மகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்?

மகஇக பொதுத்தளத்தில் யாருக்கும் தெரியுமோ என்னமோ ஆனால் இணையத்தில் வாய்கிழிய பேசும் இயக்கம், பெரியார் திக காரர்கள் மகஇக வோடு சோடி போட்டுக்கொண்டு சுற்றினார்கள், மகஇகவின் பார்ப்பன தலைமை சாயம் வெளுத்ததோ என்னமோ இப்போது முறைத்துக்கொண்டு திரிகின்றார்கள்...

எல்லோரையும் நோண்டு நொங்கெடுக்கும் புனித(?!)மான மகஇக வின் நிரந்தர பொதுச்செயலாளர் மருதையன் அவர்களின் மீது ஒரு சந்தேகம், எந்த மகஇக தோழர்களாவது தீர்த்துவைத்தால் தன்யனாவேன்...

சாதாரண பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவரில் ஆரம்பித்து நெடுமாறன், வைகோ, சுப.வீ, கொளத்தூர் மணி என்று நீளுகிற பட்டியல் தமிழர் விடுதலைப்படை மாறன், தமிழர் மீட்சிப்படை முத்துக்குமார் என பெரும் பட்டியல்... அடடே இதென்ன பட்டியல் என்கிறீர்களா? ஆம் இவர்களெல்லாம் பொதுவாழ்வில் அது பத்திரிக்கையாகவோ, அரசியலாகவோ, ஆயுதப்போராட்டமாகவோ என அரசையும் அதிகாரத்தையும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக எதிர்த்து போராடியவர்கள் (உடனே மகஇக தோழர்கள் இவன் இது செய்தான் அவன் அது செய்தான் என்றெல்லாம் பட்டியல் போடவேண்டாம், இவர்கள் அனைவரும் நான் புனிதர்கள் என்று சொல்லவில்லை), இதற்காக இவர்கள் மீது தடா பொடா என ஏகப்பட்ட வழக்குகள், அந்த வழக்குகளுக்காக மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் சிறையினுள் இருந்தவர்கள்... இன்னமும் ஏகப்பட்ட வழக்குகள் இவர்கள் மீது உள்ளன...

எதற்கெடுத்தாலும் நாங்கள் தான் காவல்துறையின் கடும் அடுக்குமுறையை சந்திக்கிறோம் என்று காவல்துறை தங்களின் க(ன்)ணை தங்கள் பிடறியின் மீது வைத்திருப்பதாக பீலா விட்டுக்கொண்டிருக்கும் மகஇக (இங்கே குறிப்பது மகஇக வின் அடிமட்ட தொண்டர்களையோ அல்லது இடை மட்ட பொறுப்பாளர்களையோ அல்ல அவர்கள் பாவம் பலியாடுகள், மகஇக வின் தலைமையை குறிப்பிடுகிறேன்)

நான் மேலே குறிப்பிட்டவர்களை போல ஏதேனும் மகஇக மருதையன் மீது அரசாங்கத்திற்கு எதிராக போராடி அதனால் சிறைக்குள் மாதக்கணக்கில் ஆண்டுகணக்கில் இருந்திருக்கிறாரா?

1.தோழர் மருதையன் எத்தனை முறை சிறை சென்றுள்ளார்?( ரிலையன்ஸ் போராட்டத்தில் மதியம் அரெஸ்ட் ஆகி மாலை ரிலீஸ் ஆன கதை போன்றல்ல)

2. மருதையன் மீது என்னென வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன?

3. தடா, பொடா, குண்டாஸ், மிசா என்ற வழக்குகள் ஏதேனும் அவர் மீது இருந்தனவா? அல்லது இருக்கின்றனவா? அப்படியெனில் எத்தனை மாதம் உள்ளே இருந்தார்?

4. மகஇக அடிமட்ட தொண்டர்களையே போலிஸ் ஜட்டியோடு அடிப்பதாக பீலா விடும் மகஇக வினர் மருதையன் அது மாதிரி எத்தனை முறை பரேடு வாங்கியிருக்கிறார்?

இந்த கேள்வியை சுத்தி சுத்தி சிலரிடம் விசாரித்தேன்... ம் பதில் கிடைக்கவில்லை, அது தான் இப்போது பதிவில் கேட்கிறேன்... ஒரு வேளை மருதையன் மீது பெரிய வழக்குகள் ஏதுமில்லை, உள்ளேயெல்லாம் போனதில்லை, ஜட்டியோடு அடிவாங்குவதெல்லாம் மகஇக தொண்டர்கள் மட்டும் தானென்றால் மருதையனின் புரட்சி யாரின் தயவில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்...

செந்தில்நாதனுக்காக பிரார்த்தியுங்கள் - இன்று VAD fixing அறுவை சிகிச்சை

செந்தில்நாதன் என்னும் சிங்கைநாதனுக்கு இன்று சிங்கப்பூர் நேரம் காலை 8:00 மணிக்கு முதல்கட்டமான VAD fixing அறுவை சிகிச்சை நடைபெற ஆரம்பித்துள்ளது... நேற்று செந்தில்நாதனை சந்தித்தப்போது மிகுந்த நம்பிக்கையுடன் தெளிவாக இருந்தார், 2 வாரங்களுக்கு முன் சந்தித்தபோது இருந்ததை விட தெளிவுடனும் நம்பிக்கையுடனும் இருந்தார்...

