இளிச்சவாயர்கள் ரசிகர்களா? தொண்டர்களா? பகுதி - 1

சிறந்த இளிச்சவாயர்கள் ரசிகர்களா? தொண்டர்களா? பட்டிமன்றம் பகுதி - 1

முன்குறிப்பு
இந்த படைப்பு முழுக்க முழுக்க ஒரு கற்பனையே யாரையும் குறிப்பன அல்ல.

இடம் : ஏதோ ஒரு மண்டபம்
நடுவர் : சாலமன் பாப்பையா
ரசிகர்களே : ராஜா மற்றும் குழுவினர்
தொண்டர்களே: காஜா மற்றும் குழுவினர்

சாலமன் பாப்பையா :
தமிழை வணங்கி இந்த மன்றத்தை தொடங்குகிறேன்,முன்னெயெல்லாம் பார்த்தீங்கனா இந்த பட்டிமன்ற தலைப்பு ரொம்ப சுலபமா இருக்கும் கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? வீரத்தில் சிறந்தவன் அர்ச்சுனனா? பீமனா? அப்படினு இப்போ எல்லாம் முன்னேறுறாங்க, நிறைய சிந்திக்கிறாங்க

நான் மதுரையில பழங்காநத்தம் பேருந்து நிலையத்தில நின்னுக்கிட்டிருந்தப்ப ஒரு சின்ன பையன் வந்தார்,நீங்க தான் பட்டிமன்றத்தில தீர்ப்பு சொல்ற பாப்பையாவோ? அப்படின்னாரு, நான் உடனே ஆமாம்ப்பா என்ன விஷயம்னு கேட்டேன், அப்போ கேட்டாரே அவரு ஒரு கேள்வி, உங்க நிறம் ரொம்ப கருப்பா? இல்ல தி.க. கொடியில இருக்கிற கருப்பு நிறம் ரொம்ப கருப்பானு ஒரு நிமிசம் திகைச்சி போயிட்டேன், அது மாதிரி ஒரு தலைப்பு தான் சிறந்த இளிச்சவாயர்கள் ரசிகர்களா? தொண்டர்களா?

ஒரே கொழப்பமா இருக்கு, ரசிகன் புது படம் ரிலீஸ் ஆனா கட்-அவுட் வைக்கறான், கொடி கட்டறான்,தொண்டன் அவன் தலைவர் வராருனு கட்-அவுட் வைக்கறான் , கொடி கட்டறான்.
ரசிகன் என்னடானா திரையில அவனுக்கு பிடிச்ச நடிகர் வரும்போது சூடம் காட்டுறான்
தொண்டன் என்னடானா அவன் தலைவர் வரும்போது ஆரத்தி காட்டுறான்
அவனும் அவன் நடிகனுக்கு மாலை போடுறான், இவனும் இவன் தலைவனுக்கு மாலை போடுறான்,

ஒரே கொழப்பமா இருக்கு இதுல யாரு சிறந்த இளிச்சவாயன்னு தேர்ந்தெடுப்பது,
அதுக்குதானே வந்திருக்குறோம், இரண்டு அணியும் பேசட்டும், அப்புறம் நம்ம முடிவை சொல்லுவோம்.

ரசிகர்களே என்ற அணிக்கு ராஜா தலைமையேற்று பேசப்போகிறார்,
தொண்டர்களே என்ற அணிக்கு காஜா தலைமையேற்று பேசப்போகிறார்.
ஹி ஹி வாங்க புள்ளிராஜா வந்து விளாசுங்க.

ராஜா:
நீதி வழுவா பாண்டிய மன்னனின் வாரிசாக சபையிலே வீற்றிருக்கும் நடுவர் அவர்களே

சா.பா. :
எங்கப்பா மன்னன், நம்ம சிம்மாசனத்துக்கு ரெண்டுபக்கமும் ரெண்டு இளம் பெண்கள் விசிறியால் விசிறி விடுறாங்களா என்ன? சும்மா இந்த கதையெல்லாம் விடக்கூடாது

ராஜா:
சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் நடுவர் அவர்களே, இப்போ நான் கூட என் மனைவியை பார்த்து, உன்னைய பார்த்தா மகாலட்சுமி மாதிரி இருக்கிறனு சொல்றேன், அது மாதிரி சும்மா ஒரு பேச்சுக்குதானே,
நீங்க புள்ளிராஜானு கூப்பிட்டிங்க, உண்மைய சொன்னா நான் புள்ளிராஜா தான்,
என் பெயருக்கும் இனிஷியலுக்கும் நடுவில புள்ளியிருக்கே, அப்போ நான் புள்ளிராஜாதானே!

சா.பா. :
அப்படி போடுங்க ராஜா, புள்ளிராஜா

ராஜா:
அய்யா நீங்க சொன்னீங்க ரசிகன் அவனுக்கு பிடித்த நடிகர் திரையில தோன்றும் போது சூடம் காட்றான், தொண்டன் அவன் தலைவர் வரும் போது ஆரத்தி எடுக்கிறான்,
மேலோட்டமா பார்த்தா ரெண்டும் ஒண்ணுதேன் ஆனா ரசிகன் திரையில வர நடிகனுக்கு சூடம் காட்டும் போது எதுனா பணம் காசு கிடைக்குதா, இல்லியே
சா.பா.:
எங்க தியேட்டர் காரன் வந்து சூடம் காமிச்சி திரையை கொளுத்திடாதனு உதைதான் கொடுப்பான்
ராஜா:
அதே தலைவர் வரும் போது ஆரத்தி எடுக்கிற தொண்டனுடைய தட்டுல ஒரு நூறு ரூபாய தலைவர் போடுவாரே, ஆக ஒரு ரூபா சூடத்தை காட்டி நூறு ரூபா வசூல் பண்ண தொண்டன் இளிச்சவாயனா? இல்ல சூடத்தை திரைக்கு காமிச்சு உதைவாங்குற ரசிகன் இளிச்சவாயனா?

சா.பா.
ஆகா ஆகா இதில இப்படி ஒரு விசயமிருக்கா, ம் கலக்குங்க ராஜா

ராஜா:
அது மட்டுமா ஏற்கனவே பேரு வச்ச குழந்தைய தூக்கிட்டு வந்து தலைவன் கையில குடுத்து இன்னொருவாட்டி பேரு வைக்க சொல்லுவான் தொண்டன், தலைவரும் பேரு வச்சிட்டு ஒரு ஆயிரம், ஐநூறுனு மொய் வைப்பார், இந்த மாதிரி ரசிகன் நடிகர் கிட்டயிருந்து வசூல் பண்ணமுடியுமா?

எங்க இவங்கதான் 30ரூ டிக்கட்ட 300 ரூவா குடுத்து ப்ளாக்ல வாங்கி படம் பார்ப்பாங்க,இதில தெரியலையா ரசிகர்கள் தான் இளிச்சவாயர்கள் என்று.

சா.பா.:
இங்க தொண்டர்கள் வசூல்ராஜானா அங்க நடிகருங்க வசூல்ராஜா, ம்...

ராஜா:
கட்-அவுட்,கொடி தோரணம் கட்டுறதை சொன்னீங்க, இதுல தொண்டருங்க இருக்காங்களே அவங்களாம் சொந்த பணத்தை போட்டு கட்-அவுட் கொடி தோரணம் கட்டுறதுயில்ல, அத சப்ளை பண்றது, வட்டம் மாவட்டங்க, ஆனா ரசிகருங்கலாம் அவங்க அப்பா அம்மா கஷ்டப்பட்டு உழைச்ச பணத்தை கொண்டுவந்து கட்-அவுட்,கொடிதோரணமா வீணாக்குறாங்க, இப்போ சொல்லுங்க யாரு சிறந்த இளிச்சவாயர்கள், ரசிகர்களா? தொண்டர்களா?

இப்போதைக்கு விடைபெற்றுக்கொண்டு மீண்டும் வருவேன் என சொல்லி என் இடமர்கின்றேன்.

சா.பா.:
ஆகா ஆகா என்னமா கலக்கினாரு பாருங்க, புள்ளிராஜா புயல்ராஜாவா மாறி சூறாவளியா சுழன்றுட்டாருங்க,ம்... தொண்டர்களே சிறந்த இளிச்சவாயர்கள் என பேச காஜா அவர்களை அழைக்கின்றேன்,ம்... வாங்க காஜா என்னத்த பேசப்போறிங்க, அதுதான் புள்ளிராஜாவே பேசிட்டாரே, அவர் பக்கம் இப்ப கை ஓங்கியிருக்கு,பாயின்ட் பாயின்டா அடிச்சாரு அவரு, என்ன பதில் சொல்லப்போறிங்க

சிறந்த இளிச்சவாயர்கள் தொண்டர்களே என்ற காஜாவின் விவாதம் அடுத்த பதிவில் தொடரும்.....

பகுதி -2

பின் குறிப்பு:
ஐயா சாலமன் பாப்பையா அவர்கள் நிறத்தைப்பற்றி அவரே கிண்டலடித்துக்கொள்வதை பட்டிமன்றங்களிலே கேட்டுள்ளேன் அதனால் தான் அப்படி எழுதினேன், யாரும் தவறாக எண்ண வேண்டாம்

இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும்

ரஜினிகாந்தும் ராகவேந்திரா மண்டபமும்

ரஜினிகாந்த்தினால் ராகவேந்திரா மண்டபம் கட்டப்பட்டது, கட்டப்படும்போதே இரைச்சல்களுக்கு குறைவில்லை, அந்த மண்டபம் கட்டப்பட்ட நிலம் எனக்குத்தான் சொந்தமானது என ஒருவர் வழக்கு பதிவு செய்தார், என்ன ஆனதோ ஏதானதோ மண்டபம் திறக்கப்பட்டு சில ஆண்டுகள் வரை சப்தமே இல்லை, திடீரென ஒரு நாள் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்தார், ராகவேந்திரா மண்டபம் கட்டப்பட்ட நிலம் தமக்கு சொந்தமென்றும் அதைப்பற்றி வழக்கு பதிவு செய்ய அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார், அப்பொழுது அந்த நிலத்தின்மீது உரிமை கொண்டாட கூடாது என்று எல்லா முறையிலும்(?!) வேண்டுகோள்(?!) வைக்கப்பட்டதாக பேட்டியெல்லாம் வேறு கொடுத்தார், அப்பொழுது ஒரு திடீர் திருப்பம், அந்த மண்டபத்தை தமிழ் மக்களுக்கு தமிழ் மண்ணுக்கு தானமாக(?!) கொடுப்பதாக அறிவித்தார் திரு.ரஜினிகாந்த்.

அந்த மண்டபத்தை நிர்வகிக்க ஒரு அறக்கட்டளையும் நிறுவப்பட்டது, அறக்கட்டளை உறுப்பினர்கள், தலைவர் யாரென நாமறியோம் பராபரமே!,
தானமாக வழங்கப்பட்ட அந்த மண்டபத்திலே தற்போது எத்தனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன, யாரெல்லாம் பயன்படுத்துகின்றனர் அத்ற்கு கட்டணம் எவ்வளவு? அந்த வருமானம் எங்கே செல்கின்றது என நாமறியோம் பராபரமே!, ஒரு வேளை ரஜினி ரசிகர்களின் சொந்த நிகழ்ச்சிகளுக்கு பயன்படுகிறதோ (ரஜினிரசிகர் யாரேனும் விளக்கினால் அறிந்து கொள்வோம்) என்னவோ?!

இரண்டு வழிப்போக்கர்கள் காட்டின்வழியே போகும்போது திடீரென ஒரு கொள்ளை கும்பல வழிமறித்து கொள்ளை அடிக்கும்போது ஒரு வழிப்போக்கர் தம்மிடமிருந்த பணத்தை எடுத்து இன்னொரு வழிப்போக்கரிடம் உமக்கு தரவேண்டிய ரூபாய் இதிலுள்ளது, உன்னிடத்தில் நான் வாங்கிய கடனை அடைத்துவிட்டேன் என்ற கதை நினைவுக்கு வருகின்றது சம்பந்தமில்லாமல் ஹி... ஹி...

வில்லங்கமில்லா சொத்துக்கள் கர்நாடகாவிலே... ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு கொடுத்த தமிழகத்துக்கு???

விஜயகாந்த்தும் ஆண்டாள் அழகர் மண்டபமும்
ஆண்டாள் அழகர் மண்டபம், விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் தலைமையிடம், சென்னை மாநகர நெரிசலை குறைக்க கட்ட திட்டமிடப்பட்ட மேம்பால பணியில் இந்த மண்டபம் சிறிதளவு இடிபடக்கூடும், பல கட்டிடங்கள் முழுமையாக இடிபடக்கூடும் என்பது வேறு விடயம், உடனே முறையிட்டார் பாருங்கள் விஜயகாந்த், யாரிடம் முறையிட்டார்? தஞ்சைவிவசாயிகள் எலிக்கறி தின்பதை தடுக்க விவசாயத்துறையை கேட்காமல் ஏன் நெடுஞ்சாலைத்துறையை கேட்டனர் என கள்ளக்குறிச்சியிலே முழங்கினாரே? பணம் சம்பாதிக்கத்தான் இந்த துறையை கேட்டு பிரச்சினை செய்கின்றனர் என விமர்சித்தாரே அவரிடம் இன்று மண்டபம் இடிபடாமல் காக்க சென்று முறையிட்டார் அதுவும் எப்படி நெடுஞ்சாலைத்துறையின் மேம்பால திட்டவரைபடத்திற்கு மாற்று வரைபடத்தோடு சென்று.

இதை வெளியே சொல்லவேண்டாம் என சொல்லியிருப்பார் விஜயகாந்த், சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி விடயத்தை அம்பலப்படுத்திவிட்டனர் (பார்க்க ஜீனியர்விகடன் மற்றும் நக்கீரன்).

என்ன செய்திருக்கலாம் விஜயகாந்த்?

ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து அதில் உங்கள் மனைவியை தலைவராகவும்,மைத்துனரை பொருளாளராகவும், ராமு வசந்தனை செயலாளராகவும், லியாகாத் அலிகான், இப்ராஹிம் ராவுத்தர், இன்ன பிறரை உறுப்பினர்களாகவும் சேர்த்து அந்த அறக்கட்டளைக்கு இந்த மண்டபத்தை தானமாக கொடுத்திருக்கலாம், உங்கள் மண்டபம் எங்கேயும் போகாது அறக்கட்டளை சும்மா ஒரு பேருக்குதானே ஆனால் கருப்பு எம்ஜியார், வள்ளல் பட்டங்கள் கிடைத்திருக்கும், நெடுஞ்சாலைத்துறை மண்டபத்தை கையகப்படுத்தும்போது இடிக்கும் போது ஒரு பெரிய மறியல் போராட்டம் நடத்தி மிக அட்டகாசமான ஒரு ஓப்பனிங்கோடு அரசியலுக்கு வந்திருக்கலாம், தவறவிட்டுவிட்டீர்களே விஜி.

விஜயகாந்தின் விஜயம் ஜெயமாகுமா? மீள்பதிவு

இது முன்பே எழுதப்பட்ட பதிவு இங்கே ஒருமுறை மீண்டும் மீள் பதிவு செய்கின்றேன்.

விஜயகாந்த் அவர்களே தாங்கள் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளீர், மக்கள் மாற்றாத்தை விரும்புவதாக வேறு ஒவ்வொரு கூட்டத்திலும் கூறுகின்றீர்... இதற்கு தினமலரும்,குமுதம் வேறு அது இது என்று உங்கள் ஆதரவு நிலையெடுத்துள்ளன, அவர்கள் சொல்வதெல்லாம் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், இந்த நிலையில் இப்போதுள்ள அரசியல்வாதிகளிடமிருந்து எந்த விதத்தில் மாறுபடுகின்றனர்.

முதலில் புரட்சிக்கலைஞர் என்று ஒரு பட்டப்பெயர் வைத்துள்ளீரே நீங்கள் செய்த புரட்சி என்ன? ஒருவேளை கதாநாயகியின் தொப்புளில் பம்பரம் விட்டதோ! உங்களைவிட 20 அல்லது 25 வயது குறைந்த கதாநாயகியோடு டூயட் பாடுகின்றீரே அதுவா? 45 வயதிற்கு மேலும் இன்னமும் சுவற்றில் கால்வைத்து படங்களில் சண்டை போடுகின்றீரே அதுவா? சற்று விளக்கம் தருகிறீரா?

ஆடம்பர அரசியலில் இருந்து மாறுபடப்போகின்றீரா?

மாவட்ட எல்லையிலிருந்து 100 கார்களில் பவனி வருகிறீர், கட்-அவுட்,சுவரொட்டி எல்லாம் தூள் பறக்கின்றதே உங்களின் விழாக்களில்.

சட்டத்தை மதிது நடக்கப்போகிறீரா? வன்முறைக்கு முடிவுகட்டப்பொகின்றீரா?

பாமகவோடு மோதியபோது உங்களது விசிறிகள் கூட பாமக கொடிக்கம்பங்கள்,அலுவலகங்களை உடைத்தனரே? இவர்களை வைத்துக்கொண்டா வன்முறைக்கு முடிவு கட்டப்போகின்றீர்

நேர்மை மற்றும் ஊழலுக்கு எதிரானவரா?

ஒவ்வெரு படத்திற்கும் பல கோடி வாங்குகின்றீரே சரியான வருமான வரி கட்டுகின்றீரா? உமது பொறியல் கல்லூரி விதிப்படிதான் இயங்க்குகின்றதா? அங்கே அரசாங்கம் அனுமதித்தற்கு மேல் எந்த விதத்திலும் கட்டணம் வாங்கப்படவில்லையா?

குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுவீரோ?
கருனானிதி,மூப்பனார்,இராமதாசு,வாழப்பாடி இராமமூர்த்தி வாரிசுகள் இப்போது அவர்களின் அரசியல் வாரிசாக உள்ளனர், உமது மன்றங்களில் கூட உங்கள் மனைவி மற்றும் மைத்துனரின் ஆதிக்கமாமே? இந்த கிச்சன் கேபினட் அரசியலிலும் தொடருமா?

தனி மனித ஒழுக்கம்?
இது சற்றே அதிகப்படியான எதிர்பார்ப்புதான்,எல்லோருக்குமே தெரியும் அது எந்த அளவுக்கு உள்ளது என்று.

விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளை எதிர் நோக்கும் சகிப்புத்தன்மை?
தங்களை எதிர்த்து நடிகர் சங்கத்தேர்தலில் பெயர் தெரியாத நாடக நடிகையை மிரட்டியது, அவர் 200க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றது அவரை பேட்டிகண்ட நிருபரையும், பத்திரிக்கைகாரையும் பத்திரிக்கையிலிருந்த செல்வாக்கை வைத்து திரைய்லக செய்தி சேகரிப்பு பிரிவிலிருந்து நீக்கியது இவையெல்லாம் உங்களது விமர்சனங்களை எதிர்நோக்கும் சகிப்புத்தன்மையை காட்டுகின்றது.

ஆடம்பர,வன்முறை,குடும்ப அரசியல்,தனிமனித ஒழுக்கம்,விமர்சனங்களை எதிர்நோக்கும் சகிப்புத்தன்மையின்மை, நேர்மை இவைகளில் இப்போதிருக்கும் அரசியல் வாதிகளுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை, எனவே என்ன வித்தியாசம் காட்டபோகின்றீர் என தெரிந்து கொள்ளலாமா?
உங்கள் ஆதரவு நிலை எடுத்திருக்கும் குமுதமும் தினமலரும் உங்களிடமிருந்து என்ன வித்தியாசத்தை கண்டுகொண்டார்கள் என தெரியவில்லை.

கீழ்கண்டவைகளை அரசியலுக்கு வருமுன் சற்று யோசிக்கவும்

சினிமாக்கார்கள் தும்மினாலும் கூட செய்தியாகும்,கூட்டம் கூடும் பூமியிது.... ஆனால் கூட்டமெல்லாம் ஓட்டாகுமா? ராமராஜனுக்கும்,பாக்கியராஜீக்கும் கூடிய கூட்டமெல்லாம் வேறெந்த நடிகருக்கும் கூடியதில்லை... ராமராஜன் 500 ரூபாய்க்கு சிங்கி அடிக்கின்றார், பாக்கியராஜ் கடனில் மூழ்கியுள்ளார்,
நீங்கள் வரும்படி வரும் பொறியியல் கல்லூரி,திருமணமண்டம, திரையரங்கம் என முதலீடு செய்துள்ளீர், இதெல்லாம் நிலைக்க வேண்டும்?

ஊருக்கு நூறு ரசிகன் (இதில் ரஜினி கமல் விஜய் அஜீத் என அவர்கள் ரசிகர்களும் அடங்கும்) என்றாலும் அந்த நூறும் உம் ரசிகர்கள் என எடுத்துக்கொள்வோம்... இந்த நூறு ஓட்டும் உமக்கே என்றாலும் மன்றம் என்று குடும்பத்தை கவனியாமல் அலையும் அவர்களுக்கு எதிராகத்தான் அவர்கள் குடும்ப ஓட்டு விழும்

நீர் கோலத்தில் பாய்ந்தால் அரசியல்வாதிகள் புள்ளியில் பாய்வர், உம்மைவிட அதிக விசிறிகள் பலம் வாய்ந்த ரஜினிக்கு அரசியல்வாதிகளொடு மோதி ஏற்பட்ட தோல்வியை எண்ணிப்பார்க்கவும்,

தமிழக அரசியலில் கட்சியைவிட சாதிக்கு முக்கிய இடம் உண்டு, தங்களுக்கு அந்த பலம் உண்டா? தமிழகத்தை மட்டும் கணக்கில் கொள்ளவும், ஆந்திராவிலிடுந்து இங்கு வந்து ஓட்டு போடமுடியாது!

பத்திரிக்கைகளை நம்புகிறீரா? அய்யோ பாவமே... உங்கள் பேட்டியை நடுப்பக்கத்தில் போட்டுவிட்டு முதல் பக்கத்தில் கும்பகோணம் தீ விபத்திற்கு நீங்கள் அறிவித்த பணம் எங்கே என கேள்வி கேட்பர், ரஜினிக்கு ஆப்பு வைத்தவர்களே இந்த பத்திரிக்கைகள் தான்.

சுனாமி உமக்கு ஒரு நல்ல வாய்ப்பு தந்தது, பாதிக்கப்பட்டபர்களுக்கு உதவி செய்து நல்லப்பெயர் வாங்கியிருக்கலாம்... இருந்தாலும் விவேக் ஓபராய் செய்த உதவிகளை கொச்சைப்படுத்தி அவர்மீது பாய்ந்ததெல்லாம் ஒரு விடயமே இல்லை... தமிழக மக்களுக்கு ஞாபக மறதி அதிகம்.

உமது நிர்வாக திறமை அனைவரும் அறிந்ததே, நடிகர்கள் கோடிகோடியாக சம்பாதித்தாலும் நடிகர் சங்கக்கடனை நடிகர்களிக் கைக்காசை போடாமல் கலைநிகழ்ச்சிவைத்து ரசிகர்களிடமிருந்து வசூலித்து அடைத்ததே நல்ல சான்று.

முதல்வராக முதல்லில் எதிரியை மாற்றுங்கள்... பாமகவும், மருத்துவர் இராமதாடுவும் தமிழக அரசியலில் 3 (அ)4 வது இடத்திலுள்ளனர், அவரோடு மோதினால் உமக்கு அதிக பட்சம் 3 (அ)4 வது இடம் தான் கிடைக்கும், இப்போது உமது படம் பிரச்சினையின்றி வெளியாகவும் உமது பொறியியல் கல்லூரி வியாபாரம் நன்றாக நடக்கவும் செல்வி.ஜெயலலிதாவை எதிக்கவில்லையென்றால் உமக்குக் முதலிடம் கனவு மட்டுமே

உமக்காக ஜெயலலிதா பாமகவின் மீது நடவடிக்கை எடுக்க அவர் ஒன்றும் அரசியல் கத்துக்குட்டி அல்ல, பாமகவின் பலமும் வட மாவட்டங்களிலே அவர்களது கூட்டணியின்றி வெற்றிபெறுவது கடினம் எனவும் அவருக்கு தெரியும்.

கும்பல் கூடினால் 4 பேர் வருங்கால முதல்வர் என கூவினால் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கத்தான் செய்யும், அதுவும் பாமகவின் கோட்டையான கள்ளக்குறிச்சியிலும் திருவண்ணாமலையிலும் கூடிய கூட்டம் இன்னும் 2 பட்டாம் பூச்சிகளை கூடுதலாக பறக்கச்செய்யும்... ஆனால் கூட்டமெல்லாம் ஓட்டாகுமா?

அரசியலுக்கு வாருங்கள் அது உமது உரிமை, ஆனால் நான் வித்தியாசமானவன்,மக்களுக்கு மாற்றம் தரப்போகின்றேன் என ஜல்லியடிக்காமல் வாருங்கள், உங்களுக்காக குமுதமும் தினமலரும் ஜல்லியடித்தாலும் ஒரே ஒரு தோல்வி அவர்களை உமக்கு எதிராக மாற்றிவிடும், ரஜினிக்கும் அதேதான் நடந்தது.

அரசியலில் வாழ்ந்த நடிகர்களைவிட வீழ்ந்தவர்கேளே அதிகம். எனவே கவனம் தேவை

கமலின் சாதீயமும் சமூக பொறுப்பும்

முன்குறிப்பு

சில காலங்களுக்குமுன் கமலைப்பற்றிய ஒரு கட்டுரையை இணையத்திலே படித்தேன்
யார் எழுதியது, சுட்டி என்ன என்று நினைவில்லை, ஆனால் அந்த கட்டுரையாளரின்
கருத்துகளோடு ஒத்து போகின்றேன். அந்த கட்டுரையை தழுவி இந்த பதிவெழுதியுள்ளேன்
அந்த கட்டுரையாளரின் வார்த்தைகளை கூட உபயோகித்துள்ளேன்

கமலின் சாதீயமும் சமூக பொறுப்பும்

கமல் ஒரு சிறந்த நடிகர், போலித்தனமில்லாதவர், விசிறிகளுக்காகத்தான் வாழ்கின்றேன் என நிசத்திலும் நடிக்காதவர், ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றமாக்கி ரசிகர்கள் வெறுமனே விசிலடிச்சான் குஞ்சுகளாக்காமல் (இந்த வார்த்தையை பயன்படுத்தியமைக்கு திரு.மாலன் அவர்கள் மன்னிக்கவும், எனக்கு வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை) சமூகப்பணி செய்ய சொன்னவர், இத்தனையிலும் மற்ற நடிகர்களைவிட உயர்ந்து நிற்கும் அவரிடம் ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய சமூகப்பொறுப்புணர்விருக்கின்றதா??

ஒவ்வொரு மனிதனுக்கும் சமூக பொறுப்புணர்வு வேண்டும் அதிலும் கலைஞர்களுக்கு அதிலும் வெகுசன ஊடகமான திரைப்பட நடிகர்களுக்கு மற்றவர்களைவிட அதிகம் வேண்டும், ஏனெனில் எது திரைப்படம், எது வாழ்க்கை? எது நிழல் எது நிசம்? என பிரித்தறியாத ஒரு சமூகத்திலே திரைப்பட கலைஞர்கள் மிகுந்த சமூக பொறுப்புணர்வோடு இருக்கவேண்டும், பணத்திற்காக ஒரு சமூகத்தை படுகுழியில் தள்ளக்கூடாது

கமல் தன் சாதி உணர்வோடு இல்லை என்கின்றார், சரி ஆனால் அவர் தேவர்மகன் என்ற ஒரு திரைப்படம் எடுத்தார் அதில் அவர் கல்லாவும் நன்றாகவே நிறைந்தது, ஆனால் அந்த திரைப்படம் உருவாக்கிய எதிர்வினைகள் எத்தனை? அதைப்பற்றி எந்த பத்திரிக்கையாவது எழுதியதா? யாரேனும் அதைப்பற்றி பேசினோமா?

தேவர்மகன் திரைப்படத்திலே தேவரினத்தை அவர்களுடைய வாழ்க்கைமுறை பண்புகள் பற்றி காண்பித்துள்ளார் எல்லாம் சரிதான் ஆனால் அந்த படம் தான் தென் மாவட்டங்களிலே ஒரு 6 ஆண்டுகாலம் சாதித்தீயை கொழுந்துவிட்டெரியச்செய்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

தென்மாவட்டங்களிலே சில ஆண்டுகளுக்குமுன் வரை (ஏன் இன்றும் கூட) எல்லா கோவில் திருவிழாக்களிலும், சுப துக்க நிகழ்ச்சிகளிலும் "போற்றிப்பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே" என்ற பாடல் போடப்படாமல் இருந்ததில்லை, இது எத்தனை எத்தனை சாதிக்கலவரங்களுக்கு ஆரம்பமாக இருந்த்திருக்கின்றது. இதற்கு கமல் என்ன செய்வார் அது அவர்கள் தவறு என ஜல்லியடிக்க வேண்டாம், ஒரு மன முதிர்ச்சியடையா சமூகத்திலே (மொத்த தமிழ் சமூகத்தையும் சேர்த்துதான் சொல்கின்றேன்) இப்படி தேவர்மகன் என்ற படைப்பு என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கியுள்ளது. இதிலே கமலின் பங்களிப்பு ஒன்றுமேயில்லையா??

இதே தேவர்மகன் என்கின்ற படைப்பை ஒரு பண்ணையார் மகன் என்றோ அல்லது சாதிபெயர் வைக்காமல் வேறு பெயர் வைத்து எடுத்து வெற்றிபெற்றிருக்க முடியாதா?

தேவர்மகன் என்றெல்ல வன்னியர்மகன், படையாட்சிமகன் என படம் எடுத்தாலும் எதிர்ப்பேன்

தேவர்மகன் திரைப்படம் விசிறிவிட்ட சாதி கலவரம் அடங்கியபின் அடுத்த சாதி வெடிகுண்டை தூக்கிப்போட்டார் கமல் சண்டியர் என்ற பெயரிலே, சண்டியர் என தென் மாவட்டங்களிலே யாரை குறிப்பிடுவது என பரமக்குடி கமல் அவர்களுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பேயில்லை.
அந்த படத்தின் தலைப்பை மாற்ற டாக்டர்.கிருஷ்ணசாமி சொன்னதற்கு எல்லோரும் அவர்மீது பாய்ந்தனர், ஆனால் யாருமே அவரின் பக்கத்திலுள்ள நியாயத்தை புரிந்து கொள்ளவில்லை, இப்பொழுது விருமாண்டி என்ற பெயரிலே அந்தப்படம் வெற்றி பெறாமல் போய்விட்டதா என்ன?? ஆனால் சண்டியர் என்ற பெயரிலேயே அது வெளியாகியிருந்தால் தேவர்மகன் போன்ற பின் விளைவை ஏற்படுத்தாமலிருந்திருக்குமென யாரும் உத்திரவாதம் தரமுடியுமா?

எதற்காக கமல் மீண்டும் மீண்டும் தேவர் சாதியை திரைப்படத்திலே கொண்டுவரப்பார்க்கின்றார், தன் கல்லா நிரம்பினால் போதும் என்ற எண்ணம் தானே?

அடுத்ததாக அவரது படங்களில் பாலியல் பற்றி பலர் பேசிவிட்டனர் எனவே அதைப்பற்றி தொடாமல் அவரது விருமாண்டி படத்தைப்பற்றி பார்ப்போம், அந்த படம் வன்முறைக்கு எதிராகவும் தூக்கு தண்டனை ஒழிப்பு பற்றியும் என ஜல்லியடித்தார், ஆனால் அந்த படத்தை பார்க்கும்போது இப்படி வன்முறை செய்பவர்களை தூக்கில் போடுவது சரிதான் எனத்தோன்றுகின்றது. விருமாண்டியில் வன்முறையை தவிர வேறெதுவுமில்லை, வன்முறை ஒழிப்பைப்பற்றி வன்முறையை காட்டி படம் எடுத்துள்ளார் (அதுவும் உழவு ஏரால் குத்தப்பட்டு கிடக்கும் காட்சியும் சிறை வன்முறை காட்சிகளையும் பார்க்கவே முடியவில்லை) இது எப்படியென்றால் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள சில திரையரங்குகளில் காலை 11.00 மணிகாட்சிய்லே போடுவார்களே சில படங்கள் படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை படுக்கையறை மற்றும் பாலுறவு காட்சிகளாக காண்பித்துவிட்டு படத்தின் இறுதியில் கதாநாயகனுக்கு(?!) எய்ட்ஸ் வந்து இறப்பது போலவோ அல்லது யாராலோ குத்திக்கொல்லப்படுவது போலவா காண்பித்து இப்படியெல்லாம் செய்தால் இறுதியில் இறக்க வேண்டி வரும் என அறிவுருத்துவதற்கு சமமான செயல்தான் விருமாண்டியும்.

எம்ஜியாரின் திரைப்படங்களில் சண்டை காட்சிகள் இருந்தாலும் கத்தியால் குத்தி அப்படியே இரத்தம் பீரிடுவது போலவோ அல்லது சிதைந்து கிடக்கும் மனித உடல்களொ காண்பிக்கப்பட்டதில்லை எதார்த்தம் என மனதி பாதிக்கும் காட்சிகளை காண்பித்ததில்லை, அதுவும் விருமாண்டியில் கதாநாயகி அபிராமி கை கால்களை உதைத்துக்கொண்டு கண்பிதுங்கி நாக்கு தள்ளிபோய் தூக்கு மாட்டிக்கொள்ளும் காட்சி என்னையே படு பயங்கரமாக பாதித்துவிட்டதென்றால் அதை பார்க்கும் குழந்தைகள் மற்றவர்களேல்லாம் எப்படி பாதிக்கப்படிருப்பர்.

"அப்படி போடு போடு போடு" என்ற பாடலை தாளம் தப்பாமல் வரி தவறாமல் பல குழந்தைகள் பாடுகின்றனவே, சித்தப்பா விஜய் அங்கிள் சவால் சொல்றாரு(சமீபத்தில் வந்த ஏதோ ஒரு வசனம்) என 3 வயது குழந்தை சொல்லும் போதும் திரைப்படம் இந்த குழந்தைகளை எந்த அளவு பாதித்துள்ளது என விளங்கும், ஏன் ஒரு நல்ல தமிழ் பெயர் வைத்து அதை வெகுசனத்திற்கு எடுத்து செல்வதில் என்ன தவறிருக்கின்றது?
கமலுக்கு தமிழில் பெயர்வைத்தால் என்ன குறைந்துவிட்டதாம்?


இதையெல்லாம் பார்க்கும்போது நிச்சயமாக கமலுக்கு சமூக பொறுப்புயில்லை என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது, இனியாவது தன் கல்லா நிரம்புவதை மட்டும் எண்ணாமல் சமூகப்பொறுப்பணர்வோடு நடந்துகொள்வாரா கமல்??

இன்று இரவு 8.05

இன்று இரவு 8.05க்கு என்ன விசேடம்

2005 2005 2005

--நன்றி டேனியல்

பதிவு எழுதி நீண்ட நாட்களாகின்றது அதுதான் இப்படி.

மனைவியின் காதலன்

"என்னங்க ஹனிமூன் வந்தா ரூம்லயே இருக்கனுமா?, வாங்க ஈவ்னிங் போட்டிங் போகலாம்"

"எனக்கு இந்த ஊட்டியில போட்டிங் னாலே பழைய ஞாபகம் வருது"

"அப்டியா? என்ன ஞாபகம்"

"நான் காலேஜ் படிக்கும் போது டூர் வந்தப்ப ஒரு பொண்ணுக்கு போட்டிங் போற இடத்துலதான் புரப்போஸ் பண்ணேன்"

"ஓ... இன்ட்ரஸ்டிங், அப்புறம் என்ன ஆச்சி?"

"நான் ஊட்டியில புரப்போஸ்பண்ணதுக்குக்கு பெங்களூர்ல தான் ஓ.கே சொன்னா, அன்னைக்குதாண் டூர் லாஸ்ட் டே"

"ம்... அப்புறம்"

"அப்புறம் என்ன பைனல் இயர் ஃபுல்லா லவ் பண்ணோம், அப்புறம் காலேஜ் முடிஞ்ச உடனே அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடிச்சி"

"அப்புறம் நீங்க தாடி வச்சி தேவதாசா சுத்தினிங்க ரைட்"

"சீ அதெல்லாம் இல்ல, அப்புறம் தான் இந்த தேவதை எனக்கு கிடைச்சது"

"தேவதை அது இதுன்னு ஐஸ் வைக்காதிங்க, சரி அந்த பொண்ணு பேர் என்ன?"

"சுஜாதா, சுஜான்னு கூப்பிடுவேன்"

"இப்போ எங்க இருக்காங்க?"

"பெங்களூரல தான், அவ ஹஸ்பண்ட்டோட இருக்கா"

"ம்... விட்டா சேரனோட ஆட்டோகிராப் மாதிரி உங்களுக்கு ஒரு ஆட்டோகிராப் எடுக்கலாம் போல"

"ஹலோ... சேரன் படம் 3 மணிநேரத்துல முடிஞ்சிடும், என் படம்லாம் 10 மணி நேரம் ஆகும்"

"அடப்பாவி... உண்ணைய...."

"சரி டா உனக்கு ஏதும் இந்த மாதிரி ஆட்டோகிராப் இருந்ததா?"

"சீ... இல்ல, பட் ஒரு 4,5 பசங்க புரப்போஸ் பண்ணியிருக்காங்க"

"சரி அதுக்கு நீ என்ன பண்ண?"

"ஒன்னும் ரெஸ்பான்ஸ் பண்ணல, அப்படியே விட்டுட்டேன் "

"பிடிக்கலையா யாரையும், சும்மா சொல்லு"

"ம்ஹீம்"

"சும்மா சொல்லுடா கண்ணு, ஒரு இன்பாக்சுவேஷன் கூடவா இல்ல"

"ம்... அப்படினா என்னோட +2 படிச்சப்ப பிரகாஷ்னு ஒருத்தவன் புரப்போஸ் பண்ணான், அவனைப்பிடிக்கும், பட் லவ்லாம் இல்ல, சும்மா பிடிக்கும் அவ்ளோதான்"

"அப்புறம் பிரகாஷை மீட் பண்ணவே இல்லயா?"

"ம்.. 4 வருஷத்துக்கு முன்னால நான் TCS வாக்கின் இன்டர்வியூ போனப்ப பார்த்தேன், பட் அப்புறம் சுத்தமா பார்க்கலை"

"சரி வா போட்டிங் கிளம்புவோம்..."

------------------------------------------------------
(ட்ரொய்ங்..... டொன்டடன்.... அல்லது ஒரு ஆண்டுக்குப்பிறகு இப்படி எது வேணா போட்டுக்குங்க மேட்டர் என்னன சீன், லொக்கேஷன் லாம் மாறுது)

"கிளம்பிட்டியா டா"

"இல்லங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இதே வந்துட்டேன்"

"ஃபர்ஸ்ட் வெட்டிங் ஆனிவர்ஸரி, கொஞ்சம் சீக்கிரமா வெளிய போயி, இந்த ஈவ்னிங்க ரொமான்டிக் ஆக்கலாம்னா இப்படி லேட் பண்ற"

"கொஞ்சம் வெயிட் பண்ணுப்பா, இதோ வந்துட்டேன்"

"சீக்கிரம் வா"

"இதோ வந்துட்டேன், அப்பா ஏன் இப்படி கத்துறிங்க"

"ம்... அந்த பிரகாஷ் ரொம்ப லக்கி"

"ஏன் ஏன் ஏன்???"

"இல்ல அவர் எஸ்கேப் ஆயிட்டாரு, நான் மாட்டிகிட்டேனே உன்கிட்ட"

"உங்கள... தலையிலயே ஒன்னு போட்டன்னா!"
"அப்படி பாத்தா அந்த சுஜா ரொம்ப ரொம்ப லக்கி, அவங்க எஸ்கேப் ஆயிட்டாங்க, நான் இப்போ அவஸ்தை படுறேன்"

"உன்னைய இப்ப பாரு"

"அய்யோ கிள்ளாதிங்க வலிக்குது, இப்போ கையவிடலை கடிச்சிடுவேன்"

"ஆ...., வெறி நாய் எப்படி கடிக்கிறா பாரு...."

"சரி வண்டிய வெளியில எடுங்க, நான் கதவை லாக் பண்ணிட்டு வரேன்"

------------------------------------------------------------------------------------------------(ட்ரொய்ங்..... டொன்டடன்.... அல்லது சில ஆண்டுகளுக்குப்பிறகு இப்படி எது வேணா போட்டுக்குங்க மேட்டர் என்னன முன்ன சொன்னதுதான் சீன், லொக்கேஷன் லாம் மாறுது)

"என்னங்க நம்ம பையன் பர்த்டே பார்ட்டிக்கு ஹோட்டல் புக் பண்னிட்டிங்களா?"

"இந்திரா நகர் சாலிமர் ஹோட்டல்ல தான் பார்ட்டி ஹால் புக் பண்ணியிருக்கேன்,
ஆனா இன்னும் புட் ஆர்டர் தரல, எத்தனை பேர் வருவாங்கனு எண்ணிக்கிட்டு அப்புறம் தரலாம்னு வந்துட்டேன்"

"ம்... சரி, எத்தனை பேரு இன்வைட் பண்ண போறிங்க"

"ம்.. அப்பா,அம்மா, தங்கச்சி,மாப்பிள்ளை, என் ஆபிஸ் கொலீக் ஏழு பேரு அவங்க ஒய்ப், அப்புறம் சுஜா, சுஜா ஹஸ்பண்ட்"

"உன் சைட்ல இருந்து எத்தனை பேரு இன்வைட் பண்ண போற"

"அம்மா,அப்பா,அண்ணா,அண்ணி, அப்புறம் அபி, அபி ஹஸ்பண்ட்"

"ம்..."

"ஏங்க ஒரு விஷயம் சொல்லனும்னு நினைச்சேன்"

"என்ன சொல்லு"

"காலையிலதான் அபி சொன்னா, பிரகாஷ் இப்போ பெங்களூர்லதான் இருக்காராம், ஆரக்கிள்ல ஜாயின் பண்ணியிருக்காராம்"

"அப்படியா சரி..."

"பிரகாஷையும், பிரகாஷ் ஒயிப்பையும் பர்த்டே பார்ட்டிக்கு கூப்பிடலாம்"

"ஏன் உன் பழைய காதலை புதுப்பிச்சிக்க பார்க்குறியா?"

"என்ன சொன்னிங்க? என்ன என்ன சொன்னீங்க"

"என் பையன் பர்த்டே பார்ட்டியை வச்சி உன் பழைய காதலை புதுப்பிச்சிக்க பார்க்குறியா?"

ஆயிரம் கத்தியை நெஞ்சில் ஒரே நேரத்தில் செருகியது மாதிரி இருந்தது...

பின்குறிப்பு
சில ஆண்டுகளுக்கு முன் வாரமலரில் இது உங்கள் இடம் பகுதியில் பிரசுரமாயிருந்த ஒரு வாசகரின் கடிதத்தை தழுவி எழுதப்பட்ட கதை

நெடுஞ்சாலையில் ஒரு நாய்க்குட்டி

விடுமுறைக்கு வீட்டுக்கு காலையிலதான் வந்தோம்,
மதியம் சாப்பிட்டுட்டு என் தர்மபத்தினி தூங்குறாங்க,
அவங்களுக்கு பர்சேஸ் பர்சேஸ்னு மூணு நாளா முஸ்தபா சென்ட்டரை சுத்தின அசதி,
பயணக்களைப்பு இருந்தாலும் இன்னைக்கு ராஜ் அ பார்த்துடனம், இல்லைனா இருக்கப்போற ஒரு வாரத்துல இரண்டு நாளைக்கு மாமியார் வீட்டுக்கும், இரண்டு நாளைக்கு தங்கச்சி வீட்டுக்கும் போயிட்டா அப்புறம் டைம் கிடைக்கிறது கஷ்டம்.

“அம்மா கடலூர் வரை போயிட்டு வந்துடறேன்”
“ஏன்டா நீ வந்தா சும்மா இருக்க மாட்டியே உடனே சுத்தப்போற, போயி தூங்குடா”
அவங்களுக்கு எங்க திருட்டு தம் அடிக்கப்போறனோனு கவலை
“இல்லமா போயிட்டு பசங்களை பார்த்துட்டு வந்துடறன்”
“சாயந்திரம் காபிக்கு வந்துடு, நீ பாட்டுக்கும் சுத்திட்டு நைட்டு லேட்டா வராத”

“சரி மா” வண்டிய எடுத்தன்

ராஜோட 3 வயசு பையன், ம் இப்ப 4 வயசு இருக்கும், அவன் அக்காவுக்கும் புடிக்குமேனு சாக்லேட் வாங்கினனே எடுத்துவச்சனானு பிரண்ட்டு கவரை தொட்டு செக் பண்ணிக்கிட்டேன் நல்ல வேளை மறக்கலை.

இப்ப போனாதான் ராஜ் பிரஸ்ல கூட்டம் இருக்காது,
அவன்கிட்ட ப்ரீய பேசலாம், ஆமா ராஜ் பிரஸ்ல ஒரு பொன்னு வேலை பார்த்தாளே ஆக்ட்ரஸ் “அசின்” மாதிரி இருப்பாளா? அவ இன்னும் அங்கதான் இருப்பாளா “டேய் நீ ராஜ்ஜை பார்க்கப்போறியா இல்ல அந்த பொண்ணையா?” இந்த மாதிரி தேவையில்லாமா அடிக்கடி ஒரு குரல் சைட்ல கேட்குது, ஒரு நாள் அது கழுத்த திருகனும், ஒரு போன் பண்ணிட்டு போகலாம், இல்ல நேரா போயி அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சிய குடுக்கலாம். போன வருஷம் விடுமுறைக்கு வந்தப்போ அவன் பிரஸ்க்கு போயி பேசிக்கிட்டு இருந்தப்ப அரைமணி நேரத்துலயே அவனும் அந்த அசின் பொண்ணும் கண் ஜாடை காட்டுறதும், சாக்கிட்டு சாக்கிட்டு நையாண்டியா பேசனதலயுமே தெரிஞ்சிடிச்சு ஏதே மேட்டர் இருக்குனு.

நமக்குதான் இதை தெரிஞ்சிக்கலனா மண்டை வெடிச்சிடுமே, வாடா ராஜ் போயி ஒரு தம் போட்டுட்டு வரலாம்னு டீக்கடைக்கு போயி 2 டீ ஆர்டர் பண்ணி ஒரு தங்கராஜா வடிக்கட்டி புகையிலை சுருட்டை (அதாங்க கோல்ட் ஃபிளேக் பில்ட்டர் கிங்ஸ்) பத்தவச்சி அப்படியே அவன் வாயைகிளறினேன்.

“என்னடா நடக்குது, பிரஸ்லயே ரூட் போடுறியா? அந்த பொண்ணோட நீ பேசுற பேச்சுலாம் ஒரு மாதிரியா இருக்கு”
“இல்ல மாப்பிளை நானா ஒன்னும் பேசலை, ஒன்னும் பண்ணலை, அந்த பொண்ணாதான் ஆரம்பிச்சா, சரி போறவரைக்கும் போகட்டும்னு விட்டுட்டேன் அப்படியே போயிக்கிட்டிருக்கு”
“இப்போ எந்த அளவுள இருக்கு”
“ம்.... பெங்களூர் டூர் போயிட்டு வந்த அளவுள இருக்கு”
“அடப்பாவி.......”
உடனே உள்ளிருந்து ஒரு குரல் “டேய் அட்வைஸ் பண்ணு அட்வைஸ் பண்ணுடா”னு கத்துது,

“இங்க பாரு உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயி இரண்டு புள்ளைங்க வேற இருக்கு வேண்டாம் எதும் ஏடா கூடமா ஆயிடப்போகுது, நிறுத்திக்கோ”

“அதான் சொல்றன்ல, நானா எதும் ஆரம்பிக்கலை, அந்த பொண்ணாதான் விருப்பமா பேசுனா,ஆரம்பிச்சா, இதுல என் தப்பு என்ன?”

“இல்லடா, இப்போ ஹைவேஸ்ல வேகமா கார்ல போற, திடீர்னு ஒரு நாய்க்குட்டி குறுக்க ஓடி வந்துடுத்து, அது உன் தப்பு இல்லதான், அத அடிச்சிட்டு போனா யாரும் கேட்கப்போறது இல்லதான், இருந்தாலும் பிரேக் போடுவயில்ல, அதுமாதிரிதான் ”

பேசிக்கிட்டு இருக்கும்போதே சிங்கப்பூர்ல அவனுக்கு வேலை கிடைக்குமா அது இதுனு பேச்சை மாத்திட்டான், அவன் கில்லாடி எப்படி பேசனும், எப்படி மாத்தனும்னு தெரியும்.

இப்போ எந்த ஸ்டேஜ்ல இருக்குனு தெரியலை அவன் மேட்டரு.
எங்க அவன் கிட்ட பேசியே ரொம்ப நாள் ஆகுது, ஒரு ஒரு மாசமும் வீட்டுக்கு பேசறதுக்கு காலிங்கார்டுக்கே 200 வெள்ளி செலவாகுது, இதுல எங்க பிரண்ட்ஸ்களோட பேசுறது.

அவன் பிரஸ்க்கு முன்னாடி வண்டிய நிறுத்தி உள்ள போனா அவனைக்காணாம்.

கடைப்பையன் தான் இருந்தான்

“அண்ணே வாங்க, எப்போ வந்திங்க ஊர்லருந்து”
“காலையிலதான் வந்தேன், எங்க போயிருக்கான் ராஜ்”
“ராஜ்ண்ணன் இல்ல”
“வேற யாரு கடையில?”
“சார் தான் இருந்தாரு, இப்போதான் டாக்டரை பார்க்க போயிருக்காரு”
சார் வேற யாருமில்லை ராஜோட அப்பாதான், சக்கரை வியாதிக்காரரு,
தாசில்தாரா இருந்த்து ரிட்டையராயிட்டாரு

“அவர் ஏண்டா இங்கலாம் வராரு உடம்பு சரியில்லாமா?”
சொல்லிக்கிட்டே அப்படியே பிரஸ்ஸை ஒரு நோட்டம் விட்டன்
அந்த “அசின்” இருக்கானு, ம்... காணாம், வேலையை விட்டு நின்னுருப்பாலா?

“இல்லண இப்போ பிரஸ்சை சார்தான் பார்த்துக்குறாரு, ராஜண்ணன்”

“ஏண்டா வர்ரது இல்ல?”


“உங்களுக்கு மேட்டர் தெரியாதானே?”

இந்த பொண்ணையும் காணாம், அவனும் இல்ல, எங்கயாவது அந்த பொண்ணோட ஓடிப்போயிட்டானானு கணக்கு போட்டது மனசு.


“இல்ல சொல்லு என்ன மேட்டரு?”

இங்க வேலைக்கிருந்த அக்கா மண்ணைண்னை ஊத்திக்கிட்டு செத்துட்டாங்க,
அதிலருந்து ராஜ் அண்ணன் பிரஸ்க்கு வரது இல்ல

விபரீதம் புரிந்தது எனக்கு
“ஏண்டா மண்ணைண்னைய ஊத்திக்கிச்சி”
“அந்த அக்காக்கும் இவருக்கும் கணக்ஷன், ரெண்டுபேரு வீட்லயும் தெரிஞ்சி பிரச்சினையாயிடுச்சி”
“ஓ இப்போ எங்கடா இருக்கான்”

“வீட்ல இருப்பாருனா”

“சரி , சார் வந்தா சொல்லு நான் வந்துட்டுபோனன்னு”

வண்டியை நேரா ராஜ் வீட்டுக்கு ஓட்டினேன்

“வாப்பா ” சுரத்தே இல்லாமல் கூப்பிட்டார் ராஜ் அம்மா

“ம் வரன்மா”

“வீட்டில, அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க ”

“ம் நல்லா இருக்காங்க”

வீடே மயான அமைதியிலிருந்தது,

“சாந்தி டீ போடுமா. சந்திரன் வந்திருக்கு”

“ராஜ் எங்கமா?”

“ம் இருக்கான், முன் ரூம்ல தான் இருக்கான், மூணு மாசமாச்சு, அந்த ரூம்லயேதான் முடங்கி கிடக்குறான், என்ன கேள்விப்பட்டியா?”

“ம்... விடுங்கமா போக போக தெளிஞ்சிடுவான்”

“எல்லாம் எங்க தலையெழுத்து, இப்படிலாம் கேவலப்படணும், பாவப்படனும்னு”

“உணக்கு முன்னாடியே தெரியுமா?”

“இல்லமா இப்போதான் பிரஸ்ல பையன் சொன்னான்”

“அதில்ல அந்த பொண்ணுக்கும் ராஜுக்கும் தொடுப்பு இருந்ததுனு”

“இல்ல, ஜாடைமாடையா தெரியும்”

“அடப்பாவிகளா, எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு, எங்குடும்பத்துக்கு விஷயம் முத்துனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, என்கிட்ட ஒரு வார்த்தை அவன் இப்படிபண்றான் பாத்துக்குங்கனு சொல்ல கூடாதா நீ”

ஒன்றும் சொல்லாமல் குற்ற உணர்ச்சியில் மவுனித்திருந்தேன்...

ராஜின் மனைவி 2 டம்ளர் காபி எடுத்துக்கிட்டு வந்து, ஒன்றை என்னிடம் கொடுத்துவிட்டு முன் அறையிலிருந்தவனிடம் இன்னொன்றை கொடுத்தார்,

காபி டம்ளரோடு உள்ளே சென்று அவனை பார்த்தேன்.

“வா எப்ப வந்த” சுரத்தையேயில்லாமல் கூப்பிட்டான்

அங்கிருந்த அசாதாரணமான அமைதியை கலைக்கலாம்னு.

“சரி விடு ராஜ் நடந்ததையே நினைச்சிக்கிட்டிருந்தா எப்படி, தெளிவாயி வேலையப்பாரு”

என் முகத்தைக்கூடப்பார்க்காமல் தலையை குனிந்தவாறூ இருந்தான்.

“சரி விடு”

“இல்லடா தப்பு பண்ணிட்டேன்”

“பாவி பாவி அந்த பொண்ணு வாழ்க்கையையும் உன் பொண்டாட்டி வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துட்டியேடா” னு மனசுக்குள்ள திட்டிக்கொண்டே
“இங்க பாரு நடந்தது நடந்துடுச்சி, இதுல உன்மேல ஒன்னும் பெரிய தப்பு இல்ல”

“இல்லடா நிச்சயமா பாவம் பண்ணிட்டேன்”

“இல்லடா, இப்போ ஹைவேஸ்ல வேகமா கார்ல போற, திடீர்னு ஒரு நாய்க்குட்டி குறுக்க ஓடி வந்துடுத்து, அடிச்சிட்ட அதுக்கு கொஞ்சநேரம் வருத்தப்பட்டுட்டு விட்டுடனும், இனிமே ஜாக்கிரதயா வண்டிய ஓட்டிக்கிட்டு போகனும், அதுமாதிரிதான் ”

“இல்லடா உதாரணம் ரொம்ப தப்புடா, ரொம்ப தப்பு, நான் பண்ணது ஒன்னும் ஹைவேஸ்ல நாய்க்குட்டிய அடிச்சிட்டு போறமாதிரி சாதாரண விஷயம் இல்ல”

“அந்தப்பொண்ணையே நம்பி இருந்த அவங்க அப்பா,அம்மா உடைஞ்சிட்டாங்க”
“எங்க விஷயம் தெரிஞ்சி அவ அப்பா அம்மா என்னையை கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க, என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சி அவ மாட்டிகிற அளவுக்கு போயிட்டா, அன்னிக்கி அவளை காப்பாத்துனதே பெரியவிஷயம்”

“ம்...”

“ஒரு நாள் சரி ரீஸ்டாபிஸ் போயி கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டேன்”

“என்கிட்ட சண்டை போட்டதுமில்லாம என் பொண்டாட்டி அவ கிட்ட தினம் தினம் அழுதுருக்கா”

“ம்...”

“இதுல வேற என் பையன் பிரஸ்க்கு வர்ரப்ப ஆண்டி ஆண்டினு அந்த பொண்னோட பாசமா இருப்பான்”

“ஒரு நாள் என் பொண்டாட்டி நீங்க விலகலைனா பசங்களையும் கொன்னுட்டு நானும் மாட்டிப்பேன்னு அழுதிருக்கா! ”

“அவங்க வீட்டில அப்பா,அம்மா கல்யாணம் பண்ணிக்கோடினு டார்ச்சர், என் பொண்டாட்டி மாட்டிப்பேன்னு டார்ச்சர், மனுஷி மண்ணைண்னைய ஊத்திக்கிட்டு போயிட்டா”

“அன்னிக்கு என் பையன் ஆண்டி ஆண்டினு அழுதான், இப்பவும் ஆண்டி ஆண்டினு பேசும்போது எனக்கு சுருக் சுருக்குனுது ”

“சரி அதுக்காக இப்போ என்ன பண்றது, தெளிஞ்சிவந்து பிரஸ்ச பாரு, உங்கப்பா கஷ்டப்படுறாரு பாரு”

“இப்போதைக்கு என்னால ஒன்னும் பண்ண முடியாது நடக்கறது நடக்கட்டும்”

“சரி நான் கிளம்பறன் அப்புறம் வரன்டா”

கொதிக்க கொதிக்க காபி குடிப்பவனின் காபி ஒரு ஓரமாக ஆறிப்போயிருந்தது

வண்டிய எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வரும்போது மனசு கணத்து இருந்தது,

அன்னைக்கே ஹைவேஸ், நாய்க்குட்டினு எங்கயோ படிச்சதையெல்லாம் உதாரணமா சொல்லாம நறுக்குனு நேரடியான பிரச்சனையை சொல்லி கட் பண்ண சொல்லியிருந்திருக்கனும்,

ஆமா நாம அப்படியே சொன்னா கூட கேட்கப்போறானா அவன்...... எல்லாம் அவன் தலையெழுத்துனு நினைச்சிகிட்டே

வண்டிய வீட்டில நிறுத்தனப்போ

“என்னடா அதிசயமா சொன்ன மாதிரி காபிக்கு வந்துட்ட”

“உடனே எங்கயும் சுத்த கிளம்பிடாதா உன்னைய பாக்க அத்தை வர்றதா சொன்னாங்க......”

“ம்...சரி. மா..எங்கயும் போகலை” னு அடுத்த வேலைய பார்க்க ஆரம்பித்தேன்

பின் குறிப்பு

முதல்முறையாக ஒரு சிறுகதை முயற்சி செய்துள்ளேன்,
நிறை குறைகளைதெரிவியுங்கள்.

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள்-ஒரு அலசல்- 3

இந்த பதிவில் இராமதாசுவின் வாரிசு அரசியல் பற்றி
அலசுவோம். இதே தலைப்பில் இதற்கு முந்தைய
பதிவுகளின் சுட்டி இங்கே.
இதுவரை அதை படிக்காதவர்கள் அதை
படித்துவிட்டு வரவும்.

அலசல் - 1

ஒரு அலசல் - 2


இடைக்குறிப்பு
இந்த பதிவுகள் இராமதாசுக்கு புனிதர் பட்டம் கட்டவோ
அல்லது அவர் செய்வது செய்தது எல்லாம் சரியென
வக்காலத்து வாங்கவோ எழுதப்படுவது இல்லை.
வேறு எந்த அரசியல் தலைவர் மீதும் நடத்தப்படாத
திட்டமிட்ட ஒரு ஊடக வன்முறை பாமகவின் மீதும்
இராமதாசுவின் மீதும் நடத்தப்படுகிறது
அது ஏன் என்பதற்காகத்தான் இந்த அலசல்

வாரிசு அரசியல்
மருத்துவர் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு
மகனை மத்திய அமைச்சராக்கியது.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் கூறும் முன் சற்று கடந்த கால
நிகழ்வுகளையும் நினைவு படுத்த வேண்டும்.

எம்.ஜி.ஆர்,அன்பழகன்,நெடுஞ்செழியன் இன்னும்
பல மக்கள் செல்வாக்கு படைத்த அடுத்தநிலை
தலைவர்கள் இருக்கும் போதே மு.க.முத்து என்ற
தனது மகனை அரசியல் வாரிசாக புகுத்தினார்
திரு.கருணாநிதி, அதனால் திமுக வே பிளவுபட்டது
அதன் பிறகு வைகோ என்ற மக்கள்,தொண்டர்கள்
செல்வாக்கு பெற்ற அடுத்த கட்ட தலைவர் இருக்கும் போது
மு.க.ஸ்டாலின் என்ற அடுத்த மகனை வாரிசாக்கினார்
அதனால் மீண்டும் ஒருமுறை பிளவுபட்டது அந்த இயக்கம்,
எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறிய போது
ஒரு மாவட்ட செயளாளர் கூட அவருடம் செல்லவில்லை,
ஆனால் வைகோ வெளியேறியபோது 8 மாவட்டசெயலாளர்கள்
அவருடன் வேளியேறினர் இதிலிருந்தே வைகோ அடுத்த தலைவர் பதவிக்கு மனதளவில்
தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார் என புரிகிறது.

ஆனால் இப்படிபட்ட அடுத்தகட்ட தலைவர்கள் பாமகவில் இல்லை. அரசியல் வாரிசை அடையாளம் காட்டாமல் போனால் அந்த தலைவனுக்கு பிறகு அந்த இயக்கம் பிளவுபட்டு அழிந்துவிடும் (அதை தான் பாமகவிலும் நடக்க வேண்டும் என பலர் கனவுகான்கின்றனர்)

எப்படிப்பட்ட நிலையில் அன்புமணி அரசியலுக்கு வந்தார்?

மருத்துவர் இராமதாசின் முதுகைப்பார்த்தால் அதில் எதிரிகளால் வாங்கிய குத்துக்களைவிட சொந்த கட்சியின் தலைவர்களால் வாங்கிய குத்துகளே அதிகம்.

1995 என எண்ணுகிறேன் பண்ருட்டி இராமச்சந்திரனையும் தனக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார், மருத்துவர் இருக்கும்போதே பாமகவை கைப்பற்ற என்னி
1995லே பாமாகவை பிளந்தார், அது மருத்துவரின் முதுகிலே சொந்த கட்சிகாரரால் வாங்கிய முதல் குத்து 1998 வரை பாமகவில் இராமதாசுவிற்கு அடுத்த நிலையில் இருந்தவர் பேராசிரியர் தீரன்.(இவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை, இவருக்கென்று அல்ல பாமகவில் எல்லாமே மருத்துவர்தான் அவர்பின்தான் வன்னிய இனம் வேறு யார் பின்னும் இல்லை), அடுத்த அரசியல் வாரிசாக மருத்துவரால் அடையாளம் காட்டப்பட்டவர்.

பேராசிரியர் தீரனுக்காக பல செயல் தளபதிகளை இழந்தார் மருத்துவர், அதிமுக விற்கு ஒரு ஆண்டிப்பட்டி தொகுதி மாதிரி, பாமகவிற்கு ஒரு ஆண்டிமடம் தொகுதி, 1991 தேர்தலிலே ராஜீவ் படுகொலை அலையிலும் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலே தான் தோல்வியடைந்தது பாமக. அந்த தொகுதியை பாமகவின் கோட்டையாக மாற்றியது ஞானமூர்த்தி என்ற பிரமுகர், அவருடைய உழைப்பாலும்,பெரும்பான்மையாக இருந்த வன்னியமக்களாலும் ஆண்டிமடம் பாமகவின் நிச்சய வெற்றி தொகுதி.

எந்த கூட்டணியும் இல்லாமல் 1996 தேர்தலை சந்தித்தபோது பேராசிரியர் தீரன் வெற்றிபெறவேண்டும் என தொண்டர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையில் திரு.ஞானமூர்த்தியை குறிஞ்சிப்பாடி தொகுதிக்குமாற்றிவிட்டு திரு.தீரன் அவர்களை ஆண்டிமடத்திலே போட்டியிடச்செய்து சட்டமன்ற உறுப்பினராக்கினார், இதனால் ஞானமூர்த்தி என்கிற செயல் தளபதியை இழந்தார், இன்றும் தன் சொந்த செல்வாக்கினால் ஆண்டிமடத்திலே ஒரு முக்கிய அரசியல் புள்ளியக உள்ளார் திரு.ஞானமூர்த்தி.

1998ம் ஆண்டு தேர்தலிலே அதிமுக வோடு கூட்டணி வைப்பதை எதிர்த்து கட்சியை உடைத்தார் பேராசிரியர் தீரன். அது வெளியே சொல்லப்பட்ட காரணம், உண்மையான காரணகர்த்தா அப்போது முதல்வராயிருந்தவர், கைமாறிய பணம்(பணம் பற்றி சொல்வழிக்கேள்வி,பத்திரிக்கை செய்திகள் மட்டுமே, ஆதாரம் இல்லை எம்மிடம்) . பேராசிரியர் தீரனால் மருத்துவரின் முதுகில் இரண்டாவது குத்து.

அதன்பின் தலித்.இரா.எழில்மலை. முதல்முறையாக மத்திய அமைச்சர் பதவி கிடைத்தபோது இவருக்குத்தான் வழங்கப்பட்டது, தீரனுக்குப்பின் இவர்தான் மருத்துவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்,இவர் பாமகவின் சர்பாக அமைச்சரானவர், ஆனால் வேறுவிதமாக செயல்பட்டார் (இதைப்பற்றி இன்னும் விரிவாக சொல்லவிரும்பவில்லை) இவருக்கு 1999 தேர்தலிலே போட்டியிட அனுமதிக்கப்படவில்லை, தலைமைக்கும் இவருக்கும் கருத்துவேறுபாடு, அதனால் என்ன அமைச்சராக்கிய கட்சியை விட்டு ஓடவேண்டுமா என்ன? ஆனால் அதிமுகவிற்கு ஓட்டமெடுத்தார். இது மூன்றாவதாக முதுகில் விழுந்த குத்து.

திரு.முருகவேல் தென் மாவட்டத்திலே செயல்திறன் மிக்க ஒரு தலித் தலைவர்,2001 தேர்தலிலே அவரை சட்டமன்ற உறுப்பினர் ஆக்க வேண்டுமென பலமில்லாத தென் மாவட்டத்திலிருந்து அவரை வடமாவட்டத்திலுள்ள வந்தவாசி தொகுதியிலே நிறுத்தி சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார். சிவகாமி என்ற மற்றொரு ச.ம.உ. இவரும் வன்னிய சமுதாயத்தவர் அல்ல ஆனால் இவரும் கட்சியை விட்டு விலகி அதிமுகவிலே சேர்ந்துவிட்டார்,இப்போதும் பாமகவினால் கிடைத்த ச.ம.உ. பதவியை உதறாமல்.

எத்தனை எத்தனை குத்துகள் முதுகிலே... அடுத்த தலைவராக அடையாளம் காட்டியபோதும் மருத்துவர் இராமதாசு இருக்கும் போதே கட்சியை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென அத்தனை பேரும் நினைத்தது வேதனை. திரு.பண்ருட்டியார், திரு.தீரன், திரு.தலித்.இரா.எழில்மலைக்கு பிறகு கட்சியில் அனைவருக்கும் அறிமுகமானவர் யாரும் இல்லை. மிகப்பெரிய வெற்றிடம், யாரை வாரிசாக்குவது?

இப்பொழுது திரு.வீரபாண்டி ஆறுமுகத்தையோ, திரு.ஆற்காடு வீராசாமியையோ, திரு.கோ.சி.மணியையோ அல்லது திரு.பொன்முடியை யோ திமுகவின் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டினால் எத்தனை திமுகவினர் ஏற்றுக்கொள்வர், இதுவே வைகோ அடையாளம் காட்டப்பட்டிருந்தால் நிச்சயம் பிரச்சினை இல்லை, வைகோபோல் செல்வாக்குபெற்ற அடுத்த நிலை தலைவர் இல்லை, யாரையேனும் அரசியல்வாரிசாக காட்டினால் கட்சியில் வீண்குழப்பம். தாமாக விலே மூப்பனாருக்குப்பின் பீட்டர் அல்போன்சோ, சோபா வோ, ஜெயந்தி நடராசனோ தலைவராயிருந்தால் அடுத்தவர்கள் விட்டிருப்பார்களா? கட்சியே இல்லாமல் போயிருக்கும் அதே சமயம் அரசியல் வாரிசை அடையாளம் காட்டவில்லையென்றால் அந்த தலைவனுக்கு பிறகு அந்த கட்சி சிதறிவிடும், பலரின் துரோகத்திற்குப்பின் இராமதாசு எடுத்த முடிவுதான் அன்புமணியின் அரசியல் அடையாளம் இதற்கு பாமகவின் 2ம் நிலைத்தலைவர்கள் ஆதரவும் உண்டு, அது சரி இதை எப்படி வன்னிய இனம் ஏற்றுக்கொண்டது, அன்புமணியின் அரசியல் பிரவேசத்தை வைத்து ஒரு பிரச்சினை உருவாகி அதனால் பாமக என்ற அரசியல் கட்சி சிதறி அதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அரசியல் வலிமையை, அரசியல் அங்கீகாரத்தை இழக்கத்தயாராக இல்லை வன்னிய இனம்.

இது நன்றாகவே புரிந்தும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு பாமக அழியாத என ஏங்கிக்கொண்டுள்ளனர் பத்திரிக்கைகளும் இன்னும் பலரும், முகவை,ஜெஜெவை, மூப்பனாரை,காங்கிரசை, பாஜக வை எல்லாம் அரசியல் வாரிசுப்பிரச்சினையை விமர்சிக்கும் போது மென்மையாகவும், பாமகவின் அரசியல் வாரிசுப்பிரச்சினையை விமர்சிக்கும்போது கடுமையும் காட்டுவது பாமக இதனாலாவது பலம் இழக்காதா என்றுதான்

பாமகவின் மீது பூசப்பட்ட வன்முறை பெயரை அழிக்கத்தான் பாராளுமன்றத்துக்கு படித்தவாராக, செயல், நிர்வாகத்திறன் மிக்கவர்களாக நிறுத்துகின்றனர், கட்சிக்காக உழைத்தவர்களை சட்டமன்றத்தேர்தலில் நிறுத்துகின்றனர் இது மருத்துவரின் முடிவு.
பாண்டி உறுப்பினர் பேராசிரியர் ராமதாசு, திண்டிவனம் உறுப்பினர் தன்ராஜ் ஒரு பேராசிரியர், சிதம்பரத்திலிருந்து டாக்டர்.பொன்னுசாமி, வேலு முன்னாள் இ.ஆ.ப. இது அத்தனை யும் பாமகவின் இமேஜை உயர்த்துவதற்குத்தான்.

ஏ.கே.மூர்த்தி மருத்துவரின் பாதுகாப்பு படையிலிருந்த பாமகவின் அடிமட்டத்தொண்டர், அவர் அமைச்சராகவில்லையா? எந்தவித அரசியல் பின்புலனோ, மருத்துவரின் சொந்தக்காரரோ இல்லத தி.வேல்முருகன் பன்ருட்டி சட்டமன்ற உறுப்பினராகவோ இல்லையா? இப்படி இன்னும் பலர் உள்ளனர், எனவே மருத்துவரின் சொந்தங்களுக்கு தான் பாமக என்று புலம்புவதை எங்களை மாற்றாது ஏனைன்றால் பாமகவை நாங்கள் பத்திரிகை வாயிலாக அறிவதில்லை, உள்ளிருந்து அறிகின்றோம்.

எதற்கெடுத்தாலும் அன்புமணி தேர்தலில் நிற்காமல் மந்திரியாகிவிட்டார் என புலம்புபவர்கள் சற்று சிந்தியுங்கள் முகம் தெரியாத வேலு, தங்கராஜ் ஆகியோரெல்லாம் பாமகவின் சார்பிலே நிறுத்தப்பட்டு வெற்றி பெரும்போது அடுத்த வாரிசாக அடையாளம் காட்டப்பட்டு, இராமதாசுக்கு அடுத்தபடியாக கட்சியிலே செல்வாக்காக இருக்கும் அன்புமணிக்கா தேர்தலிலே வெற்றிபெறுவது சிரமம். அன்புமணிக்கு என்றால் மேல்சபை சீட்டு தருகிறோம் மற்றவர்க்கெல்லாம் தரமுடியாது என திமுக சொன்னது, அது மட்டுமில்லாமல் அன்புமணி தேர்தலிலே நின்றால் மற்ற தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்வது யார்? மருத்துவருக்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்த முகம் அன்புமணிதான்.

அன்புமணியின் அரசியல் பிரவேசத்தை வைத்து ஒரு பிரச்சினை உருவாகி அதனால் பாமக என்ற அரசியல் கட்சி சிதறி அதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அரசியல் வலிமையை, அரசியல் அங்கீகாரத்தை இழக்கத்தயாராக இல்லை வன்னிய இனம்.

உங்களது விமர்சனங்கள் கேள்விகள் வரவேற்க்கப்படுகின்றன, இன்னும் ஒன்று (அ) இரண்டு பதிவுகள் மட்டுமே இதைப்பற்றி எழுதலாம் என உள்ளேன்.


ஒரு அலசல் - 4

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 2

இந்த தலைப்பின் முந்தைய பதிவிற்கான சுட்டி இங்கே மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 1
இந்த பதிவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி பார்ப்போம்.

பாமக 1989 ம் ஆண்டு மருத்துவர் இராமதாசு அவர்களால் நிறுவப்பட்டது.

அவருக்கு தோளோடு தோள்நின்று இந்த கட்சியை உருவாக்கியவர்கள் பலர்,
இதில் தலித் சமுதாயத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன், தலித் எழில்மலை ஆகியோர் முக்கியமானவர்கள். பாமகவின் கொள்கைகள் சட்டதிட்டங்கள் எல்லாம் முன்னாள் நீதிபதி,முன்னாள் இ.ஆ.ப (IAS) அதிகாரிகள் மற்றும் பல கற்றறிந்த பெரியவர்களாள் உருவாக்கப்பட்டது.

பாமகவின் கொள்கைகள் என்ன?

கம்யூனிசத்தின் சிறந்த அம்சங்கள், சோஷலிசத்தின் முக்கிய அம்சங்கள், பெரியாரின் திராவிட கொள்கைகளில் சில, டாக்டர் அம்பேத்கார் அவர்களின் கொள்கைகள் என அனைத்து முக்கிய இசங்களிலிருந்தும் சிறந்தவைகள் கலந்த கலவைதான் பாமகவின் கொள்கை.

பாமக ஒரு வன்னியர் கட்சியா?

நிச்சயமாக இல்லை, பாமகவின் சட்டதிட்டங்களிலும் சரி கொள்கைகளிலும் சரி ஒரே ஒரு இடத்தில் கூட வன்னிய சமுதாயத்தின் பெயரோ வன்னியர்களுக்காக என்றோ குறிப்பிடப்படவில்லை, அதன் தொடக்க காலத்தில் பல மேல்மட்ட தலைவர்கள் தலித்,நாடார்,முசுலீம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், இன்றும் கூட பல வன்னியரல்லாதோர் பாமகவில் கட்சி பொறுப்பிலும், சட்டமன்ற,பாராளமன்ற உறுப்பினராகவும்,ஏன் மத்திய அமைச்சராகவும் கூட இருக்கின்றனரே, பிறகெப்படி இது வன்னியர் கட்சி என முத்திரை குத்தப்பட்டது, அங்கேதான் நமது தமிழ் பத்திரிக்கை ஊடகம் விளையாடிவிட்டது, இது பற்றி விரிவாக இன்னொரு பத்தியில் பார்ப்போம்.

பாமக கொடியிலே உள்ள நீல நிறம் தலித் சமுதாயத்தையும், மஞ்சள் நிறம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையும், சிவப்பு கம்யூனிசத்தையும் குறிப்பவை.

பாமக உருவானதால் பாதிக்கப்பட்ட கட்சிகள் திமுகவும், காங்கிரசும் தான். வன்னியர்களின் வாக்கு வங்கி திமுகவிடமும்,காங்கிரசிடமும் இருந்தது, ஆனால் பாமக கிட்டத்தட்ட மொத்தமாக அந்த வாக்குவங்கியை தன் பக்கம் திருப்பிக்கொண்டது திமுகவிற்கு அந்த கோபம் இன்னும் இருக்கின்றது, அதுவும் இல்லாமல் இட ஒதுக்கீட்டில் உயிரை கொடுத்து போராடியது வன்னிய இனம் ஆனால் இன்னும் 108 சாதியையும் பட்டியலில் இனைத்தது திமுக அரசாங்கம் அந்த கோபமும் கருணாநிதி அவர்கள் ராசதந்திரமாக நினைத்துக்கொண்டு 1996 தேர்தலிலே செய்த கூட்டணி துரோகமும் இன்றைக்கும் கூட திமுக பாமக விடையே chemistry work out ஆகாமல் இருக்கிறது. திமுக வை எதிர்க்கும் போது பாமகவினர் காட்டும் ஆவேசம், அதிமுக வை எதிர்க்கும் போது காட்டுவதைவிட பல மடங்கு அதிகம்.

பாமகவின் முதல் தேர்தல் களம்
1989 ம் ஆண்டு கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது. தனித்தும் போட்டியிட்டது, தருமபுரி,திண்டிவனம்,சிதம்பரம் தொகுதிகளிலே இரண்டாம் இடம், அதுவும் தருமபுரியிலே 10,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி, கடலூரிலே 95,000 வாக்குகள், இன்னும் பல தொகுதிகளிலே ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று முதல் தேர்தலிலேயே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் மாநில கட்சி என தேர்தல ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

பிற தேர்தல்கள்

1991 சட்டமன்ற தேர்தல்

வெற்றி -1,
இரண்டாமிடம் 12,
இருபதாயிரம் வாக்குகளுக்கு மேல் - 21
பத்தாயிரம் வாக்குகளுக்கு மேல் - 60
கூட்டணி - இல்லை
அலை - ராஜீவ் காந்தி படுகொலை

1996 சட்டமன்ற தேர்தல்

வெற்றி -4,
இரண்டாமிடம் 7,
இருபதாயிரம் வாக்குகளுக்கு மேல் - 16
பத்தாயிரம் வாக்குகளுக்கு மேல் - 35
கூட்டணி - இல்லை
அலை - ஜெயலலிதா எதிர்ப்பு

1998 பாராளுமன்ற தேர்தல்

வெற்றி -4,
போட்டியிட்டது - 5
இரண்டாமிடம் 1,

கூட்டணி - அதிமுக,பாஜக,மதிமுக

அலை - இல்லை

1999 பாராளுமன்ற தேர்தல்

வெற்றி -5,
போட்டியிட்டது - 8,
இரண்டாமிடம் - 3,
கூட்டணி - திமுக,பாஜக,மதிமுக
அலை - இல்லை

2001 சட்டமன்ற தேர்தல்

வெற்றி -22,
போட்டியிட்டது - 27,
இரண்டாமிடம் - 5,
கூட்டணி - அதிமுக,காங்கிரஸ்
அலை - இல்லை

2004 பாராளுமன்ற தேர்தல்

வெற்றி -6,
போட்டியிட்டது - 6,
இரண்டாமிடம் - 0,
கூட்டணி - திமுக,காங்கிரஸ்,மதிமுக
அலை - இல்லை

தேர்தல் பாதையை பார்க்கும் போது எந்த கூட்டணியில் பாமக இருக்கின்றதோ அந்த கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது.

இனி நேரடியாக விடயத்துக்கு வருவோம்

மருத்துவர் இராமதாசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி அலசுவோம்

தலித் விரோதம்
தலித் இனத்தின் மீது எப்போதும் மருத்துவர் விரோதம் காட்டியதில்லை, சில வன்னிய இனத்தை சேர்ந்தவர்கள் காட்டியிருக்கின்றனரே தவிர மருத்துவர் காட்டியதில்லை. பாமகவின் பொதுச்செயலாலர் பதவி தலித் இனத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என பாமகவிலே சட்டமே உண்டு

பாமக ஆட்சி கட்டில் ஏறினால் ஒரு தலித்தை முதல்வராக்குவதாக சபதம் செய்துள்ளது

முதன் முதலில் மத்திய அமைச்சர் அதுவும் ஒரே ஒரு பதவி பாமகவிற்கு கிடைத்த போது அது கொடுக்கப்பட்டது வன்னியருக்கல்ல தலித்.இரா.எழில்மலைக்கு, அதன் பின் டாக்டர்.பொன்னுசாமி அமைச்சராக இருந்தார்.

தமிழ்குடிதாங்கி என்ற பெயர் புரட்சிகலைஞர்,சூப்பர்ஸ்டார்,இளையதளபதி போல் தனக்கு தானே வைத்துக்கொண்ட பெயரல்ல,குடிதாங்கி என்ற ஊரிலே தன் சொந்த சாதி மக்களை எதிர்த்து தலித் இனத்திற்காக போராடியதால் திருமாவளவன் என்ற தலித்தலைவரால் சூட்டப்பட்டப்பெயர்தான்.

1987லே வன்னியர்களின் போராட்டத்தை தடுக்க சாதித்தீ கொளுத்திவிடப்பட்டு எச்சங்களும் மிச்சங்களுமாக அமைதியை குலைத்த நாட்களிலே தலித் சமுதாயத்திலும் வன்னிய சமுதாயத்திலும் மாறி மாறி படுகொலைகள் நடந்தேறின. அப்படி ஒரு சில தலித்களால் படுகொலைசெய்யப்பட்டவரின் இறுதிச்சடங்களிலே நான் கலந்து கொண்டபோது மருத்துவர் இராமதாசு துக்கம் விசாரிக்க வருவதாக தகவல் வந்தது, அப்போது அங்கு கூடியிருந்த பலர் ஆமா இவரு வந்து என்ன சொல்லுவாரு பொறுமையாயிருங்க பேசித்தீர்க்கலாம்னு தான் சொல்வாரு, வேற என்ன சொல்வாரு என்பதிலிருந்தே தலித் சமுதாயத்தோடு மோதல் போக்கை அவர் விரும்பவில்லை.

வடதமிழ்நாட்டில் தலித் மற்றும் வன்னியர் சமுதாயங்கள் அரசியலில் ஒன்று சேர்ந்தால் வேறு எந்த கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலாத நிலை, இரண்டு அடித்தட்டு சமுதாயங்களின் ஒற்றுமை மற்று அரசியல் எழுச்சிக்காக கணக்கிட்டு அரசியல் நடத்தி வருகின்றார்

தலித் இனத்தவருக்கு வட தமிழ்நாட்டிலே சரியான தலைவர் இல்லாதபோது மதுரையிலிருந்த திருமாவளவனை வட மாவட்ட மக்களுக்கு அறிமுகப்படுத்தியதே மருத்துவர்தான்.

கொள்கையற்ற கூட்டணித்தாவல்

முதலிலேயே ஒரு கேள்வி திமுக , அதிமுக வோடு மாறி மாறி கூட்டணி வைத்துகொள்கிறார் என்று குற்றம் சாட்டுபவர் எவரும் ஏன் திமுகவும் அதிமுகவும் கூட்டணியில் சேர்த்துக்கொள்கின்றன, ஏன் திமுக,அதிமுகவை கொள்கையற்ற கூட்டணி என தாக்குவதில்லை, அதுவும் மருத்துவர் இராமதாசை தாக்கும் அளவுக்கு தாக்குவதில்லை

ஏன் கொள்கை கொள்கையென பேசியபோது கொள்கை பிடிப்போடு இருந்தபோது இந்த பத்திரிக்கைகளும் இன்று அவர்மீது மட்டையடிப்பவர்களும் பாராட்டினர்களா? இல்லையே எழுத்தாளர்களிலே ஞானியையும் பத்திரிக்கைகளிலே நக்கீரனைத்தவிர மற்ற அனைவரும் இடித்துரைப்பதேயேதான் தொழிலாக வைத்துள்ளனர்.

1996 தேர்தலுக்குமுன் செல்வி.ஜெயலலிதா ஆட்சியின்போது 7 கட்சி கூட்டனியை உருவாக்கி அதன் சார்பாக திண்டிவனத்திலே மாநாடும் போட்டு அப்போது அடுத்த முதல்வர் கருணாநிதி தான் என உரக்க கூறியவர் மருத்துவர், ஆனால் அந்த சமயத்திலே கூட்டணியிலிருந்து துரத்தப்பட்டார்.

அப்போதும் தனியாக நின்று 4 தொகுதிகளிலே வென்றனர், ஜெயலலிதா எதிர்ப்பு ஓட்டுகள் சிதறக்கூடாது என உதயசூரியனுக்கு ஓட்டே போடாதா வன்னிய இனப்பெண்கள் முதல் முறையாக உதயசூரியனுக்கு வாக்களித்தனர். இது பாமக வை கடும் பாதிப்புக்குள்ளாக்கியது மாநிலகட்சி என்கின்ற தகுதி இழப்பும் யானைசின்ன இழப்பும் நடந்தது.

1998 நாடாளுமன்ற தேர்தல், திமுக,அதிமுக இரண்டோடும் கூட்டணிக்கு தயாராக உள்ளோம், ஆனாலும் திமுகவோடு கூட்டணி காண விரும்புகிறோம். மாநில கட்சி தகுதி பெற குறைந்தது 2 பாராளுமன்ற தொகுதியிலே வெற்றி பெற வேண்டும், ஆணால் திமுகவோ ஒரே ஒரு தொகுதி மட்டுமே தரமுடியும் என கேவலப்ப்டுத்தியது. இங்கே தான் கருணாநிதியன் ராசதந்திரம் எம்.ஜி.ஆர் க்கு அடுத்தப்டியாக இராமதாசுவிடமும் அடிவாங்கியது.

இதே போல் மீண்டும் 2001 சட்டசபைதேர்தலிலே பாமக வை கழற்றிவிட்டு திமுக தோற்றது, அந்த பாடங்கள் தான் இப்போது கூட்டணியை சிதறவிடாமல் காப்பாற்றிக்கொண்டுள்ளார்.

கூட்டணி மாற்றத்திற்காக கொள்கை அளவில் எதையும் பாமக விட்டுத்தரவில்லை, பிற்படுத்தப்பட்ட சமுதாய முன்னேற்றத்தை விட்டுத்தந்தனரா? தமிழ் மொழி,சமுதாய வளர்ச்சியை விட்டுதந்தனரா?

பாமகவை தாக்குபவர்கள் திமுக,அதிமுக,பாஜக,காங். எல்லாம் எக்காலத்திலும் ஒரே கூட்டணியில் இருப்பதாக எண்ணுகின்றனரோ?

அடுத்தபதிவில் வாரிசு அரசியல், திரைப்படங்கள் மீதான தாக்குதல், ரஜினி விஜயகாந்த் விவகாரம் மற்றும் பதிவின் தலைப்பை பற்றிய கருத்தை பார்ப்போம்

அடுத்த பகுதிக்கான சுட்டி இங்கே

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 3