சாதியொழிப்பு பற்றி பொய் சொல்லும் சுப.வீ அல்லது உண்மையை மறைக்கும் சுப.வீ.


நீயாநானா விவாதத்தில் சாதி என்பது 2000 ஆண்டு பழமையானது அதை நூற்றாண்டுகால சாதி எதிர்ப்பு போராட்டத்தால் அழித்துவிடமுடியாது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செய்ய முடியும்.என்று குறிப்பிட்டார் சுப.வீ

இது தொடர்ச்சியாக திராவிட மற்றும் போலி சாதி எதிர்ப்பு ஆட்களினால் தங்களது இயலாமையை மறைக்க தொடர்ந்து சொல்லிக்கொண்டு வரும் பொய்.

2000ம் ஆண்டுகால தமிழர்களின் சித்தமருத்துவத்தை நூறாண்டில் அலோபதிக்கு மாற்ற‌ முடிந்தது
2000ம் ஆண்டுகால தமிழர்களின் உணவை  இட்லி தோசையாக நூறாண்டில் மாற்ற முடிந்தது
2000ம் ஆண்டுகால தமிழர்களின் மதிய உணவான புளிக்காய்ச்சலை சாம்பாராக மாற்ற முடிந்தது
2000ம் ஆண்டுகால தமிழர்களின் குடுமியை நூறாண்டுகளில் கிராப்பாக மாற்ற முடிந்தது
2000ம் ஆண்டுகால தேவதாசிகள் ஆடிய சதிர் ஆட்டமென்ற நடனத்தை பரதநாட்டியமாக மாற்றி உச்சியில் தூக்கி வைக்க முடிந்தது
2000ம் ஆண்டுகால தமிழ்பெயர்கள் சுரேஷ், ரமேஷாகி இப்போ ராகுலில் வந்து நிற்க முடிகிறது

ஆனால் சாதியை மட்டும் நூறாண்டுகளில் ஒழிக்க முடியாதாம், அட ஒழிக்க கூட வேண்டாம் சாதியொழிப்பில் எவ்வளவு தூரம் முன்னேறி உள்ளது என்றால் நம் முன் தெரிவது முட்டை தான்.

நூறாண்டுகாலம் என்பது மூன்று தலைமுறை என் தாத்தா தலைமுறை, என் அப்பா தலைமுறை, என் தலைமுறை என மூன்று தலைமுறை பெரியார் தமிழகத்திலே நேர்மையாக உருவாக்கிய சாதிய ஒழிப்பு என்பதை சாதியொழிப்பு முற்போக்கு பேசுபவர்கள் நேர்மையாக கடைபிடித்திருந்தால் இந்த மூன்றாம் தலைமுறையில் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் போல தமிழ்நாட்டில் பாதி பேராவது சாதியை கடந்திருப்பார்கள்.

உண்மையில் சாதியொழியாமல் இருக்க காரணம் சாதி ஆதரவாளர்களால் அல்ல... போலி சாதியொழிப்பாளர்கள் தான் சாதியை காப்பாற்றுகிறார்கள். சுபவீ ஜிங் சாங் கொட்டிக்கொண்டிருக்கும் திமுக தலைவர் அரசியலில் சாதிபார்த்து சீட்டு தருகிறார், கழகத்தின் பொதுச்செயலாளரான அன்பழகனுக்கே முதலியார் கோட்டாவில் சீட்டு கொடுத்திருந்தார்கள். தர்மபுரியின் தலித்களின் மீதான தாக்குதலில் கைதானவர்களில் 10 பேர் பாமக ஆனால் 16 பேர் திமுக, உண்மை அறியும் குழு எல்லாம் அனுப்பிய திமுக அந்த தாக்குதலில் கைதான 16 பேர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? நியாயமாக சாதியொழிப்பை பற்றி பேசும் சுப.வீ இதை கருணாநிதியிடம் கண்டிக்க வேண்டாமா? எதிர்த்து பேச வேண்டாமா?  சாதிக்கு ஆதரவளிக்கும் திமுக தலைமைக்கு எதிராக போராட வேண்டாமா? ஏன் திமுகவிடம் மட்டும் ஜால்ரா?


சாதியொழிப்பை நேர்மையாக முன்னெடுத்திருந்தால் சாதியொழிப்பு பேசும் கட்சிகள் குறிப்பாக சமீபமாக ரொம்ப சீன் போடும் திமுக காரர்கள் அனைவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ய வேண்டும், இல்லையெனில் கட்சியிலிருந்து வெளியே போ என்று நேர்மையான சாதியொழிப்புக்கு போராடலாமே ஆனால் செய்ய மாட்டார்கள், ஏன் தெரியுமா? இவர்களுக்கு எல்லாம் தெரியும், வெளியே சாதியொழிப்பை பேசிக்கொண்டு வீட்டினுள், கட்சியினுள் எல்லாம்  சாதியை காப்பாற்றுபவர்கள்.

எங்கள் சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள் வட்டத்திலேயே நிறைய திருமணங்களை பேராசிரியர் அன்பழகனும், வீரமணியும், முக ஸ்டாலினும் நடத்தியுள்ளார்கள், அவைகள் எல்லாம் சாதி திருமணங்கள் தான், என்ன ஒரே வேறுபாடு என்றால் பார்ப்பன புரோகிதர்களுக்கு பதில் இந்த புரோகிதர்கள், இங்கே நேர்மையான சாதியொழிப்பு இல்லை, நேர்மையான முற்போக்கு இல்லை. நேரடியான சாதி ஆதரவாளர்களை you can identify them, you can argue with them, you can convince them. ஆனால் சாதியொழிப்பு பேசிக்கொண்டே சாதியை வைத்திருக்கும் போலி முற்போக்காளார்கள் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கொல்லும் எய்ட்ஸ் போன்றவர்கள்.

என்னையே எடுத்துக்கொள்ளலாம் சாதியொழிய வேண்டுமென்று வீரவசனமெல்லாம் பல ஆண்டுகளாக பேசிவிட்டு நான் எந்த பெண்ணுடனும் இரு தலை காதலில் இல்லாமல் இருந்ததால் திருமணத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தேன், பெற்றோர் சாதி பார்த்து தான் திருமணம் செய்து வைத்தார்கள், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் நான் சாதி எதிர்ப்பாளனாம் அதனால் திருமண சான்றிதழில் 6 இடங்களில் Caste not mentione என்று குறிப்பிட்டிருந்தேன், போலித்தனமாக இல்லையா இது, திருமணம் ஒரே சாதியில் ஆனால் திருமண சர்ட்டிபிக்கேட்டில் கேஸ்ட் நாட் மென்ஷன்ட் என்றால் நான் சாதியொழிப்பாளனாகிவிடுவேனா? இது போன்ற பேச்சொன்றும் செயலொன்றுமாக செயல்படுபவர்களால் தான் சாதி சைலண்ட்டாக கட்டிகாக்கப்படுகிறது.

உதாரணமாக சுப.வீ யையும் ஜால்ராமணி ஐ ஆம் ஸாரி வீரமணி அவர்களையும் எடுத்துக்கொள்வோம்.  சாதியொழிப்பை எப்படியாகினும் செய்வேன் என்ற உறுதியிருந்திருந்தால் சாதியின் அடிப்படை, பார்ப்பனியத்தின் அடிப்படை பிறப்பால் வேறுபாடு பார்ப்பது, இன்று திமுகவின் தலைமை பதவிச்சண்டையில் இருப்பவர்கள் கருணாநிதிக்கு பிறந்த மகன்கள் ஸ்டாலின் மற்றும் அழகிரி. திமுகவின் தலைமை பதவியின் அடிப்படை ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் பிறப்பால் கிடைக்கிறது.

பார்ப்பனியத்தை எதிர்ப்பதாக சொல்லும் ஜால்ராமணியின் திகவின் தலைமை பொறுப்புக்கு தயாராக இருப்பவர் ஜால்ராமணியின் மகன் அன்புராஜ், இது பார்ப்பனியம் இல்லையா?

பெரியார் சொல்லிக்கொடுத்தது சுயமரியாதை, காரைக்குடியில் திராவிடமணி என்ற ஒரு திக தலைவர், 90களின் மத்தியில் அவரது மகனை 10-12 வயதான  சிறுவனை தம்பி என்று தான் அழைக்க வேண்டும், இல்லையென்றால் திராவிடமணிக்கு கோபம் வந்துவிடும், சுயமரியாதையை அடிப்படையாக கொண்ட திராவிட கழகத்தின் தொண்டர்கள் அந்த சிறுவனை சுயமரியாதையை விட்டுவிட்டு தம்பி தம்பி என்று குழைவார்கள்.

சாதியொழிப்பிற்காக நேர்மையாக போராடாமல் பதவிக்காக சாதி, பணத்துக்காக சாதி, அதிகாரத்துக்காக சாதி, விசுவாசத்துக்காக என அவர்களின் சாதி நடவடிக்கைகளை ஆதரித்து விட்டு வாயால் சாதியொழிக என வடை சுட்டால் நூறாண்டுகள் அல்ல சுப.வீ அய்யா ரெண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் உங்களை போன்ற போலிகளால் சாதியை ஒழிக்க முடியாது.

இதே நேரத்தில் கொளத்தூர் மணி, கோவை ராமக்கிருஷ்ணன், புதுவை லோகு அய்யப்பன் போன்ற நேர்மையான சாதி எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும் ஆனால் இவர்களின் எண்ணிக்கை மிக குறைவே. நமது வட்டத்திலேயே குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் சுகுணா திவாகர் சாதி மறுப்பு திருமணம் தான் செய்வேன் என்று பெண் பார்த்து வேறு சாதியில் தான் திருமணம் செய்தார்(அவருடையது காதல் திருமணம் அல்ல) இவர்களைத்தான் நாம் ஆதரிக்க வேண்டும், போற்ற வேண்டும் போலிகளை அல்ல...