காசி, தமிழ்மணம், பத்திரப்பதிவு ஊழல், ஈ-கவர்னென்ஸ், உளவு பார்க்கும் அரசாங்கம்

காசி அண்ணன் கொஞ்ச நாளைக்கு முன்பு சில கேள்விகள் அனுப்பி பதிலனுப்ப சொல்லியிருந்தார், நானும் ஏதோ நமக்கும் இன்னும் சிலருக்கும் மட்டும் அனுப்பியிருப்பாரென்று உட்கார்ந்து அனுப்பினால் அண்ணன் 30 பேருக்கு அனுப்பியிருக்கார், இவர் 30 பேருக்கு அனுப்பியது முன்னாலேயே தெரிந்திருந்தால் காசிக்கு தேவையான அளவிற்கு பதில் கிடைத்திருக்குமென டிமிக்கி கொடுத்திருப்பேன்... அப்புறம் சொந்த பதிவிலேயே போட்டுக்கொள்ளுங்கள் என்று வேறு சொல்லிவிட்டார்... சரி அதான் இங்கே

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்ற எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவு இல்லை என்றே கருதுகிறேன், அதிலும் குறிப்பாக புவியியல், தொழில்நுட்பம், அறிவியல் போன்றவைகளில் கடும் வறட்சி நிலவுகிறது, வரலாறு தன்னிறைவடையவில்லையென்றாலும் வரலாறு.காம் போன்ற ஓரிரு தளங்களினால் கொஞ்சமேனும் உள்ளது, அறிவியல் தளத்தில் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ் வழி கல்வி அறிவியல் புத்தகங்களில் உள்ளவைகள் கூட இணையத்தில் தமிழில் இல்லை.

தமிழில் தொழில் நுட்பமே இல்லையா என்றால் அது நிச்சயம் தவறு, பாலிடெக்னிக் பாடதிட்டங்கள் எல்லாம் சுரா பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பகம் தமிழில் கொடுத்துள்ளது, லேத் எப்படி வேலை செய்கிறது என்பதிலிருந்து மைக்ரோபிராசஸர் தொழில்நுட்பம் வரை தமிழில் உள்ளது, நோக்கியா கைத்தொலைபேசியின் சர்க்யூட்டுகளிலிருந்து கான்க்ரீட் தொழில்நுட்பம் வரை தமிழில் உள்ளது. ஆனால் இவைகள் எல்லாம் இணையத்தில் இல்லை இதற்கு முக்கிய காரணம் தற்போதைய தமிழ் இணைய பயன்பாட்டாளர்களுக்கு இவைகள் எல்லாம் தேவை இல்லை என்பதே...

தமிழ் இணைய பயன்பாடு அதிகரித்து வந்து கொண்டே உள்ளது, ஆனால் அவைகள் செய்திகள், அரசியல்,இலக்கியம் சினிமா கிசு கிசு படிப்பது மற்றும் பலான பலான என்ற அளவிலேயே பெரும்பாலும் உள்ளது. தற்போதுள்ள இணைய பயனாளர்களுக்கு பெரும்பாலும் புவியியலோ, அறிவியலோ தேவையில்லை, அப்படியே தேவை என்னும் போது அவர்கள் எளிதாக ஆங்கிலத்தில் தேடி பார்த்துவிட்டு போவார்கள்.பட்டம் நடிகை, ஒல்லிப்பிச்சான் நடிகர் என்ற கிசு கிசுக்களை எல்லாம் ஆங்கிலத்தில் படித்தால் சுவராசியமாக இருக்குமா? இருக்காது... எனவே சுவாரசியத்திற்காக கிசு கிசுவை தமிழில் தான்படிக்கவேண்டி உள்ளது...

தற்போதைய பெரும்பாண்மை தமிழ் இணையதள பயனாளர்கள் பிழைப்புக்கும் தொழிலுக்கும் ஆங்கிலத்தையும் பொழுது போக்கிற்கு தமிழையும் பயன்படுத்துபவர்கள். எனவே தமிழ் உள்ளடக்கம் இணையத்தில் நிறைய பெருக வேண்டுமெனில் தொழிலுக்கும் பிழைப்புக்கும் தமிழை பயன்படுத்துபவர்கள் இணைய பயன்பாட்டிற்கு நிறைய வரவேண்டும், அப்படி அவர்கள் வரும்போது யாரும் ஒன்றும் கழட்ட வேண்டாம் தானாகவே தமிழில் நிறைய உள்ளடக்கங்கள் வரும்.2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? என்றால் இதற்கு ஆம் மற்றும்இல்லை என்ற இரண்டு பதில்களையும் சொல்ல முடியும், இதற்கும் முதல் கேள்வியில் சொன்ன பதிலே, ஆன்லைன் வசதிகளை பயன்படுத்துவர்கள் பெரும்பாலும் சாஃப்ட்வேர் ஆட்களே... இன்னும் இணையம் பலருக்கும் எட்டாகனியாகவே உள்ளது, அப்படியாகும் போது நிச்சயம் கைத்தொலைபேசி பரவலானது போன்ற நல்ல பரவலான பலன் கிட்டும்...


