பெரியார் ஒரு உணர்ச்சி காவியப் பதிவு....


சிங்கையில் யீஷூன் திரையரங்கில் பெரியார் திரைப்படம் வெளியாகியுள்ளது, நண்பர்கள், நான் முன்னாள் சென்றுவிட கோவி.கண்ணன் திரையரங்கில் வந்து இணைந்து கொண்டார், பெரியார் திரைப்படம் பார்க்கப்போகும் முன் இந்த படத்தில் சத்யராஜ் நடிக்காமல் வேறு புது முகம் யாரேனும் நடித்திருக்கலாம், பெரியார் தெரிவதற்கு பதில் சத்யராஜ் தான் நம் முன் வந்து நிற்பார் என்றேன், அதற்கு என் நண்பன் கூறினான், படத்தில் சத்யராஜ் தெரியமாட்டார், ஏனெனில் பெரியார் சத்யராஜை விட பவர்ஃபுல், சத்யராஜை விஞ்சி பெரியார் தான் படத்தில் தெரிவார் பார் என்றான், படம் பார்க்கும் போதே என் நண்பன் சொன்ன உண்மை புரிந்தது.

தொண்ணூற்று ஐந்து ஆண்டுகால வாழ்க்கை, ஐம்பதாண்டுகளுக்கும் மேலான சமூகப்பணி கொண்டவரின் வாழ்க்கையை இரண்டரை மணி நேரத்தில் அடக்குவது இயலாத காரியம், அதனால் பெரும்பாலுமான காட்சிகள் நீளமாகவும் ஆழமாகவும் இல்லாமல் மேலோட்டமாகவே இருந்தன, இடைவேளை வரை படம் வேகமாகவே நகர்ந்தது, இடைவேளைக்கு முன் அதிகமாக நமக்கு அறிமுகப்படாத காட்சிகள் இருந்ததால் படம் சுவாரசியமாகவும் இருந்தது, இடைவேளைக்கு பின் வந்த காட்சிகள் பலவும் நாம் அறிந்த விடயங்கள்.

தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள் பற்றிய பெரியாரின் விமர்சனங்கள், மணியம்மையை திருமணம் செய்து கொண்ட விடயம், ஆகஸ்ட்டு 15ஐ கருப்பு தினம் என கூறியது என பெரியார் மீது வைக்கப்படும் பல

விமர்சனங்களுக்கு இந்த படத்தில் பதில் கிடைத்துள்ளது, அறிஞர் அண்ணா, கலைஞர், தி.க. தலைவர் வீரமணி, எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் போன்றோர் இடம் பெறும் காட்சிகள் வெகு சிலவே.

தொடக்க காட்சிகளில் சத்யராஜே தெரிந்தார், வசன உச்சரிப்பும் அப்படியே, கோட்டை கழற்றி போட்டுவிட்டு கதராடை உடுத்தி வரும் அந்த காட்சி நிச்சயம் என்னை பரவசப்படுத்தியது, அதிலிருந்து சத்யராஜ் ஆளையே காணவில்லை, படம் முழுக்க பெரியார் தான்... ஓரிரு இடங்களில் வசன உச்சரிப்பு சத்யாராஜை நினைவுக்கு கொண்டுவந்தாலும் பெரியாரே ஆதிக்கம் செய்தார்.

இடஒதுக்கீடு
இடஒதுக்கீட்டின் தந்தையாக இருந்திருக்கிறார் பெரியார், அன்று அவர் ஆரம்பித்த போராட்டம் இதோ இன்று வரை நடந்து கொண்டிருக்கின்றது, ராஜாஜி அவர்களிடம் சிறையில் பெரியார் உரையாடும் காட்சியில் இடஒதுக்கீட்டிற்கு காந்திஜி ஒத்துக்கொள்வது இருக்கட்டும், நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா என்று முகத்தை ஆழமாக பார்த்து கேட்கும்போது அதற்கு ராஜாஜியின் தாழ்ந்த பார்வையே இராஜாஜியின் எண்ண ஓட்டத்தை வசனங்கள் ஏதுமின்றி தெரிவித்து விடுகின்றது, இடஒதுக்கீடு ஏதோ சும்மா வந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இன்றைய தலைமுறைகளுக்கு அதன் நெடிய போராட்ட வரலாறு இதனால் தெரியவரும்.

பெரியாரின் சமரசம்
சமூக, அரசியலில் சமரசமற்று இருப்பது அதனால் எந்த இழப்பையும் ஏற்பது என்பது என்னால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விடயம், ஆனால் எதை சமரசம் செய்வது என்பதில் ஒரு தெளிவு வேண்டும், பெரியார் சமரசமே செய்து கொள்ளாதவர் என்ற எண்ணம் எனக்கு ஏற்கனவே இருந்தது, ஆனால் திரைப்படத்தில் கம்யூனிசம் பற்றிய எழுத்துகளால் பெரியார் கட்சியும் பத்திரிக்கையும் பிரிட்டிஷ் காரர்களால் முடக்கப்படும் என்ற நிலை வந்தபோது கம்யூனிச பொருளாதார கொள்கை முக்கியம், ஆனால் அதை விட முக்கியம் சாதி ஒழிப்பு, அதனால் கொஞ்ச காலம் கம்யூனிசத்தை தள்ளி வைப்போம் என்று தன் முதற் குறிக்கோளை எதற்காகவும் இழக்காமல் இருக்க சமரசம் செய்து கொண்டார் என்ற காட்சியமைப்பு பெரியார் பற்றிய சமரசம் தொடர்பான என் எண்ணத்தை மாற்றியது.

பெரியாரின் கணிப்புகள்
காந்திஜியிடம் மேல்சாதி மக்களின் வாழ்வாதார மனுதர்ம கொள்கைகளை மாற்ற முயன்றால் உங்களையே உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள் என்று எச்சரிப்பதும், அனைவரும் அர்ச்சகர் சட்டம் 25 ஆண்டுகளுக்கு முன் முதல்வர் கருணாநிதியினால் கொண்டு வரப்பட்டபோது கோர்ட் குறுக்கே வரும் பார்த்துக்கொள் என்று எச்சரிப்பதும் பெரியார் எந்த அளவிற்கு இந்த சமூகத்தின் அவலத்தை புரிந்து கொண்டுள்ளார் என்று நன்றாக தெரிகின்றது.

படத்தில் சாதியம் மற்றும் கடவுள் மீதான விமர்சனங்கள் நகைச்சுவையாக நக்கலாக சொல்லப்பட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதால் படம் ஒரு ஆர்ட் பிலிம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் கொண்டு செல்கிறது.

வியாபார மண்டிக்கு பெரியாரின் தந்தை வரும் போது அனைவரும் "நமஸ்காரம்" சொல்லி மிகுந்த மரியாதை கொடுப்பதும், அதன் பின் மண்டிக்கு வந்து முனிசிபல் கவுன்சிலராகவும் மரியாதைக்குறியவராகவும் இருக்கும்

பெரியாரின் தந்தையை பெயர் சொல்லி அழைத்து அடா புடா என்று மரியாதையில்லாமல் பேசும் ஒரு உயர்சாதி முனிசிபல் கிளார்க்கை பற்றி பெரியார் கணக்கரிடம் அய்யா முனிசிபல் கவுன்சிலர் ஆனாலும் ஏனிந்த கிளார்க் இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறார் என்று கேட்க அதற்கு கணக்கர் அவர்கள் சாதியில் உசந்தவர்கள் நம்மிடம் எத்தனை பணம் பதவி இருந்தாலும் நம்மால் அவர்களைப்போல ஆக முடியாது என்று சொல்வதும் படக்காட்சிக்காக அமைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது, இவைகளை சிறு வயதிலிருந்தே பெரியார் பார்த்திருப்பார் , அதன் காரணங்களையும் அப்போதிருந்தே அறிந்திருப்பார் அப்படியிருந்தும் திடீரென பெரியார் இந்த கேள்வியை கேட்பதும் அதற்கு பதில் சொல்வதும் திரைப்படங்களை பார்ப்பவர்களுக்கு அப்போதிருந்த சூழ்நிலை புரிய வேண்டுமென்ற காரணமே இருந்திருக்கலாம்.

சட சடவென்று காலங்கள் மாறுவது பெரியாரின் தாடி வளர்வதை வைத்து புரிந்து கொள்ள முயன்றாலும் மின்னல் வேகத்தில் காலங்கள் மாறுவது படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் இழை லேசாக தடைபடுகின்றது. ஆனாலும் தொண்ணூற்றுஐந்தாண்டு கால வாழ்க்கையை சில சில சம்பவங்கள் மூலமாக காட்டும் போது இது ஏற்படக்கூடும், படம் கோர்வையாக காட்சி அமைப்புகள் பெரிதும் அறுபடாமல் காண்பித்திருக்க எடிட்டர் லெனினின் கத்திரி நன்றாகவே வேலை செய்திருக்கின்றது.

படத்தில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு விடயம் ஒளிப்பதிவு, காலத்தை பிரித்து காட்டும் ஒளியமைப்பு ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சானை ஒளிஓவியர் என்று சொல்லுவதற்கு பொருள் சேர்க்கின்றது.

என்ன தான் படத்தின் முடிவு நாம் அறிந்ததாகவே இருந்தாலும் படத்தில் பெரியாரின் இறப்பு சற்று கலங்க வைக்கிறது.

படத்தில் அத்தனை நடிகர்களும் நன்றாகவே நடித்துள்ளனர்... கடவுளே நீ கல்லா பாடல் நன்றாக மனதில் பதிந்து முணுமுணுக்க வைக்கிறது, 'ஓ ரசிக சீமானே' பாடலை நினைவு படுத்தும் ரகசியா பாடல் கேட்கும் படியாக
இருக்கின்றது, மற்ற பாடல்கள் சட்டென்று மனதில் பதியவில்லை.

பெரியார், அண்ணா முரண்பாடுகள், பெரியாருக்கு வாக்கு அரசியல் மீதிருந்த கோபம், அரசியல்வாதிகள் மீதிருந்த விமர்சனம் அத்தனையும் நேர்மையாக காண்பிக்கப்பட்டிருக்கின்றது

தமிழகத்தின் அத்தனை கட்சிகளுக்கும் பெரியாரே ஆதாரமாக இருந்திருக்கிறார்... தமிழகத்தில் பெரியாரின் தாக்கம் இன்னும் சில நூற்றாண்டுகளுக்காவது நிச்சயம் இருக்கும்.

கடவுள் எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு என்ற புட்டியில் அடைத்து இன்றைய தலைமுறைக்கு ஊடகங்கள் காண்பித்திருக்கும் பெரியார் பற்றிய உண்மையான புரிதலை இந்த படம் ஏற்படுத்தும், பெரியாரை இந்த இரு கோணங்கள் தவிர்த்து மேலும் அறிந்து கொள்ள எத்தனித்தாலே போதும் மிச்சத்தை அதாவது அவர்களை உள்ளிழுப்பதை பெரியாரே பார்த்துக்கொள்வார், இந்த பெரியார் படம் இன்றைய தலைமுறையில் இன்னும் எத்தனையோ பேரை உள்ளிழுக்கப்போகிறது


தி.க. தலைவர் அய்யா வீரமணி அவர்களிடம் சில மாதங்களுக்கு முன் உரையாடிக்கொண்டிருந்த போது பெரியார் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படும்போது சிதைக்கப்பட்டுவிடுமோ என்று என் கவலையை கூறினேன், அதற்கு இல்லை, நிச்சயம் அப்படியிருக்காது, நம்மிடம் பல விசயங்களை ஆலோசிக்கின்றனர், தகவல்கள் பெறுகின்றனர், படம் கண்டிப்பாக நன்றாக இருக்கும் வெளிவந்த பின் பாருங்கள் என்றார், படம் முடிந்த பின் வீரமணி அய்யா அவர்கள் கூறியதை நினைத்துக்கொண்டேன்.... அத்தனை அற்புதமாக வந்திருக்கின்றது படம்.

இயக்குனர் ஞானசேகரனுக்கும் மற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்

பெரியார் ஒரு உணர்ச்சி காவியப் பதிவு....

15 பின்னூட்டங்கள்:

said...

Excellent Write up!

Good Review!

Thanks for Sharing!

said...

குழலி,
விமரிசனத்துக்கு நன்றி !

அட நீங்களுமா ? ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேனே
:((

said...

குழலி,

அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

அடுத்த வாரம் நானும் பார்க்க வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறீர்கள், நன்றி.

-விழிப்பு

said...

//அட நீங்களுமா ? ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேனே
:(( //
ஸாரி தல, படம் வெளியாவது தாமதமாகவே தெரிந்ததே உடனே கிளம்பிவிட்டோம், அடுத்த முறை நிகழ்ச்சிகள் தொடர்பாக கண்டிப்பாக தெரிவிக்கின்றோம்

said...

