மரணத்தின் அருகில்

இருநூறு முன்னூறு பேர் கொண்ட கூட்டம் தனியாக இருக்கும் நான்கு பேருக்கு கொலை மிரட்டல் விடும்போது மனநிலை எப்படி இருக்கும்?

நான் கல்லூரியில் முதல் ஆண்டு படித்த போது முதலாண்டு செமஸ்டர் தேர்விற்காக விடப்பட்ட Study leaveல் ஊருக்கு சென்று அங்கு படிக்காமல் சாப்பிட்டு,தூங்கி எழுந்து கொண்டிருந்தேன், அந்த சமயத்தில் எங்கள் விடுதியில் உணவுக்கூடம்(மெஸ்) மூடப்பட்டுவிட்டது, ஆனால் ஒரு சில மாணவர்கள் மட்டும் விடுதியில் தங்கி தேர்விற்காக படித்தனர், சரி நாம்தான் வீட்டில் படிக்கவில்லையே, விடுதிக்கு சென்றாலாவது அங்கு இருக்கும் சில நண்பர்களோடு சேர்ந்து படிக்கலாம் என கிளம்பி விடுதிக்கு தேர்விற்கு ஒரு வாரத்திற்கு முன் அதிகாலை வந்து சேர்ந்தேன், நான் வந்த பொழுது விடுதி பரபரப்பாக இருந்தது.

விடுதியிலிருந்த சில நண்பர்கள் பரபரப்பாக இருந்தனர், என்ன என்று விசாரித்தபோது விடுதியிலிருந்த ஒரு மாணவர் விடம் குடித்த நிலையில் மருத்துவமனையிலிருக்கின்றார் என்று.

அதிகாலை 5.00மணிக்கு அந்த மாணவரின் அறைக்கு சென்று படிக்க எழுப்பியபோது வாயில் நுரை தள்ளிய நிலை, உடனடியாக நண்பர்கள் ஒரு ஆட்டோ வைத்து அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோதும் ஏதோ விசப்பூச்சி கடித்துவிட்டது என்றே எண்ணியிருந்தனர்(பிறகு அவருடைய அறையின் மேசையிலிருந்து அவரின் கடிதம் கண்டெடுக்கப்பட்டது), தனியார் மருத்துவமனையில் பார்த்த உடனே விசம் குடித்துவிட்டார், இங்கே அனுமதியில்லை என்று கூறிவிட்டனர், இந்த நிலையில் ஆட்டோகாரரும் மருத்துவமனை வாயிலில் இறக்கிவிட்டு காசு கூட வாங்காமல் ஓடிவிட்டார், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேறு ஆட்டோ பிடிக்க ஆட்டோ நிறுத்துமிடம் சென்றபோது ஒரு வாகனம் கூட இல்லை, எல்லோரும் மறைந்து விட்டனர், தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கேட்டபோது ஓட்டுனர் இல்லை என்றனர், உடனடியாக தாமதிக்காமல் எங்கள் பேராசிரியர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து அவருடைய காரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இவை அத்தனையும் 15 நிமிடத்தில் நடந்தது, விசம் குடித்து வெகுநேரம் ஆகியிருந்ததால் எத்தனை முயன்றும் காப்பாற்றமுடியவில்லை.

இதே நேரத்தில் அவருடையை தந்தைக்கு ஆள் அனுப்பியாகிவிட்டது. அவர் வீடு கல்லூரியிலிருந்து 100கி.மீ. தாண்டி இருக்கும் ஒரு கிராமம்.

கல்லூரி பேராசிரியர்கள் சிலர் வந்தனர், பிரேத பரிசோதனை செய்தால் செய்தித்தாள்களில் செய்தி வரும், காவல் துறை விசாரனை வரும், உங்களுக்கு தேர்வு சமயம், தேவையில்லாத பிரச்சினை வரும் உடனே பிரேதத்தை எடுத்து செல்லுங்கள் என மருத்துவரும் பேராசிரியர்களும் வலியுறுத்தினர், அந்த சமயத்திலெல்லாம் நான் மருத்துவமனையிலிருக்கின்றேன்.

பின் உடனடியாக ஒரு கார் வைத்து விடுதியில் காத்திருக்கின்றோம் இறந்தவரின் தந்தைக்காக, அங்கேயும் சிலர் வந்து இன்னும் எத்தனை நேரம் காத்திருப்பீர் நேரம் ஆக ஆக சிக்கல் தான் பெற்றோருக்காக காத்திருக்காதீர்கள் உடனே கிளம்புங்கள் அவர் ஊருக்கு என்றனர்,

யார் அந்த ஊருக்கு செல்வது என்ற போது பலர் ஒதுங்கினர்,என்னையும் சேர்த்து 6 பேர் தயாரானோம், ஆனால் நானும் இன்னும் மூன்று மாணவர்களும் எங்கள் கல்லுரியில் வேலை செய்த Non-Teaching அலுவலர் (இவர் அந்த மாணவனின் பக்கத்து ஊர்) ஒருவரும் கிளம்பினோம், எங்கள் பேராசிரியர் சிலர் நீங்கள் யாரும் பயப்படாதீர், நாங்கள் பின்னால் வேறொரு காரில் வருகின்றோம் என்றனர்.

காலை 10.30க்கு கிளம்பி அந்த ஊரை 12.00க்கு அடைந்தோம், டிக்கியில் பிரேதம். அந்த மாணவரின் வீட்டை அடைந்த போது அவரின் தந்தை மருத்துவமனைக்கு சென்றுள்ளார், அவரின் அண்ணி நிறைமாத கர்ப்பினியாக, உடனடியாக விடயத்தை சொல்லாமல் அவரின் அண்ணனுக்கு தகவல் சொல்லி காத்திருந்தோம், எங்களோடு வந்த ஓட்டுனர் உடனே சொல்லுங்கள் நான் செல்ல வேண்டும் என்றார், நாங்கள் அவரை பொறுக்க சொன்னோம், அவர் திடீரென அவரின் அண்ணியிடம் சென்று அந்த மாணவர் இறந்துவிட்டார் சடலம் டிக்கியில் உள்ளது என்று கூறிவிட்டார், பெருங்குரலெடுத்து அவரின் அண்ணி அழ 5 நிமிடத்தில் ஒரு 200 - 300 பேர் கூடிவிட்டனர், சடலத்தை எடுத்து அவர்கள் வீட்டில் வைத்துவிட்டு வெளிவந்த அந்த நிமிடத்தில் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும் எங்கள் நால்வரையும் இழுத்து கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தனர், அந்த வீட்டின் முன்பு ஒரு போக்குவரத்து மிக்க சாலை அங்கே சென்ற பேருந்துகள் கூட்ட நெரிசலால் நின்று நின்று போக ஆரம்பித்தன.

இன்னும் அவரின் சகோதரரும், தந்தையும் வரவில்லை, நானும் மற்றொரு நண்பரும் மட்டும் வாடகைக்காருக்கு பணம் தந்துவிட்டு மாலை வாங்கி வர சென்ற போது அந்த வாடகைக்கார் ஓட்டுனர் தம்பி நிலவரம் சரியில்லை, நீங்க 4 பேரும் உடனடியா என்னோடவே வந்துடுங்க என்றார் ஆனாலும் எந்த பதட்டமுமில்லாமல் அவருக்கு பணம் தந்துவிட்டு அருகிலிருந்த நகரத்திலிருந்து மாலை வாங்கிக்கொண்டு மீண்டு அதே ஊருக்கு வந்தோம்.

நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாகிக்கொண்டிருந்தது, அதற்குள் சிலர் குடித்துவிட்டு வந்தனர், அவர்கள் வந்து கேவலமாக பேச ஆரம்பித்தனர், வருவதாக கூறிய விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் வரவில்லை, தனித்தனியாக எங்களை பிரித்து கும்பல் கும்பலாக விசாரணை நடத்தினர், அங்கு நின்றிருந்த பேருந்து ஓட்டுனர் என்ன கூட்டமென கேட்க நீ இங்கேயே கொஞ்சம் நில்லு இன்னும் கொஞ்ச நேரத்தில 4 கொலை விழப்போகுது பாடி எடுத்துக்கொண்டு போக நில்லு என்றார் கும்பலில் ஒருவர், மேலும் கடுமையான கொலை மிரட்டல்கள் நேரடியாக விடப்பட்டன, இத்தனை நடந்தும் ஒரு சிறிய பதட்டம் கூட என்னில் இல்லை கூட படித்த நண்பன் இறந்தவிட்டானே என்ற வருத்தத்தைதவிர இந்த கொலை மிரட்டல்கள் எல்லாம் மிக சிறிய அளவில் கூட என்னிடம் பாதிப்பேற்படுத்தவில்லை, ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு இதையெல்லாம் நினைத்துப்பார்க்கும் போது நடுங்கிவிட்டேன் ஏன் தற்போது இதை எழுதிக்கொண்டிருக்கும் போது கூட என் நெஞ்சு பட படக்கின்றது எத்தனை ஆபத்திலிருந்து அன்று தப்பியிருக்கின்றோம் என்று, அன்று மட்டும் யாரேனும் ஒருவன் எங்களில் ஒருவனி சட்டையை பிடித்திருந்தாலோ ஒரு அடி கொடுத்திருந்தாலும் மொத்த கூட்டமும் எங்களை பஞ்சராக்கிவிட்டிருக்கும் கிட்டத்தட்ட 4 மணி நேர மிரட்டல்களை 4 பேரும் இலாவகமாக சமாளித்துக்கொண்டிருந்த போது அவரின் தந்தை வந்துவிட்டார், வந்த உடன் எங்கள் நான்கு பேரையும் கையோடு சேர்த்துக்கொண்டார், அதன் பிறகு யாரும் எங்கள் கிட்டே வரவில்லை, அதன் பிறகு இடுகாட்டில் எரியூட்டப்பட்டு பிறகு நாங்கள் வண்டியேறும் வரை எங்களை ஒரு நொடிக்கூட பிரிந்திருக்கவில்லை, கடைசியில் வேறு சில நண்பர்களும் எங்கள் நண்பராக இருக்கும் ஒரு விரிவுரையாளரும் வந்தனர். அதன் பிறகு அந்த ஊரின் அருகிலிருந்த ஊரிலிருந்து எங்கள் கல்லூரிக்கு படிக்க வந்த சில பெண்கள் பல ஆண்டுகளாக அந்த தற்கொலைக்கு வேறு வேறு காரணம் கற்பித்து வந்ததை அவ்வப்போது எங்களிடம் சொல்வார்கள்.

எந்தவித அரசு சான்றுகளுமில்லாமல் ஒரு சடலத்தை எடுத்துக்கொண்டு எங்களுக்கு தெரியாத உணர்ச்சிவயப்படும் ஒரு கிராமத்திற்கு செல்ல எது எங்களுக்கு தைரியம் கொடுத்தது?

கும்பலாகவும் சிலர் குடிபோதையிலும் கையில் கழி, கடப்பாரை, கத்திகள் போன்ற ஆயுதங்கள் வைத்துக்கொண்டு எங்களுக்கு கொலை மிரட்டல் விட்ட போதும் அந்த மிரட்டல்களை கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல் அத்தனை பேரையும் பேசி சமாளிக்க தைரியம் கொடுத்தது எது?

ஓட்டுனர் எச்சரித்த போதும் திரும்பி போகாமல் கடைசி வரை கூடவே இருந்ததற்கான தைரியம் கொடுத்தது எது?

இன்றைக்கு அதை நினைத்தாலும் குலை நடுங்குகின்றேன், ஆனால் அப்போது இந்த பயம் இல்லை எதனால் என்றால் எல்லாம் அந்த வயசுங்க, வயசு, எந்த ஆபத்தையும் பற்றி எண்ணாமல் கால் தரையில் படாமல் திரிந்த வயசு. ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு, இந்த வயதில் செய்யும் ஒரு சில செயல்கள் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும், இந்த வயதில் பெற்றோர்கள், ஆசிரியர்களின் கண்காணிப்பு மிக அவசியம், நல்ல நண்பர்கள் முக்கியம், நண்பராக பெற்றோர்களும் ஆசிரியர்களும் செயல்படவேண்டும் எதிரியாக அல்ல. ஏன் இதை இத்தனை விரிவாக எழுதினேன் என்பது அடுத்த பதிவில்.

9 பின்னூட்டங்கள்:

said...

enthak kallUriyil padiththeergaL kuzhali..

enakkum ippadi oru anubhavam uNdu.. aanaal maraNaththin arugil illai..

anbudan vichchu

said...

நல்ல் பதிவு, குழலி. படிக்கும் போதே கொஞ்சம் திகிலாகத் தான் இருந்தது. உங்கள் தைரியத்திற்கும் நட்புணர்விற்கும் பாராட்டுதல்கள்.

said...

குழலி,

உங்கள் 4 பேரை ஏன் மிரட்டினார்கள் அவர்கள்? உண்மையில் நல்லதுதானே செய்தீர்கள்! புரியவில்லை எனக்கு.

இதேபோல ஒரு சம்பவத்தில், இறந்தவரின் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் அந்த பிணவண்டியில் 250 கிமீ இரவில் பயணம் செய்திருக்கிறேன்.

நடு இரவில் நாங்கள் போய்ச்சேர்ந்தபோது ஊர் எல்லையில் ஊரே திரண்டிருந்தது.

எம்.கே.

said...

//உங்கள் 4 பேரை ஏன் மிரட்டினார்கள் அவர்கள்? உண்மையில் நல்லதுதானே செய்தீர்கள்! புரியவில்லை எனக்கு//
நடந்தது தற்கொலை... அந்த தற்கொலையில் ஏதோ மர்மம் இருக்கின்றது என்ற சந்தேகம், மேலும் இறந்தவரின் தந்தை,அண்ணன் போன்றோர் நாங்கள் இருந்த இடத்தில் இல்லை. எனவே தான் இந்த மிரட்டல்கள்.

காரணங்களாக அந்த ஊர்மக்கள் பேசிக்கொண்டதெல்லாம் கற்பனைக்கும் எட்டாதவை, பின்னால் அருகிலிருந்த ஊரிலிருந்து படிக்க வந்த என் கல்லூரி பெண்கள் கூறியது.

1. அந்த மாணவன் நன்றாக படிக்க கூடியவன் அதனால் பொறாமை கொண்ட மற்ற மாணவர்கள் கொலை செய்துவிட்டனர்.
2. சீனியர் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார்
3.ஆசிரியருக்கும் ஒரு மாணவிக்கும் கள்ள தொடர்பாம் அதை இவர் பார்த்துவிட்டாராம் அதனால் கொலையாம்
4.சீனியருக்கு ஒரு மாணவிக்கும் கள்ள தொடர்பாம் அதை இவர் பார்த்துவிட்டாராம் அதனால் கொலையாம்
5.காதல் தோல்வி

இது மாதிரி எத்தனையோ புரளிகள்

அவர் தந்தை அதன் பிறகு ஒரு முறை எங்களை பார்க்க கல்லூரி வந்து அரை நாள் எங்களோடு இருந்து அன்று நடந்த விடயங்களுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு சென்றார்.

said...

//உங்கள் 4 பேரை ஏன் மிரட்டினார்கள் அவர்கள்? உண்மையில் நல்லதுதானே செய்தீர்கள்! புரியவில்லை எனக்கு.
//
கும்பல் சேரும் போது நல்லது செய்வதாவது கெட்டது செய்வதாவது சும்மா ஒரு உதார் விட வேண்டியது தானே

said...

நீங்கள் எந்த கல்லூரியில் படித்தபோது இது நடந்தது ? அழகப்பாவிலா?

said...

படிக்கும் போதே நிகழ்ந்திருக்க கூடிய விபரீதத்தை புரிந்துக்கொள்ள முடிந்தது.. !
ஆனால் அடுத்த பதிவில் என்று ஏன் சஸ்பென்ஸ் வைத்தீர்கள் என்று தான் புரியவில்லை குழலியாரே!

இதில் குழலியின் வழக்கமான குசும்பு எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்..
சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க

வீ எம்

said...

குழலி
உங்கள் நட்புணர்வும் அக்கறையும் புரிகின்றது.

said...

//ஆனால் அடுத்த பதிவில் என்று ஏன் சஸ்பென்ஸ் வைத்தீர்கள் என்று தான் புரியவில்லை குழலியாரே!
//
அந்த வயதில் பயம் என்பதே தெரியாது, அந்த வயதில் எந்த விளைவுக்கும் கவலைப்படாமல் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டு, சாகச மனப்பான்மை இருக்கும், இந்த வயதில் ஏதேனும் தவறு செய்தால் மொத்த வாழ்க்கையையும் பாழடித்துவிடும், அதனால் தாதாக்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி இந்த மாதிரி வயதில் இருக்கும் இளைய சமுதாயத்தினரை ஹீரோயிசம் போல வன்முறை வாழ்க்கைக்கு பலியாக்கிவிடக்கூடாது என்று எழுதிய பதிவு தான் தெக்கத்தி டெர்மினேட்டர் லிங்கம், தற்போது புரிந்திருக்கும் ஏன் அப்படி கூறினேன் என்று.


இது நான் அழகப்பா பொறியியல் கல்லூரியில் படித்த போது நடந்த விடயம்.

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி