என்.எல்.சி தொழிலாளர் போராட்டம் பற்றிய விபரங்கள் மற்றும் துரோகம் செய்யும் திமுக தொழிற்சங்கம்

கொஞ்சம் பெரிய பதிவு, என்.எல்.சி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அந்த நிறுவனம் நெய்வேலியில் உருவாக்கிய மாற்றங்கள் பற்றியும் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம், தொழிற்சங்கங்கள் பற்றியும் சற்று நீளமாக விவரிக்கும் பதிவு...

விமானநிலைய விரிவாக்க திட்டம், அணைகட்டுதல், துணைநகரத்திட்டம், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக தொழிற்பேட்டைகள், டாடா கம்பெனி திட்டம் இம்மாதிரியான திட்டங்களுக்கு நிலம் தராமல் அழிச்சாட்டியம் செய்தால் நாடு எப்படி முன்னேறும் என்று பேசும் மிடில்கிளாஸ் அறிவுஜீவி மயிராண்டிகள் ஒருமுறையேனும் போய் பார்க்க வேண்டிய இடம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்.நெய்வேலி கடலூர் மாவட்டத்தில் உள்ளது, இந்த மாவட்டத்தில் பெரும்பாண்மையானவர்கள் வன்னியர் மற்றும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள், இந்த இடத்தில் ஒரு சில ஜமீன் பரம்பரை ஆட்களை தவிர்த்த மீதி அனைவரும் 3-4 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்த குறுவிவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளே, இவர்களின் ஒரே வாழ்வாதாரம் இந்த நிலங்களும் விவசாயக்கூலியும் தான். இவர்களிடமிருந்து நிலம் ஊரெல்லாம் மின்சாரம் கொடுத்து விளக்கெரிக்க நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்திற்காக அரசால் பிடுங்கப்பட்டது, பிடுங்கும்போது நிலம் கொடுத்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் நிரந்தர வேலை நிலத்திற்கான இழப்பீட்டு தொகை என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தது, ஆனால் 30-40 ஆண்டுகளுக்கும் மேலாக பலருக்கும் எந்த இழப்பீட்டு தொகையும் தரப்படவில்லை, மேலும் வேலையும் தரப்படவில்லை இப்படியான நிலையில் நாட்டு முன்னேற்றம் பற்றி பேசும் எந்த அறிவுஜீவி மயிராண்டியாவது அவனுடைய ஒரு செண்ட் நிலத்தையாவது அரசுக்கு தருவானா? இந்த லட்சணத்தில் ஜெயங்கொண்டத்தில் நிலமெடுக்க போகிறார்களாம் சுரங்கம் தோண்ட.



தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து கொண்டே தான் உள்ளன, அவ்வப்போது நாய்க்கு கொஞ்சம் போடுவது போல கொஞ்சம் கொஞ்சம் போடுகிறார்கள் என்பதை தாண்டி இன்றளவும் 30-40 ஆண்டுகளுக்கு முன்பு பிடுங்கிய நிலங்கள் என்னும் வாழ்வாதாரத்துக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.

என்.எல்.சி நிறுவனம் இந்திய படிமுறை சமூகத்திற்க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது, அடிமட்ட கூலித்தொழிலாளிகளாக மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகமான வன்னியர்கள் மற்றும் தலித்கள் பெரும்பாலும் உள்ளனர், அதற்க்கு மேல் உள்ள இடங்கள் (தற்போது ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் தவிர்த்து), நோகாமல் நோன்பு கும்பிடும் அலுவலக வேலைகள் தமிழகத்தின் பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அல்லாத பிற உயர் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களும், ஆந்திர கும்பலும் அதற்க்கு ம் மேல் உள்ள உயர் பதவிகள் பவர் செண்டர்கள் எல்லாம் வடநாட்டு கும்பலுமாக ஒரு இந்திய சமூகத்தின் அதிகாரத்துவ படிநிலை எப்படி இருக்கும் என்பதன் அச்சு அசலாக என்.எல்.சி நிறுவனம் உள்ளது.

இந்நிறுவனத்தின் அடிமட்ட தொழிலாளர்கள் மூன்று வகையான முறையில் உள்ளவர்கள், எம்ப்ளாயி எனப்படும் என்.எல்.சி நிறுவனத்தின் நிரந்தர நேரடி தொழிலாளர்கள், சொசைட்டி எனப்படும் கூட்டுறவு தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் எனப்படும் ஒப்பந்த தொழிலாளர்கள். செய்யும் வேலை இம்மூவருக்குமே ஒன்று தான் ஆனால் சம்பளம் மற்றும் பிற உரிமைகள் சலுகைகள் வெவ்வேறானதாகும். ஒப்பந்த தொழிலாளர்கள் மாதம் ரூபாய் 5200 என்ற அளவிலேயே சம்பளம் பெறுகிறார்கள், இதில் பெரும்பாலானவர்கள் நிலம் கொடுத்தவர்கள் வாரிசுகள் மிகப்பிற்படுத்தப்பட்ட வன்னியர் மற்றும் தலித் சமூகத்தினர். 240 நாட்கள் தொடர்ந்து வேலை செய்பவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும் என்பது அரசாங்கத்தின் விதிமுறை, ஆனால் இவர்கள் எப்போதிருந்து வெறும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே வேலை செய்கிறார்கள் தெரியுமா? கடைசியாக பணிநிரந்தரம் செய்யப்பட்ட பின் 1993லிருந்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக, இதோ பணிநிரந்தரம் கிடைத்துவிடும் அதோ பணிநிரந்தரம் கிடைத்துவிடும் என்றும் வேலையை விட்டுவிட்டு போகவும் முடியாமல் மிகக்குறைவான சம்பளம் எப்போது நிரந்தரம் செய்வார்கள் என்று எந்த உறுதியான சூழலும் இல்லாமல் இவர்களால் வேலையைத்தொடரலாமா வேண்டாமா என்று பதைபதைப்பிலும் தடுமாற்றத்திலுமாக தொடர்கிறார்கள்.

ஆண்டுக்கு 1500 கோடி லாபம் கிடைக்கும் நிறுவனம், ஸ்க்ராப் காண்ட்ராட்டுகளிலேயே கோடி கோடியாக பணம் புழக்கம் உள்ள நிறுவனம் என இருந்தும் தொழிலாளர்களுக்கு இந்த கொடுமையான நிலை.

இது மட்டுமின்றி CISF(Central Industrial Security Force) என்ற பாராமிலிட்டரி படையை என்.எல்.சி நிறுவனத்தின் பாதுகாப்பிற்காக என்று சொல்லி நிறுத்தப்பட்டுள்ளது, ஆனால் இந்த சி.ஐ.எஸ்.எஃப் காவலர்கள் தொழிலாளர்களுடன் மோதல் போக்கை மேற்கொள்ளுவதும் நெய்வேலி அருகில் இருக்கும் கிராமங்களில் தகராறு செய்வதுமென உள்ளனர், இது தொடர்பாக நிறைய போராட்டங்கள் மோதல்கள் நடந்துள்ளன. திருட்டை தடுக்க என்று சொல்லிக்கொண்டு வந்து நிறுத்தப்பட்ட CISF இருக்கும்போதே நான் 15 நாட்கள் பயிற்சிக்கு சென்ற ஆட்டோ யார்ட் இலிருந்து லாரி ஆக்சில்ஸ் காணாமல் போய்விட்டது, லாரி ஆக்சில்ஸ் என்ன சட்டைபையில் மறைத்து எடுக்க கூடிய பொருளா அல்லது காம்பவுண்ட் சுவர் தாண்டி எறியக்கூடிய பந்தா? ஒரு பொருள் மூவ்மெண்ட்டிற்க்கு எத்தனை கையெழுத்துகள் எத்தனை செக்போஸ்ட் சோதனைகள் இதையெல்லாம் தாண்டி லாரி ஆக்சில்ஸ் காணாமல் போகிறது என்றால் CISF என்ன பிடுங்கிக்கொண்டுள்ளதா? அல்லது அதற்க்கும் பங்கு உண்டா? இங்கே CISF கொண்டு வந்து நிறுத்தப்பட்டதே தொழிலாளர்களுக்கு பிரச்சினை கொடுப்பதற்க்கே என்ற என்.எல்.சி தொழிலாளர்களின் ஆதங்கப்படுவதில் உள்ள உண்மையை மறுக்க இயலாது.

இந்நிறுவனத்திலேயும் அனைத்துகட்சிகளுக்கும் தொழிற்சங்கங்கள் உண்டு, திமுகவின் தொமுச , கம்யூனிஸ்ட்களின் ஏஐடியூசி, பாட்டாளி மக்கள் கட்சியின் பிடிஎஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகளின் டிபிஐ தொழிற்சங்கங்களே இங்கே வலுவான தொழிற்சங்கங்கள். பாமக, டிபிஐ தொழிற்சங்கங்கள் வருவதற்க்கு முன்பிருந்தே திமுகவின் தொமுசவு ஏஐடியூசியும் தொழிலாளர்களிடம் செல்வாக்கு பெற்ற தொழிற்சங்கங்கள், இந்நிலையில் வன்னியர் சங்கமாக இருந்த காலத்திலும் அதன் பின் பாமக ஆரம்பிக்கப்பட்ட காலத்திலும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் வேலை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளோடு என்.எல்.சி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியது பாமக. அதில் பாமக ஸ்டைல் போராட்டங்களும் நடைபெற்றது உண்டு.

பெரும்பாண்மையான அடிநிலை தொழிலாளர்களாக வன்னியர்கள் உள்ள நிறுவனம் என்பதாலும் பாமக போராட்டங்களால் கிடைத்த நன்மைகளும் பாட்டாளி தொழிற்சங்கத்திற்க்கு வலுவான நிலையை ஏற்படுத்தியது என்றாலும் திமுகவின் தொமுசவிலேயே 10,000க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டு பெரும்பலத்தில் இருந்தது. அதன் பின் ஏஐடியூசி, பிறகு டிபிஐ அதன் பின்னே தான் பாட்டாளி தொழிற்சங்கம் என்ற நிலை. தொழிற்சங்க தேர்தலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் தொழிற்சங்கங்களே என்.எல்.சி மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், இந்த இரு தொழிற்சங்கங்கள் மட்டுமே எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டால் மட்டுமே செல்லும். இதுவரை வாக்கு பெரும்பாண்மை அடிப்படையில் தொமுச மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இருந்தது, இந்நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன் என்.எல்.சி தொழிற்சங்க தேர்தல் நடைபெற்றது. தொமுச வழக்கம்போல வெற்றிபெறும், இரண்டாமிடம் ஏஐடியூசி அல்லது டிபிஐ என்று பலரும் எதிர்பார்த்திருக்க பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பாமக வேல்முருகன் அவர்கள் களத்தில் இறங்க பாட்டாளி தொழிற்சங்கம் இரண்டாமிடம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமானது, இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது பாட்டாளி தொழிற்சங்கம் பெற்ற கூடுதல் வாக்குகள் அனைத்தும் திமுகவின் தொமுச பெற்ற வாக்குகளில் குறைந்துவிட்டது. எந்த ஒப்பந்தமும் வெறும் தொமுசவின் கைகளில் மட்டுமல்ல பிடிஎஸ்சும் கையெழுத்திட வேண்டும், இந்த நிலை மட்டும் சென்ற தொழிற்சங்க தேர்தலில் ஏற்படாமல் வெறும் திமுகவின் தொமுச மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இருந்திருந்தால் 10ம் தேதியே என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை புதைத்து பாலூற்றியிருப்பார்கள்.

இரண்டாண்டுகளுக்கு முன் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியமும் பணிநிரந்தர வாய்ப்பும் வழங்க கோரி நடைபெற்ற போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தைகளில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதி வழங்கப்பட்டு ஒப்பந்தமும் போடப்பட்டது என்.எல்.சி நிறுவனத்தால். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாததால் சென்ற மாதத்திலிருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 5000 சம்பளத்தை 9000 ஆக்க கோரியும் பணி நிரந்தரம் கோரியும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன. ஒப்பந்த தொழிலாளர்களின் மத்தியில் திமுகவின் தொமுசவிற்க்கு வெறும் 300 உறுப்பினர்களே, ஆனாலும் நிரந்தர தொழிலாளர்கள் ஆளுங்கட்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் என்பதால் திமுகவின் தொமுச கையில் தலைமை பொறுப்பளிக்கப்பட்டு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஒப்பந்த தொழிலாளார்கள் மத்தியில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கமும்(ஏஐடியூசி) பிடிஎஸ் மற்றும் டிபிஐ யே வலுவானவைகள்.ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தினால் மின்சார தடை ஏற்படும் அளவிற்க்கு (இனி தான் புதுசா மின் தடை தமிழகத்தில் ஏற்படப்போகுதா என்ன?) சென்றவுடன் அக்டோபர் 10ம் தேதி ஆயிரத்து நாற்பது ரூபாய்(1,040) சம்பள உயர்வு மட்டுமே வேறு பணிநிரந்தரம் தொடர்பான எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் திமுகவின் தொமுச என்.எல்.சி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு கையெழுத்தும் போட்டுவிட்டது, ஆனால் பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கம் பிடிஎஸ் கையெழுத்து போடாமல் அந்த ஒப்பந்தத்தை நிராகரிக்க திமுகவின் தொமுச போராட்டகளத்திலிருந்து விலகிக்கொண்டது மட்டுமின்றி தொழிலாளர் விரோதப்போக்கை ஆரம்பித்தது, ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை பிசு பிசுக்க வைக்கும் முயற்சியில் இறங்கியது, தொமுச விலகிக்கொண்ட பின்னும் போராட்டம் மேலும் தீவிரமாக போக கடலூர் மாவட்டத்தில் கடையடைப்பில் ஆரம்பித்து மறியல் முற்றுகை என போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. ஆனால் இதுவே திமுகவின் தொமுசவின் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது, தாங்கள் விலகியும் போராட்டம் வலுவாக செல்வதா என்ற ஆத்திரத்தில் திமுகவின் தொமுச தொழிலாளர் விரோத நடவடிக்கையில் இறங்கி அதை குலைக்க முயற்சித்தது. மத்திய அரசு தொடர்பான எதிலும் சிறு நெருக்கடி கூட ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள முதல்வர் கருணாநிதி அக்டோபர் 10ம் தேதி தொமுச தொழிலாளர் விரோத ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின்னும் அக்டோபர் 16ம் தேதி கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், ஈழத்திற்க்கு கடிதம் எழுதி எழுதி எழவு விழுந்த பின்னும் நிறுத்தாமல் கடிதம் எழுதித்தள்ளும் கருணாநிதி இங்கேயும் கடிதம் எழுதும் ஏமாற்று வேலையை ஆரம்பித்துவிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் நடந்த கடையடைப்பு போராட்டத்திற்க்கு வணிகர்சங்கங்கள் ஆரம்பித்து பலரும் ஆதரவு தெரிவிக்க அமைதியாக நடைபெற்றதில் திமுகவை சேர்ந்தவர்கள் கடைகளையும் வணிக நிறுவனங்களையும் திறக்க சொல்லி வற்புறுத்தினர், தனியார் பேருந்துகளை ஓட்ட கோரினர், விளைவு சில தனியார் பேருந்துகள் போராட்டகாரர்களால் நொறுக்கப்பட்டன. தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டம் தோல்வி என்று அறிக்கைவிட திமுகவிற்க்கு என்ன அவசியம்? தொழிற்சங்கங்கள் நடத்திய கடையடைப்பு போராட்டத்தை தோல்வியடையச்செய்ய திமுக ஏன் தொழிலாளர்கள் போராட்டத்தை தோற்கடிக்க அத்தனை முயற்சிகளை மேற்கொண்டது? அப்படியென்றால் திமுகவும் அதன் தொழிற்சங்கமும் யார் பக்கம் நிற்கிறார்கள்? போராட்டகளத்தில் இருக்கும் தொழிலாளர்களை போலிசை கொண்டு தாக்குதல், மறியல் போராட்டத்தில் இருப்பவர்களை கைது செய்து அவர்களின் மீது கடும் வழக்கு தொடுத்தல் என அடக்குமுறைகளை ஏவி விடுகின்றது என்றால் திமுக யார் பக்கம் நிற்கிறது?

