அட நன்றி கெட்ட நடிகர் சங்கமே !
ரஜினியை வெறுத்தது போன்று வேறு எவரையும் நான் வெறுத்திருப்பேனா என்பது சந்தேகமே, முத்து திரைப்படத்தை முதல்நாளில் அரங்கம் சென்று ஆரவாரமாக பார்த்ததுவே நான் கடைசியாக திரையில் பார்த்த ரஜினியின் படம், அதன் பின் தொலைக்காட்சிகளில் வந்தால் கூட உடனே சேனலை மாற்றும் அளவிற்க்கு அவரின் மீது வெறுப்பு, அந்த வெறுப்பு கடந்த சில ஆண்டுகளாக சிறிது குறைந்திருந்தாலும்(ரஜினி ஒரு ஹார்ம்லெஸ் என்ற காரணமாகவும் இருக்கலாம்) ரஜினியின் மீதான வெறுப்பு ஏற்படுத்திய அத்தனை காரணிகளும் அப்படியே உள்ளன, ஆனால் பதிவு அதைப்பற்றியதல்ல...
நடிகர் அஜீத், ராஜாதிராஜ ராஜகுலோத்துங்க ராஜகம்பீர ராஜா கருணாநிதியின் புகழுரை கூட்டத்தில் பேசிய பேச்சிற்க்காக, கற்பழிப்பு கேசில் உள்ளே போன ஜாக்குவார் தங்கம் என்கிற சண்டை பயிற்சியாளர் அறிக்கை அதை தொடர்ந்த சர்ச்சைகளில் ரஜினியை போட்டு தாக்குகிறார்கள், அதுமட்டுமின்றி நடிகர் சங்கத்துக்கு அதன் விழாக்களுக்கு எல்லாம் ரஜினி வேண்டும் ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினையென்றால் அதுவும் அரசியல் ரீதியாக தனிநபர் சார்ந்த பிரச்சினையாக இருந்தால் கூட வரவேண்டியதில்லை, பிரச்சினையே தொழில்தொடர்பானது என்பதால் நடிகர் சங்கம் வந்திருக்கவேண்டும் ஆனால் ரஜினியை யூஸ் செய்து த்ரோ செய்துவிட்டது நடிகர் சங்கம்
அட நன்றி கெட்ட நடிகர் சங்கமே ! என்ற தலைப்பில் ரஜினி ரசிகர்களால்நடத்தப்படும் இணையம் என்வழியில் வந்த பதிவு... அதிலிருந்து ஒரு பகுதி மட்டும் இங்கே, முழுக்க இதை ஏற்கின்றேன்...
http://www.envazhi.com/?p=16321
நடிகர் சங்க பவள விழாவுக்கு யாரை அழைத்தாலும் கூட்டம் வராது, வசூலும் தேறாது. நீங்கள்தான் வரவேண்டும். நீங்க ஒருவர் வந்தால் போதும்… வேறு யாரும் தேவையில்லை என்று கெஞ்சி கூத்தாடி ரஜினியை அழைத்தார்கள். நான்கு நாட்கள் நடந்த அந்த சாதாரண நாடக விழா, கடைசி நாளில் மட்டும் நட்சத்திர விழாவாக ஜொலித்தது. காரணம் ரஜினி!
நடிகைகளை விபச்சாரிகள் என்று ஒரு பத்திரிகை பட்டியல் போட்டுவிட்டது என்றதும் அலறித் துடித்து, ரஜினி வந்து பத்திரிகைகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றதுதான் இந்த நடிகர் சங்கம். அன்று பல பத்திரிகைகள் ரஜினி அங்கே போகக் கூடாது என்று கோரிக்கை விடுத்தும் நடிகர் சங்கத்துக்காக போய் நின்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் ரஜினி. அவர் போனதால்தான் அன்றைய கண்டனக் கூட்டம் அடுத்த பல மாதங்கள் பேசும் அளவு பெரும் நிகழ்வானது.
அதேபோல தனது ஜக்குபாய்க்கு ஒரு பிரச்சினை என்றதும் ரஜினியும் கமலும் வந்தே தீர வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதம் பிடித்து வரவழைத்தவர் நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார். ராதிகா அழுது புலம்பினார் ரஜினியிடம். அந்த பாடாவதி படத்தின் பிரிவியூ காட்சிக்கும் ரஜினி வந்தாக வேண்டும் என்றார்கள். அவரும் வந்தார்.
அதன் பிறகு எத்தனை விழாக்கள், அர்த்தமற்ற மேடைகள்… ஆனால் அத்தனைக்கும், இந்த வெண்ணைவெட்டிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய் நின்று சிறப்பித்துக் கொடுத்தார் ரஜினி. காரணம், சினிமா உலக நன்மைக்காக, சக கலைஞர்களின் சந்தோஷத்துக்காக மட்டுமே.
ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் இந்த நாட்டாமைகளுக்கு நாக்கு இழுத்துக் கொள்கிறது, தொண்டை விக்கிக் கொள்கிறது. பேச்சே வர மறுக்கிறது. அவருக்கு ஆதரவாகப் பேச வேண்டிய கூட்டத்துக்கு மட்டும் போக முடியாமல் கால்கள் முடங்கிப் போகின்றன சரத்குமார்களுக்கு.
இதே ஜக்குபாய் கூட்டத்தில் ரஜினி பேசியதற்கு தியேட்டர்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர் (‘திருட்டு விசிடி வர காரணமான தியேட்டர்களுக்கு படம் தரக்கூடாது!’). கேவலமாக அறிக்கை விட்டனர். அதற்கு ஒரு மறுமொழி கூட சொல்லாமல் மவுனம் சாதித்தது நடிகர் சங்கமும் அதன் தலைவரும்.இப்போது யார்யாரோ கண்டபடி பேசுகிறார்கள், பேட்டி தருகிறார்கள்… ரஜினி ஒரு காமெடியர் என்று எகத்தாளம் பேசும் அளவுக்கு துணிகிறார்கள். ஆனால் இப்போதும் வாயைப் பொத்திக் கொண்டு சும்மாதான் இருக்கிறது இந்த சங்கம்.
இந்த பிரச்சினையில் மட்டுமல்ல அதாவது ரஜினி ஆதரவு கண்டிப்பாக வேண்டும். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை அவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் நியாயம்...