அனுஷ்கா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது?


அனுஷ்கா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது?

1. முத்தம்
2. கிஸ்
3. பர்ஸ் / பை

இதற்கான விடையை நாம் கடைசியில் பார்க்கலாம்... ஹலோ எக்சூச்மி பதிவை ஸ்க்ரோளை பிடித்து இழுத்து கீழே போவதற்கு முன் கொஞ்சம் பதிவையும் படியுங்க...






சிங்கப்பூர் பூவுலகின் சொர்க்கம், அழகின் உச்சம், மனிதனின் சாதனை நகரம், உலகின் சுற்றுலா ரசிகர்களின் முக்கிய இடம் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம், ஃபைன் சிட்டி(fine city) என்று இரட்டை அர்த்தத்தில் சொல்லப்படும்... ஒன்று அழகான சிட்டி என்றும் இன்னொன்று அபராதம் விதிக்கப்படும் சிட்டி என்றும் இரட்டை பொருளில் சொல்லப்படும்...

உலகில் குடிசைப்பகுதியில்லாத(slum) ஒரே நாடு, சிங்கப்பூரின் பெரும்பாலான குடிமகன்களுக்கு சொந்தவீடு, எங்கெங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதையே பார்த்துள்ள நமக்கு ஊழல் என்பது கிட்டத்தட்ட இல்லாத(nil) நாடாகவும் குற்றச்செயல்கள் என்பதும் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும் நாடு சிங்கப்பூர்...

இரவு 12 மணிக்கு உடல்முழுக்க நகையணிந்து தனியே ஒரு பெண் செல்லும் நாள் என்னும் காந்தி கனவை தினம் தினம் நனவாக்கி கொண்டிருக்கும் நாடு...

என் மொழியை மட்டுமே படிக்கவேண்டும் என் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என் இனம் மட்டுமே என்று இனவெறி பிடித்தலையும் கொலைகார நாடுகளை பார்த்துக்கொண்டிருக்கும் உலகில் அவரவர் தாய் மொழியை படியுங்கள், அவரவர் தாய்மொழியை மதியுங்கள், அவரவர் மதங்கள் அவரவர்களுக்கு என்று பல்தேசிய மக்களும் ஒன்றிணைந்து வாழும் சிங்கப்பூர் உலகின் அதிசயங்களில் ஒன்று...

சிங்கப்பூர் சிறிய நாடு என்பது பெரும்பாலும் அறிந்ததே, சிறியது என்றால் தமிழ்நாடு அளவு இருக்குமா? இலங்கை அளவு இருக்குமா என்றுதான் முதலில் நினைத்தேன், அதனினு சிறிது கிட்டத்தட்ட பாதி பெங்களூர், கால்வாசி சென்னை அவ்வளவுதான்.


சிங்கப்பூரின் கடைக்குட்டியான சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் உலகின் மிக உயரமான Observation wheel என்பதிலிருந்து சிங்கப்பூரின் பழமையை காண்பிக்கும் புலாவுபின் தீவு வரை எக்கச்சக்கமான சுற்றுலா தளங்கள்...

சென்னை 2 சிங்கப்பூர் செல்ல நிறைய வானூர்திகள் உள்ளன, விசா நடைமுறைகளும் ஓரளவுக்கு எளிதானவையே... சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகத்திலேயே சுற்றுலா விசா பெற்றுக்கொள்ளலாம், டூரிஸ்ட் விசா எனப்படும் விசிட் விசா, இது தொடர்பான நடைமுறை விதிகள் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

டூரிஸ்ட் விசா பெற மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது
1. உங்களுடைய கடவுச்சீட்டு(Passport) குறைந்த ஆறுமாதத்திற்காவது(at least 6 months validity) இருக்க வேண்டும்

2.சிங்கப்பூர் சென்று மீண்டும் திரும்பி வருவதற்கான வானூர்தி சீட்டு இருக்க வேண்டும்(A confirmed onward/return ticket),

3. உள்ளூர்(சிங்கப்பூர்) அழைப்பாளர்(sponsor) இல்லாத நிலையில் சில நூறு அமெரிக்க / சிங்கப்பூர் டாலர்கள் அல்லது கடன் அட்டை(credit card) காண்பிக்கப்பட வேண்டும்.

இவைகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சிங்கப்பூர் விசாவுக்கான படம்(அறிவுறுத்தப்பட்ட அளவுகளில்)கொடுத்தால் மூன்றிலிருந்து நான்கு வேலை நாட்களுக்குள் விசா கிடைத்துவிடும்.

விசா வாங்கியாச்சா? பாஸ்போர்ட் தயாரா? அப்புறமென்ன கிளம்புங்க சென்னை 2 சிங்கப்பூர்...

நண்பர்கள் வெளிநாடு செல்லும் பொது ஸ்வெட்டர் எல்லாம் தாங்காது Thermal wear அப்போதே 5000 ரூபாய் கொடுத்து வாங்கியதை பார்த்து ஆனைக்கு அர்ரம்னா பூனைக்கு புர்ரம் அப்படிங்கற மாதிரி மேலாளரிடம் போய் முதன்முதலில் சிங்கப்பூர் அலுவலகவேலையாக வரும் முன் எங்கள் அலுவலக மேலாளரிடம் போய் ஸ்வெட்டர், Thermal wear லாம் எத்தனை வாங்க வேண்டுமென்றேன், ஏற இறங்க பார்த்தார்.

சிங்கப்பூர் சென்னை கிளைமேட் என்றார் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன், அடடே நூடுல்ஸ்ன்னவுடனே ஞாபகம் வருது, சிங்கப்பூர்ல விதம் விதமா நூடுல்ஸ் சாப்பிடலாம், ம் நம்ம மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு இங்கே வந்து அதே மாதிரி நூடுல்ஸ் என்று நினைத்தால் அவ்ளோதான்...


நூடுல்ஸ் பத்தி பேசிக்கிட்டே பாருங்க மீனம்பாக்கம் கெளம்ப லேட்டாயிரும், வானூர்தி கிளம்புவதற்கு மூன்று மணி நேரம் முன்னாலேயே வானூர்தி நிலையத்தில் இருப்பது நல்லது. மீனம்பாக்கத்தில் வானூர்தி நிலையத்திலேயே உணவுகிடைக்கும், நிலையத்தின் உள்ளே அடையாறு ஆனந்தபவன் இனிப்பகம் இருக்கு, புத்தகக்கடை இருக்கு ஆனால் எல்லாம் கொள்ளை விலை.

ஹலோ ஹலோ என்ன பாக்கெட்ல, சிகரெட் பாக்கெட்டா?, பேக்கிங்கில எதுவும் சிகரெட் பாக்கெட்டுங்க இருக்கா? ப்ளீஸ் தயவு செய்து எடுத்து வெளியில போட்டுறுங்க, சென்னை 2 சிங்கப்பூர் வானூர்தியில் புகைப்பிடிக்க அனுமதியில்லை, மேலும் சிங்கப்பூரில் வெளியூரிலிருந்து எடுத்து வரும் சிகரெட்டுகளுக்கு அனுமதியில்லை, அதற்கு முறையாக சுங்கவரி கட்டி தான் பயன்படுத்த வேண்டும், அப்படியே ஏமாற்றி கொண்டு வந்தாலும் சிங்கப்பூரின் உள்ளே விற்பனையாகும் அத்தனை சிகரெட்டுகளிலும் ஒவ்வொரு சிகரெட்டிலும் SDPC என்று அச்சாகியிருக்கும், அப்படியில்லாத சிகரெட்டுகளை புகைப்பதும் விற்பனை செய்வதும் வைத்திருப்பதும் குற்றம்.

உங்கள் பைகளை சோதனை முடித்து போட்டுவிட்டு கையில் வைத்திருக்க விரும்பும் பையை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் பயணச்சீட்டை தந்து போர்டிங் பாஸ் எடுத்துக்கொள்ளுங்கள், அங்கே ஒரு விண்ணப்ப படிவம் தருவார்கள் அதை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்..

தெரியாத யாராவது எதையாவது கொடுத்து சிங்கப்பூரில் இதை கொடுத்துடுங்க உங்களுக்கு காசு தரேன், அல்லது ரொம்ப பாவமாக உங்களுக்கு பேக்கேஜ் வெயிட் கம்மியா தானே இருக்கு என் பேக்கேஜை உங்களுடையதில் போட்டுக்கொள்ளுங்க பைசா தரேன் என்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் மறுத்துவிடுங்கள்...

அனுஷ்கா மாதிரி ஒரு அழகான பெண் மும்தாஜ் குரலில் "ஹல்லோ ப்ளீஸ் இந்த பையை கொஞ்சம் தூக்கிட்டு வந்து ஹெல்ப் பண்றீங்களா" என்றால், கபால்னு பாய்ந்து போய் பையை வாங்காதிங்க, நயன் ஸ்வீட்டி செல்லம் ஒங்களை வேணா தூக்கிட்டு வரேன், ஒங்க பையை எல்லாம் தூக்கிட்டு வரமுடியாது என்று சொல்லிடுங்க, இமிகிரேசன் முடித்துவிட்டு வாருங்கள்...

சிங்கப்பூரில் போதைபொருள் கடத்தலுக்கு மரணதண்டனை, வாய்தா, அப்புறம் வாய்தாவுக்கு வாய்தா முன் ஜாமீன் பின் ஜாமீன் என்றெல்லாம் கிடையாது, போதைப்பொருள் கடத்தினால் விரைவாக கேசை 'முடித்து' விடுவார்கள்... எனவே மிகுந்த எச்சரிக்கை.

ஹலோ அங்கே என்ன பாக்குறிங்க "மெய்புல அறைகூவலர்"னு எழுதியிருப்பதா ஹா ஹா physically chllange என்பதைத்தான் தமிழ்'படுத்தி' இருக்கிறாங்க...

திரும்பவும் வரிசையில் நின்று இன்னொருமுறை சோதனை, முடிச்சி பின் உள்ளே போய் வானூர்திக்காக காத்திருக்கும் நேரத்தில் புத்தக கடையில் ஏதாவது புத்தகம் வாங்கலாமென்றால் அதற்கு யானை எதுவாவது இருந்தால் வாங்கலாம் அவ்வளவு விலை...

ஏறக்குறைய நாலு மணிநேரம் பயணம், சரக்கு சாப்பாடு எல்லாம் நாம போற வானூர்திக்கு ஏற்ற மாதிரி இருக்கும், நாலு பேர் வந்து நம்ம போற வண்டியில திடீர்னு காத்து பத்தலைன்னா ஆக்சிஜன் மூடியை மூஞ்சில வச்சிக்கிங்க, கடலுக்குள்ள விழபோச்சின்னா இப்புடி தான் லைஃப் ஜாக்கெட் போட்டுக்கனும் அதுல இப்படித்தான் காத்து ஊதனும்னு பயமுறுத்துவாங்க...

ஒரு வெள்ளை அட்டை கொடுப்பாங்க, அதை நிரப்பிடுங்க, முக்கியமா எங்க தங்கப்போறிங்க அப்படிங்கறதை நிரப்பிடுங்க, இந்த வெள்ளை அட்டை முக்கியம் திரும்ப சிங்கப்பூரை விட்டு கிளம்பும்போது இந்த வெள்ளை அட்டையை கேட்பாங்க, அப்புறம் வண்டி கிளம்பிய பிறகு கொஞ்ச நேரத்துல சாப்பிட்டு தூங்க ஆரம்பிச்சா கொஞ்ச நேரத்துலயே சிங்கப்பூர் வந்துரும்... கொஞ்சம் கண் அசருங்க..

ஓகே சிங்கப்பூர் வந்தாச்சி, நம்ம ரிட்டர்ன் டிக்கெட், வெள்ளை அட்டை, பாஸ்போர்ட் கொடுத்தால் அங்கிருக்கும் அலுவலர் நமக்கு எத்தனை நாள் தங்கலாமென அனுமதி தருவார், அதிகபட்சமாக 90 நாட்கள் மட்டுமே விசிட் பாஸ்ல் தங்க இயலும், அவர்கள் கொடுத்திருக்கும் நாட்களை நாம் Immigiration checkpoint Authority என்ற துறையில் நம் தங்கும் அனுமதி நாட்களை நீட்டிக்கொள்ளலாம், நம்ம பேக்கேஜை எடுத்துவிட்டு வாருங்கள் சிங்கப்பூர் உங்களை இனிதே வரவேற்கிறது, இன்னும் ஏழு நாள்... பல இடங்கள் சிங்கப்பூரில் சுற்றி பார்க்கலாம்... காத்திருங்கள்...

சிங்கப்பூர் வரனுமா உங்கள் எழுத்து திறமையை காண்பியுங்கள், சென்னை 2 சிங்கப்பூர் ஒரு வார சுற்றுலாவை அனுபவியுங்கள்.. சுற்றுலாவோடு தமிழும் தமிழர்களையும் தமிழறிஞர்களையும் சந்திக்கலாம்... போட்டி தொடர்பான விபரங்கள் இங்கே



பின்குறிப்பு:
எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கா? கண்டிப்பா படிச்சிருப்பிங்க போன வருசம் இதே கட்டுரையை நயன்தாரா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது? என்று போட்டிருந்தேன், இப்போ நயன்தாரா பழசாயிட்டாங்களா? அப்புறம் தாடிக்காரர் வேற கோச்சிக்கிட்டார்னா என்னா செய்றது அதான் அனுஷ்கா

10 பின்னூட்டங்கள்:

said...

அனுஷ்காவுக்காக நாங்க ஜெயிலுக்கு கூட போகத் தயங்கமாட்டோம்ன்னு சொல்லுவாங்களே :)

said...

Great...

said...

நயன் ஸ்வீட்டி செல்லம் ஒங்களை வேணா தூக்கிட்டு வரேன், ஒங்க பையை எல்லாம் தூக்கிட்டு வரமுடியாது என்று சொல்லிடுங்க,
///

HA HA

said...

சிங்கப்பூர் ஒரு தடவை போய்ட்டு வந்தமாதிரி ஆய்டுச்சுங்க

said...

அனுஷ்காவுக்காக நாங்க ஜெயிலுக்கு கூட போகத் தயங்கமாட்டோம்ன்னு
//////////

WHO ??

MAY BE YOU.....

said...

superb. naanum poyitu vanthutten

said...

எங்கள் தங்கத் தலைவியின் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் விதமாக உங்கள் பதிவு உள்ளது.
உலக மக்களின் கனவுக்கன்னியிடம், 24 மணி நேரத்தில் பொதுமன்னிப்பு கேட்கவில்லையென்றால் ஐநா சபை மூலமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்படும்.

இப்படிக்கு,
அனுஷ்கா தலைமைக் கழகம்
அங் மோ கியோ.

said...

தல... கிரேட்...! அசந்துட்டேன்! இப்பிடியெல்லாமா யோசிப்பீங்க?!

said...

ராவணன் has left a new comment on the post "அனுஷ்கா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது?":

எங்கள் தங்கத் தலைவியின் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் விதமாக உங்கள் பதிவு உள்ளது.
உலக மக்களின் கனவுக்கன்னியிடம், 24 மணி நேரத்தில் பொதுமன்னிப்பு கேட்கவில்லையென்றால் ஐநா சபை மூலமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்படும்.

இப்படிக்கு,
அனுஷ்கா தலைமைக் கழகம்
அங் மோ கியோ.
/////////

ATHELLAM MUDIYATHUPPA

said...

ம்ம்ம்ம்ம்