நேற்று வரை தில்லியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன, 13,000 ஒப்பந்த தொழிலாளர்களின் 36 நாள் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து என்.எல்.சியின் நிரந்தர ஊழியர்களும் பாட்டாளி தொழிற்சங்கமும் மற்ற ஒன்பது தொழிற்சங்கங்களும் நேற்று அக்டோபர் 25 அன்று ஸ்ட்ரைக் நோட்டிஸ் கொடுத்துள்ளன, நிரந்தர தொழிலாளர்களிடம் செல்வாக்குள்ள தொமுசவில் தான் பாதியளவான நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர், மீதி பாதி அளவில் பிடிஎஸ் மற்றும் மற்ற தொழிற்சங்கங்களில் உள்ளனர் ஆனால் இதில் தொழிலாளர் விரோத திமுக தொழிற்சங்கம் தொமுச இதில் கலந்துகொள்ளவில்லை.

விடுதலை சிறுத்தைகளின் டிபிஐ தொழிற்சங்கம் இந்த அரசியல் இழுப்புகளுக்குட்படாமல் இன்னமும் போராட்டத்தில் தொடர்கிறது என்றாலும் அவர்கள் பிற தொழிற்சங்கங்களுடன் இணைந்து கூட்டுப்போராட்டமாக நடத்தாமல் தனியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே என்.எல்.சியில் தன் பிடிமானத்தை இழக்க ஆரம்பித்துள்ளா திமுகவின் தொமுச இம்மாதிரியான தொழிலாளர் விரோத நடவடிக்கையினால் என்.எல்.சி தொழிலாளர்கள் மத்தியில் தம் செல்வாக்கை இழந்து நிற்கப்போவது நிச்சயம்.தொழிலாளர் விரோத திமுக தொழிற்சங்கம் தொமுச விலகியும் திமுக அடக்குமுறைகளை ஏவியும் இன்னும் போராட்டம் தொடர்கிறது இந்த போராட்டம் எல்லா துரோக தடைகளையும் உடைத்து வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

இது தொடர்பான செய்திகள் ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் மற்றும் தமிழக அரசியல் பத்திரிக்கைகளில் வந்துள்ளன. ஆனால் ஒரு வலைப்பதிவிலும் வந்தது போல தெரியவில்லை... ஆமாமா எந்திரன் பட ரிலீஸ் அளவிற்க்கு இது ஒன்றும் முக்கியமான ஒன்று அல்ல தானே.

18 பின்னூட்டங்கள்:

said...

நீளமான பதிவு என்பது ஒரு பொருட்டாக தெரியாமல் தெளிவாகவே இருக்கு.

said...

அதான் நீங்க போட்டுட்டிங்களே

said...

தொழிலாளர்கள் கோரிக்கைகள் நிறைவேற வாழ்த்துக்கள் வாத்தியான்களுக்கு அள்ளி கொடுக்கும் அரசு ஏன் இவர்களுக்கு ஓர வஞ்சனை செய்கிறது?

said...

//30-40 ஆண்டுகளுக்கும் மேலாக பலருக்கும் எந்த இழப்பீட்டு தொகையும் தரப்படவில்லை, மேலும் வேலையும் தரப்படவில்லை//

இந்த போபால் குசுவாயு கவில் இறந்தவங்களுக்கே இப்பதால் பால் ஊத்த ஆரம்பிச்சிருக்கு நம்ம அரசு..விரைவில் இன்னும் ஒரு 40 வருடத்தில் இதுக்கும் தீர்வு சொல்லிடுவானுங்க:(((

said...

PRESENT SIR

said...

காங்கிரஸுடனான கூட்டணி நிலைக்க திமுக எந்த அளவிற்கும் இறங்கிக் கொடுக்கும் என்பதற்கு இந்தப் போராட்ட விலகல்களும் ஓர் எடுத்துக்காட்டு. அவசியமான கட்டுரை குழலி

said...

என் எல் சி தொழிலாளர்களை ஏமாற்றும் திமுகவையும் மத்திய காங்கிரஸ் அரசையும் கண்டித்து என் எல் சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிலாளர்களும் போராட்ட களத்தில் இணைந்து தொழிலாளர் உரிமை காக்க வேண்டும். வாழ்த்துக்கள்

said...

"அத்தியாவசியமான பதிவுகள்" ,அந்த மக்களினால் சொல்லப்படும் போது சரியாக இருக்கும்.நீங்கள் சொல்லியிருப்பது போல .மற்ற பதிவர்கள் எழுதினால் ராகுல் காந்தி ஷாட்டுக்காக (ஓட்டுக்காக) மண்சுமப்பது போலத்தான் இருக்கும் தோழர்
வாழ்க நின் பணி

said...

போராட்டம் வெற்றியடைய வாழ்த்துவோம்.

திருட்டு முண்டங்கள் கட்சி வேற பிசினஸ்ல பிஸியா இருக்கும் . தமிழனுக்கு ரெண்டாவது தீபாவளி என்னைக்கு வருதோ அன்றைக்கு தான் நிம்மதி.

said...

சிறப்பான பதிவு.

said...

Correct. Very good Article ....

said...

நெய்வேலியை சேர்ந்தவரான தமிழ்சசி கூகிள் ப்ஸ்ஸ்லில் போட்ட பின்னூட்டம் இங்கே
------

Thamizh Sasi - குழலி,

நெய்வேலியில் நடப்பதை பதிவு செய்தமைக்கு நன்றி.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், நிரந்திர தொழிலாளர்களுக்கும் இடையே பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கில் தொமுச கடந்த காலங்களில் செயல்பட்டு வந்துள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களை விரோதிகளாக பார்க்கும் மனப்பான்மையையும் தொமுச தொடர்ந்து ஏற்படுத்தி வந்துள்ளது. தொமுச தொழிற்சங்க தலைவர்கள் என்.எல்.சி நிறுவனத்தின் அல்லக்கைகளாகவே செயல்பட்டு வந்துள்ளனர். நிலம் இழந்தவர்களுக்கு வேலை/இழப்பீடு தருவதிலும் இதே போக்கு தான் கடைப்பிடிக்கப்பட்டது. பாமகவின் வருகைக்குப் பிறகு தான் ஓரளவேனும் நிலம் இழந்தவர்களுக்கு வேலையும், இழப்பீடும் கிடைத்தது.

தற்பொழுது நெய்வேலியில் நடந்து வரும் பிரச்சனையின் முழு விபரமும் எனக்கு தெரியவில்லை. உங்கள் பதிவு மூலம் கடந்து காலம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.

நன்றி...

said...

கடந்த வாரம் பிரான்சில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்களும் தானாகவே போராட்டத்தில் கலந்துகொண்டனர் என்ற செய்தி வியப்பாக இருந்தது. பாரிசல் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேராணியில் மட்டும் பொதுமக்களையும் சேர்த்து சுமார் 20 இலட்சம் பேர் கலந்து கொண்டனர். (அந்தநாட்டில் கருணாநிதி, தி.மு.க., தொமுச, சன் டி.வி., கலைஞர் டி.வி., தினத்தந்தி, தினமலர் போன்றவை இல்லாததால் தொழிலாளர் போராட்டம் பிசுபிசுக்கவில்லை)

தமிழன் நிலத்தை இழந்ததால் மானத்தை இழந்து கண்டவனிடம் கையேந்த வேண்டிய நிலை உள்ளது. மண்ணின் மைந்தர்களுக்கு குறைந்த கூலிக்கு அடிமை வேலை, வந்தேரிகளுக்கு பணத்தை வாரியிரைத்து சொகுசு வாழ்க்கை. இந்த நிலையை மாற்ற மண்ணின் மைந்தர்கள் அனைவரும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுக்க போராடவேண்டும்.

said...

Aiya Kuzhali avargale ,
Matra mayrangalai patri pesurathai vida yen nenga entha pirachinaiku sata thirvu kana kudathu ? Avargaluku nirandara velai valanga yen nenga sata udaviya nadavendiyathu thane ? Neengalum suma blog eluthi than erukinga kalaignar kaditham eluthara madri nengalum rendu sabaz vanga ?

said...

