நானும்...

ஒரு ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் தடுப்புகளுக்குப்பின் நின்று பாதுகாப்பாக ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தேன், திடீரென நானும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இடையில் உள்ளே கிடக்கின்றேன், அப்போதுதான் தெரிந்தது என்னை ஆட்டத்தில் தூக்கிப்போட்டது மதிப்பிற்குரிய என் எதிரி(பின்ன நண்பர் என்றா சொல்ல முடியும்) எம்.கே.குமார், தப்பான ஆளை ஆட்டத்தில் தூக்கி போட்டுவிட்டார்

சரி பாதுகாப்பாக அப்படியே மறைந்து ஒதுங்கி நிற்கலாம், பிறகு அனைவரும் மறந்துவிடுவார்கள் என நினைத்தால் மற்றொரு மதிப்பிற்குரிய எதிரி மூர்த்தி ஓரமாக நின்றுகொண்டிருந்த என்னை மீண்டும் ஆட்டகளத்தின் மையத்திற்கு கொண்டுவந்துவிட்டார்.

கோபி,மற்றும் மூர்த்தியின் புத்தக பதிவை பார்த்தபின் என்ன எழுதுவது என சுத்தமாக புரியவில்லை, ஏனெனில் அப்படியே என் வாசிப்பும் அவர்களுடையதும் ஒரே மாதிரி உள்ளது.

ஆனால் எப்படி வாசிக்க ஆரம்பித்தேன் எது வாசிக்க தூண்டியது என்ற குழப்பத்திலிருக்கின்றேன், எனது பங்காளி பிரபாகரன் புத்திசாலி, அறிவாளி படித்தவர் என்று பலவிதங்களில் எங்களது குடும்பத்தில் மிகவும் புகழப்படும் மனிதர், அவர் எப்போதும் புத்தகமும்கையுமாகத்தான் அலைவார், ஒரு வேளை அவரது தாக்கம் தான் இந்த வாசிப்பு பழக்கமோ என எண்ணுகின்றேன்...


எப்போதுமே வாழ்க்கையை திரும்பி பார்ப்பது சுவாரசியமானது, எப்போது புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன், ம்... 9வது படிக்கும்போதா? ம்... பாலகுமாரன் எழுத்தை(அவரின் எழுத்தின் மீது கடும் விமரிசனத்தை தற்போது கொண்டிருந்தாலும்) நண்பனின் அக்கா அறிமுகப்படித்தியதைத்தொடர்ந்து சில ஆண்டுகள் பாலகுமாரனின் எழுத்து என்னை ஆக்கிரமித்திருந்தது, சரி 9, வகுப்பிற்கு முன் புத்தகம் படிக்கவில்லையா என நினைத்துப்பார்க்கிறேன்...ஆ... இல்லை இல்லை 8ம் வகுப்பில் கோதண்டபானி சித்தப்பா வீட்டில் படித்த "ராஜபேரிகை","யவனராணி" போன்ற சரித்திர நாவல்கள் இன்றைய அளவிலும் சரித்திர நாவல்களின் மீதான ஆர்வத்துக்கு உரம் போட்டது

சரி எட்டாம் வகுப்பிற்கு முன்..ம்.. ஆறாம் வகுப்பிலிருந்து... சுபா,ராஜேஷ்குமார்,பு.த.,ராஜேந்திரகுமார்,பி.கே.பி என்ற எழுத்தாளர்களின் எழுத்தில் மூழ்கிக்கிடந்தேன், சரி... 5ம் வகுப்பு படிக்கும் போது ராணிமுத்து படித்தேன், இந்த வயசிலேயே ராணி முத்து படிக்கிறாயா? என சிலரிடம் திட்டு வாங்கிய அனுபவமும் உண்டு, சரி சரி அதற்குமுன் பூந்தளிர், பூந்தளிர் இலக்கியமன்றத்தில் அப்போது உறுப்பினரும் கூட வாண்டுமாமா கையெழுத்து போட்டிருந்த அந்த உறுப்பினர் அட்டையை இன்றும் பாதுகாத்து வருகின்றேன், சரி அதற்கும்முன் அதற்கு முன் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அவ்வளவாக நினைவில்லை கிட்டத்தட்ட எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்து படித்து வருகின்றேன் அவ்வளவுதான்.

என் படிப்புக்காலம் 9வதிற்கு முன் பின் என இரண்டாக பிரிக்கலாம்,
9வதிற்கு முன் எனது தந்தை அவரது பள்ளிக்கு ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து வாங்கும் கல்கண்டு,முத்தாரம் எல்லாம் மொத்தமாக குறைந்த விலைக்கு வாங்கித்தருவார், அதை ஒரே நாளில் படித்து முடித்துவிட்டுத்தான் மறுவேலை, மிக சமீபத்தில் தான் அந்த நூற்றுக்கணக்கான கல்கண்டு,முத்தாரம்கள் தூக்கி எறியப்பட்டன.

எனது தந்தை அவருடைய அலுவலக நூலகத்திலிருந்து கொண்டுவந்து தந்த ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு தான் எனக்கு அரசியல் தலைவர்களின் மீதான ஆர்வத்தை தூண்டியது, கறுப்பின மக்களின் துயரங்களும் அதற்காக ஆபிரகாம் லிங்கன் பட்ட துயரங்களும்... போராடி வாழ்க்கையை வென்ற ஆபிரகாம் லிங்கனும் மிக நிச்சயமாக ஒரு பாதிப்பை தந்தனர்,

திங்கட்கிழமை நடைபெறும் வாரத்தேர்வுக்காக ஞாயிறு மாலை திரைப்படத்தை தியாகம் செய்வதும், நண்பர்கள் எல்லாம் புதிதாக வெளியான திரைப்படங்களை முதல்வாரத்திலேயே பார்த்துவிட்டு வந்து பெறுமையடிப்பதும் கதை சொல்வதுமாக இருக்கும் காலத்தில் அதே படத்தை 50 நாட்களுக்குபின் திரையில் முதல்முறை பார்க்கும் போது அது இரண்டாவது முறை பார்ப்பதுபோல இருப்பதுமே வாழ்க்கையின் துயரங்கள் என வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு துயரத்தின் மற்றொரு பரிமாணத்தை காண்பித்தது, அதனைத்தொடர்து வெறித்தனமாக சென்பகராமன்,நேதாஜி,வாஷிங்டன்,லெனின் வாழ்க்கை வரலாறுகள் படித்தேன்

9வதிற்குப்பின் பாலகுமாரன்,ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் படைப்புகள்(சு.ரா.,அ.மி., ஜெயமோகனெல்லாம் மிக சமீபத்தில்தான் படித்தேன்) அதே சமயம் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, கல்கி, சாண்டில்யனின் வரலாற்று நூல்கள் என ஓடிக்கொண்டிருந்தது....

வந்ததய்யா கல்லூரிக்காலம்....

நக்கீரன்,ஜீ.வி.,குமுதம்,ஆ.வி. என வாசிப்புப்பழக்கம் மொத்தமாக சுருங்கியது, அதன் பின் வேலை தேடுதல்,வேலையில் இருத்திக்கொள்ளுதல், வேலையில் முன்னேற பாடுபடுதல் கல்லூரிக்காலத்திலிருந்து மொத்தமாக ஒரு 6 ஆண்டுகள் வாசிப்பு சுருங்கிவிட்டது...
ஆனால் இந்த காலக்கட்டத்தில் வரலாறு என்னை முழுமையாக ஆக்கிரமித்தது,எனது தங்கை வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றவள், அவளது அத்தனை வரலாற்று புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டேன்... வரலாற்று புணை நாவல்களில் காரம்,மணம் சுவையோடு ஒரு விதமான முழு நீள மசாலா தமிழ் திரைப்படம் பார்த்த மாதிரி இருக்கும், ஆனால் வரலாறூ அப்படியே உள்ளது உள்ளபடி எந்த காரம் மணம் சுவையுமின்றி பச்சைக்கறி போலிருக்கும், ஆனால் அதில்தான் உண்மையும் இருக்கும், தமிழில் வரலாற்று புனைநாவல்கள் படிப்பதைவிட வரலாறு படிப்பதில்தான் மிக்க ஆர்வம், பல்லவர்கள்,படவேடுவை தலை நகராகக்கொண்டு ஆண்ட செங்கண்ணன், களப்பிரர்கள் ஆட்சி, இலங்கையின் மகா வம்சம், முகாலயர்கள் ஆட்சி வரலாற்றில் மிகவும் பிடித்தது, ஆர்வமில்லாதது ஐரோப்பிய வரலாறு...

பெங்களூரில் எனது அறைத்தோழன் முரளி, மற்றும் சங்கர் கல்கி,சாண்டில்யன் நாவல்களை
வாங்கிவந்த போது, மீண்டும் வாசிப்புப்பழக்கம் தொற்றிக்கொண்டது...

ஒரு மிகப்பெரிய பிரச்சினை எனக்கு என்னவென்றால் புத்தகங்கள் படித்தபின் கதை நன்றாக நினவில் இருக்கும் ஆனால் கதையின் பெயரோ ஆசிரியரோ நினைவிலிருப்பதில்லை,

நான் புத்தகம் படிப்பது வெறும் தகவலுக்காக இல்லை, எழுத்தின் சுவை எல்லாம் அறிந்து கொள்வது போன்ற ஒரு விருந்து சாப்பாடுத்தான் நான் எதிர்பார்ப்பது, ஆனால் ஆங்கில புத்தகங்களை படிக்கும்போது தகவல்களை திரட்டி அதை மாத்திரையாக முழுங்குவது போலிருந்ததே தவிர விருந்து சாப்பாடு போன்றிருந்ததில்லை... இதே உணர்வுதான் WAR and PEACE என்கிற நாவலையும் the capital படிக்கும்போதுமிருந்தது... ஆர்.கே.நாராயணனின் ஒரு சிறுகதை தொகுப்பு மற்றூம் மேலே கூறிய 2 ஆக 3 ஆங்கிலப்புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கின்றேன்....

தற்போது மிகப்பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளை விட வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் படைப்புகளையே விரும்பிப்படிக்கின்றேன். இது மாதிரி எழுத்தாளர்களின் நூல்கலை நண்பர் அருள்குமாரும்,வீரமணியும் எனக்கு அறிமுகப்படுத்துகின்றனர்,


தமிழகத்தில் இருக்கும் நூல்கள் மொத்தம் கிட்டத்தட்ட 50 இதில் சு.ச.,ஜெ.கா,அ.மி.,புதுமைப்பித்தன், கல்கி,சாண்டில்யன், பாலகுமாரன்,மேலாண்மை பொன்னுச்சாமி, வைரமுத்து,அறிவுமதி,நா.பா ஆகியோரின் படைப்புகளும் பல விகடன்,நக்கீரம் பிரசுர புத்தகங்களும் அடக்கம்

சில மாதங்களுக்கு முன் மீண்டும் படித்தது
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெ.கா.,
வேரில் பழுத்த பலா - சு.சமுத்திரம்
கடல் புறா - சாண்டில்யன்

சமீபத்தில் படித்தது ஆங்கிலப்புத்தகம்
ஒரு ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட ஆங்கிலப்புத்தகம் (பெயர் வேண்டாமே?!)


என் படுக்கையை சுற்றியுள்ள புத்தகங்கள்
ஒன்பது ரூபாய் நோட்டு - தங்கர் பச்சான்
துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
ஸீரோ டிகிரி - சாருநிவேதிதா
மனப்பத்தாயம் - யுக பாரதி
ஒற்றையிலையென - லீனா மணிமேகலை

கடன் கொடுத்திருக்கும் புத்தகங்கள்
மரப்பாச்சி,
மனுஷ்ய புத்திரனின் என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் ,
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
மற்றும் கல்லால்லானவன்

தினம் தினம் படிக்கும் புத்தகம்

கனவிலிருந்து போராட்டத்திற்கு - எர்னஸ்டோ சே குவேரா

தற்போது படித்துக்கொண்டிருப்பது
சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும் - களந்தை பீர்முகமது
இந்த நூற்றாண்டுச்சிறுகதைகள் - பாகம் 3,4
ஊமத்தம் பூக்கள் - ராஜேஷ்குமார்

படிக்க விரும்பும் புத்தகங்கள்
மூலதனம் - மொழிபெயர்ப்பு தியாகு
எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும் - சாரு நிவேதிதா
விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
காடு - ஜெயமோகன்.
கூணன் தோப்பு - தோப்பில் முகமது மீரான்

மடியில் துள்ளும் மரணம் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்
(தேடி தேடி அலுத்துவிட்டேன் இது வரை எங்கேயும் கிடைக்கவில்லை, யாரேனும் எங்கே கிடைக்கும் எனத்தெரிந்தால் சொல்லுங்களேன்)

சரி நம் பங்குக்கு யாரை ஆட்டத்தில் தூக்கிப்போடுவது...

லாடு லபக்கு தாஸீ
வீ.எம்.
சிறகுகள் பத்மபிரியா
அப்படிபோடு (உம் பேரு யின்னாபா)
புலிக்குட்டி
மற்றும் இதை படிக்கும் நீங்கள்

5 பின்னூட்டங்கள்:

said...

அன்புள்ள குழலி,

ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிட்டு வெளுத்து வாங்கி இருக்கீங்க. உங்களுக்குத் தெரியாமலேயே உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தைத் தட்டி எழுப்பி உண்மையைக் கக்க வைத்து விட்டீர்கள்! நன்றாக இருந்தது.

தாங்கள் ஏதேனும் புத்தகம் தேடுவதாக இருந்தால் அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டாரே அங்மோகியோ புஷ்பலதா... அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். ஆவன செய்வார்.

நன்றி.

said...

மூர்த்தி நீங்கள் நேற்றைய கலந்துரையாடலுக்கு வந்திருந்தீரா? தங்களை பார்த்த மாதிரி நினைவில்லை எனக்கு, ஆனால் மடல் குழுவில் வந்த ஒரு மின்னஞ்சலில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது ஒரு வேளை நீங்கள்தானா அது? நான் சற்று நேரம் கழித்து வந்தேன்(வழக்கம் போல)

said...

அன்பின் குழலிக்கு,

மூர்த்தி அண்ணா சொன்னமாதிரி அசத்தியிருக்கிறீர்கள்...
நூல்களோடு உங்கள் வாசிப்பு அனுபவமும் "பரந்து" இருப்பது..நாமெல்லாம் எங்கு நிற்கிறோம் என்று மீள சிந்திக்க வைக்கிறது.....சேகுவேராவின் புத்தகம் தினமும் நீங்கள் வாசிப்பது அறிந்ததில் மகிழ்ச்சி...."கியூபா:புரட்சிகர யுத்தத்தின் கதை","சேகுவேரா:வாழ்வும் மரணமும்"..மற்றும் இன்னுமொரு அவரது உரைத்தொகுப்பு & சில மொழிபெயர்ப்புக் கவிதைகள்(யமுனா ராஜேந்திரனின் மொழிபெயர்ப்பில் "ஒரு மூதாட்டிக்கு.." எழுதிய கவிதை என்னவோ செய்த கவிதை...."ஆஸ்த்மா"வால் அவதிப்பட்ட ஒரு கொள்கைக்காரனின் உணர்வுகள்...) வாசித்திருக்கிறேன்...ஆனால்,நீங்கள் குறிப்பிட்டதை வாசித்த நினைவு இல்லை.அடுத்த சந்திப்பில் தந்து உதவுவீர்கள் என எண்ணுகிறேன்...."மோட்டர் பைக் டயரிஸ்" வி.சி.டி(ஸ்பானிய படம் ஆங்கில உபதலைப்புடன் அண்மையில் வந்தது...விரும்பினால் தருகிறேன்)
கடந்த சனி நூலக கலந்துரையாடலில் பக்கத்தில் இருந்திருக்கிறேன்,உங்களை அறிந்து கொள்ளாமலே..மன்னிக்கவும்..பின்னர்தான் ஈழநாதன் மூலம் நீங்கள் என்று அறிந்தேன்...
மீண்டும் சந்திப்போம்!
அன்புடன்,
ஷாந்தன்
ktps24@yahoo.co.uk

said...

இன்னாபா இப்டி இஸ்து வுட்ட .. !! இந்த புத்தக ரேஸ் படிச்சிட்டு இம்மா புஸ்தகம் இருக்கா னு அசந்துபோய்கீறே !!
சொம்னாங்காட்டிக்கு எதோ எய்திகினு இருந்தா ... இந்த கத்துக்குட்டிய இப்படி டபால்னு இஸ்து வுட்டியே.... இன்னா குயிலி நீ !!
வீ எம்

said...

உங்களது பாராட்டுக்கு நன்றி ஷாந்தன் ஆனால் அதற்கு உரித்தானவனா என்பது சந்தேகமே... என் அண்ணன் எப்போதும் புத்தகமும் கையுமாக திரிந்ததால் அவரை புத்திசாலி,படிப்பாளி என புகழ்ந்ததால் நானும் அது மாதிரியே நடந்து கொள்ள முயற்சித்தேன் ஆனால் வாசிப்பு என்னை பிடித்துக்கொண்டது....

"மோட்டர் பைக் டயரிஸ்" தான் தமிழில் கனவிலிருந்து போராட்டத்திற்கு என திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது...

அடுத்த சந்திப்பில் கொண்டுவருகின்றேன் நாம் பேசுவோம்