3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

தமிழ் இணைய சமூகத்தில் இது ஒரு வேதனையான விடயம் தான், தமிழக அரசாங்கம் செய்ய வேண்டியதை,பல்கலைகழகங்கள் செய்ய வேண்டியதை இங்கே ஒரு சில தனி நபர்கள் செய்ய முயற்சித்திருக்கின்றார்கள்,தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய முதலில் முகுந்த் என்ற தனிநபரே ஈ-கலைப்பையின் மூலம் செய்யவேண்டியிருந்தது, கிட்டத்தட்ட இன்று தமிழ் இணையத்தின் வளர்ச்சி என்பது அரசாங்கம்,பல்கலைகழகங்களின் பங்களிப்பில்லாமல் முழுமையாக தன்னார்வலர்களின் பங்களிப்பே, இது மாதிரி இன்னும் நிறைய குறிப்பிடலாம். விக்கிப்பீடியா போன்ற குழுக்களை சரியாக முறைப்படுத்தினால் பரவலான ஆதரவை பெறும்.

சில முக்கிய தேவைகள் வியாபரமாக கூட இங்கே செய்ய இயலாத அளவிற்கு உள்ளது, உதாரணத்திற்கு OCR ஆப்டிக்கல் கேரக்டர் ரீடர் எனப்படும் ஒரு விசயம் தமிழுக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது, ஸ்கேன் செய்தவற்றை எழுத்துக்களாக மாற்றும் இந்த வசதி ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் இருக்கிறது, ஆனால் தமிழில் இல்லை, இதை ஒரு திட்டப்பணியாக அண்ணா பல்கலை கழகத்தில் ஒருவர் செய்திருக்கின்றார் ஆனால் அதுவும் முழுமையடையவில்லை, இது கிட்டத்தட்ட உவேசாமிநாதர் அவர்கள் செய்தது போன்ற ஒரு விசயம், அவர் ஓலைச்சுவடியிலிருந்து அச்சு ஆக்கினார், இந்த OCR மூலம் அச்சிலிருந்து கணிணிக்கும் மாற்றலாம்.


4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?


என்னங்க திடீரென "நான் முதல்வரானால்" என்று சின்னவயசில் கட்டுரை எழுத சொல்வது போன்ற கேள்வியை போட்டுவிட்டீர்.

தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்திற்கு செல்லும் முன் வேறு சில விசயங்கள் மிக முக்கிய தேவையாக உள்ளது, அதில் முதலாவது ஈ-கவர்ணென்ஸ், இந்திய மற்றும் தமிழகத்தில் அரசு, தனியார், தனி நபர் என அத்தனையும் ஊழல் மயமான ஒரு இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஊழல் என்பது திருட்டு என்பதை தாண்டி அடாவடி என்ற நிலையை தொட்டுக்கொண்டிருக்கின்றது, அதில் மிக முக்கியமானது நில ஊழல்கள், பல இடங்களில் ஒரு சாதாரண பொது மக்களின் வாழ்க்கையை சிதைக்கும் அளவிற்கு சென்று கொண்டுள்ளது, இதற்கு முக்கிய காரணம் பத்திர பதிவு அலுவலகத்தில் உள்ளவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு மூல பத்திரங்களை திருடி அதிலிருந்து போலி தயார்செய்வதில் ஆரம்பித்து ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு ஒரே சொத்தை விற்பது வரை நடைபெறுகின்றது... இதில் அமைச்சர்கள் முதல் அல்லக்கைகள் வரை அத்தனை பேரும் ஈடுபடுகிறார்கள், இன்றைக்கு தமிழகத்தை மிகவும் அச்சுறுத்தும் ஒரு மாபெரும் மோசடி இது. காவல்துறை பற்றி சொல்லவே வேண்டாம், காவல்துறையில் ஒரு கைதி தடுத்துவைக்கப்பட்டுள்ளாரா? கைது செய்யப்பட்டுள்ளாரா? தேடப்படுபவர்கள் எந்த குற்றத்துக்காக தேடப்படுகிறார்கள் என்பதிலிருந்து எந்த தகவலும் தெரிவதில்லை,

சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு செய்தி சிங்கப்பூரில் ஒருவரை காணவில்லை என்று ஊரில் பதறுகிறார்கள், காணாமல் போன நபரின் சொந்தக்காரர் ஒரு மின்மடல் சிங்கப்பூர் காவல்துறைக்கு அனுப்பிய இரண்டாம் நாள் எந்த குற்றச்செயலுக்காக, எந்த செக்ஷனுக்கா எப்போது எங்கே அவர் தடுத்து வைக்கப்பட்டார் என்ற தகவல்களை அனுப்பி வைத்தார்கள்.. இவைகளையெல்லாம் தெரிந்து கொள்ள பல நேரங்களில் தற்போதுள்ள நடைமுறைகளில் உள்ள தாமதம் பல ஏமாற்று வேலைகளுக்கும் குற்றச்செயலுகளுக்கும் ஒரு முக்கிய காரணம், எனவே பத்திரபதிவு, நீதிமன்றங்கள், காவல்துறை போன்ற அதிமுக்கியமான துறைகளை உடனே கணிணி மயப்படுத்தி அவைகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கான ஆன்லைன் வசதியும் செய்ய வேண்டும்.

10 மற்றும் 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுகளுக்காக மாலைமலர் பத்திரிக்கை வரும்வரை காத்திருந்து பாஸா பெயிலா என்பதை தெரிந்து கொண்டு அடுத்த கட்டமாக மதிப்பெண் பட்டியல் கையில் வரும்வரை நகம் கடித்திருந்திருக்கிறோம், இன்று பட்டனை தட்டினா பட்டுன்னு மதிப்பெண் பட்டியலையே கொட்டி விடுகிறது...

இந்த ஈ-கவர்ணனெஸ்ல் பல ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருப்பதால் இதன் முழுப்பலன் எந்தஅளவிற்கு இருக்கும் என்பதை நேரடியாக கண்டிருப்பதால் இதற்கே முதன்மை, இம்மாதிரியான விசயங்களுக்கு முன்னுரிமை தருவதை விடுத்து தேசிய அடையாள அட்டை அடிப்பதை முக்கியமாக்கிக்கொண்டு திரிகின்றன இந்த அரசுகள், கணிணி மயமாக்கப்பட வேண்டிய பல முக்கிய விடயங்களுக்கு முன்னுரிமை தராமல் தேசிய அடையாள அட்டைக்கு மட்டுமே அலைவது ஒவ்வொரு குடிமகனையும் நன்றாக வேவு பார்க்க மட்டுமே முக்கியமாக பயன்படும், காவல்நிலையத்தில் ரவுடிகளுக்கு ஃபைல் போடப்படுவது போலதான் இதுவும், முக்கியமான சில மாற்றங்களை செய்யாமல் தேசிய அடையாளஅட்டையை வைத்துக்கொண்டு பொதுமக்கள் நாக்கு கூட வழிக்க முடியுயாது.

இவைகள் எல்லாம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது இதில் தானாகவே தமிழ் வரும்.


5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

ஹா ஹா... தமிழ் வலைப்பதிவுகள் இப்போது வரை நிறைய பொழுது போக்கு, கொஞ்சம் சீரியஸ் என்றுதான் உள்ளது, புதிதாக வலைப்பதிய வருபவர்களுக்கு யோசனை சொல்லுமளவிற்கு ஒன்றுமில்லை, அவரவர்கள் அவரவர்களாகவே இருந்தாலே போதும்


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

தமிழ்மணத்திற்கு என் வாழ்த்துகள், தமிழ்மணம் இதன் சேவையை பற்றி எழுத வேண்டுமெனில் பக்கங்கள்போதாது, ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கின்றேன், தமிழ்மணம் கிட்டத்தட்ட ஒரு புரட்சியை இணையத்தில் செய்துள்ளது என்றே சொல்லலாம், நான் தமிழ்மணத்தில் இணைந்த போது பதிவுகளின் எண்ணிக்கை 400க்கும் குறைவு இன்றோ 5000க்கும் மேல், தமிழ் இணையத்தில் குழுமங்களின் காலம் அது, அங்கே மாற்று கருத்து என்பதே பெரும்பாலும் இல்லாத நிலை, சங்கராச்சாரியை 'ர்' போடாமல் எழுதினால் மரியாதை குறைவு என்று குழுமத்தை விட்டே வெளியேற்றிய பாசிச நிலையில் ஒரு சாரரின் ஆதிக்கத்தில் இருந்தது, அதை உடைத்தது தமிழ்மணம், பலமுறை தமிழ்மணத்தை உதிர வைக்க பல முயற்சிகள் நடந்த போதும் பல முறையற்ற விமர்சனங்களை தமிழ்மண நிர்வாகத்தை விட தமிழ்மணத்திலிருந்த பதிவர்கள் பதிலடி கொடுத்து முறியடித்தனர் இதற்கு முக்கிய காரணம் தமிழ்மணம் வேறு தாம் வேறு என்று பதிவர்கள் நினைக்கவில்லை, அந்தளவிற்கு தமிழ்மணம் பதிவர்களோடு பிணைந்திருந்தது