பெரியார் பற்றிய எந்த விசயங்களும் சுவாரசியம் தான். நிச்சயம் இந்தப்படத்தை பார்க்கவேண்டும் இருக்கேன். உங்களது திரைப்பார்வை மேலும் அந்த ஆர்வத்தை கிளறி விட்டுள்ளது.

said...

ஜோ,
இது ஏதோ சதி மாதிரி தெரியுது :) நீங்க மிஸ்ஸுடு கால் கொடுக்காம வைரமுத்து விழாவுக்குப் போனதுக்குப் பழிக்குப் பழி போலிருக்கு ;)

[ஏதோ, என்னாலானது :-D]

said...

பொன்ஸ்,
நீங்க சொல்லுறது சரி தான் போலிருக்கு :((

குழலி,
படம் இன்னும் ஒரு வாரமாவது ஓடுமா ? அடுத்த சனிக்கிழமை தான் பார்க்க முடியும் ..படத்திற்கு கூட்டம் எப்படி ?பார்வையாளர்கள் வரவேற்பு எப்படி?

said...

தமிழக வரலாற்றில் ஒரு முக்கியப் பங்கு வகித்த பெரியார் போன்றவர்களின் வாழ்க்கை இது போல ஆவணப்படுத்துவது மிகவும் தேவையான ஒன்று.

பதிவிற்கு நன்றி.

said...

மிக விரிவான அழகான விமர்சனம். படம் பார்க்கும் ஆவலை இன்னும் அதிகப்படுத்திய பதிவு.

said...

Sorry for the irrelevant comment.... (not totally irrelevant in a post about periyar)

உங்கள் கவனத்திந்கு

http://nanopolitan.blogspot.com/2007/05/ugly-face-of-aiims.html

http://www.telegraphindia.com/1070507/asp/frontpage/story_7744209.asp

http://bruno.penandscale.com/2006/02/irresponsibleagain.html

said...

நோட்டும் பேனாவுமாக போயிருந்தால் இன்னும் நல்லா எழுதி இருக்கலாமோ ;)


நன்றி

said...

ம்ம்...பெரியாரின் வாழ்க்கையை அழகாக சொல்லியிருக்கும் படம் இது. அவரை சற்றே நெருங்கி பார்க்க வைத்திருக்கிறது படம். பெரியாரை பற்றி ஒன்றும் தெரிந்திராத என்னைப் போன்றோருக்கு மிகவும் பயன் தரக்கூடிய படம் இது.

ஆரம்ப காட்சிகளில் சத்யராஜ் சத்யராஜாகவே தெரிவது நெருடல் தான் என்றாலும், அதே நக்கல் பெரியாரிடமும் உண்டு என்பதால் அது மறைந்து விடுகிறது. காமராஜ் படம் போல இள வயது சத்யராஜிற்கு வேறு யாரையாவது போட்டிருக்கலாம்.

இளையாராஜா இல்லாததை அழகாக ஈடு செய்திருக்கிறார் விதயாசாகர். அனைத்து பாடல்களுக் அருமை. என் ஃபேவரைட் 'தாயும் யாரோ' பாடல்.

பின்னனி இசையிலும் அட்டகாசமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார் வித்யாசாகர்.

"நான் என்னை மட்டும் நம்பி நம்பி பயணம் போகிறேன்", "நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும் விந்து விழுந்து பிறந்தவர்கள்; நாங்கள் மட்டும் நாங்கள் மட்டும் எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்" ஆகிய இடங்களில் வைரமுத்து ஜொலிக்கிறார்.

தங்கர் பச்சானின் ஒளிப்பதிவு நிச்சயம் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

படத்தில் குறை என்று பார்த்தால், காலம் வேகமாக பயனிப்பது. மேலும் எந்த வருடம் என்ன நடக்கிறது என்பதை சப்-டைட்டிலாக போட்டிருக்கலாம்.

மொத்தத்தில் படமாக பார்த்தாலும், பாடமாக பார்த்தாலும் மனதுக்கு நிறைவுதருகிற படம்.

said...

super boss

Thanks
rock

-----------------------------------
Start your own website 1Free domain and 1GB hosting only Rs1500/-

http://space2inet.com
-----------------------------------

said...

குழலி, உங்களின் பதிவு இன்றைய விடுதலையில் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள்.

said...

//குழலி, உங்களின் பதிவு இன்றைய விடுதலையில் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள்
//
தெரிவித்தமைக்கு நன்றி அருண்மொழி