இந்த அறுவை சிகிச்சை 8 மணி நேரம் நடைபெறும், செந்தில்நாதன் எப்போதும் எங்களிடம் கேட்டுக்கொள்வது பிரார்த்தனை செய்யுங்கள் என்று... செந்தில்நாதனுக்கு நடைபெறும் இந்த அறுவை சிகிச்சை வெற்றியடைந்து நல்லபடியாக வீடு திரும்ப அனைவரும் செந்தில்நாதனுக்காக பிரார்த்தியுங்கள்...

காசி, தமிழ்மணம், பத்திரப்பதிவு ஊழல், ஈ-கவர்னென்ஸ், உளவு பார்க்கும் அரசாங்கம்

காசி அண்ணன் கொஞ்ச நாளைக்கு முன்பு சில கேள்விகள் அனுப்பி பதிலனுப்ப சொல்லியிருந்தார், நானும் ஏதோ நமக்கும் இன்னும் சிலருக்கும் மட்டும் அனுப்பியிருப்பாரென்று உட்கார்ந்து அனுப்பினால் அண்ணன் 30 பேருக்கு அனுப்பியிருக்கார், இவர் 30 பேருக்கு அனுப்பியது முன்னாலேயே தெரிந்திருந்தால் காசிக்கு தேவையான அளவிற்கு பதில் கிடைத்திருக்குமென டிமிக்கி கொடுத்திருப்பேன்... அப்புறம் சொந்த பதிவிலேயே போட்டுக்கொள்ளுங்கள் என்று வேறு சொல்லிவிட்டார்... சரி அதான் இங்கே

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்ற எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவு இல்லை என்றே கருதுகிறேன், அதிலும் குறிப்பாக புவியியல், தொழில்நுட்பம், அறிவியல் போன்றவைகளில் கடும் வறட்சி நிலவுகிறது, வரலாறு தன்னிறைவடையவில்லையென்றாலும் வரலாறு.காம் போன்ற ஓரிரு தளங்களினால் கொஞ்சமேனும் உள்ளது, அறிவியல் தளத்தில் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ் வழி கல்வி அறிவியல் புத்தகங்களில் உள்ளவைகள் கூட இணையத்தில் தமிழில் இல்லை.

தமிழில் தொழில் நுட்பமே இல்லையா என்றால் அது நிச்சயம் தவறு, பாலிடெக்னிக் பாடதிட்டங்கள் எல்லாம் சுரா பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பகம் தமிழில் கொடுத்துள்ளது, லேத் எப்படி வேலை செய்கிறது என்பதிலிருந்து மைக்ரோபிராசஸர் தொழில்நுட்பம் வரை தமிழில் உள்ளது, நோக்கியா கைத்தொலைபேசியின் சர்க்யூட்டுகளிலிருந்து கான்க்ரீட் தொழில்நுட்பம் வரை தமிழில் உள்ளது. ஆனால் இவைகள் எல்லாம் இணையத்தில் இல்லை இதற்கு முக்கிய காரணம் தற்போதைய தமிழ் இணைய பயன்பாட்டாளர்களுக்கு இவைகள் எல்லாம் தேவை இல்லை என்பதே...

தமிழ் இணைய பயன்பாடு அதிகரித்து வந்து கொண்டே உள்ளது, ஆனால் அவைகள் செய்திகள், அரசியல்,இலக்கியம் சினிமா கிசு கிசு படிப்பது மற்றும் பலான பலான என்ற அளவிலேயே பெரும்பாலும் உள்ளது. தற்போதுள்ள இணைய பயனாளர்களுக்கு பெரும்பாலும் புவியியலோ, அறிவியலோ தேவையில்லை, அப்படியே தேவை என்னும் போது அவர்கள் எளிதாக ஆங்கிலத்தில் தேடி பார்த்துவிட்டு போவார்கள்.பட்டம் நடிகை, ஒல்லிப்பிச்சான் நடிகர் என்ற கிசு கிசுக்களை எல்லாம் ஆங்கிலத்தில் படித்தால் சுவராசியமாக இருக்குமா? இருக்காது... எனவே சுவாரசியத்திற்காக கிசு கிசுவை தமிழில் தான்படிக்கவேண்டி உள்ளது...

தற்போதைய பெரும்பாண்மை தமிழ் இணையதள பயனாளர்கள் பிழைப்புக்கும் தொழிலுக்கும் ஆங்கிலத்தையும் பொழுது போக்கிற்கு தமிழையும் பயன்படுத்துபவர்கள். எனவே தமிழ் உள்ளடக்கம் இணையத்தில் நிறைய பெருக வேண்டுமெனில் தொழிலுக்கும் பிழைப்புக்கும் தமிழை பயன்படுத்துபவர்கள் இணைய பயன்பாட்டிற்கு நிறைய வரவேண்டும், அப்படி அவர்கள் வரும்போது யாரும் ஒன்றும் கழட்ட வேண்டாம் தானாகவே தமிழில் நிறைய உள்ளடக்கங்கள் வரும்.



2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? என்றால் இதற்கு ஆம் மற்றும்இல்லை என்ற இரண்டு பதில்களையும் சொல்ல முடியும், இதற்கும் முதல் கேள்வியில் சொன்ன பதிலே, ஆன்லைன் வசதிகளை பயன்படுத்துவர்கள் பெரும்பாலும் சாஃப்ட்வேர் ஆட்களே... இன்னும் இணையம் பலருக்கும் எட்டாகனியாகவே உள்ளது, அப்படியாகும் போது நிச்சயம் கைத்தொலைபேசி பரவலானது போன்ற நல்ல பரவலான பலன் கிட்டும்...