தமிழ்மணம் செய்ய வேண்டியவை என்பதை விட தமிழ்மணம் செய்ய தவறியவை என்ன என்று சொல்கிறேன்.. தமிழ்மணத்திற்கு ஒரு மிக அருமையான வாய்ப்பு ஆனால் அதை தவறவிட்டுவிட்டது என்றே சொல்லலாம், தமிழ்மணம் தனியாக வலைப்பதிவுலகில் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் தமிழ்மணம் ஒரு லீட் ரோல்(தலைமை) எடுத்திருக்கலாம், தனி மனிதனாக காசியிடமிருந்து 15க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் கொண்ட குழுவிடம் சென்ற போது நிறைய எதிர்பார்த்தேன், இன்னும் சரியாக சொல்வதென்றால் தமிழ்மணம்

ஒரு கட்டத்திற்கு மேல் தேங்கிவிட்டது, தமிழ்மணம் வலைப்பதிவு என்பதோடு மட்டுமின்றி ஒரு மீடியாவாக, ஊடகமாக, இணையத் தலைமையாக உருவெடுக்கும் என்றே எதிர்பார்த்தேன், தனியாக ஓரிரண்டு பேர் நடத்தும் திரட்டிகளாலோ வலைதளாங்களாலோ இது முடியாது, ஆனால் 15 இயக்குனர்கள் இருக்குமிடத்தில் பணம், வேலையை பகிர்ந்து கொள்ளுதல் என்பது சுலபம்( இது சுலபமா, கடினமா என்பது அவரவர்களுக்கு தான் தெரியும், என்றபோதும் இது என் எதிர்பார்ப்பு என்றே கூறலாம்)...

தமிழ்மணம் தவறிய இன்னொரு விடயம், அது தன் வளர்ச்சியில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை, தமிழ்மணம் கொஞ்சம் கொஞ்சமாக பதிவர்கள் தங்கள் நண்பர்களிடம் சொல்லி அங்கிருந்து அப்படியே வேறொருவருக்கு சொல்லி என்றே பெரும்பாலும் வளர்ந்ததே, இதனால் exponential growth ஆக இருக்க வேண்டிய தமிழ்மணத்தின் வளர்ச்சி gradual ஆக மட்டுமே இருந்தது... வலைப்பதிவுகளை பரவலாக்குவது, வெளியாட்களிடம் கொண்டு செல்வது, புது தன்னார்வ குழுமங்களை உருவாக்குவது, கம்யூனிட்டியாக உருவாகுவது என லீட் ரோல் எடுத்திருக்கலாம், இதெல்லாமே எளிதான விடயங்கள் இல்லை என்றாலும் தமிழ்மணம் செய்திருக்கலாம்.. செய்யக்கூடிய சூழல் அப்போது இருந்தது என்றே சொல்லலாம், ஆனால் இப்போது வலைப்பதிவுலகம் பெரிதாகிவிட்டதும் மற்ற பல அரசியல்களாலும் இதையெல்லாம் இனி செய்ய இயலுமா என்பது சந்தேகமே.

செய்ய தவறியது என்று சொன்னதிலிருந்தே எதையெல்லாம் தமிழ்மணம் செய்ய வேண்டும் என்ற பதிலும் இருக்கின்றது....

வாய்ப்பளித்த காசி அண்ணாவுக்கும், பலரையும் என்னையும் உருவாக்கிய தமிழ்மணத்திற்கும் இத்தருணத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்

3 பின்னூட்டங்கள்:

said...

கலக்கல்!

said...

படித்த ஒரு சிலதில் உருப்படியானது இது தான். நேர்மையாகவும் விளக்கமாகவும் இர்ந்தது

said...

சுவாரசியமான பதில்கள்.

கோவி கண்ணன் இதே கேள்விகளுக்குப் பதிலைத் தனிப்பதிவாக ஆரம்பித்து வைத்தபோது கடைசிக் கேள்விக்கு இப்படிச் சொல்லி இருந்தார்"தமிழ்மணம் முன்பு போல் தமிழுக்கு ஒரே திரட்டி கிடையாது, தமிழ் பதிவுகளுக்காக இயங்கும் பல திரட்டிகளில் தமிழ்மணமும் ஒன்று."

இப்போது கூட முன்னணியில் இருந்தாலும், தமிழ்மணம் சந்தித்துக் கொண்டிருக்கும், சந்திக்கப்போகிற சறுக்கல்கள் ஏராளம் என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது!