சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!
வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமே என்பது போன்ற கருத்துகள் பலரிடமும் பரவியுள்ளன.
வன்முறை என்பதன் அளவுகோல் உடலளவில் துன்பப்படுத்துவது மட்டுமே என்ற கருத்தை என்னளவில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை, வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல, வன்முறைகளின் வடிவம் பல, அதில் உடல் சார்ந்த வன்முறையும் ஒன்று, ஆனால் பலர் உடல் சார்ந்ததை தவிர மற்றவைகள் வன்முறை என்ற வரையரையில் கொண்டுவரவில்லை.
தீண்டாமை, இரட்டை குவளை முறைகள் வன்முறையில்லையா?, இங்கே இரத்தமில்லை, யாரும் உடலளவில் யாரையும் காயப்படுத்துவதில்லை(சாதிக் கலவரம் வேறு) அதற்காக இந்த தீண்டாமை வன்முறையல்ல என்று கொள்ள முடியுமா?
ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சிலர் மீது குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள், பொது மக்களிடம் குறிப்பிட்ட சிலரை பற்றி தவறான உருவகத்தை பதியவைக்க வேண்டும் என்று பத்திரிக்கை தர்மத்தை மீறி வெளியிடும் தவறான தகவல்கள் அதனால் ஏற்படும் சேதம் ஊடகங்களின் வன்முறையல்லவா? நேர்மையற்ற முறையில் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுவது ஊடகங்கள் சமுதாயத்தின் மீது நடத்தும் வன்முறையல்லவா, இங்கேயும் கூட கத்தியில்லை, இரத்தமில்லை உடலளவில் துன்பமில்லை, அதற்காக இது ஊடக வன்முறையல்ல என்று உருவகித்துக் கொள்ள இயலுமா?
சனாதானம்,மனு நீதி என்ற பெயரில் கடவுள் குடி கொண்டிருக்கும் கோவில்களிலும் கூட உரிமைகளை மறுப்பது என்பது வன்முறையல்லவா? இங்கும் கூட கத்தி, இரத்தமில்லை தான், அதற்காக இது வன்முறையல்லவா?
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் விமர்சிப்பதும், தீய கருத்துகளை சொல்லி பலரை மனதளவில்,உணர்ச்சிகளை காயப்படுத்துவதும் வன்முறை என்ற அளவீட்டில் அடங்காதவையா?
மொழி திணிப்பு, மொழிகளை நீச மொழி என்பது, தாய்மொழியில் கோவில் குடமுழக்கு நடத்தினால் பாவம் என்பதெல்லாம் மொழிகளின் மீது நடத்தப்படும் மொழி வன்முறையில்லையா? இங்கும் கூடத்தான் உடல் சார்ந்த துன்பப்படுத்துதல் இல்லை.
இராசதந்திரம் என்ற பெயரில் இழைக்கப்படும் துரோகங்கள் எல்லாம் வன்முறையல்லவா? இரத்தம் தெறிக்காமல் இருப்பினும்.
வியாபார தந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் சந்தையை கைப்பற்றுதலில் கூட உடல் காயப்படுவதில்லை தான், ஆதலால் இது வன்முறையல்ல என்றாகிவிடுமா?
வன்முறை என்பது வெறுமனே உடல் சார்ந்தது என்று மட்டும் சுருக்கிவிடாதீர்கள், வன்முறையின் ஒரு வடிவம் தான் உடல் சார்ந்த துன்பம், மேற்குறிப்பிட்டது போன்ற வேறு பல வடிவங்களும் வன்முறைக்கு உள்ளன.
எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையான இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் பார்ப்பன உயர்சாதி கும்பல்கள் இதையும் பயன்படுத்திக்கொண்டுள்ளன...
இட்லிவடை சட்டக்கல்லூரி மாணவர்களிடையே நடந்த சாதிக்கலவரத்தை எழுதும்போது மன்னிக்கவும் வெட்டி ஒட்டும் போது இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தி கொடுத்த குறிப்பு இது...
படிக்க இஷ்டம் இல்லாமல் கோட்டாவில் வரும் சிலர், படிப்பை விட்டுவிட்டு, அராஜகத்திலும் ஜாதி வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். இது எல்லாருக்கும் கெட்ட பெயரையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இப்படி வன்முறையை இளமையிலேயே நம்பி வாழும் இவர்கள் நாளைக்குக் கோட்டைக்குப் போவார்கள் என்று நினைத்தால்......
இட்லிவடையின் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மீதான இந்த வன்முறை சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய வன்முறையையும் விட மூர்க்கமானது
பழைய பின்னூட்டங்களுக்கு இங்கே சொடுக்கவும்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment