தமிழகத்தின் சேகுவேராவுக்கு கண்ணீர் அஞ்சலி


தமிழகத்தின் சேகுவேரா, தமிழ் தேசிய இயக்கங்களின் குரு என கருதப்படும் புலவர் கலியபெருமாள் மறைந்துவிட்டார், இது தொடர்பான மகேந்திரனின் பதிவு இங்கே, புலவர் கலியபெருமாள் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்....

சந்திக்க நினைத்து, இனி சந்திக்கவே முடியாமல் போய்விட்டதே....

கண்ணீருடன்
குழலி

புலவர் கலியபெருமாள் அவர்கள் எழுதிய மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்... என்ற நூலைபடித்த உடனே எழுதிய பதிவு, ஒரு பகுதி மட்டும் எழுதினேன் இன்னொரு பகுதியை எழுதுவதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன், அவரின் மரண செய்திக்கு பின் தான் அதை பதிவிடும் நிலை வரும் என நினைக்ககூடவில்லை.... கண்ணீருடன் இந்த பதிவை புலவருக்கு சமர்ப்பிக்கின்றேன்....

தமிழகத்தின் சேகுவேரா புலவர் கலியபெருமாள்

புலவர் கலியபெருமாள், தமிழகத்திலே வர்க்கப்போராட்டங்களை ஆரம்பித்து பின் தனித்தமிழ்நாட்டு போராட்டமாக உருவெடுத்ததன் ஆரம்பப்புள்ளியாக இருந்தவர், இந்த புத்தகத்தை பரவசத்துடனே படிக்க ஆரம்பித்தேன், பரவசத்திற்கு பலகாரணமென்றாலும் முதல் காரணம் 1984ல் ஒரு நாள் நாங்கலெல்லாம் என் தாத்தா வீட்டில் இருந்தபோது வீட்டிலிருந்தவர்கள் எல்லாம் ஒரு ஜீனியர் விகடன் புத்தகத்தை வைத்து ஆர்வமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர், அதில் கல்யாணம், புலவர் கலியபெருமாள் என்ற பெயர்களெல்லாம் அடிபட்டுக்கொண்டிருந்தது, என்ன பேசிக்கொண்டார்கள் என்பதெல்லாம் நினைவில்லை, ஆனால் புலவர் கலியபெருமாள், கல்யாணம் என்பது மட்டுமே நினைவிலிருந்த, பிறகு எங்கள் வீட்டிற்கு வந்தபோது அந்த ஜீவியை படித்தேன், அதில் என்ன படித்தேன் என்றும் நினைவிலில்லை ஆனால் நான் முதன்முதலில் ஜீனியர் விகடன் படித்த நினைவு அது தான்.

+2 படித்துக்கொண்டிருக்கும் போது குமுதத்தில் காய்கறி விற்கும் தீவிரவாதி என்ற அட்டைபடத்தோடு புலவர் கலியபெருமாள் பற்றிய ஒரு கட்டுரை வந்திருந்து, அதை நண்பன் வீட்டில் வைத்து படித்து பேசிக்கொண்டிருந்தபோது நண்பன் சொன்னான், இவர் எனக்கு தாத்தா முறை வேண்டுமென்று, அதன் பின் அவன் அவரோடு பேசிக்கொண்டிருந்ததையும் அவர் தன் அனுபவங்களை கதைபோல சொன்ன தையும் என்னிடம் கூறினான். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் நண்பனின் பெயரை சொல்லி புலவர் கலியபெருமாள் அவனோட தாத்தாவாம்மா என்றேன், எங்கள் தூரத்து உறவினர் ஒருவரின் பெயர் சொல்லி அவங்களுக்கு நெருங்கிய சொந்தம், அவருக்கு புலவர் மாமா முறை வேண்டுமென்றார், அதன் பிறகு ஜெயிலர் மாமா ஒரு முறை புலவரைப்பற்றி சொன்னார், நண்பன் புலவர் சொன்னதாக கதை போல விவரித்த சில விடயங்கள் தற்போது நினைவில் இல்லையென்றாலும் அவன் சொன்னமுறை இதோ இந்த புத்தகத்தை படிக்கும் போது புலவர் நம் அருகிலிருந்து தம்மை பற்றி சொல்லுவது போன்ற ஒரு காட்சிப்படமாக மனதில் விரிகின்றது, நிச்சயமாக இவைகளெல்லாம் சேர்ந்துதான் புலவரின் புத்தகத்தை படிக்கும் போது ஏற்பட்ட பரவசத்திற்கு காரணம் என நினைக்கிறேன்.

இந்த புத்தகம் எழுதப்பட்டதின் நோக்கம் பதிப்புரையில் கொடுக்கப்பட்டுள்ளது. "புலவர் கலியபெருமாள் அவர்கள் தம் வாழ்க்கைச் சுவடுகளைப் பதிவு செய்யவேண்டும் என்பது பலரின் விருப்பம் மட்டும் அல்லாமல் தேவையும் ஆகும். படிப்பினை என்ற வகையில் அது தமிழ்க் குமுகத்திற்கு பெரும் தேவைக்குறியது", புத்தகத்தை படித்து முடித்தவுடன் "படிப்பினை என்ற வகையில் அது தமிழ்க் குமுகத்திற்கு பெரும் தேவைக்குறியது" என்பது எத்தனை சத்தியமான வார்த்தைகள் என்பது புரியும்.

புலவர் கலியபெருமாள், தமிழ்தீவிரவாதிகளின்(?) காட்ஃபாதர் என ஜீனியர் விகடனால் குறிக்கப்பட்டவர், தமிழ் தேசிய சிந்தனை உள்ளவர்களின் மானசீக ஆசானாக கருதப்படுபவர், பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கம்யூனிச கொள்கைகளினால் ஆட்கொள்ளப்பட்டு ஆயுதப்போராட்டமே விளிம்புநிலை மக்களின் விடுதலைக்கு வழிவகுக்கும் என நம்பியவர். தூக்குதண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கி பணிரெண்டு ஆண்டுகள் கொடுஞ்சிறைவாசம் கண்டு பின் மக்கள் போராட்டங்களினாலும் சட்டப்போராட்டங்களினாலும் விடுதலையடைந்தவர்.


புலவர் பட்டம் பெற்று ஆசிரியர் பணி, வீடு, நிலபுலன்கள் என்று ஓரளவிற்கு வளமையான வாழ்க்கையும் அவரின் குடும்பத்திற்கு ஒரு வளமான எதிர்காலமும் இருந்த நிலையில் ஏழைகளின் மீதான சுரண்டலையும், அடக்குமுறையையும் அதிகார பகிர்தல் மறுக்கப்பட்டதையும் எதிர்த்து வர்க்கப்போராட்டத்திலும் தனித்தமிழ்நாட்டு விடுதலை போராட்டத்திலும் ஈடுபட்டு தான் மட்டுமன்றி தன் மனைவி, மகன், மகள், சொந்தக்காரர்கள் என அத்தனை பேரும் அரசாங்கத்தின் அடக்குமுறையையும் கொடுங்கோலையும் எதிர்கொண்டவர்கள் தொழில் ,திரைப்படம், அரசியல் என அத்தனையும் வாரிசுகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றன, வாரிசுகள் மந்திரிகளாகவும், வாரிசுகள் கதாநாயகர்களாகவும் ஆக்கப்படுகின்றனர், ஆனால் பண்ணிரண்டு ஆண்டு கால சிறைவாசத்தையும் அரசாங்கத்தின் அடி உதைகளையும் கொடும் அடக்குமுறையையும் மட்டுமே தன் வாரிசுகளுக்கு வழங்கிவிட்டார் புலவர் கலியபெருமாள், இத்தனைக்கும் இவர்கள் வறுமையில் வாடியவர்கள் இல்லை. வளமையான எதிர்காலம் இக்குடும்பத்திற்கு இருந்தது.

இந்த பதிவு புலவர் கலியபெருமாள் அவர்களைப்பற்றி விரிவாக எழுதுவது பற்றியதல்லாததால் இனி அவர் எழுதிய புத்தகத்தைப் பற்றி பேசலாம்.

சரளமான எழுத்து, இலக்கிய(?) தரம் வாய்ந்த நடை என்று எந்த சுவாரசியமுமில்லாமல் இருக்கலாம், ஆனால் புத்தகத்தை படிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலேயே புலவர் கலியபெருமாள் அவர்கள் அருகிலிருந்து பேசுவது போன்ற ஒரு உணர்வு படிப்பவர்களுக்கு எழுந்துவிடும், இவைகள் எல்லாவற்றையும் விட புத்தகத்தில் இருக்கும் நேர்மை, அதாவது தன் செயல்களை நியாயப்படுத்தியோ தன் செயல்களுக்கான நீள நீளமான விளக்கங்கள் எதையும் சொல்லவோ இல்லாமல் வெறும் தன் வாழ்க்கை சம்பவங்களை எடுத்து கூறுகிறார், பெரும்பாலான இடங்களில் மிக வெளிப்படையாக பேசினாலும் வெகு சில இடங்களில் சில விடயங்களை தொட்டும் தொடாமலும் சென்றுவிடுகிறார். பதிப்புரையிலேயே "காலம், அகவை வழி முதுமையைக் கொடுத்ததால் தொடர்ச்சியாக செய்திகள் பதிவுறாமல் போனதோடு சில விடுபாடுகளுடனுமே இவ் வரலாறு பதிவானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தது ஈராயிரம் பக்கங்களிலாவது பதிவு செய்ய வேண்டியவைகள் வெறும் 168 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் முழு நிறைவு ஏற்படாதது என்னமோ உண்மைதான்.

இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு அணிந்துரையும் மிக நன்றாக அதே சமயம் நேர்மையாக எழுதப்பட்டுள்ளன. அணிந்துரை, புத்தகம் பற்றி அடுத்த பதிவில்.

14 பின்னூட்டங்கள்:

முத்துகுமரன் said...

புலவர் கலியபெருமாள் அவர்களின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி. மகேந்திரன் பதிவில் இது குறித்து இட்ட பின்னூட்டம்

//மிகுந்த வருத்தமளிக்கும் செய்தி மகேந்திரன். கடந்தமுறை தாயகம் சென்றிருந்த போது புலவர்.கலியபெருமாளின் மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பல்வேறு தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களை, மற்ற தோழமை இயக்கங்களின் சிந்தனையாளர்களை ஒருங்கே காணும் வாய்ப்பும் உரையாடும் சந்தர்ப்பமும் அமைந்திருந்தன. தமிழ் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான போராளி. நிகழ்ச்சியின் இறுதியில் கணீரென்றூம் சிந்தனைத் தெளிவோடும் அவர் அற்றிய உரை மனத்திரையில் வந்து போகிறது. போராட்டங்களுக்கு முடிவில்லை என்று உரத்துக்கூறிய மனிதனின் பயணத்திற்கு மரணம் முற்றூப்புள்ளியை வைத்திருக்கிறது. போராட்டங்களுக்கான நியாயங்கள் மட்டும் மரணிக்காமலே இருக்கிறது.

அன்னாரின் மரணத்திற்கு என் கண்ணீர் அஞ்சலிகள். அந்த மாவீரருக்கு என் வீரவணக்கங்கள்.
//

Anonymous said...

He is a Good Politician but he may not be a good Father to his sons. His son is the person who created the vanniya singngal. I always wondering even these kind of good and true people also fails in directing thier sons in a good way.

... Kannan

Boston Bala said...

அஞ்சலி

'மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்' புத்தகத்தைக் குறித்த மேல்விவரங்களை சேர்க்க இயலுமா?

Anonymous said...

makkal thunaiyodu maranathai vendren....

yes.. we lost

yes..yes...we lost

i read his voice

i canot sacrifice .

அரவிந்தன் said...

புலவர் அவர்களை 2000 வருடம் ஜெயங்கொண்டம் என்ற ஊரில் நண்பர் ஒருவர் இல்லத்தில் சந்தித்து பேசியது என் நெஞ்சில் நிழலாடுகிறது...

அவரோடு இரவு உணவு உண்டு வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தேன்...

சிலரின் வாழ்வு மரணத்தோடு முடிவதில்லை..இவ்வகையில் புலவர் அவர்களின் வாழ்வும் முடிவடையவில்லை..

அரவிந்தன் said...

புலவர் அவர்களை 2000 வருடம் ஜெயங்கொண்டம் என்ற ஊரில் நண்பர் ஒருவர் இல்லத்தில் சந்தித்து பேசியது என் நெஞ்சில் நிழலாடுகிறது...

அவரோடு இரவு உணவு உண்டு வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தேன்...

சிலரின் வாழ்வு மரணத்தோடு முடிவதில்லை..இவ்வகையில் புலவர் அவர்களின் வாழ்வும் முடிவடையவில்லை..

Santhosh said...

புலவரின் புத்தகத்தை குறித்து கண்டிப்பாக எழுதுங்க குழலி. அண்ணாரின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி.

ILA (a) இளா said...

புலவர் கலியபெருமாள் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்....

குழலி / Kuzhali said...

சிவபாலனின் பின்னூட்டத்தை தவறுதலாக ரிஜெக்ட் செய்துவிட்டேன்... அவரின் பின்னூட்டம் இங்கே...
--------
சிவபாலன் has left a new comment on your post "தமிழகத்தின் சேகுவேராவுக்கு கண்ணீர் அஞ்சலி":

புலவர் கலியபெருமாள் அவர்களுக்கு எனது அஞ்சலியை சமர்பிக்கிறேன்

லக்கிலுக் said...

இந்த அஞ்சலிக் கடலில் என்னுடைய கண்ணீர்த் துளிகளும் சேர்ந்துக் கொள்ளட்டும்!

மலைநாடான் said...

அஞ்சலிகள்.

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

திரு. கண்ணன் அவர்களுக்கு,

///He is a Good Politician but he may not be a good Father to his sons. His son is the person who created the vanniya singngal. I always wondering even these kind of good and true people also fails in directing thier sons in a good way.///

தாங்கள் கூறியுள்ள கருத்துக்கள் முற்றுலும் தவறானவை. புலவர் கலியபெருமாள் அவர்கள் என்றைக்கும் சாதி அமைப்பை ஊக்கப்படுத்தியவர் கிடையாது.

அவரது மகன் வள்ளுவன், சோழநம்பியார் ஆகியோர் ’வன்னிய சிங்கங்கள்’ அமைப்பை உருவாக்கியவர்களோ அல்லது அந்த அமைப்பில் உறுப்பினர்களோ கிடையாது. வன்னிய சிங்கங்கள் அமைப்பை உருவாக்கியவர்கள் வேறு நபர்கள்.

தவறான கருத்துக்களின் அடிப்படையில் அவசரப்பட்டு இப்படியொரு குற்றச்சாட்டை கூறியது தவறு. இதற்கு நீங்கள் கட்டாயம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

புலவர் கலியபெருமாள் குடும்பம் காவல்துறை அடக்குமுறைக்கு ஆட்பட்டது போல தமிழ்நாட்டில் வேறுஎந்த குடும்பமும் ஆட்பட்டதில்லை.

குறிப்பாக அவரது மகன்கள் பட்ட துயரம் அளவிட முடியாதது.

தயவுசெய்து தியாகங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

கானா பிரபா said...

காலம் கடந்த என் அஞ்சலிகள்

Anonymous said...

புலவர் கலியபெருமாள் விடுதலை பெற பியுசில் அமைப்பு முயன்றது.1980 களின் துவக்கத்தில் இதில் குறிப்பிடதக்க பங்கினை எஸ்.வி.ராஜதுரை நண்பர்களுடன் செய்தார். பியுசில் அகில இந்திய அளவில் ஆதரவு திரட்டியது, தில்லியில் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.பத்திரிகையாளர் ஞாநி தான் துவக்கிய தீம்தரிகிட இதழில் புலவரைப் பேட்டிக் கண்டு வெளியிட்டார். அதுதான் அவர் தமிழ் பத்திரிகைகளுக்கு தந்த முதல் பேட்டி. ஞாநி எடுத்த பேட்டிகள் ஒரு நூலாக வெளியாகியுள்ளது. அதில் இதுவும் இருக்கிறது.