பத்மவியூகம் - அபிமன்யு,அரவாணன்
அபிமன்யு,அரவாணன் இருவருமே மகாபாரத்ததின் முக்கிய பாத்திரங்கள், இரண்டும் சொல்லும் சேதிகள் பல பல...
அபிமன்யு அரண்மனையில் பிறந்து எல்லா அரண்மனை சுகத்தையும் அனுபவித்து, பிறப்பினால் சமூகத்தில் கிடைத்த அத்தனை மதிப்பையும் மரியாதையையும் அனுபவித்து வந்தவன் எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பிலேயே திறமை உண்டு என்ற புழுத்து போன சமூக அவலத்தை கருத்தாக்க பத்மவியூகத்தை உடைப்பதை கர்ப்பத்திலே கற்றுக் கொண்டதாக உருவகப்படுத்தப்பட்டவன் இதை இன்று வரை அறிவுசீவி 'சோ'க்கள் புளகாங்கிதப்பட்டுக் கொண்டு திரிகின்றனர், அரைவேக்காட்டு தனமாக அரை குறை புரிதல்களோடு போர்களத்திலே பத்மவியூகத்தை உடைக்கிறேன் பேர்வழியென்று தவறான புரிதல்களோடும் மண்டை கணத்தோடும், தாம் மட்டுமே பெரிய வில்லாளி என்ற மம்மதையோடும் பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே சென்று மாட்டிய போது அவனுடைய புரிதல்கள் அரைவேக்காட்டு தனமானது அரை குறையானது என்று அபிமன்யூவிற்கு தெரிந்ததா அல்லது எப்போதும் போல தம்மை பீடத்தில் வைத்துக் கொண்டே பிறர்தான் தவறு,லூசு என்று நினைத்துக்கொண்டே செத்தானா என்பது விளக்கப்படவில்லை.
இந்த படத்திற்கு நன்றி முகமூடி
அரவாணன் மகாபாரதத்தின் வஞ்சிக்கப்பட்ட பாத்திரம், காட்டிலேயே பிறந்து வளர்ந்து காட்டானாக சுற்றி திரிந்தவன்,அர்ஜீனனின் மகனே ஆனபோதும் அரசாளும் வாரிசு அபிமன்யூதான், அபிமன்யூவைப்போல் அரண்மனை சுகங்களை கண்டானா? இல்லையே ஆனால் குருசேத்திர போருக்கு முன் கொண்டுவரப்பட்டான் எதற்காக களப்பலியிட, பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றாலும் அரவாணன் நிச்சயம் செத்திருப்பான் அதற்காகத் தான், இந்த சூழ்ச்சி தந்திரம் தான் சங் பரிவார்களும், ஆர்.எஸ்.எஸ் கும்பலும் பல இடங்களில் இந்து மத்திலேயே சம உரிமை தராமல் வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களையே இந்து மதம் இந்து மதம் என்று கூறி பயன்படுத்திக்கொண்டது, மகாபாரத அரவாணனுக்கு பாண்டவ குலத்தில் பிறந்தவன் என்ற தூண்டில் இந்த அரவாணர்களுக்கு இந்து மதம் என்ற தூண்டில் ஆனால் இரண்டிலுமே வஞ்சிக்கப்படவர்கள் அரவாணர்களே.
வீரனுக்கு அழகே போர்களம் சென்று போரிடுவது தான், அதில் தான் அவன் ஆத்ம திருப்தியும் இருக்கும், இங்கேயோ போர் செய்து அவன் திறமையை காட்ட கூட வாய்ப்பளிக்காமல் அபிமன்யூக்களுக்காக தியாகம் என்று கூறி அவன் கழுத்து கீழே மாற்றி மாற்றி கத்தியை சொருகிவிட்டனர், கடைசி ஆசையாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட போதும் அவன் திருமணம் செய்து கொண்டது உண்மையையல்ல மாயையைத்தான்.
ஒரே மதத்தில் குலத்தில் பிறந்தும் கல்வி, வித்தைகள்(அவைகள் அரை குறையாகவே இருந்தாலும்), சமூக மரியாதைகள், அரசு கட்டில் எல்லாம் அபிமன்யூவிற்கு அபிமன்யூ செத்ததற்கு பழிவாங்கவில்லையென்றால் தன் உயிரையே விடத் துணிந்த அர்ஜீனன், அபிமன்யூவின் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என எச்சரித்து கட்டமைப்பை காப்பாற்ற சூழ்ச்சி செய்து உதவும் கண்ணன் போன்ற பெரியவர்கள் என மிக அழகாக மிக நீண்ண்ண்ண்ண்ட கால தொலை நோக்கு திட்டங்கள் எல்லாமே அபிமன்யூக்கள் வாழ இது எதுவுமே இல்லாமல் அபிமன்யூக்கள் வாழ்வதற்கு தம்மை பலி கொடுக்க அரவாணன்கள், அரவாணனின் கழுத்து கீழே இறங்கிய ஒரு ஒரு குத்தும் அபிமன்யூக்கள் வாழ பெரியவர்களால் நடத்தப்பட்ட துரோக குத்துக்கள்.
அபிமன்யுவை போல் அழகாக சித்திரம் தீட்டமுடியாத அளவிற்கு அரவாணனின் கழுத்திற்கு கீழே அத்தனை துரோக குத்துகள் என்பதால் தலைமட்டும் இருக்கும் அரவாண சாமியின் படம் இங்கே (அரவாணன் சாமிதான் அவனை நம்பியவர்களுக்கு மட்டுமாவது)
இது வெறும் அபிமன்யூவின் புரிதல்களின் தவறு மட்டுமே அல்ல, அவன் அப்படித்தான் அரண்மனையில் வளர்க்கப்படிருந்தான், பெரியவர்கள் அப்படித்தான் வளர்த்தார்கள் இப்போதும் நான் கருதுவது இவை எல்லாம் அபிமன்யூவின் தவறுகளல்ல, அவனின் புரிதல்களின் தவறே
பெரியவர்களின் கட்டமைப்புகள் பெரியாரினால் உடைக்கப்பட்டதால் அபிமன்யூக்கள் வாழ இங்கே அரவாணன்கள் கிடைப்பதில்லை, புழுத்துப்போன வீச்சங்களை எதிர்த்து அரவாணன்கள் உரக்க சமூகநீதிக் குரல் எழுப்புவதால் அரவாணன்கள் மீதே அபிமன்யூக்களின் தாக்குதல். பீடங்கள் உடைந்து அரவாணன்கள் எழுந்து கொண்டிருக்கும் காலம் இது, அபிமன்யூக்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால் அரவாணன்களின் பத்மவியூகத்தில் மாட்டி அடிபட நேரிடும்.