If u are true to urself publish my comment also else I will understand that u are also mayran only

said...

//பிடுங்கும்போது நிலம் கொடுத்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் நிரந்தர வேலை நிலத்திற்கான இழப்பீட்டு தொகை என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தது, ஆனால் 30-40 ஆண்டுகளுக்கும் மேலாக பலருக்கும் எந்த இழப்பீட்டு தொகையும் தரப்படவில்லை, மேலும் வேலையும் தரப்படவில்லை
//

அதிர்ச்சியான செய்தி.
மிகத் தேவையான பதிவு.
நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

said...

//அதிர்ச்சியான செய்தி.
மிகத் தேவையான பதிவு.
நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்
//
நாக.இளங்கோவன் அய்யா அரசாங்க நிறுவனமே இந்த மாதிரி 30-40 ஆண்டுகளாகியும் இழப்பீடு தராமல் நடந்து கொள்வதென்றால் உங்கள் பகுதியில் டாடா தொழிற்சாலைக்கு நிலமெடுக்க முனைந்தார்களே கொடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும், அந்த நேரம் நாமிருவரும் ஒரு முறை கடுமையாக ஆதரித்தும் எதிர்த்தும் விவாதித்துக்கொண்டோமென நினைக்கிறேன்... நீங்களும் சரி நானும் சரி அவரவர்கள் கட்சி சார்புநிலையிலிருந்து காலம் நம்மை வெளியேற்றி விட்டது என நினைக்கிறேன்...

said...

அன்பின் நண்பர் குழலி,

உறுதியாக நானும் நாமும் கட்சிப் பற்று நிலையில் இருந்து மீண்டு விட்டோம். நான் எழுதிய சில கட்சி சார்பு நிலைகள் என்னை உறுத்துகின்றன. சமயங்களில் அவமானமாகவும் கருதுகிறேன்.
தமிழ்க் குமுகத்தின் நாசகாரக் கூட்டத்தை தமிழ்க்காவலர்கள் என்று
கருதிவிட எவ்வளவு மடைமையில்
வாழ்ந்திருக்கிறோம் என்று நான் கூசிப்போவதுண்டு. அதனாலேயே கொஞ்ச நாள்களாகப் பதிவுகள் எழுத மனம் வருவதில்லை. நாள்கள் சற்று கடக்கட்டும்.

தென்மாநிலத்தைப் பொறுத்தவரை
அங்கு தொழில்கள் பெருக வேண்டும்
என்பதொடு, பொருளாதாரங்கள் தமிழ்நாட்டில் சென்னையைச் சுற்றிக் குவிவதை விட பரவலாக வேண்டும் என்ற கருத்தில் எனக்கு மாறுபாடு கிடையாது.

ஆனால், சாதாரணமாகவே சுரண்டப் பிறந்த முதலாளித்துவம், நெறிகட்ட
இந்திய அரசியலால் வெறி பிடித்த முழுப்பித்தலாட்டக் கூட்டமாகவே இருப்பதை எண்ணுங்கால் என்னால் உறுதியாக எதுவும் கூறவியலவில்லை.

நெய்வேலியைப் பொறுத்தவரை, தனியாருக்கு 49% வரை பங்குகளை விற்கக் கொள்கையளவில் தயாராக நடுவணரசு இருக்கையில், பங்குச் சந்தை முதற்கொண்டு எல்லாமே வெளிநாட்டவர் முதலீட்டில் வளர்கையில் தொழிலாளர்கள், நிலவாரிசுகள் என்று யாருக்குமே ஞாயம் கிடைக்க விட மாட்டார்கள் பெருமுதலாளிகள்.

இதே பெருமுதலாளிகள் வரிசையில்
இடம் பிடித்துவிட்ட தமிழ்வாரிகளும் (மார்வாரி போல) தமிழ்பனியாக்களும்
தொழிலாளருக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றெல்லாம் கனவில் கூட இனி நினைக்க முடியாது.

இந்த நிலை மிகவும் கவலைக்குரியது.

அன்புடன்
நாக.இளங்கோவன்