3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

தமிழ் இணைய சமூகத்தில் இது ஒரு வேதனையான விடயம் தான், தமிழக அரசாங்கம் செய்ய வேண்டியதை,பல்கலைகழகங்கள் செய்ய வேண்டியதை இங்கே ஒரு சில தனி நபர்கள் செய்ய முயற்சித்திருக்கின்றார்கள்,தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய முதலில் முகுந்த் என்ற தனிநபரே ஈ-கலைப்பையின் மூலம் செய்யவேண்டியிருந்தது, கிட்டத்தட்ட இன்று தமிழ் இணையத்தின் வளர்ச்சி என்பது அரசாங்கம்,பல்கலைகழகங்களின் பங்களிப்பில்லாமல் முழுமையாக தன்னார்வலர்களின் பங்களிப்பே, இது மாதிரி இன்னும் நிறைய குறிப்பிடலாம். விக்கிப்பீடியா போன்ற குழுக்களை சரியாக முறைப்படுத்தினால் பரவலான ஆதரவை பெறும்.

சில முக்கிய தேவைகள் வியாபரமாக கூட இங்கே செய்ய இயலாத அளவிற்கு உள்ளது, உதாரணத்திற்கு OCR ஆப்டிக்கல் கேரக்டர் ரீடர் எனப்படும் ஒரு விசயம் தமிழுக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது, ஸ்கேன் செய்தவற்றை எழுத்துக்களாக மாற்றும் இந்த வசதி ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் இருக்கிறது, ஆனால் தமிழில் இல்லை, இதை ஒரு திட்டப்பணியாக அண்ணா பல்கலை கழகத்தில் ஒருவர் செய்திருக்கின்றார் ஆனால் அதுவும் முழுமையடையவில்லை, இது கிட்டத்தட்ட உவேசாமிநாதர் அவர்கள் செய்தது போன்ற ஒரு விசயம், அவர் ஓலைச்சுவடியிலிருந்து அச்சு ஆக்கினார், இந்த OCR மூலம் அச்சிலிருந்து கணிணிக்கும் மாற்றலாம்.


4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?


என்னங்க திடீரென "நான் முதல்வரானால்" என்று சின்னவயசில் கட்டுரை எழுத சொல்வது போன்ற கேள்வியை போட்டுவிட்டீர்.

தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்திற்கு செல்லும் முன் வேறு சில விசயங்கள் மிக முக்கிய தேவையாக உள்ளது, அதில் முதலாவது ஈ-கவர்ணென்ஸ், இந்திய மற்றும் தமிழகத்தில் அரசு, தனியார், தனி நபர் என அத்தனையும் ஊழல் மயமான ஒரு இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஊழல் என்பது திருட்டு என்பதை தாண்டி அடாவடி என்ற நிலையை தொட்டுக்கொண்டிருக்கின்றது, அதில் மிக முக்கியமானது நில ஊழல்கள், பல இடங்களில் ஒரு சாதாரண பொது மக்களின் வாழ்க்கையை சிதைக்கும் அளவிற்கு சென்று கொண்டுள்ளது, இதற்கு முக்கிய காரணம் பத்திர பதிவு அலுவலகத்தில் உள்ளவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு மூல பத்திரங்களை திருடி அதிலிருந்து போலி தயார்செய்வதில் ஆரம்பித்து ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு ஒரே சொத்தை விற்பது வரை நடைபெறுகின்றது... இதில் அமைச்சர்கள் முதல் அல்லக்கைகள் வரை அத்தனை பேரும் ஈடுபடுகிறார்கள், இன்றைக்கு தமிழகத்தை மிகவும் அச்சுறுத்தும் ஒரு மாபெரும் மோசடி இது. காவல்துறை பற்றி சொல்லவே வேண்டாம், காவல்துறையில் ஒரு கைதி தடுத்துவைக்கப்பட்டுள்ளாரா? கைது செய்யப்பட்டுள்ளாரா? தேடப்படுபவர்கள் எந்த குற்றத்துக்காக தேடப்படுகிறார்கள் என்பதிலிருந்து எந்த தகவலும் தெரிவதில்லை,

சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு செய்தி சிங்கப்பூரில் ஒருவரை காணவில்லை என்று ஊரில் பதறுகிறார்கள், காணாமல் போன நபரின் சொந்தக்காரர் ஒரு மின்மடல் சிங்கப்பூர் காவல்துறைக்கு அனுப்பிய இரண்டாம் நாள் எந்த குற்றச்செயலுக்காக, எந்த செக்ஷனுக்கா எப்போது எங்கே அவர் தடுத்து வைக்கப்பட்டார் என்ற தகவல்களை அனுப்பி வைத்தார்கள்.. இவைகளையெல்லாம் தெரிந்து கொள்ள பல நேரங்களில் தற்போதுள்ள நடைமுறைகளில் உள்ள தாமதம் பல ஏமாற்று வேலைகளுக்கும் குற்றச்செயலுகளுக்கும் ஒரு முக்கிய காரணம், எனவே பத்திரபதிவு, நீதிமன்றங்கள், காவல்துறை போன்ற அதிமுக்கியமான துறைகளை உடனே கணிணி மயப்படுத்தி அவைகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கான ஆன்லைன் வசதியும் செய்ய வேண்டும்.

