அப்சல், தீவிரவாதம், மாறி வரும் போர் முறை
இவைகள் மாற்றுப்பார்வையே, இந்த மாற்றுப்பார்வையே முற்றிலும் சரியானது என்று தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக இருப்பதைவிட இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியமிருப்பதாக கருதியதாலேயே இந்த பதிவு.

இந்திய நாடாளுமன்றத்தை தாக்கியதற்கு உதவிய அப்சலை தூக்கில் போடுமாறும் அது நியாயமனதுமே என்று இங்கே பலரும் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் மேலே உள்ளபடங்களில் இருப்பவர்கள் அப்சலின் தூக்கை எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர், அவர்களும் இந்தியர்கள் என்று தானே சொல்லப்படுகிறார்கள், தாக்கப்பட்ட பாராளுமன்றம் அவர்களுக்கும் உரிமையானது தானே பிறகேன் அவர்கள் அப்சலின் தூக்கை எதிர்க்கின்றார்கள், தெருவில் இறங்குகின்றனர், இங்கே பலருக்கும் உள்ள அந்த உணர்ச்சி அவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? எது அவர்களை தெருவில் இறங்க வைத்துள்ளது?


மேலே படத்தில் இருப்பவர் யார் தெரிகின்றதா? இவர் பெயர் சப்ரஜித் சிங், இவர் 1989ல் பாக்கிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு தொடர்புடையவர் என்று பாக்கிஸ்தானில் வழக்கு நடந்து தூக்கு தண்டனையை எதிர் நோக்கியிருப்பவர், இவருக்காக இந்தியாவும், இந்திய தூதரும் அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய பாக்கிஸ்தானிடம் கோரிக்கை விடுத்தது, பாக்கிஸ்தான் அதிபர் முஷாரப் அவர் "ரா"வை சேர்ந்தவர் என்றும் அவருக்கு குண்டுவெடிப்புகளோடு தொடர்புள்ளது என பாக்கிஸ்தான் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறிவிட்டார். இவர் ஆடுமேய்க்கும்போது தவறுதலாக சென்றவர் என்றது இந்திய தரப்பு, ஆனாலும் இந்திய மக்களும், அரசாங்கமும் அவரது தூக்கை தடைசெய்ய எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொண்டது.

இன்று வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை எதிர்க்கும் இந்தியாவில் புத்தர் சிரித்த அணுஆயுத சோதனையும் நடந்தது.

இவையெல்லாம் சொல்ல காரணம் சரிகளும் தவறுகளும், ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றது, செய்பவர்களை பொறுத்து மாறுகின்றது, செய்தது யார், பார்ப்பவர் யார் என்பதை பொறுத்து மாறுகின்றது.

"சிக்காடிலோ" என்ற தொடர்கொலைகாரன் செய்த கொலைகளுக்கு க்ராவ்சென்கோ என்பவரின் மீது குற்றம் சாட்டி தூக்கிலிட்டு பின் அதை செய்தது சிக்காடிலோ என்று அறியவந்த போது செய்த தவறை திருத்திகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது, கிலானியில் ஆரம்பித்து விஞ்ஞானி நம்பிநாராயணன் ஜோடிக்கப்பட்ட வழக்கு வரை பலவற்றிலும் ஒரு வேளை தூக்களிக்கப்பட்டிருந்தால் தவறுகள் திருத்திக்கொள்ளப்பட வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.

"ஒரு நாள் காலை சி.ஐ.டி. போலீஸ் சூபரிடென்ட் மிஸ்டர் நியூமேன் என்னிடம் வந்தார், நாங்கள் சொல்கின்ற மாதிரி வாக்கு மூலம் தராவிட்டால் காகோரி வழக்கில் என்னை சேர்த்து தசராவில் குண்டு வழக்கில் சிக்கவைக்கப் போவதாக மிரட்டினார். போதுமான சாட்சியத்துடன் தூக்கில் போடுவேன் என்றார், அப்போது எனக்கு விபரம் அதிகம் தெரியாதென்றாலும் கூட போலீஸ் நினைத்தால் எதையும் செய்ய முடியுமென கருதினேன்" - இதை சொன்னவர் பகத்சிங்( நூல் - நான் ஏன் நாத்திகன் ஆனேன்?)

பொதுவாக யாரையுமே தூக்கில் போடக்கூடாது என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்துபவர்கள், தவறுதலாக தூக்கிலிடப்படுதல், சோடிக்கப்பட்ட வழக்கு, அப்சல் நாடாளுமன்ற தாக்குதலில் அவருடைய தொடர்பென்ன இப்படியெல்லாம் பலரும் பேசுவதால் இதை தொடாமல் நேரடியாக அடுத்த நிலைக்கு சென்றேன், சரியும் தவறும் செய்பவர்களை பொறுத்தும் பார்ப்பவர்களை பொறுத்தும் அமையும் என்பதை வலியுறுத்தவே அப்படியான ஒரு பதிவு.

வெகுசன ஊடகங்களைப்போலவே வலைப்பதிவுகளிலும் பல இடங்களில் இந்திய தேச பக்தி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் எத்தனை தூரம் இந்திய தேசியம் நசுக்கும் தேசிய இனங்கள் பற்றி பேச இயலும் என தெரியவில்லை, வடகிழக்கு மாநிலங்களில் நேற்றுதான் இராணுவ சட்டம் திரும்பபெறப்பட்டுள்ளது, சப்பையான மூக்கும், இடுங்கிய கண்களும் உள்ள மங்கோலிய இனமான அந்த வடகிழக்கு மாநில மக்கள் எந்த விதத்தில் இந்தியாவுடன் எந்த இயல்பான கலாச்சார, மொழி, மத பண்பாட்டு முறையில் இணைக்கப்பட்டனர் என்ற கேள்விக்கு நம்மால் விடைசொல்வதென்பது கடினமானதே, வெகுசன ஊடகங்களால் மறைக்கப்பட்டிருந்தாலும் அங்கே தனி அரசாங்கமே நடந்து கொண்டிருப்பதும், அங்கே வரிவசூலில் ஆரம்பித்து ஒரு அங்கீகரிக்கப்படாத அரசாங்கமே நடந்து வந்திருக்கின்றது, அந்த பிரதமருடன்(அப்படி அவர்கள் அழைத்துகொள்கின்றனர்) ஜப்பானில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பேச்சுவார்த்தைகளை நடத்தினர். ( தமிழ்நாட்டில் இருந்து லாரிகளில் அங்கு போகும் ஆட்களை கேட்டால் வரிவசூல் பற்றி சொல்வார்கள். அவர்களை பாராட்ட அல்ல இந்த தகவல் .யதார்த்தத்தை சொல்லவே)

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா நிச்சயமாக வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என்பது தெளிவானதே, காஷ்மீர் பிரச்சினை பற்றிய அலசல் தமிழ்சசி அவர்களால் கிட்டத்தட்ட முழுவதுமாக அலசப்பட்டுள்ளது அதன் சுட்டிகள் இங்கே.

சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை

காஷ்மீரின் விடுதலை

காஷ்மீர் பிரச்சினை என்றாலே அதை உடனடியாக இசுலாமிய அடிப்படை பயங்கரவாத செயல்களோடு இணைத்து காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசுபவர்கள் இசுலாமிய அடிப்படை வாதிகளுக்கு ஆதரவு தருவது போன்ற அய்யோக்கியத்தனமான பொய் பிரச்சாரத்தை செய்து வரும் இந்திய வெகுசன ஊடகங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் இங்கே வலைப்பதிவிலும் காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசும்போது இசுலாமிய அடிப்படைவாத அல்கொய்தா அமைப்புகள் செய்த படுகொலைகளின் படத்தை போட்டு பேசுவது காஷ்மீர் பற்றி பேசுபவர்களின் மீது இசுலாமிய அடிப்படைவாத ஆதரவாளர்கள் என்பது போன்ற மாயத்தை ஏற்படுத்த முயல்வது அவர்களின் நேர்மையின்மையையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது என கருத வாய்ப்புள்ளது, இந்து மத கவசத்தை அணிந்திருக்கும் என்னை போன்றவர்களுக்கே இப்படியான நிலை என்னும் போது இந்த பிரச்சினையில் இசுலாமிய வலைப்பதிவாளர்கள் எந்த அளவிற்கு பேச இயலும் என்பது சந்தேகமே.

முன்பிருந்த போர்முறைகளில் பெரும்பாலும் கூட்டம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கமே வெற்றி என்ற நிலை இருந்தது, மாறி வரும் போர் உத்திகள், வெடிகுண்டுகள் எல்லாம் இன்று எத்தனை பெரிய நாட்டையும் சிறு குழுக்கள் அந்த நாட்டின் நிம்மதியை இழக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, இலங்கை இராணுவத்தின் அளவில் பாதி கூட இல்லாத விடுதலைபுலிகளை இலங்கை அரசு வெற்றி கொள்ள இயலாத நிலை, கார் குண்டுவெடிப்புகள், தற்கொலை குண்டு வெடிப்புகள் என இன்று ஏதேனும் ஒரு முறையில் நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன, பாதிக்கப்படும் இனக்குழுக்கள் அது பயங்கரவாதத்தாலோ, அரச பயங்கரவாதத்தாலோ எதுவானாலும் இன்றைய நிலையில் அந்த இனக்குழுக்கள் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களுக்கு பெருமளவில் சேதத்தை உருவாக்க இயலும் என்பதே தற்போது நாம் உலகில் பார்த்துக்கொண்டிருப்பது, அறிவிக்கப்பட்டது தான் போர் என்றில்லை, எல்லாமே போர்தான் இது குழுக்களுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் பொறுந்தும், இப்போது போர் முறை மாறிவிட்டதால் சிறிய சிறிய நாடுகள் கூட பெரும் சேதத்தை எதிரிக்கு விளைவிக்கலாம், சில ஆண்டுகளுக்கு முன் பாக்கிஸ்த்தானுடம் போர் அபாயம் ஏற்பட்டு நீங்கியதே, ஏன் இந்தியாவில் போரை ஆரம்பிக்க இயலவில்லை, ஏன் தயங்கினார்கள், அணு ஆயுதப்போரின் அபாயம் வரை சென்றது ஆனால் போர் நடக்கவில்லை, போர் ஆரம்பித்தால் இந்தியாவினால் பாக்கிஸ்தானுக்கு ஏற்படும் அழிவிற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் இங்கேயும் ஏற்படும் அது தான் காரணம், பாக்கிஸ்தானின் அணு ஆயுத பலம் அது மேலும் ஒரு முறை இந்தியாவிடம் போரில் அடிபடுவதிலிருந்து தப்பித்தது...


இயல்பாக எழும் சில கேள்விகளும் விவகாரத்திற்காகவே எழுப்பப்பட்ட சில கேள்விகளையும் பார்க்கலாம்.

உம்ம வீட்டில் யாரேனும் இம்மாதிரி நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டால் இப்படியான மாற்றுபார்வை பற்றி பேச இயலுமா என்ற கேள்வி எழும் போது நேர்மையான பதில் "இப்படியாக பேச முடியாது" என்பதுவே, உம்ம வீட்டில் அரச பயங்கரவாதம் நடந்திருந்தால் அப்போதும் தேசபக்தி பெருக்கெடுத்து ஓடுமா என்ற கேள்வியும் எழுவது நியாயமானதாகவே இருக்கலாம், பயங்கரவாதமோ, அரச பயங்கரவாதமோ நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தான் அதன் எதிர்வினைகள் ஆற்ற வேண்டும் மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள் என்பதற்கு எந்த காலத்திலும் ஆதாரமில்லை, 12வயதில் நேரடியாக பாதிக்கப்படாத ஆனால் ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை பார்த்த பகத்சிங்கின் பங்கு சுதந்திரப்போராட்டத்தில் எத்தனை தூரம் இருந்தது என்பது நாம் அறிந்ததே, வலைப்பதிவாளர் ராஜ்வனஜ் கோயமுத்தூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரடியாக பெரும் பாதிப்பில்லையென்றாலும் வெகுண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்தது என நிறைய இருக்கின்றது.

கற்பழிக்காத இராணுவமென்று உலகில் எதுவுமேயில்லை, தீவிரவாதிகளை பிடிக்க போகும்போது அத்துமீறல்கள் நடக்கத்தான் செய்யும், பாருங்கள் காஷ்மீரில் கூட இராணுவம் இப்படி பாதிக்கப்பட்டவர்களை தத்தெடுத்துள்ளது இப்படியான ஒரு பின்னூட்டம் வீசப்பட்டது, எப்படி இப்படி ஒரு சாக்கு நம்மால் சொல்ல முடிகின்றது? அரசாங்க, இராணுவ அத்து மீறல்களுக்கு அந்த அரசை உருவாக்கியவர்களுக்கும், இராணுவத்திற்கு சம்பளம் கொடுக்கும் அந்த நாட்டின் குடிமக்களுக்கும் எந்த பொறுப்பும் இல்லையா? எந்த மக்களை எந்த தேசத்தை எந்த அரசை காப்பதற்காக பயங்கரவாதத்தை எதிர்கொள்பவர்கள் அந்த மக்களின் மீது தம் கோபத்தை காண்பிக்க மாட்டார்களா?

அன்னிய தலையீடு பற்றி பேசும்போது சமீபத்தில் கொல்லப்பட்ட பாக்கிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானை தனி நாடாக்க கோரிய பழங்குடி தலைவர் புட்கா அவர்களிடம் இந்தியா உங்களுக்கு உதவுவதாக சொல்கிறார்களே என்று எழும்பிய கேள்விக்கு பதிலாக பாக்கிஸ்தானிலிருந்து விடுதலை பெற நாங்கள் எந்த சைத்தானிடமிருந்து வேண்டுமானாலும் உதவி பெறுவோம் என்றார், இந்திய சுதந்திரத்திற்காக ஹிட்லரின் உதவியை நாடிய சென்பகராமன், ஜப்பான் துணையை கொண்டு அமைக்கப்பட்ட நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் எல்லாம் நினைவுக்கு வருகின்றது.

காஷ்மீர் மக்கள் தேர்தலில் பங்கெடுக்கின்றார்களே என்பவர்களுக்கு இந்தியா சுதந்திரம் பெறும் முன் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ், முஸ்லீம் லீக், நீதிக்கட்சி என பல தரப்பட்ட கட்சிகளும் தேர்தலில் பங்கெடுத்ததை நினைவு படுத்த விரும்புகின்றேன்.

சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்திய ஊடகங்கள் சொல்வது மட்டுமே நமக்கு செய்தியாக இருந்தன, இன்றைய இணைய உலகில் செய்திகளை தெரிந்து கொள்வதற்கு எந்த கட்டுப்பாடுமில்லை, பாக்கிஸ்தான் செய்தி தாளை கூட இணையத்தில் படிக்கலாம், எல்லா நாட்டு செய்திகளையும் படிக்கலாம், அதை முழுவதுமாக நம்பவேண்டுமென்பதில்லை, குறைந்த பட்சம் என்ன நடக்கிறதென்றாவது தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய நிலையில் எல்லா இனக் குழுக்களுக்கும் அவரவர்களுக்கான நியாயமான உரிமைகளையும் பங்கையும் கொடுத்தால் மட்டுமே நிம்மதியாக நாட்டு மக்கள் உறங்கும் நிலை, அடக்குமுறைக்கு ஆளாகும்,ஒடுக்கப்படும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இனக்குழுக்கள் இன்றைய சூழலில் எளிதாக மற்ற மக்களின் நிம்மதியை கெடுக்கும் நிலைப்பாடு உள்ளது.

References:
http://www.hindu.com/2005/09/15/stories/2005091506231200.htm
http://www.paktribune.com/news/index.shtml?116707

வலையுலக அரசியலில் கணக்கு தீர்க்கும் முகமாக ராமதாஸ் சட்டகத்தில் அடைக்க முயன்றவர்களில் ஆரம்பித்து மூடிக்கொண்டிரு என்று கூறியவர்கள் வரை என் மீது தனிமனித தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்த பதிவு எழுத ஆரம்பிக்கும் முன் பதில் சொல்ல வேண்டுமென்ற மனநிலை இருந்தது, ஆனால் அது தற்போது இல்லை என்பதால் அந்த தனிமனித தாக்குதல்கலை புறந்தள்ளி செல்கிறேன்.

30 பின்னூட்டங்கள்:

said...

குழலி அவர்களே,

நல்ல பதிவு.சிந்திக்க வைக்கும் கேள்விகள்.

said...

//சில ஆண்டுகளுக்கு முன் பாக்கிஸ்த்தானுடம் போர் அபாயம் ஏற்பட்டு நீங்கியதே, ஏன் இந்தியாவில் போரை ஆரம்பிக்க இயலவில்லை//
காஷ்மீர் பத்திரிகைகள் இந்த பாராளுமன்ற தாக்குதலே அன்றைய இந்திய அரசாங்கத்தின் செட்டப்.
இந்த செட்டப்பை சாக்காக வைத்து பாகிஸ்தான் மீது படையெடுக்க இந்திய
அரசாங்கம் முயற்சித்ததாக எழுதி வருகிறது.காஷ்மீர் மக்களின் இந்தியா பற்றிய
மதிப்பீடு இந்த அளவுக்கு இருக்கிறது.இந்திய அரசியல் அமைப்பிலேயே சில கோளாறுகள் இருக்கிறது. அமெரிக்க
அமைப்பை போல voluntary union ஆக இல்லாமல்
மத்திய அரசு மாநிலங்களை கட்டாயப்படுத்தி ஆள்கிறது. இன்றும் காஷ்மீர்
மீது இந்தியாவிற்கு இருக்கும் உரிமை யாரோ ஒரு ராஜா எழுதிக் கொடுத்த
துண்டு காகிதம் என்கிறார்கள். voluntary union இருப்பதால்
மாநிலங்கள் பிரிந்து செல்லும் என்று அர்த்தம் இல்லை. மத்திய அரசாங்கம்
மாநிலத்தை ஏறி மிதிக்காமல் இருக்க ஒரு பாதுகாப்பு.

சில குட்டி மாநிலங்களில் ஒரே ஒரு எம்பிதான் இருப்பார். இந்த மாநிலங்களில்
ஜெயிக்காவிட்டாலும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்றிருப்பதால் இந்த
மாநிலங்கள் என்றுமே வளராது.ஒருகட்டத்தில் பிரிவினை, தீவீரவாதம் எழும்பும்.

காஷ்மீரை தக்க வைப்பதற்கு ஒரே வழி அந்த மாநில பொருளாதாரத்தை
வளர்க்க முயற்சி செய்வது, ராணுவத்தை திரும்ப பெறுவது, தீவிரவாதிகளை
மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவது.

said...

சார்பற்ற - ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய பதிவு மட்டுமன்று, இது படிப்பவரின் சிந்தனையைத் தூண்டுவதில் வெற்றி பெற்ற பதிவும்கூட.

பாராட்டுகள்!

said...

Kuzhali,

All that you mentioned is well known among free-speech proponents and people who are proud of our democracy. But what is puzzling is, this rationality and sober thoughts did not come to you when it comes to dravidian politics.

When few scoundrels went ballistic against kushboo (after she apologised), why did you not say, there are some of us who have different opinions? Instead, you supported goondas baying for a woman's blood. Somehow, in the name of tamil cutlure and pride any crime can be committed, but when it comes to issues to provoke people (specifically brahmins perhaps?) you seem to invoke democracy and human rights!

Your writing and philosophy is very inconsistent to say the least.

said...

//சரிகளும் தவறுகளும், ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றது, செய்பவர்களை பொறுத்து மாறுகின்றது, செய்தது யார், பார்ப்பவர் யார் என்பதை பொறுத்து மாறுகின்றது.//

100% True!

சார்பியலின் ஐந்தாம் பரிமாணம் இது!
மனிதனிடம் இருக்கும் மிகப்பெரும் திறமையே எதையும் அவனால் நியாயப்படுத்த முடியும் என்பது தான்.
அடிப்படையோ சுயநலம்.படிப்படியாய் இறுமாப்பு.
'உணர்ச்சி'வசப்படுவதற்கு மொழியும், மதமும் தானா காரணம்?. இதோ தேசமும் என்று நிரூபிக்கப்படுகிறது.

நாம் எல்லோரும்
நீதிபதிகளாகிறோம்
பிறருக்கு!

said...

விட்டுத்தள்ளுங்கள் குழலி,

அவர்கள் ஒரு மானசீக முடிச்சில் மாட்டித் தவிக்கிறார்கள்!

said...

//வலையுலக அரசியலில் கணக்கு தீர்க்கும் முகமாக ராமதாஸ் சட்டகத்தில் அடைக்க முயன்றவர்களில் ஆரம்பித்து மூடிக்கொண்டிரு என்று கூறியவர்கள் வரை என் மீது தனிமனித தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்த பதிவு எழுத ஆரம்பிக்கும் முன் பதில் சொல்ல வேண்டுமென்ற மனநிலை இருந்தது, ஆனால் அது தற்போது இல்லை என்பதால் அந்த தனிமனித தாக்குதல்கலை புறந்தள்ளி செல்கிறேன்.//

குழலி,, அற்புதம்.

இது ஒரு நல்ல முடிவு. து[ற்றுவார் து[ற்றலும் போற்றுவார் போற்றலும் போகட்டும் கண்ணனுக்கே (கண்ணன் என்பதை.. இயேசு, அல்லா, ராமர், இன்னும் எத்தனை கடவுள்கள் உள்ளனரோ, அவர்கள் பெயரைப் போட்டுக் கொள்ளவும்) என்பது ஒரு உயரிய நிலை. இதைக் கடைபிடியுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.

said...

எங்கள் தலைவர் செல்வன் இதற்கு பாயிண்ட் டூ பாயிண்ட் பதில்
தருவார்.அவர் கோழை அல்ல.காத்திரும் குழலி.

said...

//எங்கள் தலைவர் செல்வன் இதற்கு பாயிண்ட் டூ பாயிண்ட் பதில்
தருவார்.அவர் கோழை அல்ல.காத்திரும் குழலி//

சபாஷ்,

சரியான போட்டி..

பாலா

said...

/வலையுலக அரசியலில் கணக்கு தீர்க்கும் முகமாக ராமதாஸ் சட்டகத்தில் அடைக்க முயன்றவர்களில் ஆரம்பித்து மூடிக்கொண்டிரு என்று கூறியவர்கள் வரை என் மீது தனிமனித தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்த பதிவு எழுத ஆரம்பிக்கும் முன் பதில் சொல்ல வேண்டுமென்ற மனநிலை இருந்தது, ஆனால் அது தற்போது இல்லை என்பதால் அந்த தனிமனித தாக்குதல்கலை புறந்தள்ளி செல்கிறேன்.//


அதுதான் தேவையும் கூட. :)

அற்புதமாக வந்திருக்கிறது இந்தப் பதிவு.

சில பகுதிகள், படிப்பவ‌ர்களின் சிந்தனையையும் அதற்கான பதிலையும் கோரி நிற்கிறது.

வாழ்த்துக்கள் குழலி.

said...

இன்று மரணதண்டனை ஒழிப்பு தினம், தவறுதலாக மரண தண்டனை பெற்ற சிலர் பட்டியல் இன்றைய தினமலரில்

said...

அண்ணா!
தெளிவா எழுதியிருக்கீங்க. யோசிக்கவும் வச்சு இருக்கீங்க. யோசிக்கிறேன். அனேகமா நீங்க சொல்றது சரியாத் தான் இருக்கும். பார்வை வேறுபாடும்-னு சொன்னீங்க பாருங்க. நூத்துக்கு நூறு சரிங்க.

said...

நிதானமான பதிவு குழலி.

said...

தேசபக்தி செல்வனின் சில கருத்துகள் இங்கே தொகுப்பாக...

http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116045705507778226.html

http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_10.html

கேள்வி:ஈழம் பெறுவது உங்களுக்கு உடன்பாடா என்று மட்டும் சொலலுங்கள் செல்வன்.மற்றதை பிறகு பார்ப்போம்.

பதில்: ஈழம் அமைந்து ஈழத்தமிழர் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. முத்தையா முரளிதரன் தலைமையிலான தமிழீழம் கிரிக்கட் அணியை திராவிட் தலைமையில் உள்ள கிரிக்கட் அணி யாழ்ப்பாணத்தில் மோதி ஜெயிக்க வேண்டும். அதை நான் கண்குளிர பார்க்க வேண்டும்:-)

மேலும் இதற்கு பதில் பின்னூட்டம்

தலைப்பை பார்த்ததும் பகீரென்றது. என்னை தீவிரவாதி என்பதெல்லாம் நியாயமா?:-)

ஏதோ பெரிய பொறி வைத்திருக்கிறீர்கள் போலிருக்கு:)

//1.பொதுவாக தேசியவாதிகளின் ஜல்லி இலங்கை அரசியல் சட்டத்திற்குட்பட்டு இலங்கை தமிழர் பிரச்சினை தீரவேண்டும் என்பதாக இருக்கும்.நீங்கள் ஈழம அமையவேண்டும் என்று ஆசைப்பட்டால் நீங்கள் தமிழ் தீவிரவாதியா?//

"பொதுவாக தேசியவாதிகள்" என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அது உங்கள் பார்வை, உங்கள் கருத்து. எனக்கு தெரிந்த தேசியவாதிகள் காமராஜர், கக்கன், எம்ஜிஆர் மாதிரி பெரியவர்கள் தான். சரி அதை விடுங்கள்....

தமிழீழம் அமையவேண்டும் என ஆசைப்பட்டால் எப்படி தீவிரவாதி ஆவேன்?ஆயுதம் ஏந்தி அப்பாவிகளை கொன்றால் தான் தீவிரவாதி ஆவேன். ஆக முதல் கேள்வி தப்பு

2.இரண்டாம் கேள்விக்கு பதில் அவ்வளவு விவரமாக ஈழம் பிரச்சனை பற்றி எனக்கு தெரியாது, ஏன் புலிகள் ஆயுதம் தூக்கினர் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. இலங்கை ஏன் புலிகளுடன் பேசுகிறது என கேட்டால் அதுவும் தெரியாது. சமாதானம் ஏற்பட பேசுவதாகவோ அல்லது நார்வே நிர்பந்தத்தில் பேசுவதாகவோ இருக்கலாம்.

3.இலங்கையின் இறையாண்மை எக்கேடு கெட்டால் எனக்கென்ன?இந்திய ஒருமைப்பாடு பற்றி தான் கவலைப்பட முடியுமே அன்றி இலங்கை, ஜப்பான், கொரியா இறையாண்மை குறித்தேல்லாம் எனக்கு எந்த கவலையும் கிடையாது.தமிழன் வாழவேண்டும், இந்தியன் உயரவேண்டும் அவ்வளவுதான்.

said...

செல்வனுடைய பதிவுகளையெல்லாம் சீரியஸாகப் படிப்பவர்களைச் சிந்திக்க வைக்கிறது உங்களின் இந்தப் பதிவு. அதை நிரூபிக்கிறது நீங்கள் பின்னூட்டத்தில் தந்துள்ள செல்வனின் 'கருத்து'க்களும்.

said...

குழலி, சர்பஜத்சிங் விவகாரத்தை நினைவுபடுத்தியதற்கு நன்றி. இப்போது அப்சாலைத் தூக்கில் போட்டே ஆக வேண்டும் என்று தாண்டிக்குதிப்பவர்கள் அப்போது சிங் விவகாரத்தில் மட்டும் கள்ளமவுனம் சாதித்தது ஏன்? நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு விழுக்காடு சரி. இந்து என்னும் இழிவைச் சுமக்கும் நம்மையே இந்த விவகாரத்தில் தேசவிரோதக்குற்றம் சாட்டுகிறவர்கள், முஸ்லீம் பிளாக்கர்கள் இந்த விவகாரத்தில் கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்று மிரட்டுவது தனிமனித வக்கிரமும் பாசிசமும் அல்லாமல் வேறு என்ன? இன்றளவும் காஷ்மீரில் விடுதலை குறித்து வாக்கெடுப்பு நடத்த வக்கற்ற இந்தியாவும் அதன் அடிவருடிகளும் காஷ்மீர்ப்பிரச்சினை குறித்தோ , இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தான் குறிதோ கூட விமர்சிப்பதற்கு அருகதையற்றவர்கள்.

said...

பாராளுமன்றத் தாக்குதலில் அஃப்ஸலின் பங்கு!

'சிறப்புக் காவல் படையினர் என் கணவரிடம் முஹம்மத் என்பவரை கஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வர வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினார்கள். என்னுடைய கணவர் இந்த முஹம்மத் என்பவரையும், தாரிக் என்பவரையும் சிறப்புக் காவல் படையின் கஷ்மீர் முகாமில் வைத்தே சந்தித்தார். இவர்களைப் பற்றி என்னுடைய கணவருக்கு எதுவும் தெரியாது. அதே போல் ஏன் இப்படியொரு பணியைச் (கஷ்மீர் சிறப்புக் காவல் படையின் முகாமிலிருந்து இவர்களை டெல்லிக்கு அழைத்து வரும் பணியை) செய்யச் சொல்கிறார்கள் என்பதும் என் கணவருக்குத் தெரியாது. '

'இவற்றை எல்லாம் என் கணவர் நீதி மன்றத்தில் விரிவாக எடுத்துச் சொன்னார். ஆனால் நீதி மன்றமோ பாதியை எடுத்துக் கொண்டது. மீதியை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டது. என்னுடைய கணவர் முஹம்மதை காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்தார் என்பதை எடுத்துக் கொண்டது. ஆனால் முஹம்மதை சிறப்புக் காவல் படைதான் தன் முகாமிலிருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லும்படி பணித்தது என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.'

'கீழ் நீதி மன்றங்களில் அஃப்ஸல் என்ற என் கணவருக்கு வாதாட யாரும் இல்லை. நீதி மன்றம் ஒரு வழக்கறிஞரை நியமித்தது. அவரோ என் கணவரிடம் என்ன நடந்தது என்பதை எப்போதும் கேட்டதில்லை. அதே போல் அவருக்கு எதிராகச் சாட்சியம் சொன்னவர்களைக் குறுக்கு விசாரணையும் செய்யவில்லை. அந்த வழக்கறிஞர் என் கணவரை வெறுத்தார். நீதிபதி திங்காரா அவர்களிடம் என்னுடைய கணவர் 'அந்த வழக்கறிஞர் எனக்காக வாதாட வேண்டாம் ' என்று எவ்வளவோ சொன்னார். ஆனால் நீதிபதி திங்காரா அதைக் கண்டு கொள்ளவே இல்லை. உண்மையில் என் கணவர் கீழ் நீதி மன்றத்தில் தனது தரப்பில் எதையும் எடுத்துச் சொல்லிட இயலவில்லை. என்னுடைய கணவர் எதையேனும் சொல்லிட முற்படும் போதெல்லாம் நீதிபதி அதைக் கேடக மறுத்து விட்டார். அவர் தன்னுடைய துவேஷங்களை வெளிப்படையாகவே நீதி மன்றத்தில் காட்டினார்.'

'உயர் நீதி மன்றத்தில் ஒருவர் மனித உரிமை வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு என்னுடைய கணவருக்காக வாதாட முன் வந்தார். என் கணவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் என் கணவருக்காக வாதிடவில்லை. மாறாக நீதி மன்றத்திடம் என் கணவரைத் தூக்கிலிட்டுக் கொலை செய்யக் கூடாது: விஷ ஊசியைப் போட்டுத்தான் சாகடிக்க வேண்டும் என வாதாடினார். என் கணவருக்காக ஒரு வழக்கறிஞரை வைத்திடும் வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. எனக்கு டெல்லியில் யாரையும் தெரியாது. வேறு வழியின்றி என் கணவர் எஸ்.ஏ.ஆர் ஜீலானியைக் காப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட வழக்கறிஞர் குழுவுக்கு கடிதம் எழுதினார். இந்தக் குழு 'சுசில்குமார்' என்ற வழக்கறிஞரை வைத்தது. ஆனால் இவரால் உச்ச நீதிமன்றம் சாட்சியங்களுக்குள் செல்ல முடியாது. அதனால் என் கணவருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை.'

'என் கணவரைத் தூக்கில் போட்டு விடக் கூடாது என்றும் அவருடைய வழக்கை நியாயமாக நீதியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.தன்னுடைய தரப்பு வாதத்தைச் சொல்லிட வாய்ப்பளிக்கப்படாத ஒருவரை நீங்கள் (உச்சநீதி மன்றம்) தூக்கிலிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். சம்பவம் நடந்தவுடன் காவல் துறையினர் என் கணவரை ஊடகங்களின் மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் தந்திட கட்டயப் படுத்தினார்கள். இது வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னரே நடைபெற்றது.

'காவல் துறையினர் அவரை அவமானப் படுத்தினார்கள். அடித்தார்கள். சித்திரவதை செய்தார்கள்.அவருடைய வாயில் மூத்திரத்தைப் பெய்தார்கள்.'

'இவற்றை எல்லாம் வெளிப்படையாகச் சொல்வதற்கு வெட்கமாகவெ இருக்கின்றது. ஆனால் சூழ்நிலைகள் என்னைக் கட்டாயப் படுத்தியதால்தான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று. இவற்றை எல்லாம் எழுத்தில் வடிப்பதற்கு மிகையான தைரியம் தேவைப்பட்டது. இப்பொது ஆறு வயதாகி விட்ட என் மகனின் தந்தையைக் காப்பாற்றிடுவதற்காக நான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று.'

'என்னுடைய கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உச்ச நீதி மன்றம் பேசுமா? என் சார்பில் நீங்கள் பேசுவீர்களா?நான் என் கணவருக்காகவும் என் மகனின் தந்தைக்காகவும் வாதாடுகிறேன் என்பது உண்மைதான். அதே நேரத்தில் கஷ்மீரில் வாடும் என்னைப் போன்ற பெண்களுக்காகவும் வாதாடுகின்றேன்.'

இந்த மொத்த விவகாரத்திலும் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஸ்.டி.எஃப் என்ற சிறப்புப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பில் நீண்ட நாட்கள் இருந்தவர்கள் என்பது புலப்படும். இதனால்தான் விருப்பு வெறுப்பற்ற ஒரு விசாரணை நாடாளுமன்றத் தாக்குதலில் மேற் கொள்ளப் பட வேண்டும் என ஜன நாயக உரிமைகளுக்கான மக்கள் குழுமம் கேட்கிறது.

-நாடாளுமன்ற தாக்குதலில் சம்பந்தம் உள்ளதாக அப்ஸல் என்ற கஷ்மீரி கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட தலைமை நீதிபதி திங்காரா அவர்களாலும், பின்னர் உச்ச நீதி மன்றத்தாலும் தண்டிக்கப் பட்டவர். இந்த தண்டனையைப் பற்றி அஃப்ஸலின் மனைவி தபஸ்ஸூம் தான் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தமிழாக்கத்தைத்தான் நாம் மேலே பார்த்தது.

Source : Annexe 18 of : December, 13, Terror Over Democracy By Nirmalangshu Mukherji: A Wifes Appeal for justice :
Published by Promilla & co, New Delhi.

Mr ezhil!

நல்ல பதிவு.சிந்திக்க வைக்கும் கேள்விகள்.

உங்கள் பதிவுக்கு மேலதிக விபரங்கள் அஃப்ஸலின் மனைவியின் கடிதம் மூலம் கிடைக்கும் என்பதால் அந்த கடிதத்தின் ஒரு பகுதியை அனுப்பியுள்ளேன். பார்த்துக் கொள்ளவும்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

said...

அப்சலுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்துவிடுவோம்.ரத்து என்ன,விடுதலையே செய்துவிடுவோம்.ஆனால் ஒரு கண்டிஷன்!

அன்று இந்திய பாரளுமன்ற தாக்குதலில் கொல்லப்பட்ட 5 நமது வீரர்களின் உயிர் திரும்பவேண்டும்.முடியுமா?

said...

சுவனப்பிரியன் பின்னூட்டத்திற்கு நன்றி, இந்த நொடிவரை அப்சலுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நம்பமுடியாது, இந்த பதிவு அப்சல் நிரபராதி என்றோ, நாடாளுமன்ற தாக்குதலில் அப்சலின் பங்கு என்ன என்பதை பற்றியதல்ல...

நன்றி

said...

காஷ்மீர் பிரச்சனையில் என்ன தீர்வென்பது இருக்கட்டும். இப்போது நம்மைத்தாக்கிய தீவிரவாதியை என்ன செய்யலாம் என்பது தானே பிரச்சனை. இந்தியாவில் இருக்கும் நாம் அப்சலைக்காப்பாற்றி காஷ்மீர் தீவரவாதிகளுக்கு ஏன் உதவ வேண்டும்?

மேலும் இந்தியாவில் இருந்துகொண்டு புல்லுருவிகளாய் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் உதவுபவர்களை, பேசுபவர்களை கேள்வி கேட்டால் என்ன தப்பு?

காஷ்மீர் போராட்டத்தில் உங்களுக்கு நியாயம் இருப்பதாகத் தெரிந்தால், இன்னொரு குண்டுவெடிப்பு நிகழ்த்த தீவிரவாதிகளுக்கு உதவுவீர்களா? தீவிரவாதியை கொன்று இந்தியர்களை காப்பாற்ற ஆதரவு தெரிவிப்பீர்களா? இந்தியா செய்வது தவறேன்றால் அதைத் திருத்திக்கொள்வது வேறு, இப்போது இந்தியர்களை கொல்ல முனையும் தீவிரவாதிகளை அழிப்பது வேறு.

சீக்கியர்களின் நியாயமான தனி நாடு கோரிக்கை நசுக்கப்பட்டது என்று கூறுவீர்களா?

said...

ரியோ, இந்தியாவை சேர்ந்த சப்ரஜித் சிங் தூக்கை எதிர்நோக்கி பாக்கிஸ்தான் சிறையில் இருக்கிறாரே அவரின் தூக்கு தண்டனை சரிதானா? என்ன செய்யலாம் நீங்கள் சொல்லுங்கள், சப்ரஜித்சிங்கிற்கு தூக்கு தண்டனை தரக்கூடாது என்று கூறிய பாக்கிஸ்தான் மனித உரிமையாளர்களை நீங்கள் என்ன சொல்லுவீர்கள்??

said...

//ரியோ, இந்தியாவை சேர்ந்த சப்ரஜித் சிங் தூக்கை எதிர்நோக்கி பாக்கிஸ்தான் சிறையில் இருக்கிறாரே அவரின் தூக்கு தண்டனை சரிதானா? என்ன செய்யலாம் நீங்கள் சொல்லுங்கள், சப்ரஜித்சிங்கிற்கு தூக்கு தண்டனை தரக்கூடாது என்று கூறிய பாக்கிஸ்தான் மனித உரிமையாளர்களை நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?? //
சப்ரஜித் சிங்கை தூக்கிலிடக்கூடாது என்று பாகிஸ்தானில் போராட்டம் நடந்ததா? இங்கு அப்சலுக்கு இருக்கும் ஆதரவு அங்கு சப்ரஜித் சிங்கிற்கு இருந்ததா?

said...

//
இப்போது அப்சாலைத் தூக்கில் போட்டே ஆக வேண்டும் என்று தாண்டிக்குதிப்பவர்கள் அப்போது சிங் விவகாரத்தில் மட்டும் கள்ளமவுனம் சாதித்தது ஏன்?
//

இதே கேள்வியை நானும் உங்களுக்குக் கேட்கலாம்...

சிங் விவகாரத்தில் பாகிடம் போய் இதே மாதிரி sit in dharna செய்ய வேண்டியது தானே என்று?

யாரும் கள்ள மவுனம் சாதிக்கவில்லை. இந்தியத் திருனாட்டில் தூக்கு தண்டனைகள் பல நடந்துள்ளன, அப்பொழுதெல்லாம் "மௌனம்" சாதித்துவிட்டு தீவிரவாதிக்குத் தூக்கு என்றவுடன் பல உலக ஞாயங்கள் பேசும் நீங்கள் அன்று செய்தது தான் "கள்ள மௌனம்".

said...

//சப்ரஜித் சிங்கை தூக்கிலிடக்கூடாது என்று பாகிஸ்தானில் போராட்டம் நடந்ததா? இங்கு அப்சலுக்கு இருக்கும் ஆதரவு அங்கு சப்ரஜித் சிங்கிற்கு இருந்ததா?
//
பாக்கிஸ்த்தானிலிருந்த சில மனித உரிமை ஆர்வல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாக படித்த நினைவு, சரி பாக்கிஸ்தானில் இப்படி பட்ட போராட்டங்கள் நடந்திருந்தால் தான் இதற்கு தெரிவிக்க இயலுமா? நீங்கள் சொல்லுங்கள் சப்ரஜித் சிங் தூக்கு தண்டனை பற்றி என்ன நினைக்கின்றீர்

said...

உங்களின், சசியின் பதிவுகளைப் படித்தேன். இவற்றிலிருந்தும் நான் சில செய்திகளை அறிந்துகொள்கிறேன். நன்றி.////தனிமனித தாக்குதல்கலை புறந்தள்ளி செல்கிறேன்///
இது நல்ல முடிவு குழலி.

said...

குழலி,

இந்தியா போன்ற பல கலாச்சாரங்களை கொண்ட நாடுகள் உலகில் மிக குறைவு. அதிலும் நாடு முழுதும் மத , சாதி பிரிவினைகளை வைத்துக் கொண்டு சனநாயக ரீதியாக நடக்கும் நாடுகள் மிக குறைவு.

இன ரீதியாக இந்தியாவை பிரிக்க குரல் கொடுக்க நினைக்கும் இடத்தில் இன பிரிவோடு இந்திய பிரிவுகள் முடிகிறதென நினைக்கிறீர்களா? இனத்துக்குள் ஆயிரம் சாதி, சாதிக்குள் பிரிவுகள் என பல கூத்து உண்டு. ஒரு ஆயுத போராட்டம் விடை கொடுக்கையில் அதை முன்னுதராமாக கொண்டு மற்ற பிரிவுகள் களமிறங்காதென்பதற்கு என்ன உத்தரவாதம். அந்த நிலையில் ஆயுதமெடுத்தவனெல்லாம் புரட்சிகாரன்தான்.

இப்படி போகும் நிலையில் எனது தேசமும், எனது பக்கத்து வீட்டுகாரர் தேசமும் கழிவு நீர் எங்கே போக வேண்டுமென யுத்தம் நிகழ்த்தி கொண்டு இருக்க வேண்டியதுதான்

அகிம்சை போராட்டங்கள் எதிரிகளின் தயவிலும், ஆயுதமேந்திய போராட்டங்கள் இயல்பாக நடப்பதாகவும் கூறியுள்ளீர்கள்.

இது பட்டென ஒரு வார்த்தையில் சொன்னால் கேட்க உண்மை போல் தோன்றும்.

ஆனால் உண்மையில் பார்த்தால் ஆயுத போராட்டங்களுக்கும் அரசின் தயவும், இரக்கமும் வேண்டும்.

தனி நாடு போராட்டங்கள் சீனத்தில் சில பகுதிகளில் தலையெடுத்த போது சீன அரசின் செயல்பாட்டை நீங்கள் கண்டிருப்பீர்கள்

ஈராக்கின் பெரும்பான்மை பிரிவினர் சதாமுக்கு எதிராக புரட்சியில் விழைந்த போது என்ன நடந்தது என்றும் உங்களுக்கு தெரியும்

பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை பகடை காயாக உபயோகித்து நிகழ்த்தும் ஆயுதமேந்திய போராட்டக்காரர்களை சந்திக்க உலக அமைப்புகளை மதிக்காத விதிகளை புறத்து எறிந்த(ஆயுதம் ஏந்திய போராட்டகாரர்களை ஒத்த) வலுவான அரசு இருந்தால் ஆயுத போராட்டத்தின் கதி என்னவாகும் என்று நீங்களே யுகித்து கொள்ளுங்கள்.

இந்தியாவின் உலக அரங்கில் தன்னை நிலைநாட்டிக் கொள்ள நினைக்கும் நினைப்பும், இரக்கமும், அரசியலமைப்பின் மரியாதையும்தான் இந்த இடத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.

ஒரு நாட்டின் பலமாக எவை இருக்க வேண்டுமோ அதை பலவீனமாக பயன்படுத்தி ஆயுத போராட்டங்கள் நிகழ்கிறன.

20000 மக்கள் சொந்த நாட்டில் புலம் பெயரும் கொடுமை நடக்கையில் எந்த நாடும் இவ்வளவு பொறுமையாக இருக்குமா என தெரியவில்லை.

மத சாயம் பூசும் அத்வானியும், மோடியும்,முல்லாக்களும் இருக்கும் தேசத்தில்தான் அம்பேத்காரும் இருந்தார். நல்ல விழிப்புணர்வு காட்டாத தலைவர்கள் இல்லாத்து குறைதான். ஆனால் சிறிது சிறிதாக இந்தக் குறை களையப்படுமென நம்பிக்கை உண்டு.

பல ஊழல்கள் புரிந்த லாலு இந்திய ரயில்வேயை திறம்பட நிர்வகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இது போன்று ஒவ்வொரு துறையிலும் மாற்றம் வரலாம். நாளாகலாம். ஆனால் சமூக அக்கறையும், பகுத்தறிவும் நாட்டின் குடிகளிடம் வளர்கையில் இது சாத்தியமே.

said...

"இன்றைய நிலையில் எல்லா இனக் குழுக்களுக்கும் அவரவர்களுக்கான நியாயமான உரிமைகளையும் பங்கையும் கொடுத்தால் மட்டுமே நிம்மதியாக நாட்டு மக்கள் உறங்கும் நிலை, அடக்குமுறைக்கு ஆளாகும்,ஒடுக்கப்படும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இனக்குழுக்கள் இன்றைய சூழலில் எளிதாக மற்ற மக்களின் நிம்மதியை கெடுக்கும் நிலைப்பாடு உள்ளது."

வெடிகுண்டு யார் வேண்டுமானாலும் செய்யல்லாம், யாருக்கு வேண்டுமானாலும் ஆயுதங்கள் கிடைக்கலாம் என்பதால் எந்த அரசும் யார் ஆயுதம் வைத்திருந்தாலும் அவர்களின் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்ற முடியுமா.முறையற்ற,நியாயமற்ற கோரிக்கைகளுக்காக
ஆயுதம் ஏந்திப் போராடினால் பதிலுக்கு அரசும் ஆயுதம் கொண்டுதான் அடக்கும்.
காஷ்மீர் இந்தியாவை விட்டு பிரிந்து போவதில் அல்லது பாகிஸ்தான் அதை
விழுங்குவதில் அல்லது அது ஜிகாதிகளின் கட்டுப்பாட்டில் வருவதில் உங்களுக்கு அப்படி என்ன மகிழ்ச்சி. இப்போது தேசிய இனம் என்று எழுதுகிறீர்கள்.
இனி அடுத்து வன்னியர் பெரும்பான்மையாக வாழும் மாவட்ட்ங்களைச் சேர்த்து வன்னிய மாநிலம்
வேண்டும் என்று எழுதுவீர்களா.

said...

கடைசியாக பின்னூட்டமிட்ட அனானி அவர்களுக்கு, ஆவரவர்களுக்கான உரிமைகளும், பங்கும் அவரவர்களுக்கு வழங்கப்படாவிட்டால் வெவ்வேறு விதத்தில் போராடத்தான் செய்வார்கள், அகிம்சை, ஒத்துழையாமை, ஆயுதம் என அந்த போராட்டங்கள் பலவகையாக இருக்கலாம்.

ஒரு இனக் குழுவின் இருப்பை மறுப்பது தான் தேசியமென்றால் ஒரு மொழிக்குழுவின் அடையாளத்தை அழிப்பது தான் தேசியமென்றால் பல்முனை பண்பாட்டை ஒரு முகப்படுத்துவது தான் தேசியமென்றால் ஒருத்தனின் உழைப்பை விழுங்கிதான் இன்னொருவன் வாழ்தல் நியாமென்றால் அந்த தேசியம் எதற்கு?

said...

குழலி, காஷ்மீர் மாநிலத்திற்கு சில சிறப்பு சலுகைகள் தரப்பட்டுள்ளன.அதாவது தெரியுமா உங்களுக்கு. தேசியம் என்பது ஒடுக்குமுறையாக இருக்கக் கூடாது.தேசிய இன உரிமை என்ற
பெயரில் இன்னொரு நாடு போராட்டத்தினை தூண்டி விட்டால் அதை வரவேற்கவா முடியும்.
உங்களுக்கெல்லாம் இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிய வேண்டும் என்பதுதான் பிடிக்கும்
என்றால் அதை நேரடியாகச் சொல்ல வேண்டியதுதானே.எதற்கு இத்தனை பூசி மெழுகல்.
ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ளதே.அங்கு என்ன நிலை என்று உங்களுக்குத்
தெரியுமா. அங்கு எத்தகைய ஒடுக்குமுறை நிலவுகிறது என்பதை நீங்கள் எழுத மாட்டீர்கள்.
ஏனெனில் உங்களைப் பொருத்தவரை அது பிரச்சினையே இல்லை. இந்திய அரசினை,
இந்திய தேசியத்தினைத் தான் உங்களுக்குப் பிடிக்காது.

said...

குழலி அவர்களே, ஒரு சிறிய கேள்வி, கிரிகெட் போட்டியில் யார் வெற்றி பெற்றால் மகிள்ச்சி அடைவிற்கள்?. பாகிஸ்தானா, இந்தியா -வா?. பல இடங்களில் நமது sagotharargal pakistan Vetri pettal pattasu koluthii magingiraalgale, athanaal thana intha kelvi ungalukku.