10 மற்றும் 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுகளுக்காக மாலைமலர் பத்திரிக்கை வரும்வரை காத்திருந்து பாஸா பெயிலா என்பதை தெரிந்து கொண்டு அடுத்த கட்டமாக மதிப்பெண் பட்டியல் கையில் வரும்வரை நகம் கடித்திருந்திருக்கிறோம், இன்று பட்டனை தட்டினா பட்டுன்னு மதிப்பெண் பட்டியலையே கொட்டி விடுகிறது...

இந்த ஈ-கவர்ணனெஸ்ல் பல ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருப்பதால் இதன் முழுப்பலன் எந்தஅளவிற்கு இருக்கும் என்பதை நேரடியாக கண்டிருப்பதால் இதற்கே முதன்மை, இம்மாதிரியான விசயங்களுக்கு முன்னுரிமை தருவதை விடுத்து தேசிய அடையாள அட்டை அடிப்பதை முக்கியமாக்கிக்கொண்டு திரிகின்றன இந்த அரசுகள், கணிணி மயமாக்கப்பட வேண்டிய பல முக்கிய விடயங்களுக்கு முன்னுரிமை தராமல் தேசிய அடையாள அட்டைக்கு மட்டுமே அலைவது ஒவ்வொரு குடிமகனையும் நன்றாக வேவு பார்க்க மட்டுமே முக்கியமாக பயன்படும், காவல்நிலையத்தில் ரவுடிகளுக்கு ஃபைல் போடப்படுவது போலதான் இதுவும், முக்கியமான சில மாற்றங்களை செய்யாமல் தேசிய அடையாளஅட்டையை வைத்துக்கொண்டு பொதுமக்கள் நாக்கு கூட வழிக்க முடியுயாது.

இவைகள் எல்லாம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது இதில் தானாகவே தமிழ் வரும்.


5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

ஹா ஹா... தமிழ் வலைப்பதிவுகள் இப்போது வரை நிறைய பொழுது போக்கு, கொஞ்சம் சீரியஸ் என்றுதான் உள்ளது, புதிதாக வலைப்பதிய வருபவர்களுக்கு யோசனை சொல்லுமளவிற்கு ஒன்றுமில்லை, அவரவர்கள் அவரவர்களாகவே இருந்தாலே போதும்


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

தமிழ்மணத்திற்கு என் வாழ்த்துகள், தமிழ்மணம் இதன் சேவையை பற்றி எழுத வேண்டுமெனில் பக்கங்கள்போதாது, ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கின்றேன், தமிழ்மணம் கிட்டத்தட்ட ஒரு புரட்சியை இணையத்தில் செய்துள்ளது என்றே சொல்லலாம், நான் தமிழ்மணத்தில் இணைந்த போது பதிவுகளின் எண்ணிக்கை 400க்கும் குறைவு இன்றோ 5000க்கும் மேல், தமிழ் இணையத்தில் குழுமங்களின் காலம் அது, அங்கே மாற்று கருத்து என்பதே பெரும்பாலும் இல்லாத நிலை, சங்கராச்சாரியை 'ர்' போடாமல் எழுதினால் மரியாதை குறைவு என்று குழுமத்தை விட்டே வெளியேற்றிய பாசிச நிலையில் ஒரு சாரரின் ஆதிக்கத்தில் இருந்தது, அதை உடைத்தது தமிழ்மணம், பலமுறை தமிழ்மணத்தை உதிர வைக்க பல முயற்சிகள் நடந்த போதும் பல முறையற்ற விமர்சனங்களை தமிழ்மண நிர்வாகத்தை விட தமிழ்மணத்திலிருந்த பதிவர்கள் பதிலடி கொடுத்து முறியடித்தனர் இதற்கு முக்கிய காரணம் தமிழ்மணம் வேறு தாம் வேறு என்று பதிவர்கள் நினைக்கவில்லை, அந்தளவிற்கு தமிழ்மணம் பதிவர்களோடு பிணைந்திருந்தது

தமிழ்மணம் செய்ய வேண்டியவை என்பதை விட தமிழ்மணம் செய்ய தவறியவை என்ன என்று சொல்கிறேன்.. தமிழ்மணத்திற்கு ஒரு மிக அருமையான வாய்ப்பு ஆனால் அதை தவறவிட்டுவிட்டது என்றே சொல்லலாம், தமிழ்மணம் தனியாக வலைப்பதிவுலகில் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் தமிழ்மணம் ஒரு லீட் ரோல்(தலைமை) எடுத்திருக்கலாம், தனி மனிதனாக காசியிடமிருந்து 15க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் கொண்ட குழுவிடம் சென்ற போது நிறைய எதிர்பார்த்தேன், இன்னும் சரியாக சொல்வதென்றால் தமிழ்மணம்

ஒரு கட்டத்திற்கு மேல் தேங்கிவிட்டது, தமிழ்மணம் வலைப்பதிவு என்பதோடு மட்டுமின்றி ஒரு மீடியாவாக, ஊடகமாக, இணையத் தலைமையாக உருவெடுக்கும் என்றே எதிர்பார்த்தேன், தனியாக ஓரிரண்டு பேர் நடத்தும் திரட்டிகளாலோ வலைதளாங்களாலோ இது முடியாது, ஆனால் 15 இயக்குனர்கள் இருக்குமிடத்தில் பணம், வேலையை பகிர்ந்து கொள்ளுதல் என்பது சுலபம்( இது சுலபமா, கடினமா என்பது அவரவர்களுக்கு தான் தெரியும், என்றபோதும் இது என் எதிர்பார்ப்பு என்றே கூறலாம்)...

தமிழ்மணம் தவறிய இன்னொரு விடயம், அது தன் வளர்ச்சியில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை, தமிழ்மணம் கொஞ்சம் கொஞ்சமாக பதிவர்கள் தங்கள் நண்பர்களிடம் சொல்லி அங்கிருந்து அப்படியே வேறொருவருக்கு சொல்லி என்றே பெரும்பாலும் வளர்ந்ததே, இதனால் exponential growth ஆக இருக்க வேண்டிய தமிழ்மணத்தின் வளர்ச்சி gradual ஆக மட்டுமே இருந்தது... வலைப்பதிவுகளை பரவலாக்குவது, வெளியாட்களிடம் கொண்டு செல்வது, புது தன்னார்வ குழுமங்களை உருவாக்குவது, கம்யூனிட்டியாக உருவாகுவது என லீட் ரோல் எடுத்திருக்கலாம், இதெல்லாமே எளிதான விடயங்கள் இல்லை என்றாலும் தமிழ்மணம் செய்திருக்கலாம்.. செய்யக்கூடிய சூழல் அப்போது இருந்தது என்றே சொல்லலாம், ஆனால் இப்போது வலைப்பதிவுலகம் பெரிதாகிவிட்டதும் மற்ற பல அரசியல்களாலும் இதையெல்லாம் இனி செய்ய இயலுமா என்பது சந்தேகமே.

செய்ய தவறியது என்று சொன்னதிலிருந்தே எதையெல்லாம் தமிழ்மணம் செய்ய வேண்டும் என்ற பதிலும் இருக்கின்றது....

வாய்ப்பளித்த காசி அண்ணாவுக்கும், பலரையும் என்னையும் உருவாக்கிய தமிழ்மணத்திற்கும் இத்தருணத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்

பொட்டீகடை சத்யாவின் மாஸ்டர் பீஸ் - முடவனை பகிடி செய்யும் பாம்பு



பொட்டீகடை சத்யா எப்போவாவது எழுதுவான்... சமீபத்திய அவன் பதிவு "முடவனை பகிடி செய்யும் பாம்பு", முதலில் படித்தேன்... கொஞ்சம் பின் நவீன வாடை அடித்த உடன் சரி இதையெல்லாம் அவசரத்தில் படிக்க முடியாது ஆற அமர படிப்போம் என்று....

திரும்ப போய் படித்தேன்... ஆள் தற்போது நிஜத்தில் முட்டியை உடைத்துக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கான்... அது ஒரு மாஸ்டர்பீஸ் படைப்பை தந்திருக்கு... மாம்ஸ்க்கு முட்டி உடைஞ்சதும் ஒரு நல்லதுக்கோ?

கதை(யா?) படிக்கும் போது ஜெமோ வின் பார்த்தீனியம் படித்தது போல காட்சிகள் கண் முன் விரிந்தன, சத்யா கொஞ்சம் அழுத்தி புடிச்சான்னா சாருவும் ஜெமோவும் கலந்த கலவையாக புனைவிலக்கிய உலகில் வலம் வர வாய்ப்புகள் உண்டு

முடவனை பகிடி செய்யும் பாம்பு படிக்க இங்கே அமுக்குங்கள்

இன்று சுதந்திர தினமாம்!


சிங்கப்பூருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்


44வது பிறந்த நாளை கொண்டாடும் சிங்கப்பூருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....

இரண்டு வருசம்தான் அப்புறம் ஊருக்கு போயிடனும் முதல் தடவை வந்த போது சொன்னது, இரண்டிரண்டு வருடங்களாக கடந்து கொண்டே இருக்கின்றன.ஒரு ஒரு வெள்ளியையும் ரூபாய்க்கு மாற்றி கணக்கு பார்த்து செலவழித்தது போய் ஊரில் செலவு செய்யும் ரூபாய்களை வெள்ளிக்கு மாற்றி கணக்கு பார்க்க பழகிவிட்டது மனம்.

பைசா கையில் எதுவும் மிச்சமில்லையே சரி யு.எஸ் ஆவது போகலாம்... ம்...ஏனோ இந்த ஊரைவிட்டு நகர மனமில்லை... முதல் சில முறைகள் ஊருக்கு போன போது அங்கே கால்பதித்தவுடன் ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா என்றிருக்கும், இப்போதெல்லாம் இங்கே கால்பதிக்கும் போது தான் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா என்றிருக்கிறது...

இந்த ஊர், இந்த ஊர் தமிழ், ஒலி96.8, வசந்தம் என கொஞ்சம் கொஞ்சமாக கட்டிப்போட்டுவிடும் ஆட்களை.... இந்த ஊரை விட்டு நகரவிடாது....



பிறந்தநாள் வாழ்த்துகள்... சிங்கப்பூர்...

வெள்ளைக்காரனுக்கும் சிங்களச்சிக்கும் பொறந்த மிஸ் சென்னை மற்றும் சென்னை மேன்

மிஸ் சென்னை மற்றும் சென்னை மேன் என்றொரு போட்டி விஜய் தொலைக்காட்சியில் நடைபெறுகிறது...

இன்றைக்கு தான் கொஞ்சூண்டு பார்த்தேன்...

பெயர் தான் மிஸ் சென்னை மற்றும் சென்னை மேன், ஆனால் வெள்ளைக்காரனுக்கு பொறந்தவர்களை போல நிகழ்ச்சி முழுவதும் நடைபெற்றது ஆங்கிலத்தில், நிகழ்ச்சி நடக்கும் இடமோ சிங்களக்காரிக்கு பிறந்தது போல இனவாத சிங்களவெறி நாடான இலங்கையின் தலைநகர் கொழும்பில்.

தமிழ் மக்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் போது Srilanka is amazing என்று ஒரு குட்டி சொல்வதை விளம்பரப்படுத்துவதும், இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் உறவுப்பாலம் அமைக்கிறார்களாம் இந்த நிகழ்ச்சியின் மூலம்... காசுக்காக எதையும் தின்னும் பொறம்போக்கு நாய்கள்...

மும்பைகாரன் எல்லாம் ஹிந்திகாரன்களை ரவுண்டு கட்டி அடிப்பது சரிதானோ? பின்னே மராட்டிய தலைநகரில் எங்குமே மராட்டி இல்லாமல் ஹிந்தி புழங்கினால் வெறியாக மாட்டானுங்களா?

150 பேரை பாக்கிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் சுட்டு போட்டுடானுங்களாம் அதுக்கும் குய்யோ முய்யோ என்று கூச்சல் போட்டுக்கொண்டு பாக்கிஸ்தானோடு கிரிக்கெட் விளையாட அனுப்பாத இந்தியா இலைங்கைக்கு அனுப்பியது... ஆனால் பல ஆயிரம் தமிழர்களை கொன்ற சிங்கள இனவெறி நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட மட்டுமல்ல ஹை கிளாஸ் அ...ம் களை உருவாக்கும் அழகி போட்டியும் அங்கே நடத்துவார்களாம், அதை கோயிந்துகளான நாம் பார்க்க ஒளிபரப்புவார்கள்...

என்ன கொடுமை இது...

இங்கே எழுதுவதால் என்ன நன்மைன்னா கேட்கிறீங்க? ஒரு மயிரும் இல்லைதான் வயிற்றெரிச்சலை புலம்பலை கொட்டுவதற்கு ஒரு இடம் அவ்ளோ தான்

திரட்டி நடத்த ஆகும் செலவு கணக்கு மற்றும் சக்திவேல் என்னும் காமெடி பீஸ்

சக்திவேல் என்னும் பதிவர் பதிவுலகின் சமீபத்திய காமெடி பீஸ் என்பது பதிவுலகறிந்ததே, அவரின் (காமெடி)அறசீற்றத்தின் உச்சகட்டமாக நேற்று தமிழ் திரட்டிகளின் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்திருந்தார்... அது "6. பதிவர்களின் பதிவை மட்டும் வெளியிட்டு பணம் சம்பாதித்து விட்டு மாங்கு மாங்கென்று எழுதும் பதிவர்களுக்கு நயா பைசா தராமல் இருக்கும் திரட்டிகள்."

திரட்டி நடத்த ஆகும் செலவை சக்திவேல் ஏற்றுக்கொண்டால் நான் தமிழ்மணம், தமிழ்வெளி, தமிலிஷ், திரட்டி.காம் ஆகிய முக்கிய நான்கு திரட்டிகளிடமும் பேசி அவர்களின் மொத்த மாத வருமானத்தையும் சக்திவேலிடம் தரத்தயாராக உள்ளேன்.

சக்திவேல் மட்டுமல்ல, ஏற்கனவே செல்வராஜ் என்பவரும் இதே போல திரட்டி நடத்துபவர்கள் பெரும் பொருள் ஈட்டுவது போன்று பதிவிட்டிருந்தார், அதற்காகவே இந்த தகவல்.

இனி திரட்டி செய்ய மற்றும் நடத்த ஆகும் செலவுகள் கீழே:

One Time Cost (ஒரு முறை ஆகும் செலவு)

ஒரு PC அல்லது லேப்டாம் ரூ. 50,000

திரட்டி சாப்ட்வேர்
(இணையத்தில் ஓப்பன் சோர்ஸ் என்ற முறையில் இது கிடைத்தாலும், அதை அப்படியே பயன்படுத்த இயலாது, பல மாற்றங்கள் செய்ய வேண்டும், இதற்கு ஒரு மாதம் ஆகும், அதாவது 22 Mandays, 1 Manday = 8 Manhours) மொத்தம் (22 X 8 = 176 Man hours) ஒரு Man hour = 15$, 1$ = ரூ. 45 மொத்தம் 176 Manhours க்கு இந்திய மதிப்பில் ரூ 1,18,800

தள முகப்பு வடிவமைப்பு (web page designing) = ரூ 15,000

வருடாந்திர செலவுகள்

தள முகப்பு வடிவமைப்பு மாற்றுதல் = ரூ.15,000

திரட்டியை பிரபலமாக்க செய்யும் விளம்பர செலவுகள் = ரூ 25,000 - 1,00,000

போட்டி நடத்துவது மற்றும் இன்ன பிற பரிசு செலவுகள் = ரூ 25,000 - 1,00,000

திரட்டி விடயம் தொடர்பாக பதிவர்கள் மற்றும் பலருடன் தொலைபேசியில் உரையாடுவது = ரூ 25,000 (இந்தியாவிற்குள் என்றால் ரூ 5,000)

புதிய சர்வீஸ்களை உருவாக்குவது(ஒரு மாதம்) = 1,18,000

மாத செலவுகள்

செர்வர் ஹோஸ்டிங்( திரட்டிகளின் பளு கூடுதல் என்பதால் டெடிக்கேட்டர் செர்வர் போக வேண்டும், இது குறைந்தது $100 ஆகும் ) ரூ 4,500

தினம் 2 மணி நேரம் வேலை செய்தல் (பதிவுகளை அப்ரூவ் செய்தல், மின் மடல் அனுப்புதல், தளம் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்தல், ப்லாக்ஸ்பாட், வேர்ட்பிரஸ் மற்றும் பல வலைதளங்களின் கோடிங் மாறும் போது திரட்டி கோடிங்கை மாற்றுவது மாதம் 60 மணி நேரம், 1 Manhour = 15$, 1$=Rs45)
மொத்தம் 60 X 15 X 45 = Rs 40,500
(இதில் பொண்டாட்டியுடன் பேசாமல், குழந்தையோடு விளையாடாமல் தினம் இரண்டு மணி நேரம் செலவு செய்து குடும்பத்தில் வசை வாங்கும் கணக்கையும், கணிணி முன் உட்கார்ந்து உடம்பு குண்டடித்தல், கண் பார்வை, முதுகுவலி பிரச்சினைகள் ஏற்படுத்தும் மருத்துவ செலவு கணக்கில் இல்லை)

ப்ராட் பேண்ட் இணைய செலவு மற்றும் மின்சாரம் = 1500

ஆக ஒரு திரட்டியை மாதா மாதம் நடத்த தேவைப்படும் உழைப்பு மற்றும் பணம் ரூபாய் 46,500 ஓராண்டிற்கு ரூ 5,58,000

மாத செலவு தவிர்த்து ஓராண்டுக்கு தேவைப்படும் உழைப்பு மற்றும் பணம் ரூபாய் 2,08,000 (விளம்பரம் மற்றும் போட்டி செலவு குறைந்த அளவு கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது)

ஒரு முறை திரட்டியை நிறுவ எடுக்கும் உழைப்பு மற்றும் செலவு ரூ 1,83,000

ஆக மொத்தம் ஒரு ஆண்டிற்கு திரட்டி நடத்த ஆகும் உழைப்பு மற்றும் செலவு ரூபாய் ரூ7,66,000 மற்றும் One time cost ரூபாய் 1,83,000 ஆக மொத்தம் 9,49,000( ஒன்பது இலட்சத்து நாற்பத்தி ஒன்பதாயிரம் ரூபாய்கள் மட்டுமே)

திரட்டி நடத்துபவர்களில் பெரும்பாலும் கணிணி வல்லுனர்கள் என்பதால் அவர்களின் உழைப்புக்கான பொருள் செலவு சேர்க்காமலும் கூட மாதம் ரூபாய் 6,000(செர்வர் ஹோஸ்டிங் + இணைய மற்றும் மின்சார செலவு) (12 X 6000 = 72,000) மற்றும் ஆண்டுக்கு 70,000 முதல் 90,000 ஆக மொத்தம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணமாக செலவு செய்தே ஆக வேண்டும்...

கணிணி வல்லுனர்கள் உழைப்பை சேர்த்தால் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு ரூபாய் பத்து இலட்சமும், அதை சேர்க்காமல் பணமாக ரூபாய் ஒன்றரை இலட்சமும் செலவு செய்யும் இந்த திரட்டி செலவை அண்ணன் சக்திவேல் எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு மாதமும் திரட்டிகளுக்கு கிடைக்கும் முழுவருமானத்தையும் அண்ணன் சக்திவேலுக்கு அளிக்க நான் தமிழ்மணம், தமிழ்வெளி, தமிலிஷ் மற்றும் திரட்டி.காம் திரட்டிகளிடம் பேசி வாங்கி தர நான் தயாராக உள்ளேன், அண்ணன் சக்திவேல் இதற்கு தயாரா என்று தெரிவிக்கவும்...

இவ்வளவு பணமும் உழைப்பும் போட்டு திரட்டிகளை ஏன் நடத்துகிறார்கள் என்றால் அது அவர்களின் "நானும் ஏதாவது செய்யனும் என்கிற சுயஅரிப்பு" மட்டுமே, திரட்டி நடத்துவதால் கிடைக்கும் மனதிருப்தி, தமிழ்மணம் காசி, தேன்கூடு சாகரன் என்று கிடைக்கும் பெயர் அதனால் ஏற்படும் திருப்தி மட்டுமே....


திரட்டி கிசு கிசு
திரட்டி நடத்தி நடத்தி அது நடத்துவதற்கான மாத செலவுகளும் உழைப்பும் கை மீறி போவதால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியவில்லை தன் உழைப்பில் உருவாக்கி சமீபத்தில் அதிக பிரபலமான ஒரு திரட்டியை ஒரு குழுவிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக்கொண்டார் அந்த திரட்டி ஓனர்...

இந்த கிசு கிசுவுக்கான குளூ : அந்த திரட்டி பெயர் இந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை

தொரையின் துறை பறிபோன கதை சில அரசியல் கிசு கிசுக்கள்

வாரம் இருமுறை பத்திரிக்கைகள், இட்லி வடை போன்றவைகள் எல்லாம் துரையின் துறை போனதைப்பற்றி கிசு கிசுக்கின்றன.

தொரை காலேஜ் கட்டறாரு, தொரை சொத்து சேர்த்துட்டாரு, தொரை நண்பருக்கு சாதகமா நடந்துக்கிட்டாரு இது தான் கம்ப்ளெய்ண்ட் இதனால தான் தூக்கிட்டாங்க என்று புலனாய்வு பத்திரிக்கைகளெல்லாம் பொலனாய்வு செய்து போட்டாங்க, இதற்காகவெல்லாம் நடவடிக்கை எடுக்கனும்னா தாத்தாவும் தாத்தா குடும்பத்து மேலயும் தான் மொதல் நடவடிக்கை எடுக்கனும்னு தெரியாதா என்ன அவிங்களுக்கு, பின்னே தாத்தா குடும்ப சொத்தெல்லாம் தாத்தா கதை வசனம் எழுதி சேர்த்ததா?

தொரைக்கு துறை புடுங்கப்பட்ட விசயம் நடந்ததென்னமோ இப்போதான் ஆனா பூர்வாங்க வேலைகள் ரொம்ப நாளா நடக்குது, அரசியல் வட்டத்தில் இதற்காக கிசுகிசுக்கப்படும் காரணங்கள்

1. தொரைக்கு தலைவர் தாத்தாவா குடிதாங்கியா என்பதில் தொரைக்கும் குடிதாங்கிக்கும் எந்த டவுட்டும் இல்லையாம், ஆனால் தாத்தாவுக்கு நிறையவே இதில் டவுட் உண்டு.

2. தாத்தாவுக்கு பின்னால வாரிசை கவுக்க எதிர் ஆளுங்க போடுற சதுரங்க பிளானில் வாரிசுக்கு ஆதரவா வாரிசின் பின்னால தம் நண்பர்கள் நிற்பாங்க அப்படிங்கற நம்பிக்கை தாத்தாவுக்கு இல்லை, தொரை மேல மட்டுமில்ல, வீரபாண்டி கோட்டையிலே உள்ள சிக்ஸ்பேஸ் மேலயும், பிச்சை, மணியானவர் என பலர் மேலும் நம்பிக்கையில்லையாம்.

3. குடிதாங்கிக்கும் தாத்தாவுக்கும் ஒறவு புட்டுக்கிட்ட போது தொரை பெயரில் வெளியான அறிக்கையில் தொரையோட பெயர் மட்டும் தான் தொரைதாம் மற்றதெல்லாம் யாருடையது என்று சொல்லி தெரியனுமா?

4.கலக்க போவது காமெடியில் டி.ராஜேந்தர் வறுபடுவது மாதிரி தொரையோட மிமிக்கிரியில் அதிகம் வறுபடுவது அப்போதைய 'இளைய'வாம் இளைய தொணை ஆன பின்பும் தொரை மிமிக்கிரியில் தொடருதாம், தொரைக்கு தொணை மேல மரியாதையில்லைங்கறது தொணைக்கும் தாத்தாவுக்கும் வருத்தமாம்

5. தொரையை மட்டம் தட்ட தொரை ஆளுங்களை தொரை ஊருல பதவி கொடுக்காம காலி செய்தார் அப்போதைய இளைய இப்போதைய துணை, தொரை அழுது ஆர்பாட்டம் செய்து திரும்ப வாங்கிட்டாரு, தொரை இல்லாம ஊருக்குள்ள கட்சி நடத்த முடியும்ங்கற நிலை வரும்வரை விட்டு கொடுத்து இப்போ காலி செய்ததாக பேச்சி

6. வீரபாண்டி கோட்டியிலே கொடி நாட்ட போனாராம் இளைய, சிக்ஸ்பேஸ் உடன் முட்டியதில் தொடருந்து நிலையத்துக்கு ஒரு ஆளும் வரலையாம், அப்புறம் தாத்தா ராசியா போக சொல்லியிருப்பதால் அண்ணா தம்பி என்று உருகுகிறார்களாம்

7.சிக்ஸ்பேஸ்க்கும், குடிதாங்கி கட்சிக்கும் நடக்கும் மோதலை உண்மை என்று தாத்தா வீட்டில் இருக்கும் பொடிசு கூட நம்பலையாம்

8. கோல்ட் ஹேர் காரரோட க க கல்லூரியில் பாதி கவிதைக்கு போயிருச்சாம்

9.பன்னீர்சோடா வாசம் வீசும் ஒருவர் காலேஜ் கட்டுறாருன்னு தகவல் போனதாம், என்னதான் மறைத்தாலும் மொத்தமா நூறூ ஏக்கர் வாங்கினா தெரியாதா என்ன? பாதி காலேஜ் போயிருந்தா கூட பரவாயில்லை, முழுசும் கேட்குறாங்களாம்.

10. தாத்தாவோட தொடர்புக்கு இருக்கும் எல்லா பை-பாஸ் வழிகளையும் நேரம் பார்த்து வெட்டெறிந்துவிட்டு தான் மறுவேலையாம், பின்னே நெல்லுக்கு மட்டும் பாயனுமோ இல்லியோ இங்கே வழியில இருக்கிற புல்லு பூண்டுக்கெல்லாம் பாயுதே...